Pages

Sunday, June 9, 2013

பரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் குறும்பட நிகழ்வின் சுவாரஸ்யங்கள்


சாஃப்ட்வேரில் ஒரு பெரிய நிறுவனத்தில் அதுவும் அமெரிக்காவில் பணி புரிவதுதான் பெரும்பாலான தமிழர்களின் கனவு. ஆனால் தன் இலட்சியத்துக்காக அமெரிக்க வாய்ப்புகளைக்கூட தூக்கி எறிந்த தமிழ் ஸ்டுடியோ அருண் எனக்கு ஆச்சர்யமான மனிதராக தெரிகிறார் , அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.

அவர் லட்சியம் சினிமா,  சினிமா என்றால் வழக்கமாக எல்லோர் மனதிலும் தோன்றும் கமர்சியல் படங்கள் அல்ல. உண்மையான ஒரு மாற்று சினிமா என்பது ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்ற ஆசையில் பல பணிகள் ஆற்றி வருகிறார்.

அந்த பணிகளில் ஒன்றாக , நல்ல படங்களை அனைவரும் சேர்ந்து பார்த்தும் ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் குறும்பட வட்டம் சார்பில் நல்ல படங்களை திரையிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் ஓர் உலகத்திரைப்படமும் , ஒரு தமிழ் குறும்படமும் திரையிடப்பட்டது. எனக்கும் ஃபேஸ்புக்கில் இன்வைட் அனுப்பினார்.

 நல்ல படங்களில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதால் , என் வருகையை உறுதி செய்தேன்.

சன்க்கிழமை. மாலை எழும்பூரில் இருக்கும் ஜீவன ஜோதி அரங்கத்தில் நிகழ்ச்சி நடந்தது.

அதே நாளில் சாருவின் நிகழ்ச்சி ஒன்று நடப்பது பிறகுதான் தெரிய வந்தது. சாருவின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடக்கூடாது என நினைப்பவன் நான்,

ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதாக சொல்லி விட்டு போகாமல் இருந்தால் , நடத்துபவர்களுக்கு சில நடைமுறை சிக்கலகள் ஏற்படும். இதை அரசோ அல்லது வேறு பன்னாட்டு அமைப்போ நடத்தவில்லை.

ஆர்வமுள்ள சிலர் தம் சொந்த முயற்சியால் நடத்துகிறார்கள்.  எத்தனைபேர் வருகிறார்கள் என கணக்கிட்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.  வருவதாக சொன்னவர்கள்  வராமல் போனால் ஏற்பாடுகள் வீணாகும், மேலும் சில கஷ்டங்கள் ஏற்படும்,

எனவே சொன்ன நேரத்துக்கு ஜீவன ஜோதி அரங்கம் சென்றேன்.

நண்பர்கள் கிருபா, பிரியமுடம் துரோகி ஆகியோரும் வந்து இருந்தனர். இதுல் கிருபாவுடன் பேசினான். ப்ரியாவுடன் பிறகு பேசலாம் என நினைத்தேன். அதுதான் தவறாக போய் விட்டது. ஏன் என பிறகு சொல்கிறேன்.

முதலில் yesterday என்ற ஆஃப்ரிக்கப்படம் திரையிடப்பட்டது.

அதன் பின் 14/ 6 என்ற தமிழ் குறும்படம் ( இயக்கம் : பாலாஜி சுப்ரமணியம் )

இந்த இரு படங்களையும் பற்றி தனியாக எழுத இருக்கிறேன்.

குறும்படங்களை யூ ட்யூபிலோ , சிடியிலோ பார்ப்பதை விட கூட்டத்துடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்.,

குறும்படங்கள் என்றில்லை. பொதுவாகவே எல்லா படங்களுமே கூட்டத்தினருடன் பார்ப்பதற்காகத்தான் எடுக்கப்படுகின்றன என்றே நினைக்கிறேன்.

படம் முடிந்ததும் படத்தைப்பற்றிய விவாதம் .சூட்டோடு சூடாக விவாதம் என்பதால் விவாதங்களில் அனல் பறந்தது.

படம் பார்த்து முடித்து , ரிலாக்சாக வீட்டில் அமர்ந்தோ அல்லது அலுவலக ஏசியில் அமர்ந்தோ விமர்சனம் செய்து , ஆன்லைன் விவாதம் செய்வது வேறு.

படம் பார்த்து முடித்தவுடன் உடனடியாக அங்கேயே விவாதிப்பது வேறு.

சினிமாவை எப்ப்படி பார்ப்பது , எப்படி விமர்சிப்பது என்பதை சக பார்வையாள நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதே போல , ஒரு படத்தை எப்படி பார்க்க கூடாது, எப்படி விமர்சிக்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

திரையுலக பிதாமகர் எடிட்டர் லெனின் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் வருகையும் பேச்சும் மட்டும் அல்ல , அவர் மவுனமும்கூட மேன்மக்கள் மேன்மக்களே என்று காட்டியது.

அவர் வருவார், ஃபார்மலாக பேசி செல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ நீங்கள் எல்லாம் பேசுங்கள். நான் அதை கவனிக்க விரும்புகிறேன், அதன் பின் பேசுகிறேன் என்றார்.

பல கூட்டங்களில் பார்த்து இருக்கிறேன். சில பேச்சாளர்கள் தாம் பேசுவதை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பார்கள்.  தம் பேச்சு முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.

ஆனால் லெனினோ மற்றவர்களை பேச வைத்து கேட்டார். மற்றவர்கள் என்றால் வி ஐ பிகளோ தொழில் முறை பேச்சாளர்களோ அல்ல. வெவ்வெறு துறையை சார்ந்த சினிமா ரசிகர்கள்.

அதன் பின் தன் பேச்சில் , முன்னால் பேசியவர்கள் பேச்சை நினைவு படுத்தி பேசினார். அந்த அளவுக்கு மற்றவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாமனிதனாக காட்சி தந்தார் என்றால் , அவர் பேச்சில் தான் எவ்வளவு பெரிய தொழில் வல்லுனர் என காட்டினார்.

இசை , ஒலி, ஒளி , வசனம் என பலவற்றை ஒரு பேராசியர் வகுப்பு எடுப்பது போல விளக்கினார்.
சினிமா துறையில் அவருக்கு இருக்கும் PASSION கண்டிப்பாக அங்கிருந்த அனைவருக்கும் inspiration ஆக இருந்து  இருக்கும்.

அவருக்கு முன் பேசியவர்கள் பேச்சு அனைத்தையும் நான் ரசித்தேன். சிலர் விமர்சனாக பேசினார்கள் , சிலர் ரசிகனாக பேசினார்கள், நான் இரண்டையும் ரசித்தேன்.

ஒரு படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நாம் சொல்ல முடியாது. பார்வையாளன் அவன் நுண்ணுணர்வு, வாசிப்பு, ரசனை அடிப்படையில் புரிந்து கொண்டு விமர்சிப்பான். இது இயல்பு. எனவே ஒரு பார்வையாளனாக நான் அனைத்து பார்வைகளையும் ரசித்தேன்.

ஆனால் நண்பர் ப்ரியமுடன் துரோகியோ லேசாக டென்ஷன் ஆகிக்கொண்டு வந்தார்.

இதில் இன்னொரு மேட்டர் இருக்கிறது, வழக்கமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் மாடரேட்டர் ரோலை எடுத்து கொள்வார்கள். இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றினால் , சரி தவறு என்பதற்குள் போகாமல் சமரசம் செய்து வைப்பார்கள். ஓகே பாஸ்... நீங்க சொல்வது ஒரு விதத்தில் சரி.. அவர் சொல்வதும் சரி....   புலவர்களுக்கிடையே சச்சரவு இருக்கலாம்.. அது சண்டையாகி விடக்கூடாது என பேசி நடு நிலையை நிலை நாட்டுவார்கள்.

ஆனால் அருண் இது போன்ற சமரசவாதி இல்லை என்பதால் , கறாராக விவாதத்தை கொண்டு செல்ல விரும்புவார்.

அப்படி இருந்தும் சிலரது பேச்சுகள் நண்பர் துரோகியை டென்ஷன் ஆக்கி கொண்டு இருந்தன.

என்னை பொறுதவரை ஒரே படம், பலருக்க்கு பல விதமாக தெரிவது சுவாரஸ்யமாக இருந்தது.

சிலர் கருத்துகளை பாருங்கள்.


***************************************************

இது எயிட்ஸ் பற்றிய படம். ஆஃப்ரிக்காவில் எயிட்ஸ் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.  அப்படி இருக்கையில் எயிட்ஸ் பற்றி அவர்களுக்கு தெரியாது என்பது போல காட்டி இருப்பது செயற்கையாக இருக்கிறது

************************************************

தமிழ் படமான மிருகம் படத்தை நினைவு படுத்தியது. ஆனால் அதை விட இந்த படம் நேர்த்தியாக இருந்தது.  ஒவ்வொரு ஷாட்டும் அருமை. புதிதாக நகரத்துக்கு செல்லும்போது நிழல்க்ள் மட்டும் காட்டப்படும். அதேபோல புழுதி காட்சி,  வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சி எல்லாம் அருமை. கிராமத்தில் ஆண்களே இல்லை என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

***************************

ஆப்ரிக்காவில் விழிப்புணர்வு இல்லை என்பதை குறையாக சொல்ல முடியாது. ஒரு வேளை இந்த படத்தின் காலம் , எயிட்ஸ் வர ஆரம்பித்த கால கட்டமாக இருக்கலாம் அல்லவா

படம் அருமை...படத்தின் பெயர் யெஸ்டர்டே... ஆனால் என்னை பொறுதவரை இந்த படம் யெஸ்டெர்டெ மட்டும் அல்ல...  Forever

***************************

தமிழ் நாட்டில் என்ன விழிப்புணர்வு இருக்கிறது. என் நண்பன் ஒருவன் இதேபோல பாதிக்கப்பட்டான், இந்த படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நடந்து கொண்டனர், மிகவும் சிரமப்பட்டோம். அவன் இறந்தபோது தூக்கி செல்ல நான்கு பேர் கூட கிடைக்கவில்லை. எனவே படம் செயற்கை என சொல்வதை ஏற்க இயலாது. பெண்களை அடித்தல் , அடிமையாக வைத்து இருத்தல் போன்றவை உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை படம் காட்சி படுத்தி இருக்கிறது

*********************************************

என்  tommorokkalil மறக்க முடியாத படம் yesterday

**************************************

இது எயிட்ஸ் பற்றிய படம் என தோன்றவில்லை. பெண்ணின் மன உறுதியைப்பற்றிய படம்.

**********************************

வாழ்க்கை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை படம் சொல்கிறது. வலியை மட்டும் சொல்லாமல் அன்பு மிகுந்த டீச்சர், பக்கத்து வீட்டு பெண், உதவும் வழிப்போக்கர்கள் என பாசிட்டிவாகவும் சொல்கிறது

*******************************

பெண்ணின் பெருந்தன்மை, வீரம் , மன்னிக்கும் குணம் இவற்றையே படம் சொல்கிறது. அந்த குழந்தை கேட்கும் கேள்விகளில் வாழ்வின் மீதான நம்பிக்கை பளிச்சிடுகிறது. தன் கணவனுக்காக அவள் தன்னந்தனியாக அமைக்கும் வீடு , அவளது பழைய வீட்டை விட அற்புதமாக உள்ளது.அதில் அவள் அன்பு தெரிகிறது

**********************************


இந்த எல்லா கருத்துகளையும் நான் ரசித்தேன்.  ஆனால் இதை எயிட்ஸ் விழுப்புணர்வு படமாக நினைத்துக்கொண்டு , சிலர் பேசியதை துரோகி ரசிக்கவில்லை. ஆனால் அடுத்து லெனின் பேச இருப்பதால் மவுனமாக இருந்தார்.

பின் லெனின் பேசினார்.


**********************************
லெனின்

என்னை திரையுலக ஜாம்பவான் என அறிமுகப்படுத்தினார்கள்.  நான் என்னை பெரிய ஆள் என நினைப்பது இல்லை. இதெல்லாம் சும்மா ஃபார்மலான வார்த்தைகள். நான் வேலை செய்யும் படங்களில் இப்படிப்பட்ட வசனம் வந்தால் வெட்டி எறிந்து விடுவேன் ( அரங்கில் கைதட்டல் , சிரிப்பு )

உண்மையில் ஜாம்பவான்கள் எல்லாம் இப்போது திணறுகிறார்கள். புதிய ஆட்கள்தான் ஜொலிக்கிறார்கள். அவர்கள் பெறும் வெற்றிகளை பாராட்ட மனம் இல்லாமல் இந்த ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.  தாம் செய்ய முடியாததை புதியவர்கள் செய்கிறார்களே என்ற பொறாமை ( கைதட்டல்)

அதே சிந்தனை , வழக்கமான ஷாட் என எடுத்தால் ரசிகன் எப்படி பார்ப்பான், எனக்குதான் வேறு வழியில்லை. தொழில் நிமித்தம் பார்க்கிறேன்.தேவை இல்லாததை எடிட் செய்கிறேன். மீண்டும் மீண்டும் அப்படியே எடுத்தால் என்ன செய்வது?

படம் எடுக்க கற்பது போல விமர்சனத்தையும் கற்க வேண்டும்.

படத்தை அப்படி எடுத்து இருக்கலாமே..இப்படி எடுத்து இருக்கலாமே என சொல்வது விமர்சனம் அல்ல. எடுக்கப்பட்டு பார்வைக்கு வந்துள்ள படத்தின் அடிப்படையிலேயே விமர்சனம் அமைய வேண்டும்.

இங்கு பேசிய சிலர் நன்றாக பேசினார்கள். ஒருவர் ஒரே வரியில் பேசி விட்டு போனார். நன்றாக இருந்தது.

என்னை பொருத்தவரை எயிய்ட்ஸ், விழிப்புணர்வு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தன் குழந்தை படிக்க வேண்டும். அதுவரை தான் உயிரோடு இருக்க வேண்டும் என நினைக்கிறாளே அந்த பெண்...அதுதான் இந்த படத்தின் ஜீவன்.

படம் எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்..எயிட்ஸ் எல்லாம் இல்லை. ஒரு லாங்க் ஷாட் ..தூரத்தில் புள்ளியாக அந்த பெண்.

எவ்வளவோ உணர்வுகளை இது சொல்லி விடுகிறது.

இங்கு திரையிடப்பட்ட தமிழ் குறும்படத்தின் ஆரம்ப காட்சியை ஒப்பிட்டு பாருங்கள்/

குறையாக சொல்லவில்லை. நன்றாக எடுத்து இருக்கிறார்.

ஆனால் பொதுவான தமிழ் திரைப்பட சூழலை சொல்ல வேண்டி இருக்கிறது.
நம் ஆட்களுக்கு ஒலி உணர்வே இல்லை.

அந்த படத்தில் ஒலி இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்கு எவ்வளவு பிரயத்தனம் எடுத்து இருக்கிறார்கள் என பார்த்தோம்.

 நம் ஊரில் ஒலிக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியாமல் பணியாற்றுகிறார்கள்/ இரவு விழித்து வேலை செய்வதையே பெரிய சாதனையாக நினைக்கிறார்கள்.

இங்கு இயற்கையான ஒலியே இல்லை. எல்லாம் அவரசத்தில் செய்யப்படும் டப்பிங்தான்.  தமிழ் , தமிழுணர்வு என பேசுகிறோம் ஆனால் எந்த நடிகைக்கும் தமிழ் தெரியாது.

டெக்னாலஜி வளர்ந்து விட்டதே தவிர எண்ட் பிராடக்ட் தரம் வளரவில்லை.

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. எதுவாக இருந்தாலும் இப்படி தைரியமாக சொல்ல வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ,மவுனமாக இருந்து விட்டு வெளியே போய் வீரம் காட்ட கூடாது,.

அனைவருக்கும் நன்றி

*********************************************

அவர் பேசி முடித்ததும் , குறும்படம் குறித்த விவாதம் தொடங்கியது.

அதற்கு முன் யெஸ்டர்டே படத்தை குறித்தும் , விமர்சனங்கள் குறித்தும் அருண் பேசினார்.

கதை நிகழும் ஊரின் புவியியல் அமைப்பை காட்சி படித்தியது. ஆரஞ்சு பழத்தை வைத்து ஏழ்மையை காட்டியது போன்றவற்றை சொன்னார்.

மேலும் பேசுகையில்..

“ இந்த படம் நம்மை பாதித்தது.. ஆனால் அழ வைக்க முயற்சி செய்யவில்லை. நம் படங்கள் ரசிகனை அழ வைப்பதையே வெற்றி என நினைக்கின்றன. அதே போல நம் படங்களில் அதிகமாக ஷாட்களை குறைவான நேரத்தில் வைப்பதை திறமை என நினைக்கின்றன. யெஸ்டர்டே படத்தின் ஆரம்ப காட்சி போன்ற லாங்க் ஷாட், நீண்ட காட்சி , தமிழில் வந்ததே இல்லை “ என்றார்.

அதன் பின் விவாதம் நடந்தது.

ரத்த தானம் பற்றிய படம். பார்வையாளனுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்ததான்.. இயக்குனர் தோற்றுவிக்க நினைத்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்பட்டதா என அல்சப்பட்டது

ஆனால் விவாதம் சூடுபிடிக்க ஆரம்பிக்க , கொஞ்சம் திசை மாறியது.

கதானாயகனின் மதம் ,  அதன் நுண்ணரசியல் , ரத்த தானத்தில் இருக்கும் டெக்னிக்கல் விஷ்யங்கள்., அமெரிக்க கலாச்சாரம் , இந்திய கலாச்சாரம் என ஒரு மார்க்கமாக விவாதம் செல்லவே, நண்பர் துரோகி டென்ஷனாகி வெளி நடப்பு செய்து விட்டார்.

அவர் போயிருக்க தேவையில்லை என்பது என் கருத்து.

உணர்வுகளை பேச வேண்டிய விமர்சனத்தில் தகவல் பிழைகள் ,  நுண்ணரசியல் என பேசுவது தவறு என அவர் நினைத்து இருக்கலாம்.

ஆனால் ரசிகர்கள் என்றால் எல்லா வகையினரும்தான் இருப்பார்கள்.. எல்லோரயும்தான் இயக்குனர் திருப்தி செய்தாக வேண்டும். எல்லோரையும் திருப்தி செய்ய முடியாவிட்டாலும் , பெரும்பாலானோரை திருப்தி செய்தால்தான் படம் ஓடும்.

பிரியா போன்ற சில எலைட் ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்க முடியாது.



ஆக, சினிமாவை மட்டும் அல்ல..  பல வகை ரசிப்புத்தன்மையை உணரவும் இந்த  நிகழ்வு உதவியது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே..


இந்த இரு திரைப்படங்களைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]