Pages

Tuesday, June 16, 2020

இயக்குனர்கள் பாக்யராஜ் & "முகவரி"துரை.. தரையில் இறங்கிய விமானங்கள்


ஒரு காலத்தில் வெற்றி என்பதற்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால் பாக்யராஜ் என்று இருக்கும்.  அந்த அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தவர் அவர். வேறு மொழிகளில் யாரேனும் வெற்றிகளைத் தந்தால் அவர்களை கேரள பாக்யராஜ் , கன்னட பாக்யராஜ் என்பார்கள். அந்த அளவுக்கு வெற்றிகளை கொடுத்தார்.  கட்சி , சித்தாந்தம் போன்றவைகளில் ஆர்வமற்ற வெள்ளந்தி மக்கள்தான் இங்கு அதிகம். அவர்களின் நாயகனாக திகழ்ந்தார் அவர்

இந்த,நிலையில்தான் தன் இமேஜை சீர்திருத்தவாதி என்ற அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார்.  
அதில் தவறு ஏதும் இல்லை

கண்டதேவியில் தேர் இழுப்பதில் பிரச்சனை , திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடூரம் ,  ஆணவக்கொலைகள் , ரிசர்வ் தொகுதிகளில் தன் வேலையாட்களை நிற்க வைத்து வெல்ல வைத்து , மக்கள் பிரதிநிதி தன் வீட்டு வேலை செய்கிறார் என இழிவு படுத்துதல் , அல்லது வென்றதும் உடனடியாக ராஜினாமா செய்ய வைத்து , தேர்தலை கேலிக்குள்ளாக்குவது போன்றவற்றை கண்டிக்க இவருக்கு துணிவு வரவில்லை

வம்பே வேண்டாம் என பிராமணர்களை விமர்சித்து படமெடுக்க நினைத்தார்.
அதிலும் தவறில்லை. இது பலரும் செய்வதுதான்

ஆனால் கீழ்மையான செயல் ஒன்றை அரங்கேற்றியதுதான் பிரச்சனை.  பிராமணர்களை திட்டினால் தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படுமோ என நினைத்து , பிராமணர் ஒருவரையே படத்துக்கு டம்மி இயக்குனராக்க முடிவு செய்தார்.  சூதுவாது தெரியாத பாலகுமாரனை நைச்சியமாக பேசி சம்மதிக்க வைத்தார்

படம் முழுக்க பாக்யராஜின் கைவண்ணம்தான். பெயர் மட்டும் பாலகுமாரன்

படம் அபாரமான வெற்றி பெற்றது. நல்ல காசு பார்த்தார்.

ஆனால் அந்த அறமற்ற செயல் அவரை அத்துடன் முடக்கியது.  அதற்குப் பிறகு அவரது எந்தப் படமும் பழைய வெற்றியை பெறவே இல்லை. 

பாலகுமாரன் இது குறித்து பலமுறை வயிறெரிய குமுறியுள்ளார். தந்திரமாக என்னை ஏமாற்றி விட்டார்.  நான் எளியவன். என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று அனைத்தையும் கவனிக்கிறது என குமுறினார்

இது நிற்க

அஜித்துக்கு திருப்புமுனை தந்த நல்ல படங்களுள் ஒன்று. தரமான நடிகர்கள் , இயல்பான கதை என படம் சிறப்பாக இருந்தது

படத்தின் ஒன்லைன்

தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இசையில் சாதிக்க முயலும் நாயகன் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் இது. அனைத்து டிவி சானல்களும் இதற்கு நல்ல தரவரிசை அளித்தன

படத்தின் வசனம் பாலகுமாரன். படத்தில் ரகுவரன் சொல்லும் தன்னம்பிக்கை கதை இன்றும் பிரபலம்

ஆனால் , படத்தின் கதை இந்துமதியின் தரையில் இறங்கிய விமானங்கள் போல இருக்கிறதே என்ற பேச்சும் எழுந்தது

இந்த கதையின் ஒன்லைன்


தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இலக்கிய உலகில் சாதிக்க முயலும் விஸ்வம் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

நாயகனின் பெயர் வேறு .  இலக்கியம் என்பது இசை ஆகி விட்டது

மற்றபடி குடும்ப சூழல் , பெருந்தன்மையான அண்ணன் , இனிய காதல் என அனைத்துமே ஒன்றுதான்

படத்தில் பணிபுரிந்த பாலகுமாரன் , இந்துமதியின் நண்பர் என்பதால் . இந்துமதியின் அனுமதியுடன்தான் படம் எடுக்கப்பட்டதாக பலரும் நினைத்ததால் , யாரும் அதை பெரிதாக்கவில்லை

ஆனால் சமீபத்தில் , தன்னிடம் அனுமதி வாங்காமல் கதையை திருடிவிட்டனர் என இந்துமதி குமுறியுள்ளார்

அவரது நாவலை கையில் வைத்துக்கொண்டுதான் கதை விவாதமே நடந்ததாம்

இப்படி திருடியதற்குபதில் முறைப்படி அனுமதி வாங்கி , அண்ணி கேரக்டரை நாவலில் இருப்பதுபோல அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் படம் வேறொரு உயரம் தொட்டிருக்கும்

இயக்குனர் துரை தொடர் வெற்றிகளை அளித்திருப்பார்
அஜித்துக்கு இந்த விவகாரம் தெரிய வாயப்பில்லை. ஆனால் துரைக்கு தார்மீக பொறுப்பு உண்டு

பரவலாக பாராட்டுப்பெற்று , அஜித்தை வைத்து வெற்றாப்படம் கொடுத்து ,உயரத்தில் பறந்த இயக்குனர் அதன் பின் ஒரு போதும் வெற்றியை தர முடியவில்லை

அறிவுலகில் அறம்தவறுவது அழிவையே தரும்
,
முகநூல் பதிவுகளை காப்பி பேஸ்ட்செய்வது , பிறர் கதைகளை திருடுவது என படித்தவர்கள் பலரே செய்வது வருந்தத்தக்கது

அனைத்துக்கும் எதிரவினை உண்டு என்பதை படைப்புலகம் புரிந்து கொள்ளவேண்டும்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]