Sunday, November 23, 2014

பவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சிலாகித்த திரைப்பட ஷாட்



தான் இணையத்தை பார்த்து கெட்டுப்போக விரும்பவில்லை என இயக்குனர் மிஷ்கின் பேசினார். அதிக கெட்டவார்த்தைகள் நெட்டில் புழங்குவதாகவும் , தனக்கு எதிராகத்தான் அதிக வசைகள் பாய்வதாகவும் தெரிவித்த அவர் , தன்னை திட்டும் இணைய மொண்ணைகள் , சற்று வித்தியாசமாக யோசித்து திட்டினால் ரசிக்கத்தயார் என்றும் தெரிவித்தார்...




தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா சென்னையில் நடந்தது. ஊடக மொண்ணைகள் ஆதரவு இல்லாமல் இந்த அளவு தொடரந்து இயங்குவது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று. ஒரு நிகழ்ச்சிக்காக ஆனந்த பட்வர்த்தன் சென்னை வந்தார் , ஒரு அமைப்பின் சார்பாக சிங்கள் இயக்குனர் படம் திரையிடப்பட்டது என செய்தி வெளியிட்டு தமிழ் ஸ்டுடியோவை இருட்டடிப்பு செய்வதில் ஊடகங்களுக்கு ஏனோ அதீத ஆர்வம்.




இதனால் எல்லாம் பாதிப்பின்றி , ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஐந்தரைக்கே மக்கள் குவிந்து விட்டனர். அரங்கு நிறைந்து பலர் ஸ்டாண்டிங்..

அருண் எழுதிய நாடு கடந்த கலை என்ற அருமையான புத்தகம் வெளியிடப்பட்டது... மேற்கண்ட வி ஐ பிகள் வெளியிட அருணின் ஆசிரியர் திருமதி. புஷ்பராணி பெற்றுகொண்டார்.. சமர்ப்பணம் என்பதில் என்னுடைய ஆசிரியர் திருமதி புஷ்பராணி அவர்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்.. அவர் குருபக்தி நெகிழ்வூட்டியது.. ஆசிரியை என மரியாதைக்குறைவாக சொல்லாமல் ஆசிரியர் என சொன்ன அவர் மொழி ஆளுமை ரசிக்க வைத்தது ,



பேச்சாளர் பட்டியலில் இல்லாத அறந்தை மணியனை முதலில் பேச செய்தார் அருண். அவரும் மிகச்சிறப்பாக பேசினார். திரைப்பட சங்கங்கள் , பணிகள் குறித்து பேசினார்.


முன்னதாக சாரு உள்ளிட்ட பிரபலங்கள் தமிழ் ஸ்டுடியோ குறித்தும் சினிமா குறித்தும் பேசிய காணொளி திரையிடப்பட்டது. வணிகப்படங்களைவிட மாற்று சினிமா என்ற பெயரில் வரும் படங்கள் குப்பையாக இருப்பதாக சாரு பேசியது பலர் கவனத்தையும் கவர்ந்தது.


அதன் பின் ஜெர்மனியை சேர்ந்த திரைப்பட ஆய்வாளர் ஸ்டீபன் பார்சஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். வெளிநாட்டு திரைப்பட ஆய்வாளர்கள் / விமர்சகர்கள் பார்வையில் தமிழ் சினிமா என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

இவர் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் திரைப்பட இதழான சினி ஏசியாவின் ஆசிரியர் வெளியீட்டாளர். தவிர சர்வதேச திரைப்பட விழாவில், ஜப்பான் மற்றும் தென் இந்திய திரைப்படங்கள் சார்ந்த ஆலோசகராகவும் இருக்கிறார்.




பிறகு லெனின் பேசினார். தனக்கே உரிய இயல்பான பக்குவமாக அனுபவத்துடன் கூடிய எள்ளல் நடை பேச்சு.




படங்களை எப்படி ரசிப்பது என சொல்லித்தருவது இன்று முக்கியபணியாக இருக்கிறது. இதை எந்த அமைப்பும் செய்யாத நிலையில் தமிழ் ஸ்டுடியோ செய்கிறது. இந்தியன் பனோரமா ரஜினிக்கு விருது கொடுத்து கமர்ஷியல் பாதையில் செல்கிறது. நாம் சரியான பாதையில் செல்கிறோம். பத்திரிக்கையாளர்களுக்கு அறிவு என்பதே இல்லை. ஒளிப்பதிவு பளிச் என இருந்தது , கதை சூப்பர் என எழுதுகிறார்கள் . இதுவா விமர்சனம். ..குற்றம் கண்டுபிடிப்பதை விமர்சனம் என நினக்கிறார்கள். உள்ளேபோகும்போது இருந்த வெள்ளை சட்டை வெளியே வரும்போது பச்சை சட்டையாக எப்படிமாறியது என சின்ன விஷ்யங்களை கண்டுபிடிப்பதை சாதனையாக நினைக்கிறார்கள். இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம் என்பார் இயக்குனர் பீம்சிங். சினிமாவை கற்ற பின் எழுத வேண்டும் என்றார்.




பிறகு பவா செல்லத்துரை பேசினார்.




சமீபத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னை கலங்க வைத்து விட்டது என சொல்லி பேசினார். உண்மையிலேயே அது அனைவரையும் கலங்க வைத்து விட்டது. அவர் சொன்ன விதம் , காட்சியை நேரில் பார்ப்பது போல இருந்தது.




பத்திரிக்கையில் வேலை செய்யும் ஒருவன். அவன் மனைவி.. சற்று அப் நார்மலான / உடல் நலக்குறைவுடன் ஒரு குழந்தை.. பேச முடியாத குழந்தை. ட்ரீட்மெண்ட் செய்யக்கூட காசு இல்லை.. பத்திரிக்கை அதிபரோ உதவவில்லை.. அவனுக்கு அவசரமாக நூறு ரூபாயவது தேவைப்படுகிறது.. அவர்50 ரூபாய் கொடுக்கிறார். காரணம் ஏற்கனவே நிறைய வாங்கி விட்டான்.

அடுத்த நாள் .. “ குழந்தையிடம் காசு ஏதாச்சும் கொடுத்தீங்க்ளா.. “ என்கிறாள் மனைவி.. என்னிடம் ஏது காசு.. நான் கொடுக்கவில்லையே என்கிறான்.. குழந்தை கையில் நூறு ரூபாய் இருந்ததாக சொல்லி கொடுக்கிறாள்.. எப்படி அந்த காசு வந்தது என புரியவில்லை... ஆனாலும் , எப்படியோ காசு வந்தால் சரி என நினைத்துக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இன்னொரு முறை 500 ரூபாய் தேவைப்படுவதாக புலம்புகிறான்.. அடுத்த நாள் பார்த்தால் , குழந்தை கையில் 500 ரூபாய் இருக்கிறது.

இதெல்லாம் எப்படி வருகிறது என புரியவில்லை.. தேவைப்படும்போதெல்லாம் காசு வருகிறது.. குழந்தை கையில் யாராவது வைக்கிறார்களா என செக் செய்கிறார்கள்.. கண்டு ப்டிக்க முடியவில்லை.. ஒரு நாள் முழுக்க விழிப்பாக கவனிக்கிறார்கள். கண்டு பிடிக்க முடியவில்லை

இதற்கிடையில் , குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க கண்வன் தாமதம் செய்வதை மனைவி கண்டிக்கிறாள்.. குழந்தை சரியாகி , பேச ஆரம்பித்தால் , காசு எப்படி வருகிறது என சொல்லி விடுமோ என பயப்படுவதாக குற்றம் சாட்டுகிறாள்.. க்அதில் இருக்கும் உண்மை கணவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இத்துடன் முடித்து இருந்தாலும்கூட சூப்பர் கதைதான்.. ஆனால் இதைவிட மரண அடி கிளைமேக்ஸ் இனிமேல்தான்..

பழைய டீவியை மாற்றி எல் சி டி வாங்கினால் நன்றாக இருக்குமே என புலம்புகிறான். அடுத்த நாள் குழந்தை கையில் அதற்கு தேவையான பணக்கட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கை அதிபர் பத்திரிக்கை நடத்த முடியாமல் , இவனை நடத்த சொல்கிறார். அவனிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட நிபந்தனை விதிக்கிறான். அது ஏற்கப்படுகிறது.




அந்த குழந்தை நோய்க்கு சிகிச்சை செய்ய அந்த ஊரில் டாக்டர்கள் இல்லை.. கல்கத்தா போயாக வேண்டும்.. விமானத்தில் கிளம்ப அவனும் , குழந்தையும் தயார் ஆகிறார்கள்... வேண்டுமென்றே விமானத்தை தவற விடுகிறான்.. மனைவி திட்டுகிறாள்.. கடைசியில் ஒரு வழியாக கல்கத்தா செல்கிறான்..




டாக்டர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , வெகு நேரம் கழித்து வெளியே வருகிறார் பேயறைந்த முகபாவத்துடன்.




இத்தனை நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாய்.. ஏன் முன்பே வரல என கடுமையாக திட்டுகிறார்.




என்ன ஆச்சு பதறுகிறான் அவன்.




குழந்தை இறந்து வெகு நாட்கள் ஆகின்றன என்கிறார் டாக்டர்.




அவ்வளவுதான் கதை..




அந்த குழந்தை இற்ந்து ஒரு பண மெஷினாக மாறிவிட்டது. நாமும் அப்படித்தான் மாறி விடுகிறோம். வெகு சிலர்தான் , சுய நலம் மறந்து பண மெஷினாக மாறாமல் மற்றவர்களுக்காக உழைக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அருண். அவரை பாராட்டுகிறேன். களப்பணிக்கு நடுவில் அவர் புத்தகம் எழுதியது நல்ல விஷய்ம்.




இப்படி அவர் பேசினார்.




விக்ரம் சுகுமாரன் பேசுகையில் லெனின் அவர்களிம் நாக் அவுட் படம் பார்த்தது தனக்கு வெகு உதவியாக இருந்ததாகவும் , பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர அது ஒரு தகுதியாக இருந்ததாகவும் சொன்னார். தன் படத்தை ஜாதி வெறி படம் என அருண் எழுதியது வருத்தம் அளித்ததாகவும் , இன்னொரு முறை பார்த்த பின் , தான் எழுதியது தவறு என ஒப்புக்கொண்ட நேர்மை பிடித்திருப்பதாகவும் பேசினார்.




ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசுகையில் காட்சி ரூபமாக சினிமாவை ரசிக்கும் ரசனை வளர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதைவிட எப்படி சொல்கிறார் என்பதே முக்கியம் என்றார். படத்துக்கான சினாப்சிஸ் எழுதுவதல்ல விமர்சனம் .. ஃபில்ம் சொசைட்டி குறித்து சாரு ( சற்று முன் திரையிடலில்) பேசியது  முக்கியமான ஒன்று என்றார்.




தொடந்து பேச வந்தவர் சார்லி. இவரை நகைச்சுவை நடிகராக அறிவோம். இவர் நல்ல படிப்பாளி. பெரிய ஸ்காலர் என்பது பலருக்கு தெரியாது.

அவர் பேசுகையில்,

லெனின் மூலம்தான் எனக்கு அருணை தெரியும் . புள்ளைங்களுக்காக ஒரு படம் ஸ்க்ரீன் பண்றான் . போய் பாரு என வற்புறுத்தினார். என்னவென்றே புரியாமல் போனேன். அங்கு போனபின்புதான் தெரிந்தது. குழந்தைகளுக்கான திரையிடல்.

ஒரே ஷாட்டில் ஒரு கதையை சொல்ல முடியும் என நிரூபித்த கிட் என்ற படம். அதில் வரும் அந்த ஷாட்டை , நம்மை விட அதிகமாக குழந்தைகள் புரிந்து கொண்டு ரசித்து கைதட்டியது ஆச்சர்யம் அளித்தது.

சார்லி சாப்ளின் ஒரு குறுகலான தெரு வழியே செல்கிறார். மக்கள் மாடி வீடுகளில் இருந்து குப்பைகளை கீழே வீசுகிறார்கள். அதில் சமாளித்து எப்படியோ நடந்து வருகிறார். சாலை ஓரத்தில் ஒரு குப்பைத்தொட்டியில் சத்தம். என்னவென்று பார்த்தால் ஒரு குழந்தை . சட் என ஒரு கணம் மாடி வீடுகளை பார்க்கிறார். ஒரே ஷாட்தான். என்ன ஆழமான காட்சி , குப்பையோடு குப்பையாக குழந்தையையும் எறிந்து விட்டீர்களா என்பது போன்ற ஒரு பார்வை. குழந்தைகள் புரிந்து கொண்டு ரசித்தனர்.




ஆக்ட்டிங் என்பது சவாலான ஒன்று. நான் பல பயிற்சி வகுப்புகளில் இதை விளக்கும்போது பலர் இவ்வளவு கஷ்டமாக என பயந்து விடுவார்கள். இதற்கெல்லாம் பயந்தால் எப்படி.. நான் நடித்த படங்களில் 80 சதவிகித படங்களில் என் காட்சிகளை வெட்டி எறிந்தாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் வராது. பயப்படாமல் நடி. ஒன்றும் ஆகாது. ஆனால் இப்படி எல்லாம் நடிப்பு இருக்கிறது என தெரிந்து கொண்டால்தான் பயப்படாமல் இருக்க முடியும் என சொன்னபின்புதான் சமாதானம் ஆவார்கள்.




ஓர் இயக்குனர் காட்சியை விவரித்தார். காரின் பின் சீட்டில் பிணம் இருக்கிறது. யாரும் கவனிக்கவில்லை .. இதுதான் காட்சி.




அது எப்படி சார் யாரும் பார்க்காமல் இருப்பார்கள். லாஜிக் இல்லையே என்றார் ஓர் உதவி இயக்குனர்.




ஸ்மெல் வந்து விடுமே சார் என்றார் இன்னொருவர்.

இப்படி காட்சி வைத்தால் நம்ப மாட்டார்கள் என்றார் இன்னொரு உ இ.




இயக்குனர் சொன்னார் “ இப்படி ஒரு காட்சியை எடுக்க முடிவதுதான் நம் திறமை. இதை எப்படி எடுப்பது என்பதை மட்டும் யோசியுங்கள் “ என்றார்.




அப்படி எடுக்கப்பட்டு படம் மாபெரும் புகழ்பெற்றது. அந்த படம் சாது மிரண்டால். அந்த இயக்குனர் பீம் சிங்.

அந்த காலத்தில் எங்கள் ஊரில் ஃபில்ம் சொசைட்டி வந்தபோது ஏன் இந்த சொசைட்டி என எங்களுக்கு புரியவில்லை. பால் சொசைட்டி , கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி ஓகே.. இது என்ன ஃபில்ம் சொசைட்டி. என நினைத்தோம்..




பிறகுதான் அது மாற்று சினிமாவுக்கான அமைப்பு என தெரிய வந்தது. அந்த வகையில் முதலில் திரையிடப்பட்ட மாற்று சினிமா பாலச்சந்தரின் “ புன்னகை “. அப்போது அதுதான் மாற்று சினிமா.




அடுத்த நாள் வேற்று மொழி படம். டேய். செக்ஸ் படம்டா என ஆசை ஆசையாக காலையிலேயே போய் விட்டோம். பயங்கர கூட்டம்.

படம் ஆரம்பித்தது.. பேச்சு பேச்சு பெச்சு...ஞஞாம்ம்ம் ஞஷ்ம்ம்ம் ங்க்ஜன்ஞ்ஞ்ஞ் என புரியாத மொழியில் பேசிக்கொண்டே இருந்தார்கள். படம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது பனியனை கழட்டுவதுபோல ஒரு காட்சி. வந்ததுக்கு இதுவாச்சும் பார்த்தோமே என நினைத்தபடி வந்தோம். இந்த ரசனை எல்லாம் மாற வேண்டும்.

கலைஞனுக்கு தன்னம்பிக்கை வேண்டும் .

ஓர் இளைஞன் நாடக கம்பெனியில் சேர்ந்தான். வழக்கமான புது முகங்களைபோல அவனை அரண்மனை காவல்காரன் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஒரு வாளை பிடித்தபிடி நின்றுகொண்டே இருக்க வேண்டும்.




இப்படி ஒரு நாள் , ரெண்டு நாள் என நூறு நாட்கள் நடித்தான். அதற்குமேல் தாங்க முடியவில்லை. வேறு வேடம் கொடுங்கள் என்றான். கொஞ்ச காலம் போகட்டும் என்றார்கள். முடியாது. இப்பவே வேண்டும் என்றார்கள். என்ன வேடம் என கேட்டார்கள். கதானாயகன் வேடம் என்றான். அதிர்ந்துபோனார்கள். அதெல்லாம் உன்னால் நடிக்க முடியாது என்றார்கள். ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க்ள் என்றான். கொடுத்தார்கள். ராஜாவாக அவன் நடித்த்து பெரும் வரவேற்பு பெற்று அன்று முதல் ஹீரோ ஆனான். அவர்தான் லட்சிய நடிகர் எஸ் எஸ் ஆர்.

மொழி தெரியாத நடிகரை நடிக்க வைத்தால் அவர் தரும் தொல்லைகளை தாங்க தயாராக இருக்க வேண்டும். தமிழ் கவிஞர் பாரதியாரைப் பற்றிய படம் எடுக்க , தமிழ் தெரியாத ஒருவரை தேர்வு செய்யும் கொடுமை இங்கு மட்டுமே நடக்க முடியும்.


இப்போதைய சினிமாவை பொருத்தவரை சம்பந்தம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு அர்த்தம் இழந்த வார்த்தைகள் சில உண்டு.

டிராவல் பண்ணுதல்.. இதை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்துகிறார்கள். கதை இப்படி டிராவல் பண்ணுது , கதை அவர் மூலம்தான் டிராவல் பண்ணுது என்கிறார்கள்.




அதுபோல கெமிஸ்ட்ரி , பாடி லாங்குவேஜ் போன்றவையும் அர்த்தம் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.




ஒரு முறை ஜெயகாந்தன் என்னிடம் பேசினார். அவர் கதைகளை படித்தால் , வேறு எதுவும் தேவையில்லை, அவர் எழுத்துகள்தான் வேதம் என அவரிடம் சொன்னேன்.

அதேபோல தமிழ் ஸ்டுடியோ பணிகள் ஒரு யாகம்..




இப்படி அவர் பேசினார்..




(இணைய மொண்ணைகளை கலாய்த்த மிஷ்கின், தமிழ் ஸ்டுடியோவை விமர்சித்த இயக்குனர் ராம், அம்ஷன் குமாரின் ஆழமான பேச்சு அடுத்த பதிவில்)

( இலக்கிய விவாதத்துடன் இறைவனை தேடி - சிலிர்ப்பூட்டும் திருவண்ணாமலை அனுபவ பகிர்வு அதற்கு அடுத்த பதிவில்)







1 comment:

  1. தொடரருங்கள் இனிய தகவல்கள் .

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா