Saturday, September 17, 2022

ஜெயமோகனும் சாருவும் கனிந்து விட்டார்களா?

 சாரு   கனிந்து  விட்டார்   ஜெயமோகன்   கனிந்து  விட்டார்  என  ஒரு வித  எதிர்மறைத்  தொனியில்   சிலர்  விஷ்ணுபுரம்   விருதை  முன்வைத்து  பேசுவதைக்  காண  முடிகிறது

      மனம்  கனிந்து  அதில்  அன்பு  நிறைந்திருந்தால்தான்  ஒருவன் எழுதவே முடியும்.  எனவே  ஆரம்பத்திலேயே  இருவரும்  பக்குவப்பட்ட  கனிந்த  நிலையில்தான்  இருந்திருக்கிறார்கள்

   ஜெயமோகனுக்கும்  சாருவுக்கும்  ஆகாது  ,   பரம்பரை  வைரிகள்  என்பவையெல்லாம்   பாமரத்தனமானவை

சில  ஆண்டுகள் முன் 

சாருவின்  நண்பரும்  எழுத்தாளருமான அராத்து  நூல்  வெளியீட்டில்  எடந்த, தயக்கங்களும்  இன்றி  கலந்து  கொண்டார்

அந்த நிகழ்வில்,,ஜெ  ஆற்றிய, உரையின் யூட்யூப் வீடியோ  இன்றளவும்  வெகுவாக பார்வையிடப்படுகிறது.    அது  தனியாகவே  நூல்  வடிவம் பெறத்தக்கது

அதில் ஜெயமோகனும்  சாருவும்  ஒருவர்மீது ஒருவர்  காட்டிய  அன்பும்  நெருக்கமும்  ஆச்சர்யம்  அளித்தது


      ஜெயமோகனை   தாழ்த்திப் பேசினால்  சாருவிடம் நெருக்கமாகிவிடலாம்  என  நினைத்த  ஒருவர்  ஜெயமோகனைப்பற்றி கேலியாக  சாருவிடம்  கேள்வி  கேட்டார்

    தன்னைக்  கேலி  செய்தால்கூட  லேசாக எடுத்துக் கொள்ளும்  சாரு  , ஜெயை கேலி  செய்தவரை  படு  ஆவேசமாக  வறுத்தெடுத்து விட்டார்

    ரத்தம்  சிந்தி  கையொடிய   அவர்  எழுதிய  விஷ்ணுபுரத்தைப்  படித்து விட்டு  அதைப் பற்றி  ஏதாவது  பேசு  . நான்  இலக்கியரீதியாக விமர்சிப்பது  வேறு.   அதற்காக  வருபவன்  போவனெல்லாம்  அவரை   தாழ்த்திப்  பேசினால்   நடப்பதே  வேறு  என  வெகு  கடுமையாகப்  பேசி  அவரை  நட்பு  வட்டத்தில்  இருந்து  வெளியேற்றினார்

       பத்து  ஆண்டுகளுக்கு  முந்தைய  சம்பவம்  இது.   மனம்  கனிந்த ( !?) தற்போதைய  சாரு  அல்ல

         ஒரு முறை  ஞாநி  சாருவை  மேடையில்  வைத்துக்  கொண்டே ,  அவரது சில  எழுத்துகள்  பிறரால் எழுதப்பட்டவை  என்கிறார்களே  என  இலக்கிய   வரம்புக்கு  அப்பாற்பட்ட  கேள்வி  எழுப்பினார

" ஜெயமோகன்  இதுபோன்ற   தாக்குதல்களை  ஒரு  போதும்  நிகழ்த்தியல்ல



      (  அந்தக்  குற்றச்சாட்டை  ஒரு  காலத்தில்  வைத்தவர் , தான்  அப்படி  சொல்லவே  இல்லை  என  சமீபத்தில்  பேசி, அதை முடித்து வைத்தது  வேறு விஷயம் )

       நான்  சம்பந்தப்பட்ட  ஒரு  நிகழ்வு

சாரு  வாசகர்  வட்ட  நிகழ்வில்  ஒரு தனிப்பட்ட  உரையாடலில்  சாரு  இசை  குறித்தும்  லத்தீன்  அமெரிக்க சினிமா குறித்தும் சில  விஷயங்கள்  சொன்னார்.  அப்போது  ஸ்மார்ட்  போன்கள்  கிடையாது.   எனவே  யாராவது  இதை குறிப்பெடுத்து  வைத்துக்  கொண்டு பிறகு  நினைவு  படுத்துங்கள்  எனறார்  என்னிடம்  பேப்பர்  பேனா  எப்போதும்  இருக்கும்  என்பதால்  நான் அனைத்தையும்  குறிப்பெடுத்தேன்

இரண்டு  நாட்கள்  கழித்து  அதை  டைப் செய்து  அவருக்கு  அனுப்பினேன்.

Dear  charu   , with  reference  to  our  discussion ,என்றெல்லாம்  விளக்காமல்  அவர்  பேசியதை மட்டும் அனுப்பினேன்

    அவர்  எனக்கு  பதில்  அனுப்பினார்;

அன்புள்ள  பிச்சை 

   உங்களது  கட்டுரை  அபாரம்.   உங்கள்  பெயரை  குறிப்பிட்டு , இதை  எனது  கட்டுரையில்  பயன்படுத்திக்  கொள்ள  அனுமதிப்பீர்களா

    அன்புடன்  சாரு


இதைப் படித்து  அதிர்ந்து போய் அவரிடம்  சொன்னேன்    இது  எனது  படைப்பு  அல்ல.   முழுக்க  முழுக்க உங்கள்  சிந்தனை  அது   நான்  சும்மா  குறிப்பு  எடுத்தேன்  என்றேன்

        இப்படி சின்ன  சின்ன  செயலில்கூட  நுட்பமாக  பெருந்தன்மையாக  நடந்து  கொள்பவர்  அவர்

        அவரது  எழுத்துகள்  அனைத்துமே  இந்த  சென்சிப்ளிட்டியைத்தான்  பேசுகின்றன

         அவர்  எழுத்துக்கும்  பேச்சுக்கும்  வாழ்க்கைக்கும்  எந்த  வேறுபாடும்  இருப்பதில்லை

    எழுத்து  எனும்  வேள்வியில்  தன்னையே  அர்ப்பணித்துக்கொள்பவர்  அவர்    கற்பனையான  ஒரு  ஃபேண்டசி  உலகை  அவர்  சமைப்பதில்லை

    ரத்தமும்  சதையும்  கண்ணீரும்  காதலும்  காமமும்   உண்மை  வாழ்வில் உள்ளபடியேதான்  நுரைத்துப்   பொங்கும்;

         வெண்முரசு   போன்ற  ஒரு  நாவலை  படைக்க  வேண்டியதில்லை

, ஒளரங்ஸேப்   நாவலைத்தான்   அவர்  படைக்க  முடியும்   அதுதான்   இலக்கியத்துக்குதேவை   அதற்காகத்தான்   இயற்கை  அவரை  உலகுக்கு  அனுப்பியுள்ளது

        அவர் எழுத்து  வேறு  வகையானது  என்பதைத்தான்  ஜெயமோகன்  அன்றும்  சொன்னார்  இன்றும்   சொல்கிறார்   நாளையும்   சொல்வார்

     திடீரென  கனிந்து போய்  தன்  மதிப்பீடுகளை  ஜெ மாற்றிக்  கொள்ளவில்லை

ஜீரோ  டிகிரி  வெளிவந்தபோது  அதை  மலம்  என  சுஜாதா  போன்றோர்  திட்டியபோது  அதற்கு  ஆதரவாக  இருந்து  அங்கீகாரம் அளித்த  ஜெ ( பாராட்டிப் பேசிய இன்னொருவர்  இ பா ) அந்த  அங்கீகாரத்தை  தற்போது வேறு  வடிவில்  காட்டுகிறார்   அவ்வளவுதான்


பெர்ப்யூம்களை  எப்படி  தேர்வு  செய்கிறேன்  என  சாரு  பல   சந்தர்ப்பங்களில்  எழுதி  இருப்பார்.

ஒரு முறை  மலம் நிறைந்த  வாளி  தன் மீது  அப்படியே கொட்டி விட்டதையும்  எழுதியிருப்பார்

       நிகழ்வுகளை  புனைவு  போன்ற  சுவாரஸ்யத்துடன்  புனைவை  உண்மை  நிகழ்வு  போன்ற  பாவனையுடன் எழுதி  புனைவு  அபுனைவு  எல்லைகளை  தொடர்ந்து  அழித்து  வரும் எழுத்து  அவரது

     மீன்கார  பாட்டி , துப்புரவுத  தொழிலாளர்கள்  ,  பிழைப்புக்காக  திருடக்கூடிய  சிறு  திருடர்கள் , பாலியல்  தொழிலில்  தள்ளப்பட்ட  அபலைகள்  போன்ற   விளிம்பு  நிலை  மக்களை  அவர்  எழுத்து   தொடர்ந்து  பேசி வருகிறது

உயர்தர  உணவுகள்  கேளிக்கை  விடுதிகள்  என  கொண்டாட்டங்களையும்  பேசுகிறது

        சாரு  எழுத்தை  படிக்கும்  ஒருவன்  யாரிடமும்  போய் ,   சட்டை  என்ன  விலை  கால்  பிறக்கும்பாதே  இப்படியா  அல்லது  விபத்தா   ..   என்றெல்லாம்  கேட்க  மாட்டான்      பூக்கார கிழவியிடம்  பேரம்  பேச  மாட்டான்      தெரியாமல்  இடித்துவிட்ட  பெண்ணிடம்  மீண்டும்  மீண்டும்  மன்னிப்புக்  கேட்டு  அவளை சங்கடப்படுத்த மாட்டான்

        முதல்  நாவலான  ஜீரோ டிகிரியில்  அப்பா  மகள்   பந்தத்தை  சொல்லி  , தொடரந்து  அன்பை  தன்  எழுத்துகளில்  வரும்  சாருவுக்கு  சமரசமற்ற மதிப்பீடுகள்  கொண்ட  ஜெயமோகன்  விருது  வழங்குவது  மிகவும்  மகிழ்ச்சிக்குரியது

          





Friday, September 16, 2022

பஞ்சாங்கம் இன்றி சிறுகதை எழுதாதீர்கள் − மாலன் சுவாரஸ்ய உரை

 

சிறுகதைப் பட்டறை முதல் பகுதி

    அதன் பிறகு  மாலன்  அதிரடியாகத்  தன்  பேச்சை  ஆரம்பித்தார் 


பாரதியார்  போன்ற  ஆளுமைகளால்  வளர்ந்த  சிறுகதை  இலக்கியம்  இன்று  மிகவும்  அவசியமான   ஒன்றாக  உருவாகியுள்ளது.


எனவே  இந்த  சிறுகதைப்பட்டறை   வரவேற்புக்குரியது.   ஆனால்  பட்டறை  என்ற   சொல் சரியாகத்   தோன்றவில்லை   சிறுகதைப்  பயிலரங்கு என்பது  சரியாக  இருக்கும்


ஒருமுறை  கதை  என்றால்  என்ன  என்பதற்கு  எழுத்தாளர் கல்கி  நகைச்சுவையாக  ஒரு  உதாரணம்  சொன்னார்


ஒருவன்  பட்டுக்கோட்டைக்கு  வழி  கேட்டானாம்   கொட்டப்பாக்கு  காசுக்கு எட்டு என்றானாம்  பதில்  சொன்னவன்


இது சிறுகதையா?


பஞ்சாங்கம்  இல்லாமல்  சிறுகதை  எழுதமுடியாது

எனன  பஞ்சாங்கம்


ஐந்து  அம்சங்கள்;

1  முதன்மைப்  பாத்திரம்.   (  நல்லவன்  என்பது  இல்லை)


2  எதிர்  பாத்திரம்  ( கெட்டவனாக  இருக்க  வேண்டியதில்லை) 


3 கதை  நிகழும்  களம்    .  சூழல்;

4  மையப்புள்ளி     plot

5 ஒரு  திருப்பம்  


கல்கி  சொன்ன உதாரணத்தில்  இவை  இருப்பதை  கவனியுங்கள்

ஊருக்கு செல்ல  விரும்பும்  முதன்மை  பாத்திரம்.  சம்பவம்  நிகழும்  களம் ,  ஒரு நகைச்சுவையான  திருப்பம் என  வந்து  விட்டது  அல்லவா


     ஹிப்பி  ஒருவன்  ஒற்றைச்செருப்பு  அணிந்து  நடந்து  கொண்டிருந்தான்


என்னாச்சுப்பா ?  இன்னொரு  செருப்பு  தொலைஞ்சுருச்சா  என  கேட்டார்  வழிப்போக்கர்


   ஒண்ணுதாங்க  கிடைச்சது  என்றான்  அவன்


இந்த  எதிர்பாராத  பதில் ,   முதன்மை  பாத்திரமான  ஹிப்பி குறித்த  பார்வை ,  களம் ,  மையப்புள்ளி என அனைத்தும் இதை ஒரு கதை  ஆக்குகிறது


  கதைக்கு ஆரம்பம்  வெகு  முக்கியம்;

உதாரணமாக  எம்  எஸ்  கல்யாணசுந்தரம் எழுதிய  தபால்கார  அப்துல்காதர்  சிறுகதையின்  ஆரம்ப  வரிகளைக்  கவனியுங்கள்


சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ‘ என்று விசாரித்தார்.


‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் ‘ என்றேன்.


தபால்கார  அப்துல்  காதர்  என்ற  கேரக்டர்  மீது  எப்படி  ஆர்வத்தை  ஏற்படுத்தி  மேற்கொண்டு  படிக்க  வைக்கிறார்  என்பது  கவனிக்க வேண்டியது


தமிழ்ச்சிறுகதை  வரலாற்றில்  முத்திரை  பதித்த  இன்னொரு  அற்புதமான  ஆரம்பம்


அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க..(  காஞ்சனை  −  புதுமைப்  பித்தன்)

(  பிச்சையின்  பின்குறிப்பு.   இந்த  ஆரம்ப  வரி்களுக்கு  ஏற்ப   சிறுகதை  ஒன்றை  எழுதச்செய்து ,  சுஜாதா  ராஜேஷ்குமார்  போன்ற பிரபலங்களிடம்  கதை  எழுதி  வாங்கி பிரசுரித்தது  அன்றைய  குமுதம்  வார இதழ்)


மறக்க  முடியாத  இன்னொரு  துவக்கம்


அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்

இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.


”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். 

(  காலமும்  ஐந்து  குழந்தைகளும்   அசோகமித்திரன் )


அதேமாதிரி  முடிவும்  பளீர்  என  இருக்க வேண்டும்


உதாரணம்  பாருங்கள்   மறக்கவே  முடியாத  இறுதி  வரிகள்

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!   (  புதுமைப்பித்தன்)


இப்படி  ஆரம்பமும்  முடிவும்  அமைந்துவிட்டால்   கதைக்கான,,நடை  அதுவாகவே  இயல்பாக  அமைந்து விடும்;

எழுதுபவன்  வாசகனுடன்  நேரடியாகப்  பேசுவது  கவிதை

எழுதுபவன்  தனது  பாத்திரங்களுடன்  உரையாடுவது  சிறுகதை

பாத்திரங்கள்  பார்வையாளனுடன்  பேசுவது  நாடகம்

இந்தத் தெளிவு முக்கியம்;

கதையை  சொல்லாதீர்கள்   கதையை  வாசகன்  முன்  நிகழ்த்திக்காட்டுங்கள்

ஏன்  என கேட்டன   மரபான   கதைகள்

(ஏன்  இத்தனை  துயர்கள்  என்பது  போன்ற  ஒரு விக்டிம்  கோணத்தில்)


ஏன்  கூடாது  என  திமிறுகின்றன  நவீன கதைகள்  (  இந்த  விதிகயை  மரபுகளை  ஏன்  உடைக்க்ககூடாது  என்பது  போல)

இந்தப்போக்குகளை  உள்வாங்க  வேண்டும்


ஒரு  உண்மை  சம்பவம்  கூறி  முடிக்கிறேன்  இதை  யாரேனும்  சிறுகதை  ஆக்குங்கள்  (  பிச்சையின்  பிகு   .   நான் எழுத  நினைத்தேன்  சூழல் அனுமதிக்கவில்லை)


ஒரு  சிறிய  இடைவெளிக்குப்பின்  என்  சொந்த  கிராமத்துக்கு சென்றிருந்தேன்.  ஊரே  அல்லோலகல்லோலப்  பட்டுக்  கொண்டிருந்தது


பதட்டமாக  இருந்த   அம்மாவிடம்  விசாரித்தேன்

நம்ம  ஊருல  வெள்ளம்  வந்துருச்சுப்பா  பக்கத்து  ஊருல பாதிப்பு  அதுதான்  ஹெல்ப்  பண்ண  போறோம்  என்றார்


வறட்சிக்குப்  புகழ் பெற்ற  நம்ம  ஊர்ல  வெள்ளமா  என   நம்ப  முடியாமல்  கேட்டேன்


மழை  வெள்ளமல்ல   அணையில்  உடைப்பு  ஏற்பட்டதால்  வெள்ளம்  என்றார்


சம்பவ  இடத்துக்கு  விரைந்தோம்


அந்த  கிராமம்  வெள்ளத்தால் முழுமையாக துண்டிக்கப்பட்டு  தீவு  போல  இருந்தது  .   உதவிப்பொருட்கள்  அவர்களை  அடைய  வழியே  இல்லை

  அப்போது   ராமகிருஷ்ண  மடத்தின்  இரு  துறவிகள்  துணிச்சலாக  ஒரு  முடிவுக்கு  வந்தனர்  மரத்தில்  ஒரு   கயிறைக்கட்டிவிட்டு   எதிர்  கரைக்கு  நீச்சலடித்து  சென்று   அங்கே  எதிர்முனையைக்கட்டினர்    அந்த  கயிற்றின்  வழியாக  இருவரும்  மாறி மாறி  பயணித்து  உதவிப்  பொருட்களை கொண்டுபோய்  சேர்த்தனர்

சற்றும்   ஓய்வற்ற  பணி   இதைக்கண்டு  பிறரும்  தைரியம்  பெற்று உதவிக்கு  வந்தனர்

மாலை வரை  பணி நடந்தது.   நீங்கள்  இல்லாவிட்டால்   நாங்களும்  குழந்தைகளும்  பசியால்  துவண்டிருப்போம்  என  துறவிகள்   கையைப்பிடித்து   கண்ணீர்  மல்க  நன்றி சொன்னார்கள்  கிராமத்தினர்

வெள்ளம்  வடிந்து  விட்டது  இனி  பயமில்லை  என  புன்னகையுடன் ஆறுதலாக  சொல்லிவிட்டுக் கிளம்பினர்  துறவியர்

      சற்று  தொலைவு  சென்றதும்  ஒரு  துறவி மற்றவரிடம்  பலவீனமாக  சொல்வது  எனக்கு  மட்டும்  கேட்டது

"  ஒரே பசி  மயக்கம்.  போயி ,  கொஞ்சமாவது  சாப்பிடணும்"

    ஓர்  ஊரின்  பசியையே   ஆற்றிய  இருவரும் அதுவரை ஒரு,  வாய் உணவுகூட  எடுத்துக்  கொள்ளவில்லை என்ற  உண்மை  உறைத்து ,  அதிர்ந்து  போய்  நின்றேன்

−−−

அதன்பின்  கேள்விகளுக்கு  எழுத்தாளர்கள்  பதிலளித்தனர்.  உணவு வழங்கலுடன்  நிகழ்வு   நிறைவுற்றது.   பங்கேற்பு   சான்றிதழ்  வழங்கப்பட்டது

............


வித்யா  சுப்ரமணியம்  குறிப்பிட்ட  உணர்வுப்பூர்வ   நிகழ்வு


என்  சிறுகதை  ஒன்று  பரிசுகளையும்  பாராட்டுகளையும் பெற்றது   அது  கற்பனைக்கதை  அல்ல   உண்மை  நிகழ்வு


என் கணவருக்கு  மதுப்பழக்கம் இருந்தது.   இதை  தொடர்ந்தால்  உயிருக்கே  ஆபத்து  என்ற   மருத்துவர்  எச்சரிக்கையை  அவர்  பொருட்படுத்தவில்லை

     ஒரு  நாள்  என்  வீட்டிலிருந்து  போன் வந்தது ,   என்  கணவர்  இறந்து  விட்டதாக .   இல்லத்திலேயே  மரணமாம்


  இதைக்கேட்டு  கலங்கிப்போய்  இருக்க வேண்டிய  நான்  ஒரு, வகை  மகிழ்ச்சி  அடைந்தேன்

அவர்  மரணம் எதிர்பார்த்த  ஒன்று   சாலையிலோ  பொது  இடங்களிலோ  அது  நடந்து  விடுமோ  என்பதுதான்  என்  பயமாக  இருந்தது.   இல்லத்திலேயே  இறப்பு  என்பது   நல்லதுதான்  என  தோன்றியது   இந்த  உணர்வை   இதில்  இருக்கும்  அவலத்தை  கதை  ஆக்கினேன்



Tuesday, September 13, 2022

தியாகராஜ பாகவதர் − திரிக்கப்பட்ட வரலாறு

 தியாகராஜ பாகவதர் – திரிக்கப்பட்ட வரலாறு

ஜனமேஜயன்


தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் சாப்பிட்டவர்.. கடைசி காலத்தில் வறுமையில் வாழ்ந்து இறந்தார். பொருட்செல்வஆர்வமூட்டியதும் நிலையற்றது.. அருட்செல்வத்தை தேடுங்கள் என தொலைக்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொன்னது எனக்கு . அவர் எப்படி தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு வாழ்ந்தார். பிறகு ஏன் வறுமையில் வீழ்ந்தார். அவர் அருட்செல்வம் தேடவில்லையா என தகவல்களை திரட்டலானேன். அந்த கால பெரியவர்களை விசாரித்தேன். சில புத்தகங்கள் படித்தேன். கிடைத்த பதில்கள் ஆச்சர்யமூட்டின. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகி விடுவதன் அபத்தம் புரிந்தது. 


பாகவதரைப்பற்றிய பெரும்பாலான நூல்கள் எங்காவது கேள்விப்பட்டதை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் , அவற்றில் உண்மையை அறிய முடியவில்லை. விந்தன் எழுதிய , தியாகராஜ பாகவதர் கதை எனும் நூல் நன்கு ஆய்வு செய்யப்பட்ட நூலாகும் . ஆனால் அதை முழுமையான நூலாக கருத இயலாது.. சிறிய புத்தகம்.


இந்த நிலையில்தான் bhagavathar his life and times என்ற புத்தகம் படித்தேன். எழுதியவர் சுரேஷ் பாலகிருஷ்ணன். இவர் ஒரு வழக்கறிஞராவார்.


குண்டூசி , நாரதர் , விகடன் , மெயில் , சினிமா உலகம் , டாக் அ டோன்  என அந்த கால பத்திரிக்கை செய்திகள் , பலரது சந்திப்பு , சுரேஷ் பாலகிருஷ்ணனின் தந்தையார் ஒரு ரசிகனான சேகரித்து வைத்திருந்த பேப்பர் கட்டிங் போன்ற பல ஆதாரங்களை வைத்து முழுமையான ஒரு வரலாற்றை கொடுத்து இருக்கிறார் நூலாசிரியர்.


தொட்டதெல்லாம் பொன்னாகி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தவர் பாகவதர்.  இதில் பெரும்பாலும் எல்லோரும் ஒத்துப்போகிறார்கள் . ஆனால் பொய்குற்றச்சாட்டு ஒன்றில் அவர் சிறை சென்றதுடன் அவரது சாதனைகள் முடிந்து விட்டதாகவும் மக்கள் அவரை புறக்கணித்து விட்டதாகவும் , அவர் யாருமற்ற அனாதையாக வறுமையில் வாழ்ந்து மறைந்ததாகவும்தான் பெரும்பாலும் எழுதி இருக்கின்றனர். அதை உண்மை என நினைத்துதான் , அந்த டீவி பேச்சாளர் பேசி இருக்கிறார்.


ஆனால் உண்மை நிலை வேறு என்கிறது புத்தகம். 

அவர் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை ஆனதும் நடந்தவை குறித்து புத்தகம் விரிவாக பேசுகிறது , தகுந்த ஆதாரங்களுடன்.


அவர் நடிகர் மட்டும் அல்லர். கர்னாடக இசை வித்வானும்கூட. குறிப்பாக தமிழ் இசையில் ஆர்வம் கொண்ட கலைஞர். அந்த இசைப்பயணம் முன்பை விட மிகுந்த வரவேற்புடன் தொடர்ந்தது

வானொலியில் அவர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும்போது , அதை கேட்க கூடும் மக்கள் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

சினிமாவில் நடிக்கக்கூட நேரம் இன்றி பொது நல சேவையிலும் , அருட்செல்வம் தேடுவதிலும் ஈடுபட்டார்

சிறைக்குப்பின் வெளியான ராஜமுக்தி அவரது பழைய படங்கள் போல மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் பெரிய தோல்வியும் அல்ல. சுமாராக ஓடியது

அடுத்து வெளியான அமரகவி வெற்றி பெற்றது. ( ராஜமுக்திக்கு பதிலாக இந்த படம் வெளியாகி இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்து இருக்கும் என பத்திரிக்கைகள் எழுதியதாக , வரலாற்று சுவடுகள் தொடரில் தினத்தந்தி சமீபத்தில் குறிப்பிட்டது )

பாகவதரை விட தெலுங்கு நடிகர்களுக்கான பகுதி அதிகம் இருந்ததால் , ஷியாமளா படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் பாடல்கள் வரவேற்பு பெற தவறவில்லை

தயாரிப்பு , இயக்கம் , நடிப்பு என பல வேலைகளை இழுத்துபோட்டு செய்ததாலும் , பல பொதுப்பணிகளில் ஈடுபட்டதாலும் , பாகவதரால் முழு கவனம் செலுத்த முடியாத புது வாழ்வு திரைப்படம் தோல்வி அடைந்தது.

இந்த இரண்டு படங்களும் நல்ல படங்கள் அல்ல என்பதால் தோல்வி அடைந்தனவே தவிர பாகவதரை மக்கள் புறக்கணிக்கவில்லை. 

இறக்கும்போதுகூட பங்களா , கார் என வசதியாகவே இருந்தார். வறுமையில் வாடவில்லை. மற்றவர்களுக்கு உதவும் இடத்தில்தான் இருந்தார்.


இப்படி பல தகவல்களை தருகிறது புத்தகம். அம்பிகாபதி என்ற படம் சிவாஜி கணேசனை கதா நாயகனாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. அதில் சிவாஜியின் அதாவது அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க பாகவதரை அணுகினார்கள் . சிவாஜியை விட கூடுதல் சம்பளம் தருவதாக சொன்னார்கள். அதற்கு பதில் சொன்ன பாகவதர் “ சிவாஜியின் தந்தையாக நடிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இந்த படத்தில் வேண்டாம். நான் ஒரு படத்தில் அம்பிகாபதியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அப்பாவாக நடித்தால் ரசிகர்கள் மனம் புண்படும் , எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் ‘ என தேடி வந்த வாய்ப்பை கொள்கை ரீதியாக மறுத்தார் பாகவதர். 


இப்படி வாழ்ந்ததால்தான் , அவரும் கலைவாணர் என் எஸ் கேயும் சிறை சென்றபோது , திராவிட இயக்கம் அவர்கள் விடுதலைக்கு தீவிரமாக குரல் கொடுத்தது.


புரட்சி தலைவர் , இவரைப்பற்றி கூறும்போது..


ஒரு நிகழ்ச்சிக்கு பாகவதர் வந்தார்.  நான் கவனித்துக்கொண்டு இருந்தேன். அவர் வரும்போதே அவரைச்சுற்றி ஒளிவட்டம் சூழ்ந்து இருப்பது போல இருந்தது. அவருடன் பேச , கையெழுத்து வாங்க மக்கள் போட்டியிட்டனர். கொஞ்ச நேரத்தில் அவர் கிளம்பிவிட்டார்.  எத்தனையோ விளக்குகள் அங்கு ஒளிவிட்டாலும் , அவர் போனதும் அங்கு இருள்கப்பியது போல ஆகி விட்டது.

இப்படி சொல்கிறார் எம் ஜி ஆர்.


விகே ராமசாமி சொல்லும் ஒரு சுவையான சம்பவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.


 அந்த காலத்தில் உச்ச நடிகர்களாக இருந்தவர்கள் , பாகவதரும் பியு சின்னப்பாவும்தான். இருவருக்குக்குமே தீவிர ரசிகர்கள் பலர் உண்டு. இருவரையும் சேர்த்து நடிக்க வைத்தால் அந்த படம் பெரும் வெற்றி பெறும் என நினைத்து பலர் முயன்றனர். ஆனால் அது உருப்பெறவில்லை.


ஆனால் ஒரு பொது நண்பர் இருவரையும் சேர்த்து ஒரு நாடகம் நடத்த ஒப்புதல் பெற்று விட்டார். பவளக்கொடி என்பது நாடகத்தின் பெயர். பாகவதர் அர்ஜுனனாகவும் சின்னப்பா கிருஷ்ணராகவும் நடித்தனர்.


நாடகம் பார்க்க பயங்கர கூட்டம். இரு சிகரங்கள் இணைவதால் ஒரே பரபரப்பு. பலருக்கு இருக்கை கிடைக்காமல் அரங்குக்கு வெளியேயும் பயங்கர கூட்டம். அந்த இரு கலைஞர்களுக்குமே ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டும் என மனதுக்குள் ஓர் ஆரோக்கியமான போட்டி.


 நாடகம் ஆரம்பித்தது. பாகவதர் தனக்கே உரித்தான இனிய குரலில் பாடியபடி அறிமுகம் ஆகும் காட்சி. அரங்கில் பயங்கர கரகோஷம் . உற்சாகம் , ஒன்ஸ்மோர் கோரிக்கைகள். மகிழ்ச்சியுடன் அடுத்தடுத்த காட்சிகளில் நடித்தார் அவர்.


சற்று நேரத்தில் சின்னப்பா அறிமுகம் ஆகும் காட்சி.  தன் பாணியில் கணீர் என பாடியபடி மேடையில் தோன்றினார் சின்னப்பா. சுமாரான கரகோஷம்தான். அந்த அளவுக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனாலும் ஏமாற்றத்தைக்காட்டிக்கொள்ளாமல் நடித்தார் சின்னப்பா. எப்படியாவது தன் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.


ஒரு காட்சியில் அர்ஜுனன் இறந்து விடுவதாக நடிக்கிறான். கிருஷ்ணன் மோகினி வடிவெடுத்து , அவனை மடியில் போட்டு அழுவது போன்ற காட்சி.


சின்னப்பா , பாகவதரை மடியில் போட்டுக்கொண்டு , ஒரு ஒப்பாரி பாடலை இட்டுக்கட்டி , இசை நயத்துடன் பாட ஆரம்பித்தார். இப்படி க்ரியேட்டிவாக , அவ்வப்போது தோன்றுவதை பாடுவது அந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.


இவரது ஒப்பாரியை எதிர்பாராத பாகவதர் சற்று திகைத்துபோய் , யோவ் சின்னப்பா.. என்ன இது என முணுமுணுத்தார். ‘ கொஞ்சம் பேசாம இரும் ‘ என அவரை அடக்கிவிட்டி , ஒப்பாரியை தொடர்ந்தார் சின்னப்பா.


அந்த ஒப்பாரிக்கு மக்களிடம் பயங்கர வரவேற்பு. கைதட்டல் விண்ணைப்பிளந்தது. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என கேட்டு மீண்டும் மீண்டும் அவரை பாட வைத்தனர். சின்னப்பா என்றால் சின்னப்பாதான் என அனைவரையும் சொல்ல வைத்த மகிழ்ச்சி சின்னப்பாவுக்கு என்றால் சக கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டில் பாகவதர்க்கும் மகிழ்ச்சிதான். இந்த சம்பவம் இருவர்க்கும் இடையே நட்பு ஏற்படுத்தியது.


இப்படி சக கலைஞனுக்கு மட்டும் அல்ல. பழைய நினைவுகளுக்கும் மதிப்பு கொடுப்பவர் பாகவதர்.


ராண்டார் கை ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்.


ஆல் இந்தியா ரேடியோவில் ஓர் இசை நிகழ்ச்சி. பாகவதர் பாடுவதற்காக செல்கிறார். ஓர் பக்க வாத்திய கலைஞரை பார்த்து அதிர்ச்சி. உடனே இவரை மாற்றுங்கள் . அப்போதுதான் பாடுவேன் என நிபந்தனை விதிக்கிறார். அனைவர்க்கும் குழப்பம். அந்த கலைஞர்க்கும் வருத்தம். ஒரு நிகழ்ச்சியும் வருமானமும் பறிபோகிறதே என வருத்ததுடன் கிளம்பிவிட்டார். பாகவதர் பாடி முடித்தவுடன் காரணம் சொன்னார். அந்த கலைஞரிடம அந்த காலத்தில் இசை கற்றேன். ஆகவே அவர் எனக்கு குரு போன்றவர். அவர் எனக்கு பக்கவாத்தியமாக இருப்பது மரியாதையாக இருக்காது என்பதாலேயே அவரை அனுப்ப சொன்னேன் என காரணம் சொன்ன பாகவதர் , அந்த குருவை சந்தித்து காரணம் சொல்லி விட்டு , தேவையான பணமும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.


இசை மேதை ராம நாதன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்.


ஒரு நாள் இரவு இரண்டு மணி. என் கதவை தட்டினார் பாகவதர். காலை வானொலியில் ஓர் இசை நிகழ்ச்சி. உடனே இசை அமைத்து தாருங்கள் என்றார். நான் அப்போது ஆரம்ப நிலை கலைஞன். என்னைத்தேடி அவ்வளவு பெரிய திரை நட்சத்திரம் அந்த நேரத்தில் வந்தது ஆச்சர்யமாக இருந்தது . நான் இசை அமைத்து கொடுத்தேன். சில மணி நேரங்களில் அதை கற்றுக்கொண்டு , சிறப்பாக பாடி முடித்தார் பாகவதர்.


இப்படி சொல்கிறார் அவர்.



இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.


ஆனால் நாம் காணும் வரலாற்றில் திரித்தல்கள்தான் அதிகம்.


ஆக்ஸ்ஃபோர்ட் கம்பேனியன் ஆஃப் இந்தியன் தியேட்டர் (2004 ) என்ற புத்தகத்தில் , பாகவதர் முறைப்படியான படிப்போ , இசைப்பயிற்சியோ இல்லாமல் , முயற்சியால் முன்னேறியவர் என டெம்ப்ளேட்டாக எல்லோரையும் பாராட்டுவது போல பாராட்டி எழுதியுள்ளனர். ஆனால் பாகவதர் முறைப்படியான பயிற்சி பெற்ற கர்னாடக இசை வித்வான் ஆவார். அதுபோல அவர் நாடக நடிகருமாவார். இவற்றை பலர் குறிப்பிடுவதில்லை. ஒரு சினிமா நடிகர் என மட்டுமே நினைக்கிறார்கள்.


உதவும் பண்பு , கற்கும் ஆர்வம் , காண்போரை கவரும் அழகு , தோல்வியில் கலங்காத திடச்சிந்தை என வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தவர் பாகவதர். நல்லோரை காணலும் நல்லது , நல்லோரைப்பற்றி பேசலும் நன்று.


இவரைபோன்ற நல்லோரின் உண்மை வரலாற்றை தேடிப்படிப்பது நமக்கு , நம் மனதுக்கு , நம் வாழ்க்கைக்கு நல்லது. பொய் சுலபமாக கிடைக்கும், உண்மை தேடினால்தான் கிடைக்கும். தேடல் இருக்கும்வரை வாழ்வில் பசி  இருக்கும். பசித்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்வில் சுவை இருக்கும்.


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா