Friday, March 29, 2013

பரதேசி, லிங்கன், ஜாங்கோ அன்செயிண்ட்- எது டாப்?


பரதேசி படத்தை விட அதற்கான எதிர் வினைகள் சுவாரஸ்யமாக இருந்தன.

ஒப்பற்ற படைப்பு,  தமிழ் சினிமாவின் விடி வெள்ளி  போன்ற கருத்துகள் ஒரு புறம்.

நாவலை ஏன் அப்படியே எடுக்கவில்லை, 40 நாள் நடக்கையில் தாடி வளர்கிறது - முடி ஏன் வளரவில்லை , ஜாதிப் பெயர்களை ஏன் சொல்லவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் ஒரு புறம்.

படத்தில் என்ன இருக்கிறது , என்ன இல்லை என தெளிவாக நேர்மையாக சொன்னது சாரு நிவேதிதா மட்டுமே.. அந்த வகையில் அவர் கட்டுரைகள்தான் ஆறுதலாக இருந்தன .

எடுத்துக்கொண்ட கதையை எப்படி பிரசண்ட் செய்து இருக்கிறார் என்பதுதான் முக்கியம் என்ற அடிப்படையில் படத்தை அலசி இருந்தார் சாரு.. சினிமா விமர்சனம் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக சாருவின் விமர்சனம் இருந்தது.

     பரதேசியை அவர் நிராகரித்தாலும் , அந்த படம் ஏன் பாராட்டப்படுகிறது என்பதையும் அவரே சொல்லி இருந்தார்.

       தமிழில் வேறு நல்ல படங்கள் இல்லாத நிலையில் , ஓரளவு வித்தியாசமாக வந்தால்கூட அது வியப்பாக பார்க்கப்படும் சூழலை சொல்லி இருந்தார்.

அது உண்மைதான்.

எனவே பரதேசி படத்தை சராசரி தமிழ் படங்களுடன் ஒப்பிடாமல் , வேறு சில நல்ல படங்களோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பினேன்.

    லிங்கன் , Django Unchained , பரதேசி - இந்த மூன்றும் வெவ்வேறு வகையான படங்கள், வெவ்வேறு கதை அம்சம் கொண்டவை.

ஆனால் மூன்றுக்கும் ஒரு பொது தன்மை உண்டு. அடிமைமுறை , ஆதிக்கம் போன்றவை மூன்று படங்களிலும் உண்டு.

இந்த பொதுத்தன்மையை மட்டும் வைத்து கொண்டு மூன்றையும் ஒப்பிடுவது நியாயமில்லைதான்.  மூன்று படங்களையும் பார்த்து முடித்த பின் , எது மனதில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்துகிறது என்ற ஒற்றை அம்சத்தை மட்டும் பார்ப்பதே சரியாக இருக்கும்.

முதலில் மூன்று படங்களை பற்றிய ஒரு வரியில் சுருக்கமாக பார்க்கலாம்.

சிலரது சுகபோகத்துக்காக , அப்பாவிகளை கொத்தடிமைகளாக்கி அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குவதை ஆவணப்படுத்துகிறது பரதேசி..


அமெரிக்காவில் நிலவிய அடிமை முறையை நீக்குவதற்கான சட்ட திருத்தத்தை லிங்கன் தன் சாதுர்யத்தால் , வாக்கு வன்மையால், ஆளுமை திறத்தால் எப்படி சாதித்தார் என சொல்கிறது லிங்கன் படம்.


அடிமை முறை நிலவிய அமெரிக்காவில் , அடிமை ஒருவனுக்கு கிடைக்கும் எதிர்பாராத விடுதலை , தான் மட்டும் தப்பித்தால் போதாது என தன் காதலி விடுதலைகாகவும் சாகசங்கள் மேற்கொள்வது பற்றிய ஒரு ஃபேண்டசி ஜான்கோ அன்செயிண்ட்.


மூன்றுமே அடிமை நிலையை பற்றி சொன்னாலும், இதில் ஒரு படத்தை ரசித்து கொண்டும் , சிரித்து கொண்டும் கைதட்டி கொண்டும் பார்க்கலாம். அதுதான் ஜாங்கோ அன்செயிண்ட்.


கண்ணீர் சிந்த வைக்கும் அடிமை முறை பின்னணியில் ஒரு சாகச படம் என்பதே ஒரு ஆச்சர்யம், ஆனால் க்வெண்டின் டொரண்டினோ பற்றி தெரிந்தவர்களுக்கு மனிதர் வழ்க்கம் போல பட்டையை கிள்ளப்பி விட்டார் என்ற நிறைவுதான் ஏற்படும்.

ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம்.

Django அடிமையாக இருந்தவன். அவனை தன் வேலையின் பொருட்டு டாக்டர் கிங் அழைத்து செல்கிறார். பிறகு அவன் செய்த உதவிக்காக , அவன் விரும்புவது அவனுக்கு கிடைக்க முயற்சி செய்கிறார்.

இதில் ஒரு கட்டத்தில் நடக்கும் காட்சியை பாருங்கள். ஒருவனை தேடி செல்கிறார்கள் .அப்போது நடக்கும் உரையாடல்.

டாக்டர்  King Schultz : எல்லீஸ் எங்கே?

ஜாங்கோ : அதோ, அங்கே இருக்கிறானே ..அவன் தான்.

டாக்டர்  King Schultz :  நல்லா தெரியுமா? 

ஜான்கோ : ஆமா


  1. டாக்டர்  King Schultz: Positive?

  2. Django:  தெரியலையே..

  3. Dr. King Schultz: You don't know if you're positive?

  4. Django:  பாசிடிவ்னா என்னனு தெரியலை..

  1. Dr. King Schultz: It means you're sure.

  1. Django: ஆமா..

  2. Dr. King Schultz: Yes, what?

  1. Django: Yes I'm sure it is Ellis Brittle...  ( அவனை சுட்டு கொல்கிறான் ..)  I'm positive he dead.


இந்த காட்சியில் கைதட்டாமல் யாராலும் இருக்க முடியாது..


இன்னொரு காட்சி..

டாக்டரும் , கதானாயகனும் ஒரு புதிய ஊருக்கு போய் இருப்பார்கள்.  ஷெரிஃபை பார்க்க வேண்டும் . அழைத்து வாருங்கள் என்பார் டாக்டர். மார்ஷலை அழைத்து விடாதீர்கள். ஷெரீஃப்தான் வேண்டும் என வலியுறுத்தி சொல்வார்.

ஷெரீஃப் வந்து பேசுவார். வாக்குவாதம் முற்றி செரீஃபை கொன்று விடுவார் டாக்டர், அனைவரும் கோபமாக வருவார்கள். டாக்டர் அலட்டி கொள்ளாமல் கூலாக சொல்வார் “ இப்போது மார்ஷலை கூப்பிடுங்கள் “


டாக்டர் கதாபாத்திரம் மிக அட்டகாசமாக இருக்கும். ஓவர் மேக் அப், கதறி அழ வைக்கும் நடிப்பு, மாறு வேடம் போட்டு பல வேடங்களில் நடிப்பது போன்றவைதான் நம் ஊரில் சிறந்த நடிப்பால கருத்தப்படுகிறது.

ஆனால் இது எதுவுமே இல்லாமல், மிக மிக இயல்பான ஒரு பாத்திரத்தை உருவாக்கி நம் மனதில் பதிய வைக்கிறார் என்றால் அதுதான் இயக்குனரின் திறமை.


அதே போல வில்லனாக வரும் டீ காப்ரியோ.. பார்த்தால் ஹீரோ போல இருபபார். மண்டை ஓட்டை வைத்து அறிவியல் விளக்கம் சொல்வார். ஆனால் பயங்கரமான வேலைகளை செய்வார்.

அதெ போல விசுவாசமான வேலையாளாக வரும் சாமுவேல் ஜாக்சன்.ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக இவர் நடந்து கொள்வது நடுங்க வைக்கும்.

இப்படி ஒவ்வொரு கேரக்டர்களையும் , ஒவ்வ்வொரு காட்சியையும் மறக்க முடியாது..

ஆனால் பரதேசி படத்தை பொருத்தவரை , நல்லவன் -கெட்டவன் என்ற ஒற்றை பார்வையில் படம் இருப்பதை யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். விளைவாக பழைய கால செண்டிமெண்ட் படம் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

சரி, இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டால் மனதை நெகிழ வைக்கும் படம் எது என்று பார்த்தால் , பரதேசிதான்.

பரதேசி படத்தின் ஹீரோவுக்கு கடைசியில் வீரம் வந்து , வில்லனை கொன்று விட்டு தன் மனைவியுடன் தப்பிப்பதாக காட்சி வைத்து இருந்தால் , கைதட்டி ரசித்து இருக்க கூடும். ஆனால் அது யதார்த்தத்தை பாதித்து இருக்கும்.

யதார்த்தம் என்ற வகையில் , பரதேசி மனதில் நிற்கிறது.

சரி..பரதேசியையும் லிங்கனையும் ஒப்பிடலாம்.

லிங்கன் படமும் யதார்த்தத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட படம்தான். அதீத ஹீரோயிசம் , திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.

அடிமை முறையை ஒழிக்கும் சட்ட திருத்தத்திற்கு தேவைப்படும் வாக்குகளை திரட்டுவதில் காட்டப்படும் முனைப்பு, யுக்திகள் என நம் ஊர் அரசியல் போல பரபரப்பாக செல்கிறது.

லிங்கன் எடுத்து கொண்ட பணி உன்னதமானது என்றாலும் அதை அடைய கையாளும் வழி உன்னதமானது என சொல்ல இயலாது. சில குறுக்கு வழிகளும் கையாளப்படுகின்றன.

தந்திரம் , குறுக்கு வழி போன்றவையெல்லாம் நம் ஊரை பொருத்தவரை பணம் சம்பாதிக்கும்  வழியாகவே கருதப்படுகிறது. ஆனால் இது போன்ற யுக்திகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் அதுவே ராஜ தந்திரம் ஆகிறது.

புத்திசாலித்தனமும் , நல்ல மனமும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவனை நம் ஊரில் பார்ப்பது அரிது. லிங்கன் இப்படிப்பட்ட ஒரு தலைவர்.

நம் காந்தி லிங்கன் வழி முறைகளை ஏற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

இது மட்டுமன்றி லிங்கனது குடும்ப வாழ்க்கை , ஆளுமைத்திறன் , நா வன்மை, தலைமைப் பண்பு , டீம் ஸ்பிரிட்    என பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

லிங்கன் மட்டுமன்றி அவர் சகாக்களும் முனைப்புடன் செயலாற்றுவார்கள். அவர்கள் லிங்கன் மீது பெரிய மரியாதை வைத்து இருப்பார்கள். அதேபோல லிங்கனும் அவர்கள் மேல் அபார நம்பிக்கை வைத்து இருப்பார்.

விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் , நீக்ரோக்களும் வெள்ளையர்களும் சமம் என்பதுதான் உங்கள் கருத்தா என எதிர்கட்சியினர் கேட்பார்கள்.

ஆம், சமம் என்று சொன்னால் வெள்ளையர்கள் கோபம் அடைந்து தீர்மானத்தை தோல்வியுற செய்வார்கள். சமம் இல்லை என்று சொன்னால் தீர்மானத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

இதை ஸ்டீவன்ஸ் எப்படி சமாளிக்கப்போகிறார் என அவர் கட்சியினர் பயத்துடன் பார்த்து கொண்டு இருப்பார்கள். நிருபர்கள் பேனாவை திறந்து வைத்து கொண்டு அவர் பதிலை பதிவு செய்ய காத்து இருப்பார்கள். வெகு வெகு சாதுர்யமாக பதில் அளித்து தீர்மானத்துக்கு சாதகமான சூழ்னிலையை உருவாக்குவார் ஸ்ட்டிவன்ஸ், இப்படி சுவையான பல காட்சிகள்.

வாக்களிப்பு நடக்கும் போது , சபானாயகர் தானும் வாக்களிப்போவதாக சொல்வார், எதிர்கட்சியினர் ஆட்சேபிப்பார்கள்.

இப்படி இது வரை யாரும் செய்தததில்லை என்பார்கள். இப்படி நடந்ததே இல்லை என்பார்கள்.. இப்படி நடந்தது இல்லை என சொல்லாதீர்கள். ஒரு வரலாறு படைக்கப்படுகிறது என சொல்லுங்கள் என்பார் அவர்.

வரலாற்று படம் என்றால்உண்மையை அப்படி சொன்னால் , டிரையாக இருக்க வேண்டும் , அதில் பரபரப்பு இருக்க முடியாது என்று இல்லாமல் , உண்மைத்தன்மையையும் விட்டு கொடுக்க்காமல், விறுவிறுப்பையும் விட்டு கொடுக்காமல் அற்புதமாக வந்துள்ள படம் லிங்கன்.

உள் நாட்டு போரையும் , இந்த தீர்மானத்தையும் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டு எழும். பேச்சு வார்த்தைக்கு யாரும் வரவில்லை என லிங்கன் சொன்னால்தான் நமக்கு நல்லது என ஆலோசனை வழங்கப்படும்.

ஆனால் அப்படி சொல்வது பொய்யாக இருக்கும். லிங்கன் என்ன செய்யப்போகிறார் ..என யோசிப்போம்..சாதுர்யமாக அதை சமாளிப்பார்.

இப்படி ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்து இருப்பார் இயக்குனர்.

கணிதவியலில் வரும் ஒரு தத்துவத்தை சமூகவியலுக்கு ஒப்பிட்டு பேசுவார் லிங்கன்..அட என சொல்ல வைக்கும்.

ஏதேனும் இரண்டு , ஏதாவது ஒன்றுடன் சமமாக இருக்கும் பட்சத்தில் , அந்த இரண்டும் ஒன்றுகொன்று சமமாக இருக்கும்  என்று மென்மையான குரலில் லிங்கன் சொல்வார்.. அந்த ஒரு டயலாக் டெலிவரிக்காகவே ப்டத்தை பல முறை பார்க்க்லாம்.

ஆக , கூட்டி கழித்து பார்த்தால் , இந்த மூன்று படங்களில் மனதை கவர்வது லிங்கன் தான்.

இதில் இருக்கும் நம்பிக்கை கீற்று, பன் முக தன்மை, நேர்மை என பல விஷயங்கள் பரதேசியில் இல்லை.

ஆனால் இந்த அளவுக்கு உண்மை தன்மையுடன் தமிழில் படம் வரும் சூழல் இருக்கிறதா என்பதும் கேள்வி குறியே
Monday, March 4, 2013

சாரு மீது தனி மனித தாக்குதல் - காந்தியர்களை தலை குனிய வைத்த தமிழருவி மணியன்


ஒரு சாமியார் ஒரு கிளி வளர்த்து வந்தார். அதற்கு பகவத் கீதை கற்றுக்கொடுத்தார். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு சுலோகம் சொல்லும்படி பயிற்சி கொடுத்து இருந்தார்.

பார்ப்பவர்கள் கிளியின் பக்தியை பார்த்து பரவசமடைந்து பாராட்டுவது வழக்கமாகி விட்டது.ஆனாலும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார் சாமியார்.  இன்னொரு புத்திசாலி கிளியை தேடி பிடித்தார். ஏகப்பட்ட பணம் செல்வழித்து வாங்கிய அந்த கிளிக்கு சிவபுராணம் கற்று கொடுத்தார். அந்த கிளியும் நன்றாக கற்றுக்கொண்டு தினமும் காலையில் சொல்ல ஆரம்பித்தது. சாமியாருக்கு ஏக சந்தோஷம்.

 ஆனால் சிறைய மனக்குறை. இரண்டும் ஆண் கிளிகள். ஒரு பெண் கிளியும் வளர்க்க நினைத்தார். கஷ்டப்பட்டு பெண் கிளியை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.

 வீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது. அவரது கிளிகள் கீதை , சிவபுராணம் சொல்லும் நேரம் என்பதால் , வழக்கம் போல மக்கள் கூடி இருந்தனர்.

   கிளிகள் புத்தகங்களை புரட்ட ஆரம்பிக்கையில் சாமியார் பெண் கிளியுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
   
   பெண் கிளியை பார்த்ததும் , அந்த கிளிகள் ஸ்லோகங்களை நிறுத்தி விட்டு , விசில் அடித்தன. சாமியார் திகைத்தார். ” என்ன இது ” அலறினார்.

  ” தினம்தோறும் நாங்கள் செய்த பிரார்த்தனை நிறைவேறி விட்டதே... இனி எதற்கு ஸ்லோகங்கள்..சீக்கிரம் பெண் கிளியை உள்ளே அனுப்புங்கள் . “ என்றன.

அத்தனை நாள் , எந்த மன நிலையில் கிளிகள் ஸ்லோகங்கள் சொல்லி வந்தன என அப்போதுதான் மக்களுக்கு புரிந்தது.

*******************************************
  ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவரது உண்மையான சுயரூபம் என்றாவது ஒரு நாள் வெளிவராமால் போகாது.

அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

சன் டீவியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மது விலக்கு சாத்தியமா இல்லையா என்பது தலைப்பு.

ஒவ்வொருவரும் தம் கருத்தை எடுத்து வைத்தனர்.

  “ மதுவால் நாட்டில் குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே மது விலக்கு கொண்டு வர வேண்டும் “ என்பது ஒரு தரப்பு.

 “  மது அருந்தி விட்டு , வாகனம் ஓட்டுவது அயோக்கியத்தனம். டாஸ்மாக் வாசலில் நின்று பார்த்தால் , எத்தனையோ பேர் மது அருந்தி விட்டு கிளம்பி செல்வதை பார்க்கலாம். அவர்களை அங்கேயே கைது செய்யலாமே...

மது அருந்தி விட்டு சச்சரவு செய்பவர்கள் , வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம். மற்றபடி மதுவை வாங்கி வீட்டில் அமைதியாக அருந்துவது , ஒருவரது தனி உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை . கள் என்பது போதைப்பொருள் அன்று. அது ஓர் உணவு வகை. பண்டை தமிழகத்தில் கள் எனபது தவறாக கருதப்படவில்லை “ என மறு தரப்பு தன் கருத்தை எடுத்து வைத்தது.

 இதில் சாரு நிவேதிதா பேசுகையில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்றார். மது விலக்கு என்பது கள்ள சாராயத்துக்கு வழி வகுக்கும் என்றார். தற்போது கடைகளில் கிடைப்பது தரம் குறைந்த மது. இதை அருந்தினால் தீமைதான். இதை ஒழுங்கு செய்ய வேண்டும் . விற்பனையிலும் ஒழுங்கு முறைகள் தேவை. மற்றபடி அனைவரும் மது அருந்த வேண்டும் அல்லது அருந்த கூடாது  என தான் சொல்லவில்லை. அது அவரவர் சுதந்திரம் . ஆனால் மது அருந்தி விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது அயோக்கித்தனம் என்று தன் கருத்தை சொன்னார்.

      மது அருந்துபவர்கள்  அநாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று வாதிட்ட தரப்பு, சாருவின் இந்த வாதத்தால் சற்று திணறியது.

இந்த நிலையில் “ காந்தியவாதி”யான தமிழருவி மணியன் பேச அழைக்கப்பட்டார்.

அவர் மதுவுக்கு எதிரானவர். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர். எனவே அந்த விவாதத்தில் கலந்து கொண்ட மது எதிர்ப்பாளர்களின் லாஜிக்படி , அவர் நாகரிகமாக தன் கருத்துகளை எடுத்து வைக்க வேண்டும்.

ஆனால் அவரோ அதிரடியாக நாகரிமற்ற வகையில் பேச ஆரம்பித்தார். சாருவை அவன் இவன் என ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்தார்.  அந்த விவாதத்தில் சாருவை விமர்சித்த அரசியல் கட்சிகள் , இயக்கங்களை சேர்ந்தவர்கள் காந்தியவாதிகள் அல்லர். ஆனால் அவர்கள் நாகரிமான வார்த்தைகளில்தான் வாதம் செய்தனர்.

ஆனால் காந்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருவி மணியன் இப்படி பேசியதைக்கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் தமிழருவி மணியனின் பேச்சை துண்டித்தார்.

     தமிழருவி மணியன் வெகு காலமாகவே காந்தியத்தை பற்றி பேசி வருகிறார். அந்த காந்தியம் அவருள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் , காந்தியம் என்பதே உள்ளீடற்ற ஒன்றா அல்லது தமிழருவி மணியன் சரியாக காந்தியத்தை புரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி  அந்த நிகழ்ச்சியைப்பார்த்த லட்சக்கணக்கான மக்கள் மனதில் எழுந்தது.

   ஒழுக்கவாதிகளாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் , உள்ளூர ஒழுக்கமின்றி இருப்பதை பல இடங்களில் பார்க்கிறோம். மாமிசம் சாப்பிடாத ஆச்சார சீலரான ஹிட்லர்தான் , பேரழிவுக்கு காரணமாக இருந்தார்.

  அதே நேரத்தில் எந்த இசத்திலும் சேராமால் , வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள் யாரையும் எந்த நிலையிலும் காயப்படுத்துவதில்லை.

  மரியாதைக்குறைவாக பேசியபோது , அதை ஒரு பிரச்சினையாக்கி , அனுதாபம் தேடி, விவாதத்தை சாரு திசை திருப்பவில்லை. ஒரு ஜென் குரு போல அதை புறக்கணித்து விட்டு மேலே தொடர்ந்தார்.


கடல் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு சிறுவனை டேப் ரிக்கார்டர் முன் ஏதாவது சொல்லுமாறு அரவிந்த் சாமி சொல்வார். அவன் ஏதேதோ ஆபாசமாக பேசுவான். கடைசியில் அவன் ஆழ் மன ஏக்கத்தை , தாய்ப்பாசத்துக்கு ஏங்குவதை சொல்வான்.

 இன்று இண்டர்னெட்டில்யே எத்தனையோ பேர் பார்க்கிறோம். ஆபாச அர்ச்சனைகள் , வசவுகள் என்பதற்காகவே இணையத்தை பயன் படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏதோ உளவியல் சிக்கல் என கடந்து போய் விடுகிறோம்.
ஆனால் தமிழருவி மணியன் போன்றவர்களும் , இது போன்ற உளவியல் சிக்கலில் இருப்பதை அறிகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த உளவியல் பிரச்சினைகளை மறைக்கும் முக மூடிதான் காந்தியமா அல்லது காந்தியம்தான் இந்த உளவியல் சிக்கலுக்கு காரணமா என புரியவில்லை.

மது அருந்திய பின் , சாரு மதுக்குப்பியை எறிந்து விடுகிறார். தமிழருவி மணியன் போன்றவர்கள் மதுக்குப்பியை மனதில் சுமந்து கொண்டே திரிகிறார்கள் போல.

  நான் எத்தனையோ முறை சாருவை சந்தித்து இருக்கிறேன். கூட்டங்களில் அவருடன் கலந்து கொண்டு இருக்கிறேன் . தனிப்பட்ட முறையில் யாருடனும் அவர் வன்மத்துடனோ மரியாதை குறைவாகவோ பேசியதில்லை.
அவ்வளவு ஏன் , மற்றவர்களும் மரியாதை குறைவாக பேச அனுமதிப்பதில்லை.

ஒரு முறை ஜெயமோகனை மரியாதை குறைவாக பேசிய ஒரு நண்பரை கடுமையாக எச்சரித்தார். “ இலக்கியம் என்ற தளத்தில் நான் விமர்சிப்பது வேறு. ஆனால் நீங்கள் அவரை உரிய மரியாதையுடன் பேச வேண்டும். அவர் உழைப்புக்கு, அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் “ என கண்டிப்புடன் சொன்னார்.

அதே போல , வாசகர் வட்ட சந்திப்புகளில் கல்லூரி மாணவர்களை மது அருந்த அனுமதிக்க மாட்டார் .  குடிப்பழக்கம் இல்லாதவர்கள் , முதல் முறையாக சந்திப்புகளில் குடிக்க விரும்பினாலும் அனுமதிக்க காட்டார். குடிக்க யாரையும் வற்புறுத்தவும் மாட்டார்.

அவரது இப்படிப்பட்ட நயத்தகு நாகரிகத்தை பார்க்கும் நமக்கு அவர் படித்த நூல்கள்தான் அவரை இந்த அளவுக்கு பண்படுத்தி இருக்கின்றன என நினைத்து அவற்றை நாமும் படிக்க விழைகிறோம் .ஆனால் ஒழுக்கவாதிகளின் செயலை பார்க்கையில் , அவர்கள் சார்ந்த கொள்கை மீதும் , அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் மீதும் வெறுப்புதானே ஏற்படுத்துகிறது.

தமிழருவி மணியனின் செயல் ஒட்டுமொத்த காந்தியர்களை தலைகுனிய வைத்து விட்டது என்றால் மிகையில்லை.


தமிழருவி மணியனுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


பழைய தமிழ் பாடல் ஒன்று,,,சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

இதை தமிழருவி மணியன் இப்படி புரிந்து கொண்டு இருப்பார்.


 வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

ஆனால் இதல்ல அர்த்தம். 


மனிதனுக்கு இரண்டு இயல்புகள் உண்டு.

உண்மையான இயல்புகள் , கற்றுகொண்டு வரும் பண்புகள்.

ஓவியம் ,. மொழி , கல்வி போன்றவை எல்லாம் நம் இயல்பான பண்புகள் அல்ல. கற்றுக்கொண்டு வருபவை. 

ஆனால் அன்பு, இரக்கம் , ஈகை போன்றவை மனிதனின் இயல்பான குணங்கள். 


 பல நேரங்களில்  நமது படிப்பும் , சூழ் நிலைகளும் நம் இயல்பான இந்த குணங்களை சிதைத்து விடுகின்றன.

எனவே காந்தியம் ,  மது அருந்தாமை போன்றவற்றை வெறும் தத்துவரீதியாக பின்பற்றுவதை விட , அதையெல்லாம் விட்டு விட்டு இயல்பாக வாழ்ந்தால் போதும் . மது என்பது ஒரு பொருட்டு அல்ல என்ற மன நிலை தானாகவே வந்து விடும், காந்தி போதித்த நற்குணங்கள் வெறும் பேச்சாக இல்லாமல்  , உண்மை இயல்பாக மாறி விடும்.********************************************************************************************


_-


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா