Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, January 1, 2025

புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாவல்

 

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கணத்தை மட்டும் சொல்கின்ற ஹாலிவுட் படங்கள் உண்டு.  அதுபோல, புத்தகக் கண்காட்சி நடத்துதல் என்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு படைக்கப்பட்ட  ஒரு நாவல்தான் அகிலன் கண்ணன் அவர்களின் வேர்பிடி மண் என்ற குறுநாவல்.


  கணவன் மனைவி உறவு, நடுநிலைப்பார்வையில் ஒரு சிக்கலை அணுகல், நட்பு, அரசு இயந்திரம் செயல்படும் முறை, ஆங்காங்கு இருக்கும் நல்ல அதிகாரிகள் , ஏறிய ஏணியை எட்டி உதைத்தல் என பல விஷயங்கள் ஆங்காங்கு பாயசத்தில் கிடக்கும் முந்திரி போல சுவைக்கின்றன.


இரும்புச் சட்டக நிறுத்தம் ( ஸ்டாண்ட் ), நெறியாள்கை போன்ற அழகுத் தமிழ்ச் சொற்கள் மனதை அள்ளுகின்றன.. சொற்களை சிதைத்து விடக்கூடாது என்பதற்கு மு. வ ஒரு யுக்தியைக் கையாள்வார்... அதுபோன்ற ஒரு யுக்தியை அகிலன் கண்ணனும் பயன்படுத்தியுள்ளார்.


தில்லி புத்தகக் கண்காட்சியை விளக்கும்போது நாமே அங்கு நேரில் சென்ற உணர்வு உருவாகிறது.



கல்வி சார்ந்து வட இந்தியாவைத் தாழ்வாகவும்  தென்னிந்தியாவை உயர்வாகவும் நினைத்துக் கொள்ளும் போக்கு நம்மிடையே உண்டு. ஆனால் ஆலயங்களை சிறப்பாகப் பராமரித்தல், ஐ ஏ எஸ் தேர்ச்சி,  தொழில்துறை, இலக்கிய நிகழ்வுகள் என பலவற்றில் அவர்கள் நம்மைவிட சிறப்பாகவே உள்ளனர்.  ஒரு சில மாநிலங்களை வைத்து வட இந்தியாவையே தாழ்வாக நினைப்பது நமக்குத்தான் தீமை என்பதை இருவேறு புத்தக கண்காட்சிகள் மூலம் சுட்டிக்காட்டுகிறது நாவல்.



ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் ஒரு நாவலின் இலக்கிய மதிப்பை பாதிக்காது என்பது உண்மை.


ஆனால் இதை பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டு இன்று பல பதிப்பகங்கள் மெய்ப்புப் பார்த்தல் என்ற துறையே இல்லாமல் தப்பும் தவறுமாக நூல்களை வெளியிடுகின்றன.. சில்லறை சில்லரை,  கருப்பு கறுப்பு போன்ற குழப்பங்கள் வந்தால் முன்பெல்லாம் அச்சு நூல்களில் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்வது வழக்கம். 


இந்த பிரஞ்ஞையுடன் தான் பாரம்பரிய பதிப்பகங்கள் செயல்பட்டன..கையில் காசு, வாயில் தோசை என்ற நோக்கில் செயல்படும் இன்று புற்றீசல்களாகக் கிளம்பியுள்ள பல பதிப்பகங்கள் இவற்றில் கிஞ்சித்தும் அக்கறை செலுத்துவதில்லை’


அச்சுப்பிரதியில் பிழையிருப்பின் அது நாம் உண்ணும் சோற்றில் கல் போலாகும் ; சில நேரம் பொருளே மாறுபட்டுவிடும் . அடுத்த தலைமுறைக்கு ஒருவேளை தவறான பதிவு சென்றுவிடக்கூடாதல்லவா ?

என்ற வரி வெகு நேரம் யோசிக்க வைத்தது..


இயல்பான நகைச்சுவையும் மொழி விளையாட்டும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன

உதாரணமாக புத்தகக் கண்காட்சியை துவக்கி வைக்க யாரும் முன்வராமல், அவர்களாகவே ஆரம்பித்தனர் என்பதை கேலியாகச் சொல்லும் வரிகள்


புத்தகக் காட்சி தானாகவே திறந்து கொண்டது . ஆம் , கலை நிகழ்ச்சி , ஊர்வலம்  இவைகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன . அவை போல் அல்லாமல் புத்தகக் காட்சியை யாரும் திறந்து வைக்க வில்லை



பிடித்த வரிகள் சில:



உணர்வு வெளிப்பாட்டிலோ அவ்வறிவு , பாலில் தயிரெனப் பதுங்கிக் கொள்ளுகிறது .




  சட்டை உறிக்கும் பாம்பின் மேல் தோல் போல 

எப்போது மாலைக்குத் தலை குனிகிறதோ அப்போதே கல்லெறிக்கும் நெஞ்சம் நிமிரப் பழகிக் கொள்ளும் மனப் பக்குவம் பெறவேண்டும் குமார் ! " என்பார் கபிலன் .  

நானொரு கல் - அவ்வளவு சீக்கிரம் நார் எடுக்க இயலாது . எனில் , அவளோ அருவி ! பொங்கிப் பெருகும் அன்பருவி - உருவிலும் உள்ளத்திலும் !


 

அவர்களது ஆங்கிலம் அவரவர் தாய்மொழி பாவத்துடனேயே ஒலிக்கிறது . பெரும்பாலும் கடாபுடாவெனும் ஒலியிலேயே பிரவகிக்கிறது . ஒரிய , வங்க மொழிகள் மெல்லிசைபோல் ஒலிக்கின்றன . அவர்கள் எல்லோரும் நமது தமிழ் மொழி உச்சரிப்பைப் பற்றி என்ன கருதுகிறார்களோ தெரியவில்லை .


நீர் வறண்ட ஊரில் நீரோடையாய் மனிதர்கள் !


சார் நாம  வேர்பிடி மண்ணாவே இருக்கிறோம் .  தோட்டக்காரரைப் பொறுத்தவரை  நாம் வெறும் வேரடி மண் தானே  என்கிற  நினைப்புத்தான் !  மேலே செடியாய் , கொடியாய் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மலர்தான் மணக்கும் ! அதற்கு ஆதாரம் இந்த வேர்பிடி மண்தானே  ! "


“பெருங் கனவு உங்களுக்கு ! உங்கள் கனவு நனவாகட்டும் பெருந்தகையீர் ! “ “ குமாரு ,  நீங்க எப்போ அகிலனின் வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழர் ஆனீர் ?


 !


ஏப்பு , நீங்க இதெல்லாதையும்  பட்ணத்திலேந்து இங்க விக்கவாக் கொண்டாந்தீங்க ? " இப்படியொரு கேள்வி எங்களை நோக்கிப் பாயும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை நாங்கள் ! என் இதயத்தில் உதித்ததை அவருக்கு இதமாகப் பதிலாகச் சொன்னேன் : “ ஐயா, எல்லாருக்கும் சோறு போடுற பூமியிலே வாழ்கிற உங்களை மாதிரி மக்கள் கிட்டே ,  நாங்க இதோ இதுவும் ஒரு உணவுதான்னு காணவும் வாங்கவும் சாப்பிடவும் கொண்டு வந்திருக்கோம் . உங்களை மாதிரியேதான் நாங்களும் . நீங்க உடம்புக்குச் சோறு போடுறீங்க  ;  நாங்க மனசுக்குச் சோறு போடுறோம் . “



சிறு நூல் ஆனால் நிறைவான நூல்


வேர்பிடி மண் ( நாவல் ) ஆசிரியர்: அகிலன் கண்ணன்

தமிழ்புத்தகாலயம்

Friday, December 20, 2024

சென்ரியு

 சென்ரியு ஆயிரம் -ப. குணசேகர்

....



அரசியல்வாதிகள் நாய்கள் 

சிறுநீர் கழிக்கும் 

சிறு உறுமல் செய்யும் நாய்கள்

-பார்பாரா காப்மேன்

.........

பிரிஸ்கேம்பெல் 

தெரு ஓவியக்கலை 

நிர்வாணப் பெண்கள் காலில் 

மிதிபட்டு அழிந்தனர்

..........

இருண்ட இரவு 

மறுபடியும் மறுபடியும்

 எண்ணிய கறுப்பு ஆடுகள்

- பார்பாரா காப்மேன்

.........

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் 

தெரிவாரா ஏசு!


-பீட்டர் நியூட்டன்

.........

தாத்தாவிற்குப் பேரன்

 கற்றுக் கொடுத்த பாடம் 

பந்தை அடிக்க! 

- பார்பாரா காப்மேன்

.......

கோடையின் உச்சம் 

போக்குவரத்து காவலர் 

தலையில் வெயில்!

.....

ஐரிஷ் குழம்பு

 ஞாபகக் கலவையில் 

எனது பாட்டி

,- பார்பாரா காப்மேன்

......

டிரோன் கண்காணிப்பு

 நான் விலக்கிய

 நேர்த்தியான அச்சு.

.......

அபின் சொட்டில் மூழ்கிய 

பாடல் 

தாய்க்கு 

நான் பார்த்த 

அதிசயம்

.........

இரத்தம் சொட்டும் 

இருக்கைகள்

 பீர்கடைக்காரர் அழைத்தார் முதலாளி என்று!


-சேஸ்க்காகனன்

......


......

மதுக்கடையில் அட்டை

 நான் உணர்ந்தேன்

 இளமைப் பார்வை!


-சேஸ்க்காகனன்

.....

மெழுகுவர்த்திச் சுடர் 

முன்னோக்கி சாய்த்த

 எனது பேச்சு.

......


ஞாயிறு சில மணி நேரம் 

தெருப் பாடகர் முழங்கினார்

 முக்கிய ராகம் மதுக் கடையில்! 

டேவிட்ரீட்

......

இந்தியச் சந்தையில் எல்லா வெள்ளைக்காரிகளும் - யாரோ


இயக்க வீழ்ச்சி

 பழையதைப் புரட்டினார் 

பதவியில் பங்கு வகிப்பவர். டேவிட்ரீட்


Monday, December 9, 2024

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன்

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன் 


எல்லா இலக்கிய இனங்களுக்கும் உருவம் முக்கியமானது தான். ஆனால் கவிதைக்கும். உருவத்திற்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் கவிதைக்கும் மொழிக்கும் உள்ள பந்தம் ரொம்பவும் இறுக்கமானது ஒருமொழி பெயர்ப்பில் அழிந்து விடுவது எதுவோ அது தான் கவிதை' என்று விமர்சகர்கள் கூறுகிற அளவிற்கு உருவத்தோடு கவிதை உறவு கொண்டிருக்கிறது.

கவிதைகளுக்கு மட்டுமல்ல, எல்லா இலக்கிய வகை களுக்குமே உருவம் முக்கியமானது. '


ஒரு ஊரில் ஒரு   
ராஜா இருந்தாராம்' என்று கதை துவங்கும் போதே அது அனுபவ முதிர்ச்சியற்ற, குழந்தை நிலைக்கான உணர்ச்சி களோடு சம்பந்தப்பட்டது என்பது வெளிப்பட்டுப் போகிறது. "நித்யத்வத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப் பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந் தது அவன் கதை" என்று துவங்கும் 'பிரம்மராக்ஷஸ், கதையில் அனுபவ முதிர்ச்சியின் கம்பீரத்தை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

மொழி எல்லோருக்குமான பொதுச் சொத்தாயினும் மொழியிலிருந்து உருவாக்கப்படும் நடை ஒவ்வொருவருக் கும் வேறுபட்டு தனித்து நிற்க வேண்டும். பல சமயங் களில் எழுத்தாளனின் இலக்கிய ஆளுமைக்கும், படைப் பாற்றலுக்கும் நடையே அடையாளமாக நிற்கிறது. சிறு சிறு வாக்கியங்களும் சமூகப் பிரக்ஞை நிறைந்த கிண்டலும் ஆழ்ந்த தத்துவங்களும் புதுமைப்பித்தனை அடையாளம் காட்டுகின்றன.

"நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும்? அது தான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமாம். மனிதன்,விதி, தெய்வம்; தள்ளு வெறும் குப்பை, புழு, கனவுகள்!" என்றும்,

"மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட் டான் ஆடிறது போல்......" என்றும்,

'அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது'' என்றும் வருகிற வரிகளை வைத்துக் கொண்டே அவை புதுமைப்பித்தன் எழுத்துக் கள் என்று சொல்லி விட முடியும்.

"சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன. சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகி விட்டது"


என்று வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து அர்த்தங் களைத் திரட்டித் தருவது லா. ச. ராமாமிருதத்தின் நடையாகும். 

.உயிரிருப்பதால் உடலும், உடல் இருப்பதால் உணவும், உணவுக்காக உத்யோகமும், உத்யோகத்திற்காக சில வெளிப்பூச்சுக்களும் கொண்டு அவள் உயிர் சுமந்து, உணவருந்தி, உத்யோகம் பார்த்து, ஒப்புக்கு அலங்காரம் செய்து கொண்டு உலவி வருகின்ற காரணத்தை மட்டும் வைத்து, 'கௌரிக்கு வாழ்க்கை ரொம்பவும் பிடித்திருக் கிறது' என்று முடிவு கட்டி விட முடியுமா?" என்று சூழ் நிலையின் பல்வேறு கூறுகளையும் துளி சிந்தாமல் ஒரே மூச்சில் உள்ளடக்கி வெளிப்படுத்துகிற நடை ஜெயகாந்த னுடையதாகும்.

படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் ஆசிரியன் இருக்க வேண்டும். ஆனால் அவனின் சுண்டு விரலின் நுனி நகம் கூட வெளித் தெரியக் கூடாது." "An artist must be in his work like God in creation invisible and all powerful; he should be everywhere felt, but nowhere seen." ஃப்ளேபாரின் கருத்து நூற்றுக்கு நூறு பின்பற்றப் பட வேணடும். இதன் காரணம் அழகுணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாகும். ஆசிரியரின் குறுக்கீடு தோன்றி யதும் என்ன விளைவுகள் தோன்றுகின்றன? 'இது கதை; எவனோ ஒருவன் பொழுது போகாமல் கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்' என்ற நினைப்பு வாசகனுக்குத் தோன்றியதுமே அவன் பாத்திரங்களோடு ஒன்ற முடியாது. அப்படி ஒன்றாமல் போனால் படைப்பின் நோக்கம் முழுமை அடையாது. ஏனென்றால் ஒரு படைப்பின் மறு பாதி பூர்த்தியாவது வாசகனின் மனத்தில் தான். 

தமிழில் ஆரம்ப கால நாவல்களான 'பிரதாப  முதலியார் சரித்திரம்' போன்றவற்றில் ஆசிரியர் குறுக்கீடு கள் அதிகம். தனது வாசகர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு 'காஞ்சிக்குப் போகலாம்; வாதாபி பார்க்கலாம்' என கல்கி அழைத்துப் போவார். உருவப் பிரக்ஞையும், கலைத்தேர்ச்சியும் மிக்க புதுமைப்பித்தன் கூட உணர்ச்சி மேலீட்டில் வரம்பைக் கடந்திருக்கிறார். 'என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்” என்று 'பொன்னகரம்' கதை யிலும், "பழையன கழியும், புதியன வரும். இது உலக இயற்கையாம்!'' என்று 'தெருவிளக்கு' கதையிலும் கூறி யிருப்பது ஆசிரியரின் தேவையற்ற தலையீடாகும். "பழைய யுகத்தைச் சேர்ந்தவள் புதிய யுகத்தைச் சந்திக்க வருகிறாள் என்றால்... ஓ . அதற்கோர் மனப்பக்குவம் வேண்டும்" என்று 'யுகசந்தி'யில் ஜெயகாந்தன் கூறுவதும் குறைப்பட்டியலோடு சேர்க்கப்பட வேண்டியதே. 'கற்பு என்று கதைக்கிறீர்களே' போன்ற வரிகள் வாசகன் வாயி பிருந்து வர வேண்டும். வருவதற்கான உணர்ச்சியை ட்டும் தான் ஆசிரியன் உருவாக்க வேண்டும். மாறாக ாசகனைத் தள்ளி விட்டு அந்த இடத்தில் ஆசிரியன் போய்   நின்று வாசகன் பாத்திரத்தை ஏற்பது அழகியலாகாது.

Monday, August 1, 2022

கலைமகள் − ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை பயிலரங்கு அனுபவம்

 கலைமகள்  மாத  இதழும்   ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம்  இதழும்  இணைந்து  சிறுகதைப்  பட்டறை  எனும் பயிலரங்கை  நடத்துகின்றன  என்ற செய்தி எனக்கு  சற்றே வியப்பளித்தது.

   ஆன்மிகம்  ,  ஞானத்தேடல் ,  சமூகத்தேடல்  என  பயணிக்கும்  ராமகிருஷ்ண மடம் ,   இலக்கியத்தில்  ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த  ஆச்சர்யம் அளித்தது

   இதில்  சுவாரஸ்யம்  என்னவென்றால் வேறு எங்கோ  போய்க்கொண்டிருப்பவர்கள்  தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து  அறிந்து  ,  சரி  போய்த்தான்  பார்ப்போமே என   கேஷுவலாக  வர முடியாது.

     ஒரு  மாதம் முன்பே  விண்ணப்பிக்க வேண்டும்   அதில்  தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே  நிகழ்ச்சிக்கான  அழைப்பு அனுப்பப்படும்

       ராமகிருஷ்ண மடத்தில்  ஏசி ஹாலில்  மிகச்சிறப்பான  ஏற்பாடுகளுடன்  நிகழ்ச்சி  நடந்தது

    இனிமையான   ஆன்மிக  சூழலில்  இலக்கிய  நிகழ்வு  .   பெயரை  பரிசோதித்தபின்னே   அனுமதித்தனர்  அழகான  விவேகானந்தர் படம்,  அவரது  நூல் ,  பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய  பொதி  அனைவர்க்கும்  வழஙககப்பட்டது


ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி  மந்திரங்கள்  சொன்ன  பிறகு  நிகழ்ச்சி தொடங்கியது

    எழுத்தாளர்கள்  வித்யா சுப்ரமணியம்  மாலன்  ,  தேவிபாலா  ஆகியோர்  சிறுகதை எழுதும்  நுட்பம்  குறித்து  வகுப்பெடுத்தனர்.


   கலைமகள்  ஆசிரியர்  கீழாம்பூர் சங்கரமணியன்  அவர்கள்  பேசியதை  தொகுத்துக்கூறி  மனதில்  பதிய வைத்தார்

       ராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர்  சென்னை  ராமகிருஷ்ண மடத்தின்  மேலாளர் சுவாமி  தர்மிஷ்டானந்தர் ஆகிய  ஆன்மிகவாதி்களுடம்கூட   சிறுகதைகள் குறித்து  சில  நிமிடங்கள்  பேசியது  சிறப்பாக இருந்தது

     அனைத்துக்கும்  சிகரமாக , உலகளாவிய  ராமகிருஷ்ண  மடங்களின்  துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ்  அவர்களும்  அழகாக  ஆனால்  சுருக்கமாக  சிறுகதை குறித்த  தனது  நேரடி  அனுபவத்தை  பகிர்ந்து  கொண்டார்








       தனது  சிறுவயதில்  சிறுகதைப்போட்டி  ஒன்றில்  கலந்து  கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது  சுவாரஸ்யம்.  ஒரு விஷயத்தை  சிறுகதை  போல  சொல்லும் தன் பாணி  பலரை  ஈர்த்து  வருகிறது  எனக்குறிப்பிட்டார்.    

         பேச்சுவாக்கில்  ஒரு  சிறுவனுடனான  ஒரு  அனுபவத்தை  ஆன்மிக  கருத்தை  வலியுறுத்துவதற்காக சொன்னார்.  அது  பிறகு மாலன்  தன்  பேச்சில் குறிப்பிட்ட  சிறுகதை பஞ்சாங்கத்துக்கு  முற்றிலும்  ஒத்துப் போனது..

  வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர்  (  ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் )   தமிழ்ச் சிறுகதை வரலாற்றை  சுருக்கமாக பேசினார்

    செய்திகளை  மட்டுமே  வெளியிட்டுக் கொண்டு  இருந்த  அன்றைய  சூழலில்  பாரதியார்  தனது  சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு  இடமளித்து   தமிழில்  சிறுகதை  கலையை  ஆரம்பித்து  வைத்ததை  சொன்னார்  மாதவையா வவேசு  ஐயர் டிஎஸ்  சொக்கலிங்கம்  சிசுசெல்லப்பா  ராமையா  கநாசு  மெளனி என சிறுகதையை  வளர்த்த  முன்னோடிகளைப்பற்றியும்  சுஜாதா  சுரா  போன்றோர்  பார்வை  மணிக்கொடி காலகட்டம் என விரிவாக  பேசினார்;

சுருக்கம் , சுவை  , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை  தூண்டல்  போன்ற  சிறுகதைக்கு  தேவையான  அம்சங்கள்  குறித்துப்  பேசினார்.

  சிறுகதை  ஆசிரியனிடம்  ஆரம்பிக்கும்  சிந்தனை  வாசகனிடம்  தொடரும்படி எழுதப்படுவதே நல்ல  சிறுகதை என்றார்


அதன்பிறகு  பேசிய கீழாம்பூர்  சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின்  தேவை  குறித்தும்  அதை  கலைமகள்  தொடர்ந்து  நடத்த நினைத்திருப்பதையும்  சொன்னார்.  தரமணியல்  தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து  முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது  நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.

     உவேசா  ,   கிவாஜ  ஆகியோர்  வழியில்  கலைமகள்  இதழ்  தொடர்ந்து  தமிழ்ப்பணி ஆற்றும்  என்றார்


பிறகு  பேச வந்தவர்  எழுத்தாளர்  பாரதி சந்துரு


சிறுகதைகளின்  அவசியம்  குறித்துப்பேசினார்..  சிறுகதை  சமகாலப்பிரச்சளைப்  பேசுகிறது  அதிலிருந்து ,மீளும்  ஊன்று கோலாகவும்  சிறுகதைகள் உள்ளன என்றார்;

உதாரணமாக  சூடாமணி எழுதிய  அக்கா என்ற  சிறுகதை.


அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்

தனக்கு குழந்தை இல்லாத  சோகத்தை காட்டிக்  கொள்ளாமல்  தங்கையின் குழந்தையை  அன்பாக  கவனித்துக்கொள்கிறாள்.   அந்தக்குழந்தையும்  பெரியம்மா மீது  பாசமாக  இருக்கிறது  ,தங்கையும்  அன்பானவள்தான்

ஒரு  நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.

அக்கா  மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்

பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘

“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.

     ஒரு  வார்த்தை  உலகத்தையே  நரகமென  எண்ணவைக்கிறது  இன்னொரு  வார்த்தை  வாழ்வை  சொர்க்கமெனக் காட்டுகிறது   சூழல்கள்  மனிதர்கள் என  அனைத்தும்   கணம்தோறும் மாறும்  மாயத்தைச்  சொல்கிறது  கதை


சீசர்  என்ற  ஜெயகாந்தனின்  கதையை  அடுத்தபடியாக  பேசினார்

    ஜெயகாந்தனுக்கே உரிய  டிராமாட்டிக்  உச்சம்  கொண்ட     கதை  இது

    வாடகைக்கு  குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த  ஒரு குடியிருப்பு  ஹவுஸ்  ஓனர் மகனின்  பார்வையில் நகரும்  கதை

       ஏன்  ஹவுஸ்  ஓனர்  பையனின்  பார்வை  என்றால்  அதுதான்  கதையை  இன்னும்  நெருக்கமாக்குகிறது.  பெரிய  அளவு  தீமையோ   பெரியஹீரோயிசமோ  செய்ய  முடியாத  ஒரு  சாட்சி  மட்டும்தான்  அவன்

          தமது  வீட்டில்  குடியிருக்கும்  ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது   அபாண்டமாக  பழி  சுமத்தி ,  அவளது  கணவனை  அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள்  எல்லாம்  சுவையான  மெகாசீரியலை  ரசிப்பது போல  அந்தப்பெண்ணின்  கதறலை  ரசித்தபடி  கள்ள  மெளனம் சாதிக்கின்றர்.

     


 மகன்  ஓடிப்போய்  கணவனை   அழைத்து  வருகிறான்.    கணவர் அமைதியாக  வந்து  என்ன  பிரச்சனை  என  விசாரிக்கிறார்.    என்  மனைவி  மீது  எனக்கு  நம்பிக்கை  இருக்கிறது   அனைவரும்  அவரவர்  வாழ்க்கைத்துணையை   நம்புங்கள்.  பிறர்  வாழ்வை  எட்டிப்பார்க்காதீர்கள்  என கம்பீரமாக  கூறுகிறார்.

     வேறு  வீட்டுக்குப்போய்விடலாம்  இது  மோசமான   மனிதர்கள்  வாழும்  இடம்  என்கிறாள்  மனைவி

    உலகம்  இப்படித்தான் இருக்கும்   பயந்தால்  வாழ  முடியாது என  ஆதரவாகப்பேசுகிறார்  கணவர்;

       சீசரின்  மனைவி  சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு  வாழ  வேண்டும்  என  பெண்களுக்கு  அட்வைஸ்  சொல்லாமல்  ஒரு, மன்னனுக்கு  உரிய  வீரம்  அமைதி  கண்ணியத்துடன்  பிரச்சனையை  சந்தித்த  அக்கணவன்  அந்த  இளைஞன் பார்வையில்  பேரரசர்  சீசராக  தோன்றுவதாக  கதை  முடிகிறது

    வாழ்க்கை  குறித்து  இப்படி  மேன்மையான  பார்வைகள்  உருவாக  சிறுகதைகள்  அவசியம்  என்று  பேசினார் பாரதி  சந்துரு


சிறுகதைகளை  எப்படி  வடிவமைப்பது 

சிறுகதைகளின்  வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம்  பேசினார்

           ராமகிருஷ்ண  மட நுாலகம்தான் தன்னை  நல்ல தொரு  வாசகியாக்கியது   நல்ல  வாசகன்தான்   நல்ல  எழுத்தாளன்  ஆக  முடியும்  என பேச்சை  ஆரம்பித்தார்

         திஜா எழுதிய  அம்மா  வந்தாள்  நாவல்தான்  எழுதத்துாண்டும்  உத்வேகம்  அளித்தது   என்றார்

     தானே  சொல்வது  போல  எழுதுதல்  ,  பல்வேறு  கதாபாத்திரங்கள்  சொல்வது போல எழுதுதல் ,   குளம்  மரம்  ஆகியவை  சொல்வதுபோல  எழுதுதல்  என   எப்படியும்  எழுதலாம்

    உருவகக்கதைகளும்  எழுதலாம்

ஆற்றங்கரை  பிள்ளையாரை  பாரததேசமாக  உருவகித்து  புதுமைப்பித்தன் ஒரு  கதை   எழுதியிருக்கிறார்    அந்த  பாதிப்பில்  நான்  எழுதிய  கதைதான்  "என்று தணியும்"  என்ற  கதை

       எளிய  விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம்     ஒரு  சிறுவன்  ரிக்ஷா  என்பதை  மழலை  மொழியில்  ரிஸ்கா என்பதை  சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார்   அசோகமித்திரன்


அதேபோல  மிகப்பெரிய  துயரங்களை  இழப்புகளை   கதையாக்கலாம்    நான்  அப்படி  எழுதிய  கதை  ஒன்று  மிகப்பெரிய  புகழை  எனக்கு  ஈட்டித்தந்தது 

சிறுகதை  அதன் முதல் வரிக்கு முன்பே  ஆரம்பித்து  விட வேண்டும்   கடைசி வரிக்கு  பின்பும்  தொடர வேண்டும் என்றார்

அந்தக்கதைக்கு   அடிப்படையாக  அமைந்த  தனது  சோகத்தை   அவர்  சொன்னபோது  பலர்  கண்கள்  கலங்கின  அவர்  அதை   சொன்ன விதமும்  ஒரு  சிறுகதை   போல  இருந்தது


சிறுகதை எழுதும்போது  கவனிக்க  வேண்டியவை  குறித்து  தேவிபாலா  பேசினார்


தலைப்பிலேயே  பதில்  இருக்கிறது.  சிறுகதை  எழுதவேண்டுமானால்  கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை  , சம்பவங்களை  கவனியுங்கள.   சும்மா  பார்ப்பது  அல்ல  கூர்மையான  கவனிப்பு தேவை

    எனது  முதல் சிறுகதை  கலைமகள் இதழில்  வெளியானது    அந்தவகையில்  கலைமகள்தான்  என்  தாய்வீடு

       சுமங்கலி பிரார்த்தனை  என்பது  அக்கதையின்  பெயர்.

    விகடன்  ஆசிரியர்  பாலசுப்ரமணியன்  அடிக்கடி  சொல்வார்      கண்ணையும் காதையும்  திறந்து  வைத்தால்  ஆயிரம்  கதைகள்  கிடைக்கும்;

   பேருந்துப்பயணத்தின்   போது   ஜன்னல்  வழியே  நான்  கண்ட  ஒரு  காட்சி − மடிசார்  அணிந்து ஒரு, பெண்  அதிவேகமாக ஸ்கூட்டரில்  பறந்த  ஒரு  காட்சி  − என் மனதில்  விதையாக  விழுந்து மடிசார்  மாமி  என்ற  புகழ்பெற்ற நாவல்  ஆனது

      எனவேதான் வாகன  வசதிகள்  வந்துவிட்ட பின்பும்கூட  பேருந்துகளில்  பயணிக்கிறேன்

    ஜவுளிக்கடை   உணவகங்கள்  என  எங்கும்  கதைகள்   கிடைக்கும்

   சின்னச்சின்ன  உணர்வுகளை  சின்னசின்ன  வாக்கியங்களில்  எழுதிப்பழகுங்கள்

        ஒரு  இளம்பெண்    நடந்து  கொண்டு  இருந்தாள்   நல்ல  மழை  பெய்து  கொண்டிருந்தது.  நனைந்துவிடாமல்  குடைபிடித்தபடி  போய்க்கொண்டிருந்தாள்

     இப்படி  எழுதாதீர்கள்

    குடைபிடித்தபடி  சென்று கொண்டிருந்த அவளுக்கு...     என  ஆரம்பித்து  அடுத்தடுத்து  செல்லுங்கள்

      குடை  அவள்   ஆகிய   இரு  சொற்கள்மூலம்  மழையையும்  ஒரு  பெண்  என்பதையும்  உணர்த்திவிட முடியும்

       ஊசி  போல   நறுக் என  மனதில்  பதிய  வேண்டும்

       ஆரம்பம்  முக்கியம்

    கோலம்  போட வாசலுக்கு  வந்தபோது , படமெடுத்து  ஆ டிக்கொண்டு  இருந்தது பாம்பு  என அதிரடியாய்  ஆரம்பியுங்கள்

அதேமாதிரி  முடிவிலும் ஒரு  பஞ்ச்  தேவை


வட்டார  பாஷை  வேண்டாம்  பொதுவான  தமிழில்  எழுதுங்கள்

வட்டார பாஷை தேவைதான்  ஆனால்  ஆரம்பகட்டத்தில்  வேண்டாம்

    தற்போது   பெண்கள்தான்   அதிகம்,,வாசிக்கின்றனர்  எனவே அவர்கள்  பிரச்சனைகளை  எழுதுங்கள்

  பெண்களால்  ஆனதுதான்  குடும்பம்  குடும்பங்கள்  சேர்ந்து  வீதி வீதிகள்  சேர்ந்தது  ஊர்     ஊர்கள் சேர்ந்ததுதான்  தேசம்  மற்றும் உலகம்

    என்னைப்பொருத்தவரை  திருவள்ளுவரை  மிகச்சிறந்த  சிறுகதை  ஆசிரியர்  என்பேன்.   எத்தனை  எத்தனை  கருத்துகள்   உவமைகள்

        அவசரமாக  கதை   வேண்டும்  என   பத்திரிக்கைகள்  கேட்டால்  உடனே  திருக்குறளைப்  புரட்டுவேன்

எந்தக்குறள்  கண்களில் படுகிறதோ அதை வைத்து  கதை  எழுதிவிடுவேன்

கனவுகளை   குறித்து  வைப்பது   நல்லது   சில  கனவுகள்  மறந்ததுபோல இருக்கும். யோசித்தால்  நினைவுக்கு  வந்து  விடும்.    குறித்து   வைத்தால்  கதை  எழுத  வித்தியாசமான   கருக்கள் கிடைக்கும்

        சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான  பொறிகளாக அமையலாம் 


ஒரு  வீட்டின் முன்  ஒரு,  ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.


அவ்வளவுதான்    பத்திரிக்கையுலக பிதாமகன்  சாவி  அவர்கள்  பாராட்டி  தலைப்பிட்டு  (  தலைப்பு  வாசலில்  செருப்புகள்)  பிரசுரிக்கத்தக்க  ஒரு   கதை  தயாராகி விட்டது

      அந்த  கதை  இதுதான்

ஒரு  கணவன்  மனைவி..   கணவன்  மீது அளப்பரிய  அன்பும்  நம்பிக்கையும் கொண்ட  மனைவி.    

ஒரு  நாள்  கணவன்  அலுவலகம்  சென்ற பிறகு  இவள்  ஒரு   வேலையாக  வெளியே செல்கிறாள்.  அங்கே  ஒரு   பாலியல்  தொழில் நடக்கும்  வீட்டைக்கடக்கும்போது    செம   அதிர்ச்சி

கணவனின்  செருப்புகள் அவ்வீட்டு வாசலில்  கிடக்கின்றன

    அவன் மீதான  நம்பிக்கை  சுக்குநூறாக சிதறுகிறது    கண்ணீருடன்   வீடு  திரும்புகிறாள்

    இது  எதுவும்  அறியாத   கணவன் வழக்கம்போல   மாலையில்  வீட்டுக்கு வருகிறான்.    வந்தவன்  அதிர்ச்சியில் உறைகிறான்

   தாழிடப்பட்ட  அவன்வீட்டு  வாசலில் யாரோ ஒரு   ஆடவனின்  ஒரு  ஜோடி  செருப்புகள்

இந்தக்கதை   நல்ல   வரவேற்பைப்பெற்றது

என்ன  ட்விஸ்ட் என்றால்   தங்கள்  வாழ்வில்  நடந்த சம்பவத்தை  கதையாக  எழுதிவிட்டதாக   பக்கத்து வீட்டுக்காரர்கள்  சண்டைக்கு  வந்து விட்டார்கள்  (  அரங்கில்  பலத்த  சிரிப்பு )  கற்பனைக்கதை  என  சொன்னாலும்  நீண்ட  நாட்கள் என்னுடன்  பேசுவதையே  நிறுத்தி  விட்டார்கள்


        வர்ணனைகள்  அதிகம்  வேண்டாம்.  போதனைகளும்  வேண்டாம்

       ஒரு  பாத்திரத்தின்  குணாதிசயங்களை  தெளிவுற   வரையறுத்து விட்டால் ,  பல்வேறு  குணாதிசங்கள்  கொண்ட  பாத்திரங்களே கதையை எழுதி விடும்

நறுக்  என  சுருக்கமாக  சொல்லும்கலை  முக்கியம்  .   ஏழே வரிகளில்  ராமாயணம் ,  மகாபாரதத்தை  சொல்லி  வியப்பிவ்  ஆழ்த்தியவர்  கண்ணதாசன்


வரவு  எட்டணா  ,  செலவு பத்தணா ,  அதிகம் ரெண்டணா    கடைசியில்  துண்டனா  என ,படத்தின்  கதையை  பாடலின் சில  வரிகளில்  சொன்னதுபோல  கதையின்  முதல்  வாக்கியத்திலேயே  கதையை  சொல்லலாம்


ஒரு முறை   ஒரே  வார்த்தையில்  "கதை  எழுதச்சொன்னார்கள்

எழுதினேன்


கதை  :  ஐயோ


அவ்வளவுதான்  கதை..    பிறகு  விளக்கினேன்


(   அவரது  விளக்கம் ,    கதை  எழுத  தேவையான   பஞ்சாங்கம்  குறித்து  மாலன்  பேச்சு ,   கல்கி  குறித்த  சுவாரஸ்யம் ,    கெளதமானந்தர்  சொன்ன   கதை  ,   வித்யா  சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது  கணவரின்  மறைவுச்  செய்தி    அடுத்த  பதிவில்)


இதன் தொடர்ச்சி












  




         



Monday, April 4, 2022

திருவள்ளூர்புத்தக கண்காட்சி. சீறிய ஆட்சியர் நேரடி ரிப்போர்ட்

  கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம்.  ஆனாலும்  சுரா , ஜெமோ என ஏராளமான இலக்கியவாதிகள் , அரசியல்வாதிகள் என அங்கிருந்து வந்து ஊர்ப்பெருமையைப் பேசுவதால் , கிஅனைவருக்குமே அம்மாவட்டம் குறித்த ஓர் அறிமுகம் உண்டு.
இப்படி எல்லா மாவட்டங்களையுமே சொல்லலாம் . பாரதிராஜா , இளையராஜா , வைரமுத்து , கவுண்டமணி , சத்யராஜ் , சாரு நிவேதிதா , எஸ் ரா , கோணங்கி என அனைவருமே அவரவர் மாவட்டங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர்

ஆனால் திருவள்ளூர் மாவட்டம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தமது அடையாளத்தை இப்போதுதான் உருவாக்கி வருகின்றன

அந்த வகையில் முதல் புத்தக கண்காட்சி அங்கு இவ்வாண்டு முதல் நடக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று

    நான் சென்றிருந்தபோது நல்ல கூட்டம்
பொதுமக்கள் மட்டுமன்றி ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்

இத்தனை நூல்களை ஒருசேர பார்ப்பது அவர்கள் மனதில் நல்விளைவுகளை உருவாக்கி இருக்கும்

       ஆட்சியர் அலுவலகம் , RTO , தலைமை காவல் அலுவலகம் என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கும் பிசி ஏரியா என்றாலும் சென்னை நெரிசலைப் பார்த்த நமக்கு இந்த இடம் அமைதியான சூழலில் இருப்பதுபோல தோன்றுகிறது 
வரும் ஆண்டுகளில் சென்னைவாசிகளும் இதை தேடி வருவர், சென்னை புத்தக கண்காட்சியின் இரண்டாவது பாகம்போல அமையக்கூடும்

திருவள்ளூர் சுற்றுப்புறவாசிகளுக்கும் இது அரிய நிகழ்வு.

புத்தகக்கண்காட்சிக்கேற்ற சிறந்த இடம் திருவள்ளூர்

நான் சென்றிருந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அங்கு வந்திருந்தார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்குப்பின் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் புத்தக கண்காட்சி நடத்துவதன் பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது.
பொறுமையாக ஒவ்வொரு ஸ்டாலையும் நின்று நிதானமாக பார்வையிட்டார்

என்ன நூல்கள் உங்களது தனிச்சிறப்பு ?
எதை வாசகர்கள் விரும்பி வாங்குகிறார்கள்  ..   எந்த எழுத்தாளர் விரும்பப்படுகிறார்   உங்களது அதிக பட்ச விலை புத்தகம் எது ?   எங்கே அதை எடுங்க பார்ப்போம் ? என வெகு தீவிரமாக ஒரு ( அந்தக்கால)   பத்திரிக்கையாளரின் முனைப்போடு பேட்டி எடுத்தார்

வண்ண புகைப்படங்கள்  கெட்டி அட்டை  ஆழ்ந்த கட்டுரைகள் என்பதால் இவ்விலையா? என்றார்

சார்  இதன் அசல் விலை 4000 .  நமது கண்காட்சிக்காக சிறப்பு விலையாக 1000 என விளக்கியதும் திருப்தியுடன் தலை அசைத்தார்

இலக்கியம் சார்ந்து இயங்குவதால் காலச்சுவடு ஸ்டாலில் சற்று அதிக நேரம் உரையாடினார்.  

இலக்கிய நூல்களை எல்லாம் மக்கள் வாங்குகிறார்களா என நம்பாமல் கேட்டார்  .  சார் , இப்போதெல்லாம் இலக்கிய நூல்கள்தான் அதிகம் விற்கின்றன என பதில் கிடைத்ததும் அவருக்கு மகிழ்ச்சி.

இது போன்ற தரமான ஸ்டால்களை அடுத்தமுறை அதிகரிக்க வேண்டும் என உதவியாளர்களிடம் பேசினார்
 
ஒரு காமெடி.   ஒரு  முக்கியமான பதிப்பகம் எந்த பரபரப்பையும் காட்டாமல் , அறிவிப்பு பதாகைகள்கூட இல்லாமல் சொற்ப புத்தகங்களுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்தது
என்ன இது என சற்று கோபமாக கேட்டார்.  புக்ஸ் , போஸ்டர்லாம் ரெடி சார். அரேஞ்ச் செய்ய நேரம் கூடி வரல என்பதுபோல சமாளித்தார் ஸ்டால்காரர்

இடம் கிடைக்காமல் பலர் முறையிடுகிறார்கள்   நீங்கள் கிடைத்த இடத்தை வீணடிக்கிறீர்களே என டோஸ் விட்டார்

ஆனால் மற்ற ஸ்டால்காரர்கள் தமது புத்தகங்களைக்காட்டி ,  அவற்றை விளக்கி அவரை கூல் செய்தனர்

பலருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முகம் சுளிக்காமல் சம்மதித்தார்

பாதுகாவலர்கள் இருந்தாலும் பொதுமக்கள்  வாசகர்கள் அவரை அணுக எவ்வித
கெடுபிடிகளும் இல்லை

பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகளக உரையாடினார்.    பல மாணவர்கள் அவரிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கினர்

ஆட்சியாளர்களும் நிர்வாகமும் நினைத்தால்  நல்ல மாற்றங்களை கொணர முடியும் என்பதற்கு திருவள்ளூர் புத்தக கண்காட்சி உதாரணம்

அதன்பின்  மாவட்ட தலைமை நூலகம் சென்று விட்டு பிறகு நூல்களுடன் கிளம்பினேன்


    














 

Sunday, November 7, 2021

வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு

 ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நல்ல மகன், நல்ல நண்பன் ,  நல்ல கணவன் ,  நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.

ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து

வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன்.  ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன்.  ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன்.   சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்


ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன்.  அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.


இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி.   எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே


வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது,  ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.


ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது.  அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது.  கபந்தன் வீழ்த்தப்பட்டு ,  சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்

இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான்.  சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்

வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை  சொல்கிறான் ?  ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;

அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை.   அவளிடம்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன்.  சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என  அவளும் சொல்லவில்லை.   சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.

கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.  ராமன்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் ,  அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை

அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே  ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்


கபந்தன் ,  சபரி  மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்


அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி

இதில் ஒரு சுவாரஸ்யம்


தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான  சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)

லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை.  சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்

ஆக தனக்குப் பிடிக்காத  ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது


கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

பின்குறிப்பு

இதில் ஒரு சுவாரஸ்யம்.  அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்

ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது

அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது.  எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே  சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் ராமன் இப்படி  சொல்கிறான்

சகோதர பாசம் அரிது.  எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா?  பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என  பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்

சுவையான இடம்




Wednesday, October 14, 2020

அப்பரின் அரிய பாடல்

 

சில பாடல்களின் பொருள் நமது வாசிப்பால் புதிதாக ஒரு பொருளைத்தருவதுண்டு

கீழ்க்கண்ட பாடலைப்பாருங்கள்.  அப்பர் ( திருநாவுக்கரசர் ) தேவாரப்பதிகம்


வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்

தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்

இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே


ஐந்து கள்வர் ஒரு ஆமையைப்பிடித்து நீரில் போட்டு அடுப்பிலேற்றினர்.  சற்று நேரத்தில் சாகப்போகிறோம் என்பதறியாது, அவ்வாமை இதமான சூட்டின் வெதுவெதுப்பை முட்டாள்தனமாக ரசித்து மகிழ்ந்தது. அது"போன்ற முட்டாளாக நானும் இருக்கிறேனே..  ஐந்து புலன்கள் தரும் உலகின்பத்தை நிலையென ரசித்து மகிழ்ந்து வரப்போகும்  மரணம் குறித்த அறிவின்றி இருக்கிறேனே  என்பது மேலோட்டமாக நமக்குத் தெரியும் பொருள்

ஆனால் உள்ளார்ந்த பொருள் வேறு

ஆமை ஒன்று குளிரில் உறைந்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறது

அப்போது ஒருவன் அதைப்பாரத்து, சமைத்து தின்ன முடிவெடுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தில் அதைப் போட்டு அடுப்பிலேற்றினான்

அந்த வெப்பத்தால் ஆமைக்கு உணர்வுகள் திரும்பின. உயிர் வந்தது. மகிழ்ந்தது

சில நிமிடங்கள் முன் ஒரு ஜடம். அதில் விழிப்புணர்வில்லை

சில நிமிடங்களுக்குப்பிறகு மரணம் . அதிலும் விழிப்பில்லை

இதோ ..கிடைத்திருக்கும் இந்த கணங்கள்தான் வாழ்வின் உச்சம்.  அதை உணர்ந்து நீருக்கு அடுப்புக்கு தனக்கு வாழ்வு தந்தவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கும் தெளிவின்றி , மரணத்துக்கு வருந்தி கிடைத்த கணத்தை வீணாக்கும் மூடனாக அது இருந்தால் அது எப்படி இருக்கும்..  


நான் அப்படி இருந்துவிடலாகாது..  உலக வெற்றிகளுக்கு சராசரி இன்பங்களை துறந்து வறண்ட வாழ்க்கை வாழந்தால் ஆமை குளிரில் இறப்பது போல் ஆகிவிடும்


உலக இன்பங்களில் திளைத்து அதையே பெரிதென நினைப்பின் கொதிநீரில் வெந்து அவிந்த ஆமை நிலை வந்து விடும்

துறத்தல்  திளைத்தல் இரண்டுக்குமிடையே ஒரு நடுநிலையை பேணும் ஞானம் வேண்டும் என்ற பார்வையையும் இப்பாடல் அளிக்கிறது


Monday, September 14, 2020

சந்தர்ப்பவாதமே நல்லது !! கவிஞர் வாலியும், சில சினிமா கலைஞர்களும்

 

கவிஞர் வாலி  தன் கட்டுரையொன்றில் இங்கனம் குறிப்பிடுகிறார்

------------------------

இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

# 2 ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ”வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!”

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

# 3 என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்’ என்று மெல்லிய குரலில் சொன்னார்.

# 4 சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.


என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.


நாடகம் எழுதித் தரக் கேட்டவர் – நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் – தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் – திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!


--------------

  வறுமையில் தள்ளப்பட்ட கலைஞர்களைப்பார்த்தபின் சந்தர்ப்பவாதம் என்பது தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்ககது..


அந்தக்காலத்தில் திமுக ஆட்சி நடந்தபோது இனியொரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்ததுபோல வீராணம் ஊழல் , மஸ்டர் ரோல் ஊழல் , பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் , குளோபல் தியேட்டர் மோசடி என புகுந்து விளையாடினர்



அப்போது கலைஞரை விமர்சித்து வாலி எழுதிய பாடல் இது

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்


வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே

தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே

ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்

தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்

ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே

இப்படி எம்ஜிஆர் படத்தில் எழுதினார்.




எம்ஜிஆர் மறைந்தபின் திமுக ஆட்சிக்கு வந்தபின் கலைஞரைப் பாராட்டி இப்படி எழுதினார்




நீ பாலுாட்டும் தாயானாய்


நான் வாலாட்டும் நாயானேன்


இப்படி சந்தர்ப்பவாதமாகப்பேசி கடைசி"வரை வளமாக வாழ்ந்தார்


,.......

தியாகராஜபாகவதரும் இப்படி நடந்து கொண்டிருந்தால் வசதியாக வாழ்ந்திருக்கலாம்

அம்பிகாபதி படத்தில் நாயகனாக நடித்தவர் அவர். பிற்காலத்தில் அதே படம் சிவாஜியை நாயகனாக வைத்து எடுக்கப்பட்டது. அம்பிகாபதியின் அப்பாவாக நடிக்க கோரி அவரை அணுகினர். 


நான் நாயகனாக நடித்த கதையில் சிறு வேடத்தில் நடிக்க மாட்டேன் என சுயமரியாதையுடன் மறுத்துவிட்டார்.  அவர் நாயகனாக நடித்தபோது பெற்ற ஊதியத்தைவிட அதிகம் தர  முன்வந்தும் ஏற்கவில்லை


சந்திரபாபு என்ற அருங்கலைஞனும் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசியதால் வறுமைக்கு ஆளானார்


அந்த கட்டுரையில் வரும் சாவித்திரியும் இளங்கோவனும் சுயமரியாதைமிகு கலைஞர்கள்


அவர்கள் வரலாற்று நாயகர்கள். வாலியோ வறுமைக்கு அஞ்சி சந்தர்ப்பவாதி ஆகி விட்டார்.



இன்று திமுகவைப் பாராட்டினால் ஊடக வாய்ப்புகள்  , பிஜேபியைப் பாராட்டினால் அரசு விருதுகள் என்ற தற்கால சூழலில் பெரும்பாலான படைப்பாளிகள் திமுக அல்லது பிஜேபி சார்பு நிலைக்கு சென்று விட்டனர் கைமேல் பலனும் பெறுகின்றனர்.

ஆனால் உண்மையான"படைப்பாளிகளுக்கு பாரதியின் இவ்வரிகளே வேதம்


பொய்மை, இரட்டுறமொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

− பாரதியார்

Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


Tuesday, June 16, 2020

இயக்குனர்கள் பாக்யராஜ் & "முகவரி"துரை.. தரையில் இறங்கிய விமானங்கள்


ஒரு காலத்தில் வெற்றி என்பதற்கு அகராதியில் அர்த்தம் பார்த்தால் பாக்யராஜ் என்று இருக்கும்.  அந்த அளவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தவர் அவர். வேறு மொழிகளில் யாரேனும் வெற்றிகளைத் தந்தால் அவர்களை கேரள பாக்யராஜ் , கன்னட பாக்யராஜ் என்பார்கள். அந்த அளவுக்கு வெற்றிகளை கொடுத்தார்.  கட்சி , சித்தாந்தம் போன்றவைகளில் ஆர்வமற்ற வெள்ளந்தி மக்கள்தான் இங்கு அதிகம். அவர்களின் நாயகனாக திகழ்ந்தார் அவர்

இந்த,நிலையில்தான் தன் இமேஜை சீர்திருத்தவாதி என்ற அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினார்.  
அதில் தவறு ஏதும் இல்லை

கண்டதேவியில் தேர் இழுப்பதில் பிரச்சனை , திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த கொடூரம் ,  ஆணவக்கொலைகள் , ரிசர்வ் தொகுதிகளில் தன் வேலையாட்களை நிற்க வைத்து வெல்ல வைத்து , மக்கள் பிரதிநிதி தன் வீட்டு வேலை செய்கிறார் என இழிவு படுத்துதல் , அல்லது வென்றதும் உடனடியாக ராஜினாமா செய்ய வைத்து , தேர்தலை கேலிக்குள்ளாக்குவது போன்றவற்றை கண்டிக்க இவருக்கு துணிவு வரவில்லை

வம்பே வேண்டாம் என பிராமணர்களை விமர்சித்து படமெடுக்க நினைத்தார்.
அதிலும் தவறில்லை. இது பலரும் செய்வதுதான்

ஆனால் கீழ்மையான செயல் ஒன்றை அரங்கேற்றியதுதான் பிரச்சனை.  பிராமணர்களை திட்டினால் தனது நடுநிலை இமேஜ் பாதிக்கப்படுமோ என நினைத்து , பிராமணர் ஒருவரையே படத்துக்கு டம்மி இயக்குனராக்க முடிவு செய்தார்.  சூதுவாது தெரியாத பாலகுமாரனை நைச்சியமாக பேசி சம்மதிக்க வைத்தார்

படம் முழுக்க பாக்யராஜின் கைவண்ணம்தான். பெயர் மட்டும் பாலகுமாரன்

படம் அபாரமான வெற்றி பெற்றது. நல்ல காசு பார்த்தார்.

ஆனால் அந்த அறமற்ற செயல் அவரை அத்துடன் முடக்கியது.  அதற்குப் பிறகு அவரது எந்தப் படமும் பழைய வெற்றியை பெறவே இல்லை. 

பாலகுமாரன் இது குறித்து பலமுறை வயிறெரிய குமுறியுள்ளார். தந்திரமாக என்னை ஏமாற்றி விட்டார்.  நான் எளியவன். என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று அனைத்தையும் கவனிக்கிறது என குமுறினார்

இது நிற்க

அஜித்துக்கு திருப்புமுனை தந்த நல்ல படங்களுள் ஒன்று. தரமான நடிகர்கள் , இயல்பான கதை என படம் சிறப்பாக இருந்தது

படத்தின் ஒன்லைன்

தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இசையில் சாதிக்க முயலும் நாயகன் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் இது. அனைத்து டிவி சானல்களும் இதற்கு நல்ல தரவரிசை அளித்தன

படத்தின் வசனம் பாலகுமாரன். படத்தில் ரகுவரன் சொல்லும் தன்னம்பிக்கை கதை இன்றும் பிரபலம்

ஆனால் , படத்தின் கதை இந்துமதியின் தரையில் இறங்கிய விமானங்கள் போல இருக்கிறதே என்ற பேச்சும் எழுந்தது

இந்த கதையின் ஒன்லைன்


தேடிச்சோறு தினம்  தின்று பிறகு மாயும் அன்றோட வாழ்க்கை பிடிக்காமல் , இலக்கிய உலகில் சாதிக்க முயலும் விஸ்வம் , குடும்ப சூழல் காரணமாக , லட்சியத்தை கைவிட்டு  அன்றாட வாழ்க்கைக்கு 
திரும்புகிறான்

நாயகனின் பெயர் வேறு .  இலக்கியம் என்பது இசை ஆகி விட்டது

மற்றபடி குடும்ப சூழல் , பெருந்தன்மையான அண்ணன் , இனிய காதல் என அனைத்துமே ஒன்றுதான்

படத்தில் பணிபுரிந்த பாலகுமாரன் , இந்துமதியின் நண்பர் என்பதால் . இந்துமதியின் அனுமதியுடன்தான் படம் எடுக்கப்பட்டதாக பலரும் நினைத்ததால் , யாரும் அதை பெரிதாக்கவில்லை

ஆனால் சமீபத்தில் , தன்னிடம் அனுமதி வாங்காமல் கதையை திருடிவிட்டனர் என இந்துமதி குமுறியுள்ளார்

அவரது நாவலை கையில் வைத்துக்கொண்டுதான் கதை விவாதமே நடந்ததாம்

இப்படி திருடியதற்குபதில் முறைப்படி அனுமதி வாங்கி , அண்ணி கேரக்டரை நாவலில் இருப்பதுபோல அழுத்தம் கொடுத்து எடுத்திருந்தால் படம் வேறொரு உயரம் தொட்டிருக்கும்

இயக்குனர் துரை தொடர் வெற்றிகளை அளித்திருப்பார்
அஜித்துக்கு இந்த விவகாரம் தெரிய வாயப்பில்லை. ஆனால் துரைக்கு தார்மீக பொறுப்பு உண்டு

பரவலாக பாராட்டுப்பெற்று , அஜித்தை வைத்து வெற்றாப்படம் கொடுத்து ,உயரத்தில் பறந்த இயக்குனர் அதன் பின் ஒரு போதும் வெற்றியை தர முடியவில்லை

அறிவுலகில் அறம்தவறுவது அழிவையே தரும்
,
முகநூல் பதிவுகளை காப்பி பேஸ்ட்செய்வது , பிறர் கதைகளை திருடுவது என படித்தவர்கள் பலரே செய்வது வருந்தத்தக்கது

அனைத்துக்கும் எதிரவினை உண்டு என்பதை படைப்புலகம் புரிந்து கொள்ளவேண்டும்

Wednesday, June 10, 2020

எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. ஒரு பார்வை


எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று

ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது.

இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு

"வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி"

 இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , மெலோடிலாமா வகை எழுத்தாகவோ நினைத்து விடக் கூடும்

   உண்மையில் இந்த நாவல் இதுபோன்ற குறுகிய வரையறைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டு மொத்த மானுடத்தை நோக்கி உரையாடும் நாவலாகும்

அதே நேரத்தில் கதை நடக்கும் பூமியில் தன் பாதங்களை ஆழமாக ஊன்றி இருக்கிறது நெடுங்குருதி..

தனது பூமியின் துயர்களை , வலிகளை , சந்தோஷத்தை முழுமையாக உணர்ந்து , உலக இலக்கியங்களில் தேர்ந்த ஞானம் கொண்ட ஒருவரால்தான் இப்படி ஒன்றை படைக்க முடியும்

இன்று எழுதும் பலருக்கு பெரிதாக தாம் வாழும் நிலம் குறித்த பரிச்சயம் இருக்காது. படித்ததை வைத்து எழுதுவார்கள். அந்த எழுத்து வெகு அன்னியமாக நமக்கு தோன்றும்

சிலருக்கு அனுபவம் இருக்கிறது. இலக்கியம் குறித்த புரிதல் இருக்காது. இவர்கள் எழுத்தைப் படிக்கையில் ஆவணப்படம் பாரப்பது போல இருக்கும்.



ரஷ்ய பனியை அனுபவித்தராத நாம் எப்படி தஸ்தயேவ்ஸ்கி எழுத்தில் ரஷ்ய சூழலையும் அதன் உணர்வுகளையும் உணர்கிறோமோ அதுபோல வெயிலையே அறிந்திராத ஒரு வசதியான நகரில் வாழும் மனிதனுடனும் உரையாடதக்க பொதுவான மானுட மொழிதான் நாவலின் சிறப்பு

கதை நடக்கும் காலகட்டம் குறித்தோ நில எல்லைகள் குறித்தோ பெரிதாக அக்கறைகாட்டாமல் மனிதனுள் உள்ளே பயணிக்கிறது எஸ். ராவின் எழுத்து

நாகு , அவன் பெற்றோர் , சகோதரிகள் , தாத்தா , மல்லிகா , ரத்னாவதி , ஆதிலட்சுமி, சென்னம்மா , ஜெயராணி , பவுல் , கிருபை , பாதிரி ,சமண துறவிகள் , சிங்கி , குருவன் , தெய்வானை , பக்கீர் , அவனது மனைவி , கிராம ஆசிரியர் , வசந்தா, சேது , சங்கு, திருமால் , லயோனல் , வீரம்மாள் என ஒவ்வொருவர் பாத்திரமும் அவர்கள் சார்ந்த சம்பவங்களும் அற்புதமாக அழகான சிறுகதைகளாக மிளிர்கின்றன. வெயிலும் ஒரு பிரதான பாத்திரமாக வருகிறது. வெயில் மட்டுமன்று. இருளும்கூட

500 பக்கங்களில் 100 அத்தியாயங்களில் பிரமாண்டமாக விரிந்திருக்கும் நாவல் ஒற்றை மையத்தை , ஒற்றை சரடை , ஒற்றை கருத்தை கொண்ட நாவல் அல்ல. படிக்கும் ஒவ்வொருவரும் தனக்கான கதையை உருவாக்க இடம் தரும் எழுத்து இது

உதாரணமாக , வேம்பலையின் நிழல் நகரமாக ஒரு ஊர் வருகிறது. வேம்மலையில் மறைந்தவை அங்கு வாழ்கின்றன
சென்னையில் அருண் ஹோட்டல் , ஆனந்த் தியேட்டர் போன்றவை மறைந்து விட்டாலும் இன்றும் அருண் ஹோட்டலுக்கு பஸ்சில் டிக்கெட்  கேட்டு வாங்க முடிகிறதல்லவா.  மறைந்தும் மறையாமல் வாழ்கிற ஊரை காண முடிபவர்களால் அந்த சித்திரத்தை தமக்குள் பொருத்திப் பார்க்க முடியுமக
எல்லா பாத்திரங்களும் முக்கியமனவை. அனைத்துக்கும் தனியாக கதை இருக்கிறது
   
உதாரணமாக கதையில் நாகுவின் அப்பா கேரக்டர்

பொறுப்பற்ற தன்னலமிக்க பாத்திரமாக அறிமுகம் ஆகிறது. பக்கீர் என்ற தன் நண்பனுக்கு துரோகம் செய்து அவன் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறார்.  பொறுப்பில்லாமல் தன் குடும்பத்தை பிரிந்து செல்கிறார்

ஆனால் அந்த பாத்திரம் பரிணாம வளர்ச்சி அடைந்து , அவர் மருமகள் அவர் தன் மேல் பெத்த அப்பனாக பாசம் காட்டி பார்த்துக் கொள்கிறார் என சொல்லத்தக்க அளவு உயர்கிறார்
இந்த மாற்றம் கவித்துவமாக ஒரு இடத்தில் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 ஒரு மழைக்காலத்தில் தன் மகளின் சமாதிமீது ஊரந்து செல்லும் மண்புழுவை பத்திரமாக எடுத்து வந்து தன் வீட்டின் அருகே விடுகிறார். இனிமேல் இங்கே இருந்துக்கோ தாயி என நெகிழ்வாக சொல்கிறார். அழகான தருணம்

அதேபோல ரத்னாவதி. பாலியல் தொழில் செய்யும் பெண். கலகலப்பான இனிய பெண். அவளுக்குள் காதல் ஏற்படும் மந்திர கணம்.  குழந்தை பிறப்பு. காதலித்தவனின் இறப்பை உணர்தல். குழந்தையால் வேறு ஒரு பரிணாமத்தை அடைதல்.  தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம்.  மறுமணம்.அத்தையின் பிரிவு. கணவன் இறப்பு. அதன்பின் தன் இனிய சுபாவங்களை இழந்து கசப்பையேதன்  வாழ்வாக கொள்ளுதல்.  அந்த வாழக்கையில் தொடும் உச்சம். அதில் காணும் வீழ்ச்சி . என இவளை வைத்தே தனியாக நாவல் எழுதலாம்.  அந்த சூழலிலும் கழிவிரக்கம் கொண்டு கதறாமல் வாழ்வை நெஞ்சுரத்துடன் எதிர் கொள்கிறாள். கடைசியில் மரணத்தைக்கூட ஒரு சந்தோஷமான சூழலில் மகிழ்ச்சியுடன் தழுவுகிறாள்.
மகனை ஆளாக்கி விட்டபின் , அவனைப்பற்றி சற்றும் நினைப்பதும் இல்லை. எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.

பக்கீரின் மனைவி அந்த ஊரின் வந்தேறி. அநாதரவாக வந்தவள். காலப்போக்கில் அந்த ஊரில் இரண்டறக்கலக்கிறாள். ஊருக்கு மணீக்கூண்டு அமைத்து தருகிறாள்.



   வெயில் கொளுத்தும் பூமி.  அங்குள்ள உயிர்கள் வீரியமானவை.  அங்குள்ள பாம்புகள் கடும் விஷம் கொண்டவை.அங்குள்ள தாவரங்கள் குறைந்தபட்ச தண்ணீரை வைத்து உயிர் வாழும் போராட்டத்தில் இருப்பவை. தமது வேர்கள் மூலம் எல்லாதிசைகளிலும் அலைபாயந்து உயிர் வாழ துடிப்பவை

இதுதான் இக்கதை பாத்திரங்களின் இயல்பாகவும் இருக்கிறது

 வேட்டையாடப்படும் வேம்பர்களுக்கு வேப்ப மரம் அடைக்கலம் அளிக்கிறது , கடும் உக்கிரத்துடன் அமைதியாக நின்றிருக்கும் ஊமை மரம் போன்றவை அழகிய படிமங்கள்.
இயற்கை வேம்பர்களை உருவாக்கி , காத்து , அழிக்கவும் செய்கிறது. ஆரம்பத்தில் வரும் எறும்புகள் முதல் கடைசியில் வரும் கொக்குகள் வரை இதை சொல்கின்றன

இதை வேம்பர்களுக்கு மட்டுமல்ல .  எந்த தேச மனிதனுக்கும் பொருத்தி பார்க்க முடியும்.

, நாவலில் இரண்டு இடங்களில் அணையாத நெருப்பு எனற காட்சி வருகிறது.  வெற்றிலைச் சத்திரத்தில் இருக்கும் கண்ணகி மூட்டிய நெருப்பு. மகான் ஒருவரின் சமாதியில் இருக்கும் அணையா தீபம்


இதில் வெற்றிலை சத்திர நெருப்பை , நாகுவும் காண்கிறான். அவனது மகன் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கிறான்.  ஆனால் இருவருக்கும் அது அளிக்கும் புரிதல் என்பது வெவ்வேறு

  நாகுவின் மகள் வசந்தா பார்த்திருந்தால் அவளுக்கு நாகு அடைந்த உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்ககூடும்.  வேம்பலையின் வீரிய ரத்தம் அவளுள்தான் ஓடுகிறது என்பதை நாகுவின் பறவைக்காடசி அவளுக்கும் கிடைத்தது என்பதில் உணர்கிறோம்

 அவளுக்குதான் வேம்பலையின் அழைப்பு கிடைக்கிறது.  வேம்பலை மீதான ஈர்ப்பு காரணமாகவே அவளுக்கு ஜெயக்கொடி என்ற சகமாணவி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த நட்பு மரணத்தின் விளிம்புவரை எடுத்துச் செல்கிறது.

ஆக வேம்பலையின் அழைப்பே அதன் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறது. வலி வேதனை காதல் காமம் என அனைத்திலுமே உச்சம் தொடுவதுதான் வேம்பலை

  இந்த பாதிப்புகள் எதையும் சந்திக்காத,ஒரே பாத்திரம் அன்னலட்சுமி மட்டுமே. நடக்க முடியாதவள். பகல் கனவுகளில் வாழ்பவள். பிறர் விஷயங்களை தெரிந்து கொள்வதில் மகிழ்பவள்..  கடைசி வரை பரிணாம மாற்றம் அடையாமல் நிம்மதியாக இருக்கும் பாத்திரம் என்பது தற்கால மனிதனை சுட்டுகிறதோ என தோன்றுகிறது

முகநூல் , ட்விட்டர் , அரசியல் அக்கப்போர்கள் என தங்களுக்கென்று தனி உலகம் அமைத்துக்கொண்டு , வாழ்வின் வெம்மையை சற்றும் அனுபவிக்காமல் வாழ்ந்து மறையும் ஒரு சவலை சமூகம் உருவாகி வரும் சூழலில் அன்னலட்சுமி கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது

   நாவலின் பாத்திரங்கள் மரணஙகளை வலிகளை இழப்புகளை சந்தித்தாலும்.அவர்களுக்குள் அணையா விளக்காக இருப்பது அன்புதான்

   திருமாலிடன் லயோனல் சார் சொல்கிறார். உலகில் அன்பைவிட உயர்ந்த ஒன்று உண்டு . அதற்காக காத்திருக்கிறோம்

படித்தவர்களுக்கும் , செல்வந்தர்களுக்கும் , நகரவாசிகளுக்கும் எட்டாக்கனியான அன்பு இந்த எளிய மக்களிடம் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கிறது

  தன் கணவனை அழித்த நாகு குடும்பத்தின்மீது பாசம் பொழிரும் பக்கீர்,மனைவி , அவளே ஒரு அபலை என்றாலும் நாகுவின் சகோதரி திருமணத்தை நடத்துவதில் அவள் காட்டும் உறுதி ,  மரண விளிம்பில் இருக்கும் சிங்கியை அரவணைத்து தன் அன்பால் அவனை உருவாக்கும் தெய்வானை , பிறகு கொடூரமாக மாறி விட்ட அவளை பிரிந்தாலும் அவள் இறப்புக்காக கதறும் சிங்கி கிழவன் , தன் மனைவி மக்களைக்கூட கொடூரமாக நடத்தும் கிருபைக்கு தன் தாய் மீது கசியும் பாசம் , துரோகியாக அறிமுகமாகும் நாகுவின் அப்பா செல்லையாவுக்கு தரும் வாழ்வு , அதற்கு செல்லையாக காட்டும் நன்றி என இந்த நாவலை வாதையின் நாவலாக அல்லாமல் அன்பின் நாவலாகவும் வாசிக்கலாம்.

  ஒவ்வொரு ஊராக சென்று அங்கு தூக்கம் எப்படி வருகிறது என டெஸ்ட் செய்யும் விசித்திரமான பாத்திரம். வேம்பலையில் தூங்கி பார்த்துவிட்டு , ஊரா இது? இரவு தூக்கம் வரவில்லை. இரவுதான் புத்துணர்வாக உற்சாகமாக இருக்கிறது. இது திருட்டுப்பசங்களுக்குத்தான் செட் ஆகும் என கோபமாக சொல்லி செல்கிறான். அதைக்கேட்டு ஊர்க்காரர்கள் நினைத்து நினைத்து சிரிக்கிறாரகள். காரணம், அது அவர்களுக்கே தெரிந்த உண்மைதான்

பேயுடன் ஆடுபுலி ஆட்டம் , தானிய குலுக்கைக்குள் அடக்கமாகும் சென்னம்மா , மரணமற்ற நிலை அடைவது , தீராதாகம் , ஆட்டு நாக்கு , மழை பெய்யும் கருவி என ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யம்.

   தானிய குலுக்கைக்குள் போடும்,முன் கடைசியாக வெளி உலகை பார்க்குமபொருட்டு சென்னம்மாவை வெளியே கொண்டு வந்து வெளி,உலகை காண வைக்கிறார்கள்,  வேம்பலையை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்த மல்லிகா கடைசியாக ஒரு முறை தன் தெருவை பார்த்துக்கொள்கிறாள் என இரு காட்சிகள் வருகின்றன . அதேபோல கிணற்றில் இருந்து நிரந்தரமாக வெளியேறவுள்ள ஆமை கடைசியாக ஒருமுறை தலைநீட்டி கிணற்றை பாரத்துக்கொள்வதாக ஒரு காட்சி. செம

விடைபெறும் வசந்தகாலம்
பறவைகள் கண்களில் கண்ணீர்
மீன்கள் கண்களிலும்;
என்ற ஹைக்கூநினைவு வந்தது

  ரத்னாவதி ஓர் அபலை. ஆனால் அந்த சூழலிலும் தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழி குழந்தைக்கு கோயிலில் முடி இறக்க நாகு ஏற்பாடுகள் செய்ய கோருகிறாள் மறுபேச்சின்றி நாகுவும் ஒப்புக்கொண்டு ஒரு தாய்மாமன் ஸ்தானத்தில் குழந்தைக்கு அதை செய்கிறான்.அந்த தாய் கண்கலங்கி கைகூப்புகிறாள்

இப்படி பல குறுங்கதைகளை குறுங்கவிதைகளை நாவல் முழுக்க பார்க்கிறோம்

   அன்பும்  கொடும் சூழலிலும் போராடும் வீரமும் என்றென்றும் அழியாத நெடுங்குருதியாக வாழையடிவாழையாக வேம்பலை மக்களிடம் நீடிப்பதை நாவல் காட்டுகிறது
    தேசாந்திரி பதிப்பக வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள்

    பலமுறை படிப்பது உறுதி

நான் அடிக்கோடிட்டு ரசித்த சில வரிகள்

............

கத்தியை யாரோ சாணை பிடிப்பதுபோல தெருவை வெயில் தீட்டிக் கொண்டிருந்தது

  யாரோ முனகுவதுபோல மண் புரண்டு சப்தமிட்டது. புதையுண்டு கிடந்த மூதாதையர் எலும்புகள் வெக்கை தாங்காமல் திமிறிக் கொண்டு வெடித்தன

பள்ளிக்கு வெளியே தொங்கிய தண்டவாளத்தில் மணியை எடுத்து அடித்தாள். அடங்கியிருந்த இருள் சப்தம் கேட்டு கலைந்து திரும்பியது


சுனையில் நீர் சுரப்பதுபோல வேம்பு காற்று கசிந்து கொண்டிருந்தது

இருட்டு தண்ணீரைப்போல சரசரவென ஊரந்து போய்க்கொண்டு இருந்தது

மழைக்குப்பின் ஊரின் சுபாவம் மாறி இருந்தது. பேச்சில்கூட குளிர்மையேறிருந்தது

இருள் வெளிச்சத்தை தன் விரல்களால் பிடித்து அணைத்துவிட துடிப்பதைப்போல நெருங்கிக் கொண்டிருந்தது





 









Friday, May 29, 2020

சுப்ரபாரதிமணியன் இயல்புவாத கலைஞன்


  சுப்ரபாரதி மணியன் போன்ற எழுத்தாளர்களை அணுகுவதில் ஒரு தர்மசங்கடம் உண்டு.

உதாரணமாக ஒரு தனுஷ் படமோ விஷால் படமோ பார்த்தால் நன்றாக நடித்தீர்கள் என கைகொடுத்துப் பாராட்டலாம். ஆனால் சிவாஜி கணேசன் படத்தை பார்த்துவிட்டு அவரை பாராட்டுவது என்பது சற்றே சங்கடமானது. காரணம் அவர் பார்க்காத பாராட்டா, அவர் பார்க்காத விமர்சனமா?

அதுபோல சுப்ரபாரதிமணியன் பல ஆண்டுகளாக பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி வருபவர். பல்வேறு இலக்கியமேடைகளைக் கண்டவர்.  வணிக இதழ்கள் முதல் இலக்கிய இதழ்கள்வரை இவருக்கு பலதரப்பட்ட வாசகர்கள் உண்டு
முற்போக்கு மேடைகளில் இவரை அவ்வப்போது குறிப்பிட்டு பேசுவார்கள்
ஆனால் இவரை முற்போக்கு எழுத்தாளர் என்பதைவிட , பிரச்சார தொனியற்ற ஆசிரியரின் குறுக்கீடு அவ்வளவாக இல்லாத இயல்புவாத எழுத்தாளர் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும்

இந்த புரிதலோடு கச்சிதமாக தொகுக்கப்பட்ட சிறுகதை தொகுப்புதான் காவ்யா வெளியீடாக வந்துள்ள " ஆழம்" சிறுகதை தொகுப்பு

ரேகைக்காரன் , மிச்சம் , தீர்ப்பு , கசிவு ,இடம் பிடித்தவர்கள் , வேளை , மூன்றாவது வரம் , தீட்டு , மினுக்கம் , வாசம் , கடைசிப்பார்வை , புகை , நசுக்கம் , ஆழம் ஆகிய கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இவற்றுள் ரேகைக்காரன் மற்றும் மூன்றாவது வரம் ஆகிய கதைகள் , கைதேரந்த எழுத்தாளர்கள் யார் வேண்டுமென்றாலும் எழுதிவிடக்கூடிய சுவையான கதைகள்

மற்றவை அனைத்துமே சுப்ரபாரதிமணியன் மட்டுமே எழுதக்கூடிய பிரத்யேக கதைகள். ஒவ்வொரு கதையும் ஜோடனைகளோ அலங்காரபாங்களோ ஏதுமின்றி , கதாசிரியரின் தலையீடு இன்றி நடப்பதை நடந்தவாறு , அவை நிகழும் இயல்பான வேகத்திலேயே நம் முன் நிகழ்த்திக் காட்டுகிறது

கதையை சுவாரஸ்யப்படுத்த சில சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுப்பது , நகாசு வேலைகள் செய்வது , கதாசிரியனின் பார்வையை முன்வைப்பது , விமர்சிப்பது போன்ற யதாரத்தவாத பாணி தவிர்க்கப்பட்டுள்ளது


இயல்புவாதத்தை தவிர பிறவற்றுக்கு தான் எதிரியல்ல என காட்டுவதற்காக முன்பு குறிப்பிட்ட இரு கதைகளை சேர்த்துள்ளாரோ என்னவோ?

தொழில் சார்ந்த நகரம் மனிதனை மனித உணர்வுகளை ஆன்மிகத்தை எப்படி எல்லாம் இயந்திரமயமாக்குகிறது. அதற்குள்ளும் மனிதம் எப்படி இயங்குகிறது என்பதை பல கதைகளில் பார்க்கிறோம்

 ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட ஆங்கிலப்படங்கள் சில உண்டு. அதுபோல சில கதைகள்.  கேமிராவை ஒரு இடத்தில் வைப்பதோடு கதாசிரியர் வேலை முடிந்து விடுகிறது. கதையின் போக்கில் குறுக்கிடுவதோ சுவையை கூட்டுவதற்கு அழுத்தம்கொடுப்பதோ இல்லை. தயவுதாட்சண்யம் அற்ற அந்த உண்மை நம்மை நிலைகுலைய வைக்கிறது

    புகை என்றொரு கதை. பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் பையன் தர்மராஜ். சக தொழிலாளி கெளசி அவன் அக்கா போன்றவள். ஒரு நாள் யாரோ வருகிறார்கள் என்பதற்காக இருவரும் வேலை முடிந்தபின்னும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். வந்தவன் யார் என்று பாரத்தால் முதலாளிக்கு வேண்டியவன். முன்பு"ஒரு முறை அவளிடம் தவறாக நடக்க முற்பட்டு அவளிடம் அறை வாங்கியவன்.
இப்போது அவளை தனியாக சந்திக்க நேர்ந்ததில் அவனுக்கு குரூர திருப்தி.
இவளோ முன்பு இருந்த கோபக்காரி அல்ல. இது போன்றவற்றை இயல்பாக ஏற்க வேறு வழியின்றி வேதனையுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்

இந்த சூழலில் அந்த ஆள் இவளிடம் தவறாக பேசுகிறான். அது அவளுக்குப்பிடிக்காவிட்டாலும் இவற்றை எல்லாம் எதிர்க்க முடியாது அன்பதை வாழ்க்கை அவளுக்கு கற்றுத்தந்துள்ளது
அவன் இவளை வித்தியாசமாக பழி வாங்க நினைத்து,அந்த அப்பாவி பையனான தர்மராஜை இதில் ஈடுபடுத்த முனைகிறான். அந்த கணத்தில் அவளிடம் மாற்றம் நிகழ்கிறது. இந்த வக்ரத்தில் இருந்து தர்மராஜை காப்பாற்றி அவனை தப்பித்தோட செய்து விட்டு , அவன் முன் கோபமும் எரிச்சலுமாக அசைக்க முடியாத குத்துக்கல்லாக நின்றாள் என முடிகிறது என முடிகிறது கதை.
மனதை உலுக்கிவிடுகிறது இந்த நிகழ்வு

வேலையோ காசோ இல்லாமல் சாலையில் நடை போடும் ஒரு தொழிலாளி , அந்த சிறிய கணப்பொழுதில் எப்படி குற்றவாளியாக மாறுகிறான் என்பதை துல்லியமாக பதிவு செய்யும் கதை ஒன்று அது சொல்லப்படும் விதத்தால் மனதில் தைக்கிறது

நான் லீனியர் பாணி என்பதை ஒரு யுக்தியாக  பயன்படுத்தக்கூடாது. அதற்கு தேவை இருக்க வேண்டும். பிரதி,அதை கோர வேண்டும்
ஆழம் என்ற கதை உண்மையிலேயே அடியற்ற ஆழத்துக்கு நம்மை பயணிக்க வைக்கிறது

மோகன் ,கீர்த்தி , சிந்தாமணி , கீதா ,கந்தசாமி ஆகிய பாத்திரங்களின் மேலடுக்குகள் ஆழங்கள் என பயணித்திருப்பது இந்த தொகுப்பிலேயே வித்தியாசமான கதை.தலைப்புக்கதையாக இதை தேர்ந்தது சிறப்பு. மினுக்கம் கதையும் வித்தியாசமானதுதான்

தொழிற்சாலை , வெயில் , வெப்பம் , வறட்சி , வறுமை என்ற தளத்தில் நின்று வாசிப்பின்பத்தை தருவதற்கு உண்மையிலேயே மேதைமை தேவை

மதுக்கடையில் கிடைக்கும் உயர்ரக வாசம் , சாவதற்கு உதவாமல் போய்விட்டோம்போலயே என்ற குழப்பம் , சாமிக்கு பலி கொடுப்பதில் தந்திரம் என வாழ்வின் நகைமுரண்களைப் படிக்கும்போது அன்றாடம் பல விஷயஙககளை தவற விடுகிறோம்போலயே என தோன்றுகிறது.
  நடைத்துணைக்காக வாங்கும் கைத்தடியால் வாழ்க்கையே இருளில் சிக்குவதும் , பாதிக்கப்பட்டவரின் இடத்தை கைத்தடி பிடிப்பதும் அழகான படிமம் ( இடம் பிடித்தவர்கள்)

இவ்வளவு வறுமையிலும் நோய்மையிலும் அன்பு துளிர்விடும் கதையான வேளை சிறுகதை வெகு வெகு யதார்த்தம்

உண்மையை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இவரது எழுத்துகள் தனித்துவம் வாய்ந்தவை என்பதை இநகத சிறுகதை தொகுப்பும் உணர்த்துகிறது





















Saturday, May 2, 2020

இமையமும் மனுஷ்யபுத்திரனும். நேர்மையற்ற ஒப்பீடு


  படைப்பாளி என்பவன் பொதுவான பார்வையை முன் வைப்பவன். பூனையின் பசியையும் , பூனைக்கு இரையான எலியின் வலியையும் விருப்பு விருப்பின்றி பதிவு செய்பவன்.

அவன் ஒரு போதும் அரசியல் செயல்பாட்டானாக இருக்க முடியாது.

உதாரணமாக மணிரத்தினத்தை ஒரு ஆவேசமான மேடைப்பேச்சாளராகவோ டிவி விவாத பங்கேற்பாயராகவோ நினைத்துப் பார்க்க முடிகிறதா. முடியாது. அவர் ஒரு நேர்மையான படைப்பாளி.

அதற்காக அரசியலே தவறு என்பது இல்லை.  சுதந்திர போராட்டம் , இந்தி எதிர்ப்பு போராட்டம் என பலவற்றில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை நல்கியுள்ளனர். அவை போற்றத்தக்கவை.  ஆனால் அவை பிரச்சார எழுத்து.  இலக்கியம் கிடையாது.

வியாபாரத்துக்காவோ , பத்திரிக்கை வாயப்புகளுக்காகவோ அரசியல் சார்பு எடுப்பது இன்னொரு விதம்

அரசியல் ஈடுபாடு , படைப்பாற்றலை பாதீக்காது என கலைஞர் டிவி புகழ் மனுஷ்ய புத்திரன் கூறியிருக்கிறார். அது அவர் கருத்து. நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

ஆனால் சம்பந்தமின்றி எழுத்தாளர் இமையமும் அரசியல் ஈடுபாடு கொண்டவர் , கட்சி வேட்டி கட்டுகிறார் , அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அதற்காக அவர் படைப்பாளி இல்லை என்றாகி விடுமா என கேட்கிறார் அவர்

இது மிக மிக தவறான ஒப்பீடு. இமையத்தின் படைப்பு சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் , அவர் நடுநிலை தவறாதவர்

பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பெத்தவன் நாவலில் காதலின் அழகையும் சொல்லியிருப்பார் , காதலிக்கும் பெண்ணின் குடும்பம் ஆதிக்க சாதி என்றாலும் அந்த குடும்பத்தின் பார்வையையும் சொல்லி இருப்பார்

அந்த கதை அவர் கட்சிக்கும் பிடிக்கவில்லை.  சாதி வெறியர்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் இலக்கிய வாசகர்கள் அதை கொண்டாடினர்

அவர் இப்படி நடு நிலையாக இருக்க முடிகிறதென்றால் அவர் கட்சியில் இருப்பது டிவி வாய்ப்புகளுக்காகவோ , இந்த சார்புநிலை எடுத்தால் ஊடக வாய்ப்புகள் வரும் என்பதற்காகவோ அல்ல

அவர் உழைத்து சாப்பிடுகிறார். ஆசிரியர் தொழிலை தவமாக நினைப்பவர். ஊரில் அவர் அடையாளம் ஆசிரியர் என்பதுதான்

அவர் அரசியல்வாதியோ , வியாபாரியோ அல்லர்.

அவரைப்போய் மனுஷ்யபுத்திரன் தன்னுடன் ஒப்பிடுவது வேதனை அளிக்கிறது





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா