
எனவே டாக்டர் சாவித்ரி இந்த படதை பார்க்க முடிவு செய்தேன். எஸ் பாலச்சந்தர் , என் எஸ் கே , அஞ்சலி தேவி , மதுரம், ராஜம் , நம்பியார் , அசோகன் போன்ற அந்த கால நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது.
கதை , திரைக்கதை எழுதியதுடன் வேலன் மற்றும் இளங்கோவனுடன் இணைந்து வசனமும் எழுதி இருப்பவர் ஆச்சார்யா. இந்த ஆச்சார்யா யார் என்பது கண்டிப்பாக ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சந்திரலேகா படம் இவரது கதையில் இருந்து உருவானதுதான், படத்தை இவர்தான் இயக்குவதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை இவர்தான் இயக்கினார், வாசனுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அவர் விலக நேரிட்டது. அந்த படத்தில் வரும் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் காட்சிகளை இவர்தான் எடுத்தார்.
மங்கம்மா சபதம் , அபூர்வ சகோதரர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் எடுத்தார். இவரது புகழை குழி தோண்டி புதைக்க முயன்ற பலரில் கமலஹாசனும் ஒருவர். மேற்கண்ட இரண்டு பெயர்களிலும் கமலும் சில சராசரி படங்கள் எடுத்தார். இன்று அபூர்வ சகோதரர்கள் என்றால் கமல் எடுத்த படம்தான் இன்றைய இளைஞர்களுக்கு நினைவு வருமாறு செய்தது ஒரு வரலாற்று துரோகம் என்றே சொல்ல வேண்டும். அதேபோல மங்கம்மா சபதம் என்ற பெயரில் ஒரு ஃபிளாப் படமும் எடுத்தார் என்பது குறிப்படத்தக்கது.
ஆனால் இந்த துரோகங்களையும் மீறி ஆச்சார்யவைப்பற்றி இன்றும் ஒருவன் எழுதுகிறான், அதை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் அவர் மேதமைதான். என்றும் யாராவது ஒருவரால் அவர் பேசப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்.
இப்பொதெல்லாம் டிவிடி , ஆன்லைன் டவுன்லோடு என்றெல்லாம் இருக்கின்றன. அதெல்லாம் இல்லாத அந்த காலத்திலேயே நல்ல நல்ல ஆங்கிலப்படங்களை தேடிப்போய் பார்த்து , குறிப்புகள் எடுத்து தன் சினிமா அறிவை வளர்த்து கொண்டு அதன் மூலம் தமிழ் சினிமாவை வளர்த்த மாமனிதன் அவர்.
இந்த படத்தின் இயக்குனர் ஆர் எம் கிருஷ்ணசாமியும் லேசுப்பட்ட ஆளில்லை. தூக்குத்தூக்கி போன்ற மறக்க முடியாத படங்கள் எடுத்தவர். ஆரம்ப கால படங்களை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். காரணம் அந்த கால இயக்குனர்கள் தொழில் நுட்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் , டெக்னிக்கல் விஷ்யங்களில் படம் கில்லியாக இருக்கும். இவரும் ஒளிப்பதிவில் இருந்து பிறக்கு இயக்கத்திற்கு வந்தவர், இன்று தயாரிப்பாளர்க்கு நன்றாக கதை சொல்லத்தெரிந்தவர்தான் நல்ல இயக்குனர் என்றாகி விட்ட நிலையில், டெக்னிக்கல் மேட்டர்களில் தமிழ் படங்கள் குப்பையாகிவிட்டதை வேதனையோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் சிம்பிளாகி ஒந்து லவ் ஸ்டோரி என்றொரு கன்னடப்படம் பார்த்தேன்.அதன் தரத்தில் பாதியைக்கூட சமீபத்திய தமிழ் படங்கள் எட்டவில்லை என்பது வேதனையான உண்மை.
டாக்டர் சாவித்ரி படத்திற்கு இசை ஜீ ராம நாதன், பாடல்கள் உடுமலை நாராயணகவி மற்றும் மருதகாசி.
இப்படி மேதைகள் பலர் பணியாற்றிய இந்த படம் பார்ப்பதற்கு இன்றும் இனிமையாக இருக்கிறது. காமெடி ,பாடல்கள்., ரொமான்ஸ் , சஸ்பென்ஸ் என பெண்ணீய பிரச்சாரம் இல்லாமல் பொழுதுபோக்கு படமாக மிளிர்கிறது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனை கதா நாயகி எப்படி மீட்கிறாள் என்பதே கதை.
கதா நாயகி உதவும் உள்ளம் கொண்ட ஓர் டாக்டர். கணவன் , குழந்தை , தந்தை , தம்பி , தன் வேலை என இனிமையான வாழ்க்கை. அவள் தம்பி ( நம்பியார் )ஒரு பெண்ணை (ராஜம் ) தற்செயலாக சந்திக்கிறான். மோதலில் ஆரம்பித்து நட்பாக மாறும் நிலையில் அவளைப்பற்றி தெரிய வருகிறது. அவளது கார்டியனான வக்கீல் அவளை மிரட்டி தன் கைப்பிடியில் வைத்து இருப்பது தெரிகிறது.
அவள் தன் கையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவள் மன நலம் சரியில்லாதவள் என ஒரு போலி சான்றிதழை ஒரு சீக்கிய டாக்டரிம் ( எஸ் பாலச்சந்தர் ) இருந்து மிரட்டி வாங்குகிறார் . டாக்டருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழியின்றி கொடுக்கிறார்.
வக்கீல் பிடியில் இருந்து தப்பி டாக்டர் சாவித்ரி வீட்டில் அடைக்கலம் ஆகிறாள் அந்த பெண். சமரசத்துக்கு வரும் வக்கீல் தன் வீட்டுக்கு வந்து அவளுக்கு சொந்தமாக பணத்தையும் நகைகளையும் வாங்கி செல்ல சொல்கிறார். டாக்டர் குடும்பமும் அந்த பெண்ணும் அதன்படி வாங்கி வருகின்றனர். வக்கீல் போலீசுக்கு போன் செய்து தன் வீட்டில் இருந்து அவர்கள் திருடிவிட்டு தப்பியதாக புகார் செய்கிறார். சாவித்ரியின் கணவன் , அந்த பெண் அனைவரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் மறுக்கிறார்கள். விசாரணைக்கு அழைக்க வக்கீலை அழைக்கையில் அவர் கொல்லப்பட்டு இருப்பது தெரிகிறது.
கடைசியாக அவர் வீட்டுக்கு சென்றவர் சாவித்ரியின் கணவன் என்பதாலும், வக்கீலின் புகாரின் அடிப்படையிலும் கொலைப்பழி அவர் மேல் விழுகிறது. அவரை டாக்டர் சாவித்ரி எப்படி காப்பாற்றினார். உண்மை கொலையாளியை எப்படி துப்பு துலக்கி கண்டு பிடித்தார் என்பதே கதை.
என் எஸ் கே வெறும் காமெடியானாக இல்லாமல் , கொலையில் சந்தேக வலையில் சிக்கும் முக்கிய நபராக வருகிறார். அவருக்கே உரிய தமிழில் தரமான டபுள் மீனிங் ஜோக்குகள். முன்சீப்பை அவர் கோபத்தில் வெட்டி விட்டதாக போலீஸ் தேடுகிறது, அவர் ஒளிகிறார். கடைசியில் பார்த்தால் அது வேறு வாழை சீப்பு. சொந்த குரலில் மூன்று பாடல்கள் பாடி இருக்கிறார். அதில் காசிக்கு போனால் என்ற பாடல் அந்த காலத்தில் ப்யங்கர ஹிட்..இன்றும் கேட்க இனிமையாக இருக்கிறது.
சீக்கிய டாக்டராக எஸ்.பாலசந்தர். மிகை அற்ற நடிப்பு. சீக்கியர் ஏன் இங்கு இருக்கிறார். ஏன் வக்கீலிடம் அஞ்சுகிறார். ரகசிய அறையில் என்ன செய்கிறார் , வக்கீலின் வேலைக்காரனுடன் இவருக்கு என்ன உறவு என சுவாரஸ்யமான பாத்திரப்படைப்பு.
அந்த காலத்தில் பின்னணி இசை , முன்னணி இசையாக மாறாமல் , பின்னணியிலேயே இருப்பது சிறப்பு. கடைசி காட்சியில் டாக்டர் சாவித்ரி தனியாக துப்பறிய செல்கையில் பிஜிஎம் அருமை.. முடிந்தால் பிறகு அப்லோட் செய்கிறேன். கேட்டு பாருங்கள்.
அதே போல பி லீலாவின் குரலில் தேன் சுவை என்ற பாடல் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும், இசையிலும் படமாக்கப்பட்ட விதத்திலும்.
மிக்சர் சாப்பிடும் கணவன், துப்பறியும் மனைவி என்பது அந்த காலத்தில் பெரிய பரபரப்பாக இருந்தது, பல்வேறு வேடங்களில் செல்வது , ஒரு கட்டத்தில் இன்னொருவன் காதலியாக நடிப்பது என்றெல்லாம் இருந்தாலும் , செயற்கையாக இல்லாமல் இருப்பதே அன்று மக்கள் இதை ஏற்க காரணமாக இருந்தது.
பலமுறை பார்க்க வேண்டிய படம் என சொல்ல மாட்டேன். அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம் இது.. வாய்ப்பு கிடைக்கும்போது மிஸ் செய்யாமல் பார்த்து விடுங்கள்..