Saturday, March 4, 2023

ஜெயகாந்தன் கலைஞர் சந்திப்பு, பகுதி 4

 மு.க: ஆமாம். இந்தத் தீவிரமான புதிய மதுவிலக்குச் சட்டம் குறித்து நான் முரசொலியில் எழுதியிருக்கிறேன். சென்னையில் எல்லாப் பகுதியிலும் ந்தாராளமாய் மது வியாபாரம் நடக்கிறது. முன்பு 10 ரூபாய் மாமூல் கிடைத்த போலீசுக்கு இப்போது 100 ரூபாய் கிடைக்கிறது.


ஜெ.கா: இந்திராகாந்தியைக் கொல்ல முயன்றதாக உங்கள் மீது ஒரு குற்றச் சாட்டும், வழக்கும். இருக்கிறது. அல்லவா? அது குறித்து ஏதேனும் சொல்லலாமா?


மு.க: என்ன சொல்வது? சிரிப்புதான் வருகிறது. என்மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்திராகாந்தியே ஒப்புக் கொள்ளமாட்டார் என்றுதான் நம்புகிறேன்.


ஜெ.கா: இது மாதிரியான பொருத்தமற்ற, அபத்தமான, அநியாயமான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்டோருக்குப் புத்திமதி சொல்லுகிற நீதி மன்றங்கள் வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே நமது நீதி மன்றங்களின் சுதந்திரத்தை மக்கள் நம்புவர். (இது) விஷயம் வழக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் திரு. மு.க. மெளனமான புன்னகையோடு தமது கருத்து உடன்பாட்டைத் தெரிவிக்கிறார்.) 


ஜெ.கா: உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? இந்தக் கேள்விக்கு முதலில் என் தரப்பிலிருந்து பதில் சொல்லி விடுகிறேன். எனக்கு உண்டு.


மு. க : நம்பிக்கைதானே உண்டு என்றீர்கள்? கடவுள் உண்டு சொல்லவில்லையே? 'உண்டென்பர் சிலர் இல்லை என்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலைஎன்னும் பாரதிதாசன் கருத்தே என்னுடையது. யாவற்றை யும் ஆட்டிப் படைக்கும் சக்தி உண்டுதான். அதை  நினைக்கக்கூடிய, சிந்தனை செய்கிற ஒரு சக்தியாக என்னால் கொள்ள முடியாது. எனவே, கடவுளிடம் பிரார்த்தனை வழிபாடு என்பது எல்லாம் என் அளவில் அர்த்தமற்றது. கடவுள் நம்பிக்கை, நடைபாதைகளிலெல்லாம் கோயில் களைக் கட்டிவிடுகிற மூட நம்பிக்கை ஆகிவிடக் கூடாது என்பதே கடவுள் பற்றி என் கருத்து


ஜெ.கே: கடவுள் நம்பிக்கையின் உதவியோடு ஒரு சமுதாயத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உருவாக்கப்பட்டால் ஆட்சேபம் இல்லையே?


'கல்பனா' முதல் இதழில் அர்த்தமுள்ள கேள்விகள் பகுதியில் பெரியார் சிலையின் அடியில் எழுதி வைக்கப்படுகிற 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்பன போன்ற வாசகங்களுக்கு நான் கண்டனம் தெரிவித்தேன். நடைபாதைக் கோயில்களால் விளைகிற அநாகரிகத்தைக் கண்டிக்கிற தாங்கள் இதையும் கண்டிப்பீர்களா?


மு.க: எனக்கும். அந்த வாசகங்களில் உடன்பாடு இல்லை. நான் திறந்து வைத்த பெரியார் சிலைகளில் ஏதோ ஒன்றில்தான் அது இருந்தது. அவற்றுக்குப் பதிலாக, பெரியாரின் வேறு பொன்மொழிகளை அவற்றில் குறிக் கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால் ஒன்று, நடை பாதைக் கோயில்கள் என்ற பெயரால் அவமானப் படுத்துவதை விட, பெரியார் சிலையில் எழுதப்பட்ட கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுளை நம்புகிறவர்களை அவமானப்படுத்தி விடமாட்டா என்பது என் எண்ணம்.


(இது எனக்குப் புரியவில்லை! அவமானமா அல்லவா என்று சம்பந்தப்பட்டவர்கள் அல்லவோ சொல்லுதல் வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.)


ஜெ.கா: நாமெல்லாம் ராமாயண - மகாபாரதத்தை இழித்தும் பழித்தும் பேசினோம். ஆனால் சோவியத் யூனியனில் நமது ராமாயண மகாபாரத இதிகாசங்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கப்படுகின்றன. வளரும் குழந்தைகளின் மனப்பண்புகளை உருவாக்க அவை மிகவும் பயன்படும் என்பதற்கு இது உதாரணம்.


மு.க: ராமாயணம்-மகாபாரதம் ஆகியவை இவக்கிய மாக எடுத்துக் கொள்ளப்படுமாயின் வரவேற்கத் தக்கதே. ஆனால் கல்வியறிவே இல்லாத மக்களின் மூட நம்பிக் கையை வளர்க்க அவை பயன்படுத்தப்பட்டதைத்தான் பெரியார் எதிர்த்தார்.


ஜெ.கா: அண்மையில் ஆளும் சுட்சிக்காரர்களின் வன்முறையைக் கண்டித்துத் தாங்களும் மற்றும் பல தோழமைக் கட்சித் தலைவர்களும் ஒரு நாள் கண்டன உண்ணா விரதம் இருந்தீர்கள். அந்த அனுபவம் குறித்து ஏதேனும்...


மு.க: தமிழ்நாட்டில் நான் முதல் அமைச்சராக இருந்த காலத்திலும் அதற்கு முன்பும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் வன்முறை நடந்தது உண்டு. ஆனால் அவை இந்த அளவுக்குத் திட்டமிடப்பட்டு, ஒரு பாராளு மன்ற அங்கத்தினரையே கொல்லும் அளவுக்கு இருந் தில்லை. அதிமுக ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் அரசியல் வன்முறைகள் எண்ணிக்கையில் எப்போதையும்விட அதிகமாயிருக்கின்றன. குற்றம் செய்கிறவர்கள் ஆளும்கட்சிக்காரர்களாய் இருந்தால் அவர்களை விட்டுவிடு கிறார்கள்; அல்லது காப்பாற்றி விடுகிறார்கள். அதனால்தான் எதிர்கட்சிக்காரர்களின் மீது தங்கு தடையற்ற வன்முறை செயல்களை அச்சமற்று அவர்களால் பிரயோகிக்க முடிகிறது. இவற்றை கண்டனம் செய்வதற்கான ஒரு அடையாளப் போராட்டத்தின் ஆரம்பமே அந்த ஒரு நாள் உண்ணாவிரதம். எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட இடையறாத போராட்டங்களின் மூலம்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியும். எந்தக் கட்சி வன்முறையில் ஈடுபடுவதையும் நான் ஏற்கவில்லை.


ஜெ.கா. தஞ்சை நாகைத் தேர்தல் அனுபவங்கள் பற்றி...


மு.க: தோல்வியால் எனக்குச் சோர்வு ஏற்பட்டுவிடவில்லை. தி.மு.க.வின் ஓட்டுகள் இந்தத் தேர்தலில் குறையவில்லை. மும்முனைப் போட்டி இருந்திருந்தால் தி.மு.க.தான் ஜெயித்திருக்கும். தமிழகத்தில் இந்திராவுக்கு உள்ள செல்வாக்கைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தஞ்சை வெற்றி அ.தி.மு.க.வின் பலத்தால் ஏற்பட்டது அல்ல. ஆனால் நாகை வெற்றி மிகப் பெரிது. பல கோடி ரூபாய்களை அங்கே வாரி இறைத்தும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச கட்டத்துக்குப் போயும் அ.தி.மு.க. அங்கு தோல்வி அடைந்ததற்குக் காரணம் கம்யூனிஸ்ட் - தி.மு.க. ஒற்றுமையே ஆகும். இந்த ஒற்றுமை எதிர் காலத்தில் மேலும் வலுவாக்கப்படும். வலுவாக்கப்பட வேண்டும்.


ஜெ.கா: நீங்கள் எப்பொழுதேனும் உங்களை ஒரு கம்யூனிஸ்டு எதிரி என்று நினைத்துக் கொண்டதோ, பிரகடனம் செய்து கொண்டதோ உண்டா?


மு.க: ஒருபோதும் இல்லை. குடியரசுப் பத்திரிகையில் பணியாற்றிய காலம் தொட்டுப் பொதுவுடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் நான். கம்யூனிஸ்டுத் தோழர்களோடு எவ்வளவோ மோதல்கள் ஏற்பட்டுள்ளன


எனினும் என்னை நான் ஒரு சும்யூனிஸ்டு எதிரியாக எண்ணிக் கொண்டதில்லை. மாறாக, நானே ஒரு கம்யூனிஸ்டு என்ற நினைப்பில் வளர்ந்தவன்.


ஜெ.கா: (சிரித்துக்கொண்டு) நினைப்பு எதற்கு ...நிஜமாகவே ஆகிவிடவேண்டியதுதானே? (தொடர்ந்து) கூட்டணி அரசியலைப் பற்றி ஒரு முக்கியமான கருத்தை உஙகளிடம் சொல்ல வேண்டும். கூட்டாக மக்கள் மத்தியில் ஓட்டுவாங்கியவர்கள் ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டாகவே அரசு அமைப்பதுதான் மக்களுக்குக் கொடுத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது ஆகும் என்கிற மரபு எதிர் காலத்தில் கைக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். உங்கள் கருத்து என்ன?


மு.க: அரசியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதை முதலில் கூர்ந்து கவனிப்போம். அத்தகைய மாற்றங்கள் உருவாகும் போது உங்கள் கருத்தைப் புறக்கணித்து விடமுடியாது. உளமார்ந்த உணர்வுகளுடனும், நேச மனப்பான்மையுடனும், மக்களுக்குத் தொண்டாற்ற முன்வரும் அரசியல் கட்சிகளாலேயே அது சாத்தியமாகும்.


(அத்தகைய சிறப்புக்குகந்த கட்சிகளாக தி.மு.க.வும்- உங்கள் தோழமைக் கட்சிகளும் உருவாக வேண்டியது தானே? என்று என்னுள் ஓர் எண்ணம் ஓடுகிறது)


ஜெ.கா: உங்களுடைய சினிமாப் படங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். உங்கள் பழைய படங்களின் வசனவரிகளில் பல எனக்கு மனப்பாடம்... அந்த துறையில் ஏதேனும் புதிதாக, உயர்வாக, குறிக்கோளுடன் சாதனை புரியும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா?


மு.க: ஆர்வம் இருக்கிறது, நேரம் இல்லையே.


ஜெ.கா: உங்களின் ஒரு நாளைய நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.


மு.க. நாட்களைப் பொறுத்தும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. அதனால் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி ஒரு பொய்ப் பட்டியல் தர நான் விரும்பவில்லை.


ஜெ.கா: நீங்கள் தேகப் பயிற்சி செய்வது உண்டா?


 மு.க: எப்போதாவது! முறையாக இல்லை!


அடுத்து ஒரு சந்திப்பில் இன்னும் நிறையப் பேசுவோமே! இப்போது கட்சிப் பணிகள் என்னை அழைக்கின்றன.


நன்றியும் வணக்கமும் கூறி நட்புடன் விடை பெறுகிறோம்.





Friday, March 3, 2023

கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு பகுதி 3

 ஜெ.கா: அதாவது உங்கள் கட்சி கடந்த காலத்தில் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடம் தந்ததன் விளைவுதானே இன்று உள்ள பல எதிர்மறை நிலைமைகளுக்குக் காரணம்?


மு.க:சந்தர்ப்பவாதிகள் சிலர் இருந்ததாலேயே அந்தக் கட்சியே சந்தர்ப்பவாதக் கட்சியாகிவிடாது! ஒரு அரசியல் கட்சி சூழ்நிலைக்கேற்ப சில முடிவுகளை ஜனநாயக ரீதியில் எடுப்பது சந்தர்ப்பவாதமாகாது.


(இந்த இடத்தில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன வென்று திரு. மு.க. நினைக்கிறார் என்று கேட்டிருக்கலாம்! இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்குமே!)


ஜெ.கா: இதையெல்லாம் நடந்து முடிந்தவற்றின் சுயவிமர்சனமாகத்தான் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது தி.மு. கழகத்தின் தலைவர் மட்டுமல்ல - உங்கள் தொண்டர்கள் சொல்லுவது போல - தமிழ் இனத் தலைவராய் உயர்ந்துள்ளீர்கள். எனவே உங்களுடைய ஜனநாயகப் பொறுப்புகள் இப்போது அதிகம். மக்கள் நம்மை நம்புவதால் நமது பொறுப்புகள் பெரிதாகி இருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற நம்மிடம் சித்தாந்த பலம் போதிய அளவு இல்லை என்பதை உணர்கிறீர்களா... (கலைஞர் தீவிர சிந்தனை வயப்பட்டவராய் மேலே சொல்லுங்கள்' என்று சைகை செய்கிறார்.)


ஜெ.கா: நீங்கள் மார்க்சிஸம் படித்து அதை நம மக்களின் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும். மார்க்ஸியம் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே உரியது என்று நீங்களும் கருதுகிறீர்களா? மார்க்ஸிசம் என்பது விஞ்ஞான பூர்வமா அரசியலே ஆகும். விஞ்ஞான பூர்வமான தீர்வுகளுக்கு  உதவும். உடனடியாக நம் வாழ்க்கையில் தனியுடைமையை நாம் ஒழித்தாக வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினருக்கும் தேசிய இயக்கத்தினருக்கும் சோஷலிச லட்சியம் பொதுவானதாய் இருந்தது அல்லவா?


மு.க: ஆம். நாங்கள் கம்யூனிசத்துக்கு என்றுமே பகைவர்களல்ல. தி.மு.க. தான் உண்மையான கம்யூனிஸ்டு கட்சியென்று ஒருமுறை அண்ணா அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார்.


ஜெ.கா: இப்போது எல்லாருக்கும் பொதுவானதாய் இருப்பது ஊழல் ஒன்றுதான். இந்த ஊழல் ஆபத்தை நாம் அனுபவ ரீதியாகவே அறிந்திருக்கிறோம். நமது வருங்கால சந்ததியினரையேனும் இதிலிருந்து காப்பாற்ற நாம் முயலுதல் வேண்டாமா? அதற்கு அடிப்படையாய் தனிச் சொத்துடைமையை மறுக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களை உருவாக்கி ஒன்று திரட்டி திராவிட சோஷலிச இளைஞர் அணி ஒன்றை ஏற்படுத்த உங்கள் இயக்கம் யோசிக்க லாகாதா?


மு.க: ஆம். அதுதான் சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதற்கோர் அணி அமைப்பது பற்றி பொதுப்படையாக யோசிக்க வேண்டும்.


(சோஷலிஸத்திலும், எதிர்கால சமுதாயத்திாாலும் அக் கறையுடைய எல்லாக்கட்சிகளும் யோசிக்க வேண்டுவது அல்லவா இது? என்பதே இதன் பொருள் என்று புரிந்து கொள்கிறேன்.)


ஜெ.கா: மறைமலையடிகள் திரு. வி.க. போன்றோரின் எழுத்துக்களால் இலக்கிய ஆர்வம் பெற்றதாகச் சொன்னீர்கள். அண்மையில் நீங்கள் எழுதிய ஒரு நாவலைநான் படித்தேன். நீங்கள் ஏன் இது மாதிரியெல்லாம் 'கதைக்காகக் கதை' எழுத வேண்டும்? இதை வைத்துக் கொண்டு நீங்கள் சமூக உணர்வோடு எழுதவில்லை என்று நான் சொல்லவில்லை...


மு.க: சமூகக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்தி நான் எழுதிய நூல்களும் கதைகளும் ஏராளமிருக்கின்றன. நான் எழுதும் படங்களிலே கூட அதனை வலியுறுத்தியிருக் கிறேன். அண்மையில் வெளிவந்த ஆடு பாம்பே' படம் அதற்கு ஒரு சான்று. நீங்கள் அதைப் பாருங்கள்.


ஜெ.கா:


அவசியம் பார்க்கிறேன். உங்களைப் போன்றவர்கள் இடையறாது வலியுறுத்தியதன் காரணமாக நாங்கள் திருக்குறள் படிக்கிறோம். பழந்தமிழ் பண்பாடு களில் தீவிரமாக ஆராய்ச்சியும் ஈடுபாடும் கொண்டோராய் இருக்கிறோம். அதுபோல நீங்களும் புதிய சோஷலிசப் பண்பாடுகளில் ஈடுபாடுகாட்ட வேண்டும். சோவியத் யூனியனுக்குப் போய்வர வேண்டும். இந்திய-சோவியத் நட்புறவு இயக்கத்தில் நீங்களும் உங்கள் இயக்கமும் பேரார்வத்துடன் ஈடுபடவேண்டும். உலக அரசியல் அரங்கில் நம் போக்கு சரியான திசைவழியில் தெளிவாக இருந்தால்தான் இங்கே எல்லாம் சரியாக நடக்கும். இது மிகவும் அவசியம்.


(இந்தப் பேட்டியின் பிரதான நோக்கமே இது போன்ற சில முக்கியமான கருத்துக்களை இவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இவற்றுக்கெல்லாம் நான கலைஞரிடமிருந்து 'வினா-விடை போல் உடனடியாக பதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரும் நான் சொன்ன இந்த மிக முக்கியமான கருத்துக்களில் அக்கறை காட்டிக் கேட்டுக் கொள்கிறார்.)



ஜெ.கா: நீங்கள் சோவியத் யூனியனுக்குப் போனதில் லையே? இது எனக்கு மிகவும் ஆச்சரியம் தருகிறது. சரியான தருணம் வாய்த்துப் போவது சிறப்பாகவே இருக்கும். அப்படி ஒரு தருணம் வாய்த்திருக்கிறது. என்றுஎண்ணுகிறீர்களா? 


(திரு. மு.க.அதற்கு மௌனமாகப் புன்னகை புரிகிறார்.)


ஜெ.கா: நாம் ஆரம்பத்தில் பேசிய தமிழ் இன நலன்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் சிறப்படைவதற்கு சோவியத் யூனியனில் அமைந்துள்ள தேசிய இன சுயநிர்ணய உரிமை நமக்குச் சிறப்பாக வழிகாட்டும். இனப்பற்று எவ்வளவு ஆழமாகவும், ஆரோக்கியமாகவும் சோவியத் சமுதாயத்தில் ஒவ்வொரு தேசீய இனத்திலும் உருவாக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது என்பதை நாம் அறிந்து பயிலவேண்டும்.


மு.க : ஒன்றுபட்ட இந்தியா மிகமிக அவசியம். ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் இது தவறு செய்பவர்களுக்கு, தேசிய நலன்களின் பகைவர்களுக்கு அரணாகிவிடுகிறதே...!


ஜெ.கா: இன்றுள்ள நிலை என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்கள்? எனது கருத்தில் உலக மனித சமுதாயத்தில் ஒரு நூற்றாண்டுக் காலமாய் எழுந்துள்ள நிலைமையும் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு சமுதாய. நிலைமைகள் மாறியாக வேண்டிய வளர்ச்சியின் நிர்ப்பந்த மும், அதனை இயன்றவரை தடுப்பதற்கான அதன் எதிரி களின் முயற்சியும்தான். சமத்துவமில்லாத ஜனநாயகத்தில் ஒற்றுமை என்பது துர்பலம்தான். ஆகவே ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உடனடித் தேவை, ஜனநாயகம் போலவே சோசலிஷத்துக்கான மாற்றம்தான் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?


மு.க: இதைப் படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். இதுவே நம் குறிக்கோள். சொல் அளவில் உள்ள சோஷலிசம் செயல் வடிவம்பெற வேண்டும்.


ஜெ.கா: இந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா அந்தத் திசை வழியில் எந்த அளவு முன்னேறி இருக்கிறது?


மு.சு: கொள்கை அளவில்தான் - செயல் அளவில் கணிசமாகக் கணக்கிட்டுக் கூறமுடியாது.


ஜெ.கா: ஒன்றுபட்ட இந்தியாவில் சமத்துவம்...


மு.க: (குறுக்கிட்டு) ஒன்றுபட்ட இந்தியா, சமத்துவம் என்றெல்லாம் நீங்கள் சொல்லும்போது, உதாரணத்துக்கு நமது இந்திய அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கை எடுத்துக் கொள்வோம். மதுவிலக்கு தேவையா இல்லை என்ற விவாதத்தில் நாம் இறங்க வேண்டாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானதாய் அமை வேண்டும். சமத்துவமான நெறி முறைகள் வேண்டும். விஷயத்தில்கூட இங்கே மாநிலங்களுக்கிடையே பேதங்கள் நிலவுகின்றன. இது சரியல்ல என்று கருதுகிறேன்.


ஜெ.கா: உண்மையில் இவ்வளவு கடுமையான மதுவிலக்குச் சட்டங்களை யாருடைய நிர்ப்பந்தத்தில் நம் மீது திணிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?


மு.க: சந்தேகமே வேண்டாம். கள்ளச் சாராயக் காரர்களின் நிர்ப்பந்தம்தான். மதுவிலக்கு இல்லாதிருந்தால் அரசாங்கத்துக்குப் பணம் கிடைக்கும். மது விலக்கை அமலபடுத்தினால் ஆளுங்கட்சிக்காரர்களின் புரவலர்கள் சாராய வியாபாரிகளுக்கு லாபமாகவும், போலீஸ் களுக்கு மாமூலாகவும் நிறைய சம்பாதிக்க முடியும் அல்லவா?

ஜெ.கா: தீங்களும்தானே மது விலக்கை அமுல் படுத்தினீர்கள்?


மு.க: காமராஜரைப் போன்ற பெரிய தலைவர்கள் வற்புறுத்தியதனால், அதற்காக தி.மு.க.வின் மீது அபவாதங்களைக் கூறி மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பை உருவாக்கியதால், நான் மதுவிலக்கை மறுபடியும் கொணர நேர்ந்தது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தாமல் ஓரிரு மாநிலங்களில் மட்டும் அமல் படுத்துவது வெற்றி தராது என்பது என் கருத்து.


ஜெ.கா: நான் அது விஷயத்தில் காமராஜரின் விமர்சனங் களை அப்போதே ஏற்கவில்லை. ஆனால் மதுவிலக்கு இல்லாதபோது விற்பனையிலும் வினியோகத்திலும் சில வரைமுறைகளையும் கட்டு திட்டங்களையும் ஏற்படுத்துவது அவசியம். நீங்கள் சட்டம் போட்டு விட்டீர்கள் என்பதற் காக, தண்டித்து விடுவீர்கள் என்பதற்காக பயந்து கொண்டு ஒரு கோழைபோல் நான் குடிக்காமல் இருக்க வேண்டு மென்று விரும்புவீர்களா? என்னைப் போன்றவர்களைக் குற்றவாளியாக்குவதும், கோழையாக்குவதும்தான்.

சட்டத்தின் நோக்கமா?


மு.க: (வாய்விட்டுச் சிரிக்கிறார்) ஜெயகாந்தனின் வாதங்கள் சுவையானவை. சிந்திக்கத் தூண்டுபவை. ஆனாலும் அவற்றோடு என் கருத்துக்களை இணைத்துவிட வேண்டாம்.


ஜெ.கா: இந்த விஷயத்தில் நாட்டுப் பிரஜை வேறு: நாடாள்வோர் வேறு என்று பாகுபாடு செய்வது தவறு என்பது என் கருத்து.








Thursday, March 2, 2023

கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு −2

 சீர்திருத்த இயக்கத்தில் ஏற்பட்ட ஆர்வத்தால் படிப்பில் கவனம் குறைந்து எஸ்.எஸ்.எல்.சி பபுரீட்சையில்தோல்வியுற்றேன்.


ஜெ.கா: ஆனால் அப்போதே நீங்கள் 'முரசொலி கையெழுத்துப் பத்திரிகை தொடங்கியிருந்தீர்கள் அல்லவா


மு.க. ஆமாம்.


ஜெ.கா: இதற்காக உங்களைத் தனிப்பட நான் பாராட்ட வேண்டும். எவ்வளவோ பேர் கையெழுத்துப் பத்திரிகைகள் ஆரம்பித்திருக்கிறார்கள். வாழ்க்கையில் வேறு பொறுப்புகள்ஏற்பட்டதும் அவற்றைக் கை விட்டு விடுவார்கள். ஆனா நீங்கள் எல்லாக் காலங்களிலும் இதைக் கைவிடாம இருந்தது மட்டுமல்ல; இன்று மிகப் பெரிய அரசிய இயக்கத்தின் ஆயுதமாகவே அதை ஆக்கியிருக்கிறீர்கள் அடிப்படையில் நீங்கள் ஒரு பத்திரிக்கைக்காரர் என்று நான் கணித்தால் சரிதானே?


மு.க. சரியே.


ஜெ.கா: சமூக சீர்திருத்த இயக்கங்களில் மிக இளய வயதிலேயே ஈடுபட்டதாகக் கூறினீர்கள். அப்படி உங்களிள் ஈர்த்தவர்களில் முதலாக திரு அண்ணாத்துரை இல்ல யென்றே நினைக்கிறேன்.


 'மு.க: ஆம், அது உண்மைதான். பெரியார், அழகிரி ஆகியோர்தான் முதலில் என்னை இயக்கப் பணிகளில் ஈர்த்தவர்கள். அதற்கு முன்னாலேயே அண்ணா அவர்கள் இயக்கத்தில் இருந்த போதிலும் பின்னால்தான் என்னை ஈர்த்தவர் என்று அண்ணாை சொல்ல வேண்டும்.



ஜெ.கா: எந்த ஆண்டில் உங்களது மாணவப் பருவமும் சமூக இயக்கப் பணிகளும் சேர்ந்து இருந்தன?


மு.க: 1938 லிருந்து 1942 என்று சொல்லலாம். அப்போதே இலக்கியத்திலும் எழுத்திலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. இந்தி - எதிர்ப்பு இக்காலங்களில் தமிழகத்தில் உச்சமாய் இருந்தது. மறைமலையடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன், பெரியார். அண்ணா ஆகியோரின் எழுத்துக்களால் நான் பெரிதும் கவரப்பட்டேன். 


ஜெ.கா:அக்காலத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்த தேசிய இயக்கமல்ல காந்திஜி, நேருஜி, பாரதியார் போன்றவர்களின் எழுத்துக்கள் அல்ல - சுயமரியாதை இயக்கத்திலிருந்த சமூக சீர்திருத்த உணர்ச்சிதான் உங்களைப் பொது வாழ்க்கைக்குக் கொணர்ந்தது என்று சொல்லலாமா?


மு.க: தமிழ்மொழிப்பற்றின் காரணமாக இந்தி எதிர்ப்பும் சமூக சீர்திருத்தப் பணியும் என்னைப் பொது வாழ்வுக்கு இழுத்தன. எனினும் ஒரு விஷயத்தை விளக்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் தேசிய இயக்கத்துக்கு எதிரானது என்று பலர் நினைக்கிறார்கள். அது அப்படி அல்ல.


ஜெ.கா(குறுக்கிட்டு) ஆரம்பத்தில்

எல்லா இயக்கங்களும் சரியான இடத்தில்தான் தொடங்குகின்றன. சொல்லளவில் கூட சுயமரியாதை என்பதும் சுயராஜ்யம் என்பதும் மிகவும் நெருக்கமுடையவைதான். நாம் இப்படிக் குறித்துக் கொள்வோமே. ஒன்று சமூக சீர்திருத்த இயக்கம், இன்னொன்று, தேசிய அரசியல் இயக்கம். உங்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்தது சமூக சீர்திருத்த இயக்கம் தானே?


மு.க: ஆம், சமூக சீர்திருத்த உணர்ச்சிதான். பெரியார் இயக்கம் அப்போது அரசியல் இயக்கமாக ஆரம்பமாக வில்லை. சாதிக் கொடுமையும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சமுதாய விழிப்பு உணர்ச்சி இயக்கமாகப் பெரியாரின் இயக்கம் திகழ்ந்தது.


ஜெ.கா: எனவே இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தோரை சுயமரியாதை இயக்கத்தின் வாரிசுகள் என்று கொள்வது தகும் அல்லவா?


மு.க:ஆம், நிச்சயமாக. பெரும்பாலோர் அப்படித்தான்


ஜெ.கா: பின்னர் ஒரு பெரும் பகுதி இளைஞர் கூட்டம் | தி.க.விலிருந்து பிரிந்ததற்கான சரியான காரணம், சமூக அரசியல் ரீதியான காரணம் எது என்று எண்ணுகிறீர்கள்?


(கலைஞர் சற்று யோசிக்கிறார்)


ஜெ.கா (இடையூறில்லாம் குறுக்கிட்டு): பெரியாரின் இயக்கம் ஒரு தனித் தலைமையின்கீழ் நிரந்தரம் பெற்று விட்டதால் அதில் ஜனநாயக வாதிகள் மிகவும் குறைவாய் இருந்தனர். ஒரு கட்சி என்ற முறையில் அதில் உள்கட்சி ஜனநாயகம் சற்றும் இல்லாதிருந்தது வெளிப்படையாக தெரிந்தது. அப்போது புதிதாக சுதந்திரம் பெற்ற நம் நாடு சமுதாய அளவிலேயே ஜனநாயக அரசியல் நாகரிகத்தை அங்குரார்ப்பணம் செய்யவிருந்தது. நாடெங்கும் எழுந் இந்த ஜனநாயக உணர்ச்சியின் உந்துதல் தமிழர் இனத்தின் தனிப்பெரும் இயக்கமாய் விளங்கிய திராவிட கழகத்தின் உள்ளும் எழுந்தது. அதன் விளைவே தி.மு.க. என்ற சொல்லலாமா?


மு.க: இது மாதிரி இதுவரை யாரும் தி.மு.கழகத்தி தோற்றுவாயை எடுத்துச் சொன்னதில்லை. ஜனநாயகஉணர்வின் உந்துதலும் தி.மு.கழகத்தின் பிறப்புக்கு காரணம் என்று கூறலாம். இரு கழகங்களும் முறையே சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றன.


ஜெ.கா: பார்த்தீர்களா? எந்த ஒரு விஷயத்திலும் விருப்பு வெறுப்பற்று, விஞ்ஞான பூர்வமாய் ஆராய்ந்தால் விடைகள் சரியாகவே கிடைக்கின்றன. ஒரு காலத்தில் தி.மு. கழகத்தின் பிறப்பு குறித்து நானே என்னென்னமோ சொல்லியிருக்கிறேன், நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அப்போது இருந்த சூழ்நிலையில் நீங்களே இதைச் சொல்லி யிருந்தால் நான் ஒப்புக்கொண்டுதான் இருக்கமாட்டேன்.


மு.க: தி.மு.கழகம் எப்போதும் ஜனநாயகத்தில் உறு தியான நம்பிக்கை உடையது... எமர்ஜென்சியின்போது கூட ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக தி.மு.கழகம் போராடியதை அறிவீர்கள்.


ஜெ.கா: ஜனநாயக உணர்சியின் உந்துதலினால் பிறந்த தி.மு.கழகம் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை யுடைய தி.மு.க. கட்சிக்குள் அதனைப் பழுதுபடாமல் காப்பாற்றியது என்று சொல்ல முடியுமா?


மு.க: பின்னர்ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் மத்தியிலும்கூட ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு, தனிநபர் மோகம், தலையெடுத்து வளர்ந்து வந்தது. நாங்கள் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். கழகத்துக்குள்ளே சம்பத், கண்ணதாசன் போன்றவர்கள் அப்போதே இந்த "சினிமாமோக' ஆபத்து குறித்து எச்சரித்து எதிர்த்துப் போராடினார்கள். வெளியிலும் உங்களைப் போன்றவர்கள் பலர் அதனைச் சுட்டிக்காட்டினார்கள்.

( தொடரும்)


Wednesday, March 1, 2023

கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு பாகம் 1



ஜூலை 10 செவ்வாய் காலை 10 மணி 1979,


திரு. மு.கருணாநிதி அவர்களை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திப்பதென்று முதல் yநாள் மாலைதான் உறுதியாயிற்று. இந்தச் சந்திப்பு ஏற்கனவே சுல்பனாவில் அறிவிக்கப்பட்டதுதான். எனினும் இது குறித்து வியப்பு அடங்காத எனது வாசகர்களும் திராவிட இயக்கத் தொண்டர்களும் ஏராளம் இருப்பர்.


இவரைச் சந்திக்க வருவது இரண்டாவது அனுபவம். முதல் அனுபவத்தைப் பற்றிய நினைவுகள், இப்போது எண்ணினாலும் சோர்வு ஏற்படுத்துகின்றது.


அப்போது திமுகழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளி யேற்றப் பட்டிருந்தார். தமிழகத்து வீதிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஒட்டிக் கொள்ளாத கார்களோ வாகனங்களோ திரிய முடியாத நிலை. அப்படிப் பட்ட கார்களில் இழிவான மொழிகளில் கருணாநிதியை எதிர்த்து எழுதப்பட்ட வாசகங்கள். ஊரெங்கும் பகைமையும் வெறுப்பும் பரவி வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்ந்து ஒரு கட்சியின்திமுகழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளி யேற்றப் பட்டிருந்தார். தமிழகத்து வீதிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஒட்டிக் கொள்ளாத கார்களோ வாகனங்களோ திரிய முடியாத நிலை. அப்படிப் பட்ட கார்களில் இழிவான மொழிகளில் கருணாநிதியை எதிர்த்து எழுதப்பட்ட வாசகங்கள். ஊரெங்கும் பகைமையும் வெறுப்பும் பரவி வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்ந்து ஒரு கட்சியின்


உள்விவகாரம் தெருப் பிரச்சினையானபோது, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த இவரை ஒரு பிரஜை என்கிற முறையில் உரிமையோடு சந்திக்கப் போனேன். அவரோடு நான் பேசியது அவரது குறித்துத்தாள். எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை சுட்சியின் உள்விவகாரம் குறித்து என் யோசனைகளை அவர் குறித்துக் கொண்டார். எனினும் அவற்றை இவர் நிறைவேற்றப் போவதில்லை என்ற அவநம்பிக்கைதான் அன்றைய முக்கால் மணி நேரச் சந்திப்பில் எனக்கு உருவாயிற்று.


அந்தச் சந்திப்புக்கு முன்னாலும் பின்னாலும் திரு. கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியிலும், ஏன் தனிப்பட்ட முறையிலும் கூட நான் மிகமிகக் கடுமையான சொற்களின் மூலம் விமர்சித்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். அந்தச் சொற்களும் தோரணைகளும் எவ்வளவு தவறானவையாக இருந்த போதிலும் அவற்றின் உள்ளடக்கத்துக்காகவும் எனது நேர்மை உணர்ச்சிக்காகவும் நான் இப்போது வருந்தத் தேவையில்லைதான். ஆயினும் அது குறித்து ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த மனிதரின் மனம் புண்பட்டிருக்கலாமே என்கிற உறுத்தலும் என்னுள் ஏற்படுகிறது. அவர் ஒரு முறை சொன்னார்: 'சிலரின் பேச்சுக்களால் என் மனம் புண்படுகிறபோது அவர்களது எழுத்துக்களைப் படித்து அப்புண்களை கொள்கிறேன்'' என்று. அப்படிப்பட்ட பேச்சுக்களைப் பேசியுமிருக்கிறேன். அத்தகு எழுத்துக்களையும் எழுதி யுமிருக்கிறேன். 


வழக்கம்போல் பத்து நிமிஷம் தாமதித்தே செல்கிறேன். மேலே குறிப்பிட்ட எண்ணங்களினாலும் இப்போது ஏற்பட்ட தாமதத்தினாலும்  அவரை ஏதிர்ப்பட்ட்ட மாத்திரத்தில்  இரு கரங்களையும் கூப்பி "மன்னிக்க வேண்டும்" என்ற வார்த்தைகளோடு எங்கள் இரண்டாவது

சந்திப்பைத் தொடங்குகிறேன்.


சந்திப்பின்போது என்னுடன் வந்திருந்த 'சுல்பனா' பதிப்பாசிரியர் திரு. கிருஷ்ணையாவைக் கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.


அவரை மொட்டையாகத் திரு. 'கருணாநிதி' என்று அழைப் பதா, திரு. மு.க என்று சொந்தத்தோடு குறிப்பிடுவதா என்கிற தடுமாற்றம் என்னுள் ஏற்படுகிறது. பொதுவாக இவரை மக்கள் 'கலைஞர்' என்றே குறிப்பிடுகின்றனர். ஒருவர் பெயரோ பட்டமோ ஒருவருக்குப் பொருந்திவர இதைவிடத் தகுந்த காரணம் தேவையில்லை. மேலும் கலைப்பணியில் இடையறாது இவரும் இவரது குடும்பத்தி னரும் ஈடுபட்டிருக்கின்றனர். இவரது தந்தையார்கூட ஒரு கலைஞரே.


ஏதோ ஒப்புக்காகப் பேசியதாக இல்லாமல் நான் அவரிடம் உளமார்ந்த மன்னிப்புக் கேட்டதற்கான காரணத்தையும் விளக்குகிறேன். திரு.மு.க. மனம் திறந்த சிரிப்போடு. இதையெல்லாம் பொருட்படுத்தினால் பொதுவாழ்வில் உயிர் தரித்து உலவ முடியுமா என்று சொல்லாமற் சொல்லி வரவேற்கிறார்.எனது கடுமையான விமர்சனங்கருக்காக மனம் புண்பட்ட தி.க. தோழர்களிடம் ஒரு முறை பெரியார் அவ்விதம் சொன்னதை நான் இப்போது எண்ணிக் கொள்கிறேன்.


திரு.முக சொல்கிறார்: 'அப்படியெல்லாம் நான் யார் மனமும் புண்படும்படி தனிப்பட்ட முறையில் பேசியதில்லை. கவிஞர் கண்ணதாசன்கூட என்னைப்பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறார். அரசியல் ரீதியானவற்றைத் தவிர பிறவற்றுக்கு நான் ஏதும் சொன்னதில்லை. 

இப்போதுகூட நமது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது இரண்டாவது மனைவியைப்பற்றி, தனிப்பட்ட முறையில் என்னைப் இழிவாக பேசியிருப்பதை அவரது பத்திரி கையிலேயே படித்திருப்பீர்கள்.''

ஜெ.கா: அவற்றையெல்லாம் நான் படிப்பதில்லை. மனம் புண்படுவதென்றால், தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனைப் பழிப்பதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் தமிழ் நாட்டு பிராமணர்களை மனம் புண்படப் பேசியிருக்கிறீர்கள். இது குறித்த உறுத்தலினால் அந்த விஷயத்தில் உங்கள் போக்கு மாறியும் இருக்கிறதே.


மு.க: பிராமணியத்தைத் தான் தாக்கியிருக்கிறோம். தனிப்பட்டவர்களை நான் தரக்குறைவாகப் பேசியதில்லை. தனிப்பட்ட முறையில் தாக்குவதால் ஏற்படுகிற தீம்பு என்னவென்றால், மாற்று அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுகிற மோதல்களும் கலகங்களும்தான்.


ஜெ.கா: அது மிகவும் வருந்தத்தக்கதே. நாமாவது தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட கி முறையில் நமக்குள்ளே எந்தவித வெறுப்போ பகைமையோ இல்லை என்று சந்திக்கிற சந்தர்ப்பங்கள் கிடைக்கிறபோது அவர்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதை  நான் ஒரு மரபாகக் கைக் கொள்கிறேன். சரி உங்களைப் பற்றி சொல்லுங்கள்.


மு.க.: நான் 1924 ல் அதாவது இப்போது அதிகமா அடிபடுகிறதே தமிழ்நாடு - கர்னாடக காவிரி நீர் ஒப்பந்தம்

அது கையெழுத்தான ஆண்டில் தஞ்சை மாவட்டம் திருக்குவளையில் பிறந்தேன். என் தகப்பனார் பெயர் முத்துவேல்.


ஜெ.கா: (குறுக்கிட்டு) முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள். அதிலெல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அதில் நம்பிக்கையையும் மரியாதை மரபையும் ஏற்படுத்தியவர்கள் இல்லையா? உதாரணமாக சாதிப் பேர்களை ஒழிப்பது என்ற பெயரால் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை என்னும் பெயரை மனோன்மணியம் சுந்தரம் என்று சொல்வது எவ்வளவு மரியாதைக் குறைவாகத் தொனிக்கும்? மரபு கெட்ட காரியமாக இருக்கும்?


மு.க.(சிரித்து): (எம்.ஜி.ஆரை நினைத்தார் போலும்): தமிழர் மரபுகளை அறியாதோரே இப்படிப்பட்ட தவறுகளைச் செய்வார்கள். என் தந்தை முத்துவேல் பிள்ளை மிகச் சிறந்த நாதசுரக் கலைஞர். அது மட்டுமல்லாமல் வேறு பல இசைக்கருவிகளையும் திறமையுடன் வாசிப்பார். தமிழிலும் சிறந்த புலமை உடையவர். என்னை இசைத் துறையில் இழுத்து விடவே அவர் பெரிதும் விரும்பினார்.


எங்களுக்குத் திருக்குவளையில் கோயில் மான்யமாகக் கிடைத்த நிலத்தில் உழவும், என் உறவினரிடம் இசையும் நான் இளம் பருவத்தில் பயின்றேன்.


ஜெ.கா: பள்ளிக்கூடத்தில் நீங்கள் கெட்டிக்கார மாணவராக இருந்தீர்கள் என்று நினைக்கிறீர்களா?


மு.க: ஆரம்பத்தில் நாள் நிறைய மார்க் வாங்கி மாவட்டத்திலேயே முதல் மாணவனாய் பெயர் எடுத்திருந்தேன். ஆனால் மிக இளம் வயதிலேயே சமூக

( தொடரும்)



.




.




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா