Pages

Monday, June 30, 2014

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.ஒன்று மனசாட்சி ( இடாலோ கால்வினோ கதையின் சுருக்கப்பட்ட வடிவம்)

அந்த நாட்டில் திடீரென யுத்த மேகம் சூழ்ந்தது,, அவன் முதல் ஆளாக ராணுவத்தில் சேர்ந்தான் .. எல்லோரும் பாராட்டினார்கள்..

என் எதிரி ஆல்பர்ட்டோவை கொன்றே ஆக வேண்டும்..அதற்காகத்தான் ராணுவத்தில் சேர்கிறேன் என்றான்.

எல்லோருக்கும் ஆச்சர்யம்.. யார் அவன் .. அவன் மேல் ஏன் அவ்வளவு கோபம் என கேட்டனர்..

அவன் மோசமான ஆள்.. எனக்கு ரொம்ப தீமைகள் செய்திருக்கிறான்,. அவனை கொன்றே ஆவேன் என்றான்..

தம்பி ,,,அப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு கொல்ல முடியாது..  நம் எதிரிகளை மட்டும்தான் கொல்ல முடியும் என்றனர்,

அட அது எனக்கு தெரியாதா... ஆல்பர்ட்டோ மிக மோசமான எதிரி..  நேர்மை அற்றவன்.. அவனே கொன்றே தீர்வேன்.. என் ஃபிளாஷ் பேக் கேட்டால் உங்களுக்கு என் கோபம் புரியும் என்றான்..

சரி சரி..கொன்று தொலை என்றனர்..

”அவன் எங்கு இருக்கிறான் ?”

“ அதெல்லாம் எங்களுக்கு தெரியாது “

“ அப்ப சரி.. நானே போய் அவனை தேடிக்கண்டு பிடித்து கொல்கிறேன் “

“ தம்பி..அப்படி எல்லாம் செய்யக்கூடாது... நாங்கள் அனுப்பும் இடத்துக்கு போக வேண்டும் ..அங்கு யாரை வேண்டுமானாலும் கொன்று கொள் “

“ அதெப்படி எனக்கு எந்த தீங்கும் செய்யாதவர்களை கொல்ல முடியும்.. ஆல்பர்ட்டோ எனக்கு தீங்கு செய்தவன்... அவனை மட்டும் கொல்கிறேன்”

இந்த விவாதத்தால் களைப்படைந்து போன ஒருவர் போர் என்பதை விளக்கி சொன்னார்..

“ அப்படி எல்லாம் அப்பாவிகளை கொல்ல முடியாது.. நான் வீட்டுக்கு போகிறேன் .. எனக்கு வேலை வேண்டாம் “ என்றான் அவன்..

“ அதெல்லாம் முடியாது..உன் பெயரை சேர்த்து விட்டோம் ..போரிட்டுதான் ஆக வேண்டும் “ என சொல்லி விட்டனர்..

அவர்களுடன் சேர்ந்து போய் எதிரிகளை கொல்ல ஆரம்பித்தான்..  ஓவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு அவார்டு கிடைத்தது..அவார்டுகள் வாங்கி குவித்தான்.. கடைசியில் எதிரி நாடு சரணடை ந்து போர் முடிந்தது..

ச்சே..தேவையே இல்லாமல் அப்பாவிகளை கொன்று விட்டோமே என வருந்தியபடி அந்த ஊரை சுற்றி வந்தான்..எல்லா பதக்கங்களையும் கொல்லப்பட்டோர்கள் குடும்பத்தினருக்கு தேடிப்போய் கொடுத்தான்..

ஒரு நாள் தற்செயலாக அல்பர்ட்டோவை பார்த்து விட்டான்.. தக்காளி , ஒரு வழியா மாட்டினான் என நினைத்தபடி அவனை அங்கேயே கொன்று விட்டான்..

அவனை கைது செய்தார்கள்.. விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

மனசாட்சியில்லாமல் செய்த கொலைக்கு விருதுகள்..மனசாட்சிப்படி செய்த கொலைக்கு தண்டனையா.. மனசாட்சிப்படி நடப்பது தவறா என மீண்டும் மீண்டும் கேட்டான்.. யாரும் அவன் குரலை பொருட்படுத்தவே இல்லை

Sunday, June 29, 2014

ராமன் தேடிய சீதை ( இட்டாலோ கால்வினோ சிறுகதையின் சுருக்கப்பட்ட வடிவம்)


 அந்த அடுக்கு மாடி கட்டடத்தின் கீழே நின்று கொண்டிருந்தேன்..கைகளை குவித்து “ தெரசா “ என சத்தமான குரலில் அழைத்தேன்..  எந்த சலனமும் இல்லை..   மீண்டும் கத்தினேன்..ம்ஹூம்..
வழிப்போக்கர் ஒருவர் என்னை பார்த்து சொன்னார் “ சார்..இவ்வளவு மெதுவா கத்தினா மேல் மாடில கேட்காது.. இருவரும் சேர்ந்து அழைப்போம் “ என்றார்.. இருவரும் சேர்ந்து ஒருமித்த குரலில் கத்தினோம்.. “ தெரசா ஆஆஅ “...ம்ஹூம் .. அவள் வரவில்லை..

இன்னும் சிலர் கூடினர்.. உதவிக்கு வந்தனர்.. எல்லோரும் சேர்ந்து கத்தினோம் “ தெரசாஆஆஆஆஆஅ “ பயனில்லை.. சிறிது நேரத்தில் மேலும் சிலர் கூடி விட்டனர்..

ஒன் டு த்ரீ சொல்லி ஒன்றாக கத்தினோம்...

மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தோம்..பயனில்லை

“ தெர்சா மேலே தான் இருக்கிறாளா.. எங்காவது போய் விட்டாளா “ கேட்டான் ஒருவன்..

“ தெரியலையே “ என்றேன் நான்,,

” சாவி இல்லாமத்தான் மேலே போக முடியுமா கத்துறீங்களா “ கேட்டான் ஒருவன்..

“ சாவி இருக்கு .இந்த வீட்டு சாவி இல்லை.. என் வீட்டு சாவிதான் இருக்கு... “ என்றேன் நான்..

அப்ப இங்கே யாரு இருக்கா சற்று எரிச்சலாக கேட்டான் ஒருவன்,,

தெரியலையே என்றேன் நான்,,

தக்காளி..அப்ப ஏண்டா தெரசா தெரசானு கூப்பிடுற என்றான் ஒருவன்...

அந்த பேர் பிடிக்கலைனா வேறு பேரு சொல்லுங்க ..கூப்பிட்டு பார்ப்போம் என்றேன் நான்,,

தக்காளி,.,விளையாடுறியா என்றார் கூட்டத்தில் ஒருவர்..

 ச்சே ச்சே நான் ஏன் விளையாடபோறேன் என அமைதியாக சொன்னேன்.

சரி சரி..கடைசியாக ஒரு முறை கூப்பிட்டு பார்ப்போம்...வரலைனா சங்கத்தை கலைப்போம் என ஒருவர் சொன்ன யோசனையை கேட்டு கடைசியா கத்தினோம் “ தெரசாஆஆஆ “

பயனில்லை.. கூட்ட்டம் கலைந்தது...

நானும் அங்கிருந்து கிளம்பினேன்,,

ஏதோ குரல் கேட்டது போல இருந்தது “ தெரசாஆஆஆ ”

எவனோ ஒருவன் மனம் தளராம டிரை பண்றான் போல...

Friday, June 27, 2014

சுத்தம் சோறு போடாது - ஜென் கதை


தனக்கு தியானம் சொல்லிதருமாறு ஒருவன் ஜென்மாஸ்டரை கேட்டான்.. ஜென் மாஸ்ட்டர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.. “ ஒரு குளத்தில் ஒருதவளை இருந்தது.. அதற்கு ஒரு காதலியும்  ஒரு தோழியும் இருந்தனர் “

சீடன் கதையை நிறுத்தினான்.. “ எப்படி இருந்தாலும் , இந்த கதை எனக்கு புரியாது... ஏதாவது ட்விஸ்ட் இருக்கும்,, ஆனால் கடைசியில் ஞானம் கிடைக்கும்.. ஆகவே நேரடியாக கடைசி ஸ்டெப்புக்கு வாருங்கள்..”

குரு டென்ஷன் ஆனார்... “ தக்காளி... உனக்கு கஷ்டமான கதை சொன்னாத்தான் சரிப்படுவ,   ஒரு மெஷின் ஷாப்பில் இருந்து ரெண்டு லேத ஆப்பரேட்டர்கள் வெளி வருகின்றனர்.. ஒருவன் முகம் லேத் கடைசலால் பற்க்கும் உலோக துகள்கள். க்ரீஸ் போன்றவற்றால் அழுக்கா இருக்கு.. இன்னொருவன் முகம் சுத்தமா இருக்கு.. அவர்களில் யார் தன் முகத்தை  கழுவிக் கொள்வான்...  “ கேட்டார் குரு..

“ என்ன குருவே லுச்சாத்தனமா கேட்குறீங்க.. அழுக்கா இருப்பவனே க்ளீன் செய்வான் “ என்றான் சீடன்..

” இல்லை... சுத்தமா இருப்பவனே முகம் கழுவுவான்,,,,லாஜிக்கலா யோசி.. அழுக்கா இருப்பவன் , க்ளீனா இருப்பவன் முகத்தை பார்ப்பான்.. தன் முகமும் க்ளினா இருக்கு என நினைத்து கொள்வான்..  க்ளினா இருப்பவன் , அழுக்கா இருப்பவன் முகத்தை பார்த்து தன் முகம் அழுக்கா இருப்பதா நினைச்சு சுத்தம் செய்வான் “ என்றார் குரு

” அட!! “ வியந்தான் சீடன்

“ சரி..அதே மெஷின் ஷாப்பில் இருந்து ரெண்டு பேர் வ்றாங்க.. ஒருவன் முகம் அழுக்கா இருக்கு,,,ஒருவன் முகம் சுத்தமா இருக்கு ..இப்ப யார் தன் முகம் கழுவுவான் “

“ க்ளினா இருப்பவனே முகம் கழுவுவான் “ என்றான் சீடன்..

”இல்லை.. அழுக்கா இருப்பவன் , க்ளீனா இருப்பவன் முகம் பார்த்து தன் முகமும் க்ளினா இருப்பதா நினைப்பான்.. ஆனால் அவன் கழுவுவதை பார்த்து , எதுக்கும் நாமும் கழுவுவோம் என இவனும் கழுவுவான்... ஆக, இருவருமே கழுவுவார்கள்”

“ குருவே அருமை.. இன்னொரு கேள்வி கேளுங்க... “

” அதே மெஷின் ஷாப் ... இருவர் வருகிறார்கள்..ஒருவன் முகம் அழுக்கு,,ஒருவன் முகம் சுத்தம்,,யார் முகம் கழுவுவார்கள்”

“ இருவரும் கழுவுவார்கள்” 

“ ம்ஹ்ஹும் தப்பு...  அழுக்கா இருப்பவன் , நல்ல முகத்தைபார்த்து தன் முகமும் சுத்தமா இருப்பதா நினைப்பான்..எனவே அவன் கழுவ மாட்டான்.. சுத்தமா இருப்பவன் அழுக்கா இருப்பவன் முகம் பார்த்து தன் முகம் அழுக்கா இருப்பதா நினைப்பான். ஆனா , தக்காளி அவனே கழுவாதப்ப நாம மட்டும் ஏன் கழுவனும் நினைப்பான்..ஆக இருவருமே கழுவ மாட்டார்கள்”

”தெய்வமே... எனக்கு ஞானம் கிடைச்சுருச்சு.. கடைசியா ஒரு கேள்வி கேளுங்க”

“ அதே மெஷின் ஷாப்...அதே இருவர்... யார் முகம் கழுவுவார்கள்”

“ இருவருமே கழுவ மாட்டார்கள்”

“ ம்ஹ்ஹும் தப்பு.. ஒரே மெஷின் ஷாப்பில் இருந்து வரும் ஒருவன் முகம் சுத்தமாகவும் , ஒருவன் முகம் அழுக்காவும் எப்படி இருக்கும்... இந்த கேள்வியே தப்பு ....   இருவர் முகமுமே அழுக்கா இருக்கும் .. “

சீடன் டென்ஷன் ஆனான்..

” யோவ் குருவே.. தமிழ் நாட்டிலே கரண்ட் எங்கே இருக்கு... அங்கே லேத் ஓடுது... நாள் ஃபுல்லா மெஷின் ஷாப்ல இருந்தாலும் , இருவர் முகமுமே அழுக்கு ஆகாது..  தக்காளி. இது கூட தெரியாத உன் கிட்ட தியானம் பழகுவதை விட , ரெண்டு ஸ்டேட்டஸ் போட்டு போய்றுவேன்.. நான் கிளம்புறேன் என வீட்டுக்கு வந்து கதையை டைப் செய்ய ஆரம்பித்தான்...

Tuesday, June 10, 2014

திரையை கிழித்து பொங்கி வழிவது ஏன் ? அறிவியல் விளக்கம்


பால் பொங்குவதை நல்ல சகுனமாக பலர் கருதுவதுண்டு,,,  சினிமாக்களில் இதை சிம்பாலிக்காக பல சந்தர்ப்பங்களில் காட்டுவார்கள்..

சூடாக்கும்போது பால் ஏன் பொங்குகிறது?

பாலில் தண்ணீர் பொருட்கள் , கொழுப்பு போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன.. இதில் கொழுப்பின் கொதி நிலை மற்றவற்றைவிட குறைவு... எனவே பால் சூடாகும்போது , இந்த கொழுப்பு பொருட்கள் 50 டிகிரி செல்சியசிலேயே கொதித்து மேற்பரப்புக்கு சென்று ஒரு திரை போல மூடிக்கொள்ளும்.

மேலும் சூடாகும்போது , காற்று குமிழிகள் உருவாகி மேலே செல்ல தொடங்கும்.. ஆனால் மேலே கொழுப்பு திரை இருப்பதால் , அவை அதற்கு மேல் செல்ல முடியாது..   அந்த திரையை உடைக்க இவை முயலும்போது, அதுவரை மேலே வரதா கொழுப்பு பொருட்களும் மேலே வந்து திரையை உறுதி ஆக்கி விடும்..


வெப்ப நிலை உயர்ந்து , பாலின் கொதி நிலையைவிட அதிகமாகும் நிலையில் அனைத்து காற்று குமிழிகளும் ஒன்றாகி பேராற்றல் பெற்று கொழுப்பு திரையை தள்ளிக்கொண்டு மேலே வந்து வழியும்.. இதுதான் பால் பொங்குதல்..


பாலை தொடர்ந்து கிண்டி கொண்டே இருந்தால் , கொழுப்பு திரை அவ்வப்போது சிதைந்து விடுவதால் , காற்று குமிழிகள் அவ்வபோது சிதறி விடும்.. பொங்கி வழியும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும்..

ஆனால் பால் குக்கரில், இப்படி பொங்கி வழியாது? ஏன்?

பால் குக்கரின் ஓரத்தில் தண்ணீர் ஊற்றும் அமைப்பு இருக்கும்,,, அதில் தண்ணீரை ஊற்றி பாலை அடுப்பில் வைப்போம்..
அந்த ஓரத்தண்ணீர் மூலம் பால் சூடாவதால் , பால் எங்கும் சமச்சீராக வெப்பம் பாயும்.. முன்பு பார்த்தது போல ,  அடிபகுதி சூடாகி சூடான பொருட்கள் மேலே போதல் , மேலே இருந்து சூடாக பகதி கீழே வருதல் எனும் சுழற்சிக்கு இங்கு அதிக வாய்ப்பில்லை   .. ( இந்த சுழற்சிக்கு பெயர் கன்வெக்‌ஷன்)

அதேபோல , பாலின் கொதி நிலையை விட அதிக வெப்ப நிலையை நாம் கொடுக்க முடியாது,, காரணம் கொதி  நிலையை அடைந்த உடனேயே , ஓரத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி விசில் அடித்து விடும்.. குக்கர் இல்லாத நிலையில் , நாம் பக்கத்தில் நின்று கவனிக்க வேண்டும்,, பால் குக்கர் நமக்காக இந்த பணியை செய்து விடுகிறது..




Sunday, June 8, 2014

கமல்ஹாசன் முகத்துக்கு நேராக பேச மாட்டார் - ரோகிணி பரபரப்பு பேச்சு - பிரத்தியேக கவரேஜ்

பலதரப்பட்ட ஆளுமைகளின் உரைகளை கேட்க , அவர்களுடன் உரையாட நல்வாய்ப்பாக அமைந்து இருப்பது ஞாநி நடத்தும் கேணி கூட்டங்கள்...  இலக்கியம் , சினிமா, மருத்துவம் , அரசியல் என பல துறையினரை இங்கு சந்திக்கலாம்..

அந்த வகையில் இன்று ( ஜுன் எட்டாம் தேதி , 2014) நடந்த கூட்டத்தில் நடிகர் & இயக்குனர் ரோகிணி பேசினார்.. மறுபடியும் , மகளிர் மட்டும் என பல படங்களில் இவரை மறந்து இருக்க முடியாது..தவிர சில திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.. அப்பாவின் மீசை எனும் படம் எடுத்து வருகிறார்.

மரங்கள் சுழ்ந்த இனிமையான இடம்.. நல்ல கூட்டம்.  திரைத்துறையினர் , முக நூலர்கள் , பத்திரிக்கையாளர்கள் என பலர் வந்து இருந்தனர்.

ஞாநி வரவேற்புரை நிகழ்த்தினார்.. வழக்கமாக சுருக்கமாக பேசும் அவர் , சற்று விரிவாகவே பேசினார்... ரோகிணியுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியது...

ரோகிணியை எனக்கு வெகு நாட்களுக்கு முன்பே தெரியும், அவரை நான் முதன்முதலில் சந்தித்தது அவருக்கே நினைவு இருக்குமா என தெரியவில்லை.. தூர்தர்ஷனுக்காக ஒரு நிகழ்ச்சி செய்தேன். அதில் ஒரு பேட்ட்டிக்காக ரோகிணியை சந்தித்தேன்.. அப்போது அவர் சிறிய பெண்.  அப்போதைய இடத்தில் இருந்து , இப்போது நிறைய டிரான்ஸ்ஃபார்ம் ஆகி இருக்கிறார்.  அந்த மாற்றமே அவரை இங்கே அழைக்க செய்தது.. நிறைய வாசிக்கிறார். தற்போது ஒரு படம் இயக்குகிறார்.

 நடிகர்கள் பலருக்கு பொதுவான விஷயங்கள் தெரிவதில்லை.. நான் உட்பட பலருக்கும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அற்புதமான நடிகர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அவர் ஜனதா தள் தலைவராக இருந்தபோது , விபி சிங் ஆதரவு நிலையில் சிவாஜியுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். எளிமையாக இனிமையாக பழகுவார்.  ஆனால் அவருக்கு சினிமா, அதில் தான் ஏற்கும் பாத்திரம் இவை மட்டுமே தெரிந்தவர் அவர்.

மாறாக ரஞ்சன் என்ற நடிகர் அந்த காலத்தில் இசை பத்திரிக்கை வெளியிட்டார். பல விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருந்தார். தற்போது நாசர் உட்பட சிலருக்கு மட்டுமே பொது விஷ்யங்கள் தெரிகின்றன. பெண் நடிகர்களில் விஷ்யங்கள் தெரிந்தவர்கள் குறைவு. இவர்களில் சற்று மாறுபட்டவர் ரோகிணி. நிறைய வாசிக்கிறார். தெளிவாக முடிவெடுக்கிறார்.

அவரை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினேன்.. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பத்து நிமிட படம் அது. சிறப்பாக நடித்தார். இன்னொரு படத்துக்காக அணுகிய போது  , அந்த கதை பிடிக்காமல் நடிக்க மறுத்து விட்டார். நோ சொல்ல தெரிந்தவர் அவர்.. அவர் இப்போது பேசுவார்”

பிறகு ரோகிணி பேசினார்...

ஒரு கல்லூரிக்கு பேச போனேன். நிறைய தயார் செய்து பேசினேன்.. பேசி முடித்து விட்டு , ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டேன்.. " ஆமா...சீக்கிரம் பேச்சை முடிங்க... பஸ்சுக்கு லேட் ஆகுது என்றார்கள்.. இப்படி சில இடங்களில் ஆகிறது..

இன்னொரு கல்லூரிக்கு போய் இருந்தபோது ஆரம்பத்திலேயே கேட்டு விட்டேன். என்ன டாபிக் பேச விரும்புகிறீர்கள்.. அவர்கள் சொன்னார்கள் , மறுபடியும் படத்தில் வரும் ஆசை அதிகம் வச்சு பாடலுக்கு டான்ஸ் ஆடுங்கள். திகைத்து போனேன். நான் அதற்கு பிராக்டிஸ் செய்திருக்கவில்லை.. அவர்கள் எண்ணமோ டான்ஸ் பார்ப்பதில்தான் இருந்து இருக்கிறது.

பார்வையாளர்களுக்கு ஏற்பவே பேச்சு அமையும். வேறு எங்கும் பேச முடியாத சிலவற்றை இங்கே பேச விரும்புகிறேன்.

நாம் எப்படி பிறக்கிறோம்.. எங்கே பிறக்கிறோம் என்பது முற்றிலும் தற்செயலானது.. நான் பெண்ணாக பிறந்தது , நடிகை ஆனது எல்லாம் தற்செயலானவை..

ஆரம்பத்தில் இதற்காக வேதனைப்பட்டு இருக்கிறேன். காரணம் இங்கே பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில்தான் வைத்து பார்க்கிறார்கள்.. அதிலும் பெண் நடிகர் என்றால் மதிப்பதே இல்லை..

ஆரம்பத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நடிப்பு இனிமையாக இருந்தது.. காரணம் சாக்லேட் கிடைக்கும், அழுகை சீனாக இருந்தாலும் , நன்றாக அழுதால் சாக்லேட் கிடைப்பதால் அதை ஜாலியாக செய்வேன்.

15 அல்லது 16 வயதில் இளமைப்பருவத்தில் நடித்த போதுதான் , சிக்கல் ஆரம்பித்தது. ஒரு கவர்ச்சியான ஆடையை எனக்கு அணிவித்து , என்னை விட 20 வயது பெரிய நடிகர் ஒருவருடன் காதல் பாட்டுக்கு ஆட சொன்னபோது திகைத்தேன்..  கவர்ச்சிக்கன்னி , ரோகினி எனும் வன மோகினி என்ற கேப்ஷன்களுடன் என் படங்கள் பத்திரிக்கைகளில் வெளி வருவதை எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் எனக்கு குழப்பமாக இருந்தது...

காலப்போக்க்கில் காதல் என்பதை எப்படி வெளிக்காட்டுவது , நடிப்பு போன்ற வற்றை கற்றேன். ஒரு கட்டத்தில் நடிப்பதற்கோ , பெண்ணாக இருப்பதற்கோ வேதனைப்படக்கூடாது என முடிவெடுத்தேன். நடிகர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால் பல எழுத்தாளர்களும்கூட பெண் நடிகர்களைப்பற்றி தவறாக எழுதுகிறார்கள்.. குறிப்பாக அசோக மித்ரன் நாவல் ஒன்றை படித்து மனம் நொந்தேன்.

மெத்தப்படித்தவர்கள்கூட பெண் நடிகர்கள் என்றால் இழிவாகவே நினைக்கிறார்கள்.  ஒரு நிகழ்ச்சிக்கு மனுஷ்ய புத்திரன் என்னை அழைத்தார். அப்போது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பாடல் எழுதி இருந்தேன்.. அந்த அடிப்படையில் அழைத்தார்.  அதில் எழுத்தாளர் சுஜாதாவும் கலந்து கொண்டார்.

ஒருவர் புத்தகம் வெளியிட நான் அதை பெற்றுக்கொண்டேன். அதைப்பார்த்த சுஜாதா என்னிடம் கேட்டார் “ என்ன, உனக்கு படிக்கவெல்லாம் தெரியுமா “ அவர் அப்படி கிண்டலாக கேட்டது என்னை புண்படுத்தியது.

இப்படி பெண்களுக்கு எதிரான சூழலே இங்கு உள்ளது.. இதை மறுத்து யாராவது பேசினால் மகிழ்வேன் .. “

இப்படி அவர் பேசி முடித்ததும் ஞாநி பேசினார்.

நீங்கள் இப்படி நம்பிக்கை இழக்க தேவை இல்லை.. அசோக மித்ரன் வேறொரு  நாவலில் பெண் நடிகர்களைப்பற்றி பாசிட்டிவாக எழுதியுள்ளார். வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள்.. சரி..இப்போது பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்..

*****************************************************

பாடல் எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்..

அது தற்செயலான ஒன்று.. ட்யூனுக்காக அல்லாமல் கவிதை ஒன்றை எழுதி தருமாறு கவுதம் மேனன் கேட்டார் , பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்காக, எழுதிக்கொடுத்தேன்.. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அந்த கான்செப்ட்டை விரும்பவில்லை.. ட்யூனுடன் கூடிய பாடல்தான் வேண்டும் என்றார்.  என் வரிகள் ட்யூனுக்கு செட் ஆகவில்லை..இப்போது கவுதம் மேனனுக்கு தர்ம சங்கடம். ட்யூனுக்கு ஏற்றபடி 20 வகையான வரிகள் எழுதித்தாருங்கள்..அதில் சிறந்ததை பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்..  நான் நான்கு வகையில் எழுதினேன்.. அதில் அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் படத்தில் இடம் பெற்றது


*****************************************************

ரகுவரன் , நாசர் போன்றோர் திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது குறித்த ஏக்கம் இருக்கிறதா?

இது போன்ற பயிற்சிகளை நான் வரவேற்கிறேன். கூத்துப்பட்டறை போன்றவற்றில் கொடுக்கப்படும் பயிற்சிகள் ஆரோக்கியமானதே.  ஆனால் இந்த பயிற்சிகளுக்கு நான் போனதில்லை என்பதில் வருத்தம் இல்லை.. காரணம் எனக்கு பல குரு நாதர்கள் கிடைத்துள்ளனர்.. அவர்களிடம் கிடைத்த பயிற்சியை பெரிதாக நினைக்கிறேன். பரதன் போன்ற இயக்குனர்கள் காட்சியை விளக்குவதே பெரிய பாடம்தான்..

 நாகேஷ் இயக்கத்தில் ஒரு படம்.. நான் அழுவதாக காட்சி..அவர் எனக்கு கிளிசரின் தரவில்லை.. தன் கண்களையே பார்க்குமாறு சொன்னார்.. பார்த்தேன்,,, அவர் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. பார்த்ததும் என் கண்களிலும் கண்ணீர்.. அப்படியே நடிக்க சொன்னார்...இதெல்லாம் பாடம்தானே

ஞாநி

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.. ரகுவரனுடன் நான் பழகி இருக்கிறேன்.. அவர் ஒரு போதும் தான் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதாக சொன்னதில்லை.. பயிற்சிகளை ஆதரித்தோ எதிர்த்தோ அவர் பேசியதில்லை..  நாசர் பயிற்சி வகுப்புகளுக்கு போய் இருக்கிறார்..  எப்படி நடிக்கக்கூடாது என அங்கே கற்றதாக அவர் கூறுவார்

*********************************************************





உங்கள் வாசிப்பு அனுபவம் குறித்து சொல்லுங்களேன்..

 நான் ஆரம்பத்தில் வாசிக்க ஆரம்பித்தது கல்கிதான்.. கிட்டத்தட்ட அனைத்தும் வாசித்துள்ளேன்.. பொன்னியின் செல்வன் போன்றவை மிகவும் பிடிக்கும். பிறகு ஜெய காந்தன் , தி ஜா ரா வாசிக்க ஆரம்பித்தேன்..

ஆரம்பத்தில் புரியவில்லை...போக போக , மோக முள் போன்றவற்றை புரிந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்தேன்.  சுந்தர ராமசாமி , பஷீர் என வாசிப்பு வளர்ந்தது..குழந்தைகளி உலகை புரிந்து கொள்ள பஷீர் சிறுகதைகள் உதவின

******************************************************************

 நீங்கள் ஒரு டப்பிங் கலைஞரும்கூட...டப்பிங் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

டப்பிங் என்பது எனக்கு எக்சைட்டிங்கான ஒன்று.. எழுத்தாளர் ஒன்றை படைக்கிறார்..இயக்குனர் ஒன்றை உருவாக்குகிறார்.. நடிப்பவர் ஒரு பரிமாணத்தை சேர்க்கிறார்.. இந்த மூவர் சேர்ந்து உருவாக்கிய ஒன்றில் கூடுதலாக ஒன்றை சேர்க்கும் டப்பிங் பணி சுவையான ஒன்று..

இதயத்தை திருடாதே , இருவர் போன்ற படங்களில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.. அந்த படங்களில் என் இயல்பான குரலையே பயன்படுத்த அனுமதித்தார். ஆனால் பம்பாய் படத்தில் மனிஷா கேரக்டருக்கான குரல் மென்மையாக இருக்க வேண்டும் என விரும்பினார்.. இதற்காக பல குரல்களில் பேசி காண்பித்தேன்.. கடைசியாக ஒரு குரலை ஒப்புக்கொண்டார்..இந்த குரலுக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது..

ராவணன் படத்தில் நான் பாரதியார் பாடலை பாடிய விதம் அவருக்கு பிடிக்கவில்லை.. இந்த அளவுக்கு இனிமையாக வேண்டாம்.. கடத்தப்பட்ட பெண் கத்தி இருப்பார்..அழுது களைத்து இருப்பார்.. அந்த குரல் இவ்வளவு இனிமையாக இருக்ககூடாது என்றார்... அவர் கேட்ட குரலை கொடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்.

இப்படி கஷ்டப்பட்டாலும் , குரல் மூலம் ஒரு காட்சி செழுமை அடையும்போது இயக்குனர்கள் மகிழ்வார்கள்..


*************************************************************************

திரைத்துறையில் இருக்கும் பெண்கள் ஃப்ரீயாக இருப்பார்கள் என்பது உண்மையா

ரோகிணி : ஃப்ரீயா என்றால் என்ன அர்த்தம் //ஃபிரீ செக்சா

ஞாநி :  மற்ற பெண்களுக்கு இல்லாத சுதந்திரம் உங்களுக்கு உண்டா என கேட்கிறார்..

ரோகிணி ; முன்பே சொன்னது போல சினிமாவுக்காக கவர்ச்சி ஆடைகள் அணிய வேண்டி இருக்கும்.. ஆனால் அன்றாட வாழ்வில் அப்படி ஆடை அணிய முடியாது...   ஸ்லிவ்லெஸ் அணியக்கூட வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்... இரவு  நேரங்களில் வெளியே சுற்ற விட மாட்டார்கள்... மற்ற பெண்களுக்கு இருக்கும் எல்லா கட்டுப்பாடுகளும் எங்களுக்கு உண்டு

ஞாநி : எல்லா துறைகளைப்பற்றியும் இப்படி மித்கள் இருப்பதும் , உடைவதும் இயல்பானதே.. நான் பத்திரிக்கையாளன் என்பதால் , என்னுடன் பேசவே உறவினர் பயப்படுவார்கள்..  சொல்வதை பேப்பரில் எழுதி விடுவேன் என பயம்.. செய்தியாளன் என்றால் எல்லாவற்றையும் எழுதிவிடுவான் என்பது மித்..அதேபோல , ஐ டி பெண்கள் , ஆண்கள் எல்லோரும் பப்பிலேயே விழுந்து கிடப்பார்கள் என்பதும் கற்பனையான ஒன்றுதான்

**************************************************************

உங்களை கவர்ந்த சில இயக்குனர்கள் குறித்து ?

பலரை சொல்லலாம்.. பரதன் ஒரு ஷாட்டை எப்படி வைக்க வேண்டும் என்பதில் நிபுணத்துவம் கொண்டவர்.. அதை அனாயசமாக செய்வார்.. இவரது திறமையில் ஒரு பங்கை மிஷ்கினிடம் காணலாம்.

சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் கேஷுவலாக இருப்பார்... அவருக்கு வேண்டியதை நம்மிடம் இருந்து எடுத்து விடுவார்..

மகளிர் மட்டும் பெருவெற்றி அடைய எங்களது டீம் ஸ்பிரிட்டே காரணம் என பாராட்டினார்,, நான் , ஊர்வசி  , ரேவதி ஆகிய மூவரும் ஈகோ இல்லாமல் நடித்தோம்.. ஊர்வசி சிறப்பாக நடிக்கிறார் , அவருக்கு பாராட்டு கிடைக்கும் என நன்கு தெரிந்திருந்தது... ஆனாலும் அவர் நடிப்பை ரசித்தோம்...படம் ரிலிசான பின் , யாருக்கு வரவேற்பு அதிகம் தெரியுமா என கமல் போனில் கேட்டார்..  ஊர்வசிக்குத்தானே சார் என சிரித்துக்கொண்டே கேட்டேன்.. ஊர்வசி என்னை விட சிறந்த நடிகர்

***********************************************
கமல் பற்றி உங்கள் கருத்து?

அவர் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.. எனக்கு மட்டும் அல்ல .. பலருக்கும்..புதிதாக பல விஷ்யங்களை கற்றுக்கொண்டே இருப்பார்... எந்த கம்ப்யூட்டரிலும் இல்லாத அளவுக்கு இன்ஃபர்மேஷன்களை தன் மூளையில் சேர்த்து வைத்து இருப்பார்.. இவ்வளவு விஷ்யங்கள் தேவையா என்று நமக்கு தோன்றும்.. இவைதான் அவரை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றன என்றும் தோன்றும்.. அவரை பொருத்தவரை , கற்பதே அவரது ரிலாக்சேஷன்...

 நல்ல விஷ்யங்களை யார் செய்தாலும் பாராட்டி விடுவார்.. ஆனால் முகத்துக்கு நேராக பாராட்ட மாட்டார்..  நான் அவருடன் பல படங்களில் வேலை செய்து இருக்கிறேன்.. என்னை பாராட்டியதே இல்லை. ஆனால் மற்றவரகளிடம் என்னை குறிப்பிட்டு பாராட்டியதாக அவர்கள் சொல்வார்கள்..

உன்னை போல ஒருவன் படத்தில் டப்பிங் பணிக்காக என்னை அழைத்தார்.. பணியின்போது அதை கண்டு கொள்ளவே இல்லை.. வழக்கமாக அது சரி இல்லை , இது சரி இல்லை என உயிரை வாங்கும் அவர் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருந்தது.. பிறகுதான் தெரிந்தது.. அவர் என்னை அழைத்ததே மிஷ்கினை பாராட்டத்தான்... நந்தலாலா படத்தைப்பற்றி பாராட்டிக்கொண்டே இருந்தார்...

ஒருவரை நேரில் பாராட்டாமல் இன்னொருவரிடம் பாராட்டுவது அவர் பாணி..


**************************************************************

ரகுவரனின் சினிமா ஈடுபாடு பிரபலமான ஒன்று...  அவர் குறித்த உங்கள் பார்வை..

அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம்... ஒரு கதாபாத்திரம் முடிவான உடன் , அந்த பாத்திரத்துக்குள் செல்வதற்கான பணியை தொடங்கி விடுவார்.. பொருத்தமான ஆடை , அதற்கான துணி என இறங்கி விடுவார்.. எந்த துணியாக இருந்தால் என்ன என்றால் கேட்க மாட்டார்...  எப்படிப்பட்ட கண்ணாடி அணிய வேண்டும் என யோசிப்பார்.. அந்த கேரக்ட்டர் கண்ணாடியை உடைத்து விடும் , எனவே உடையாத கண்ணாடிதான் வாங்கிக்கொடுப்பார்கள் என யோசிப்பார்...  கண்ணாடி அதற்கான பட்டை என தேர்ந்தெடுப்பார்.

அவரது ஷாட் முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் அதை முடித்து விட்டுதான் சாப்பிடுவார்... அல்சர் , டயாப்படீஸ் என பாதிக்கப்பட்ட உடல் நிலையில் இருந்தாலும் பிடிவாதமாக இருப்பார்...  சில இயக்குனர்கள் , அவர் நிலையை உணர்ந்து அவர் காட்சியை சீக்கிரம் முடித்து விடுவார்கள்..

கதாபாத்திரத்தைப்பற்றியே யோசித்து சில ஐடியாக்களை இயக்குனர்களுக்கு பரிந்துரைப்பார்.. பல நேரங்களில் அவை ஏற்கப்பட்டுள்ளன...

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அவர் கேரக்டர் ஹீரோயினின் அண்ணன் என்று இருந்ததை ஸ்டெப் பிரதர் என மாற்றியது அவர்தான்.. பூவிழி வாசலிலே படத்தில் செயற்கை கால் என்பது அவர் ஐடியாதான்.. சில நேரங்களில் அவர் ஈடுபாடு பயமாக இருக்கும்...

வாசிப்பில் அவருக்கு தீவிர ஈடுபாடு உண்டு.. ஆனால் படித்த கதாபாத்திரங்களை படத்தில் பயன்படுத்தினாரா என தெரியவில்லை...  வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை படத்தில் பயன்படுத்துவார்.. கோபப்படும்போது நான் அமைதியாகி விடுவேன்.. இதை ஒரு படத்தில் பயன்படுத்தினார்...

அவர் பேசும் பாணி பாராட்டு பெற்றதால் அப்படியே படங்களில் பேசினார்.. ஆனால் ரியல் லைஃபில் அப்படி பேச மாட்டார்... அந்த பாணியில் பேசாமலும் நடித்துள்ளார்.
ஒசாமா பின் லேடன், ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி போன்ற வேடங்களில் நடிக்க விரும்பினார்

********************************************************************

உங்கள் ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்

அருந்ததி ராயின் துணிச்சல் எனக்கு பிடிக்கும்,, பிரச்சனையை பின் பாயிண்ட் செய்து அவர் பேசுவதை ரசிப்பேன்

******************************************************************

நீங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

 வண்ணநிலவனின் எஸ்தர்

************************************************************************

நீங்கள் இயக்கும் படத்தைப்பற்றி?

அப்பாவின் மீசை என்ற என் படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்... இந்த படம் வந்த பின் , என் திறமை பரவலாக அனைவருக்கும் தெரிய வரும்... அதன் பின் , என் ஆலோசனைகளுக்கு இயக்குனர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும் என கருதுகிறேன்

**********************************************





Monday, June 2, 2014

பட்டாம்பூச்சி- த்ரில்லர் நடையில் உலக இலக்கியம்

ஆயிரம் நூல்கள் வருகின்றன..மறைகின்றன.. அவற்றில் சில மட்டும் மக்கள் மனதில் நிலைத்து நின்று விடுகின்றன..  அப்படிப்பட்ட நூல்களில் ஒன்றுதான் ஹென்றி ஷாரியரின் பட்டாம்பூச்சி ( மொழிபெயர்ப்பு ரா கி ரங்கராஜன் ) எனும் நூல்.

அந்த காலத்தில் குமுதம் இதழில் தொடராக இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. அது வெளிவந்த கால கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது புத்தகமாக வெளிவந்து பலபதிப்புகளை கண்டுள்ளது.

இது ஒரு சுய வரலாற்று நூலாகும். செய்யாத குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படும் இளைஞன் , தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கும் பொருட்டு சிறையில் இருந்து தப்பிக்க விரும்புகிறான்.. அந்த முயற்சியில் பல முறை தோல்வியுற்று மீண்டும் மீண்டும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். ஆனாலும் மனந்தளராமல் முயற்சித்து கடைசியில் தப்பித்து விடுகிறான்.

இப்படி கேட்பதற்கு ஒரு த்ரில்லர் நாவல் போல தோன்றக்கூடும்.  ஆனால் இந்த நூல் இந்த த்ரில்லர் அம்சத்தை தாண்டி மேலும் பல ஆழமான இடங்களைத்தொடுகிறது.. எனவேதான் இது மானுட உணர்வுகளின் சாசனமாக கருதப்படுகிறது..

இந்த நூல் இலக்கியவாதிகள் கையில் சிக்கி இருந்தால் தொன்மம் படிமம் காலறு வெளியின் பிரஞ்ஞை என்றெல்லாம் கொத்து பரோட்டா போட்டு படிக்க முடியாத நூல்களில் ஒன்றாக இதை மாற்றி இருப்பார்கள்.. நல்ல வேளையாக ரா கி ரங்கராஜன் இதை தன் கைகளில் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

இந்த நூல் மூலம் நாம் கற்கும் சில விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தங்க சங்கிலியும் , இரும்பு சங்கிலியும்

அந்த இளைஞன் சிறையில் இருந்து தப்ப முயல்கிறான்.. அதிகார வர்க்கம் தடுக்க முனைகிறது.. ஆனால் சிறை செல்லும் முனைப்பை தடுப்பது அந்த அடக்கு முறை அல்ல என்பது சிந்தனைக்குரியது.. அவனுடன் தப்பிக்க வேறு சிலரும் முயல்கின்றனர். ஆனால் காலப்போக்கில் அந்த முனைப்பு மழுங்கி விடுகிறது.. ஏன்? அடக்குமுறைக்கு பயந்து விட்டார்களா? இல்லை

சிறை வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள்..  அவர்களுக்கு கிடைக்கும் சில வசதிகள் , கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம் , சில பதவிகள் என செட்டில் ஆகி விட்டார்கள்.. அந்த சொகுசில் இருந்து விடுபட அவர்கள் விரும்புவதில்லை.

ஆனால் இந்த இளைஞனுக்கு ஒரு தீவில் தங்கும் வாய்ப்பு , ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்ற வாய்ப்பு , தீவுக்குள் கட்டற்ற சுதந்திரம் என வசதிகள் கிடைத்தாலும் அவன் அதில் செட்டில் ஆக விரும்பவில்லை..சிறை என்பது இரும்பு சங்கிலி என்றால் இந்த சின்ன சின்ன வசதிகள் என்பது தங்க சங்கிலி என்ற தெளிவு அவனிடம் இருக்கிறது..

2  புலம்பி பலன் இல்லை

இந்த நாவலின் சுவையான அம்சம் எதுவென்றால், சிறை தப்பும் முயற்சி தோல்வி அடைந்த மறு கணமே அடுத்த தப்பித்தலுக்கான முயற்சியை தொடங்கி விடுகிறான். உலகம் ஏன் இப்படி இருக்கிறது , கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது போன்ற வீண் சிந்தனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. செயல்கள் மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்

3.இருப்பதை வைத்து தொடங்குங்கள்..

ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஒருவன் கஷ்டப்பட்டு படித்து மானில அளவில் அல்லது மாவட்ட அளவில் முதல் மார்க் வாங்கி பேட்டி கொடுப்பான்.. டாக்டர் ஆவ்தே தன் லட்சியம் என்று. ஒரு கோஷ்டி உடனே கிண்டல் செய்ய ஆரம்பிக்கும். புத்தக படிப்பெல்லாம் வேஸ்ட்டுங்க...கல்வி முறையே தப்புங்க..

புரட்சி வந்து உலகம் திருந்தும் வரை காத்திருக்க முடியாது.. நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டியது தான்.

அந்த இளைஞன் ஒரு கட்டத்தில் தனிமை சிறையில் அடைக்கப்படுகிறான். இருள் சூழ்ந்த அறை.  யாரிடமும் பேச முடியாது.. அந்த நிலையில் பலருக்கு பைத்தியம் பிடித்து விடும். இவனோ அந்த நிலையிலும் மனந்தளராமல் அங்கு கிடைக்கும் ஒரே வசதியான நடக்கும் வசதியை சாதகமாக பயன்படுத்துகிறான்.. நடப்பதை எண்ணிகொண்டே இருக்கிறான். இதன் மூலம் காலம் பற்றிய கணக்கு கிடைக்கிறது.. எத்தனை நாள் சிறையில் இருக்கிறோம்.. இன்னும் எத்தனை நாளில் விடுதலை என்பது தெரிவதால் ஓரளவு சமாளிக்க முடிகிறது..இல்லை என்றால் முடிவற்ற பெரும் காலம் என்பது மாபெரும் கொடுமையாக இருந்திருக்கும்.

4. குறிக்கோள் உயர்ந்ததாக இருக்கட்டும்

ஆரம்பத்தில் பழி வாங்குவதற்காக தப்பிக்க நினைப்பவன் , காலப்போக்கில் தப்பித்தல் என்பது விடுதலையின் நோக்கத்திற்காக என மாற்றிக்கொள்கிறான்.  குரோதம் , வன்மம் அற்ற மனம் அவனது மற்ற சிறை உறவுகளை நல்ல முறையில் அமைத்து அவன் விடுதலையை சாத்தியம் ஆக்குகிறது

5. யாரையும் அஞ்சாதீர்க்ள்..துச்சமாகவும் எண்ணாதீர்கள்.

இவன் சிறை வாழ்க்கை முழுதும் காணப்படும் பொது அம்சம் யாருக்காவது உதவிக்கொண்டே இருப்பதுதான். சக கைதி ஒருவன் பணத்தை வைத்திருக்க பயந்து கொண்டு இவனிடம் கொடுத்து வைக்கிறான்.  நீயே வைத்துக்கொள் எனக்கு பயமாக இருக்கிறது என அவன் சொன்னாலும் , பொறுப்பாக அவனிடம் பணத்தை ஒப்படைக்கிறான். பெரிய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது உதவுகிறான், இதெல்லாம் அவனுக்கு முக்கிய சந்தர்ப்பங்களில் உதவியாக அமைகிறது.. நன்றி மறப்பவர்கள் எங்கும் உண்டு என்றாலும் , நம் இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.

இப்படி நூல் முழுதும் சுவையான செய்திகள்.. பணத்தை ஒளித்து வைக்கும் முறை, மனித கறி, மாமிசம் தின்னும் எறும்புகளை வைத்து கொலை என திரில்லர் போன்ற நடையில் வெளிவந்துள்ள இந்த உலக இலக்கியத்தை படிக்க தவறாதீர்கள்