Sunday, November 20, 2011

த்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் - வாடிவாசல் ( சிசுசெல்லப்பா)

   
       அன்றாட பணிகளின் ஈடுபடுகிறேன். சாப்பிடுகிறேன்,. தூங்குகிறேன். மகிழ்கிறேன். வருந்துகிறேன்.

 சி சு செல்லப்பாவின் வாடிவாசலை படிக்காவிட்டாலும், இந்த அன்றாட செயல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காதுதான். ஆனால் இந்த குறு நாவலை படித்திராவிட்டால் , வாழ்வின் ஓர் உன்னதமான அனுபவம் எனக்கு கிடைக்காமலேயே போய் இருக்கும்.

    கதைப்பஞ்சம் என்று சொல்லி வெளி நாட்டு படங்களை காபி அடிக்கிறார்கள், அல்லது இன்ஸ்பைர் ஆகிறார்கள். அல்லது வெளி நாட்டு கதைகளை தழுவி எடுக்கிறார்கள். நம் மண் சார்ந்த கதைகள் இன்னும் சொல்லப்படவே இல்லை என்பது இந்த குறு நாவலை படித்தால் உணர முடியும்.

 ஜல்லிக்கட்டு என்பது பண்டைய தமிழர்களின் வீர விளையாட்டு.


கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள்’ 

என்பது ஒரு தமிழ் பாடல். அதாவது காளையை அடக்க திறன் இல்லாதவனை பெண்கள் மணக்க மாட்டார்களாம்.

இதைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் இருக்கின்றன.

மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்
முல்லையம் பூங்குழல் தான்’ 


 மாட்டை அடக்குவது என்பது வெறும் உடல் சார்ந்த விளையாட்டு அன்று,  மாட்டைப் பற்றிய அறிவு, தொழில் நுணுக்கம் , வியூகம் அமைத்தல் என எல்லாம் கலந்த முழுமையாக வளர்ந்த விளையாட்டு அது. தேர்ந்த விமர்சகர்கள், நிபுணர்கள் எல்லாம் அதிலும் உண்டு.


இதுவெல்லாம் தெரியாமல், அதை ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு போல நினைத்துவிட்டதால்தான், அதற்கு தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டின் பின்னணியில் புனையப்பட்ட ஓர் உன்னத குறு நாவல்தான் வாடி வாசல்..

என்ன கதை?

மேலோட்டமாக படித்தால் கதை இதுதான்.

அம்புலி என்பவன் காளை அடக்குதலில் கில்லாடி.புகழ் பெற்ற வீரன்.  யாராலும் அடக்க முடியாத காரிக்காளையை அடக்க முயலும்போது, அந்த காளை அவனை குத்தி வீழ்த்துகிறது. மரணமடையும் நிலையில், தன் மகனிடம் அந்த காளையை அடக்கும் பொறுப்பை கொடுத்து விட்டு கண் மூடுகிறான். மகன் பிச்சி  தகுந்த பயிற்சிகள் மேற்கொண்டு தயார் படுத்திக்கொண்டு வந்து , ( தன் மச்சினன் மருதனுடன் )அந்த காளையை அடக்குகிறான்..

இதுதான் கதை.

இப்படி மேலோட்டமாக படித்தால் கூட விறுவிறுப்பான ஒரு த்ரில்லராக இருப்பதுதான் இந்த நாவலின் சிறப்பு.

ஜமீந்தாருக்கு சொந்தமான அந்த காளையை அவன் அடக்க முடியுமா? ஜமீன் தார் நல்லவரா கெட்டவரா? அவர் என்ன செய்யப்போகிறார் , ஜமீந்தாரின் விசுவாசி என்ன செய்யப்போகிறான். என்றெல்லாம் ஆர்வத்துடன் கதையை ஒன்றிப் படிக்க முடிகிறது.
ஒரு கிழ்வன் இந்த விளையாட்டின் வெகு நாள் ரசிகன். நிபுணன். அம்புலியின் ரசிகன் என்ற முறையில் பிச்சி மீது அன்பு ஏற்படுகிறது. பல சூட்சுமங்களை  சொல்லித்தருகிறான்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நமக்கும் ஜல்லிக்கட்டின் மீது ஆர்வம் ஏற்படுத்துகிறது. ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதும் புரிய வைக்கிறது.

அதுவும் பார்வையாளர்கள் கமெண்டுகள் எல்லாம் மிக மிக சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. நம்மை எழுத்துக்குள் இழுத்து சென்று விடுகின்றன.

அந்த காளை உடல் வலு மிகுந்தது மட்டும் அல்ல.. சூழ்ச்சியும் கொண்டது. எனவே கிளைமேக்ஸ் எப்படியும் இருக்கலாம் என்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

மொத்த குறு நாவலும் , அந்த ஜல்லிகட்டு நிகழ்ச்சி மட்டுமே.. அந்த ஜல்லிக்கட்டு நடக்கும் சில மணி நேரங்களை முழுமையாக உள்வாங்க இது உதவுகிறது.

ஆக இப்படி மேலோட்டமாக படித்தாலும் கூட ஒரு விறுவிறுப்பான த்ரில்லரை படித்த நிறைவு கிடைக்கும்.
ஆனால் இது , இந்த விளையாட்டை தாண்டி வேறு சில விஷயங்களை பேசுகிறது என்பதை கூர்ந்து படித்தால் உணர முடியும். கிளைமேக்ஸை உன்னிப்பாக கவனித்தால்தான், முற்றிலும் வேறுபட்ட  நுட்பமான சில விஷ்யங்களையும் இந்த குறு நாவல் தொட்டு இருப்பது தெரியும்..


    அந்த காளையை அடக்குவது பிச்சிக்கு ஒரு முக்கிய பிரச்சினை. காரணம் தன் தந்தை மேல் வைத்து இருக்கும் மரியாதை.

ஆனால் காளையின் சொந்தக்காரனான ஜமீந்தாருக்கும் இது ஒரு முக்கிய பிரச்சினை ஆகிறதே? ! அதுதான் இந்த நாவலின் உச்சம். 


தன் காளையை அடக்க வரும் பிச்சியை ஜமீந்தார் விரும்பவில்லை.. ஆனால் அந்த ஜமீந்தார் கெட்டவர் அல்லர் என்பதை அடிக்கோட்டு இட்டு சொல்லி இருப்பது இந்த நாவலின்  நேர்த்திக்கு இன்னொரு உதாரணம்.  பிச்சியின் வெற்றிக்கு பரிசளிப்பதை வேண்டுமானால் , போலியான பெருந்தன்மை என்று சொல்லலாம். ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சியின் உயிருக்கு ஆபத்து வரும் நிலையில் உண்மையாகவே பதறுகிறார் ஜமீந்தார் . சினிமாவில் பார்க்கும் ஜமீந்தார் வேறு .. இதில் காணும் ஜமீந்தார் வேறு.

அதே போல தன் தந்தையின் வீழ்ச்சிக்கு பழி வாங்க வரும் பிச்சிக்கு , அந்த காளையின் ஜமீந்தார் மேல் கோபம் இல்லை ( அப்படியே இருந்தாலும் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை ) என்பதும் பல இடங்களில் அடிக்கோட்டு இட்டு சொல்லப்பட்டு இருக்கிறது.

கடைசியில் வென்று விட்ட நிலையில், “ இந்த நாய் ஜமீனின் காளையை அடக்க வரவில்லை எஜமான் . என் தந்தை சாகும்போது சொன்ன வார்த்தைக்ககத்தான் வந்தேன் “ என சொல்லும்போது, என் கண்களில் வழிவதை தடுக்க முடியவில்லை..

திடுக்கிடும் கிளேமேக்ஸ் , ட்விஸ்ட் என்றெல்லாமல் இல்லாமல், இந்த வெற்றியை பார்த்து பிச்சியின் மீது யாரும் காதல் வயப்படுகிறார்கள் என்றெல்லாம் இல்லாமல், ஜமீந்தார் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறார். பிச்சியும் மனமுவந்து ஏற்கிறான் . அவனை ஜமீன் வண்டியிலேயே மருத்துவமனை அனுப்புகிறார்கள்.

அதன் பின் ஜமீந்தார் செய்யும் ஒரு வேலைதான் உண்மையான கிளைமேக்ஸ். நாவலுக்கு வேறு ஓர் அர்த்தம் கிடைப்பதும் இதனால்தான்..


ஜாமீந்தாரை பொறுத்தவரை அந்த காளை வெறும் மாடு அன்று. அது அவரின் கவுரவ சின்னம்.

இது ஆட்சியாளர்களின் பொது குணம்தான். ஆட்சியாளர்கள் மக்கள் பட்டினியைக்கூட பொருட்படுத்தாமல் கட்டடடங்கள் அமைக்க முனைவது இதனால்தான். அதனால் மக்களுக்கு பயன் கிடைப்பதை விட, தம் பெயர் நிலைப்பதே அவர்களுக்கு முக்கியம்.

இதே காரணத்தால்தான் அடுத்து வருபவர்கள் முந்தைய கட்டடத்தை இடிக்க நினைக்கிறார்கள்.

மன்னர் ஆட்சி காலத்தில் இது சகஜம். இப்போதும்கூட அது தொடர்வதை பார்க்கலாம்.

ஆனால் ஒன்று.. இந்த விவகாரத்தில் ராஜாக்கள் பேசுவதை விட , ராஜ விசுவாசிகள் செய்யும் அழிச்சாட்டியம் பெரிதாக இருக்கும். மக்கள் பணத்தில்தான் பதவியில் இருப்பவர்கள் , தமக்கான கவுர சின்னங்களை எழுப்பிக்கொள்வார்கள். இது புரியாத பாமரர்கள், அரசர் தமக்கு பெரிய உதவி செய்து விட்டதாக மயங்குவார்கள்.

விரல் விட்டு எண்ணும் மிக சிலர் மட்டுமே போராடி , அதன் வெற்றி தோல்விகளை சந்திப்பார்கள் . ( நூலக இட மாற்றத்தை ஆதரிக்கும் ஒரே ஒரு தன்னந்தனி இலக்கியவாதி சாரு நிவேதிதா மட்டுமே என்பது ஓர் உதாரணம். பொதுப்புத்தியில் இருந்து விலகி இருப்பது மிக மிக சிலர் மட்டுமே ) ஆனால் என்றாலும் ஒரு நாள் வெற்றி உறுதி.

அதே போல ஒரு போராட்டம் என்றால் தகுந்த  நம்பகமான துணை வேண்டும்.,

பிச்சி என்னதான் திறமையான வீரன் என்றாலும், மருதன் துணை இல்லாமல் வெற்றியை சுவைத்து இருக்க முடியாது..

அதே போல கிழ்வனின் ஆதரவு, வழிகாட்டுதல், பிரார்த்தனை, ஆசி போன்றவையும் முக்கியம்.

சிலர் பிச்சியை வெறுப்பேற்றும்போது,  “ நீ வந்து இருப்பது மாட்டுடன் சண்டையிட.. மனிதர்களுடன் சண்டையிட அன்று “ என வழி நடத்துவது அருமை.

அதேபோல , மற்ற மாடுகளை எல்லாம் விட்டு விட்டு, தன் மாட்டுக்காக காத்து இருக்கும் பிச்சியின் விவேகமும் அருமை.

ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்க வேண்டும் என்றாலும், சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

**************************************************

ரசித்த இடங்கள் • ” ஒரு மாட்டு இவ்வளவு கபடமா ? “

           ” போன ஜன்மத்துல மனுஷன இருந்து இருக்கும் “


 • “ சபக் என்ற சப்தத்தைதான் கூட்டம் கேட்டதே தவிர , மின் வெட்டு நேரத்தில் மாட்டில் ஏறியதை கிரகிக்க முடியவில்லை “ • “ மனுஷனுக்கும் மாட்டுக்கும்தான் சண்டை. விவகாரம் கொம்புக்கும் கைக்கும்தான். மறக்காதே “ • “ ஜமீன் சோறு சாப்பிட்டவன். ஜமீன் காதுல விழணும்தானே இப்படி பேசுறாண் “


“ ஜமீந்தார் வேலை தெரிஞ்சவனை மதிப்பாரு “
“ ஆனா. தன் மாடுனா அந்த நினைவு வேறுதான், பாட்டையா “


 • “ மாட்டை அடக்குபவன் திமிலையும் , கொம்பையும்தான் பார்ப்பான், பிடித்து வருப்வன் கையை பார்க்க மாட்டான் “ • “ நந்தி தேவனே அவதாரம் எடுத்து வந்தது போல இருக்கிறதே. அதைபோய் அடக்க நினைக்கிறானே . “ பாவிப்பய “ என தன்னை அறியாமல் கூறி விட்டார்


**************************************

பிளஸ்


 • எளிமையான நடை
 • புரியும் படியான வட்டார எழுத்து
 • அழ்கு கொஞ்சும் மொழி
 • நுட்பமான விவரணைகள்
 • ஆழ்ந்த உட்கருத்து
 • மாடுகள் பற்றிய நுட்பமான விபரங்கள்
 • கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாத பாத்திரங்கள்
 • சுருக்கமான , நேர்த்தியான எழுத்து ( வெறும் 70 பக்கங்களில் எத்தனை விபரங்கள் !! )
 • மண் சார்ந்த கதைக்கரு

மைனஸ்

 • பெண் பாத்திரங்களே இல்லாதது 

*****************************************************

வெர்டிக்ட் 

                     படித்தே ஆக வேண்டிய முக்கியமான நாவல்


********************************************************
வாடிவாசல்

எழுதியவர் : சி சு செல்லப்பா 

காலச்சுவடு வெளியீடு ,

விலை : இதற்கு எவ்வள்வு விலை கொடுத்தாலும் தகும். ஆனாலும் இதன் விற்பனை விலை ரூ 40 ( நாற்பதே ரூபாய் ) மட்டுமே
         6 comments:

 1. வாடிவாசல் இன்னும் படிக்கவில்லை. படிக்கவேண்டும். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. நன்றி கோபி,கண்டிப்பாக படியுங்கள்

  ReplyDelete
 3. நல்ல வேளை... அந்தமாதிரி காலகட்டத்தில் அந்தமாதிரி கிராமத்தில் நான் பிறந்து தொலைக்கவில்லை... இல்லையென்றால் காலம் முழுக்க பிரம்மச்சாரி தான்...

  ReplyDelete
 4. எந்த பதிப்பகம் என்று குறிப்பிடுங்கள்... புத்தக சந்தையில் வாங்கிடலாம்...

  ReplyDelete
 5. உங்கள் பிளாக்குக்கு வந்ததும் தான் அந்த கணியன் பூங்குன்றனார் மேட்டர் நினைவுக்கு வருகிறது...

  சுட்டிக்காட்டியதற்கு நன்றி... இப்போது திருத்திவிடுகிறேன்...

  உங்களைத்தவிர வேறு யாரும் சுட்டிக்காட்டாதது ஆச்சர்யமாக இருக்கிறது...

  ReplyDelete
 6. நல்ல பூந்தோட்டதில் நடந்து போகும் பொது மலத்தை மிதிவிட்ட மனநிலை .. அற்புதமான நடையில் பொய் கொண்டிருந்த விமர்சன ஓட்டத்தில் நடுவே சாருவை இழுத்துவிட்டது

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா