Pages

Saturday, August 8, 2020

நான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்





 

இந்தியா மறக்கக்கூடாத முக்கிய தலைவர்களில் ஒருவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.  சோஷலிச தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு இருந்த இவர் அறுபதுகளிலேயே , பிஜேபியின் (அப்போதைய ஜன சங்கம் ) எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்க்கதரினசத்துடன் நினைத்தவர்.ஆச்சார்ய நரேந்திர தேவ் தலைமையை ஏற்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட்ட இவர் , ஜனசங்கத்தை எதிர்க்க காங்கிரசால்தான் முடியும் என நினைத்து காங்கிரசில் சேர்ந்தார். 


மன்னர் மான்ய ஒழிப்பு , வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்ற இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் இவருக்குப்பிடித்து இருந்தன.  காங்கிரசில் இருந்த பழமைவாதப்போக்குகளுக்கு எதிராக குரல்கொடுத்த மோகன் தாரியா , கே , டி. மாளவியா போன்றோரை உள்ளடக்கிய இவரது குழுவினர் இளம் துருக்கியர் என அழைக்கப்பட்டனர்.  இந்திரா காந்துக்குமே பழைய தலைவர்களை பிடிக்காது என்றாலும் இந்திரா காந்திக்கு தர்ம சங்கடம் ஏற்படும் வகையில் , மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த தலைவர்களை எதிர்த்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருடன் அவ்வபோது மோதினார்


ஆனால் போக போக இந்திரா காந்தியின் தன்னிச்சையான போக்கு பிடிக்காமல் அவரையும் எதிர்க்கலானார். எம்ர்ஜென்சியின் போது , காங்கிரசில் இருந்தாலும் , கைது செய்யப்பட்டார்


சிறையில் இருந்து வெளி வந்ததும் ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார். இந்திரா காந்தியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது ஜனதா. ஜனசங்க உறுப்பினர்களுடன் இவர் மோதல் தொடர்ந்தது.


விரைவிலேயே ஜனதா ஆட்சி கவிழ்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது

இந்திரா காந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்தார். 1983ல் வட இந்தியா முதல் தென் இந்தியா வரை இவர் நடத்திய பாரத யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 


ஆனால் 1984ல் இந்திரா காந்தி படுகொலையால் , ராஜிவ் பிரதமரானார். ராஜிவ் ஆட்சியை எதிர்த்து வந்தார்

அடுத்த பொதுத்தேர்தலில் ராஜிவ் காந்தியை வீழ்த்து தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் சூழல் வந்தது.  பிஜேபியும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன

விபிசிங் ஒரு சந்தர்ப்பவாதி , அவர் பிரதமராக ஆதரவு அளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்

சரி , விபி சிங் வேண்டாம் , தேவிலாலை பிரதமராக்குவோம் என உறுதி அளித்ததை அடுத்து அதற்கு ஒப்புக்கொண்டார்

ஆனால் கடைசி நேரத்தில் ( ஏற்கனவே விபி சிங்குடன் நடத்திய ரகசிய பேரத்தின் காரணமாக ) தேவிலால் விபிசிங் பெயரை முன் மொழிய விபி சிங் பிரதமரானார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

இந்த துரோகம் சந்திரசேகரை வெகுவாக காயப்படுத்தியது..

விரைவில் தேவிலாலுக்கும் விபிசிங்குக்கும் மோதல் ஏற்பட்டது

பிஜேபி தன் ஆதரவை தேசிய முன்னணி அர்சுக்கு விலக்கிக்கொண்ட நிலையில் , சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

வெறும் ஆறு மாதங்களே ஆட்சியில் இருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் இந்தியாவை பேரழிவில் இருந்து காத்தன என்கிறது வரலாற்று நூலாசிரியர் ரொடெரிக் மாத்யூஸ் எழுதிய , சந்திரசேகரும் இந்தியாவைக் காப்பாற்றிய ஆறு மாதங்களும் என்ற நூல் 

தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு , தேர்தலை சில ஆண்டுகள் கழித்து சந்தித்து சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த ராஜிவ் காந்தி , ஏன் அவசரப்பட்டு சந்திரசேகர் அரசை கவிழ்த்தார் என ஒரு புதிய 

கோணத்தை காட்டுகிறது நூல் . அதில் இருந்து ஒரு பகுதி

-----------------------------------------------

   ராமர் கோயில் கட்டுமானப்பணிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கி இருந்த ராம்ஜன்மபூமி ந்யாஸ் அறக்கட்டளை தலைவர்களும் அனைத்திந்திய பாபர் மசூதி  நடவடிக்கை கமிட்டி தலைவர்களும் பிரதமர் சந்திரசேகரை சந்திக்க வந்து இருந்தனர்.  ஷரத் பவாரும் , பைரோன் சிங் ஷெக்காவத்தும் ஏற்கனவே இவர்களுடன் பேசி இருந்தனர். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள்தான்

பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ந்தது

முதலில் இந்து தலைவர்கள் வந்தனர்

வெகு இயல்பாக  பதட்டமின்றி சந்திரசேகர் பேசினார் “ அயோத்தி பிரச்சனையில் என்னதான் செய்யலாம் . சொல்லுங்கள் “

அவரது இயல்பான தொனியை வைத்து , அவரை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நினைத்த அவர்களும் இயல்பாக சொன்னார்கள்

“ இதில் பேச என்ன இருக்கிறது. அது ராமர் ஆலயம். அனைவருக்கும் தெரிந்ததுதானே அது “

இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்த சந்திரசேகர் சொன்னார்

“ சரி.. கொஞ்சம் சீரியசாக பேசுவோம். நான் இப்போது பிரதமர். எத்தனை நாள் பதவியில் இருப்பேன் என தெரியாது. ஆனால் நான் பிரதமராக இருக்கும்வரை யாரும் அந்த கட்டடத்தின்மீது கை வைக்க முடியாது “  சற்று இடைவெளி விட்டபின் தன் பாணியில் பேசினார் “ நான் விபி சிங் கிடையாது. மாநில முதல்வரிடம் பொறுப்பைதள்ளி விட்டு வாளாவிருக்கும் ஆள் நான் கிடையாது. யாராவது அந்த இடத்தில் கை வைத்தால் சுட்டுத்தள்ள உத்தரவிடுவேன். ஏழை நாடான இந்தியாவுக்கு இது போன்ற பிரச்சனைகள் தேவையே இல்லை. கடவுளுக்காகத்தானே போராடுகிறார்கள் , சுட்டுத்தள்ளி கடவுளிடமே அனுப்பிவிடுகிறேன் “

    அனைவரும் திகைத்தனர். இது பொதுக்கூட்ட மேடைக்கான வெற்றுப்பேச்சு அல்ல. ஒரு பிரதமராக உண்மையாக எச்சரிக்கிறார் என புரிந்து கொண்டனர்

” சரி  இஸ்லாமிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள் . அவர்களுடன் பேசி விட்டு முடிவெடுப்போம் “ என்றார்

அதன்பின் இஸ்லாமிய தலைவர்கள் வந்தனர்

   அவர்களுடன் பேசினார்

“ நான் வி எச் பியுடன் பேசி விட்டேன். தெளிவாக சொல்லி விட்டேன். நான் இங்கே இருக்கும்வரை அந்த இடம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் யோசியுங்கள். நாடுமுழுக்க லட்சக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர்.  நாளை ஏதேனும் கலவரம் என்றால் அனைவரையும் காக்கும் நிலையில் என்னிடம் போலிஸ் இல்லை. என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள் 

சரி.. இதை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்கிறோம் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்

“ சரி... சில அடிப்படை நெறிகளை பின்பற்ற வேண்டும். இரு தரப்பும் பேசுங்கள் ஷரத் பவாரும் , ஷெகாவத்தும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவை அரசு செயல்படுத்தும். இது சத்தியம். ஆனால் சில நிபந்தனைகள் . என்ன பேசுகிறீர்கள் என்பதை வெளியே சொல்லக்கூடாது. முடிவு எட்டப்படும்வரை விஷயம் வெளியே போகக்கூடாது”


இருபது நாட்கள் வரை பேச்சு நடந்தது. பைரோன் சிங் ஷெகாவத் வெற்றிச்சிரிப்புடன் வந்தார்

“ உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஆனால் இருதரப்புமே தம் ஆட்களை வெகுவாக உசுப்பேற்றி வைத்துள்ளனர். அதை எப்படி சரி செய்வது என்பதுதான் தெரியவில்லை “ 


ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் முன் வைத்த ஒப்பந்த நகல் இப்படி இருந்தது

“ இந்துக்களின் உணர்வுகளை மதித்து நிலத்தை அவர்களிடம் தர சம்மதிக்கிறோம். ஆனால் இரு நிபந்தனைகள் . மசூதி கட்ட எங்களுக்கு வேறு இடம் தர வேண்டும். இன்னொன்று , இது போன்ற பிரச்சனைகள் இனி ஒரு போதும் எழக்கூடாது என சட்டம் இயற்ற வேண்டும் , 05.08. 1947ல் மசூதியாக இருந்தவை மசூதி , கோயிலாக இருப்பவை கோயில் . இனி பிரச்சனைகள் எழவே கூடாது “


இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்


இந்த சம்பவதை ஷரத் பவார் தனது சுயசரிதை நூலில் உறுதிப்படுத்துகிறார்

பிரச்சனைக்குரிய இடத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டதாக எழுதுகிறார் அவர்

ஆனால் ஏன் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை? 

அங்குதான் அரசியல் விளையாடியது

ஷரத் பவார் , ராஜிவிடம் இந்த ஒப்பந்தம் குறித்து சொன்னார். ராஜிவ் சந்திரசேகரை போனில் தொடர்பு கொண்டார். “ நல்ல முறையில் தீர்வு கண்டமைக்கு பாராட்டுகள் . இரண்டு நாட்கள் யோசிக்க நேரம் கொடுங்கள் : என்றார் ராஜிவ்

இரண்டு நாட்களில் சந்திரசேகர் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்தார் ராஜிவ் 

இந்த பிரச்சனை சந்திரசேகர் ஆட்சியில் தீர்வு கண்டால் , அவர் ஒரு வலுவான தேசிய தலைவர் ஆகி விடுவார் என்ற அச்சம் ராஜிவுக்கு இருந்தது. இந்த பிரச்சனையை தான் முனைந்து தீர்ப்பதுதான் பழைய செல்வாக்கை ஈட்டுவதற்கான ஒரே வழி என ராஜிவ் நினைத்து இருந்தார். அந்த பெயரை சந்திரசேகருக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை

மலிவான அரசியல் மூலம் நடக்ககூடாத பல செயல்கள் நடந்து விட்டன


Chandra Shekhar And The Six Months That Saved India’ -  Roderick Matthews 




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]