Monday, October 7, 2013

ரஜினிப்பட இயக்குனரை கடிந்து கொண்ட இளையராஜா-இயக்குனரின் நச் விளக்கம்

ரஜினி படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் , பாட்ஷா அண்ணாமலை அல்லது ஆறிலிருந்து அறுபது வரை என நீங்கள் சொல்லக்கூடும்.

மகேந்திரன் படங்களில் கேட்டால் முள்ளும் மலரும் , உதிரிப்பூக்கள் என சொல்லக்கூடும்.

ஆனால் எனக்கு இந்த இருவர் படங்களில் பிடித்த படம் ஜானிதான்..
பல ப்ழைய ரஜினி படங்களை மறு திரையிடல்களின்போது தியேட்டர்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஜானி படத்தை தியேட்டரில் பார்த்ததே இல்லை. ஒரு நாள் தற்செயலாக சன் டீவியில் பார்த்தேன் . லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பது போல முதல் முறையே பிடித்து விட்டது.

அதன் பின் பல முறை பார்த்து வருகிறேன்.

அந்த படத்தின் ரசிகன் என்ற முறையில் அடுத்த கட்டமாக அதன் திரைக்கதை நூல் படித்தேன். வாவ்...சினிமா அனுபவத்துக்கு சற்றும் குறைவில்லாமல் வாசிப்பு அனுபவம் இருந்தது..

படத்தின் வெற்றிக்கு இளையராஜா இசை , ஸ்ரீதேவி நடிப்பு என பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் பார்பர் ரஜினியின் கேரக்டரைசேஷன் தான். அந்த கேரக்டர் அடையும்  வளர்சிதை மாற்றத்தை காட்ட எடுக்கப்பட்ட சிரத்தை , திரைக்கதை வடிவில் படிக்கையில் துல்லியமாக தெரிகிறது.

அடி செருப்பால என கோழியை திட்டுவது போல அறிமுகமாகும் அந்த கேரக்டர் ஒரு பார்பர். பொறுப்பற்றவர் . கருமி. பின் காதல் வயப்படுவது . யாரோ செய்யும் தவறுக்காக கஷ்டப்படுவது, பிறகு உண்மையிலேயே குற்றம் செய்வது , பெண்களை வெறுப்பது , பிறகு பெண்மையின் உன்னதத்தை உணர்வது என கல்ர்ஃபுல் கேரக்டர்.

ஒரு காட்சியில் இவர் இன்னொருவருக்கு தன் பார்பர் ஷாப்பில் ஷேவ் செய்து கொண்டு இருப்பார். அப்போது உதவியாளர் ஏதோ தவறு செய்வார். அப்போது பார்பர் ரஜினி டென்ஷன் ஆகி கத்துவார்.. “ வேலையை ஒழுங்கா செய்.. அக்கறை இல்லாட்டி இங்க என்ன செரைக்கிறதுக்கா வர்ற? “ என்பார்.. இதை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது.

இந்த புத்தகத்தின் தனி சிறப்பு என்னவென்றால் , திரைக்கதையை மட்டும் கொடுக்காமல் , மகேந்திரன் ஆங்காங்கு அந்த காட்சிகள் குறித்த தன் அனுபவங்களையும் எழுதி இருக்கிறார். மிக சுவாரஸ்யம்.

ஒரு காட்சியில் ஸ்ரீதேவி தன் காதலை கூறுவார், சில காரணங்களை மனதில் வைத்து ரஜினி மறுப்பார் என்பது போல காட்சி போகும். மிகவும் பாராட்டப்பட்ட காட்சி இது.

அந்த காட்சி முடிந்தவுடன் ரஜினியும் , மகேந்திரனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போது ரஜினி சொன்னாராம் “ஸ்ரீதேவி ரொம்ப நல்ல பெர்ஃபார்ம் பண்ணாங்க சார்.  அவங்களை மிஞ்சிக்காட்டணும்னு நான் டிரை பண்ணி பார்த்தேன். முடியல சார். அவங்க என்னை தோற்கடிச்சுட்டாங்க”


மகேந்திரன் நினைத்தாராம்... சக கலைஞரை மிஞ்ச வேண்டும் என ஓவர் ஆக்ட் செய்து இருந்தால் அந்த காட்சியே கெட்டுப்போய் இருக்கும். அண்டர்ப்ளே செய்து விட்டுகொடுத்து நடித்ததால்தான் , அந்த காட்சி சோபித்தது என ரஜினியைப்பற்றி பெருமையாக நினைத்தாராம்..

அந்த காட்சியை பாருங்கள்... ரஜினி பவ்யமாக நடித்து இருப்பதையும் இளையராஜாவின் இசையையும் கவனியுங்கள்..



இந்த படத்தில் இளையராஜா ஃபுல் ஃபார்மில் இசை அமைத்து இருப்பார். எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். அதில் ஒரு பாடலை சரியாக படம் எடுக்கவில்லை என கோபித்து கொண்டாராம்.

அந்த பாடல்



அந்த பெண் பாடுவது போல எடுத்து இருக்க வேண்டும். இப்படி எடுத்தது தவறு என ராஜாவுக்கு கோபமாம். ( தன் நண்பன் இளையராஜா கோபித்தார் என உரிமையுடன் சொல்லி , மகேந்திரன் இதை சொல்கிறார்.. இசை அமைத்தோமோ போனோமா என்று இல்லாமல் , தன் இசை எப்படி படம் ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதில் அவர் காட்டிய அக்கறை வியக்க வைத்தது )
மகேந்திரன் விளக்கினாராம். அந்த பெண் தன் காதலை ஏற்கனவே மறைமுகமாக கண்ணியமாக  சொல்லி விட்டாள். இப்போது நேரடியாக பாட்டு பாடி சொன்னால் , அந்த கேரக்டரின் கண்ணியம் பாதிக்கப்படும், அதேபோல , அப்படி நேரடியாக சொன்னால் , ரஜினி கேரக்டர் அதை மறுக்கும் சூழ்னிலை உருவாகும். அதனால் அவள் மனதில் பாடல் ஒலிப்பது போல அமைத்தேன் என்று சமாதானப்படுத்தினாராம்.


ஆனால் இன்னொரு பாடல் எடுக்கப்பட்ட விதம் , அனைவருக்கும் பிடித்து பாராட்டினாலும் மகேந்திரனுக்கு அதில் திருப்தி இல்லையாம். வேறு மாதிரி எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். அது என்ன பாடல் என்பதை புத்தகத்தில் காண்க.

அதே போல , ஒரு லாஜிக் மீறல் தவறுதலாக இடம் பெற்று விட்டதாக இத்தனை ஆண்டுகள் கழித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.  ஒரு குறிப்பிட காட்சியை சொல்லி, அதற்கு சமாதானங்கள் சொல்லலாம். ஆனால் அது தவறு..என் மேல்தான் தவறு என இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிப்படையாக சொல்லும் அவர் பெருந்தன்மை மலைக்க வைத்தது.. அது என்ன காட்சி என்பதையும் புத்தகத்தில் காண்க..

அந்த படத்தின் ஆடைகளை ஓவியர் ஜெ... ( ஜெயராஜ் ) வடிவமைத்தார் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்..


ஒரு காட்சியை எடுக்க தயாராகும்போது ஒரு ஆங்கில புத்தகத்தை தற்செயலாக பார்த்தாராம். அதன் தலைப்பு அந்த சீனுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றவே அந்த புத்தகத்துக்கு ஒரு ஷாட் வைத்தாராம்.. அந்த காட்சி பவர்ஃபுல்லாக இருக்கும்.

ரஜினி தன் காதலியுடன் ஷாப்பிங் போகும்போது , ஒரு பணக்கார இளைஞன் வருவான். அந்த சூழ் நிலையில் அந்த புக் காட்டப்படும். புத்தக பெயர் FUTURE SHOCK...  :)

வழக்கமாக படம் எடுத்து முடித்த பின் பின்னணி இசை சேர்ப்பார்கள்..இந்த படத்தில் குறிப்பிட காட்சிக்க்கு முதலில் இசை அமைத்து விட்டு , அதற்கேற்ப படமாக்கினார்களாம்..

இப்படி பல சுவையான தகவல்கள்...ஒவ்வொரு சீனையும் செதுக்கிய நேர்த்தி என இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது.

சினிமாவைப்பற்றி அறிந்து கொள்ள ஒரே ஒரு புத்தகம்தான் வாங்க முடியும் என்றால் இந்த புத்தகம் வாங்குங்கள்..

வெர்டிக்ட் - ஜானி--------லவ்லி 

வெளியீடு - சாருப்ரபா பதிப்பகம்

Sunday, October 6, 2013

அபூர்வமான நூறு திரைப்படங்கள் இலவசமாக -சென்னையில் சினிமா விருந்து


  நான் ஆரம்ப காலத்தில் வேலை செய்த நிறுவனத்தில் , இயந்திரவியல் துறையில்  தரக்கட்டுப்பாடு பிரிவில் இருந்தேன்.. சம்பந்தம் இல்லாத துறைகளில் தலையிடுவது , ஆர்வக்கோளாறு காரணமாக புதிதாக ஏதாவது முயன்று உள்ளதையும் கெடுப்பது என எதையாவது செய்து சீனியரை டென்ஷன் ஆக்குவது என் இயல்பு.

அவர் காச் மூச் என கத்துவார். “ ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க..உங்க படிப்புக்கு மதிப்பு கொடுக்குறேன்.. அதை கெடுத்துக்காதீங்க “ என சத்தம் போடுவார்.

அந்த டென்ஷனான நிலையிலும் என் படிப்பை சிலாகிப்பது ஒரு கெத்தாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லோரும் படித்தவர்கள்தான் என்றாலும், எக்ஸ்ட்ராவாக படிக்கிறோம் அல்லவா.. அதற்கு என ஒரு மதிப்பு உண்டு.   இசை , ஓவியம் போன்ற கலைகள் தெரிந்து இருந்தால் , கண்டிப்பாக அதற்கும் ஒரு மதிப்பு உண்டு.

வாசித்தல் நம் புரிதலை , மொழி ஆளுமையை , வாழ்க்கை குறித்த புரிதலை கண்டிப்பாக உயர்த்துகிறது.

ஆனால் அந்த படிப்பு எதை கற்றுதருகிறதோ , அதை விட அதிகமாகவே நல்ல சினிமாக்கள் நமக்கு கற்றுத்தர முடியும். வாழ்க்கையைப்பற்றி , மனிதர்களைப்பற்றி , மரணத்தைப் பற்றி , நல்ல சிந்தனைகள் பற்றி புத்தகங்களை விட அதிகமாக சினிமா நமக்கு கற்றுத்தர முடியும்.
ஆனால்  நம் ஊரைப் பொருத்தவரை சினிமா என்பது வெறும் கேளிக்கையாகவே கருதப்படுவதால் , வெற்று கேளிக்கை படங்கள் மட்டுமே வருகின்றன.

ஓவியம் , இசை , சிற்பம் போல சினிமாவுக்கு கலை அந்தஸ்து  கிடைக்கவே இல்லை.
சினிமா துறையில் இருப்பவர்கள் அதை பணம் செய்யும் மெஷினாக நினைக்கிறார்களே தவிர , அதில் இருப்பது குறித்து பெருமிதம் ஏதும் இல்லை. சினிமா பார்ப்பவர்களும் ஒரு கலையனுபவம் பெறும் ஆர்வத்தில் இருப்பது இல்லை.

ஆனால் நல்ல வேளையாக எல்லோரும் இப்படி இருப்பதில்லை. சினிமாவை ஒரு கலைப்படைப்பாக எண்ணி தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.. அவற்றை தேடி தேடி ரசிப்பவர்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

 நல்ல படம் எடுக்கத்தயார் , பார்க்க ஆளில்லை என வருத்தப்படும் கலைஞர்கள் ஒரு புறம். நல்ல படம் பார்க்க நாங்கள் தயார்.. ஆனால் நல்ல படங்கள் வருவதில்லையே என வருத்தப்படும் ரசிகர்கள் ஒரு புறம்.

டிமாண்ட் அண்ட் சப்ளையில் ஓர் இடைவெளி.

இப்படி ஒரு சூழலில் , நல்ல ரசிகர்களுக்கு ஓர் அற்புத விருந்தாக , தமிழ் ஸ்டுடீயோ அமைப்பு சார்பில் , இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக , தினமும் ஒரு சினிமா வீதம் , நூறு படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

திரையிடப்பட இருக்கும் ஒவ்வொரு படமும் மிக மிக முக்கியமான படங்களாகும்.
இதற்கான தொடக்க விழா 5.10.2013 சனிக்கிழமை நடந்தது.

திரை உலக அறிஞர்களான  அம்ஷன் குமார் , அறந்தை மணியன் , ஆர் ஆர் சீனிவாசன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இப்படி ஒரு நிகழ்வில் , சிலர் அமர இடம் இன்றி நின்று கொண்டு கலந்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது..

இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திரா திரையிடப்பட்டது. அது குறித்து , சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.

நாடக உலகம் ஃபேமசாக இருந்த அந்த கால கட்டத்தில் சினிமா என ஒன்று எடுக்கப்பட முடியும் என்பதையே பலர் நம்பவில்லையாம். பால்கே இதற்காக எவ்வளவோ முயன்றும் யாரும் படம் எடுக்க நிதி உதவி செய்ய முன் வரவில்லை.

திரைப்படம் என்றால் என்ன என டெமோ கொடுக்க முடிவு செய்த அவர் , தன் தோட்டத்தில் விதை ஒன்று நட்டு அதை படமாக்கினார். அது வளரத்தொடங்கும் ஒவ்வோரு ஸ்டேஜையும் படம் ஆக்கி. அது செடியாகி கொடியாகி படரும் வரை பொறுமையாக ஒவ்வொரு காட்சியாக எடுத்தார். அதை மொத்தமாக திரையிட்டு காட்டியபோது, அனைவரும் அதிசயித்துபோனார்கள். பிறகு ஒருவர் படம் தயாரிக்க நிதி அளித்தார்.

 நிதி கிடைத்ததே தவிர நடிக்க ஆள் கிடைக்கவில்லை..குறிப்பாக பெண் வேடத்தில் நடிக்க யாரும் வரவில்லை. ரெட் லைட் பெண்களை அணுகினாராம். என்ன வேண்டுமானாலும் செய்வோம் , சினிமா மட்டும் முடியாது என்று சொல்லி விட்டார்களாம்.

அதன் பின் கஷ்டப்பட்டு , நஷ்டப்பட்டு ஆண்கள் சிலர் கைகாலில் விழுந்து பெண் வேடம் போட்டு நடிக்க வைத்தார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்தாலும், தான் செய்வதன் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்து இருக்கிறது.. தான் வரலாறு ஒன்றை படைக்கிறோம் என்ற பிரஞ்ஞை அவருக்கு இருந்து இருக்கிறது.

அதனால் தான் படம் எடுப்பதை ஒரு டாக்குமெண்ட்ரியாக அந்த காலத்திலேயே பதிவு செய்து இருக்கிறார், அது இன்று ஒரு வரலாற்று ஆவணமாக திகழ்கிறது.


அந்த படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து த கிரேட் டிரெய்ன் ராபரி படம் திரையிடப்பட்டது.

மவுனப்பட யுகத்தில் நாமெல்லாம் இருந்திருக்க மாட்டோம். ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து , பெரிய திரையில் மவுனப்படம் பார்த்தது கால இயந்திரத்தில் அந்த காலத்துக்கே சென்றது போல் இருந்தது..
அந்த காலத்தில் மவுனப்படம் ஓடும்போது , விளக்கம் சொல்ல ஒருவர் அமர்த்தப்பட்டு இருப்பாராம்..அந்த பணியை இந்த திரையிடலில் , அறந்தை மணியன் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்தார்..


இரண்டாம் நாளான இன்று 6.08.2013 தோ பிகா ஜாமீன் என்ற படம் திரையிட்டபட்டது .சினிமா என்றால் இதுதான் சினிமா.. விரிவாக பிறகு எழுதுவேன்.

தொடர்ந்து இன்னும் 98 படங்கள் திரையிடப்பட உள்ளன.

இனிமையான சூழல் , நகரின் மையப்பகுதி, போக்குவரத்து வசதியுள்ள பகுதி என கவனித்து இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

எங்கே?

இடம்: ட்ரீம்ஸ் இந்தியா , 41 சர்குலர் ரோட், கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் பூங்கா அருகில்)
நேரம்: மாலை 7மணி. (7 PM)

எப்படி வருவது?

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வருவதாக இருந்தால் , லிபர்ட்டி/ மீனாட்சி கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்து பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கும், அதை ஒட்டி இடது புறம் செல்லும் சாலையில் திரும்புங்கள்... முதல் ரைட் எடுங்கள்.. உங்கள் வலது பக்கம் ட்ரீம்ஸ் இந்தியா என்ற பெயர் பலகையை பார்க்கலாம்..

போரூர் , சாலிகிராமம் , வடபழனி கோயில் மார்க்கத்தில் வந்தால் , டிரஸ்ட் புரம் ஸ்டாப்பிற்கு அடுத்தாற்போல் , சந்திர பவன் ஹோட்டலை ஒட்டி வலது புறம் செல்லும் சாலையில் திரும்பி, ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுங்கள்.. சிறிது தூரத்தில் உங்கள் இடது பக்கம் ட்ரீம்ஸ் இந்தியா என்ற பெயர் பலகையை பார்க்கலாம்..

மின் தொடர் வண்டியில் வந்தால் கோடம்பாக்கம் நிலையத்தில் இறங்க வேண்டும்.


டிக்கட் கட்டணம்?

கட்டணம் ஏதும் இல்லை...  
















தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன் கேரளாவில் நடந்த திரையிடல் குறித்து பேசினார். ஒரே நாளில் பல படங்கள் தொடர்ந்து திரையிடப்படுமாம். சாப்பிட்டு வரக்கூட நேரம் இருக்காதாம்.,எனவே தேவையான உணவை கையோடு கொண்டு போய் விடுவாராம்.

ஆனால் இந்த திரையிடலில் ஒரு படம்தான் என்பதால் , உணவெல்லாம் கொண்டு வர வேண்டியதில்லை.. தேவைப்பட்டால் ஸ்னேக்ஸ் , தண்ணீர் , ஜூஸ் மட்டும் கொண்டு வந்து ரிலாக்சாக படம் பார்க்கலாம். 



வரும் வாரம் திரையிடப்பட இருக்கும் படங்கள்..


****************************************************************************


07-10-2013 திங்கள் - அவன் அமரன் (தமிழில் வெளிவந்த முதல் கம்யுநிசத் திரைப்படம்)
----------------------------------------------
08-10-2013 செவ்வாய் - மர்மயோகி (தமிழின் முக்கியமான இயக்குனரான கே. ராம்னாதின் திரைப்படம், இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
----------------------------------------------
09-10-2013 புதன் - திக்கற்ற பார்வதி ( சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் முதல் திரைப்படம் இது. தமிழக முதல்வர் ராஜாஜி அவர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம்)
----------------------------------------------
10-10-2013 வியாழன் - ஒரே ஒரு கிராமத்திலே (தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடைவிதித்த திரைப்படம், இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை வாலி எழுதியிருந்தார்)
----------------------------------------------
11-10-2013 வெள்ளி - சாசனம் (இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் நிதியுதவி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். கந்தர்வனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
12-10-2013 சனிக்கிழமை - யாருக்காக அழுதான் (எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய திரைப்படம், நாகேஷின் பிரமாதமான நடிப்பிர்காகவே போற்றப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
13-10-2013 ஞாயிறு - ஏழை படும் பாடு - கே. ராம்நாத் இயக்கிய இந்த திரைப்படம் தமிழின் முக்கியமான திரைப்படம். லெஸ் மிசரப்லஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்.

14-10-2013 திங்கள் - ஓர் இரவு - அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.

Contact: 9840698236

15-10-2013 செவ்வாய் - மதன காமராஜன் (நிகழ்கால பார்வையாளர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த திரைப்படம், பழங்கால வாழ்க்கை முறை, தெரிந்துக் கொள்ள உதவும்.

16-10-2013 புதன் - நந்தனார் - நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.









Friday, October 4, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ரசிகர்களிடம் தோல்வி , பத்திரிக்கைகளிடம் வெற்றி..ஏன்? ஓர் அலசல்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் தமிழ் நாட்டின் ஓர் இடத்தில்கூட ஓடவில்லை. ஆனால் , பத்திர்க்கைகள் எல்லாம் பாராட்டுகின்றன என்றால் பத்திரிக்கைகளுக்கு இந்த  எல்லாம் உள் நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வெகுஜன ரசனைக்கும் இவர்களுக்கும் ஏன் இந்த இடைவெளி என்பது எளிதான உளவியல்தான்.

இந்த இடைவெளி ஆய்வுக்கு உரியது

ரஜினி , எம் ஜி ஆர் போன்ற ஹீரோக்கள் நடிக்கும் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்... அவர்கள் பாத்திரத்தின் தன்மை தெரியாவிட்டாலும் கூட  , அந்த பாத்திரத்துடன் ஆரம்பம் முதலே நம் ஆட்கள் ஒன்றி விடுவார்கள்.. அந்த ஹீரோ கொலைகாரன்  என்றால் , போலீசிடம் மாட்டக்கூடாதே என பரிதவிப்பான். ஹீரோ போலீஸ் என்றால் கொலைகாரர்களை பிடிக்க வேண்டுமே என ஆசைப்படுவான்..

ஏன் கொலை செய்கின்றான் என்பதெல்லாம் எஸ்டாபிளிஷ் செய்ய வேண்டிய அவசியமே இராது.

ஆனால் இந்த படத்தில் முக்கால்வாசிப்படம் வரை சாதாரண ரசிகனால் படத்தில் ஒன்றவே முடியவில்லை.. அடுத்த முறை செல்லும்போது ரசிகர்களை கவனியுங்கள்... முகத்தில் எரிச்சலுடனும் வேதனையுடனும் பார்த்து கொண்டு இருப்பதை கவனிக்கலாம்.
ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட் என்பார்க்ளே... இந்த படத்தை பொருத்தவரை முதல் ஒன்றரை மணி நேரம் - PAIN PAIN PAIN  தான். யாரோ யாரையோ கொல்கிறார்கள்... யார் நல்லவர்..யார் கெட்டவர் , அந்த மாணவன் செத்து ஓனாய் பிழைக்க வேண்டுமா. அல்லது அந்த ஓ நாய் செத்து மாணவன் பிழைக்க வேண்டுமா... அல்லது அவனை விரட்டுபவர்கள் சாக வேண்டுமா.அல்லது படம் பார்க்க வந்த நாம் சாக வேண்டுமா.. ஒன்றுமே புரியாமல் பார்வையாளர்கள் மலங்க மலங்க விழிப்பதை பார்த்து பாவமாக இருந்தது.

அதற்குபிறகு பழைய பட பாணியில் கதை சொல்லி தன்னை நியாயபடுத்தும் காட்சியில் எல்லாம் கேலிக்குரல்கள்தான் தியேட்டரில் கேட்கின்றன.. ஆப்பரேஷன் செய்யப்பட்டு உடனடியாக கொலை செய்ய கிளம்புவது... ஆள் அரவமற்ற சென்னை ...  அந்த கால அசோகன் பாணியிலான மிகை நடிப்பு வில்லன் , நேரம் கெட்ட நேரத்தில் கதை கேட்பது என படு செயற்கையாக இருப்பதால் மக்கள் மனதில் ஒட்டவே இல்லை.

சரி...இந்த குறைகள் ஏன் பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லை என்றால் எளிதான காரணம்தான்.

ஒரு ரஜினி ரசிகன் , ரஜினி பறந்து பறந்து சண்டை போடுவதை பெரிய லாஜிக் மீறலாக கருத மாட்டான். கேரக்டர் ஆரம்பத்தில் எஸ்டாபிலிஷ் செய்யப்படாவிட்டாலும் , அந்த பாத்திரத்துடன் ஒன்றி விடுவான்.

அது போல , நகர வாசிகளான இவர்கள் பெரும்பாலும் மிஷ்கின் ரசிகர்களாக இருப்பதால் , இந்த குறைகள் இருந்தாலும், படம் விறு விறுப்பாக செல்வதாக தோன்றுகிறது..ஆரம்பம் முதலே , அந்த கைவீசம்மா கைவீசு வசனத்துக்கு முன்பு இருந்தே, ஓனாய் கேரக்டருடன் ஒன்றி விடுவதால் , படம் அருமையாக இருப்பதாக தோன்றுகிறது.

மிஷ்கினுக்கு பதிலாக விஜய் நடித்து இருந்தால் , கண்டிப்பாக என் கண்களுக்கும் இந்த குறைகள் தெரிந்து இருக்காது. எவ்வளவோ மசாலா படங்கள் பார்க்கிறோம். அதில் எல்லாம் இதை விட பெரிய குறைகள் இருப்பது சகஜம்தானே..

எனவே இதில் பத்திரிக்களை குறை சொல்லி பயன் இல்லை.

ஆனால் படம் எடுப்பவர்கள் , வெகுஜன ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என அவர்கள் பார்வையை அறிந்து கொள்ள முனைந்தால்தான் , இது போன்ற தோல்விகளில் இருந்து தப்ப முடியும்.

அல்லது வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் , நல்ல படம் தர முயலவேண்டும்.

இதற்கு முதல் கட்டமாக பத்திரிக்கைகள் படிப்பதை நிறுத்த வேண்டும்.




Thursday, October 3, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- தமிழ் சினிமாவின் அவமானச் சின்னம்


என் பொது வாழ்க்கையில் , ஒரு சினிமாவுக்கு கிளம்பிச்சென்று , படம் பார்க்காமல் வந்ததாக வரலாறு இல்லை. பிளாக்கில் டிக்கட்  வாங்கியாவது படம் பார்த்து விட்டுத்தான் வருவேன்.

ஆனால் மிஷ்கின் படம் பார்க்க , கஷ்டப்பட்டு கிளம்பி அவ்வளவு தூரம் சென்று விட்டு படம் பார்க்காமல் வர வேண்டியதாயிற்று.    அலுவலக நண்பர்கள் சேர்ந்து  செல்வதாக திட்டம். சிலரால் வர முடியாமல் போகவே , எங்களுடன் ஒரே ஒரு பெண் மட்டும் வர வேண்டிய நிலை.. ஆனாலும் எங்களுக்குள் பக்குவமான நட்பு இருப்பதால் , அதில் பிரச்சனை இல்லை. ஆனால் தியேட்டரை அடைந்ததும் பயங்கர அதிர்ச்சி. எங்களையும் சேர்த்து தியேட்டருக்கு 11 ஆட்கள் மட்டுமே வந்து இருந்தனர். அதில் சில காதல் ஜோடிகள். அவர்கள் படம் பார்க்க வந்தது போல தெரியவில்லை.

இந்த சூழ் நிலையில் அந்த பெண் தோழருடன் படம் பார்ப்பது சரியல்ல என தோன்றியதால் , படம் பார்க்காமல் திரும்பினோம். நண்பர்களுடன் சேர்ந்து படம்பார்ப்பதே , கூட்டத்தோடு கூட்டமாக ரசிப்பதற்குதான்..ஆக எரிச்சலுடன் திரும்ப நேரிட்டது.

ஆனால் முந்தைய மிஷ்கின் படங்களை ரசித்தவன் என்ற முறையில் , இந்த படத்தையும் பார்க்கலாம் என்று நினைத்து நான் மட்டும் போனேன்.

அப்போது ஓரளவு கூட்டம் ( சுமார் 30 பேர் )  இருந்தது .

படம் பார்ப்பதுடன் ரசிகர்கள் பல்ஸையும் கவனிப்பது என் இயல்பு என்பதால் , அந்த கூட்டம் ஓரளவு திருப்தி படுத்தியது.

படத்தின் ஆரம்பமே ஏமாற்றம் அளித்தது.  படம் எதோ ஒரு கற்பனையூரில் நடப்பது போல இருந்தது.  ஒருவர் உயிருக்கு தன்னந்தனியாக போராடிக்கொண்டு இருக்கிறானாம். சுற்றிலும் ஆளே இல்லையாம். இப்படி சென்னையில் நிகழ வாய்ப்பில்லை.
உதவுகிறார்களோ இல்லையோ..அது வேறு பிரச்சனை. ஆனால் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவது சென்னை இயல்பு.

ஒரு மாணவன் காப்பாற்றுகிறான் . அதனால் ஏற்படும் விளைவுகள் என படம் செல்கிறது. அதை எவ்வளவு விறுவிறுப்பாக எடுத்து இருக்கலாம். மாறாக படு மொண்ணையாக எடுத்து இருக்க்கிறார் இயக்குனர்.

இனிமே தமிழ் படத்தை தியேட்டரில் வந்து பார்ப்பியா.. பார்ப்பியா என செருப்பால் அடிப்பது போல திரைக்கதையை அமைத்துள்ளார்கள்.

ஏன் போரடிக்கிறது என்றால் , நம்மால் முதல் ஒரு மணி நேரம் வரை படத்தில் ஒன்றவே முடியவில்லை.

ஏதாவது நல்ல படம் ஒன்றை யோசித்து பாருங்கள்.

ஷேடோ ஆஃப் டவுட் என்ற ஹிட்ச்காக் படத்தை யோசித்து பாருங்கள்.

ஒரு கொலைகாரன் , தன்னை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு , தன் உறவினர் வீட்டுக்கு வருகிறான் என படம் ஆரம்பிக்கிறது.

அவன் பிடிபட்டு விடக்கூடாதே என அவன் கோணத்தில் படம் நகராது. கொஞ்ச நேரத்திலேயே அவனால் , அந்த வீட்டில் இருக்கும் உறவுப்பெண்ணுக்கு ஆபத்து வந்து விடக்கூடாதே என அந்த ஹீரோயின் கோணத்தில் அவள் உணர்வுகளுடம் ஒன்ற ஆரம்பித்து விடுவோம்.அதன்பின் அவளுக்கு வரும் பிரச்ச்னைகள் , அவள் எப்படி சமாளிக்கிறாள் என படம் பரபர என நகரும். காரணம் அவள் கேரக்டர் கொஞ்ச நேரத்திலேயே எஸ்டாபிளிஷ் ஆகி விடுகிறது.

இப்போது வந்த பார்க்கர் படத்தை எடுத்து கொண்டால் , அதை சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் ஒருவாட்டி பார்த்து ரசிக்கத்தக்க படம். அதிலும் கதானாயகன் தேவையின்றி யாரையும் கொல்ல மாட்டான் என்பது போல அவன் கேரக்டர் நம் மனதில் பதிவதால் , படத்துடன் ஒன்ற முடிகிறது.

ஓ. ஆட்டுக்குட்டியும் படத்தில் அந்த ஓநாய் கேரக்டர் பற்றி நமக்கு எதுவும் தெரியாததால் , அவன் மீது நமக்கு எந்த ஆர்வமும் இருப்பதில்லை. எனவே எந்த பதைபதைப்பும் நிகழ்வதில்லை. அந்த மாணவன் கேரக்டர் மீது வேண்டுமானால் கொஞ்சம் ஈடுபாடு ஏற்படுகிறது. அதிலும் ஆழமில்லை. முக்காலவாசி படம் வரை படத்துடன் ஒன்றாமலேயே பார்க்கிறோம். இதுவே படத்தின் பெரிய தோல்வி என கருதுகிறேன்.

ஆனாலும் அந்த கேரக்டர் பற்றி காட்சி ரீதியாக ஏதாவது சொல்லி , ஒட்டு மொத்த படத்துக்கும் வேறோர் அர்த்தம் கொடுப்பார் என எதிர்பார்த்தேன். எனக்கு கிடைத்ததோ பெரிய அதிர்ச்சி.

\பாசமலர் படத்தில் கை வீசம்மா கை வீசு என சிவாஜி ஒரு வசனம் பேசுவாரே..அது போல ஒரு வசனம் பேசுவார் பாருங்கள்/ . எனக்கு சத்தியமாக கண்ணீரே வந்து விட்டது. பாஸ் ..இது 2013.... இந்த சீனைத்தான் படத்தின் முதுகெலும்பாக நினைத்து இருக்கிறார் என்றால் , சினிமாவே அவருக்கு தெரியவில்லை என்றே பொருள்.

நாம் சிவாஜியின் வசனத்தை குறை சொல்லவில்லை. அந்த காலத்துக்கு வசனம் தேவைப்பட்டது. ஆனால் , இன்றைய நிலையில் வசனத்தை நம்பி அந்த காட்சியை வைத்தது பெரிய பிழை என்பேன்.

an occurrence at owl creek bridge என்று படம் வந்தது.   அதில் தூக்குத்தண்டனை கைதி தன் மனைவியை தன் மனதில் காண்பது , நீரில் மிதக்கும் மரத்துண்டு என சில காட்சிகள் நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும். நிமிடக்க்கணக்கில் பேசும் வசனங்கள் இதை ஒரு போதும் சாதிக்காது.

படம் இரவில் நடக்கிறது என்கிறார்கள்.. ஆனால் சென்னையின் இரவு பற்றிய காட்சிப்படிமங்களோ , ஒலிக்குறிப்புகளோ சற்றும் இல்லை.

ஒரு முறை சாவியை அலுவலகத்திலேயே வைத்து வந்து விட்டேன். மீண்டும் அலுவலகம் செல்ல முடியாது.. சாவியும் இல்லை. என்ன செய்வது... இரவு முழுக்க சென்னையை இலக்கின்றி சுற்றி வந்தேன். பகல் நேர சென்னையில் இருந்து மிக மிக மாறுபட்ட காட்சி , மாறுபட்ட மனிதர்கள் என புதிய உலகத்தை பார்த்தது போல இருந்தது.. ஆனால் படத்தில் அது இரவு போலவே இல்லை. இரவுக்கே உரிய சப்தங்களை இளையராஜா இசை விழுங்கி இருக்கிறது.

புத்திசாலித்தனமான , சுவையான காட்சிகளை தேட வேண்டி இருக்கிறது. சும்மா வீடியோ கேம் போல சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

கொலைகாரன் கில்லாடியாக இருப்பான் என நினைக்கிறோம். அவனோ இரவில் தப்பிப்பது ரிஸ்க் என்ற பொது அறிவு இல்லாமல் இருக்கிறான். போலீசார் அதை விட முட்டாளாக இருக்கிறார்கள்.

அதிலும் வில்லனை செக் போஸ்ட்டில் பார்த்துவிட்டு , கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையாமல், ஊரில் இருந்து வந்து இருக்கும் சித்தப்பாவை குசலம் விசாரிப்பது போல விசாரித்து , சுடப்படுவது உலகத்தரம்.

அந்த காலத்தில் மொட்டை பாஸ் கிளைமேக்ஸ் சண்டைக்கு வருவது போல , பொறுப்பாக யூனிஃபார்ம் அணிந்து கிளைமேக்ஸ் சண்டைக்கு வருவது,  வீட்டில் அமர்ந்து கதை கேட்பது போல , அந்த அபாயகரமான சூழலில் குழந்தை கதை கேட்பது , அதற்கு பொறுமையாக விளக்கமாக கதை சொல்வது, கிளைமேக்சில் போலிஸ் வந்து போஸ் கொடுப்பது... முடியலடா சாமி....

நல்ல அம்சங்களே இல்லையா என்றால் இருக்கின்றன.. ஆனால் , தோல்வி உறுதி என தெரிந்த பின் , ஜிம்பாப்வே போன்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் இலக்கு ஏதும் இன்றி அவ்வப்போது அடிக்கும் அருமையான ஷாட்கள் போல பலனின்றி போய் விட்டன.. இளையராஜாவின் இசை சில இடங்களில் , மிஷ்கினின் நடிப்பு சில இடங்களில் , பிச்சைக்காரன் கேரக்டர் என இருளில் சில நட்சத்திரங்கள் மின்னுவதை மறுக்க முடியாது.. ஆனால் அத்தனையும் வீணாகி விட்டது..

சரி...எத்தனையோ குப்பைகள் வருகின்றன.. அதுபோல இதுவும் இருக்கட்டுமே என நீங்கள் நினைக்கலாம். இது ஏன் அவமானச்சின்னமாகிறது என நினைக்கலாம்.

ஒரு சாமியார் விசிடி பரபரப்பாக பேசப்பட்டது. அலைந்து திரிந்து வாங்கினேன். வாங்கும்போதே ப்ரிண்ட் நன்றாக இருக்காது என தெரியும் என்பதால் , எனக்கு ஏமாற்றம் இல்லை.

ஆனால் ** நடிகை விசிடி வாங்கி பார்த்த போது , செம கோபம் வந்தது.. காரணம் அதில் இருந்தது அந்த நடிகையே அல்ல... நம்பி ஏமாந்தால் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

அது போல , மிஷ்கின் , இளையராஜா என நம்பி ஏமாந்த வலி அவ்வளவு சீக்கிரம் ஆறாது.

இந்த படத்தை மக்கள் புறக்கணித்து விட்டாலும் , சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும். ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாது என தெரிந்து கொள்ள...

வெர்டிக்ட் - ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் - ஒப்பேறாது







Thursday, September 19, 2013

முழுமையை நோக்கி ஒரு பயணம்- ஸ்வீடன் இயக்குனரின் சூப்பர் திரைப்படம்


  நம் ஊரில் ஒரு நம்பிக்கை உண்டு. நம்மை கண்ணீர் விட்டு அழ வைக்கும் படங்கள்தான் நல்ல படங்கள். அழ வைப்பவர்தான் நல்ல இயக்குனர். அழ வைப்பவர்தான் நல்ல நடிகர்.

வெளி நாடுகளில் இந்த நம்பிக்கை இருக்கிறதா? உலகளவில் போற்றபடும் ஸ்வீடன் இயக்குனர் இங்மர் பெர்க்மன் படம் ஒன்றை பார்த்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

குடும்பம் , உறவுகள் , செண்டிமெண்ட் , ஆன்மிக தேடல்  எல்லாம் நம் ஊரில்தான் செல்லுபடியாகும். வெளி நாடுகளில் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று நினைத்தவன் நான். நம் ஊரில் ஆனால் இந்த உறவு சிக்கல்களை , இதன் நுட்பங்களை செண்டிமெண்ட் குப்பைக்குள் மூழ்கடித்து படம் எடுப்பார்கள்.. அல்லது காதல்தான் உலகில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல படம் எடுப்பார்கள்.

நம்மை விட நாகரீக வளர்ச்சியிலும் , பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ள நாடுகள் உறவுகளை , சுய தேடலை மதிப்பதில்லையா என்ற கேள்வியுடன்  Wild strawberries படம் பார்க்க ஆரம்பித்தேன்.

முதல் காட்சியே வெகு அழகாக இருந்தது. கறுப்பு வெள்ளைப்படங்களுக்கே உரிய துல்லியம். ஒளியும் இருளும் அழகாக படம்பிடிக்கப்பட்ட முதல் காட்சி. 78 வயது முதியவர் ( டாக்டர் போர்க் )  தன் அலுவலக அறையில் அமர்ந்து இருக்கிறார். அவரை கவுரவிக்க இருக்கிறார்கள் . எனவே நீண்ட பயணதுக்கு தயார் ஆகிறார். அவருக்கு மகனும் மருமகளும் 96 வயது தாயாரும் உண்டு .  முதிய பணிப்பெண் அவரை கவனித்துக் கொள்கிறார்.
படம் யாரைப்பற்றியது , முக்கிய கதாபாத்திரங்கள் யார் என்பது குறித்து சில வினாடிகளில் அறிந்து கொள்கிறோம். அவர் செல்ல இருக்கும் பயணம் முக்கியமானது என்பதும் அண்டர்லைன் செய்யப்பட்டு விடுகிறது.

பயணம் செல்வதற்கு முன் அவருக்கு ஒரு கனவு வருகிறது. வித்தியாசமான கனவு. ஒரு புதிர்போல அந்த கனவு விரிகிறது.

தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. வீடுகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமே இல்லை. தெருக்கடிகாரத்தில் முள் இல்லை. அவர் தன் கடிகாரம் பார்க்கிறார். அதிலும் முள் இல்லை. சாலையில் ஒருவன் நிற்கிறான். அவனை தொடுகிறார். அவன் இறந்து விழுகிறான்.

ஒரு குதிரை பூட்டிய ரதம் ஓடி வருகிறது. அதன் சக்கரம் உடைகிறது. உள்ளே ஒரு சவப் பெட்டி. உள்ளே யார் என பார்த்தால் , உள்ளே இருப்பவர் இவர்தான்.

ஓடாத கடிகாரம் , சக்கரமில்லா வண்டி , உயிர் இல்லா உடல் , மக்கள் இல்லா சாலை போல முதுமையை இவர் உணர்கிறாரோ என நமக்கு தோன்றுகிறது.

ஆரம்பத்தில் பயணமும் , கனவும் முக்கியமாக காட்சிகளாக வருவதால் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. ப்யணங்களின் போது  நாம் அறிந்திராத  பல புதுய பிரதேசங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. கனவின் போது  நிகழ்வதும் இதுதான்.

அது வெளி நோக்கிய பயணம். இது உள்னோக்கிய பயணம். அவ்வளவே.

இந்த இரு பயணங்களில் வழியாக அவர் தன்னை அறிகிறார் என்பதுதான் படம்.

முதுமையை அழிவின் அடையாளமாக கண்ட அவர் , கடைசியில் முதுமை என்பதை முழுமையின் அடையாளமாக காண்கிறார் என்பதைக் காட்ட கடைசியில் ஒரு கனவு காட்சி அட்டகாசமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.


வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணமும் முழுமையானதுதான். ஆனால் நாம் எதிர்காலதில் ஏதோ ஒரு கணத்தில்தான் எல்லா மகிழ்ச்சியும் இருப்பதாக நினைக்கிறோம். எதிர்காலத்தில் வாழ்கிறோம். ஒரு கட்டத்தில் இறந்த காலம்தான் இனிது என்ற எண்ணத்தை அடைந்து இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.

டாக்டர் போர்க் இறந்த காலத்தில் வாழவில்லை. இறந்த காலத்தை ஒரு சாட்சியாக பார்க்கிறார் என்பதை அழுத்தம் கொடுத்து காட்டி இருப்பார் இயக்குனர். வழக்கமாக கடந்த கால கனவின் போது , இள வயது தோற்றத்தில் காட்டுவார்கள். இதில் அப்படி இல்லை. தன் முதிய தோற்றத்திலேயே கனவுகளை காண்கிறார் டாக்டர். அப்போதைய சம்பவங்களை இப்போதைய மன முதிர்ச்சியுடன் புரிந்து கொள்கிறார்.

அதாவது கனவுகளில் இவர் தொலைந்து போகவில்லை. தன்னை மீட்டெடுத்து கொள்கிறார்.

இவருக்கு வரும் கனவுகள் ஒரே வகை கனவுகள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் கனவு , உண்மையில் நடக்க வாய்ப்பில்லாத புதிர் போன்ற கனவு. அவர் ம்னோபாவம் வெளிப்படுகிறது அதில்.

இரண்டாவது கனவு கிட்டத்தட்ட பழைய நினைவுகளை அசை போடுவது போல வருகிறது.

மூன்றாவது கனவு தன்னை எடைபோடும் சுயபரிசோதனை களம்.

கடைசி கனவில் மீண்டும் அவர் மனோபாவம் பிரதிபலிக்கிறது , முதல் கனவைப்போல.
முதலில் முதுமையை இலையுதிர் காலமாக உணர்ந்தவர் , கடைசியில் முதுமையை கனிந்து ததும்பும் முழுமையாக கருதுகிறார்.

இவர் மன மாற்றம் முன்பே நமக்கு காட்டப்பட்டு விடுகிறது.

அவருடன் அவர் மருமகளும் பயணம் செய்கிறாள். ஆரம்பத்தில் அவர் புகை பிடிக்க முனையும்ப்போது தடுத்து விடுகிறார். பெண்கள் புகை பிடித்தால் , தனக்கு பிடிக்காது என்கிறார். கடைசியில் ஒரு காட்சியில் புகைக்க அனுமதிக்கிறார்.

அவரை கனவுகள் மட்டும் மாற்றவில்லை,. ப்யணத்தில் வாழ்க்கையின் முழுமையை தரிசுக்கும் வாய்ப்பு.

மருமகள் உலகுக்கு ஓர் உயிரை கொண்டு வரும் மன நிலையிலும் , உடல் நிலையிலும் இருக்கிறாள். அங்கு ஆரம்பதை காண்கிறார் என்ரால், அவருடைய அம்மா 96 வயதில் வாழ்வின் கடைசி நிலையில் இருக்கிறாள். அதையும் காண்கிறார்.

வழியில் சேர்ந்து இளைஞர்களிடம் இளைமையையும் , மருமகள் மகனிடம் நடுத்தர பருவத்தையும் காண்கிறார்.

ஆக அவருக்கு முழுமையான பார்வை கிடைக்கிறது.

இளமைப்பருவத்துக்கே உரிய துடிப்பு , கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறும் காமெடி , யாரைக்காதலிப்பது என அந்த பெண் ஜாலியாக அலுத்து கொள்வது , அவருக்கு மலர்ச்செண்டு அழைத்து வாழ்த்துவது என அவர்கள் மூலம் ததும்பும் வாழ்க்கை அவருக்கும் மலர்ச்சியை கொண்டு வருகிறது.

இதில் நுட்பமாக காட்சிகள் ஏராளம்.

வழியில் ஒரு கணவன் மனைவியை காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். பாதியில் சண்டைபோட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள்.

பிறகு அவர் கனவு ஒன்றில் அந்த கணவன் வந்து அவருக்கு பரீட்சை வைத்து தண்டனை விதிக்கிறான் !!

தன்னிச்சையாக பைபிள் வரி ஒன்று நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை..

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்

இன்னொரு காட்சியில் தன் அம்மாவை காண போகிறார்,. தன் கனவில் கண்ட முள் இல்லாத கடிகாரத்தை அவள் கைகளில் பார்க்கிறார்.

இப்படி பல சுவையான அர்த்தபூர்வமான காட்சிகள்.

அவரது உள் மற்றும் வெளி பயணங்களில் நம்மையும் அழைத்து சென்று நம்மையும் சுய பரிசோதனை செய்ய வைத்து விடுகிறார் என்றால் , மிகை இல்லை.



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா