Pages

Tuesday, October 23, 2012

பீட்சா- நல்ல படம்தான் . ஆனால்....


அனுமதி வாங்காமல் மொழி பெயர்ப்பு படங்கள் எடுத்து வெளியிடும் கமல் போன்றவர்களால் தமிழ் படங்கள் பார்க்கும் ஆவலே போய் விட்டது. ஆனாலும் புதிதாக படம் எடுப்பவர்கள் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை அவர் குறும்படங்களை ரசித்தவன் என்ற வகையில் பிடிக்கும் . சினிமா ஆர்வத்தில் , நல்ல வேலையை உதறி விட்டு வந்தவர். யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர் என இவர் கதையையே ஒரு படமாக எடுக்கலாம்.

இவரது பீட்சா படம் பார்த்ததும்  , படம் பார்க்க எடுத்த முடிவுக்காக என்னை நானே பாராட்டி கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

நான் லீனியர் திரைக்கதை யுக்தி, இசை , ஒளிப்பதிவு , இயல்பான நடிப்பு , வசனங்கள் என ரசித்து பார்த்தேன்.

ஆனாலும் , ஓர் இயக்குனரிடம் உதவி இயக்குனராக இல்லாத அனுபவம் இன்மை படத்தில் தெரிகிறது.  அந்த அனுபவம் இல்லாவிட்டாலும் , சென்னை வாழ்க்கை அனுபவமாக இருந்திருக்க வேண்டும். அல்லது வேறு யாராவது சொல்லி கொடுத்து இருக்க வேண்டும் என தோன்ற வைத்தது.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.

படத்தின் அடிப்படை காட்சி அல்லது ஜீவன் என்பது அந்த பேய் பங்களாதான். அந்த பேய் பங்களாவுக்கு , பீட்சா டெலிவரி செய்பவர் அவராகவே முடிவு செய்து போவதாக காட்சி அமைப்பு. அது எப்படி அவராகவே முடியும் ? பீட்சா கடைக்கு போன் செய்து ஆர்டர் கொடுப்பார்கள். அந்த அட்ரசுக்குத்தான் டெலிவரி செய்ய கடையில் இருந்து ஆளை அனுப்புவார்கள். இப்படி அனுப்பப்பட்ட ஆள் , இன்னொரு அட்ரசுக்கு போக எப்படி முடிவு செய்ய முடியும்? சரியான அபத்தம். இந்த காட்சியைத்தான் படத்தின் டிரம்ப் கார்டாக இயக்குனர் நம்பி இருக்கிறார். அதில் இவ்வளவு பெரிய சிக்கல்.

இது போன்ற சிக்கலான திரைக்கதை கொண்ட படங்களில் இது போன்ற தவறுகள் இருந்தால் , சாதாரண ரசிகன் குழம்பி விடுவான். மற்ற நல்ல காட்சிகளும் தனக்கு புரியவில்லையா அல்லது இயக்குனரின் தவறு செய்து இருக்கிறாரா என குழப்பி கொள்வான். இது படத்தின் வெற்றியை பாதிக்கும்.

ஹீரோவின் மனைவியை யாரும் பார்த்ததில்லை என்பதையும் பெரிய விஷ்யமாக இயக்குனர் நம்பி இருக்கிறார். செல் ஃபோன் யுகத்தில் , நெருக்கமான நண்பர்களுடன் , போனிலாவது படத்தை காண்பிக்காமல் இருக்க மாட்டார்கள். படம் சென்னையில்தான் நடக்கிறதா என்ற சந்தேகத்தை இந்த காட்சி ஏற்படுத்தியது. அப்படியே யாரும் பார்த்ததில்லை என்றாலும் அக்கம் பக்கத்தில் கேட்டால் , மனைவியைப்பற்றி சொல்லி விடப்போகிறார்கள் . இது ஒரு பெரிய விஷ்யமா?


இது போன்ற அனுபவக் குறைகளையும் மீறி , படத்தை ரசிக்க முடிந்தது. பேய்பங்களாவில் இடம் பெறும் பில் தொகை காட்சியும், தில்லு முல்லு படக் காட்சியும் , இன்னொரு காட்சியில் திறமையாக பயன்படுத்தியதை திரையரங்கில் வெகுவாக ரசித்தார்கள். அதே போல வசனங்களுக்கும் பல இடங்களில் கை தட்டல்.


ஆனால் ஆரம்ப காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கவில்லை. திருமணம் தொடர்பாக கதானாயகனுக்கும் , நாயகிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அதன் பின் வீட்டிலேயே திருமணம் ( ? !! ) செய்து கொண்டு சமாதானம் ஆகி விடுகிறார்களாம். என்ன லாஜிக் என புரியவில்லை.


இது போன்ற குறைகளை தவிர்த்து இருந்தால் , பீட்சா எல்லோருக்கும் ஏற்ற உணவாகி இருக்கும்.

வெர்டிக்ட்  

பீட்சா - சிறப்பான உணவு , ஆனால் சிலருக்கு மட்டுமே 






1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]