Wednesday, April 18, 2012

இஸ்லாமிய பின்னணியில் இணையற்ற நாவல் - சாய்வு நாற்காலி

எத்தனையோ நாவல்கள் படிக்கிறோம். அவற்றில் சில மட்டுமே நம் மனதில் ஆழ்ந்து பதிந்து நம்மில் ஒரு பகுதியாக மாறி விடும்.

இப்படி நடக்க வேண்டும் என்றால் அந்த எழுத்தில் விறுவிறுப்பு இருக்க வேண்டும், மொழி ஆளுமை இருக்க வேண்டும். வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக எழுத்தில் நேர்மை இருக்க வேண்டும்.

இந்த அனைத்து அம்சங்களையும் கொண்ட நாவல்தான், தோப்பில் முஹமது மீரானின் சாய்வு நாற்காலி.
1997ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல் என்றாலும், அதை சமீப காலம் வரை படிக்கவில்லை. அஞ்சு வண்ணம் தெருதான் மீரான் எழுத்துகளில் நான் படித்த முதலாவது. முதல் நாவலே என்னை அசத்தி விட்டது.

அந்த நாவலை விட கொஞ்சம் அதிகமாகவே உள்ளம் கவர்ந்து விட்டது சா. நா.

இஸ்லாம் மதத்தில் இருக்க கூடிய இறை நேசர்களை வணங்க கூடியவன் நான். தர்க்கா வழிபாடுகளை விரும்ப கூடியவன். குணங்குடி மஸ்தான் பாடல்களின் அடிமை . இந்த காரணங்களால் அஞ்சு வண்ணம் தெரு நாவலை என்னால் உணர்வு பூர்வமாக படிக்க முடிந்தது. அந்த நாவலின் கதை போக்கு அப்படிப்பட்டது.

என் போன்ற பின்னணி இல்லாதவர்களுக்கு அந்த நாவல் எப்படி பட்ட பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கொஞ்சம் கேள்விக்குரியது.. ஆனால் சா. நா அப்படி அல்ல. இது இஸ்லாமிய பின்னணியை கொண்ட நாவல் என்றாலும் , இது மதம் சார்ந்த நூல் அன்று. ஒட்டு மொத்த வாழ்க்கையை , மனிதனின் உயர்வை , மனிதனின் இழிவை , இருளான பக்கத்தை , ஒளி மிகுந்த பக்கத்தை பேசக் கூடியது.

இந்த நாவலின் கரு என்ன ?

காலத்தின் பிரமாண்டம்.. அதன் முன் நாமெல்லாம் தூசு....

காலம்தான் ஒருவரை தூக்கி வைக்கிறது. பின்பு தூக்கியும் எறிகிறது. இதில் நன் என்ற அகங்காரமெல்லாம் கேலி கூத்துதான்.

மீரான் எழுத்து நம்மை அழைத்து செல்லும் மாய உலகில் வாழ்ந்து விட்டு , வெளியே வந்து யோசித்து பார்த்தால் நமக்கு தோன்றுவது இதுதான். வட்டார பேச்சு வழக்கு , அழகு கொஞ்சும் இஸ்லாமிய கலை சொற்கள் , செதுக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்ட பாத்திர படைப்புகள் - இவை எல்லாம் சேர்ந்து , தென்பத்தன் என்ற கிராமத்திற்கே நம்மை அழைத்து சென்று விடுகிறோம்..

பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த முஸ்தபாகண்ணு , அந்த பாரம்பரியத்துக்கு தகுதி இல்லாதவர். ஆனால் அந்த தகுதியின்மையை ஏற்கும் துணிச்சலோ , த்ன்னை உயர்த்தி கொள்ளும் விருப்பமோ இல்லாமல் இருப்பவன். சுடும் யதார்த்தத்தை வெற்று ஆர்ப்பாடங்கள் மூலமும், காமம் மூலமும் மறக்க விரும்புபவர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. அதே போல முஸ்தாகண்ணுவும்  ஒரு கட்டத்தில் யதார்த்ததை சந்த்திக்க வேண்டி வருகிறது. 


வரலாறு , பாரம்பரிய பெருமை , தான் என்ற அகங்காரம் என எல்லாம் , பிரமாண்டமான காலத்திற்கு முன் அர்த்தம் இழந்து போகின்றன. 


குளிக்காமல் , வேறு எந்த வேலையும் செய்யாமல் தூங்கியே காலம் கழிக்கும் , தங்கை ஆசியா , பிரம்படி வாங்குவதை மட்டுமே வாழ்க்கையாக கொண்ட , ஆனால் கணவனை விட்டு செல்லாமல் அவன் கனிவுக்கு ஏங்கும் மரியம் , பழம்பெருமை மீது பெருமிதம் கொண்ட , ஆனால் அதற்குள் சிறைப்பட விரும்பாத சாகுல் ஹமீது , அழகு சிலை ரைஹானத் , மீனாட்சி , வலிய அங்கத்தை,வரலாற்று சிறப்பு மிக்க சவ்தா மன்ஸில், குத்தூஸ் லப்பை அப்பா , பவுரீன் பிள்ளை ,பப்பு தம்பி , ராஜன் தம்பி ஆகியோர் மட்டும் அல்ல. பிரம்பு , எலிகள், கிணறு என ஒவ்வொன்றும் மனதில் பதிந்து விடுகின்றன .




400 பக்கங்களில் இத்தனை கேரக்டர்களை எஸ்டாபிலிஷ் செய்கிறார் என்றால் எழுத்தாற்றலின் வலிமை ஆச்சர்யமாக இருக்கிறது. 

பாரம்பிய பெருமை மிக்க பொருட்களை பட்டினிக்காக விற்கும் அவலம் நெஞ்சை சுடுகிறது , விற்கப்பட்ட பொருட்கள் போய் சேரும் இடம் poetic justice .

அவ்வளவு பிரச்சினை நடக்க்கும்போது, நிதானமாக மிக்சர் சாப்பிடும் கணவனாக காட்சி அளிக்கும் செய்தகமது கேரக்டருக்குள் இருக்கும் கிளைக்கதை சுவாரஸ்யம்.

ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுபவன் இஸ்ராயில். முதலாளியை அண்டி பிழைப்பவன் தான் இவன். ஆனால் மரியம் அட் வாங்குவதை கண்டு கொள்ளாமல் செல்வதில் இவனுக்கு உடன்பாடு கிடையாது. அவளுக்கு ஆதரவாக பேசும் ஒரே ஜீவன் இவன் தான். 

ஒவ்வொன்றாக விற்ரு , கடைசியில் சிறப்பு வாய்ந்த சாய்வு நாற்காலியும் விற்கப்பட்டுகிறது. 

 நாற்காலி விற்றதில் கூட முஸ்தபா  கண்ணுக்கு வருத்தம் இல்லை. அந்த நாற்காலி நலிவடைந்த பிரிவை சேர்ந்த ஒருவர்க்கு சென்றதைத்தான் அவரால் தாங்க முடியவில்லை..

அதை தொடர்ந்து இஸ்ராயில் பேசுவது நாவலுக்கு வேறு ஓர் அர்த்தம் தருகிறது.

“ அப்படி சொல்லாதீங்க. இப்ப காலம் அவங்க கையிலயாக்கும். ஒரு காலத்தில் நம் கையில், இப்ப அவங்க கையில்.. காலம் இப்படி சைக்க்கிள் வீலு போல சுத்தீட்டே வருது ” 

ஒரு காலத்தில் பெண்களை மிரட்டியும் , காசு காட்டியும் , அழகால் மயக்கியும் , வீழ்த்தி வந்த வம்சத்தில் வந்த அவர், பெண் கேட்டு போய் ஒரு பெண்ணால் காறி உமிழப்படுகிறார். அவர் வீழ்ச்சி முழுமை அடைகிறது.

தற்காலத்திற்கும் , பழங்காலத்துக்கும் நாவல் முன்னும் பின்னும் அலைந்தாலும் , வாசிப்பிற்கு அது சுவை கூட்டவே செய்கிறது.  தன்க்கு உண்ண தராமல் தான் மட்டும் சாப்பிட விரும்பும் முதலாளியை ஏமாற்றி சாப்பிடுதல், தேங்காய் திருட்டு , யானை மருத்துவம் , இறை நேசர்களின் அற்புதம் என சுவையான சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி, ஒவ்வொரு பக்கத்தையும் சுவையாக்குகிறது.

அதே நேரத்தில் மனதை கனமாக்கும் பகுதிக்ளும் ஏராளம். கல்யாண ஆசையால் ஏமாந்த பெண்ணையே, குற்றவாளி என தீர்ப்பளித்தல், பெண்களை கொன்று விட்டு, மந்திரவாதிகளை கைக்குள் போட்டு ,அவர்களை வைத்து , அந்த பெண்கள் வசதியாக இருப்பதாகவும் , ஒரு நாள் வருவார்கள் என்றும் பொய் ஆருடம் சொல்ல வைத்தல் ,  ஆள்வோருக்கு எதிராக கலக்ம் செய்த தலைவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை இழிவு படுத்துதல் போன்ற இருளான பக்கங்களும் உண்டு.


இஸ்லாமிய பாத்திரங்களை கொண்ட நாவல் என்றாலும் , அனைத்து தரப்பு மக்களையும் பதிவு செய்து இருப்பது நாவலாசிரியரின் நேர்மைக்கு சான்று.

கதாபாத்திரங்கள் பேசும்போது , வட்டார வழக்கை அப்படியே பயன் படுத்தி இருப்பது சிறப்பு. இஸ்லாமிய பதிவர்கள்கூட இந்த அளவுக்கு இஸ்லாமிய சொற்களை பயன்படுத்துவதில்லை. மற்றவர்களுக்கு புரியாதோ என்ற தயக்கமே காரணம். ஆனால் இந்த நூலில், கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்யாமல் , வட்டார பேச்சை அப்படியே பயன்படுத்தி இருப்பதும் நாவலின் வெற்றுக்கு முக்கிய காரணமாகும்.
ஆனால் ஆசிரியர் கூற்றில் வரும் பகுதிகளில் அழகு தமிழிலும் எழுதி இருக்கிறார்.

படித்த பின்பும் நாவல் மனதில் நிற்கிறது. மறக்க முடியாத நாவல்..

வெர்டிக்ட்

சாய்வு நாற்காலி - சாதனை படைப்பு 

 நாவல் ஆசிரியர் ; தோப்பில் முகமது மீரான்

பக்கங்கள்:  408




2 comments:

  1. வழக்கம் போலவே நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    பொதிகைத் அலைவரிசையில் இந்த நாவலின் சில பாகங்களை நான் பார்த்திருக்கிறேன். முஸ்தபாக் கண்ணுவாக நடித்திருப்பது நடிகர் பாலாசிங்.

    விருது கிடைத்தது இந்த நாவலுக்குத்தான் என்றாலும் 'ஒரு கடலோர கிராமத்தின் கதை' இந்த நாவலை விட நல்ல வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது என்று நினைக்கிறேன். முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்.

    வேர்களின் பேச்சு என்ற தலைப்பில் தோப்பிலின் எல்லாச் சிறுகதைகளும் தொகுப்பாகக் கிடைக்கின்றன (அடையாளம் வெளியீடு). வாங்கி வைத்திருக்கிறேன். எப்போது படிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை!

    ReplyDelete
  2. கோபி, நானும் சாய்வு நாற்காலிதான் தோப்பிலோட பெஸ்ட் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு கடலோர கிராமத்தின் கதையைப் போன வருடம் மறுபடி படித்தேன். யோசித்துப் பார்க்கும்போது கடலோர கிராமத்தின் கதைதான் அவரது ஆகச்சிறந்த படைப்பு என்று தோன்றுகிறது.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா