Sunday, March 27, 2022

படிக்க வேண்டிய எட்டு ஷார்ட் & ஸ்வீட் நூல்கள்

 மழைமான்  நூல் குறித்த  உங்கள் பார்வை ஓரளவுக்கு  ஓகே  , மேலும்  நன்றாக எழுதும் அறிவை தங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை அல்லது  பிரபஞ்ச பேரியக்கத்தை வேண்டுகிறேன்

நிற்க ,   இதே போல இன்னும் ஒரு  நாலு நூல்கள்  சொல்லுங்களேன்  நாங்களும் படிக்கிறோம் என சில நண்பர்கள் கேட்கிறார்கள்

தமிழிலேயே  ஆகச்சிறந்த  நாலு நூல்கள் நான் படித்ததிலேயே பெஸ்ட்  ஃபோர் என்று இல்லாமல்    மழை மான் போல  ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக  அதே சமயம் ஆழமாக யோசிக்க வைக்கும் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்

இந்த எட்டில் நான்கை  ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

இது தர வரிசை அல்ல  .    ஒரு வசதிக்காக முதலில் ஆங்கில  நூல்,,  அடுத்து வரும் தமிழ் நூல்களை  அவற்றின் தலைப்பின் அடிப்படையில் அகர வரிசையில்...


1 Tuesdays with morris - Mitch Albom

   நோய் வாய்ப்பட்டு , கொஞ்சம்  கொஞ்சமாக மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பழைய பேராசிரியரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசும் ஒரு ஆவணம் போன்ற நூல் அது.  மரணத்தையும் வாழ்வையும்  ஒரே நேரத்தில்  பார்க்கும் என் அனுபவம் உனக்கு உதவக்கூடும் என உற்சாகமாக தனது  பார்வையைப் பகிர்நது கொள்கிறார் பேராசிரியர்.   பல்வேறு விவகாரங்கள் குறித்த  ஆழமான பார்வைகள்


2 அஞ்சுவண்ணம் தெரு − தோப்பில் முகமது மீரான்


  இஸ்லாம் குறித்து  எதிர்மறையான நூல்கள் உண்டு   இஸ்லாமுக்கு  ஆதரவான பிரச்சார நூல்களும் உண்டு


 இஸ்லாமிய  கலாச்சாரத்தை  ,  அழகியலை ,   தொன்மங்களை , பொது சமூகத்துக்கு அது வழங்கும் அறிவுசார் கொடையை , கலைச்சொற்களை  பதிவு செய்யும் புனைவுகள் குறைவுதான்.    அஞ்சுவண்ணம் தெரு  வெகு அற்புதமாக"இப்பணியை இலக்கியரீதியாக செய்கிறது.    இஸ்லாமிய,பின்னணி என்றால் பொது,மானுடனின் இதயத்தை நோக்கிப்,பேசும் நாவல்


3,இரவு  −ஜெயமோகன்

    பகலில் உறங்கி இரவில் மட்டுமே விழித்திருக்கும்  ஒரு குழுவினர்  அவர்களது உலகம் என வித்தியாசமான ஒரு களத்தில் அமைந்த நாவல்.  நமது மனதின் இருளான பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது

4,ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு…

ஜீவ கரிகாலன்

இதை வெளிநாட்டு  கதைகளின் மொழி பெயர்ப்பு என சொன்னால் நம்பி விடுவோம்  அந்த அளவுக்கு புத்தம்புதிய கதைசொல்லல் யுக்திகள் ,  கச்சாப்பொருட்கள்  என அசத்தும் தொகுப்பு.   நூலின் எடை ,  கட்டமைப்பு,"வடிவம் போன்றவையும் உலகத்தரம்


5 கர்னலின் நாற்காலி  - எஸ் ரா


   கொரோனா  பொதுமுடக்க காலத்தை அர்த்தபூர்வமாக மாற்றியதில் எஸ்ராமகிருஷ்ணனின் குறுங்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு.  மரணம் வந்தால் வரட்டுமே  இந்த,குறுங்கதைகளை படிக்கும்வரை வாழ்ந்தோமே  அதுவே போதும் என நிறைவளிக்கும் வகையில் அவர் நூறு குறுங்கதைகள் எழுதினார்.  பல்வேறு கருப்பொருட்கள்   பல்வேறு  நடை  என,மாயாஜாலம் காட்டினார்  அக்கதைகளின் தொகுப்பு


6 கன்னி,  பிரான்சிஸ் கிருபா

காதல் என்பதன் பித்து நிலையை  , ஒரு பெண் என்பவள் ஆணுக்கு எப்படி பொருள் படுகிறாள் என்பதை ஒரு வித பித்தேறிய கவிதை நடையில்,சொல்லும் நாவல்


7 நாடோடியின் நாட்குறிப்புகள் − சாரு நிவேதிதா

மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த  கட்டுரைகளின் தொகுப்பு. புனைவுக்கும்  நிஜத்துக்கும் இடையேயான இடைவெளியை அழிக்கக்கூடிய பின் நவீனத்துவ எழுத்தாளர் சாரு.  எனவே இவரது பல கட்டுரைகளில் புனைவுத்தன்மை இருக்கும்.    அந்தந்த கால கட்டத்தை ஆவணப்படுத்தினாலும் என்றென்றும் relevant ஆக இருக்க்கூடிய கட்டுரைகளின் தொகுப்பு


8 பெத்தவன்    இமையம்

   ஆணவக் கொலை என பேப்பரில் படிக்கிறோம்    அது போன்ற ஒரு  தருணத்தை இரு தரப்பினரின் பார்வையிலும் சொல்லக்கூடிய நாவல்.

இதை இமையம் தவிர வேறு யாரும் எழுதிவிட்டு உயிருடன் நடமாடி இருக்க,முடியாது

அந்தவகையில் பார்த்தால் இது போன்ற நாவல் வந்ததும் இல்லை  இனியும் வர முடியாதுFriday, March 25, 2022

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் − எஸ்ரா நூல் வாசிப்பனுபவம்எஸ் ராமகிருஷ்ணனின்  மழைமான் சிறுகதை தொகுதி  சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு


 எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது.

அறம் அழிவது அன்றாட செயல்பாடாகி வருகிறது;

என்ற  பின்னட்டைக்குறிப்புகள்  இந்த சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு  பொருளைத்தருகின்றன


எளிய மனிதர்கள் என்பதே  ஒரு ரிலேட்டிவ் பதம்தான்;

உதாரணமாக  80களில்  எம்ஜிஆர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தபோது, கலைஞர் இனி வெல்ல வாய்ப்பில்லை என்றொரு சூழல் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை  ( கலைஞர் மீது அபிமானம் கொண்ட) நடிகர் ராஜேஷ் விவரித்திருப்பார்

ரயில் நிலையத்தில் தனது பெட்டியை தானே சுமந்து கொண்டு ,  தன் மனைவியாரோடு தன்னந்தனியாக கலைஞர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் மனம் கலங்கி விட்டது. எப்பேற்பட்ட அறிவாளி ,  தலைவர்   வரவேற்க்கக்கூட ஆள் இல்லாமல்  யாரோ ஒருவர் போல  வருகிறாரே  காலம் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமா என  உருக்கமாக எழுதியிருப்பார்


அதே கலைஞர்  எம்ஜிஆர் மறைவுக்குப்பின் விஸ்வரூபம் எடுத்தது வேறு விஷயம்.   


ஒரு  பார்வையில்  மனிதர்கள் அத்தனைபேருமே  எளியவர்கள்தான்.  காலம்தான்  சிலரை  அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில்  மாறி விடக்கூடியதுதான்


போலீஸ் அராஜகங்களை  தம் ஆட்சியின்போது எகத்தாளமாக  நியாயப்படுத்துவதும், ,  ஆட்சி மாறியதும்  எளிய மனிதனாக  கதறுவதும்  சர்வ சாதாரணமான  காட்சி


இந்த தொகுப்பில்  நடுத்தர  வாழ்வு என்ற ஓர் உலகுக்குள் நடக்கும் இந்த  ஒரு  பரமபத விளையாட்டை  அழகாக பதிவு செய்துள்ளார்  எஸ்ரா


உயர் ரசனையுடன் ,  கம்பீரமாக வாழும் ஒரு குடும்பத்தலைவி  ஒரு கல்லூரி மாணவனின்  அத்துமீறல்  என்றொரு செயலால்மனம்நிலைகுலைவதும்  அந்த  சம்பவம் நிகழ காரணமாக அமைந்த மற்ற  நிகழ்வுகளும்  ஒரு  முழு வாழக்கையையே  பிரதிபலித்து விடுகின்றன; ( அவன் பெயர் முக்கியமில்லை சிறுகதை)

வாழ்க்கை என்பது  எண்ணற்ற  தற்செயல்களின்  விளைவுகள்.  நம்மை மீறிய  செயல்களே   நம்மை எளியவனாகவும் வலியவனாகவும் மாற்றிக்காட்டுகின்றன


ஒரு கணம் முன்பு  உண்டியல் விற்கும் தாத்தா முன்பு  வலியவளாக இருந்தவள்  அதே  நாளில் ஓர் விக்டிம் அல்லது அபலை ஆகிப்போகிறாள்

அந்த நிகழ்வு  வேறோரு,பெண்ணுக்கு  கிளுகிளுப்பானதாக  அவளது ஈகோவை  வலுவாக்கும்  சம்பவமாக  அமைந்திருக்கக்கூடும்

இதன் பின்னணியில் நிகழும்  ஒரு கொலை சம்பவமும் இந்த எளியவன் வலியவன்  இருமையை அடிக்கோடு இடுகிறது.   

இதில் தன்னை  வலியவனாக உணரும் மாணவன்  ஒரே ஒரு நிமிடத்தில்   எளியவனாகும் வாய்ப்பும் இருக்கிறது  


ஒழுங்கின்மைக்குள்  ஏதோ  ஒரு  ஒழுங்கு இருக்கிறது  என்கிறது அறிவியல்

அதுபோல  அறமின்மைக்குள்  வாழும் அறம்தான் உலகை  வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது


இன்னொரு ஞாயிற்றுக்கிழமை  கதையில்  வேலையில்லாமல்  நண்பன் அறையில்  தங்கி இருக்கும்  தாமோதாரன்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு நாளாவது  வயிறார  சாப்பிட விரும்புகிறான்.    அதற்கு  அவன்  ஒரு யுக்தி வைத்திருக்கிறான்.


யாராவது  ஒரு  வசதியான  பழைய  நண்பனை   நட்புரீதியாக  சந்திக்கசெல்வதுபோல   மதிய வேளை  சந்தித்து  சுவாரஸ்யமாக புகழ்ந்து பேசி  அப்படியே  சாப்பிட்டு விட்டு  வந்து விடுவான்


பாஸ்கர்  என்ற  நண்பனிடம் இந்த யுக்தி பலிக்கவில்லை   துச்சமாக  நடத்துகிறான்  பசி  தாங்க முடியவில்லை  பாஸ்கரின்  பாட்டி  கொரியர்  செய்ய கொடுத்த  50 ரூபாயில்  தனது  நண்பனுடன்  சாப்பிட்டு  விடுகிறான்

கதையின் வெடிப்பு  நிகழ்வது  அதற்குப்பிறகுதான்.    50 ரூபாய்க்கு  பாட்டியை  ஏமாற்றிவனால்  அந்த  கவரில் இருக்கும்  500 ரூபாயை  அபகரிக்க முடியவில்லை

வலியவன் எளியவனை வாட்டினால்  எளியவன்  தான் துன்புறுத்த  தன்னை விட எளியவன் ஒருவனை கண்டுபிடிப்பான் என்ற   அறவீழ்ச்சியால் சூழப்பட்ட ஒரு யுகத்தின் மத்தியில்  அவனது அறம் விழிக்கிறது

தனக்கு நிகரானவரை  தன்னை விட உயர்நிலையில் இருப்பவரை ஏமாற்றுவதை ஏற்கும் அவன் உள்ளம்,தன்னை விட கையறு நிலையில் இருக்கும்  ஒரு கிழவியை  − அதுவும் அவள்  தன்னிலும் எளிய ஓர் அபலைக்கு உதவ முனையும்போது −, ஏமாற்றுவதை ஏற்கவே முடியவில்லை

Games people play என்பதுபோல, மனிதர்கள்,விளையாடும் இந்தக்கருணையற்ற  விளையாட்டின் விளைவை அவன் கண் முன் பார்ப்பது அவனுக்கு ஒரு தரிசனமாக  ( vision)அமைகிறது    அறம் என்பதையே  கேள்விக்குள்ளாக்குகிறது  ஓலைக்கிளி கதை

ஒரு காலத்தில்  ரவுடியாக  இருந்தவன்

 தற்போது திருந்தி விடுகிறான்  தன்

மகள் திருமணத்துக்கு கிட்டத்தட்ட பிச்சை எடுக்கிறான்.  


கடைசியில்  மகள் திருமணம் என்பதே பொய் என தெரி்கிறது.   வேண்டுமென்றேதான் செய்தேன்  எனக்கூறி  அதற்கொரு  லாஜிக்கலாக காரணமும் கூறி கடிதம் அனுப்புகிறான் குடும்பத்தினருக்கு அரிய பரிசு ஒன்றையும் அனுப்புகிறான்.அவன் செயலில் எவ்வித அறப்பிழையையும் நம்மால் காண முடிவதில்லை.    நமக்கே அவனைப்பார்க்க வேண்டும் என்ற  ஆசை ஏற்படுகிறது

  நம்மில் பலருக்கு உரிய சம்பளத்தை கேட்டுப்பெற பயம் ,   சாலை உடைசல் ,  குப்பை குவியல் இவற்றையெல்லாம் யாரிடம் முறையிடுவது என்று தெரிவதில்லை  தெரிந்தாலும் உரியவர்களிடம் முறையிட,தயக்கம்  , பயம் , சோம்பல்

இந்தக்கோழைத்தனத்தை  மறைத்து நம்மை நாமே  ஏமாற்றிக் கொள்ள ,  முகநூல் அவதாரம் எடுக்கிறோம்  .  விளாடிமின் புடின் ,   டிரம்ப் ,  மோடி , ஸ்டாலின்  ,  எடப்பாடி என அனைவரையும்  வீரமாக எதிர்க்கிறோம்.  வீரன்  சமூகப்போராளி  என  நம்மை நம்ப வைத்துக் கொள்கிறோம்.

இதை மழைமான் என படிமம் மூலம் அழகாக சொல்கிறது  மழை மான் கதை.   

சக பெண் ஊழியர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து  இன்ப அதிர்ச்சி அளித்து ஹீரோ ஆகும் முயற்சி அசட்டுத்தனமாய் முடிகிறது.  இப்படி அலுப்பூட்டும் வாழ்வில் சுவையாக ஏதேனும் செய்யும் பொருட்டு மான் ஒன்றை  பார்க்க  ஆசைப்படுகிறார் ஒருவர்  அந்த  தேடல் அனுபவத்தை  சாகசமாக ஆக்கிக் கொள்ளும்  சந்தர்ப்பங்களை  கோட்டை விடுகிறார். நிஜ மானை  தவற விட்டுவிட்டு  மழைமான் ஒன்றை  கற்பனையில் உருவாக்கி   மழை  நீர் மட்டுமே அருந்தும் கற்பனை  மானை  தான்  பார்த்ததாக  பிறரிடம்  அளந்து  விடுகிறார்.  அதை  தானும் நம்புவது மட்டுமல்ல   அதை  உண்மையில் பார்க்கவும் செய்கிறார்

ஆனால் மழைமான் கதையை  தன் மனைவியிடம் சொல்லும்போது அவள் சிரித்து விடுகிறாள்.  அவருக்கு  வலிக்கிறது.

முகநூலில் சமூக ஊடகங்களில் நாம் உருவாக்கி அலைய விட்டிருக்கும்  மழைமான்கள்  எத்தனை  எத்தனை


இந்த சிறுகதைத் தொகுப்பை  ஒரு  நான்லீனியர்  நாவலாகவும் வாசிக்க இயலும்.  

எளியவன்  வலியவன் எனும் இருமையை  இன்னொரு  கோணத்தில்  காட்டும் கதை ,  எதிர்கோணம்.   சிறந்த கேமிரா கலைஞனாக உருவாகி இருக்க வேண்டிய ஒருவரை  வாழ்க்கை பேருந்து நடத்துனராக ஆக்கி வைத்துள்ளது  அவரது வாழ்வின் ஒரு துளிதான் கதை.   எங்கோ பெற்ற அடியை  வேறு எங்கோ செலுத்தும் முடிவில்லா  அர்த்தமற்ற விளையாட்டு

இந்த விளையாட்டின் அபத்தம் நாம் முன்பு பார்த்த  கதையில் ஒரு கணத்தில் முகத்தில் அறைகிறது  இக்கதையில்  அந்த செயல்பாடு  நிகழ்கிறது


பாடல்களுக்கும்  நமக்குமான ( குறிப்பாக பெண்களுக்குமான ) உணர்வுப்பூர்வமான பந்தத்தைப்,பேசும் கதை ,   அபூர்வமான  பறவையை தேடும் அனுபவம்  முழுக்க முழுக்க  கவிதை நடையில் அமைந்த  மழைக்கதை என அனைத்தும்  அழியாத ஏதோ ஒன்றை  சொல்வதாகவே  தோன்றுகிறது

 வெறும் பிரார்த்தனை  கதையில் பொறுப்பற்ற   குடிகாரன ஒருவனால் குடும்பம்  அடையும்  மன உளைச்சல் காட்டப்படுகிறது   பொறுப்பற்ற  தந்தை  இரக்கமற்ற   வேலை சூழல்  கடுமையாக வேலை வாங்கும் முதலாளி என முழுக்க முழுக்க இருண்மையான வாழ்க்கை  ஆனால்  அந்த,முதலாளி ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு கிளம்பும்போதும் பத்திரமா போய்ட்டு வாம்மா என அன்பாக பேசி  ஒரு சாக்லேட் வழங்குவதில் அத்தனை வலியும் மறந்து போயவிடுகிறது

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது

இந்த  தொகுதியின் செய்தி என எஸ்ரா எதுவும் உத்தேசித்து  இருக்க மாட்டார்  ஆனால் எனக்கு இத்தொகுதி  வழங்கிய"செய்தி இதுதான்

மாபெரும் இருளை விட ஒரு சின்னஞ்சிறு தீப்பொறி ஆற்றல் மிக்கது


தூய வெளிச்சம் என்ற  கடைசிக்கதை எனக்கு  அவ்வளவு  நிறைவளித்தது.


எத்தனையோ கனவுகளுடன்  கலை உணர்வுடன்   ஒரு  மாளிகையை  எழுப்புகிறார்  குமாரசாமிப்பிள்ளை . வீட்டின் முகப்பில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்கு அந்த தெருவுக்கே இரவு முழுக்க நிலவு போல வெளிச்சமளிக்கும்


ஆனால்  குமாரசாமிப்பிள்ளையின் வாரிசுகளைப் பொருத்தவரை  அந்த வீட்டின்  கலையுணர்வோ   தூய வெளிச்சம் வழங்கும்  அவரது  நல்லெண்ணமோ பொருட்டில்லை..

பணம் மட்டுமே பொருட்டு.   எதற்கு  தெண்டமாக மின்விளக்கு என அந்த  விளக்கை  நிறுத்தி விடுகின்றனர்.  பிள்ளையின் மறைவுக்குப்பிறகு  அந்த வீடு இடிக்கப்படுகிறது

அப்படி  என்றால்  அவரது  ரசனை   நல்லெண்ணம் எல்லாம்  காரிருளில் மறைந்து  விட்டதா ? அந்த  வெளிச்சம்  யார் மனதிலும் இல்லாமல்  இணைப்புச்சங்கிலி  அறுந்து  விட்டதா என்பதற்கு  அற்புதமான   பதிலைத்தருகிறது கதை

     ரசனை   ,   நல்லெண்ணம் எனும் வெளிச்சம் என்றும் மறைவதில்லை  தனக்கான  கடத்தியை  தேர்வு  செய்து கொண்டு  அவை  காலம் காலமாக  தொடர்கின்றன

     ஒரு  திருடன்தான் இந்த வெளிச்சத்தை அடுத்த  தலைமுறைக்கு ஏந்திச் செல்கிறான் என்பது  சுவையான முரண்

அந்த  கட்டடத்தை   , அந்த  வெளிச்சத்தை  அணு அணுவாக  ரசிப்பவன்  அந்த  திருடன்.    அந்த  வீட்டிற்குள்  ஒரு முறையாவது  நுழைந்து பார்க்க வேண்டும் என திட்டமிட்டு  உள்ளே திருடச் செல்கிறான்

       வீட்டின் இருண்மை   அவ்வீட்டில் உள்ளோரின் மனநிலையை   அவனுக்கு  தெரிவிக்கிறது

    பிள்ளை  மரணத்துக்கு  இதயப்பூர்வமாக வருந்துபவன் அவன் மட்டுமே

      அந்த  வீடு இடிபட்டு தரைமட்டமாகும்போது அவ்வீட்டின் ஒரு சிறிய கல்லை  எடுத்துக் கொண்டு  அவன் செல்வதுடன் கதை  கவித்துவமாக முடிகிறது

       அந்த  தூய வெளிச்சம்  நம்முள்ளும் பரவுகிறது

    வித்தியசமான  துள்ளும் நடையில்  அனைத்து  கதைகளையும் படைத்துள்ளார்  எஸ்ரா . சும்மா  புரட்டிப்பார்க்கத்தான்  எடுத்தேன்   முடித்து விட்டுதான் வைத்தேன்

      இப்படி சுவையான நடையில் ஆழமான இலக்கிய நூல்கள் வருவது அரிது


தேசாந்திரி  பதிப்பகம் சிறப்பாக நூலை உருவாக்கியுள்ளது .  அட்டை ஓவியம் அருமை

      தொகுப்பின் பெயர்     மழைமான்

       பக்கங்கள்                       176

        விலை                                160


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா