Pages

Sunday, April 28, 2013

பல முறை திருத்தி எழுதப்பட்ட உன்னத நாவல்- கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்களின் ஒன்று



     எனக்கு தெரிந்த  நண்பர் ஒருவர் . மிகவும் நல்லவர். நேர்மையானவர். அன்பானவர். உழைப்பாளி.

ஆனால் அவரைப் பற்றி யோசிக்கையில் அவரது மற்ற அடையாளங்களை மீறி அவரது குறிப்பிட்ட ஒரு பண்பு மேலோங்கி நிற்கும். அதுதான் அவரது கவலைப்படும் தன்மை.

புதிதாக ஒரு கார் வாங்கி இருக்கிறேன் என அவரிடம் சொல்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் மகிழ்வார். உடனே கவலைப்பட ஆரம்பித்து விடுவார்.

கார் முதலில் நன்றாக ஓடும், ஆனால் பழுதாகி விட்டால் செலவு வைக்குமே. முதலில் உனக்கு பெரிதாக தெரியாது. அதன் பின் உன்னால் சமாளிக்க முடியாமல் போய் விடும். என்னிடம் உதவி கேட்பாய்.. என்னால் கொடுக்க முடியாவிட்டால் , நமக்குள் வருத்தம் ஏற்படலாம் என்பது போல கவலைப்பட ஆரம்பித்து விடுவார்.

நம் சுக துக்கங்களை புரிய வைக்கவே முடியாதோ என்ற சம்சயம் நமக்கு ஏற்படும்.

அவராவது மகிழ்ச்சி என்பதை வாழ்க்கையில் என்றாவது அனுபவித்து இருக்கிறாரா என்றும் சந்தேகமாக இருக்கும்.

மகிழ்ச்சி என்பது என்ன , மகிழ்ச்சியை எப்படி அடைவது வாழ்க்கை என்பது என்ன என்பது என்றென்றும் ஆர்வமூட்டும் வினாக்களாகவே நம்மிடம் நீடித்து வருகின்றன.


இது போன்ற கேள்விகளை அலசும் ஓர் அற்புதமான நாவல்தான் , யுக்ரேன்/ ரஷ்ய எழுத்தாளர் விளாதிமீர் கொரேலென்கோ படைத்த “ கண் தெரியாத இசைஞன் “ என்ற படைப்பு.

தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் , சேகவ் என்று படித்து இருக்கிறோம். இவர்களுக்கு இணையான கொரெலென்கோ எழுத்துகளை அவ்வளவாக படித்திருக்க மாட்டோம்.

எதிர்பார்ப்பு ஏதும் இன்றிதான் இந்த நாவலை படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நாவல் என்னை இழுத்துக் கொண்டு விட்டது.

பிறவியிலேயே கண் பார்வையற்ற பியோத்தர் என்பவனின் வாழ்க்கைதான் இந்த கதை.

அவன் கதை மட்டும் அன்று. அவன் மாமாவும் , குரு நாதருமான மக்சீம், அவன் காதலி, இசை ஆர்வம் ஏற்படுத்திய முதல் இன்ஸ்பிரேஷன் , அவன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பிச்சைக்காரர்கள் என ஒவ்வொருவர் வாழ்க்கையும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் இது வெறும் 240 பக்கங்கள் கொண்ட சிறு நாவல்தான்.


பார்வையற்று பிறந்த பியோத்தர் ஒலி வடிவிலேயே உலகை உணர பழகுவது , மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. புல் வெளியின் பெருமூச்சு , பைன் மர காற்றோசை , வெண்பனியின் குளுமை போன்றவற்றை அவனால் மட்டுமே உணர முடிகிறது. அவன் மூலம் நாமும் உணர்கிறோம்.

 
        வண்ணத்தை அவனுக்கு தெரிந்த ஒலியுடன் ஒப்பிட்டு புரிய வைக்கும் இடம் அபாரம்.

சிறு வயதிலேயே தோழியாக அறிமுகம் இளம் பெண் , பின்பு காதலி ஆகிறாள். அவனுக்கு கண் போல இருக்கிறாள்.

அவனை வெற்றிகரமான மனிதன் ஆக்குவதே தன் வாழ்வின் பயன் என நினைக்கும் அவன் மாமா , அவனுக்காகவே தன் வாழ்வை அமைத்து கொள்கிறார்.

கதையின் இந்த பகுதி வரை கண் தெரியாமல் பிறந்து விடுபவர்களின் உலகை நம் கண் முன் நிறுத்துகிறது.

கல் வெட்டில் இருக்கும் எழுத்துகளை , வெளிச்சம் போதாமையால் படிக்க தடுமாறுவார்கள்..” இருங்கள்.. நான் படித்து சொல்கிறேன் “ என கண் பார்வையற்றவன் கைகளால் எழுத்துகளை தடவி படித்து சொல்வான். இது போன்ற பல சம்பவங்கள் அட்டகாசமாக இருக்கும்.


ஆனால் , ஒரு குறிப்பிட வகையினருக்கான கதை என்றில்லாமல் , பொதுவான ஆன்மீக தேடல் ,  நிரந்தரமான உண்மை என கடைசியில் கதை விஸ்வரூபம் எடுப்பது அழகு.


மகிழ்ச்சி என்பதை உணர முடியாதவன் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. ஒரு நரகத்தை உருவாக்கி கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்துகிறான்.

மகிழ்ச்சியின்மை என்பது யாருக்கும் ஏற்படலாம்.  மகிழ்ச்சியினமைக்கு காரணம் ஏதும் தேவையில்லை. நாமே எத்தனையோ காரணங்களை உருவாக்கலாம்.

உண்மையிலேயே வாழ்க்கையை அனுபவிக்க , பணம் , ஆரோக்கியம் , நட்பு , நல்ல மனிதர்கள் என எத்தனையோ தேவை. இவை அனைத்தும் இருந்தும் , தாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் டார்ச்சர் செய்பவர்கள் ஏராளம். ஆக வாழ்க்கையை உள்ளபடி அப்படியே கவனிக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.

அதை கதை நாயகன் அறிவதுதான் இந்த நாவலின் உச்சம்.

“பார்க்க கற்று கொண்டு விட்டான். உண்மை அதுதான், ஆம் , அவன் பார்க்க கற்று விட்டான்” என என மக்சீம் முணு முணுக்கும்போது, நாமும் பார்க்க கற்கிறோம்.அல்லது பார்க்க கற்க வேண்டும் என்ற உந்துதல் உண்டாகிறது.

அதுதான் இந்த நாவலின் வெற்றி..

இந்த நாவல் பிரசுரம் ஆன பின்பும் , கொரெலென்கோ மீண்டும் மீண்டும் திருத்தி எழுதினாராம்.


அவர் சேர்த்த சில சம்பவங்கள் நாவலுக்கே புதிய அர்த்தம் கொடுத்து விடுகிறது..

வெர்டிக்ட்    கண் தெரியாத இசைஞன் - கண்டிப்பாக ரசிக்க வேண்டிய இசைஞன்


தோழமை வெளியீடு   விலை ரூ 90




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]