Pages

Saturday, March 4, 2023

ஜெயகாந்தன் கலைஞர் சந்திப்பு, பகுதி 4

 மு.க: ஆமாம். இந்தத் தீவிரமான புதிய மதுவிலக்குச் சட்டம் குறித்து நான் முரசொலியில் எழுதியிருக்கிறேன். சென்னையில் எல்லாப் பகுதியிலும் ந்தாராளமாய் மது வியாபாரம் நடக்கிறது. முன்பு 10 ரூபாய் மாமூல் கிடைத்த போலீசுக்கு இப்போது 100 ரூபாய் கிடைக்கிறது.


ஜெ.கா: இந்திராகாந்தியைக் கொல்ல முயன்றதாக உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டும், வழக்கும். இருக்கிறது. அல்லவா? அது குறித்து ஏதேனும் சொல்லலாமா?


மு.க: என்ன சொல்வது? சிரிப்புதான் வருகிறது. என்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்திராகாந்தியே ஒப்புக் கொள்ளமாட்டார் என்றுதான் நம்புகிறேன்.


ஜெ.கா: இது மாதிரியான பொருத்தமற்ற, அபத்தமான, அநியாயமான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்டோருக்குப் புத்திமதி சொல்லுகிற நீதி மன்றங்கள் வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே நமது நீதி மன்றங்களின் சுதந்திரத்தை மக்கள் நம்புவர். (இது) விஷயம் வழக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் திரு. மு.க. மெளனமான புன்னகையோடு தமது கருத்து உடன்பாட்டைத் தெரிவிக்கிறார்.) 


ஜெ.கா: உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? இந்தக் கேள்விக்கு முதலில் என் தரப்பிலிருந்து பதில் சொல்லி விடுகிறேன். எனக்கு உண்டு.


மு. க : நம்பிக்கைதானே உண்டு என்றீர்கள்? கடவுள் உண்டு சொல்லவில்லையே? 'உண்டென்பர் சிலர் இல்லை என்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலைஎன்னும் பாரதிதாசன் கருத்தே என்னுடையது. யாவற்றை யும் ஆட்டிப் படைக்கும் சக்தி உண்டுதான். அதை  நினைக்கக்கூடிய, சிந்தனை செய்கிற ஒரு சக்தியாக என்னால் கொள்ள முடியாது. எனவே, கடவுளிடம் பிரார்த்தனை வழிபாடு என்பது எல்லாம் என் அளவில் அர்த்தமற்றது. கடவுள் நம்பிக்கை, நடைபாதைகளிலெல்லாம் கோயில் களைக் கட்டிவிடுகிற மூட நம்பிக்கை ஆகிவிடக் கூடாது என்பதே கடவுள் பற்றி என் கருத்து


ஜெ.கே: கடவுள் நம்பிக்கையின் உதவியோடு ஒரு சமுதாயத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உருவாக்கப்பட்டால் ஆட்சேபம் இல்லையே?


'கல்பனா' முதல் இதழில் அர்த்தமுள்ள கேள்விகள் பகுதியில் பெரியார் சிலையின் அடியில் எழுதி வைக்கப்படுகிற 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்பன போன்ற வாசகங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். நடைபாதைக் கோயில்களால் விளைகிற அநாகரிகத்தைக் கண்டிக்கிற தாங்கள் இதையும் கண்டிப்பீர்களா?


மு.க: எனக்கும். அந்த வாசகங்களில் உடன்பாடு இல்லை. நான் திறந்து வைத்த பெரியார் சிலைகளில் ஏதோ ஒன்றில்தான் அது இருந்தது. அவற்றுக்குப் பதிலாக, பெரியாரின் வேறு பொன்மொழிகளை அவற்றில் குறிக் கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் ஒன்று, நடை பாதைக் கோயில்கள் என்ற பெயரால் அவமானப் படுத்துவதை விட, பெரியார் சிலையில் எழுதப்பட்ட கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுளை நம்புகிறவர்களை அவமானப்படுத்தி விடமாட்டா என்பது என் எண்ணம்.


(இது எனக்குப் புரியவில்லை! அவமானமா அல்லவா என்று சம்பந்தப்பட்டவர்கள் அல்லவோ சொல்லுதல் வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.)


ஜெ.கா: நாமெல்லாம் ராமாயண - மகாபாரதத்தை இழித்தும் பழித்தும் பேசினோம். ஆனால் சோவியத் யூனியனில் நமது ராமாயண மகாபாரத இதிகாசங்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கப்படுகின்றன. வளரும் குழந்தைகளின் மனப்பண்புகளை உருவாக்க அவை மிகவும் பயன்படும் என்பதற்கு இது உதாரணம்.


மு.க: ராமாயணம்-மகாபாரதம் ஆகியவை இவக்கிய மாக எடுத்துக் கொள்ளப்படுமாயின் வரவேற்கத் தக்கதே. ஆனால் கல்வியறிவே இல்லாத மக்களின் மூட நம்பிக் கையை வளர்க்க அவை பயன்படுத்தப்பட்டதைத்தான் பெரியார் எதிர்த்தார்.


ஜெ.கா: அண்மையில் ஆளும் சுட்சிக்காரர்களின் வன்முறையைக் கண்டித்துத் தாங்களும் மற்றும் பல தோழமைக் கட்சித் தலைவர்களும் ஒரு நாள் கண்டன உண்ணா விரதம் இருந்தீர்கள். அந்த அனுபவம் குறித்து ஏதேனும்...


மு.க: தமிழ்நாட்டில் நான் முதல் அமைச்சராக இருந்த காலத்திலும் அதற்கு முன்பும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் வன்முறை நடந்தது உண்டு. ஆனால் அவை இந்த அளவுக்குத் திட்டமிடப்பட்டு, ஒரு பாராளு மன்ற அங்கத்தினரையே கொல்லும் அளவுக்கு இருந் தில்லை. அதிமுக ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் அரசியல் வன்முறைகள் எண்ணிக்கையில் எப்போதையும்விட அதிகமாயிருக்கின்றன. குற்றம் செய்கிறவர்கள் ஆளும்கட்சிக்காரர்களாய் இருந்தால் அவர்களை விட்டுவிடு கிறார்கள்; அல்லது காப்பாற்றி விடுகிறார்கள். அதனால்தான் எதிர்கட்சிக்காரர்களின் மீது தங்கு தடையற்ற வன்முறை செயல்களை அச்சமற்று அவர்களால் பிரயோகிக்க முடிகிறது. இவற்றை கண்டனம் செய்வதற்கான ஒரு அடையாளப் போராட்டத்தின் ஆரம்பமே அந்த ஒரு நாள் உண்ணாவிரதம். எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட இடையறாத போராட்டங்களின் மூலம்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும். எந்தக் கட்சி வன்முறையில் ஈடுபடுவதையும் நான் ஏற்கவில்லை.


ஜெ.கா. தஞ்சை நாகைத் தேர்தல் அனுபவங்கள் பற்றி...


மு.க: தோல்வியால் எனக்குச் சோர்வு ஏற்பட்டுவிடவில்லை. தி.மு.க.வின் ஓட்டுகள் இந்தத் தேர்தலில் குறையவில்லை. மும்முனைப் போட்டி இருந்திருந்தால் தி.மு.க.தான் ஜெயித்திருக்கும். தமிழகத்தில் இந்திராவுக்கு உள்ள செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தஞ்சை வெற்றி அ.தி.மு.க.வின் பலத்தால் ஏற்பட்டது அல்ல. ஆனால் நாகை வெற்றி மிகப் பெரிது. பல கோடி ரூபாய்களை அங்கே வாரி இறைத்தும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச கட்டத்துக்குப் போயும் அ.தி.மு.க. அங்கு தோல்வி அடைந்ததற்குக் காரணம் கம்யூனிஸ்ட் - தி.மு.க. ஒற்றுமையே ஆகும். இந்த ஒற்றுமை எதிர் காலத்தில் மேலும் வலுவாக்கப்படும். வலுவாக்கப்பட வேண்டும்.


ஜெ.கா: நீங்கள் எப்பொழுதேனும் உங்களை ஒரு கம்யூனிஸ்டு எதிரி என்று நினைத்துக் கொண்டதோ, பிரகடனம் செய்து கொண்டதோ உண்டா?


மு.க: ஒருபோதும் இல்லை. குடியரசுப் பத்திரிகையில் பணியாற்றிய காலம் தொட்டுப் பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் நான். கம்யூனிஸ்டுத் தோழர்களோடு எவ்வளவோ மோதல்கள் ஏற்பட்டுள்ளன


எனினும் என்னை நான் ஒரு சும்யூனிஸ்டு எதிரியாக எண்ணிக் கொண்டதில்லை. மாறாக, நானே ஒரு கம்யூனிஸ்டு என்ற நினைப்பில் வளர்ந்தவன்.


ஜெ.கா: (சிரித்துக்கொண்டு) நினைப்பு எதற்கு ...நிஜமாகவே ஆகிவிடவேண்டியதுதானே? (தொடர்ந்து) கூட்டணி அரசியலைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தை உஙகளிடம் சொல்ல வேண்டும். கூட்டாக மக்கள் மத்தியில் ஓட்டுவாங்கியவர்கள் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாகவே அரசு அமைப்பதுதான் மக்களுக்குக் கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது ஆகும் என்கிற மரபு எதிர் காலத்தில் கைக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?


மு.க: அரசியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை முதலில் கூர்ந்து கவனிப்போம். அத்தகைய மாற்றங்கள் உருவாகும் போது உங்கள் கருத்தைப் புறக்கணித்து விடமுடியாது. உளமார்ந்த உணர்வுகளுடனும், நேச மனப்பான்மையுடனும், மக்களுக்குத் தொண்டாற்ற முன்வரும் அரசியல் கட்சிகளாலேயே அது சாத்தியமாகும்.


(அத்தகைய சிறப்புக்குகந்த கட்சிகளாக தி.மு.க.வும்- உங்கள் தோழமைக் கட்சிகளும் உருவாக வேண்டியது தானே? என்று என்னுள் ஓர் எண்ணம் ஓடுகிறது)


ஜெ.கா: உங்களுடைய சினிமாப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். உங்கள் பழைய படங்களின் வசனவரிகளில் பல எனக்கு மனப்பாடம்... அந்த துறையில் ஏதேனும் புதிதாக, உயர்வாக, குறிக்கோளுடன் சாதனை புரியும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா?


மு.க: ஆர்வம் இருக்கிறது, நேரம் இல்லையே.


ஜெ.கா: உங்களின் ஒரு நாளைய நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.


மு.க. நாட்களைப் பொறுத்தும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. அதனால் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி ஒரு பொய்ப் பட்டியல் தர நான் விரும்பவில்லை.


ஜெ.கா: நீங்கள் தேகப் பயிற்சி செய்வது உண்டா?


 மு.க: எப்போதாவது! முறையாக இல்லை!


அடுத்து ஒரு சந்திப்பில் இன்னும் நிறையப் பேசுவோமே! இப்போது கட்சிப் பணிகள் என்னை அழைக்கின்றன.


நன்றியும் வணக்கமும் கூறி நட்புடன் விடை பெறுகிறோம்.





No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]