Monday, May 25, 2015

பாலுமகேந்திரா முன்பு அழுதேன் - சாரு நிவேதிதா உருக்கமான பேச்சு






தமிழ் ஸ்டுடியோ அமைப்பு சார்பாக ’ பாலு மகேந்திரா விருது “ வழக்கும் விழா 24.05.2015ல் , கோடம்பாக்கத்தில் இருக்கும் BOFTA கல்லூரியில் நடந்தது.,.. காலை 10 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு பத்து மணி வரை நடந்தது... பாலு மகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் , 16 குறும்படங்கள் திரையிடப்பட்டன... நல்ல அருமையான ஏசி மற்றும் ஒலி ஒளி வசதியுடன் கூடிய திரையரங்கில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் சினிமா பார்த்தது நல்ல அனுபவம்.. நாசர் உட்பட ஏராளமான ஆளுமைகள் , ரசிகர்கள் கலந்து கொண்டு ஒரு மாநாடு போல விழா நடந்தது




பாலுவின் தலைமுறைகள் படத்தை படம் வந்தபோது பார்த்து நான் எழுதிய குறிப்பு இதில்... தலைமுறைகள் - பிச்சையின் பார்வையில்..




மாலை ஆறு மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் துவங்கின...
பீ.லெனின் மாலன், சாரு நிவேதிதா , லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்புராஜ்,கோ.தனஞ்செயன் , அருண் ஆகியோர் பேசினர்...



-_______________________________________




குறும்படம் எனும் தனி வகை  - கார்த்திக் சுப்புராஜ்




அருணை எனக்கு அந்த காலத்திலியே தெரியும்.. குறும்படங்கள் குறித்து அவருடன் நிறைய பேசி இருக்கிறேன். அவருக்கு ஒரு உலக குறும்பட சீடியை அந்த காலத்தில் கொடுத்தேன்.. குறும்படம் என்பது தனியான ஒரு வகை. அது வணிக சினிமாவின் சுருக்கப்பட்ட வடிவம் அல்ல... நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக குறும் படம் எடுத்தபோது கூட அதை ஆர்வத்துடன் செய்தேன். தயாளரிப்பாளரை பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது இல்லை... குறும்ப்டங்களுக்கு என தனியான ஒரு சந்தையை உருவாக்கி பல குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்க ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். அடுத்து பல முக்கியமான ஆளுமைகள் பேச இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.




_______________________________




சிறுபத்திரிக்கை போல குறும்படம் -மாலன்



நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்துக்கு முன்பே வந்து விட்டேன்.. அமைதியாக தனிமையாக அமர்ந்து வானத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீலம் , சாம்பல் நிறம் , சிவப்பு , கருப்பு என அதன் நிற மாற்றத்தை ரசித்தேன். இப்படி வானத்தை ரசித்து வெகு நாட்கள் ஆகி விட்டன. சமீபத்தில் தனஞ்செயனின் புத்தகம் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் பாராட்டை சொன்னேன். இந்த இரண்டு அனுபவங்களுக்காகவும் தமிழ் ஸ்டுடியோவுக்கு நன்றி. அந்த காலத்தில் எல்லாம் குறும்படங்கள் பார்ப்பது எல்லாம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. எங்கோ ஒரு சில இடங்களில் கிடைக்கும் வாய்ப்பை தேடிச்சென்று பயன்படுத்துவோம், நாங்கள் ஒரு குறும்படம் எடுக்க முயன்றோம். அதில் பல சவால்களை சந்தித்தோம் .காரண்ம் அன்று உரிய வசதிகள் இல்லை, இன்று வசதிகள் உள்ளன, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நிறைய வாசியுங்கள். பாலு மகேந்திராவை ஓர் இயக்குனராக உங்களுக்கு தெரியும். அவரை ஒரு நல்ல வாசகனாக எனக்கு தெரியும். நல்ல வாசிப்பாளர் அவர். நாங்கள் புத்தகங்கள் குறித்தே அதிகம் பேசுவோம். சிறு பத்திரிக்கை இயக்கம் போல குறும்படங்கள் தனி இடம் பிடிக்க வேண்டும்







-__________________________________




பாலுவுக்கு நிகர் பாலு மட்டுமே - லீனா மணிமேகலை



பாலு மகேந்திராவை நான் அப்பா என்றுதான் அழைப்பேன், எனக்கு அவர் அப்பா போன்றவர். நான் முதன் முதலில் என் படத்தை திரையிட்டபோது அவரை உரிமையுடன் அழைத்தேன்.. அவரும் ஆர்வமாக வந்தார், என் எல்லா திரையிடல்களுக்கும் அவர் வந்து இருக்கிறார். அவருக்கு நிகராக இனி ஒருவர் வர முடியாது, அவர் நம்மை விட்டு மறைந்தது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையேயான இடைவெளி இப்போது குறைந்து வருகிறது. இன்னமும் கூட நாம் எடுக்கும் படங்களை திரையிட உரிய ஸ்பேஸ் கிடைப்பதில்லை. இது மாற வேண்டும். போட்டிக்கு வந்த படங்களை பார்த்தேன்,. பல நன்றாக இருந்தன. படம் எடுப்பவர்கள் ஒலி அன்ற அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். என் படத்தை பார்த்த ஒரு பிரபல ஆளுமை எனக்கு ஒரு மெயில் அனுப்பினார்.. அது எனக்கு மிகப்பெரிய வெளிச்சம் அளித்தது.. ஷூட்டிங் செல்லும்போது கேமரா இல்லாமல் செல்வது எவ்வளவு அபத்தமோ அதே போன்ற அபத்தம்தான் சவுண்ட் எஞ்சினியர் இல்லாமல் செல்வதும் என சொல்லி இருந்தார். ஒலி அம்சம் மிகவும் முக்கியம்




-______________________________________________




என்னை வென்ற மணி ரத்னம் - சாரு நிவேதிதா



என்னை எழுதச்சொன்னால் எழுதி விடுவேன். ஆனால் பேச எனக்கு எப்பவுமே தயக்கம் உண்டு. நான் மனதில் பட்டதை பேசி விடுவேன், இதனால் யாராவது புண்பட்டு என்னை ஜென்ம விரோதியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். எழுத்திலும் என்னிடம் ஒளிவு ம்றைவு இல்லை. மது அருந்தியபோது நான் அதை மறைத்தது இல்லை. எந்த பாரில் அருந்தினேன் என்பது உட்பட விரிவாக எழுதுவேன்,. இதை பலர் திட்டினர். இப்போது குடியை விட்டுவிட்டு மகாத்மா காந்திபோல வாழ்கிறேன். இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.




என்னை பெரும்பாலும் யாரும் பேச அழைப்பதில்லை. காரணம் என்னை அழைத்தால் வேறு சிலரின் பகை வந்து சேரும். சாருவை சும்மா ஃபார்மலாக அழைத்தோம். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி தப்பித்துக்கொள்ளுமாறு அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் ( அரங்கில் பலத்த சிரிப்பு )







எனது சக பயணிகள் என நினைக்கும் இருவரை சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்தேன்.. ஆர்வமாக கைகுலுக்க சென்றேன், ஆனால் என் கைகளை அவர் தட்டிவிட்டு வெறுப்பாக முகத்தை திருப்பிக்கொண்டனர். அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறார்கள்.




இதனால்தான் நான் மனிதர்களை விட மரங்கள் , விலங்குகளுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுகிறேன். பாலு மகேந்திராவும் இப்படிதான், ஒருவகையில் பாலு மகேந்திராதான் நான். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. ஆனால் அவர் படங்கள எதையும் நான் பார்த்தது இல்லை. வீடு , சங்தியாராகம் பார்த்து விட்டீர்களா என அடிக்கடி என்னை கேட்பார் , நான் இல்லை என்பேன். காரணம் இது போன்ற மாற்று படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




துப்பாக்கி , கத்தி போன்ற படங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மாற்றுப்படங்கள் என்ற பெயரில் வரும் படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




ஒரு காமன்மேனுக்கு இருக்கும் சென்சிபிள் கூட இவர்களுக்கு இருப்பதில்லை. சென்சிபிள் என எதை சொல்கிறேன். சிலர் திரையரங்கில் அமர்ந்தவாறு சத்தம்போட்டு செல்போனில் பேசுவார்கள். காரணம் இந்த நுண் உணர்வு இன்மை. உலக சினிமாக்கள் பார்க்காமல் , எந்த இலக்கிய வாசிப்பும் இல்லாமல் இவர்கள் எடுக்கும் படத்தில் சென்சிபிலிட்டி இருப்பது இல்லை, எனவே இவர்களைக்கண்டாலே எனக்கு பயம்.

எனவேதான் பாலுவின் படங்களை நான் பார்த்தது இல்லை.




முதல் முறையாக நான் பார்த்தது அவரது தலைமுறைகள் படம்தான்.. பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மேதைமையை அறிந்தேன். என்ன ஒரு கலைஞன் என நினைத்துக்கொண்டேன். இத்தனை நாள் இவரை தெரிந்துகொள்ளாமல் போனேனே என வருத்தப்பட்டேன்




மிக அழகான , மிக விலை உயர்ந்த மலர்க்கொத்துடன் அவரை சந்திக்க போனேன். அதை அவர் கையில் கொடுத்தும் ஏன் இவ்வளவு காஸ்ட்லியான மலர்க்கொத்து என ஆச்சர்யப்பட்டார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவர் முன்னால் வெறுமனே அழுது கொண்டே இருந்தேன்.




எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். அதன் பின் அவர் படங்களை பார்த்தேன். அவர் படங்களை தாமதாக தெரிந்து கொண்டது எனக்குத்தான் நஷ்டம். அவருக்கு ஒன்றும் இல்லை.




தலைமுறைகள் படத்தை அவர் பாராட்டினாரா இவர் பாராட்டினாரோ என சிலர் பெயர்களை சொல்லி கேட்டேன்.. இல்லை என்றார். பாலச்சந்தர் எழுதிய கடிதம் மட்டும் காட்டினார். மிகச்சிறந்த பாராட்டுக்கடிதம்.




உங்கள் படங்களை பாலுவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ளாதீர்கள் .  ஐரோப்பிய சினிமா பாருங்கள். உங்கள் மீது எனக்கு இருக்கும் வெறுப்பை மாற்றுங்கள்







எனக்கு மணி ரத்னம் மேல் சின்ன கோபம் இருந்தது,,,ஓ காதல் கண்மணி படத்தை திட்டுவதற்காகவே அந்த படத்தை பார்க்க போனேன்.. ஆனால் அந்த படம் என்னை வென்று விட்டது. எனக்கு மிக மிக பிடித்து இருந்தது. அது போல உங்கள் படங்களால் என்னை வெல்லுங்கள்>




என்னை திருப்திப்படுத்தும் அளவுக்கு படம் எடுக்க முடியாது என சிலர் சொல்லலாம். ஆனால் என்னை திருப்திப்படுத்திய படங்கள் , இயக்குனர்கள் என நூறுக்கு மேல் என்னால் சொல்ல முடியும்...




போட்டிக்கான படங்களை பார்த்துவிட்டு பெஸ்ட் என நான்கு படங்களை பட்டியலிட்டேன். பார்த்தால் அதே படங்களைத்தான் மற்ற நடுவர்களும் தேர்ந்தெடுத்து இருந்தனர்.




நல்ல படம் என ஒன்று இருக்கிறது , அதை ரசிக்கவும் , அதை எடுக்கவும் சென்சிபிலிட்டி தேவை.... அதற்கு வாசிப்பும் , சினிமா பார்த்தலும் உதவும்




-______________




இதன் பின் லெனின் பேசினார். சாரு புத்தகங்களை படித்தாலே போதும் , நிறைய தெரிந்து கொள்ளலாம் என்றார். ஐரோப்பிய சினிமா பார்ப்பதன் அவசியம் , இலக்கிய வாசிப்பு என பலவற்றை தனக்கே உரித்தான முறையில் அழகாக சொன்னார். நேத்து ராத்திரி , அம்மா பாடலில் இருக்கும் ராகத்தை சொன்னது அழகாக இருந்தது.. தன் பாணியில் ஒரு பாட்டு பாடி பேச்சை முடித்தார் அவர்




பிறகு பரிசளிப்பு விழா நடந்தது

Wednesday, May 13, 2015

காமெடியாக போன கணக்கு விவகாரம் - உண்மை என்ன


தீர்ப்பு வந்தாலும் வந்தது, ஆதரித்தும் எதிர்த்தும் பலர் இதை கொண்டாடி வருகின்றனர்... இதில் உச்ச கட்ட காமெடி என்னவென்றால் கணக்கில் பிழை என்பதுதான்..
உண்மையில் பிழை எல்லாம் எதுவும் இல்லை...ஒரே ஒரு பக்கத்தை பார்த்தால் பிழை போல தெரியும்..   அதை வைத்து சிலர் இணையத்தில் எழுத , கலைஞரும் அதை நம்பி அறிக்கை வெளியிட்டு விட்டார்.. நாளை கோர்ட் அவமதிப்பு என்றால் அவர்தான் பதில் சொல்ல வேண்டும்... இணைய மொண்ணைகள் அல்ல...

சரி..என்னதான் குழப்பம்..

கடன் மூலம் 24 கோடி வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் நீதிபதி..ஆனால் கூட்டிப்பார்த்தால் 24 கோடி வரவில்லை...10 கோடிதான் வருகிறது...இதுதான் குற்றச்சாட்டு..

852ஆம் பக்கத்தில் இருப்பதை மட்டும் கூட்டினால் 10 கோடிதான் வரும் என்பது உண்மை..ஆனால் அவர் 851ஆம் பக்கத்திலும் சில விபரங்களை கொடுத்துள்ளார்

851ம் பக்கத்தில் இருக்கும் வரவு ---
73546000
8407172
5866500
2998500
600000
200000
200000
4135000
15700000
10000000
15000000
15000000
3400000
மொத்தம்...155053172 


அதேபோல 852ல் வரவு 10,67,31,274

மொத்தம் 26,17,84,446....

 இதில் Rs.24,17,31,274.00 மட்டுமே கன்சிடர் செய்யப்பட்டுள்ளது... ஏன் என்றால் தனியார் கடனை கன்சிடர் செய்யவில்லை.என்கிறார் அவர்.. அதையும் கன்சிடர் செய்தால் 26,17,84,44 வரும்...8 % என்பது இன்னும் குறையும்..


இன்னும் சில கடன்களை பட்டியலுக்கே கொண்டு வரவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் அவர்..

அதை எல்லாம் கொண்டு வந்தால் , ஜெயலலிதா தரப்புக்குதான் நல்லது...

இந்த பட்டியலில் இருப்பதை தவிர , மற்ற தனியார் கடன்களை தான் கன்சிடர் செய்யவில்லை என்பதை, பட்டியல் உட்பட எந்த தனியார் கடன்களையும் தான் கன்சிடர் செய்யவில்லை என நம் மேதாவிகள் புரிந்து கொண்டதே இந்த குழப்பத்துக்கு காரணம்..

இதை நம்பி கலைஞரும் அறிக்கை வெளியிட்டது உச்சகட்ட காமெடி

Monday, May 11, 2015

இணைய மொண்ணைகள் , நீதி கதை , கண்ணதாசன் - மிக்சர் போஸ்ட்

தனக்கு பின் தன் நிறுவனத்தை யாரிடம் ஒப்படைப்பது என யோசித்தார் முதலாளி.. மூன்று பேர் சம அளவு திறமையுடன் வாரிசாகும் தகுதியுடன் இருந்தனர்.. மூவரையும் அழைத்தார்.. சில விதைகளை கொடுத்தார்... மூவருக்கும் கொஞ்சம் நிலம் தரப்படும்... அதில் யார் அதிக விளைச்சல் காட்டுகிறீர்களோ அவனெ அடுத்த தலைவன்... மூவரும் ஒப்புக்கொண்டனர்,.
குறிப்பிட்ட காலத்துக்கு பின் முதலாளி போய் பார்த்தார்... அவர் கொடுத்த தானியம் ஒருவனது நிலத்தில் வளர்ந்து மணம் வீசியது.. இன்னொருவன் நிலமோ ஒன்றுமே இல்லாமல் சும்மா கிடந்தது..இன்னொருவன் நிலத்தில் அவர் கொடுக்காத இன்னொரு வகை தானியம் விளைந்து இருந்தது..
மூவரையும் அழைத்தார்.... நான் கொடுத்த விதைகள் வேக வைக்கப்பட்டவை...உங்கள் நேர்மையை சோதிக்கவே அப்படி செய்தேன்... எதுவும் விளைவிக்காமல் , காலி இடமாக வைத்து இருப்பவ்னே நேர்மையானவன்,,,, சரி, உங்க செயலை ஜஸ்டிஃபை செய்ய ஒரு சான்ஸ் ..சொல்லுங்க என்றார்.
பாஸ்.. அந்த விதையை விதைத்து தண்ணீர் பாய்ச்சினேன்..ஆனால் அது விளையவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியம்...எனவே அதேபோன்ற விதையை கடையில் வாங்கி ரிசல்ட்ட்டை காட்டி விட்டேன்... என்றான் ஒருவன்
பாஸ்.. அதை பார்த்தவுடனேயே , அது வேக வைக்கப்பட்டது என தெரிந்து விட்டது...வேக வைத்த விதைக்கு என சில பயன்பாடுகள் உண்டு , அந்த பயன்பாடு இருப்பபர்களுக்கு அதை விற்றேன்..அந்த காசில் வேறு வகை விதை வாங்கினேன் என்றான் ஒருவன்..
நேர்மை , வெல்லும் ஆர்வம் , சம்யோஜித தன்மை..இதில் எது முக்கியம் என அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்

जो दिल के अच्छे होते है, दिमाग वाले अक्सर उनका जम के फ़ायदा उठाते है
ஜோ தில் கே அச்சே ஹோத்தே ஹை, திமாங்க் வாலே அக்சர் உன்கா ஜம் கே ஃபாய்தா உத்டே ஹை
இதயம் மென்மையாக இருப்போரை , புத்தி கூர்மையாக இருப்போர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்

கலைஞர் கட்சி சார்பற்ற சில நூல்கள் எழுதியுள்ளார்.. அதில் ஒன்றுதான் , பேச்சாற்றலை வளர்ப்போம் எனும் புத்தகம்...
அதில் ஒரு பகுதி
-______________________________________________
சபை அறிந்து பேசுவது முக்கியம்.. அந்த கால கட்டத்தில் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் என்னை அழைப்பார்கள்>. என்னையே அழைத்தால் எப்படி.. நீங்களும் பேச கற்றுக்கொள்ளுங்கள்>. நான் எப்படி பேசுகிறேன் என கவனியுங்க்ள் என சொல்லி, கட்சியினர் சிலரை ஒரு கூட்டத்துக்கு அழைத்து போனேன்..பேசினேன்..
உடன்பிறப்ப்புகளே..உங்கள் முன் நின்று பேசும் இந்த கருணானிதியை தலைவன் என நினைக்காதீர்கள்>. நான் உங்கள் செருப்பு போன்றவன்.. உங்கள் கால்களை சுற்றி வரும் நாய் போன்றவன்,,,, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்..உங்களுக்காக உழைப்பேன்,,’
இப்படி பேசியதும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது
கட்சியினர் கவனித்தனர்
அடுத்த கூட்டத்தில் கட்சி தோழர் ஒருவர் பேசினார்.. நான் கவனித்தேன்..
உடன்பிறப்ப்புகளே..உங்கள் முன் அம்ர்ந்திருக்கும் கலைஞரை தலைவன் என நினைக்காதீர்கள்>.அவர் உங்கள் செருப்பு போன்றவர்.. உங்கள் கால்களை சுற்றி வரும் நாய் போன்றவர்,,,, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்..உங்களுக்காக உழைப்பார்
பேசியபின்புதான் கவனித்தார்..கூட்டத்தில் மயான அமைதி
எப்படி பேசக்கூடாது என்பதற்கு இது உதாரணம்,,’


தமிழர் ஒருவருக்கு இந்தோனேசிய அரசு வழங்கிய மரண தண்டனை வருத்தம் அளித்தது... அவர் என்னதான் குற்றம் செய்திருந்தாலும் , ஓர் ஓவியனாக உரு மாற்றம் அடைந்து , புதிய மனிதனாக மாறிய அவரை தண்டனைக்கு ஆளாக்கியதை ஜீரணிக்க முடியவில்லை...
அவருக்கு மரண தண்டனை என்பது அதீதம்தான்....
அதே நேரத்தில் , பெண் மீது ஆசிட் அடித்து கொன்றவனுக்கெல்லாம் மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற மொன்னைத்தனமும் சரிப்படாது...
மரண தண்டனைகளை முழுக்க ஒழிக்கக்கூடாது.. மன்னிப்பதா வேண்டாமா என முடிவு செய்யும் உரிமையை பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களிடம் விட்டு விடலாம்...இஸ்லாம் நாடுகளில் இந்த முறை இருக்கிறது...

பப்பீ..
கண்ணதாசனின் உயிரை மதுவருந்தியது..
அதை அறிந்தபின் மது வருந்தியது - வாலி

ட்ரெய்னில் செல்லும்போது பாட்டு கேட்பதில் மூழ்குவது , புத்தகம் படிப்பது , இணையத்தில் பிசியாக இருப்பது , செல்போனில் இருப்பது என எல்லாமே மொண்ணைத்தனம்தான்.. ஆனால் புக் படிப்பதை இதில் இருந்து மாறுபட்ட ஒன்றாக நினைக்க ஆரம்பிக்கையில் ஒரு மொண்ணை , இணைய மொண்ணையாக பரிணாம வளர்ச்சி பெறுகிறார்


கோடைக்காலத்துக்கும் பூமியின் நீள்வட்டப்பாதைக்கும் சம்பந்தம் இல்லை என முன்பே பார்த்தோம்... நீள் வட்ட பாதை காரணமாக பூமி சில மாதங்க்கள் சூரியனின் அருகில் இருக்கும்.. அதுதான் கோடை என சிலர் நினைக்கிறார்கள்... அதுவல்ல மேட்டர்.. பூமி தன் அச்சில் இருந்து சற்று சாய்ந்திருப்ப்பதே இதுக்கு காரணம்... ஜனவரி , ஜூலை ஆகிய இரு மாதங்களிலும் பூமி சூர்யனை விட்டு வெகு தொலைவில் இருக்கும்... ஆனால் வெப்ப நிலை மாறுபடுகிறது அல்லவா..
அச்சு , நீள் வட்டம் என இரன்டும் இருப்பதால்தான் வானில் பல சுவையான நிகழ்வுகள் நடக்கின்றன,,,, கண்ணுள்ளவன் காணக்கடவான்...

ட்ரைனில் என் இருக்கை இருக்கை எண்ணை தேடி சென்று அமர்ந்தேன்.. யாரேனும் தேவதை பக்கத்து சீட்டில் இருக்கும் வாய்ப்பு கிட்டுமா என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை... ஓர் இளைஞன் , இரு முதியவர்கள் என அந்த இடம் இருந்தது,,, அந்த இளைஞனை பார்த்தவுடனேயே மைல்டாக ஒரு டவுட் வந்தது,,,, அப்படி எல்லாம் இருக்காது என நினைத்தபடி ஒரு புக்கை எடுத்தேன்...
அட புக்கெல்லாம் படிப்பீர்களா.. எனக்கும் படிப்பு என்றால் உயிர் என்றான்... அப்போதுதான் எதிர் சீட்டில் பார்த்தேன்... என்னதான் கருப்புதான் நம் கலர் என சொல்லி ஆறுதல் அடைந்தாலும் சிவப்புக்கு நிகர் நிகர் மட்டுமே... அப்படி ஓர் அழகு சிலை... ஆர்ப்பாட்டம் அற்ற அழகு... அந்த நாசி..ச்சே... வாய்ப்பே..இல்லை... எதெனும் பேச்சு கொடுக்கலாமா என நினைத்த போது , சார், அமைப்பியலின் காலம் முடிந்து விட்டது என்ற கான்சப்ட் தப்பு என நினைக்கிறென்.. என்ன சொல்றிங்க் என்றான்... விளக்கினேன்.. சென்னையில்தான் வெயில் ..மற்ற இடங்க்களில் செம.. அதையும் ரசித்தேன்... ஆனால் முழுமையா ரசிக்கவிடாமல் , இலக்கியம் அரசியல் என விவாதிப்படி வந்தான் அவன்
கடைசியில்...
சார்.. நட்பு ரயில் நட்பு ஆகி விடக்கூடாது.. நான் முக நூலில் இருக்கேன்.. நீங்களும் என் நட்பில் சேர்ந்து விடுங்க்ள் என்றான்..
அடப்பாவி... என் சந்தேகம் சரியா போச்சே.. நீயும் ஓர் இணைய மொண்ணையா... அழகு சிலை.. இனிமையான மழை என ரசிக்கவிடாமல் செய்யும்போதே சந்தேகப்பட்டேனே என நினைத்தபடி , நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முந்தைய ஸ்டேஷனிலியே இறங்கி மிச்ச தூரத்தை பேருந்தில் கடந்தேன்


Sunday, May 10, 2015

மெத்தட் ஆக்டிங் , டாடா , லட்சுமி மேனன் தேர்வு முடிவு- மிக்சர் போஸ்ட்

தேர்வு வாரியம் எனும்
தேவையற்ற அமைப்பு
ஃபெயிலாக்கியது உன்னை
ஆனால் மயிலே..
எங்கள் மனதில் உனக்கு 
எப்பவுமே பாஸ் மார்க்தான்
கண்களால் கணக்கு பண்ணும்
உன்னை கணக்கில் ஃபெயிலாக்கிவிட்டனர்
மெக்காலே சிஸ்டம் தப்பு என்பதை
இப்போதாவது உலகம் உணரட்டும்..
மார்க் குறைவாக வாங்கினாலும்’
மார்க் உருவாக்கிய
முக நூலும்
அதன் மொண்ணைகளும்
எப்போதும் உனக்கே ஆதரவு
- கண்ணீருடன்
பிச்சை மேனன்


நீ ஃபெயில் ஆகவில்லை
காரணம் நீ படிப்பது
ஸ்டேட் போர்ட் அல்ல
சி பி எஸ் சி என அறிந்தேன்
அடடா !!!!!
ஃபெயில் ஆகி விட்டதே
ஸ்டேட் போர்ட் !!!!!
ஆதங்கத்துடன்
பிச்சை மேனன்

ஒரு நோயாளி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் உண்மையிலேயே தனக்கு நோயை வர வைத்து , தத்ரூபமாக நடிக்க கூடியவர் விக்ரம். ஆனால் சிவாஜி இதை ஏற்கவில்லை.. தம்பி , மெத்தட் ஆக்டிங் என்பது இது அல்ல.. நீ நீயாகவே இருந்து , யதார்த்த வாழ்வியல் நபர்களை கவனித்து, கேரக்டர் போல ஆடியன்சை நம்ப வைப்பதே நடிப்பு திறமை.. உன்னை உருக்குலைத்து கேமிரா முன் நிற்பது நடிப்பல்ல என சொன்னார்.. இது அப்போது விவாதத்தை கிளப்பியது..
ஞாநி நடத்தும் கேணி கூட்டத்தில் சிவகுமாரின் பேச்சு நடிப்பு என்பதை வெகு அழகாக விளக்கியது.. கிராபிக்ஸ் , நவீன மேக் அப் சாதனங்க்ள் போன்றவை ஏதும் இன்றி , கேரக்டரை அப்சர்வ் செய்து நடித்து காட்டிய சிவாஜியின் மேதைமையை விளக்கினார்...
டீச்சர் பற்றியும் , சுகாசினி பற்றியும் பேசும் பலர் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ப்ரியாரிட்டி

பிச்சைக்கார நாட்டின் ஊதாரித்தனமும் பணக்கார நாட்டின் பண்பும்
ரத்தன் டாடா சொல்கிறார்..
ஜெர்மனி போய் இருந்தோம்.. உணவகத்தில் கூட்டம் இல்லை.. இருந்தவர்களும் கொஞ்சமாக ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள்... எஙகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது...பணக்கார நாட்டில் இப்படி அளவாக சாப்பிடுவது ஆச்சர்யமாக இருந்தது..
எங்களுக்கு செம பசி... நிறைய ஆர்டர் செய்தோம்.. சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்...
பணியாட்கள் எங்கள் தட்டில் மிச்சம் உணவு இருப்பதை சுட்டிக்காட்டி சண்டை போட்டனர்.. “ அட கேப் வெண்டை.. நாங்க காசு கொடுத்து விட்டோம்.. சாப்பிடுவோம்.. சாப்பிடாமல் போவோம் .. அதை கேட்க உனக்கு உரிமை இல்லை ‘ என என் உதவியாளர் பதிலடி கொடுத்தார்... அந்த பணியாள் யாருக்கோ போன் செய்தார்,
கொஞ்ச நேரத்தில் பாதுகாவலர்கள் வந்தனர்... என்னவென விசாரித்தனர்.. எங்களிடம் சொன்னார்கள் .... அட கேப்வெண்டைகளுக்கு பேன் பார்த்த கேப் வெண்டைகளா... எவ்வளவு சாப்ப்பிட முடியுமோ , அதை மட்டும் ஆர்டர் செய்யுங்கள்>.. காசு உங்களதாக இருக்கலாம்.. ஆனால் ரிசோர்ஸ் எங்களுடையது... எங்க ரிசோர்சை வீணடிக்க உங்க்ளுக்கு உரிமை இல்லை..உலகில் பற்றாக்குறையால் பலர் வருந்தும் நிலையில் இப்படி வீணடிப்பது குற்றமாகும் என சொல்லி விட்டு 50 யூரோ ஃபைன் போட்டு விட்டனர்,,


பாகிஸ்தான் வீரர்க்கு , இந்திய வீரர் உதவுவது போன்ற விளம்பரம் செயற்கையாக இருப்பதாக சிலர் சொல்வதை பார்க்க முடிகிறது... அதற்குள் போக விரும்பவில்லை.. இன்னொரு மேட்டர்.
1934 ஒல்ம்பிக் ஜெர்மனியில் நடந்தது.. தன் நாடு வெல்ல வேண்டும் என்பதற்காக ஹிட்லர் பெரு முயற்சி எடுத்து வந்தார்..
நீளம் தாண்டுதலில் வெல்ல லஸ் லாங் என்பவரை தயார் செய்து வந்தார்... எப்படியாவது வெல்ல வேண்டும் என கடும் பயிற்சி வழங்கப்பட்டது..
அமெரிக்கரான ஜெசி ஓவன்ஸ் அவருக்கு போட்டியாளர்... முதல் இரண்டு சுற்றில் ஓவன்ஸ் திணறினார்... எதிரி என்று பார்க்காமல், லாங் அருகே போய் சில டிப்ஸ் வழங்கினார்.. ஓவன்ஸூக்கு உயிர் வந்தது போல இருந்தது
கடைசியில் அவரே தங்கம் வென்றார்..
நேசத்துக்கு எல்லைகள் இல்லை

Saturday, May 9, 2015

கண்ணதாசன் , வாலி , முல்லா , சினிமா - கலவை போஸ்ட்

அறிவோம் இலக்கணம்
மங்கல சொல் என்றால் என்ன ... உதாரணத்துடன் விளக்கவும்
மகிழ்ச்சி தரும் செய்திகளைக் குறிப்பிடுவது மங்கலம் எனப்படும். மங்கலம் இல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால், பண்பாடு கருதி, மங்கலமாகச் சொல்லுதல் மங்கலம் எனப்படும்.
ஒரு படம் குப்பை என்றாலும் அப்படி சொல்லிவிடலாகாது... படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் , யூத்களுக்கான படம் , காதலித்தால் மட்டுமே படம் புரியும் , பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் , அறிவாளிகளுக்கு மட்டுமே புரியும் , சில ஆண்டுகள் கழித்து பிடிக்கும் என சொல்வதே மங்கலம் எனப்படும்

வெளியூர் பேருந்தில் போய்க்கொண்டு இருந்தேன்..சிலருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டி இருந்தது,,, ஒருவருக்கு அனுப்பினேன்.. ஒரு ரூபாய் செலவானது.. என்னிடம் இருந்த பேலன்ஸ் 50 ரூபாய்தான்.. எனவே ஒரு ரூபாய் கட்டுபடியாகாது.. ஏதேனும் மெசேஜ் பேக் போடலாம் என நினைத்து , ஒரு நண்பருக்கு மெசேஜ் தட்டிவிட்டேன்..
அவர் பதில் அனுப்பினார்... இந்த நம்பரை அழையுங்கள்..பேக் ஆக்டிவேட் ஆகும்...ஐந்து ரூபாய்தான்.. ஒரு நாள் முழுக்க ஃப்ரீ என்றார்,,,
சரி என அந்த நம்பரை அழுத்தினேன்..ஆனால் தப்பான நம்பர் என மெசேஜ் வந்தது. என்ன இப்படி வருது என கேட்டேன்..
சரியான நம்பர்தானே.. நம்பர் முன்னும் பின்னும் ஸ்டார் போட்டீர்களா என கேட்டு மெசேஜ் அனுப்பினார்.
நன்றி என சொல்லி விட்டு ஸ்டார் போட்டு அனுப்பினேன்... அப்போதும் வரவில்லை... வரலையே என கேட்டேன்..
கடைசியில் ஸ்டார் வராது # வரும்.. லேசா மாற்றி சொல்லி விட்டேன் என்றார்..
என்னது..லேசா மாத்திட்டீங்களா என நினைத்தவாறு அவர் சொன்னபடி செய்தேன்,.. அப்போதும் வரவில்லை..
வரலையே என கண்ணீர் மல்க மெசேஜ் அனுப்பினேன்..
நான் காலையில்கூட செய்தேனே.. நம்பர் ககர்க்ட்தான்.. உங்க நம்பர் ஏர் செல்தானே என்றார்.. இல்லையே ஏர் டெல் என்றேன் அதிர்ச்சியுடன்...
அப்ப , இந்த நம்பர் போடுங்க என்றார்.. அப்பவும் வரவில்லை..
வரலையே என்றேன் விரக்தியுடன்..
போஸ்ட் பேய்டா ,ப்ரீ பேய்டா என மெசேஜ் அனுப்பினார்.. அதற்குள் எல்லா பேலன்சும் காலி ஆகி விட்டது..
என்னை விடுங்க , இனிமேல் என்னிடம் காசு இல்லை என கடைசி மெசெஜ் அனுப்பினேன்.. அதன் பின் நிம்மதியாக பயணித்தேன்

பப்பீ..
கண்ணதாசனின் உயிரை மதுவருந்தியது..
அதை அறிந்தபின் மது வருந்தியது - வாலி
மொழிப்பற்று தேவை இல்லை என நம் ஆட்கள் பலர் நினைக்கின்றனர்.. ஆனால் வளர்ந்த நாடுகள் அனைத்துமே தம் மொழிகளை நேசிக்கக்கூடியவை..
ஒரு ஃபிரென்ச் கதை.. மொழி மீதான் காதலை சொல்லும் கதை

முல்லாவின் மனைவி அவருக்கு கருவாட்டு குழம்பு எடுத்து வந்தாள்... முல்லா சாப்பிட்டு முடித்தார்..
- குழம்பு எப்படி இருந்துச்சுங்க.. பக்கத்து வீட்டு அக்கா கொடுத்தாங்க என்றாள் அவள்
-ரொம்ப சரியான டேஸ்ட்ல இருந்துச்சு என்றார் முல்லா
- என்ன சொல்றீங்க குழம்பினாள் அவள்
- ஆமா.. கொழம்பு இதை விட நல்லா இருந்துச்சுனா , அவ நமக்கு கொடுத்து இருக்க மாட்டா.. அவளே சாப்பிட்டு இருப்பா,... இதை விட கேவலமா இருந்தா , நான் சாப்பிட்டு இருக்க மாட்டேன்... எவ்வளவு டேஸ்ட்டா இருக்கணுமோ கரெக்ட்டா அவ்வளவு டேஸ்ட்டா இருந்துச்சு என்றார் முல்லா


___________________________________
அவர் ஒரு மிகச்சிறந்த ஃபிரெஞ்ச் ஆசிரியர்.. மிகவும் கண்டிப்பானவரும் கூட.. அந்த கண்டிப்பு பிடிக்காமல் ஒரு மாணவன் மட்டும் அவர் வகுப்புகளுக்கு செல்வதே இல்லை..
அப்போது ஒரு போரில் ஜெர்மனி , ஃப்ரான்சை பிடித்து விடுகிறது... இனி பள்ளிகளில் ஃபிரெஞ்ச் கூடாது.ஃபிரென்ச் ஆசிரியர்களுக்கு வேலை இல்லை..இனி ஜெர்மன் மட்டுமே இருக்கும் என சொல்லி விடுகின்றனர்,
அந்த ஃபிரென்ச் ஆசிரியரின் கடைசி வகுப்பு நடக்கிறது..அந்த மாணவனும் வருகிறான்.. தன்னை தண்டிப்பாரோ என அஞ்சுகிறான்..
அவர் பாடம் எடுக்க ஆரம்பிக்கிறார்..அந்த மாணவனுக்கு ஒரே சந்தோஷம்..அட நம் மொழி இவ்வளவு அழகானதா... இவ்வளவு இனிமையானதா என மகிழ்கிறான்..
நம் முதல் வகுப்பே இவ்வளவு சூப்பரா இருக்கே என செம மகிழ்ச்சி.. ஆனால் கொடுமை என்னவென்றால் , அது அவன் முதல் வகுப்பு மட்டும் அல்ல..கடைசி வகுப்பும்கூட

பப்பீ
உங்களை மரியாதை தெரியாத இலக்கிய ரவுடி என சிலர் சொல்கிறார்களே/?
ஜெயகாந்தன் - எவன் அவன் அப்படி சொன்னது /?

ஒரு மொண்ணைக்கு கொரியர் அனுப்பினேன்... போய் சேர்ந்ததும் கொரியர் ஆஃபிசில் இருந்து போன் வந்தது.. சார்.. நீங்க கொடுத்த நம்பர்ல கால் பண்ணி பார்த்துட்டோம்..யாரும் எடுக்கலை என கண்ணீர் மல்க சொன்னார்கள்>.
அட கேப் வெண்டை.. போன் வந்தா எடுக்க மாட்டியா என மனதில் திட்டிக்கொண்டு அவருக்கு போன் செய்தேன்.. அவரோ எதுவும் தெரியாத மாதிரி பேசினார்.. அப்பதான் விபரம் புரிந்தது,, அந்த கொரியர் நிறுவனம் போன் செய்யாமல் சும்மா அடித்து விட்டு இருக்கிறார்கள் ..அட கேப் வெண்டைகளா என மனதில் திட்டிகொண்டேன்..
ஒருவழியாக அவருக்கு கொரியர் கிடைத்ததும் கொரியர் கவரில் இருந்த நம்பரை எனக்கு அனுப்பி , தக்காளி இது யார் நம்பர்... கொரியர் நிறுவனத்தில் கால் செய்து கால் செய்து நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டார்களாம் என புலம்பினார்..
கவரில் நான் எழுதியதாக அவர் கொடுத்த நம்பர் யார் நம்பர் என எனக்கும் புரியவில்லை...
பிற்குதான் புரிந்தது... நள்ளிரவில் ஒரு டீவி சானலில் ஒரு கவர்ச்சி ஆடை அணிந்த பெண் பேசுவார்.. எப்ப வேணும்னாலும் என்னிடம் பேசுங்க...என ஒரு நம்பர் கொடுப்பார்... எத்ற்கும் இருக்கட்டும் என போனில் பதிந்து வைத்தேன்... தக தக என தக்காளி போல இருந்ததால் , டொமேட்டோ என பதிந்து வைத்திருந்தென்,.
கொரியர் கவரில் பொட்டேட்டோ என பதிந்த மொண்ணை நம்பருக்கு பதில் , டொமேட்டோ நம்பரை எழுதி தொலைத்து விட்டேன்.. அந்த எண் இரவில் மட்டுமே வேலை செய்யும் என்பதால் , என் மானம் காப்பாற்றப்பட்டு விட்டது...
அட கேப் வெண்டைக்கு பேன் பார்த்த கேப் வெண்டை என என்னை நானே திட்டிக்கொண்டேன்

Thursday, May 7, 2015

அவகாட்ரோ எண் , அறிவியல் , சுய வரலாறு - மிக்சர் போஸ்ட்

என் போஸ்ட் ஒன்றை ஒருவர் படித்து தன்னை மறந்து சிரித்து விட்டாராம்.. தற்செயலாக அந்த பக்கம் வந்த அவர் மனைவியும் அதை படித்து விட்டு , என்ன இவ்வளவு மொக்கையா இருக்கு,.. இதை ரசிக்கிறீர்களே ..ஒரு வேளை இவர் உங்க நண்பரா என கேட்டாராம்..
அவருக்கு என்னை தன் நண்பன் என சொல்ல பிரஸ்டீஜ் இடம் கொடுக்கவில்லையாம்.. ச்சே..ச்சே...என்னம்மா இப்படி கேட்டுட்ட,... இந்த கருமம் பிடிச்சவன் என் நண்பனா.. ச்சே ச்சே.. எனக்குனு ஒரு லெவல் , ஒரு ரசனை இருக்கும்மா..இவனை எனக்கு தெரியவே தெரியாது..சும்மா தற்செயலா இப்பத்தான் பார்க்கிறேன் என்றாராம்.
மனைவி சிரித்தபடி , சரி , ஓவரா சீன் போடாதீங்க.. எத்தனை நாள் ஃபிரண்ட்ஸா இருக்கீங்க..அதை சொல்லுங்க என்றாராம்...
இதை அந்த அப்பாவி கணவனே என்னிடம் சொன்னார்.. பெண் புத்தி பின் புத்தி என நினைத்துக்கொண்டேன் ( பின் புத்தி= ஷார்ப் மைண்ட் )

---------------------------------------------------------------
எடிங்க்டன் என்றோர் அறிவியல் மேதை அந்த காலத்தில் இருந்தார்.. நமக்கெல்லாம் சின்ன வயதில் இருந்தே பெண்கள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் அவருக்கோ சின்ன வயதில் இருந்தே எண்கள் மீது ஆர்வம் அதிகம். சின்ன வயதிலேயே 24ஆம் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்தார். பைபிளின் மொத்த வார்த்தைகளை எண்ணினார். பிற்காலத்தில் நட்சத்திரங்களின் தூரம், பிரபஞ்சத்தின் சுற்றளவு என பலவற்றை கண்டு பிடித்தார்..
அவர் வாழ்வில் ஒரு சுவையான நிகழ்ச்சி..
ஒரு முறை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் பேசினார்..
நண்பர்களே.. நட்சத்திரங்களின் எடை என்பது சுவாரஸ்யமானது .. சூரியனின் எடை எவ்வளவு என்பதை எழுதிக்காட்டுகிறேன் பாருங்கள்
சூரியனின் எடை 2000000000000000000000000000 டன்கள் ஆகும்.
சீரோவை சரியாக எழுதி இருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனாலும் எனக்கு தெரியும். சில சீரோக்கள் குறைவாக இருந்தாலோ , சில அதிகமாக இருந்தாலோ உங்களை பொருத்தவரை அது பெரிய விஷ்யம் இல்லை... ஆனால் இயற்கையை பொருத்தவரை அது பெரிய விஷயம்
--------------------------------------------
பப்பி
அறிவியல் மேதைகள் மயோரானாவும் ஃபெர்மியும் பேசிக்கொண்டு இருந்தனர்
ம - 500 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பிறக்கும் மேதைகள் உண்டு . ஆர்க்கிமிடிஸ் நியூட்டன் போல... நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் மேதைகளும் உண்டு.. ஐன்ஸ்டீன். நீல்ஸ் போர் போல
ஃபெர்மி - இதில் நான் எந்த வகை
ம- மொண்ணைத்தனமாக பேசாதீர்கள். நான் உங்களை பற்றியோ என்னை பற்றியோ பேசவில்லை. ஐன்ஸ்டீன் , நீல்ஸ்போர் பற்றி பேசுகிறேன்

-----------------------
அவகாட்ரோ எண் என்பது முக்கியமான் ஒன்று மட்டும் அல்ல.. சுவராஸ்யமான ஒன்றும் கூட... என்ன அது /?
எளிமையாக இப்படி சொல்லலாம்...
நமக்கு தெரிந்த எந்த ஒரு பொருளின் ஒரு பகுதியை , அதன் மூலக்கூறு எடைக்கு சமமான ஒரு பகுதியை எடுத்து பார்த்தால் , அதன் அணுக்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும்.. எத்தனை இருக்கும் என்றால்6.022×10 ^ 23.
உதாரணமாக தாமிரத்தின் அணு எடை 64... அதாவது 64 கிராம் தாமிரத்தை எடுத்துப்பர்த்தால் 6.022×10 ^ 23 இவ்வளவு அணுக்கள் இதில் இருக்கும்... அதாவது 602300000000000000000000 இத்தனை அணுக்கள் !!!!!!!
12கிராம் கார்பனை எடுத்துபார்த்தாலும் இதே எண்ணிக்கையிலான அணுக்கள் இருக்கும்.
இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் அணுக்கள் இருந்தாலும் , அவற்றுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்கை கண்டு பிடித்து இருப்பதுதான் அவகாட்ரோவின் தனி சிறப்பாகும்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா