சார் பேப்பர்– பேசப்படாதவர்களை பேசும் நாவல் - பிச்சைக்காரன்
நாவலின் நாயகன் செய்தித்தாள் என குரல் கொடுக்கும் அளவுக்கு தமிழ்ப்பற்று மிக்கவன். தாங்கள்தான் செய்தித்தாள் விநியோகிப்பாளரா ? என கேலிக்கு உள்ளாபவன். நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் பெரிய அளவில் ஜொலிப்பான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாதாரண ஊதியத்தில் பேப்பர் போடும் தொழிலில் இருப்பவன், இந்தத் தொழில் என்றல்ல பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு ஒவ்வொன்றையுமே ஊக்கத்துடனும் தனித்துவத்துடனும் செய்து தோன்றில் புகழுடன் தோன்றுக என்பது போல திகழ்பவன், குடும்பம் உள்ளிட்ட அனைத்து அதிகார மையங்களையும் எதிர்ப்பவன், யாருக்கும் தலை வணங்காதவன், இடதுசாரி தோழர் ஒருவருடன் நெருக்கமாய் இருந்து தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக உணர்பவன் என அழுத்தமான நாயகன். செயற்கையாக ஊதிப்பெருக்கப்படாத நிஜமான நாயகன் குடும்பம் உள்ளிட்ட எந்த அதிகார அமைப்பு முன்பும் தலை வணங்காதவன். சில ஆண்டுகள் முன்னர் every road is paved with gold என்ற நூல் படித்தேன். தேவூ கார் நிறுவன நிறுவனர் வூ-சூங் கிம் சுயவரலாற்று நூல். பேப்பர் போடும் வேலையில்தான் தனது தொழில் வாழ்வைத்தொடங்கினார். அவ்வேலையுமேகூட தனது அண்ணனுக்குப் பதிலாக செய்ய நேர்ந்த வேலைதான். வாடிக்கையாளருக்கு செய்யவேண்டிய துரித சேவை, புன்னகையுடன் சேவை செய்தல், போட்டியாளர்களை மிஞ்சிக்காட்டுதல் என பலவற்றை அங்குக் கற்றுக்கொண்டது பிறகு சர்வதேச அளவில் தொழில் செய்ய உதவியதாக சொல்கிறார்.
Rain: What a Paper boy Learned About Business' என்ற புகழ்பெற்ற நூலும் நினைவுக்கு வருகிறது வெளிநாடுகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேப்பர் போடுவதை பகுதிநேரமாகச் செய்வதும் பயோ டேட்டாவில் அதைக் குறிப்பிட்டால் அதற்கென சிறப்பு கவனம் கிடைப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் நம்மூரைப் பொருத்தவரை வேலை செய்கின்றவனுக்கு வேலையைக் கொடு வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு என்ற மனப்பான்மை நிலவுவதால் இதில் கடுமையாகவும் திறமையாகவும் உழைக்கும் நாயகனுக்கு வீட்டு விசேஷங்களுக்குக்க்கூட போக முடியாத அளவு வேலை அவனை முழுமையாக உறிஞ்சி எடுப்பதை நாவல் அழகாக பதிவு செய்கிறது விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசும்கதைகளில் வழக்கமாக காணப்படும் கொடூரமான ஆதிக்க சக்தி என்ற பிரதான எதிர்மறைப் பாத்திரம் இதில் இல்லை, முழுக்க முழுக்க கண்ணீரில் மிதக்கும் சுரண்டலுக்கு உள்ளாகும் நாயகன் என்ற சித்தரிப்பும் இல்லை ஜாதிய ஆதிக்க சக்திகள் வருகின்றனதான்.. ஆனால் அவை இடதுசாரி தோழர் ஒருவர் துணையுடன் முறியடிக்கப்படுகின்றன. வர்க்க ரீதியான சுரண்டல்கள், சிறுமை கொண்ட பாத்திரங்கள் என பல பாத்திரங்கள் எதிர்மறை அம்சத்துடன் வந்தாலும் பிரதான எதிர்மறைப் பாத்திரம் இல்லை.
ஆனாலும் நாயகனின் தம்பி பாத்திரம் சுவையாகவும் நாயகனுக்கு எதிர்நிலையிலும் சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது தம்பியும் தன் மானம் மிக்கவன்.. அதிகாரத்துக்கு எதிரானவன். ஆனால் அண்ணன் அளவுக்கு திறமைசாலியோ உழைப்பாளியோ அல்லன்,, ஆனால் தன் வலியறிந்த புத்திசாலி என்ற பாத்திர வார்ப்பு சிறப்பு இருவரும் சேர்ந்துதான் பேப்பர் போடுகிறார்கள்
தினமலர், தந்தி, மணி, கரன், தீக்கதிர், ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் என ஒவ்வொரு பத்திரிக்கைக்குமான வாசகப் பரப்பு, நிர்வாக ரீதியான ஒவ்வொன்றின் செயல்பாடு எனப்படிக்கும்போது நாம் படித்து வளர்ந்த பேப்பர்கள் பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது. கேபி கந்தசாமி அவர்களால்நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வந்த தினகரன் இதழ் தனித்துவமான ஒன்றாகும்.
அதன் தலையங்கள் பலராலும் ஆழ்ந்து கவனிக்கப்பட்டவை. ஒரு கட்டத்தில் அதை முழுமையாக சன் குழுமம் வாங்கி அதன் உள்ளடக்கம், தாளின் தரம், வாக்கிய அமைப்புகள் போன்ற அனைத்தையுமே இன்னொரு பிரபல இதழ் போல மாற்றி விட்டது. அதில் வேலை செய்த பலர் பணியிழந்து புதியவர்கள் அமர்த்தப்பட்டனர் என்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அதன் விலை வெறும் ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ரூபாய் கான்செப்ட் என்பது பெங்களூரு போன்ற நகரங்களில் ஆங்கில இதழ்கள் கடைப்பிடித்த ஒரு யுக்திதான் என்றாலும் சன் டிவியின் இடையறாத விளம்பரத்தால் ஒரு ரூபாய் தினகரன் என்பது அப்போது டிரெண்ட்டிங்கில் இருந்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் ( நேர் மறை .எதிர்மறை என இரண்டும்) ஒரு கட்டத்தில் ஒரு ரூபாய் கான்செப்ட் நிறுத்தப்பட்டபோது என்னவானது போன்றவற்றை ஆவணப்படுத்திய ஒரே நாவலாக இது இருக்கக்கூடும்.
எப்படி பிரதான எதிர்மறைப் பாத்திரம் இல்லையோ அதேபோல பிரதான நாயகியும் இல்லை. மெல்லுணர்வு மிக்கவர், அழகானவர், முரட்டுத்தனமானவர், வாழ்க்கையின் வெம்மையால் பொசுங்குபவர் இப்படி பலதரப்பட்ட பெண்களை பார்ப்பது சுவாரஸ்யம். சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார். இவர் தந்தை மகன் என்ற இரு புஷ்களிடமும் துணை அதிபராக இருந்த தனித்துவ பெருமைக்கு சொந்தக்காரர். அதிபர்களைவிடவும் சக்தி வாய்ந்தவராக இருந்தவர். அவர் இறந்தபோது அவர் சாதனைகள் பேசப்படவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்து ஈராக் மீது போர் தொடுத்து சதாம் ஹுசேன் உள்ளிட்ட ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகி அந்தப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குலைத்த அராஜகம்தான் பேசப்பட்டது
அதுபோல ஒரு காட்சி.. பள்ளி தேர்வு முடிவுகள் வருகின்றன. பேப்பர் வாங்க பலர் அலைமோதுகிறார்கள் பேப்பர் கேட்பவர்கள் இரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. கடையில் ஒரு மாவட்டத்துக்கான பேப்பர்தான் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தேவையில்லாத பதிப்பை வாங்கி ஏமாந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எந்த ஸ்கூல் என கேட்க முயல்கிறான்.. கடைக்காரர் டென்ஷனாகி அவனை நகரச்சொல்லி விட்டு தேவையோ இல்லையோ அனைவருக்கும் விற்றுவிட்டு காசை வாங்கிப் போட்டுக்கொள்கிறார்.
அவர் ஒரு நாள் காலமாகிவிடும்போது இந்த நினைவு அவனுக்கு வருகிறது. இது போன்ற சித்தரிப்புகள் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை என்பதைத்தாண்டி ஒட்டு மொத்த மானுடத்தைப் பேசுகின்றன.
சகோதரிகள் மீது அன்பு,நூலக ஆர்வம், பள்ளியில் திறமையைக்க்காட்டுதல் என இருந்தாலும் அவனது போதாமைகளும் குறிப்பிடப்படுவது சிறப்பு. கட்டட வேலை விவசாய வேலை என எதைச் செய்தாலும் “ வேலை தீப்பிடிக்கணும் தீ மாதிரி வேலை செய்யணும்” என்ற அவன் உத்வேகம் அவனை ஒரு நாயகனாக்குகிறது. படிப்பு, உழைப்பு, திறமை எல்லாம் நிறைந்த அவன் வேலையை இழப்பதுடன் நாவல் முடிந்தாலும் அது கொடுக்கும் தாக்கம் நீடிக்கிறது.
கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்.
இந்த நாவல் குறித்து வையம் இதழுக்காக நாவலாசிரியர் அறிவுமணியுடன் நிகழ்த்திய உரையாடலின் ஒரு தொகுப்பு
1. நசிந்த இருவரின் வாழ்வு பற்றிப் பேசும் நாவல் என புத்தக அறிமுகம் சொல்கிறது. ஆனால் யாருக்கும் தலைவணங்காத தன்மை, படிப்பு ஈடுபாடு, காதலுணர்வு, தொழில்நேர்த்தி, சுறுசுறுப்பு என வெற்றியாளனாக ஒரு நாயனாகத்தான் இதன் நாயகன் நம் மனத்தில் பதிகிறான்.. நாவலின் இறுதியுலுமே கூட இவ்வளவு திறமைசாலி வருமானம் குறைவான இதில் இருப்பதை விட இதை விட்டு வெளியேறியது நல்லதுதான் என்ற எண்ணமே எழுகிறது. வேலை போயிற்றே இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வான் என்ற எண்ணம் வருவதில்லை… அவன் பாத்திரவார்ப்பு அப்படி.. எனவே நசிந்தவன் என்பது சற்றே பொருத்தமற்ற அறிமுகமாய் தோன்றுகிறது… உங்கள் பார்வை?
உண்மைதான் அத்தொழில் சார்ந்து இயங்கும் நிலையில் படிப்படியான வளர்ச்சி என்பது இல்லாமல் படிப்படியான வீழ்ச்சியாக இருப்பதே நசிவுக்கு அடிப்படையாக நாவல் கூறுகிறது. இறுதியில் அந்த வேலையைச் செய்ய முடியாதவனாக, வெளியேற்றப்படுவபவனாக இருப்பதும் ஒரு வகையில் மனதளவில் பாதிக்கும் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது.
2. சம்பளம் என்பது தாண்டி வேலையில் ஆர்வமும் திறனும் உள்ள ஒருவனை நிர்வாகம் சரியாக மதிப்பதில்லை … அவன் மதிப்பை உணர்வதும் இல்லை என்ற பிரச்சனை எல்லா துறைகளிலுமே உள்ளது.. எனவே பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குக்கூட இந்த நூல் பேசும் பிரச்சனை புரியும் என கருதுகிறேன், இதையும் நாவல் எழுதும்போது கவனத்தில் கொண்டீர்களா?
இது பொதுவான விமர்சனம்தான். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் ஏமாற்றப்படுவது பெரும்பாலும் தெரிவதில்லை. காலப் போக்கில் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதனால்தான் பிடிமானம் செய்த பணத்தை திருப்பூர் சென்று வாங்கி வருவது போலான காட்சிகள் வைக்கப்பட்டன.
3. இக்கதை நிகழும் கால கட்டத்தை உணர்த்துவதுபோல திரைப்படம் சார்ந்த குறிப்புகள் இயல்பாக இடம் பெற்றுள்ளன.. ஆனால் அப்போதைய அரசியல் நிகழ்வுகள் வெகு குறைவுதான்… அரசியலை வேண்டுமென்றே தவிர்த்துள்ளீர்களா
அரசியல் சார்ந்த பதிவுகள் கதையோட்டத்தில் நேரடியாக இல்லாமல் பதிவு பெறுவதைத்தான் விரும்பினேன். உதாரணமாக நான்கு வழிச் சாலைக்காக மலைகள் அழிக்கப்படுவது குறித்த பதிவு போகிற போக்கில் சொல்லப்படுவது. மேலும் பெருவாரியான மக்களிடம் கம்யூனிச ஒவ்வாமை இருப்பது பற்றி கனி என்கிற பாத்திரத்தின் மூலம் கூறப்படுகிறது.
4. பேப்பருக்காக காத்திருந்து படித்தல், பேப்பருக்காகவே டீ விற்பனை அதிகரிப்பு போன்ற சூழல்கள் இன்றும் உள்ளனவா..
பேப்பர் படிப்பது இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால் முந்தைய காலத்தின் தன்மை இன்றைக்கு இல்லை. செய்திகள் நொடிக்கு நொடி மக்களிடம் சென்று சேர்வதற்கான தொழில்நுட்பம் அதற்குக் காரணமாகலாம்.
5. வாசிப்புப் பழக்கம் குறைகிறது என்பது பலரது கவலை... இன்று எழுதும் வாசிக்கும் பலருக்கு நல்லதொரு துவக்கமாய் அமைந்தவை நாளிதழ்கள்தான்.. பெரியவர்கள் நாளிதழ் படிப்பதைப் பார்த்து தாமும் படிக்க ஆரம்பித்து அப்படியே நூல்கள் வாசிப்புக்கு வந்தவர்கள் பலருண்டு.. அப்படிப்பார்த்தால் பேப்பர் போடுபவர்கள் வாசிப்பு எனும் இயக்கத்துக்கு முக்கியப்பங்கு ஆற்றியுள்ளனர்.. வேலை தேடுவோர்க்கு அவர்கள் கடவுளின் தூதர்கள் போன்றவர்கள்.. ஆனாலும் அவர்களைப் பற்றி யாரும் பதிவு செய்யவில்லை என்பது ஆச்சர்யம்தான்.. இந்த கருப்பொருளில் எழுதும் யோசனை எப்படி வந்தது?
எத்தனையோ உதிரித் தொழிலாளர்களை தினந்தோறும் சந்திக்கிறோம். ஆனால் அவர்களைப் பற்றிய சிந்தனை ஓரிரு கணங்களில் நின்று மறைந்து போகின்றன. அத்தகையவர்கள் பற்றிய பதிவுகளின் இன்றியமையாமையை உணர்ந்தே இந்த நாவலை எழுதினேன்.
6. இந்நாவலில் இடதுசாரித் தோழர் ஒருவர் முக்கியப் பாத்திரத்தில் வருகிறார்.. இந்த நாவலில் வர்க்க பிரச்சனை பதிவான அளவுக்கு ஜாதிய பிரச்சனை பதிவாகவில்லை..( ஒரு இடத்தில் ஜாதி அடக்குமுறை பதிவாகியுள்ளது) வர்க்க பிரச்சனை சரியானால் மற்றவை சரியாகி விடும் என்பதே இடதுசாரி பார்வை எடுத்துக்கொள்ளலாமா?
வர்க்கம், சாதிப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட உதிரித் தொழில் பற்றிய சிக்கல்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் இத்தொழிலாளர்கள் சார்ந்த சமூகத்தில் அதன் இயக்கப் போக்கில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் பதிவு கெய்யப்படுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
7. தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன். தமிழ் இந்து தீக்கதிர் இதழ்கள் பற்றி உங்கள் பார்வை ஓரிரு வரிகளில் இந்த நாளிதழ்கள் குறிப்பிட்ட வர்க்கத்தவர்களுக்கானவை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வெகுசன வாசிப்பில் இன்றைக்கும் முதலில் நிற்பது தினதந்திதான். டீக்கடைகளில் அதைத்தான் பெரும்பாலும் காண முடியும். மற்ற நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூகத்தவர்களால் வாங்கப்படும். வெகுசன வாசிப்பை அதிகரித்தத்தில் தினகரன் ஒரு பங்கு வகித்தது உண்மைதான். ஆனால் அது கட்சி சார்ந்து இயங்கும் என்பதால் அதை வெறுப்பவர்களும் இருந்தனர். அது போலவே தினமலரும். தினமணி படிப்பவர்கள் மிக சொற்பமானவர்கள் படித்த மேட்டிமையாளர்களாக அவர்கள் இருப்பார்கள். அது போல ஆங்கில தினசரிகளைப் படிப்பவர்களும் எலைட் மனிதர்களாக இருப்பார்கள். தீக்கதிர் கட்சிப் பத்திரிகைதான். அதை வாங்குபவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மட்டும்தான் அதை படிப்பதும் குறைவு.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]