Pages

Tuesday, May 14, 2013

கண்ணீர் கடலில் நம்மை தள்ளிய பதிவர் பட்டாபட்டி - சாருவை வைத்து ஏற்பட்ட உறவும் பிரிவும்


   மரணங்களை அன்றாடம் பார்த்து வந்தாலும் , சில நல்லவர்களின் மரணம் நம்மை பாதித்து விடுகிறது. எல்லா தத்துவங்களும் , படிப்பும் செயலிழந்து போய் நம் கண்ணீரை துடைக்க முடியாமல் நின்று விடுகின்றன.

பட்டாபட்டி என்ற பெயரில் பதிவுலகை கலக்கி வந்த இந்த அருமை நண்பரின் இயற்பெயர் வெங்கிடபதி. சிங்கப்பூரில் பணி புரிந்த இவர் மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார்.

   வெளி நாட்டில் இயற்கை எய்திய அவர்  , சென்னைக்கு கொண்டு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு , இங்கிருந்து கோவை சென்று , நாளை புதன் கிழமை ( 16.05.2013 ) இறுதி சடங்கு நடக்கும் என தெரிகிறது.

     நகைச்சுவையாக எழுத தெரிந்த இவருக்கு ஆக்ரோஷமாகவும் எழுத தெரியும்.  சில உறுதியான கருத்துகளில் இருந்தவர்.  நேர்மையாக எழுதக்கூடியவர்.

  நான் எழுத வந்த புதிதில் எனக்கு ஊக்கமூட்டியவர் அவர். பட்டாபட்டி follows என்று ஒரு வலைப்பூ வைத்து இருக்கிறார் ( மன்னிக்கவும்,, வைத்து இருந்தார்). அதில் என் வலைப்பூவையும் இணைத்து இருந்தார்.

   அந்த நேரத்தில் எனக்கு இது மகிழ்ச்சியாக இருந்தது. நான் அப்போதுதான் எழுத வந்தவன். என்னை நண்பராக நினைக்கிறாரே என மகிழ்ந்தேன்.

அவர் முகப்பு பக்கத்திலேயே அவர் நகைச்சுவை உணர்வு தெரியும்.

அந்த கால கட்டத்தில் எனக்கு தமிழ் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ் எழுத்தாளர்கள் மீதும் பெரிய ஈர்ப்பு இல்லை. பாலகுமாரன் மட்டும் படித்து வந்தேன்.

மற்ற எல்லோரையும் கேலி செய்து எழுதுவேன். ஆனாலும் கேலியில் கண்ணிய குறைவு இருக்காது.

அதில் குறிப்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதாவை விமர்சித்து எழுதினால் பட்டாபட்டி ரசிப்பார். அவரும் கிண்டல் செய்வார்.  vவேறு பல விஷ்யங்களிலும் ஒத்த கருத்து இருந்ததால் , மனதளவில் ஒரு வித நெருக்கம் ஏற்பட்டது.

  அதன் பிறகு தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதற்கு காரணம் பதிவுலகம்தான் என்று சொல்ல வேண்டும்.

சீரோ டிகிரி, ராச லீலா, விஷ்ணுபுரம், உபபாண்டவம், வாடி வாசல் , ஜே ஜே சில குறிப்புகள் , ஒற்றன், புயலிலே ஒரு தோணி  என படிக்க படிக்க , தமிழ் எழுத்துகளில் மீது மரியாதை வர ஆரம்பித்தது.

எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வேறு. ஆனால் வாசிப்பின் ஆரம்பத்தில் இருக்கும் நாம் , மற்றவர்களை கேலி செய்வது தவறு என நினைத்தேன். அந்த பாணி எழுத்துகளை கை விட்டேன்.

அனைத்து எழுத்தாளர்க்ளையும் படித்தாலும் , சாரு எழுத்துகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்.  அவர் நூல்களை பாட நூல்களை போல படிக்க   கற்க ஆரம்பித்தேன்.

         எனது இந்த மாற்றம் பட்டாபட்டிக்கு உவப்பானதாக இல்லை என்பதாலும் ,  அவரது சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாததாலும் பழைய நெருக்கம் குறைய ஆரம்பித்தது.

ஆனால் அதை வன்மமாக அவர் மாற்றியதில்லை. கடைசி வரை, அவர் வலைத்தளத்தில் இருந்து என் பெயரை நீக்க வில்லை.  அதேபோல நானும் கடைசி வரை அவர் எழுத்துகளை படித்து வந்தேன்.

    இன்னொரு நண்பர். சாருவின் தீவிர வாசகர். அவரும் நானும் பல விஷ்யங்கள் பேசி இருக்கிறோம். விவாதித்து இருக்கிறோம்.   கூட பிறக்காத தம்பி என்றே நினைத்து வந்தேன்.  டீ கடையில் நின்று நேரம் போவது தெரியாமல் பேசி இருக்கிறோம்.

   ஏதோ சில காரணங்களால் அவருக்கு சாருவை பிடிக்காமல் போய் விட்டது.  சரி, அது அவர் இஷ்டம்.

ஆனால் ஒரு சம்பவம் எனக்கு வருத்தம் ஏற்படுத்தியது.  சாருவின் எழுத்தை பாராட்டி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதில் யாரையும் திட்டவில்லை. சாருவை பாராட்டி இருந்தேன். அவ்வளவுதான்.

அந்த நண்பரிடம் இருந்து ஒரு மெயில். என்னை கன்னா பின்னா என திட்டி இருந்தார். நான் ஒரு பிச்சைக்கார நாய்.  என்னை திட்டுயதில் எனக்கு வருத்தம் இல்லை.

ஆனால் அவ்வளவு அன்பாக பழகிய அவர் மனதில் இவ்வளவு கோபமா, இவ்வளவு வன்மமாக என அதிர்ச்சியாக இருந்தது, எழுத்திலேயே இவ்வளவு கோபம் என்றால் , அவர் மனதில் எந்த அளவு கோபம் இருந்து இருக்கும் என கவலையாக இருந்தது.
என்னுடன் ஒரு சகோதரனாக பழகிய அவருள் இப்படி ஒரு எரிமலையா என வருத்தமாக இருந்தது. என்னை பற்றி தெரியாமல் என்னை திட்டுவது வேறு விஷ்யம் . ஆனால் சகோதரனாக பழகிய என்னைப்போய் ஏதோ பரம்பரை எதிரி போல நினைத்து கடிதம் எழுதி இருக்கிறாரே என  வருத்தப்பட்டேன்.

ஆனால் பட்டாபட்டியின் பார்வையில் நான் கருத்தியல் ரீதியாக மாறி விட்டாலும் , அவர் என்னை எதிரியாக நினைத்தது இல்லை.  அவர் மனதில் இருந்த நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் குறையவும் இல்லை.  ஆரம்பத்தில் இருந்த அன்பை குறைத்து கொண்டாரே தவிர , வெறுப்பை காட்டியதில்லை.

      ஆரம்ப காலத்தில் அவர் காட்டிய அன்பு அந்த நேரத்தில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளித்தது என்பதை அவர் அறிய மாட்டார். கடைசி வரை என்னால் சொல்ல முடியாமலேயே போய் விட்டது.

மிக மிக வருந்துகிறேன்.
\
வாழ்க்கை மிக குறுகியது. வெறுப்பை காட்டுவதில் அவசரம் காட்டும் நாம் அன்பையோ , நன்றியையோ காட்டுவதில் முனைப்பு காட்டுவதில்லை.

நாம் அன்பில்லாதவர்கள் , நன்றியில்லாதவர்கள் இல்லை..  மெதுவாக சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து விடுகிறோம்.

அதே போல நாம் வன்மம் கொண்டவர்களும் இல்லை.  பல சமயங்களில் சும்மா விளையாட்டாக கூட வெறுப்பை காட்டுவதுண்டு. பிறகு சாரி சொல்லிக்கொள்ளலாம் என்ற நினைப்பில்.

ஆனால் நம் வாழ் நாள் மிக குறைவு . எனவே நல்லதை உடனே செய்ய வேண்டும் . தீமையை கொஞ்சம் மெதுவாக செய்யலாம்.

பட்டாபட்டியின் நகைச்சுவை உணர்வு , சுவையான எழுத்துகளுக்கு நான் ரசிகன் என்பதையும் , அவர் ஆரம்ப காலத்தில் என் மீது காட்டிய  அன்புக்கு நான் அடிமை என்பதையும் , அவரிடம் ஒரு முறை கூட சொல்லாததற்கு
மிகவும் வருந்துகிறேன்.


 


       

  

2 comments:

  1. இன்றும் எங்களிடயே நட்பு வேறு கருத்து வேறு என்பதற்குண்டான அடையாளங்கள் அப்படியே இருக்கிறது. நாங்கள் மனிதம் மட்டுமே பேசினோம் தோழா!

    நன்றி! உங்களது பதிவிற்கு!

    ReplyDelete
  2. கருத்து வேறு , நட்பு வேறு...ஒத்த கருத்துடையவர்கள் சிறந்த நண்பராகலாம்...ஆனால் கருத்து மாற்றம் நட்பை சிதைத்தால் அது நட்பல்லவே....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]