Pages

Wednesday, July 15, 2020

நாயன்மாரை புகழ்ந்து பாடிய ஆழ்வார் - ஆன்மிக வினோதம்

 நாயன்மார்கள் என்பவர்கள் சிவ பக்தர்கள் ..

ஆழ்வார்கள் விஷ்ணு பக்தர்கள்

இன்று இரண்டுமே இந்து மதம் என ஒன்றாகி விட்டாலும் , அந்த காலத்தில் சிவமும் வைணவமும் தனித்தனியாக இயங்கின..

இப்படி ஒரு சூழலில் , நாயன்மார்களில் ஒருவர் குறித்து ஆழ்வார் ஒருவர் பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ( எனக்கு ஆச்சர்யமாக இருந்தது)

கோச்செங்கட்  சோழ நாயனார்..

இவர் சோழ அரசனாக இருந்தவர்...

இவர் பிறப்பே ஆச்சர்யமானது...இவரை கருவில் சுமந்திருந்தபோது , ஒரு ரிஷி இவர் தாயாரிடம் ( அவர் சோழ அரசி ) நான் குறிப்பிடும் நேரத்தில் குழந்தை பிறந்தால் , குழந்தை புகழ் பெற்ற அரசனாக வாழ்வான். கடைசியில் இறைவனையும் அடைவான் .. என நேரம் குறித்து கொடுத்தார்

        அந்த அரசிக்கு  அந்த நேரம் வருவதற்கு சில நாழிகைகள் முன்பாகவே பிரசவ வலி ஏற்பட்டது.. குழந்தை பிறப்பதை தாமதப்படுத்துங்கள். என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் என தன் தாதியர்க்கு ஆணையிட்டாள் மகாராணி..

         இப்படி குழந்தை பிறப்பு தாமதமாக்கப்பட்டு , உரிய நேரத்தில் குழந்தை பிறந்தது.. இப்படி ஒரு கடுமையான சூழலுக்கு தன்னை உட்படுத்திய அரசி மரணம் அடைந்தாள்

பிறந்த குழந்தைக்கு கண்கள் சிவப்பாக இருந்தன.. எனவே கோ செங்கண்ணன் என பெயரிடப்பட்டது

தெய்வ அருளால் பிறந்த குழந்தை என்பதால் , வெற்றி மீது வெற்றி பெற்றான்.. புற நானூறில் இவனது வெற்றி பதிவாகியுள்ளது


உலகியலில் வெற்றிகளை குவித்த இவனுக்கு ஆன்மிக வெற்றியைத்தர இறை முடிவு செய்தது

வெற்றிகளையே குவித்த இவன் ஒரு போரில் தோல்வியுற்றான்..

தோல்வியில் துவண்டு போய் இருந்த அவனை , ஒரு ரிஷி சந்தித்தார்

“  நான் தான் உன் தாய்க்கு நேரம் குறித்து கொடுத்தவன்.. நீலகண்டன் என் பெயர்.. நீ விஷ்ணுவை நோக்கி தவம் செய்.. ஒரு திருப்பத்தை காண்பாய் “ என்றார்

திரு நரையூர் என்ற இடத்தில் தவம் செய்து விஷ்ணுவிடம் இருந்து ஒரு தெய்வ வாளை வரமாக பெற்றான்.  அந்த வாள் அவனுக்கு வெற்றி அளித்தது.  தோற்கடித்த மன்னனை வீழ்த்தினான்


அந்த ஊரில் விஷ்ணுக்கு ஆலயம் எழுப்பினான்


 நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை  அவனுக்கு அந்த சம்பவம் உணர்த்தியது.ஒரு நன்றிக்காக விஷ்ணு ஆலயம் கட்டினாலும் அவன் மனம் ஏனோ வைணவத்தில் லயிக்கவில்லை

அப்போது மீண்டும் அந்த ரிஷி வந்தார்

இறை என்பதன் எல்லா வடிவமும் ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தவே உன்னை விஷ்ணுவை வழிபடச்செய்தேன்
உண்மையில் நீ சிவ அம்சம்..  சிவ கணங்களில் ஒருவனாக இருந்தாய்.. இன்னொரு சிவ கணத்துடன் , பக்தியில் சிறந்தவன் யார் என்ற மோதல் ஏற்பட்டது.. இதனால் சிவன் உங்களை பூமியில் பிறக்க வைத்தார்


நீ சிலந்தியாகவும் அவன் யானையாகவும் பிறந்தீர்கள்


சோழ நாட்டில் ஒரு சிவலிங்கத்தை அந்த யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்து அர்ச்சித்து வழிபட்டது...  அதை அறியாமல் சிலந்தி தன் வாயில் சுரக்கும் நூலால் அலங்காரம் செய்து வழிபட்டது

சிவலிங்கத்தில் சிலந்திக்கூடு கட்டும் சிலந்தி மீது யானைக்கும் , லிங்கம் மீது வாய் கொப்பளிக்கும் யானை மீது சிலந்திக்கும் கடும் கோபம்.. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து இம்சித்தது. வலி தாங்கவொண்ணா யானை , தும்பிக்கையை கோபமாக பாறையில் அடித்தது.. விளைவாக இரண்டுமே இறந்தன

யானைக்கு இறைவன் முக்தி அளித்தான்.. சிலந்தியை மன்னனாக பிறக்க வைத்துள்ளான்

இதுதான் உன் கதை என்றார் அவர்

இதைக்கேட்டதும்தான் தன் மனம் ஏன் இறையை நாடினாலும் , வைணவத்தின்பால் செல்லவில்லை என புரிந்து கொண்டான்..

ஏற்கனவே சில ஆலயங்கள் அமைத்து இருந்தாலும் , அதன் பின் முழு வீச்சாக ஆலயங்கள் அமைத்தார் அவர் .. எழுபதுக்கும் மேல் ஆலயஙகள் எழுப்பி கடைசியில் இறைவனடி சேர்ந்தார்..  கோச் செங்கட் சோழ நாயனார் என ஆலயங்களில் வீற்றிருப்பார்.. அடுத்த முறை கவனியுங்கள்


இவர் அமைத்த திரு நரையூர் பெருமாள் கோயிலைப்பற்றி திருமங்கை ஆழ்வார் ஏராளமாக பாடியுள்ளார்

கோச் செங்கட் சோழ நாயனாரைப் பற்றியும் கடவுளிடம் இருந்து வாள் பெற்றதையும் , அவர் சிவனுக்கு கோயில்கள் கட்டியதையும் பாடியுள்ளார்

இப்படியாக , நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வைணவ நூலில் சிவனும் , சிவனடியாரும் இடம் பெற்ற அபூர்வ நிகழ்வு நடந்தேறியது


திருமங்கை ஆழ்வாரின் எல்லா பாடல்களும் தமிழ்ச்சுவை மிக்கவை..

விளக்கம் தேவையில்லாத இப்பாடலைப் பாருங்கள்


அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.


இப்படி அனைத்தையும் சொல்வதை விட  , இந்த கட்டுரை சம்பந்தமான ஒரு பாடலை பார்த்து முடித்துக்கொள்வோம்

பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


கடலையே ஆடையாகவும் , பூமியை திருவடிகளாகவும் , வாயு மண்டலத்தை உடலாகவும் , பேரண்டத்தை தலையாகவும் கொண்டுள்ள பிரமாண்டமான இறை சக்தியை உணர விரும்புகிறீர்களா?

ஆரவாரமாக படை பலத்துடன் எதிர்த்து வந்த மன்னர்களை தெய்வ வாள் துணை கொண்டு வீழ்த்திய சோழ மன்னன் உருவாக்கிய திரு நரையூர் ஆலயம் வாருங்கள்  , அங்கு உறையும் இறையை இறைஞ்சுங்கள்


முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


மலர் போலும் கனி போலும் சிவந்த இதழ்களைக்கொண்ட நப்பின்னை தாயாரின் கணவனும் , நெறி மீறும் அரசர்களின் சிரம் அறுக்கும் திறன் உடையவனுமான பெருமாளின் திருவடிகளை உங்கள் தலையில் சூட விருப்பமா?

வேதம் ஓதுகின்ற சிவனுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைத்த சோழன் கட்டிய ஆலயத்தை வந்தடையுங்கள்












No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]