Monday, February 17, 2020

சாரு , பெருமாள் முருகன் , மனுஷ்ய புத்திரன்

பெருமாள் முருகனையும் சாருவையும் ஒப்பிட்டு தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது

பெருமாள் முருகன் தமிழர்களின் சாதி உணர்வை சீண்டியதால் எதிர்ப்பை சந்தித்தார்.  சாருவின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் குறிப்பிட்ட அடையாளங்கள் அற்றவை எனவே அவை பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றன என்பது அந்த கட்டுரையின் சாரம்

உண்மையில் இலக்கியம் என்பதே திரளுக்கு எதிரானது. பொதுவான மானுடனுத்துடன் உரையாடுவது. வெண்ணிற இரவுகளின் கனவுலகவாசி ஒரு ரஷ்யன் அல்லன். தமிழனாகிய எனக்கும் சொந்தமானவன். என்னைப்போன்ற ஒருவன் சூதாடியின் நாயகன் நான்தான்.. யாரோ ஒரு,ரஷ்யன் அல்லன்
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற உணர்வை உலகில் இருக்கும் எல்லா தேசத்தவனும் தன்னுடன் அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்


உலக இலக்கியங்கள் அனைத்தும் பொதுவான மனிதத்தைப் பேசினாலும் அவை அந்தந்த நாடுகளில் பெரும் சலனத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை

அதற்குகாரணம் வாசிப்பு என்பதோ இயல்பான உணர்வெழுச்சிகளோ இங்கு கிடையாது.

சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் இந்தி தெரியாமல் ழக்கள் இருப்பது வெட்கக்கேடு என்றார். இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. இவையெல்லாம் யார் கவனத்துக்கும் வராமல் கடந்தன.

யாரேனும் தூண்டிவிட்டால் அனைவருமே உணர்வெழுச்சி பெறுவார்கள். ஏதோ கண்காணா சக்தியின் பொம்மைகளாத்தான் இருக்கிறோம்

பெருமாள் முருகன் நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு இயல்பாக எழுந்ததன்று. குறிப்பிட்ட சாதி தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தூண்டிவிட்ட எதிர்ப்பு அது

நம் சமூகம் அறிவுப்பூர்வமான சமூகமாக மாறும்போது , இதுபோன்ற பொம்மலாட்ட எதிர்ப்புகள் மறையும்.

பேரிலக்கியங்கள் கடும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகும்

சாருவின் நாடகத்துக்கு , சில உரைகளுக்கு அவர் சந்திக்க நேர்ந்த எதிர்ப்புகளெல்லாம் இது போன்றவை அல்ல

திரள்களை நோக்கிப் பேசி உடனடி கவனம் பெறுவது ஒப்பீட்டளவில் எளிது. மனுஷ்யபுத்திரன் போன்ற முன்னாள் இலக்கியவாதிகள் , அரசியல்வாதி அவதாரம் எடுப்பதெல்லாம் உடனடி வெகுமதியைப் பெற்றுத்தரலாம். ஆனால் மானுடத்தை நோக்கிப்பேசும் எழுத்துகளே இலக்கிய வரலாற்றில் நிற்கும்

Sunday, February 16, 2020

வளத்தை தாங்கும் 8 தூண்கள் ஜேம்ஸ் ஆலன்

தொழில் நிமித்தம் அல்லது இலக்கிய மதிப்பு சார்ந்து படிப்பது ஒருவிதம். சும்மா படிப்பது வேறுவிதம்

இந்த சும்மா வாசித்தல்தான் முக்கியம். தப்பும் தவறுமான மொழியில் வெற்று அரட்டைக்காக எழுதப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் படிக்கலாகாது என்ற என் தீர்மானத்தின்படி
சமீபத்தில் ஒரு நல்ல நூல் படித்தேன். வளமான வாழ்வின் எட்டு தூண்கள் ... ஜேம்ஸ் ஆலன்
பிறந்து விட்ட அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ முடியும். ஆனால் முடிவதில்லை..வளமான வாழ்க்கைக்கு எட்டு விஷயங்கள்தான் அடிப்படையானவை என்கிறார் இவர்.

சுறுசுறுப்பு , பேச்சில் செயலில் அளவோடு இருத்தல் , தனக்கு உண்மையாக இருத்தல் , ஒரு முறைமையை உருவாக்கி அதை கடைபிடித்தல், பரிவு , அக்கறை , சுயநலமின்மை , தன்னை நம்பி செயல்படுதல் ஆகியவை அவர் சொல்லும் எட்டு தூண்களாகும்

இவை அனைத்தும் " அதுதான் எனக்குத் தெரியுமே " வகையிலான எளிதானவைகளாக தோன்றினாலும் அவற்றை நாம் கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை

அளவுக்கு அதிகமாக செல்போனை முகநூலை பயன்படுத்துதல் , தேவைக்கு அதிகமாக கருத்து ஃசொல்லல் , பேசுதல் போன்ற அனைத்துமே நம் இயல்பாகிவிட்டன. இது தவறு ( இரண்டாம் தூண் )

யாராவது வந்து செய்யட்டும் என நினைக்காமல் முதல் அடியை நாம் எடுத்து வைக்க வேண்டும். செய்வதில்லை

தெரிந்தே அநீதியை ஆதரித்தல் , தெரிந்தே நேரத்தை வீணடித்தல் நம்மிடம் உள்ளன ( 3)

ஒரு நாளில் இவ்வளவு நேரம்தான் செல்போன் , டிவி பயன்படுத்தலாம் , ஒரு மாதத்தில் இத்தனை நூல்கள் படிக்க வேண்டும் , இத்தனை சொற்கள் கற்க வேண்டும் போன்ற இலக்குகள் நிர்ணயித்து இருக்கிறோமா

இப்படி பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது இந்த நூல்Thursday, February 13, 2020

புத்தர் குறித்த புதிய வெளிச்சம் . புத்தக பார்வை

நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை
 நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
 நடுவு நின்றார் நல்ல தேவருமாவார்
 நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே'

என்கிறார் திருமூலர்

வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொள் என்கிறது கீதை

புத்தத்தின் வெகு ஆதாரமான கோட்பாடு இந்த நடுநிலைதான்.

இதை அ. மாரக்ஸ் எப்படி விளக்கப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவரது புத்தம் சரணம் நூலைப் படிக்க ஆரம்பித்தேன்

கீதை , சைவ சித்தாந்தம் , வைஷ்ணவம் போன்றவற்றிலும் புத்தத்திலும் இருக்கும் பொது அம்சங்களை அவர் எழுதினால் ஏமாற்றமாக இருக்கும். காரணம் , அப்படி எழுத அவர் தேவையில்லை , இந்து மதம் என்பது பார்ப்பன மதம் , தீங்கான மதம் என்பது,அவர் வாழ்நாள் முழுக்க சொல்லிவரும் விஷயம். அதிலிருந்து அவர் பிறழ முடியாது.

இந்து மதத்தை முழுக்க முழுக்க திட்டிவிட்டு புத்தத்தை வானளவு புகழ்ந்தால் நடுநிலை என்பது அடிபடும். இதை எப்படி கையாள்வார் என படிக்க ஆரம்பித்தால் சுவையான ட்விஸ்ட்;
தன் கொள்கைக்கு பாதிப்பின்றி நடுநிலையை காப்பாற்றியுள்ளார்

புத்தம் எப்படி எல்லாம் இந்து மதத்தில் இருந்தும் மற்ற மதங்களில் இருந்தும் வேறுபடுகிறது என விளக்குகிறார்

இந்து மதத்தின் குறைகளாக , கீதையின் குறைகளாக தன் புரிதல்களைச் சொல்கிறார்

அதனோடு சேர்த்து , பவுத்தம் செய்த சமரசங்களையும் சொல்வதுதான் அவரது அறிவு நாணயம். வெகு அழகு

புத்தர் உட்பட பலரும் புலால் உண்பவர்கள் என்ற தகவல் பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம்

எல்லோருள்ளும் உறைவது ஆன்மாதான் , எனவே அன்பு செலுத்து என்ற வாதத்தைவிட உனக்கு ஒரு சுயம் இருப்பதுபோல பிறருக்கும் இருக்கிறது. எனவே உன்னை பிறர் எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறாயோ அப்படி பிறரை நடத்து என சொல்வதுதான் அறிவுப்பூர்வமான செயலாக இருக்க முடியும் என புத்தர் வழியில் விளக்குகிறார்

புத்தர் இளவரசரா , அரண்மனைவாசியா ..  ஏன் துறவறம் மேற்கொண்டார் போன்றவற்றை இவர் விளக்குவது நமது பொதுவான அறிதல்களை உடைத்து தகர்க்கிறது

புத்தம் குறித்தும் ஆன்மிகம் குறித்தும் நல்லதொரு அறிமுகம் தரும் நல்ல நூல்

புத்தம் சரணம்  .. எழுதியவர் அ மாரக்ஸ்

Tuesday, February 11, 2020

இணைய எழுத்தாளர்களின் முன்னோடி . ஆர்னிகா நாசர்

சுஜாதா ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்.

 " ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். சிலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னருகே வந்து கேட்டனர் " நீங்கள் சுஜாதாதானே ?"  " தான் " என்றேன்


ஆமாம். நான் சுஜாதாதான் என எழுதுவதற்குப்பதிலாக  " தான் " என ரத்தின சுருக்கமாக எழுதுகிறார்

தொலைபேசியில் பேசினேன் − தொலைபேசினேன்,   அன்பளிப்பு வழங்கினேன் − அன்பளித்தேன்   என்றெல்லாம் விளையாட்டாக எழுதியது அன்று பெரிதும் ரசிக்கப்பட்டது..  சில ஆங்கில எழுத்தாளர்களின் பாணியை தமிழுக்கு அறிமுகம் செய்ய நினைத்து அப்படி செய்தார். மற்றபடி அவரது பலம் என்பது அந்த வார்த்தை விளையாட்டுகள் அன்று. அவரது அறிவாற்றல் , தேடல் , தமிழறிவு என அவரது வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு.

ஆனால் சுஜாதா போல எழுதுவதாக நினைத்துக் கொண்டு , சவரித்தேன் , பைக்கினேன் என்றெல்லாம் பலர் எழுதியதுண்டு. அதன்பின் அது வழக்கொழிந்தது

இணைய வருகையால் பலர் சுஜாதாவை புதிதாக படிக்க ஆரம்பித்ததன் விளைவாக மீண்டும் அந்த  சுஜாதா நடை புழக்கத்துக்கு வந்தது.  பல இணைய எழுத்தாளர்களிடம் இதைக் காணலாம்

 வணிகப்பத்திரிக்கை எழுத்தாளரான"ஆர்னிக்கா நாசரின் எழுத்துகளைப் படிக்கும்போது அவர் இந்த இணைய யுகத்தில் தன் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்து இருந்தால் இணைய பிரபலமாக உருவாகி அப்படியே இலக்கிய எழுத்தாளர் என்ற அடையாளத்தை பெற்றிருப்பார் என தோன்றியது..  சூரியனித்தேன் போன்ற சுஜாதா பாணி இணைய எழுத்துகளுக்கு இவர்தான் முன்னோடி

ஆர்னிகாவும் 1001 ஆவிகளும் என்ற அவர் நூலை படித்தேன்
சற்று வித்தியாசமான நூல்.  ஆவிகள் பற்றி மட்டும் எழுதாமல் தன் வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதி  தன் வாழ்க்கையில் ஆவிகளின் பங்களிப்பு குறித்து சிறப்பாக எழுதியிருக்கிறார்;
பிரபல சினிமா நிறுவனம் இவரை ஏமாற்றியது , பாலகுமாரன் கொடுத்த டிப்ஸ் , லாசரா , பகோபி , ராஜேஷ்குமார் போன்றோருடனான அனுபவங்கள் ஆகாயவற்றை பேய் அனுபவத்துடன் கலந்தது அருமை

இலக்கிய பதிப்பகங்கள் சில வெளியிடும் பல்ப் எழுத்துகளை ஒப்பிட்டால் இதை அற்புதமான நூல் என்றே சொல்ல வேண்டும்


Sunday, February 9, 2020

மோகவாசல் .. இயல்பான குரல்

அரசியல் என்பது திரள்களுக்கானது. இலக்கியம் என்பது திரள்களை உடைப்பது.

இரண்டுமே தேவைதான். தேச விடுதலை , சமூக நீதி , மொழியுரிமை போன்ற பல விஷயங்கள் அரசியல் நடவடிக்கைகளால்தான் சாத்தியமாகின. திரளின் ஆற்றல் மதிப்பு மிக்கது. ஆனால் இலக்கியத்தில் திரள் அழிந்து தனித்துவம் நிற்க வேண்டும்

இன்றைய இணைய உலகில் எல்லோரும் ஒற்றைத்திரளின் சிறு துளிகளாக மாறி விட்டனர்

அதே சமூகபார்வைகள் , மொக்கையான தமிழ் நடை , காதல் குறித்த பம்மாத்துகள் , போலி பெருமிதம் , மூத்த எழுத்தாளர்களுக்கு இலவச ஆலோசனைகள் என ஒரு டெம்ளேட்டிலதான் அனைவரும் எழுதுகின்றனர்

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதும் , அதை வெளிப்படுத்துதலும் பிரத்யேகத்தன்மையுடன் இருப்பதுதான் இயல்பு. இதை எழுத்து பிரதிபலித்தால் அது வெற்றி பெற்று விட்டது என பொருள். ஆனால் நம் ஆட்கள் சாரு , ஜெ , எஸ் ரா , சுஜாதா போல எழுதுவதில் சுகம் காணுகிறார்கள்

இணைய பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்களும் உண்டு.

பிரத்யேக பார்வை , பிரத்யேக சொல்லும் முறைக்கு உதாரணமாக இயம்பும்வகையில் மோகவாசல் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு படிக்க நேர்ந்தது

ஈழ எழுத்தாளர் ரஞ்சகுமார் படைப்பில் 1989ல் வெளியான தொகுப்பு

சற்றும் பிரச்சார நெடியின்றி கலாப்பூர்வமாக ஈழப்போர் காலகட்டம் எளிய குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பை ஒரு கதையில் சொல்கிறார். அதே நேரத்தில் , சிங்கள தீவிரவாத இயக்கத்தின் செயல்பாட்டையும் கபரகொய்யா என்ற சிங்களமண்ணில் வாழும் முதலைவகை உயிரியை குறியீடாக வைத்து சொல்கிறார்

பெண்ணின் ஆளுமையை , ஆற்றலை , பலவீனத்தை அரசி என்ற கதையில் படம் பிடிக்கிறார்

காமத்திலிருந்து கடவுளுக்கு என்றொரு கருதுகோள் உண்டு. காமத்தின் வாசலை கடந்து விட்டால் , காட்சிதர கடவுளோ அல்லது ஞானமோ காத்துக்கிடக்கவில்லை. அப்படி எல்லாம் ஏமாற்றிக் கொள்ள தேவையில்லை என ஒரு கதையில் ஓஷோவையும்,அவர் வழித்தோன்றல்களான கார்ப்பரேட் குருக்களையும் மறை முகமாக சாடுவது போல ஒரு கதை . அற்புதம்

இலங்கைத்தமிழ் வெகு சுகம்.

தங்கை எங்கே என்ற கேள்விக்கு உங்கேதான் எங்கேயாவது போயிருப்பாள் என பதில் சொல்கிறார் அம்மா.

உங்கே என்ற அழகான வார்த்தையை தமிழகம் இழந்து விட்டாலும் ஈழ இலக்கியத்தில் வாழ்கிறது

நூல்  .. மோகவாசல்

எழுதியவர்   .. ரஞ்சகுமார்Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா