Tuesday, September 13, 2022

தியாகராஜ பாகவதர் − திரிக்கப்பட்ட வரலாறு

 தியாகராஜ பாகவதர் – திரிக்கப்பட்ட வரலாறு

ஜனமேஜயன்


தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டவர்.. கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்து இறந்தார். பொருட்செல்வஆர்வமூட்டியதும் நிலையற்றது.. அருட்செல்வத்தை தேடுங்கள் என தொலைக்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொன்னது எனக்கு . அவர் எப்படி தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு வாழ்ந்தார். பிறகு ஏன் வறுமையில் வீழ்ந்தார். அவர் அருட்செல்வம் தேடவில்லையா என தகவல்களை திரட்டலானேன். அந்த கால பெரியவர்களை விசாரித்தேன். சில புத்தகங்கள் படித்தேன். கிடைத்த பதில்கள் ஆச்சர்யமூட்டின. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடுவதன் அபத்தம் புரிந்தது. 


பாகவதரைப்பற்றிய பெரும்பாலான நூல்கள் எங்காவது கேள்விப்பட்டதை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் , அவற்றில் உண்மையை அறிய முடியவில்லை. விந்தன் எழுதிய , தியாகராஜ பாகவதர் கதை எனும் நூல் நன்கு ஆய்வு செய்யப்பட்ட நூலாகும் . ஆனால் அதை முழுமையான நூலாக கருத இயலாது.. சிறிய புத்தகம்.


இந்த நிலையில்தான் bhagavathar his life and times என்ற புத்தகம் படித்தேன். எழுதியவர் சுரேஷ் பாலகிருஷ்ணன். இவர் ஒரு வழக்கறிஞராவார்.


குண்டூசி , நாரதர் , விகடன் , மெயில் , சினிமா உலகம் , டாக் அ டோன்  என அந்த கால பத்திரிக்கை செய்திகள் , பலரது சந்திப்பு , சுரேஷ் பாலகிருஷ்ணனின் தந்தையார் ஒரு ரசிகனான சேகரித்து வைத்திருந்த பேப்பர் கட்டிங் போன்ற பல ஆதாரங்களை வைத்து முழுமையான ஒரு வரலாற்றை கொடுத்து இருக்கிறார் நூலாசிரியர்.


தொட்டதெல்லாம் பொன்னாகி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் பாகவதர்.  இதில் பெரும்பாலும் எல்லோரும் ஒத்துப்போகிறார்கள் . ஆனால் பொய்குற்றச்சாட்டு ஒன்றில் அவர் சிறை சென்றதுடன் அவரது சாதனைகள் முடிந்து விட்டதாகவும் மக்கள் அவரை புறக்கணித்து விட்டதாகவும் , அவர் யாருமற்ற அனாதையாக வறுமையில் வாழ்ந்து மறைந்ததாகவும்தான் பெரும்பாலும் எழுதி இருக்கின்றனர். அதை உண்மை என நினைத்துதான் , அந்த டீவி பேச்சாளர் பேசி இருக்கிறார்.


ஆனால் உண்மை நிலை வேறு என்கிறது புத்தகம். 

அவர் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை ஆனதும் நடந்தவை குறித்து புத்தகம் விரிவாக பேசுகிறது , தகுந்த ஆதாரங்களுடன்.


அவர் நடிகர் மட்டும் அல்லர். கர்னாடக இசை வித்வானும்கூட. குறிப்பாக தமிழ் இசையில் ஆர்வம் கொண்ட கலைஞர். அந்த இசைப்பயணம் முன்பை விட மிகுந்த வரவேற்புடன் தொடர்ந்தது

வானொலியில் அவர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்போது , அதை கேட்க கூடும் மக்கள் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

சினிமாவில் நடிக்கக்கூட நேரம் இன்றி பொது நல சேவையிலும் , அருட்செல்வம் தேடுவதிலும் ஈடுபட்டார்

சிறைக்குப்பின் வெளியான ராஜமுக்தி அவரது பழைய படங்கள் போல மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய தோல்வியும் அல்ல. சுமாராக ஓடியது

அடுத்து வெளியான அமரகவி வெற்றி பெற்றது. ( ராஜமுக்திக்கு பதிலாக இந்த படம் வெளியாகி இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கும் என பத்திரிக்கைகள் எழுதியதாக , வரலாற்று சுவடுகள் தொடரில் தினத்தந்தி சமீபத்தில் குறிப்பிட்டது )

பாகவதரை விட தெலுங்கு நடிகர்களுக்கான பகுதி அதிகம் இருந்ததால் , ஷியாமளா படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் பாடல்கள் வரவேற்பு பெற தவறவில்லை

தயாரிப்பு , இயக்கம் , நடிப்பு என பல வேலைகளை இழுத்துபோட்டு செய்ததாலும் , பல பொதுப்பணிகளில் ஈடுபட்டதாலும் , பாகவதரால் முழு கவனம் செலுத்த முடியாத புது வாழ்வு திரைப்படம் தோல்வி அடைந்தது.

இந்த இரண்டு படங்களும் நல்ல படங்கள் அல்ல என்பதால் தோல்வி அடைந்தனவே தவிர பாகவதரை மக்கள் புறக்கணிக்கவில்லை. 

இறக்கும்போதுகூட பங்களா , கார் என வசதியாகவே இருந்தார். வறுமையில் வாடவில்லை. மற்றவர்களுக்கு உதவும் இடத்தில்தான் இருந்தார்.


இப்படி பல தகவல்களை தருகிறது புத்தகம். அம்பிகாபதி என்ற படம் சிவாஜி கணேசனை கதா நாயகனாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. அதில் சிவாஜியின் அதாவது அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க பாகவதரை அணுகினார்கள் . சிவாஜியை விட கூடுதல் சம்பளம் தருவதாக சொன்னார்கள். அதற்கு பதில் சொன்ன பாகவதர் “ சிவாஜியின் தந்தையாக நடிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இந்த படத்தில் வேண்டாம். நான் ஒரு படத்தில் அம்பிகாபதியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அப்பாவாக நடித்தால் ரசிகர்கள் மனம் புண்படும் , எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் ‘ என தேடி வந்த வாய்ப்பை கொள்கை ரீதியாக மறுத்தார் பாகவதர். 


இப்படி வாழ்ந்ததால்தான் , அவரும் கலைவாணர் என் எஸ் கேயும் சிறை சென்றபோது , திராவிட இயக்கம் அவர்கள் விடுதலைக்கு தீவிரமாக குரல் கொடுத்தது.


புரட்சி தலைவர் , இவரைப்பற்றி கூறும்போது..


ஒரு நிகழ்ச்சிக்கு பாகவதர் வந்தார்.  நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். அவர் வரும்போதே அவரைச்சுற்றி ஒளிவட்டம் சூழ்ந்து இருப்பது போல இருந்தது. அவருடன் பேச , கையெழுத்து வாங்க மக்கள் போட்டியிட்டனர். கொஞ்ச நேரத்தில் அவர் கிளம்பிவிட்டார்.  எத்தனையோ விளக்குகள் அங்கு ஒளிவிட்டாலும் , அவர் போனதும் அங்கு இருள்கப்பியது போல ஆகி விட்டது.

இப்படி சொல்கிறார் எம் ஜி ஆர்.


விகே ராமசாமி சொல்லும் ஒரு சுவையான சம்பவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.


 அந்த காலத்தில் உச்ச நடிகர்களாக இருந்தவர்கள் , பாகவதரும் பியு சின்னப்பாவும்தான். இருவருக்குக்குமே தீவிர ரசிகர்கள் பலர் உண்டு. இருவரையும் சேர்த்து நடிக்க வைத்தால் அந்த படம் பெரும் வெற்றி பெறும் என நினைத்து பலர் முயன்றனர். ஆனால் அது உருப்பெறவில்லை.


ஆனால் ஒரு பொது நண்பர் இருவரையும் சேர்த்து ஒரு நாடகம் நடத்த ஒப்புதல் பெற்று விட்டார். பவளக்கொடி என்பது நாடகத்தின் பெயர். பாகவதர் அர்ஜுனனாகவும் சின்னப்பா கிருஷ்ணராகவும் நடித்தனர்.


நாடகம் பார்க்க பயங்கர கூட்டம். இரு சிகரங்கள் இணைவதால் ஒரே பரபரப்பு. பலருக்கு இருக்கை கிடைக்காமல் அரங்குக்கு வெளியேயும் பயங்கர கூட்டம். அந்த இரு கலைஞர்களுக்குமே ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டும் என மனதுக்குள் ஓர் ஆரோக்கியமான போட்டி.


 நாடகம் ஆரம்பித்தது. பாகவதர் தனக்கே உரித்தான இனிய குரலில் பாடியபடி அறிமுகம் ஆகும் காட்சி. அரங்கில் பயங்கர கரகோஷம் . உற்சாகம் , ஒன்ஸ்மோர் கோரிக்கைகள். மகிழ்ச்சியுடன் அடுத்தடுத்த காட்சிகளில் நடித்தார் அவர்.


சற்று நேரத்தில் சின்னப்பா அறிமுகம் ஆகும் காட்சி.  தன் பாணியில் கணீர் என பாடியபடி மேடையில் தோன்றினார் சின்னப்பா. சுமாரான கரகோஷம்தான். அந்த அளவுக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனாலும் ஏமாற்றத்தைக்காட்டிக்கொள்ளாமல் நடித்தார் சின்னப்பா. எப்படியாவது தன் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.


ஒரு காட்சியில் அர்ஜுனன் இறந்து விடுவதாக நடிக்கிறான். கிருஷ்ணன் மோகினி வடிவெடுத்து , அவனை மடியில் போட்டு அழுவது போன்ற காட்சி.


சின்னப்பா , பாகவதரை மடியில் போட்டுக்கொண்டு , ஒரு ஒப்பாரி பாடலை இட்டுக்கட்டி , இசை நயத்துடன் பாட ஆரம்பித்தார். இப்படி க்ரியேட்டிவாக , அவ்வப்போது தோன்றுவதை பாடுவது அந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.


இவரது ஒப்பாரியை எதிர்பாராத பாகவதர் சற்று திகைத்துபோய் , யோவ் சின்னப்பா.. என்ன இது என முணுமுணுத்தார். ‘ கொஞ்சம் பேசாம இரும் ‘ என அவரை அடக்கிவிட்டி , ஒப்பாரியை தொடர்ந்தார் சின்னப்பா.


அந்த ஒப்பாரிக்கு மக்களிடம் பயங்கர வரவேற்பு. கைதட்டல் விண்ணைப்பிளந்தது. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்டு மீண்டும் மீண்டும் அவரை பாட வைத்தனர். சின்னப்பா என்றால் சின்னப்பாதான் என அனைவரையும் சொல்ல வைத்த மகிழ்ச்சி சின்னப்பாவுக்கு என்றால் சக கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டில் பாகவதர்க்கும் மகிழ்ச்சிதான். இந்த சம்பவம் இருவர்க்கும் இடையே நட்பு ஏற்படுத்தியது.


இப்படி சக கலைஞனுக்கு மட்டும் அல்ல. பழைய நினைவுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர் பாகவதர்.


ராண்டார் கை ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.


ஆல் இந்தியா ரேடியோவில் ஓர் இசை நிகழ்ச்சி. பாகவதர் பாடுவதற்காக செல்கிறார். ஓர் பக்க வாத்திய கலைஞரை பார்த்து அதிர்ச்சி. உடனே இவரை மாற்றுங்கள் . அப்போதுதான் பாடுவேன் என நிபந்தனை விதிக்கிறார். அனைவர்க்கும் குழப்பம். அந்த கலைஞர்க்கும் வருத்தம். ஒரு நிகழ்ச்சியும் வருமானமும் பறிபோகிறதே என வருத்ததுடன் கிளம்பிவிட்டார். பாகவதர் பாடி முடித்தவுடன் காரணம் சொன்னார். அந்த கலைஞரிடம அந்த காலத்தில் இசை கற்றேன். ஆகவே அவர் எனக்கு குரு போன்றவர். அவர் எனக்கு பக்கவாத்தியமாக இருப்பது மரியாதையாக இருக்காது என்பதாலேயே அவரை அனுப்ப சொன்னேன் என காரணம் சொன்ன பாகவதர் , அந்த குருவை சந்தித்து காரணம் சொல்லி விட்டு , தேவையான பணமும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.


இசை மேதை ராம நாதன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.


ஒரு நாள் இரவு இரண்டு மணி. என் கதவை தட்டினார் பாகவதர். காலை வானொலியில் ஓர் இசை நிகழ்ச்சி. உடனே இசை அமைத்து தாருங்கள் என்றார். நான் அப்போது ஆரம்ப நிலை கலைஞன். என்னைத்தேடி அவ்வளவு பெரிய திரை நட்சத்திரம் அந்த நேரத்தில் வந்தது ஆச்சர்யமாக இருந்தது . நான் இசை அமைத்து கொடுத்தேன். சில மணி நேரங்களில் அதை கற்றுக்கொண்டு , சிறப்பாக பாடி முடித்தார் பாகவதர்.


இப்படி சொல்கிறார் அவர்.இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.


ஆனால் நாம் காணும் வரலாற்றில் திரித்தல்கள்தான் அதிகம்.


ஆக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் ஆஃப் இந்தியன் தியேட்டர் (2004 ) என்ற புத்தகத்தில் , பாகவதர் முறைப்படியான படிப்போ , இசைப்பயிற்சியோ இல்லாமல் , முயற்சியால் முன்னேறியவர் என டெம்ப்ளேட்டாக எல்லோரையும் பாராட்டுவது போல பாராட்டி எழுதியுள்ளனர். ஆனால் பாகவதர் முறைப்படியான பயிற்சி பெற்ற கர்னாடக இசை வித்வான் ஆவார். அதுபோல அவர் நாடக நடிகருமாவார். இவற்றை பலர் குறிப்பிடுவதில்லை. ஒரு சினிமா நடிகர் என மட்டுமே நினைக்கிறார்கள்.


உதவும் பண்பு , கற்கும் ஆர்வம் , காண்போரை கவரும் அழகு , தோல்வியில் கலங்காத திடச்சிந்தை என வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் பாகவதர். நல்லோரை காணலும் நல்லது , நல்லோரைப்பற்றி பேசலும் நன்று.


இவரைபோன்ற நல்லோரின் உண்மை வரலாற்றை தேடிப்படிப்பது நமக்கு , நம் மனதுக்கு , நம் வாழ்க்கைக்கு நல்லது. பொய் சுலபமாக கிடைக்கும், உண்மை தேடினால்தான் கிடைக்கும். தேடல் இருக்கும்வரை வாழ்வில் பசி  இருக்கும். பசித்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்வில் சுவை இருக்கும்.


2 comments:

  1. Interesting read!! /பொய் சுலபமாக கிடைக்கும், உண்மை தேடினால்தான் கிடைக்கும். தேடல் இருக்கும்வரை வாழ்வில் பசி இருக்கும். பசித்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்வில் சுவை இருக்கும்/
    மிகச் சரி!!

    ReplyDelete
  2. Really very happy to know the truth about MKT. My mother used to tell us about MKT, his glorious appearance, his horse riding in Tiruchi streets etc... How the so called historians have damaged his image by writing fictional things about his last days. Some people like you has taken efforts in publishing the truth . Kudos to you Sir.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா