Pages

Sunday, June 9, 2019

அண்ணல் அம்பேத்கரின் வெற்றி - ஜெயமோகன் சிலிர்ப்பூட்டும் விளக்கம்

2019 ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது கவிஞர் ச.துரைக்கு வழங்கப்பட்டது .. இதற்கான விழா இன்று சீரும் சிறப்பும் இலக்கியமும் இனிமையுமாய் இளமையும் புதுமையாய் நடந்தது


இந்த விருது வழங்கு விழாவில் கூடுதல் அம்சமாக ஒரு சிறப்பு அமர்வு உண்டு. விழாவுக்கு முன்பு சிறுகதைகள் குறித்த ஒரு விவாத அரங்கு

விருது விழா மாலையில் என்றால் , இந்த விவாத அரங்கு மதியம் ஆரம்பிக்கும்..

கொளுத்தும் வெயிலிலும் அரங்கு நிறைந்து இருந்தது மகிழ்ச்சி அளித்தது/


சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய  –வெளிச்சமும் வெயிலும் 

அனோஜன் பாலகிருஷ்ணனின்   பச்சைநரம்பு 
சுரேஷ் எழுதிய  பாகேஸ்ரீ ஆகியவை குறித்து முறையே காளிபிரசாத் , சுனில் கிருஷ்ணன் , விஷால் ராஜா பேசினார்கள்

பேசினார்கள் என்பதை விட ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினர் எனலாம்
பலரும் ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேட்டனர்.. ஜெயமோகனும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கேள்விகள் கேட்டார்..
சிறுகதைக்கும் நாவலுக்கும் இடையேயான வேறுபாடு , என்னதான் அசோகமித்திரன் மேதை என்றாலும் அவர் எழுத்தை அளவீடாக கொண்டு பிறர் கதையை மதிப்பிடக்கூடாது என்ற கருத்தாக்கம் , கதையின் அழகியல் , அழகியலே கதைக்கு எதிராக மாறும் சூழல் என பல விஷ்யங்கள் விவாதிக்கப்பட்டன

விஷால் ராஜா , அசோகமித்திரன் குறித்து ஆர்வமாக பேசி முடித்ததும் பலர் கேள்விகள் கேட்டனர்.

அப்போது மைக்’ கை வாங்கிய  வழக்கறிஞரும் , சமூக ஆர்வலருமான கிருபா முனுசாமி  தன் சார்பில் ஒரு கேள்வியை கேட்டார்
ஒடுக்கப்பட்டோர்கள் , விளிம்பு நிலை மக்கள் ஆயுதமாக நாவல் பயன்பட முடியாது என்று சிலர் சொல்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றார்.அதாவது நாவல்கள் மூலம் சமூக நீதி ஏற்படும் சூழல் உள்ளதா என்பது அவர் கேள்வி
இலக்கியம் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு பச்சைக்குழந்தையிடம் இப்படி ஒரு அரசியல் கேள்வியா என அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது..  இன்னும் சொல்லப்போனால் அவர் அருகில் இருந்த கவிதாமுமே சற்று திகைத்தார்
ஆனாலும் விஷால் ராஜா சளைக்காமல் பதில் சொன்னார்..

 நீங்கள் மேற்கோள் காட்டுவது போல யாரும் சொன்னதாக தெரியவில்லை.. ஆனாலும் , இலக்கியம் ஒரு பிரச்சார ஆயுதம் இல்லை என்றாலும் சமூக மாற்றங்களுக்கு மறைமுகமாக பணியாற்றி வருகிறது என்றார்

உண்மையில் நானேகூட , சிறுகதை குறித்தான அரங்கில் இந்த கேள்வி தேவை இல்லையோ என நினைத்தேன்

ஆனால் இந்த் கேள்வி ஆழமான விவாதங்களை உருவாக்கியது.. அந்த அரங்கு முடிந்த பின் கொடுக்கப்பட்ட தே நீர் இடைவேளையில் ஆங்காங்கு இது குறித்த விவாதங்கள் நடந்தன
ஜெயமோகனிடமே கிருபா அந்த கேள்வி
யை கேட்டார்.. கவிதாவும் அவரும் ஜெயமோகனுடன் தே நீர் அருந்தியபடி உரையாடிய ஒவ்வொரு விஷ்யமுமே மேடையில் பேசி ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.. 
அந்த காலத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதை போட்டி போட்டுக்கொண்டு வலைப்பதிவேற்றம் செய்வதில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவியது. அதன் பின் எல்லா நிகழ்ச்சிகளுமே ஒளிப்பதிவு செய்யப்பட்டு யூட்யூபில் கிடைப்பதால் , வலைப்பதிவுக்கு தேவை இல்லாமல் போய் விட்டது.. ஆனாலும் மேடைக்கு அப்பாற்பட்டு நிகழும் இது போன்ற விவாதங்களும் முக்கியமானவையே

கதை என்பதன்  வலிமை குறித்தும் அதன் ஆற்றல் குறித்தும் ஜெயமோகன் விரிவாக பேசினார்
கதை சொல்லல் என்பதன் மூலம்தான் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிர்களை வெல்ல முடிந்தது... மனிதனை விட உடல் ரீதியாக அறிவு ரீதியாக சிறப்பான மற்ற உயிரிகள் இருந்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் தன் அனுபவங்களை கற்பனை கலந்து கதையாக தன் சகாக்களுக்கு சொல்லும் திறன் இல்லை.. கற்பனைகளாலும் கதைகளாலும் மட்டுமே மனிதன் உலகை வென்றான் என்கின்றன ஆய்வுகள்

இதை ஒட்டி இலக்கிய ரீதியாக ஜெயமோகன் சொன்னார்.. ஒரு விஷயத்தை கதையாக சொல்லும்போது அது எப்படி விரைவாக பரவுகிறது என்பதை , யாரோ டீச்சர் சொன்னதாக , தன்னிடமே யானை டாக்டர் கதை ஒரு குழந்தை மூலம் வந்தடைந்ததை சொன்னார்

அண்ணல் அம்பேத்கர் எப்படி ஆதிக்க சக்தியினரின் மொழியான சமஸ்கிருதம் மூலமாகவே அவர்களை வெல்ல முடிந்தது என்பதை விளக்கியது ஆச்சர்யமாக இருந்தது
ஆதிக்க சக்தியினர் வேறு ,, நாம் வேறு என எல்லை வகுத்துக்கொண்டு ஒதுங்கிப்போகாமல் , அவர்கள் கோட்டைக்குள் ஊடுருவி வெல்வதுதான் சவால்.. அந்த சவாலில் வென்று காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் என அவர் சொன்னது சிலிர்ப்பாக இருந்தது

கண் பார்வை அற்ற ஒரு,நண்பர் நாவல்கள் படித்து டாக்டர் பட்டம் வாங்கும் சவாலை ஏற்று அதில் வென்றதை ஒரு ரொமாண்டிக் ட்விஸ்ட்டோடு சொல்லி முடித்தார்.
வரலாறு , காதல் , சினிமா  , நவீன மூட நம்பிக்கை , என பல புதிய விஷயங்களை  சொல்லிக்கொண்டே இருந்தார்

அதன் பின் மாலை ஆறு மணிக்கு விருது விழா.
அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி கைதட்டல் வாங்குவது வட நாட்டு அரசியல்வாதிகள் ஸ்டைல்
அப்படி இல்லாமல் , குறுந்தொகை , ஞானக்கூத்தன் , அக நானூறு , கல்யாண்ஜி , விருது பெறும் துரை உட்பட பலர் கவிதைகளை ஆழமாக விவாதித்து ஆச்சர்யம் அளித்தார் மலயாளக்கவிஞர் ராமன்..
புத்தகம் படிக்க நேரம் கூடி வரவில்லை என சொல்லி விட்டு , குத்து மதிப்பாக பேசுபவர்களை பார்த்துள்ளோம்.. ஒரு மலையாளக்கவிஞர் இவ்வளவு தூரம் நம் தமிழை கவனித்து , அலசி ஆராய்ந்து பேசியது வியப்பளித்தது என்றால் , அப்போது அங்கே நுழைந்த மனுஷ்ய புத்திரனுக்கு வணக்கம் சொல்லி விட்டு ,  அவர் கவிதை ஒன்றையும் எடுத்து சொல்லி சிலாகித்துப்பேசினார்
 நம்மை விட அதிகமாக தமிழை நேசிப்பவர் போல என நினைத்துக்கொண்டேன்
 நமது புகழ் பெற்ற கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில் மொழி பெயர்த்து மலையாள பாணியில் ஓசை நயத்துடன் பேசி ( பாடிக் ) காட்டினார்
மொழி என்ற வகையில் இரு மொழிகளுக்கும் இடையேயான ஓசை வேறு பாடுகளை உணர முடிந்தது..அரிய அனுபவம்
துரை எந்த விதத்தில் முக்கியமான கவிஞர் ஆகிறார் என்பதை வெகு அழகாக பேசினார் அவர்...
அதன் பின் பேசிய தேவ தேவன் வெகு சுருக்கமாக பேசி அமர்ந்தார்.. முழு நாள் கருத்தரங்கில் பேசுபதற்கு விஷ்யம் அவரிடம் இருந்தாலும் சுருக்கமாக பேசினார்

வாழ்த்துரை வழங்கிய அருணாச்சலம் ஒரு முழுமையான பார்வையை அளித்தார்.. அவர் சொன்னதும்தான் , துரையின் பல நல்ல கவிதைகள் மேலும் தெளிவாகின
 ’
தன் துறை சார்ந்த உதாரணம் சொல்லி , இலக்கிய செயல்பாடுக்ளை விளக்கியது நச் என இருந்தது

கடைசியில் ஜெமோ பேசினார்
ஒரு சிறுமி இயல்பாக நடந்து செல்வதை கட்டுப்படுத்தி , நடப்பதற்கு ஒரு இலக்கண வரையறை கொண்டு வருவது போல , கவிதை என்பதன் இயல்பு தன்மை மாற்றப்பட்டதையும் அதன் பின் அந்த வரையறைகள் உடைக்கப்பட்டதையும் அதை தொடர்ந்து அடைந்து வரும் வளர்ச்சிகளையும் பேசினார்..
படிமம் , மைக்ரோ நேரேஷன் என வெகு எளிமையாக ஆனால் ஆழமாக பேசினார்

படிமம் என்பது ஆரம்பத்தில்  கவனத்தை ஈர்த்தாலும் போக போக , உற்பத்தி சாலையில் உற்பத்தி செய்யப்படுவது போல , சரமாரியாக படிமங்கள் உருவாக ஆரம்பமானதும் அடுத்த கட்டம் தேவைப்பட்டது.. மைக்ரோ நேரேஷன் உருவானது

அதுவுமே மலினமான சூழலில்தான் , இன்றைய கவிஞர்கள் சிலர் கவிதையை , இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் மாபெரும் பணியை செய்கின்றனர் என்றார்
இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் விருது என்றுதான் பொதுவாக நினைப்போம்

ஆனால் இது ஊக்கப்படுத்தும் விழா அல்ல.. சாதனையாளர்களை , திருப்பு முனை நாயகர்களை அடையாளம் காட்டும் விழா என்று சொல்லி , துரை எந்த விதத்தில் திருப்பு முனை நாயகராகிறார் என விளக்கியது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது
கடைசியில் துரை ஏற்புரை வழங்கினார்

ஆழமான விழாவாக மட்டும் அல்ல.. சூடும் சுவையுமான விழாவாகவும் அமைந்தது


3 comments:

 1. இளையராஜா அவர்களின் இசையில் தக்ஷிணாமூர்த்தி அவர்கள் பாடிய பாடல் ஒன்றை பதிவாக போட்டிருந்தீர்கள் . அந்த பாடல் என்னெவென்று சொல்ல முடியுமா ?

  ReplyDelete
  Replies
  1. அது சினிமா பாடல் அல்ல.. எனவே அது பலருக்கு தெரியாது என்பதால் தனி பதிவாக வீடியோ லிஙக்"குடன் விளக்கி,இருந்தேன்.,,அதை மீண்டும் விரைவில் பதிவேற்றுவேன்

   Delete
 2. மலையாளக்கவிஞர் ராமன் பற்றிய தகவல் ஆச்சரியமாகவுள்ளது. சுவாரசியமான தகவல்கள் கொண்ட பதிவு..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]