Friday, January 30, 2015

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கதை சொல்லி யார்/? - ஜ்யோவ்ராம் சுந்தருடன் ஓர் உரையாடல்


எக்சைல் போன்ற நூல்களை படித்தால் போதாது... விவாதித்து புரிந்து கொள்வது முக்கியம்.. அந்த வகையில் ,  நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தருடன் பேசினேன்.. அவருடன் பேசுவது எப்போதுமே சுவையான அனுபவம் ஆகும்.  தமிழில் இணையத்தில் எழுத ஆரம்பித்த முன்னோடிகளில் அவரும் ஒருவர்.. ஆழ்ந்த வாசிப்பாளர். ஆனால் அந்த பந்தா எதுவும் இல்லாமல் பேசக்கூடியவர்

-_____________________________________________

எக்சைல் படித்து விட்டீர்களா.. உங்கள் பார்வை என்ன


படித்தது மட்டும் அல்ல ... பலர்க்கு வாங்கியும் கொடுத்தேன். இந்த நாவலில் பல வகை இலக்கிய வகைகளை கட்டவிழ்த்துள்ளார் சாரு. போர்னோ , ஆன்மீகம் என எதையும் உன்னதப்படுத்தாமல் அவற்றை கட்டவிழ்த்துள்ளார்.. மரம் பற்றிய காட்சி , போனில் பேசியபடி செக்சில் ஈடுபடும் காட்சி , ஆன்மீகம் என பல வகைமைகளை தொட்டுள்ளார்.

புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் ஒருவனுக்கு இந்த நாவல் மிகப்பெரிய திறப்பாக அமையும் என கருதுகிறேன். தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்களீல் ஒன்று என்பதை உறுதியாக சொல்வேன்.

 நல்ல வடிவமைப்பில் புத்தகம் வந்துள்ளது. தற்போது முன்னூறு பக்கம் கொண்ட நாவல் ஒன்றை படிக்கிறேன்.. ஆயிரம் பக்கங்கள் கொண்ட எக்சைல் இதை விட எடை குறைவு.. அந்த அளவுக்கு தரமான பேப்பர்.

ஆனால் சாருவின் பழைய நாவல்களை படித்தோருக்கு ஒருவேளை போரடிப்பது போல தோன்றலாம்.. இதுதான் மைனஸ்

ஆனால் எக்சைலை ஒரு பிரதியாக மதிப்பிட்டால் மிக மிக முக்கியமான படைப்பு என்பதில் ஐயம் இல்லை

இதைப்பற்றி விரிவாக நீங்கள் எழுதி இருக்கலாமே ...ஏன் எழுதவில்லை/?

சாருவின் நூல்கள் மிகவும் நுட்பமானவை.. ஒரு முறை படித்து விட்டெல்லாம் எழுதக்கூடாது ..  சீரோ டிகிரியெல்லாம் படிக்க படிக்கத்தான் அதன் நுட்பம் புலப்படும்.

ஒரு என்பதே வராமல் ( ஒரே ஓர் இடம் தவிர ) சீரோ டிகிரி எழுதி இருப்பார்.. அதைத்தவிர வேறு எத்தனையோ நுட்பங்கள் அதில் உண்டு. எண்கள் வரும்போது ஒன்பது என கூட்டுத்தொகை வருமாறு எழுதி இருப்பார். அதைப்பற்றி கேட்டால் அவர் ஒரு காரணம் சொல்வார்.

ஆனால் நாம் யோசிக்கும்போது அதில் பல அர்த்தங்கள் நமக்கு கிடைக்கும். ஒன்பது என்பதை நம்மில் சிலர் ஒதுக்கப்பட்ட எண்ணாக கருதுகிறோம். அப்படி ஒவ்வொரு துறையிலும்  ஒதுக்கப்பட்டோர் , நலிவடைந்தோர் , விளிம்பு நிலை மக்களின் வலியை ரெப்ரசண்ட் செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்.

இப்படி சாருவின் எழுத்துகள் ஒவ்வொரு வரியாக கான்சியசாக பிரஞ்ஞைபூர்வமாக உருவாக்கப்படுகின்றன. அதை புரிந்து கொள்ள தேடல் தேவை.

எக்சைலில் மரத்தைப்பற்றி எழுதி இருப்பார். அப்படியே கதறி விடலாம்போல தோன்றும். அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கும்.  நாம் சின்ன வயதில்  நாய்களுடன் விளையாடி இருப்போம் . பேசி இருப்போம். ஆனால் காலப்போக்கில் அந்த சென்சிட்டிவிட்டியை இழந்து விடுவோம். ஆனால் சாரு இப்பவும் மரத்துடம் பேசுவது எல்லாம்...... என்னால் இதை எல்லாம் சொல்ல முடியவில்லை... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு


நீங்கள் இப்படி உருகுகிறீர்கள். ஆனால் சாருவின் எழுத்து ஒரே மாதிரியாக இருப்பதாக...

ஷட் அப்...இப்படி எல்லாம் பேசினால் இனி உங்களுடன் பேச மாட்டேன்

சாரி.. நான் அப்படி கருதவில்லை.. நானும் சாரு ரசிகன்தான்..சிலர் இப்படி கேட்கிறார்களே என்பதையே சொல்ல வந்தேன். சாரு வழக்கமான கதை வடிவில் கதை சொல்வதில்லை..அவருக்கு அந்த திறன் இல்லை என சிலர் சொல்கிறார்களே.

நான்சென்ஸ். சொல்பவன் ஆயிரம் சொல்லலாம்.. அதை எல்லாம் பெரிதாக பேசலாமா... சாருவின் கதைகளை முதலில் படிக்க சொல்லுங்கள். அவர் எல்லா வகையும் எழுதி இருக்கிறார். வழக்கமான நேர்க்கோட்டு பாணியில் ஆரம்பம் நடு முடிவு என்ற பாணியில் இலக்கணத்துக்கு உட்பட்ட கதைகள் பலவும் படைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கதை சொல்லி என ஓர் புகழ்பெற்ற இடது சாரி சிந்தனையாளரே ஒப்புக்கொண்டுள்ளார். என்ன ஒன்று. இப்போது அப்படி சொன்னதை மறுக்ககூடும். அதை சாருவேகூட மறந்து இருக்கலாம்

ஆனால் நீங்களேகூட சாருவை சில நேரங்களில் திட்டி இருக்கிறீர்களே.


ஆமாம்.. நெருக்கம் இருக்கும் இடத்தில்தானே உரிமையும் , சண்டையும் வரும். ஜெயமோகனிடம் பேசி இருக்கிறேன்.. வணக்கம் சார் என பேச ஆரம்பித்தேன். சாருவை அப்படி ஒரு போதும் அழைத்ததில்லை..எப்போதும் பேர் சொல்லியே அழைப்பேன். அவர் மீதான அன்பு எப்பவும் குறையாது

ஏன் அந்த அளவு நேசிக்கிறீர்கள்



எனக்கு ப்யூகோவ்ஸ்கியை அறிமுகம் செய்தது அவர்தான்.  எனக்குப் பிடித்த கவிஞர்களான நகுலன், விக்ரமாதித்யன் அளவிற்கு ப்யூக்கையும் பிடிக்கும்.  ப்யுக் மட்டுமல்ல, ழார் பத்தேலையும் அவர்தான் அறிமுகம் செய்தார். அவர் சொல்லித்தான்  எனக்கு நேக்கட் லஞ்ச் தெரியும்.என்னுடைய இலக்கிய ஆசான் என்று அவரையே சொல்ல இயலும்.
அந்த காலத்தில் திருவண்ணாமலையில் விழா நடத்தி ஒரு நூல் வெளியிட்டனர். அதில் பல எழுத்தாளர் கதைகள் வெளியாகின. ஆனால் அதில் விஞ்சி நின்றது சாரு மொழி பெயர்த்த  (ஆர்த்துரே பியேட்ரியின் ) மழை எனும் கதைதான். இந்த நிகழ்ச்சியை சாருவே மறந்திருப்பார் என்பதுதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.

தமிழ் உலகில் யாருக்கும் தெரியாத பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர் சாரு. அவர் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் பலரை நம்மால் படிக்க இயலாது.. அந்த அளவுக்கு கடினமாக இருக்கும்.. ஆனால் அவர்களின் அந்த சாரத்தை , கடினத்தன்மையை நீக்கி விட்டு நமக்கு அறிமுகம் செய்பவர் சாரு மட்டுமே..

அவரை விட எந்த சமகால எழுத்தாளராவது ஒரு சதவிகிதம் கூடுதல் சிறப்பாக எழுதுவதாக நிரூபித்தால் நான் வாசிப்பையே விட்டுவிட தயார். நானெல்லாம் பல ஆண்டுகளாக எல்லாவற்றையும் வாசித்து வருகிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். சாருவுக்கு நிகர் சாரு மட்டுமே.. ஆனால் சிலர் அவரை வேண்டுமென்றே மட்டம் தட்டுகின்றனர்.

சீரோ டிகிரி , ராசலீலா , எக்சைல் - ஒப்பிடுக


சீரோ டிகிரி சந்தேகம் இல்லாமல் ஆல் டைம் பெஸ்ட். அதை மிஞ்சிய படைப்பு இனி யாராலும் படைக்க முடியாது

ராசலீலா சுவையான நாவல்.. புதிதாக படிக்க வருவோர்க்கு நான் இதை கண்டிப்பாக பரிந்துரைப்பேன். முக்கியமான நாவல்

எக்சைல் சற்று கடினமான நாவல்.. நம் உழைப்பை கோரும் நாவல். படிக்க படிக்கத்தான் இதன் நுட்பங்கள் புலப்படும்

ஆனால் பழைய எக்சைலில் இந்த பிரச்சனை இல்லை.. சுவாரஸ்யத்தை நோக்கமாக கொண்டு படைக்கப்பட்டது அது.. ஆனால் புதிய எக்சைல் படிக்க முனைப்பு தேவை.

இதன் குறை என எதை சொல்வீர்கள்

ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாவலை ப்ரூஃப் பார்க்கிறோம் என்ற கவனத்தோடு பிழை திருத்துவோர் செயல்பட்டு இருக்கலாம் என கருதுகிறேன்..


Sunday, January 18, 2015

சாரு மீதான தாக்குதல் - மனுஷ்யபுத்திரன் கண்டனம்

சாரு மீது நடந்த தாக்குதல் குறித்து மனுஷ்யபுத்திரன்
-______________________________________________________________

இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போல நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன் விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்து எழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றான கருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்ற நாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்று கூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘ நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்க எனக்கு உரிமை இல்லையா? அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா?’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலு அவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால் செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘ சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேச அனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
சிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவை மிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர் வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர் வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்கு வெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும் பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில் அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.
எனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன? சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காக அவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம்? இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம் வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும் உரிய ஒன்றா? முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம் இருக்கிறது? மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்கு எதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ?
முதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்த அவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமே கோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.
கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?

Saturday, January 17, 2015

எக்சைல் - மொண்ணைகள் உலகில் உண்மையான ஒரு நாவல்

ஒருவர் கஷ்டப்பட்டு பணம் திரட்டி புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் கொண்டு வந்தார். உண்மையிலேயே எல்லாமே மிக சிறந்த புத்தகங்கள். கொஞ்சம் பிரமோட் செய்தால் , டாப் செல்லராக இருக்கும் என நினைத்தேன்.
அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். பதிப்புத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட இன்னொரு  பதிப்பகம் , தன் ஆதரவு நாளிதழ்களை வைத்து ஒரு சென்சேஷனல் செய்தியை பிரசுரிக்க வைத்தது. எல்லோருமே அந்த பதிப்பக புத்தகத்தைப்பற்றி பேச ஆரம்பித்தனர், அந்த புத்தகம் இலக்கியத்தரம் வாய்ந்ததா , அது முக்கியமான புத்தகமா என்றெல்லாம் கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாக போய் வாங்கினர்.
நல்ல புத்தகம் வெளியிட்ட முதல்வரி பதிப்பகம் இதனால் வருத்தம் அடையும் என நினைத்தேன்…அதுதான் இல்லை.. இந்த ஸ்ட்ண்ட் பதிப்பகத்தின் விளம்பர ஏஜெண்டாக மாறி அவரும் களாமாடி , இந்த ஃபேக்  புத்தகத்தை பிரமோட் செய்ய ஆரம்பித்தார்.
இந்த பிரச்சனையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற , உண்மையிலேயே நல்ல நாவலான அஞ்ஞாடி போதிய கவனம் பெறாமல் போனது.


இது போன்ற தமிழகத்தின் மொண்ணைத்தனங்களை பேசும் நாவல்தான் புதிய எக்சைல் . சென்சிட்டிவிட்டி அற்ற தன்மை. தமக்கு பிடிக்காதவர்களை நாடு கடத்துவதையே எக்சைல் என்பார்கள். நடை முறையில்,  நாம் எல்லாமே நாடு கடத்தப்பட்ட வாழ்வையே வாழ்கிறோம். நம் மொழி , நம் பண்பாடு , சக உயிர்களின் உணர்வுகள் என எதுவும் தெரியாமல் , ஏதோ ஒரு வேற்றுக்கிரகவாசி வாழ்வது போல வாழ்கிறோம். இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். ஒருவர் முழு சுரணை உணர்வுடன் இங்கு வாழ்ந்தால் , அவர் தன்னை ஒரு வேற்றுகிரக வாசியாகவே உணர்வார். இதுதான் புதிய எக்சைல்.

இதற்கு முன்பு வந்த எக்சைல் தரும் வாசிப்பு அனுபவம் வேறு. இந்த எக்சைலின் வாசிப்பு அனுபவம் வேறு. அதில் இருந்த சில காட்சிகள் நீக்கப்பட்டு , புதிதாக சில சேர்க்கப்பட்டு , தனித்துவமாக வந்துள்ளது எக்சைல்.

ஜொகரி விண்டோ என்றோரு கான்சப்ட் உண்டு.  நம்மைப்பற்றிய சில விஷ்யங்கள் , நமக்கு தெரியும்.. பிறர்க்கும் தெரியும். இது ஒருவகை..சில நமக்கு மட்டும் தெரியும்..பிறர்க்கு தெரியாது..சில நமக்கு தெரியாது ,பிறர்க்கு தெரியும்..சில நமக்கும் தெரியாது. பிறர்க்கும் தெரியாது, இது குறித்த தொடர்பு கொள்ளலில் மிக அவசியம். தொடர்பு கொள்ளலே வாழ்க்கை என ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வது இதைத்தான்.

தொடர்பு கொள்வதன் மூலமே நம்மை நாம் அறிகிறோம்.. மரங்களுடன் , மீன்களுடன் , பிரபஞ்சத்துடன் , சக மனிதர்களுடன் நாம் கொள்ளும் உறவுதான் நம் வாழ்க்கை என்பது . இதை மிக அழகாக எக்சைல் கையாள்கிறது.

ஒருவர் நான்வெஜ் சாப்பிடுவதில் அதீத ஆசை கொண்டவர். ஆனால் அவருக்கு ஒரு விலங்கின் வலி புரிகிறது. கோழியின் கதறலைக்கேட்டு , கோழிக்கறி ஆசையே போய் விடுகிறது. இது ஒரு கேரக்டர். அகிம்சையை போதிக்கும் ஓர் அமைப்பு .. ஆனால் பட்டுப்பூச்சிகள் இறப்பது குறித்து அவர்களுக்கு  கவலை இல்லை.

 அகிம்சையை போதிக்கும் ஒருவர் , பொது விவாதம் ஒன்றில் அவன் இவன் என ஏக வசனம் பேசுகிறார். இப்படி நாவல் முழுதும் சுவையான முரண்களை சுட்டிக்காட்டுகிறார் சாரு. இலக்கியம் என்பது புலியின் பசியையும் சொல்ல வேண்டும். புலிக்கு பலியான மானின் குட்டிகள் அடையும் தவிப்பையும் சொல்ல வேண்டும் என்பார்கள். ஒற்றைப்பார்வையுடன் நாவலை படைத்த காலம் எல்லாம் காலாவதியாகி விட்டது. ஆனாலும் இப்படி ஒற்றைப்பார்வையுடன் , பிரச்சார நெடியுடன் படைக்கப்பட்ட ஜேஜே சில குறிப்புகள் போன்ற ஃபேக் நாவல்களை இன்றளவும் சிலர் பாராட்டி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் எக்சைல் வந்திருப்பது ஆரோக்கியமான ஒன்று.

 செவ்வியல் இலக்கிய நடை , மொழி பெயர்ப்பு நடை , ஜனரஞ்சக நடை , கிராமத்து நடை என பல்வேறு விஷயங்களை இதில் காண முடிகிறது. நாவல் அவ்வப்போது ஓவ்வொருவர் பார்வையில் நகர்கிறது. சில நேரங்களில் ஒருவர் பார்வையை , இன்னொருவர் மறுக்கிறார்.

பிம்பங்கள் தொடர்ந்து சிதறடிக்கப்படுகின்றன. அவ்வளவு நேரம் நம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருந்த அஞ்சலியின் கேர்க்டர் ஒரே நிமிடத்தில் கொக்கரக்கோவால் வீழ்த்தப்படுகிறது. ஞானியா, பித்தனா , சித்தனா என நம்மை சஸ்பென்சில் ஆழ்த்தி வைத்திருக்கும் சிவாவின் பிம்பம் கலையும்போது அதிர்ந்து போகிறோம்.
அவ்வளவு ஏன் ..கதை சொல்லியான உதயாவின் பிம்பமே ஒரு கட்டத்தில் கலைகிறது. சிதறுண்டு போன்ற இன்றைய வாழ்வை , இன்றைய மனிதனை இப்படி அன்றி வேறு எப்படியும் சொல்லி விட முடியாது.

பக்கிரிசாமியின் பார்வையில் செல்லும் அத்தியாசம் செம.. சொல்லும் யுக்தியும் தமிழுக்கு புதுசு. ரமணி சந்திரன் நடையில் அமைந்த அத்தியாயம் சூப்பர்.

பல நல்ல விஷயங்களை கற்றுத்தந்த ஆசிரியர் ஒருபால் புணர்ச்சியாளர் என அறிகையில் ஒரு சராசரி தமிழ் மனம் திடுக்கிடத்தான் செய்யும். 

இருவேறு முரண்களை சுட்டிக்காட்டுகையில் ஒன்றை ஒன்று ரத்து செய்வதில்லை. கோழிக்கு பரிவு காட்டுவதும் உண்மை .  நான் வெஜ் ரசித்து சாப்பிடுவதும் உண்மை. காரணகாரிய உலகும் உண்மை, எந்த தர்க்கத்துக்கும் உட்படாத வாழ்வியல் அபத்தமும் உண்மை.

கடவுள் சக்தியை உணர்கிறோம் . ஆனால் அதே ஆலயத்தில் விபத்து எப்படி நடக்கிறது. தீயவர்களை பாம்பு பழி வாங்குவதையும் கண் முன் பார்க்கிறோம். எந்த பாவமும் அறியாமல் கொத்துகொத்தாக சாகும் மக்கள் கூட்டத்தையும் பார்க்கிறோம். இவை அனைத்தையும் பாரபட்சம் இன்றி நேர்மையாக பதிவு செய்கிறது நாவல்.

இதை நாவல் என சொல்லாமல் வாழ்க்கைக்கான கையேடாகவும் பயன்படுத்தலாம். அத்தனை தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அல்லது சிறுகதை தொகுப்பாகவும் வாசிக்கலாம். கேசவன் என்ற யானையை வைத்து தனியாக ஒரு குறு நாவலே எழுதலாம்.

இது வரை வெளிவந்த சாரு நாவல்களுக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கொண்டாட்டமான நடை , காமம் , காதல் , பெண்கள் மீதான பரிவு , பெண் மீதான அடக்குமுறை குறித்த விமர்சனம் என்பது போல சில ஒற்றுமைகள் உண்டு.

ஆனால் மிக மிக முக்கியமான வித்தியாசம் ஒன்று இருக்கிறது. இதுவரை காமத்தில் இருக்கும் வலியை வாதையை பேசிய சாருவின் எழுத்து இதில் அன்பை பேசுகிறது. வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் உள்ளத்தை பேசுகிறது.

நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்...

இது எல்லாவற்றிலும் உன்னை நான் காண்கிறேன். என் இனிய ஃப்ளோரான் மீனே… உன் உயிர் எங்கே போனது? ஒளிப் புள்ளியாக மாறி எங்கே நின்றுகொண்டிருக்கிறாய்? அங்கிருந்து என்னைக் காண்கிறாயா?




அனைவருக்கும் ஆம் பிறருக்கு ஓர் இன்னுரை என்பார் திருமூலர். பிறர்மேல் அன்பாக இருப்பது , அன்பாக பேசுவது எல்லோராலும் செய்யக்கூடிய எளிதான ஒன்று. அதைக்கூட நாம் செய்வதில்லை.. அன்பு என்பது உயிர்களின் இயல்பான தன்மை. நாம்தான் இயல்பை மீறி வாழ்கிறோம்.

பிளாக்கி மேலும் கொஞ்ச நேரம் குரைத்தது. ஃப்லோரானிடம் அசைவில்லை. பிறகு வருத்தத்துடன் குட்பை சொல்லி நகர்ந்தது . என்ற வரியை படிக்கையில் நம் மனதுக்குள் ஏதோ ஒன்று புரள்கிறது.

அசோகமித்ரன் பிரயாணம் என்றொரு உன்னதமான சிறுகதை எழுதி இருக்கிறார். தன் குருவுடன் மலை வழியாக பயணிக்கிறான் ஒரு சீடன்.  குரு நோய் வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கிறார். கஷ்டப்பட்டு அழைத்து செல்கிறான். வழியில் அவர் இறந்து விடுகிறார்.  இப்போது அவரை முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவன் விருப்பம். இந்த நிலையில் சில ஓனாய்கள் அந்த இறந்த உடலை இழுக்க முயல்கின்றன. அவன் தடுக்க போராடுகிறான். ஒரு கட்டத்தில் மயங்கி விடுகிறான். காலையில் விழித்து பார்த்தால் , அவரது உடல் சேதமாகி இருக்கிறது.. ஆனால் அதை விட கடும் அதிர்ச்சி…   அந்த குருவின் கையில் ஓனாயின் கால் பிய்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த கிளைமேக்ஸ் நமக்கு அளிக்கும் ஒரு திறப்பை , ஒரு ஜென் கணத்தை இந்த நாவலின் முடிவு நமக்கு அளிக்கிறது .

இதோ இந்த கூழாங்கல்.. இது மட்டும் அல்ல. இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. எதுவுமே பயனில்லாமல் இல்லை. இந்த கூழாங்கல்லுக்கு அர்த்தம் இல்லாவிட்டால் பின் எதற்குமே அர்த்தம் இல்லை. ஏன் அந்த நட்சத்திரங்களுக்கும் கூட ‘

இப்போது இந்த மலையும் நானும்தான். மௌனம் . பெரும் மௌனம் என்னை சூழ்ந்து கொண்டு இருக்கிறது என ஒரு தியான அனுபவத்தை தருகிறது எக்சைல்.

 மீனைப்பற்றிய கடைசி அத்தியாயம் காலத்தை வென்று நிற்கும் என கருதுகிறேன்

இதில் இன்னொரு சுவாரஸ்யம் , ஆங்காங்கு வரும் அடிக்குறிப்புகள். கூர்ந்து கவனித்தால் , அவற்றின் நோக்கம் தகவல் மட்டும் அல்ல… குறிப்பிட்ட மூட் செட் செய்வதும்கூட என புரியும்.

  சின்ன சின்ன அத்தியாயங்கள்  வாசிப்பை சுவை ஆக்குகின்றன. இவற்றை எந்த வரிசையிலும் படிக்கலாம்.. தனியாகவும் படிக்கலாம் என்பது சிறப்பு.  நாகூர் , டெல்லி , ஃபிரான்ஸ் என இடம் கடந்து காலம் கடந்து பயணிக்கிறது நாவல். பின் நவீனத்துவம் என்றால் என்ன என இனியும் யாரும் கேட்க கூடாது. எக்சைல் படித்தால் போதும்.

நாவலில் எழுத்து சார்ந்த குறைகள் இல்லை. ஆனால் பதிப்பு சார்ந்த குறைகள் சில இருக்கின்றன. சாரு எழுத்தில் காணவே முடியாத எழுத்து பிழைகள் உள்ளன. எழுத்துரு பிரச்சனைகள் , ஒரே பகுதி மீண்டும் வருவது என சில பிரச்சனைகள் உள்ளன. எப்படியும் அடுத்த பதிப்பு விரைவில் வர இருப்பதால் , அதை சரி செய்யுமாறு பதிப்பகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

 -_______________________________________________________
சில சுவையான வரிகள்

பெருந்தேவியிடம் நீர் கேட்டு வரும் பல காகங்க்ள். அவள் கையால் நீர் அருந்தும் பாக்கியம் பெற்ற ஒரு காகம் நான்

ப்ரௌனியை நான் முதன் முதலில் தொட்டபோது என்னை தொட்ட முதல் மனிதன் நீதான் என அது என்னிடம் சொன்னது. அனேகமாக கடைசி ஆளாகவும் நானாகத்தான் இருப்பேன் கண்ணே என நான் அதனிடம் சொன்னேன்

கடைசியில் விடைபெற்றபோது தோன்றியது. அவனுடைய வாழ்க்கை நிலையும் சூழலும் யாருக்கு வாய்த்திருந்தாலும் அவர்களும் அவனைப்போலவே ஆகி இருப்பார்கள்

மின்னஞ்சலில் எனக்கு ஒரு அறிவுரை. உங்கள் கட்டுரைகளின் தரத்தை நீங்கள் மேம்படுத்த வேண்டும்

இது என்ன நரசுஸ் காஃபியா.. தரத்தை மேம்படுத்துவதற்கு

குஷால்தாஸ் சந்தோஷமாக இரு என்கிறார். ஒரு அமைப்புக்கு அடிமையாக இருப்பவன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்

அவனிடம் பத்து லட்சம் கொடுத்து கொஞ்ச நாள் கழித்து வாங்கி கொள்கிறேன் என்றார். கொஞ்ச நாள் கழித்து கேட்டார். அவன் அந்த பத்து லட்சத்தை கொடுத்தான். அதற்கு அவனை கட்டி வைத்து உதைத்தார்க்ள். 
புரியவில்லை அல்லவா.. எனக்கும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது

காசை மதித்தால்தான் காசு தங்கும் என மிடில் கிளாஸ் தத்துவம் பேசுவார் மினிஸ்டர். அம்பானி ஐயாயிரம் கோடியில் வீடு கட்டி இருக்கிறார். காசு ஓடியா போய் விட்டது

முல்லா ஒரு முறை தூக்கம் வராமல் புரண்டார். மனைவி காரணம் கேட்டாள். பக்கத்து வீட்டு அப்துல்லாவிடம் வாங்கிய கடனை நாளை தருவதாக சொன்னேன். ஆனால் பணம் இல்லை என்றார். அவ்வளவுதானே.. நான் பார்த்துக்கொள்கிறேன் என சொன்ன மனைவி அப்துல்லா அப்துல்லா என ரோட்டில் நின்று கத்தினாள். அப்துல்லா வந்தார். உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நாளை தர முடியாது என சொல்லி விட்டு வீட்டுக்குள் வந்தாள்.  இனிமேல் நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.. அப்துல்லாவுக்குதான் தூக்கம் வராது என்றாள்

உதயாவுக்கு பயம் வந்துவிட்டது போல என்றார். அத்துடன் விட்டு இருந்தால் பரவாயில்லை. எனக்கே பயமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு டிரக்கையும் கடக்கையில் உயிர் போய் உயிர் வருகிறது என்றார்

எனக்கு அடி வயிறு கலங்கியது.  அவர் அத்துடன் நிறுத்தவில்லை
இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் கார் ஓட்டுகிறேன் என்றார்

ஏன் ஓட்டவில்லை

ஒரு விபத்து . அதில் இருந்து ஓட்டுவதில்லை

உடனே கணேஷ் தனக்கு தெரிந்த விபத்துகளைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்

அய்யோ... அதிர்ச்சியில் உயிர் போய் விடும்போல இருக்கு..கதையை நிறுத்துங்கள் என அலறினேன்

முருகன் அடுத்த குண்டை வீசினார்...  அதற்கில்லை உதயா.. நீண்ட நாள் கழித்து காரை எடுப்பதால் தூக்கம் வருகிறது. அதனால்தான் பேசுகிறேன்

கடிதத்தை படித்து விட்டு எதிரிகள் அழிய வேண்டாம்.  எதிரிகளால் நான் அழியாமல் இருந்தால் போதும் என நினைத்துக்கொண்டேன்

கடவுள் இருப்பதற்கு வலுவான காரணங்கள் இருப்பதுபோல , கடவுள் இல்லை என்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன

தாய் மாமன் என்ற முறையில் நீதான் தோடு வாங்கிப்போட வேண்டும் என நைனா கடிதம் எழுதினார்.அதற்கு நான் ஆபாசமாக பதில் எழுதினேன்

( அந்த பதில் செம ரகளை...ஹாஹா.. புத்தகத்தில் படியுங்கள் )

அந்த உலகத்தில் குளியலறை குழாயை திறந்தால் பூமழை கொட்டும் - நினைத்தால் பழரசம் , சாய்ந்தால் மலர் மஞ்சம் , தேனாய் கொஞ்சும் காதலன் , ஏவினால் ஓடி வரும் வேலையாள் , ஓடி விளையாட பூந்தோட்டம் , அலுப்பை போக்க அழகான நாய்கள் - எல்லாமே சாத்தியம்தான்

தமிழை தாயாக்கி சமாதி கட்டி வணங்கி விட்டு , இன்னொரு மொழி பேசும் இந்த மூடர்களை என்னவென்பது.. ஆங்கிலம் நன்றாக தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை

வெர்டிக்ட்
எக்சைல் - எக்சலண்ட்
வெளியீடு - கிழக்கு பதிப்பகம் 



Friday, December 26, 2014

மிஷ்கினின் பிசாசு படம் கல்கி கதையின் காப்பியா- கிளம்புகிறது சர்ச்சை

கதை காப்பி , திருட்டு என்பது இப்பொதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விட்டது...
கல்கியில் 2011ல் வந்த கதை இது..2013 ஆம் ஆண்டு அப்துல்காதரின் குதிரை என்கிற சிறுகதைத் தொகுப்பில் வந்தது.
நல்லவன் ஒருவன் இறந்து விட்டால் , அவன் பேய் மட்டும் எப்படி கெட்டதாக இருக்கும் என்ற கான்செப்ட்..

இதில் வரும் ஆண் கேரகடரை பெண்ணாக மாற்றி மிஷ்கின் படம் எடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது..

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
________________________________________________________________________

எஸ்.எம்.எஸ்
- இல.ஷைலபதி

அவர், பார்ப்பதற்கு நாகரிகமான ஒரு மருத்துவரையோ வழக்கறிஞரையோ போலத்தான் இருந்தார். அமானுஷ்யத்தன்மை ஏற்படுத்தும் எதுவும் அங்கு இல்லாதது என் கற்பனைகளைப் பொய்யாக்கியது. எத்தனை நாகரிகமாக இருந்தாலும் எனக்கு அந்த இடம் மிகவும் வெறுப்பையே தந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான் ஒன்றும் பகுத்தறிவுப் பாசறைக்காரனல்ல என்றபோதும் இவற்றிலெல்லாம் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும் வேறு வழியில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டேன். 

பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்.

"என்ன பிரச்சினை?" 

என் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டன. ஏற்கெனவே மனதுக்குள் இரண்டு, மூன்று முறை சொல்லிப் பார்த்துக் கொண்டுதான் வந்து சேர்ந்தேன் என்றபோதும், தயக்கம் ஒரு பருந்தாக மாறி என் வார்த்தைகளைத் தின்றுவிட்டிருந்தது போலத் தோன்றியது. அவர், தயக்கமின்றிப் பேசும்படி வற்புறுத்தினார்.

"எனக்கு தினமும் ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது, அதுவும் நூற்றுக்கணக்கில்!"

"சரி, என்ன செய்தி வருகிறது?"

"ஹாய், ஹவ் ஆர் யூ? என்று"

"இதில் ஒன்றும் தவறில்லையே!"

"ஆம். செய்தியில் தவறில்லைதான்."

"பிறகு?… அனுப்புகிறவரா?"

"நீங்கள் என் சிக்கலை நெருங்கிவிட்டீர்கள்."

"யார் அது?"

"என் நண்பன் ஜேம்ஸ்."

"இதில் சிக்கல் எங்கே என்று சொல்ல முடியுமா?" 

நான் அவரை உற்றுப் பார்த்தபோது அவர் அசிரத்தையான பார்வை ஒன்றை என் மீது வீசினார்.

"ஜேம்ஸ் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது."

இப்போது பார்த்தேன், அவர் அசிரத்தை விலகி விழிப்படைந்தவராக இருந்தார். 

குரலைச் சரி செய்துகொண்டு, "இது ஒன்றும் வோடஃபோன் ஜோக் இல்லையே" என்றார்.

"நிச்சயமாகயில்லை!"

அவர் சுவாரசியமுற்ற மனிதரைப் போலப் பேசத் தொடங்கினார்.

"ஜேம்ஸ் உங்கள் நண்பர் என்றீர்கள்? நெருங்கிய நண்பரா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, பொதுவாகவே எனக்கு நண்பர்கள் குறைவு. ஜேம்ஸ் மட்டும்தான் கொஞ்சம் நெருக்கம். அவ்வளவுதான்."

"ஏன், நட்பு என்றால் பிடிக்காதா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, ஆனாலும் நான் நண்பர்கள் என்று யாரையும் நெருங்கவிடுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் தொந்தரவுகளைக் கொண்டு வருபவர்கள் என்பது என் அனுபவம்." 

"நீங்கள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர், இன்னொரு வகையில் பாவம்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இறந்தபிறகும் நலம் விசாரிக்கும் நண்பன் உங்களுக்குக் கிடைத்திருக்கிறான். அந்த வகையில் கொடுத்துவைத்தவர். ஆனாலும் உங்கள் கருத்தை உறுதி செய்யும்படிக்கு, இறந்த பின்பு கூடத் தொல்லை தருகிறவர்கள்தான் நண்பர்கள் என்கிற அனுபவமும் உங்களுக்கு வந்து சேர்ந்த விதத்தில் பாவம்."

அவர் பேச்சை நான் ரசிக்கவில்லை. அவர் நையாண்டி செய்வதாகப்பட்டது. ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர் என்கிற அளவில் உதவுவார் என்று நம்பித்தான் இவரிடம் வந்திருக்கிறேன். வேறுவழியில்லை என்று பட்டது. 

"சார்! கொஞ்சம் சீரியஸாகப் பேசலாமே?"

"நிச்சயமாக! நீங்கள் பதட்டமடைய இதில் ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்கள், எதை வைத்து இறந்துபோன உங்கள் நண்பன்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக முடிவு செய்கிறீர்கள்? அவர் எண்ணிலிருந்து யாராவது விளையாடலாம் அல்லவா? குறிப்பாக, சிறுபிள்ளைகள்?" 

"அதற்கு வாய்ப்பேயில்லை" என்று சொல்லி என் பையிலிருந்து இரண்டு செல்போன்களை எடுத்துப் போட்டேன்.

"இதில் ஒன்று என்னுடையது, மற்றொன்று ஜேம்ஸுடையது. இந்தச் சிக்கல் தொடங்கிய சில நாட்களிலேயே அவன் வீட்டில் இந்த ஃபோனைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். அவன் இறந்தது முதல் இந்த எண் அணைத்துதான் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை!"

"எஸ்.எம்.எஸ் அனுப்ப இப்பொழுதெல்லாம் செல்போனும், சிம்கார்டும்கூடத் தேவையில்லை. கணினி மூலமாகக்கூட அனுப்பமுடியும்."

"ஆமாம், அந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் 'வாய்ப் டெக்னாலஜி'. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை."

அவர் இப்போது என் சிக்கலில் அதிக ஆர்வம் உடையவராக எனக்குத் தெரிந்தார். காரணம், காதலியின் உதடுகளை உற்றுநோக்கும் காதலனைப்போல என் உதடுகளையே நோக்கி அதிலிருந்து வரப்போகும் வார்த்தைகளில் ஆர்வமுடையவராய் இருந்தார்.

"ம். மேலும் சொல்லுங்கள்!"

"எஸ்.எம்.எஸ்-கள் வருவதெல்லாம் இரவு நேரங்களில்தான். ஆனால் அதுவல்ல முக்கியம். அது வரும் சில நிமிடத்திற்கு முன்பு யாரோ என்னைத் தொட்டு எழுப்புவது போலிருக்கும். கண்விழித்துப் பார்த்தால், அறையில் இருள் ஒரு பூதத்தைப்போல வளர்ந்து பரவியிருக்கும். இரவு விளக்கு அதன் பற்களைப்போல ஒரு மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும். நான் அதிர்ந்து அடங்கும் நொடியில் எஸ்.எம்.எஸ் வந்து சேரும்."

"பிறகு?"

"பிறகென்ன? இப்போதெல்லாம் வீட்டின் எல்லா விளக்கையும் எரியவிட்டுக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன். ஆனாலும் பயம் நிரந்தரமாகிவிட்டது இந்த எஸ்.எம்.எஸ்-களைப் போல. நிரந்தரமாக அது ஒரு நடுக்கமாகி, என் நரம்புகளில் குடிகொண்டுவிட்டது. பகலில் கொஞ்சநாட்கள் தொந்தரவு இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது பகலிலும் தொடர்கிறது. அணைத்து வைத்துவிட்டு வேலைபார்க்கவும் முடியாத நிலை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள்தான் உதவவேண்டும்!"

அவர் விரல்களில் அகப்பட்டு உருளும் பென்சில், சுருங்கும் நெற்றி ஆகியன 'அவர் சிந்திக்கிறார்' என்று எனக்குச் சொல்லின. 

"கிட்டத்தட்ட உங்கள் சிக்கலை நெருங்கிவிட்டேன். ஆனாலும் முடிவுக்கு வர எனக்கு இன்னும் சில தகவல்கள் வேண்டும். அதாவது உங்கள் நண்பனைப் பற்றி... அவன் மரணத்தைப் பற்றி… முடிந்தவரை சொல்லுங்கள்!"

ஜேம்ஸ் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த ஊருக்குக் குடிவந்த முதல் நாளில்தான் அவன் அறிமுகமானான். வேலை நிமித்தம் நான் சென்ற அலுவலகத்தில் அவனைச் சந்தித்தேன். நீண்டநாள் பழகியவனைப்போல அவன் பேசினான். அவன் என்னை நண்பனாக்கிக் கொண்டான். நகரில் நான் எதற்கும் தேடியலைய வேண்டியதாயில்லை. எல்லாம் அவனால் எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அவனிடம் மட்டும் நான் மனம் திறந்து பேசுபவனாக ஆனேன். வேறு யாரோடும் நான் நட்பு பாராட்டவேயில்லை. அது தேவையாக எனக்குத் தோன்றவில்லை. அவனிடம் இருந்த ஒரே தொந்தரவு அவன் செல்போன்தான். செல்போனிலிருந்து கணக்கற்ற எஸ்.எம்.எஸ்-களை எல்லாருக்கும் அனுப்பியபடியிருப்பான். அவன் எஸ்.எம்.எஸ்-களோடுதான் பொழுது விடியும், பொழுது அடையும். ஆனாலும் அவனுக்காக நான் அதையெல்லாம் வெறுப்பதில்லை. அவன் பற்றிய எந்த நினைவும் அவன் இருக்கும் வரைக்கும் நான் என் மனதில் சேகரித்துக் கொண்டதில்லை. ஆனால், அவன் மரணம் அவை அத்தனையையும் ஒரே நொடியில் என் மனதில் அழியாத மைகொண்டு எழுதிவிட்டது. காரணம், அவன் எவ்வளவு தூரம் நல்லவன் என்பதுதான்.

"இந்த நகரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துகள் நடக்கிறது நாம் காணும்படி… அப்படி ஒன்றை நீங்கள் கண்டதுண்டா? கண்டால் என்ன செய்வீர்கள்? போய் யார் என்றாவது பார்ப்பீர்களா? நான் பார்ப்பதில்லை. ஒருவேளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவர்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் போவோம், சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்த வரை மிகக்குறைவு அல்லது சில ஊர்களில் இல்லவேயில்லை. ஏன் கேட்கிறேன் என்கிறீர்களா? ஜேம்ஸ் அப்படி ஒரு விபத்தைக் கண்டால் ஓடிப்போய்ப் பார்ப்பான், அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவான். அப்படி அவனால் உயிர் பிழைத்தவர்கள் சிலர் அவனை வாயார வாழ்த்தி அவனைப் பேசியதை நானே கேட்டதுண்டு. ஆனால், வாழ்த்துகளும் வசவுகளும் கலியுகத்தில் யாரையும் பாதிப்பதில்லை என்பதை அவன் வாழ்க்கை மூலம்தான் நான் உணர்ந்துகொண்டேன். அவன் விபத்துக்குள்ளான நாளில் அவன் உயிருக்குப் போராடியபோது இந்தப் பெருநகரத்து மக்கள் யாரும் அவனைக் காக்க முயற்சி செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை போய்ச் சேர்ந்தபோது அவன் செத்திருந்தான்!"

துக்கம் தனது வலிமையான கரங்களால் என் குரலை நெரித்தது. அதன் வலி பெருக, கண்கள் சில நீர்த்துளிகளைச் சிந்தின. அவர் மௌனமாக இருந்தார். நான் அடுத்த வார்த்தை பேச எத்தனை நாள் ஆனாலும் அதற்காகப் பொறுமையோடு காத்திருப்பவரைப்போல அவர் இருந்தார்.

துக்கம் பெருகுகிற வேளையில்தான் வார்த்தைகள் எல்லையின்றி வாயில் ஊறிவந்தவண்ணம் இருக்கின்றன எனப்பட்டது. இன்னும் எனக்குப் பேசவேண்டும் போலிருந்தது.

"நான்தான் அவனுடலை மார்ச்சுவரிக்குச் சென்று அடையாளம் காட்டினேன். எனக்குள் ஒரு கோழை இருப்பது அன்றுதான் நிரூபணமானது. பிணவறைக்குச் சென்று அடையாளம் காட்டித் திரும்புமட்டும் என் இதயத்துடிப்பின் ஓசை கேட்டே நடுங்கிக் கொண்டிருந்தேன். அவன் மனைவியும் பிள்ளைகளும் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுத ஒலிக்கு அஞ்சித் தூரமாக ஓடி ஒளிந்துகொண்டேன். அவர்களின் பிளவுற்ற குரல்கள் கேட்டு விழித்துக்கொள்ளும் இரவுகள் அன்று முதல் தொடர்ந்தன."

அவர் எழுந்து வந்து என் தோள்களைத் தொட்டார். அது என்னை அமைதிப்படுத்தும் முயற்சி என்று தோன்றியது. 

"மை டியர் ஃப்ரண்ட்! உன் பிரச்சினை வினோதமானது! ஆனால், மிகவும் பழையது. இறந்தவர்கள் யார் மூலமாகவோ அல்லது ஒரு பொருள் மூலமாகவோ, வாழ்பவர்களோடு பேசுகிற கதைகளை நீ கேட்டிருப்பாய். அப்படிப் பேசும் நபரையோ அல்லது பொருளையோ எங்கள் வழக்கில் 'மீடியம்' என்று சொல்வதையும் நீ அறிந்திருக்கக்கூடும். உன் நண்பன் உன்னோடு பேச விரும்புகிறான். அதற்காக எஸ்.எம்.எஸ்-ஸை மீடியமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவ்வளவுதான்."

"அவ்வளவுதான் என்றால், நான் எப்படி அவனோடு பேசுவது? அவன் என்னோடு பேச என்ன காரணம்?"

"பொதுவாக இப்படித் தானே முன்வந்து பேசுபவர்கள் தரப்பில் தேவை ஏதாவது இருக்கும், இருக்கலாம். அதை அவர்களே சொல்லுவார்கள். ஆனால், அதற்கு முதலில், நாம் நம்மோடு பேசுபவர் இறந்துபோன நபர்தான் என்பதை நம்ப வேண்டும்! இதில் பயப்பட ஒன்றும் இல்லை. உன்னோடு பேசுவது உன் நண்பன்தான் என்று புரிந்துகொள்! உன் மனதுக்குள்ளாக நீ அவனை நெருங்கிப் பேசு! நிச்சயம் அவன் இந்த முறையிலோ அல்லது வேறுவழியிலோ உன்னோடு பேசி, தன் தேவையைச் சொல்லுவான். பேச முயற்சி செய்! பயப்படாதே! உடலற்ற ஆவிகள் உடலுள்ள நம்மை ஒன்றும் செய்யாது. அதிலும், உன் நண்பன் நல்லவன் என்று நீதானே சொன்னாய்?"

*******

நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்தது மாணிக்கத்தின் வீடு. போலீஸ் ஸ்டேசனில் இருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என் நிலை எனக்கே பரிதாபமாக இருந்தது. யாரைப் பார்க்கப் போகிறோம், எதற்காகப் பார்க்கப் போகிறோம் என எதுவும் தெரியாமல் ஒரு எந்திரத்தைப்போல அலைந்து திரிகிறேன். இதைத் தவிர்க்கவும் முடியாது. பொதுவாகவே நண்பர்களின் தொந்தரவுகளைத் தவிர்ப்பது மிகவும் சிரமம். அதிலும், இறந்துபோன நண்பனின் வேண்டுதல்கள் என்றால் எப்படி? ஜேம்ஸ்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான் என்று நம்பத் தொடங்கிய நாளிலிருந்து, வரும் எஸ்.எம்.எஸ்-கள் எல்லாம் 'மாணிக்கத்தை உடனடியாகப் போய்ச் சந்தி' என்பதுதான். ஆரம்பத்தில், தினமும் ஒன்று இரண்டுதான் வந்துகொண்டிருந்தன. ஆனால், ஒருசில நாட்களிலேயே அது வழக்கம்போல எண்ணிக்கையற்று வரத் தொடங்கிவிட்டது. இப்பொழுது வேறுவழியே இல்லை. எனக்கும் ஜேம்ஸுக்கும் பொதுவாக மாணிக்கம் என யாரையும் தெரியாது. தொடர்ந்து சிந்தித்ததில்தான் தெரிந்தது. ஜேம்சை விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் பெயர் மாணிக்கம் என்று. 

மாநகரப் பேருந்தில் ஜேம்ஸ் வந்திருக்கிறான். பேருந்து நிறுத்தம் எவ்வளவு ஓரமாய் இருந்தாலும் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்துவது என்னவோ நடுரோட்டில்தான். அப்படி நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கியிருக்கிறான் ஜேம்ஸ் வந்த பேருந்தின் ஓட்டுநர். அப்போது, இடதுபுறம் சீறிப் பாய்ந்து வந்த வேன் ஜேம்ஸை இடித்துத் தள்ளியது. ஜேம்ஸ் தூக்கி வீசப்பட்டான். வேன் டிரைவர் தப்பியோட முயலவில்லை. போலீஸ் வரும்வரை அங்கேயே இருந்தான். போலீஸ் அவனைக் கைது செய்தது. எனக்கு, நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கிய ஓட்டுநரையும் கைது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அது வேறு யாருக்கும் தோன்றவில்லை. 'அவன்தான் வேன் டிரைவர்' என்றும், 'அவன் பேர் மாணிக்கம்' என்றும் சொன்னார்கள். நான் அவனைப் பார்த்தேன். பார்ப்பதற்கு அவன் முரட்டு மனிதனாக இருந்தான். அவன் கண்களில் விபத்து நேர்ந்ததற்கான பதற்றம் துளியும் இல்லை. 

மீண்டும் அவனை வழக்கு விசாரணை நாட்களில் பார்த்ததுண்டு. அவன் பார்வை ஒரு மிருகத்தைப்போல என்னைப் பார்த்ததுபோல் இருந்தது. ஜேம்ஸின் மனைவி, குழந்தைகளை அவன் பார்த்த பார்வை அச்சமூட்டுவதாக இருந்தது. அத்தகைய ஒரு மனிதனைப் போய்ப் பார்க்க ஜேம்ஸ் என்னைத் தூண்டுவானேன்? நானும் அதை மதித்து இங்கு வருவானேன்? ஒருவேளை, அவனால் தன் மனைவி, குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என ஜேம்ஸ் அஞ்சுகிறானா? அப்படியென்றால் நான் இதில் என்ன செய்ய? அல்லது என்ன செய்யமுடியும்? அவனைச் சந்தித்துப் பேசினால் அடிவிழாமல் தப்புவோமா? பயம் இருந்தும் இங்கு வரத் துணிந்ததுதான் என்ன? இல்லை, நானாக வரவில்லை. என்னை இயக்குவது நான் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இதோ மாணிக்கத்தின் வீடு. குரல் கொடுத்தேன். அவன் மனைவி வந்தாள். அவள் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது. அதன் தலை வறண்டு அழுக்கேறியிருந்தது. அவள் முகத்திலும் வறுமையின் ரேகை அழுத்தமாய்த் தெரிந்தது. 

"மாணிக்கம் இல்லையா?"

"அவர் எங்க ஊட்ல இருக்கிறாரு? சாமீன்ல வந்த நாள்லயிருந்து டாஸ்மாக்லதான் கிடக்குறாரு. நீங்க யாரு சார்?"

நான் பதில் சொல்லவில்லை. "டாஸ்மாக் எங்க இருக்குது?" என்றேன்.

அவள் காட்டிய பாதையில் டாஸ்மாக் வந்து சேர்ந்தபோது அங்கு மாணிக்கம் இல்லை. ஆனால், எல்லோருக்கும் அவனைத் தெரிந்திருந்தது.

"இப்போதான் சார் போனாப்ல. செம டைட்டு! எப்படினாலும் ரயில் கேட்டைத் தாண்டியிருக்காது சார். விரசலாப் போனாக்கா அவனப் புடிச்சிரலாம்."

வேகமாக நடந்தேன். சில நிமிடங்களில் கேட் வந்துவிட்டது. கேட் மூடியிருந்தது. கேட்டிற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் யாரும் இல்லை, என்னைத் தவிர. எங்கு போயிருப்பான் என்று யோசித்தபடியே கேட்டிற்குள் குனிந்து வந்தேன். தொலைவில் ரயில் வரும் ஓசை கேட்டது. எந்த டிராக்கில் வருகிறது என்று பார்ப்பதற்காக இருபுறமும் பார்த்தேன். அப்போதுதான் ஒரு மனிதன் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுப்பது தெரிந்தது. ரயில் கத்தும் ஓசை கொஞ்சம் சமீபமாகியிருந்தது. அந்த மனிதன் சரியாக ரயில் வரும் தண்டவாளத்தில்தான் தலை வைத்திருந்தான். என்னுள் பதட்டம் தொற்றிக்கொண்டது. எழுந்துகொள்ளும்படிச் சத்தமிட்டபடியே அவனை நோக்கி ஓடினேன். அவன் காதுகளற்றவனைப்போல நகராதிருந்தான். ரயில் அவனை நெருங்கிவிடும் தொலைவை எட்டிவிடும் தூரத்திலிருந்தது. என்னால் அதற்குள் அவனருகே செல்ல முடியுமா என்று தெரியவில்லை. என் சக்தியை ஒன்று திரட்டி ஓடினேன். காலத்தில் நொடிகள்கூட எவ்வளவு முக்கியம் என்று புரிந்த கணம் அது! இன்னும் சில நொடிகள் ரயில் தாமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். கண்ணிமைக்கும் பொழுதில் தாவி அவனை இழுத்து அப்புறம் போட்டுவிட்டுப் பார்க்கவும் ரயில் கடக்கவும் சரியாகயிருந்தது. ரயில் தோற்றது என்று எண்ணிக்கொண்டேன். அது சரி, ரயில் என்ன, உயிர்காக்கும் மனுசத்தன்மையோடு ஓடுகிறபோது இந்த உலகில் எல்லாம் மனிதனிடம் தோற்கும் என்று பட்டது.

ரயில் பெரும் சத்தத்தோடு கடந்துபோகும் வரை காத்திருந்தேன். பின்பு தோன்றிய வெளிச்சத்தில்தான் பார்த்தேன், அது மாணிக்கம்! நான் தேடிவந்த மாணிக்கம். என்ன நடக்கிறது இங்கு?

"மாணிக்கம்… மாணிக்கம் என்ன இது? என்ன காரியம் பண்றீங்க?"

அவன் ஈனஸ்வரத்தில் அழுது கொண்டிருந்தான். 'என்னையேன் காப்பாத்துனீங்க?… என்னையேன் காப்பாத்துனீங்க?...' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

நான் ஒன்றும் புரியாத நிலைமையில் இருந்தேன். அவனை நிதானப்படுத்தி, கைத்தாங்கலாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றேன். தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். இப்போதும் அவன் அழுகை நின்றபாடில்லை. 

"என்னாச்சு மாணிக்கம்? ஏன் அழுறீங்க? என்ன யார்னு தெரியுதா சொல்லுங்க!"

"தெரியுது சார்! நீங்க நான் கொன்ன ஜேம்ஸோட ஃப்ரண்ட்."

"சரி, ஏன் தற்கொலை பண்ணிக்கப் போனீங்க? நான் மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும் சொல்லுங்க?"

"செத்துப் போயிருப்பேன் சார், செத்துப் போயிருப்பேன். அதுக்குதான் முயற்சி பண்றேன், அது எனக்கு வரமாட்டேங்குது. என்னைக்கு அவர அடிச்சிக் கொன்னேனோ அன்னைக்கே பாதி செத்துட்டேன். அவர் பொஞ்சாதி புள்ளைகள பாத்தப்போ மீதியும் செத்துட்டேன். பாவம் சார்! ரெண்டு பசங்க. அதுவும் சின்னப் பசங்க. அவர் இல்லாதைக்கு அதுங்க என்னா சார் பண்ணுங்க? நான் அன்னைக்குக் குடிச்சிருந்தேன் சார்! பொதுவா, குடிச்சாக்கா நான் வண்டி ஓட்டுறதில்ல. அன்னைக்கு மொதலாளி என்ன வம்பு பண்ணி அனுப்பிச்சான் சார்! நான் வேணாம்னுருக்கணும், சொல்லலயே! என்னா வேகம்னு எதுவும் தெரில. பாவம் சார் அவரு! பாத்தாலே பாவமா இருந்தது. அப்படி ஒரு மனுசனக் கொன்னுட்டு என்னா சார் வாழ்க்க? ஜெயில்லயே ரெண்டு தபா சாவ டிரை பண்ணினேன், முடில. காப்பாத்திட்டானுங்க. இங்க வந்து சாவலாம்னா நீ காப்பாத்துற. நா என்னதான் பண்றது?"

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஜேம்ஸ் இன்னும் மாறவேயில்லை, இறந்தபிறகும்!

Tuesday, December 16, 2014

லிங்கா படத்தை முதல் நாளே பார்த்த கிரிக்கெட் அணி - எல் பாலாஜி ருசிகர பேட்டி

நூறு ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் ஆடிய பெருமையை பெற்றுள்ளார் எல் பாலாஜி.. இவர் சர்வதேச போட்டிகளிலும் கலக்கியவர்.( 8 டெஸ்ட் , 30 ஒரு நாள் ) காயம் காரணமாக அதில் தொடர முடியவில்லை. ஐ பி எல் போட்டிகளிலும் அசத்தினார் அவர். ஹாட் ட்ரிக் எடுத்தவர்.

அவரது நூறாவது போட்டியை முன்னிட்டு அவர் பேட்டி.
 -______________________________________________________________________
2001ல் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தபோது உங்கள் இலக்கு என்னவாக இருந்தது /?

அனைவருக்குமே இந்திய அணியில் ஆட வேண்டும் என்பதே கனவாக இருக்கும். உள்ளூர் போட்டிகளில் சாதிக்கும் கனவும் இருக்கும். இரண்டையும் சாதித்ததில் மகிழ்கிறேன்.

ரஞ்சி போட்டிக்கு முன் கொழும்பு அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ஆடினேன். தில்ஷான் , முபாரக் ஆகியோருடன் ஆடியது நல்ல அனுபவம்.
அப்போது வலுவாக இருந்த தமிழக அணியில் இடம்பெறுவது ரொம்ப கஷ்டம். ஆனாலும் இடம் பிடித்தேன். முதலில் ஆடும்போது நெர்வசாக இருந்தது. கேப்டன் ராபின்சிங் ஆதரவாக இருந்தார்

உள்ளூர் போட்டிகளில் கலக்கிய நீங்கள் , உங்கள் முதல் சர்வதேச போட்டியில் ரன்களை விட்டுக்கொடுத்தீர்களே. அப்போது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன/?

உள்ளூர் போட்டியில் ஜொலிக்க காரணமாக இருந்த திறமைகள் மட்டும் போதாது என உணர்ந்தேன்.. மன ரீதியாகவும் பேட்ஸ் மேனை திணறடிக்க வேண்டும். இதற்காக மன ரீதியாக என்னை தயார் படுத்திக்கொண்டேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்தபோது மன ரீதியாக வலுவாக இருந்தேன். சாதித்தேன்

காயம் இல்லாவிட்டால் இன்னும் அதிகம் ஆடி இருப்பீர்கள் அல்லவா

கண்டிப்பாக. 2005ல் காயம் காரணமாக பல போட்டிகளில் ஆட முடியவில்லை. இனி ஆட முடியாது என்றே நினைத்தேன். ஆனால் கடின உழைப்பால் மீண்டு வந்தேன்

அந்த கால கட்டத்தில் யாராவது பேசினார்களா.

ஆமாம்.. ஜாகிர் கான் , ஆசிஷ் நெஹ்ரா போன்றோர் அடிக்கடி பேசுவார்கள். டபுள்யூ வீ ராமன் , ராபின் சிங் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் உட்பட பலர் என்னை ஊக்கிவித்தபடி இருந்தனர். அவர்கள் இன்றி என்னால் மீண்டு வந்திருக்க முடியாது

இப்போது உங்கள் இலக்கு என்ன

தமிழகத்துக்கு ரஞ்சிக்கோப்பை வாங்கித்தர வேண்டும் என்பதே என் இலக்கு. பலமுறை இறுதிக்கு வந்தாலும் எங்களால் ஜெயிக்க முடியவில்லை. அனைத்து தகுதிகளும் எங்களுக்கு உண்டு. கண்டிப்பாக வெல்வோம்

 நீங்கள் ஆடியதில் உங்களுக்கு பிடித்த மேட்ச், பிடிக்காத மேட்ச் /?

2002- 2003, செமிஃபைனலில் பெற்ற வெற்றி வெகு இனிதான மேட்ச். கடந்த முறை என் தலைமையிலான தமிழக அணி வெல்லும் நிலையில் இருந்தபோதிலும் பெங்காலிடம் தோற்று விட்டது. கண்ணீர் விட வைத்த மேட்ச் அது


நீங்கள் ரஜினி ஃபேன் என்பது தெரியும். அவரிடம் என்ன பிடிக்கும்

அவரிடம் எல்லாமே பிடிக்கும். அவரது ஒவ்வொரு செய்கையுமே ரசிக்கத்தக்க ஒன்றுதான். அவர் படங்கள் எல்லாவற்றையுமே முதல் நாளே பார்த்து விடுவேன். லிங்கா ரிலீசின்போது திண்டுக்கல்லில் இருந்தேன். ஒட்டு மொத்த கிரிக்கெட் அணியும் , கோச் உட்பட , முதல் நாளே லிங்கா பார்த்தோம்.

( அதனால் கிடைத்த ஊக்கத்தினால்தான் , ஜம்மு காஷ்மீருக்கு எதிரான மேட்ச்சில் கலக்குதா..சூப்பர்.. நல் வாழ்த்துகள் )


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா