Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Monday, December 16, 2024

ஈழ எழுத்தாளர் சாந்தன் சிறுகதை ஒன்று

ஈழ எழுத்தாளர்  சாந்தன் அவர்களது சிறுகதை தொகுதி ஒன்று படித்தேன்..

ஒவ்வொன்றும் அற்புதம்..


:சாந்தனின் உருவ அமைதி பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவருடடைய கதைகள் எங்கு முடியவேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத் திறன் அபூர்வமானது. இதுவே அவருடைய படைப்புக்கள் எழுத்துச் சிக்கனத்தோடு விளங்குவதற்குக் காரணமாகியுள்ளது. புனைகதையில் இதுவொரு விசேஷ சாதனை” என அசோகமித்திரன் சொல்வது உண்மை



தமிழர் சிங்களர் உறவு குறித்த இக்கதையைப் படித்துப்பாருங்கள்




 என் நண்பன் பெயர் நாணயக்கார... - சாந்தன் 


கொ ட்டாஞ்சேனையிலிருந்து, நாணயக்காரவும் நானும் கோட்டைக்குவந்தோம்.‘யாழ்தேவி யில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம் போட்டிருந்தான். வண்டி வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரத்திற்கு மேலிருந்தது.


"என்னடா செய்யலாம்?" என்றான் நாணா. எனக் கும் புரியவில்லை. இனி, எங்கள் அறைக்கு - பம்பலப்பிட்டிக் குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடியாத காரியம்.


"ஸ்ரேஷனடியிலை பேசிக்கொண்டிருக்கலாம்; வா. சாப்பிட்டு வருவோம்" என்றேன்.


சாப்பிட்டுவிட்டுத் திரும்பி 'ஸ்ரேஷ'னின் முன்னால் 'ஒல்கொட்' சிலையருகில் வந்த போது, நாணா மிக உற்சாக மாயிருந்தான். அவன் 'எடுத்த' அந்த 'ட்றாம்' அதற்குக் கார ணமாய் இருந்திருக்கக்கூடும். அவன் எப்போதுமே இப்படித் தான்; அளவுக்கு மேல் போகாது. அந்த ஆறடி உயரமும். அதற்கேற்ற ஆகிருதியுமான உடம்புமுள்ள நாணாவின் கம் பீரத்திற்கு இந்த 'மப்'பின் உசார் மேலும் பொலிவூட் டும். தீர்க்கமான மூக்கும், அதன் கீழ்க் 'கருகரு' மீசையு மாய் - ஒரு சாயலில் ராவணனைக் கற்பனை செய்து கொள் ளலாம்.


'ஏண்டா, ராவணா...' என்று செல்லமாக நான் அழைக்கும்போதெல்லாம் 'கட கட'வென்று அவன்  சிரிக் குந் தொனியில், 'மாத்தறை -யாழ்ப்பாண'மோ, அல்லது 'சீனா - தானா'வோ தலைநீட்ட முடியாத அளவுக்கு எமக் கிடையில் இறுகியிருந்த நட்பின் வைரந் தெரியும். கல்லூரி யில் ஒரே வகுப்பு. ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை. தவிர நாணா இப்போது என் 'ரூம் மேட்'.


"நிப்பமா? உள்ளுக்குப் போவமா?" என்றான்.


"இதிலையே கொஞ்சம் நிப்பம்


இன்னும் அரைமணி நேரம் இருந்தது.


ஒரே குளிர். பனி மூட்டங்களிடை வாகனங்களின் ஒளிக் கதிர்கள் பீச்சப்படுகையில் முப்பரிமாணமுள்ள குவி யமாகிற பரிணாமம்... உடலைச் சிலிர்க்க வைக்கிற காற்று.. அங்கொன்றும் இங்கொன்றுமான யந்திர ஒலிகள் இல்லா விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


"இவர்களையெல்லாம் பார்த்தாயா?" என்றான் நாணா, கீழே படுத்துக் கிடந்தவர்களைக் காட்டி


ஆண் - பெண் குழந்தை - கிழவர் என்று ஒரு 'மினி' உலகமே அங்கு -ஒல்கொட்' சிலையடியிலிருந்து 'ஸ்ரேஷன்' விறாந்தை வரை வியாபித்திருந்தது. நாணா கேட்டதுந் தான் அதைக் கவனித்தேன். இவ்வளவு நாளும் வருகிற போகிற போதெல்லாம் கண்டு கண்டு அது ஒரு சாதா ரண விஷயமாய்ப் போய்விட்ட காரணத்தால், அதைக் கவனிக்கவில்லை. நான்


"இவர்கள் இந்நாட்டு மக்களில்லையா?"- சிகரட்டை ஊதியபடி நாணா சேட்டான்.


நான் பேசவில்லை.


"...டேய், இவங்களுக்கு வேலைவேண்டாம், காக சாப்பாடு கொடுக்க வேண்டாம். ஒரு சாத்திரமாவது கட் டிப் போட்டா, இந்தப் பனியிலை இப்படிக் கிடக்கத் தேவையில்லையடா......"


ஆங்காங்கே தூவப்பட்டிருந்த அந்தக் கும்பலிடை, பலர் இன்னமுந் தூங்கவில்லை. நாணாவின் உரத்த பேச் சால் ஈர்க்கப்பட்டு, எங்களை அவதானித்தனர்.


"நீ சொல்றது சரிதான்; கொஞ்சம் மெதுவாகப் பேசு. எல்லாரும் பார்க்கிறார்கள்" என்றேன்.


உண்மையில் நாணாவின் துடிப்பு எனக்குப் புரிந்து தான் இருந்ததென்றாலும், இந்த இரண்டு 'மொட்டை யன்'களும் பேசி ஆகிற காரியமா இது?


நாணா பிறகு பேசாமலிருந்தான். இருவருமாக நடந்து போய் ஸ்ரேஷன் விறாந்தையில் நின்றோம். திரும்பு கையில் நுழை வாசலருகில் நின்றவர்களைக் கண்டதும் எனக்குத் திடுக்கிட்டது.


சிறில்!


இலேசான ஒரு குளிர் முள்ளந்தண்டில் ஓடுவது பால-'ராஜநாயகத்தைப் பார்த்துக்கொண்டிராமல், பேசாமல் அறைக்குப் போய் விட்டாலென்ன' என்று நினைத் தேன். 'என்னைக் கண்டால் என்ன செய்வானோ' என் கின்ற பயம் மேலோங்கிற்று. திரும்பி நாணாவை மெல்லத் தட்டுவதற்குள் - சிறில் என்னைக் கண்டு கொண்டான்!


அந்தப் பார்வை- அதிற் பின்னியிருந்த கொடூரம்... எனக்கு வியர்த்தது. நாணாவின் கரங்களை இறுகப் பற் றிக்கொண்டேன். சிறில், என்ன நினைத்தானோ, "விடு விடென்று ஸ்ரேஷனுக்குள் போய்விட்டான். ஆனால், எனக்கென்னவோ, அவன் சும்மாயிருப்பானென்று தோன்றவில்லை. நடுங்கிய கரங்களை உணர்ந்ததும், நாணா "என்னடா?" என்றான்.


"சிறில்..." - எனக்கு மேலே பேச வரவில்லை.


"எங்கே?" என்றவனின் கண்டத்திலிருந்து 'கட கட' வென்ற வெண்கலச் சிரிப்பொலி எழுந்தது. அந்தக் கம்பீரத்தில் - அதன் தைரியத்தில் - நான் சமநிலைக்கு வரு கையில், "வீணாகப் பயப்படாதே; நானிருக்கிறேன்" என் றான் நாணா.


வெளியே உறைத்த குளிர், இப்போது அதிகரித்தது போலொரு உணர்வு. சிறிலுக்கு நான் பயப்படுகிற கார ணம் - நாணாவும் அறிவான் -


ஓர் அபலைப் பெண்ணைப் பழிவாங்க இந்த சிறில் முன்பொருதரம் முயன்றபோது, என் தலையீட்டால் அவன் திட்டங்கள் கவிழ்ந்து -


அதன் விளைவாய் இந்த 'தெமலப்பய'லுக்கு ஒரு பாடங்கற்பிக்க முனைந்து அலையும் சிறில்......


எங்கள் சொந்தக் 'கொழுவ' லுக்கு ஒரு இனவாத முலாம் பூசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறான்!


நாணா உலுக்கினான்.


"என்னடா, இன்னுமா நடுக்கம்?'


நான் தலையாட்டினேன்.


ராஜநாயகம் வந்தாயிற்று. மூவரும் பஸ்தரிப்புக்கு வந்தோம்.


பஸ்ஸைப் பார்த்துக்கொண்டு நின்ற அலுப்பில் நேரம் ஊர்வது போலிருந்தது. பஸ்தரிப்பில் எங்களைவிட வேறெவருமில்லை. இரைந்தபடி குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்த 'டாக்ஸி'களும் மறைந்துவிட்டன.


பின் புறத்திலிருந்து ஒரு திரும்பினால் - செருமல் கேட்டது.


சிறில்! இன்னும் யாரோ இரண்டுபேருடன் நின்றான். "நாணா......" என்றேன். இதற்குள் சிறில் மிக அருகில் வந்துவிட்டான் - தமிழர்களைப் படுமோசமாகத் திட்டியபடி. அவனுக்கு நல்ல வெறி. "இண்டைக்கு நான் உன்னைக் கொன்றாலுஞ் சரி! ஆனா நீ என்னைத் தொட் டியோ, 'தமிழன் சிங்களவனை அடித்தா'னென்று நாளைக்கு கொழும்பே கலங்கும். கவனம்!" என்னைப் பார்த்துக் குழறினான். 


நாணயக்கார வாயிலிருந்த சிகரட்டை எறிந்த அடுத்த கணம் சிறிலின் சட்டை அவன் கையிலிருந்தது! '''சி'யைத் 'த' அடித்தால்தானே, பிழை? டேய் காவாலி! 'சி'யை 'சி'யே அடிக்கிறேன் - நானும் 'சி' நீயும் 'சி'! இனி எப்படி இனக்கலவரம் வரும்? எளிய ராஸ்கல்...... உன்ர அக்கிரமத்துக்கு அவன் துணை வரேல்லையெண்டு. இந்த வேலையா செய்யிறாய்?"--நாணாவின் வாய்ப்பேச்சு இவ்வளவு தான்.


அம்மூவரும் ' நிறைவெறி'யில் நின்றதால் என் நண் பனின் வேலை இலகுவாயிற்று. திகைப்பில் கரைந்த  நிமிடங்கள்…..


"இனி, இந்த வேலையை நினையாதே!" - விழுந் தவனுக்கு நாணாவின் குரல் அபயமளித்தது.


ராஜநாயகம் 'டாக்ஸி'க்கு கைதட்டினான்.

Sunday, September 4, 2016

அசோகமித்ரனின் பார்வை சிறுகதை - என் பார்வையில்


அன்றாடம் காணும் நிகழ்ச்சிகளைக்கூட மிக சிறப்பாக கதை ஆக்குபவர் அசோகமித்ரன்.. ஒரு வரியில் ஓர் அழகான சித்திரத்தை படைத்து விடுவார்....அவர் கதைகளில் எல்லாமே சிறப்பானவை என்றாலும் பார்வை எனும் சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும்..காரணம் இதன் எளிமைத்தன்மை.. இதன் உள்ளடக்கம்..

ஒரு பெண் சோப் பொடி விற்க வருகிறாள். பேச்சு வாக்கில் தன் சுயசரிதையை - ஏன் மதம் மாறினோம் என்பதை- சொல்கிறாள்.. அதன் பின் போய் விடுகிறாள்.. இதுதான் ” கதை சுருக்கம் “ ஆனால் கதை இந்த சுருக்கத்துள் சுருங்கி விடாமல் வானளவு விரிகிறது..

கதையின் ஆரம்பத்தில் அந்த பெண் அந்த வீட்டுக்குள் கதவை திறந்து வருகிறாள்..அந்த வீட்டுப்பையன் கதவை திறந்து வீட்டை விட்டு கிளம்புகிறான்.

இந்த இரண்டு வரிகளில் அந்த பெண்ணின் கேரக்டர் , அவள் குடும்ப பின்னணி. இந்த வீட்டின் தோற்றம் , இந்த வீட்டின் பொருளாதார நிலை , வீட்டினரின் மனப்போக்கு என பல விஷயங்கள் நமக்கு தெரிந்து விடுகின்றன.. அதுதான் அசோகமித்திரன்.

சோப்பு பொடி விற்பவள் என்பதால் அதைப்பற்றி சொல்கிறாள்.. ஆனால் வீட்டுக்கார பெண்ணுக்கோ பொதுவான விஷ்யங்கள் பேசவும் ஆசை. அந்த பெண்ணைப்பற்றி கேட்கவே அவள் பதில் சொல்கிறாள்.. பேச்சு வாக்கில் தன் குடும்பம் கிறிஸ்துவர்களாக மதம் மாறியதை சொல்கிறாள்... அதற்கான காரணத்தையும் சொல்கிறாள்.. அவள் தங்கைக்கு கண் பார்வை போய் விட்டது... இயேசுவை கும்பிட்டு சரியாகி விட்டது.

இன்னும் கொஞ்சம் பேசி விட்டு , ஒரு டெமோ காண்பித்து விட்டு அவள் கிளம்பிப்போகிறாள்... அவள் எப்படி வந்தாளோ அதேபோல கதவை ஓசையின்றி அடைத்து விட்டு செல்கிறாள்..

    எப்படி அந்த தங்கையின் பார்வை குடும்பத்தை மாற்றியதோ அதே போல ஆரம்பத்தில் அவள் மீது ஈடுபாடு இல்லாத பார்வை கொண்ட வீட்டுக்காரரின் பார்வை அவளைப்பற்றி தெரிந்ததும் மாறுகிறது என்பதை மறைந்து வருகிறது...ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அவள் பார்வை வேலையின்மீது மட்டுமே இருக்கிறது.. சகஜமாக பேசினாலும் அவள் பார்வை மாறவில்லை என்பதை அழகாக காட்டி இருப்பார்.. டெமோ பொடியை நான் பக்கத்து வீடுகளில் கொடுக்கிறேன் என்ற உதவி கிடைக்கிறது.அதாவது ஒரு தரப்பு பார்வை மாறி விட்டது. ஆனால் அவள் பார்வை மாறவில்லை/

    அவள் பார்வை என்பது குடும்பம் , வேலை என்பது..ஆனால் வீட்டுக்காரரின் பார்வை என்பது பொழுது போக்கு , அடுத்தவர் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் போன்றவை..

அவள் ஓசைப்படாமல் கதவை திறந்து வந்ததற்கும் , அந்த பையன் சத்தத்துடன் திறந்து போனதற்கான ஒப்பீடு நம் மனதில் தோன்றுகிறது. அதேபோல , வீட்டுக்காரரின் பெண்ணுக்கும் இவளுக்குமான ஒப்பீடும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.. இத்தனைக்கும் அந்த பெண் நேரடியாக கதையில் வருவதில்லை..குரல் மட்டுமே... இப்படி நாமும் கதையில் பங்கேற்று நம் பார்வைக்கும் இடம் கிடைக்கிறது.

    சின்ன சின்ன நுணுக்கங்கள் அபாரம்,உதாரணமாக , தான் மதம் மாறியதை அவள் சொல்கையில் , அடடா,, மாறாமல் இருந்திருக்கலாமே என அங்கலாய்க்கிறாள்  வீட்டுக்கார அம்மா..  உண்மையில் அவள் மாறினாலும் மாறாவிட்டாலும் இவளுக்கு ஒன்றும் இல்லை.. சும்மா வம்பிழுத்தல், பேச தூண்டுதல். இவள் கேள்விகளால் அவளுக்கு லேசாக எரிச்சல் வருவதும் பதிவாகி இருக்கிறது.


அசோகமித்ரன் சிறுகதை தொகுப்புகளில் இந்த கதை இருக்கும் தொகுதியாக பார்த்து வாங்கி படியுங்கள்




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா