Monday, February 11, 2019

பெரிய மனிதர்கள் ...சிறிய செயல்கள்-- ரஜினி , கலைஞர் , பாலகுமாரன், வைரமுத்து


எழுத்துச் சித்தர் பால குமாரனின் ரசிகன் என்றாலும் அவரை அது வரை பார்த்ததில்லை ( பிற்காலத்தில் பார்த்தது , பேசியது எல்லாம் வேறு.. நான் சொல்வது ஆரம்ப காலம் )

ஒரு வழியாக அவரிடம் பேசி , நான் வருவதை சொல்லி அனுமதி வாங்கி அவர் இல்லம் சென்றேன்..

அப்போது முரசொலி அலுவலகத்தில் ஏதோ விழா என்பதால் சாலை நெருக்கடி.. அவர் இல்லம் செல்ல தாமதமாகி விட்டது

10 மணிக்கு செல்ல வேண்டியவன் 10.30க்கு சென்றேன்...

வா என அன்பாக அழைத்தவர்   , உனக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்..

10 மணிக்கு நான் வருவதாக சொன்னதை மறந்திருப்பார் என நினைத்தேன்.. துல்லியமாக நேரத்தை நினைவு வைத்து தயாராக இருந்தது ஆச்சர்ய்மளிதது.. அந்த கால பிரஞ்ஞை வெகு முக்கியம் என புரிந்தது

அதன் பின் பல விஷ்யங்கள் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.. கடைசியாக விடை பெறும் முன் , ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் என அனுமதி கேட்டேன்

என்னிடம் இருந்தது பழைய கால நோக்கியா மொபைல் கேமிரா ( அப்போது ஆண்ட்ராய்ட் , ஸ்மார்ட் போன் யுகம் ஆரம்பிக்கவில்லை )

சாதாரண கேமிரா , புதிதாக சந்திக்கும் புதுமுகம் என்றாலும் அதற்கு முக்கியத்துவம் அளித்து போஸ் கொடுக்க ஆயத்தமானார்.

எடுக்கும்போது அதிர்ச்சி...சார்ஜ் இல்லை... அட ஆண்டவா என நினைத்துக்கொண்டேன்..  அதை எல்லாம் சொன்னால் தர்ம சங்கடம் என நினைத்தபடி , போட்டோ எடுப்பது போல , ஆக்ஷன் கொடுத்து விட்டு , ஓகே சார்.. நன்றி என சொல்லி விட்டு புறப்பட ஆயத்தமானேன்

என் குரலில் சுரத்து இல்லாததை குறிப்பால் உணர்ந்த அவர் , எங்கே போட்டோவை காட்டு என்றார்

இதை எதிர்பார்க்கவில்லை... ஹி ஹி...சார்ஜ் இல்லை என்றேன்

அப்படி என்றால் சொல்லி இருக்க வேண்டுமல்லவா.. தயார் நிலையில் இருக்காதது உன் தப்பு , தப்பு செய்து விட்டால் மறைத்து என்ன ஆகப்போகிறது.. ஒப்புக்கொண்டு விளைவுகளைஅ சந்திப்பதுதான் அழகு... நான் திட்டினாலும் வாங்கி இருக்க வேண்டும்.. அதில் இழிவு ஏதும் இல்லை.. சரி... சார்ஜ் போட்டுக்கொள் என அதற்கு வசதி செய்து தந்தார்

அதன் பின் போட்டோ எடுத்தேன்... அதையும் செக் செய்தார்... இல்லை.. சரியாக வரவில்லை என சொல்லி விட்டு வேறு இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார்..அழகாக வந்தது

அவர் புகைப்படம் வராத இதழ்கள் இல்லை... அவர் பார்க்காத புகழ் இல்லை..
அவ்வளவு பெரிய ஆளுமை , ஒரு சாதாரண புகைப்படத்துக்கு அவ்வளவு சிரத்தை எடுத்தது , தன் மீது அன்பு கொண்டு தேடி வந்தவனுக்கு கொடுக்கும் மரியாதை ... இது போன்ற சிறிய செயல்கள்தான் ஒருவரை பெரிய மனிதன் என்பதை அடையாளம் காட்டுகின்றன

----


வைரமுத்து நிகழ்த்தும் தமிழாற்றுப்படை நிகழ்ச்சிக்கு பெரும்பாலும் சென்று விடுவேன்..

ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார்.. அரங்கு நிறைந்த கூட்டம்.. முன் வரிசை பிரமுகர்களுக்கு வணக்கம் சொல்லு கை குலுக்கினார்.. அத்துடன் நிறுத்தவில்லை.. கடைசி வரிசை வரை நடந்து வந்து அனைவரிடமும் கை குலுக்கி நலம் விசாரித்து விட்டு அதன் பின் மேடை ஏறினார்.. அந்த சிறிய செயல் பலரை கவர்ந்தது

ஆரம்பிக்கும்போது , இப்போது நேரம் 6.30/. சரியாக 7.30க்கு என் உரை நிறைவடையும் என சொல்லி விட்டு பேச ஆரம்பித்தார்... அந்த கால பிரஞ்ஞை மக்கள் மனதை வென்றது


----------------


அது முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி.. கலைஞர் அப்போது முதல்வர்.. நிகழ்ச்சியை இன்னொரு மேடையில் இருந்து நேர் முக வர்ணனை செய்து கொண்டிருண்டனர்.. திடீரென அதில் பிரச்சனை..வர்னணை தடைப்பட்டது.. நிலையை உணர்ந்த ஸ்டாலின் அவர்களை தம் மேடைக்கு வருமாறு அழைத்தனர்.. ஓட்டமும் நடையுமாக அந்த குழு மேடை ஏறியது.. அந்த அவசரத்தில் வர்ணனையாளர் சுதா சேஷையனின் அலைபேசி எங்கோ கீழே விழுந்து விட்டது.. அலைபேசி என்றால் அதன் விலை மதிப்பு மட்டும் அல்ல.. அதில் இருக்கும் தொடர்பு எண்கள் இழப்பும் பெரிய துன்பம் அளிப்பது.. ஆனாலும் என்ன செய்ய ..  நிகழ்ச்சி முடிந்ததும் வருத்தமாக கிளம்பிய சுதா சேஷையனை , முதல்வர் கலைஞர் குரல் நிறுத்தியது
” அம்மா.. இதோ உங்க அலைபேசி... அவசரத்தில் கீழே விழுந்துருச்சு.. நீங்க கவனிக்கல./” என்று சொல்லி போனை ஒப்படைத்தார் முதல்வர்

அவ்வளவு பெரிய தலைவர் , முதல்வர் இப்படி சிறிய செயல் ஒன்றில் ஈடுபாடு காட்டியதன்மூலம் பெரிய மனித தன்மையை காட்டினார்


-------


பாலகுமாரனின் பெரிய மனித தன்மையை பார்த்தோம்.. அவர் வியந்த பெரிய மனித தன்மை ஒன்று

பாட்ஷா பட விவாதம் ரஜினி வீட்டில் நடந்தது... ரஜினி , பாலகுமாரன் , சுரேஷ் கிருஷ்ணா மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்

ரஜினி ஒரு நிமிடம் எங்கோ போன நேரத்தில் அவரது பிரத்யேக இருக்கையில் ஏதோ நினைவாக அமர்ந்து விட்டார் பாலகுமாரன்.

மீண்டும் ரஜினி வந்தபோது அதை உணர்ந்து  எழ முயன்ற அவரை அதிலேயே அமரச்செய்து விட்டு , சாதாரண இருக்கையில் அமர்ந்தார் ரஜினி.. அது மட்டும் அல்ல.. மூவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பேச வந்தபோதுகூட , அந்த பிரத்யேக இருக்கை பாலகுமாரனுக்கே கொடுக்கப்பட்டது.. கடைசி வரை அது அவருக்கானதாக இருந்தது என்பதை “ சூரியனுடன் சில நாட்கள் “ நூலில் பதிவு செய்துள்ளார் அவர்

----

சின்ன சின்ன விஷ்யங்களில் செலுத்தும் கவனம் , பிறர்மீதான அக்கறை , பிறர் மீதான மரியாதை போன்றவை நம்மை உயர்த்தும்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா