Sunday, September 30, 2012

ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்


தமிழ் ஸ்டுடியோ சார்பில் படிமை திரைப்பட பயிற்சி  இயக்கத்தின் இரண்டாவது பேட்ச் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று ( 30.09.2012- ஞாயிறு ) நடந்தது .  விழாவை சாரு நிவேதிதா துவக்கி வைப்பதாக அறிவுப்பு வெளியகி இருந்தது. ஆனால் எந்த இடத்தில் நடக்கிறது என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை.

தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்கவே , இடத்தை சொல்லவில்லை என விசாரித்த போது தெரிந்தது. தமிழ் ஸ்டுடியோ அருணுக்கு ஃபோன் செய்து , நம்மை அறிமுகப்படுத்தி கொண்ட பின்புதான் , நமக்கு அனுமதி அளித்தார். சிலரை வர வேண்டாம் ,  இடம் இல்லை என பணிவாக மறுக்கவும் செய்தார்.


இப்படி ஒரு ஒழுங்குடனும் , கட்டுப்பாடுடனும்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .  உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே வந்து இருந்தனர். வழக்கமான மேடை பேச்சு போல இல்லாமல் , மொட்டை மாடியில், மாலைக் காற்று இதமாக வீச, வானுக்கு அடியில் அமர்ந்து கொண்டு நடந்த கலந்துரையாடல் உன்னதமான அனுபவத்தை தந்தது .

சாரு தன் பேச்சில் முழுக்க முழுக்க சினிமாவை பற்றியே பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது . அந்த அளவுக்கு சினிமா மீது காதல் கொண்டவர் அவர்.

 ************************************************************8


அருண் துவக்க உரை ஆற்றினார்.


படிமை என்பது சினிமா இன்ஸ்டிட்யூட் அல்ல. இது ஓர் இயக்கம். நல்ல படங்களுக்கான இயக்கம். இன்று யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் அதை விமர்சித்தால் கோபம் அடைகிறார்கள். குறும்படங்களை விமர்சித்தாலே , மிரட்டலை சந்திக்கும் நிலை உள்ளது.

அதே போல யார் வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம் என்ற நிலையும் உள்ளது. விமர்சனம் என்றால் என்னவென்று தெரியாமலேயே பலர் எழுதுகிறார்கள்.

படிமை பயிற்சியில் நாங்கள் கற்றுத்தருவதை விட , தேடலை ஊக்குவித்து அவர்களாகவே கற்கும் நிலையை ஏற்படுத்துகிறோம். இலக்கிய வாசிப்பு , ஃபீல்ட் ஒர்க் என பல கட்டங்களுக்கு பின்புதான் கேமிராவுக்கு கடைசியில்தான் வருவோம். தன்னை சுற்றி நடப்பது என்ன என தெரிந்தால்தான் , நல்ல சினிமா எடுக்க முடியும். உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்கள்தான் , இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பயிற்சியில் சேர முடியும்.

இதை துவக்கி வைக்க சரியான நபர் யார் என யோசித்த போது, சாரு நிவேதிதாதான் என் நினைவுக்கு வந்தார். அவரை போல சினிமாவைப் பற்றி எழுதியவர்கள் யாரும் இல்லை. அலைந்து திரிபவனின் அழகியல் என்ற பெயரே எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது என பாருங்கள் . ஆனால் இப்போது எழுத மாட்டேன் என்கிறார். இது பெரிய இழப்பு. சினிமா துறையினர் பலர் , அவர் ஏன் எழுதுவதில்லை என என்னிடம் கேட்கிறார்கள். அவரை மீண்டும் சினிமா விமர்சனம் எழுத வைக்க , அவர் வாசகர் வட்டம் முயல வேண்டும்.

****************************

அதன் பின் சாரு, தனக்கே உரிய பாணியில் சரளமாகவும் , இயல்பாகவும் , உணர்ச்சி பூர்வமாகவும் பேசினார். சில சமயங்களில் கோபப்பட்டார் . சில நேரங்களில் பரவசப்பட்டார். எதுவாக இருந்தாலும் , அதில் முழுமையாக இருந்தார்.

சினிமா பற்றி நான் வகுப்பு ஏதும் இப்போது எடுக்கப்போவதில்லை. சினிமா பற்றி பல புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். அதில் நான் குறிப்பிட்டு இருக்கும் படங்களை பார்க்கவே உங்களுக்கு ஆறு அல்லது ஏழு வருடங்கள் ஆகும்.  நான் பல வருடங்களாக பார்த்த படங்களைத்தான் என் புத்தகங்களில் சொல்லி இருக்கிறேன். அந்த காலத்தில் டிவிடி எல்லாம் கிடையாது , உலகப் படங்களை பார்க்க வேண்டும் என்றால் ஃபில்ம் சொசைட்டியத்தான் நம்பி இருக்க வேண்டும் . அதுவும் லத்தீன் அமெரிக்க படங்கள் பார்க்க வேண்டும் என்றால் , காத்து இருக்க வேண்டும் . எப்போது திரையிடுவார்கள் என தெரியாது.

அப்போது டில்லியில் இருந்தேன். 1978ல் ஃபில்ம் சொசைட்டியில் , லத்தீன் அமெரிக்க படங்கள் திரையிட்டார்கள். காலை ஆறு மணிக்கே நானும் , வெங்கட சாமினாதனும் கிளம்பி சென்று விடுவோம். ஒரே நாளில் ஐந்து படங்கள் கூட பார்த்து இருக்கிறேன்.

hour of furnace, battle for chile போன்ற படங்கள் மறக்க முடியாது. சில போர் காட்சிகளில் படம் பாதியிலேயே ஃப்ரீஸ் ஆகி விடும் , காரணம் , கேமிரா மேன் குண்டு வீச்சுக்கு பழி ஆகி இருப்பார். அப்படி எடுக்கப்பட்ட படங்கள் அவை.


நான் ஏன் விமர்சனம் எழுதுவதில்லை என பலர் வருத்தப்படுகிறார்கள்.  நான் ஒரு படத்தை வெகுவாக பாராட்டி எழுதி இருப்பேன். கடைசியில் பார்த்தால் , அது காப்பி அடித்து எடுக்கப்பட்ட படமாக இருக்கும். விக்ரம் நடித்த தெய்வ திருமகள் படம் அப்படித்தான் ஆனது.


விக்ரம் ஒரு சாதாரண கேரக்டரில் நடிக்க மாட்டாரா என ஏங்குகிறேன். எப்போது பார்த்தாலும் , அப் நார்மல் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறார். அவர் உடல் நலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
எப்போதும் மன நோயாளியாகவே நடித்தால், உண்மையிலேயே மனம் பாதிக்கப்படும்.

இயக்குனர்கள் தம் இளமைக்கால சம்பவங்களை வைத்து ஒரு ஹிட் படம் தருகிறார்கள். ஆனால் இளமைக்காலம் ஒரு முறைதானே வரும். எனவே அடுத்த படத்தை காப்பி அடித்து எடுக்க ஆரம்பிக்கிறார்கள். காப்பி அடித்து எடுப்பதை , தன் படம் என எப்படி சொல்வது.

காப்ரியெல்லா மார்க்கெஸ் எழுத்தை நான் தமிழ் படுத்தினால் , அது மொழி பெயர்ப்பு என்றுதான் அழைக்க வேண்டும், அதை சாருவின் எழுத்து என சொல்ல முடியாது.

ஆனால் சினிமாவில் இது நடக்கிறது.இது அயோக்கித்தனம் .  ஒன்றும் தெரியாமல் படம் எடுக்க வந்து விடுகிறார்கள். இதை சொன்னால் என்னை ஜென்ம விரோதியாக பார்க்கிறார்கள்
குருதிப்புனல் படத்தில் இது ஆரம்பித்தது. நக்சலைட் ஒருவன் தன் மனைவியின் ஜாக்கெட்டுக்குள் பணத்தை செருகி செல்வான். இப்படி ஒரு காட்சி.

ஒரு சிறுமியை பாலியல் நோக்கத்தோடு நக்சலைட் பார்ப்பது போலவும் , பிறர் மனைவி மீது ஆசைப்படுவது போலவும் காட்டி இருப்பார்கள். இப்படி எல்லாம் செய்தால், நக்சலைட் இயக்கதில் இருக்க்வே முடியாது. தூக்கில் போட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடுக்கு பேர் போனவர்கள்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் ஏன் படம் எடுக்கிறீர்கள். ஏன் அவர்களை பொறுக்கிகளாக காட்டுகிறீர்கள். நகசலைட்டுகள் என்னை வர்க்க எதிரியாக பார்க்க கூடியவர்கள். அவர்கள் ஆட்சி அமைந்தால் , என்னை நாடு கடத்தி விடுவார்கள். ஆனாலும்  நியாயத்தை பேச வேண்டும் என விரும்புகிறேன்.

ஓர் இலக்குக்காக செயல்படகூடியவர்கள் அவர்கள். கடும் கட்டுப்பாடு நெறிகள் கொண்ட அவர்களை , பொறுக்கியாக காட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். இதை சொன்னால் கமல் என்னை எதிரியாக நினைக்கிறார். பொது இடங்களில் பார்த்தால் , கண்டும் காணாமல் சென்று விடுகிறார்.

இதை எல்லாம் பார்த்தால் , ஏன் இவர்களுடன் போராட வேண்டும் என்ற அலுப்பு ஏற்படுகிறது. அத்னால்தான் இப்போது நான் எழுவதில்லை.


இன்னொன்று நான் பரிந்துரைக்கும் வேற்று மொழி படங்களை பலர் பார்ப்பதில்லை. காரணம் ஆங்கில அறிவு போதாமை. சினிமாவில் நுழைய விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக ஆங்கில அறிவு தேவை. ஆனால் நம் கல்வி திட்டத்தில் அதற்கு இடம் இல்லை. ஆங்கில அறிவு இல்லாமல் , அந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். போராடி போராடித்தான் ஆங்கிலம் கற்றேன்.

ஆங்கிலம் தெரியாவிட்டால் , ஏதோ ஒரு முக்கியமான ஒன்றை இழந்து விட்டீர்கள் என அர்த்தம். சினிமா என நாம் இது வரை கற்றுக் கொண்ட குப்பைகளை மனதில் இருந்து அகற்றவே பல ஆண்டுகள் ஆகும். இதற்கு உலக படங்களை பார்க்க வேண்டும். எனவே ஆங்கிலம் மிக மிக அவசியம்.

( தமிழ் நாட்டின் டாப் டென் mediocrates , பார்க்க வேண்டிய படங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் , ராமாயண எரிப்பு , சினிமாவாக எடுக்க வேண்டிய புத்தகங்கள் , சாரு நாவல்களில் எதை சினிமா ஆக்க முடியும் , கமல் நூறு முறை பார்த்த சினிமா எது , ஏன் பார்த்தார் , இசை அமைப்பாளரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் - இது போன்ற சுவையான விஷ்யங்கள் அடுத்த இடுகையில் )

- தொடரும்



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா