Tuesday, October 30, 2012

பதவியை ராஜினாமா செய்ய தயாரா - விஜயகாந்துக்கு தேமுதிக எம் எல் ஏக்கள் சவால்!!

பதவியை ராஜினாமா செய்ய தயாரா என தே மு தி க ( ஜெ) எம் எல் ஏக்களும் , விஜயகாந்தும் பரஸ்பரம் சவால் விட்டு கொண்டது தி முக வட்டாரத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை தே மு தி க எம் எல் ஏக்கள் சந்த்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாதாரண சந்திப்புதான் என அவர்கள் கூறினார்கள். ஆனால் சட்டசபையில் தனி இருக்கை ஒதுக்கீடு , தேவர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டது போன்றவை , இது சாதாரண சந்திப்பு இல்லை என்பதை உணர்த்தியது.

 இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தே மு திக கொறடா , ஒரு வீட்டில் குடி இருந்து விட்டு காலி செய்வதாக இருந்தால், அந்த வீடு குடியேறும்போது எப்படி இருந்ததோ அப்படியே விட்டு விட்டு செல்ல வேண்டும். குடியேறும்போது இருந்த பொருட்களை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்ல கூடாது. இந்த எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்திப்பதாக இருந்தால் , தே மு தி கவால் பெற்ற பதவியை ராஜினாம செய்து விட்டு சென்று இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியுள்ள தேமுதிக ( ஜெ ) எம் எல் ஏக்கள்  சுந்தரராஜன் மற்றும் மைக்கேல் ராயப்பன் , இந்த லாஜிக்கை ஒப்புக்கொள்வதாக சொன்னார்கள்.இதே லாஜிக்கை பயன்படுத்தி , அதிமுக கூட்டணியால் கிடைத்த எதிர் கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் தே மு திக உடைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இப்போது அந்த நால்வர் கட்சி தாவ இயலாது. கட்சி தாவல் தடை சட்டம் பாயும் . எனவே இன்னும் சிலரை இழுத்து செல்ல முயல்வார்கள்.

இப்படி ஒரு கோஷ்டி வெளியேறுவதை தடுக்க வேண்டுமானால் , இந்த நால்வரை விஜயகாந்தே வெளியேற்றிவிடலாம். இதனால் பெரிய பிளவு தடுக்கப்படும்.

எப்படி இருந்தாலும் , விஜயகாந்தின் எதிர் கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்துதான். எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு மு க ஸ்டாலினுக்கு கனிந்து வருகிறது. அவர் எதிர்க்கட்சி தலைவர் ஆனால் , விஜய காந்தை விட சிறப்பாக- அவ்வளவு ஏன் , கலைஞரை விட சிறப்பாக கூட - அவர் செயல்படுவார் என பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு பெரிய தலைவலியாக இருப்பது மட்டுமல்லாது, ஒரு பெரிய தலைவராகவும் அவர் உருவெடுக்கும் வாய்ப்பு இதனால் உருவாகும். எனவே தே மு தி கவை இப்படி விட்டு வைப்பதே அதிமுகவுக்கு நல்லது.

ஆனால் இதை எல்லாம் யோசிக்கும் நிலையில் ஜெ யோ, இதை தடுக்கும் நிலையில் விஜயகாந்தோ இல்லை. இருவருமே தற்காலிக கோப தாப அடிப்படையிலேயே செயல்படுகின்ற்னர்.


இதை திமுக கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ளுமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


Saturday, October 27, 2012

ராசலீலா படிப்பதாக ஜெயமோகனின் தளபதி உறுதிமொழி- ருசிகர சந்திப்பு அனுபவம்


கிளுகிளுப்பாக எழுதுவது , இரட்டை அர்த்த தலைப்புகள் வைப்பது , சீரியசான விஷ்யங்களை தவிர்ப்பது , டீக்கடை அரட்டைக்கு உரித்தான டாப்பிக்குகளை எடுத்து கொள்ளுதல் , வம்புச்சண்டை , அவதூறு போன்றவை எதுவும் இல்லாமல் பதிவுலகில் வெற்றிக்கொடி நாட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.  தற்காலிக சுவாரஸ்யங்களுக்கோ , பரபரப்புக்காகவோ இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் படிக்க கூடிய வகையில் எழுதுபவர்கள் இன்னும் வெகு சிலரே..

இந்த சிலரில் முக்கியமானவர் திரு கோபி ( http://ramamoorthygopi.blogspot.in  )

இலக்கியம் , ஆன்மீகம் , சினிமா , பயணங்கள் , வாழ்வியல் அனுபவங்கள் என ரசித்து எழுதுபவர். ரசிக்கும் வகையில் எழுதுபவர்.  தனது இனிமையான கால கட்டங்களை மட்டும் அல்ல , தனது கஷ்டமான கால கட்டங்களையும் மறைக்காமல் எழுதுபவர்.

என் பதிவுகளில் , என்னை திட்டி வரும் பின்னூட்டங்களையும் அப்படியே வெளியிடுவது என் வழக்கம் . அப்படி ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டு இருந்தேன்.

கோபியிடம் இருந்து கால் வந்தது. அந்த குறிப்பிட்ட பின்னூட்டம் இன்னொரு பதிவரை இழிவு செய்வது போல இருக்கிறது. தயவு செய்து அதை நீக்கி விடுங்கள் என மிகவும் மென்மையாக கேட்டுக் கொண்டார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஒரு பின்னூட்டத்க்துக்காக இவ்வளவு அக்கறை எடுத்து எஸ் டி டீ போட்டு பேசிகிறாரே.. அதுவும் இன்னொருவர் சம்பந்தப்பட்ட விஷயத்துக்காக.

அந்த பின்னூட்டத்தை கவன குறைவால் அனுமதித்து இருந்தேன். யாரேனும் பார்த்தால் என்னையும் தவறாக நினைக்க கூடும். கோபியின் அக்கறைக்கு மதிப்பளித்து உடனடியாக அந்த பின்னூட்டத்தை நீக்கினேன்.

இப்படி அவர் மீதான மரியாதை அதிகரிக்க பல சம்பவங்களை சொல்லலாம். ஒரு முறை , ஒரு புத்தக கண்காட்சியில் சில நொடிகள் சந்தித்து இருக்கிறோம். அதன் பின் சந்திக்க முடியவில்லை.

இதற்கிடையே எழுத்தாளர் ஜெயமோகனின் முக்கிய தளபதிகளில் ஒருவராகவும் உருவெடுத்தார். ஜெயமோகன் வாசகர் சந்திப்புகளில் கோபியின் கட்டுரை விவாதிக்கப்படும் அளவுக்கு முக்கிய பிரமுகராக மாறினார்.

அதன் பின் ஏனோ தெரியவில்லை , அவர் சென்னை வந்தாலும் என்னை தொடர்பு கொள்வதும் இல்லை , சந்திப்பதும் இல்லை. சென்னை வந்து விட்டு சென்றதே , அவர் பதிவுகளை படித்துதான் எனக்கு தெரிய வரும் .

இந்த நிலையில் அவர் வெளினாடு சென்று விட்டார். இனி சந்திக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். ஆனால் இனிய திருப்பமாக, நேற்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வெளி நாட்டில் இருந்து , விடுமுறைக்காக ஊருக்கு சென்னை வழியாக செல்கிறார்.  எனவே சென்னையில் சந்திக்க முடிந்தது.

வெகு நாள் கழித்து சந்தித்தாலும், வெகு நாள் நண்பர் போல அதிரடியாக பேச ஆரம்பித்தார். எனவே என்னாலும் இயல்பாக பேச முடிந்தது.  நன்றாக இருக்கிறீர்களா, ஊரில் மழையா, மாடு கன்று போட்டதா என்றெல்லாம் பேசி , பல்ஸ் பார்த்து விட்டுத்தான் நம் மக்கள் விஷ்யத்துக்கு வருவார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் நேரடியாக பேச்சை ஆரம்பித்ததால் பல விஷ்யங்கள் பேச முடிந்தது.

சாருவை அளவுக்கு அதிகமாக நான் புகழ்வதாக சொன்னார். சாருவை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. அளவுக்கு குறைவாகத்தான் பாராட்டுகிறேன் என சொல்லி அதற்கு காரணங்க்ளையும் விளக்கினேன். ராசலீலா படித்தால்  , அவரும் சாரு வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவார் என சொன்னேன். ஊருக்கு போகும்போது கண்டிப்பாக ராசலீலா எடுத்து போய் படிப்பதாக சொல்லி இருக்கிறார்.

இலக்கியம் , உலக அரசியல் , இந்தியா , வேலை என பல விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு முறை என நண்பன் ஒருவனை , சென்னையில் இருந்து டில்லி செல்ல , வழியனுப்ப விமான நிலையம் சென்று இருந்தேன்.  நேரம் இருந்ததால் , வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் . பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போனதை கவனிக்கவில்லை. திடீரென நேரம் பார்த்தபோது , தாமதமாகி விட்டது. செல்ல வேண்டிய விமானத்தில் ஏற முடியவில்லை. அது பறந்து செல்வதை சோகத்துடன் பார்த்தோம்.

அதேபோல ,  நேற்றும்  ரயிலை தவற விட்டு இருப்போம். நல்ல வேளையாக கடைசி நேரத்தில் கவனித்து , கிளம்பி நகரத்தொடங்கிவிட்ட ரயிலில் பாய்ந்து ஏறி டாட்டா காட்டினார்.

அவர் காரசாரமாக பேசினாலும் , கடைசியில் ஸ்வீட் கொடுத்ததால் , இனிமையான நினைவுகளுடன் வீடு திரும்பினேன்.

Wednesday, October 24, 2012

பிரமணாள் கஃபே , ஜனனி அய்யருக்கு எதிர்ப்பு சரியா ?

பிரமணாள் கஃபே என்ற உணவு விடுதியை எதிர்த்து பேர் மாற்ற சொல்லி போராட்டம் நடந்ததாக செய்தி வந்தது . அதே போல ஜனனி அய்யர் என்ற பெயரில் இருக்கும் ஜாதி அடையாளத்தை நீக்க சொல்லி ஓர் இயக்குனர் அட்வைஸ் கொடுத்ததாகவும் இன்னொரு செய்தி.


ஜாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் மேற்கண்ட இரு விஷ்யங்கள் ஜாதி வெறிக்கு எதிரானதா ?

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போர் உக்கிரமாக நடந்த கால கட்டம். அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கும் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலையில், சிலர் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு அதுவா உரிய நேரம்?

இலங்கையில் மொழி ரீதியாக , இன ரீதியாக தாக்குதல் நடந்தது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு மத ரீதியாகவும் தாக்குதல் நடந்தது , நடந்து வருகிறது. இந்த விஷ்யத்தை சரியானபடி ஃபோக்கஸ் செய்து இருந்தால் , வட இந்தியர்களும் இந்த பிரச்சினையில் ஈடுபாடு காட்டி இருப்பார்கள். இலங்கை வரலாறே மாறி இருக்க கூடும்.,

சமீபத்தில் இந்த விஷ்யத்தை புரிந்து கொண்ட வைக்கோ , பிஜேபி கோட்டையான மத்திய பிரதேசத்தில் , இலங்கையில் நடக்கும் மத ரீதியான அத்துமீறல்களை பேசி அங்குள்ளவர்களின் ஆதரவை அள்ளியதை மறந்து விட முடியாது.

தமிழ் உணர்வு , ஜாதி எதிர்ப்பு போன்றவை உன்னதமானவை என்றாலும் , அதை வெளிப்படுத்துவதில் நிதானம் தேவை.

ஜனனி அய்யர் என்ற நடிகை மட்டுமா ஜாதி அடையாளத்தை வைத்து இருக்கிறார். சினிமா துறையில் பலர் இந்த பாணியில் பெயர் வைத்து இருக்கிறார்கள் , இவருக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்தால் , ஒட்டு மொத்தமாகவே ஜாதி ஒழிப்பின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுமே?

சைவ உணவு விடுதி என்பதை சொல்ல பிரமணாள் விடுதி என்கிறார்கள் . மற்றபடி அங்கு சாப்பிட வேண்டுமானால் , ஜாதி சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. வியாபாரம் ஆனால் போதும் என்றுதான் அவர்கள் நினைப்பார்களே தவிர , ஜாதியைக்காட்டி வாடிக்கையாளர்களை தடுத்து , வியாபாரத்தை பாழாக்க மாட்டார்கள். ஒவ்வொருவரின் ஜாதியை கண்டுபிடித்து அனுமதிப்பது சாத்தியம் அற்றது.


பல்வேறு ஜாதிப்பெயர்களிலும் உணவகங்கள் உள்ளன. அந்தந்த ஜாதியினர்தான் அங்கு சாப்பிட முடியும் என்ற நிலை கிடையாது. இதெல்லாம் பிராண்ட் மட்டும்தான். ஓர் அடையாளம்தான். இதையெல்லாம் எதிர்ப்பது ஜாதி ஆதிக்க எதிர்ப்பு என்ற நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்.

இது போன்ற தேவையற்ற விஷ்யங்களில் கவனம் செலுத்துவதால் , உண்மையாக ஜாதி வெறி ஆதிக்கம் செலுத்தும் இடங்களை காணாமல் போகிறோம்.

பணியிடங்கள் , சினிமா , பத்திரிக்கைகள் போன்றவற்றில் எல்லாம் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும்?

புயலிலே ஒரு தோணி என்று ஓர் உலகத்தரமான நாவல் .  இது அந்த காலத்தில் ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது , நாவல் போட்டிக்காக. உன்னதமான நாவலாக இருந்தாலும் ,  நடுவர் குழுவினர் இந்த நாவலை விரும்பினாலும் , அந்த நாவலுக்கு பரிசு கிடைக்கவில்லை. காரணம் அதை எழுதிய ப சிங்காரம் , பிரமணர் இல்லை.


எம் ஜி ஆர் , ரஜினி , கமல் என பலருடன் இணைந்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் ஏ ஜெகனானாதன் , அவ்ரே வாய்ப்பு கேட்டும் கூட விகடனில் அவருக்கு அனுபவ கட்டுரை எழுத வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. காரணம் அவர் பிராமணர் இல்லை.


சந்திரமுகியும் , மும்பை எக்ஸ்பிரசும் ஒரே நேரத்தில் வெளியாகின. இதில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது , ப்லரின் பாராட்டுகளை பெற்றது சந்திர முகி.  கமலே விரும்பாத படம் மும்பை எக்ஸ்பிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் விகடனில் , மும்பை எக்ஸ்பிரசுக்குத்தான் அதிக மதிப்பெண் கொடுத்தார்கள். காரணம் கமல் பிராமணர்.

இது ஓர் உதாரணம்தான் . சக்தி வாய்ந்த ஊடகங்கள் ,  நிறுவனங்கள் ஜாதி வெறியுடன் நடந்து கொள்வதை கவனிக்க தவறி விட்டு,  அபாயம் இல்லாத உண்வகங்களையும் , நடிகைகளையும் எதிர்ப்பது கேலிக்கூத்து.


Tuesday, October 23, 2012

பீட்சா- நல்ல படம்தான் . ஆனால்....


அனுமதி வாங்காமல் மொழி பெயர்ப்பு படங்கள் எடுத்து வெளியிடும் கமல் போன்றவர்களால் தமிழ் படங்கள் பார்க்கும் ஆவலே போய் விட்டது. ஆனாலும் புதிதாக படம் எடுப்பவர்கள் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை அவர் குறும்படங்களை ரசித்தவன் என்ற வகையில் பிடிக்கும் . சினிமா ஆர்வத்தில் , நல்ல வேலையை உதறி விட்டு வந்தவர். யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனர் ஆனவர் என இவர் கதையையே ஒரு படமாக எடுக்கலாம்.

இவரது பீட்சா படம் பார்த்ததும்  , படம் பார்க்க எடுத்த முடிவுக்காக என்னை நானே பாராட்டி கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

நான் லீனியர் திரைக்கதை யுக்தி, இசை , ஒளிப்பதிவு , இயல்பான நடிப்பு , வசனங்கள் என ரசித்து பார்த்தேன்.

ஆனாலும் , ஓர் இயக்குனரிடம் உதவி இயக்குனராக இல்லாத அனுபவம் இன்மை படத்தில் தெரிகிறது.  அந்த அனுபவம் இல்லாவிட்டாலும் , சென்னை வாழ்க்கை அனுபவமாக இருந்திருக்க வேண்டும். அல்லது வேறு யாராவது சொல்லி கொடுத்து இருக்க வேண்டும் என தோன்ற வைத்தது.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.

படத்தின் அடிப்படை காட்சி அல்லது ஜீவன் என்பது அந்த பேய் பங்களாதான். அந்த பேய் பங்களாவுக்கு , பீட்சா டெலிவரி செய்பவர் அவராகவே முடிவு செய்து போவதாக காட்சி அமைப்பு. அது எப்படி அவராகவே முடியும் ? பீட்சா கடைக்கு போன் செய்து ஆர்டர் கொடுப்பார்கள். அந்த அட்ரசுக்குத்தான் டெலிவரி செய்ய கடையில் இருந்து ஆளை அனுப்புவார்கள். இப்படி அனுப்பப்பட்ட ஆள் , இன்னொரு அட்ரசுக்கு போக எப்படி முடிவு செய்ய முடியும்? சரியான அபத்தம். இந்த காட்சியைத்தான் படத்தின் டிரம்ப் கார்டாக இயக்குனர் நம்பி இருக்கிறார். அதில் இவ்வளவு பெரிய சிக்கல்.

இது போன்ற சிக்கலான திரைக்கதை கொண்ட படங்களில் இது போன்ற தவறுகள் இருந்தால் , சாதாரண ரசிகன் குழம்பி விடுவான். மற்ற நல்ல காட்சிகளும் தனக்கு புரியவில்லையா அல்லது இயக்குனரின் தவறு செய்து இருக்கிறாரா என குழப்பி கொள்வான். இது படத்தின் வெற்றியை பாதிக்கும்.

ஹீரோவின் மனைவியை யாரும் பார்த்ததில்லை என்பதையும் பெரிய விஷ்யமாக இயக்குனர் நம்பி இருக்கிறார். செல் ஃபோன் யுகத்தில் , நெருக்கமான நண்பர்களுடன் , போனிலாவது படத்தை காண்பிக்காமல் இருக்க மாட்டார்கள். படம் சென்னையில்தான் நடக்கிறதா என்ற சந்தேகத்தை இந்த காட்சி ஏற்படுத்தியது. அப்படியே யாரும் பார்த்ததில்லை என்றாலும் அக்கம் பக்கத்தில் கேட்டால் , மனைவியைப்பற்றி சொல்லி விடப்போகிறார்கள் . இது ஒரு பெரிய விஷ்யமா?


இது போன்ற அனுபவக் குறைகளையும் மீறி , படத்தை ரசிக்க முடிந்தது. பேய்பங்களாவில் இடம் பெறும் பில் தொகை காட்சியும், தில்லு முல்லு படக் காட்சியும் , இன்னொரு காட்சியில் திறமையாக பயன்படுத்தியதை திரையரங்கில் வெகுவாக ரசித்தார்கள். அதே போல வசனங்களுக்கும் பல இடங்களில் கை தட்டல்.


ஆனால் ஆரம்ப காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கவில்லை. திருமணம் தொடர்பாக கதானாயகனுக்கும் , நாயகிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அதன் பின் வீட்டிலேயே திருமணம் ( ? !! ) செய்து கொண்டு சமாதானம் ஆகி விடுகிறார்களாம். என்ன லாஜிக் என புரியவில்லை.


இது போன்ற குறைகளை தவிர்த்து இருந்தால் , பீட்சா எல்லோருக்கும் ஏற்ற உணவாகி இருக்கும்.

வெர்டிக்ட்  

பீட்சா - சிறப்பான உணவு , ஆனால் சிலருக்கு மட்டுமே 


அமெரிக்காவை கலக்கும் ஒபாமாவின் பஞ்ச் லைன் - இறுதிக்கட்ட விவாதத்தின் சுவாரஸ்யங்கள்

உலகம் முழுதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட , அமெரிக்க அதிர்பர் வேட்பாளர்களுக்கிடையேயான மூன்றாவது கட்ட விவாதம் எதிர்பார்த்தபடி விறுவிறுப்புடன் நடந்தது. எதிர்பாராத சில விஷ்யங்களும் நடந்தன.

அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் குறித்தான இந்த விவாதத்தில் , இரு வேட்பாளர்களுமே இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பாகிஸ்தான் , சீனா குறித்து விவாதித்தார்கள்.

கருத்து கணிப்புகளில் , ஒபாமா மற்றும் ரோம்னி ஆகிய இருவருமே 47% வாக்குகளுடன் சம நிலையில் இருந்தனர், ஆரம்ப கட்டங்களில் பின் தங்கி இருந்த ரோம்னி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தார். முதல் விவாதத்தில் ஒபாமா சற்று சொதப்பி விட்டார். இதை பயன்படுத்தி ரோம்னி அந்த விவாதத்தின் மூலம் தன் செல்வாக்கை மேலும் அதிகரித்து கொண்டார்.

ஆனால் இரண்டாவது விவாதத்தில் ஒபாமா விழித்தெழுந்து , அதிரடியாக செயல்பட்டு தன் முத்திரையை பதித்தார். ( முதல் விவாத்த்தில் ) நன்றாக தூங்கி ஓய்வெடுத்ததால்தான் , இரண்டாவது விவாதத்தில் சிறப்பாக செயல்பட முடிந்ததாஜ ஒபாமா நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட விவாதம் நடந்தது. இதுதான் கடைசி விவாதம் என்பதால் , தம் தரப்பை எடுத்து வைக்க இரு வேட்பாளர்களும் கடும் பயிற்சிகள் , ஒத்திகை செய்து வந்தனர்.

இரண்டாம் கட்ட விவாதத்தில் லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது குறித்து கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த தாக்குதல் குறித்து ஒபாமா நிர்வாகம் கருத்து தெரிவிக்கவே பல நாட்கள் ஆனது என ரோம்னி கிண்டல் செய்தார், அதுதான் உடனடியாக ஒபாமா அதை கண்டித்தாரே என விவாத ஒருங்கிணைப்பாளர் எடுத்து கொடுக்க, ஆமாம் . கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கள் ரோம்னி கேட்கட்டும் என ஒபாமாவும் பதிலடி கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக , இதிலும் விவாதம் நடக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , இதைப்பற்றி  பேசப்படாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதே போல ”வருங்கால வல்லரசு ” நாடான இந்தியாவைப் பற்றியும் இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஆனால் சீனாவைப் பற்றி தனியாக நேரம் ஒதுக்கி ( 15 நிமிடங்கள் )  விவாதிக்கப்பட்டது.

அதேபோல பாகிஸ்தான் குறித்தும் கொஞ்சம் பேசப்பட்டது. அணு ஆயுத வல்லமை பெற்ற அந்த நாட்டை கண்காணித்தபடி இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.

ஈரானை அடக்க ஒபாமா தவறி விட்டார், சிரியாவில் நிலை எல்லை மீறி செல்கிறது , அமெரிக்காவைப்பார்த்து பயப்படும் நிலை இப்போது இல்லை. இதற்கு காரணம் ஒபாமாதான் என்றெல்லாம் அடுக்கடுக்காக ரோம்னி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதற்கெல்லாம் ஒபாமா பதிலடி கொடுத்தார். வெளியுறவு கொள்கைகளைப் பொறுத்தவரை ரோம்னி ஒரு கத்துக்குட்டி என கிண்டல் செய்தார்.

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி இராக் படையெடுப்புக்கு ஆதரவு கொடுத்தீர்கள்.. ஆனால் அங்கு ஆயுதங்கள் ஏதும் இல்லை.  நீங்களோ இராக்கில் இன்னும் நம் படைகள் இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள். உங்கள் கட்சி உட்பட அனைவரும் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்ல நினைக்கையில் , நீங்கள் ரஷ்யாதான் எங்கள் பெரிய எதிரி என்கிறீர்கள். வெளியுறவு கொள்கையில் முடிவெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பது உண்மைதான் . ஆனால் நீங்கள் ஏதாவது கருத்து சொல்ல முயன்றால் அது தவறாகதான் முடிகிறது.

இப்படி எல்லாம் கிண்டல் செய்த ஒபாமா , ஒரு விஷ்யத்தில் அடித்த கமெண்ட்தான் இப்போது அமெரிக்காவை கலக்கி கொண்டு இருக்கிறது.

1916ல் இருந்ததை விட குறைவான போர் கப்பல்கள்தான் தற்போது அமெரிக்காவிடம் இருக்கிறது , அமெரிக்க ராணுவம் பலவீனமாகி விட்டது என்பது ரோம்னியின் குற்றச்சாட்டு.

இதற்கு ஒபாமா ஒபாமா சொன்ன பதில்தான் இப்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படுகிறது..

1916யை விட இப்போது குறைவான கப்பல்கள்தான் இருப்பதாக சொல்கிறீர்கள். அதோடு ஏன் விட்டு விட்டீர்கள். அப்போது இருந்ததை விட , இப்போது குதிரைப் படை , கத்திச்சண்டை படை எல்லாம் பலவீனமாகிவிட்டது என சொல்ல வேண்டியதுதானே,, அட அப்பரெண்டிஸ்களா,, ராணுவம் அன்றைய நிலையில் இருந்து வெகுவாக மாறி இருக்கிறது. விமானம் தாங்கி கப்பல்கள் , நீர் மூழ்கி கப்பல்கள் என்றெல்லாம் நிறைய இருக்கின்றன. கப்பல் எண்ணிக்கையை வைத்து ராணுவ பலத்தை மதிப்பிட , இது என்ன சிறுவர்கள் விளையாடும் battleship விளையாட்டா?

ஒபாமாவின் இந்த பதிலடி நல்ல வரவேற்பை பெற்றது.ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா சிற்ப்பாக செயல்பட்டார்.

விவாதத்தின் முடிவில் எடுக்க்கப்பட்ட கருத்து கணிப்புகள் ஒபாமாவுக்கே ஆதரவாக அமைந்தன.

இந்த விவாதத்தில் யாருக்கு வெற்றி?

CBS news   ஒபாமா - 53 %
                   ரோம்னி - 23%
                   டிரா           - 24%
                
          CNN   - ஒபாமா - 48%
                         ரோம்னி - 40 %இந்த விவாதத்தில் ஒபாமாவின் செயல்பாடு அவர் கட்சிக்கு உற்சாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாத முடிவு போல தேர்தல் முடிவும் அமையுமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.
Monday, October 22, 2012

கருத்து கணிப்பு- ஒபாமா- ரோம்னி போட்டி “டை “- யார் வென்றால் நல்லது ?


அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில், சமீபத்திய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. NBC News/Wall Street Journal poll    நடத்திய  கருத்து கணிப்பின்படி, இருவரும் 47 சதவிகித வாக்குகள் பெற்று சம நிலையில் இருக்கிறார்கள். எனவே இது வரை முடிவு செய்யாத வாக்காளர்களின் வாக்குகள்தான் புதிய அதிபரை முடிவு செய்யப் போகின்றன.

இந்த பரபரப்பான நிலையில் , அதிபர் வேட்பாளர்களுக்கிடயேயான மூன்றாவது கட்ட விவாதம் உலகம் முழுதும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் எடுக்கப்படும் கருத்து கணிப்பில் , அடுத்த அதிபர் யார் என்பது ஓரளவு தெரிந்து விடும்.

அமெரிக்காவில் செய்யும் இந்தியர்கள், வேலை தேடும் இந்தியர்கள் , சீனர்கள் போன்றோருக்கு ஒபாமாவின் கொள்கைகள் எதிராக உள்ளன என்பதால் நம் மக்கள் பெரும்பாலும் ரோம்னிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஆனால் உலக அமைதியை கணக்கில் கொள்பவர்கள் ஒபாமா வென்றால்தான் நல்லது என்கிறார்கள்.  மற்ற நாடுகளில் மக்கள் “ அவர்களாகவே புரட்சி “ செய்து “ அமைதியான “ வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஃபார்முலாவை ஒபாமா பயன்படுத்துகிறாரே தவிர , முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் பாணியில் போர்களை பயன்படுத்துவதில்லை என்பதை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

ரோம்னி இதை ஒபாமாவின் பலவீனமாக சித்திரித்து பிரச்சாரம் செய்கிறார். இரானுக்கு எதிராக “ உரிய “ நடவடிக்கை எடுக்காமை , லிபியாவில் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டதற்கு “ உரிய “ பதிலடி கொடுக்காதது போன்றவற்றைத்தான் துருப்புச்சீட்டாக நம்பி வருகிறார். மூன்றாம் கட்ட விவாதத்திலும் இதைத்தான் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அமெரிக்கர்கள் ஏற்பார்களா அல்லது தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டு , பொருளாதாரத்தை மேலும் நலிவடைய வைத்து விடக்கூடாது என நினைப்பார்களா என்பதில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது.


ஈராக் போரை முடிவுக்கு வந்தது , ஒசாமா பின் லேடனை கொன்றது போன்றவற்றை ஒபாமா முன் நிறுத்த இருக்கிறார்.

எனவே இந்த விவாதத்தில் சூடு பறக்கும்.

சரி, இருவரில் யார் பெற்றால் நல்லது ?


ஒபாமா வென்றால் உலகுக்கு நல்லது...
ரோம்னி வென்றால் , இந்தியாவுக்கு ( இந்தியர்களுக்கு ) நல்லது 

Saturday, October 20, 2012

ரோம்னியின் வாய் சவடால் ஒபாமாவுக்கு திருப்பு முனையா ? - அதிபர் வேட்பாளர்களின் சுவையான சில தவறுகள் !!

அமெரிக்க அதிபர் அதிபர் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் , பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தனது வாய் ஜாலத்தின் உதவியால் , ஒபாமாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்திய ரோம்னி, தன் வாயாலேயே தனக்கு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டதால் , தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு வேளை ரோம்னி அதிக மக்கள் வாக்குகள் பெற்றாலும் , அவை வாக்குகள் ஒபாமாவுக்குத்தான் அதிகம் கிடைக்கும் என்று பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. 


அதென்ன மக்கள் வாக்குகள், அவை வாக்குகள்?

மக்கள் ஓட்டு போட்டுதான் அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றாலும் , அமெரிக்காவில் அதிக மக்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்தான் அதிபர் என்று ஒட்டு மொத்த நாட்டுக்கும் சேர்த்து கணக்கிடப்படுவதில்லை.

ஒவ்வொரு மானிலத்துக்கும் , அவை வாக்குகள் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒரு மானிலத்தில் , அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் , அந்த மானில அவை வாக்குகள் முழுதையும் பெற்று விடுவார்.

உதாரணமாக கலிஃபோர்னியாவுக்கு 55 வாக்குகள் உண்டு. இந்த மானிலத்தில் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளருக்கு இந்த 55 வாக்குகள் சென்று விடும். இப்படி 270 வாக்குகள் பெற்றால் , அவர் அதிபர் ஆகிவிடலாம்.


ஒவ்வொரு மானிலத்திலும் ஒருவர் பெறும் வாக்குகளை கூட்டிப்பார்த்து , அவர் ஒட்டு மொத்தமாக அதிக வாக்குகள் பெறுகிறாரா இல்லையா என்பது பிரச்சினை இல்லை.

பொதுவாக , அவை வாக்குகள் அதிகம் பெறுபவர் அதிக மானிலங்களில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று இருப்பார் , எனவே ஒட்டு மொத்த வாக்குகளையும் அவர் அதிகமாகவே பெற்று இருப்பார்.

ஆனால் சில சமயங்களில் இப்படி நடக்காமல் போகலாம்., ஜார்ஜ் புஷ்ஷுடன் மோதிய அல் கோர் , ஒட்டு மொத்தமாக அதிக வாக்குகள் பெற்று இருந்தார் . ஆனால் அவை வாக்குகள் அதிகம் என்ற அடிப்படையில் புஷ் வென்றார். அதாவது , அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர் அல்கோருக்குத்தான் வாக்களித்து இருந்தனர். ஆனாலும் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த முறையும் இப்படி நடக்க கூடும் என பேசப்படுகிறது.

ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த ஒபாமாவை , கொஞ்சம் கொஞ்சமாக ரோம்னி நெருங்கி வந்தார். முதல் கட்ட விவாதத்தில் வாய் சவாடால் அடித்து , இன்னும் வெகுவாக நெருங்கினார்,
ஆனால் இரண்டாம் கட்ட விவாதத்தில் ஒபாமா சுதாரித்து கொண்டு விட்டார். அதே நேரத்தில் ரோம்னி லூஸ் டாக் விட்டு , பெண்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என ஒபாமா தரப்பு மகிழ்கிறது.


தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு , சிறிய லூஸ் டாக் சக்தி வாய்ந்ததா என நீங்கள் நினைக்கலாம்.

லூஸ் டாக் அல்ல, உடல் மொழி கூட தேர்தல் முடிவை மாற்றி விடக்க்கூடும். கடந்த காலங்களில், இப்படி பல வேட்பாளர்கள் தவறு செய்துள்ளனர்.


  •  நிக்சனின் வியர்த்து போய் இருந்த முகம், படபடப்பான கண்கள் ஆகியவை அவர் நம்பத்தகுந்தவர் அல்லர் என்ற இமேஜை ஏற்படுத்தியது
  • க்ளிண்டனும் , புஷ்ஷும் மோதிய தேர்தல், புஷ்ஷிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அவர் தன் கைக்கடிகாரத்தை பார்த்தார். இந்த ஒரு சம்பவம் அவர் செல்வாக்கை வெகுவாக பாதித்தது.
  • டுகாகிஸ் மரண தண்டனைக்கு எதிரானவர். “ உங்கள் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒருவனுக்கு மரண தண்டனை விதிப்பதை ஏற்பீர்களா ? “ என்று கேட்கப்பட்டது . “ கண்டிப்பாக மாட்டேன். எனக்கு கொள்கைதான் முக்கியம். மரண தண்டனையால் குற்றங்கள் குறைந்து விடாது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை “ என்றார். கொள்கையில் உறுதி என்பதை சோதிக்க அந்த கேள்வி கேட்கப்படவில்லை. ஒரு சிக்கலான பிரச்சினையில் நாம் இருக்கும்போது , அதை எப்படி கையாள்வோம் என்பதை பார்க்கவே அந்த கேள்வி கேட்டார்கள். எந்த உணர்ச்சியும் இல்லாமல் , மெஷின் போல பதில் அளித்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.


 நம் ஊரில் கலைஞர் என்ன பேசுவார் , புரட்சி தலைவி என்ன பேசுவார் என்பதெல்லாம் நமக்கு முன்பே தெரியும் . எனவே பிரச்சார பேச்சு என்பது அவ்வளவு முக்கியம் அல்ல. இலவசங்கள் , கடைசி நேர பண வினியோகம் , கூட்டணி போன்றவையே வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். ஆனால் அமெரிக்காவில் சொல்வதை செய்தாக வேண்டிய நிலை இருப்பதால், பிரச்சாரப்பேச்சுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

எனவே இரு தரப்பும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திங்கட் கிழமை நடக்க இருக்கும் விவாதத்தின் முடிவில் , முந்திவது யார் என ஓரளவு தெரிந்து விடும். இந்த விவாதம் இணைய தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 


இன்றையை நிலையில், மயிரிழையில் முன்னணியில் இருப்பது ஒபாமாதான் . அதிகம் உதார் விடாமல் , எதிரியை பேச விட்டு , வலையில் சிக்க செய்யும் யுக்தி பலன் அளிக்குமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் Wednesday, October 17, 2012

அனல் பறந்த அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம் - ஒபாமா அபாரம்


உலகெங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  தொலைக்காட்சி விவாதம் , அமெரிக்க தேர்தலில் முக்கியமான ஓர் அம்சம்.

முதல் கட்ட விவாதத்தில் அதிபர் ஒபாமா அவ்வளவாக சோபிக்கவில்லை. அதுவரை கருத்து கணிப்பில் முன்னணியில் இருந்த ஒபாமாவுக்கு இது பெரிய சறுக்கலாக அமைந்து விட்டது.  ரோம்னி முகாம் உற்சாகம் அடைந்து பிரச்சாரத்தை முடிக்கி விட்டது.

ஆனால் ஒபாமாதான் முன்னணியில் இருந்தார். ஆனால் அவருக்கும் , ரோம்னிக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.  இதனால் ஒபாமா தரப்பு சற்று ஆடிப்போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட விவாதம் நடந்தது, இதிலும் ஒபாமா சொதப்பினால் , அவரது தேர்தல் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆகி விடும் என்றே பார்வையாளர்கள் கருதினார்கள்.

இதற்கிடையில் துணை அதிபர் போட்டியாளர்களுக்கான விவாதம் நடந்தது. இதில் ஒபாமா கட்சி வேட்பாளர் நன்றாக செயல்பட்டார். ஆனாலும் , அமெரிக்க தேர்தல்களில் , துணை ஜனாதிபதி விவாதம் ஆதிக்கம் செலுத்தியதாக வரலாறு இல்லை.

எனவே இந்த இரண்டாம் கட்ட விவாதம் உலகம் முழுதும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஒபாமா இந்த முறை எனர்ஜிட்டாக்காக காணப்பட்டார், ரோம்னியும் முந்தைய வெற்றியின் காரணமாக உற்சாகத்துடன் காணப்பட்டார்,

விவாதத்தில் அனல் பறந்தது. கண்ணியத்தை விட்டுக்கொடுக்காமல் , ஆனால்   மற்றவரை மிரட்டும் தொனியிலும் , மிக நெருக்கமாக சென்று அச்சுறுத்தும் பாணியிலும் இருவரும் வாதம் செய்தனர்.

 நன்றாக இருந்த அமெரிக்கா, ஒபாமா ஆட்சியில் , தான் சொன்ன எதையும் செய்யவில்லை என ரோம்னி குற்றம் சாட்டினார். வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது, பொருளாதாரம் நிலை குலைந்து விட்டது என்றார்.

ஒபாமா அசரவில்லை.  தான் சொன்ன அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருவதாகவும் , செய்ய வேண்டிய மற்றவற்றை தன் இரண்டாம் பதவிகாலத்தில் செய்து முடிப்பதாகவும் தன்னம்பிக்கையுடன் சொன்னார்.

முதல் கட்ட விவாதத்தில் பார்த்த ஒபாமாவா இது என ஆச்சர்யப்படவைத்து விட்டார்.

இதற்காகவென்றே பயிற்சியாளர்களை நியமித்து , இருவரும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை.

ஆனாலும் , விவாத முடிவில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் , ஒபாமாவே வென்றதாக , பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவாத முடிவு.

மக்களை கவர்ந்தவர் யார்.
ஒபாமா-  48 %
ரோம்னி -  46 %


கடைசி விவாதம் , வரும் திங்கட் கிழமை நடக்க இருக்கிறது.Saturday, October 6, 2012

அஜீத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்- சாரு நிவேதிதா

படிமை விழா ரிப்போர்ட் - பார்ட்1: ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்பார்ட் 2 

ஆங்கில அறிவின் அவசியம் குறித்தும் , வெளி நாட்டு படங்கள் பார்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சொன்னேன். ஆனால் அது மட்டுமே போதாது. வாழ்கையை இண்டென்சாக வாழ வேண்டும். நீங்களே கிட்டத்தட்ட ஒரு ஃபிலாசபராக இருந்தால்தான் , உங்களிடம் இருந்து நல்ல படங்க்ள் வரும்.

சினிமா தொழில் நுட்பங்களை கற்று கொள்வதில்தான் நம் ஊரில் ஆர்வம் காட்டுகிறார்கள் . டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தால்மட்டும் போதாது. ஓர் இயக்குனருக்கு இசை , ஓவியம் , சிற்பம் என பல துறைகளில் பரிச்சயம் இருக்க வேண்டும். பாணா காத்தாடி படத்துக்கு இசை அமைத்த யுவன் சங்கர்தான் , ஆரண்ய காண்டத்துக்கும் இசை அமைத்து இருக்கிறார். ஆனால் இரண்டிலும் இசை வெவ்வேறு தரத்தில் இருக்கிறது. காரணம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் இசை அறிவும் , இசை அமைப்பாளர்களிடம் வேலை வாங்கும் தன்மையும்.

தொழில் அறிவு இல்லாமல் இயக்குனர்கள் இருப்பதால்தான் , அவரை பலரும் ஏமாற்ற முடிகிறது. புடவைகளில் கலர் கலராக புடவைகள் தொங்குவதுபோல கலர் கலராக காட்சிகள் அமைத்து விட்டு , ஒளி ஓவியம் என்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது?

தமிழ் நாடு என்பது mediocre சமூகம் என சொல்லி வந்து இருக்கிறேன். சராசரிகளிலேயே வாழ்ந்து , சராசரிகளில்யே மகிழக்கூடிய சமூகம் . எனவேதான் சராசரிகளையே போற்றுகிறது.

வீடு மாற்றும்போது, சீனர்களாக இருந்தால், ஒரு ஆள் இரண்டு சுமைகளை ஒரு மூங்கிலில் கட்டி அதன்  நடு பகுதியை தங்கள் தோளில் வைத்து கொள்வான். அதாவது சுமை இரண்டு- ஆள் ஒன்று


இந்தியராக இருந்தால் , மூங்கிலின் நடுவில் ஒரு சுமையை கட்டி அதை இருவர் எடுத்து செல்வார்கள் . உழைக்க சோம்பேறித்தனம். அதை பெருமையாக நினைக்கும் குணம். சுமை ஒன்று - ஆள் இரண்டு

சிலர் என்னிடம் வந்து கேட்பார்கள். நான் இலக்கியம் படிக்க விரும்புகிறேன். உங்கள் புத்தகங்களில் எதில் இருந்து படிக்க ஆரம்பிக்கலாம்.

உங்களுக்கு தேவையானது எது என்பதைக்கூட தேர்ந்தெடுக்க தெரியாத நீங்கள் என் வாசகராக இருக்க முடியாது. என் எழுத்து எதையும் படிக்க வேண்டாம் என சொல்லி அனுப்பி விடுவேன் .

நம்மை இந்த அள்வுக்கு கெடுத்து வைத்து இருப்பது நம் அம்மாக்கள் . சின்ன வயதில் இருந்தே ஊட்டி ஊட்டி வளர்த்து , எதற்கும் யாரையும் சார்ந்து இருக்கும் குணத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.உழைக்க பயப்படுவர்கள் சினிமா துறைக்கு வர வேண்டாம்.


கலைகளில் பல பிரிவுகளில் உண்டு. அதில் ஒன்றான எழுத்து துறையில் முட்டாள்கள் இருக்க முடியாது. அயோக்கியர்கள் , தந்திரசாலிகள் இருக்கலாம், ஆனால் இந்த தந்திரத்துக்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுமே. எனவே முட்டாள்கள் என யாரும் எழுத்து துறையில் இல்லை.

ஆனால் சினிமா துறையில் முட்டாள்தனம் அதிகம் காணப்படுகிறது. ஓவியம் , இசை , எழுத்து என பல கலைகள் சேர்ந்தது சினிமா. அதீதமான புத்திசாலித்தனமும் , சென்சிபிலிட்டியும் தேவைப்படும் துறை. ஆனால் முட்டாள்தனம்தான் அதிகம் இருக்கிறது.

தமிழைப் பொருத்தவரை கமர்சியல் படங்கள் மட்டுமே தம் துறையில் சிறப்பாக செயல்படுகின்றன. உலகப்படங்கள் பார்த்து விட்டு , இலக்கியம் படித்து விட்டு , எடுக்கப்படும் படங்கள் குப்பையாக உள்ளன.

எனக்கு லிங்கு சாமியின் படங்கள் பிடிக்கும். அவரோ பாலாஜி சக்திவேலை பெரிதாக நினைப்பார். காரணம் பாலாஜி சக்திவேலுக்கு இலக்கிய பரிச்சயம் உண்டு. உண்மையில் இலக்கியவாதிகளுடன் தொடர்பு இல்லாத இயக்குனர்கள்தான் நல்ல படங்கள் எடுக்கிறார்கள்.

ஆனால் கமர்சியல் படங்கள் சில , போரடிக்கின்றன. பெண்கள்தான் கதா நாயகனுக்காக ஏங்குவதாக எடுக்கிறார்கள் . நடை முறையில் இப்படி இருப்பதில்லை. எனவேதான் , தன்னை காதலிக்காத பெண் மீது ஆசிட் வீசும் செய்திகளை தினமும் படிக்க வேண்டி இருக்கிறது.

 நான் ஒரு பொறுக்கி , என்னை ஏன் காதலித்தாய் என நாயகன் கேட்கிறான். நீதான் என்னை “ டீ “ போட்டு அழைத்தாய், அதில் மயங்கி விட்டேன் என்கிறாள் நாயகி . இப்படி ஒரு படம்.

ஓர் அரசியல்வாதி நடித்த படம். ஸ்கூட்டியில் செல்லும் பெண்ணை நாயகன் சைட் அடிக்கிறான். அவள் முகத்தை பார்த்ததும் காறி துப்பி விட்டு செல்கிறான். அழகாக இல்லை என்றால் காறி துப்புவீர்களா ? இது சமூக விரோதம் இல்லையா ?

அஜீத் நல்ல மனிதர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் , நல்ல நடிகரும்கூட. வரலாறு படத்தில் செமையாக நடித்து இருப்பார். ஆனால் அவர் தொடர்ந்து ஏன் , தவறான படங்களையே தேர்ந்து எடுக்கிறார் என தெரியவில்லை.

கவுதம் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா அட்டகாசமாக இருந்தது , அடுத்த படமான நடு நிசி நாய்களில் நம்மை நன்றாக பழி வாங்கி விட்டார்.

கமல் ஹாசன் காட் ஃபாதர் படத்தை நூறு முறையாவது பார்த்து இருப்பார் என நினைக்கிறேன். முகபாவனை , கைகால்களை அசைப்பது என அப்பட்டமாக காப்பி அடித்து நாயகனில் நடித்து இருப்பார். காப்பி அடிப்பது தவறு என சொல்லவில்லை. தாராளமாக காப்பி அடியுங்கள். ஆனால் உலக நாயகன் என சொல்லி கொள்ளாதீர்கள்.

எந்த வேலையிலும் சராசரித்தன்மையே தமிழ் நாட்டில் இருக்கிறது. யாருக்கும் எந்த வேலையும் முழுமையாக தெரியவில்லை. என் வீட்டில் சமையலுக்கு ஒருவரை  நியமித்தேன் . அவருக்கோ கேஸ் ஸ்டவை ஆன் செய்வது என்பதே தெரியவில்லை. கேஸ் ஸ்டவுக்கு பதில் வீட்டை கொளுத்திவிடப்போகிறார் என பயந்து விட்டேன்.

உன்னதத்தை நாம் தேடுவதே இல்லை. இளையராஜா என்ன பாட்டு கொடுத்தாலும் , இயக்குனர்கள் தமக்கு அவர் ஏதோ பிச்சை போட்டு விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். இசை அமைப்பாளர் நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர். அவரை மற்றவர்களைப்போல வேலை வாங்க தெரிய வேண்டும்.
இசை முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். ஆங்கிலமும் முக்கியம். நான் இயக்குனராக இருந்தால் , ஆங்கிலம் தெரியாத துணைஇயக்குனர்களை சேர்த்து கொள்ள மாட்டேன்.

உலகளவில் சினிமாவை எடுத்து கொண்டால் , ஹாலிவுட் பாணி படங்கள் , அய்ரோப்பிய பாணி படங்கள் என சில பாணிகள் உள்ளன.  உன்னத படங்கள் இந்த பாணிகளில் வந்துள்ளன.

நீங்கள் முயன்றால் , நம் மண்ணுக்கேற்ற புதிய திரை மொழியை , புதிய பாணியை உருவாக்க முடியும் .   வாழ்த்துகள்.


( பிரத்தியேக படங்கள், வீடியோ , கலந்துரையாடல் பற்றிய ரிப்போர்ட் , ச்மஸ்கிருதம் யாருடைய மொழி , டொரண்டினோவை ஏன் பிடிக்கவில்லை , சினிமாவில் கருத்து சொல்வது தவறா, கட்டுக்கோப்பான ஜெர்மனியில் இருந்து கலைஞர்கள் எப்படி உருவாகிறார்கள் , ஸ்பீடாக படிப்பது எப்படி , சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் , அது நல்ல படைப்பு ஆகாதா , சினிமாவாக எடுக்க வேண்டிய நாவல்கள்,  அடுத்த இடுகையில் )

- தொடரும் 


Thursday, October 4, 2012

அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல்- ஒபாமாவுக்கு சிறிய சறுக்கல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வருகிறது . பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

அங்கு தொலைக் காட்சி விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புஷ்ஷுடன் மோதிய பில் க்ளிண்டன் வெற்றி பெறுவதற்கு இந்த விவாதமும் ஒரு முக்கிய காரணமாகும். விவாதத்தின் போது செய்யும் சிறிய வார்த்தை பிறழல்கள் , உடல் மொழி போன்றவை கூட போட்டியின் போக்கை மாற்றி விடும்.

 இந்த நிலையில் ஒபாமாவுக்கும் எதிர்த்து போட்டியிடும் ரோம்னிக்கும் இடையேயான விவாதம் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது.  இந்த விவாதத்தில் ரோம்னிதான் ஆதிக்கம் செலுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனாலும் ஒபாமாதான் கருத்து கணிப்புகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் இந்த தொலைக்காட்சி விவாதம் இருவருக்கும் இடையேயான இடைவெளியை குறைத்துள்ளது.

 வரி விதிப்பைத்தான் தன் முக்கிய ஆயுதமாக ரோம்னி பயன்படுத்தினார். பற்றாக்குறைகளை மூன்று விதங்களில் சமாளிக்கலாம். 1. வரி விதித்தல் 2. செலவுகளை குறைத்தல் 3. பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.  இதில் ஒபாமா நிர்வாகம் வரி விதிப்பை மட்டுமே நம்பி செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

பதில் அளித்த ஒபாமா , வரிகளை குறைத்தால் எனக்கும் , ரோம்னிக்கும் நல்லது. நாங்களும் , மற்ற பணக்காரர்களும் மகிழ்வார்கள் . ஆனால் நடுத்தர அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

தன் சாதனைகளை தொடர மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கேட்டு கொண்டார் ஒபாமா. ஒபாமாவுக்கு வாய்ப்பளித்து , மீண்டும் கஷ்டப்படாதீர்கள் என்றார் ரோம்னி.

விவாத முடிவுக்கு பின் எடுக்கப்பட கருத்து கணிப்பில் , 42 சதவிகித்தனர் ரோம்னி சிறப்பாக விவாதம் செய்ததாக சொன்னார்கள். 22 சதவிகிதம்பேர் ஒபாமவை புகழ்ந்தனர். ஏனைய 36 விழுக்காட்டினர் , இருவரும் சமம்தாம் என்றனர்.

அக்டோபர் 16ல் அடுத்த கட்ட விவாதம் நடக்க உள்ளது. அதில் பார்வையாளர்களும் கேள்விகள் கேட்கலாம். இந்த விவாதம் ஒரு திருப்பு முனையாக இருக்க கூடும் .Tuesday, October 2, 2012

நச் என நாலு படங்கள் - சினிமா பார்வை

வழக்கு எண் படம் பார்த்ததில் இருந்து , படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது. எந்த படமும் பார்க்காமல் நிம்மதியாக இருந்தேன். அதன் பின் பார்த்த கில் பில் படம் மீண்டும் படம் பார்க்கும் ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. பல்ப் ஃபிக்‌ஷன் , சோர்ஸ் கோட் போன்ற படங்களைப் பற்றி ஏற்கன்வே என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இந்த படங்களைத் தவிர , என்னை கவர்ந்த வேறு சில படங்களைப் பற்றி என் கருத்துகளை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.


*******************************************

ஆரண்ய காண்டம் 

சில ஆங்கில படங்களைப் பார்க்கும்போது , தமிழில் இப்படியெல்லாம் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற ஏக்கம் மனதை பிசையும். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் இந்த படம் இருந்தது. இந்த படம் வெளி வந்தபோது போதுமான வரவேற்பு பெறாமல் போய் இருக்கலாம். ஆனால் காலம் கடந்து நிற்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என கருதுகிறேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் , கண்டிப்பாக ஹிட் ஆகும் . இந்த படத்திற்கான மார்க்கெட்டிங் சரியில்லாததே தோல்விக்கு காரணம் என தோன்றுகிறது.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் , நடிகர்கள் , இசை அமைப்பாளர் மற்றும் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் என்றென்றும் பெருமைப்பட்டு கொள்ளலாம்.
ஆரண்ய காண்டம் - அருமை

************************************************
VANTAGE POINT

அமெரிக்க அதிபரை கொலை செய்யும் முயற்சி. அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சி. காப்பாற்றும் முயற்சிகளை புத்திசாலித்தனமாக முறியடிக்கும் குற்றவாளிகள் , அவர்களை துரத்தி பிடித்தல் - இதுதான் கதை.

இதை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்பதில்தான் விஷ்யம் இருக்கிறது. பார்க்க ஆரம்பித்தால் , இருக்கையில் இருந்து எழ முடியாத அளவுக்கு செம விறுவிறுப்பு.

ஒரே சம்பவத்தை எட்டு பேர் பார்வையில் சொல்லி இருப்பது செம இண்டரஸ்டிங். ஒரே கால கட்டத்தைத்தான் அனைவரும் சொல்கிறார்கள். அதிபர் சுடப்படுவதைத்தான் சொல்கிறார்கள் . ஆனால் போரடிப்பதில்லை. காரணம் ஒவ்வொரு பார்வையிலும் , புதிய புதிய விஷ்யங்கள் தெரிகின்றன. ஒருவர் பார்வயில் சாதாரணமாக வந்து செல்லும் சம்பவத்தின் முக்கியத்துவம் , இன்னொருவர் பார்வையில்தான் புலப்படுகிறது.

தேவையற்ற குழப்பங்களோ , சோர்ஸ் கோட் போல லாஜிக் முரண்பாடுகளோ இல்லாமல் அருமையாக இருக்கிறது.

VANTAGE POINT - வாவ்

*******************************************-******************


Inglourious Basterds நான் லீனியர் வகையில் கதை சொல்வதில் கில்லாடி க்வெண்டின் டெரண்டினோ. சற்று வித்தியாசமாக, தன் வித்தியாச திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இதை எடுத்து இருக்கிறார்.படம் நேர் கோட்டில் சும்மா பரபர என போகிறது.

உலகப் போர் கால கட்டத்தை , குறிப்பாக ஹிட்லரின் அட்டகாசத்தை சித்திரிக்கும் கதை இது.  யூதர்களை வேட்டையாடும் நாஜி படை வீரர்கள் ,  ஒரு யூத குடும்பம் படு கொலை செய்யப்படும்போது தப்பி செல்லும் ஒரு யூத பெண்,  நாஜிக்களுக்கு எதிராக எதிராக உருவாக்கப்படும் Inglourious Basterds என்ற படை , அந்த யூத பெண் , தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு 
பழி வாங்க செய்யும் முயற்சிகள் , Inglourious Basterds படையினர் ஹிட்லரை கொல்ல செய்யும் 
முயற்சிகள் , அதை மோப்பம் முடிக்கும் ஜெர்மன் அதிகாரிகள் என பரபரப்பாக செல்கிறது.


கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம். இதுதான் என் மாஸ்டர் பீஸ் என்ற வசனத்துடன் 

நச் என படம் முடிகிறது. 

நம் ஊரில் , அப் நார்மல் கேரக்டர்கள் , அழுகை கேரக்டர்களில் நடிப்பவர்கள் , 

மாறு வேடம் போடுபவர்களைத்தான் சிறந்த நடிகர்கள் என கருதுவோம். அவர்களுக்குத்தான்

விருதுகள் கொடுப்போம். ஆனால் இந்த படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்த
      Christoph Waltz   ஆஸ்கார் விருது பெற்றார் என்பது நம் ஆட்களுக்கு குழப்பமாக இருக்கும்.
இவர் நடிப்பு எனக்கு பிடித்து இருந்தாலும் , நான் மிக ரசித்தது    Brad  Pitt   நடிப்பைத்தான்.

                                                                               

Inglourious Basterds - Glorious 

*********************************************************************


Reservoir dogs 

க்வெண்டின் டெரண்டினோவின் முதல் படம் இது.

தம் பெயர்கள், ஊர் விபரங்களை ரகசியமாக வைத்து கொண்டு ஆறு பேர் சேர்ந்து வைர கொள்ளைக்கு திட்டமிடுகின்றனர். mr. white , mr. blue, Mr . brown என வண்ணங்களின் பெயர்களே அவர்களுக்கு புனை பெயர். ஜோ என்பவர் கொள்ளையர்களின் தலைவன். எட்டி அவர் பையன்.

அனைவரும் உணவு விடுவதில் சாப்பிட்டவாறே பேசிக் கொண்டு இருப்பதுடன் படம் ஆரம்பிகிறது, அதன் பின் அங்லிருந்து வெளியேறி செல்கின்றனர்.

அடுத்த காட்சியில் ஆரஞ்ச் என்பவன் , காரில் சுடப்பட்டு கிடக்கிறான். white காரை ஓட்டி வருகிறான். உணவு விடுதியில் இருந்து வெளியேறிய காட்சிக்கும், இப்போதையை கார் காட்சிக்கும் நடுவில் என்ன நடந்தது என்பது பிறகுதான் தெரிகிறது.

நான் லீனியர் பாணியில் விறுவிறுப்பாக படம் எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களில் ஒருவர் போலிசீன் ஆள் என , சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தேகிக்கின்றனர். யார் என தெரிய வரும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நமக்கு தெரிந்து விடுகிறதே தவிர , அவர்களுக்கு கடைசிவரை தெரியவில்லை என்பது சுவாரஸ்யம்.

கடைசியிலாவது உண்மையை தெரிந்து கொள்பவர் mr. white தான் . ஆனால் அதற்குள் காலம் கடந்து விடுகிறது.

 துப்பாக்கி சத்தத்துடன் நச் என படம் முடிந்து , இயக்குனர் முத்திரையை பதிக்கிறார். இசை , வசனங்கள் அவரது மற்ற படங்களைப் போலவே அருமை.


Reservoir dogs - Really great 

Monday, October 1, 2012

திருவண்ணாமலை கிரிவலம் ரிப்போர்ட்- சீசன் 2

திருவண்ணாமலைக்கு வேறு சில விஷ்யங்களுக்காக சில முறை சென்று இருந்தாலும் , கிரி வலம் சமீபத்தில்தான் சென்றேன்.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஓர் அனுபவத்துக்காக சென்றேன். அந்த அனுபவம் மகிழ்ச்சிகரமாக அமைந்து இருந்தது. அதை குறித்த என் அனுபவங்களை இதில் காணலாம்.

திருவண்ணாமலை கிரிவலம் - விசிட் ரிப்போர்ட்- சீசன் 1


அதன் பின் , அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சனி அன்று மீண்டும் ஒரு விசிட். என் முதல் அனுபவங்களை கேட்ட சில நண்பர்கள் , இந்த முறை தாமும் கூட வருவதாக சொன்னார்கள் . கூட்டமாக செல்வதில் சில சந்தோஷங்கள் , சிக்கல்கள் இருக்கின்றன. தனியாக செல்வதிலும் ப்ள்ஸ் மைனஸ் இருக்கின்றன. எனவே எதுவாக இருந்தாலும் சந்தோஷம் என்பதே என் மன நிலையாக இருந்தது.

சாமி இருக்கிறார் அல்லது இல்லை என்ற அக்கப்போரை கடந்து , ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ,( அல்லது எந்த காரணமும் இல்லாமலேயே கூட )  ஏதாவது ஓர் இடம் சென்று வருவது புத்துணர்வூட்டுவதை இந்த பயணத்திலும் உணர்ந்தேன்.

மலையை சுற்றி வந்தால் முக்தி கிடைக்கும் , பணக்காரன் ஆகலாம் என்றெல்லாம் இல்லாமல் , அந்த இரவை முழுக்க உள் வாங்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு இடத்தையும் ரசித்து பார்த்தேன். குறிப்பாக ஒரு குறுகிய இடம் வழியாக வெளியேறும் அமைப்புள்ள இடுக்கு பிள்ளையார் என்னை கவர்ந்தது.

உணவில் டிகிரி காஃபியும் , கோலி சோடாவும் கவர்ந்தது. நித்தியானந்தா ஆசிரமத்தில் அந்த நள்ளிரவிலும் அன்ன தானம் நடக்கிறது..

கோயிலை சுற்று எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என அவற்றுக்கு பெயர்.

முதலில் வருவது இந்திர லிங்கம். அதன் பின் வினாயகர் கோயில்கள் உள்ளன. இவற்றை தவிர சிறிய கோயில்கள் ஏராளம் உள்ளன.

அதன் பின் அக்னி லிங்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம். இவரைப் பற்றி பாலகுமாரன் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.

அதன் பின் வருவது எம லிங்கம். இந்த லிங்கங்களை வணங்கினால் , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறார்கள் .

அதன் பின் ஆதி பராசக்தி சக்தி பீடமும் , நிருதி லிங்கமும் வருகின்றன.

அதன் பின் வருவதுதான் ஹை லைட். ஆமாம் . நித்தியானந்தர் ஆசிரமம் அடுத்து வருகிறது. ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தூங்கவே மாட்டார்கள் போல.

அதன் பின் வருவது வர்ண லிங்கம் மற்றும் ஷீர்டி பாபா ஆலயம்.

வர்ண லிங்கத்துக்கு அடுத்து வாயு லிங்கம். பின் பஞ்ச முக தரிசன பகுதி.
இவற்றை எல்லாம் விட கூட்டம் குவிவது ஓர் இடத்தில். என்ன இடம் ?

குபேர லிங்கம். செல்வம் அளிப்பார் என நம்பிக்கை. பிறகு பிள்ளையார் கோயில் , ஈசான்ய லிங்கம் . பிறகு கிளைமேக்சாக ராஜ கோபுரம்.

இதைத்தவிர அமிர்தானதமயி ஆஸ்ரம் போன்ற பல்வேறு அமைப்பினரின் ஸ்டால்களில் பல்வேறு ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் விற்பனை ஆகின்றன. தேவையானவர்கள் வாங்கி செல்கிறார்கள்.

தவிர , உணவு விடுதிகள் , குளிர் பான கடைகள் , மூலிகை சூப் கடைகள் என பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றன.

எந்த எதிர்பார்ப்புகளும் , வேண்டுதல்களும் இல்லாமல் , சும்மா போய் வந்தால் , கிடைக்கும் அனுபவம் அலாதி என்பது என் கருத்து.Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா