Wednesday, May 29, 2013

எதிர்கால மனிதன் நிகழ்காலத்திற்கு வந்தபோது ....


" காலேஜ்ல நாம ரெண்டு பேரும்தான் டாப் ராங்க் ஸ்டூடன்சா இருந்தோம் . நாம கண்டிப்பா பெரிய கண்டுபிடிப்புகள் , பெரிய சாதனைகள் செய்வோம்னு எல்லோரும் நினைச்சாங்க. ஆனால் இந்த போர்ட்டபிள் அணுகுண்டு கண்டுபிடிச்சது பெரிய சாதனையா அல்லது தீமையானு புரியல “

புலம்பிய ராஜேஷை நட்பு கலந்த அனுதாபத்துடன் பார்த்தான் ஜேம்ஸ்.

” ஒரு தீப்பெட்டி சைஸ் பெட்டி. சரியான காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்தினால் , உலகமே அழிஞ்சுடும் , ஆளில்லாத விமானம் , ஏவுகணை எதுவுமே வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தை அழிக்கலாம்.

கண்டிப்பா இது அறிவியல் சாதனை. ஆனால் இதனால் தீங்கு ஏற்படாது. உலகிலேயே மிக மிக புத்திசாலியான ,ஓர் ஐடியல் மனிதனால்தான் இந்த காம்பினேஷன்ல பட்டன்களை அழுத்த முடியும். ஆனால் அப்படி ஒரு மனிதனின் இருப்பு சாத்தியமில்லை. அதனால் பயம் வேண்டாம்”


ராஜேஷுக்கு நம்பிக்கை வரவில்லை.

” அதெப்படி சொல்ற. நீ சொல்லும் புத்திசாலி இப்ப இல்லாம இருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் அப்படி ஒரு புத்திசாலி தோன்றலாமே “

ஜேம்ஸ் சிரித்தான்.

“ கண்டிப்பா பரிணாம வளர்ச்சியில் அப்படி ஒரு மனிதன் தோன்றலாம்தான். ஆனால் அப்படி ஒரு மனிதன் தோன்றுவதற்கு...”

தன் கணினியை உற்று பார்த்தான், அவன் எண்ணம் அறிந்து கணினி இயங்கியது. ஸ்க்ரீனில் தெரிந்த தகவலை பார்த்து சொன்னான்.

 “ ..... இன்னும் 127 ஆண்டுகள் , 7 மாதங்கள் ஆகும். அதற்குள் இதற்கு மாற்று , எதிர் ஆயுதங்கள் எல்லாம் வந்து விடும். சோ , டோண்ட் வொர்ரி “

“ அப்பாடா “ பெரு மூச்சு விட்டான் ராஜேஷ்..

“ அவசரப்பட்டு பெருமூச்சு விடாதே. நான் இன்னொரு அபாயம் குறித்து கவலைப்படுறேன் “

கவலையுடன் சொன்ன ஜேம்ஸ் முகத்தை என்ன என்பது போல பார்த்தான் ராஜேஷ்.

“ ஒரு வேளை அந்த எதிர்கால புத்திசாலி மனிதன் , தன் புத்தி சாலித்தனத்தால் நிகழ் காலத்துக்கு வந்தால் , நமக்கு பிரச்சினைதான் “

உச்சகட்ட புத்திசாலித்தனத்துடன் ஒருவன் இருக்க முடிந்தால் , அவனால் காலம் கடந்து வர முடிவது சாத்தியம்தானே.

கவலையுடன் ஜேம்சை பார்த்து ராஜேஷ் கேட்டான்.

“ ஆராய்ச்சியின் முடிவை , அந்த ஆராய்ச்சியே தீர்மானிக்கிறது என ஒரு தியரி உண்டு. அதாவது தன் இயல்புபடி இயங்கி கொண்டு இருக்கும் நுண் பொருட்கள் , அதை ஆராயும்போது கொஞ்சம் விசித்திரமாக இயங்க தொடங்குகின்றன, எனவேதான் முழு உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஆராய்ச்சி கருவிகள் , ஆராய்ச்சி செய்பவர்கள் நோக்கம் , ஆராய்ச்சி நடக்கும் கால கட்டம் -இதெல்லாம் கூட ஆராய்ச்சி முடிவை மாற்ற கூடும்.

எதிர்கால மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சி இது வரை வெற்றி பெறாததற்கு காரணம் இதுதான். அந்த ஆராய்ச்சி வெற்றி பெற வேண்டிய தேவை இது வரை இல்லாமல் இருந்தது.

ஆனால் நமது இந்த அணுகுண்டு கண்டுபிடிப்பு , எதிர்கால மனிதனுக்கு ஒரு தேவையை உருவாக்கி அவனை வர செய்து விட வாய்ப்பு இருக்கிறதா ? “


ஜேம்ஸ் முகத்தில் மெல்ல கவலை ரேகைகள் படர்ந்தன.


” நீ சொல்வது ஓரளவு உண்மைதான். ஒன்றை புரிந்து கொள். அவன் நம் கண் முன் தோன்றினால் பயந்து விடாதே.. அவன் இருப்பு என்பது ஹைப்போதீசிஸ் போலத்தான்.. அதாவது ஒரு சாத்தியம்தான் நம் கண் முன் தெரியும்.

அதை அலசி ஆராய்ந்தால் அதில் இருந்து விடுபட்டு விடலாம்.. பீதி அடைந்து விடாதே”

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , வெளியில் யாரோ வந்திருப்பது சென்சார்கள் மூலம் தெரிந்தது. உள்ளே வர அனுமதி கேட்டு அவன் உணர்வு அலைகளை அனுப்பினான்.

அனுமதி கிடைத்து உள்ளே வந்தான்.

பார்ப்பதற்கு மிக வசீகரமாக இருந்தான். ஆரோக்கியமாக இருந்தான். குறிப்பாக புத்திசாலித்தனம்!! கண்கள் ஒளிவிட்டன.

” உங்க கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு வந்தேன். உண்மையில்யே இது அதிசயம்தான்... எங்கள் காலத்தில் , அதாவது 100 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்க வேண்டியதை, இப்போதே கண்டுபிடித்து விட்டீர்களே”

” ஓ...எதிர்கால மனிதன்”

இருவருக்கும் வியர்த்து போனது.

இல்லை..இது வெறும் கனவு..மாயத்தோற்றம் -  தைரியம் வரவழைக்க முயன்றனர்.

“ உங்க பேர் ? “

அவன் புன்னகைத்தான்.

” எதிர்காலத்தில் எந்த மொழி இருக்கும். எந்த நாட்டினன் இருப்பான், இந்த இனம் நீடிக்கும் என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. பரிணாம வளர்ச்சியில் புத்திசாலித்தனம் , தீய உணர்வு எல்லாமே வளரும். அப்படி வளர்ந்த உச்ச நிலைதான் நான்.”

சொல்லிக்கொண்டே  தீப்பெட்டி அணுகுண்டை எடுத்தான்.

காம்பினேஷன் பட்டன்களை தட்ட தொடங்கினான்.

“ ஹேய் .. நிறுத்து “ அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான் ஜேம்ஸ்.

பல ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட அவனை குண்டு தொட முடியவில்லை.

அவன் சிரித்தான்.

” இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து ஸ்பேஸ்- டைம் துப்பாக்கி கண்டுபிடுத்தார்கள்..அதை வைத்து வருங்கால மனிதனை கொன்று பயிற்சி எடுத்தார்கள்”

ராஜேஷ் முகம் ஒளிர்ந்தது..

” ஹேய் ,,இவன் சொல்வது தவறு...ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பார்கள் என சொல்ல வேண்டும். ஐம்பது ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தார்கள் என எப்படி சொல்ல முடியும் ? “

அவன் எதையும் கண்டுகொள்ளாமல் , பட்டனை அழுத்தி கொண்டு இருந்தான்.

“ சரியாத்தான் சொல்றான், நமக்குதான் ஐம்பது ஆண்டுகள் கழித்து என்பது எதிர்காலம் .. இவன் நூறு ஆண்டுகள் கழித்து பிறந்தவன். அவனுக்கு ஐம்பது ஆண்டுகள் என்பது இறந்த காலம்தான் “  ஜேம்ஸ் அலுப்புடன் சொன்னான்.

இன்னும் இரண்டு பட்டன்கள்தான். அது வெடித்து விடும்.

“ ஹேய்....   இதை எப்படி கவனிக்காமல் போனோம். இவன் அந்த கடைசி பட்டனை அழுத்தினால் உலகம் அழிந்து விடும். அதன் பின் இவன் எப்படி நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க முடியும். ஆக இவன் இருப்பு என்பதே பாரடக்ஸ் தானே”

ராஜேஷ் அலறினான்.

“ அட ..ஆமா.. லாஜிக்கலான கேள்விதான் “

ஜேம்ஸ் பெருமூச்சு விட்டான்.

அந்த எதிர்கால மனிதன் ஒரு கனவு போல மறைந்தான்.

“ ம்ம்ம்.. எதிர்கால மனிதன் என்பது ஒரு தவறான முன் யூகம் “ சிரித்த ராஜேஷ் ,” சரி வா...ஃப்ரெஷா கொஞ்சம் ஆக்சிஜன் அடிச்சுட்டு வரலாம்” என்றான்.

இருவரும் ஆக்சிஜன் பாட்டிலை எடுத்து கொஞ்சம் உறிஞ்சினார்கள்.

மூளை முன்பை விட நன்றாக யோசித்தது.

“ சரி.. லாஜிக் என்பதே  இருப்பு சார்ந்ததுதானே.. நாம் இல்லாவிட்டால் லாஜிக் ஏது ..  இல்லாமையில் இருந்து இருப்பு தோன்ற முடியாது என்பது லாஜிக்..ஆனால் நாமெல்லாம் தோன்றுவதற்கு முன்பு , ஒரு லாஜிக் மீறலில்தான் உலகம் தோன்றி இருக்கிறது.

நாம் இருப்பதற்கு முன்பும் லாஜிக் இல்லை.. நாம் இல்லாமல் போன பின்னும் லாஜிக் இல்லை.

எனவே வருங்கால மனிதன் வந்து உலகை அழிப்பது லாஜிக் மீறல்தான் என்றாலும் , சாத்தியமான ஒன்றா”

ராஜேஷ் கேட்க, ஜேம்ஸ் சற்று குழம்பினான்.

“ இதில் குழப்பம் என்ன இருக்கு, இந்த லாஜிக் மீறல் லாஜிக்கலாத்தானே இருக்கு “

எதிர்கால மனிதன் அவனுக்கே உரிய புன்னகையுடன அந்த அறையில்தான் அவ்வளவு நேரம் இருந்தது போல , அவர்களை பார்த்தான்.

மெதுவாக கடைசி பட்டனை அழுத்தினான்

************************************************************************Tuesday, May 21, 2013

வலைப் பதிவர்களுடன் என் அனுபவங்கள்- வலைச்சரத்தில்...

வலைச்சரத்தில் பதிவர்கள் சிலருடன் என் அனுபவங்களையும் , சில பதிவுகளையும் பற்றி எழுதி வருகிறேன். படித்து பாருங்கள்

****************************************************************

நானும் அவர் தவறு செய்ததாக கருதினேன். அவரை விமர்சித்து எழுதலானேன். ஒரு கட்டத்தில் எல்லை மீறி விமர்சித்தேன்.

அதன் பின் யோசித்தபோது , என்னுள் ஏன் இவ்வளவு கோபம் , வன்மம் என திகைத்தேன். இது நல்லதல்லவே என மன சாட்சி சுட்டி காட்டவே அந்த பிரச்சினையில் இருந்து மெல்ல விலகினேன். மறந்தும்போனேன்.


பதிவர்கள் ஆதிமூல கிருஷ்ணனும் , பரிசல்காரனும் ஒரு சிறுகதை போட்டி நடத்தினார்கள். அதில் எனக்கு பரிசு கிடைத்தது, சுய தம்ப்பட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, அந்த சுட்டிகளை இங்கு தர இயலவில்லை.

தொடர்ந்து பல நண்பர்கள் மெயிலிலும் , போனிலும் வாழ்த்து சொன்னார்கள். புதிய எண்ணில் இருந்து ஒரு கால் வந்தது. யாரோ ஒருவர் பேசினார்.. நான் கேட்டிராத குரல்.

வாழ்த்துகள்.. நன்றாக எழுதுகிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.

சார்... நீங்க யாரு... குரல் கொஞ்சம் அடையாளம் தெரியல..என தயங்கிவாறு கேட்டேன். யாரவது நெருங்கிய நண்பர் அழைத்து , குரல் தெரியாமல் போய் விட்டதா என்ற குழப்பம்.

எதிர் முனை சிரித்தது.. என்னை உங்களுக்கு பிடிக்காது...ஆனால் உங்களை எனக்கு பிடிக்கும்..அதனால்தான் அழைத்தேன் என்றார் அவர்.

உங்க பேர் ? என்றேன்,

யார் அவர்? என்ன சொன்னார்?

*************************************************************************************8


சென்னை புத்தககண்காட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் பாஸ்கருடன் சென்று இருந்தேன்.   அந்த நேரத்தில் சாரு நிவேதிதாவும் அங்கு வந்து இருந்தார்.

பாஸ்கருக்கு சாருவுடன் நல்ல பழக்கம். நான் அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன்

 “ கொஞ்சம் இருங்க..பேசிட்டு வருகிறேன் “ என்றார் பாஸ்கர்.. நானும் வருகிறேன் என சொல்லி விட்டு சாருவிடம் சென்றோம்.

போனோமோ , கை குலுக்கினோமோ... ஆட்டோகிராப் வாங்கினோமா என இருந்திருக்க வேண்டும். ஆனால் விதி வலிது.

தொடர்ந்து படிக்க


Sunday, May 19, 2013

இரு வகை பார்வைகளை முன் வைக்கும் திரைப்படங்கள்

1.   இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க .....


சில நேரங்களில் சில பதிவர்கள்- ஓர் அறிமுகம்

இன்னும் ஒரு வார காலத்துக்கு வலைச்சரத்தில் எழுத இருக்கிறேன். பதிவர்களைப்பற்றிய என் பார்வையை பகிர இருக்கிறேன்.

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

2. எல்லா விஷ்யங்களுமே முழுமையை நோக்கி  அழைத்து செல்வதாக இருக்க வேண்டும் என்பது ஒரு பார்வை. எல்லா விஷயங்களுமே அதன் அளவில் முழுமையானதுதான் என்பது ஒரு பார்வை.

இரண்டு பார்வைகளுமே எனக்கு பிடித்தவைதான்.
sanshiro sugata என்ற அகிரா குரோசாவின் படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன் ஆரம்ப கால படத்திலேயே தன் ஆளுமையை காட்டி இருப்பார் அவர்.
தற்காப்பு கலையை கற்க ஆரம்பிக்கும் நாயகன் , அதன் மூலம் வாழ்க்கையையே அறிந்து கொள்கிறான் என்பது கான்சப்ட்.

தீவிரமாக ஒரு செயல் உயர்னிலை அடைந்து நம்மை வேறு ஓர் இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது ஒரு பார்வை.  உதாரணமாக பாலுணர்விலேயே சிக்கி கிடைக்காமல் , அதன் மூலம்கூட உயர்னிலை அடைய முடியும் என்பதற்காகத்தான் கலைகள் , சிற்பங்கள், சில தியான முறைகள்.

ஆனால் ஒரு வேலையை முழுமையாக செய்தால் ,ஓர் உணர்ச்சியை முழுமையாக துய்த்தால் அதுவே போதும். அதன் மூலம் வேறு எதையும் அடைய வேண்டியதில்லை என்பதும் ஏற்கத்தக்கதாகவே இருக்கிறது.

லாஸ்ட் டெம்ப்டேஷன் படத்தின் கான்சப்ட் இதுதான், அன்பு செலுத்து ..அன்பு செலுத்தினால் உனக்கு நல்லது நடக்கும் என்பதற்காக அல்ல.  எதையும் எதிர்பாராமல் ஒரு ரோஜா , தன் இயல்புப்படி மணம் வீசுகிறதே ..அது போல..


ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் என்ற படமும் இந்த பார்வையையே முன் வைக்கிறது. காதல் வெற்றி , காதல் தோல்வி என்றெல்லாம் சொல்கிறேமே..

காதலின் இலக்கு என்ன,,,  ஊர் சுற்றுவதா? கல்யாணமா? புலனின்பமா?  எதை அடைந்தால் காதல் வெற்றி என சொல்ல முடியும்?

காதலுக்கு இப்படி இலக்கு தேவை இல்லை. காதலிக்க , அன்பு செலுத்த தெரிந்து விட்டால், அந்த உணர்வை அனுபவித்து விட்டால் போதும், அதன் மூலம் எதையும் அடைய வேண்டியதில்லை என்ற பார்வையை முன் வைக்கிறது படம். காதல் அதன் அளவில் பரிபூரணமாக இருக்கிறது.


இன்னும் சில நல்ல படங்களை பார்த்து வருகிறேன். விரைவில் எழுதுவேன்.


3. அறிவியல் புனைவுகளை பலர் ரசித்து பாராட்டி இருந்தார்கள். மேலும் சில எழுத இருக்கிறேன்.

4. போரும் அமைதியும், எல்லை காந்தியின் சுய சரிதம் போன்ற சில புத்தகங்கள் படித்து முடித்தேன். அதைப் பற்றியும் எழுதுவேன்.

Saturday, May 18, 2013

இறந்தவர்களிடம் பண மோசடி ( அறிவியல் புனைவு )


 கண்டிப்பாக அவன் ஏதோ ஃபிராடு செய்கிறான் என புரிந்தது. ஆனால் என்னவென்றுதான் புரியவில்லை.

கணேசன் எனக்கு பள்ளிகாலத்தில் இருந்தே பழக்கம்.  நான்கூட அவ்வப்போது லீவு எடுப்பேன். ஆனால் அவனோ ஒரு நாள் கூட லீவு எடுக்கவே மாட்டான். அந்த அளவுக்கு படிப்பில் ஆர்வம் என அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள். லீவு எடுக்காமல் வந்து விடுவானே தவிர வகுப்பறைக்குள் வர மாட்டான். கால்பந்து மைதானம் அருகே ஒரு புளிய மரம் இருக்கும். அங்கே அமர்ந்து சினிமா பத்திரிக்கைகளையோ , சீன் படங்களையோ பார்த்து கொண்டு இருப்பான்.

அப்போதெல்லாம் இண்டர்னெட் கிடையாது. எனவே யாருக்கும் கிடைக்காத சீன் படங்கள் அவனிடம் இருப்பது அபூர்வமானதாக கருதப்பட்டது. மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அதை காட்டுவான். விலைக்கும் விற்று வந்தான். அந்த வகையில் அந்த வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.

காசின் அருமை அப்போதே அவனுக்கு புரிந்து விட்டது, சம்பாதிக்கும் லாகவமும் கை வந்து விட்டது.

ஆனால் ஆசிரியர்கள் அவனை அவ்வளவாக கண்டிப்பதில்லை. கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கி விடுவான்.

எனவேதான் நன்றாக படிக்க கூடிய எனக்கு பி ஏ தமிழ் பிரிவு கிடைத்தது அவனுக்கோ ஆர் ஈ சீயில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் கிடைத்தது.

    இதில் கொடுமை என்னவென்றால் நான் பி ஏ படித்தாலும் ஒரு வொர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக இயந்திரவியலில் பல நுணுக்கங்களை கற்று , பொறியியல் துறையில் செட்டில் ஆகி விட்டேன்.

அவனோ பொறியியல் துறையில் பட்டம் பெற்றாலும் அந்த துறை தவிர மற்ற துறைகளில்தான் ஆர்வம் காட்டி வந்தான்.

ஒரு நாள் ஓர் ஆர்டர் விஷ்யமாக சென்னை வந்தபோது, மூர் மார்கெட்டுக்கு வழி கேட்டு கொண்டு இருந்தேன். பென்ஸ் கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது, அருகில் சென்றேன்..

“ சார்..இங்கே மூர் மார்க்கெட் பக்க்கதில், கெஜேஃப் எஞ்னினியரிங் எங்கே இரு..” கேட்ட்கும்போதே முகத்தை பார்த்து விட்டேன்.

அட.. நம்ம கணேஷ்,.

“ “டேய்...கணேஷ்... நீயா ,,, நல்லா இருக்கியா?”

அவனுக்கும் என்னை தெரிந்து விட்டது.

“ அட ... நீயா.... வாடா வா... பார்த்து எத்தனை நாள் ஆச்சு... ம்ம்...காரில் ஏறு “

அழைத்து கொண்டு பெசண்ட் நகரில் இருக்கும் அவன் வீடு நோக்கி காரை பறக்க விட்டான்.

“ மச்சான்.. ஹார்ட் வொர்க்  , ஸ்மார்ட் வொர்க் என இரண்டு இருக்கு,,, நான் அந்த காலத்தில் இருந்தே , ஸ்மார்ட் வொர்க்கைத்தான் நம்புறேன்.. பாரு.. இந்த மாதிரி என்னிடம் நாலு காரு இருக்கு. சொந்தமா மூணு வீடு இருக்கு. எல்லாம் மூளைடா.. “ சிரித்தான்.

அவன் என்ன தொழில் செய்கிறான் என யூகிக்க முடியவில்லை.. ஏதோ தப்பான வழி என புரிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என புரியவில்லை. சீட்டு , காந்த படுக்கை , பிரமிடு போன்று லோக்கலாக இறங்கும் ஆளும் இல்லையே.

என்னை பார்த்து புன்னகைத்தான்.

” ஆசை கண்களை மறைக்கும்,இந்த கான்சப்டை மட்டும் மனதில் வச்சுக்கிட்டா, எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம்டா.. :

“ டேய்..மத்தவங்க ஆசையை பயன்படுத்தி ஏமாத்துறது தப்பு,,, என்னிக்கு இருந்தாலும் மாட்டிக்குவ”

மறுபடி சிரித்தான்.

“ தம்பி... நான் ஏமாத்துறது ஏற்கனவே இறந்து போனவங்களை... அவங்க எப்படி என்னை மாட்ட வைக்க முடியும்??”

” என்னடா சொல்ற” அதிர்ச்சி அடைந்தேன்.

“ம்ம்.... அட்வான்ஸ்டு அறிவியல் எப்படி கைகொடுக்குதுனு உனக்கு மட்டும் நேரடியா காட்டுறேன்...  நீயே பாரு.. இதை வேறு யாரிடமும் சொன்னதில்லை... உனக்கு சொன்னாலும் நீ இதே போல செய்ய மாட்டேனு எனக்கு தெரியும்.,உனக்கு தைரியம் பத்தாது..  என்னை காட்டி கொடுக்கவும் முடியாது,, ஏனா இதை யாரும் நம்ப மாட்டாங்க..உள்ளே வா”

அறைக்குள் அழைத்து சென்றான்..

விதவிதமான வித்தியாசமான கருவிகள்..  கெமிக்கல் வாசனை. அமிலம் ஒன்று ஆவேசமான மணம் வீசிக்கொண்டு இருந்தது.

“ இதோ பார்..இதுதான் டை மெஷின்...இதன் மூலம் கடந்த காலத்துக்கு மெசேஜ் அனுப்பலாம்..   அந்த கால மனிதர்களுக்கு கனவு மூலம் இந்த மெசேஜ் கிடைத்து , சிலர் நேரில் வரக்கூடும். அவர்களுடன் நான் வியாபாரம் செய்வேன். இதில் எனக்கு ஒரு போதும் நஷ்டம் வராது. லாபம் மட்டுமே வரும்.. எப்படி என நீயே பார்ப்பாய்.. வெயிட் “ என்றான்.

“ என்ன வியாபாரம் ? “

“ என்றுமே டிமாண்ட் இருக்கும் ஒரே வியாபாரம் ஆயுத வியாபாரம்..  இப்ப பாரு..  நவீன ஆயுதம் விற்பனைக்கு அப்படீனு ராஜராஜ சோழன் காலத்துக்கு மெசேஜ் அனுப்புறேன்.  விளைவுகளை பாரு.”


என்னவோ டைப் செய்தான்.. மானிட்டரை அட்ஜஸ்ட் செய்து டெஸ்டினேஷன் காலம் என்பதை நிரப்பினான். message sent  என மானிட்டர் அறிவித்தது.

கொஞ்ச நேரம் ஏதும் நிகழவில்லை.. எதிர்பார்ப்புடன் காத்து இருந்தேன்.

கதவு தட்ட்டப்பட்டது.

’திறந்துதான் இருக்கு..வாங்க”

உள்ளே ஒருவர் நுழைந்தார்.

பழைய காலத்து ஆள் போல இருந்தார். வேட்டி அணிந்து இருந்தார். உடலில் ஒரு துண்டை சுற்றி இருந்தார்.

“ என் பேர் பரமேஸ்வரன்..சோழர் ஆட்சியை கவிழ்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்..  ஆயுதங்கள் கிடைப்பதாக கேள்வியுற்றோம்”

கணேஷ் ஒரு துப்பாக்கியை காட்டினான்.

“ இதன் பெயர் துப்பாக்கி. இதில் குண்டுகளை நிரப்பி எதிரிகளை சுடலாம். வில் , அம்பு போன்றவற்றை விட சக்தி வாய்ந்தது.

சட் என அங்கிருந்த கண்ணாடி குடுவையை சுட்டான். உடைந்து சிதறியது.

பரமேஸ்வரன் ஆச்சர்யமாக பார்த்தார்.

“ இதன் விலை ? “

கணேஷ் மர்மமாக புன்னகைத்தான்.

“இதற்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.  இதை வைத்து நீங்களே புதிய கருவிகளை உருவாக்க முடியும், உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.. ஆயிரன் பொற்காசுகள் “

பரமேஸ்வரன் அதிர்ந்தார். “ஆயிரம் சற்று அதிகம் அல்லவா?”

”பேரம் பேச நேரம் இல்லை.. உங்கள் காலத்துக்கு விரைவில் சென்றாக வேண்டும்.. நீண்ட நேரம் இருக்க முடியாது “

முடிவு எடுத்து ஆயிரம் பொற்காசுகளை மேஜையில் வைத்தார்.

அவர் கையில் துப்பாக்கி வைக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் மறைய தொடங்கினார்.

அவர் உடைவாள், ஆடை, குடுமி , உடல் என மறைய தொடங்கியது.

ஆனால் துப்பாக்கி மறையவில்லை.

தொப் என தரையில் விழுந்தது.

கணேஷ் அதை எடுத்து பத்திரப்படுத்தினான்.

“ நான் சொன்னேனே,,,ஆசை கண்ணை மறைக்கும் என...அதுதான் இது.... கடந்த கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியும்.. ஆனாலும் ஒரு போதும் எதிர்கால பொருட்களை நிகழ் காலத்தில் பயன்படுத்த முடியாது...  இது தெரியாமல் பலர் ஏமாறுகிறார்கள்.

இப்படி பல அரசர்கள், ராபர்ட் கிளைவ் போன்றவர்களை ஏமாற்றித்தான் இவ்வளவு சொத்து சேர்த்தேன்..ரிஸ்க் இல்லாத தொழில் “ சிரித்தான்.

சரி..போதும் என முடிவு செய்து கிளம்ப ஆயத்தமானேன்,\

மீண்டும் கதவு தட்டப்பட்டது.

உள்ளே வந்தவர் பரமேஸ்வரன் காலகட்ட ஆள் போலவே இருந்தார். என் பெயர் ரவிதாசன் என்றார்.


**********************************************

கணேஷை பேய் அடித்து கொன்று விட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசி கொண்டார்கள்.  ஹார்ட் அட்டாக் என போலீஸ் கேசை முடித்தது.
ஆனால் ஆசை கண்ணை மறைக்கும் என்ற கணேசின் கான்சப்ட் அவனுக்கே எமன் ஆனது எனக்கு மட்டுமே தெரியும்.

இப்போதைய பொருட்களை கடந்த காலத்துக்கு எடுத்து செல்ல முடியாது... ஆனால் கடந்த கால பொருட்களை இப்போது பயன்படுத்தலாம் எனற அவனது புரிதல் சரிதான்.

ஆனால் அவன் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை.

பிரச்சினை வந்தால் , கடந்த கால ஆட்களை நாம் கொல்ல முடியாது., ஏனென்றால் அது பாரடக்ஸ். கடந்த கால ஆளான நம் தாத்தாவை நாம் கொன்று விட முடிந்தால் , நாம் எப்படி பிறந்து இருக்க முடியும். கடந்த காலத்தில் கொலை என்பது paradox.

ஆனால் கடந்த காலத்தின் விளைவுகளால் நாம் இறப்பது என்பது இயல்பானது.

 நவீன ரக ஆயுதங்கள் யாவும் ரவிதாசன் முன் பயனற்று போய் , ஆயுதம் ஏதும் இன்றி வெறும் கைகளால் ரவிதாசன் கணேஷை கொன்றதை நான் சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?
:

Thursday, May 16, 2013

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?அன்புள்ள பதிவர் அறிவியல் வெறியனுக்கு..

உங்களுடைய சமீபத்திய இடுகையான “ டைம் டிராவல் “ சாத்தியமா என்ற கட்டுரை படித்தேன்.   அருமை..

ஸ்பேஸ் போன்றதே காலம் என்பதையும் , ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி வேண்டுமானாலும் எந்த திசையிலும் செல்லலாம். அதே போல காலத்திலும் எந்த திசையிலும் செல்ல முடியும். அதாவது 2010 ல் இருந்து 2020 க்கு செல்வதை போல 2020ல் இருந்து , 2010க்கும் செல்ல முடியும். 1947க்கு வேண்டுமானாலும் கூட செல்ல முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி இருந்தீர்கள். சூப்பர் என வியந்தேன்.

ஆனால் இதே தலைப்பில் ஒரு கட்டுரையை , வரிக்கு வரி இதே போல , 2013ஆம் ஆண்டிலேயே , பிச்சைக்காரன் என்ற பதிவர் கட்டுரை எழுதியாக கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.

இந்த பிழைப்புக்கு... சே..

வெறுப்புடன்,
 நிர்மல்
15.05.2090

அன்புள்ள நிர்மல்.

உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன், திடீரென கடைசியில் கவிழ்த்து விட்டீர்களே... ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நான் வலைப்பதிவுகள் எதுவும் படித்ததில்லை. பிச்சைக்காரன் என்ற பெயரை கேள்விப்பட்டது கூட இல்லை.

உங்கள்க்கு யாரோ தவறான தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

அன்புடன்,
அறிவியல் வெறியன்
17.05.2090

நண்பருக்கு,

எனக்கு தகவல் தந்தவர் அவர் குற்றச்சாட்டு உண்மைதான் என்கிறார். ஆனால் பிச்சைக்காரனின் பதிவுகள் ஏதும் இணையத்தில் கிடைக்கவில்லை. ஒரு அச்சில் இருக்கிறதா என தெரியவில்லை. எதற்கும் தேடிப்பாருங்கள். அவர் கட்டுரைக்கும் , உங்கள் கட்டுரைக்கும் இருக்கும் வேறுபாட்டை சுட்டிக்காட்டி , உங்கள் நேர்மையை உலகுக்கு உணர்த்துங்கள்.

அன்புடன்,

நிர்மல்
20.05.2090

நிர்மல்,

கதைகள் , கவிதைகள் என சொந்தமாக எழுதி வருகிறேன். ஒரு போதும் காப்பி அடித்ததில்லை. ஆனால் அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது மட்டும் , பிச்சைகாரன் கட்டுரை போல இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். யார் அந்த பிச்சைகாரன் என நானும் தேடிப்பார்த்து விட்டேன், அவர் கட்டுரைகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஒரு வேளை உங்களுக்கு கிடைத்தால் சொல்லுங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கி கொள்கிறேன். ஒரு வேளை பிச்சைக்காரனின் ஆவி என் மேல் புகுந்து எழுதிகிறதோ என ஐயுறுகிறேன். பயமாக இருக்கிறது.

அன்புடன்,
அறிவியல் வெறியன்

23.05.2090

நண்பரே.

ஒரு நல்ல மன நல மருத்துவரை சென்று பாருங்கள்.

அன்புடன் ,

நிர்மல்.

25.05.2090


மரியாதைக்குரிய இந்திய அறிவியல் கழக தலைவருக்கு,

வணக்கம்,

ஸ்பேஸ் , டைம் குறித்த பார்வைகள் வெகுவாக மாறி இருப்பதை அறிவீர்கள். டைம் என்பதை ஸ்பேஸ் போலவே கருத முடியும் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன, இறந்த காலத்தில் இருந்து , நிகழ் காலத்துக்கோ. அல்லது எதிர்காலத்தில் இருந்து நிகழ் காலத்துக்க்கோ பயணம் செல்ல முடியும் என்பது ஆய்வு நிலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இதை நேரடியாக உணர்கிறேன்.
2013ல் வாழ்ந்த பிச்சைக்காரன் என்பவர் , டைம் டிராவல் மூலம் என் வீட்டுக்கு வருகிறார் என நினைக்கிறேன். அப்படி வந்து , நான் என்ன எழுதுவது என்பதை அவரே முடிவு செய்கிறார். இதனால் என் பெயர் கெடுகிறது.

அனுமதி இல்லாமல் என் இடத்துக்கு வருவது எப்படி குற்றமோ அதே போல அனுமதி இல்லாமல் என் நேரத்துக்கு வருவதும் குற்றம்தானே..

இதற்கேற்ப சட்டம் கொண்டு வர அறிவியல் துறை ஆவன் செய்யுமா?

இத்துடன் , என் முழு கடித தொடர்புகளை இணைத்துள்ளேன்.

அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது என என் கடித தொடர்புகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறேன்

அன்புடன்.
அறிவியல் வெறியன்

27.05.2090


நண்பரே..

எங்கள் நேரத்தே வீணடிக்காதீர்கள்.

2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறுகதையை எங்களுக்கு அப்படியே அனுப்பி இருக்கிறீர்கள்..எங்களை முட்டாள் என நினைக்க வேண்டாம். இப்படி செய்தால் உங்கள் மேல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

 நீங்கள் சொல்வது எதுவும் உண்மை சம்பவங்கள் அல்ல. 2013ல் பிச்சைக்காரன் எழுதிய ஒரு கதை.. அந்த கதை உங்கள் பார்வைக்கு...

பிச்சைக்காரன்: அறிவியல் ரீதியாக நூதன குற்றம் செய்யும் பதிவர்- சட்டம் என்ன செய்ய போகிறது ?

உங்கள் சேவையில்,

இந்திய அறிவியல் கழகம்

30.05.2090

Tuesday, May 14, 2013

கண்ணீர் கடலில் நம்மை தள்ளிய பதிவர் பட்டாபட்டி - சாருவை வைத்து ஏற்பட்ட உறவும் பிரிவும்


   மரணங்களை அன்றாடம் பார்த்து வந்தாலும் , சில நல்லவர்களின் மரணம் நம்மை பாதித்து விடுகிறது. எல்லா தத்துவங்களும் , படிப்பும் செயலிழந்து போய் நம் கண்ணீரை துடைக்க முடியாமல் நின்று விடுகின்றன.

பட்டாபட்டி என்ற பெயரில் பதிவுலகை கலக்கி வந்த இந்த அருமை நண்பரின் இயற்பெயர் வெங்கிடபதி. சிங்கப்பூரில் பணி புரிந்த இவர் மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார்.

   வெளி நாட்டில் இயற்கை எய்திய அவர்  , சென்னைக்கு கொண்டு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு , இங்கிருந்து கோவை சென்று , நாளை புதன் கிழமை ( 16.05.2013 ) இறுதி சடங்கு நடக்கும் என தெரிகிறது.

     நகைச்சுவையாக எழுத தெரிந்த இவருக்கு ஆக்ரோஷமாகவும் எழுத தெரியும்.  சில உறுதியான கருத்துகளில் இருந்தவர்.  நேர்மையாக எழுதக்கூடியவர்.

  நான் எழுத வந்த புதிதில் எனக்கு ஊக்கமூட்டியவர் அவர். பட்டாபட்டி follows என்று ஒரு வலைப்பூ வைத்து இருக்கிறார் ( மன்னிக்கவும்,, வைத்து இருந்தார்). அதில் என் வலைப்பூவையும் இணைத்து இருந்தார்.

   அந்த நேரத்தில் எனக்கு இது மகிழ்ச்சியாக இருந்தது. நான் அப்போதுதான் எழுத வந்தவன். என்னை நண்பராக நினைக்கிறாரே என மகிழ்ந்தேன்.

அவர் முகப்பு பக்கத்திலேயே அவர் நகைச்சுவை உணர்வு தெரியும்.

அந்த கால கட்டத்தில் எனக்கு தமிழ் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ் எழுத்தாளர்கள் மீதும் பெரிய ஈர்ப்பு இல்லை. பாலகுமாரன் மட்டும் படித்து வந்தேன்.

மற்ற எல்லோரையும் கேலி செய்து எழுதுவேன். ஆனாலும் கேலியில் கண்ணிய குறைவு இருக்காது.

அதில் குறிப்பாக எழுத்தாளர் சாரு நிவேதிதாவை விமர்சித்து எழுதினால் பட்டாபட்டி ரசிப்பார். அவரும் கிண்டல் செய்வார்.  vவேறு பல விஷ்யங்களிலும் ஒத்த கருத்து இருந்ததால் , மனதளவில் ஒரு வித நெருக்கம் ஏற்பட்டது.

  அதன் பிறகு தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதற்கு காரணம் பதிவுலகம்தான் என்று சொல்ல வேண்டும்.

சீரோ டிகிரி, ராச லீலா, விஷ்ணுபுரம், உபபாண்டவம், வாடி வாசல் , ஜே ஜே சில குறிப்புகள் , ஒற்றன், புயலிலே ஒரு தோணி  என படிக்க படிக்க , தமிழ் எழுத்துகளில் மீது மரியாதை வர ஆரம்பித்தது.

எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வேறு. ஆனால் வாசிப்பின் ஆரம்பத்தில் இருக்கும் நாம் , மற்றவர்களை கேலி செய்வது தவறு என நினைத்தேன். அந்த பாணி எழுத்துகளை கை விட்டேன்.

அனைத்து எழுத்தாளர்க்ளையும் படித்தாலும் , சாரு எழுத்துகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்.  அவர் நூல்களை பாட நூல்களை போல படிக்க   கற்க ஆரம்பித்தேன்.

         எனது இந்த மாற்றம் பட்டாபட்டிக்கு உவப்பானதாக இல்லை என்பதாலும் ,  அவரது சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லாததாலும் பழைய நெருக்கம் குறைய ஆரம்பித்தது.

ஆனால் அதை வன்மமாக அவர் மாற்றியதில்லை. கடைசி வரை, அவர் வலைத்தளத்தில் இருந்து என் பெயரை நீக்க வில்லை.  அதேபோல நானும் கடைசி வரை அவர் எழுத்துகளை படித்து வந்தேன்.

    இன்னொரு நண்பர். சாருவின் தீவிர வாசகர். அவரும் நானும் பல விஷ்யங்கள் பேசி இருக்கிறோம். விவாதித்து இருக்கிறோம்.   கூட பிறக்காத தம்பி என்றே நினைத்து வந்தேன்.  டீ கடையில் நின்று நேரம் போவது தெரியாமல் பேசி இருக்கிறோம்.

   ஏதோ சில காரணங்களால் அவருக்கு சாருவை பிடிக்காமல் போய் விட்டது.  சரி, அது அவர் இஷ்டம்.

ஆனால் ஒரு சம்பவம் எனக்கு வருத்தம் ஏற்படுத்தியது.  சாருவின் எழுத்தை பாராட்டி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதில் யாரையும் திட்டவில்லை. சாருவை பாராட்டி இருந்தேன். அவ்வளவுதான்.

அந்த நண்பரிடம் இருந்து ஒரு மெயில். என்னை கன்னா பின்னா என திட்டி இருந்தார். நான் ஒரு பிச்சைக்கார நாய்.  என்னை திட்டுயதில் எனக்கு வருத்தம் இல்லை.

ஆனால் அவ்வளவு அன்பாக பழகிய அவர் மனதில் இவ்வளவு கோபமா, இவ்வளவு வன்மமாக என அதிர்ச்சியாக இருந்தது, எழுத்திலேயே இவ்வளவு கோபம் என்றால் , அவர் மனதில் எந்த அளவு கோபம் இருந்து இருக்கும் என கவலையாக இருந்தது.
என்னுடன் ஒரு சகோதரனாக பழகிய அவருள் இப்படி ஒரு எரிமலையா என வருத்தமாக இருந்தது. என்னை பற்றி தெரியாமல் என்னை திட்டுவது வேறு விஷ்யம் . ஆனால் சகோதரனாக பழகிய என்னைப்போய் ஏதோ பரம்பரை எதிரி போல நினைத்து கடிதம் எழுதி இருக்கிறாரே என  வருத்தப்பட்டேன்.

ஆனால் பட்டாபட்டியின் பார்வையில் நான் கருத்தியல் ரீதியாக மாறி விட்டாலும் , அவர் என்னை எதிரியாக நினைத்தது இல்லை.  அவர் மனதில் இருந்த நகைச்சுவை உணர்வு கொஞ்சமும் குறையவும் இல்லை.  ஆரம்பத்தில் இருந்த அன்பை குறைத்து கொண்டாரே தவிர , வெறுப்பை காட்டியதில்லை.

      ஆரம்ப காலத்தில் அவர் காட்டிய அன்பு அந்த நேரத்தில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளித்தது என்பதை அவர் அறிய மாட்டார். கடைசி வரை என்னால் சொல்ல முடியாமலேயே போய் விட்டது.

மிக மிக வருந்துகிறேன்.
\
வாழ்க்கை மிக குறுகியது. வெறுப்பை காட்டுவதில் அவசரம் காட்டும் நாம் அன்பையோ , நன்றியையோ காட்டுவதில் முனைப்பு காட்டுவதில்லை.

நாம் அன்பில்லாதவர்கள் , நன்றியில்லாதவர்கள் இல்லை..  மெதுவாக சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து விடுகிறோம்.

அதே போல நாம் வன்மம் கொண்டவர்களும் இல்லை.  பல சமயங்களில் சும்மா விளையாட்டாக கூட வெறுப்பை காட்டுவதுண்டு. பிறகு சாரி சொல்லிக்கொள்ளலாம் என்ற நினைப்பில்.

ஆனால் நம் வாழ் நாள் மிக குறைவு . எனவே நல்லதை உடனே செய்ய வேண்டும் . தீமையை கொஞ்சம் மெதுவாக செய்யலாம்.

பட்டாபட்டியின் நகைச்சுவை உணர்வு , சுவையான எழுத்துகளுக்கு நான் ரசிகன் என்பதையும் , அவர் ஆரம்ப காலத்தில் என் மீது காட்டிய  அன்புக்கு நான் அடிமை என்பதையும் , அவரிடம் ஒரு முறை கூட சொல்லாததற்கு
மிகவும் வருந்துகிறேன்.


 


       

  

Monday, May 13, 2013

காதலா- காமமா? அலசி ஆராயும் வேற்று மொழி படம்


   தலைவியை பார்க்க தலைவன் குதிரை வண்டியில் விரைந்து வருகிறான். வண்டியில் கட்டப்பட்டு இருக்கும் மணியோசை கலகலவென ஒலிக்கிறது.  அந்த சப்தம் சாலையோர மரங்களில் ஜாலியாக இருக்கும் வண்டுகளுக்கு இடையூறாக இருக்குமே என நினைத்த தலைவன் மணி யோசையை நிறுத்திய பின் பயணத்தை தொடர்ந்தானாம்..

இது ஒரு காட்சி.

ஆண் மானும் பெண் மானும் தாகத்தால் தவித்தன. ஓர் இடத்தில் கொஞ்சம் நீர் தேங்கி இருந்தது. கொஞ்சூண்டு தண்ணீர்தான் . சரி ஷேர் செய்து சாப்பிடலாம் என இரண்டும் தண்ணீரில் வாய் வைத்து குடிக்க ஆரம்பித்தன.

வெகு நேரம் ஆகியும் தண்ணீர் குறையவில்லை.

பிறகுதான் தெரிகிறது.  தான் குடித்தால் , தன் இணைக்கு தண்ணீர் இல்லாமல் போய் விடுமோ என நினைத்து , இரண்டுமே தண்ணீரை குடிக்கவில்லை. குடிப்பது போல சும்மா பாவனை செய்து கொண்டு இருந்தன.

காதல் என்பது விட்டு கொடுத்தல், எந்த நிபந்தனையும் இன்றி. நேசித்தல் நேசிச்த்தல், அன்பு மயமாதல் என அன்றைய தமிழன் காதலை கொண்டாடி இருக்கிறான்.

ஆனால் சிக்மண்ட் ஃபிராய்ட் போன்றவர்கள் பாதிப்பால் , காதல என்று ஏதும் இல்லை., இனக்கவர்ச்சிதான் இருக்கிறது.  காமம்தான் மனித பிறவியின் ஆரம்பமும் அர்த்தமும் ஆகும்., இந்த காமத்தின் பொருட்டே காதல் என்ற உணர்வு என்ற கருது கோள் பிரபலமாகி , நம் சினிமாக்களிலும் இனக்கவர்ச்சியையே காதல் என காட்டி வருகிறார்கள்.

காதல்,  அதற்கு உதவும் நண்பர்கள், காமடி லெக்சரர், பேராசிரியர்கள், கொடுமைக்கார பெற்றோர், நண்பர்கள் உதவியுடன் தூக்கி செல்லுதல் என்ற அலுத்து போன ஃபார்முலாவில் ஆயிரம் படங்கள் வெளி வந்து விட்டன, இனியும் வரும்.

சமீபத்தில் உதயம் படம் பார்த்து நொந்து நூலாகி இருந்தேன். இந்த நிலையில்  நண்பர் ஜெயசீலன் ஆறுமுகம்    ஒரு படத்தை பரிந்துரைத்தார்.  short film about love பாருங்கள் அருமையாக இருக்கும் என்றார்.

நான் நம்பவில்லை. வெளி நாட்டு படத்தில் காட்டப்படும் காதல் , நமக்கு செட் ஆகுமா என்ற சம்சயம் ஒரு புறம். இயக்குனர் கிறிஸ்டோவ் கிசலோவ்ஸ்கி கொலையை பற்றி அற்புதமாக படம் எடுத்தவர். காதலைப்பற்றி அவரால் சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.

ஆனால் ஷார்ட் ஃபில்ம் அபவுட் கில்லிங் பிடித்து இருந்தது, நண்பர் பரிந்துரை வேறு ..சரி பார்க்கலாம் என முடிவு செய்து பார்த்தேன்.


பார்த்து முடித்து பிரமித்து போனேன். இதெல்லாம் நாம் எடுத்து இருக்க வேண்டிய படம். குறுந்தொகை, சங்கப்பாடல்கள் என காதலை கொண்டாடிய நாம் எடுத்து இருக்க வேண்டிய படம் இது.


நிலவா ,  அவள் முகமா என குழம்பிய விண்மீன்கள் என நச் கவிதை பாடிய திருவள்ளுவர் வழியில் வந்த நாம் எப்படி காதலை போற்றுகிறோமோ அதே மாதிரி காதலை போற்றி இருக்கிறார் இயக்குனர்.

19 வயது இளைஞன். டாமெக், யாரும் அற்றவன். நண்பனின் தாயாரோடு நண்பன் வீட்டில் தங்கி இருக்கிறான். பொழுது போக்காக எதிர்வீட்டு பெண்ணை தொலை நோக்கி வழியே கவனித்து வருகிறான்.

அந்த பெண் மத்திய வயதில் இருப்பவள். தனித்து வாழ்பவள். பல ஆண்களோடு தொடர்பு வைத்து இருப்பவள். காதல் என்றெல்லாம் ஏதும் இல்லை . காமம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என நினைப்பவள்.

ஒரு கட்டத்தில் தன் காதலை டாமெக் சொல்ல , அவள் சிரிக்கிறாள். காதலிக்கிறாய் . சரி..எதற்கு காதலிக்கிறாய். முத்தம் கொடுக்கவா.. புணர்வதற்காக. ஊர் சுற்றவா.. எதற்கு என்கிறாள்.

பெரும்பாலும் காதல் என்பது இதற்காகத்தான் இருக்கும் ,அல்லது இதை தாண்டி திருமணத்துக்காக இருக்கும்.

காதல் என்பது காதலுக்காக மட்டுமே..காதல் மூலம் வேறு எதையும் அடைய விரும்பவில்லை என்ற அவனது கள்ளம் கபடம் இல்லாத உணர்வு அவளுக்க்கு புரியவில்லை.

காமம்தான் காதல் , உனக்கு என் உடம்புதான் வேண்டும். அதற்காகவே காதல் என்றெல்லாம் சொல்கிறாய் என அவனுக்கு உடல் ரீதியாக புரிய வைக்க முயல்கிறாள்..

உடல் ரீதியாக நெருங்குகிறாள். அவனும் ஒத்துழைக்கிறான். ஆனால் இது அவன் எதிர்பார்த்த காதல் அல்ல. கோபித்து கொண்டு செல்கிறான்.

தற்கொலைக்கு முயல்கிறான்.

காமத்தை மீறி ஏதோ ஒன்று இருக்கிறது போல என அவள் உணர்கிறாள்.

கடைசி காட்சியில் அவன் வீட்டுக்கு வருகிறாள்.  அவனுடன் பேச முடியவில்லை.

அவன் தொலை நோக்கி வழியே அவன் கண்களால் உலகை பார்க்கிறாள்.

காதல் என்ற உன்னத உணர்வுடன் , அவன் கண்களால் உலகை பார்க்கையில் உலகம் வேறு விதத்தில் தெரிகிறது.

காதலை அவள் உணர்ந்து கொண்டாள் என்பதுடன் படம் நச் என முடிகிறது.

அவளை பார்க்க , பேச அவன் செய்யும் பல்வேறு முயற்சிகள் , பால் தவறி போய் சிந்தும் முக்கியமான குறியீட்டு காட்சி, சிறிய வலியை மறக்க பெரிய வலியை உருவாக்கு என போதிக்கும் பழைய தலைமுறை  என ஏராளமான விஷ்யங்கள் கொட்டி கிடக்கின்றன.

அவன் ஓர் அப்பாவி.ஆனால் தன்னை கெட்டவனாக , பெரிய மனிதனாக காட்டி கொள்ள விரும்புகிறான்.

தொலை நோக்கி வழியே அவளை நண்பனுடன் பார்த்து கமெண்ட் அடித்ததாக சொல்கிறான்.

ஆனால் அந்த தொலைனோக்கிக்கும் நண்பனுக்கும் சம்பந்தம் இல்லை என பிறகு தெரிய வருகிறது.
\அவள் மற்ற ஆண்களுடன் ஜாலியாக இருப்பதை அவன் பார்க்க விரும்பவில்லை.. பார்த்ததும் இல்லை.. ஆனால் பார்த்ததாக் சொல்கிறான்.

அவளோ தன்னை காம வெறி பிடித்த பெண்ணாக காட்டி கொள்ள விரும்புகிறாள். அன்புக்கான ஏக்கம் , தன் துக்கம் , அழுகை இவற்றைத்தான் மறைக்க விரும்புகிறாள்.

இந்த இரு முக மூடிகளும் தாமாகவே  உதிர்ந்து போய் , காதல்தான் மனிதனின் அடிப்ப்படை உணர்வு என கடைசியில் சொல்கிறது படம்.

தாஸ்தயேவ்ஸ்கி கதையை படித்த உணர்வு.


ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் - காதலுக்கு உச்சகட்ட மரியாதை
Sunday, May 12, 2013

யூதாஸ் பார்வையில் இயேசு கிறிஸ்து - உண்மை என்ன?


இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் அவ்வப்போது எழுதுவதை கவனித்து ஒரு நண்பர் ஒருவர் ,  இதையும் படித்து பாருங்கள் என சிலவற்றை அனுப்பி இருந்தார்.

சில அபூர்வமான தகவல்கள் , வரலாற்று ஆச்சர்யங்கள் என நிறைய இருந்தன.

இயேசு கடவுளின் தூதர் , அவரை அவ்வளவு சுலபமாக சிலுவையில் அறைந்து இருக்க முடியாது. அறையப்படும் முன்பே அவர் காப்பாற்றப்பட்டு விட்டார் என சில ஆதாரங்கள் இருந்தன.

அவருக்கு பதிலாக அவரைப்ப்போலவே இருந்த இன்னொருவர் தியாகம் செய்தார் என்றொரு பார்வையும் இருந்தது.

இதெல்லாம் லாஜிக்கலாக இருந்தாலும் , கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்கு எதிரானது.

 நாம் வில்லனாக கருதும் யூதாஸ் குறித்தும் சில தகவல்கள் கிடைத்தன. இதில் யூதாஸ் பார்வையில் அவர் இயேசுவின் வாழ்க்கையை எழுதி இருந்தது புதிதாக இருந்தது.

யூதாஸ் எழுதிய சுவிசேஷம் என்ற இந்த பகுதி காணாமல் போய் மிக கஷ்டங்களுக்கிடயே மீட்டனர். அதிலும் முழுமையாக கிடைக்கவில்லை.

எனவே இதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியானது.எனவே இதை எந்த திருச்சபையும் அங்கீகரிக்கவில்லை.

ஆனாலும் அந்த சுவிஷேசம் என்னை பொருத்தவரை நன்றாகத்தான் இருந்தது.

எனவே அனைவருடனும் பகிர விரும்பினேன்.

ஆனால் , பெரும்பாலோனோர் அப்படி செய்ய வேண்டாம். தேவையற்ற சர்ச்சைகள் தவிர அதனால் வேறு எந்த பலனும் இல்லை என சொல்லி விட்டனர்.

எனவே அவர்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி  வெளியிடும் முடிவை கை விடுகிறேன்.

ஆனாலும் ஒரு சில பகுதிகளை மட்டும் ஒரு சாம்பிள் போல பகிர்ந்து கொள்கிறேன்.

**********************************************************

யூதாஸ் எழுதிய சுவிசேஷம் ( சில பகுதிகள் )

1.1 சீடர்கள் திருப்பலி அளித்து வழிபாடு நடத்தி கொண்டு இருந்தார்கள். அங்கே வந்த இயேசு அதை பார்த்து சிரித்தார்.

1.2 நாங்கள் சரியானதைத்தானே செய்கிறோம். ஏன் சிரிக்கிறீர் என்றார்கள்

1.3.உங்களை பார்த்து சிரிக்கவில்லை.உங்கள் காரியங்களை கண்டு சிரிக்கிறேன். நீங்கள் உங்கள் விசுவாசத்தினால்  இதை செய்யவில்லை. இப்படி செய்வதன் மூலம் கடவுளுக்கு உதவுவதாக நினைத்து செய்கிறீர்கள்.

1.4  நீங்கள் தேவை மைந்தன் அல்லவா? இன்னது செய்ய வேண்டுமென்று எங்களுக்கு சொல்லுங்கள் என சீடர்கள் கேட்டனர்.

1.5 இயேசு சொன்னார் :என்னை நீங்கள் எப்படி அறிவீர்கள். மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் தலை முறையினர் யாரும் என்னை அறிந்து கொள்ள முடியாது.

1.6 இதைக்கேட்ட சீடர்கள் ஆத்திரமடைந்து தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கினர்.

1.7 அவர்களை பார்த்து பரிதாபப்பட்ட இயேசு சொன்னார் :


***************************************************

3.3 யாராலும் புரிந்து கொள்ள முடியாத,  எவராலும் அடைய முடியாத ஒன்றை உனக்கு என்னால் தர முடியும். ஆனால் அதற்காக நீ செய்ய இருக்கும் செயலால் என்றென்றும் நீ நிந்திக்கப்படுவாய்.

3.4 பரலோக சாம்ராஜ்யத்துக்கான பாதை மிகவும் கடினமானது என மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்


**********************************************************

இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இவை மத ரீதியாக பார்த்தால் அதிகாரபூர்வமற்றவை.

வார்த்தை பிரயோகம் , மொழி நடை போன்றவற்றை வைத்து இவை உண்மையாக இருக்க கூடும் என அறிவியல் நிபுணர்கள் சொன்னாலும் , அறிவியல் வேறு மத நம்பிக்கைகள் வேறு என்ற அடிப்படையில் இவற்றை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்ப்பதே நல்லது.   

Friday, May 10, 2013

கொலை செய்வது எப்படி- உலகை கலக்கிய வேற்று மொழி திரைப்படம்


     மரண தண்டனை சரியா தவறா என்பது ஒரு எவர் க்ரீன் சப்ஜெக்ட், மரண தண்டனை தேவை இல்லாத ஒரு லட்சிய சமூகம் அமையும் வரை அந்த தண்டனை வேண்டும் என்கிறார்கள் சிலர், வேண்டவே வேண்டாம் என்கிறார்கள் சிலர்.

இது சிக்கலான பிரச்சினை. நமக்கு சம்பந்தம் இல்லாத போது என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு , தூக்கு மேடைக்கு செல்பவர் நம் நண்பராக இருந்தால் , கண்டிப்பாக நம் பார்வை மாறி விடும், அதே போல , கொடூரமாக கொல்லப்பட்டவர் நமக்கு வெண்டியவராக இருந்தால் , நம்மால் மனிதாபிமானம் பேச இயலாது.

  இந்த பிரச்சினை மீது ஒரு விவாதம் உருவாகி , மரண தண்டனையை ஒழிக்க ஒரு சினிமா காரணமாக இருந்து இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது.

a short film about killing  என்ற படத்தை பற்றிதான் சொல்கிறேன். 1988ஆம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் இது. பிரபல இயக்குனர் கிரிஸ்டோவ்  கியஸ்லோவ்ஸ்கி எடுத்த முக்கியமான படங்களில் ஒன்று.

வெவ்வேறு பின்னணி கொண்ட மூவரின் வாழ்க்கை சம்பவங்க்ளே படம். வசனங்கள் அதிகம் இல்லை. காட்சிகள் மூலமே படம் நகர்கிறது. படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணம் , ஒளிப்பதிவு கனவு போன்ற ஒரு நிலையை உருவாக்குகிறது.


எந்த இலக்கும் இல்லாத ஓர் இளைஞன், வாழ்க்கையில் ஏதோ ஒரு வெறுப்பு, பிடிப்பின்மை. உணவகத்தில் காஃபியில் எச்சில் துப்புகிறான், பாலத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் கல் எறிந்து வாகனத்தை சேதப்படுத்துகிறான்.

இதை எல்லாம்தான் வாழ்க்கை என நினைத்து கொள்கிறான். தான் ஜாலியாக இருப்பதாக நினைத்து கொள்கிறான்.

     இதனால் எல்லாம் அந்த வாகனத்தின் மீதோ , உணவகத்தின் மீதோ கோபம் என்று இல்லை. மற்றவர்களின் வேதனை இவனுக்கு புரியவில்லை. அவ்வளவுதான்.

     இதன் ஒரு பகுதியாக ஒரு டாக்சி டிரைவரை எந்த காரணமும் இன்றி கொடூரமாக கொல்கிறான்.  அவர் பாவம், எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். நாய்க்கு அன்பு காட்டி தன் உணவை பகிர்ந்து கொள்பவர்.

அவன் ஜாலியாக கொன்று விட்டான். அவர் பாவம் இல்லையா..அவர் குடும்பம் பாவம் இல்லையா என அவருக்காக வருந்துவோம்.

இப்போது படத்தின் முதல் காட்சியை நினைவு படுத்த விரும்புகிறேன்.

பட ஆரம்ப காட்சியில் இறந்து போன ஒரு எலி சாக்கடையில் மிதந்து கொண்டு இருக்கும், ஒரு பூனை எலியை கொல்வதை பார்த்தால் ,பாவமாக இருக்குமே ,அது போல பாவமாக இருக்கும்.

ஆனால் அடுத்த காட்சி இதை விட பயங்கரம்.

ஒரு பூனை தூக்கில் தொங்கி கொண்டு இருக்கும்.

பூனை எலியை கொல்வதையாவது இயற்கை என மன சமாதானம் அடையலாம்.. ஆனால் பூனையை மனிதன் கொன்று தூக்கில் தொங்க விடுவது?

அதுபோல டாக்சி டிரைவரை கொன்றது கொடூரம்தான்... ஆனால் அதை விட கொடூரமாக அரசு நடக்கிறது என சித்திரிக்கின்றன அடுத்து வரும் காட்சிகள்.

அந்த இளைஞன் கைது செய்யப்படுகிறான். மரண தண்டனை தீர்ப்பாகிறது.

தூக்கு மேடையை தயார் செய்தல் , தூக்கு கயிற்றை சோதித்தல், தூக்கில் தொங்கும்போது வெளியேறும் மனித கழிவை சேகரிக்க பாத்திரம் வைத்தல், என ஓர் அரசு ஒரு கொலையை திட்டமிட்டு செய்கிறது.

அவனுக்கு ஏற்படும் மன அழுத்தம், பயம் , தாய் மீது கொண்ட அக்கறை , தங்கை இறந்ததால் ஏற்பட்ட துக்கம்தான் இந்த நிலைக்கு காரணம் என்ற உண்மை என எதையும் பொருட்படுத்தாமல் அரசு இயந்திரம் அவனை கொல்கிறது.

குற்றவாளியை கொலை செய்வதால் , குற்றங்கள் குறைய போவதில்லை என்ற எண்ணம் கொண்ட இளம் வழக்கறிஞர் இவனுக்காக வாதிட்டு தோற்கிறார்.

யார் செய்தாலும் கொலை என்பது கொடூரம்தான்,. யாருக்கும் கொலை செய்ய உரிமை இல்லை. குற்றவாளி கொலை செய்து குற்றம் செய்கிறான், பதிலுக்கு அரசும் குற்றம் செய்வது என்ன லாஜிக்..

இதனால் குற்றங்கள் குறையபோகிறதா...   கொலை செய்தால் தூக்கு என தெரிந்தாலும் குற்றம் செய்பவன் செய்து கொண்டுதான் இருப்பான்.

ஆக, தூக்கு என்ன சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியதில் வெற்றி கண்டு படம் விருதுகளை குவித்தது.

ஆனால் விருதுக்கு அது மட்டும் காரணம் அல்ல.

அன்றைய போலந்து கம்யூன்ஸ்ட் அரசை கொலையாளியாக சித்திரித்து இருந்தது மேற்கு உலகுக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்து இருக்கும். எனவே விருதுகளை அள்ளி கொடுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இது பார்க்க வேண்டிய படம். படம் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் யோசிக்க வைத்து விடுகிறது.

மரண தண்டனை கண்டிப்பாக தீர்வல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்க இது உதவுகிறது.

இது இல்லாவிட்டால் என்ன ஆகும்? ஏழைகளை , சாதாரணர்களை கொன்றால் தூக்கு இல்லாவிட்டாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் பணக்காரர்களை , தலைவர்களை , அரசியல் தலைவர்கள் குடும்பத்தினரை கொன்றால் , அவர்கள் தாதாக்கள் மூலமோ , என்கவுண்டர் மூலமோ குற்றவாளியை போட்டு தள்ள பார்ப்பார்கள்.

எனவே மரண தண்டனையை ஒழித்து விட்டு, வலிமையுள்ளது எஞ்சட்டும் என விட்டு விடுவதுதான் லாஜிக்கலான தீர்வோ என யோசிக்க வைத்தது படம்.

இதனால் கிளம்பிய விவாதங்களால் , போலந்தில் தூக்கு தண்டனை நீக்கப்பட்டு விட்டது.

இயக்கம் , இசை, ஒளிப்பதிவு என எல்லாம் சிறப்பாக இருந்தாலும் , குற்றவாளி யின் மன வேதனையை காட்டிய அளவுக்கு , டாக்சி டிரைவர் குடும்ப பார்வையில் அவர்க்ள் தரப்பு வேதனையை காட்டாதது கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.


Short film about killing - Must watch

Thursday, May 9, 2013

சிந்துபைரவி பட பாணியில் ஹிட்ச்காக் படம்- சைக்கோ உருவான நாட்களுக்கு ஒரு பயணம்


ரியர் விண்டோ..

இதுதான் நான் முதன் முதலாக பார்த்த ஹிட்ச்காக் படம். ஓர் விழாவில் பிரத்தியமாக திரை இட்டு இருந்தார்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி படம் பார்க்க ஆரம்பித்தேன். இயல்பான கதை சொல்லல் , கதை எதை நோக்கு செல்கிறது என்ற சஸ்பென்ஸ்., எப்படி முடியப்போகிறது என்ற சுவாரஸ்யம் , மெல்லிய நகைச்சுவை என படம் கொஞ்ச நேரத்திலே பிடித்து போய் விட்டது.

அதுவும் க்ளைமேக்ஸ் சீன் செமையாக இருந்தது. பிராமாண்டமான சண்டை காட்சிகள், கார் சேசிங் என்று இல்லாமல் , மறக்க முடியாத ஒரு க்ளேமேக்சாக இருந்தது.

அதன் பின் அவர் படங்களை தேடி தேடி பார்க்க ஆரம்பித்தேன்,  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் தவற விடுவதில்லை.

அவரது ரோப், சைக்கோ என எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக சைக்கோ படம்.

புகழ் பெற்ற பாத்ரூம் சீன் மட்டும் அல்ல, மற்ற காட்சிகளும் மிக பிடிக்கும்.

தனது காரை எக்சேஞ்ச் செய்து விட்டு புதிய காரை வாங்கி செல்லும் அவரசத்தில் இருக்கும் கதானாயாகிப்பார்த்து கார் சேல்ஸ்மேன் ஆச்சர்யப்படுவான், வழக்கமாக சேல்ஸ் மேன்கள்தான் வாடிக்கையாரை வற்புறுத்துவார்கள், முதல் முறையாக ஒரு வாடிக்கையாளர் சேல்ஸ் மேனை வற்புறுத்துவதை இப்போதுதான் பார்க்கிறேன் என கிண்டலாக சொல்வான்.

அவள் தங்க செல்லும் விடுதியின் அமானுஷ்ய தன்மை , சிறிய குன்றின் மேல் அமைத்து இருக்கும் வீடு கொடுக்கும் நடுக்கம் என பல காட்சிகளை ரசிக்கலாம்.

காதல் காட்சி ஒன்று ஆரம்பத்தில் வரும், பிறகு பணம் கையாடல், கார் எக்சேஞ்ச் என கதை விறுவிறுப்பாக சென்று , விடுதியில் உச்சம் பெறும். அந்த கதையோட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்

இந்த படத்தை எடுக்கையில் ஹிட்ச்காக் பெற்ற அனுபவங்களை வைத்து சென்ற ஆண்டு ஹிட்ச்காக் என்ற படம் வெளியானதுமே அதை பார்க்க ஆவல் ஏற்பட்டது. காரணம் சைக்கோ என்னை கவர்ந்த படம். அதைப்பற்றி ஒரு படம் என்பது எனக்கு ஆர்வம் ஏற்படுத்த போதுமானதாக இருந்தது.

ஹிட்ச்காக் குறித்து எத்தனையோ புத்தகங்கள் , தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வந்து விட்டன. இனி அவரைப்பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருந்தது.

சினிமாவைப்பற்றி எடுக்கப்படும் படங்கள் நமக்கு பெரும்பாலும் ஆர்வமளிப்பதில்லை. சினிமா எடுக்க எவ்வளவு கஷ்டப்படுகிறர்கள் என்பதில் சாதாரண ரசிகனுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. எந்தளவுக்கு அதை சினிமா என மறந்து விட்டு பார்க்க முடிகிறதோ அந்த அளவுக்குத்தான் அது வெற்றிப்படமாக அமையும், இது சினிமாதான் என நினைவு படுத்தும் படம் தோல்வியாக அமையும்.

இந்த ஹிட்ச்காக் படம் , அந்த வகையில் ஜாக்கிரதையாக எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவைப்பற்றி டெக்னிக்கல் விஷ்யங்களுக்கு போய் அன்னியமாக நிற்காமல், எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியும் கணவன் மனைவி உறவு சிக்கலை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.


ஆரண்ய காண்டம் படத்தில், ஒரு தாதாவுக்கு வயதாகி விட்டதாக சொல்வது அவனை புண்படுத்தி , பலர் வாழ்க்கைய பாதிப்பதில் முடியும்.

இதுவும் அந்த பாணி சிக்கல்தான்.

ஹிட்ச்காக்குக்கு வயதாகி விட்டது. அவர் தன் நல்ல பெயருடன் ஓய்வு பெறுவது நல்லது என்ற பேச்சு மெல்ல பரவ தொடங்குகிறது. தன்னால் இப்போதும் வெற்றி படங்கள் எடுக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு.

சைக்கோ கதையை தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அந்த கதை பலருக்கு பிடிக்கவில்லை.படம் தயாரிக்க யாரும் முன் வரவில்லை.

சொந்தமாக எடுக்க தீர்மானிக்கிறார். அதற்காக வீட்டை அடமானம் வைத்து அதை இழந்தாலும் பரவாயில்லை என நினைக்கிறார்.

அவர் தொழிலில் அவர் மனைவி பக்கபலமாக இருக்கிறாள், ஆனால் அதற்கான க்ரெடிட்டை அவள் பெறவில்லை என்ற ஏக்கம் அவளுக்கு உண்டு.

வீட்டை அடமானம் வைக்க அவளும் ஒப்புக்கொள்கொள்கிறாள்.

ஆனால் இந்த படத்துக்கு அவள் முன்புபோல உதவவில்லை என ஹிட்ச் நினைக்கிறார்/

அவளுக்க்கு இன்னொருவனும் தொடர்பு இருப்பதாக சந்தெகிக்கிறார். இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது.

படம் அவர் எதிர்பார்த்தபடி வரவில்லை. நொந்து விடுகிறார். கிடைத்த விலைக்கு தொலைக்காட்சிக்கு விற்று விடுங்கள் என ஆலோசனை சொல்கிறார்க்ள்.

அப்போதுதான் மனைவியின் அருமையை உணர்கிறார்.

அவர்களுக்கிடையே பிரச்சினை தீர்கிறது. மனைவி பக்க துணையாக இருக்க , அவர் திறன் பளிச்சிடுகிறது.  திறமையான எடிட்டிங், பொருத்தமான இசை என படம் மெருகேற்றப்பட்டு ரிலீஸ் ஆகிறது , வரலாறு படைக்கிறது.

 நீ இல்லாமல் என் வெற்றிகள் இல்லை என மனைவியை புகழ்கிறார். இதை கேட்க இத்தனை ஆண்டுகள் காத்து இருந்தேன் என்கிறார் மனைவி..அதனால்தான் என்னை சஸ்பென்ஸ் கிங் என்கிறார்கள் என ஃபினிஷிங் டயலாக் சொல்லி படத்தை சுபமாக முடிக்கிறார் ஹிட்ச்.

   சிந்து பைரவி படம் பார்த்து இருப்பீர்கள். தன் மனைவி தன் இசை திறமையை புரிந்து கொள்ளவில்லை  என நினைத்து இசை தெரிந்த வேறொருபெண்ணை நாடி செல்வார் கதானாயகன். அவன் உணர்வுகளை நாமும் மதித்ததால் படம் ஹிட் ஆனது.

தன் சமையல் திறனை தன் கணவன் புரிந்து கொள்ளவில்லை என அந்த மனைவி நினைத்து , ஒரு சமையல் காரனை நேசிக்க தொடங்குவதாக அதே படத்தை எடுத்து இருக்க முடியுமா? நம் கலாச்சாரத்தில் முடியாது,

ஹிட்ச்காக் படத்தில் இந்த கோணத்தில்தான் கதை அமைந்துள்ளது.

ஒரு டாக்குமெண்ட்ரி போல ஆகி இருக்க வேண்டிய படத்தை , இப்படி ஒரு கான்செப்ட் அமைத்து விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறார்கள்.

பணம் புரட்ட ஹிட்ச் பாடுபடுவது , சென்சார் போர்டுடன் வாதிடுவது , வீட்டை விற்றாவது படம் எடுக்க உறுதியாக இருப்ப்பது, படத்தை மார்க்கெட்டிங் செய்ய பயன்படுத்தும் யுக்திகள், பாத்ரூம் காட்சிக்கு ரசிகர்களின் ரெஸ்பான்சை வைத்து , ஜெயித்து விட்டதை உணர்வது என சினிமா சார்ந்த காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது.

மெல்லிய நகைச்சுவை, ஹிட்ச்காக் மற்றும் மனைவியின் நடிப்பு, சைக்கோ படத்தின் ஹீரோயினாக வருபவரின் தோற்றம் போன்றவைதான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

மற்ற பாத்திரங்கள் சரி வர செதுக்கப்படவில்லை. சைக்கோ படத்தின் காட்சிகளை பயன்படுத்த முடியாமையும் மைனஸ்தான்.

தேவையற்ற காட்சிகள் பல இருக்கின்றன.

எனவே ஒரு சிறந்த படம் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. மோசமான படம் பார்த்த உணர்வும் இல்லை.

ஹிட்ச்காக்- பார்த்தே ஆக வேண்டிய படமும் அல்ல..தவிர்க்க வேண்டிய படமும் அல்ல.

வெர்டிக்ட் - Hitchcock  - Half boiled food Tuesday, May 7, 2013

பெண் வாசகிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் ஆணாதிக்கமும் - ஜெயமோகன் அறிவிப்பில் அக்கப்போர்


   சொற்சிக்கனம் என்றால் நம் நினைவுக்கு வருபவர் எழுத்தாளர் சுஜாதா.  தேவையில்லாத ஒரு வார்த்தைகூட அவர் எழுத்தில் இருக்காது.

  ஆனால் தினத்தாள்கள் , சம கால எழுத்துகளை பார்த்தால் ஏமாற்றமே எஞ்சுகிறது. சொல்லப்படும் கருத்துகளில் உடன்பாடு இருக்கலாம் , இல்லாமல் போகலாம் .அது வேறு.

ஆனால் சொல்லப்படும் விதம் சுருக்கமாக நறுக் என இருக்க வேண்டும்.

கடந்த 17ம் தேதி என எழுதுகிறார்கள்.

ஏன் என்றால் வெறுமனே 17ந்தேதி என எழுதினால் , அடுத்த மாதம் வரப்போகும் 17 ஆ, சென்ற ஆண்டு ஜனவரி 17ஆ என்றெல்லாம் குழப்பம் ஏற்படும்.

ஆனால் கடந்த 2010ம் ஆண்டு பதவி ஏற்றார் என்பதில் ”கடந்த”  தேவை இல்லை.

இன்னொரு 2010 வரப்போவதில்லை. சும்மா 2010 என எழுதினாலே போதும்.

இன்று ஜெயமோகனின் வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இலக்கிய சந்திப்பு நடத்துகிறாராம். ஓகே , வாழ்த்துகள்.


பெண் வாசகிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுமாம்..  நல்லதுதான்,.

வசதி செய்து தருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பெண் வாசகி என்று சீனியர் எழுத்தாளர் ஒருவர் எழுதலாமா என்பதே என் வருத்தம்.

வாசகி என்றால் அவர் பெண் தான்..பிறகு என்ன பெண் வாசகி? ஆண் வாசகி என தமிழில் இருக்கிறதா. வாசகி என்றால் போதுமே.

சரி..இது மொழி சார்ந்த விஷ்யம்.

ஆணாதிக்க கோணத்திலும் இதை பார்க்க வேண்டும். பலரும் விஷ்யம் புரியாமல் தவறாகவே நடந்து கொள்கிறோம்.

வாசகன் ஆண் பால்.. வாசகி பெண் பால்.. சரியா?

வாசகர் என்பது பன்மை அல்லது மரியாதையாக சொல்ல பயன்படுத்தும் சொல்.

ஆனால் நடைமுறையில் , ஆண்களை வாசகர் என்றே மரியாதையாக சொல்கிறோம்.

என்னை சந்திக்க ஓர் ஆண் வாசகன் வந்தான் என யாரும் சொல்வதில்லை. வாசகர் வந்தார் என்றே சொல்கிறோம்.

பெண்களையும் வாசகர் என்றே சொல்ல வேண்டும்.  சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பெண் என்பதை குறிப்பிட வேண்டுமானால் பெண் வாசகர் என்று சொல்லலாம்.

வாசகி , ஆசிரியை போன்றவை எல்லாம் மரியாதைக்குறைவான சொற்கள்..  பெண் வாசகி என்ற சொற் பிரயோகம் தவறு.

*************************************************

பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக புனித பைபிளில் மறைந்து போன சில சுவிசேஷங்களின் தமிழ் வடிவை வெளியிடலாமா என கேட்டு இருந்தேன். நண்பர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்.

விளையாட்டாக கூட யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என வள்ளுவர் சொல்லி இருப்பார். எனவே இந்த சென்சிட்டிவ் விஷயத்தில் மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் - குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் உணர்வுகளின் அடிப்படையிலே - முடிவு எடுக்க வேண்டும்.

இதில் கிறிஸ்துவ நண்பர்கள் ஒன்றை கவனித்து முடிவெடுக்க வேண்டும்.

மறைந்து போன சுவிசேஷங்கள் என்ற விஷ்யம் குறித்து ஆங்கிலத்தில் நிறைய எழுதி இருக்கிறார்கள்.

தமிழிலும் தருமி , சார்வாகன் போன்றோர் வலைப்பதிவுகளில் எழுதி இருப்பதாக நண்பர் இக்பால் செல்வன் சொல்லி இருந்தார்.

உண்மைதான்.

ஆனால் அவை சமூக அரசியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.  உதாரணமாக பெண் உரிமை, இயேசு வாழ்ந்த கால கட்டம் போன்றவற்றையெல்லாம் அலச முனைகிறார்கள்.

நான் விரும்புவது அதை அன்று. விமர்சனம் ஏதும் இன்றி, என் விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி ,  உள்ளதை உள்ளபடி அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என விரும்பிகிறேன். அதன் மூலம் இயேசு நாதரை இன்னும் அணுக்கமாக உணர முடியும் என நினைக்கிறேன்.

யோசித்து உங்கள் முடிவை சொல்லுங்கள். உங்கள் முடிவே இறுதியானது.

அதே போல தருமி போன்ற விஷ்யம் தெரிந்தவர்களுடன் ஆரோக்கிமான விவாதத்துக்கும் வழி வகுக்கும் என கருதுகிறேன்.

*****************************************

புனித குர் ஆன் குறித்து நிறைய எழுதலாமே . அது அள்ள அள்ள குறையாத செல்வமாயிற்றே என சகோதரர் அப்துல் ஜபார் சொல்லி இருந்தார்.

உண்மைதான். வெறும் வம்புக்கும் , பொழுது போக்குக்குமாக மட்டும் இணையம் பயன்படுவது தவறு. நல்ல விஷ்யங்களை பேசினால்தான் , விவாதித்தால்தான் ஓர் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.

   குர் ஆன் குறித்து பலர் எழுதுகிறார்கள். அதை எல்லாம் ஒரு மாணவன் போல ஆழ்ந்து படித்து வருகிறேன். சில இஸ்லாமிய இணைய குழுமங்களில் இதற்காக சேர்ந்து இருக்கிறேன்.

       இணையம் மட்டும் அன்றி அனைத்து மீடியாக்கள் மீது எனக்கு ஓர் ஆதங்கம் உண்டு.

பல இஸ்லாமிய தலைவர்கள் , ஞானிகள் குறித்து போதிய தகவல்கள் பகிரப்படவில்லை.

இஸ்லாமிய ஞானிகளை ஒரு சிலர் கடவுள் போல போற்றுவதால் , அவர்களைப்பற்றி பேச இஸ்லாமியர்களும் விரும்புவதில்லை.பிறகு யார்தான் அவர்களைப் பற்றி பேசுவது , எழுதுவது.

ஓர் இஸ்லாமிய மகான் குறித்து அடுத்து எழுதுகிறேன். அவர் சொற்பொழிவுகள், கருத்துகளை பாருங்கள். கொஞ்சம் கூட இஸ்லாமிய கருத்துகளுக்கு விரோதமாக இருக்காது.

சிலர் அவரை கடவுளாக போற்றுவது , அவர்கள் மன நிலையே தவிர அந்த மகானின் நிலை அல்ல.

பொறுத்து இருந்து பாருங்கள்.

*****************************************************Monday, May 6, 2013

நன்றி மறந்த பிச்சைக்கார நாய் !!


இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. எல்லாம் பக்கவாக ரெடி செய்து வைத்து இருந்தேன்

தாம்பரம் பை பாஸ் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தேன்.  11.30க்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டும்

அக்னி நட்சத்திரம் என்றாலும் கூட வானில் மேகங்கள் சூழ்ந்து இருந்தன, குளிர் காற்று வீசியது,  கோடை கால அனுகூலகங்களான பத நீர் ,  மாம்பழம் போன்றவற்றையும் அனுபவித்து கொண்டு , வெயிலில் இருந்தும் தப்பிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தவாறு சென்று கொண்டு இருந்தேன்.

திடீரென இஞ்சின் திணறுவதை உணர்ந்தேன். ம்ம்.. பெட்ரோல் காலி ஆகி விட்டது. சரி, ரிசர்வில் போடலாம் என கையை கொண்டு சென்றவன் , அதிர்ச்சியானேன்.

வண்டி ஏற்கனவே ரிசர்வில்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. எப்படியோ கவனிக்காமல் விட்டு இருக்கிறேன்.

அட பிச்சைகார நாயே என என்னையே திட்டி கொண்டு , அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தேன்.

பக்கத்தில் பெட்ரொல் பங்க் ஏதும் இல்லை. யார் வண்டியிலாவது சென்று பெட்ரொல் வாங்கி ஊற்றலாம்.  ஆனால் லேட் ஆகி விடும்.

வண்டியை தள்ளி கொண்டு போனாலும் லேட் ஆகி விடும்.

ம்ம்ம்..சரி.எத்தனையோ தோல்விகளைகளை சந்திக்கிறோம். இன்றும் ஒரு தோல்வி. இருந்து விட்டு போகட்டும் என மனதை சமாதானம் செய்து கொண்டேன்.

அப்போது எதிர் திசையில் சென்ற பைக்கில் சென்று கொண்டு இருந்த ஒருவர், வண்டியை நிறுத்து  அவராகவே என்னிடம் வந்தார்.

என்ன பிராப்ளம் என்றார். சொன்னேன்

பைக்கில் ஏறி உட்காருங்க என்றார்.

நான் உதவி ஏதும் கேட்காமல் அவராகவே உதவுகிறாரே ..ஆச்சர்யமாக இருந்தது.

என் பைக்கில் நான் ஏறி உட்கார , அவர் பைக்கை என் பின்னால் ஓட்டியவாறு , என் பைக்கை லாகவாகமாக ஒரு காலால் தள்ளியபடி அழைத்து சென்றார்.

 கிட்டத்தட்ட 15 கிமீ இபப்டி சென்று பெட்ரோல் பங்க் வந்து விட்டார்.


வரும் வழி முழுதும் அவர் உதவியை நினைத்து ஆச்சர்யப்பட்டபடி இருந்தேன்,

காலத்தினால் அவர் செய்த உதவி என்னை பொறுத்தவரை மிக பெரிய உதவி. இந்த நன்றியை அவரிடம் ஏதோ ஒரு விதத்தில் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

இது  ஒரு ட்ரிக்கி சிச்சுவேஷன்.  ஓர் உதவி இருவர் பார்வையிலும் பெரிய உதவியாக இருந்தால் நன்றி சொல்வது எளிது

ஆனால் உதவி பெற்றவர் பார்வையில் மட்டும் அது பெரிதாக இருந்தால் , அதை வெளிப்படுத்துவது கஷ்டம்.

சார்..இதோ பெட்ரொல் பங்க்என சொல்லி விட்டு , என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் பறந்து விட்டார் அவர்.

குரல் எழுப்பி , கைதட்டி அழைத்து பார்த்தேன்.

   பயனில்லை..சென்று விட்டார்.

அவர் இல்லாவிட்டால் , இன்று மீட்டிங்கை தவற விட்டு இருப்பேன்.. அவர் செய்தது பேருதவி

நன்றி கூட சொல்லாமல் போய் விட்டோமே என மிக மிக வருந்தினேன்.


இதை பதிவிடுதன் மூலம் அந்த வருத்தத்தை குறைக்க முயல்கிறேன்.

***********************************************************

இயேசு சம்பந்தப்பட்ட இரு படங்கள் பற்றி எழுதினேன் அல்லவா.. இதன் தொடர்ச்சியாக , தேடலை தொடர்ந்தபோது , பல விசித்திரமான சுவையான தகவல்கள் கிடைத்தன.

இயேசுவின் சீடர்கள் அவரது போதனைகள் பற்றியும் அவர் வாழ்க்கை பற்றியும் எழுதியது பைபிளில் உள்ளது.

ஆனால் சில சீடர்கள் எழுதியது அதில் இல்லை.. ஏன் இல்லை..அவர்கள் எழுதவே இல்லையா அல்லது எழுதியும் மறைக்கப்பட்டதா என்பது மர்மமான ஒன்று.

ஆனால் சில சீடர்கள் எழுதிய , பைபிளில் இடம் பெறாத சுவிசேஷங்கள் , ஆங்காங்கு புழக்கத்தில் உள்ளன. மறை ஞானமாக திகழ்கின்றன.

இவற்றில் சில ஆங்கிலத்தில் புத்தகமாக வந்துள்ளன. படித்து பார்த்தேன். அற்புதம், தங்க சுரங்கம் என்பேன்.

இயேசுவின் சீடர் யூதாசும்கூட சுவிசேஷம் எழுதி இருக்கிறார். ஞான புதையல் போல இருக்கிறது.

ஆனால் தமிழில் வந்ததாக தெரியவில்லை.

இவை கிறிஸ்துவ திருச்சபையால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் , இவற்றின் தமிழ் வடிவை வெளியிட தயக்கமாக இருக்கிறது.


எனவே நீங்களே முடிவு செய்யுங்கள். கவனத்துக்கு வராத பைபிளை நான் நெட்டில் வெளியிடலாமா , வேண்டாமா.

பின்னூட்டத்திலோ , மெயிலிலோ , கருத்து கணிப்பிலோ சொல்லுங்கள்Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா