Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, November 7, 2021

வாலி−லட்சுமணன் , பரதன் − லட்சுமணன்.. சுவையான ஒப்பீடு

 ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் வெகு உயர்வாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

நல்ல மகன், நல்ல நண்பன் ,  நல்ல கணவன் ,  நல்ல அரசன் என ஜொலிக்கும் அவனது புகழுக்கு சற்றே மாசு ஏற்படுத்துவது வாலியை அவன் கொன்ற விதம்தான்.

ராமன் − வாலி பகுதி ராமாயணத்தில் − குறிப்பாக கம்ப ராமாயணத்தில் − வெகு அற்புதமாக ஒரு சிறப்பான திரைகதையாக மிளிர்கிற்து

வாலி என்பவன் ராமன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவன்.  ராமன் உன்னைக் கொல்லக்கூடும் என யாரேனும் சொன்னால் , அவர்கள்,மீது சீறுபவன்.  ராமன் எப்பேற்பட்ட குணசீலன் தெரியுமா என வியந்தோதுபவன்.   சீதையை தேடும் ராமனின் பணிக்கு திறமையாக உதவியிருக்கக்கூடியவன்


ஆனால் சுக்ரீவனோ ராமன் மீது பெரிய மரியாதை அற்றவன்.  அண்ணனையே கொல்லத்துணியும் துரோகியை நம்ப வேண்டாம் என்று லட்சுமணன் இவனை இழிவாகவே நினைக்கிறான்.


இப்படி எல்லா விதங்களிலும் உயர்வான வாலியை விட்டுவிட்டு சுக்ரீவனோடு ராமன் கூட்டணி அமைப்பதுதான் பிரபஞ்சத்தின் புரிந்து கொள்ள முடியாத விதி.   எத்தனையோ நல்லவர்கள் திறமைசாலிகள் வாடுவதும் பொய்யர்கள் திறமையற்றவர்கள் செழிப்பதும் அன்றாடக்காட்சிதானே


வாலிக்கு எதிராக விதி எப்படி செயல்படுகிறது,  ராமனின் புகழை கெடுக்க விதி எப்படி செயல்படுகிறது என்பதை ராமாயணம் வெகு துல்லியமாக விளக்குகிறது.


ராமனுக்கு வாலி , சுக்ரீவன் என யாரையும் தெரியாது.  அப்போது கபந்தன் என்ற அரக்கனுடன் மோத வேண்டியது வருகிறது.  கபந்தன் வீழ்த்தப்பட்டு ,  சாபவிமோசன் பெற்று கந்தர்வன் ஆகிறான்

இந்த நன்றிக்கடனுக்காக ராமனுக்கு ஒரு டிப்ஸ் தருகிறான்.  சீதையை மீட்க படைபலம் தேவை , எனவே சுக்ரீவனுடன் கூட்டணி அமையுங்கள் என்கிறான் அவன்

வாலியை அறிமுகம் செய்யாமல் ஏன் சுக்ரீவனை  சொல்கிறான் ?  ஒரு,வேளை பலமும் , வளமும் பெற்ற வாலி மீது அவனுக்கு ஏதும் பொறாமையா என நினைக்கிறோம்;

அடுத்தபடியாக ராமன் சந்திப்பது சபரி எனும் ஞானியை.   அவளிடம்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்கிறான் ராமன்.  சுக்ரீவன் வேண்டாம் , வாலியைப் பாருங்கள் என  அவளும் சொல்லவில்லை.   சுக்ரீவனைப் பார்க்க வழி காட்டுகிறாள்.

கபந்தனுக்கு உள்நோக்கம் இருக்கலாம். தவத்தில் கனிந்த சபரிக்கு உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.  ராமன்  சுக்ரீவனை சந்திக்க வழி கேட்டான் ,  அதை சொல்லி விட்டோம் என்பதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை

அடுத்தபடியாக அனுமனை சந்திக்கிறான் ராமன். பார்த்ததுமே  ராமனை நேசிக்க ஆரம்பித்துவிட்ட அனுமனும் சுக்ரீவனுக்கு ஆதரவாகவே பேசுகிறான்


கபந்தன் ,  சபரி  மற்றும் அனுமன் என யாரேனும் ஒருவர் வாலியை ஆதரித்து இருந்தால் , வாலியின் உயிரும் ராமனின் புகழும் காப்பாற்றப்பட்டு இருக்கும்


அது நிகழாமல் போனது பிரபஞ்ச பெரு நியதி

இதில் ஒரு சுவாரஸ்யம்


தன் அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவன் நமக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பான் என்ற நியாயமான  சந்தேகம் எழுப்புகிறான் ( பிற்பாடு நன்றி இல்லாமல் நடந்து கொண்டு இந்த சந்தேகத்தை உண்மையாக்குகிறான் சுக்ரீவன்)

லட்சுமணன் கேள்விக்கு ராமன் சரியாக பதிலளிக்கவில்லை.  சரி விடு , அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என மழுப்பிவிடுகிறான்

ஆக தனக்குப் பிடிக்காத  ஒருவனுக்காக தன்னை மதிக்கககூடிய ஒருவனை கொன்று பழி சுமக்கும் சூழல் உருவாகி விடுகிறது


கடவுள் அவதாரம் என்றாலும் விதியை வெல்ல முடியாது என்ற இந்த பகுதி அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று

பின்குறிப்பு

இதில் ஒரு சுவாரஸ்யம்.  அண்ணனையே கொல்ல நினைக்கும் சுக்ரீவனை நம்ப வேண்டாம் என்கிறான் லட்சுமணன்

ஃப்ரீயா விடு.. அவனுக்குத் தெரிஞ்சது

அவ்வளவுதான். சகோதர பாசம் அரிது.  எல்லோரும் உன்னைப் போல இருப்பார்களா என்றுதானே  சொல்லி இருக்க வேண்டும் ?

ஆனால் ராமன் இப்படி  சொல்கிறான்

சகோதர பாசம் அரிது.  எல்லோரும் பரதனைப்போல இருப்பார்களா?  பரதனின் பாசத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியுமா என  பரதனை லட்சுமணைவிட ஒருபடி மேலாக வைத்து பேசுகிறான் ராமன்

சுவையான இடம்




Wednesday, October 14, 2020

அப்பரின் அரிய பாடல்

 

சில பாடல்களின் பொருள் நமது வாசிப்பால் புதிதாக ஒரு பொருளைத்தருவதுண்டு

கீழ்க்கண்ட பாடலைப்பாருங்கள்.  அப்பர் ( திருநாவுக்கரசர் ) தேவாரப்பதிகம்


வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்

தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்

திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்

இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே


ஐந்து கள்வர் ஒரு ஆமையைப்பிடித்து நீரில் போட்டு அடுப்பிலேற்றினர்.  சற்று நேரத்தில் சாகப்போகிறோம் என்பதறியாது, அவ்வாமை இதமான சூட்டின் வெதுவெதுப்பை முட்டாள்தனமாக ரசித்து மகிழ்ந்தது. அது"போன்ற முட்டாளாக நானும் இருக்கிறேனே..  ஐந்து புலன்கள் தரும் உலகின்பத்தை நிலையென ரசித்து மகிழ்ந்து வரப்போகும்  மரணம் குறித்த அறிவின்றி இருக்கிறேனே  என்பது மேலோட்டமாக நமக்குத் தெரியும் பொருள்

ஆனால் உள்ளார்ந்த பொருள் வேறு

ஆமை ஒன்று குளிரில் உறைந்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறது

அப்போது ஒருவன் அதைப்பாரத்து, சமைத்து தின்ன முடிவெடுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தில் அதைப் போட்டு அடுப்பிலேற்றினான்

அந்த வெப்பத்தால் ஆமைக்கு உணர்வுகள் திரும்பின. உயிர் வந்தது. மகிழ்ந்தது

சில நிமிடங்கள் முன் ஒரு ஜடம். அதில் விழிப்புணர்வில்லை

சில நிமிடங்களுக்குப்பிறகு மரணம் . அதிலும் விழிப்பில்லை

இதோ ..கிடைத்திருக்கும் இந்த கணங்கள்தான் வாழ்வின் உச்சம்.  அதை உணர்ந்து நீருக்கு அடுப்புக்கு தனக்கு வாழ்வு தந்தவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியில் திளைக்கும் தெளிவின்றி , மரணத்துக்கு வருந்தி கிடைத்த கணத்தை வீணாக்கும் மூடனாக அது இருந்தால் அது எப்படி இருக்கும்..  


நான் அப்படி இருந்துவிடலாகாது..  உலக வெற்றிகளுக்கு சராசரி இன்பங்களை துறந்து வறண்ட வாழ்க்கை வாழந்தால் ஆமை குளிரில் இறப்பது போல் ஆகிவிடும்


உலக இன்பங்களில் திளைத்து அதையே பெரிதென நினைப்பின் கொதிநீரில் வெந்து அவிந்த ஆமை நிலை வந்து விடும்

துறத்தல்  திளைத்தல் இரண்டுக்குமிடையே ஒரு நடுநிலையை பேணும் ஞானம் வேண்டும் என்ற பார்வையையும் இப்பாடல் அளிக்கிறது


Thursday, August 13, 2020

கவுண்டமணி செந்தில் காமெடியும் தேங்காயும்

 

சின்ன கவுண்டர் படத்தில் , எலுமிச்சம்பழம் எலுமிச்சங்காய்  , வாழைப்பழம் வாழைக்காய்..  மாம்பழம் மாங்காய் என இருப்பதுபோல , தேங்காய்க்கு பழம் என்பது இல்லை என்பதை வைத்து கவுண்டமணியை கன்ஃப்யூஸ் செய்வார் செந்தில்

 நாம் அனைவரும் அந்த காமெடிக்கு சிரித்து இருப்போம்.

ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் கிடையாது.  

தேங்காய் , தென்னை மரம் போன்றவை சங்க காலத்தில் இருந்ததற்கான ஆதாரம் சங்கப்பாடல்களில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என சில தமிழர்கள் கூறுகிறார்கள்.  தொ பரமசிவன் இப்படி கூறுபவர்களில் ஒருவர்.. ஏழாம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்த வந்தேறி மரம் இது..என சொல்கிறார்கள் ..

உண்மையில் தேங்காயின் பழத்தை குறிப்பிடும் சொல் தமிழில் உண்டு.. தேங்காய் குறித்த குறிப்பும் சங்கப்பாடல்களில் உண்டு

ஆனால் தேங்காய் என இருக்காது . தெங்கு , தென்னை மரம் என குறிப்பிட்டப்பட்டு இருக்கும்’


கோள் தெங்கின் குலை வாழை ,,,  ஒலி தெங்கின் இமிழ் மருதின்...  என்றெல்லாம் தென்னை குறிப்பிடப்படுகிறது..  எனவே தேங்காய் என்பது வந்தேறி கிடையாது


தென்னை + காய்  = தேங்காய்


தென்னை + பழம் = தெங்கம்பழம்


நாய் பெற்ற தெங்கம்பழம் என்று பழ மொழி உண்டு’


நாயிடம் தென்னம்பழம் ( தேங்காய்)  கிடைத்தால் அதனால் உடைத்து தின்ன முடியாது.. பிறர்க்கும் கொடுக்காது என்பது இதன் பொருள்


பழம் என்பதை கனிந்த வடிவில் பார்த்து பழகியதால் , தென்னம்பழம் என சொல்வது மறைந்து தேங்காய் என்றே சொல்கிறோம். 


ஆக தேங்காய் என்பது தமிழக மரம்தான் என்பதில் நினைவில் கொள்க


சமஸ்கிருத , ஹிந்தி , ஆங்கில அறிஞர்களிடம் இருந்து தமிழ்ப்பெருமையை நாம் காத்துக்கொள்ளலாம். தமிழறிஞர்களிடம் இருந்து தமிழைக்காப்பதுதான் பெரிய சவால் 


 


Tuesday, August 4, 2020

கோவில் கோயில் எது சரி ?


கோவில்...  கோயில்.. இரண்டில் எது சரி என்பதில் சிலருக்கு சந்தேகம்.

எவ்வளவோ பார்த்து விட்டோம்.. இதைப்பார்க்க மாட்டோமோ.. 

வாங்க பார்த்து விடுவோம்..

தலைவனின் அரசனின் அல்லது இறைவனின்  இல்லம் என்பதுதான் கோ இல்  

   கோ மற்றும் இல் ஆகியவை சேர்ந்தால் என்ன ஆகும் என்பதே கேள்வி

இரு சொற்கள் சேர்ந்தால் உருவாகும் புது சொல் எப்படி இருக்கும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றன

பூ + தொட்டி  = பூந்தொட்டி ( புது எழுத்து உருவாதல்)

மண் + வெட்டி     = மண்வெட்டி ( எந்த எழுத்தும் சேரவில்லை/ அழியவில்லை)

பனை + காய்  = பனங்காய்  ( ஐ அழிந்து , அங் என்ற சாரியை உருவானது)

இப்படி எல்லாம் பல்வேறு விதிகள் உள்ளன

கோ  இல் என்பது  எப்படி சேரும்?


கடல் .. அலை என்பது கடலலை என மாறும்..  தாய் .. அன்பு என்பது தாயன்பு என சேரும்


புள்ளி வைத்த எழுத்தை ( மெய் எழுத்து)  தொடர்ந்து இன்னொரு சொல் வரும்போது அதிக சிக்கல் இன்றி அப்படியே இணைவு நடக்கிறது

ஆனால் அடுத்து வரும் சொல் க ச ட த ப என்பதில் ஆரம்பித்தால் கவனம் தேவை
நாய் கடி   என்பது நாய்க்கடி என க் சேரும்

தாய் பாசம்   என்பது தாய்ப்பாசம் என்றாகும் 

 முதல் சொல் உயிர் எழுத்தில் முடிந்து அடுத்த சொல் உயிர் எழுத்தில் ஆரம்பித்தால் , வ் அல்லது ய் என புதிதாய் ஓர் எழுத்து சேர்ந்து , அவ்விரு சொற்களையும் சேர்த்து வைக்கும்

உதாரணமாக மொழி ;. அறிவு...    என்ற சொற்களுக்கு மத்தியில் ய் தோன்றுகிறது


மொழி  ய்  அறிவு  = மொழியறிவு

திரு  வ்  அருள்         = திருவருள் 


வ் வருமா ய் வருமா என தொல்காப்பியரிடம் கேட்டால் , அவர் இப்படி எல்லாம் திட்டவட்டமாக சொல்லக்கூடாது என்கிறார்

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்

உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்தால் , வ் ய் அன்ற எழுத்து  தோன்றும். ஆனால் இந்த எழுத்துதான் வரும் என வரையறுக்க மாட்டார்கள்

என்கிறார்

தக்காளி, அப்ப என்னதான் தீர்வு?

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே


சொற்களின் ஓசை நயத்துக்கேற்ப புது எழுத்து தோன்றும் என்கிறார்


 நன்னூல் என்ன சொல்கிறது ?


இ ஈ ஐ வழி “ய” வ்வும்

ஏனை உயிர்வழி “வ” வ்வும்

ஏமுன் இவ் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்


அதாவது முதல் சொல் இ ஈ ஐ என முடிந்தால் , ய் என்ற எழுத்து தோன்றும்


பள்ளி   அறை    -- பள்ளி  ய் அறை        பள்ளியறை


வாழை  இலை    ---  வாழை  ய் இலை      வாழையிலை


ஏ என்ற சொல்லில் முடிந்தால் ,  வ் ய் என இரண்டுமே வரக்கூடும்


மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் ,வ் தோன்றும்

 

மா  இலை    மாவிலை


அளவு  அறிந்து   அளவறிந்து


இந்த விதிப்படிதான் , கோ இல் என்பதை சிலர் கோவில் என எழுதுகிறார்கள்


ஆனால் சங்க இலக்கியங்களில் கோயில் என்றே வருகிறது. .பேச்சு வழக்கில் கோயில் என்றுதான் சொல்ல முடிகிறது..   கோவிலுக்கு போகிறேன் என்பதில் இயல்பு இல்லை




மா  + இருள் என்பது இந்த விதிப்படி மாவிருள் என்றுதான் வர வேண்டும் .. ஆனால் மாயிருள் என்பதே சரியானது



அதற்கு காரணம் , இ என்ற சொல்  வந்தால் அங்கே ய் தோன்றும் என நன்னூல் சொல்வதை , இரண்டாவது சொல்லில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர்


அதாவது  மா   + இருள் என்பதில் இரண்டாம் சொல் இ என்பதால் , அங்கே ய் தோன்றி மாயிருள் ஆகிறது


அதேபோல கோ இல் என்பது கோயில் என்றுதான் ஆகும்..


அதுமட்டுமின்றி தொல்காப்பியர் சொன்னதுபோல , இசை நயம்தான் முக்கியம் என்ற விதிப்படியும் கோயில்தான் சரி .. அதனால் சங்க நூல்களில் கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்


சில ஆர்வக்கோளாறு இலக்கணப்பண்டிதர்களால் , கோவில் என்பதும் பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அது தவறு என நிறுவ முடியாது.. நன்னூல் விதியின்படி கோவில்தான் சரி என்பார்கள்.


ஆனாலும் கோயில்தான் சரியான் சொல்.. யாராவது கோவில்தான் சரி என்று சொன்னால் , மையமாக புன்னகைத்து நகருங்கள்.. 






















    

Saturday, April 11, 2020

சுஜாதா தேசிகனின் அபுனைவுகள்


கல்லூரி ஹாஸ்டலில்தான் , முதன்முதலாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சகவயதினருடன் பழகும் வாய்ப்பு பெரும்பாலானோர்க்கு கிடைக்கும்.

அங்கிட்டு, இங்கிட்டு , ஏனுங்க ,கீது என்பது போன்ற வட்டாரச் சொற்கள் மற்ற பகுதியினருக்கு வேடிக்கையாகத் தோன்றும். விளையாட்டாக கேலிகள் நடக்கும்.  காலப்போக்கில் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பல சொற்களை கற்றுவிடுவார்கள். ஒருவரது வட்டார வழக்கத்தை இன்னொருவர் ரசிப்பார்கள்

இன்றைய தகவல் தொடர்பு,வளர்ச்சியில் வட்டார சொற்களை பயன்படுத்துவதை தகுதிக்குறைவு என நினைத்து பலரும் பொது தமிழையே முயல்கின்றனர். இதன்விளைவாக பல்வேறு அழகிய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருந்து மறைகின்றன

யார் எழுத்தைப் படித்தாலும் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. அதே அரசியல் , அதே சினிமா கிசுகிசு , அதே பாலியல் சீண்டல்கள் என ஒரு நபரின் நகலாகவே பலரும் எழுதுகின்றனர்.

இதில் பிராமணர்கள் சற்று வேறுபட்டவர்கள்.  தாங்கள் பிராமணர்கள் இல்லை என காட்டிக் கொள்வதே அவர்களது முழு நேரம் வேளையாக இருக்கும். நானெல்லாம் மூணு,வேளையும் கறி தின்பவன் , அந்த தள்ளுவண்டில பீப் பிரை போடுவான். என்ன டேஸ்ட் தெரியுமா என்றெல்லாம் பேசி தமது அடையாளத்தை மறைக்க முயல்வார்கள்

இவையெல்லாம் தேவையேயில்லை. நம் பிறப்பு என்பது நம் சாதனை அன்று. அது குறித்து பெருமிதம் அடையவோ அதை மறைக்க முயல்வதோ அவசியமற்றது.

நாம் யார் என நேர்மையாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான் வலுவான சொல்லாடலின் முதல் படி என்கிறார் அரிஸ்டாட்டில்

சுஜாதா தேசிகனின் என் பெயர் ஆண்டாள் என்ற நூலின் முன்னுரையில் எழுத்துலக பிதாமகரான கடுகு இதை குறிப்பிட்டுள்ளார்.  எழுத்தின் நடை நூலாசிரியர் ஒரு கணிப்பொறியாளர் என்பதைக் காட்டிக கொடுக்கிறது என்கிறார் அவர்  ;

இதை எழுத்தாளனின் முத்திரையாகப் பார்க்க வேண்டும். அவரது ஆன்மிக தேடல் , தொழில் சார்ந்து கிடைக்கும் பரந்துபட்ட அனுபவம் , தமிழார்வம் , சுஜாதா மீதான காதல் , பிரபந்த அறிவு , அறிவியல் வேட்கை , நகைச்சுவை உணர்வு என அனைத்தும் கலந்து நல்லதொரு வாசிப்பனுபவம் அளிக்கிறது.

 நண்பர் தேசிகன் என சுஜாதா எழுதியதை படித்தபோது அந்தப்பெயரையும் , சுஜாதா நண்பர் என்பதையும் வைத்து , சுஜாதாவின் சமவயதினர்போல என்றுதான் நினைத்தேன்.

இது இயல்புதான். பெயர் உருவாக்கும் மனச்சித்திரம் குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது.  அட ஆமால , என வியக்க வைக்கும் கட்டுரை.  எழுத்து அந்தரத்தில் தொங்ககூடாது. மண்ணில் நடக்க வேண்டும் என்பார் சுஜாதா.   அதற்கு நல்ல உதாரணம் இதில் உள்ள கட்டுரைகள்

பையனுக்கு பெயர் வைக்க யோசிக்கும்போது , வேதாந்த் என்று வைக்கலாம் என மனைவி யோசனை கூறுகிறார். வேதாந்த தேசிகன் என புகழ் பெற வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அசர வைத்தார் என்ற வரியைப்படித்து வாய்விட்டு சிரித்து விட்டேன்
இப்படி ஆங்காங்கு மிளிரும் நகைச்சுவை , எதிர்பாரா திருப்பங்கள் போன்றவை வெகு அழகு

நடக்கும்போது பூக்களைப் பார்த்தேன். ஆனால் பறிக்கவில்லை என்று படிக்கும்போது , இயற்கை நேசர் போல என மனம் ஒரு நொடியில் அதை புரிந்து கொள்கிறது. பறிக்காததற்கு காரணம் அவை எட்டாத தூரம் என அடுத்த வரியை படிக்கையில் புன்னகையை தவிர்க்க முடியாது

லைட் ரீடீங் என்றால் கள்ளக்காதல் , கிசுகிசு போன்ற தரமற்ற எழுத்து என சிலர் புரிந்து வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள்

லைட் ரீடிங் என்பது உயர்ந்த விஷயங்களை இலகுவான நடையில் சொல்வது

பல்வேறு பிரபந்தங்களை அதன்  தமிழ்ச்சுவையை தமிழ்ச்சொற்களை எளிதாக இந்நூல் நமக்கு கற்பித்து விடுகிறது.  பொழுதுபோக்கு நடையில் இப்படி எஜுகேட் செய்வது பெரிய விஷயம்

அவரது கதையில் ஒரு மறக்க முடியாத கதை.  அருமையான குறும்படம்
பையன் காப்பி அடித்து மாட்டிக் கொள்கிறான். அப்பாவை அழைத்து வந்து டிசி வாங்கிச் செல் என கண்டிப்பாக சொல்கிறார்.

அடுத்த நாள் பையனும் அப்பாவும் செல்கின்றனர். தலைமையாசியரிடம் தனியாக ஏதோ பேசுகிறார் தந்தை. அதன்பின்  பிரச்சனை சால்வ்,ஆகிறது
பையனை உணவகம் அழைத்து சென்று அவனுக்கு தோசையும் தனக்கு இட்லியும் ஆர்டர் செய்கிறார். தோசை விற்கும்விலையில் அதை சாப்பிட தன் சம்பாத்தியம் இடமளிக்கவில்லை. நன்றாக படித்தால்தான் சம்பாதிக்கமுடியும் என்கிறார்
ஆண்டுகள் செல்கின்றன. அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். பையன் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.
அதே ஹோட்டல் செல்கின்றனர். இப்போது தனக்கு தோசை ஆர்டர் செய்துகொள்கிறார் அப்பா
அன்னிக்கு தலைமைஆசிரியரிடம் என்ன சொல்லி சமாளிச்சீங்க கேட்கிறான் பையன்
ஒரே ஒரு பொய் சொன்னேன் என்கிறார் அப்பா

அழுத்தமான அற்புதமான கதை

தனது ஒரு,மாத சம்பளத்தின் கணிசமான பகுதியை பையனின் ஓவிய ஆர்வத்துக்காக , உபகரணங்கள் வாங்க அவனையே எடுத்துக் கொள்ளும் சம்பவம் குறித்த கட்டுரை நெகிழ வைத்தது.  அந்த கதை அற்புதமாக அமைந்த காரணம் புரிந்தது

ஆலயங்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தும் நேரில் சென்ற அனுபவம் அளித்தன.  உடல் நலம் , தேச நிலை எல்லாம் சாதகமாக இருக்கும்போதே பார்த்தால்தான் உண்டு என்ற உணர்வு ஏற்பட்டது

ஸ்டெம் செல் குறித்த கட்டுரை வெகு அளிமையாக விஷயத்தை விளக்கியது

நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. எழுத்தின் மூலம் மட்டுமே பல வாழ்க்கைகளை அறிய முடியும். அதுதான் எழுத்தின் சிறப்பு.

ஆனால் பிற சாதியினர் பற்றிய ஒரு சித்திரம் எழுத்தில் வருவது அரிதாக மாறி வருகிறது. சாதிப்பெருமிதமோ , சாதி குறித்தான தன்னிரக்கமோ இல்லாமல் இயல்பான ஒரு சித்திரத்தை அளிப்பது அவசியமான அறிவியக்க செயல்பாடுகளில் உண்டு.

அந்தவகையில் இந்த நூலின் பல விஷயங்கள் வெகு இயல்பாக இன்பர்மட்டிவாக இருந்தன

நூலாசிரியர் பணி நிமித்தம்வெளிநாடு
செல்கிறார். அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் தேவையான உதவிகளை பணிவுடன் செய்கிறார். பணி முடிந்து கிளம்பும்போதுதான் அவர் யாரென தெரிகிறது. அந்த கடைசி வரி ஒரு சிறுகதைத்தன்மையை அற்புதமான அனுபத்தை அளிக்கிறது

சுஜாதா பற்றிய கட்டுரைகள் அனைத்தும் அரிய ஆவணங்கள்.

மொத்தத்தில் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நூல்

குறை என்று பாரத்தால் இவ்வளவு அற்புதமான தமிழாளுமை கொண்ட நூல்களில் ஆங்காங்கு ஒருமை பன்மை பிழைகள். தட்டச்சும்போது ஏற்படும் கவனப்பிழை.  நூலின் மதிப்பை இதை பாதிக்காது என்றாலும் பல பத்திரிக்கைகளே எழுத்துப்பிழைகளை பொருட்டாக நினைப்பதில்லை என்றாலும் சுஜாதா மாணவர் என்ற முறையில் , ப்ரூப் பார்ப்பதில் கவனம் தேவை
பெங்களூர் பெண்களைப் பார்க்கையில் வைரமுத்துவின் பாடல்வரி ( வெளியில் சொல்லமுடியாத வரி)மனதில் ரீங்காரமிட்டது என்ற வாக்கியம் ஒட்டுமொத்த நூலின் தொனிக்கு சம்பந்தமற்று துருத்துகிறது

காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டிருந்தால் , இலக்கியவிழாக்கள் , மேடைகள் என பதினைந்து நிமிட புகழ் பெற்றிருக்கலாம்

சமரசமற்ற தேசிகன் எழுத்து அற்ப புகழை நாடாமல் நீண்ட நெடிய தமிழ் எழுத்து பாரம்பர்யத்தில் இடம் பெற விழைகிறது.









Thursday, April 9, 2020

லைட்வெளிச்சம், நடுசெண்டர் இலக்கண குறிப்புகள்

தோட்டம்துரவு , கண்ணீரும்கம்பலையும்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக இன்னொரு விஷயம்

வாயும்வயிறுமாக , பாத்திரம்பண்டம் என்றெல்லாம் பேச்சு வழக்கில் கேட்கிறோம்.

ஆனால் தற்போதைய எழுத்துகளில் இவற்றை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. காரணம் பலர் இவற்றை கிராமத்து கொச்சைப் பேச்சு வழக்கு என நினைக்கிறார்கள்

உண்மையில் இப்படி இருசொற்களை இணைத்துச் சொல்வது இலக்கணத்துக்கு உட்பட்டது. ஒரு விஷயத்தை அழகுபடச் சொல்ல இது உதவுகிறது
இப்படி இணைத்து எழுவதற்கு இணைச்சொற்கள் என்று பெயர்

நேரிணை

எதிரிணை

செறியிணை

என இதில் பிரிவுகள் உண்டு

நோய்நொடி
குற்றம்குறை
சீரும்சிறப்பும்
பேரும்புகழும்

என ஒரே பொருள்கொண்ட சொற்கள் இணைவது நேரிணை
நோய் நொடி இரண்டுக்கும் என்ன சம்பந்தம்

இரண்டுக்குமே வேர்ச்சொல் ஒன்றுதான்

நொய் நோய் நொடித்துப்போதல் நொந்துபோதல் என இரண்டும் ஒரே குடும்பத்தின் கிளைகள்தான்

அல்லும்பகலும் , குறுக்குநெடுக்காக என அதிர்ச்சொற்களை சேர்ப்பது எதிரிணை

ஒரு சொல்லை அழகுபடுத்த இன்னொரு சொல்லைப்போடுவது செறிவிணை

கன்னங்கரிய , செக்கச்செவேல் , பச்சப்பசேல் போன்றவை செறிவிணை;

இதில் ஒரு டுபாக்கூர் பிரிவும் உண்டு

உப்பு என்ற சொல்லை அது கல் உப்பு அன்று , தூளாக்கப்பட்ட உப்பு என துல்லியமாக குறிப்பிட உதவும் சொல் சால்ட்உப்பு

ஒரு இடத்தின் நடுப்பகுதியை இன்னும் துல்லியமாக குறிப்பிட உதவும் சொல் நடுசெண்டர்

லைட்வெளிச்சத்துல பாரு என்றால் மின்விளக்கு , குழல்விளக்கு , அலைபேசி விளக்கு போன்றவற்றின் ஒளி என்று பொருள்

நேரிணையின் டுபாக்கூர் வடிவம் இது






பத்தும் பறந்திடும் என்றால் ??



தோட்டம்துரவு , சுத்தபத்தம் , கண்ணீரும்கம்பலையும் , பத்து பாத்திரம் என்றெல்லாம் பேசுகிறோம்

ஒரு ரைமிங்குக்காக இப்படி சேர்த்துச் சொல்கிறோமா என்றால் இல்லை. அனைத்துமே பொருள்கொண்ட சொற்கள்தான்

பத்துப்பாத்திரம்  தேய்த்தல்

பத்து என்றால் சோறு , சோற்றுப்பருக்கை என பொருள்


சாம்பார் ரசம் சைட் டிஷ் என்றெல்லாம் இருந்தால்தான் சோறு இறங்குகிறது

கடும்பசியில் இருந்தால் எதுவுமே தேவையில்லை . சோறு (பத்து ) நிமிடத்தில் காலியாகி விடும்

இதுதான்  பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி


சுத்தபத்தம் என்பதில் வரும் பத்தம் என்ற சொல் தூய்மை என்பதைக் குறிக்கிறது

அபத்தம் என்பதற்கு எதிர்மறைச் சொல் பத்தம்


கண்ணீரும் கம்பலையும்

கம்பலை என்றால் பேரோசை

கண்ணீரும் அழுகைச்சத்தமும் என்ற பொருள்


தோட்டம் துரவு

துரவு என்பது கிணறை குறிக்கிறது

கிணறு நீர்ப்பாசன வசதியுடன்கூடிய தோட்டம்

மேலும் பலவற்றை அடுத்தடுத்து பார்ப்போம்

Wednesday, April 8, 2020

இட்லி தமிழர் உணவா


 தமிழரின் பாரம்பரியமான உணவான இட்லியின் இயற்பெயர் இட்டவி.  மாவை பாத்திரத்தில் இட்டு , அவிப்பதால்,இட்டவி என பெயர் பெற்றது.  தமிழினப் பகைவர்கள் அதை இட்லி என மாற்றி விட்டனர் என ஒரு நாளிதழில் படித்தேன்

பிச்சு சாப்பிடுவதால் பிச்சா என பெயர் பெற்று , அது மருவி பிஸ்ஸா என மாறியது அன்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அது போல மேற்கண்ட கூற்றும் அபத்தமே


இட்லி நமது உணவு கிடையாது.  சங்க காலத்தில் யாரும் இதை சாப்பிட்டதில்லை

இந்தோனேசியாவில் கெட்லி என்ற பெயரில் சாப்பிடப்பட்ட உணவுதான் இட்டலிகே என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தது. கடைசியில் தமிழ் நாட்டில் இட்லி என மருவியது

நாம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் பல உண்டு. முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்பது போன்ற போலி பெருமிதங்கள் வேண்டாம்.








Tuesday, April 7, 2020

pandemic Endemic என்ன வித்தியாசம்


சில கவிதைகளை கதைகளை செய்திதாள் நடையில் இருப்பதாக சொல்கிறோம்

பழகிப்போன கதைக்களன்கள் , பழகிப்போன சொல்லாட்சிகளை வைத்து எதையோ எழுதி ஒப்பேற்றுவது .

ஆங்கிலத்தில் செய்திதாள்களின் வார்த்தைப் பிரயோகங்களேகூட நம் ஊர் self styled இலக்கியவாதிகளைவிட நன்றாகவே இருக்கும்
pandemic epidemic endemic போன்ற வாரத்தைகளை கவனமாக பயன்படுத்துகிறார்கள்

தினமணியில் தீநுண் கிருமி அன எழுதுகிறார்கள்.  நல்ல சொல் தேர்வுதான்

ஆனால் தொற்று நோய் என்ற பயன்பாடு சரியன்று

நோய்கள் இரு வகை. தொற்று நோய் தொற்றா நோய்

சாதாரணமான ஜலதோஷம் தொற்று நோய்தான்.  அதை குறிப்பது போல கொரோனாவையும் தொற்று நோய் என சொல்லலாகாது

pandemic என ஆங்கிலத்தில் சரியாக எழுதுகிறார்கள்.  pandemic என்றால் பக்கத்து நாடுகளுக்கும் பரவும் நோய்


இதே நோய் சீன நகரில் மட்டுமே பரவியிருந்தால் அது epidemic

கட்டுமீறி பரவலை குறிக்க இந்த சொற்கள்.








Sunday, March 1, 2020

இறகு சிறகு... என்ன வித்தியாசம்



வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு  உளர் இறகின்விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோதண் கடல் நாட்டே.

குருகு பறவை இறகை விரிப்பதுபோல பூக்கள் மலரும் இடத்தில் அவர் வசிக்கிறார்.  அந்த இடம் தொலைவில் உள்ளது. ஆனால் அவரோ என் இதயத்துக்கு அருகில்தான் இருக்கிறார் என அழகாக சொல்கிறது இந்தப் பாடல்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

என்கிறார் பிரமிள்

சென்ற பாடலில் இறகை விரித்ததாக பார்த்தோம்
இந்தப்பாடலில் சிறகில் இருந்து இறகு உதிர்வதாக படிக்கிறோம்

இறகு எப்படி உதிரும் ?  சரி .. உதிரக்கூடிய சிறு பகுதிதான் இறகு என்றால் , அந்த இறகை எப்படி விரிக்க முடியும் ?

விமானத்துக்கு இருப்பது சிறகா ? இறகா ?


இறகு  அல்லது இறக்கை தான் wings

அதன் சிறிய பகுதி என்பதால் , அதில் இருந்து ஈதிர்வது சிறகு..


பிரமிள் கவிதையில் இறகில் இருந்து பிரிந்த சிறகு என்றுதான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறார்;

கவிதையில் இப்படி எழுதலாம்.  மயிலிறகு என பேச்சு வழக்கில் சொல்வதில் தப்பில்லை

ஆனால் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

இறகு..  பெரியது

சிறகு..  இறகின் சிறிய பகுதி






Sunday, January 12, 2020

புத்தக கண்காட்சியில் கைகுலுக்கிய முவ − கநாசு

நூல் வாசிப்பு என்பது தரும் மகிழ்ச்சி தனித்துவமானது. மனதில் அது நிகழ்த்தும் ரசவாதம் , அது அளிக்கும் திறப்பு போன்றவை அனுபவிக்க அனுபவிக்க திகட்டாதவை

இணைய வருகையால் சில தவறானவர்கள் தவறான பாதையை உருவாக்க முயன்றாலும் வாசிப்பு உயிர்ப்புடன்தான் உள்ளது

பொய்த்தேவு நாவலை சில நாட்கள் முன் படித்து அது குறித்து எழுதினேன். தொடர்ந்து அது குறித்த விவாதங்கள் வாசிப்பு என"அந்நாவல் என்னுள் வளர்ந்து கொண்டு இருந்தது;

இலக்கியவாதிகள் என்ற வகைப்பாட்டில் முவ அவர்களை வைக்க முடியாது . சிறந்த சிந்தனையாளர் , தமிழறிழர் அவர்.  சில இலக்கியவியாதிகள் தப்பும்தவறுமாக தமிழ் எழுதக்காரணம் நல்ல தமிழ் வாசிப்பு என்பது அவர்களிடம் இல்லை

என்னைப்பொருத்தவரை தமிழ் ஆளுமையை மனதில் கொண்டு முவ எழுத்துகளைப் படிப்பேன்

அந்தவகையில் புத்தக கண்காட்சியில் முவ எழுதிய கயமை நாவல் வாங்கிப்படித்தேன்.

அதில் ஒரு காட்சி.

அதில் வில்லனாக வரும் ஒரு அதிகாரி தனக்கு கீழே இருப்பவனை கடவுள் நம்பிக்கை அற்றவன் என சித்திரிக்க விரும்புகிறார். கதை நாயகனான அவனை அழைத்துப் பேசிகிறார்.

கடவுள் நம்பிக்கை பற்றி என்ன நினைக்கிறாய் என வினவுகிறார்.

அவன் சொல்கிறான்
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.

என திருவாசகத்தில் சொல்வதுதான் என் கருத்துமாகும்

அந்த தெய்வம்,இந்த தெய்வம் என பல பொய் தெய்வங்களிடம் சிக்காமல் உண்மைக்கடவுளாம் சிவனை அடைந்தேன் என்கிறார் மாணிக்கவாசகர்;
இதன் நீட்சியாக வஞ்சகம் , சுயநலம் போன்றவை பொய் தெய்வங்கள் என்றும் உண்மையாக இருப்பதே உண்மை தெய்வம் என்றும் நான் புரிந்து கொண்டு அதன்படி வாழ்கிறேன் என்பான்;
இந்தக் காட்சியை படிக்கும்போது பொய்த்தேவு நாவல் முழுதும் என் மனதில் வந்து போனது.
திருவாசகத்தின் திருக்கோத்தும்பி நினைவுக்கு வந்தது , சாரு நிவேதிதாவின் ராசலீலா காட்டும் அலுவலக சூழல் நினைவுக்கு"வந்தது , ஜெயமோகனின் அறம் தொகுப்பு நினைவுக்கு வந்தது

பொய் எழுத்தாளர்கள் எனும் இருளில் இருந்து விடுபட வழிகாட்ட எத்தனையோ மேதைகள் இவ்வுலகில் .;
அனைவருக்கும் நம் வணக்கங்கள்




Sunday, January 5, 2020

தமிழ் எழுத்துகளின் தரத்தில் வீழ்ச்சி. இலக்கிய சிந்தனை அமைப்பு வேதனை

இலக்கிய சிந்தனை அமைப்பு பற்றிய என் மரியாதையை பல முறை குறிப்பிட்டுள்ளேன்

பல்வேறு இதழ்களில் வரும் கதைகளில் ஒன்றை ஒவ்வொரு மாதமும் சிறந்த கதையாக தேர்ந்தெடுப்பார்கள்

12 மாதங்களில் இப்படி தேர்ந்தெடுக்கப்படும் 12 கதைகளில் ஒரு கதையாக தேர்ந்தெடுத்து அந்த எழுத்தாளருக்கு ஒரு விழாவில் பரிசளிப்பார்கள்

அந்த 12 கதைகளும் ஒரு நூலாக வெளியிடப்படும்

அந்த கதைகளின் குறை நிறைகளை சுஜாதா போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் அலசுவார்.

ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் மதிப்புரைகளை அவ்வளவு சிறப்பாக இருக்கும்

இப்போது என்ன கொடுமை என்றால் தேர்ந்தெடுக்க தகுதியுள்ள கதைகள் தற்போது கிடைப்பதில்லை என்பதால் இந்த நிகழ்வை நிறுத்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது இலக்கிய சிந்தனை அமைப்பு

வருத்தமளிக்கும் நிகழ்வு

இன்று தரமான இளம் எழுத்தாளர்கள் பலர் உண்டு

ஆனால் பத்திரிகைகள் பலவும் அரசியல் அக்கப்போரில் சிக்கிவிட்டன. தமிழே தெரியாதவர்கள்தான் இன்று பதிப்பாளர்கள்  , பத்திரிக்கை ஆசிரியர்கள்.

எனவே பத்திரிக்கைகளின் தரம் வீழ்ந்து விட்டது

இதை மாற்றி , தரமான தமிழ் எழுத்துகளை காப்பாற்றுவது நம் கடமை




Thursday, June 6, 2019

கடையேழு வள்ளல்கள் -சுருக்கமான பார்வை


கடை ஏழு மன்னர்கள் பெயர்கள் என்ன?

  1 பாரி
2. வல்வில் ஓரி
3. காரி (மலையமான்)
4. பேகன்
5. அதியமான்
6. நள்ளை
7. ஆய் அண்டிரன்

 ஏன் கடை ஏழு மன்னர்கள் என்கிறார்கள்..

அன்ன சத்திரம் கட்டம் , கல்வி சாலைகள் அமைத்தல் என்றெல்லாம் வள்ளல்தன்மைகள் உண்டு.. இவற்றுக்க்கெல்லாம் ஆதாரமானது அன்புதான்..

இந்த ஏழு மன்னர்களைப்பொருத்தவரை இவர்கள் வள்ளல்தன்மையில் அன்புதான் அதிகமாக வெளிப்படுகிறது. நாம் அறிவுப்பூர்வமாக யோசித்தால் , நானாக இருந்தால் , அப்படி செய்டிருக்க மாட்டேன்.. வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி இருப்பேன் என சொல்வோம்

ஆனால் அன்பு அப்படி யோசித்து முடிவு எடுக்காது..கணக்குப்போட்டு காட்டுவது அன்பாக இருக்க இயலாது

---

பாரி..

இவன் பலருக்கு வாரி வழங்கிய வள்ளல்.. முல்லை படருவதற்கு சரியான கோல் இல்லாததால்  , தன் தேரை முல்லைக்கு அளித்தான் இவன்.. வீட்டுக்குப்போய் , யாரங்கே,, முல்லைக்கு அருகே , ஒரு கம்பை நட்டு வையுங்கள் என உத்தரவிட்டு இருக்கலாம்.. ஆனால் அன்பு மிகுதியால் தேரை அளித்து சரித்திரத்தில் இடம் பெற்றான்

ஓரி

தன்னை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு தன் சிற்றரசு ஒன்றையே கொடுத்தான் இவன்...   தமிழுக்கு புலமைக்கு அரசை அளித்து புகழ் எய்தினான்

காரி

போர்களில் குதிரைச்சவாரியில் ஈடுபாடு கொண்டவன்.. தான் மதிப்பு மிக்கவை என நினைப்பதை பரிசளிப்பதே நாகரிகம.. தனக்கு தேவை அற்றதை , மிச்சமானதை , தேவை அற்றதை பரிசளிப்பது நாகரிகம் ஆகாது.. தான் மிகவும் நேசிக்கும் குதிரைகளை பரிசளிப்பது இவன் பாணி

பேகன்

மயில் ஆடுவதை பார்த்து  , குளிரால் நடுங்குகிறது என நினைத்து
 போர்வையால் போர்த்திய அன்பு பித்தன் இவன்


அதியமான்

சாகா வரம் அளிக்கும் நெல்லிக்கனியை அவ்வைக்கு அளித்து சாகா புகழ் எய்தியவன் இவன்

 நள்ளி

ஒரு நாள் இம்மன்னன் காட்டில் மாறு வேடத்தில் சென்று கொண்டிருந்தான்.. ஒரு ஏழைப்புலவன் மரத்தடியில் அமர்ந்து பாடல் புனைவதை கண்டான்.. பருக புலவனுக்கு நீர் அளித்தான் . விலங்கு ஒன்றை வேட்டையாடி , தீ மூட்டி பக்குவப்படுத்தி பசியாற்றினான்.. தான் அணிந்திருந்த சங்கிலியை பரிசாக அளித்து விடை பெற்றான்...  கையில் ஏதுமற்ற நிலையிலும் வழங்குதலில் குறை வைக்காத மன்னன்.. ஒரு முறை இவனிடம் வாங்கினால் , பிறகு யாரிடமும் வாங்கும் அவசியம் இராது

ஆய் அண்டிரன்

இவன் கடவுளுக்கே பரிசளித்த புகழ் கொண்டவன்.. அரிய மரகதமணியை பரிசாக கொடுத்தான்

---


இவர்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான ஈகைகளையும் செய்தாலும் , அன்பின் உச்சம் தொட்டு அறிவை மீறி அன்பைக்காட்டிய தருணத்தால் இன்றும் நினைக்கப்படுகிறார்கள்


Sunday, April 14, 2019

புத்தாண்டில் ஓர் அழகான பாடல்

சின்ன வயதில் தீபாவளி , பொங்கல் கொண்டாடுவோம்

தமிழ்ப் புத்தாண்டு என ஒன்று வருவதும் தெரியாது..போவதும் தெரியாது

ஆனால் இன்று ஊரே மகிழ்ச்சியாக இதை கொண்டாடுகிறது... ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்...  பத்திரிக்கைகளில் சிறப்பு மலர்கள்

அரசியல்வியாதிக்ளின் பப்ளிசிட்டி ஸ்டண்ட் காரணமாக அவர்கள் செய்ய முனைந்த எதிர்மறை விஷ்யம் இப்படி ஒரு விளைவ ஏற்படுத்தியுள்ளது

பிரமாண்டமான இயற்கையின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்கள் தான் நாம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது

சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒரு பழைய பாடல் ஒளிபரப்பானது

படித்தால் மட்டும் போதுமா பட பாடல்.. படம் பார்த்து இருக்கிறேன்.. பாடல்களை ரசித்துள்ளேன்.. ஆனால் கண்ணதாசனின் இந்த் பாடலை இன்றுதான் ஆழ்ந்து ரசித்தேன்

 நாயகன் பாடாத பாடல் என்பதால் முன்பு கவனிக்கவில்லை

இப்போது கவனிக்கையில் பட எல்லைகளை தாண்டி விஸ்வரூபம் எடுக்கும் பாடல் என புர்ந்தது

மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் வி , ராமமூர்த்தி இசை.. கண்ணதாசன் பாடல்... பிபீ ஸ்ரீனிவாஸ், ஏ எல் ராகவன் , வெங்கடேஷ் ஆகியோரின் இனிமையான குரலில் வித்தியாசமான மெட்டு... 

பாடலை இதை சொடுக்கினால் பார்க்கலாம்  



கோமாளி கோமாளி கோமாளி
காலம் செய்த கோமாளித் தனத்தில் உலகம் பிறந்தது ஐயா
உலகம் செய்த கோமாளித் தனத்தில் உள்ளம் பிறந்தது
உள்ளம் செய்த கோமாளித் தனத்தில் காதல் பிறந்தது
காதல் செய்த கோமாளித் தனத்தில் ஜோடி சேர்ந்தது
அழுகிற கூட்டம் வாழ்கிற இடத்தில்
சிரிப்பவன் கோமாளி
அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால்
அறிஞனும் கோமாளி
படித்ததை எல்லாம் பயன் படுத்தாதவன்
முதல் தரக் கோமாளி
ரொம்ப படித்தவன் போலே நடிப்பவன் உலகில்
என்னாளும் கோமாளி
காசுக்கும் பணத்துக்கும் ஆசை இல்லாமல்
வாழ்பவன் கோமாளி
வரும் காலத்தை கையில் பிடித்துக் கொள்ளாமல்
அலைபவன் கோமாளி
ஆசையில்லாமல் திருமணம் செய்து 
துடிப்பவன் கோமாளி
தினம் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெறுபவன்
என்னாளும் கோமாளி

Saturday, March 30, 2019

சொற்களை சேர்த்து எழுதுதலில் இலக்கண நூல்கள் காட்டும் நெறி


சொற்களை சேர்த்து எழுதுவது...பிரித்து எழுதுவது குறித்து தமிழில் முறையான இலக்கண வரையறைகள் உண்டு,,, ஆனால் பலர் இதை முறையாக பின்பற்றுவது இல்லை

நல்ல பெண் , நல்ல வேலை , நல்ல வெயில் என்பதில் இரண்டு சொற்கள் உள்ளன,,, இதை இப்படியும் சொல்லலாம்.. பண்பான பெண் , கவுரவமான வேலை , கொடூரமான வெயில்... இப்படி வெவ்வேறு விதமாக வார்த்தைகளை சேர்த்து , வெவ்வேறு காம்பினேஷன் களில் எழுதுவது நெகிழுந்த்தன்மையுடனான சொற்சேர்க்கை ஆகும்

ஆனால் சிலவற்றை அப்படி மாற்ற முடியாது,,, நல்லபாம்பு , பல்கலைக்கழகம், இளங்கலை , கணிப்பொறி , எழுதுகோல்

இவற்றை பிரித்து எழுதினாலும் தனிச்சொற்களின் அர்த்தம் மாறாது எனினும் இவற்றை சேர்த்துதான் எழுத வேண்டும்...

இவை உறுதியான சொற்சேர்க்கைகள் ஆகும்

திருச்சிராப்பள்ளி , கேட்டுப்பார் , சொல்லித்தா,,, என்பது மேலும் சில உதாரணங்கள் ஆகும்

ஒன்பது வகையான கூட்டுச்சொற்கள் குறித்தும் அவற்றின் இயல்பு குறித்தும் நம் இலக்கண நூல்கள் அழகாக விவரித்து உள்ளன

மேலும் சில சொற்சேர்க்கைகளை மட்டும் பார்ப்போம்

கூட்டு வினையெச்சங்கள்

செய்யாதிருந்து,, ( செய்யா திருந்து அல்ல,,,, செய்யாது இருந்தும் அல்ல,,, செய்யாதிருந்து ) செய்யாமலிருக்க , செய்யாவிட்டால் , சொன்னபடி , பேசியவண்ணம் என்றே எழுத வேண்டும்

( தொடரும் )

Friday, June 15, 2018

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து - அச்சில் வராத சுவாரஸ்யங்கள்

ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து கட்டுரை  வாசித்ததை  அறிவீர்கள்..  அதன் சுருக்கப்பட்ட வடிவத்தை தமிழ் இநதுவில் வாசித்திருப்பீர்கள்..   அதில் இடம்பெறாத சில  சுவாரஸ்யங்கள் உங்களுக்காக  நம் வலைத்தளத்தில்...  படியுங்கள்...ரசியுங்கள்

-----
♥ஜெயகாந்தனை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தேன்..  சாப்பிடுவது இரண்டாம் பட்சம்..  அவருடன் சற்றுபேசுவதே விருந்தின்  நே ாக்கம்..   ரெமி மார்ட்டின் உட்பட எல்லாம் உள்ளன.. என்ன வேண்டும் என்றேன்..  நீங்கள் மது அருந்துவீர்களா என்றார்..  ஒருோதும் இல்லை என பதில் அளித்தேன்..  அப்படியானால் எனக்கும வேண்டாம் என்றார்... டேபிள் நாகரிகம் என்பதை காட்டினார்


♥ அவர் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டார்..   நான் அணிவித்த தங்க மே ாதிரதை ஏற்றுக்கெ ாண்டார்...  அவர் ஏற்றது எனக்குப் பெருமை

♥ஜெயகாந்தன் எழுத்தில் அவர் குரல் அதிகம் ஒலிப்பதாக சிலர் விமர்சிப்பதுண்டு..  இதை மறுக்கிறார் ஜெயமே ாகன்..  அவர் எழுதுகிறார்  :
ஆசிரியன் குரல் கதாபாத்திரத்தில் ஒருபோதும் வெளிப்படகூடாது என்று கருதும் நம் விமரிசகர்கள்  தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளைப்பற்றி என்ன சொல்கிறார்கள் ? கதேயின் ஆக்கங்களின்மீது அந்த அளவுகோலை போடுவார்களா ? இப்பேரிலக்கிய ஆசிரியர்கள் தங்கள் குரலை வெளிப்படுத்தும் முகமாகவே கதாபாத்திரங்களைப் படைப்பவர்கள். 

♥ ஜெய காந்தன் என் மீதுபேரன்பு கெ ாண்டவர்..   நிறைய பேசுவே ாம்..   ஒரு  முறை  அவரிடம் கேட்டேன்...  நீங்கள்செய்த ஏதாவது ஒன்றுக்காக பிற்காலத்தில் வருந்தியதுண்டா.. ?  அவர் பதிலளிக்க  மூன்று நிமிடங்கள எடுத்து கெ  ாண்டார்...மேதைகள்  எதையும் யே ாசித்தே பேசுவார்கள்

என்  நூல்   வெ ளியீட்டுக்காக வெ ளிநாடு  பே ாயிருந்தேன்... அந்த  நாட்டு கல்வி அமைச்சர்  கலந்து  கெ ாண்டார்

- தாங்கள்  இந்தியா வந்ததுண்டா என கேட்டேன்..
ஆம்  அல்லது இல்லை  என எளிதாக பதில்செ ால்லவேண்டியகேள்விக்கு  மூன்று நிமிடங்கள்  யே ாசித்து அற்புதமான ஒரு பதில் செ ான்னார்

( அடுத்த பதிவில் அந்த பதிலை  காண்பே ாம்)

Thursday, December 19, 2013

தமிழை அழித்த எழுத்தாளர் சுஜாதா



நமக்கு தமிழ் ஆளுமை இல்லாமை போனதற்கு தெரிந்தோ தெரியாமலோ சுஜாதா காரணமாகி விட்டார்... உதாரணமாக இந்த பாடலை பாருங்கள்

"வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப் பைம்போது உளரி, புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை ஆட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத்துய்ம்மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எளிதரும் வாடையொடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே?"

இதற்கு அவர் பாணி விளக்க உரை இப்படி இருக்கும் - தாமதமான காதல் , இல்லாத காதலுக்கு சமம்.

அட அஞ்சு வார்த்தையில் சொல்லி விட்டாரே என நாம் மகிழ்ந்து கொள்வோம்... அதன் பின் தூய தமிழ் விளக்க உரைகளை படித்தால் எரிச்ச்சலாக இருப்பதாக தோன்றும்..ஆக நம் தமிழ் சொற்கள் ஆளுமை இல்லாமலேயே போய் விடும்.. யோசித்தால் கஷ்டமாக இருக்கிறது

எளிமையே சிறப்பு ( அதாவது குறைந்த சொற்களை வைத்து சமாளிப்பதே சிறப்பு ) என்ற மன நிலை நமக்குள் பரவி விட்டது... இங்ஙனம் , ஐயன்மீர் , கூறானின்றான், இஃதிங்ஙனம் என்றெல்லாம் எழுதுவதில்லைகொடுத்தான் என சொல்லுங்கள்.. நல்கினான்..ஈந்தான் வேண்டாம் என அவர் சொல்லியதால் , வேறு யார் இப்படி எழுதினால் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டோம்... ஆகவே இந்த சொற்கள் எல்லாம் அழிந்தே விட்டன.. கிட்டத்தட்ட 100 சொற்களை வைத்தே தமிழை எழுதி வருகிறோம்... ஆங்கிலத்தில் இந்த நிலை இல்லை...


ஆங்கில நாளிதழ் இண்டர்வியூவுக்கு போகிறீர்கள்..உங்களை ஒரு கட்டுரை எழுதி காட்ட சொல்கிறார்கள்..Go , come, give போன்ற நூறு அடிப்படை வார்த்தைகளை வைத்து  மட்டும் கட்டுரை எழுதினால் நீங்கள் ரிஜக்டட்... தமிழ் நாளிதழுக்கு போகிறீர்கள்.... இங்ஙனம். இவ்வாறே , அஃது , வேட்டற்பொருட்டு என அன்றாட நூறு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு எழுதினால் நீங்கள் ரிஜக்டட்

Tuesday, July 30, 2013

தமிழ் மன்னன் பாலியல் விடுதி நடத்தினானா? தேவதாசி முறையும் “ திராவிட “ மாநிலங்கள் செய்த “சேவையும் “


உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வோர் தனித்துவம் உண்டு.
இங்கிலாந்துக்காரர்களுக்கு தம்மைப்பற்றி பிறர் பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஜப்பானியர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதுபோல தமிழர்களுக்கே ஒரு தனித்தன்மை என்ன என்று பார்த்தால் , அது தாழ்வு மனப்பான்மைதான்.

தான் ஒரு முட்டாள், மற்றவர்கள் வந்துதான் தமக்கு நாகரிகம் கற்று கொடுத்தார்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழ் இனம்தான்.

வெளி நாட்டு ஆய்வாளர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார்கள்.டேய்.. உன் முன்னோர்கள் சாதாரணமான ஆட்கள் இல்லை . கலை , அறிவியல், கட்டட ஞானம் , வானியல் , நீர்ப்பாசனம் , அரசாட்சி  என எல்லாவற்றிலும் கில்லாடியாக இருந்து இருக்கிறார்கள் என அவர்கள் சொல்லி சொல்லி மனம் சலித்து போய் விட்டார்கள்.

நம் ஆட்களோ, இல்லை.,.. நாங்கள் முட்டாள்களாக இருந்தோம். அண்டை மானிலதினர்தான் எங்களுக்கு அறிவூட்டீனார்கள் என பிடிவாதம் பிடித்து வருகிறார்கள்.

என்னை பொருத்தவரை அண்டை மானிலத்தினர் பலர் என் நண்பர்கள். ரஜினி, எம்ஜிஆர் போன்றவர்கள் மேல் வெறுப்பு இல்லாதவன். அதாவது என்னை தமிழ் தேசியவாதி என நான் நினைத்து கொண்டதே இல்லை.

ஆனால் நம் மக்களின் அடிமை வெறி எனக்கே தமிழ் தேசியம் மீது ஆர்வம் ஏற்படுத்தி விடுமோ என பயமாக இருக்கிறது.

தேவதாசி முறை குறித்தி சொர்ணமால்யா ஏதோ சொன்னாலும் சொன்னார் , நம் மக்கள் சம்பந்தம் இல்லாமல் தமிழ் மன்னர்களை அசிங்கப்படுத்த முனைந்து விட்டார்கள்.

அவர்கள் காட்டுமிராண்டி ஆட்சி நடத்தினார்கள். மக்கள் உழைப்பை சுரண்டினார்கள்.

ராஜராஜ சோழன் காலத்தில் கூட்டம் கூட்டமாக தேவதாசிகளாக பலரை மாற்றி பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தினான்.  அதன் பின் பரம்பரை பரம்பரையாக தேவதாசி முறையும் பாலியல் அத்து மீறலும் தொடர்ந்தது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற அண்டை மானிலத்தினர் தமிழர்களை இதில் இருந்து மீட்டு , நாகரிகம் சொல்லித்தந்தார்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்படி வரலாற்றை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.

இதெல்லாம் உண்மையா ?

இதில் ஒன்று உண்மை. முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் உண்மையிலேயே இந்த பிரச்சினையில் உழைத்து இருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்களை மதித்தே ஆக வேண்டும்.

ஆனால் , அவர்களை தெலுங்கர்கள், திராவிடர்கள் என்று பார்த்தால், அவர்கள் செய்தது சேவை அல்ல, பிராயாச்சித்தம் என்று தெரிய வரும்.

எப்படி?

இதற்கு மிக சுருக்கமாக ஃபிளாஷ் பேக் போக வேண்டும்.

முதன் முதலில் வலுவாக இருந்தது தமிழர்களின் ஆட்சிதான். குமரி முதல் விந்திய மலை வரை தமிழர்கள் ஆட்சி வலுவாக இருந்தது. விந்திய மலைக்கு வடக்கே ஆரியர்கள் வலுவாக இருந்தனர்.

இதிலும்கூட சிலர், சிந்து சமவெளி நாகரிகமே கூட தமிழர்கள் நாகரிகம்தான் , பிற்காலத்தில் ஆரியர்கள் அதை ஆக்ரமித்து தமிழர்களை வெளியேற்றினர் என சொல்கிறார்கள்..ஆனால் இதெல்லாம் ஆய்வு நிலையில்தான் உள்ளன.

குமரி முதல் வேங்கடம் வரை தமிழர்கள் ஆட்சி இருந்தது என்பதற்கு மட்டும் இன்றைய நிலையில் ஆதாரங்கள் உள்ளன.

சில வட நாடுகள் மீது படை எடுத்து வென்றாலும் எல்லைகளை விஸ்தரிக்கும் வேலையில் தமிழர்கள் ஈடுபடவில்லை. மாறாக ஆரியர்கள் தம் எல்லைகளை விரிவு படுத்தியதன் விளைவாக , ஆரியக்கலப்பால் கேரளம் , கர்னாடகம், ஆந்திரம் போன்ற திராவிட  தோன்றின.

தமிழ் மண்ணில் அப்போது ஜாதி இழிவுகளோ , பிராமணர்கள் உயர்வு என்ற நிலையோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களை கேலி செய்யும் நிலைதான் இருந்தது என்பதை பரிபாடல் போன்ற பழைய தமிழ் நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சங்க காலம் வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக திராவிட அரசுகள் வலுவடைய ஆரம்பித்தன. கிபி 2ஆம் நூற்றாண்டில் இருந்து அவர்கள் படையெடுப்பு அதிகமாகி காலப்போக்கில் பல்லவர்கள் , களப்பிரர்கள் போன்ற அண்டை  மானிலத்தவர்  தமிழர்களை வென்றனர். இந்த கால கட்டத்தில்தான் , ஜாதி இழிவுகள் , மூட நம்பிக்கைகள் போன்ற ஆரிய பண்பாடு இங்கு நுழைந்தது.

அதாவது  , நன்றாக இருந்த தமிழ் நாட்டை சீரழித்தது இந்த அண்டை மானில திராவிடர்கள்.

பிற்காலத்தில் இதே அண்டை மானிலத்தை சேர்ந்த சில நல்லவர்கள் இந்த சீரழ்வில் இருந்து தமிழகத்தை மீட்கவும் செய்தனர் என்பதும் உண்மையே..
அவர்கள் செய்த சேவையை மறுக்கவில்லை.ஆனால் ஒட்டு மொத்த வரலாற்றை பார்த்தால் , அண்டை மானிலத்தவர் செய்தது சேவை என்பதை விட பிராயச்சித்தம் என்பதே பொருந்தும். இதைத்தான் முன்பு குறிப்பிட்டேன்.

சரி. மீண்டும் வரலாற்றை பார்க்கலாம்.

அண்டை மானிலத்தவர் ஆதிக்கம் , ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதன் பின்புதான் சோழர்களின் எழுச்சியால் மீண்டும் தமிழக மன்னர்கள் கைக்கு ஆட்சி வந்தது.

இந்த திராவிடர்கள் செய்த பல தீமைகளை சோழர் ஆட்சியில் வெகுவாக குறைத்தனர். நல்லாட்சி நடந்தது. கலைகள் வளர்ந்தன. ஏரிகள் வெட்டப்பட்டன.  நிர்வாக அமைப்புகள் ஒழுங்கு செய்யப்ப்பட்டன.

அப்போதெல்லாம் ஆலயங்கள் என்பவை மதம் என்பதையும் தாண்டி , கலாச்சார அடையாளமாக இருந்தன.

அந்த ஆலயங்களை பார்த்து கொள்ளும் பணிக்காகத்தான் தேவர் அடியார்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்கள் அரசனுக்கு அடுத்த அந்தஸ்துடன் இருந்தார்கள்.

சோழர்கள் ஆட்சியில் இவர்கள் பாலியல் தொழிலாளிகளாக இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 

ஆனால் தமிழ் மன்னர்கள் ஆட்சியின் போது அவர்கள் ஆலயம் கட்டி இருக்கிறார்கள், அரசிகளாக இருந்து இருக்கிறார்கள், தான தர்மம் செய்து இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

அதன் பின் சோழர்கள் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் ஆரிய ஆசி பெற்ற திராவிட ஆட்சி இங்கு செல்வாக்கு அடைந்தது. விஜய நகர பேரரசு போன்ற வந்தேறிகள் ஆட்சியில்தான் பார்ப்பனீயம் இங்கு வலுவடைந்தது.

அந்த கால கட்டத்தில்தான் தேவதாசிகள் எல்லாம் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட்டனர்.
பிறப்பின் அடிப்படையில் , ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே , இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.

13ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை திராவிடர்கள் ஆட்சியே நிலவியது.

அண்டை மானில மன்னர்கள் காலத்தில் அறிமுகமான தேவதாசி முறை , முத்துலட்சுமி ரெட்டியார் அன்னிய மானில தலைவர்கள் மூலமாகவே ஒழிக்கப்பட்டது poetic justice என்றே சொல்ல வேண்டும்.

அதன் பின் பிரிட்டிஷ் ஆட்சியில் திராவிட தமிழ் உரசல்கள் எப்படி மாறின என்பது இந்த டாபிக்கிற்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் அதுவும் முக்கியம்தான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இப்போதைக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது .இதுதான்.

தமிழ் மன்னர்கள் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படவில்லை/. பார்ப்பனீயமும் இல்லை.

திராவிட மன்னர்கள் காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்தன. அதில் சில தவறுகளுக்கு திராவிட மானிலங்களை சேர்ந்தவர்களே தீர்வும் அளித்த்னர்.

ஆக நமக்கு திராவிட மானிலங்கள் செய்தது சேவை அல்ல. பிராயச்சித்தமே.





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா