Showing posts with label ஞாநி. Show all posts
Showing posts with label ஞாநி. Show all posts

Thursday, July 16, 2015

மணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு


12. 07.2015ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

இலக்கியம் , அரசியல் , சினிமா என விர்வாக பேசினார்..
-________________________________________


முதலில் ஞாநி பேசினார்...

அவர் பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..


___________________________________


ஷோபா சக்தி

எனக்கு உரையாடலில் எப்போதுமே விருப்பம் அதிகம்.. எது பற்றி வேண்டுமானாலும் உரையாடுவேன்.. ஆனால் சொற்பொழிவு என்பது சற்று வித்தியாசமானது.. உங்களில் பலரை நான் அறியேன்..உங்கள் சிந்தனை என்ன ,,உங்க எதிர்பார்ப்பு என்ன என எனக்கு தெரியாது.. எனவே நான் எனக்கு தோன்றிய விதத்தில் பேசி , என் கருத்தை உங்கள் மேல் திணிப்பதை ஒரு வன்முறை என்றே நினைக்கிறேன்,,,,,

 நான் எஸ் ரா போல இலக்கியத்தரமாகவோ , வண்ணதாசன் போல மென்மையாகவோ பேசக்கூடியவன் அல்ல.. என் பாணி வேறு விதம்.. வேற வேற ( பலத்தை கைதட்டல் )

ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.. கருத்து சுதந்திரம் படும் பாடு என்பது இன்றைய தேதியில் பாடாய் படும் ஒன்று , கருத்து சுதந்திரம் என்பது என்ன,..அதன் வரம்புகள் என்ன என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை.. இன்றைய சூழலில் கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல  இந்தியாவில் மட்டும் அல்ல...உலக அளவிலேயேகூட மோசமாகத்தான் உள்ளது...இலங்கையில் கேட்கவே வேண்டாம்...எப்போதுமே மோசமாகத்தான் உள்ளது..அந்த காலத்தில் நான் ஒரு இடது சாரி இயக்கத்தில் இருந்தேன்.. அது நான்கு பேர் மட்டுமே உறுப்பினராக கொண்ட இயக்கமாகும் ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) .  ஏதாவது பிரச்சனை என்றால் எங்களைத்தான் தூக்கி போட்டு மிதிப்பார்கள்>. அப்படி அடியும் உதையும் வாங்கியபடியேதான் கருத்துரிமை குறித்து யோசித்தேன்,..

ஈழப்போராட்டம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன நாயகமும் கருத்து சுதந்திரமும் இல்லாமைதான்..  எதிர் கருத்து சொல்வோரை துரோகிகள் என முத்திரை குத்தும் போக்கு எல்லா இயக்கங்களிடமும் இருந்தது...

அவர்கள் யூதனை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் யூதன் இல்லை

அவர்கள் கம்யூனிஸ்ட்டை அடித்தபோது நான் உதவவில்லை..காரணம் நான் கம்யூனிஸ்ட் இல்லை..
கடைசியில் அவர்கள் என்னை அடித்தபோது எனக்கு உதவ யாரும் இல்லை..

எனவே உலகில் எங்கோ நடக்கும் பிரச்சனை என நினைக்காமல் கருத்துரிமைக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

இத்துடன் முடிக்கிறேன்..கேள்விகள் கேட்கலாம்

-________________________________________________


 ஞாநி  - முதல் கேள்வியை நானே கேட்கிறேன்... எழுத்தாளர் , இயக்கவாதி,  திரை கலைஞர் என பன்முக ஆளுமை கொண்டவர் ஷோபா.. ஆனால் அவர் அரசியல் பேசியதால் ,  நானும் அரசியல் கேள்வி ஒன்றே கேட்கிறேன்...

உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி சொல்லப்படுவது உண்டு... ஷோபா ராஜபக்சேவின் கைக்கூலி , , வலதுசாரி இயக்கங்களின் பிரதி நிதி...அதனால்தான் அவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்க முடிகிறது என சொல்கிறார்கள்>.இதற்கு பல முறை நீங்கள் பதில் அளித்து விட்டாலும் இங்கும் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்


ஷோபா

இந்த கேள்விகள் பத்திரிக்கைகள் வந்தவை அல்ல... அறிக்கையாக வந்தவைகளும் அல்ல... பொழுது போகாத சிலர் சமூக வலைத்தளங்களில் கேட்கும் கேள்வி இவை... எனக்கு பரம்பரை ஆண்டிகளிடம் பிரச்சனை இல்லை... பஞ்சத்து ஆண்டிகளிடம்தான் பிரச்சனை ( பலத்த கைதட்டல் )

இவற்றுக்கு பல முறை பதில் அளித்து விட்டேன்..மீண்டும் சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க நேரம்தான் வீணாகிறது...

11 மாதம் வேலை . ஒரு மாதம் லீவு என்ற குறுகிய வட்டத்தில் அடைந்து விடக்கூடாது என முன்பே முடிவு செய்திருந்தேன்..உங்களில் பலருக்கும் அப்படி ஒரு அடிமை வாழ்வு பிடிக்காது..ஆனாலும் குடும்பத்துக்காக அப்படி இருக்க வேண்டி இருக்கும்.. எனவேதான் நான் குடும்பமே வேண்டாம் என முடிவு செய்து வாழந்து வருகிறேன்...  நான் சம்பாதிப்பது எனக்கு மட்டுமே.. வேறு செலவுகள் இல்லை... இன்னொன்று , பயணம் என்பது ஒரு கலை... பயணத்துக்கு காசு தேவை இல்லை..கால்கள் போதும்... கிடைத்ததை சாப்பிட்டு , கிடைத்தை இடத்தில் தூங்கி என் பயணம் அமைகிறது..

 வலது சாரி என்ற குற்றச்சாட்டு கேலிக்குரியது..இலங்கையில் கிட்டத்தட்ட எல்லா இயக்கங்களுமே வலதுசாரிதான்... பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு பதிலையும் நன்கு யோசித்து சொன்னார்..கலந்து ஆலோசித்தார்.. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உடனடியாக பதில் சொன்னார்..
அந்த கேள்வி...  நீங்கள் விரும்பும் ஈழம் அமைத்தால் அதன் பொருளாதார கொள்கை என்னவாக இருக்கும்... அவர் பதில் - தாரளமயமான பொருளாதாரம்..


இப்படி எல்லோருமே அங்கு வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள்தான்,.. என்னை இப்படி குற்றம் சாட்டுவது தவறு


 ஞா நி ...அடுத்த கேள்வி...

ஷோபா - இங்கு நீங்க மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா

( பலத்த சிரிப்பு )

 ஞா நி ( சிரித்தபடி )  என்னை விட அவர்கள் நன்றாக கேட்பார்கள் .. அதற்கு ஆயத்தம்தான் இது


  ஞாநி

    நீங்கள் நடிக்கும் ஃபிரென்சு படத்தில் ஆசிய நாட்டில் இருந்து குடியேறுபவர்கள் குறித்த பிழையான செய்திகள் இருப்பதாக உங்களை குற்றம் சாட்டுகிறார்களே..

ஷோபா

அந்த படம் இன்னும் வெளி வரவே இல்லை.. இதெல்லாம் கற்பனையான குற்றச்சாட்டு.. என் செல்வாக்கை அந்த படத்தில் செலுத்தும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.. அவர் ஏற்கனவே பல படங்கள் எடுத்தவர்.. என்னை கேட்டு அவர் படம் எடுக்க மாட்டார்.. ஆனாலும் அதில் பிழையான செய்திகள் இருந்தால் எனக்கு தார்மீக பொறுப்பு இருப்பதை மறுக்கவில்லை.. ஆனால் அப்படி எதுவும் படத்தில் இல்லை.. வந்ததும் பாருங்கள்..

என்னைப்பற்றி கிண்டலாக நண்பர்கள் சொல்வார்கள்;. நீ ஒரு ரகசிய இயக்க ஆளாக இருந்து போலிசிடம் மாட்டினால் , உண்மையை கறக்க ஒரு க்வார்ட்டர் போதும் என்பார்கள் ( பார்வையாளர்கள் பலத்த சிரிப்பு ) .. எனவே ரகசிய வேலைகளில் ஈடுபடும் அளவுக்கெல்லாம் என்னிடம் திறமை இல்லை..

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதே ஒரு காமெடி...இலங்கை தமிழ் உச்சரிப்பு சொல்லித்தர என்னை நியமித்து இருந்தார்கள்>.. அவ்வப்போது போய் சொல்லித்தருவேன்... ஆனால் நேரமின்மையால் அடிக்கடி போக முடிவதில்லை,,, ஏதேனும் பொய்யான காரணம் சொல்வேன்.. நான் இப்படி நடிப்பதை பார்த்து ,  நன்றாக நடிக்கிறானே என முடிவு செய்து  என்னை நடிக்க செய்து விட்டனர்  ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு  )..

( தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்வி கேட்டனர் )

இலங்கை பிரச்சனைக்கு என்னதான் தீர்வு/?

கூட்டத்தில் யாரையாவது பார்த்தால் அவருக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ , அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்பது நம் ஆட்களுக்கே உரிய தனி பண்பு ( பலத்த சிரிப்பு ) ..இப்படித்தான் ஒரு முறை குஷ்புவிடம் அரசியல் தீர்வு கேட்டார்கள்

ஞா நி - இப்ப குஷ்பு அரசியலுக்கு வந்து விட்டார்... அரசியல் கேட்பது தப்பல்ல ( பலத்த சிரிப்பு )

இந்திரா  , ராஜிவ் , அமிர்தலிங்கம் , ஜெயவர்த்தனே என பலராலும் தீர்க்க முடியாத பிரச்சனைக்கு என்னிடம் தீர்வு கேட்டால் எப்படி ( பலத்த கைதட்டல் )

 நான் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. மீண்டும் ஓர் ஆயுத போராட்டத்துக்கு  நாங்கள் தயாராக இல்லை.. ஆயுதபோர் யாருக்கும் எந்த ஒரு சின்ன நன்மைகூட செய்யவில்லை...

அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்..ஆனால் ஆயுத போர் என்பது நிலத்தை மட்டும் உழவில்லை..விதைகளையும் சேர்த்து உழுதது... விதையில் இருந்து முளைக்கும் செடிகளையும் சேர்த்து உழுது நாசமாக்கியது>.

போராட்டத்துகான காரணங்களையோ அவர்கள் நோக்கங்களையோ நான் எப்போதும் குறை கூறியது இல்லை..ஆனால் வழிகள் தவறானவை


உங்கள் தமிழ் வெகு அழகாக இருக்கிறது..இப்படி பேச எங்களும் ஆசை..ஆனால் முடியாது.. தமிழகத்தில் நாங்கள் பேசும் தமிழை கேட்டால் உங்களுக்கு கோபம் வருமா


இக்கரைக்கு அக்கரை பச்சை ... இலங்கையில் காலனி ஆதிக்கத்தின் பாதிப்பு குறைவு... ஆங்கிலேயர்கள் காலடி படாத இடங்கள் இலங்கையில் பல உண்டு... அந்த இட அமைப்பு சிக்கலானது என்பதால் ஆங்கிலேயர்கள் அங்கு வர விரும்பாமல் இருந்து இருக்கலாம்.. எனவே தமிழகத்தை விட அங்கு ஆங்கில மோகம் குறைவு...சரி...இருட்டாகி விட்டது... ஸ்விட்ச் என்பதை தமிழில் எப்படி சொல்வீர்கள்>.

(பொத்தான் ?  தெரியவில்லையே...ஸ்விட்ச்தான் தமிழ்- கூட்டத்தினர் குரல்)

இதற்கு எங்கள் தமிழில் பொருத்தமான பெயர் உண்டு... அதைத்தான் அன்றாடம் பயன்படுத்துகிறோம்..

ஆனால் எங்கள் கலாச்சாரமும் மாறி வருகிறது..முன்பெல்லாம் வளைகாப்பு எங்களிடம் இல்லை..இப்போது கொண்டாடுகிறார்கள்>. காரணம் டீவி சீரியல்கள் ( பலத்த சிரிப்பு )..சீனிவாசன் போன்ற வைஷ்ணவ பெயர்கள் முன்பெல்லாம் இல்லை.. இப்போது உங்கள் புண்ணியத்தால் அவை பிரபலமாகி வருகின்றன..

ஃபிரான்சில் வசிக்கும் என் உறவினர் வீட்டு பையன் அப்படியே தமிழக தமிழ் பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.... பிறகுதான் தெரிந்தது...அந்த தமிழுக்கு காரணம் தமிழக திரைப்படங்கள்... இலங்கை தமிழர்கள் எடுக்கும் பல படங்களில் நல்ல தமிழ் இருப்பதில்லை

 ஞா நி - இதில் இன்னொரு விஷ்யம்.. நம் ஊரில் நடந்த ஹிந்தி எதிர்ப்பின் காரணமாக சமஸ்கிருதம் ஒழிக்கப்பட்டது.. காரியதரிசி போன்ற சொற்கள் அழிந்து விட்டன..ஆனால் இலங்கை தமிழில் சமஸ்கிருத ஆதிக்கம் அதிகம்.. நம் ஊரில் சமஸ்கிரித இடத்தை ஆங்கிலம் பிடித்துக்கொண்டது


ஈழ எழுத்தாளர்கள் படைப்புகள் பெரும்பாலும் போர் சார்ந்தே இருப்பது ஏன்

நான் எல்லா வகையிலுமே எழுதுகிறேன்..அவை போதிய கவனம் பெறவில்லை.. ஆண் பெண் உறவு , நட்பு , காதல் என எல்லாம் என் எழுத்தில் இருக்கும்..


மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் , கமலின் தெனாலி ஆகியவை இலங்கையின் அரசியலை சரியாக பிரதிபலித்ததாக நினைக்கிறீர்களா..

தெனாலி அரசியலைப்பற்றி எதுவும் பேசவில்லை... அந்த படத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மணி ரத்னத்தை பொருத்தவரை ஒரு படைப்பாளியாக அவர் மேல் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.. காட் ஃபாதர் படத்தை காப்பி அடித்து மூன்று படங்கள் எடுத்தவர் அவர்..

ஒரு மனிதன் முட்டாளாக இருக்கலாம்.. ஆனால் போலியாக இருக்கக்கூடாது. மணி ரத்னம் ஒரு ஃபேக் படைப்பாளி... ஜே ஜே சில குறிப்புகள் படித்தபோது என்ன எரிச்சல் ஏற்பட்டதோ அதே எரிச்சல் இருவர் படம் பார்த்தபோதும் ஏற்பட்டது.. முட்டாளாக இருப்பதில் ஒரு அழகு இருக்கிறது..ஆனால் ஃபேக் என்பது அருவருப்பானது


அதிஷா - சம கால இலக்கிய சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்

கேள்வி புரியவில்லையே

இப்போது எழுதுபவர்கள் குறித்த பார்வை

ஓ.. அதிஷா , லக்கி யுவா , வினாயக முருகன் போன்ற படைப்பாளிகளைப்பற்றி கேட்கிறீர்களா...  ( சிரிப்பு )

இப்போது நிறைய புத்தகங்கள் எழுதப்படுவதும் , பலரும் எழுதுவதும்  நல்லதுதான்.. ஆரோக்கியமான சூழல் நிலவுவதாகவே நினைக்கிறேன்

அம்பேத்கர் , பெரியார் போன்ற இந்திய தலைவர்கள் தாக்கம் இலங்கையில் எப்படி இருக்கிறது,..

பெரியார் தாக்கம் இங்கு மட்டும் இருக்கிறதா என்ன .. அவர் உழைப்பு , பணி என எல்லாவற்றையும் மறந்து விட்டு , சாதி மத இயக்கங்கள் தமிழகத்தில் வளர்வதை பார்க்க முடிகிறது...இது வருந்தத்தக்கது..

சாதி வெறி அதிகம் கொண்ட யாழ்ப்பாணத்தில் அம்பேத்கர் தாக்கம் குறைவாகவே இருந்தது.. எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு பெரியார் அறிமுகம் ஆகி இருந்தார்.. சிவாஜி ரசிகர்களுக்கு அதுவும் தெரியாது ( சிரிப்பு )>.

இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கான அங்கு இருக்கிறது... ஆனால் பெரியார் , அம்பேத்கார் போன்றோர் இல்லாததால் அங்கு அது வரவில்லை..
ஜாதி ஆதிக்கம்தான் அங்கு இருந்தது..

இலங்கையில் அறப்போராட்டம் ஏன் வெற்றி பெறவில்லை/?

அறப்போராட்டம் தோல்வி அடைந்ததால் , ஆயுதபோராட்டம் தொடங்கியதாக பலர் நினைக்கிறார்கள்>. அங்கு அறப்போராட்டம் நடக்கவே இல்லை என்பதே உண்மை... காந்தி , நேரு போன்றோர் அறப்போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறைகளில் கழித்தனர்,,, அங்கு யாரும் அத்தனை ஆண்டுகள் சிறை சென்றதில்லை... தம் செல்வாக்கை அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தினர்...






Monday, October 13, 2014

வாசகனின் பங்கேற்புக்கு இடம் அளிக்கிறேன் - கலை குறித்து ஓவியர் மசெ பேச்சு


ஓவிய கலை என்பது கடல் போன்ற பிரமாண்டமான ஒன்று. அதை ரசிப்பதற்கேகூட நல்ல பயிற்சி வேண்டும். நம்மில் பெரும்பாலானோருக்கு ஓவியம் என்பது பத்திரிக்கைகளில் வரும் கதைகளுக்கு போடப்படும் ஓவியம் மூலம் அறிமுகம் ஆகி இருக்கும். அந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணி இருக்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும், மில்க் பூத் என்ற டீ ஷர்ட் வாசகத்துடன் மு...மன்னிக்கவும் .. கலை அம்சத்துடன் ஒரு பெண்ணை  வரைந்த ஓவியர் இருக்கிறார்.  போட்டோபோலவே வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஒரு வித அமானுஷ்ய தன்மையுடன் வரைபவர்கள் இருக்கிறார்கள். இருப்பதை அப்படியே கண் முன் நிறுத்துவது ஒரு பாணி என்றால் வாசகனின் கற்பனைக்கு சற்று இடம் அளித்து , அழகியலும் கற்பனையும் சேர்த்து வரைவது மணியம் செல்வத்தின் பாணி. அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு,

என்னை பொருத்தவரை மேலே சொன்ன டீஷர்ட் ஓவியர் முதல் , போட்டோகிராஃபி ஓவியர் வரை எல்லோரையுமே ரசிப்பேன். ரசிப்பதுடன் ஆழந்து கவனிக்கவும் செய்வது மணியம் செல்வத்தின் ஓவியங்களை..

இவரது தந்தை மணியனின் ஓவியங்கள் இன்னும் பேசப்பட்டாலும் ( குறிப்பாக பொன்னியின் செல்வன் ஓவியங்கள் ) தன் தந்தையையும் விஞ்சி நிற்பவர் மணியன் செல்வம்.

அவர்தம் ஓவியங்களை மட்டும் அன்று..அவர் பேட்டிகளையும் ஆர்வமாக கவனிப்பவன் என்ற முறையில் ஞாநி மற்றும் பாஸ்கர் சக்தி  நடத்தும் கேணி கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளித்தது.

இயற்கையான சூழலில் கேணி கூட்டத்தில் கலந்து கொள்வது எப்போதுமே இனிய அனுபவம். இம்முறை சற்று வித்தியாசமாக , அறைக்குள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது எனக்கு சற்று ஏமாற்றம் என்றாலும் , அறைக்குள் நடத்தியதால் , வீடீயோ காட்சிகள் மிக சிறப்பாக அமைந்திருந்தன என்பதால் மகிழ்ச்சியாக இருந்தது. அதிஷா , லக்கி யுவா போன்ற பிரபலங்கள் ஆஜர் ஆகி இருந்தனர். அவர்கள் வெற்றிக்கான காரணம் புரிந்தது. எதற்கு பிரியாரிட்டி கொடுப்பது என்பதே நம்மை உருவாக்குகிறது அல்லவா...

அரசியல் விமர்சகராக நாம் அறிந்த ஞாநி , ஓவியம் குறித்து பேசியது வியப்பாக இருந்தது,  ஓவிய மேதையான மாசெ அந்த அறிமுக உரையை ஆர்வத்துடன் கவனித்தார்.

ஞாநி பேசுகையில் , தனக்கு முதன் முதலில் மணியம் செல்வம் அறிமுகம் ஆனது வேறோரு பெயரில் என்று சொல்லி , அவரையே ஆச்சர்யப்பட வைத்தார்.  குமுதத்தில் , பிரபலங்களின் வாரிசுகளின் திறனைக்காட்டும் பகுதி ஒன்று பிரசுரிக்கப்பட்டதாம். அதில் மணியம் அவர்களின் மகன் என்ற முறையில் லோகனாதன் என்பவர் படம் வரைந்தாராம். அவர்தான் இன்றைய மசெ !!!!!   பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்ததன் ஒரு சின்ன "கால பயண மகிழ்ச்சி"  மசெ முகத்தில் தெரிந்தது.

ஞாநி தொடர்ந்து பேசினார்..

சினிமாவில் க்ளோசப் ஷாட் , லாங்க் ஷாட் , இந்த கோணம் , அந்த கோணம். மாண்டேஜ் என்றெல்லாம் இப்போது பேசுகிறோம் . அது போன்ற பேச்சுகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் , இவற்றை ஓவியம் மூலம் செய்து காட்டுயவர்கள் அன்றைய ஓவியர்கள்..  தொடர்கதை , சிறுகதைகள் என பத்திரிக்கைகள் ஆதிக்கம் செய்த அன்றைய சூழலில் ஓவியர்கள் பிசியாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் திடீர் என கதைகளுக்கு இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது...அதை மசெ எப்படி எதிர்கொண்டார் என விளக்குவார் என கருதுகிறேன்.  நான் அந்த காலத்தில் இருந்தே மசெயை கவனித்து வளர்ந்து வந்தவன். அவர் போன்ற ஓவிய்ர்களை ரோல் மாடலாக கொண்டு , அவர்களைப்போலவே வரைய முயற்சி செய்தவன் நான்.. எனவேதான் என்னால் நல்ல ஓவியனாக உருவெடுக்க முடியவில்லை . யார் பாதிப்பும் இல்லாமல் நான் வரைந்த ஒரே ஓவியமான பாரதி ஓவியம் மட்டும் பிரபலமாக உள்ளது. மசெ பத்திரிக்கையில் மட்டும் வரையவில்லை. வேறு இடங்களிலும் தன் கலைத்திறனை காட்டி இருக்கிறார். பல ஆலயங்களில் வணங்கப்படும் சிலைகள் இவர் வடிவமைத்ததுதான். அவர் தன் அனுபவங்களை நம்முடம் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்..

இவ்வாறு அவர் பேசியதும் , தொடர்ந்து மசெ பேசினார். ஓவிய துறைக்கு எப்படி வந்தார் என்பதையும் அவரது தந்தைக்கும் கல்கி அவர்களுக்கும் இடையேயான நெருக்கம் குறித்தும் பல விஷயங்கள் சொன்னார்.  டெக்னாலஜி வளராத அன்றைய காலத்தில் , அட்டைப்படம் வரைவதெல்லாம் சாதாரண விஷயம் அன்று.  வரையும் படம் , ப்ரோசஸ் எல்லாம் முடிந்து ப்ரிண்டில் எப்படி வரும் என் கணிக்க தெரிந்திருக்க வேண்டும் . அட்டையில் வரும் எழுத்துகளை சரியாக மேட்ச் செய்ய வேண்டும் .  ப்ரிண்டிங் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும் .உதாரணமாக ஓவியத்தின் ஒரு பகுதியில் அதிக கருப்பு பகுதி இருந்தால் ,  மை அதிகம் செலவாகி அதன் மற்ற பகுதியின் தரத்தையும் கெடுத்து விடும்,  அதையும் கணக்கில் கொண்டு , அந்த கறுப்பு பகுதியில் வேறேனும் விஷயங்களை பொருத்தமாகவும் அழகியலுடனும் சேர்க்க வேண்டும். அதாவது கலைஞனாக இருந்தால் மட்டும் போதாது. தொழில் நுட்ப அறிவும் வேண்டும் .. அப்படித்தான் அந்த காலத்தில் ஓவிய பணியாற்றினர்.  இதற்காக பெரிய அளவில் பொருளாதார ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே ஓவியர்களை இயங்க வைக்கிறது.

இப்படி பேசிய அவர் சில அபூர்வ ஓவியங்கள் , அவை உருவாகும் விதம் ஆகியவை குறித்து காணொளி மூலம் விளக்கினார்.  ஒரு சிறப்பிதழுக்காக குறிப்ப்பிட்ட அட்டைப்படம் காட்டினார். அதற்கு முதலில் வரையப்பட்டு இருந்த ஓவியத்தை காட்டினார். அது செம அழகாக இருந்தது. ஆனால் ஓவியருக்கு அதில் திருப்தி இல்லை..எனவே அதை புறக்கணித்து விட்டு இன்னொரு ஓவியம் தயார் செய்தார். இரண்டையும் நாம் பார்க்கும்போது , அவர் செய்த மாற்றம் , அது தரும் அழுத்தம் , அழகு போன்றவை பளிச் என தெரிந்தன. அப்படி வரையப்பட்ட படம் , ப்ரிண்டில் எப்படி வந்துள்ளது என்பதையும் காட்டினார். வாவ்வ்வ்வ்.. ப்ரிண்டில் நாம் பார்ப்பதை , ஓவியர் ஏற்கனவே மனக்கண்ணில் பார்த்து வரைந்தாக வேண்டும்.


வரலாற்று சிறப்புமிக்க சில இடங்களுக்கு சென்று வரையப்பட்ட படங்களை காட்டினார்.

சிலர்  நாளை மற்றும் ஒரு நாளே , ஜே ஜே சில குறிப்புகள் போன்ற  ஃபேக் நாவல்களை படித்துவிட்டு வாழ்க்கையை அப்படியே பதிவு செய்து இருக்கிறது என சிலிர்ப்பார்கள் அல்லவா.. அப்படியே பதிவு செய்வது கலை அல்ல என செம அழகாக விளக்கினார். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , சிலைகள் ஓவியர் கைவண்ணத்தில் எப்படி உரு மாறுகிறது என விளக்கியது அட்டகாசம்


செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.அத்தகைய படைப்புகள் காலத்தை விஞ்சி நிற்கும் என்றார் மசெ.


ஒரு விஷ்யத்தை நன்றாக தெரிந்து கொண்டு விட்டு , அதன் பின் அதை மீறி செல்வது நல்லது.  எதுவுமே தெரியாமல் , வெறும் பரபரப்புக்காக மீறல்களில் ஈடுபடுவது நல்லதனறு. அந்த காலத்தில் என் நண்பர் ஒருவர் மாடர்ன் ஆர்ட் வரைந்து பல பரிசுகள் வென்றார். ஆனால் இன்று அவருக்கு ஓவிய துறையில் எந்த இடமும் இல்லை. காரணம் அவரிடம் அடிப்படை அறிவு இல்லை. நான் மாடர்ன் ஆர்ட்டுக்கு எதிரி அல்லன். ஆனால் வலுக்கட்டாயமாக அதில் இறங்குவதில்லை. எப்போது தோன்றுகிறதோ அப்போது வரைகிறேன். கார்ட்டூனும் முயற்சி செய்துள்ளேன். ஆனால் அதில் அதிகம் இறங்கினால் , இயல்பான ஸ்டைல் கெட்டு விடும் என என் தந்தை எச்சரித்ததால் , அதை விட்டு விட்டேன்.

என் தாயார் பெயர் சரஸ்வதி. அவர் துணை இல்லாமல் என் தந்தை அவ்வளவு சாதித்து இருக்க முடியாது. எல்லாவித்திலும் என் அம்மா உற்ற துணையாக இருந்தார்,

என் படங்களில் வாசகனின் கற்பனைக்கு எப்போதுமே இடம் இருக்கும். இருப்பதை அபப்டியே வரைந்து , வாசகனின் கற்பனைக்கு இடம் இன்றி செய்வதில்லை.

அறீவியல் முன்னேற்றங்களை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் டெக்னாலஜி நம்மை ஆதிக்கம் செலுத்திவிட அனுமதிக்க கூடாது. தேவையான அளவு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெக்னாலஜி மூலம்தான் என் தந்தை ஓவியங்களை பாதுகாக்க முடிந்தது.

என்னால் அழகாக மட்டுமே வரைய முடியும் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு , தன் கதாபாத்திரங்களை அழகின் உச்சமாகத்தான் கதாசிரியர்கள் காட்டுகிறார்கள். எனவே நான் அழகாகவே வரைய வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் ஓவியங்கள் ஒரே மாதிரி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

கதாசிரியர்கள் விரும்புவதை ஓவியத்தில் கொண்டு வருவது என் கடமை. ரத்தம் ஒரே நிறம் நாவலில் சுஜாதா ஒரு காட்சியில் , யானையால் மிதிக்கப்பட்டு ரத்தம் பாய்ந்து சிதறுவதை , மயில் தோகை போல ரத்தம் சிதறியது என எழுதி இருப்பார். அதை ஓவியத்தில் அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது. பொருத்தமான கோணாத்தை யோசிக்க வேண்டி இருந்தது   அந்த கதையின் ஓவியங்கள் எப்படி வர வேண்டும் என சுஜாதா ஆர்வம் காட்டினார், எனக்கு பல தகவல்கள் தந்தார்.


கதைகளுக்கான ஓவிய தேவை குறைந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறேன் என ஞாநி கேட்டார். இந்த தேவை இன்னும் குறைந்து , நான் முழுமையாக விடுபட்டால் நல்லதுதான் என கருதுகிறேன். நான் பத்திரிக்கையை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஓவியத்துறையில் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன.

ஓவியம் படித்தால் வேலை கிடைக்குமா என கணக்குபோடாமல் , ஆர்வத்துடன் இதில் இறங்கினால் வாய்ப்பு உங்களை தேடி வரும். கண்டிப்பாக சாதிக்கலாம்.

இவ்வாறு ம செ பேசினார்..





Sunday, June 8, 2014

கமல்ஹாசன் முகத்துக்கு நேராக பேச மாட்டார் - ரோகிணி பரபரப்பு பேச்சு - பிரத்தியேக கவரேஜ்

பலதரப்பட்ட ஆளுமைகளின் உரைகளை கேட்க , அவர்களுடன் உரையாட நல்வாய்ப்பாக அமைந்து இருப்பது ஞாநி நடத்தும் கேணி கூட்டங்கள்...  இலக்கியம் , சினிமா, மருத்துவம் , அரசியல் என பல துறையினரை இங்கு சந்திக்கலாம்..

அந்த வகையில் இன்று ( ஜுன் எட்டாம் தேதி , 2014) நடந்த கூட்டத்தில் நடிகர் & இயக்குனர் ரோகிணி பேசினார்.. மறுபடியும் , மகளிர் மட்டும் என பல படங்களில் இவரை மறந்து இருக்க முடியாது..தவிர சில திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.. அப்பாவின் மீசை எனும் படம் எடுத்து வருகிறார்.

மரங்கள் சுழ்ந்த இனிமையான இடம்.. நல்ல கூட்டம்.  திரைத்துறையினர் , முக நூலர்கள் , பத்திரிக்கையாளர்கள் என பலர் வந்து இருந்தனர்.

ஞாநி வரவேற்புரை நிகழ்த்தினார்.. வழக்கமாக சுருக்கமாக பேசும் அவர் , சற்று விரிவாகவே பேசினார்... ரோகிணியுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியது...

ரோகிணியை எனக்கு வெகு நாட்களுக்கு முன்பே தெரியும், அவரை நான் முதன்முதலில் சந்தித்தது அவருக்கே நினைவு இருக்குமா என தெரியவில்லை.. தூர்தர்ஷனுக்காக ஒரு நிகழ்ச்சி செய்தேன். அதில் ஒரு பேட்ட்டிக்காக ரோகிணியை சந்தித்தேன்.. அப்போது அவர் சிறிய பெண்.  அப்போதைய இடத்தில் இருந்து , இப்போது நிறைய டிரான்ஸ்ஃபார்ம் ஆகி இருக்கிறார்.  அந்த மாற்றமே அவரை இங்கே அழைக்க செய்தது.. நிறைய வாசிக்கிறார். தற்போது ஒரு படம் இயக்குகிறார்.

 நடிகர்கள் பலருக்கு பொதுவான விஷயங்கள் தெரிவதில்லை.. நான் உட்பட பலருக்கும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அற்புதமான நடிகர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அவர் ஜனதா தள் தலைவராக இருந்தபோது , விபி சிங் ஆதரவு நிலையில் சிவாஜியுடன் இணைந்து செயலாற்றி இருக்கிறேன். எளிமையாக இனிமையாக பழகுவார்.  ஆனால் அவருக்கு சினிமா, அதில் தான் ஏற்கும் பாத்திரம் இவை மட்டுமே தெரிந்தவர் அவர்.

மாறாக ரஞ்சன் என்ற நடிகர் அந்த காலத்தில் இசை பத்திரிக்கை வெளியிட்டார். பல விஷ்யங்கள் தெரிந்து வைத்து இருந்தார். தற்போது நாசர் உட்பட சிலருக்கு மட்டுமே பொது விஷ்யங்கள் தெரிகின்றன. பெண் நடிகர்களில் விஷ்யங்கள் தெரிந்தவர்கள் குறைவு. இவர்களில் சற்று மாறுபட்டவர் ரோகிணி. நிறைய வாசிக்கிறார். தெளிவாக முடிவெடுக்கிறார்.

அவரை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினேன்.. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பத்து நிமிட படம் அது. சிறப்பாக நடித்தார். இன்னொரு படத்துக்காக அணுகிய போது  , அந்த கதை பிடிக்காமல் நடிக்க மறுத்து விட்டார். நோ சொல்ல தெரிந்தவர் அவர்.. அவர் இப்போது பேசுவார்”

பிறகு ரோகிணி பேசினார்...

ஒரு கல்லூரிக்கு பேச போனேன். நிறைய தயார் செய்து பேசினேன்.. பேசி முடித்து விட்டு , ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டேன்.. " ஆமா...சீக்கிரம் பேச்சை முடிங்க... பஸ்சுக்கு லேட் ஆகுது என்றார்கள்.. இப்படி சில இடங்களில் ஆகிறது..

இன்னொரு கல்லூரிக்கு போய் இருந்தபோது ஆரம்பத்திலேயே கேட்டு விட்டேன். என்ன டாபிக் பேச விரும்புகிறீர்கள்.. அவர்கள் சொன்னார்கள் , மறுபடியும் படத்தில் வரும் ஆசை அதிகம் வச்சு பாடலுக்கு டான்ஸ் ஆடுங்கள். திகைத்து போனேன். நான் அதற்கு பிராக்டிஸ் செய்திருக்கவில்லை.. அவர்கள் எண்ணமோ டான்ஸ் பார்ப்பதில்தான் இருந்து இருக்கிறது.

பார்வையாளர்களுக்கு ஏற்பவே பேச்சு அமையும். வேறு எங்கும் பேச முடியாத சிலவற்றை இங்கே பேச விரும்புகிறேன்.

நாம் எப்படி பிறக்கிறோம்.. எங்கே பிறக்கிறோம் என்பது முற்றிலும் தற்செயலானது.. நான் பெண்ணாக பிறந்தது , நடிகை ஆனது எல்லாம் தற்செயலானவை..

ஆரம்பத்தில் இதற்காக வேதனைப்பட்டு இருக்கிறேன். காரணம் இங்கே பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில்தான் வைத்து பார்க்கிறார்கள்.. அதிலும் பெண் நடிகர் என்றால் மதிப்பதே இல்லை..

ஆரம்பத்தில் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நடிப்பு இனிமையாக இருந்தது.. காரணம் சாக்லேட் கிடைக்கும், அழுகை சீனாக இருந்தாலும் , நன்றாக அழுதால் சாக்லேட் கிடைப்பதால் அதை ஜாலியாக செய்வேன்.

15 அல்லது 16 வயதில் இளமைப்பருவத்தில் நடித்த போதுதான் , சிக்கல் ஆரம்பித்தது. ஒரு கவர்ச்சியான ஆடையை எனக்கு அணிவித்து , என்னை விட 20 வயது பெரிய நடிகர் ஒருவருடன் காதல் பாட்டுக்கு ஆட சொன்னபோது திகைத்தேன்..  கவர்ச்சிக்கன்னி , ரோகினி எனும் வன மோகினி என்ற கேப்ஷன்களுடன் என் படங்கள் பத்திரிக்கைகளில் வெளி வருவதை எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் எனக்கு குழப்பமாக இருந்தது...

காலப்போக்க்கில் காதல் என்பதை எப்படி வெளிக்காட்டுவது , நடிப்பு போன்ற வற்றை கற்றேன். ஒரு கட்டத்தில் நடிப்பதற்கோ , பெண்ணாக இருப்பதற்கோ வேதனைப்படக்கூடாது என முடிவெடுத்தேன். நடிகர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால் பல எழுத்தாளர்களும்கூட பெண் நடிகர்களைப்பற்றி தவறாக எழுதுகிறார்கள்.. குறிப்பாக அசோக மித்ரன் நாவல் ஒன்றை படித்து மனம் நொந்தேன்.

மெத்தப்படித்தவர்கள்கூட பெண் நடிகர்கள் என்றால் இழிவாகவே நினைக்கிறார்கள்.  ஒரு நிகழ்ச்சிக்கு மனுஷ்ய புத்திரன் என்னை அழைத்தார். அப்போது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பாடல் எழுதி இருந்தேன்.. அந்த அடிப்படையில் அழைத்தார்.  அதில் எழுத்தாளர் சுஜாதாவும் கலந்து கொண்டார்.

ஒருவர் புத்தகம் வெளியிட நான் அதை பெற்றுக்கொண்டேன். அதைப்பார்த்த சுஜாதா என்னிடம் கேட்டார் “ என்ன, உனக்கு படிக்கவெல்லாம் தெரியுமா “ அவர் அப்படி கிண்டலாக கேட்டது என்னை புண்படுத்தியது.

இப்படி பெண்களுக்கு எதிரான சூழலே இங்கு உள்ளது.. இதை மறுத்து யாராவது பேசினால் மகிழ்வேன் .. “

இப்படி அவர் பேசி முடித்ததும் ஞாநி பேசினார்.

நீங்கள் இப்படி நம்பிக்கை இழக்க தேவை இல்லை.. அசோக மித்ரன் வேறொரு  நாவலில் பெண் நடிகர்களைப்பற்றி பாசிட்டிவாக எழுதியுள்ளார். வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள்.. சரி..இப்போது பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்..

*****************************************************

பாடல் எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்..

அது தற்செயலான ஒன்று.. ட்யூனுக்காக அல்லாமல் கவிதை ஒன்றை எழுதி தருமாறு கவுதம் மேனன் கேட்டார் , பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்காக, எழுதிக்கொடுத்தேன்.. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அந்த கான்செப்ட்டை விரும்பவில்லை.. ட்யூனுடன் கூடிய பாடல்தான் வேண்டும் என்றார்.  என் வரிகள் ட்யூனுக்கு செட் ஆகவில்லை..இப்போது கவுதம் மேனனுக்கு தர்ம சங்கடம். ட்யூனுக்கு ஏற்றபடி 20 வகையான வரிகள் எழுதித்தாருங்கள்..அதில் சிறந்ததை பயன்படுத்திக்கொள்கிறோம் என்றார்..  நான் நான்கு வகையில் எழுதினேன்.. அதில் அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் படத்தில் இடம் பெற்றது


*****************************************************

ரகுவரன் , நாசர் போன்றோர் திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள்..உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது குறித்த ஏக்கம் இருக்கிறதா?

இது போன்ற பயிற்சிகளை நான் வரவேற்கிறேன். கூத்துப்பட்டறை போன்றவற்றில் கொடுக்கப்படும் பயிற்சிகள் ஆரோக்கியமானதே.  ஆனால் இந்த பயிற்சிகளுக்கு நான் போனதில்லை என்பதில் வருத்தம் இல்லை.. காரணம் எனக்கு பல குரு நாதர்கள் கிடைத்துள்ளனர்.. அவர்களிடம் கிடைத்த பயிற்சியை பெரிதாக நினைக்கிறேன். பரதன் போன்ற இயக்குனர்கள் காட்சியை விளக்குவதே பெரிய பாடம்தான்..

 நாகேஷ் இயக்கத்தில் ஒரு படம்.. நான் அழுவதாக காட்சி..அவர் எனக்கு கிளிசரின் தரவில்லை.. தன் கண்களையே பார்க்குமாறு சொன்னார்.. பார்த்தேன்,,, அவர் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. பார்த்ததும் என் கண்களிலும் கண்ணீர்.. அப்படியே நடிக்க சொன்னார்...இதெல்லாம் பாடம்தானே

ஞாநி

நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.. ரகுவரனுடன் நான் பழகி இருக்கிறேன்.. அவர் ஒரு போதும் தான் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதாக சொன்னதில்லை.. பயிற்சிகளை ஆதரித்தோ எதிர்த்தோ அவர் பேசியதில்லை..  நாசர் பயிற்சி வகுப்புகளுக்கு போய் இருக்கிறார்..  எப்படி நடிக்கக்கூடாது என அங்கே கற்றதாக அவர் கூறுவார்

*********************************************************





உங்கள் வாசிப்பு அனுபவம் குறித்து சொல்லுங்களேன்..

 நான் ஆரம்பத்தில் வாசிக்க ஆரம்பித்தது கல்கிதான்.. கிட்டத்தட்ட அனைத்தும் வாசித்துள்ளேன்.. பொன்னியின் செல்வன் போன்றவை மிகவும் பிடிக்கும். பிறகு ஜெய காந்தன் , தி ஜா ரா வாசிக்க ஆரம்பித்தேன்..

ஆரம்பத்தில் புரியவில்லை...போக போக , மோக முள் போன்றவற்றை புரிந்து கொண்டு ரசிக்க ஆரம்பித்தேன்.  சுந்தர ராமசாமி , பஷீர் என வாசிப்பு வளர்ந்தது..குழந்தைகளி உலகை புரிந்து கொள்ள பஷீர் சிறுகதைகள் உதவின

******************************************************************

 நீங்கள் ஒரு டப்பிங் கலைஞரும்கூட...டப்பிங் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

டப்பிங் என்பது எனக்கு எக்சைட்டிங்கான ஒன்று.. எழுத்தாளர் ஒன்றை படைக்கிறார்..இயக்குனர் ஒன்றை உருவாக்குகிறார்.. நடிப்பவர் ஒரு பரிமாணத்தை சேர்க்கிறார்.. இந்த மூவர் சேர்ந்து உருவாக்கிய ஒன்றில் கூடுதலாக ஒன்றை சேர்க்கும் டப்பிங் பணி சுவையான ஒன்று..

இதயத்தை திருடாதே , இருவர் போன்ற படங்களில் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.. அந்த படங்களில் என் இயல்பான குரலையே பயன்படுத்த அனுமதித்தார். ஆனால் பம்பாய் படத்தில் மனிஷா கேரக்டருக்கான குரல் மென்மையாக இருக்க வேண்டும் என விரும்பினார்.. இதற்காக பல குரல்களில் பேசி காண்பித்தேன்.. கடைசியாக ஒரு குரலை ஒப்புக்கொண்டார்..இந்த குரலுக்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது..

ராவணன் படத்தில் நான் பாரதியார் பாடலை பாடிய விதம் அவருக்கு பிடிக்கவில்லை.. இந்த அளவுக்கு இனிமையாக வேண்டாம்.. கடத்தப்பட்ட பெண் கத்தி இருப்பார்..அழுது களைத்து இருப்பார்.. அந்த குரல் இவ்வளவு இனிமையாக இருக்ககூடாது என்றார்... அவர் கேட்ட குரலை கொடுப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன்.

இப்படி கஷ்டப்பட்டாலும் , குரல் மூலம் ஒரு காட்சி செழுமை அடையும்போது இயக்குனர்கள் மகிழ்வார்கள்..


*************************************************************************

திரைத்துறையில் இருக்கும் பெண்கள் ஃப்ரீயாக இருப்பார்கள் என்பது உண்மையா

ரோகிணி : ஃப்ரீயா என்றால் என்ன அர்த்தம் //ஃபிரீ செக்சா

ஞாநி :  மற்ற பெண்களுக்கு இல்லாத சுதந்திரம் உங்களுக்கு உண்டா என கேட்கிறார்..

ரோகிணி ; முன்பே சொன்னது போல சினிமாவுக்காக கவர்ச்சி ஆடைகள் அணிய வேண்டி இருக்கும்.. ஆனால் அன்றாட வாழ்வில் அப்படி ஆடை அணிய முடியாது...   ஸ்லிவ்லெஸ் அணியக்கூட வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்... இரவு  நேரங்களில் வெளியே சுற்ற விட மாட்டார்கள்... மற்ற பெண்களுக்கு இருக்கும் எல்லா கட்டுப்பாடுகளும் எங்களுக்கு உண்டு

ஞாநி : எல்லா துறைகளைப்பற்றியும் இப்படி மித்கள் இருப்பதும் , உடைவதும் இயல்பானதே.. நான் பத்திரிக்கையாளன் என்பதால் , என்னுடன் பேசவே உறவினர் பயப்படுவார்கள்..  சொல்வதை பேப்பரில் எழுதி விடுவேன் என பயம்.. செய்தியாளன் என்றால் எல்லாவற்றையும் எழுதிவிடுவான் என்பது மித்..அதேபோல , ஐ டி பெண்கள் , ஆண்கள் எல்லோரும் பப்பிலேயே விழுந்து கிடப்பார்கள் என்பதும் கற்பனையான ஒன்றுதான்

**************************************************************

உங்களை கவர்ந்த சில இயக்குனர்கள் குறித்து ?

பலரை சொல்லலாம்.. பரதன் ஒரு ஷாட்டை எப்படி வைக்க வேண்டும் என்பதில் நிபுணத்துவம் கொண்டவர்.. அதை அனாயசமாக செய்வார்.. இவரது திறமையில் ஒரு பங்கை மிஷ்கினிடம் காணலாம்.

சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் கேஷுவலாக இருப்பார்... அவருக்கு வேண்டியதை நம்மிடம் இருந்து எடுத்து விடுவார்..

மகளிர் மட்டும் பெருவெற்றி அடைய எங்களது டீம் ஸ்பிரிட்டே காரணம் என பாராட்டினார்,, நான் , ஊர்வசி  , ரேவதி ஆகிய மூவரும் ஈகோ இல்லாமல் நடித்தோம்.. ஊர்வசி சிறப்பாக நடிக்கிறார் , அவருக்கு பாராட்டு கிடைக்கும் என நன்கு தெரிந்திருந்தது... ஆனாலும் அவர் நடிப்பை ரசித்தோம்...படம் ரிலிசான பின் , யாருக்கு வரவேற்பு அதிகம் தெரியுமா என கமல் போனில் கேட்டார்..  ஊர்வசிக்குத்தானே சார் என சிரித்துக்கொண்டே கேட்டேன்.. ஊர்வசி என்னை விட சிறந்த நடிகர்

***********************************************
கமல் பற்றி உங்கள் கருத்து?

அவர் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்.. எனக்கு மட்டும் அல்ல .. பலருக்கும்..புதிதாக பல விஷ்யங்களை கற்றுக்கொண்டே இருப்பார்... எந்த கம்ப்யூட்டரிலும் இல்லாத அளவுக்கு இன்ஃபர்மேஷன்களை தன் மூளையில் சேர்த்து வைத்து இருப்பார்.. இவ்வளவு விஷ்யங்கள் தேவையா என்று நமக்கு தோன்றும்.. இவைதான் அவரை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றன என்றும் தோன்றும்.. அவரை பொருத்தவரை , கற்பதே அவரது ரிலாக்சேஷன்...

 நல்ல விஷ்யங்களை யார் செய்தாலும் பாராட்டி விடுவார்.. ஆனால் முகத்துக்கு நேராக பாராட்ட மாட்டார்..  நான் அவருடன் பல படங்களில் வேலை செய்து இருக்கிறேன்.. என்னை பாராட்டியதே இல்லை. ஆனால் மற்றவரகளிடம் என்னை குறிப்பிட்டு பாராட்டியதாக அவர்கள் சொல்வார்கள்..

உன்னை போல ஒருவன் படத்தில் டப்பிங் பணிக்காக என்னை அழைத்தார்.. பணியின்போது அதை கண்டு கொள்ளவே இல்லை.. வழக்கமாக அது சரி இல்லை , இது சரி இல்லை என உயிரை வாங்கும் அவர் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருந்தது.. பிறகுதான் தெரிந்தது.. அவர் என்னை அழைத்ததே மிஷ்கினை பாராட்டத்தான்... நந்தலாலா படத்தைப்பற்றி பாராட்டிக்கொண்டே இருந்தார்...

ஒருவரை நேரில் பாராட்டாமல் இன்னொருவரிடம் பாராட்டுவது அவர் பாணி..


**************************************************************

ரகுவரனின் சினிமா ஈடுபாடு பிரபலமான ஒன்று...  அவர் குறித்த உங்கள் பார்வை..

அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம்... ஒரு கதாபாத்திரம் முடிவான உடன் , அந்த பாத்திரத்துக்குள் செல்வதற்கான பணியை தொடங்கி விடுவார்.. பொருத்தமான ஆடை , அதற்கான துணி என இறங்கி விடுவார்.. எந்த துணியாக இருந்தால் என்ன என்றால் கேட்க மாட்டார்...  எப்படிப்பட்ட கண்ணாடி அணிய வேண்டும் என யோசிப்பார்.. அந்த கேரக்ட்டர் கண்ணாடியை உடைத்து விடும் , எனவே உடையாத கண்ணாடிதான் வாங்கிக்கொடுப்பார்கள் என யோசிப்பார்...  கண்ணாடி அதற்கான பட்டை என தேர்ந்தெடுப்பார்.

அவரது ஷாட் முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் அதை முடித்து விட்டுதான் சாப்பிடுவார்... அல்சர் , டயாப்படீஸ் என பாதிக்கப்பட்ட உடல் நிலையில் இருந்தாலும் பிடிவாதமாக இருப்பார்...  சில இயக்குனர்கள் , அவர் நிலையை உணர்ந்து அவர் காட்சியை சீக்கிரம் முடித்து விடுவார்கள்..

கதாபாத்திரத்தைப்பற்றியே யோசித்து சில ஐடியாக்களை இயக்குனர்களுக்கு பரிந்துரைப்பார்.. பல நேரங்களில் அவை ஏற்கப்பட்டுள்ளன...

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் அவர் கேரக்டர் ஹீரோயினின் அண்ணன் என்று இருந்ததை ஸ்டெப் பிரதர் என மாற்றியது அவர்தான்.. பூவிழி வாசலிலே படத்தில் செயற்கை கால் என்பது அவர் ஐடியாதான்.. சில நேரங்களில் அவர் ஈடுபாடு பயமாக இருக்கும்...

வாசிப்பில் அவருக்கு தீவிர ஈடுபாடு உண்டு.. ஆனால் படித்த கதாபாத்திரங்களை படத்தில் பயன்படுத்தினாரா என தெரியவில்லை...  வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை படத்தில் பயன்படுத்துவார்.. கோபப்படும்போது நான் அமைதியாகி விடுவேன்.. இதை ஒரு படத்தில் பயன்படுத்தினார்...

அவர் பேசும் பாணி பாராட்டு பெற்றதால் அப்படியே படங்களில் பேசினார்.. ஆனால் ரியல் லைஃபில் அப்படி பேச மாட்டார்... அந்த பாணியில் பேசாமலும் நடித்துள்ளார்.
ஒசாமா பின் லேடன், ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி போன்ற வேடங்களில் நடிக்க விரும்பினார்

********************************************************************

உங்கள் ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்

அருந்ததி ராயின் துணிச்சல் எனக்கு பிடிக்கும்,, பிரச்சனையை பின் பாயிண்ட் செய்து அவர் பேசுவதை ரசிப்பேன்

******************************************************************

நீங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

 வண்ணநிலவனின் எஸ்தர்

************************************************************************

நீங்கள் இயக்கும் படத்தைப்பற்றி?

அப்பாவின் மீசை என்ற என் படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்... இந்த படம் வந்த பின் , என் திறமை பரவலாக அனைவருக்கும் தெரிய வரும்... அதன் பின் , என் ஆலோசனைகளுக்கு இயக்குனர்கள் மத்தியில் மதிப்பு ஏற்படும் என கருதுகிறேன்

**********************************************





Thursday, December 12, 2013

சிவாஜி கணேசன் மிகை நடிப்பு கலைஞரா?- ஞாநி விளக்கம்

திரு ஞாநி அவர்கள் பொது மக்களுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பம் உள்ளவர்... வி ஐ பி முதல் சாமான்யன் வரை யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பேசக்கூடியவர்..  ஃபேஸ் புக்கில் அவர் முன் வைக்கும் கருத்துகள் , அதிலேயே முடங்கிப்போகக்கூடாது என்பதால் சிலவற்றை இங்கு பதிவேற்றுகிறேன்...


****************************************************************

        என் கேள்வி : முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலன் என்ற சொற்பிரயோகம் எனக்கு எப்போதுமே குழப்பம்தான் . நாம் காதலிக்கும் ஒருவரை காதலிப்பதை என்றாவது ஒரு நாள் நிறுத்துதல் சாத்தியமா ? காதல் என தவறாக நினைத்த உறவில் இருந்து வெளி வந்த பின் சம்பந்தப்பட்டவரை முன்னாள் காதலன் என்றோ காதலி என்றோ எப்படி சொல்வது ? It was never a love at all .







ஞாநி
இதில் ஒரு சிக்கலும் குழப்பமும் இல்லை. ஒரு காலகட்டத்தில் அன்பு காட்டியவர் மீது இன்னொரு காலகட்டத்தின் வெறுப்பே ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் அன்பு காட்டிய தருணத்தில் அது பொய் என்றோ இப்போதைய வெறுப்பு பொய் என்றோ அர்த்தமல்ல. அந்தந்த நேரத்தில அதுவே நிஜம், உண்மை. எனவே முன்னாள் நண்பர், முன்னாள் எதிரி போல முன்னாள் காதலரும் சாத்தியமே.

           செய்தி : 
அந்த காலத்தில் எல்லாம் முதல் நாளே படத்துக்கான வசனத்தை கொடுத்து விடுவார்கள் . இவன் (பாரதிராஜா) எனக்கு ஷுட்டிங் ஸ்பாட்டில்கூட வசனம் கொடுக்கவில்லை . கை வீசி நடங்க . அப்படி பாருங்க . எதுவும் பேசாதீங்க அப்படீனான் . என்னடா பண்றான் இவன் அப்படினு நெனச்சேன் . ஆனா படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன் - முதல் மரியாதை குறித்து சிவாஜி கணேசன்

அருண் வேந்தன் :சிவாஜி மீது சொல்லப்பட்ட மிகை நடிப்பு என்ற குறைபாட்டை தூக்கி எறிந்த படம்...பாரதிராஜாவும் மிகை நடிப்பு பிரியர்தான்...எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..


Kirubasankar Manoharan : .எப்படி இது நடந்தது என்பது புரியாத புதிர்..//எல்லா கலைவடிவத்திலும் இது போன்ற மிராக்கில் நடந்துகொண்டுதான் .இருக்கின்றன.. மோனோலிசா புகைப்படம் கூட அப்படி தானோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்...

ஞாநிஅந்தப் படம் மொத்தமாகவே ஒரு மிகை உணர்ச்சிப் படம்தான். வேறு படங்களில் சிவாஜி மட்டும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்போது மிகையாக தோன்றும். இதில் எல்லாமே மிகைப் பாத்திரங்கள். அதை யதார்த்தப்படம் என்று நம்பவைத்தது மட்டுமே பாரதிராஜாவுக்கு வெற்றி.இதே கதையை மகேந்திரன் கையாண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். உதிரிப்பூக்களில் விஜயன் பாத்திரத்தையும் அஸ்வினி பாத்திரத்தையும் அவர் கையாண்ட தொனி முதல் மரியாதையில் இருந்திருந்தால் அது நல்ல முயற்சி என்று சொல்லியிருக்கலாம். சிவாஜி நடிகராக தன்னை முழுக்கவும் இயக்குநருக்கு ஒப்புக் கொடுப்பவர். மிகை தோன்றினால் அதற்கு அவர்களே பொறுப்பு. துளியும் மிகை இன்றி சிவாஜி நடித்த பல படங்கள் உள்ளன.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா