Friday, October 31, 2014

ஒரு மொண்ணை தன்னை மொண்ணை என உணர்ந்த கணம்

ஒரு மொண்ணை தன்னை  மொண்ணை என  உணரும்போது , உலகில் ஒரு மொண்ணையின் எண்ணிக்கை  குறைகிறது..


அந்த காலத்தில் கைகளால் தண்ணீர் எடுத்து பருகி வந்தனர். ஒரு நாள் குவளை கண்டுபிடிக்கப்பட்டது..  வீணாகாமல் குடிக்க முடிந்தத்தால் குவளை பிரபலம் ஆனது. காலப்போக்கில் குவளை இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது.. ஆடம்பரமான குவளைகள் , குடிப்பதற்கான வழி முறைகள் , அதை சொலித்தரும் நிறுவனங்கள் என வளர்ந்தன..  தண்ணீர் குடிப்பதை விட குவளையே முக்கியமாக போனது..  குடிக்க தேவை இல்லாதபோது குவளையில் எதையாவது ஊற்றி குடிக்க ஆரம்பித்தனர்.

ஒருவன் இதையெல்லாம் பார்த்து சுஸ்த்தாகி விட்டான். இனி குவளை வேண்டாம் , சுடுகாட்டில் கிடைக்கும் மண்டையோட்டை பொறுக்கி வந்து அதில்தான் இனி குடிப்பேன் என ஆரம்பித்தான்.. அவனை  எல்லா மொண்ணைகளும் கிண்டல் செய்தனர்... அவன் பயப்படவில்லை..

அப்போது இன்னொருவன் வந்தான்.

” தம்பி நீ செய்வதை வரவேற்கிறேன். குவளையின் மீதான மூடத்தனமாக ஈர்ப்பை மறக்க செய்ய இது நல்ல வழி “ என்றான்.

“ அப்பாடா.. என்னை நீயாவது புரிந்து கொண்டாயே”

“ ஆமா. சரி.. ஆனா இப்படி மண்டை ஓட்டை தப்பு தப்பாக பயன்படுத்தக்கூடாது..   குறிப்பிட்ட அளவு , குறிப்பிட்ட வயது , குறிப்பிட்ட நிறம் கொண்ட மண்டை ஓடுதான் பயன்படுத்த வேண்டும் என விதி கொண்டு வர வேண்டும். 99 நாட்கள் குவளையில் இருந்து விடுதலை என்ற சவாலை ஏற்க தயாரா என அவர்கள் ஈகோவை தூண்டிவிட்டு, எல்லோரையும் இதற்கு மாற்ற வேண்டும் ..எப்பூடீ ? “ 

திகைத்தான் நம் ஆள்..

” ஒரு மொண்ணைத்தனத்தில் இருந்து இன்னொரு மொண்ணைத்தனத்துக்கு மாறுவது நிஜமான மாற்றம் அன்று “ என்றபடி மண்டை ஓட்டை எறிந்துவிட்டு , கைகளால் நீரை பருக ஆரம்பித்தான்..

போஸ்ட் ஆஃபிஸ் நினைவுகள் - அழியும் கலை

போஸ்ட் கவர் வாங்க தபால் நிலையம் போனேன்..  அந்த காலத்தில் எல்லாம் போஸ்ட் ஆஃபிஸ் கூட்டத்தால் நிரம்பி வழியும்.  பேனா ஓசி கேட்பவர்கள் , அட்ரஸ் எழுதி தந்து உதவுபவர்கள் , விண்ணப்ப்ப படிவ நிரப்புதல் நிபுணர்கள் என சில “ கலைஞர்கள் “ ( இப்போது அவர்கள் வழக்கொழிந்து விட்டார்கள் )  அங்கு இருப்பார்கள். 4.15க்க்கு கடைசியாக தபால் பெட்டி திறக்கப்படும் பட்சத்தில்  , 4.30க்கு போஸ்ட் செய்தால் ,  அடுத்த நாள்தான் எடுக்கப்படும். இதை லாகவமாக கணக்கிட்டு , தபால் பெட்டியில் போடாமல் நேரடியாக அதற்கான அலுவலரிடம் லெட்டரை கொடுத்து விட்டு வருவது அந்த காலத்தில் சாமர்த்தியமான விஷயமாக கருதப்படும்.

    இப்போது நான் சந்தித்த சில சிறுவர்களிடம் தபால் பெட்டியை பார்த்திருக்குறார்களா என ஆய்வு நடத்தினேன். பலர் பார்த்தது இல்லை. சிலர் வீட்டு மின் வைக்கப்பட்டு இருக்கும் கடிதபெட்டிகளை , தபால் பெட்டி என நினைத்ததும் தெரியவந்தது.  தபால் பெட்டி என்பது தபால் நிலையத்தில் மட்டும் இருக்காது.. ஆங்காங்கு இருக்கும் ,  நம் ஏரியாவில் எங்கு இருக்கிறது என தெரிந்து வைத்திருப்பது அந்த கால சிறுவர்களின் அவசிய தேவையாகும் .  பெரியவர்கள் ஏதாவது எழுதி , ஓடிப்போய் போஸ்ட் செஞ்சுட்டு வாப்பா என சிறுவர்களைத்தான் அனுப்புவார்கள்.   இன்றைய சிறுவர்களுக்கு அப்படி போஸ்ட் செய்த அனுபவம் இல்லை. அதேபோல லெட்டர் என்பதன் அனுபவம் இல்லாத பெரியவர்களும் உண்டு ..  பிறந்த ஊரிலேயே படித்து வேலையும் பெற்று இருப்பார்கள்.   எனவே கடிதம் எழுத வாய்ப்பு இருந்து  இருக்காது.  வேலைக்கு செல்லும்போது , கைபேசி , இணையம் என வந்து இருக்கும் . எனவே லெட்டர் என்பதே அவர்கள் வாழ்க்கையில் இருந்திராது.

 வெளியூரில் படித்தவர்களுக்கு வீட்டில் இருந்து எழுதுவார்கள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது நண்பர்கள் எழுதுவார்கள்.  இணையம் வந்தவுடன் இந்த தேவை அகன்று விட்டது.

அன்புள்ள , அன்புடையீர் , நலம் நலமறிய ஆவல் என ஒவ்வொருவரும் ஒவொரு “ நடை “ யை பின்பற்றுவதை கவனிப்பது சுவையாக இருக்கும். ஏன் இப்பெல்லாம் லெட்டரே போடறது இல்லை என கேட்பதும் , பதில் போடாததற்கு சண்டை போடுவதும் இப்போது  நகைச்சுவையாக தோன்றலாம்.

போஸ்ட் ஆஃபிசுக்கு கவர் வாங்க போனபோது இந்த நினைவுகள் வந்தன. ஆனால் அந்த போஸ்ட் ஆஃபிசில் கவர் இருப்பு இல்லை.  ஒரு சராசரி மனிதன் இதை கேட்டவுடன் உடனே கொரியரை நாடுவான்.  அடுத்த முறையும் கொரியரே செல்வான். இப்படி கொஞ்சம் கொஞ்சமான தபால் துறை வாடிக்கையாளரை இழந்து ஒரு கட்டத்தில் தந்தியை போன்ற முடிவை சந்திக்கலாம்.  அதன் பின் கொரியர் நிறுவனங்களும் , அலைபேசி சேவை நிறுவனங்களும் இஷ்டத்துக்கு கொள்ளை அடிக்கும்.

சதுரங்க வேட்டை ஹீரோ போல ஒருவர் அமெரிக்காவில் உண்மையாக வாழ்ந்தார். அவர் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  அதில் அவர் ஒன்று சொல்கிறார்.

மக்களை ஏமாற்றுவது மிக எளிது.  கேள்வி கேட்பவர்களை ஏமாற்ற முடியாது. ஆனால் நம் மக்கள் பதில் சொல்வதிதான் ஆர்வமாக இருக்கிறார்கள் . இவர்களை ஏமாற்றுவது மிக எளிது என்பதால் எனக்கு அது போரடித்து அதில் இருந்து விலகி விட்டேன் என்கிறார்.


இலவச எஸ் எம் எஸ் ,  இலவச நெட் என்றெல்லாம் ஆசை காட்டி அலைபேசியை மக்களுக்கு பழக்கி விட்டு , இப்போது அவர்கள் ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்து இருப்பது நம் மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.  சேவைக்கு காசு வாங்கத்தானே செய்வார்கள் என அவர்கள் சார்பாக இவர்களே பதில் சொல்கிறார்கள்.

தகவல் தொடர்புக்கு இணையம் நல்ல வழிதான். ஆனால் நாம் அதற்கு அடிமையாகபோனால் , ஒரு கட்டத்தில் இணைய சேவை நிறுவனங்களும் நம்மை ஆதிக்கம் செய்யத்தான் நினைக்கும்.

எனவே போஸ்ட் கவர் அங்கு இல்லாவிட்டால் பரவாயில்லை என இன்னொரு தபால் நிலையம் சென்று கவர் வாங்கினேன். கிராமங்களிலும் , புற நகர் பகுதிகளிலும் இன்னும் தபால் நிலையங்கள் உயிர்ப்புடன் உள்ளன. சென்னை நகரத்திலும்கூட  தபால் சேவையை பலர் பயன்படுத்துவதை காண மகிழ்ச்சியாக இருந்தது. ஊழியர்கள் கனிவுடன் பேசி சேவை அளிப்பது கூடுதல் மகிழ்ச்சி.  முகவரி முழுமையாக இல்லாவிட்டாலும்கூட எப்படியாவது போய் சேர்ந்து விடுகிறது. கொரியரில் இதை எதிர்பார்க்க முடியாது.

வட மானில கிராமங்கள் . எல்லைப்புற மானிலங்களுக்கு என் அலுவலகத்தில் இருந்து பொருட்களையோ கடிதங்களோ அனுப்பும்போது  ஸ்பீட் போஸ்ட்டையே பயன்படுத்துவோம். காரணம் கொரியர் நிறுவனங்கள் சேவை அங்கு இருக்காது.   மற்ற இடங்களில் கிடைக்கும் லாபத்தை வைத்து சில இடங்களில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என தபால் துறை செயல்பட்டு வருகிறது.   கொரியர் நிறுவங்களோ வசதியான இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.  இப்படி லாபம் பறிபோனால் , தபால் துறையும் சில சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும். ஏழைகளும் , கிராமவாசிகளும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதம்....

Dear Modi ji... 

The idea of using radio to communicate with people is great Similarly using postal services also should be encouraged. one can communicate from kashmir to kanyakumari with just a 50 paise post card. But many people now a days not aware of this and they are depending on private sector for communication. Gradually it will kill postal services which will affect rural people. new services and awareness programmes are need of hour for postal department.Wednesday, October 22, 2014

ஜெயகாந்தனுடன் மோத விரும்பாமல் கிரைம் எழுத்தாளர் ஆனேன் - ராஜேஷ் குமார் பேட்டி

இலக்கியம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல் , ஃபேக் எழுத்து என்பதில் சற்றும் சிக்காமல் தன் பாணியில் முத்திரை பதிக்கும் எழுத்தாளர் ராஜேஷ் குமார் பேட்டி உங்கள் பார்வைக்கு ‘’  ( நன்றி- விஜயபாரதம்) 
உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?
நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டேன். 1966-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எழுதிய முதல்கதை (உன்னை விட மாட்டேன்) கோவையில் வெளியாகும் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் வெளியாகி ரூ. 10 பரிசைப் பெற்றுத் தந்தது. அதைப் பார்த்து நண்பர்கள் பலரும் என்னை ஊக்குவித்தனர். தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தேன்.
அந்தச் சமயத்தில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை தினமணிக்கதிரில் அதன் ஆசிரியர் சாவி நடத்தினார். அதில் என் கதை தேர்வாகி (நானும் ஒரு ஹீரோ தான்) வெளிவந்தது. அதன் பிறகு சாவி, ராணி பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தேன்.
ஆனால் நீங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு தானே எழுத்தாளரானீர்கள்?
ஆமாம், பி.எஸ்சி, பி.எட். படித்து முடித்தவுடன், பவானிசாகரில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன் (1976). அங்கு ஒரேவிதமான பாடத்தை திரும்பத் திரும்ப ஏழு வகுப்புகளுக்கு சொல்லிக் கொடுத்ததில் எனக்கே அலுத்துவிட்டது. அதிலிருந்து மீள ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, என் தந்தை செய்துவந்த ஜவுளித் தொழிலில் ஈடுபட்டேன். அப்போது பல ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் பலதரப்பட்டவர்களைச் சந்திக்கும் அனுபவமும் கிடைத்தன. ஆனால், ஜவுளித் தொழிலில் எனக்கு நஷ்டமே ஏற்பட்டது. அப்போது தான் மீண்டும் எனது கவனம் எழுத்துலகில் திரும்பியது.
தொழிலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து விடுபட எழுத்து எனக்கு மிகவும் துணையாக இருந்தது. அப்போது எனது எழுத்துத் திறனையே மூலதனமாக்கி முழுநேர எழுத்தாளராக முடியும் என்ற உறுதி ஏற்பட்டது. தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.
எந்தப் புதிய முயற்சியும் உடனே வெற்றி கண்டுவிடுவதில்லை. உங்களுக்கு எப்படி?
உண்மைதான். நானும் ஆரம்பகாலத்தில் பல சோதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அதனால் நான் நிலைகுலைந்ததில்லை. அதையே சவாலாக ஏற்று தொடர்ந்து எழுதி எனது எழுத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டேன்.
எனது முதல் கதை 1966-ல் வெளியானது. அதன்பிறகு பல பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும் பரவலாக நான் கவனம் பெறவில்லை. அந்தக் காலத்தில் ‘குமுதம்’ வார இதழில் எழுதுவதே பெரும் சாதனையாக இருந்தது. நானும் குமுதத்திற்கு தொடர்ந்து சிறுகதைகளை அனுப்பி வந்தேன். ஆனால், ஒருகதையும் வெளியாகவில்லை; நானும் விடவில்லை. தொடர்ந்து தினசரி ஒரு கதையை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தேன். அதன் பட்டியலையும் தனியே தயாரித்து வைத்திருந்தேன்.
இவ்வாறு நூறு கதைகளுக்கு மேல் அனுப்பிய நிலையில் ஒருமுறை சென்னை, குமுதம் அலுவலகத்திற்கே நேரில் சென்றுவிட்டேன். அங்கு ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோதுதான். நான் நூறு கதைகளைத் தொடர்ந்து அனுப்பியதே அவருக்கு தெரியவந்தது. அப்போது அவர், “நீங்கள் நூறு கதைகளை எழுதியது பெரிய விஷயமல்ல, குமுதம் பத்திரிகைக்கு ஏற்றவிதமாக எழுதினால் தான் அது வெளியாகும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு எழுதுங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்பிறகு அதுவரை குமுதத்திற்கு அனுப்பிய அனைத்துக் கதைகளும் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற கடிதத்தோடு திரும்பின. அதையே சவாலாக ஏறு, ‘இது நியாயமா?’ என்ற தலைப்பில், குமுதம் அளவுகோலுக்கு ஏற்றவிதமாக ஒரு சிறுகதை எழுதி அனுப்பிவைத்தேன். அந்தக் கதை அடுத்த வாரமே குமுதம் வார இதழில் வெளியானது.
அரசு ஆசிரியராகப் பணியாற்றுவதை விடுத்து, எழுத்துத் துறையில் சவாலாக இறங்கித்தான் நான் சாதித்தேன். இதுபோல பல சோதனைகளை, புறக்கணிப்புகளைக் கடந்து தான் உயர்நிலையை அடைந்திருக்கிறேன்.
எழுத்துலகில் பல துறைகள் இருக்கின்றன. அதில் ‘கிரைம்’ எனப்படும் குற்றப்புனைவுத் துறையை எப்படி உங்களுக்கு உரியதாகக் கண்டுபிடித்தீர்கள்?
Crime Novelsஉண்மையில் கிரைம் எழுத்து எனக்கு இயல்பிலேயே இருந்துள்ளது. இதற்கு எனது அம்மா சிறுவயதில் கூறிய கதைகளும் காரணமாக இருக்கலாம். எல்லா அம்மாக்களையும் போல எனது அம்மா சாதாரணக் கதை கூறியதில்லை. அவர் சொன்ன கதைகள் எல்லாமே வீரக்கதைகள். எனது தாத்தா காலத்தில் மருதமலைக்கு மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டு செல்வாராம். அந்தக் காலத்தில் மருதமலைப் பக்கம் இரவு நேரத்தில் செல்லவே அனைவரும் அஞ்சுவார்களாம். ஆனால் எனது தாத்தா துணிவுடன் அங்கு வியாபார விஷயமாக சென்று வருவாராம். அந்த அனுபவக் கதைகளை நேரில் பார்த்தது போல அம்மா சொல்லியிருக்கிறார். மருதமலை முருகன் கோயிலில் திருட முயன்ற மூன்று திருடர்களை முருகர் கல்லாக மாற்றிய கதையை எனது சிறுவயதில் சோறூட்டியபோது அம்மா சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இதுவும் கூட எனக்கு திகில் கதைகளை பின்னாளில் எழுதத் தூண்டுகோலாக இருந்திருக்கலாம்.
நான் எழுதத் துவங்கிய காலத்தில் எழுதிய பெரும்பாலான கதைகளில் இந்த அம்சம் வெளிப்பட்டதைக் கவனித்தேன். கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என்பதையும் எனது கதைகளில் சொல்லிவந்தேன். அதற்கு குற்றப்புனைவுக் கதைகள் உதவிகரமாக இருந்தன. 1976 வரையிலும் எனது கதைகளின் மூலப்பொருளாக குற்றச் செய்திகளும் ஒவ்வொருவருக்கும் இறையச்சம் தேவை என்ற அடிப்படை அறவுணர்வுமே இருந்து வந்தன. சட்டத்தின்முன் குற்றவாளி தப்பினாலும் இயற்கை அவனைத் தண்டிக்கும் என்ற நீதிபோதனையையே எனது கதைகளில் வலியுறுத்தி வந்தேன்.
1980களில் பத்திரிகைகளில் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, லட்சுமி, சாண்டில்யன் போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருமே சமூகப் புதினங்கள் எழுதுவதில் தேர்ந்தவர்கள். அவர்களுடன் போட்டியிட முடியாது என்பதை எனது இளம் மனது உணர்ந்தது. அப்போதுதான், அவர்கள் தொடாத, அதே சமயத்தில் எனக்கு நன்றாக வரக்கூடிய குற்றப்புனைவுத் துறையை (கிரைம்) தொடரத் தீர்மானித்தேன்.
கடவுள் மீதான அச்சம் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என நம்புகிறீர்களா?
கண்டிப்பாக. நான் எழுதும் எந்த குற்றப்புனைவு புதினத்திலும் இறுதியில் நியாயமே வெல்லும் என்பதையே உறுதிப்படுத்தி இருப்பேன். எனது ஆரம்பகாலக் கதைகளில் கடவுள் பக்தியே மனிதர்களைக் காக்கும் என்பதை பலவாறாகச் சித்தரித்திருக்கிறேன். உதாரணமாக ஒரு கதை. இக்கதை குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களுக்குப் பிடித்த கதை.
அந்தக் கதையில் தாய் ஒருவர் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு சிவப்புப்புடவை சார்த்த வேண்டும் என்று நச்சரித்து விருப்பமில்லாத மகனுடன் கோயிலுக்குச் செல்வார். செல்லும் வழியில் ரயில்பாதையில் ஏற்பட்டிருக்கும் விரிசலைக் காணும் மகன், அம்மனுக்கு சார்த்த வைத்திருந்த புடவையை எதிர்த்திசையில் காட்டியபடி ஓடி, பெரும் விபத்து நேராமல் காப்பாற்றுவான். கதையில் முடிவே அதுதான். இதைத் தானே ‘தெய்வம் மனுஷ்ய ரூபே’ என்கிறார்கள்.
கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்துக்குள் பலர் செல்வார்கள். அதுவும் அவனது விளையாட்டுத் தான். கடவுள் எக்காலத்திலும் நேரடியாக வர மாட்டார். சக மனிதராகத் தான் அவர் வருவார். இந்த ஞானம் வர நீண்டகாலம் ஆகலாம்.
நான் கடவுள்பக்தி மிகுந்தவன். சிறுவயதில் தினசரி கோயிலுக்குச் செல்வேன். காமாட்சியம்மன், முருகன், தண்டுமாரியம்மன், சாயிபாபா கோயில் என முறைவைத்து ஒவ்வொருநாளும் கோயிலுக்குச் சென்ற காலம் உண்டு. பிறகு சக மனிதரை மகிழச் செய்வதே தெய்வகாரியம் என்பதை உணர்ந்தேன். கோயில் வழிபாடு வர்த்தகமயமாகிவிட்ட சூழலில், நேர்மையுடன், நல்ல காரியங்களைச் செய்வதே இறைபணி என்று தீர்மானித்துக்கொண்டேன். எனது கதைகள் மூலமாக சமுதாயத்திற்கு நல்லது செய்தாலே போதுமே?
நீங்கள் எழுத வந்த காலத்தில் தமிழ்வாணன், பி.டி.சாமி. புஷ்பா தங்கதுரை, சுஜாதா போன்றவர்கள் குற்றப்புனைவுக் கதைகளை எழுதிவந்தனர். அவர்களின் பாதிப்பு உங்களிடம் உண்டா?
நான் எழுதவந்த காலத்தில் தமிழ்வாணன் மறைந்துவிட்டார். ஆனால் அவரது புதினங்களைப் படித்திருக்கிறேன். சங்கர்லால் துப்பறியும் அக்கதைகள் குற்றப்புனைவுத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்படுத்தின. ஆனால், அவரது தாக்கம் எனது எழுத்தில் வரக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிற எழுத்தாளர்களைப் போல ஆபாசமும் வக்கிரமும் கலந்து எழுதக் கூடாது என்றும் எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கமும் என்மீது இருந்தது. அழுதான் என்பதை உடைந்தான் என்று புதிய சொல்லாட்சியாக அவர் எழுத்துலகில் கொண்டுவந்தார். இலக்கியம் என்றால் ஏதோ ஒரு ஜந்து என்றிருந்த நிலையை அவர் தான் உடைத்தார். எனினும் அவரது எழுத்தின் பாதிப்பு என்னிடம் வந்துவிடக் கூடாது என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன். எனக்கென்று ஒரு தனி பாணியை நானே உருவாக்கிக் கொண்டேன்.
ஆங்கிலத்தில் குற்றப்புனைவு இலக்கியம் பேரிடம் வகிக்கிறது. அகதா கிறிஸ்டியின் உலகப்புகழ் அனைவரும் அறிந்தது. எழுத்தாளர் ஆர்தர் கனான் டாயல் உருவாக்கிய புலனாய்வாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்திற்கு இன்றும் கோடிக் கணக்கான ரசிகர்கள் உண்டு. அவர்களின் தாக்கம் உங்களிடம் உண்டா?
நான் கல்லூரி நாட்களில் ஆங்கிலத்தில் வந்த குற்றப்புனைவுப் புதினங்களைப் படித்திருக்கிறேன். இத்துறையில் எனது ஈடுபாட்டை வளர்க்க அவை பயன்பட்டன. அதிலும், இர்வின் வாலஸ் (1916- 1990) எழுதிய அறிவியல் புனைகதைகளில் எனக்கு அந்நாட்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரது ‘தி பிரைஸ்’ புதினம் நோபல் பரிசு வழங்குவதில் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தியது.
அவர் எந்தக் கதை எழுதினாலும், அதைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து அதன் பின்னரே எழுதுவார். விமானநிலையம் பற்றிய கதையானால், அங்கேயே சென்று ஆராய்வார்; கார் தொழிற்சாலை பற்றிய கதையானால், அதே தொழிற்சாலையில் ஆய்வு செய்து நுட்பமான தகவல்களுடன் கதை எழுதுவார். இந்த அணுகுமுறை என்னைக் கவர்ந்தது. ஆனால், அவரைத் தொடர்ந்து படித்தால் அவரது பாதிப்பு என் எழுத்தில் படிந்துவிடும் என்பதால் அதையும் விட்டுவிட்டேன். நல்ல எழுத்தாளருக்கு கதைக் கரு எங்கிருந்தும் கிடைத்துவிடும். இதற்கு ஆங்கில புதினங்களைப் படிக்க வேண்டியதில்லை.
உங்கள் கதைகளில் பல தகவல்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறீர்கள். இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுகிறீர்கள்?
நான் எந்தக் கதை எழுதினாலும், அதற்கு பத்திரிகைகளில் வெளியாகும் உள்ளூர் செய்தித் துணுக்குகளே ஆதாரமாக இருக்கின்றன. எழுத்தாளனுக்கு முதல் தேவை தேடுதல் தான். நான் தினசரி பத்திரிகைகளில் படிக்கும் செய்திகளில் குற்றம் தொடர்பானவற்றை குறித்துவைத்துக் கொள்வேன். அதை எனது பாணியில் சம்பவங்களாகத் தொகுத்து, வளர்த்தெடுத்து கதையாக்குவேன்.
எனது புதினங்களில் பெரும்பாலானவை கற்பனையல்ல. நான் படித்த, பார்த்த, என்னை பாதித்த நிகழ்வுகளே கதையாக வடிவம் பெறுகின்றன. அதற்காக முன்னர் பத்திரிகைகளை நம்பி இருந்தேன். இப்போது இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஒரு உதாரணம். செயற்கை இருதய வால்வ் தயாரிக்க பல்லேனியம் என்ற தனிமம் பயன்படுகிறது. அதைக்கொண்டு அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கிறார்கள் என்பது செய்தி. அதில் ஒரு முக்கிய தகவல், அணுக்கதிர் இயக்கம் கொண்ட இந்த வால்வின் விலை ரூ. 20 கோடி என்றும், இந்த அறுவைச் சிகிச்சையை ரகசியமாகச் செய்வார்கள் என்றும் ஓர் ஆங்கில பத்திரிகையில் படித்தேன். இந்த அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளின் விவரங்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் அந்தச் செய்தி கூறியது. அதில் தான் எனது ‘ஃபர்ஸ்ட் ஃபிளைட் டு நியூயார்க்’ புதினத்திற்கான கரு கிடைத்தது. அந்த வால்வை இந்திய கோடீஸ்வரரின் ஒரே இளம்வயது மகளுக்குப் பொருத்த அவர் செய்யும் முயற்சியையும், அவளைக் கொன்று வால்வை அபகரிக்கத் திட்டமிடும் குற்றவாளியையும் சித்தரித்து புதினத்தை உருவாக்கினேன். குற்றவாளியிடமிருந்து அந்த இளம்பெண் எப்படித் தப்பினாள் என்பதே கதையின் முடிவு.
இப்படித்தான் அணுவியல், ஸ்டெம் செல், உடலுறுப்பு தானம் போன்ற புதிய விஷயங்களில் தகவல்களைத் திரட்டிக் கொள்வதன் மூலமாக புதிய கதைகளை உருவாக்குகிறேன். நான் இதுவரை விமானநிலையத்திற்கே போனதில்லை. ஆனால், விமானப்பயணம் செல்லும் லேனா தமிழ்வாணன் போன்ற நண்பர்களிடம் விமான நிலையம் குறித்த தகவல்களை கிரகித்துக் கொள்வேன்.
எனது ‘நந்தினி 440 வோல்ட்ஸ்’ புதினத்தில் குற்றவாளியிடமிருந்து கண்தானம் பெற்ற ஒரு பெண் எவ்வாறு அநீதிக்கு எதிரானவளாக தன்னை மாற்றிக்கொள்ள நாடகமாடுகிறாள் என்பதைச் சித்தரித்தேன். இப்படித்தான் புதிய கோணங்களில் கதையை நடத்துவேன். ஆர்வமூட்டும் துவக்கம், அதிரடித் திருப்பங்கள், திடீர் உச்சம் என எனது கதைக்கு ஒரு வடிவம் உள்ளது. அதன் முடிவில் நீதிபோதனை மறைந்திருக்கும்.
இப்போதும் கூட குமுதம் வார இதழில் எழுதும் ‘வெல்வெட் குற்றங்கள்’ தொடர்கதையில், காணாமல் போன மலேசிய விமானம் என்ன ஆனது என்று, சமீபத்திய பரபரப்புச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதி வருகிறேன். அதற்காக, காணாமல் போன விமானங்களின் வரலாறு, அதைக் கண்டுபிடிக்கச் செய்யப்படும் படிப்படியான நடவடிக்கைகள், கண்காணிப்பு விமானம், மீட்பு நடவடிக்கைகள், கடலுக்குள் உள்ள பொருள்களைக் கண்டறியும் ஒலி அலை தொழில்நுட்பம் போன்ற பல புதிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதை கதையில் எழுதுவதால், புதிய வாசகர்கள் மிகவும் வரவேற்கிறார்கள்.
1980 முதல் 1990களின் பிற்பாதி வரையிலும் வார இதழ்களின் பொற்காலமாக இருந்தது. தவிர காகிதக்கூழ் பதிப்பு (பல்ப் ஃபிக்‌ஷன்) எனப்படும் பாக்கெட் நாவல்களின் வளர்ச்சி அதீதமாக இருந்தது. அக்காலகட்டத்து எழுத்தாளர்களில் முதன்மையானவராக நீங்கள் திகழ்ந்தீர்கள். ஒரே சமயத்தில் 7 வார இதழ்களிலும் 3 பாக்கெட் நாவல்களிலும் தொடர் கதைகளாகவும், குறும் புதினங்களாகவும் எழுதித் தள்ளினீர்கள். எப்படி இதனை நீங்கள் சாதித்தீர்கள்?
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் உழைப்பு தான். தவிர எனக்கு வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், என்னைத் தொடர்ந்து படித்த வாசகர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்தச் சாதனை நிகழ்ந்திருக்காது.
குறிப்பாக குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள், கல்கண்டு வார இதழில் 1980-ல் அளித்த தொடர்கதை வாய்ப்பே என்னை அனைவரும் உணரச் செய்தது. அதில் எழுதிய ‘7வது டெஸ்ட் டியூப்’ தொடர்கதை எனது அடையாளத்தை பதிவு செய்த்து. அதைத் தொடர்ந்து பல வார இதழ்கள் எனது படைப்புகளை வெளியிடத் துவங்கின. எனக்கும் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம்.
எஸ்.ஏ.பி. மட்டுமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம், இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன், சாவி ஆசிரியர் விஸ்வநாதன், கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் போன்றவர்கள் என் மீது வைத்திருந்த அன்பே என்னை கடுமையாக உழைக்கச் செய்தது. அந்தக் காலத்தில் வாரத்தின் 7 நாட்களும் ஏதாவது ஒரு வார இதழில் எனது தொடர்கதை வந்து கொண்டிருந்தது. விகடன், ராணி, கல்கி, குமுதம், சாவி, இதயம் என அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து இதழ்களும் எனது தொடர்கதையையைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன.
தவிர எனது நண்பரும் உடன்பிறவாத் தம்பியுமான அசோகன் (ஜீயே) 1985-ல் ஆரம்பித்த பாக்கெட் நாவல்கள் விற்பனையில் சரித்திரம் படைத்தன. அசோகனுடனான எனது உறவு எழுத்தாளர்- பதிப்பாளர் என்ற நிலையையும் தாண்டியது. கடந்த 30 ஆண்டுகளில், அவருக்கு மட்டுமே 500-க்கு மேற்பட்ட புதினங்களை நான் எழுதி இருக்கிறேன்.
இவர்கள் அனைவருக்கும் கதை எழுத எனக்கு ஒருநாள் போதாது என்ற நிலைமை இருந்தது. தினமும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் தொடர்கதை அத்தியாயங்களை எழுதி கூரியரிலோ, அல்லது எனது வாசகர்களான ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் மூலமாகவோ சென்னைக்கு அனுப்பி விடுவேன்.
ஒவ்வொரு வார இதழிலும் வெவ்வேறு விதமான தொடர்கதை எழுதும்போது, எப்படி அதை நினைவில் கொண்டு எழுதுவீர்கள்?
உண்மையில் இதை கடவுளின் கிருபை என்று தான் சொல்ல வேண்டும். எனது ஞாபக சக்தி கூர்மையானது. தவிர, ஒவ்வொரு பத்திரிகைக்கும் எழுதும் அத்தியாயங்களின் சுருக்கத்தை தனிக் குறிப்பேட்டில் குறித்து வைத்திருப்பேன். எந்த ஒரு கைப்பிரதியையும் நகல் எடுத்து வைத்துக் கொள்வதில்லை.
நாம் எந்த ஒரு விஷயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறோமோ, அதை மறந்துவிட மாட்டோம். அப்படித்தான் எனக்கு என் கதைகளின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் நினைவில் வைத்திருப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. தவிர அர்ப்பணிப்பு மனநிலையில் நீங்கள் எழுதும்போது எல்லாம் கூட வரும். எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் என் அர்ப்பணிப்புக்குக் காரணம்.
இன்னமும் நீங்கள் கையில் தான் எழுதுகிறீர்களா?
ஆமாம். கணினியில் தட்டச்சு செய்யப் பழகி இருந்தாலும், கையில் எழுதும்போது வரும் தொடரோட்டம் தட்டச்சில் வருவதில்லை. எனவே, இப்போதும் கையில் தான் எழுதுகிறேன்.
முந்தைய காலத்தில் வார இதழ்களுக்கு இருந்த கிராக்கி தற்போது குறைந்துவிட்டது. புதினங்களைப் படிக்கும் வாசகர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எல்லாமே மாற்றங்களுக்கு உட்பட்டது தான். மாறிவரும் தகவல் தொழில்நுட்ப உலகிற்கு ஈடு கொடுக்க பத்திரிகைகளும் மாறியாக வேண்டியிருக்கிறது. முன்னர் 6 லட்சம் பிரதிகள் விற்றது குமுதம். வாசகர்களுக்கு பொழுதுபோக வாசிப்பு மட்டுமே கருவியாக இருந்த காலம் அது. இப்போதோ அலைபேசிகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களின் காலம். எனவே ஒருநிமிடக் கதை, கால்பக்கக் கதைகள் என வாசகருக்கேற்ப வார இதழ்களும் வணிகரீதியாக மாறி இருக்கின்றன. ஆனாலும் தொடர்கதைக்கு இன்னமும் மவுசு இருக்கிறது.
வாசகர்களைப் பொருத்த வரை, புத்தக வாசிப்பு குறைந்திருந்தாலும், இணையதள வாசிப்பு பெருகி இருக்கிறது. அதற்கேற்ப மின்னூல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. எனது புதினங்களே இப்போது மின்னூல் வடிவில் கிடைக்கின்றன.
1980- 1990களில் ஓய்வே இல்லாமல் எழுதிய நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் தேவை குறைந்துவிட்டதா?
இல்லை. இப்போதும் நான் மும்முரமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். சொல்லப்போனால் முன்னை விட இப்போது தான் நான் அதிகம் எழுதுகிறேன். இப்போதும்கூட, மங்கையர் மலர் மாத இதழ், குமுதம், சூரியகதிர் வார இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தவிர தொலைக்காட்சிக்காக சின்னத்திரை தொடர்களிலும் எழுதுகிறேன். திரைப்படத் துறையிலும் எழுதுகிறேன். இவை தவிர, புனைவல்லாத கட்டுரைகளும் எழுதுகிறேன்.
நான் எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. கோயிலுக்குப் போகக்கூட எனக்கு நேரம் இல்லை. இப்போதும்கூட பல்வேறு இதழ்களின் தீபாவளி மலர்களுக்கு சிறப்புச் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இவையல்லாது முகநூலில் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ என்ற தலைப்பில் பல புதிய விஷயங்களை எழுதி வருகிறேன். அங்கு எனக்கு மிகப் புதிய வாசகர்கள் பலர் அறிமுகமாகி வருகின்றனர்.
எனது மகன்கள் கூட, ‘ஏம்ப்பா கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூடாதா?’ என்று கேட்கிறார்கள். என்னால் ஓய்வெடுக்க முடியாது. ஓய்வெடுத்தால் எனக்கு வயதாகிவிடும் என்று அவர்களிடம் கூறுவேன்.

Monday, October 13, 2014

வாசகனின் பங்கேற்புக்கு இடம் அளிக்கிறேன் - கலை குறித்து ஓவியர் மசெ பேச்சு


ஓவிய கலை என்பது கடல் போன்ற பிரமாண்டமான ஒன்று. அதை ரசிப்பதற்கேகூட நல்ல பயிற்சி வேண்டும். நம்மில் பெரும்பாலானோருக்கு ஓவியம் என்பது பத்திரிக்கைகளில் வரும் கதைகளுக்கு போடப்படும் ஓவியம் மூலம் அறிமுகம் ஆகி இருக்கும். அந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணி இருக்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும், மில்க் பூத் என்ற டீ ஷர்ட் வாசகத்துடன் மு...மன்னிக்கவும் .. கலை அம்சத்துடன் ஒரு பெண்ணை  வரைந்த ஓவியர் இருக்கிறார்.  போட்டோபோலவே வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஒரு வித அமானுஷ்ய தன்மையுடன் வரைபவர்கள் இருக்கிறார்கள். இருப்பதை அப்படியே கண் முன் நிறுத்துவது ஒரு பாணி என்றால் வாசகனின் கற்பனைக்கு சற்று இடம் அளித்து , அழகியலும் கற்பனையும் சேர்த்து வரைவது மணியம் செல்வத்தின் பாணி. அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு,

என்னை பொருத்தவரை மேலே சொன்ன டீஷர்ட் ஓவியர் முதல் , போட்டோகிராஃபி ஓவியர் வரை எல்லோரையுமே ரசிப்பேன். ரசிப்பதுடன் ஆழந்து கவனிக்கவும் செய்வது மணியம் செல்வத்தின் ஓவியங்களை..

இவரது தந்தை மணியனின் ஓவியங்கள் இன்னும் பேசப்பட்டாலும் ( குறிப்பாக பொன்னியின் செல்வன் ஓவியங்கள் ) தன் தந்தையையும் விஞ்சி நிற்பவர் மணியன் செல்வம்.

அவர்தம் ஓவியங்களை மட்டும் அன்று..அவர் பேட்டிகளையும் ஆர்வமாக கவனிப்பவன் என்ற முறையில் ஞாநி மற்றும் பாஸ்கர் சக்தி  நடத்தும் கேணி கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளித்தது.

இயற்கையான சூழலில் கேணி கூட்டத்தில் கலந்து கொள்வது எப்போதுமே இனிய அனுபவம். இம்முறை சற்று வித்தியாசமாக , அறைக்குள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது எனக்கு சற்று ஏமாற்றம் என்றாலும் , அறைக்குள் நடத்தியதால் , வீடீயோ காட்சிகள் மிக சிறப்பாக அமைந்திருந்தன என்பதால் மகிழ்ச்சியாக இருந்தது. அதிஷா , லக்கி யுவா போன்ற பிரபலங்கள் ஆஜர் ஆகி இருந்தனர். அவர்கள் வெற்றிக்கான காரணம் புரிந்தது. எதற்கு பிரியாரிட்டி கொடுப்பது என்பதே நம்மை உருவாக்குகிறது அல்லவா...

அரசியல் விமர்சகராக நாம் அறிந்த ஞாநி , ஓவியம் குறித்து பேசியது வியப்பாக இருந்தது,  ஓவிய மேதையான மாசெ அந்த அறிமுக உரையை ஆர்வத்துடன் கவனித்தார்.

ஞாநி பேசுகையில் , தனக்கு முதன் முதலில் மணியம் செல்வம் அறிமுகம் ஆனது வேறோரு பெயரில் என்று சொல்லி , அவரையே ஆச்சர்யப்பட வைத்தார்.  குமுதத்தில் , பிரபலங்களின் வாரிசுகளின் திறனைக்காட்டும் பகுதி ஒன்று பிரசுரிக்கப்பட்டதாம். அதில் மணியம் அவர்களின் மகன் என்ற முறையில் லோகனாதன் என்பவர் படம் வரைந்தாராம். அவர்தான் இன்றைய மசெ !!!!!   பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்ததன் ஒரு சின்ன "கால பயண மகிழ்ச்சி"  மசெ முகத்தில் தெரிந்தது.

ஞாநி தொடர்ந்து பேசினார்..

சினிமாவில் க்ளோசப் ஷாட் , லாங்க் ஷாட் , இந்த கோணம் , அந்த கோணம். மாண்டேஜ் என்றெல்லாம் இப்போது பேசுகிறோம் . அது போன்ற பேச்சுகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் , இவற்றை ஓவியம் மூலம் செய்து காட்டுயவர்கள் அன்றைய ஓவியர்கள்..  தொடர்கதை , சிறுகதைகள் என பத்திரிக்கைகள் ஆதிக்கம் செய்த அன்றைய சூழலில் ஓவியர்கள் பிசியாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் திடீர் என கதைகளுக்கு இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது...அதை மசெ எப்படி எதிர்கொண்டார் என விளக்குவார் என கருதுகிறேன்.  நான் அந்த காலத்தில் இருந்தே மசெயை கவனித்து வளர்ந்து வந்தவன். அவர் போன்ற ஓவிய்ர்களை ரோல் மாடலாக கொண்டு , அவர்களைப்போலவே வரைய முயற்சி செய்தவன் நான்.. எனவேதான் என்னால் நல்ல ஓவியனாக உருவெடுக்க முடியவில்லை . யார் பாதிப்பும் இல்லாமல் நான் வரைந்த ஒரே ஓவியமான பாரதி ஓவியம் மட்டும் பிரபலமாக உள்ளது. மசெ பத்திரிக்கையில் மட்டும் வரையவில்லை. வேறு இடங்களிலும் தன் கலைத்திறனை காட்டி இருக்கிறார். பல ஆலயங்களில் வணங்கப்படும் சிலைகள் இவர் வடிவமைத்ததுதான். அவர் தன் அனுபவங்களை நம்முடம் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்..

இவ்வாறு அவர் பேசியதும் , தொடர்ந்து மசெ பேசினார். ஓவிய துறைக்கு எப்படி வந்தார் என்பதையும் அவரது தந்தைக்கும் கல்கி அவர்களுக்கும் இடையேயான நெருக்கம் குறித்தும் பல விஷயங்கள் சொன்னார்.  டெக்னாலஜி வளராத அன்றைய காலத்தில் , அட்டைப்படம் வரைவதெல்லாம் சாதாரண விஷயம் அன்று.  வரையும் படம் , ப்ரோசஸ் எல்லாம் முடிந்து ப்ரிண்டில் எப்படி வரும் என் கணிக்க தெரிந்திருக்க வேண்டும் . அட்டையில் வரும் எழுத்துகளை சரியாக மேட்ச் செய்ய வேண்டும் .  ப்ரிண்டிங் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும் .உதாரணமாக ஓவியத்தின் ஒரு பகுதியில் அதிக கருப்பு பகுதி இருந்தால் ,  மை அதிகம் செலவாகி அதன் மற்ற பகுதியின் தரத்தையும் கெடுத்து விடும்,  அதையும் கணக்கில் கொண்டு , அந்த கறுப்பு பகுதியில் வேறேனும் விஷயங்களை பொருத்தமாகவும் அழகியலுடனும் சேர்க்க வேண்டும். அதாவது கலைஞனாக இருந்தால் மட்டும் போதாது. தொழில் நுட்ப அறிவும் வேண்டும் .. அப்படித்தான் அந்த காலத்தில் ஓவிய பணியாற்றினர்.  இதற்காக பெரிய அளவில் பொருளாதார ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே ஓவியர்களை இயங்க வைக்கிறது.

இப்படி பேசிய அவர் சில அபூர்வ ஓவியங்கள் , அவை உருவாகும் விதம் ஆகியவை குறித்து காணொளி மூலம் விளக்கினார்.  ஒரு சிறப்பிதழுக்காக குறிப்ப்பிட்ட அட்டைப்படம் காட்டினார். அதற்கு முதலில் வரையப்பட்டு இருந்த ஓவியத்தை காட்டினார். அது செம அழகாக இருந்தது. ஆனால் ஓவியருக்கு அதில் திருப்தி இல்லை..எனவே அதை புறக்கணித்து விட்டு இன்னொரு ஓவியம் தயார் செய்தார். இரண்டையும் நாம் பார்க்கும்போது , அவர் செய்த மாற்றம் , அது தரும் அழுத்தம் , அழகு போன்றவை பளிச் என தெரிந்தன. அப்படி வரையப்பட்ட படம் , ப்ரிண்டில் எப்படி வந்துள்ளது என்பதையும் காட்டினார். வாவ்வ்வ்வ்.. ப்ரிண்டில் நாம் பார்ப்பதை , ஓவியர் ஏற்கனவே மனக்கண்ணில் பார்த்து வரைந்தாக வேண்டும்.


வரலாற்று சிறப்புமிக்க சில இடங்களுக்கு சென்று வரையப்பட்ட படங்களை காட்டினார்.

சிலர்  நாளை மற்றும் ஒரு நாளே , ஜே ஜே சில குறிப்புகள் போன்ற  ஃபேக் நாவல்களை படித்துவிட்டு வாழ்க்கையை அப்படியே பதிவு செய்து இருக்கிறது என சிலிர்ப்பார்கள் அல்லவா.. அப்படியே பதிவு செய்வது கலை அல்ல என செம அழகாக விளக்கினார். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , சிலைகள் ஓவியர் கைவண்ணத்தில் எப்படி உரு மாறுகிறது என விளக்கியது அட்டகாசம்


செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.அத்தகைய படைப்புகள் காலத்தை விஞ்சி நிற்கும் என்றார் மசெ.


ஒரு விஷ்யத்தை நன்றாக தெரிந்து கொண்டு விட்டு , அதன் பின் அதை மீறி செல்வது நல்லது.  எதுவுமே தெரியாமல் , வெறும் பரபரப்புக்காக மீறல்களில் ஈடுபடுவது நல்லதனறு. அந்த காலத்தில் என் நண்பர் ஒருவர் மாடர்ன் ஆர்ட் வரைந்து பல பரிசுகள் வென்றார். ஆனால் இன்று அவருக்கு ஓவிய துறையில் எந்த இடமும் இல்லை. காரணம் அவரிடம் அடிப்படை அறிவு இல்லை. நான் மாடர்ன் ஆர்ட்டுக்கு எதிரி அல்லன். ஆனால் வலுக்கட்டாயமாக அதில் இறங்குவதில்லை. எப்போது தோன்றுகிறதோ அப்போது வரைகிறேன். கார்ட்டூனும் முயற்சி செய்துள்ளேன். ஆனால் அதில் அதிகம் இறங்கினால் , இயல்பான ஸ்டைல் கெட்டு விடும் என என் தந்தை எச்சரித்ததால் , அதை விட்டு விட்டேன்.

என் தாயார் பெயர் சரஸ்வதி. அவர் துணை இல்லாமல் என் தந்தை அவ்வளவு சாதித்து இருக்க முடியாது. எல்லாவித்திலும் என் அம்மா உற்ற துணையாக இருந்தார்,

என் படங்களில் வாசகனின் கற்பனைக்கு எப்போதுமே இடம் இருக்கும். இருப்பதை அபப்டியே வரைந்து , வாசகனின் கற்பனைக்கு இடம் இன்றி செய்வதில்லை.

அறீவியல் முன்னேற்றங்களை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் டெக்னாலஜி நம்மை ஆதிக்கம் செலுத்திவிட அனுமதிக்க கூடாது. தேவையான அளவு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெக்னாலஜி மூலம்தான் என் தந்தை ஓவியங்களை பாதுகாக்க முடிந்தது.

என்னால் அழகாக மட்டுமே வரைய முடியும் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு , தன் கதாபாத்திரங்களை அழகின் உச்சமாகத்தான் கதாசிரியர்கள் காட்டுகிறார்கள். எனவே நான் அழகாகவே வரைய வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் ஓவியங்கள் ஒரே மாதிரி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

கதாசிரியர்கள் விரும்புவதை ஓவியத்தில் கொண்டு வருவது என் கடமை. ரத்தம் ஒரே நிறம் நாவலில் சுஜாதா ஒரு காட்சியில் , யானையால் மிதிக்கப்பட்டு ரத்தம் பாய்ந்து சிதறுவதை , மயில் தோகை போல ரத்தம் சிதறியது என எழுதி இருப்பார். அதை ஓவியத்தில் அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது. பொருத்தமான கோணாத்தை யோசிக்க வேண்டி இருந்தது   அந்த கதையின் ஓவியங்கள் எப்படி வர வேண்டும் என சுஜாதா ஆர்வம் காட்டினார், எனக்கு பல தகவல்கள் தந்தார்.


கதைகளுக்கான ஓவிய தேவை குறைந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறேன் என ஞாநி கேட்டார். இந்த தேவை இன்னும் குறைந்து , நான் முழுமையாக விடுபட்டால் நல்லதுதான் என கருதுகிறேன். நான் பத்திரிக்கையை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஓவியத்துறையில் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன.

ஓவியம் படித்தால் வேலை கிடைக்குமா என கணக்குபோடாமல் , ஆர்வத்துடன் இதில் இறங்கினால் வாய்ப்பு உங்களை தேடி வரும். கண்டிப்பாக சாதிக்கலாம்.

இவ்வாறு ம செ பேசினார்..

Wednesday, October 8, 2014

அசோகமிதரன் பாராட்டிய என் கதை நிராகரிக்கப்பட்டது - வெண்முரசு பற்றி ஜெயமோகனுடன் எக்ஸ்க்லூசிவ்

ஜெயமோகனின் வெண் முரசு தொடரை பலர் படித்து வருவீர்கள் என நம்புகிறேன். முதல் பாகம் தொடும் ஆழம் , அதற்கு பிந்தைய பகுதிகளில் வரும் உணர்வெழுச்சி போன்றவை அபாரமாக இருந்தன..  ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மாதிரி என்றாலும் பொதுத்தன்மை என்றால் தமிழ் ஆளுமையை சொல்லலாம். சாரு இந்த தமிழை பாராட்டியதை மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் முந்தைய பகுதியில் இருந்து சற்று வேறுபட்ட நடையில் வெளி வந்தது நீலம் எனும்  நாவல் . இதை புரிந்து கொள்ள முடியவில்லை.. பழைய பகுதிகள் போல இல்லை என சிலர் சொன்னார்கள்..இதுதான் நன்றாக உள்ளது என்பவர்களும் உண்டு..

இந்த முரண் குறித்து ஜெயமோகனிடம் கேட்டேன்.

நீலம் இப்படி பிரத்தியேக நடையில் எழுதப்பட காரணம் என்ன?

படிக்க கஷ்டமாக இருப்பதாக சிலர் சொல்கிறார்களே/?

இந்த பகுதி எந்த வகை வாசகர்களுக்காக எழுதப்பட்டது/?

இதை எப்படி வாசித்தால் நல்லது/?

இதற்கு ஜெயமோகன் அளித்த பதில் உங்கள் பார்வைக்கு

*****************************************************************


அன்புள்ள பிச்சைக்காரன்,

நீண்டகாலமாக எழுதிக்கொண்டிருப்பவன் என்றவகையில் எல்லா வினாக்களுக்கும் ஏற்கனவே ஓர் அனுபவமும் விடையும் என்னிடம் இருப்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். நீங்களும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். விரைவில் கண்டடைவீர்கள்.

என் ஆரம்பநாட்களில் ஆன் மிக நுட்பமானது என்று கருதும் கதை ஒன்று கணையாழியில் வெளிவந்தது. அசோகமித்திரன் அதைப்பாராட்டி எழுதியிருந்தார். ஆனால் அதை மிக நிராகரித்து ஒருவாசகர்கடிதம் வந்தது. எனக்கு கடும் வருத்தம். கதையில் என்ன பிரச்சினை என்று என்னுள்ளே கேட்டுக்கொண்டே இருந்தேன். அப்போது அசோகமித்திரன் எழுதிய சுருக்கமான கடிதம் வந்தது.

எல்லாபடைப்புகளும் எல்லாருக்குமானவை அல்ல என்று அவர் எழுதியிருந்தார். தஸ்தயேவ்ஸ்கியின் மாபெரும் செவ்வியல்படைப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் வாசிப்புப் பயிற்சி, இயல்பு மட்டும் அல்ல அப்படைப்பை அம்முறை வாசிக்கும்போது அவர்களுக்கிருந்த மனநிலை ஆகியவையும் முக்கியம். ஒரு படைப்பை முழுமையாக நிராகரித்த ஒருவர் கொஞ்சநாட்கள் கழித்து சிறப்பானதாக எண்ணவும் கூடும். எழுத்தாளனுக்கே உள்ளூரத்தெரியும் சரியாகவந்திருக்கிறதா என்று, அது மட்டுமே முக்கியம் என எழுதியிருந்தார்

சரியாக ஒரு வாரம் கழித்து சி.மோகனைச் சந்தித்தேன். அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை அவர் நிராகரித்தார் என்றும் அது தற்போது மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார். ஏன் நிராகரித்தீர்கள் என்றேன். அதை அவர் குமுதத்தில் சிறுகதைகளாக எழுதி ஒன்றாகச்சேர்த்து நாவலாக்கியது பிடிக்கவில்லை என்றார். அசோகமித்திரன் எவ்வளவு பார்த்திருப்பார் என பிரமித்தேன்.

அரசியல் காரணங்களுக்காகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காழ்ப்பும்  மனவிலக்கமும் கொண்ட வாசகர்கள் உண்டு. வாசிப்பில் மிகமிகப் பின் தங்கி தேங்கிவிட்டவர்கள் உண்டு. எந்த ஒரு பேரிலக்கியத்தையும் நிராகரிக்கும் நோக்கத்துடன் வாசித்தால் அது எதையுமே அளிக்காமல் மௌனமாகி விடுவதை, தரமற்றதாகவே தெரிவதைக் காணலாம். ஏனென்றால் இலக்கியம் ஒன்றும் புறவமயான ஒரு பொருள் அல்ல. அது வாசகன் மனதில் நிகழவேண்டிய கற்பனை. அந்த கற்பனைக்கான தூண்டுதலை அளிக்கும் மொழிவடிவம் மட்டுமே இலக்கியத்தில் உள்ளது. கற்பனைசெய்ய மறுக்கும் வாசகன் ஓவியத்தை பார்க்கும் விழியற்றவனே.

அத்தகையோரை நாம் முழுமையாகவே நிராகரித்துவிடலாம். நான் எப்போதுமே சொல்வது போல நீ என் வட்டத்துக்குள் இல்லை என்றால் நான் உன் வட்டத்துக்குள் இல்லை என்பதே உண்மை.

நீங்கள் கேட்கும் வினா நுண்ணுணர்வுள்ள, தொடர்ந்து இதை வாசிக்கும் மனநிலை கொண்ட, பிறபகுதிகளை ரசிக்கும் வாசகர்களைப்பற்றியது. அதற்கான என் விடையை மேலேகுறிப்பிட்ட அ-வாசகர்களை வரையறை செய்து வெளியேதள்ளிய பிறகே செய்ய முடியும்.

நல்ல வாசகர்களில், தொடர்ந்து வாசிப்பவர்களிலேயே அனைவரும் சமானமானவர்கள் அல்ல. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாசிப்புப்பயிற்சியும் மனநிலையும் ஒவ்வொன்று என்பதற்கு அப்பால் பொதுவான  ஒரு  பிரிவினை உள்ளது என நான் அவதானித்திருக்கிறேன். சமீபத்தில் இன்னொரு நண்பரிடம் இதை விரிவாக தொலைபேசியில் பேச நேரிட்டது

வாசகர்களில் மிகக்கணிசமானவர்கள் அவர்கள் கண்முன் அறியும் அன்றாடவாழ்க்கையில்  இருந்து நீட்சிகொள்ளும் புனைவிலக்கியத்தை மட்டுமே  ரசிப்பவர்களாக இருப்பார்கள். அன்றாடவாழ்க்கையின் இடைவெளிகளை நிறைப்பதாகவும், உணர்வுகளை வளர்ப்பதாகவும் அறிதல்களை நுட்பமானதாக ஆக்குவதாகவும் அவ்விலக்கியம் இருக்கவேண்டுமென நினைப்பார்கள். அவர்கள் வாசிப்பதே அதற்காகவே.

இத்தகையவர்கள் அதிகமாக வாசிப்பவர்கள் என்பதைக் காணலாம். கொஞ்சம் சுமாராக இருந்தால்கூட இவர்களால் புனைவை வாசித்துவிடமுடியும். அதில் ஏதேனும் சில வாழ்க்கைக்கூறுகள் இருந்தால்போதும். அவர்கள் வெளியே வாழ்வதைப்போல ஓர் அக வாழ்க்கையை புனைவு வழியாக வாழ்வார்கள். அவர்கள் பாராட்டும் ஒரு படைப்பில் அவர்கள் என்ன தான் கண்டார்கள் என்று கேட்டால் அவர்கள் ஏற்கனவே அன்றாட வாழ்க்கையில் அறிந்த ஒரு நுட்பமான விஷயத்தை அப்படைப்பு தொட்டுணர்த்தியிருப்பதைச் சொல்வார்கள். இலக்கியத்தில் அன்றாடவாழ்க்கையின் ஒரு விஷயம் குறிப்புணர்த்தப்பட்டிருந்தாலே அவர்களுக்குப்போதும். இவர்கள் தங்கள் அறிவுத்திறன் அல்லது நுண்ணுணர்வைக்கொண்டு அதைக் கண்டுபிடித்தால் அதுவே இலக்கிய அனுபவம்.

இத்தகையவர்கள் இலக்கியத்தின் மொழிநடை மீது கவனமற்றவர்கள். குறைந்தபட்ச உரைநடை, சுருக்கமான வெளிப்பாடு என்பதே இவர்கள் விரும்புவதாக இருக்கும். கவித்துவம் என்பது உலகியல்தளத்தைத் தொடும்போதன்றி அவர்கள் கண்ணுக்குப்படாது. கவிதையின் கருவிகளான அணிகள், படிமங்கள், உருவகங்கள் எவையும் இவர்களை பெரிதாகக் கவர்வதில்லை. தத்துவார்த்தமான தளங்களை இவர்கள் கவனிப்பதில்லை. ஆன்மீகமான உச்சங்களை நோக்கிச் செல்வதுமில்லை.  காரணம் இவர்கள் புனைவில் கற்பனைமூலம் வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கைக்குத் தடையில்லாதபடி மொழியும் புனைவுமுறையும் மிக இயல்பாக அவர்களை அறியாமல் அவர்களுடன் இருக்கவேண்டும். ஈர்த்து உள்ளே கொண்டுபோனபின் மொழி அவர்களை விட்டு விலகிவிடவேண்டும் .

இவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதக் கதைகளை வாசிப்பவர்கள். வேறுவகைப்படைப்புகளில்கூட யதார்த்தவாத அம்சத்தைக் கண்டடைந்து ரசிப்பார்கள். இவர்கள் தொடர்ந்து வாசித்து தங்களுக்குரிய இடங்களைக் கண்டடைந்துகொண்டே இருப்பார்கள். மிகநுட்பமான வாசகர்களாக தங்களை நம்புவார்கள். ஓர் எல்லைவரை அது உண்மையும் கூட!


இன்னொருவகை வாசகர்களே செவ்வியல்தன்மைகொண்ட படைப்புகளை இன்னும் அதிகமாக நெருங்குபவர்கள். அவர்களிடம் மேலே சொன்ன வாசிப்புச்சுவை இருக்கும். கூடவே இலக்கியத்தை கொஞ்சம் விலகி நின்று பார்ப்பவர்களும் கூட. ஆகவே இலக்கியத்தின் புனைவுமொழியின் அழகை அவர்கள் தனியாகக் கவனிப்பார்கள்.  கவித்துவ உத்திகளை முழுமையாக உள்வாங்க முயல்வார்கள். மொழியின் ‘ஒழுக்கை’ விட அதன் ‘செறிவு’தான் இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

இவர்கள் பொதுவாக சில இயல்புகள் கொண்டிருப்பார்கள். தத்துவத்திலும் தொன்மங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மரபிலக்கிய ஆர்வம் இருக்கும். மரபிலிருக்கும் அழகிய மொழிவெளிப்பாடுகளை நினைவில்கொண்டு சொல்ல முடிபவர்கள். இலக்கியத்தை அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புக்கு அப்பால் செல்லும் ஒன்றாகவே எப்போதும் காண்பார்கள். ஆகவே இலக்கியத்தின் உலகியல் நுட்பம், அரசியல் கூர்மை ஆகியவற்றுக்கு மேலாக அது உருவாக்கும் பிரபஞ்ச அர்த்தம், ஆன்மீகமான எழுச்சி சார்ந்து அதிகக் கவனம் கொண்டிருப்பார்கள்.

இக்காரணத்தால் இவர்கள் இலக்கியத்தின் அணிகள், படிமங்கள், கவிருருவகங்களில் அதிகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியம் ஓர் அன்றாட உண்மையை ’மானுட உண்மையாக’  அல்லது ‘பிரபஞ்ச உண்மையாக’ ஆக்கவே இந்த  கவிதைக்கருவிகளைக் கையாள்கிறது.

வெண்முரசு ஒரு முழுமையான செவ்வியலை நோக்கிச் செல்ல முயல்கிறது. ஆகவே அதில் எல்லாவகையான புனைவுக்கும் இடமுண்டு. அதில் குழந்தைக்கதை, சாகசக்கதை, தேவதைக்கதை என எல்லாம் இருக்கும். தொன்மங்கள், படிமங்கள் எல்லாமே  கையாளப்படும். அன்றாடவாழ்க்கையின் நுண்ணிய சித்தரிப்பும் இருக்கும்.

வெண்முரசை வாசிக்கையில் அதில் அன்றாடவாழ்க்கை சார்ந்த நுட்பமான தருணங்கள் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். எந்த ஒரு யதார்த்தவாதத் தமிழ்ப்படைப்பைவிடவும் அவை வெண்முரசில் அதிகம் என்று சொல்வேன். மனிதர்களுக்கிடையேயான மனநாடகங்கள். உறவுச்சிக்கல்கள். ஒன்றிலிருந்து ஒன்றாக விரியும் உணர்வுகளின் சிடுக்குகள்.  முழுக்கமுழுக்க என்றென்றும் வாழும் மனிதர்களின் வாழ்க்கைச்சிக்கல்களாகவே நாவல் முன்னகர்கிறது.

யதார்த்தவாதத்தின் வாசகன் கண்முன் தெரிந்துகொண்டிருக்கும் வாழ்க்கையையே புனைவிலும் வாசிக்கமுடியும் என்ற பலவீனம் கொண்டவன் அல்ல என்றால் வெண்முரசை எளிதில் வாசிக்கமுடியும், அதன் நுட்பங்களைக் கண்டடையவும் முடியும். ஆனால் அவனுக்குத் தடையாக இருப்பது அவனை ‘ஆற்றோட்டமாக’ இழுத்துச்செல்லாத செறிவான மொழி. அந்த மொழியையும் அவன் தனியாகக் கவனித்தாகவேண்டும். அது அவனை கற்பனைவாழ்க்கையில் இயல்பகா இருக்கமுடியாது வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். அதேபோல அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும் படிமங்களும், உருவகங்களும், தொன்மங்களும்.அவையும் அவனை வெளியே இழுக்கும்.

அவை கொடுக்கும் மேலதிக அர்த்தம் அவனுடைய வாசிப்புக்குத் தேவை இல்லை. எனவே யதார்த்தவாத வாசகன் மொழிநடையை அவனை அறியாமலேயே குறைந்தபட்ச அர்த்தத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு வாசிக்கப்பழகிவிட்டிருப்பான். வர்ணனைகளையும் விவரணைகளையும் ‘என்ன கதை’ என்று தெரிந்துகொள்ளத் தேவையான அளவு மட்டுமே வாசிப்பான். கவித்துவத்தை முழுமையாக விட்டுவிடுவான்.

முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகியவற்றின் வழியாக ஒரு யதார்த்தவாத வாசகன் மேலே சொன்ன வாசிப்பினூடாக நகர முடியும். உதாரணமாக துரோணரின் கதையில் வரும் அவரது அடிப்படையான இக்கட்டு அவனை கவரும். அவரது வாழ்க்கை வழியாக அவன் பயணிப்பான். துரோணருக்கும் கிருபிக்குமான உறவின் நுட்பங்களெல்லாம் அவனைச் சென்றடையும்.  அந்த அடையாளச்சிக்கலும் பரிதவிப்பும் இன்றும் நாம் வாழ்க்கையில் காண்பதே. ஆனால் அவர்கையில் எப்போதுமிருக்கும் தர்ப்பை அவரது துயரில் தெய்வவடிவமாக விஸ்வரூபம் எடுப்பதை அவன் தாண்டிச்சென்றுவிடுவான். அது எந்தவகையான மனஎழுச்சியையும் உருவாக்காது

வெண்முரசின் முதல் மூன்றுநாவல்களும் மேலே சொல்லப்பட்ட இருவகை வாசகர்களுக்கும் இடமுள்ளவை. நீலம் இரண்டாம் வகை வாசகனுக்கு மட்டுமே இடமுள்ளது. யதார்த்தவாதத்தின் வாசகன் அதில் வாசிக்க எதுவுமே இல்லை. இதுதான் வேறுபாடு. அதில் கதை இல்லை. கதைத்தருணங்கள் இல்லை. கவித்துவத்தளம் மட்டுமே உள்ளது. மொழிவெளிப்பாட்டின் நுட்பம் வழியாக, படிமங்கள் மற்றும் தொன்மங்கள் வழியாக, மானுடவாழ்க்கையின் சில உச்சகணங்களைத் தொடுகிறது அது. காவியத்தன்மை மட்டுமே அதில் உள்ளது.

நான் பலமுறை சொன்னதுபோல நீலம் வெண்முரசின் ஒரு தனிப்பகுதி. ஓர் இணைப்பு போல. அதற்கும் வெண்முரசின் பொதுவான கதையோட்டத்துக்கும் தொடர்பு இல்லை. வெண்முரசின் அழகியல் கட்டுமானத்துக்கும் அதற்கும் நேரடி தொடர்பு இல்லை.

நீங்களே பார்க்கலாம். வெண்முரசு வரிசையில் நீலம் அளவுக்கு எதிர்வினைகள் வேறெந்த நாவலுக்கும் வரவில்லை. சொல்லப்போனால் மிதமிஞ்சிய எதிர்வினைகள் காரணமாக நானே அதிலிருந்து வெளியேறி பிரயாகைக்குள் நுழையமமுடியாமல் இருக்கிறே--  இன்னும்கூட ஆரம்பிக்கவில்லை. நீலத்துக்கான வாசகர்கள் வேறு. அவர்கள் துரோணரின் கதையில் தர்ப்பையைத்தான் பார்த்திருப்பார்கள். கர்ணன் கதையில் சூரியன் எப்படியெல்லாம் பொருள் அளிக்கிறது என்று பார்த்திருப்பார்கள். வெண்முரசின் படிமங்களையும் மொழியாட்சியையும் அதிகம் கவனித்திருப்பார்கள்.

என்ன பிரச்சினை என்றால் இவர்கள் நான் மீண்டும் மழைப்பாடல் ,வண்ணக்கடல் பாணிக்குச் செல்லக்கூடாது என்கிறார்கள். சென்றால் வெண்முரசு கீழே இறங்கிவிட்டது என்பார்கள். அவர்களுக்கும் இதேதான் பதில். இதில் எல்லாமே உண்டு.

நீலம் வாசிப்பதற்குரிய ஆரம்பகாலத் தடை சிலருக்கு இருக்கலாம். அதன் நடை மொழிமேல் ஒரு கவனத்தை கோரியபடியே இருப்பதுதான் முதல் தடை. அதற்குரிய வழி அதை கதையாக ‘என்ன நடக்கிறது, அடுத்து என்ன?’ என்றவகையில் வாசிக்காமலிருப்பதே. அதை வரிவரியாக கவிதைபோல வாசித்தாலே போதும்.

ஜெ

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா