Pages

Monday, March 3, 2014

தமிழ் கவிதைகளின் எதிர்காலம்? - கவிஞர் றியாஸ் குரானாவுடன் ஓர் உரையாடல்

  நவீன கவிதை காலாவதியாகி விட்டது என்ற கவிஞர் றியாஸ் குரானாவின்
கட்டுரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடன் ஓர் உரையாடல்.. உரையாடலுக்கு முன் அவர் கட்டுரையில் இருந்து ஒரு சிறிய பகுதி..
********************
பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது. அதனூடாக எதையும் காப்பாற்றிவிட்டு ஒரு செயலை முடிக்கிறது. அதாவது, தீப்பிடித்திருக்கும் மாடியில் சிக்கிய குழந்தையை மிக இலகுவாக காப்பாற்றிவிட பின்நவீனக் கவிதையால் முடிகிறது. இது எப்படி என்றால் குறித்த சம்பவத்தை பிரதிபலிக்காமல், அதற்கு நிகரான ஒரு சம்பவத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த உருவாக்கத்தில், எதார்த்தம் என நம்புவதற்கும் கற்பனைக்குமிடையிலான எல்லைக்கோட்டை அழித்துவிடுகிறது. அப்படி அழிக்கப்படும்போது ஒரே பிரதியில் எதார்த்தமும் கற்பனையும் சமமான அர்த்தத்தில் வசிப்பதாக மாற்றியமைக்கிறது. இப்படி மாற்றியமைப்பதினூடாக, அங்கே காப்பாற்றமுடியாது என்ற ஏக்கம் சிறிதும் இருப்பதில்லை. எதை எந்த வழிகளில் நிகழ்த்திக் காட்ட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் கையாள்கிறது. நெடிய வரலாற்றில் சரிசெய்ய முடியாமல் போராடிய வாழ்வை, வேறொரு தளத்தில் பிரதியில் நிகழ்த்திக்காட்டுகிறது. பின்நவீனத்துவத்தின் கவித்துவம் என்பது நிகழ்த்திக்காட்டுவதுதான். நவீனத் துவத்தின் கவித்துவம் பிரதிபலித்தல் என்பதை நிங்கள் அறிந்திருப்பீர்கள்.
நவீன கவிதையை காலாவதியாகச் செய்த கவிதையை 2004ம் ஆண்டு ரமேஸ் : பிரேம் இருவரும் இணைந்திருக்கும்போது அவர்களிடமிருந்தே வெளிப்பட்டது. அதுபோல சில கவிதைகளை அப்போது, அவர்கள் முயற்சித்திரந்தாலும் அந்த ஒரேயொரு கவிதையே நவீனத்திலிருந்து பின்நவீனத்திற்கு கவிதையை நகர்த்தும் முதலாவது கவிதையாக இருந்தது. எனினும். அதன் பிறகு அவர்களால்கூட நிகழ்திக்காட்டும் கவிதைகளைத் தொடரமுடியாமல் போய்விட்டது என்பது துரதிஸ்டவசமானதுதான்.
அந்தக் கவிதை இதுதான். தமிழின் முதலாவது பின்நவீன கவிதையாக (நிகழ்த்து கவிதை) நான் அடையாளம் கண்டது.
புத்துயிர்ப்பு
நெடிதுயர்ந்த கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருந்து அபயக்குரல்கள்
தலைக்குமேல் பறந்த காகம் ஒன்று
தீச்சுடரில் சிக்கிக்
கட்டிடத்தின் திறந்த வாய்க்குள் விழுகிறது.

பத்தாவது மாடியின் கண்ணாடிச்
சன்னலை உடைத்து
எரிந்து கொண்டிருக்கும்தாய்
குழந்தையை வெளியே வீசுகிறாள்
பறாச் சிறகுகளைச் சூடியஅ து
படபடக்கிறது அந்தரத்தில்.

சிறகுகளை குழந்தைக்கு முளைக்கச் செய்து காப்பாற்றிவிடுகிறது கவிதை. காப்பாற்ற முடியாத ஏக்கமாக மாறாமல், காப்பாற்றுதல் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறது.ஆயினும், 2010ம் ஆண்டிற்குப் பிறகே இந்த பின்நவீன நிகழ்த்து கவிதைகள் அதிகரிக்கத் தொடங்கின
****************************************

இனி உரையாடல்....

********************************

 ஒரு பார்வையில் பார்த்தால் , கவிதை எளிமை படுத்துவது தவறு என நீங்கள் வாதிடுவதாக தோன்றுகிறது


நவீன கவிதையை எப்படி கடக்கிறோம் என்பதை சொல்கிறேன். அதுபோல, கவிதை எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்பதையும் சொல்கிறேன். எளிமை என்பது வாசிப்பு பயிர்ச்சியை பொறுத்து உருவாகுவது. ஒரு தமிழ் பாட மாணவனுக்கு திருக்குறள் புதுக்கவிதையைவிட எளிமையானதுதான்.



நினைவு வைத்து கொள்ள எளிதான வடிவில் , சந்தத்தில் இலக்க்ண நூலான தொல்காப்பியத்தை எழுதினார்கள்...அது ஓர் அழகுதானே

அந்தத்தேவை இப்போது இருப்பவர்களுக்கு அதை பரிந்துரைப்போம். ஆனால், கவிதை ஒரு கற்பனையான சிந்தனை முறை என யோசிப்பவர்களுக்கு வேறு தேர்வு அவசியம்தானே


நவீன கவிதை காலாவதி ஆவது ஓகே..ஆனால் நவீன கவிதையின் எல்லா சாத்தியங்களையும் தமிழ் முயன்று பார்த்து விட்டு , பின் நவீனத்துவத்துக்கு தயாராகி விட்டதா? நாவலை பொறுத்தவரை , பின் நவீனத்துவத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்பது பலர் கருத்து

நாவல் சிறுகதை எல்லாம் மிக முந்தியே அதைச் செய்துவிட்டன. எதுவும் அதன் அனைத்துச் சாத்தியங்களையும் நிகழ்த்திவிட்ட பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஒருவகை எதிர்பார்ப்பு . ஆனால், அது அப்படியல்ல. எந்தக் கருத்துநிலையும் முழுமையாக செயற்படுத்தப்படுவதோ, முழுமையாக நிராகரிக்கப்படுவதோ இல்லை. அதன் முக்கியமாக சரடு கேள்விக்குள்ளாகும் புலத்திலிருந்து அது உடைத்துக்கொண்டு போய்விடுகிறது

பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்மாத்திரமே கருத்திற்கொள்கிறது- இதுதான் பின் நவீனத்துவத்தின் வரையறையா


நவீன கவிதை அதை எப்படிக் கடக்கிறது என்பதும், கடந்த நிலையில் அதற்கு என்ன பெயரிடுவது என்பதும் முக்கியமான ஒன்று. அதை பின்நவீன அம்சங்களோடு பொருத்தி பேசுவது என்பது ஒரு ஆரம்ப நிலை. இது பின்நவீனத்துவத்தின் கருததநிலையை முற்றாக எடுத்துக்கொள்வதல்ல. நவீனத்துவத்தின் தொடரச்சியுடன் கடந்து நிற்பது. நான் தௌவிவான ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பேன். தமிழின் பின்நவீன கவிதை என்று. ஆகவே, பின்நவீனம் என்ற கருத்தாக்கத்தை முற்றாக இங்கு கையேற்காமல், தமிழ் கவிதையின் தொடர்ச்சியை வாசிப்பதினுாடாக, நவீன கவிதையை எப்படிக் கடக்கிறது என்றுதான் முன்வைத்திருப்பேன்.

பின்நவீனத்துவம் வாழ்வை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என அறிவித்தது. - அப்படி என்றால் ஈழம் சார்ந்த லட்சியவாத கவிதைகள் எல்லாம்?



அவை குறித்து கட்டுரையில் பேசியிருக்கிறேன். இதற்கு முன்பும், கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை என்ற கட்டுரையிலும் பேசியிருக்கிறேன். அரசியலை தனித்துறையாகவே கவிதை பார்க்கிறது. அதற்கு கவிதை கடமைப்பட்டது என்ற எந்த பிடிவாதத்தையும் அது நிராகரித்துவிடும்.

ஈழ அரசியல் போன்றவற்றுக்கு இடம் இல்லையா?
அரசியல் ரீதியான பார்வைக்கு இங்கு பின்நவீனத்துவம் முக்கிய இடந்தருகிறது. சிறுபான்மைக் கதையாடலாக ஈழத்து அரசியல் நிலவரத்தை அனுகுகிறது. அதற்கான வாய்ப்பு அதற்குள் உண்டு.


விளிம்பு நிலை மக்களின் எழுத்துகள் , பெண்ணீய பார்வைகள் போன்றவை குறித்து ?


அவை குறித்து பேசியிருக்கிறேன். பின்நவீனம் தமிழைச் சந்தித்ததும் ஏற்பட்ட மாற்றங்கள். அரசியல் ரீதியிலான அதன் பயன்பாடே தமிழில் மேலெழுந்தது. விளிம்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள், சிறுகதையாடல்கள் என்பன மேல்நிலைக்கு வந்தன. அதன் வரவுதான், தலித் இலக்கியம், பெண் எழுத்துக்கள் என்பது முன்னிலைக்கு வரவேண்டிவந்தது. இது முற்றிலும் அரசியல் சார்ந்த பார்வையினுாடாக இலக்கியம் அனுகப்பட்டதற்கு உதாரணம். ஆனால், நான் சொல்வது, புனைவுசாரந்த செயல்களால் கவிதை நவீன வெளியிலிருந்து கடந்துவிடுவதைத்தான்.

மனிதனை மகத்தானவனா மாற்றுவதே கலை என்பதை பின் நவீனத்துவம் மறுக்கிறது என்கிறீர்களா


மனிதனை எந்த தத்துவங்களும், அறங்களும், கலைகளும் மகத்தானவனவர்களாக மாற்றவில்லை என்கிறது என உடனடியாகச் சொல்லலாம். இப்படிச் சொல்லுவதுதான் அனைவருக்கும் புரியவும்கூடும்.

அப்படி என்றால் கலைகளின் நோக்கம் அல்லது பணி என்ன
அனைத்திற்கும் நோக்கமும், பணியும் தேவை என்பது ஒரு மதம் சார்ந்த பார்வை. ஆனால், இந்தக் கேள்வியை தொடர்ச்சியாக கேட்டால் அமற்கு ஏதோவொரு வகையில் பதிலொன்றை உருவாக்கிவிட முடியும். கலை என்பது ஒருவகை மனிதச் செயல். அது நிகழ்த்தப்பட்ட பிறகு அதன் பயன் மற்றும் நோக்கம் குறித்து பல விசயங்களை உருவாக்கிவிட முடியும். ஏலவே நொக்கதையும் பயனையும் விளைவாக வைத்து செயற்பட்டால் அது கலையில்லை என்று மட்டும் தெளிவாக சொல்லலாம்.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]