Sunday, March 27, 2022

படிக்க வேண்டிய எட்டு ஷார்ட் & ஸ்வீட் நூல்கள்

 மழைமான்  நூல் குறித்த  உங்கள் பார்வை ஓரளவுக்கு  ஓகே  , மேலும்  நன்றாக எழுதும் அறிவை தங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை அல்லது  பிரபஞ்ச பேரியக்கத்தை வேண்டுகிறேன்

நிற்க ,   இதே போல இன்னும் ஒரு  நாலு நூல்கள்  சொல்லுங்களேன்  நாங்களும் படிக்கிறோம் என சில நண்பர்கள் கேட்கிறார்கள்

தமிழிலேயே  ஆகச்சிறந்த  நாலு நூல்கள் நான் படித்ததிலேயே பெஸ்ட்  ஃபோர் என்று இல்லாமல்    மழை மான் போல  ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக  அதே சமயம் ஆழமாக யோசிக்க வைக்கும் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்

இந்த எட்டில் நான்கை  ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

இது தர வரிசை அல்ல  .    ஒரு வசதிக்காக முதலில் ஆங்கில  நூல்,,  அடுத்து வரும் தமிழ் நூல்களை  அவற்றின் தலைப்பின் அடிப்படையில் அகர வரிசையில்...


1 Tuesdays with morris - Mitch Albom

   நோய் வாய்ப்பட்டு , கொஞ்சம்  கொஞ்சமாக மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பழைய பேராசிரியரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசும் ஒரு ஆவணம் போன்ற நூல் அது.  மரணத்தையும் வாழ்வையும்  ஒரே நேரத்தில்  பார்க்கும் என் அனுபவம் உனக்கு உதவக்கூடும் என உற்சாகமாக தனது  பார்வையைப் பகிர்நது கொள்கிறார் பேராசிரியர்.   பல்வேறு விவகாரங்கள் குறித்த  ஆழமான பார்வைகள்


2 அஞ்சுவண்ணம் தெரு − தோப்பில் முகமது மீரான்


  இஸ்லாம் குறித்து  எதிர்மறையான நூல்கள் உண்டு   இஸ்லாமுக்கு  ஆதரவான பிரச்சார நூல்களும் உண்டு


 இஸ்லாமிய  கலாச்சாரத்தை  ,  அழகியலை ,   தொன்மங்களை , பொது சமூகத்துக்கு அது வழங்கும் அறிவுசார் கொடையை , கலைச்சொற்களை  பதிவு செய்யும் புனைவுகள் குறைவுதான்.    அஞ்சுவண்ணம் தெரு  வெகு அற்புதமாக"இப்பணியை இலக்கியரீதியாக செய்கிறது.    இஸ்லாமிய,பின்னணி என்றால் பொது,மானுடனின் இதயத்தை நோக்கிப்,பேசும் நாவல்


3,இரவு  −ஜெயமோகன்

    பகலில் உறங்கி இரவில் மட்டுமே விழித்திருக்கும்  ஒரு குழுவினர்  அவர்களது உலகம் என வித்தியாசமான ஒரு களத்தில் அமைந்த நாவல்.  நமது மனதின் இருளான பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது

4,ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு…

ஜீவ கரிகாலன்

இதை வெளிநாட்டு  கதைகளின் மொழி பெயர்ப்பு என சொன்னால் நம்பி விடுவோம்  அந்த அளவுக்கு புத்தம்புதிய கதைசொல்லல் யுக்திகள் ,  கச்சாப்பொருட்கள்  என அசத்தும் தொகுப்பு.   நூலின் எடை ,  கட்டமைப்பு,"வடிவம் போன்றவையும் உலகத்தரம்


5 கர்னலின் நாற்காலி  - எஸ் ரா


   கொரோனா  பொதுமுடக்க காலத்தை அர்த்தபூர்வமாக மாற்றியதில் எஸ்ராமகிருஷ்ணனின் குறுங்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு.  மரணம் வந்தால் வரட்டுமே  இந்த,குறுங்கதைகளை படிக்கும்வரை வாழ்ந்தோமே  அதுவே போதும் என நிறைவளிக்கும் வகையில் அவர் நூறு குறுங்கதைகள் எழுதினார்.  பல்வேறு கருப்பொருட்கள்   பல்வேறு  நடை  என,மாயாஜாலம் காட்டினார்  அக்கதைகளின் தொகுப்பு


6 கன்னி,  பிரான்சிஸ் கிருபா

காதல் என்பதன் பித்து நிலையை  , ஒரு பெண் என்பவள் ஆணுக்கு எப்படி பொருள் படுகிறாள் என்பதை ஒரு வித பித்தேறிய கவிதை நடையில்,சொல்லும் நாவல்


7 நாடோடியின் நாட்குறிப்புகள் − சாரு நிவேதிதா

மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த  கட்டுரைகளின் தொகுப்பு. புனைவுக்கும்  நிஜத்துக்கும் இடையேயான இடைவெளியை அழிக்கக்கூடிய பின் நவீனத்துவ எழுத்தாளர் சாரு.  எனவே இவரது பல கட்டுரைகளில் புனைவுத்தன்மை இருக்கும்.    அந்தந்த கால கட்டத்தை ஆவணப்படுத்தினாலும் என்றென்றும் relevant ஆக இருக்க்கூடிய கட்டுரைகளின் தொகுப்பு


8 பெத்தவன்    இமையம்

   ஆணவக் கொலை என பேப்பரில் படிக்கிறோம்    அது போன்ற ஒரு  தருணத்தை இரு தரப்பினரின் பார்வையிலும் சொல்லக்கூடிய நாவல்.

இதை இமையம் தவிர வேறு யாரும் எழுதிவிட்டு உயிருடன் நடமாடி இருக்க,முடியாது

அந்தவகையில் பார்த்தால் இது போன்ற நாவல் வந்ததும் இல்லை  இனியும் வர முடியாது



Friday, March 25, 2022

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் − எஸ்ரா நூல் வாசிப்பனுபவம்



எஸ் ராமகிருஷ்ணனின்  மழைமான் சிறுகதை தொகுதி  சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு


 எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது.

அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது;

என்ற  பின்னட்டைக்குறிப்புகள்  இந்த சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு  பொருளைத்தருகின்றன


எளிய மனிதர்கள் என்பதே  ஒரு ரிலேட்டிவ் பதம்தான்;

உதாரணமாக  80களில்  எம்ஜிஆர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தபோது, கலைஞர் இனி வெல்ல வாய்ப்பில்லை என்றொரு சூழல் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை  ( கலைஞர் மீது அபிமானம் கொண்ட) நடிகர் ராஜேஷ் விவரித்திருப்பார்

ரயில் நிலையத்தில் தனது பெட்டியை தானே சுமந்து கொண்டு ,  தன் மனைவியாரோடு தன்னந்தனியாக கலைஞர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் மனம் கலங்கி விட்டது. எப்பேற்பட்ட அறிவாளி ,  தலைவர்   வரவேற்க்கக்கூட ஆள் இல்லாமல்  யாரோ ஒருவர் போல  வருகிறாரே  காலம் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமா என  உருக்கமாக எழுதியிருப்பார்


அதே கலைஞர்  எம்ஜிஆர் மறைவுக்குப்பின் விஸ்வரூபம் எடுத்தது வேறு விஷயம்.   


ஒரு  பார்வையில்  மனிதர்கள் அத்தனைபேருமே  எளியவர்கள்தான்.  காலம்தான்  சிலரை  அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில்  மாறி விடக்கூடியதுதான்


போலீஸ் அராஜகங்களை  தம் ஆட்சியின்போது எகத்தாளமாக  நியாயப்படுத்துவதும், ,  ஆட்சி மாறியதும்  எளிய மனிதனாக  கதறுவதும்  சர்வ சாதாரணமான  காட்சி


இந்த தொகுப்பில்  நடுத்தர  வாழ்வு என்ற ஓர் உலகுக்குள் நடக்கும் இந்த  ஒரு  பரமபத விளையாட்டை  அழகாக பதிவு செய்துள்ளார்  எஸ்ரா


உயர் ரசனையுடன் ,  கம்பீரமாக வாழும் ஒரு குடும்பத்தலைவி  ஒரு கல்லூரி மாணவனின்  அத்துமீறல்  என்றொரு செயலால்மனம்நிலைகுலைவதும்  அந்த  சம்பவம் நிகழ காரணமாக அமைந்த மற்ற  நிகழ்வுகளும்  ஒரு  முழு வாழக்கையையே  பிரதிபலித்து விடுகின்றன; ( அவன் பெயர் முக்கியமில்லை சிறுகதை)

வாழ்க்கை என்பது  எண்ணற்ற  தற்செயல்களின்  விளைவுகள்.  நம்மை மீறிய  செயல்களே   நம்மை எளியவனாகவும் வலியவனாகவும் மாற்றிக்காட்டுகின்றன


ஒரு கணம் முன்பு  உண்டியல் விற்கும் தாத்தா முன்பு  வலியவளாக இருந்தவள்  அதே  நாளில் ஓர் விக்டிம் அல்லது அபலை ஆகிப்போகிறாள்

அந்த நிகழ்வு  வேறோரு,பெண்ணுக்கு  கிளுகிளுப்பானதாக  அவளது ஈகோவை  வலுவாக்கும்  சம்பவமாக  அமைந்திருக்கக்கூடும்

இதன் பின்னணியில் நிகழும்  ஒரு கொலை சம்பவமும் இந்த எளியவன் வலியவன்  இருமையை அடிக்கோடு இடுகிறது.   

இதில் தன்னை  வலியவனாக உணரும் மாணவன்  ஒரே ஒரு நிமிடத்தில்   எளியவனாகும் வாய்ப்பும் இருக்கிறது  


ஒழுங்கின்மைக்குள்  ஏதோ  ஒரு  ஒழுங்கு இருக்கிறது  என்கிறது அறிவியல்

அதுபோல  அறமின்மைக்குள்  வாழும் அறம்தான் உலகை  வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது


இன்னொரு ஞாயிற்றுக்கிழமை  கதையில்  வேலையில்லாமல்  நண்பன் அறையில்  தங்கி இருக்கும்  தாமோதாரன்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு நாளாவது  வயிறார  சாப்பிட விரும்புகிறான்.    அதற்கு  அவன்  ஒரு யுக்தி வைத்திருக்கிறான்.


யாராவது  ஒரு  வசதியான  பழைய  நண்பனை   நட்புரீதியாக  சந்திக்கசெல்வதுபோல   மதிய வேளை  சந்தித்து  சுவாரஸ்யமாக புகழ்ந்து பேசி  அப்படியே  சாப்பிட்டு விட்டு  வந்து விடுவான்


பாஸ்கர்  என்ற  நண்பனிடம் இந்த யுக்தி பலிக்கவில்லை   துச்சமாக  நடத்துகிறான்  பசி  தாங்க முடியவில்லை  பாஸ்கரின்  பாட்டி  கொரியர்  செய்ய கொடுத்த  50 ரூபாயில்  தனது  நண்பனுடன்  சாப்பிட்டு  விடுகிறான்

கதையின் வெடிப்பு  நிகழ்வது  அதற்குப்பிறகுதான்.    50 ரூபாய்க்கு  பாட்டியை  ஏமாற்றிவனால்  அந்த  கவரில் இருக்கும்  500 ரூபாயை  அபகரிக்க முடியவில்லை

வலியவன் எளியவனை வாட்டினால்  எளியவன்  தான் துன்புறுத்த  தன்னை விட எளியவன் ஒருவனை கண்டுபிடிப்பான் என்ற   அறவீழ்ச்சியால் சூழப்பட்ட ஒரு யுகத்தின் மத்தியில்  அவனது அறம் விழிக்கிறது

தனக்கு நிகரானவரை  தன்னை விட உயர்நிலையில் இருப்பவரை ஏமாற்றுவதை ஏற்கும் அவன் உள்ளம்,தன்னை விட கையறு நிலையில் இருக்கும்  ஒரு கிழவியை  − அதுவும் அவள்  தன்னிலும் எளிய ஓர் அபலைக்கு உதவ முனையும்போது −, ஏமாற்றுவதை ஏற்கவே முடியவில்லை

Games people play என்பதுபோல, மனிதர்கள்,விளையாடும் இந்தக்கருணையற்ற  விளையாட்டின் விளைவை அவன் கண் முன் பார்ப்பது அவனுக்கு ஒரு தரிசனமாக  ( vision)அமைகிறது



    அறம் என்பதையே  கேள்விக்குள்ளாக்குகிறது  ஓலைக்கிளி கதை

ஒரு காலத்தில்  ரவுடியாக  இருந்தவன்

 தற்போது திருந்தி விடுகிறான்  தன்

மகள் திருமணத்துக்கு கிட்டத்தட்ட பிச்சை எடுக்கிறான்.  


கடைசியில்  மகள் திருமணம் என்பதே பொய் என தெரி்கிறது.   வேண்டுமென்றேதான் செய்தேன்  எனக்கூறி  அதற்கொரு  லாஜிக்கலாக காரணமும் கூறி கடிதம் அனுப்புகிறான் குடும்பத்தினருக்கு அரிய பரிசு ஒன்றையும் அனுப்புகிறான்.அவன் செயலில் எவ்வித அறப்பிழையையும் நம்மால் காண முடிவதில்லை.    நமக்கே அவனைப்பார்க்க வேண்டும் என்ற  ஆசை ஏற்படுகிறது

  நம்மில் பலருக்கு உரிய சம்பளத்தை கேட்டுப்பெற பயம் ,   சாலை உடைசல் ,  குப்பை குவியல் இவற்றையெல்லாம் யாரிடம் முறையிடுவது என்று தெரிவதில்லை  தெரிந்தாலும் உரியவர்களிடம் முறையிட,தயக்கம்  , பயம் , சோம்பல்

இந்தக்கோழைத்தனத்தை  மறைத்து நம்மை நாமே  ஏமாற்றிக் கொள்ள ,  முகநூல் அவதாரம் எடுக்கிறோம்  .  விளாடிமின் புடின் ,   டிரம்ப் ,  மோடி , ஸ்டாலின்  ,  எடப்பாடி என அனைவரையும்  வீரமாக எதிர்க்கிறோம்.  வீரன்  சமூகப்போராளி  என  நம்மை நம்ப வைத்துக் கொள்கிறோம்.

இதை மழைமான் என படிமம் மூலம் அழகாக சொல்கிறது  மழை மான் கதை.   

சக பெண் ஊழியர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து  இன்ப அதிர்ச்சி அளித்து ஹீரோ ஆகும் முயற்சி அசட்டுத்தனமாய் முடிகிறது.  இப்படி அலுப்பூட்டும் வாழ்வில் சுவையாக ஏதேனும் செய்யும் பொருட்டு மான் ஒன்றை  பார்க்க  ஆசைப்படுகிறார் ஒருவர்  அந்த  தேடல் அனுபவத்தை  சாகசமாக ஆக்கிக் கொள்ளும்  சந்தர்ப்பங்களை  கோட்டை விடுகிறார். நிஜ மானை  தவற விட்டுவிட்டு  மழைமான் ஒன்றை  கற்பனையில் உருவாக்கி   மழை  நீர் மட்டுமே அருந்தும் கற்பனை  மானை  தான்  பார்த்ததாக  பிறரிடம்  அளந்து  விடுகிறார்.  அதை  தானும் நம்புவது மட்டுமல்ல   அதை  உண்மையில் பார்க்கவும் செய்கிறார்

ஆனால் மழைமான் கதையை  தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் சிரித்து விடுகிறாள்.  அவருக்கு  வலிக்கிறது.

முகநூலில் சமூக ஊடகங்களில் நாம் உருவாக்கி அலைய விட்டிருக்கும்  மழைமான்கள்  எத்தனை  எத்தனை


இந்த சிறுகதைத் தொகுப்பை  ஒரு  நான்லீனியர்  நாவலாகவும் வாசிக்க இயலும்.  

எளியவன்  வலியவன் எனும் இருமையை  இன்னொரு  கோணத்தில்  காட்டும் கதை ,  எதிர்கோணம்.   சிறந்த கேமிரா கலைஞனாக உருவாகி இருக்க வேண்டிய ஒருவரை  வாழ்க்கை பேருந்து நடத்துனராக ஆக்கி வைத்துள்ளது  அவரது வாழ்வின் ஒரு துளிதான் கதை.   எங்கோ பெற்ற அடியை  வேறு எங்கோ செலுத்தும் முடிவில்லா  அர்த்தமற்ற விளையாட்டு

இந்த விளையாட்டின் அபத்தம் நாம் முன்பு பார்த்த  கதையில் ஒரு கணத்தில் முகத்தில் அறைகிறது  இக்கதையில்  அந்த செயல்பாடு  நிகழ்கிறது


பாடல்களுக்கும்  நமக்குமான ( குறிப்பாக பெண்களுக்குமான ) உணர்வுப்பூர்வமான பந்தத்தைப்,பேசும் கதை ,   அபூர்வமான  பறவையை தேடும் அனுபவம்  முழுக்க முழுக்க  கவிதை நடையில் அமைந்த  மழைக்கதை என அனைத்தும்  அழியாத ஏதோ ஒன்றை  சொல்வதாகவே  தோன்றுகிறது

 வெறும் பிரார்த்தனை  கதையில் பொறுப்பற்ற   குடிகாரன ஒருவனால் குடும்பம்  அடையும்  மன உளைச்சல் காட்டப்படுகிறது   பொறுப்பற்ற  தந்தை  இரக்கமற்ற   வேலை சூழல்  கடுமையாக வேலை வாங்கும் முதலாளி என முழுக்க முழுக்க இருண்மையான வாழ்க்கை  ஆனால்  அந்த,முதலாளி ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு கிளம்பும்போதும் பத்திரமா போய்ட்டு வாம்மா என அன்பாக பேசி  ஒரு சாக்லேட் வழங்குவதில் அத்தனை வலியும் மறந்து போயவிடுகிறது

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது

இந்த  தொகுதியின் செய்தி என எஸ்ரா எதுவும் உத்தேசித்து  இருக்க மாட்டார்  ஆனால் எனக்கு இத்தொகுதி  வழங்கிய"செய்தி இதுதான்

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது


தூய வெளிச்சம் என்ற  கடைசிக்கதை எனக்கு  அவ்வளவு  நிறைவளித்தது.


எத்தனையோ கனவுகளுடன்  கலை உணர்வுடன்   ஒரு  மாளிகையை  எழுப்புகிறார்  குமாரசாமிப்பிள்ளை . வீட்டின் முகப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்கு அந்த தெருவுக்கே இரவு முழுக்க நிலவு போல வெளிச்சமளிக்கும்


ஆனால்  குமாரசாமிப்பிள்ளையின் வாரிசுகளைப் பொருத்தவரை  அந்த வீட்டின்  கலையுணர்வோ   தூய வெளிச்சம் வழங்கும்  அவரது  நல்லெண்ணமோ பொருட்டில்லை..

பணம் மட்டுமே பொருட்டு.   எதற்கு  தெண்டமாக மின்விளக்கு என அந்த  விளக்கை  நிறுத்தி விடுகின்றனர்.  பிள்ளையின் மறைவுக்குப்பிறகு  அந்த வீடு இடிக்கப்படுகிறது

அப்படி  என்றால்  அவரது  ரசனை   நல்லெண்ணம் எல்லாம்  காரிருளில் மறைந்து  விட்டதா ? அந்த  வெளிச்சம்  யார் மனதிலும் இல்லாமல்  இணைப்புச்சங்கிலி  அறுந்து  விட்டதா என்பதற்கு  அற்புதமான   பதிலைத்தருகிறது கதை

     ரசனை   ,   நல்லெண்ணம் எனும் வெளிச்சம் என்றும் மறைவதில்லை  தனக்கான  கடத்தியை  தேர்வு  செய்து கொண்டு  அவை  காலம் காலமாக  தொடர்கின்றன

     ஒரு  திருடன்தான் இந்த வெளிச்சத்தை அடுத்த  தலைமுறைக்கு ஏந்திச் செல்கிறான் என்பது  சுவையான முரண்

அந்த  கட்டடத்தை   , அந்த  வெளிச்சத்தை  அணு அணுவாக  ரசிப்பவன்  அந்த  திருடன்.    அந்த  வீட்டிற்குள்  ஒரு முறையாவது  நுழைந்து பார்க்க வேண்டும் என திட்டமிட்டு  உள்ளே திருடச் செல்கிறான்

       வீட்டின் இருண்மை   அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலையை   அவனுக்கு  தெரிவிக்கிறது

    பிள்ளை  மரணத்துக்கு  இதயப்பூர்வமாக வருந்துபவன் அவன் மட்டுமே

      அந்த  வீடு இடிபட்டு தரைமட்டமாகும்போது அவ்வீட்டின் ஒரு சிறிய கல்லை  எடுத்துக் கொண்டு  அவன் செல்வதுடன் கதை  கவித்துவமாக முடிகிறது

       அந்த  தூய வெளிச்சம்  நம்முள்ளும் பரவுகிறது

    வித்தியசமான  துள்ளும் நடையில்  அனைத்து  கதைகளையும் படைத்துள்ளார்  எஸ்ரா . சும்மா  புரட்டிப்பார்க்கத்தான்  எடுத்தேன்   முடித்து விட்டுதான் வைத்தேன்

      இப்படி சுவையான நடையில் ஆழமான இலக்கிய நூல்கள் வருவது அரிது


தேசாந்திரி  பதிப்பகம் சிறப்பாக நூலை உருவாக்கியுள்ளது .  அட்டை ஓவியம் அருமை

      தொகுப்பின் பெயர்     மழைமான்

       பக்கங்கள்                       176

        விலை                                160










Saturday, January 1, 2022

கனமழை அனுபவம்

 ஒரு வேளையாக  பாரிமுனை சென்றிருந்தேன்.

வழக்கத்துக்கு மாறாக ஆறரை மணி இருள் நான்கு மணிக்கே நிலவியது.

அடிக்கடி மழையைப் பாரத்த அனுபவம் இருப்பவர்கள் இது கனமழையின் அறிகுறி என அறிந்திருப்பர்


நம்மைப் பொருத்தவரை எந்த மழையென்றாலும் அரை மணி நேரத்தில் நின்று விடும் என நினைப்பவர்கள் எனவே மழை சிந்தனை சற்றும் இன்றி சுற்றிக் கொண்டிருந்தேன்


அவ்வப்போது மழை வருவதும்நிற்பதுமாக இருந்தது.  

முன்பெல்லாம் மழை ஒரு பிரச்சனையாகவே இருக்காது. நனைவது பிடிக்கும்  ஆனால் எப்போது செல்போன் வந்ததோ எப்போது  பைக் வந்ததோ அப்போதுதான் மழை யோசிக்க வைக்க ஆரம்பித்தது.  மழையால் பழுதடைந்த போன் ,   பைக் நின்று போய் அரை கிமீநடை என பல அனுபவங்கள்


நல்லவேளையாக  பைக்கில் வரவில்லை செல்போனை  சேஃப் செய்து விட்டேன்  வாட்ச் வேறு  அதையும் சேஃப் செய்தேன்  


அப்போதுதான் கனமழை ஆரம்பித்தது.  சாதா மழை போல் இல்லாமல்  மேகத்திலிருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது


சரி நின்று விடும் என   ஒரு கடையோரம் ஒதுங்கினேன்.   உள்ளே வந்து நில்லுங்க என உபசதித்தார்  கடைக்காரர்   பரவாயில்லை என   வாசலோரம் நின்றேன்


ஒரு குடிப்ரியர் மழையை உற்சாகமாக ரசித்தபடி  சாலையிலேயே நீந்தி படுத்து குதித்து விளையாடினார்


மழை மேலும்,மேலும் அதிகரித்தது.  சாலையில் தண்ணீர் மட்டம் உயர்வதை காணுவது ஒரு வித திகிலை அளித்தது.


ஆங்காங்கு நின்ற  டூவீலர்கள் முக்கால்வாசி அளவு மூழ்கின.   சில சரிந்து விழுந்து முழுதும் மூழ்கின.

டூவீலர்கள்என்னென்ன பிரச்சனைகளை சந்திக்ப்போகின்றனவோ எவ்வளவு செலவு வைக்கப்போகின்றனவோ என கவலையாக இருந்தது.

கார்கள் நிலையும் மோசம்தான்

மழை நிற்காது எனப் புரிந்து விட்டது. கடையோரத்தில் உருவாகத்தொடங்கிய நட்பு வட்டத்திடம் விடை பெறறு மழையில் நடக்கலானேன்

தொடை வரை ஓடும் தண்ணீரில் நடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.  வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் "அலை"  நடப்பவர்களை தடுமாற வைத்தது

ஒருவர் அந்த மழையிலும் மலை போல நின்று , அப்படிப்போகாதீங்க, பள்ளம் இருக்கு,என பலரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்

இதுபோன்ற நேரங்களில் வெகு எளிதாக குற்றச் செயல்களை  நிறைவேற்ற முடியும்  ஆனால் யாருமே அப்படி செய்யவில்லை என்பதுமட்டுமல்ல பிறருக்கு உதவவும் முன்வந்தனர்

ஒரு வழியாக பேருந்தில் ஏறினேன்.  

கண்டக்டர்  ,  டீ சாப்பிட்டியா என விசாரித்தார் டிரைவர் .  இல்லைணே  போயிட்டு  சாப்பிடலாம் என்றார் கண்டக்டர்

எப்போ போயி சேரப்போறோம்னு கடவுளுக்குத்தான் தெரியும்  முடிஞ்சா டிபன் சாப்பிட்டுட்டு வந்துரு என உரிமையுடன் சொன்னார் ஓட்டுநர்

அவரது  தீர்க்கதரிசனமும் , சகஊழியர் மீதான அன்பும் பிறகுதான் புரிந்தது

கிட்டத்தட்ட ஏழு   மணி நேர பயணம் !!!

மழையில் நனைந்து கொண்டு  இவ்வளவு நேரம் பயணிக்க வேண்டிய டூவிலர்ஸ்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டியவன் , பஸ்ஸில் நிம்மதியாக அமர்ந்திருப்பதே  பெரும் பேறாக தோன்றியது

இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கினேன்  மழை நிற்கவில்லை

ஆட்டோக்கள் கிடைக்கவில்லை


அப்படியே நனைந்து கொண்டு சென்றிருந்தால்  ஆயிரம் இரூந்தால் சாமான்யர்களிடம்தான் உதவும்தன்மை அதிகம் என மேசேஜ் சொல்லியிருப்பேன்


ஆனால் அறிமுகமற்ற   ஒருவர்"அவராகவே என்னை அழைத்து

தன் குடையில் அழைத்து வந்து வீட்டருகே விட்டார்.   சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மேலாளர் என பேச்சுவாக்கில் அறிந்தேன்


மனிதர்களின் நல்ல அம்சங்களை வெளிக்கொணர அவ்வப்போது இப்படி இயற்கை சீறுவது ஒரு வினோதம்தான்


Monday, November 22, 2021

தமிழ்ஸ்டுடியோ எனும் சினிமா பல்கலைக்கழகம்






 திரைப்படம் என்பதை மலிவான ரசனைக்கு வடிகாலாக பலர் பயன்படுத்தும் நிலையில் அது கலை வடிவின் ஓர் உச்சம் என்ற புரிதல் சிலருக்கே உண்டு.

   இசை , கவிதை ,  சிறுகதை , நாவல் , ஓவியம் , புகைப்படக்கலை என  அனைத்து வகை கலைகளும் சங்கமமாகும் அரும்பெரும் கலை வடிவம் திரைப்படம்.   


அந்த வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு செய்து வரும் பணிகள் மகத்தானவை

ஏராளமான குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , உலகத்திரைப்படங்கள் ,  அரிய இந்திய  திரைப்படங்கள் ,  தமிழ் சாதனைப்படங்கள் என ஏராளமான திரையிடல்கள் மூலம் ரசனையை உயர்த்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கியப் பங்கு உண்டு

    ஜெய்பீம்  போன்ற படங்கள்  தமிழில் உருவாக முடியும் என்ற  லட்சியக்கனவு விதையை பல ஆண்டுகள்,முன்பே விதைத்த இயக்கம்  தமிழ் ஸ்டுடியோதான்


வடபழனி, பேருந்து நிலையம்,அருகே,இயங்கி,வந்த  ப்யூர் சினிமா அலுவலகம்  சினிமா ஆர்வலர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது..   அங்கு வந்து தம்மை மெருகேற்றிக் கொண்ட பலர் இன்று திரைவானில் ஜொலிக்கின்றன


அலுவலகம் நுழைந்தால் திரைப்டக்கல்வி பயிலும் படிமை மாணவர்களால்,   பாலின சாதி மத அடையாளங்களற்ற  இளைஞர்களால்  அந்த இடமே

அறிவிப்பிழம்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கும்


பெளர்ணமி இரவு திரையிடல்களை  இரவு விவாதங்களை யாரால் மறக்க முடியும்


ப்யூர் சினிமா புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கத்தில்  இயங்கி வருகிறது.  கீழ்த்தளம் ,  நெரிசல் இல்லாத இடம் போன்ற அனுகூலகங்களுடன் அற்புதமாக தன் பயணத்தை தொடர்கிறது ப்யூர் சினிமா புத்தக அங்காடி.


தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வெளிவரும் படச்சுருள் மாத இதழ் தமிழ் இதழியல் வரலாறில் என்றும் நிலைத்திருக்கும்.

இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த,அமைப்பு பல்லாண்டுகள் பயணித்து சாதனைகள் புரிய வாழ்த்துகள்


வாழ்த்துகளை விட   நமது சார்பில்  வருங்கால தலைமுறைகள் சார்பில்  நன்றி என்பதே பொருத்தம்




Sunday, November 7, 2021

வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு

 ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நல்ல மகன், நல்ல நண்பன் ,  நல்ல கணவன் ,  நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.

ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து

வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன்.  ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன்.  ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன்.   சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்


ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன்.  அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.


இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி.   எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே


வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது,  ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.


ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது.  அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது.  கபந்தன் வீழ்த்தப்பட்டு ,  சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்

இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான்.  சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்

வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை  சொல்கிறான் ?  ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;

அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை.   அவளிடம்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன்.  சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என  அவளும் சொல்லவில்லை.   சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.

கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.  ராமன்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் ,  அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை

அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே  ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்


கபந்தன் ,  சபரி  மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்


அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி

இதில் ஒரு சுவாரஸ்யம்


தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான  சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)

லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை.  சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்

ஆக தனக்குப் பிடிக்காத  ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது


கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

பின்குறிப்பு

இதில் ஒரு சுவாரஸ்யம்.  அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்

ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது

அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது.  எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே  சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் ராமன் இப்படி  சொல்கிறான்

சகோதர பாசம் அரிது.  எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா?  பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என  பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்

சுவையான இடம்




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா