Sunday, June 30, 2024

திருவண்ணாமலையில் ஞான தீபம் − சாரு நிவேதிதா


 


பீச் என்ற சிறுகதை குறித்து சாரு அவ்வப்போது பேசுவார்.  உண்மையில் அதைவிட கவித்துவமான ஒரு பகுதி எக்சைல் நாவலில் வரும். மரங்களைப் பற்றி மட்டுமே ஓர் அத்தியாயம். அழகான விஷுவல் ட்ரீட் அது.


சாருவின் இசை ரசனையின் ஸ்தூல வடிவம் சீரோ டிகிரி என்றால் அவரது சினிமா ரசனையின் ஸ்தூல வடிவம் எக்சைல் எனலாம். 


தான் கற்றதையும் பெற்றதையும் அவ்வப்போது மேடைப் பேச்சுகள், பயிலரங்குகள் சூம் சொற்பொழிவு என பல தளங்களில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பெரிய ரசிகர் படையே உண்டு,


இந்தப்பின்னணியில் திருவண்ணாமலையில் திரைக்கலை பயிலரங்கம் நடத்துகிறார் என்பது பரவலாக ஆர்வத்தை ஏற்படுத்தியது,


சென்னையில் நடத்தாமல் திருவண்ணாமலையில் நடத்துவது சரியா என்றொரு குழப்பம் எனக்கு இருந்தது.


ஆனால் அரங்கம் நிரம்பும் அளவுக்கு பயிலரங்கம் நடந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  இப்படி ஒரு கட்டணப் பயிலரங்கம் இலக்கிய உலகில் இதுவே முதல் முறை. 


பலர் முதல் நாள் இரவே திருவண்ணாமலை வந்து விட்டனர். எனக்கு சில பணிகள் இருந்ததால், இரவு 12 மணிக்குதான் சென்னை விட்டு கிளம்பினேன். நான்கு மணியளவில் திருவண்ணாமலை அடைந்து ஒரு ரூம் புக் செய்து  சுடச்சுட நாளிதழ்க்கள் படித்து விட்டு, தூங்கி எழுந்து ஃபிரெஷாக கிளம்பினேன். 


நிகழ்ச்சிக்கான தயாரிப்புகளில் சாரு அன்றைய இரவு மட்டுமல்ல.. பல இரவுகள் தூங்கவில்லை. இதற்கான பணிகளில் ஓர் அணியே இரவு பகலாக வேலை செய்தது.


வெகு துல்லியமாக 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது


இப்பயிலரங்கி நோக்கம், இது குறித்து தான் சாருவிடம் சொன்னது என்ன என்பது போன்ற சுவையான தகவல்களை அராத்து பகிர்ந்து கொண்டார்


அதன்பின் பேசிய இயக்குநர் ராஜ் குமார் திரைப்படக்கலையில் சாருவின் பார்வை எந்த அளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும்  சாருவால் தான் உருவானது எப்படி என்பது குறித்தும் இயக்குநர் வெற்றிமாறனுடனான தனது பயணத்தையும் பேசினார்.


அதன் பின் வகுப்பை ஆரம்பித்த சாரு மாலை ஆறு மணி வரை தனி நபராக சரளமாக தங்கு தடையின்றி இடைவிடாத ஞான மழை பொழிந்தார்.


அவரது இசை ரசனை இந்திய தத்துவ மரபின் மீதான பார்வை  இலக்கிய ஞானம் போன்றவை திரைப்படக் கலை வகுப்புக்கு வேறொரு புதிய பரிமாணத்தை அளித்தது.


பொருத்தமான சினிமா காட்சிகள், இசைத் துணுக்குகளை பொருத்தமான நேரங்களில் திரையில் ஒளிபரப்பியது அழகாக இருந்தது இதன் முழு அனுபவம் நேரில்தான் முழுமையாக கிடைக்கும். அவர் சொல்லும் வெளி நாட்டுப்பெயர்கள் உச்சரிப்பை குறித்துக் கொள்வது பார்வையாளர்களுக்கு சிரமம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதற்கொரு ஏற்பாட்டைச் செய்வதற்காக நண்பர் ஸ்ரீராமை முன்வரிசையில் அமர வைத்த திட்டமிடல் வியக்க வைத்தது.


பீச் சிறுகதை கபிலர் ஆதி சங்கரர் நீட்சே மற்றும் உலகத் திரைப்படம் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றன என அவர் விளக்கியது ஒரு வாவ் கணம்       நிம் விளையாட்டு,  ட்ரூத் வெர்சஸ் ரியாலிட்டி, புத்தர், நிலவின் பிரதிபலிப்பு என ஒவ்வொரு கணமும் கவிப்பூர்வமான  நகர்ந்தன. சில கதாபாத்திர வரிகளைச் சொல்லும்போது சாருவே அந்தப் பாத்திரமாக மாறும் ரசவாதமும் நடந்தது.இயற்கை சூழலில் அமைந்த நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த ஆடிட்டோரியம் தரமான மதிய உணவு என உலகியல் விஷ்யங்களும் வெகு சிறப்பு


இதைத் தவிர தனிப்பட்ட முறையில் ஒரு காமெடியான  அனுபவம். நிகழ்ச்சிக்கான கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் இப்போது செலுத்தலாம் என அறிவித்தவுடன் சாரு வாசக வட்ட அட்மினை அணுகினேன்.


அதை குறிப்பேட்டில் குறித்துக்க்கொள்ளும் பொருட்டு உங்க பேரு , ஊரு சொல்லுங்க சார் என்றார் அவர்


நம்மை தெரியாத அளவுக்கு புதிது புதிதாக பலர் வந்துள்ளார்களே என்பது மகிழ்ச்சியாக இருந்தது


,மீண்டும் மீண்டும் ஒரே நபர்கள் என்பது தேங்கல் நிலை. நிகழ்ச்சியில் பழைய நபர்கள் வெகு குறைவு. பெங்களூரு ஹைதரபாத் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இருந்த புதிய நண்பர்களே மிக அதிகம்.


இதுதான் சாரு நிவேதிதாவின் வெற்றி 

Friday, June 7, 2024

காணொலி vs காணொளி கவிஞர் தாமரை விளக்கம்

 25.8.2020. காணொலி, காணொளி - இரண்டில் எது சரி என்றொரு விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.  இது தொடர்பாகப் பின்னணி விவரங்களைக் கூறினால் புரிந்து கொள்வீர்கள். 


    காணொலி− கவிஞர் தாமரை  விளக்கம்


  காணொலி என்றே நான் எழுதி வருகிறேன். 

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி மட்டுமே இருந்து வந்தது, அதாவது வானொலி, கிராமபோன் ரெக்கார்ட் போல....

   படம் பார்க்க வேண்டுமானால் திரைப்படமாக, திரையரங்குக்குப் போய்தான் காண வேண்டும். இந்நிலையில், கோவை சிதம்பரம் பூங்கா  நேரு விளையாட்டரங்கில் ( Stadium ) நாடகக் காட்சி, இயைந்து போகும் இசை - என ஒரு நிகழ்ச்சி முதன்முதலாக அறிமுகப் படுத்தப் பட்டது. பாரதியார் வாழ்க்கை அல்லது கண்ணகி காதை - சரியாக நினைவில்லை ! நான் பாவாடை சட்டை அணிந்து சிறுமியாக இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தது புகைமூட்டமாக நினைவிலிருக்கிறது 😍...  

  அதற்கான விளம்பரமாக ' அனைவரும் திரண்டு வாரீர்... ஒலி-ஒளி நிகழ்ச்சி காண' என்று அறிவிப்பார்கள். 

  அவ்வகையில் 'ஒலி-ஒளி' எனும் புதிய வகை நிகழ்ச்சி அறிமுகப் படுத்தப் பட்டது. 

    ( இதில் அரை வட்டப் பரப்பில், விட்டு விட்டு நான்கைந்து மேடைகள் இருக்கும். ஒரு காட்சி ஒரு மேடையில் முடிந்ததும், அந்த மேடை இருட்டாக்கப்பட்டு, அடுத்த மேடையில் ஒளி பாய்ச்சப் பட்டு அடுத்த காட்சி அதில் தொடரும்... இப்படியாக ஒளி மாறி மாறித் தோன்றும், பாத்திரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களுக்கு வாயசைத்து நடிப்பர். மக்களுக்கு ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று எல்லோருக்கும் கேட்கும் ). இது அந்தக் காலத்தில் மக்களுக்குப் பெரும் வியப்பை அளித்தது. வரவேற்புப் பெற்றது. ஒலி-ஒளி எனும் பெயர் வந்தது இப்படித்தான் !. 

   பிறகு, பொதிகை ( தூரதர்ஷன் ! ) தொலைக்காட்சியில் பாடலும் காட்சியுமாக நிகழ்ச்சி  ஆரம்பித்த போது, அதற்கு 'ஒலியும் ஒளியும்' என்றே பெயர் சூட்டினார்கள். மிகப் பிரபலமான நிகழ்ச்சி அது !. தனியாகக் கேட்ட திரைப்படப் பாடல்கள், காட்சியோடு சேர்ந்து கிடைப்பதைக் குறித்தது !.  

    அதாவது நாம் ஒலியாகக் (பாடல்) கேட்டு இரசித்தவை, ஒளியாகவும் (காட்சியாகவும்) கிடைக்கப் பெற்றன 💃😀. 

   பாடலைக் காணுதல் என்பதுதான் 'காணொலி'... 😀

    இதுவே பின்னாளில், audiovisual AV என்பதைக் குறிக்கும் காணொலியாக வளர்ந்தது !. 

  காட்சி+ஒலி... அவ்வளவுதான் !. 


   'ஒலியொளி' 'ஒளியொலி' போன்ற சொற்கள் புழக்கத்தில் தொடராததற்கு மற்றுமொரு மாபெரும் காரணம் 'லகர' 'ளகர' உச்சரிப்பு பலருக்கும் தகராறாக இருந்ததுதான் 😊. 


'காணொளி' என்பது காணும் காட்சி அவ்வளவுதான், இதில் எந்த நுட்பமும் இல்லை, ஒலி என்பதை உள்ளடக்கவும் இல்லை. 


ஒலியை எப்படிக் காண முடியும் என்று கேள்வி எழுப்புவது அறிவியல் ரீதியாகச் சரி !. கலாபூர்வமாகத் தவறு !.  இப்போதும் அறிவியல் கலைச் சொல்லாக்க அறிஞர்கள் இந்தச் சொற்களை ( காணொலி, காணொளி ) ஏற்பதில்லை. கவித்துவமாக இருப்பதாலும், காரணப் பெயராக இருப்பதாலும் 

நான் இப்போதும் காணொலி என்பதையே பயன்படுத்துகிறேன். ஏனென்றால் இது அந்தக் காலத்தில் இருந்து தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் சொல் !. நன்றாகவும் இருக்கிறதே, பயன்படுத்தலாமே !.


     'கேளா ஒலி' என்று ஒன்று இருக்கிறது தெரியுமா உங்களுக்கு ? 😊. 

   ஒலி என்றாலே கேட்பதுதானே, அதெப்படி 'கேளா ஒலி' என்று ஒன்று இருக்க முடியும் எனக் கேள்வி எழும்பும். 

   ஒலிகளில் மனிதக் காது கேட்கக் கூடிய அலைவரிசை, அலை அதிர்வெண் வீச்சு ( frequency range ) உள்ளது. அதற்குக் கீழ் அல்லது மேலாக (20 Hz - 20,000 Hz) இருக்கக் கூடியவற்றை மனிதக் காதால் கேட்க முடியாது.  அதற்காக அங்கு ஒலியே இல்லை என்று கூறி விட முடியாது. மேலே உள்ள ஒலியை ultrasonic sound என்று அழைக்கிறோம். இந்த அல்ட்ராசானிக் ஒலியைப் பலவிதங்களிலும் தொழில்நுட்பமாகப் பயன்படுத்துகிறோம். தமிழில் இதைக் 'கேளா ஒலி' என்கிறோம். எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது பாருங்கள். நான் தமிழில், ஒரு திரைப்படப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறேன். 😊. ( படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள். பாடல் : யார் அவள் யாரோ )!. ☺

  கேளா ஒலியைக் கேட்கும் தன்மையுடைய ஓர் உயிரினம் வௌவால் ☺. 


பி.கு.


Humans can detect sounds in a frequency range from about 20 Hz to 20 kHz. (Human infants can actually hear frequencies slightly higher than 20 kHz, but lose some high-frequency sensitivity as they mature; the upper limit in average adults is often closer to 15–17 kHz.)

Thursday, March 7, 2024

எஸ் உதயமூர்த்தி பாலகுமாரனால் உருவாகிய நடிகர்


 
சாலையோர தேநீர் கடையின் ஸ்பீக்கரில், ஒளிமயமான எதிர்காலம்... பாடிக் கொண் மருந்தார் டி.எம்.எஸ்.; பாடல் ஓயும் வரை தியானத்திலிருந்த நடிகர் கடுகு ராம்மூர்த்தி. 'நன்றி' எனச் சொல்லிவிட்டு பேசத் துவங்கினார்.


யாருக்கு. எதுக்காக இந்த நன்றி?


விஜயகாந்தின் ஒரு இனிய உதயம் படத்துல அறிமுகமாகி, விஷாலின் ரத்னம் வரைக்கும் டிச்சிட்டேன். 35 வருஷத்துக்கும் மேல எனக்கு இஷ்டமான வேலையை செய்ய வாய்ப்பு தந்த கடவுளுக்குத் தான் இந்த ன்றி!


சினிமாத்துறையில் சலுகைகள் வாங்கித் தருதா உங்க வயது?


என்ன சலுகை... சில நேரங்கள்ல உட் ர்ந்து சாப்பிட கேரவன் கிடைக்கும்; அவ்வளவுதான். நிமிஷத்துல வசனங்களை மாற்றிக் கொடுத்தாலும், ஒரே ,டேக்'ல முடிக்கிற எனக்கு எந்த சலுகையும் அவசியப்படாது!


ஒரேமாதிரியான கதாபாத்தி ரம் வெறுப்பா இல்லையா?


'தாத்தா பாத்திரத்துக்கான உணர்ச்சிகள்'னு 100 இருக்கு; 'மாமனாரின் கருத்துக்கள்'னு' 100 இருக்கு; இதுல இருந்து புதுசு புதுசா எடுத்து என் பாத்திரத்தை மெருகேத்து றேனே தவிர, செஞ்ச தையே நான் திரும்ப செய்றதில்லை!


உங்களுக்கான பாதை யார் போட்டது?


எழுத்தாளர்கள் எம். எஸ்.உதய மூர்த்தி, பாலகுமாரன் எழுத்துக்களை ஆழமா வாசிச்சேன்; அதன் மூலமா, எனக்குள்ளே ஒரு வாழ்க்கைப் பாதையை ஏற்படுத்திட்டு அதுல பயணம் பண்றேன்.


ராம்மூர்த்தி பிடிவாதக்காரரா?


நடிப்புல என்னைக்காட்டிலும் திறமையானவங்க பலபேர் போராடி பார்த்துட்டு முயற்சியை கைவிட் டுட்டாங்க; ஆனா நான், எனக்கா னது கிடைக்கிறவரைக்கும் போராடுறதுன்னு சப தம் எடுத்திருக்கேன்!


உங்க பார்வை யில எது வெற்றி?


திரைக்கதை எழுதும்போதே. 'இந்த பாத்திரத் துக்கு கடுகு ராம் மூர்த்தி சரியா இருப் பார்'னு தோண ணும்; அப்படியான பாத்திரத்துல நிச்ச யம் ஒருநாள் நடிப் பேன். அந்த புகழ். காலம் சென்ற என் நண்பர் நடிகர் விவேக் கிற்கு சமர்ப்பணம்


நன்றி தினமலர் நாளிதழ்  3 3 2024


ராம்மூர்த்தி

சத்ய சாய்பாபா சந்திப்பு குறித்து துக்ளக் குருமூர்த்தி

 


 'எப்போதாவது புட்டபர்த்திக்குச் சென்றதுண்டா?'என்று சென்னை 40 - லிருந்து சுப்ர. அனந்தராமன் என்ற வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க பா.ஜ.க. தலைவர் அத்வானியுடன் இரண்டு முறை புட்டபர்த்தி சென்றிருக்கிறேன். அதற்கு முன் ஒரு முறை, தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசனுடன் அவரை பெங்களூரு White Field ஆஸ்ரமத்தில் தரிசித்தேன். 


அவர் மறைவதற்கு முன் நானும், நரேந்திர மோடியும் அவரை சென்னையில் தரிசித்தோம்

அவர் சித்தி அடைந்த பிறகு, 2014-ல் அவரது ஆராதனை தினத் தன்று உரை நிகழ்த்த புட்டபர்த்திக்கு அழைக்கப் பட்டு, அங்கு பேசினேன்  . அந்த உரையை யூ டியூபில் கேட்கலாம். அதை எழுத்து வடிவத்திலும் படிக்கலாம் 


.2006 -ல் நான் அத்வானியுடன் சென்றபோது தனி அறையில் பாபாவை தரிசித்தோம். கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் உள்பட ஆயிரக்கணக்கானோர் காத்திருக்க, அவர் எங்களுடன் ஒரு மணி நேரம் பேசினார். எப்படி பாரத நாடு பெரும் எழுச்சி பெறும், உலகுக்கு வழி காட்டும் என்பது பற்றித்தான் பேசினார் அவர். வளர்ச்சியும், ஆன்மிகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துப் போக வேண்டும் என்று கூறினார். அப்போது ஒரு மணி நேரம் என் கையைப் பிடித்தபடியே இருந்தார். தசையே இல்லாத பஞ்சு போல இருந்தது அவர் கை, விரல்கள். எனக்கு இனம்புரியாத ஒரு உணர்வு. அந்த முதல் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.
முதல் அனுபவம்
அவரைத் தரிசித்துப் பேசும் முதல் அனுபவம் வேணு ஸ்ரீனிவாசனால் கிடைத்தது. அந்தச் சமயத்தில் விமானப்படையின் மிக் போர் விமானம், மாதம் ஒன்று என்ற கணக்கில் விபத்தில் நொறுங்கி விழுந்து கொண்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா விலிருந்து வாரம் இருமுறை எனக்கு ஃபோன் செய்து, அது விபத்தல்ல, பாகிஸ்தான் ப்ளாக் மாஜிக் செய் கிறது. அதை பாபாதான் தடுக்க முடியும். நீங்கள் அவரிடம் அதுபற்றிப் பேச வேண்டும்' என்று என்னைப் படாதபாடுபடுத்தி வந்தார். நான் அதை வேணுவிடம் கூறினேன். ''குரு, அவரிடம் நேரம் கேட்டு யாரும் பார்க்க முடியாது. மூன்று நாட்களை ஒதுக்கி வை. ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்குச் சென்று அமர்ந்துவிட வேண்டும். என் நம்பிக்கை, ஏதாவது ஒரு நாள் அவர் நம்மைப் பேச அழைப்பார்" என்று கூறி னார் வேணு. 2-ஆம் நாளே அந்த வாய்ப்புக் கிடைத் தது. மற்றவர்களைச் சந்தித்த பிறகு எங்களை தனியே அழைக்க, விஷயத்தைக் கூறினேன். கண்ணை மூடி 2

 நிமிடம் தியானம் செய்துவிட்டு, "என்னிடம் சொல்லி விட்டதால், அதுபற்றி மறந்து விடலாம் என்று கூறி விடு" என்று தெரிவித்த அவர், "அவருக்கு (அமெரிக் கக்காரருக்கு) ஆசி தருகிறேன், அவரிடம் கொடுத்து விடு" என்று கூறி கையை மூடித் திறந்தார். கையில் ஒரு வைர மோதிரம் சைஸில் பெரியது. அமெரிக்க மனிதர் யார், ஆள் என்ன சைஸ் என்பது எனக்கே தெரியாது. சென்னை வந்தவுடன் அவரிடமிருந்து ஃபோன் வந்தது. விஷயத்தைக் கூறினேன். சென்னை வந்து என்னைச் சந்தித்தார். பெரும் சரீரம். மோதிரம் பொருந்தும் என்று தெரிந்து விட்டது. நடந்ததைக் கூறி அதைக் கொடுத்தேன். அவருக்காகச் செய்தது போல் இருந்தது. ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் அதிசயங்கள் பற்றிய கேள்விகள்.


2002-ல் என் கேள்விக்கு 2014-ல் விடை
2014-ல் உரை நிகழ்த்த புட்டபர்த்திக்கு அழைத்த போதுதான், பாபாவின் கருத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், "நான் அதிசயமாக வரவழைக்கும் விபூதி, மோதிரம் போன்றவை யெல்லாம், உங்களை அழைக்க நான் அளிக்கும் விஸிட்டிங் கார்டுகள். பிறகு நான் வேதம், கீதை, புராணங்களிலிருந்து உங்கள் ஆன்மிக வாழ்க்கை மேம்பாட்டுக்கு வேண்டிய அனைத்தையும் கூறுகிறேன். ஒரு சிலருக்கே அதில் ஈடுபாடு இருக்கிறது என்பது எனக்கு வருத்தம்" என்று தெரிவித்திருப்பதைப் படித்தேன். 2002-ல் எழுந்த என் கேள்விக்கு 2014-ல் பதில் கிடைத்தது.
மகத்தான சேவைகள்


2011-ல் பாபா மறைந்தபோது, புட்டபர்த்தியில் அவரது வளாகத்தில், போட்டது போட்டபடியே கிடந்த கிலோகணக்கான தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் நாட்டுக்களைப் பத்திரமாகச் சேர்த்து வங்கியில் டெபாஸிட் செய்தார்கள் அறங்காவலர்கள். அதில் பாபா சமாதி கட்ட 35 லட்ச ரூபாயை ரொக்கமாகக் கான்ட்ராக்டரிடம் கொடுக்க, அதை அவர் வெளியே கொண்டு போகும் போது போலீஸ் அவரைச் சோதித்தபோது அந்தப் பணம் காரில் இருந்தது தெரிந்தது. அது போதுமே நமது ஊடகங்களுக்கு. பாபா ஆசிரமத்திலிருந்து பணம் கொள்ளை போகிறது என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டி, ஆஸ்ரமத்தை அரசாங்கம்  எடுத்துக் கொள்ளி வேண்டும் என்றெல்லாம் கூடப் பேசப்பட்டது. அந்த அநியாயம் பொறுக்காமல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், பாபாவின் சேவைகளைப்  Sai Baba and the Neo-Mayos [11.7.2011] என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அவரது பல அரிய சேவைகளில் நான்கை மட்டும் குறிப்பிட்டேன்.
ஒன்று - ஆந்திராவில் வறண்ட அனந்தபூர் ஜில்லாவில், குடிக்க நீரில்லாமல் ரசாயன விஷநீர் குடித்து தவித்த 750 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்தார் பாபா. 200 கி.மீ. நீள குழாய் பதித்து, வழியில் மலை உச்சியில் 1 லட்சம் முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேங்கும் செயற்கை குளங்கள், 2 லட்சம் முதல் 10 லட்சம் லிட்டர் நீர் தங்க 18 நீர்தேக்கங்கள், 40,000 முதல் 3 லட்சம் லிட்டர் நீர்தேங்க உயர்நிலை நீர்நிலைகள் [overhead reservoir], இறுதியில் அவை எல்லாவற்றையும் 2,500 லிட்டர் நீர் கொள்ளும் 1,500 கான்கிரீட் தொட்டிகளில் இணைத்து, அதில் 4 குழாய் களை பொருத்தி மக்களுக்கு குடிநீர் அளிக்கப்பட்டது

 இவை எல்லாம் 18 மாதங்களில் நடந்தது. இதை, திட்டக் கமிஷன் நிகரில்லாத சேவை என்று புகழ்ந்தது.


இரண்டு - வறண்ட மேடக், மெஹபூப் நகர் ஆகிய ஆந்திர ஜில்லாக்களில் 250 கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கச் செய்தார் அவர். 


அடுத்து 2002-, சென்னை மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்ததைக்கண்ட அவர், 150 கி.மீ. நீள தெலுங்கு கங்கை கால்வாயில் அரசியல் காரணங்களால் நின்றுபோன 69 கி.மீ. கால்வாயை வெட்டி, கரைகளைச் சீரமைத்தார். இன்று சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கக் காரணம் அவர். நான்காவது அவரது பெங்களூர் தர்ம ஆஸ்பத்திரியில் 2011 வரை 10 லட்சம் பேருக்கு சிகிச்சை, 7 லட்சம் இதய பரிசோதனைகள், 35,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை, 40,000 பேருக்கு கண் ஆபரேஷன் அனைத்தும் இலவசம். படித்து விட்டு வாயைப் பொத்தி நின்றன ஊடகங்கள்.

காஞ்சி மஹான் அருளிய குணம்
 காஞ்சி மஹானின் வழிகாட்டுதலில் வளர்ந்து,உருவான நான், அவரையும் பாபாவையும், யாரையும்  யாருடனும், ஒப்பிட்டதில்லை. ஆன்மிகப் பெரியோர் த யாராக இருந்தாலும், அவர்களை ஏற்று வணங்கும்  குணம் எனக்கு ஏற்பட்டதே காஞ்சி மஹானின்  ஆசியால்தான். சோ உள்பட பலர் எப்படி உங்களால்  அனைவரையும் ஏற்க முடிகிறது என்று கேட்டபோது, ஆன்மிகப் பெரியோர் யாரானாலும் நம்மைவிட ம் உயர்ந்தவர் என்று நினைப்பதால், யார் யாரைவிட உயர்ந்தவர் என்ற கேள்வி என் மனதில் எழுந்ததே கிடையாது' என்று தெரிவித்தேன். மதமாற்றம் செய்யாமல் சேவை, பக்தியை பரப்பும் ஆன்மிகப் பெரியோர் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. பெரியவரின் உபந்நியாசங்களை 'தெய்வத்தின் குரல் என்ற பிரம்மாண்டமான 7 பகுதிகளாகத் தொகுத்த ரா.கணபதி, புட்டபர்த்தி சாய்பாபா பற்றி எழுதலாமா என்று பெரியவரைக் கேட்க, "தாராளமாக எழுது' என்று கூறினார். "தீராத விளையாட்டு சாயி" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதினார் அவர். என்னைப் பொறுத்தவரை சாய்பாபா ஒரு சித்தர். சித்தர்களைப் புரிந்து கொள்வது சுலபமல்ல.
Saturday, March 4, 2023

ஜெயகாந்தன் கலைஞர் சந்திப்பு, பகுதி 4

 மு.க: ஆமாம். இந்தத் தீவிரமான புதிய மதுவிலக்குச் சட்டம் குறித்து நான் முரசொலியில் எழுதியிருக்கிறேன். சென்னையில் எல்லாப் பகுதியிலும் ந்தாராளமாய் மது வியாபாரம் நடக்கிறது. முன்பு 10 ரூபாய் மாமூல் கிடைத்த போலீசுக்கு இப்போது 100 ரூபாய் கிடைக்கிறது.


ஜெ.கா: இந்திராகாந்தியைக் கொல்ல முயன்றதாக உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டும், வழக்கும். இருக்கிறது. அல்லவா? அது குறித்து ஏதேனும் சொல்லலாமா?


மு.க: என்ன சொல்வது? சிரிப்புதான் வருகிறது. என்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்திராகாந்தியே ஒப்புக் கொள்ளமாட்டார் என்றுதான் நம்புகிறேன்.


ஜெ.கா: இது மாதிரியான பொருத்தமற்ற, அபத்தமான, அநியாயமான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்டோருக்குப் புத்திமதி சொல்லுகிற நீதி மன்றங்கள் வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே நமது நீதி மன்றங்களின் சுதந்திரத்தை மக்கள் நம்புவர். (இது) விஷயம் வழக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் திரு. மு.க. மெளனமான புன்னகையோடு தமது கருத்து உடன்பாட்டைத் தெரிவிக்கிறார்.) 


ஜெ.கா: உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? இந்தக் கேள்விக்கு முதலில் என் தரப்பிலிருந்து பதில் சொல்லி விடுகிறேன். எனக்கு உண்டு.


மு. க : நம்பிக்கைதானே உண்டு என்றீர்கள்? கடவுள் உண்டு சொல்லவில்லையே? 'உண்டென்பர் சிலர் இல்லை என்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலைஎன்னும் பாரதிதாசன் கருத்தே என்னுடையது. யாவற்றை யும் ஆட்டிப் படைக்கும் சக்தி உண்டுதான். அதை  நினைக்கக்கூடிய, சிந்தனை செய்கிற ஒரு சக்தியாக என்னால் கொள்ள முடியாது. எனவே, கடவுளிடம் பிரார்த்தனை வழிபாடு என்பது எல்லாம் என் அளவில் அர்த்தமற்றது. கடவுள் நம்பிக்கை, நடைபாதைகளிலெல்லாம் கோயில் களைக் கட்டிவிடுகிற மூட நம்பிக்கை ஆகிவிடக் கூடாது என்பதே கடவுள் பற்றி என் கருத்து


ஜெ.கே: கடவுள் நம்பிக்கையின் உதவியோடு ஒரு சமுதாயத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உருவாக்கப்பட்டால் ஆட்சேபம் இல்லையே?


'கல்பனா' முதல் இதழில் அர்த்தமுள்ள கேள்விகள் பகுதியில் பெரியார் சிலையின் அடியில் எழுதி வைக்கப்படுகிற 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்பன போன்ற வாசகங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். நடைபாதைக் கோயில்களால் விளைகிற அநாகரிகத்தைக் கண்டிக்கிற தாங்கள் இதையும் கண்டிப்பீர்களா?


மு.க: எனக்கும். அந்த வாசகங்களில் உடன்பாடு இல்லை. நான் திறந்து வைத்த பெரியார் சிலைகளில் ஏதோ ஒன்றில்தான் அது இருந்தது. அவற்றுக்குப் பதிலாக, பெரியாரின் வேறு பொன்மொழிகளை அவற்றில் குறிக் கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் ஒன்று, நடை பாதைக் கோயில்கள் என்ற பெயரால் அவமானப் படுத்துவதை விட, பெரியார் சிலையில் எழுதப்பட்ட கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுளை நம்புகிறவர்களை அவமானப்படுத்தி விடமாட்டா என்பது என் எண்ணம்.


(இது எனக்குப் புரியவில்லை! அவமானமா அல்லவா என்று சம்பந்தப்பட்டவர்கள் அல்லவோ சொல்லுதல் வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.)


ஜெ.கா: நாமெல்லாம் ராமாயண - மகாபாரதத்தை இழித்தும் பழித்தும் பேசினோம். ஆனால் சோவியத் யூனியனில் நமது ராமாயண மகாபாரத இதிகாசங்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கப்படுகின்றன. வளரும் குழந்தைகளின் மனப்பண்புகளை உருவாக்க அவை மிகவும் பயன்படும் என்பதற்கு இது உதாரணம்.


மு.க: ராமாயணம்-மகாபாரதம் ஆகியவை இவக்கிய மாக எடுத்துக் கொள்ளப்படுமாயின் வரவேற்கத் தக்கதே. ஆனால் கல்வியறிவே இல்லாத மக்களின் மூட நம்பிக் கையை வளர்க்க அவை பயன்படுத்தப்பட்டதைத்தான் பெரியார் எதிர்த்தார்.


ஜெ.கா: அண்மையில் ஆளும் சுட்சிக்காரர்களின் வன்முறையைக் கண்டித்துத் தாங்களும் மற்றும் பல தோழமைக் கட்சித் தலைவர்களும் ஒரு நாள் கண்டன உண்ணா விரதம் இருந்தீர்கள். அந்த அனுபவம் குறித்து ஏதேனும்...


மு.க: தமிழ்நாட்டில் நான் முதல் அமைச்சராக இருந்த காலத்திலும் அதற்கு முன்பும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் வன்முறை நடந்தது உண்டு. ஆனால் அவை இந்த அளவுக்குத் திட்டமிடப்பட்டு, ஒரு பாராளு மன்ற அங்கத்தினரையே கொல்லும் அளவுக்கு இருந் தில்லை. அதிமுக ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் அரசியல் வன்முறைகள் எண்ணிக்கையில் எப்போதையும்விட அதிகமாயிருக்கின்றன. குற்றம் செய்கிறவர்கள் ஆளும்கட்சிக்காரர்களாய் இருந்தால் அவர்களை விட்டுவிடு கிறார்கள்; அல்லது காப்பாற்றி விடுகிறார்கள். அதனால்தான் எதிர்கட்சிக்காரர்களின் மீது தங்கு தடையற்ற வன்முறை செயல்களை அச்சமற்று அவர்களால் பிரயோகிக்க முடிகிறது. இவற்றை கண்டனம் செய்வதற்கான ஒரு அடையாளப் போராட்டத்தின் ஆரம்பமே அந்த ஒரு நாள் உண்ணாவிரதம். எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட இடையறாத போராட்டங்களின் மூலம்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும். எந்தக் கட்சி வன்முறையில் ஈடுபடுவதையும் நான் ஏற்கவில்லை.


ஜெ.கா. தஞ்சை நாகைத் தேர்தல் அனுபவங்கள் பற்றி...


மு.க: தோல்வியால் எனக்குச் சோர்வு ஏற்பட்டுவிடவில்லை. தி.மு.க.வின் ஓட்டுகள் இந்தத் தேர்தலில் குறையவில்லை. மும்முனைப் போட்டி இருந்திருந்தால் தி.மு.க.தான் ஜெயித்திருக்கும். தமிழகத்தில் இந்திராவுக்கு உள்ள செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தஞ்சை வெற்றி அ.தி.மு.க.வின் பலத்தால் ஏற்பட்டது அல்ல. ஆனால் நாகை வெற்றி மிகப் பெரிது. பல கோடி ரூபாய்களை அங்கே வாரி இறைத்தும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச கட்டத்துக்குப் போயும் அ.தி.மு.க. அங்கு தோல்வி அடைந்ததற்குக் காரணம் கம்யூனிஸ்ட் - தி.மு.க. ஒற்றுமையே ஆகும். இந்த ஒற்றுமை எதிர் காலத்தில் மேலும் வலுவாக்கப்படும். வலுவாக்கப்பட வேண்டும்.


ஜெ.கா: நீங்கள் எப்பொழுதேனும் உங்களை ஒரு கம்யூனிஸ்டு எதிரி என்று நினைத்துக் கொண்டதோ, பிரகடனம் செய்து கொண்டதோ உண்டா?


மு.க: ஒருபோதும் இல்லை. குடியரசுப் பத்திரிகையில் பணியாற்றிய காலம் தொட்டுப் பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் நான். கம்யூனிஸ்டுத் தோழர்களோடு எவ்வளவோ மோதல்கள் ஏற்பட்டுள்ளன


எனினும் என்னை நான் ஒரு சும்யூனிஸ்டு எதிரியாக எண்ணிக் கொண்டதில்லை. மாறாக, நானே ஒரு கம்யூனிஸ்டு என்ற நினைப்பில் வளர்ந்தவன்.


ஜெ.கா: (சிரித்துக்கொண்டு) நினைப்பு எதற்கு ...நிஜமாகவே ஆகிவிடவேண்டியதுதானே? (தொடர்ந்து) கூட்டணி அரசியலைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தை உஙகளிடம் சொல்ல வேண்டும். கூட்டாக மக்கள் மத்தியில் ஓட்டுவாங்கியவர்கள் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாகவே அரசு அமைப்பதுதான் மக்களுக்குக் கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது ஆகும் என்கிற மரபு எதிர் காலத்தில் கைக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?


மு.க: அரசியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை முதலில் கூர்ந்து கவனிப்போம். அத்தகைய மாற்றங்கள் உருவாகும் போது உங்கள் கருத்தைப் புறக்கணித்து விடமுடியாது. உளமார்ந்த உணர்வுகளுடனும், நேச மனப்பான்மையுடனும், மக்களுக்குத் தொண்டாற்ற முன்வரும் அரசியல் கட்சிகளாலேயே அது சாத்தியமாகும்.


(அத்தகைய சிறப்புக்குகந்த கட்சிகளாக தி.மு.க.வும்- உங்கள் தோழமைக் கட்சிகளும் உருவாக வேண்டியது தானே? என்று என்னுள் ஓர் எண்ணம் ஓடுகிறது)


ஜெ.கா: உங்களுடைய சினிமாப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். உங்கள் பழைய படங்களின் வசனவரிகளில் பல எனக்கு மனப்பாடம்... அந்த துறையில் ஏதேனும் புதிதாக, உயர்வாக, குறிக்கோளுடன் சாதனை புரியும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா?


மு.க: ஆர்வம் இருக்கிறது, நேரம் இல்லையே.


ஜெ.கா: உங்களின் ஒரு நாளைய நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.


மு.க. நாட்களைப் பொறுத்தும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. அதனால் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி ஒரு பொய்ப் பட்டியல் தர நான் விரும்பவில்லை.


ஜெ.கா: நீங்கள் தேகப் பயிற்சி செய்வது உண்டா?


 மு.க: எப்போதாவது! முறையாக இல்லை!


அடுத்து ஒரு சந்திப்பில் இன்னும் நிறையப் பேசுவோமே! இப்போது கட்சிப் பணிகள் என்னை அழைக்கின்றன.


நன்றியும் வணக்கமும் கூறி நட்புடன் விடை பெறுகிறோம்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா