Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Monday, December 29, 2025

மண்ணில் கால் பதித்து நடக்கும் நாவல்

சார் பேப்பர்– பேசப்படாதவர்களை பேசும் நாவல் - பிச்சைக்காரன் 

( வையம் டிசம்பர் 2025 வார இதழில் வெளியானது) 



         இந்திய இலக்கியத்தில் இந்தியாவின் உண்மையான முகம் வெளிப்படுகிறதா? இந்திய இலக்கியம் என இங்கே பொதுவாக முன்வைக்கப்படுவது எளிமையான அன்றாட அரசியலை முன்வைக்கும் எழுத்துக்கள். சாதாரணமான சமூகஉண்மைகளை சாதாரணமாகச் சொல்லும் இதழியல் எழுத்துக்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதைப் படித்தேன். 

  அவரது உணர்வு சரியானதுதான். பார்ப்பதை அப்படியே பதிவு செய்வது நல்ல எழுத்தாகாது. ஆனால் இன்றைய எழுத்தின் பிரச்சனை அது அல்ல.


        இன்று பலருக்கு நேரடி அனுபவம் என பெரிதாக எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை உள்வாங்கும் திறன் இல்லை. உலகுக்கும் அவர்களுக்கும் தொடர்பாக இருப்பவை சமூக ஊடகங்களும் அதில் பேசப்படும் அரசியலும்தான். 

              அதைப்படித்து விடுத்துவிட்டு ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து முகநூலில் பேசப்படும் அரசியல் கலந்து ஒரு கதையை எழுத, அதை முகநூலில் இருப்பவர்கள் பாராட்ட, அது நூல் வடிவமும் பெற்று விட தம்மை எழுத்தாளர்களாக கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். உண்மையான வாழ்க்கை பதிவாவதில்லை.

             அதனால்தான் நம் அன்றாட வாழ்வில் சில நிமிடங்கள் வந்து போகும் கொரியர் சேவையினர், கேஸ் போடுபவர்கள், நியூஸ் பேப்பர் போடுபவர்கள் போன்றோரை நம் வேலை முடிந்ததும் அப்போது மறந்து விடுகிறோம். அவர்கள் பற்றி பெரிதாக எங்கும் பதிவாவதில்லை. 


                     இந்த சூழலில் அறிவுமணி அவர்களின் சார் பேப்பர் நாவல் சென்ற புத்தகக் கண்காட்சியின்போது வெகுவாக கவனம் ஈர்த்தது. காரணம் பேப்பர் போடுபவர்கள் நம் வாழ்வில் கலந்தவர்கள். கொரானா கால கட்டத்தில் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டபோதுகூட நாளிதழ்கள் வந்து கொண்டு இருந்தன.மக்களை அடைந்து கொண்டு இருந்தன. ஊரடங்கு, மழை, வெயில் என சிக்கலான கால கட்டங்களிலும் செய்தித்தாள்கள் விநியோகம் தடைப்படுவதில்லை. இப்படி நம்மை பேப்பர் தவறாமல் வந்து அடைகிறது என்றால் அதற்குப்பின் பலரது உழைப்பும் தியாகமும் இருக்கிறது. தூக்கம் கெட்டு வெயிலிலும் மழையிலும் அலைவதால் ஏற்படும் உடல்நலப்பிரச்சனைகள், நாய்ப்பிரச்சனைகள், சாலை விபத்துகள், பிரச்சனை செய்யும் வாடிக்கையாளர்களை சமாளித்தல் என அனைத்தையும் ஒரு ஷாக் அப்சார்பர்கள் போல தாங்கிக்கொண்டு நமக்கு அன்றாடம் ஞானத்துளியை அளிக்கும் தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்யும் நாவல் என்ற முறையில் இந்த நாவல் நல்லதொரு கவனம் பெற்றது. 


                  நாவலின் நாயகன் செய்தித்தாள் என குரல் கொடுக்கும் அளவுக்கு தமிழ்ப்பற்று மிக்கவன். தாங்கள்தான் செய்தித்தாள் விநியோகிப்பாளரா ? என கேலிக்கு உள்ளாபவன். நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் பெரிய அளவில் ஜொலிப்பான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாதாரண ஊதியத்தில் பேப்பர் போடும் தொழிலில் இருப்பவன், இந்தத் தொழில் என்றல்ல பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு ஒவ்வொன்றையுமே ஊக்கத்துடனும் தனித்துவத்துடனும் செய்து தோன்றில் புகழுடன் தோன்றுக என்பது போல திகழ்பவன், குடும்பம் உள்ளிட்ட அனைத்து அதிகார மையங்களையும் எதிர்ப்பவன், யாருக்கும் தலை வணங்காதவன், இடதுசாரி தோழர் ஒருவருடன் நெருக்கமாய் இருந்து தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக உணர்பவன் என அழுத்தமான நாயகன். செயற்கையாக ஊதிப்பெருக்கப்படாத நிஜமான நாயகன் குடும்பம் உள்ளிட்ட எந்த அதிகார அமைப்பு முன்பும் தலை வணங்காதவன்.                            சில ஆண்டுகள் முன்னர் every road is paved with gold என்ற நூல் படித்தேன். தேவூ கார் நிறுவன நிறுவனர் வூ-சூங் கிம் சுயவரலாற்று நூல். பேப்பர் போடும் வேலையில்தான் தனது தொழில் வாழ்வைத்தொடங்கினார். அவ்வேலையுமேகூட தனது அண்ணனுக்குப் பதிலாக செய்ய நேர்ந்த வேலைதான். வாடிக்கையாளருக்கு செய்யவேண்டிய துரித சேவை, புன்னகையுடன் சேவை செய்தல், போட்டியாளர்களை மிஞ்சிக்காட்டுதல் என பலவற்றை அங்குக் கற்றுக்கொண்டது பிறகு சர்வதேச அளவில் தொழில் செய்ய உதவியதாக சொல்கிறார். 


        Rain: What a Paper boy Learned About Business' என்ற புகழ்பெற்ற நூலும் நினைவுக்கு வருகிறது வெளிநாடுகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேப்பர் போடுவதை பகுதிநேரமாகச் செய்வதும் பயோ டேட்டாவில் அதைக் குறிப்பிட்டால் அதற்கென சிறப்பு கவனம் கிடைப்பதும் வழக்கமான ஒன்றுதான். 


         ஆனால் நம்மூரைப் பொருத்தவரை வேலை செய்கின்றவனுக்கு வேலையைக் கொடு வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு என்ற மனப்பான்மை நிலவுவதால் இதில் கடுமையாகவும் திறமையாகவும் உழைக்கும் நாயகனுக்கு வீட்டு விசேஷங்களுக்குக்க்கூட போக முடியாத அளவு வேலை அவனை முழுமையாக உறிஞ்சி எடுப்பதை நாவல் அழகாக பதிவு செய்கிறது விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசும்கதைகளில் வழக்கமாக காணப்படும் கொடூரமான ஆதிக்க சக்தி என்ற பிரதான எதிர்மறைப் பாத்திரம் இதில் இல்லை, முழுக்க முழுக்க கண்ணீரில் மிதக்கும் சுரண்டலுக்கு உள்ளாகும் நாயகன் என்ற சித்தரிப்பும் இல்லை ஜாதிய ஆதிக்க சக்திகள் வருகின்றனதான்.. ஆனால் அவை இடதுசாரி தோழர் ஒருவர் துணையுடன் முறியடிக்கப்படுகின்றன. வர்க்க ரீதியான சுரண்டல்கள், சிறுமை கொண்ட பாத்திரங்கள் என பல பாத்திரங்கள் எதிர்மறை அம்சத்துடன் வந்தாலும் பிரதான எதிர்மறைப் பாத்திரம் இல்லை. 


                    ஆனாலும் நாயகனின் தம்பி பாத்திரம் சுவையாகவும் நாயகனுக்கு எதிர்நிலையிலும் சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது தம்பியும் தன் மானம் மிக்கவன்.. அதிகாரத்துக்கு எதிரானவன். ஆனால் அண்ணன் அளவுக்கு திறமைசாலியோ உழைப்பாளியோ அல்லன்,, ஆனால் தன் வலியறிந்த புத்திசாலி என்ற பாத்திர வார்ப்பு சிறப்பு இருவரும் சேர்ந்துதான் பேப்பர் போடுகிறார்கள் 


              தினமலர், தந்தி, மணி, கரன், தீக்கதிர், ஹிண்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் என ஒவ்வொரு பத்திரிக்கைக்குமான வாசகப் பரப்பு, நிர்வாக ரீதியான ஒவ்வொன்றின் செயல்பாடு எனப்படிக்கும்போது நாம் படித்து வளர்ந்த பேப்பர்கள் பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்ற ஆச்சர்யம் ஏற்படுகிறது. கேபி கந்தசாமி அவர்களால்நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வந்த தினகரன் இதழ் தனித்துவமான ஒன்றாகும். 


             அதன் தலையங்கள் பலராலும் ஆழ்ந்து கவனிக்கப்பட்டவை. ஒரு கட்டத்தில் அதை முழுமையாக சன் குழுமம் வாங்கி அதன் உள்ளடக்கம், தாளின் தரம், வாக்கிய அமைப்புகள் போன்ற அனைத்தையுமே இன்னொரு பிரபல இதழ் போல மாற்றி விட்டது. அதில் வேலை செய்த பலர் பணியிழந்து புதியவர்கள் அமர்த்தப்பட்டனர் என்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அதன் விலை வெறும் ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ரூபாய் கான்செப்ட் என்பது பெங்களூரு போன்ற நகரங்களில் ஆங்கில இதழ்கள் கடைப்பிடித்த ஒரு யுக்திதான் என்றாலும் சன் டிவியின் இடையறாத விளம்பரத்தால் ஒரு ரூபாய் தினகரன் என்பது அப்போது டிரெண்ட்டிங்கில் இருந்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் ( நேர் மறை .எதிர்மறை என இரண்டும்) ஒரு கட்டத்தில் ஒரு ரூபாய் கான்செப்ட் நிறுத்தப்பட்டபோது என்னவானது போன்றவற்றை ஆவணப்படுத்திய ஒரே நாவலாக இது இருக்கக்கூடும். 




         எப்படி பிரதான எதிர்மறைப் பாத்திரம் இல்லையோ அதேபோல பிரதான நாயகியும் இல்லை. மெல்லுணர்வு மிக்கவர், அழகானவர், முரட்டுத்தனமானவர், வாழ்க்கையின் வெம்மையால் பொசுங்குபவர் இப்படி பலதரப்பட்ட பெண்களை பார்ப்பது சுவாரஸ்யம். சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார். இவர் தந்தை மகன் என்ற இரு புஷ்களிடமும் துணை அதிபராக இருந்த தனித்துவ பெருமைக்கு சொந்தக்காரர். அதிபர்களைவிடவும் சக்தி வாய்ந்தவராக இருந்தவர். அவர் இறந்தபோது அவர் சாதனைகள் பேசப்படவில்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்து ஈராக் மீது போர் தொடுத்து சதாம் ஹுசேன் உள்ளிட்ட ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகி அந்தப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை குலைத்த அராஜகம்தான் பேசப்பட்டது 


         அதுபோல ஒரு காட்சி.. பள்ளி தேர்வு முடிவுகள் வருகின்றன. பேப்பர் வாங்க பலர் அலைமோதுகிறார்கள் பேப்பர் கேட்பவர்கள் இரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.. கடையில் ஒரு மாவட்டத்துக்கான பேப்பர்தான் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தேவையில்லாத பதிப்பை வாங்கி ஏமாந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எந்த ஸ்கூல் என கேட்க முயல்கிறான்.. கடைக்காரர் டென்ஷனாகி அவனை நகரச்சொல்லி விட்டு தேவையோ இல்லையோ அனைவருக்கும் விற்றுவிட்டு காசை வாங்கிப் போட்டுக்கொள்கிறார். 


     அவர் ஒரு நாள் காலமாகிவிடும்போது இந்த நினைவு அவனுக்கு வருகிறது. இது போன்ற சித்தரிப்புகள் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை என்பதைத்தாண்டி ஒட்டு மொத்த மானுடத்தைப் பேசுகின்றன.

         சகோதரிகள் மீது அன்பு,நூலக ஆர்வம், பள்ளியில் திறமையைக்க்காட்டுதல் என இருந்தாலும் அவனது போதாமைகளும் குறிப்பிடப்படுவது சிறப்பு. கட்டட வேலை விவசாய வேலை என எதைச் செய்தாலும் “ வேலை தீப்பிடிக்கணும் தீ மாதிரி வேலை செய்யணும்” என்ற அவன் உத்வேகம் அவனை ஒரு நாயகனாக்குகிறது. படிப்பு, உழைப்பு, திறமை எல்லாம் நிறைந்த அவன் வேலையை இழப்பதுடன் நாவல் முடிந்தாலும் அது கொடுக்கும் தாக்கம் நீடிக்கிறது. 


கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல். 



  இந்த நாவல் குறித்து வையம் இதழுக்காக நாவலாசிரியர் அறிவுமணியுடன் நிகழ்த்திய உரையாடலின் ஒரு தொகுப்பு



1. நசிந்த இருவரின் வாழ்வு பற்றிப் பேசும் நாவல் என புத்தக அறிமுகம் சொல்கிறது. ஆனால் யாருக்கும் தலைவணங்காத தன்மை, படிப்பு ஈடுபாடு, காதலுணர்வு, தொழில்நேர்த்தி, சுறுசுறுப்பு என வெற்றியாளனாக ஒரு நாயனாகத்தான் இதன் நாயகன் நம் மனத்தில் பதிகிறான்.. நாவலின் இறுதியுலுமே கூட இவ்வளவு திறமைசாலி வருமானம் குறைவான இதில் இருப்பதை விட இதை விட்டு வெளியேறியது நல்லதுதான் என்ற எண்ணமே எழுகிறது. வேலை போயிற்றே இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வான் என்ற எண்ணம் வருவதில்லை… அவன் பாத்திரவார்ப்பு அப்படி.. எனவே நசிந்தவன் என்பது சற்றே பொருத்தமற்ற அறிமுகமாய் தோன்றுகிறது… உங்கள் பார்வை? 


உண்மைதான் அத்தொழில் சார்ந்து இயங்கும் நிலையில் படிப்படியான வளர்ச்சி என்பது இல்லாமல் படிப்படியான வீழ்ச்சியாக இருப்பதே நசிவுக்கு அடிப்படையாக நாவல் கூறுகிறது. இறுதியில் அந்த வேலையைச் செய்ய முடியாதவனாக, வெளியேற்றப்படுவபவனாக இருப்பதும் ஒரு வகையில் மனதளவில் பாதிக்கும் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. 


 2. சம்பளம் என்பது தாண்டி வேலையில் ஆர்வமும் திறனும் உள்ள ஒருவனை நிர்வாகம் சரியாக மதிப்பதில்லை … அவன் மதிப்பை உணர்வதும் இல்லை என்ற பிரச்சனை எல்லா துறைகளிலுமே உள்ளது.. எனவே பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்குக்கூட இந்த நூல் பேசும் பிரச்சனை புரியும் என கருதுகிறேன், இதையும் நாவல் எழுதும்போது கவனத்தில் கொண்டீர்களா? 


இது பொதுவான விமர்சனம்தான். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் ஏமாற்றப்படுவது பெரும்பாலும் தெரிவதில்லை. காலப் போக்கில் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதனால்தான் பிடிமானம் செய்த பணத்தை திருப்பூர் சென்று வாங்கி வருவது போலான காட்சிகள் வைக்கப்பட்டன. 

 3. இக்கதை நிகழும் கால கட்டத்தை உணர்த்துவதுபோல திரைப்படம் சார்ந்த குறிப்புகள் இயல்பாக இடம் பெற்றுள்ளன.. ஆனால் அப்போதைய அரசியல் நிகழ்வுகள் வெகு குறைவுதான்… அரசியலை வேண்டுமென்றே தவிர்த்துள்ளீர்களா 


அரசியல் சார்ந்த பதிவுகள் கதையோட்டத்தில் நேரடியாக இல்லாமல் பதிவு பெறுவதைத்தான் விரும்பினேன். உதாரணமாக நான்கு வழிச் சாலைக்காக மலைகள் அழிக்கப்படுவது குறித்த பதிவு போகிற போக்கில் சொல்லப்படுவது. மேலும் பெருவாரியான மக்களிடம் கம்யூனிச ஒவ்வாமை இருப்பது பற்றி கனி என்கிற பாத்திரத்தின் மூலம் கூறப்படுகிறது. 


 4. பேப்பருக்காக காத்திருந்து படித்தல், பேப்பருக்காகவே டீ விற்பனை அதிகரிப்பு போன்ற சூழல்கள் இன்றும் உள்ளனவா.. 


பேப்பர் படிப்பது இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. ஆனால் முந்தைய காலத்தின் தன்மை இன்றைக்கு இல்லை. செய்திகள் நொடிக்கு நொடி மக்களிடம் சென்று சேர்வதற்கான தொழில்நுட்பம் அதற்குக் காரணமாகலாம்.


 5. வாசிப்புப் பழக்கம் குறைகிறது என்பது பலரது கவலை... இன்று எழுதும் வாசிக்கும் பலருக்கு நல்லதொரு துவக்கமாய் அமைந்தவை நாளிதழ்கள்தான்.. பெரியவர்கள் நாளிதழ் படிப்பதைப் பார்த்து தாமும் படிக்க ஆரம்பித்து அப்படியே நூல்கள் வாசிப்புக்கு வந்தவர்கள் பலருண்டு.. அப்படிப்பார்த்தால் பேப்பர் போடுபவர்கள் வாசிப்பு எனும் இயக்கத்துக்கு முக்கியப்பங்கு ஆற்றியுள்ளனர்.. வேலை தேடுவோர்க்கு அவர்கள் கடவுளின் தூதர்கள் போன்றவர்கள்.. ஆனாலும் அவர்களைப் பற்றி யாரும் பதிவு செய்யவில்லை என்பது ஆச்சர்யம்தான்.. இந்த கருப்பொருளில் எழுதும் யோசனை எப்படி வந்தது? 

எத்தனையோ உதிரித் தொழிலாளர்களை தினந்தோறும் சந்திக்கிறோம். ஆனால் அவர்களைப் பற்றிய சிந்தனை ஓரிரு கணங்களில் நின்று மறைந்து போகின்றன. அத்தகையவர்கள் பற்றிய பதிவுகளின் இன்றியமையாமையை உணர்ந்தே இந்த நாவலை எழுதினேன்.


 6. இந்நாவலில் இடதுசாரித் தோழர் ஒருவர் முக்கியப் பாத்திரத்தில் வருகிறார்.. இந்த நாவலில் வர்க்க பிரச்சனை பதிவான அளவுக்கு ஜாதிய பிரச்சனை பதிவாகவில்லை..( ஒரு இடத்தில் ஜாதி அடக்குமுறை பதிவாகியுள்ளது) வர்க்க பிரச்சனை சரியானால் மற்றவை சரியாகி விடும் என்பதே இடதுசாரி பார்வை எடுத்துக்கொள்ளலாமா? 

வர்க்கம், சாதிப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட உதிரித் தொழில் பற்றிய சிக்கல்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால் இத்தொழிலாளர்கள் சார்ந்த சமூகத்தில் அதன் இயக்கப் போக்கில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் பதிவு கெய்யப்படுவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.




 7. தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன். தமிழ் இந்து தீக்கதிர் இதழ்கள் பற்றி உங்கள் பார்வை ஓரிரு வரிகளில் இந்த நாளிதழ்கள் குறிப்பிட்ட வர்க்கத்தவர்களுக்கானவை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வெகுசன வாசிப்பில் இன்றைக்கும் முதலில் நிற்பது தினதந்திதான். டீக்கடைகளில் அதைத்தான் பெரும்பாலும் காண முடியும். மற்ற நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூகத்தவர்களால் வாங்கப்படும். வெகுசன வாசிப்பை அதிகரித்தத்தில் தினகரன் ஒரு பங்கு வகித்தது உண்மைதான். ஆனால் அது கட்சி சார்ந்து இயங்கும் என்பதால் அதை வெறுப்பவர்களும் இருந்தனர். அது போலவே தினமலரும். தினமணி படிப்பவர்கள் மிக சொற்பமானவர்கள் படித்த மேட்டிமையாளர்களாக அவர்கள் இருப்பார்கள். அது போல ஆங்கில தினசரிகளைப் படிப்பவர்களும் எலைட் மனிதர்களாக இருப்பார்கள். தீக்கதிர் கட்சிப் பத்திரிகைதான். அதை வாங்குபவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மட்டும்தான் அதை படிப்பதும் குறைவு.

 





Friday, March 28, 2025

அறியப்படா ராமாயணம்.-நாடக உரையாடல்




 மூத்த நடிகர் அசுஸ்தோஷ் ராணா, ராம் ராஜ்ஜியத்தின் ஆசிரியரும் ஆவார், ஹமாரே ராம் நாடகம் அவரது விருது பெற்ற இலக்கியப் படைப்பின் இயல்பான விரிவாக்கமாகும். எனவே, நாடகத்தை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது, ​​புகழ்பெற்ற இலங்கை அரசரான ராவணனை சித்தரிக்க அவர் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. இந்த பாத்திரம், ராமரைப் பற்றிய ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியதாக சொல்கிறார் அவர்/

ராவணனாக நடித்த அனுபவத்தை சொல்லுங்கள்...

 

 

இது எனது விருப்பப் பட்டியலில் இருந்தது. இந்த கண்டுபிடிப்பு -   ராவணனாக இருந்தாலும் நீங்கள்  ராமனும் கூட - மாற்றத்துகான பயணமாகும். இதை ராவண்ன் மூலம் உண்மையிலேயே உணர முடியும். அவர் ஜோதிடர் மற்றும் ஆயுர்வேத நிபுணர் மட்டுமல்லர், சஸ்திரம் (ஆயுதம்) மற்றும் சாஸ்திரம் (புராணம்) இரண்டிலும் தேர்ச்சி பெற்று,    சிவபெருமானின் பக்தியுள்ள சீடராக இருந்தார், மேலும் அவர் விரும்பிய எதையும் அடையும் திறனைக் கொண்டிருந்தார். ராமரும் ராவணனும் எதிரிகளாக இருந்தாலும், அவர்களின் கதாபாத்திரங்களின் கருணையும் வலிமையும் அவர்களுக்கிடையேயான இயக்கவியலை சுவாரஸ்யப்படுத்துகின்றன


 

 ஒரே ஆண்டில் 200 காட்சிகள் நடத்தியிருக்கிறீர்கள்

இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்ன? 


மிகப்பெரிய காரணம், ராமாயணத்திலிருந்து அதிகம் அறியப்படாத கதைகளை நாங்கள் இணைத்திருப்பதுதான். வால்மீகி, துளசிதாசர், கம்பன் மற்றும் பலரால் இக்காவியத்தைப் பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தாலும், எங்கள் நாடகம் சொல்லப்படாத, ஆராயப்படாத   கதைகளில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, ராமர் இராவணனை ராமேஸ்வரத்தில் ஒரு பூஜை செய்ய அழைக்கும் கதை. இந்த பூஜைக்குப் பின்னால் இருந்த காரணம் ராமரின் இலங்கையைக் கைப்பற்றும் விருப்பம் என்றாலும், ராமரின் விருப்பத்தை நிறைவேற்ற ராவணன் அதில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார். அதேபோல், பெரும்பாலான மக்கள் சூர்ப்பனகையின் கதையை அறிந்து இருந்தாலும்,  ராவணன் கொன்ற அவரது கணவர் வித்யுத்ஜிஹ்வாவைப் பற்றி மிகச் சிலருக்குத்தான் தெரியும். நாடகம் உங்களுக்கு சிந்தனைக்கு உணவளிக்கிறது, மேலும் பல யோசனைகள் மற்றும் பாடங்களை நம் வாழ்வில் பயன்படுத்தலாம்.





ராவணன் ஒரு பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரம், சிலரால் ஒரு அரக்க ராஜாவாகவும், மற்றவர்கள் ஒரு அறிஞர் மற்றும் சிவபெருமானின் பக்தியுள்ள சீடராகவும் பார்க்கப்படுகிறார். இந்த சிக்கலான நபர் மக்களின் பல்வேறு விளக்கங்களுடன் எவ்வாறு ஒத்துப்போகிறார்?


நாடகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மக்கள் ராவணனின் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர், மேலும் பலர் அவரை தவறாகப் புரிந்து கொண்டதாக உணர்கிறார்கள். ராமர் உண்மையிலேயே கடவுள் என்றால், நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளும்போது ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ராமர் தனது சொந்த உயரத்தைக் குறைத்துக்கொள்ளாமல்  ராவணனின் கதாபாத்திரத்தை உயர்த்துகிறார். தென்னிந்தியாவின் சிந்தனை செயல்முறை வட இந்தியாவிலும் பரவலாக பாராட்டப்பட்டுள்ளது. இது பெரிய மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும்  பெரிய மனிதர்கள்ஆக்குகிறார்கள் என்பதைக் காண்பிப்பதாகும்.   யாரையும் இழிவுபடுத்தாத கதாபாத்திரங்களையும் கதைகளையும் எவ்வாறு உருவாக்குவது என்பது எழுத்தில் ஒரு முக்கியமான பாடம் என்று   நம்புகிறேன் -


 

தற்போதைய காலத்தில் ராமாயணத்தின் பொருத்தம் என்ன?


ராமர் மற்றும் ராவணனின் கதை நமக்குள் நடக்கும் போரை பிரதிபலிக்கிறது - நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல். உண்மையான மோதல் நமக்குள்ளேதான்உள்ளது, அதைக் கட்டுப்படுத்துவது நம் கையில்தான் உள்ளது. நம் புலன்களைக் கட்டுப்படுத்தினால், நாம் ராமனைப் போல ஆகிவிடுகிறோம். இல்லையென்றால், நாம் ராவணனைப் போல முடிவடைகிறோம். இதுதான் முக்கியப் பாடம்: ஒரு சாதகமற்ற சூழ்நிலையை எவ்வாறு சாதகமாக மாற்றுவது? பெரும்பாலான மக்கள் சிந்திக்காமல் சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள், ஆனால் இந்த நாடகம் நாம் எவ்வாறு ஞானத்துடன் எதிர்வினையாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. இன்றைய உலகம் போர்களால் நிறைந்துள்ளது - அது ஆல் அல்லது பிற சவால்களின் எழுச்சியாக இருந்தாலும் சரி - மேலும் குழப்பத்தில் தெளிவைக் கண்டறிவது எப்படி என்பதற்கான பாடங்களை ராமாயணம் வழங்குகிறது.


 


 

ன்று, ராமர் ஒரு 'அரசியல்மயமாக்கப்பட்ட' நபராக மாறிவிட்டார். அரசியலில் இருந்து கடவுள்களை எவ்வாறு பிரிப்பது?


ராமரின் ஞானத்தையும் அவரது போதனைகளையும் நாம் ஏற்றுக்கொண்டால், நம் வாழ்க்கை இன்னும் நிறைவானதாக இருக்கும். அவரது சரணம் (பாதங்கள்) மற்றும் ஆசாரம் (நடத்தை) இரண்டையும் நாம் வணங்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. அரசியலுக்கும் அறம்சார் தலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. ராமரின் அணுகுமுறை சகவாழ்வைப் பற்றியது. அவர் வாலியை விட சுக்ரீவனைத் தேர்ந்தெடுத்தார், சபரியை சந்தித்தார், அனுமனுடன் நெருங்கிய பிணைப்பை உருவாக்கினார், கேவத் மற்றும் நிஷாத்ராஜுடன் நட்பு கொண்டார். கவனிக்கப்படாதவர்களை முன்னணியில் கொண்டு வந்தார்.


ராமர் வாலியைக் கொன்றபோது, ​​கிஷ்கிந்தா ராஜ்யத்தை சுக்ரீவனுக்குக் கொடுத்தார், அதை தனக்காகவோ அல்லது தனது சகோதரனுக்கோ  வைத்துக்கொள்ளவில்லை. இலங்கையை வென்றபோது, ​​இலங்கை மக்கள் தனக்குச் சொந்தமானவர்கள் என்றும், அவர்களை அவர்களே ஆள வேண்டும் என்றும் நம்பியதால், விபீஷணனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். ராமரின் தலைமை நியாயம், ஞானம் மற்றும் மேம்பாடு பற்றியது.






Friday, January 17, 2025

உடனுறை இடாகினி- வாசிப்பு அனுபவம்


மருத்துவர்கள், ஓவியர்கள், மன்னர்கள் என பலரைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.. இப்படி இன்னொருவராக மாறி அவரவர்கள் கோணத்தில் எழுதுவது ஒரு கலை. அவ்வளவு ஏன் .. பெண்ணாக மாறி அவள் உணர்வுகளை சிறப்பாக எழுதும் ஆண்கள் உண்டு,


இருந்தாலும் ஒரு பெண்ணே அவள் உணர்வுகளை எழுதினால்  கலைச்செல்வத்துக்கு அது ஒரு கூடுதல் சேர்க்கை.. ஒரு டாக்டர் அல்லது படைவீரர் அல்லது முதல்வர் எழுத்தாளர்களாக இருந்து அவரவர்கள் கேரக்டர்களை எழுதில் புதிதாக ஒரு கோணம் கிடைக்கலாம்.

அந்த வகையில் இணையப் புரட்சியின் விளைவாக புதிதாக எழுத்தாளர்கள் உருவானபோது பெரியதொரு எதிர்பார்ப்பு இருந்தது.


மென்பொருள், மெக்கானிக்கல், மின்னியல், மின்னணுவியல், வியாபாரம் என நூற்றுக்கணக்கான துறைகளில் இருந்து  பல்வேறு ஊர்கள், மாநிலங்கள், தேசங்களில் வாழும் எழுத்தாளர்கள் உருவானபோது,  பல்வேறு களங்கள் பதிவாகும் என்றொரு இனிய எதிர்பார்ப்பு இருந்தது..

அது 20% நிறைவேறியது என்றாலும் பலர் வழக்கமான உருட்டுகள்தான்.


அண்டார்டிக்காவில் வாழ்ந்தாலும் தமிழக அரசியலும்,  தமிழக பிரச்சனைகளும்தான் கருப்பொருள். சிலர் இந்த எல்லைகளில் சிக்காமல் மானுடம் நோக்கிப் பேசுவதும் உண்டு

இதில் தவறு கிடையாது, ஆனால் பிரத்தியேக அடையாளம் மிஸ் ஆனது.


மஞ்சுநாத் அவர்களின் உடனுறை இடாகினி சிறுகதைத் தொகுப்பு இந்த விதத்தில் ஓர் அற்புதம்

அவரால் மட்டுமே எழுத முடியக்கூடிய களங்கள்.. மருத்துவம், இமயலைப்பயணம் என அவரது பிரத்தியேக அனுபவங்கள் கதைகளாகியுள்ள என்பதால், வேறு யாரையும் நினைவூட்டாத அற்புதமான வாசிப்பு அனுபவம்..

இதில் பின்வரும் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


உதிரும் உடல்

சுயத்தின் மாயப்பிம்பம்


திருவுருத்தி

ஹெப்பாவு

கடைசி நூலகம்


பிரம்ம கமலம்


உயிர் - உடல் - உணர்வு


கரிக்குருவி நூறு

இசிவு

உடனுறை இடாகினி


நிரல் நிறை


உயர்வு நவிற்சி


இவற்றில்  உதிரும் உடல் மற்றும் உயிர் - உடல் - உணர்வு ஆகிய கதைகள் யதார்த்தவாதக் கதைகள் எனலாம்.  இசிவு கதை ஓரளவு இயல்புவாதத்தன்மை கொண்டது. மற்ற அனைத்துக் கதைகளும் குறியீடுகளால் நிரம்பு நம்மை மீண்டும் மீண்டும் படிக்க வைத்து ஒரு வித தியான அனுபவத்தை தருகின்றன.



ஒரு ஜென் குரு மரணப் படுக்கையில் இருந்தார். அவரது இறுதி வாசகம் என்னவாக இருக்கும் என பலரும் ஆர்வமாய்க் காத்திருந்தனர்

அவர் கடைசியாக ஒரு ரொட்டித் துண்டு உண்டு கொண்டிருந்தார்.. “ ரொட்டி வெகு இனிமை” என்றார். அவர் உயிர் பிரிந்தது.. அதுதான் அவரது கடைசி வார்த்தை.

அது போன்ற ஒரு அதிர்வை ஏற்படுத்தியது ஒரு கதையின் இந்தக் கடைசி வரி.


திருலோக்கி வெண்ணிறப் பொத்தானைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டான். செவிலியரிடம் “இங்க லெமன் டீ எங்க கிடைக்கும் சிஸ்டர்?" என்றான்.


கதையின் கடைசி வரி என்றல்ல... ஒரு பத்தியின் கடைசி வரிகூட ஒரு ஹைக்கூ கடைசி வரி ட்விஸ்ட்டுடன் இருப்பது இத்தொகுப்பு முழுக்க ரசிக்க வைக்கிறது


உதாரணமாக..



இமயமலை சிதடிப்பூச்சிகள் வித்தியாசமானவை. ஆனந்தக் கூக்குரல் தனது இணைக்கான அழைப்பொலி என்றாலும் கூடவே தனது பதினேழு ஆண்டுகால மௌனத்தின் அனுபவங்களையும் சேர்த்தே கட்டுடைக்கின்றன. பெண் சிதடிப்பூச்சி வெளியிடும் முட்டைகள் யாவும் ஒன்றரை மாதத்தில் பொரிந்துவிடுகின்றன. ஆனாலும் தரையில் விழும் இளம் பூச்சிகள் மண்ணுக்குள் நுழைந்து மரத்தின் வேர் முனைகளில் தங்கி தனக்கான உணவை உண்டபடி வெளியே வராமல் கிட்டத்தட்ட பதிமூன்றிலிருந்து பதினெழு ஆண்டுகள் வரை மௌனத்தில் வாழ்கின்றன.


பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மௌனவிரதம் களையும் சிதடிப்பூச்சிகள் தங்களது சக்திகள் முழுவதையும் திரட்டி ஒரு வாரம் முழுவதும் ஆத்ம கானத்தை இடைவிடாது இசைப்பதில் மும்முரமாகின்றன. கூடவே சந்ததிகள் உருவாக்கத்திற்கான செயல்களிலும் வேகமாக ஈடுபடுகின்றன. வாரத்தின் இறுதியில் புகார்கள் இன்றி இறந்தும் போகின்றன.


என்னிடம் ஏதேனும் புகார்கள் இருக்கின்றனவா?




இதில் உள்ள கதைகள் சில ஒன்றையொன்று நிரப்புவதாக முழுமை செய்வதாக இருப்பது சிறப்பு


உதாரணமாக பாலியல் வன்முறை குறித்துப்பேசும்  ஹெப்பாவு

, கரிக்குருவி நூறு ஆகிய கதைகள் வாழ்வின் முழுமையையும் காதலையும் பேசும் நிரல் நிறை உயர்வு நவிற்சி ஆகியவை என சொல்லலாம். அதுபோல கண்ணுக்குத் தெரியாத விசைகளைப் பற்றிப் பேசும் இரு கதைகள் திருவுருத்தி மற்றும் உடனுறை இடாகினி ஆகியவற்றை சென்ற ஆண்டு ( 2024) நான் படித்த கதைகளில் டாப் டென் என்ற இடத்தில் வைப்பேன். அந்த அளவுக்கு ஆழமான கதைகள். நம்முள் உடன் உறைவது எது  அதனால் ஏற்படும் விளைவுகள் என இரண்டு கதைகளும் முற்றிலும் வேறுபட்ட நடைகளில் கருப்பொருள்களில் சொல்லிச் செல்வதை அற்புதம் என்றுதான் சொல்ல முடியும்.


கடைசி நூலகம் கதையைப் படிக்கும்போது முரகாமி கதை போல இருந்தது.. என்ன ஒன்று  முரகாமி கதைகள் உள்ளீடற்று இருக்கும்.. இக்கதை முரகாமி அளிக்கும் விசித்திர அனுபவத்தை ஆழமான மனித உணர்வுகளுடன் சேர்த்து அளிக்கிறது.


சுயத்தின் மாயப்பிம்பம் மற்றும் பிரம்ம கமலம் ஆகிய கதைகளையும் சேர்த்துப் படிக்கும்போது அதுதரும் திறப்பு அற்புதம்.


கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்


ரசித்த சில வரிகள்


 தனஸ்ரீ ராகம்போல் சுயத்தின் ஆழத்திற்கும் விளிம்பிற்கும் மாறி மாறிப் பயணித்துக்கொண்டிருந்தன.


இன்றைக்கு நாள் முழுவதும் சூரியனைக் காணமுடியவில்லை என்றாலும் மங்கிய வெளிச்சம் சித்திரத்தில் உறைந்திருக்கும் வண்ணம்போல் அசைவில்லாத தியானத்திலிருந்தது. காற்றில் கடுங்குளிர் அதிகம் என்பதை மூக்கிலும் கண்களிலும் வழியும் நீர் அறிவுறுத்திக்கொண்டிருந்தது. சிகரங்களில் இருள் கவிழ நேரமாகலாம்



"உஜ்ஜயினி மகாகாளேஸ்வரரைப் பார்க்கப்போ பிரம்மச்சரியம் தீட்சையை அங்கதான் வாங்கப்போறேன்.


"வேணாம் தம்பி, வீட்டுக்குப் போ. கங்கா தண் கொடுத்துட்டு சந்தோஷமா வேலையைத் தேடு. ஏதோ ஒன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். நிதானமாயி நிச்சயம் ஏதொவொன்னைக் கத்துக்கலாம். உனக்குக் கொஞ் விபரம் தெரியுது. இருந்தாலும் நீ நினைக்கிற மாதிரி சாதார கிடையாது. உஜ்ஜயினி பக்கம் மட்டும் போயிடாதே. ஒருமு உள்ள நுழைஞ்சிட்ட நீ வெளியே போகவே முடியாது. விடமாட்டாங்க. நீ எங்க தப்பிச்சுப் போனாலும் தே தூக்கிடுவாங்க."



 


 


Friday, January 3, 2025

தனிமையின் நூறாண்டுகள் - பாத்திரங்கள் பேசுகின்றன

 காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் -இன் தனிமையின் நூறாண்டுகள் நாவலின் பிரதானப் பாத்திரங்களில் நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்த பாத்திரங்கள் பேசுகின்றன


மார்கோ கோன்சலஸ்


மார்க்வெஸின் உலகம் கனவுக்கானது , படிப்பதற்கானது அன்று என்கிறார்கள். மாந்திரீக யதார்த்தம், மனித மோதல்கள் மற்றும் ஒரு நாகரிகத்தை உருவாக்கும் இந்த கவிதை உலகில் காலடி எடுத்து வைப்பது எப்படி இருந்தது?


ஜோஸ் ஆர்காடியோவாக நடிப்பது ஒரு சவாலுக்கு சமமானது. எப்பொழுதும் விளையாடுவதையும்  அது தரும் சாகசங்களையும் ரசிக்கும் குழந்தையைப் போல் அந்த  அனுபவம் இருந்தது. அதுதான் நாம் உருவாக்கும் உலகில் நம்மை இழப்பதற்கு வழி வகுத்தது . நடிகர்களான எங்களுக்கு மாயாஜாலம்  முக்கிய வார்த்தையாக இருந்தது;  ஒருவர் செட்டில் திறந்த மனதுடன் இருந்து வருவதை ஏற்க வேண்டும்  ஜோஸ் ஆர்காடியோ ஒரு இயற்கையான சாகசக்காரர், சில சமயங்களில் அவரது முடிவுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும் அப்பாவித்தனத்துடனும் அணுக்கக்கூடியவர்

இதயத்தில் எளிமையான ஆனால் அவரது சிந்தனைகளில் அப்படி அல்லாத    மனிதனைப் புரிந்துகொள்வதில் உங்கள் செயல்முறை என்ன?


ஜோஸ் ஆர்காடியோவைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் பேரார்வம். சில சமயங்களில் பகுத்தறிவு என்பது நமக்கும்  நம் திறன்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவதாக உணர்கிறேன்


இந்த கேரக்டரை எவ்வித முன் தீர்மானங்களும்  இல்லாமல் அணுகினேன். கனவு காண்பது நல்லதுதான், தோல்வியுற்றாலும் பரவாயில்லை என்று ஜோஸ் ஆர்காடியோவை எனக்குக் கற்பிக்க நான் அனுமதித்தேன். நீங்கள் செய்வதை நம்புவதற்கும் அன்பாக இருப்பதற்கும் உங்களை அனுமதிக்க வேண்டும். நான் அவரது பார்வைக்கு முழு மனதுடன் பணிந்து, எந்த எல்லையும் இல்லாமல் அவரை நடித்தேன்.


இன்றைய காலகட்டத்தில் மார்க்வெஸின் பொருத்தப்பாடு என்ன என்று நினைக்கிறீர்கள்?


என்னைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சியும் புத்தகமும் அடுத்த தலைமுறைக்கு பலன் அளிக்கிறது. தொடர் மட்டுமின்றி புத்தகத்தின் மூலமும் கிடைக்கும் இந்த அறிவை நம் மனதிற்கு உணவாக ஊட்ட வேண்டும். இது பலம் மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருவது, உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் புத்தகத்தின் முடிவில், அவர் உங்களை கொஞ்சம் இருளான  நம்பிக்கை இல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் அது அவ்வாறு உணரப்படக்கூடாது. அவர் நோபல் பரிசைப் பெற்றபோது, ​​​​அவரது ஏற்பு உரைக்கு "லத்தீன் அமெரிக்காவின் தனிமை" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அவர் மூலம் எமது உலகத்தைப் பற்றிய புதிய திறப்புகள் கிடைத்தன



.புத்தகம் என் வாழ்வின் ஒரு பகுதி'


வினா மச்சாடோ


மார்க்வெஸின் உலகம் கனவுக்கானது , படிப்பதற்கானது அன்று என்கிறார்கள். மாந்திரீக யதார்த்தம், மனித மோதல்கள் மற்றும் ஒரு நாகரிகத்தை உருவாக்கும் இந்த கவிதை உலகில் காலடி எடுத்து வைப்பது எப்படி இருந்தது?


நான் கொலம்பியாவின் கரீபியன் பகுதியைச் சேர்ந்தவள் , அங்குதான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பிறந்தார். இதைத்தான் நான் துல்லியமாக  உணர்ந்தேன்; நீங்கள் அதை விளக்க முடியாது; நீங்கள் அதை வாழ வேண்டும், நீங்கள் அதை விட்டுவிட வேண்டும். ஒருவர் மாந்திரீகமாகவும் , உங்களைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். நம் இயல்பில் அது இருக்கிறது. ஒரு கரீபியன் பெண்ணாக, நான் சொல்கிறேன், அவர் புத்தகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு அது உண்மையாக இருந்து, அதை என்னுள் வளர செய்து, கொலம்பியனை அதில் கலப்பதாகும் அதுதான் நான் செய்த வேலை. மேலும், அவர் அவளை எழுதியதைப் போலவே அவளை புரிந்து கொள்ள வேண்டும்


பிலார் டெர்னேராவைப் பற்றி நாம் பேசும்போது, ​​அவள்  சிரமமின்றி தனது பாலுணர்வில் வசதியாக இருக்கும் ஒரு பெண். அவளுடைய ஆளுமையின் ஒரு அம்சம் உங்களை ஈர்த்தது ?


என்னைப் பொருத்தவரை, பிலார் அவளுடைய காலங்கள் மற்றும் சகாப்தத்திற்கு முன்னால் ஒரு பெண். அவள் சுதந்திரமானவள், பியூண்டியா குலத் தலைவரான உர்சுலாவின் சீடரும் கூட


  . உர்சுலாவில் நீங்கள் ஒரு பெண் தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்திருப்பதையும் வலுவான மற்றும் ஆதரவான பெண்பால் இருப்பையும்.  காண்கிறீர்கள், அவள் இந்த தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் வாழ்க்கையை அனுபவிக்கிறாள். இந்த வசீகரப் பெண்ணின் மாந்திரீக  மர்மத்திற்கு நான் விருப்பத்துடன் என்னை ஒப்புக்கொடுத்தேன்.


இது மிகவும் விரும்பப்படும் படைப்பு,  அற்புதமான பராட்டுகள் பல பெற்றது ஆனாலும் , சினிமா சுதந்திரத்தை  நூலுடன் ஒப்பிடக்கூடிய சற்று சந்தேகம் கொண்ட ரசிகர்கள் எப்போதும் இருப்பார்கள்.


நானும் ஒரு ரசிகைதான், இந்தப் புத்தகத்தை பலமுறை வாசித்து மீண்டும் வாசித்து, அது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது. நான் சொல்வேன், அதை ரசியுங்கள், ரசியுங்கள், ஏனென்றால் எங்களில் பலர் இந்த உலகத்தை திரையில் உயிர்ப்பிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம், எந்த அம்சத்திலும் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. இந்த உலகத்தை மீண்டும் உருவாக்க நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது.

நமக்கெல்லாம் பாத்திரங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன; பிலரை வெளிக்கொணர்தல் கடினமாக இருந்தது. அவளையும் பிற பாத்திரங்களையும் என் பார்வையில்  சற்று அனுபவியுங்கள்

Wednesday, January 1, 2025

புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாவல்

 

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கணத்தை மட்டும் சொல்கின்ற ஹாலிவுட் படங்கள் உண்டு.  அதுபோல, புத்தகக் கண்காட்சி நடத்துதல் என்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு படைக்கப்பட்ட  ஒரு நாவல்தான் அகிலன் கண்ணன் அவர்களின் வேர்பிடி மண் என்ற குறுநாவல்.


  கணவன் மனைவி உறவு, நடுநிலைப்பார்வையில் ஒரு சிக்கலை அணுகல், நட்பு, அரசு இயந்திரம் செயல்படும் முறை, ஆங்காங்கு இருக்கும் நல்ல அதிகாரிகள் , ஏறிய ஏணியை எட்டி உதைத்தல் என பல விஷயங்கள் ஆங்காங்கு பாயசத்தில் கிடக்கும் முந்திரி போல சுவைக்கின்றன.


இரும்புச் சட்டக நிறுத்தம் ( ஸ்டாண்ட் ), நெறியாள்கை போன்ற அழகுத் தமிழ்ச் சொற்கள் மனதை அள்ளுகின்றன.. சொற்களை சிதைத்து விடக்கூடாது என்பதற்கு மு. வ ஒரு யுக்தியைக் கையாள்வார்... அதுபோன்ற ஒரு யுக்தியை அகிலன் கண்ணனும் பயன்படுத்தியுள்ளார்.


தில்லி புத்தகக் கண்காட்சியை விளக்கும்போது நாமே அங்கு நேரில் சென்ற உணர்வு உருவாகிறது.



கல்வி சார்ந்து வட இந்தியாவைத் தாழ்வாகவும்  தென்னிந்தியாவை உயர்வாகவும் நினைத்துக் கொள்ளும் போக்கு நம்மிடையே உண்டு. ஆனால் ஆலயங்களை சிறப்பாகப் பராமரித்தல், ஐ ஏ எஸ் தேர்ச்சி,  தொழில்துறை, இலக்கிய நிகழ்வுகள் என பலவற்றில் அவர்கள் நம்மைவிட சிறப்பாகவே உள்ளனர்.  ஒரு சில மாநிலங்களை வைத்து வட இந்தியாவையே தாழ்வாக நினைப்பது நமக்குத்தான் தீமை என்பதை இருவேறு புத்தக கண்காட்சிகள் மூலம் சுட்டிக்காட்டுகிறது நாவல்.



ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் ஒரு நாவலின் இலக்கிய மதிப்பை பாதிக்காது என்பது உண்மை.


ஆனால் இதை பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டு இன்று பல பதிப்பகங்கள் மெய்ப்புப் பார்த்தல் என்ற துறையே இல்லாமல் தப்பும் தவறுமாக நூல்களை வெளியிடுகின்றன.. சில்லறை சில்லரை,  கருப்பு கறுப்பு போன்ற குழப்பங்கள் வந்தால் முன்பெல்லாம் அச்சு நூல்களில் எப்படி எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொள்வது வழக்கம். 


இந்த பிரஞ்ஞையுடன் தான் பாரம்பரிய பதிப்பகங்கள் செயல்பட்டன..கையில் காசு, வாயில் தோசை என்ற நோக்கில் செயல்படும் இன்று புற்றீசல்களாகக் கிளம்பியுள்ள பல பதிப்பகங்கள் இவற்றில் கிஞ்சித்தும் அக்கறை செலுத்துவதில்லை’


அச்சுப்பிரதியில் பிழையிருப்பின் அது நாம் உண்ணும் சோற்றில் கல் போலாகும் ; சில நேரம் பொருளே மாறுபட்டுவிடும் . அடுத்த தலைமுறைக்கு ஒருவேளை தவறான பதிவு சென்றுவிடக்கூடாதல்லவா ?

என்ற வரி வெகு நேரம் யோசிக்க வைத்தது..


இயல்பான நகைச்சுவையும் மொழி விளையாட்டும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன

உதாரணமாக புத்தகக் கண்காட்சியை துவக்கி வைக்க யாரும் முன்வராமல், அவர்களாகவே ஆரம்பித்தனர் என்பதை கேலியாகச் சொல்லும் வரிகள்


புத்தகக் காட்சி தானாகவே திறந்து கொண்டது . ஆம் , கலை நிகழ்ச்சி , ஊர்வலம்  இவைகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன . அவை போல் அல்லாமல் புத்தகக் காட்சியை யாரும் திறந்து வைக்க வில்லை



பிடித்த வரிகள் சில:



உணர்வு வெளிப்பாட்டிலோ அவ்வறிவு , பாலில் தயிரெனப் பதுங்கிக் கொள்ளுகிறது .




  சட்டை உறிக்கும் பாம்பின் மேல் தோல் போல 

எப்போது மாலைக்குத் தலை குனிகிறதோ அப்போதே கல்லெறிக்கும் நெஞ்சம் நிமிரப் பழகிக் கொள்ளும் மனப் பக்குவம் பெறவேண்டும் குமார் ! " என்பார் கபிலன் .  

நானொரு கல் - அவ்வளவு சீக்கிரம் நார் எடுக்க இயலாது . எனில் , அவளோ அருவி ! பொங்கிப் பெருகும் அன்பருவி - உருவிலும் உள்ளத்திலும் !


 

அவர்களது ஆங்கிலம் அவரவர் தாய்மொழி பாவத்துடனேயே ஒலிக்கிறது . பெரும்பாலும் கடாபுடாவெனும் ஒலியிலேயே பிரவகிக்கிறது . ஒரிய , வங்க மொழிகள் மெல்லிசைபோல் ஒலிக்கின்றன . அவர்கள் எல்லோரும் நமது தமிழ் மொழி உச்சரிப்பைப் பற்றி என்ன கருதுகிறார்களோ தெரியவில்லை .


நீர் வறண்ட ஊரில் நீரோடையாய் மனிதர்கள் !


சார் நாம  வேர்பிடி மண்ணாவே இருக்கிறோம் .  தோட்டக்காரரைப் பொறுத்தவரை  நாம் வெறும் வேரடி மண் தானே  என்கிற  நினைப்புத்தான் !  மேலே செடியாய் , கொடியாய் வளர்ந்து பூத்துக் குலுங்கும் மலர்தான் மணக்கும் ! அதற்கு ஆதாரம் இந்த வேர்பிடி மண்தானே  ! "


“பெருங் கனவு உங்களுக்கு ! உங்கள் கனவு நனவாகட்டும் பெருந்தகையீர் ! “ “ குமாரு ,  நீங்க எப்போ அகிலனின் வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழர் ஆனீர் ?


 !


ஏப்பு , நீங்க இதெல்லாதையும்  பட்ணத்திலேந்து இங்க விக்கவாக் கொண்டாந்தீங்க ? " இப்படியொரு கேள்வி எங்களை நோக்கிப் பாயும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை நாங்கள் ! என் இதயத்தில் உதித்ததை அவருக்கு இதமாகப் பதிலாகச் சொன்னேன் : “ ஐயா, எல்லாருக்கும் சோறு போடுற பூமியிலே வாழ்கிற உங்களை மாதிரி மக்கள் கிட்டே ,  நாங்க இதோ இதுவும் ஒரு உணவுதான்னு காணவும் வாங்கவும் சாப்பிடவும் கொண்டு வந்திருக்கோம் . உங்களை மாதிரியேதான் நாங்களும் . நீங்க உடம்புக்குச் சோறு போடுறீங்க  ;  நாங்க மனசுக்குச் சோறு போடுறோம் . “



சிறு நூல் ஆனால் நிறைவான நூல்


வேர்பிடி மண் ( நாவல் ) ஆசிரியர்: அகிலன் கண்ணன்

தமிழ்புத்தகாலயம்

Friday, September 16, 2022

பஞ்சாங்கம் இன்றி சிறுகதை எழுதாதீர்கள் − மாலன் சுவாரஸ்ய உரை

 

சிறுகதைப் பட்டறை முதல் பகுதி

    அதன் பிறகு  மாலன்  அதிரடியாகத்  தன்  பேச்சை  ஆரம்பித்தார் 


பாரதியார்  போன்ற  ஆளுமைகளால்  வளர்ந்த  சிறுகதை  இலக்கியம்  இன்று  மிகவும்  அவசியமான   ஒன்றாக  உருவாகியுள்ளது.


எனவே  இந்த  சிறுகதைப்பட்டறை   வரவேற்புக்குரியது.   ஆனால்  பட்டறை  என்ற   சொல் சரியாகத்   தோன்றவில்லை   சிறுகதைப்  பயிலரங்கு என்பது  சரியாக  இருக்கும்


ஒருமுறை  கதை  என்றால்  என்ன  என்பதற்கு  எழுத்தாளர் கல்கி  நகைச்சுவையாக  ஒரு  உதாரணம்  சொன்னார்


ஒருவன்  பட்டுக்கோட்டைக்கு  வழி  கேட்டானாம்   கொட்டப்பாக்கு  காசுக்கு எட்டு என்றானாம்  பதில்  சொன்னவன்


இது சிறுகதையா?


பஞ்சாங்கம்  இல்லாமல்  சிறுகதை  எழுதமுடியாது

எனன  பஞ்சாங்கம்


ஐந்து  அம்சங்கள்;

1  முதன்மைப்  பாத்திரம்.   (  நல்லவன்  என்பது  இல்லை)


2  எதிர்  பாத்திரம்  ( கெட்டவனாக  இருக்க  வேண்டியதில்லை) 


3 கதை  நிகழும்  களம்    .  சூழல்;

4  மையப்புள்ளி     plot

5 ஒரு  திருப்பம்  


கல்கி  சொன்ன உதாரணத்தில்  இவை  இருப்பதை  கவனியுங்கள்

ஊருக்கு செல்ல  விரும்பும்  முதன்மை  பாத்திரம்.  சம்பவம்  நிகழும்  களம் ,  ஒரு நகைச்சுவையான  திருப்பம் என  வந்து  விட்டது  அல்லவா


     ஹிப்பி  ஒருவன்  ஒற்றைச்செருப்பு  அணிந்து  நடந்து  கொண்டிருந்தான்


என்னாச்சுப்பா ?  இன்னொரு  செருப்பு  தொலைஞ்சுருச்சா  என  கேட்டார்  வழிப்போக்கர்


   ஒண்ணுதாங்க  கிடைச்சது  என்றான்  அவன்


இந்த  எதிர்பாராத  பதில் ,   முதன்மை  பாத்திரமான  ஹிப்பி குறித்த  பார்வை ,  களம் ,  மையப்புள்ளி என அனைத்தும் இதை ஒரு கதை  ஆக்குகிறது


  கதைக்கு ஆரம்பம்  வெகு  முக்கியம்;

உதாரணமாக  எம்  எஸ்  கல்யாணசுந்தரம் எழுதிய  தபால்கார  அப்துல்காதர்  சிறுகதையின்  ஆரம்ப  வரிகளைக்  கவனியுங்கள்


சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன ? ‘ என்று விசாரித்தார்.


‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் ‘ என்றேன்.


தபால்கார  அப்துல்  காதர்  என்ற  கேரக்டர்  மீது  எப்படி  ஆர்வத்தை  ஏற்படுத்தி  மேற்கொண்டு  படிக்க  வைக்கிறார்  என்பது  கவனிக்க வேண்டியது


தமிழ்ச்சிறுகதை  வரலாற்றில்  முத்திரை  பதித்த  இன்னொரு  அற்புதமான  ஆரம்பம்


அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க..(  காஞ்சனை  −  புதுமைப்  பித்தன்)

(  பிச்சையின்  பின்குறிப்பு.   இந்த  ஆரம்ப  வரி்களுக்கு  ஏற்ப   சிறுகதை  ஒன்றை  எழுதச்செய்து ,  சுஜாதா  ராஜேஷ்குமார்  போன்ற பிரபலங்களிடம்  கதை  எழுதி  வாங்கி பிரசுரித்தது  அன்றைய  குமுதம்  வார இதழ்)


மறக்க  முடியாத  இன்னொரு  துவக்கம்


அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்

இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.


”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். 

(  காலமும்  ஐந்து  குழந்தைகளும்   அசோகமித்திரன் )


அதேமாதிரி  முடிவும்  பளீர்  என  இருக்க வேண்டும்


உதாரணம்  பாருங்கள்   மறக்கவே  முடியாத  இறுதி  வரிகள்

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!   (  புதுமைப்பித்தன்)


இப்படி  ஆரம்பமும்  முடிவும்  அமைந்துவிட்டால்   கதைக்கான,,நடை  அதுவாகவே  இயல்பாக  அமைந்து விடும்;

எழுதுபவன்  வாசகனுடன்  நேரடியாகப்  பேசுவது  கவிதை

எழுதுபவன்  தனது  பாத்திரங்களுடன்  உரையாடுவது  சிறுகதை

பாத்திரங்கள்  பார்வையாளனுடன்  பேசுவது  நாடகம்

இந்தத் தெளிவு முக்கியம்;

கதையை  சொல்லாதீர்கள்   கதையை  வாசகன்  முன்  நிகழ்த்திக்காட்டுங்கள்

ஏன்  என கேட்டன   மரபான   கதைகள்

(ஏன்  இத்தனை  துயர்கள்  என்பது  போன்ற  ஒரு விக்டிம்  கோணத்தில்)


ஏன்  கூடாது  என  திமிறுகின்றன  நவீன கதைகள்  (  இந்த  விதிகயை  மரபுகளை  ஏன்  உடைக்க்ககூடாது  என்பது  போல)

இந்தப்போக்குகளை  உள்வாங்க  வேண்டும்


ஒரு  உண்மை  சம்பவம்  கூறி  முடிக்கிறேன்  இதை  யாரேனும்  சிறுகதை  ஆக்குங்கள்  (  பிச்சையின்  பிகு   .   நான் எழுத  நினைத்தேன்  சூழல் அனுமதிக்கவில்லை)


ஒரு  சிறிய  இடைவெளிக்குப்பின்  என்  சொந்த  கிராமத்துக்கு சென்றிருந்தேன்.  ஊரே  அல்லோலகல்லோலப்  பட்டுக்  கொண்டிருந்தது


பதட்டமாக  இருந்த   அம்மாவிடம்  விசாரித்தேன்

நம்ம  ஊருல  வெள்ளம்  வந்துருச்சுப்பா  பக்கத்து  ஊருல பாதிப்பு  அதுதான்  ஹெல்ப்  பண்ண  போறோம்  என்றார்


வறட்சிக்குப்  புகழ் பெற்ற  நம்ம  ஊர்ல  வெள்ளமா  என   நம்ப  முடியாமல்  கேட்டேன்


மழை  வெள்ளமல்ல   அணையில்  உடைப்பு  ஏற்பட்டதால்  வெள்ளம்  என்றார்


சம்பவ  இடத்துக்கு  விரைந்தோம்


அந்த  கிராமம்  வெள்ளத்தால் முழுமையாக துண்டிக்கப்பட்டு  தீவு  போல  இருந்தது  .   உதவிப்பொருட்கள்  அவர்களை  அடைய  வழியே  இல்லை

  அப்போது   ராமகிருஷ்ண  மடத்தின்  இரு  துறவிகள்  துணிச்சலாக  ஒரு  முடிவுக்கு  வந்தனர்  மரத்தில்  ஒரு   கயிறைக்கட்டிவிட்டு   எதிர்  கரைக்கு  நீச்சலடித்து  சென்று   அங்கே  எதிர்முனையைக்கட்டினர்    அந்த  கயிற்றின்  வழியாக  இருவரும்  மாறி மாறி  பயணித்து  உதவிப்  பொருட்களை கொண்டுபோய்  சேர்த்தனர்

சற்றும்   ஓய்வற்ற  பணி   இதைக்கண்டு  பிறரும்  தைரியம்  பெற்று உதவிக்கு  வந்தனர்

மாலை வரை  பணி நடந்தது.   நீங்கள்  இல்லாவிட்டால்   நாங்களும்  குழந்தைகளும்  பசியால்  துவண்டிருப்போம்  என  துறவிகள்   கையைப்பிடித்து   கண்ணீர்  மல்க  நன்றி சொன்னார்கள்  கிராமத்தினர்

வெள்ளம்  வடிந்து  விட்டது  இனி  பயமில்லை  என  புன்னகையுடன் ஆறுதலாக  சொல்லிவிட்டுக் கிளம்பினர்  துறவியர்

      சற்று  தொலைவு  சென்றதும்  ஒரு  துறவி மற்றவரிடம்  பலவீனமாக  சொல்வது  எனக்கு  மட்டும்  கேட்டது

"  ஒரே பசி  மயக்கம்.  போயி ,  கொஞ்சமாவது  சாப்பிடணும்"

    ஓர்  ஊரின்  பசியையே   ஆற்றிய  இருவரும் அதுவரை ஒரு,  வாய் உணவுகூட  எடுத்துக்  கொள்ளவில்லை என்ற  உண்மை  உறைத்து ,  அதிர்ந்து  போய்  நின்றேன்

−−−

அதன்பின்  கேள்விகளுக்கு  எழுத்தாளர்கள்  பதிலளித்தனர்.  உணவு வழங்கலுடன்  நிகழ்வு   நிறைவுற்றது.   பங்கேற்பு   சான்றிதழ்  வழங்கப்பட்டது

............


வித்யா  சுப்ரமணியம்  குறிப்பிட்ட  உணர்வுப்பூர்வ   நிகழ்வு


என்  சிறுகதை  ஒன்று  பரிசுகளையும்  பாராட்டுகளையும் பெற்றது   அது  கற்பனைக்கதை  அல்ல   உண்மை  நிகழ்வு


என் கணவருக்கு  மதுப்பழக்கம் இருந்தது.   இதை  தொடர்ந்தால்  உயிருக்கே  ஆபத்து  என்ற   மருத்துவர்  எச்சரிக்கையை  அவர்  பொருட்படுத்தவில்லை

     ஒரு  நாள்  என்  வீட்டிலிருந்து  போன் வந்தது ,   என்  கணவர்  இறந்து  விட்டதாக .   இல்லத்திலேயே  மரணமாம்


  இதைக்கேட்டு  கலங்கிப்போய்  இருக்க வேண்டிய  நான்  ஒரு, வகை  மகிழ்ச்சி  அடைந்தேன்

அவர்  மரணம் எதிர்பார்த்த  ஒன்று   சாலையிலோ  பொது  இடங்களிலோ  அது  நடந்து  விடுமோ  என்பதுதான்  என்  பயமாக  இருந்தது.   இல்லத்திலேயே  இறப்பு  என்பது   நல்லதுதான்  என  தோன்றியது   இந்த  உணர்வை   இதில்  இருக்கும்  அவலத்தை  கதை  ஆக்கினேன்



Monday, August 1, 2022

கலைமகள் − ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை பயிலரங்கு அனுபவம்

 கலைமகள்  மாத  இதழும்   ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம்  இதழும்  இணைந்து  சிறுகதைப்  பட்டறை  எனும் பயிலரங்கை  நடத்துகின்றன  என்ற செய்தி எனக்கு  சற்றே வியப்பளித்தது.

   ஆன்மிகம்  ,  ஞானத்தேடல் ,  சமூகத்தேடல்  என  பயணிக்கும்  ராமகிருஷ்ண மடம் ,   இலக்கியத்தில்  ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த  ஆச்சர்யம் அளித்தது

   இதில்  சுவாரஸ்யம்  என்னவென்றால் வேறு எங்கோ  போய்க்கொண்டிருப்பவர்கள்  தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து  அறிந்து  ,  சரி  போய்த்தான்  பார்ப்போமே என   கேஷுவலாக  வர முடியாது.

     ஒரு  மாதம் முன்பே  விண்ணப்பிக்க வேண்டும்   அதில்  தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே  நிகழ்ச்சிக்கான  அழைப்பு அனுப்பப்படும்

       ராமகிருஷ்ண மடத்தில்  ஏசி ஹாலில்  மிகச்சிறப்பான  ஏற்பாடுகளுடன்  நிகழ்ச்சி  நடந்தது

    இனிமையான   ஆன்மிக  சூழலில்  இலக்கிய  நிகழ்வு  .   பெயரை  பரிசோதித்தபின்னே   அனுமதித்தனர்  அழகான  விவேகானந்தர் படம்,  அவரது  நூல் ,  பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய  பொதி  அனைவர்க்கும்  வழஙககப்பட்டது


ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி  மந்திரங்கள்  சொன்ன  பிறகு  நிகழ்ச்சி தொடங்கியது

    எழுத்தாளர்கள்  வித்யா சுப்ரமணியம்  மாலன்  ,  தேவிபாலா  ஆகியோர்  சிறுகதை எழுதும்  நுட்பம்  குறித்து  வகுப்பெடுத்தனர்.


   கலைமகள்  ஆசிரியர்  கீழாம்பூர் சங்கரமணியன்  அவர்கள்  பேசியதை  தொகுத்துக்கூறி  மனதில்  பதிய வைத்தார்

       ராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர்  சென்னை  ராமகிருஷ்ண மடத்தின்  மேலாளர் சுவாமி  தர்மிஷ்டானந்தர் ஆகிய  ஆன்மிகவாதி்களுடம்கூட   சிறுகதைகள் குறித்து  சில  நிமிடங்கள்  பேசியது  சிறப்பாக இருந்தது

     அனைத்துக்கும்  சிகரமாக , உலகளாவிய  ராமகிருஷ்ண  மடங்களின்  துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ்  அவர்களும்  அழகாக  ஆனால்  சுருக்கமாக  சிறுகதை குறித்த  தனது  நேரடி  அனுபவத்தை  பகிர்ந்து  கொண்டார்








       தனது  சிறுவயதில்  சிறுகதைப்போட்டி  ஒன்றில்  கலந்து  கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது  சுவாரஸ்யம்.  ஒரு விஷயத்தை  சிறுகதை  போல  சொல்லும் தன் பாணி  பலரை  ஈர்த்து  வருகிறது  எனக்குறிப்பிட்டார்.    

         பேச்சுவாக்கில்  ஒரு  சிறுவனுடனான  ஒரு  அனுபவத்தை  ஆன்மிக  கருத்தை  வலியுறுத்துவதற்காக சொன்னார்.  அது  பிறகு மாலன்  தன்  பேச்சில் குறிப்பிட்ட  சிறுகதை பஞ்சாங்கத்துக்கு  முற்றிலும்  ஒத்துப் போனது..

  வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர்  (  ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் )   தமிழ்ச் சிறுகதை வரலாற்றை  சுருக்கமாக பேசினார்

    செய்திகளை  மட்டுமே  வெளியிட்டுக் கொண்டு  இருந்த  அன்றைய  சூழலில்  பாரதியார்  தனது  சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு  இடமளித்து   தமிழில்  சிறுகதை  கலையை  ஆரம்பித்து  வைத்ததை  சொன்னார்  மாதவையா வவேசு  ஐயர் டிஎஸ்  சொக்கலிங்கம்  சிசுசெல்லப்பா  ராமையா  கநாசு  மெளனி என சிறுகதையை  வளர்த்த  முன்னோடிகளைப்பற்றியும்  சுஜாதா  சுரா  போன்றோர்  பார்வை  மணிக்கொடி காலகட்டம் என விரிவாக  பேசினார்;

சுருக்கம் , சுவை  , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை  தூண்டல்  போன்ற  சிறுகதைக்கு  தேவையான  அம்சங்கள்  குறித்துப்  பேசினார்.

  சிறுகதை  ஆசிரியனிடம்  ஆரம்பிக்கும்  சிந்தனை  வாசகனிடம்  தொடரும்படி எழுதப்படுவதே நல்ல  சிறுகதை என்றார்


அதன்பிறகு  பேசிய கீழாம்பூர்  சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின்  தேவை  குறித்தும்  அதை  கலைமகள்  தொடர்ந்து  நடத்த நினைத்திருப்பதையும்  சொன்னார்.  தரமணியல்  தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து  முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது  நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.

     உவேசா  ,   கிவாஜ  ஆகியோர்  வழியில்  கலைமகள்  இதழ்  தொடர்ந்து  தமிழ்ப்பணி ஆற்றும்  என்றார்


பிறகு  பேச வந்தவர்  எழுத்தாளர்  பாரதி சந்துரு


சிறுகதைகளின்  அவசியம்  குறித்துப்பேசினார்..  சிறுகதை  சமகாலப்பிரச்சளைப்  பேசுகிறது  அதிலிருந்து ,மீளும்  ஊன்று கோலாகவும்  சிறுகதைகள் உள்ளன என்றார்;

உதாரணமாக  சூடாமணி எழுதிய  அக்கா என்ற  சிறுகதை.


அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்

தனக்கு குழந்தை இல்லாத  சோகத்தை காட்டிக்  கொள்ளாமல்  தங்கையின் குழந்தையை  அன்பாக  கவனித்துக்கொள்கிறாள்.   அந்தக்குழந்தையும்  பெரியம்மா மீது  பாசமாக  இருக்கிறது  ,தங்கையும்  அன்பானவள்தான்

ஒரு  நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.

அக்கா  மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்

பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘

“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.

     ஒரு  வார்த்தை  உலகத்தையே  நரகமென  எண்ணவைக்கிறது  இன்னொரு  வார்த்தை  வாழ்வை  சொர்க்கமெனக் காட்டுகிறது   சூழல்கள்  மனிதர்கள் என  அனைத்தும்   கணம்தோறும் மாறும்  மாயத்தைச்  சொல்கிறது  கதை


சீசர்  என்ற  ஜெயகாந்தனின்  கதையை  அடுத்தபடியாக  பேசினார்

    ஜெயகாந்தனுக்கே உரிய  டிராமாட்டிக்  உச்சம்  கொண்ட     கதை  இது

    வாடகைக்கு  குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த  ஒரு குடியிருப்பு  ஹவுஸ்  ஓனர் மகனின்  பார்வையில் நகரும்  கதை

       ஏன்  ஹவுஸ்  ஓனர்  பையனின்  பார்வை  என்றால்  அதுதான்  கதையை  இன்னும்  நெருக்கமாக்குகிறது.  பெரிய  அளவு  தீமையோ   பெரியஹீரோயிசமோ  செய்ய  முடியாத  ஒரு  சாட்சி  மட்டும்தான்  அவன்

          தமது  வீட்டில்  குடியிருக்கும்  ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது   அபாண்டமாக  பழி  சுமத்தி ,  அவளது  கணவனை  அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள்  எல்லாம்  சுவையான  மெகாசீரியலை  ரசிப்பது போல  அந்தப்பெண்ணின்  கதறலை  ரசித்தபடி  கள்ள  மெளனம் சாதிக்கின்றர்.

     


 மகன்  ஓடிப்போய்  கணவனை   அழைத்து  வருகிறான்.    கணவர் அமைதியாக  வந்து  என்ன  பிரச்சனை  என  விசாரிக்கிறார்.    என்  மனைவி  மீது  எனக்கு  நம்பிக்கை  இருக்கிறது   அனைவரும்  அவரவர்  வாழ்க்கைத்துணையை   நம்புங்கள்.  பிறர்  வாழ்வை  எட்டிப்பார்க்காதீர்கள்  என கம்பீரமாக  கூறுகிறார்.

     வேறு  வீட்டுக்குப்போய்விடலாம்  இது  மோசமான   மனிதர்கள்  வாழும்  இடம்  என்கிறாள்  மனைவி

    உலகம்  இப்படித்தான் இருக்கும்   பயந்தால்  வாழ  முடியாது என  ஆதரவாகப்பேசுகிறார்  கணவர்;

       சீசரின்  மனைவி  சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு  வாழ  வேண்டும்  என  பெண்களுக்கு  அட்வைஸ்  சொல்லாமல்  ஒரு, மன்னனுக்கு  உரிய  வீரம்  அமைதி  கண்ணியத்துடன்  பிரச்சனையை  சந்தித்த  அக்கணவன்  அந்த  இளைஞன் பார்வையில்  பேரரசர்  சீசராக  தோன்றுவதாக  கதை  முடிகிறது

    வாழ்க்கை  குறித்து  இப்படி  மேன்மையான  பார்வைகள்  உருவாக  சிறுகதைகள்  அவசியம்  என்று  பேசினார் பாரதி  சந்துரு


சிறுகதைகளை  எப்படி  வடிவமைப்பது 

சிறுகதைகளின்  வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம்  பேசினார்

           ராமகிருஷ்ண  மட நுாலகம்தான் தன்னை  நல்ல தொரு  வாசகியாக்கியது   நல்ல  வாசகன்தான்   நல்ல  எழுத்தாளன்  ஆக  முடியும்  என பேச்சை  ஆரம்பித்தார்

         திஜா எழுதிய  அம்மா  வந்தாள்  நாவல்தான்  எழுதத்துாண்டும்  உத்வேகம்  அளித்தது   என்றார்

     தானே  சொல்வது  போல  எழுதுதல்  ,  பல்வேறு  கதாபாத்திரங்கள்  சொல்வது போல எழுதுதல் ,   குளம்  மரம்  ஆகியவை  சொல்வதுபோல  எழுதுதல்  என   எப்படியும்  எழுதலாம்

    உருவகக்கதைகளும்  எழுதலாம்

ஆற்றங்கரை  பிள்ளையாரை  பாரததேசமாக  உருவகித்து  புதுமைப்பித்தன் ஒரு  கதை   எழுதியிருக்கிறார்    அந்த  பாதிப்பில்  நான்  எழுதிய  கதைதான்  "என்று தணியும்"  என்ற  கதை

       எளிய  விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம்     ஒரு  சிறுவன்  ரிக்ஷா  என்பதை  மழலை  மொழியில்  ரிஸ்கா என்பதை  சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார்   அசோகமித்திரன்


அதேபோல  மிகப்பெரிய  துயரங்களை  இழப்புகளை   கதையாக்கலாம்    நான்  அப்படி  எழுதிய  கதை  ஒன்று  மிகப்பெரிய  புகழை  எனக்கு  ஈட்டித்தந்தது 

சிறுகதை  அதன் முதல் வரிக்கு முன்பே  ஆரம்பித்து  விட வேண்டும்   கடைசி வரிக்கு  பின்பும்  தொடர வேண்டும் என்றார்

அந்தக்கதைக்கு   அடிப்படையாக  அமைந்த  தனது  சோகத்தை   அவர்  சொன்னபோது  பலர்  கண்கள்  கலங்கின  அவர்  அதை   சொன்ன விதமும்  ஒரு  சிறுகதை   போல  இருந்தது


சிறுகதை எழுதும்போது  கவனிக்க  வேண்டியவை  குறித்து  தேவிபாலா  பேசினார்


தலைப்பிலேயே  பதில்  இருக்கிறது.  சிறுகதை  எழுதவேண்டுமானால்  கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை  , சம்பவங்களை  கவனியுங்கள.   சும்மா  பார்ப்பது  அல்ல  கூர்மையான  கவனிப்பு தேவை

    எனது  முதல் சிறுகதை  கலைமகள் இதழில்  வெளியானது    அந்தவகையில்  கலைமகள்தான்  என்  தாய்வீடு

       சுமங்கலி பிரார்த்தனை  என்பது  அக்கதையின்  பெயர்.

    விகடன்  ஆசிரியர்  பாலசுப்ரமணியன்  அடிக்கடி  சொல்வார்      கண்ணையும் காதையும்  திறந்து  வைத்தால்  ஆயிரம்  கதைகள்  கிடைக்கும்;

   பேருந்துப்பயணத்தின்   போது   ஜன்னல்  வழியே  நான்  கண்ட  ஒரு  காட்சி − மடிசார்  அணிந்து ஒரு, பெண்  அதிவேகமாக ஸ்கூட்டரில்  பறந்த  ஒரு  காட்சி  − என் மனதில்  விதையாக  விழுந்து மடிசார்  மாமி  என்ற  புகழ்பெற்ற நாவல்  ஆனது

      எனவேதான் வாகன  வசதிகள்  வந்துவிட்ட பின்பும்கூட  பேருந்துகளில்  பயணிக்கிறேன்

    ஜவுளிக்கடை   உணவகங்கள்  என  எங்கும்  கதைகள்   கிடைக்கும்

   சின்னச்சின்ன  உணர்வுகளை  சின்னசின்ன  வாக்கியங்களில்  எழுதிப்பழகுங்கள்

        ஒரு  இளம்பெண்    நடந்து  கொண்டு  இருந்தாள்   நல்ல  மழை  பெய்து  கொண்டிருந்தது.  நனைந்துவிடாமல்  குடைபிடித்தபடி  போய்க்கொண்டிருந்தாள்

     இப்படி  எழுதாதீர்கள்

    குடைபிடித்தபடி  சென்று கொண்டிருந்த அவளுக்கு...     என  ஆரம்பித்து  அடுத்தடுத்து  செல்லுங்கள்

      குடை  அவள்   ஆகிய   இரு  சொற்கள்மூலம்  மழையையும்  ஒரு  பெண்  என்பதையும்  உணர்த்திவிட முடியும்

       ஊசி  போல   நறுக் என  மனதில்  பதிய  வேண்டும்

       ஆரம்பம்  முக்கியம்

    கோலம்  போட வாசலுக்கு  வந்தபோது , படமெடுத்து  ஆ டிக்கொண்டு  இருந்தது பாம்பு  என அதிரடியாய்  ஆரம்பியுங்கள்

அதேமாதிரி  முடிவிலும் ஒரு  பஞ்ச்  தேவை


வட்டார  பாஷை  வேண்டாம்  பொதுவான  தமிழில்  எழுதுங்கள்

வட்டார பாஷை தேவைதான்  ஆனால்  ஆரம்பகட்டத்தில்  வேண்டாம்

    தற்போது   பெண்கள்தான்   அதிகம்,,வாசிக்கின்றனர்  எனவே அவர்கள்  பிரச்சனைகளை  எழுதுங்கள்

  பெண்களால்  ஆனதுதான்  குடும்பம்  குடும்பங்கள்  சேர்ந்து  வீதி வீதிகள்  சேர்ந்தது  ஊர்     ஊர்கள் சேர்ந்ததுதான்  தேசம்  மற்றும் உலகம்

    என்னைப்பொருத்தவரை  திருவள்ளுவரை  மிகச்சிறந்த  சிறுகதை  ஆசிரியர்  என்பேன்.   எத்தனை  எத்தனை  கருத்துகள்   உவமைகள்

        அவசரமாக  கதை   வேண்டும்  என   பத்திரிக்கைகள்  கேட்டால்  உடனே  திருக்குறளைப்  புரட்டுவேன்

எந்தக்குறள்  கண்களில் படுகிறதோ அதை வைத்து  கதை  எழுதிவிடுவேன்

கனவுகளை   குறித்து  வைப்பது   நல்லது   சில  கனவுகள்  மறந்ததுபோல இருக்கும். யோசித்தால்  நினைவுக்கு  வந்து  விடும்.    குறித்து   வைத்தால்  கதை  எழுத  வித்தியாசமான   கருக்கள் கிடைக்கும்

        சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான  பொறிகளாக அமையலாம் 


ஒரு  வீட்டின் முன்  ஒரு,  ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.


அவ்வளவுதான்    பத்திரிக்கையுலக பிதாமகன்  சாவி  அவர்கள்  பாராட்டி  தலைப்பிட்டு  (  தலைப்பு  வாசலில்  செருப்புகள்)  பிரசுரிக்கத்தக்க  ஒரு   கதை  தயாராகி விட்டது

      அந்த  கதை  இதுதான்

ஒரு  கணவன்  மனைவி..   கணவன்  மீது அளப்பரிய  அன்பும்  நம்பிக்கையும் கொண்ட  மனைவி.    

ஒரு  நாள்  கணவன்  அலுவலகம்  சென்ற பிறகு  இவள்  ஒரு   வேலையாக  வெளியே செல்கிறாள்.  அங்கே  ஒரு   பாலியல்  தொழில் நடக்கும்  வீட்டைக்கடக்கும்போது    செம   அதிர்ச்சி

கணவனின்  செருப்புகள் அவ்வீட்டு வாசலில்  கிடக்கின்றன

    அவன் மீதான  நம்பிக்கை  சுக்குநூறாக சிதறுகிறது    கண்ணீருடன்   வீடு  திரும்புகிறாள்

    இது  எதுவும்  அறியாத   கணவன் வழக்கம்போல   மாலையில்  வீட்டுக்கு வருகிறான்.    வந்தவன்  அதிர்ச்சியில் உறைகிறான்

   தாழிடப்பட்ட  அவன்வீட்டு  வாசலில் யாரோ ஒரு   ஆடவனின்  ஒரு  ஜோடி  செருப்புகள்

இந்தக்கதை   நல்ல   வரவேற்பைப்பெற்றது

என்ன  ட்விஸ்ட் என்றால்   தங்கள்  வாழ்வில்  நடந்த சம்பவத்தை  கதையாக  எழுதிவிட்டதாக   பக்கத்து வீட்டுக்காரர்கள்  சண்டைக்கு  வந்து விட்டார்கள்  (  அரங்கில்  பலத்த  சிரிப்பு )  கற்பனைக்கதை  என  சொன்னாலும்  நீண்ட  நாட்கள் என்னுடன்  பேசுவதையே  நிறுத்தி  விட்டார்கள்


        வர்ணனைகள்  அதிகம்  வேண்டாம்.  போதனைகளும்  வேண்டாம்

       ஒரு  பாத்திரத்தின்  குணாதிசயங்களை  தெளிவுற   வரையறுத்து விட்டால் ,  பல்வேறு  குணாதிசங்கள்  கொண்ட  பாத்திரங்களே கதையை எழுதி விடும்

நறுக்  என  சுருக்கமாக  சொல்லும்கலை  முக்கியம்  .   ஏழே வரிகளில்  ராமாயணம் ,  மகாபாரதத்தை  சொல்லி  வியப்பிவ்  ஆழ்த்தியவர்  கண்ணதாசன்


வரவு  எட்டணா  ,  செலவு பத்தணா ,  அதிகம் ரெண்டணா    கடைசியில்  துண்டனா  என ,படத்தின்  கதையை  பாடலின் சில  வரிகளில்  சொன்னதுபோல  கதையின்  முதல்  வாக்கியத்திலேயே  கதையை  சொல்லலாம்


ஒரு முறை   ஒரே  வார்த்தையில்  "கதை  எழுதச்சொன்னார்கள்

எழுதினேன்


கதை  :  ஐயோ


அவ்வளவுதான்  கதை..    பிறகு  விளக்கினேன்


(   அவரது  விளக்கம் ,    கதை  எழுத  தேவையான   பஞ்சாங்கம்  குறித்து  மாலன்  பேச்சு ,   கல்கி  குறித்த  சுவாரஸ்யம் ,    கெளதமானந்தர்  சொன்ன   கதை  ,   வித்யா  சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது  கணவரின்  மறைவுச்  செய்தி    அடுத்த  பதிவில்)


இதன் தொடர்ச்சி












  




         



Friday, April 22, 2022

இமையம் எழுதிய எங் கதெ ( நெடுங்கதை ) என் பார்வை

 

 எழுத்தாளர் இமையம் அவர்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பின்னணி கொண்டவை.

விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுப்பவர் , சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்பவர் என்பது உண்மை என்றாலும் இந்த அடையாளங்கள் இல்லாமல் பொதுவான மானுடம் , மனித உறவுகள் , அன்றாட வாழ்க்கை போன்றவற்றையும் இவர் எழுத்து பேசும்.

விளிம்பு நிலை  மக்களைக்குறித்த இவர் அக்கறை காரணமாக , இவர் எப்போதும் அவ்ர்களைப்பற்றியே எழுதுபவர் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது.


அப்படி இல்லாமல் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போல அழகான , பித்தேறிய காதல் கதைகளும் படைப்பவர்தான் இமையம்.

 நம் ஊருக்கு சூழலுக்கு தேவையான இவரது பெத்தவன் கதை ஒரு ஐரோப்பியனுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் இவரது என் கதெ என்ற  நெடுங்கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அவர்களால் அதில் விரவியிருக்கும் காதலை , ஆண் பெண் உறவின் மாய கணங்களை புரிந்து கொள்ள இயலும் . 


இது எங் கதெ.பத்து வருசத்துக் கதெ.என் ரத்தம்.என் கண்ணீர்.கதெ ஆரம்பிக்கறப்போ எனக்கு வயசு முப்பத்திமூணு.கதெ முடியறப்போ நாப்பத்திமூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும்தான்.


 இதுதான் கதை ,, இதுதான் கதையின் முடிவு என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டு கதை ஆரம்பிக்கிறது.


கதை முழுக்க முழுக்க வினாயகம் என்பவரின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.

ஒருவர் பார்வையில் அதுவும் வட்டார பேச்சு வழக்கில் முழுக்கதையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதே முதலில் ஒரு பேராச்சர்யம்.


     உலகியல் பார்வையில் போதிய சாமர்த்தியம் இல்லாத , வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞந்தான் விநாயகம்.  அவ்வ்வூர் பள்ளியில் எழுத்தர் வேலையில் சேரும் கமலா மீது காதல் வயப்படுகிறான். அவள் கணவனை இழந்தவள் , இரு பெண் குழந்தைகள் .  இது தவறு  உனக்கு என ஒரு வாழ்க்கை தேவை     திரும்ணம் செய்து கொள் என பெற்றோர் சொல்வதை இவன் கேட்பதில்லை.


         அவள் பேரழகி என்பதால் ஊரே அவள் கடைக்கண்ணுக்கு காத்திருக்கிறது. ஆனால் அவளோ இவனை ஏற்கிறாள். 

அதற்கு காரணம் காதலா , காமமா , ஒரு பாதுகாப்பா , அல்லது சம்பளமற்ற வேலையாள் தேடுகிறாளோ என்பதெல்லாம் நமக்குத்தெரிவதில்லை .  காரணம் கதையில் அவளது எண்ண ஓட்ட்டங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பது கதையின் மிகப்பெரிய அழகு. அவளை நியாயப்படுத்தியோ அவளை தரக்குறைவாகவோ சித்ர்கரிக்க வாய்ப்புகளை உருவாக்காமல் , கதை முழுக்க வினாயகம் பார்வையில் அவன் சொல்வதாகவே நகர்கிறது. 

  கமலா கிடைத்தது   தன் பாக்க்கியம்  , அவள் தன்னை ஏமாற்றுகிறாள் , தன்னை பயன்படுத்துகிறாள் , என அவனுக்கு அந்தந்த சூழலில் தோன்றும் எண்ணங்கள்தான் நமக்கு தெரிகின்றன. அவள் எதிர்வினைகள் , செயல்கள் நமக்கு அவன் மூலம் தெரிந்தாலும் , அவள் என்ன நினைத்து செய்கிறாள் என்பது வினாயகம் போலவே நமக்கும் புலப்படுவதில்லை.  


    மேலதிகாரி மிகவும் தொந்தரவு செய்கிறார் , எனவே சும்மா சில கொஞ்சல் குறுஞ்செய்திகள் அனுப்பினாலாவது அமைதியாக விலகி விடுவார் என நினைத்தேன் என மேலதிகாரி விவகாரம் வெடித்ததும் சொல்கிறாள். 


இது உண்மை போலவும் இருக்கிறது , உண்மை என்றால் விநாயகத்திடம் ஏன் மறைத்தாள் என்றும் அவனைப்போலவே நமக்கும்  தோன்றுகிறது ,  அவளுக்கு காசும் காமமும்தான் முக்கியம் என்றால் வினாயகத்தை விட ஆயிரம் பேர் கிடைப்பார்களே , ஏதோ ஒரு காதல் இருக்கிறதோ என்றும் தோன்றுகிற்து ( அவள் ஒரு போதும் காதல் போன்ற எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில்லை )   தன்னை காதலனின் சகோதரிகள் தேடி வந்து அவமானப்படுத்தியதைக்கூட கேலி கலந்த கிண்டலுடந்தான் சொல்கிறாள் “ இப்படி அப்படி இல்லை   செம திட்டு ஒரே கல்ல்யாண வீட்ல மூணு மைக் செட் கட்டுன மாதிரி இருந்துச்சு “ 

  அவனை சற்றும் பொருட்படுத்தாதவள் , எத்தனை நாள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தாலும் சட்டை செய்யாதவள் . அப்படிப்பட்டவள் எத்தனை நாள் கழித்து வந்தாலும் அவனை ஏற்கிறாள் .   யாரிடமும் ஏமாறாமல் கச்சிதமாக கணக்குப்போட்டு காரியம் சாதித்துக்கொள்ளும் சாமர்த்தியசாலி  அப்படிப்படவள் , அவனை முழுமையாக நம்புவதும் , தன்னை கொல்ல வந்து இருக்கிறான் என்பது தெரியாமல் , ரத்தம் வருவதற்கு அவன் சொல்லும் லாஜிக் இல்லாத பொய்யை ( அவன் சொன்ன ஒரே பொய் )  நம்புவதும் அவளது வேறு ஒரு முகம் .  ஆனால் ஒரு போதும் அவள் தன் கணவனை மறக்கவில்லை. கணவன் இடத்தை இவனுக்கு தரவும் மாட்டாள் 

   எப்படி பலரால் நாஸ்தென்கா கதாபாத்திரத்தை மறக்க முடியாதோ அது போல இந்த கதையை படித்து முடித்தால் , கமலாவையும் மறக்க முடியாது.


  கவிதைகள் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட நுண்ணுண்ர்வு கொண்ட வினாயகம் கதை சொல்லும்போது நம்மிடம் நீதி கேட்கும் தொனியில் பேசுவதில்லை   ..  தன் மீதும் தவறு இருக்கலாம் என்பதை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறான். 

 


பணம் சம்பாதிக்கிறத்துக்காக எத வேணுமின்னாலும் செய்யுற பைத்தியம் இருக்கு. ஊரு, காடுகாடுன்னு சேக்கிற பைத்தியம் இருக்கு. பொட்டசிவுளுக்கு விதவிதமா நக வேணும். சீல வேணும்.. ...


நான்தான் நாட்ட திருத்தப்பொறன்னு ரயிலுக்கு குண்டு வைக்கிறவன் இருக்கான்... சாமி இருக்குன்னு சொல்ற பைத்தியம் இருக்கு. சாமி இல்லன்னு தீச்சட்டிய ஏந்திகாட்டுற ஆளும் இருக்கு. இப்பிடி ஓலகத்திலெ இருக்கிற ஓவ்வொருத்தனுக்கும் ஓரு பைத்தியம். இந்த மாரி பைத்தியம் புடிக்காதவன் பொணந்தான். ஓலகமே பைத்தியமாத்தான் இருக்கு. எனக்கு கமலா பைத்தியம்.

என்று தன்னிலை விளக்கம் அளிப்பவன் அவன்

கதை முழுக்க வட்டார வழக்குப் பேச்சு ரசிக்க வைக்கிறது 


இந்த விளையாட்டுக்கு நானாத்தான் போனேன் .,  அவ வேண்டாம்னுதான் சொன்னா   இது சாவுற விளையாட்டு ..  இது செகண்ட் சான்ஸ் கிடையாது


மொட்டைப்பாறையில் எம்மாம் மழை பேஞ்சி என்ன அவ காத்து நான் பஞ்சு


வாங்க போங்க  வா போ ஆகி வாடி போடி ஆச்சு..  குருத்து எல பழுத்த எலயா ஆய்டுச்சு


வெறி பிடிச்ச நாயா இருந்தாலும் உனக்குனு ஒரு நாய் இருக்கணும்


தம்பிக்கு தாழ்வாரத்துலதான் படுக்கணும்னு தலையில் எழுதி இருக்குனு அவளுக்குத் தெரியல


நான் கமலாகூட பானையும் மூடியும் போல ஆனதைப்பார்த்து ஊரே சொன்னுச்சு


அவனும் அவளும் கோழியும் கோழிக்கூண்டுமா இருந்தாங்க 


 நான் சொல்ற எதையும் ஏத்துக்காத மாதிரி இதையும் ஏத்துக்கல  விரியன் பாம்புக்கு இருக்கும் விஷத்துக்கு அதுவா பொறுப்பு


இப்ப ரெண்டு பேருக்கும்  இடையே பேச்சு வார்த்தை இல்லை... வார்த்தையாலதான் மனுஷங்க வாழறாங்க . வாழ முடியும்


     ஒரு பெண்ணின் அன்பு கிடைக்காதா ,  ஒரே ஒரு முத்தம் கிடைக்காதா என ஏங்கும் ஆண் , அவள் கிடைத்து விட்டால் அந்த சந்தோஷத்துக்கு நன்றியுடன் இருப்பதில்லை .


  அவள்: வேறு யாருடனும் பேசக்கூடாது  பேசினால் சிரித்தால் ஆசிட் வீச்சு , கத்திக்குத்து என வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறான்


ஆனால் வினாயகத்தின் மனதில் இருக்கும் காதலும் , அவன் படித்த நூல்களும் அவனை ஒரு காதலன் என்பதை தக்க வைக்கிறன்றன


       எனக்குக் காதல் எனும் அனுபவம் தந்தாய் . ஆண் என உணர வைத்தாய் இதற்கு மேல் என்ன... நீ யார் கூட வேணும்னாலும் இரு... எப்படி வேணும்னாலும் இரு . என நிறைவுடன் வாழ்த்து விட்டு விலகும்போது அமர் காதலர்களில் ஒருவனாக நின்று விடுகிறான்

       இமையம் எழுத்துகளில் மட்டுமல்ல....  தமிழ் நாவல்களில்  ஒரு வித்தியாசமான நாவக்ல் எங் கதெ 




Monday, April 4, 2022

திருவள்ளூர்புத்தக கண்காட்சி. சீறிய ஆட்சியர் நேரடி ரிப்போர்ட்

  கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம்.  ஆனாலும்  சுரா , ஜெமோ என ஏராளமான இலக்கியவாதிகள் , அரசியல்வாதிகள் என அங்கிருந்து வந்து ஊர்ப்பெருமையைப் பேசுவதால் , கிஅனைவருக்குமே அம்மாவட்டம் குறித்த ஓர் அறிமுகம் உண்டு.
இப்படி எல்லா மாவட்டங்களையுமே சொல்லலாம் . பாரதிராஜா , இளையராஜா , வைரமுத்து , கவுண்டமணி , சத்யராஜ் , சாரு நிவேதிதா , எஸ் ரா , கோணங்கி என அனைவருமே அவரவர் மாவட்டங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர்

ஆனால் திருவள்ளூர் மாவட்டம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தமது அடையாளத்தை இப்போதுதான் உருவாக்கி வருகின்றன

அந்த வகையில் முதல் புத்தக கண்காட்சி அங்கு இவ்வாண்டு முதல் நடக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று

    நான் சென்றிருந்தபோது நல்ல கூட்டம்
பொதுமக்கள் மட்டுமன்றி ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்

இத்தனை நூல்களை ஒருசேர பார்ப்பது அவர்கள் மனதில் நல்விளைவுகளை உருவாக்கி இருக்கும்

       ஆட்சியர் அலுவலகம் , RTO , தலைமை காவல் அலுவலகம் என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கும் பிசி ஏரியா என்றாலும் சென்னை நெரிசலைப் பார்த்த நமக்கு இந்த இடம் அமைதியான சூழலில் இருப்பதுபோல தோன்றுகிறது 
வரும் ஆண்டுகளில் சென்னைவாசிகளும் இதை தேடி வருவர், சென்னை புத்தக கண்காட்சியின் இரண்டாவது பாகம்போல அமையக்கூடும்

திருவள்ளூர் சுற்றுப்புறவாசிகளுக்கும் இது அரிய நிகழ்வு.

புத்தகக்கண்காட்சிக்கேற்ற சிறந்த இடம் திருவள்ளூர்

நான் சென்றிருந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அங்கு வந்திருந்தார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்குப்பின் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் புத்தக கண்காட்சி நடத்துவதன் பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது.
பொறுமையாக ஒவ்வொரு ஸ்டாலையும் நின்று நிதானமாக பார்வையிட்டார்

என்ன நூல்கள் உங்களது தனிச்சிறப்பு ?
எதை வாசகர்கள் விரும்பி வாங்குகிறார்கள்  ..   எந்த எழுத்தாளர் விரும்பப்படுகிறார்   உங்களது அதிக பட்ச விலை புத்தகம் எது ?   எங்கே அதை எடுங்க பார்ப்போம் ? என வெகு தீவிரமாக ஒரு ( அந்தக்கால)   பத்திரிக்கையாளரின் முனைப்போடு பேட்டி எடுத்தார்

வண்ண புகைப்படங்கள்  கெட்டி அட்டை  ஆழ்ந்த கட்டுரைகள் என்பதால் இவ்விலையா? என்றார்

சார்  இதன் அசல் விலை 4000 .  நமது கண்காட்சிக்காக சிறப்பு விலையாக 1000 என விளக்கியதும் திருப்தியுடன் தலை அசைத்தார்

இலக்கியம் சார்ந்து இயங்குவதால் காலச்சுவடு ஸ்டாலில் சற்று அதிக நேரம் உரையாடினார்.  

இலக்கிய நூல்களை எல்லாம் மக்கள் வாங்குகிறார்களா என நம்பாமல் கேட்டார்  .  சார் , இப்போதெல்லாம் இலக்கிய நூல்கள்தான் அதிகம் விற்கின்றன என பதில் கிடைத்ததும் அவருக்கு மகிழ்ச்சி.

இது போன்ற தரமான ஸ்டால்களை அடுத்தமுறை அதிகரிக்க வேண்டும் என உதவியாளர்களிடம் பேசினார்
 
ஒரு காமெடி.   ஒரு  முக்கியமான பதிப்பகம் எந்த பரபரப்பையும் காட்டாமல் , அறிவிப்பு பதாகைகள்கூட இல்லாமல் சொற்ப புத்தகங்களுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்தது
என்ன இது என சற்று கோபமாக கேட்டார்.  புக்ஸ் , போஸ்டர்லாம் ரெடி சார். அரேஞ்ச் செய்ய நேரம் கூடி வரல என்பதுபோல சமாளித்தார் ஸ்டால்காரர்

இடம் கிடைக்காமல் பலர் முறையிடுகிறார்கள்   நீங்கள் கிடைத்த இடத்தை வீணடிக்கிறீர்களே என டோஸ் விட்டார்

ஆனால் மற்ற ஸ்டால்காரர்கள் தமது புத்தகங்களைக்காட்டி ,  அவற்றை விளக்கி அவரை கூல் செய்தனர்

பலருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முகம் சுளிக்காமல் சம்மதித்தார்

பாதுகாவலர்கள் இருந்தாலும் பொதுமக்கள்  வாசகர்கள் அவரை அணுக எவ்வித
கெடுபிடிகளும் இல்லை

பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகளக உரையாடினார்.    பல மாணவர்கள் அவரிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கினர்

ஆட்சியாளர்களும் நிர்வாகமும் நினைத்தால்  நல்ல மாற்றங்களை கொணர முடியும் என்பதற்கு திருவள்ளூர் புத்தக கண்காட்சி உதாரணம்

அதன்பின்  மாவட்ட தலைமை நூலகம் சென்று விட்டு பிறகு நூல்களுடன் கிளம்பினேன்


    














 

Tuesday, June 8, 2021

அன்றாட வாழ்வின் அழகியல் − கவிதை நூல் பார்வை

 

   உலகத்தால் கைவிடப்பட்டதான பாவனை அல்லது  எல்லாப் பெண்களாலும் காதலிக்கப்படுவதாக ஒரு ஃபேண்டசி  அல்லது தானும் இளைஞன் எனக்காட்டிக் கொள்ளும்பொருட்டு சிலர் எழுதும் போலி எழுத்துகள் என சமகால கவிதைகள் சற்று அலுப்பூட்டினாலும் நமக்கையூட்டும் சில நல்ல கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

அப்படி நம்பிக்கையூட்டும் கவிஞர்களில் ஒருவர்தான்  " மதார் "

இவரது வெயில் பறந்தது கவிதை நூல் பரவலான வரவேற்பைப் பெற்ற நூலாகும்.


போலித்தனமற்ற  சிடுக்குகளற்ற இயல்பான குரலில் இக்கவிதைகள் அமைந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

  விழிப்புணர்வுடன் இருந்தால்  காற்றில் பறக்கும் சிறு இலை கூட அரிய மெய்ஞான தரிசனம் அளித்து விடும் என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.


ஒரு கவிஞன் அன்றாட சம்பவங்களில்கூட இந்த அரிய கணத்தை கண்டு கொள்கிறான


பலூன்  இளைக்கும்போது கேட்கிறது 

அகக்காற்றை அழைத்துப் போகும் 

புறக்காற்றின் அவசரம்

என்று ஒரு கவிதை.


ஒரு கணத்தை ஒரு தருணத்தை படம் பிடித்துக் காட்டுகிறார்.  இது நம்மை எடுத்துச் செல்லும் உயரங்கள் அதிகம்.

   நதி கடலில் சங்கமிக்கச் செல்லும்போது கடல் சில அடிகள் முன்,நகரந்து நதியை தன்னுள் இழுத்துக் கொள்ளும் . காதல் காமம்  ஆன்மிகம் என  அனைத்துக்கும் பொதுவான  சங்கமம் ,  அழிவின்மை , சாஸ்வதத்தன்மை என பலவற்றை இந்த சில வரிகள் நினைவு படுத்துகின்றன

 


எங்கிருந்தோ 

ஒரு பந்து வந்து 

கைகளில் விழுந்தது  


தான் இன்னாருக்குச் சொந்தம் 

என்று அறிவித்துக்கொள்ளாத 

பந்து 

பூமியைப் போலவே இருந்தது 


உள்ளங்கையில்

பொதிந்திருந்த பந்து

 ஒருமுறை 

ஒரேயொரு முறை 

சிரித்தது


எங்கிருந்தோ வந்து விழும் பந்து வழியாக கவிஞன் காணும் தரிசனமும் அதை அந்த பந்தும் அக்னாலட்ஜ்  செய்வதும் கவிதையும் யதார்த்தமும் படைப்பாற்றலும் கைகுலுக்கும் அழகான இடம்



அமைதியான ஒரு அறை 

சுற்றி இருட்டு 

ஒரு மெழுகுவர்த்தி தரும்

 நம்பிக்கையில் 

அமர்ந்திருக்கும் பெண்

 திரியில் விளக்காடுவதை 

அவள் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டிருப்பாள்

 ‘ஒரு பனிக்காலத்து மாலை 

தரையில் கண்டெடுத்த 

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதின் அவசியம் இப்போது புரிகிறது’ 

என அவள் தனது டைரியில் எழுதுகிறாள் எழுதி முடித்ததும் 

அறைச்சுவர் நான்கும் 

அவளை நெருங்கி வந்து அமர்கின்றன


இந்தக்கவிதையில் வரும் பெண்ணும் , பனிக்கால"மாலையும் , இருளில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் அழகான காட்சிப்படிமங்களாக மனதில் தைத்துவிடுகின்றன

தேவையற்ற பொருளை பத்திரப்படுத்துவதன் அவசியம் என்பது சுவாரஸ்யமான வரிகள்.

நல்லவேளை ,  தேவையற்ற பொருள் என ஒதுக்கிவிடாமல் பத்திரப்படுத்தினோமே என ஆறுதல் பெருமூச்சு விடுகிறாள்.  பத்திரப்படுத்தாமல் போனோமே என வருந்துகிறாள் என்ற இரு சாத்தியங்களுமே கவிதைக்குள் உள்ளன.  உண்மை என்ன என்பது ஒருபோதும் வெளிவரமுடியாத,ரகசியம் என்பதை கடைசி வரிகள் சொல்கின்றன.


இது பூடகமான கவிதை என்றால் அடுத்து சற்று வெளிப்படையான கவிதை 



நதிக்கு ஓடும் பைத்தியத்தை 

சொந்த ஊருக்குத் திரும்பியவன் பார்க்கிறான் 

பைத்தியம் தெளிபவனின்

 மண்டையில் நிகழும் 

மாற்றங்களுக்கு 

ஒப்பானது அது

இந்த அனுபவம்,பலருக்கும் கிடைத்திருக்கும்..


மரத்தின் உச்சிக்கொம்பில் 

அமரும் அது 

தனது ஒற்றைப் பார்வை 

வாயிலாகவே

 மாநகர் முழுவதையும் 

கூர்மையாகப் பார்க்கிறது 

நான் வெறுமனே

 காகத்தின் கண்களை 

கூர்மையாகப் பார்க்கிறேன்

உலகை அளக்கும் காக்கையின் கண்கள் வழியே உலகைக்காணல் என்பது அழகான பார்வை..   


முகத்திற்குத் 

தண்ணீர் ஊற்றினேன்

 வெயில் கழுவினேன் 

மீண்டும் ஊற்றினேன் 

வெயில் கழுவினேன்

வெயில் என்ற அருவம், உருவமாக மாறும் தருணம்

கதவும் நானும் 

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் 

ஞாபகப்படுத்திச் சொன்னேன் ‘மரம்தானே நீங்க’ 

கதவு சொன்னது

ஏ! குட்டிப் பயலே’

கல்லைக் கண்டால் நாயைக்காணோம் நாயைப்பார்த்தால் கல் தெரியாது


நாற்காலி ,  கதவு என பார்ப்பவர்களுக்கு அவை வெறும் ஜடப்பொருட்கள்தான்.   அவை எல்லாம் மரங்கள் என அடையாளம் கண்டு கொள்ளவும் சிலர் உண்டு என்பதைவிட  அப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கு எப்படிப்பட்ட  மனம் தேவை என்பதுதான் கவிதை..   இயற்கையை நாம் அறியும்போது இயற்கையும் நம்மை அறிகிறது என்ற ஜென் கணம் கடைசிவரியில் சரேல் என நிகழ்கிறது

நமத்துப் போன தீக்குச்சி 

ஒன்றுக்கும் உதவாது 

எனச் சபித்து எறிகிறாய்

 அது அமைதியாக விழுகிறது

 எரியாத காட்டின் 

பறவைக்கூட்டிற்குக் கீழ்

    மிகப்பெரிய சாத்தியக்கூறு ஒன்று நிகழாமல் போவதன் காட்சி வெளிப்பாடு


சரியான  கண்கள் பார்வை இருந்தால் அன்றாட கணங்களும் அற்புதம்தான் ,  வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்தான் என்ற இக்விதை தொகுப்பின் சாரத்தை இக்கவிதை சுட்டுகிறது


சன்னலைத் திறந்ததும்

 ஒரு பெரும் ஆச்சர்யம் -  

ஆகாசத்தின் கதவா

 என் எளிய சன்னல்

மதார் அவர்களுக்கு வாழ்த்துகள்


வெயில் பறந்தது கவிதை நூல்   தவறவிடக்கூடாத ஒன்று












Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா