Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Monday, August 1, 2022

கலைமகள் − ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதை பயிலரங்கு அனுபவம்

 கலைமகள்  மாத  இதழும்   ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம்  இதழும்  இணைந்து  சிறுகதைப்  பட்டறை  எனும் பயிலரங்கை  நடத்துகின்றன  என்ற செய்தி எனக்கு  சற்றே வியப்பளித்தது.

   ஆன்மிகம்  ,  ஞானத்தேடல் ,  சமூகத்தேடல்  என  பயணிக்கும்  ராமகிருஷ்ண மடம் ,   இலக்கியத்தில்  ஆர்வம் காட்டுவது சந்தோஷம் கலந்த  ஆச்சர்யம் அளித்தது

   இதில்  சுவாரஸ்யம்  என்னவென்றால் வேறு எங்கோ  போய்க்கொண்டிருப்பவர்கள்  தற்செயலாக நிகழ்ச்சி குறிந்து  அறிந்து  ,  சரி  போய்த்தான்  பார்ப்போமே என   கேஷுவலாக  வர முடியாது.

     ஒரு  மாதம் முன்பே  விண்ணப்பிக்க வேண்டும்   அதில்  தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே  நிகழ்ச்சிக்கான  அழைப்பு அனுப்பப்படும்

       ராமகிருஷ்ண மடத்தில்  ஏசி ஹாலில்  மிகச்சிறப்பான  ஏற்பாடுகளுடன்  நிகழ்ச்சி  நடந்தது

    இனிமையான   ஆன்மிக  சூழலில்  இலக்கிய  நிகழ்வு  .   பெயரை  பரிசோதித்தபின்னே   அனுமதித்தனர்  அழகான  விவேகானந்தர் படம்,  அவரது  நூல் ,  பயிற்சிக் குறிப்பேடு , பேனா அடங்கிய  பொதி  அனைவர்க்கும்  வழஙககப்பட்டது


ஶ்ரீராமகிருஷ்ணருக்கு ஆரத்தி காட்டி  மந்திரங்கள்  சொன்ன  பிறகு  நிகழ்ச்சி தொடங்கியது

    எழுத்தாளர்கள்  வித்யா சுப்ரமணியம்  மாலன்  ,  தேவிபாலா  ஆகியோர்  சிறுகதை எழுதும்  நுட்பம்  குறித்து  வகுப்பெடுத்தனர்.


   கலைமகள்  ஆசிரியர்  கீழாம்பூர் சங்கரமணியன்  அவர்கள்  பேசியதை  தொகுத்துக்கூறி  மனதில்  பதிய வைத்தார்

       ராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர்  சென்னை  ராமகிருஷ்ண மடத்தின்  மேலாளர் சுவாமி  தர்மிஷ்டானந்தர் ஆகிய  ஆன்மிகவாதி்களுடம்கூட   சிறுகதைகள் குறித்து  சில  நிமிடங்கள்  பேசியது  சிறப்பாக இருந்தது

     அனைத்துக்கும்  சிகரமாக , உலகளாவிய  ராமகிருஷ்ண  மடங்களின்  துணைத்தலைவரான ஶ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ்  அவர்களும்  அழகாக  ஆனால்  சுருக்கமாக  சிறுகதை குறித்த  தனது  நேரடி  அனுபவத்தை  பகிர்ந்து  கொண்டார்








       தனது  சிறுவயதில்  சிறுகதைப்போட்டி  ஒன்றில்  கலந்து  கொண்டு பரிசு பெற்றதை அவர் சொன்னது  சுவாரஸ்யம்.  ஒரு விஷயத்தை  சிறுகதை  போல  சொல்லும் தன் பாணி  பலரை  ஈர்த்து  வருகிறது  எனக்குறிப்பிட்டார்.    

         பேச்சுவாக்கில்  ஒரு  சிறுவனுடனான  ஒரு  அனுபவத்தை  ஆன்மிக  கருத்தை  வலியுறுத்துவதற்காக சொன்னார்.  அது  பிறகு மாலன்  தன்  பேச்சில் குறிப்பிட்ட  சிறுகதை பஞ்சாங்கத்துக்கு  முற்றிலும்  ஒத்துப் போனது..

  வரவேற்புரையாற்றிய சுவாமி அபவர்கானந்தர்  (  ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்  ஆசிரியர் )   தமிழ்ச் சிறுகதை வரலாற்றை  சுருக்கமாக பேசினார்

    செய்திகளை  மட்டுமே  வெளியிட்டுக் கொண்டு  இருந்த  அன்றைய  சூழலில்  பாரதியார்  தனது  சுதேசமித்ரன் இதழில் சிறுகதைகளுக்கு  இடமளித்து   தமிழில்  சிறுகதை  கலையை  ஆரம்பித்து  வைத்ததை  சொன்னார்  மாதவையா வவேசு  ஐயர் டிஎஸ்  சொக்கலிங்கம்  சிசுசெல்லப்பா  ராமையா  கநாசு  மெளனி என சிறுகதையை  வளர்த்த  முன்னோடிகளைப்பற்றியும்  சுஜாதா  சுரா  போன்றோர்  பார்வை  மணிக்கொடி காலகட்டம் என விரிவாக  பேசினார்;

சுருக்கம் , சுவை  , உணர்ச்சி/ நெகிழ்ச்சி வாசகனின் சிந்தனையை  தூண்டல்  போன்ற  சிறுகதைக்கு  தேவையான  அம்சங்கள்  குறித்துப்  பேசினார்.

  சிறுகதை  ஆசிரியனிடம்  ஆரம்பிக்கும்  சிந்தனை  வாசகனிடம்  தொடரும்படி எழுதப்படுவதே நல்ல  சிறுகதை என்றார்


அதன்பிறகு  பேசிய கீழாம்பூர்  சங்கரமணியன் சிறுகதைப்பட்டறையின்  தேவை  குறித்தும்  அதை  கலைமகள்  தொடர்ந்து  நடத்த நினைத்திருப்பதையும்  சொன்னார்.  தரமணியல்  தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து  முதல்,நிகழ்வு நடந்ததையும் இது,இரண்டாவது  நிகழ்வு என்பதையும் குறிப்பிட்டார்.

     உவேசா  ,   கிவாஜ  ஆகியோர்  வழியில்  கலைமகள்  இதழ்  தொடர்ந்து  தமிழ்ப்பணி ஆற்றும்  என்றார்


பிறகு  பேச வந்தவர்  எழுத்தாளர்  பாரதி சந்துரு


சிறுகதைகளின்  அவசியம்  குறித்துப்பேசினார்..  சிறுகதை  சமகாலப்பிரச்சளைப்  பேசுகிறது  அதிலிருந்து ,மீளும்  ஊன்று கோலாகவும்  சிறுகதைகள் உள்ளன என்றார்;

உதாரணமாக  சூடாமணி எழுதிய  அக்கா என்ற  சிறுகதை.


அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள்

தனக்கு குழந்தை இல்லாத  சோகத்தை காட்டிக்  கொள்ளாமல்  தங்கையின் குழந்தையை  அன்பாக  கவனித்துக்கொள்கிறாள்.   அந்தக்குழந்தையும்  பெரியம்மா மீது  பாசமாக  இருக்கிறது  ,தங்கையும்  அன்பானவள்தான்

ஒரு  நாள்அவள் தங்கை வாய்தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.

அக்கா  மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்

பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘

“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.

     ஒரு  வார்த்தை  உலகத்தையே  நரகமென  எண்ணவைக்கிறது  இன்னொரு  வார்த்தை  வாழ்வை  சொர்க்கமெனக் காட்டுகிறது   சூழல்கள்  மனிதர்கள் என  அனைத்தும்   கணம்தோறும் மாறும்  மாயத்தைச்  சொல்கிறது  கதை


சீசர்  என்ற  ஜெயகாந்தனின்  கதையை  அடுத்தபடியாக  பேசினார்

    ஜெயகாந்தனுக்கே உரிய  டிராமாட்டிக்  உச்சம்  கொண்ட     கதை  இது

    வாடகைக்கு  குடியிருக்கும் குடும்பத்தினர் நிறைந்த  ஒரு குடியிருப்பு  ஹவுஸ்  ஓனர் மகனின்  பார்வையில் நகரும்  கதை

       ஏன்  ஹவுஸ்  ஓனர்  பையனின்  பார்வை  என்றால்  அதுதான்  கதையை  இன்னும்  நெருக்கமாக்குகிறது.  பெரிய  அளவு  தீமையோ   பெரியஹீரோயிசமோ  செய்ய  முடியாத  ஒரு  சாட்சி  மட்டும்தான்  அவன்

          தமது  வீட்டில்  குடியிருக்கும்  ஒரு பெண்ணின் ஒழுக்கம்மீது   அபாண்டமாக  பழி  சுமத்தி ,  அவளது  கணவனை  அழைத்து வரச்சொல்கிறார் − ஆணையிடுகிறார் − ஹவுஸ் ஓனர். மற்ற குடித்தனக்காரர்கள்  எல்லாம்  சுவையான  மெகாசீரியலை  ரசிப்பது போல  அந்தப்பெண்ணின்  கதறலை  ரசித்தபடி  கள்ள  மெளனம் சாதிக்கின்றர்.

     


 மகன்  ஓடிப்போய்  கணவனை   அழைத்து  வருகிறான்.    கணவர் அமைதியாக  வந்து  என்ன  பிரச்சனை  என  விசாரிக்கிறார்.    என்  மனைவி  மீது  எனக்கு  நம்பிக்கை  இருக்கிறது   அனைவரும்  அவரவர்  வாழ்க்கைத்துணையை   நம்புங்கள்.  பிறர்  வாழ்வை  எட்டிப்பார்க்காதீர்கள்  என கம்பீரமாக  கூறுகிறார்.

     வேறு  வீட்டுக்குப்போய்விடலாம்  இது  மோசமான   மனிதர்கள்  வாழும்  இடம்  என்கிறாள்  மனைவி

    உலகம்  இப்படித்தான் இருக்கும்   பயந்தால்  வாழ  முடியாது என  ஆதரவாகப்பேசுகிறார்  கணவர்;

       சீசரின்  மனைவி  சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு  வாழ  வேண்டும்  என  பெண்களுக்கு  அட்வைஸ்  சொல்லாமல்  ஒரு, மன்னனுக்கு  உரிய  வீரம்  அமைதி  கண்ணியத்துடன்  பிரச்சனையை  சந்தித்த  அக்கணவன்  அந்த  இளைஞன் பார்வையில்  பேரரசர்  சீசராக  தோன்றுவதாக  கதை  முடிகிறது

    வாழ்க்கை  குறித்து  இப்படி  மேன்மையான  பார்வைகள்  உருவாக  சிறுகதைகள்  அவசியம்  என்று  பேசினார் பாரதி  சந்துரு


சிறுகதைகளை  எப்படி  வடிவமைப்பது 

சிறுகதைகளின்  வடிவங்கள் குறித்து வித்யா சுப்ரமணியம்  பேசினார்

           ராமகிருஷ்ண  மட நுாலகம்தான் தன்னை  நல்ல தொரு  வாசகியாக்கியது   நல்ல  வாசகன்தான்   நல்ல  எழுத்தாளன்  ஆக  முடியும்  என பேச்சை  ஆரம்பித்தார்

         திஜா எழுதிய  அம்மா  வந்தாள்  நாவல்தான்  எழுதத்துாண்டும்  உத்வேகம்  அளித்தது   என்றார்

     தானே  சொல்வது  போல  எழுதுதல்  ,  பல்வேறு  கதாபாத்திரங்கள்  சொல்வது போல எழுதுதல் ,   குளம்  மரம்  ஆகியவை  சொல்வதுபோல  எழுதுதல்  என   எப்படியும்  எழுதலாம்

    உருவகக்கதைகளும்  எழுதலாம்

ஆற்றங்கரை  பிள்ளையாரை  பாரததேசமாக  உருவகித்து  புதுமைப்பித்தன் ஒரு  கதை   எழுதியிருக்கிறார்    அந்த  பாதிப்பில்  நான்  எழுதிய  கதைதான்  "என்று தணியும்"  என்ற  கதை

       எளிய  விஷயங்களைக்கூட சிறுகதையாக்கலாம்     ஒரு  சிறுவன்  ரிக்ஷா  என்பதை  மழலை  மொழியில்  ரிஸ்கா என்பதை  சுவைபடக்கதை ஆக்கியிருக்கிறார்   அசோகமித்திரன்


அதேபோல  மிகப்பெரிய  துயரங்களை  இழப்புகளை   கதையாக்கலாம்    நான்  அப்படி  எழுதிய  கதை  ஒன்று  மிகப்பெரிய  புகழை  எனக்கு  ஈட்டித்தந்தது 

சிறுகதை  அதன் முதல் வரிக்கு முன்பே  ஆரம்பித்து  விட வேண்டும்   கடைசி வரிக்கு  பின்பும்  தொடர வேண்டும் என்றார்

அந்தக்கதைக்கு   அடிப்படையாக  அமைந்த  தனது  சோகத்தை   அவர்  சொன்னபோது  பலர்  கண்கள்  கலங்கின  அவர்  அதை   சொன்ன விதமும்  ஒரு  சிறுகதை   போல  இருந்தது


சிறுகதை எழுதும்போது  கவனிக்க  வேண்டியவை  குறித்து  தேவிபாலா  பேசினார்


தலைப்பிலேயே  பதில்  இருக்கிறது.  சிறுகதை  எழுதவேண்டுமானால்  கவனிக்கப்பழகுங்கள். சகமனிதர்களை  , சம்பவங்களை  கவனியுங்கள.   சும்மா  பார்ப்பது  அல்ல  கூர்மையான  கவனிப்பு தேவை

    எனது  முதல் சிறுகதை  கலைமகள் இதழில்  வெளியானது    அந்தவகையில்  கலைமகள்தான்  என்  தாய்வீடு

       சுமங்கலி பிரார்த்தனை  என்பது  அக்கதையின்  பெயர்.

    விகடன்  ஆசிரியர்  பாலசுப்ரமணியன்  அடிக்கடி  சொல்வார்      கண்ணையும் காதையும்  திறந்து  வைத்தால்  ஆயிரம்  கதைகள்  கிடைக்கும்;

   பேருந்துப்பயணத்தின்   போது   ஜன்னல்  வழியே  நான்  கண்ட  ஒரு  காட்சி − மடிசார்  அணிந்து ஒரு, பெண்  அதிவேகமாக ஸ்கூட்டரில்  பறந்த  ஒரு  காட்சி  − என் மனதில்  விதையாக  விழுந்து மடிசார்  மாமி  என்ற  புகழ்பெற்ற நாவல்  ஆனது

      எனவேதான் வாகன  வசதிகள்  வந்துவிட்ட பின்பும்கூட  பேருந்துகளில்  பயணிக்கிறேன்

    ஜவுளிக்கடை   உணவகங்கள்  என  எங்கும்  கதைகள்   கிடைக்கும்

   சின்னச்சின்ன  உணர்வுகளை  சின்னசின்ன  வாக்கியங்களில்  எழுதிப்பழகுங்கள்

        ஒரு  இளம்பெண்    நடந்து  கொண்டு  இருந்தாள்   நல்ல  மழை  பெய்து  கொண்டிருந்தது.  நனைந்துவிடாமல்  குடைபிடித்தபடி  போய்க்கொண்டிருந்தாள்

     இப்படி  எழுதாதீர்கள்

    குடைபிடித்தபடி  சென்று கொண்டிருந்த அவளுக்கு...     என  ஆரம்பித்து  அடுத்தடுத்து  செல்லுங்கள்

      குடை  அவள்   ஆகிய   இரு  சொற்கள்மூலம்  மழையையும்  ஒரு  பெண்  என்பதையும்  உணர்த்திவிட முடியும்

       ஊசி  போல   நறுக் என  மனதில்  பதிய  வேண்டும்

       ஆரம்பம்  முக்கியம்

    கோலம்  போட வாசலுக்கு  வந்தபோது , படமெடுத்து  ஆ டிக்கொண்டு  இருந்தது பாம்பு  என அதிரடியாய்  ஆரம்பியுங்கள்

அதேமாதிரி  முடிவிலும் ஒரு  பஞ்ச்  தேவை


வட்டார  பாஷை  வேண்டாம்  பொதுவான  தமிழில்  எழுதுங்கள்

வட்டார பாஷை தேவைதான்  ஆனால்  ஆரம்பகட்டத்தில்  வேண்டாம்

    தற்போது   பெண்கள்தான்   அதிகம்,,வாசிக்கின்றனர்  எனவே அவர்கள்  பிரச்சனைகளை  எழுதுங்கள்

  பெண்களால்  ஆனதுதான்  குடும்பம்  குடும்பங்கள்  சேர்ந்து  வீதி வீதிகள்  சேர்ந்தது  ஊர்     ஊர்கள் சேர்ந்ததுதான்  தேசம்  மற்றும் உலகம்

    என்னைப்பொருத்தவரை  திருவள்ளுவரை  மிகச்சிறந்த  சிறுகதை  ஆசிரியர்  என்பேன்.   எத்தனை  எத்தனை  கருத்துகள்   உவமைகள்

        அவசரமாக  கதை   வேண்டும்  என   பத்திரிக்கைகள்  கேட்டால்  உடனே  திருக்குறளைப்  புரட்டுவேன்

எந்தக்குறள்  கண்களில் படுகிறதோ அதை வைத்து  கதை  எழுதிவிடுவேன்

கனவுகளை   குறித்து  வைப்பது   நல்லது   சில  கனவுகள்  மறந்ததுபோல இருக்கும். யோசித்தால்  நினைவுக்கு  வந்து  விடும்.    குறித்து   வைத்தால்  கதை  எழுத  வித்தியாசமான   கருக்கள் கிடைக்கும்

        சின்னசின்னக்காட்சிகள்கூட சிறுகதைகளுக்கான  பொறிகளாக அமையலாம் 


ஒரு  வீட்டின் முன்  ஒரு,  ஜோடி செருப்புகள் கிடந்ததைக்கண்டேன்.


அவ்வளவுதான்    பத்திரிக்கையுலக பிதாமகன்  சாவி  அவர்கள்  பாராட்டி  தலைப்பிட்டு  (  தலைப்பு  வாசலில்  செருப்புகள்)  பிரசுரிக்கத்தக்க  ஒரு   கதை  தயாராகி விட்டது

      அந்த  கதை  இதுதான்

ஒரு  கணவன்  மனைவி..   கணவன்  மீது அளப்பரிய  அன்பும்  நம்பிக்கையும் கொண்ட  மனைவி.    

ஒரு  நாள்  கணவன்  அலுவலகம்  சென்ற பிறகு  இவள்  ஒரு   வேலையாக  வெளியே செல்கிறாள்.  அங்கே  ஒரு   பாலியல்  தொழில் நடக்கும்  வீட்டைக்கடக்கும்போது    செம   அதிர்ச்சி

கணவனின்  செருப்புகள் அவ்வீட்டு வாசலில்  கிடக்கின்றன

    அவன் மீதான  நம்பிக்கை  சுக்குநூறாக சிதறுகிறது    கண்ணீருடன்   வீடு  திரும்புகிறாள்

    இது  எதுவும்  அறியாத   கணவன் வழக்கம்போல   மாலையில்  வீட்டுக்கு வருகிறான்.    வந்தவன்  அதிர்ச்சியில் உறைகிறான்

   தாழிடப்பட்ட  அவன்வீட்டு  வாசலில் யாரோ ஒரு   ஆடவனின்  ஒரு  ஜோடி  செருப்புகள்

இந்தக்கதை   நல்ல   வரவேற்பைப்பெற்றது

என்ன  ட்விஸ்ட் என்றால்   தங்கள்  வாழ்வில்  நடந்த சம்பவத்தை  கதையாக  எழுதிவிட்டதாக   பக்கத்து வீட்டுக்காரர்கள்  சண்டைக்கு  வந்து விட்டார்கள்  (  அரங்கில்  பலத்த  சிரிப்பு )  கற்பனைக்கதை  என  சொன்னாலும்  நீண்ட  நாட்கள் என்னுடன்  பேசுவதையே  நிறுத்தி  விட்டார்கள்


        வர்ணனைகள்  அதிகம்  வேண்டாம்.  போதனைகளும்  வேண்டாம்

       ஒரு  பாத்திரத்தின்  குணாதிசயங்களை  தெளிவுற   வரையறுத்து விட்டால் ,  பல்வேறு  குணாதிசங்கள்  கொண்ட  பாத்திரங்களே கதையை எழுதி விடும்

நறுக்  என  சுருக்கமாக  சொல்லும்கலை  முக்கியம்  .   ஏழே வரிகளில்  ராமாயணம் ,  மகாபாரதத்தை  சொல்லி  வியப்பிவ்  ஆழ்த்தியவர்  கண்ணதாசன்


வரவு  எட்டணா  ,  செலவு பத்தணா ,  அதிகம் ரெண்டணா    கடைசியில்  துண்டனா  என ,படத்தின்  கதையை  பாடலின் சில  வரிகளில்  சொன்னதுபோல  கதையின்  முதல்  வாக்கியத்திலேயே  கதையை  சொல்லலாம்


ஒரு முறை   ஒரே  வார்த்தையில்  "கதை  எழுதச்சொன்னார்கள்

எழுதினேன்


கதை  :  ஐயோ


அவ்வளவுதான்  கதை..    பிறகு  விளக்கினேன்


(   அவரது  விளக்கம் ,    கதை  எழுத  தேவையான   பஞ்சாங்கம்  குறித்து  மாலன்  பேச்சு ,   கல்கி  குறித்த  சுவாரஸ்யம் ,    கெளதமானந்தர்  சொன்ன   கதை  ,   வித்யா  சுப்ரமண்யம் பகிர்ந்த "அவரது  கணவரின்  மறைவுச்  செய்தி    அடுத்த  பதிவில்)


இதன் தொடர்ச்சி












  




         



Wednesday, July 15, 2020

நாயன்மாரை புகழ்ந்து பாடிய ஆழ்வார் - ஆன்மிக வினோதம்

 நாயன்மார்கள் என்பவர்கள் சிவ பக்தர்கள் ..

ஆழ்வார்கள் விஷ்ணு பக்தர்கள்

இன்று இரண்டுமே இந்து மதம் என ஒன்றாகி விட்டாலும் , அந்த காலத்தில் சிவமும் வைணவமும் தனித்தனியாக இயங்கின..

இப்படி ஒரு சூழலில் , நாயன்மார்களில் ஒருவர் குறித்து ஆழ்வார் ஒருவர் பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ( எனக்கு ஆச்சர்யமாக இருந்தது)

கோச்செங்கட்  சோழ நாயனார்..

இவர் சோழ அரசனாக இருந்தவர்...

இவர் பிறப்பே ஆச்சர்யமானது...இவரை கருவில் சுமந்திருந்தபோது , ஒரு ரிஷி இவர் தாயாரிடம் ( அவர் சோழ அரசி ) நான் குறிப்பிடும் நேரத்தில் குழந்தை பிறந்தால் , குழந்தை புகழ் பெற்ற அரசனாக வாழ்வான். கடைசியில் இறைவனையும் அடைவான் .. என நேரம் குறித்து கொடுத்தார்

        அந்த அரசிக்கு  அந்த நேரம் வருவதற்கு சில நாழிகைகள் முன்பாகவே பிரசவ வலி ஏற்பட்டது.. குழந்தை பிறப்பதை தாமதப்படுத்துங்கள். என்னை தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள் என தன் தாதியர்க்கு ஆணையிட்டாள் மகாராணி..

         இப்படி குழந்தை பிறப்பு தாமதமாக்கப்பட்டு , உரிய நேரத்தில் குழந்தை பிறந்தது.. இப்படி ஒரு கடுமையான சூழலுக்கு தன்னை உட்படுத்திய அரசி மரணம் அடைந்தாள்

பிறந்த குழந்தைக்கு கண்கள் சிவப்பாக இருந்தன.. எனவே கோ செங்கண்ணன் என பெயரிடப்பட்டது

தெய்வ அருளால் பிறந்த குழந்தை என்பதால் , வெற்றி மீது வெற்றி பெற்றான்.. புற நானூறில் இவனது வெற்றி பதிவாகியுள்ளது


உலகியலில் வெற்றிகளை குவித்த இவனுக்கு ஆன்மிக வெற்றியைத்தர இறை முடிவு செய்தது

வெற்றிகளையே குவித்த இவன் ஒரு போரில் தோல்வியுற்றான்..

தோல்வியில் துவண்டு போய் இருந்த அவனை , ஒரு ரிஷி சந்தித்தார்

“  நான் தான் உன் தாய்க்கு நேரம் குறித்து கொடுத்தவன்.. நீலகண்டன் என் பெயர்.. நீ விஷ்ணுவை நோக்கி தவம் செய்.. ஒரு திருப்பத்தை காண்பாய் “ என்றார்

திரு நரையூர் என்ற இடத்தில் தவம் செய்து விஷ்ணுவிடம் இருந்து ஒரு தெய்வ வாளை வரமாக பெற்றான்.  அந்த வாள் அவனுக்கு வெற்றி அளித்தது.  தோற்கடித்த மன்னனை வீழ்த்தினான்


அந்த ஊரில் விஷ்ணுக்கு ஆலயம் எழுப்பினான்


 நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை  அவனுக்கு அந்த சம்பவம் உணர்த்தியது.ஒரு நன்றிக்காக விஷ்ணு ஆலயம் கட்டினாலும் அவன் மனம் ஏனோ வைணவத்தில் லயிக்கவில்லை

அப்போது மீண்டும் அந்த ரிஷி வந்தார்

இறை என்பதன் எல்லா வடிவமும் ஒன்றுதான் என்பதை அறிவுறுத்தவே உன்னை விஷ்ணுவை வழிபடச்செய்தேன்
உண்மையில் நீ சிவ அம்சம்..  சிவ கணங்களில் ஒருவனாக இருந்தாய்.. இன்னொரு சிவ கணத்துடன் , பக்தியில் சிறந்தவன் யார் என்ற மோதல் ஏற்பட்டது.. இதனால் சிவன் உங்களை பூமியில் பிறக்க வைத்தார்


நீ சிலந்தியாகவும் அவன் யானையாகவும் பிறந்தீர்கள்


சோழ நாட்டில் ஒரு சிவலிங்கத்தை அந்த யானை தன் துதிக்கையில் ஏந்தி வந்து அர்ச்சித்து வழிபட்டது...  அதை அறியாமல் சிலந்தி தன் வாயில் சுரக்கும் நூலால் அலங்காரம் செய்து வழிபட்டது

சிவலிங்கத்தில் சிலந்திக்கூடு கட்டும் சிலந்தி மீது யானைக்கும் , லிங்கம் மீது வாய் கொப்பளிக்கும் யானை மீது சிலந்திக்கும் கடும் கோபம்.. சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து இம்சித்தது. வலி தாங்கவொண்ணா யானை , தும்பிக்கையை கோபமாக பாறையில் அடித்தது.. விளைவாக இரண்டுமே இறந்தன

யானைக்கு இறைவன் முக்தி அளித்தான்.. சிலந்தியை மன்னனாக பிறக்க வைத்துள்ளான்

இதுதான் உன் கதை என்றார் அவர்

இதைக்கேட்டதும்தான் தன் மனம் ஏன் இறையை நாடினாலும் , வைணவத்தின்பால் செல்லவில்லை என புரிந்து கொண்டான்..

ஏற்கனவே சில ஆலயங்கள் அமைத்து இருந்தாலும் , அதன் பின் முழு வீச்சாக ஆலயங்கள் அமைத்தார் அவர் .. எழுபதுக்கும் மேல் ஆலயஙகள் எழுப்பி கடைசியில் இறைவனடி சேர்ந்தார்..  கோச் செங்கட் சோழ நாயனார் என ஆலயங்களில் வீற்றிருப்பார்.. அடுத்த முறை கவனியுங்கள்


இவர் அமைத்த திரு நரையூர் பெருமாள் கோயிலைப்பற்றி திருமங்கை ஆழ்வார் ஏராளமாக பாடியுள்ளார்

கோச் செங்கட் சோழ நாயனாரைப் பற்றியும் கடவுளிடம் இருந்து வாள் பெற்றதையும் , அவர் சிவனுக்கு கோயில்கள் கட்டியதையும் பாடியுள்ளார்

இப்படியாக , நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வைணவ நூலில் சிவனும் , சிவனடியாரும் இடம் பெற்ற அபூர்வ நிகழ்வு நடந்தேறியது


திருமங்கை ஆழ்வாரின் எல்லா பாடல்களும் தமிழ்ச்சுவை மிக்கவை..

விளக்கம் தேவையில்லாத இப்பாடலைப் பாருங்கள்


அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.


இப்படி அனைத்தையும் சொல்வதை விட  , இந்த கட்டுரை சம்பந்தமான ஒரு பாடலை பார்த்து முடித்துக்கொள்வோம்

பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


கடலையே ஆடையாகவும் , பூமியை திருவடிகளாகவும் , வாயு மண்டலத்தை உடலாகவும் , பேரண்டத்தை தலையாகவும் கொண்டுள்ள பிரமாண்டமான இறை சக்தியை உணர விரும்புகிறீர்களா?

ஆரவாரமாக படை பலத்துடன் எதிர்த்து வந்த மன்னர்களை தெய்வ வாள் துணை கொண்டு வீழ்த்திய சோழ மன்னன் உருவாக்கிய திரு நரையூர் ஆலயம் வாருங்கள்  , அங்கு உறையும் இறையை இறைஞ்சுங்கள்


முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


மலர் போலும் கனி போலும் சிவந்த இதழ்களைக்கொண்ட நப்பின்னை தாயாரின் கணவனும் , நெறி மீறும் அரசர்களின் சிரம் அறுக்கும் திறன் உடையவனுமான பெருமாளின் திருவடிகளை உங்கள் தலையில் சூட விருப்பமா?

வேதம் ஓதுகின்ற சிவனுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அமைத்த சோழன் கட்டிய ஆலயத்தை வந்தடையுங்கள்












Monday, May 18, 2020

சகதேவனின் கொடை


மகாபாரதத்தில் சகதேவன் பாத்திரம் அனைவராலும் மதிக்கப்படும் கேரக்டராகும்

பீமனுக்கும் துரியோதனுக்கும் நடந்த இறுதி போரில் அதற்கு நடுவராக துரியோதனன் நியமித்தது சகதேவனை..

அவனைப்பற்றி இன்னொரு செய்தியை தருகிறார் காஞ்சிப் பெரியவர்

மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மரிடம்

தர்மர் சில கேள்விகள் கேட்கிறார்

வாழ்வையும் ஜெயிக்க வேண்டும். வாழ்விலும் ஜெயிக்க வேண்டும் . அதற்கு என்ன வழி.    யார் முழு முதல் கடவுள்.  தலை சிறந்த,தர்மம் எது

இந்த கேள்விகளுக்கு பீஷ்மர்அழகுற பதில் சொன்னார்

பதிலில் இருந்த சொல் அழகிலும் பொருளிலும் மயங்கி அனைவரும் மெய்மறந்து கேட்டனர்

சொல்லி முடித்து பீஷ்மர் கண் மூடியதும்தான் , அவர் சொன்னதை குறித்து வைக்கவில்லையே என தர்மர் உணர்ந்து பதறினார்

அவர் சொன்னதை மீட்டெடுக்க கிருஷ்ணரிடம் இறைஞ்சினார்

அதை மீட்டெடுக்க சகதேவனால் மட்டுமே முடியும். சிவ பக்தனான அவன் அணிநகதுள்ள ஸ்படிக மாலையில் பீஷ்மர சொன்ன மந்திரங்கள் கிரகிக்கப்பட்டு இருக்கும்
அவன் சிவனை தியானித்து, அந்த மந்திரத்தை மீட்டெடுத்து வியாசரிடம் சொல்லட்டும் அவர் அதனை எழுதட்டும் என்றார்

அப்படி கிடைத்ததுதான் விஷ்ணு சஹஸ்ரநாமம்


Saturday, March 28, 2020

இயற்கை மீது நம் தாக்குதலும் அதன் பதிலடியும்


சாலைகளில் வாகனங்கள் குறைவு,,பறவைகளின் சிறகடிப்புக்கூட துல்லியமாய்க் கேட்கிறது. தூசி குறைந்து விட்டது

இயற்கையை எப்படியெல்லாம் கதறகதற சீரழித்திருக்கிறோம் என புரிகிறது

இயற்கையிடம் மன்னிப்புக்,கேட்க வேண்டிய நேரமிது

இயற்கையை ஒரு மனிதனாக தெய்வமாக உருவகப்படுத்தினால் மன்னிப்புக் கேட்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

 சினம் கொண்ட ருத்ரனாக உருவகப்படுநாத்திக் கொள்ள விரும்புவோரக்கு ருத்ரம் ஸ்லோகங்களின் ஒரு பகுதி ..,படியுங்கள்;
.......
ருத்ரனே வணங்குகிறேன்.பகைவர்களை இரக்கமின்றி,அழிப்பவன் நீ
ன் கோபத்தில் இருந்து எங்களைக் காக்க அன்னையை இறைஞ்சுகிறோம்
கருணைமிகு சிவனே. உம் சினத்தை எம்மீது காட்டாதீர்
நாங்கள் செய்த பிழைகள் மன்னிக்கப்படட்டும்
எம்மை அழிக்க வரும் அம்புகளை,உம் வலிய"கரத்தால் தடுப்பீராக
நல்லவர்கள் அழியக்கூடாது

வலிய பாம்பு தன் எதிரிகளை அழிப்பதுபோல எமைத்தாக்க வரும் வியாதிகளை அழிப்பீராக

எதிரிகள் மீது பாயும் உம் அம்புகள் ஒரு ஃப்ளோவில் எம்மீது பாய்ந்துவிடாமல் காப்பீராக

.....

நுண்ணுயிர்கள் இன்றி,நாம் இல்லை நமது கொடுமைகளால் அவை நமக்கு எதிராக திரும்பியுள்ளன

இயற்கைதான் மிகப்பெரிய வைத்தியன். அதை நம் எதிரியாக்கி நம் குழந்தைகளை மரண வரிசையில் நிறுத்திய கொலைகாரர்களாக இருக்கிறோம்

இந்த சவாலான கால கட்டத்தை நெஞ்சுரத்துடன் சமாளிப்பது உடனடி தேவை. கற்றபாடத்தை மறக்காதிருத்தல் நிரந்தர தேவை









Thursday, February 13, 2020

புத்தர் குறித்த புதிய வெளிச்சம் . புத்தக பார்வை

நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை
 நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
 நடுவு நின்றார் நல்ல தேவருமாவார்
 நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே'

என்கிறார் திருமூலர்

வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொள் என்கிறது கீதை

புத்தத்தின் வெகு ஆதாரமான கோட்பாடு இந்த நடுநிலைதான்.

இதை அ. மாரக்ஸ் எப்படி விளக்கப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவரது புத்தம் சரணம் நூலைப் படிக்க ஆரம்பித்தேன்

கீதை , சைவ சித்தாந்தம் , வைஷ்ணவம் போன்றவற்றிலும் புத்தத்திலும் இருக்கும் பொது அம்சங்களை அவர் எழுதினால் ஏமாற்றமாக இருக்கும். காரணம் , அப்படி எழுத அவர் தேவையில்லை , இந்து மதம் என்பது பார்ப்பன மதம் , தீங்கான மதம் என்பது,அவர் வாழ்நாள் முழுக்க சொல்லிவரும் விஷயம். அதிலிருந்து அவர் பிறழ முடியாது.

இந்து மதத்தை முழுக்க முழுக்க திட்டிவிட்டு புத்தத்தை வானளவு புகழ்ந்தால் நடுநிலை என்பது அடிபடும். இதை எப்படி கையாள்வார் என படிக்க ஆரம்பித்தால் சுவையான ட்விஸ்ட்;
தன் கொள்கைக்கு பாதிப்பின்றி நடுநிலையை காப்பாற்றியுள்ளார்

புத்தம் எப்படி எல்லாம் இந்து மதத்தில் இருந்தும் மற்ற மதங்களில் இருந்தும் வேறுபடுகிறது என விளக்குகிறார்

இந்து மதத்தின் குறைகளாக , கீதையின் குறைகளாக தன் புரிதல்களைச் சொல்கிறார்

அதனோடு சேர்த்து , பவுத்தம் செய்த சமரசங்களையும் சொல்வதுதான் அவரது அறிவு நாணயம். வெகு அழகு

புத்தர் உட்பட பலரும் புலால் உண்பவர்கள் என்ற தகவல் பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம்

எல்லோருள்ளும் உறைவது ஆன்மாதான் , எனவே அன்பு செலுத்து என்ற வாதத்தைவிட உனக்கு ஒரு சுயம் இருப்பதுபோல பிறருக்கும் இருக்கிறது. எனவே உன்னை பிறர் எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறாயோ அப்படி பிறரை நடத்து என சொல்வதுதான் அறிவுப்பூர்வமான செயலாக இருக்க முடியும் என புத்தர் வழியில் விளக்குகிறார்

புத்தர் இளவரசரா , அரண்மனைவாசியா ..  ஏன் துறவறம் மேற்கொண்டார் போன்றவற்றை இவர் விளக்குவது நமது பொதுவான அறிதல்களை உடைத்து தகர்க்கிறது

புத்தம் குறித்தும் ஆன்மிகம் குறித்தும் நல்லதொரு அறிமுகம் தரும் நல்ல நூல்

புத்தம் சரணம்  .. எழுதியவர் அ மாரக்ஸ்

Saturday, February 1, 2020

ஆன்மிக கண்காட்சி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட ஆன்மிக கண்காட்சிக்கு இந்த ஆண்டும் சென்றேன்.

அன்றாட வாழ்வுக்கு பயன்படும் பல பொருட்கள் , அரிய நூல்கள் என வாங்கினேன்.  பெண்களை கவுரவிப்பதுதான் இந்த ஆண்டு கண்காட்சியின் theme. இப்படி theme அமிப்படையில் புத்தக கண்காட்சிகளையும் முயன்று பார்க்கலாம்.  பார்வையாளர்களில் இளம் தலைமுறையினரே அதிகம்

நல்ல அனுபவம்














Saturday, October 12, 2019

கத்ரி கோபால்நாத் காலமானார்

உலகப் புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமான செய்தி வருத்தம் அளித்தது

டூயட் படத்தில் ஏ ஆர் ரகுமான் இவரை சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்

இவரது இசைக்கச்சேரிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்

உலகப்புகழ் பெற்றவர் என்றாலும் மாங்காடு கிராமத்தில் காமாட்சியம்மன் ஆலயத்திலும் முழு அர்ப்பணிப்போடு  நவராத்திரி இசை விழாவில் கலந்து கொள்வார்

இந்த ஆண்டு இவர் வராததது இசை ரசிகர்களுக்கு ஏமாற்றம்.  இனி எப்போதுமே வர மாட்டார் என்பது மனதை வருத்துகிறது


Thursday, September 5, 2019

வெற்றிக்கு ஷார்ட்கட் மந்திரம்

சுப்ரமண்யரும் முருகனும் வெவ்வேறா..

விநாயகர் இறக்குமதி கடவுளா என்பவை எல்லாம் ஆய்வு மாணவர்களுக்கு அவசியம்..

தேடலுடன் இருப்போர்க்கு அந்த ஆய்வு முக்கியமன்று.. அனுபவமே முக்கியம்.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரைவிட கீழ்மண்டப விநாயகர் சக்தி வாயந்தவர் என எழுத்துச்சித்தர் சொன்னார். அது உண்மை என நேரடியாக உணர்ந்தேன். ஆர்வமிருப்பின் சென்று பாருங்கள். உணர்ந்தால் ஓகே. இல்லாவிட்டால் இது நம் கடவுள் இல்லை என விலகுங்கள். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பது உங்கள் முடிவை தீர்மானிக்கலாகாது. நீங்களே உங்களுக்கு விளக்கு.

வெற்றிக்கான எளிய சுருக்கமான ஸ்லோகம் இது
ஶ்ரீசங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்
எனக்கு செட் ஆனது. ஆர்வமிருப்பின் முயலுங்கள்


ஶ்ரீ கணேசாய நமஹ
நாரத உவாச:

ப்ரணம்ய சிரஸா தேவம் கொளரி புத்ரம் விநாயகம்
பக்தா வாசம் ஸ்மரே நித்யம் ஆயுட்காமர்த்த சித்தயே

ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரூதீயம் க்ருஷ்ணபிங்காக்‌ஷ்ம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்.

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகட மேவ ச
ஸபதமம் விக்நராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்

நவமம் பாலசந்த்ரம்ச தசமம் து விநாயகம்
ஏகாதசம் கண்பதிம் த்வாதசம்து கஜானனம்

த்வாதசைதானி நாமானி த்ரி ஸந்த்யம் ய:படேந் நர:
ந ச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ

வித்யார்த்தி லபதே வித்யாம் தனார்த்தீ லபதே தனம்
புத்ரார்த்தீ லபதே புத்ரான் மோக்ஷார்த்தீ லபதே கதீம்

ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பீ மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம்ச லபதே நாத்ர ஸம்சய:

அஷ்ட்ப்யோ ப்ராஹ்மணேப்யச்ச லிகித்வாய: ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேசஸ்ய ப்ராஸாததா:

இதி ஸ்ரீ நாரத புராணே சங்கஷ்ட நாசனம்
நாம ஸ்ரீ கணபதி ஸ்தோத்ரம் சம்பூர்ண

Tuesday, May 7, 2019

ராமானுஜர் - குரு துரோகமும் நடு நிலை தரிசனமும்

ராமானுஜருக்கு சின்ன வயது முதலே ஆன்மிக தேடல் இருந்தது

உரிய குருவை தேடலானார்... அவருக்கு கிடைத்த பலரும் போலி குருவாகவே இருந்தனர்

கடைசியில் திருக்கோஷ்டி நம்பிகள்தான் உரிய குரு என உணர்ந்தார்..


அவரை அணுகினார்... அவரோ இவரை ஏற்கவில்லை...

விடாமல் தினமும் அவரை அணுகினார்.. கடைசியில் குரு மனம் இளகினார்..

உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது என இயேசு சொல்வது போல உன் தேடல் உன்னை காத்தது என கூறி மகிழ்ந்த குரு , அவருக்கு மந்திர தீட்சை அளித்தார்...  இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது...சொன்னால் மீளா நரகம் அடைவாய் என்றார்  குரு,.

எவ்வளவு இனிய மந்திரம்.. எவ்வளவு சுகம்,, இதை எல்லோரும் அனுபவிக்கட்டுமே ... நாம் நரகம் போனால்தான் என்ன என நினைத்த ராமானுஜர் கோபுரம் மீதேறி எல்லோருக்கும் கேட்கும்படி மந்திரத்தை சொன்னார்

குரு கண்ணீர் வடித்தார்...  தேடல் இல்லாதவர்களுக்கு இப்படி சும்மா பொதுக்கூட்டம் போல சொன்னால் என்ன பயன் கிடைக்கும்.. சும்மா இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவார்கள்...  தேடி வருபவனுக்கு , அவனை நன்கு சோதித்த பின்பே உபதேசம் அளிக்க வேண்டும்...   நான் ஒரு ராமானுஜனை உருவாக்கியதுபோல , உன்னால் உருவாக்க முடியாமல் போய் விட்டது பார்... ஆயிரம் பேருக்கு சொன்னாய்.. என்ன பயன் என்றார் குரு

ராமானுஜருக்கு தன் தவறு புரிந்தது..

 நரகம் போவாய் என மிரட்டாமல் விளக்கமாக குரு சொல்லி இருக்கலாமே என நினைத்துக்கொண்டார்


மறைத்து வைப்பதாலும் பயனில்லை... சும்மா பிரச்சாரம் செய்தும் பயனில்லை... நடு நிலை தேவை என்ற ஞானம் பிறந்தது


இறை வேறு ,, பக்தன் வேறு என்பது ஒரு பார்வை

நானே இறைவன் என்பது ஒரு பார்வை

 நடு நிலையான ஒரு பார்வையை இவர் பிரபலமாக்கினார்.

நீ இறை அம்சம்தான்... உன்னை அறிந்தால் இறையை அறியலாம்தான்.. ஆனா நீ கடவுள் அல்ல... கடவுளை அடைய வேண்டிய கடவுளின் துளி நீ என்றார்


இந்த பார்வை  பிரபலமானது


குரு துரோகம் செய்தாலும் , அவர் நோக்கம் நல்லது என்பதால் , புகழ் பெற்றார்

ஆனாலும் குரு பேச்சை மீறினால் உருவாகும் தீமைகளை கண்களால் காணும் அனுபவமும் பெற்றார்.. அதுதான் குரு சொன்ன மீளா நரகமோ...

ராவணன் சீதைக்கு அண்ணனா? - இலக்கிய பார்வை

ராமர் சீதை லட்சுமணன் ஆகிய கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு எண்ணற்ற ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன..   இலக்கிய ரீதியாக உச்சம் தொட்ட கம்ப ராமாயணமும் , ஆன்மிக ரீதியாக உச்சம் தொட்ட வால்மீகி ராமாயணமும் பலருக்கும் தெரியும்.. ஆனால் மற்ற ராமாயண வடிவங்களும் உள்ளன

புலவர் குழந்தை அவர்களின் ராவண காவியம் இது போன்ற மாற்று ராமாயண வடிவங்களில் உண்டு..  மொழி ஆளுமைக்காக இது முக்கியத்துவம் பெற்று நினைவு கூரப்படுகிறது


இதன் கதை சுருக்கம்

ராவணன் ஒரு தமிழ் மன்னன்.. நிர்வாகம் , வள்ளல்தன்மை , காதல் , அன்பு , தனி மனித ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்தவன்

ஆரியர்கள் செய்யும் வேள்விகள் தமிழ் மரபுக்கு எதிராக இருப்பதாக கருதி தாடகை போன்ற தமிழ் அரசிகள் அதை தடுக்க முயன்று ராமனால் கொல்லபடுகிறார்கள்..


சீதையுடன் காட்டுக்கு வரும் ராமன் , ராவணனின் தங்கையை கொன்று விடுகிறான்

ராமனுக்கு பாடம் புகட்டும் பொருட்டு , சீதையை கடத்துகிறான் ராவணன்.. கடத்திவந்து , ஒரு அண்ணன் போல அன்புடன் அவளை பார்த்துக்கொள்கிறான்..

ராமன் தனது கொலைகளுக்கு மன்னிப்பு கேட்டால் போதும்.. உரிய மரியாதையுடன் சீதையை விட்டு விடுவதாக சொல்கிறான்

ஆனால் ராமன் ஒப்புக்கொள்ளவில்லை.. போர் நடக்கிறது.. ராவணன் சூழ்ச்சியால் வெல்லப்படுகிறான்

அதன் பின் சீதையுடன் இணையும் ராமன் , ஒரு கட்டத்தில் அவள் மீது சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பி விடுகிறான்

எளிமையான இந்த கதை எவ்வகையிலும் கம்ப ராமாயணத்துடன் ஒப்பிடத்தக்கது அல்ல..  ராமனை புகழும் பொருட்டு காவியம் எழுதிய கம்பர் ராமனின் சிறுமையையும் ராவணனின் மேன்மையையும் நடு நிலையுடன் சொல்கிறார்..

ஆனால் இந்த நூலில் முழுக்க முழுக்க ராவணன் புகழ் பாடப்படுகிறது...


ஆனாலும் ராவணன் கெட்டது செய்ததில் ஒரு நியாயம் உள்ளது என வாதிடாமல் , கதையையே சற்று மாற்றி , ராவணனை சீதைக்கு அண்ணன் ஆக்கி இருப்பது ஒரு எழுத்தாளராக புலவர் குழந்தைக்கு பெருமைதான்.. மொழி ஆளுமையும் அபாரம்


வெறும் பிரச்சார கதைதான் என்றாலும் , வெறும் அவதூறுகளை மட்டுமே நம்பி எழுதும் பல எழுத்துகள் மத்தியில் , இந்த கதை வித்தியாசப்படுகிறது

கம்ப ராமாயணம் கடல் என்றால் ராவண காவியம் என்பது ஸ்பூன் தண்ணீர்

ஆனால் வேறு பல ராமாயண அவதூறுகள் ஸ்பூன் தண்ணீர் என்றால் ராவண காவியம் என்பது ஏரி தண்ணீர்


Sunday, May 5, 2019

ஷத்ருக்கனனும் ராமாயணம் தரும் தத்துவ விளக்கமும்


ஆயிரம் ராமன்கள் வந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாகாது என்கிறார் ராமர்..

லட்சுமணன் ராமர் கூடவே இருப்பவன்...

சரி.. அப்படி என்றால் சத்துருக்கனின் முக்கியத்துவம் என்ன?

வரம் கார்ணமாக ராமன் காட்டுக்கு செல்கிறான்.. பரதன் நாட்டை ஆள்கிறான்...   சீதையை லட்சுமணன் , அனுமன் துணையால் மீட்டு மீண்டும் சக்கரவர்த்து ஆகிறான் ராமன்

இதில் சத்ருக்கணன் கேரக்டர் வரவே இல்லை என்றாலும் , பரதன் ஆட்சி செய்தல் , ராமன் மீண்டும் முடி சூடுதல் போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சத்துருக்கனன் மூலமாகவே ந்டக்கிறது.. அனைத்தையும் செயல்படுத்துபவன் அவனே..

இது ஒரு புறம் இருந்தாலும் , ராமாயாணத்தை  தத்துவ ரீதியாக அணுகும் ஆனந்த ராமாயணம் போன்றவற்றில் இதற்கு வேறு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது

சுசுப்தி  , சொப்னம் , ஜாக்ரத , துரியம் என நான்கு நிலைகளாக பிரஞ்ஞையை பகுத்துள்ளனர்

துரியம் என்பது முழு விழிப்பு நிலை... இதன் வெளிப்பாட்டு வடிவம்தான் ராமன்..


சுசுப்தி என்பது தான் என்ற உணர்வு உருவாகாத  நிலை.. மனமற்ற நிலை... மனம் என்பது இல்லை என்பதால் துக்கமும் இல்லை.. அழிவும் இல்லை.. சாஸ்வத நிலை... இதன் வெளிப்பாடுதான் ஷத்ருக்கனன்

சொப்னம் என்பதில் பிரஞ்ஞை இருக்கும்.. ஆனால் நான் என்பது இருக்காது.. மரம் செடி கொடி விலங்குகள் எல்லாம் இந்த நிலைதான்,,,,   நான் என்பது இல்லாமல் செயல்பட்ட பரதன் இந்த நிலையில் வருகிறான்

ஜாக்ரத என்பது விழிப்புணர்வு பெற்ற நிலை.. நன்மை தீமை குழப்பங்கள் உருவாகும் நிலை இது.. லட்சுமணன் இந்த நிலைதான்


ஜாக்ரத என்ற விழிப்புணர்வு மனிதனுக்கு அருளப்பட்டு இருந்தாலும் அதை மழுங்கடித்துக்கொள்ளத்தான் தினமும் அன்றாடம் பாடுபடுகிறோம்... பொழுது போக்குகள் , மது , ஸ்மார்ட் போன் என இதற்காக செலவழிக்கிறோம்...


சுசுப்தி என்ற நிலை நல்லதுதான்.. ஆனால் அதை நம்மால் ஈட்ட முடியாது.. என்னதான் முயன்றாலும்  நாம் குழந்தையாக முடியாது.

ஆனால் துரியம் என்ற புத்த நிலையை நம்மால் அடைய முடியும்.. அதற்கு முயற்சி தேவை

 நம் ஆழ் மனம் விரும்புவதும் இதைதான்... ஆனால் அதற்கான உழைப்பை கொடுக்க விரும்பாமல் சொப்ன நிலையை அடைய முனைகிறோம்...

இபப்டி தேவையின்றி நம் ஆற்றலை வீணடிப்பதற்கு பதில் விழிப்புணர்வை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆன்மிக நூல்கள் தரும் செய்தி



Wednesday, May 1, 2019

இறைவனின் ஐந்து நிலை - ஆன்மிக அல்சல்





இறை என்பதன் ஐந்து நிலைகளை வைணவ இலக்கியம் இப்படி சொல்கிறது

பூகதஜலம்போலே அந்தர்யாமித்வம்

ஆவரண ஜலம்போலே பரத்வம்

பாற்கடல்போலே வியூகம்

பெருக்காறு போலே விபவம்

அதில்

தேங்கின மடு போலே அர்ச்சாவதாரம்

----

இதற்கு எளிமையாக பொருள் காண்போம் ( மரபார்ந்த பொருள் அறிய வைணவ நூல்களை அணுகலாம் )


நமகு தாகமாக இருக்கிறது.. தண்ணீர் தேடுகிறான்.. ஏனப்பா தேடுகிறாய்.. உன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது.. தோண்டிப்பார் என யாரேனும் சொன்னால் , அவர்கள் சொல்வது போல நிலத்தடி நீர் இருப்பது உணமை என்றாலும் , எப்போது தோண்டி எப்போது குடிப்பது..   உடனடி தாகத்துக்கு நிலத்தடி நீர் உதவாது...  அது போல இறை என்பது உனக்குள் உள்ளது என்ற தத்துவம் உடனடி பயனை தராது...

இறையை உணர மட்டுமே முடியும் என்பது இந்த நிலை


உலகை சுற்றிலும் கடல் உள்ளது என்பது போல உன்னை சுற்றி இருப்பது எல்லாம் இறை வடிவமே என்பது இரண்டாவது நிலை...

இறை என்பதற்கு ஓரளவு வெளிப்படையான நிரூபணம் உள்ளது என்பது இந்த நிலை... கடல் உலகை சுற்றி இருந்தாலும் அதுவும் உடனடி தாகத்துக்கு உதவாது


பாற்கடல் போல , பாலை பார்ப்பது போல , உணரலாம் , பார்க்கலாம் என்ற நிலை மூன்றாவது... இதுவும் உடனடியாக உதவாது


ஆற்று வெள்ளம் போல , உணரலாம் பார்க்கலாம்,, தொடலாம் .. என்பது அடுத்த நிலை... இது ஓரளவு சிலர் தாகம் தீர்க்கும்..  ராமர் கிருஷ்ணர் பரமபிதா அல்லா என்பது இந்த நிலை....

நிலத்தடி நீர் , ஆற்று நீர் போன்றவை முறைப்படி சேகரிக்கப்பட்டு வீட்டு குழாயில் வருகிறது அல்லவா... இதை பார்க்கலாம் உணரலாம் முகரலாம். குடிக்கலாம்...   இதுதான் ஐந்தாம் நிலை

அவதாரங்கள் அல்லது மகான்கள் என்பது இந்த நிலை...  இயேசு , குணங்குடி மஸ்தான் , விசிறி சாமியார் , ரமணர் , சாய் பாபா , காஞ்சி மகான் என எண்ணற்றோரை சொல்லிக்கொண்டே போகலாம்...  நபிகளை இந்த வரிசையில் வைப்பதை இஸ்லாம் ஏற்காது.. நபி என்பவர் இறைவனின் தூதர் மட்டுமே , மகான் என்றெல்லாம் பூஜிக்கலாகாது என்பது இஸ்லாம் .. ஆனாலும் புனித நூலான குர் ஆன் இப்படி நேரடியாக அனுபவிக்கும் நிலைக்கு உதாரணமாக சொல்லலாம்...


நேரடியாக என்னுள்ளே என்னை தேடுகிறேன் என்றாலும் ஓகேதான்... மகான்கள் மூலம் அனுபவிக்கிறேன் என்றாலும் ஓகேதான்



Tuesday, April 30, 2019

அனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்


ராமனின் தூதுவனாக சீதையை சந்திக்கிறான் அனுமன்..

ஆரம்பத்தில் அனுமனை அவள் நம்பவில்லை.. ஆனால் பிறகு அவனை நம்புகிறாள் . மனம் விட்டு பேசுகிறாள்.. தன் வேதனையை சொல்கிறாள்

அனுமனுக்கும் ஆரம்பத்தில் சீதை மீது நம்பிக்கை இல்லை.. ராவணனுடம் காம்பரமைஸ் ஆகி இருப்பாள் என்றுகூட நினைக்கிறான்

பிறகுதான் ,என்னதான் ராவணன் இருப்பிடத்தில் அவள் இருந்தாலும் அவள் காதல் மாறவில்லை என்பது பிறகுதான் புரிகிறது

இருவரும் நட்புடன் பேசிக்கொள்கிறார்கள்

ஒரு கட்டத்தில் அனுமன் சொல்கிறான்...

“ கவலையை விடுங்கள்....உங்களை அப்படியே தூக்கிச்சென்று ராமனிடம் விட்டு விடுகிறேன்... யாராலும் என்னை தடுக்க முடியாது ‘

சீதைக்கு அதிர்ச்சி... ஏன் இப்படி முட்டாள் மாதிரி பேசுகிறான் என யோசிக்கிறாள்.. அவன் அன்பு அவன் அறிவை மறைக்கிறது என புரிந்து கொள்கிறாள்

அவன் தன்னை தூக்கிச்செல்வதை அவள் விரும்பவில்லை.. ஆனால் அப்படி முகதில் அடித்தாற்போல் சொல்லவும் விரும்பவில்லை

பிறகு எப்படி சொல்கிறாள்

” நீ தூக்கிசெல்லும் ஆற்றல் மிக்கவன் ..அதில் எனக்கு சந்தேகம் இல்லை.. ஆனால் வேகமாக பறக்கும்போது எனக்கு மூச்சு திணறல் ஏற்படலாம்.. அல்லது உய்ரம் காரணமாக எனக்கு மயக்கம் வரலாம்.. அல்லது என் பிடி நழுவி விழுந்து விடலாம்... அல்லது எதிரிகள் உன்னை சூழ்ந்து தாக்கும்போது , என்னதான் நீ வென்றாலும் , அவர்கள் அம்பு என் மீது பட்டு விடலாம்.. இதை எல்லாம் விட இன்னொன்று... ராமன் வந்து காப்பாற்றினால்தான் பெருமை.. இல்லையென்றால் சூழ்ச்சி மூலம் என்னை காப்பாற்றியதன் மூலம் ராவணன் மீது பயம் என்பதை ஒப்புக்கொள்வதாக உலகம் அவன் மீது பழி சொல்லும்.. எனவே உன்னுடன் வரவில்லை “ என்கிறாள்

ஒரு மேனேஜர் உயர் பதவிக்கு ஒரு பெண்ணை நியமித்தார்

உதவியாளனுக்கு சந்தேகம்

- சார்,..இந்த பெண்னை விட கல்வி , அனுபவம் , திறமை மிகுந்த பெண்கள் வந்தார்களே...இவளுக்கு ஏன் பதவி? என்றான்

அவர் சொன்னார்

“ இந்த வேலைக்கு கல்வியை விட கூர்மதி தேவை.. அனுபவம் இதை விட அதிகமாய் இருப்பது தவறு... இன்னொன்று இவள் கை எழுத்து நன்றாக இருக்கிறது... இன்னொரு முக்கியமான காரணம் இவள் ஆங்கில உச்சரிப்பு மற்றவர்களை விட அதிகம்...   இன்னொன்று இவள் படித்த கல்லூரி புகழ்  வாய்ந்தது.. கடைசி காரணம் இவள் என் மனைவியின் தங்கை “

உண்மையில் கடைசி காரணம் மட்டும்தான் உண்மை.. மற்றவை எல்லாம் சால்ஜாப்புதான்//

அந்த பாணியில் பதில் அளிக்கிறாள் சீதை

ராமாயணத்தில் வரும் அழகான இடங்களில் ஒன்று இது


Wednesday, April 10, 2019

எந்த மந்திரம் சக்தி வாய்ந்தது?



தினம் தோறும் சுந்தர காண்டம் படித்தால் நல்லது...லலிதா சக்ஸ்ர நாமம் , ருத்ரம் , விஷ்ணு சகஸ்ர நாமம் என ஒவ்வொன்றிலும் நல்லது இருப்பதாக சொல்வார்கள்

எதைச்சொன்னால் நல்லது என்ற குழப்பத்தில் பலர் எதையும் படிப்பதில்லை.. நம்பிக்கை இல்லை ..எனவே படிக்கவில்லை என்பது வேறு

குறிப்பிட்ட கடவுள் மீது நம்பிக்கை இருப்போருக்கும் குழப்பம் இல்லை..

 நம்பவும் இல்லை.. நம்பாமலும் இல்லை...  முயன்று பார்க்கிறேன்.. பலன் தெரிந்தால் ஓகே..இல்லாவிட்டால் விட்டு விடுகிறேன்.எதைப்படிக்கலாம் என்பவருக்குதான் குழப்பம்


குழப்பம்தான் தெளிவுக்கு வழி வகுக்கும் என்பதால்  எந்த முடிவிலும் இல்லாமல் தேடலுடன் இருப்பது நல்லது

என்னைப்பொருத்தவரை குர் ஆன்  பைபிள் உட்பட அனைத்தையுமே படிக்கிறேன்

படிப்பதால் நன்மை கிடைக்கிறதா கண்டிப்பாக கிடைக்கிறது...

புறவயமான நன்மைகளும் உண்டு.. அகவயமான நன்மைகளும் உண்டு


லலிதா சகஸ்ர நாமம் கேட்பதாலோ படிப்பதாலோ , சிவன் கோபம் அடைந்து  , தக்காளி என்னை விட அவ பெரிய தெய்வமா என நம் மீது தீச்செல் இடப்போவதில்லை

எதைப்படித்தாலும் கேட்டாலும் , மதம் கடந்த ஒரே இறையைத்தான் அது சென்று அடையும்... இறை என்பது நம்பாவிட்டாலும் , படிப்பதன் மூலம் நிறைவை அனுபவிக்கும் “ நான் “ என்பது மாறப்போவதில்லை

ஆக எதைப்படித்தாலுமே நல்லதுதான்...

ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே ஊன்றி படிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு விதம்.. மெக்கானிக்கலாக கடமைக்கும் படிக்காமல் , அறிவுப்பூர்வமான அணுகுமுறையோடு படிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வேறு


ஜென்னில் சொல்வது போல , எல்லாவற்றையும் விட முக்கியம் , ஆரம்பித்து விடுதலே... ஏதோ ஒன்றை ஆரம்பித்து விடுவோம்



Saturday, April 6, 2019

பூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா


சத்ய சாய் பாபா உரையாடலை படித்த பலர் , இது போன்ற ஞான மார்க்கத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றனர்,..

உண்மையில் ஞானம் , கர்மம் , பக்தி என்பதெல்லாம் ஒன்றுதான்.. உதாரணமாக உருவ வழிபாடு செய்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அடையாத ஞானமா.. செய்யாத சேவையா..

ஆகவே இந்த பிரிவினைகள் தேவை இல்லை

எல்லா இடங்களில் இருந்தும் நல்ல விஷ்யங்களை கிரகிப்பதே முக்கியம்

----------

வெளி நாட்டினர் சிலர் சாய் பாபாவிடம் நிகழ்த்திய உரையாடல்

ஸ்வாமி.. நினைவாற்றல் என்பது ஆன்மிக வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு அவசியம்?

பாபா- இறந்த கால சுமைகள் என்பது ஆன்மிகத்துக்கு தேவை இல்லை... கஷ்டப்பட்டு ஒன்றை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.. ஆனால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பின் மந்திரங்கள் , குரு உபதேசம் மறக்காது


ஒரு முறை அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டான்,,, எனக்கு கடந்த பிறவிகள் எல்லாம் நினைவு இல்லை.. உனக்கு மட்டும் எப்படி பூர்வஜன்ம நினைவுகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன

கிருஷ்ணன் கேட்டான்.. போன மாதம் காலை உணவாக என்ன சாப்பிட்டாய்?

அர்ச்சுனன் சொன்னான்.. மறந்து விட்டதே

போன வருடம் முதன் முதலாக யாரைப்பார்த்தாய்?

நினைவு இல்லையே

உனக்கு முதன் முதலில் வில் வித்தை கற்றுத்தந்தவர் யார்?

நினைவு இருக்கிறது

போன வருடம் , போன மாதம் நீ உலகில் இருந்தாய்.. ஆனால் உனக்கு அவை நினைவு இல்லை. நினைவு இல்லை என்பதால் போன வருடம் என்பது இல்லை என ஆகி விடாது

சில விஷ்யங்கள் உனக்கு நினைவு உள்ளது. காரணம் அவற்றின் மீது மட்டும் உனக்கு அக்கறை உண்டு

இப்போது புரிகிறதா... எனக்கு எதுவுமே மறப்பதில்லை.. காரணம் எனக்கு எல்லாவற்றின் மீதுமே அக்கறை உண்டு



Friday, April 5, 2019

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா? பிரார்த்தனை குறித்து சாய்பாபா


புட்டபர்த்தி சாய் பாபா என்றால் , சென்னை குடி நீர் பிரச்சனையை தீர்த்தது ,,  அவர் செய்யும் மந்திர ஜாலங்கள் போன்றவைதான் பலர் நினைவுக்கு வரும்.. ஆனால் வெளி நாட்டினர் அவருடன் ஆழமான விவாதங்கள் நிகழ்த்தியுள்ளனர்

-------------------------


ஒருவரின் கர்மா ஒத்துழைத்தால்தான் அவரது பிரார்த்தனை ஏற்கப்படுமா?

பாபா- இல்லை... ஒருவரது இதயம் , சிரத்தை ஆகியவற்றை பொருத்து கர்மாவையும் மீறி இறையருள் வேலை செய்யும்

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்.. எனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா... அவரிடம் ஏன் பிரார்த்திக்க வேண்டும்?

பிரார்த்தனை என்பது ஒரு ஆன்மிக பயிற்சியாகும்.. எல்லாம் உன் செயல்... நீ பார்த்து எனக்கு நல்லது செய் என கேட்குமபோது ஈகோ அழிகிறது,,, இதயத்தில் அன்பு மலர்கிறது... கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்றாலும் நீ கேட்க வேண்டும் என்பது உன் நல்லதற்காகத்தான்... உதாரணமாக குழந்தை சின்ன வயதில் வாய் விட்டு அழுவது ஒரு வகை உடற்பயிற்சிதான்... ஒரு தாய்க்கு குழந்தையின் பசி தெரியாது என்பதல்ல்... ஆனால் அழுதவுடன் பால் கொடுப்பதுதான் நல்லது

பிரார்த்தனை என்பது ஒரு வகையில் பிச்சை எடுப்பது போல தோன்றுகிறதே?

இல்லவே இல்லை... உன்னை விட பெரிய மகான்கள் , இறைசக்தியுடன் நீ நடத்தும் உரையாடல்தான் , பிரார்த்தனை என்பது... பெரியவர்களுடன் உரையாடுகையில் நீயும் அவர்கள் அளவுக்கு உயர்கிறாய்...  இன்னொரு வகையில் பார்த்தால்  , கடவுளிடம் உனக்கு வேண்டியதை கேட்கும் முழு உரிமை உனக்கு இருக்கிறது.... உன் உரிமையைத்தான் நீ கேட்கிறாய்


எனக்கு எந்த தேவையும் இல்லாதபோது என்னவென பிரார்த்திப்பது?

மன அமைதி வேண்டும் என்று கேள்

மன அமைதி என்பது என்ன?

உண்மையில் மனம் என ஒன்றும் இல்லை... வெயிலின் இயல்பு சுடுவது , பனியின் இயல்பு குளிர்வது என்பது போல மனதின் இயல்பு என்பது அலைவது... அலையாத அமைதியான மனம் என பேச்சு வழக்கில் சொல்கிறோம்... உண்மையில் மனம் அழிவது என்பதுதான் விரும்பத்தக்கது




Monday, March 18, 2019

ருத்ரம் எனும் அரு மருந்து


பொங்கல் முடிந்து விட்டால் , இனி வறட்சியான காலம் , பண்டிகைகள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டன என தோன்றும்

ஆனால்  நம் மக்கள் வாழ்க்கையை கொண்டாடுபவர்கள்.. அர்த்தமற்ற கேளிக்கைகள் என இல்லாமல் அனைவருடன் அன்பை பகிர்ந்து கொள்ளும்வண்னம் கொண்ட்டாட்டம் , விழா , பண்டிகை இருக்கும்

சிவராத்திரி அன்று இரவு முழுக்க உணவையும் அறிவையும் ஞானத்தையும் பரிமாறினார்கள்

பிரதோஷம் அன்று ஒவ்வொரு கோயிலும் விழாக்கோலம் பூண்டு இருந்தது

 நான் கூட்டம் குறைவாக இருந்த , ஒரு புராதான ஆலயம் சென்றேன்... அதிர்வு மிக்க ஆலயம்..

ருத்ரம் அந்த அமைதியான சூழலில் அற்புதமாக இருந்தது

வேதங்களின் இதயம் ருத்ரம் என சொல்லப்படுகிறது
வேதம் என்பது இறை சக்தியை ஒலி வடிவாக்கி உணர முயல்தல்...  உச்சரிப்பு முக்கியம் ..   வேதம் இரண்டு காண்டங்களை கொண்டது... கர்ம காண்டம்.. ஞான காண்டம்

உப நிஷத் என்பது ஞான காண்டம்..

வேதத்தில் நான்கு பாகங்கள் இருக்கும்.. சம்ஹிதை , பிரம்மாணம் , ஆரன்யகம் கடைசியாக உபனிஷத்

ருத்ரம் என்பது ஞானத்தை சொல்லும் உப நிஷத்துவில் இல்லை... கர்ம காண்டத்தில் உள்ளது.. ஆனால் ருத்ரோபனிஷத் என அழைக்கப்படுகிறது

அதாவது ஞானத்துக்கும் கர்மத்துக்கும் பாலமாக இருப்பது ருத்ரம் மட்டுமே

பல் வேறு அரிய மந்திரங்களில் தொகுப்புதான் ருத்ரம்.. எதை எதை எப்படி எதற்கு எப்போது எங்கு சொல்ல வேண்டும் என முறை இருக்கிறது.

அதை போக போக பார்ப்போம்

Sunday, March 3, 2019

சிவராத்திரி - அனுபவங்கள்


மற்ற பண்டிகைகளுக்கும் சிவ ராத்திரிக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு

மற்றவை எல்லாம் எப்படி கொண்டாடப்பட வேண்டும்  , அப்படி அனுசரிக்க வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கும்... அது ஊருக்கு ஊர் , ஜாதிக்கு ஜாதி மாறுபடக்கூடும்

ஆனால் சிவராத்திரி என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறுபடும்

இது ஒரு பண்டிகையே அல்ல என புறக்கணிப்போர் உண்டு

ஒரு குருவின் வழிகாட்டுதலில் இரவை கழிப்போர் உண்டு

ஆலயம் செல்வோர் , மயான பூஜை என பல வகை உண்டு

 நான் முதன் முதலில் சிறுவயதில் இரவு முழுக்க வீடியோவில் சிறப்பு திரைப்படங்கள் பார்த்ததுதான் முதல் சிவராத்திரி

நண்பர்களுடன் பேசியபடி இரவை கழித்தது...   குடும்ப ஆலயத்தில் என் கைகளாலேயே பூஜை செய்தது...  ருத்ரபூமியாம் சுடுகாட்டில் , சடலங்கள் மத்தியில் அமர்ந்து , நாமும் ஒரு நாள் சடலம்தான் என்ற உணர்வுடன் பூஜை செய்தது , ராமகிருஷ்ணா மடத்தில் அழகாக மந்திரங்கள் சொல்லி ( நம் கைகளில் அச்சிடப்பட்ட மந்திரங்களை கொடுத்து விடுவார்கள் ) சிவனை வழிபட்டது... இரவு முழுக்க நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது , இரவு முழுக்க வாசிப்பு , வாசிப்பு குறித்த விவாதம் என ஞானத்தை வழிப்பட்டது என பல ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு அனுபவம்

இந்த ஆண்டு அனுபவத்தை , இறைவன் விரும்பினால் , பிறகு எழுதுவேன்

Sunday, February 10, 2019

பெண்மையை இழிவு படுத்தும் திருமண மந்திர விளக்கமும் , உண்மையும்


விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவரிடம் உங்களுக்கு எப்படி முடி கொட்டியது என கேட்டார்கள்

- சார்... நான் எப்பவுமே படிச்சிக்கிட்டே இருப்பேன்,,பயங்கர படிப்பாளி... படிச்சு படிச்சு முடி கொட்டிருச்சு என்றார் அவர்

- அப்படியா.. எப்படி என்னதான் படிப்பீங்க ? என ஆச்சர்யத்துடன் கேட்டார் கோபி நாத்

- பொன்னியின் சொல்வன் படிப்பேன் என்றார் அவர்

திகைத்துப்போன கோபி நாத் , சரி., அதை அப்படி வெறித்தனமா படிச்சாலும்கூட  , ஒரு வாரத்துல முடிச்சுறலாமே.. என்றார்

- இல்லை சார்.. தினமும் அதை படிப்பேன் என்றார் அவர்

- சரி., அதுல வரும் கேரக்டர் ஏதாச்சும் சொல்லுங்க என கேட்டதும் திகைத்துப்போய் விழித்தார் அவர்

நம் ஆட்களின் படிப்பு அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.. எதையும் சரியாக படிப்பதில்லை

படிக்காதது ஒரு குற்றம் என சொல்வதற்கில்லை... ஆனால் படிக்காமல் அரைகுறையாக எழுதுவது தவறு

இவர்கள் இப்படி அரைகுறையாக முக நூலில் வாட்சப்பில் எழுதுவதை ஆதாரமாக வைத்து அரசியல் தலைவர்களும் மேடையில் பேசி அசிங்கப்படுவதும் நிகழ்கிறது


மாங்கல்யம் தந்துனானே என திருமணத்தில் மந்திரம் சொல்கிறார்கள் ... அதன் பின் வரும் வரிகளின் அர்த்தம் என்ன ?

சோமஹ ப்ரதமோ விவேத
கந்தர்வ விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ

 ஒருவன் நித்திரை தேவியின் பிடியில் இருந்தான் என்றால் என்ன அர்த்தம்?  நித்திரை தேவி என்று ஒரு பெண் இருக்கிறாள்... அவள் அவனை இழுத்து படுக்கைக்கு அழைக்கிறாள் என்றா அர்த்தம்?

அப்படி பாமரர்களும் பொருள் கொள்ள மாட்டார்கள்.. தூங்கி விட்டான் என்பதை நித்திரை தேவி அவனை ஆட்கொண்டாள் என கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்

உன் நாவில் சரஸ்வதி தேவி வசிக்கிறாள் என்றால் , அப்படி ஒரு பெண் நம் நாக்கில் வீடு கட்டி வசிக்கிறாள் என்பதல்ல.. அவன் நன்றாக சுவையாக பேசுகிறான் என்பது பொருள்


அதுபோன்ற கவிப்பூர்வமான வரிகள் அவை


பெண்ணே.. 

நீ  நிலவின் குளிர்ச்சியாய் உதித்தாய்

பின்பு கந்தர்வ அழகு உன்னை ஆட்கொண்டது

அதன் பின் பெண்மை நெருப்பு உன்னைப் பற்றியது

இதோ இப்போது உன்னவனை கரம் பற்றுகிறாய்


இதுதான் அந்த வரிகளின் அர்த்தம்


இதைப்புரிந்து கொள்ளாமல் முதல்வர் பகல் கனவில் இருக்கும் சில தலைவர்களே பேசுவது கொடுமை

பெண்ணே

கொஞ்ச நாள் பக்கத்து வீட்டு சந்திரனை கல்யாணம் செய்து வாழ்ந்தாய்

அவனை டைவர்ஸ் செய்து விட்டு , கந்தர்வன் என்ற எதிர் வீட்டானை மணந்தாய்

அக்னிகோஷ் என்ற வட இந்தியனை அடுத்து மணந்தாய்

கடைசியாக இந்த பலியாடு உன்னிடம் சிக்கியுள்ளது... இவனையாவது கண் கலங்காமல் பார்த்துக்கொள் என்றொரு பாமரத்தனமான விளக்கத்தை மேடையிலேயே பேசுகிறார்கள்

அப்படி பேசுபவர்களோ அதை கேட்டு கைதட்டுபவர்களோ இந்த கட்டுரையை படிக்கப்ப்போவதில்லை...திருந்தப்போவதும் இல்லை

உண்மையான அறிவைத்தேடுபவர்களுக்கு இது உதவக்கூடும் என்பதால் இந்த பதிவு 






Friday, December 7, 2018

கன்னட மொழிச் சித்தர் -பசவண்ணா


 நமது சித்தர்கள் , நாயன்மார்கள் பாடல்கள் போல கன்னட மொழியில் பாடல்கள் உண்டு.. கச்சேரிகளில் அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்

குறிப்பாக பசவண்ணாவின் பாடல்கள் வீரியமிக்கவை.. இவர் தீவிர சிவ பக்தர்..  முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்.. சாதி ,மத , பால் , மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவர்..

வெகு சுருக்கமாகவே இவர் பாடல்கள் இருக்கும்.. ஆனால் கருத்தாழம் மிக்கவை

சில சாம்பிள்கள்

----------------

 நலம் விசாரிப்பதால் உன்

பணம் பறந்து விடப்போகிறதா என்ன?

அன்பாக ஒருவனை அமரச்சொன்னால்

உன் இல்லம் இடியப்போகிறதா?

தகுந்த பதில் அளிப்பதான் உன்
தலை நொறுங்கப்போகிறதா?

யாருக்கும் எதையும் கொடுக்காவிட்டாலும்
அன்பாக இருப்பதில் என்ன கஷ்டம்?

அன்பற்ற நெஞ்சை இறைவன் ஏற்பது கஷ்டம்

-----------------------

பகட்டான ஆலய்ங்களை
பணக்காரன் கட்டக்கூடும்

ஏழை நான் என் செய்வேன்?

கால்களை தூண்களாக்கி

என் உடலையே கோயிலாக்குவேன்

என் தலை ஆகட்டும் தங்க கோபுரமாய்

என் இறைவா.. நீ அறிவாய்

மண்ணில் நிற்பது அழியும்

மண்ணில் நகர்வது நிலைக்கும்

------------------------------


வீடு ஒன்றைக் கண்டேன்

புழுதி படிந்திருந்தது

களைகளும் குப்பைகளும் சூழ்ந்திருந்தன

உரிமையாளரால் கைவிடப்பட்ட
உயிரற்ற வீடு போல என எண்ணிக்கொண்டேன்

மனிதர்கள் பலரை காண்கிறேன்

உடல் முழுக்க பொய்கள்

மனம் முழுக்க அசுத்தம்

கைவிடப்பட்ட உயிரற்ற உடல்கள் போலும்

-------------------


மண் இன்றி

குடம் இல்லை

பொன் இன்றி

நகை இல்லை

குரு இன்றி

உயர்வில்லை

____________________-


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா