Thursday, March 7, 2024

சத்ய சாய்பாபா சந்திப்பு குறித்து துக்ளக் குருமூர்த்தி

 


 'எப்போதாவது புட்டபர்த்திக்குச் சென்றதுண்டா?'என்று சென்னை 40 - லிருந்து சுப்ர. அனந்தராமன் என்ற வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க பா.ஜ.க. தலைவர் அத்வானியுடன் இரண்டு முறை புட்டபர்த்தி சென்றிருக்கிறேன். அதற்கு முன் ஒரு முறை, தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசனுடன் அவரை பெங்களூரு White Field ஆஸ்ரமத்தில் தரிசித்தேன். 


அவர் மறைவதற்கு முன் நானும், நரேந்திர மோடியும் அவரை சென்னையில் தரிசித்தோம்

அவர் சித்தி அடைந்த பிறகு, 2014-ல் அவரது ஆராதனை தினத் தன்று உரை நிகழ்த்த புட்டபர்த்திக்கு அழைக்கப் பட்டு, அங்கு பேசினேன்  . 



அந்த உரையை யூ டியூபில் கேட்கலாம். அதை எழுத்து வடிவத்திலும் படிக்கலாம் 


.2006 -ல் நான் அத்வானியுடன் சென்றபோது தனி அறையில் பாபாவை தரிசித்தோம். கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் உள்பட ஆயிரக்கணக்கானோர் காத்திருக்க, அவர் எங்களுடன் ஒரு மணி நேரம் பேசினார். எப்படி பாரத நாடு பெரும் எழுச்சி பெறும், உலகுக்கு வழி காட்டும் என்பது பற்றித்தான் பேசினார் அவர். வளர்ச்சியும், ஆன்மிகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துப் போக வேண்டும் என்று கூறினார். அப்போது ஒரு மணி நேரம் என் கையைப் பிடித்தபடியே இருந்தார். தசையே இல்லாத பஞ்சு போல இருந்தது அவர் கை, விரல்கள். எனக்கு இனம்புரியாத ஒரு உணர்வு. அந்த முதல் அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது.




முதல் அனுபவம்




அவரைத் தரிசித்துப் பேசும் முதல் அனுபவம் வேணு ஸ்ரீனிவாசனால் கிடைத்தது. அந்தச் சமயத்தில் விமானப்படையின் மிக் போர் விமானம், மாதம் ஒன்று என்ற கணக்கில் விபத்தில் நொறுங்கி விழுந்து கொண்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா விலிருந்து வாரம் இருமுறை எனக்கு ஃபோன் செய்து, அது விபத்தல்ல, பாகிஸ்தான் ப்ளாக் மாஜிக் செய் கிறது. அதை பாபாதான் தடுக்க முடியும். நீங்கள் அவரிடம் அதுபற்றிப் பேச வேண்டும்' என்று என்னைப் படாதபாடுபடுத்தி வந்தார். நான் அதை வேணுவிடம் கூறினேன். ''குரு, அவரிடம் நேரம் கேட்டு யாரும் பார்க்க முடியாது. மூன்று நாட்களை ஒதுக்கி வை. ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்குச் சென்று அமர்ந்துவிட வேண்டும். என் நம்பிக்கை, ஏதாவது ஒரு நாள் அவர் நம்மைப் பேச அழைப்பார்" என்று கூறி னார் வேணு. 2-ஆம் நாளே அந்த வாய்ப்புக் கிடைத் தது. மற்றவர்களைச் சந்தித்த பிறகு எங்களை தனியே அழைக்க, விஷயத்தைக் கூறினேன். கண்ணை மூடி 2

 நிமிடம் தியானம் செய்துவிட்டு, "என்னிடம் சொல்லி விட்டதால், அதுபற்றி மறந்து விடலாம் என்று கூறி விடு" என்று தெரிவித்த அவர், "அவருக்கு (அமெரிக் கக்காரருக்கு) ஆசி தருகிறேன், அவரிடம் கொடுத்து விடு" என்று கூறி கையை மூடித் திறந்தார். கையில் ஒரு வைர மோதிரம் சைஸில் பெரியது. அமெரிக்க மனிதர் யார், ஆள் என்ன சைஸ் என்பது எனக்கே தெரியாது. சென்னை வந்தவுடன் அவரிடமிருந்து ஃபோன் வந்தது. விஷயத்தைக் கூறினேன். சென்னை வந்து என்னைச் சந்தித்தார். பெரும் சரீரம். மோதிரம் பொருந்தும் என்று தெரிந்து விட்டது. நடந்ததைக் கூறி அதைக் கொடுத்தேன். அவருக்காகச் செய்தது போல் இருந்தது. ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் அதிசயங்கள் பற்றிய கேள்விகள்.


2002-ல் என் கேள்விக்கு 2014-ல் விடை




2014-ல் உரை நிகழ்த்த புட்டபர்த்திக்கு அழைத்த போதுதான், பாபாவின் கருத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், "நான் அதிசயமாக வரவழைக்கும் விபூதி, மோதிரம் போன்றவை யெல்லாம், உங்களை அழைக்க நான் அளிக்கும் விஸிட்டிங் கார்டுகள். பிறகு நான் வேதம், கீதை, புராணங்களிலிருந்து உங்கள் ஆன்மிக வாழ்க்கை மேம்பாட்டுக்கு வேண்டிய அனைத்தையும் கூறுகிறேன். ஒரு சிலருக்கே அதில் ஈடுபாடு இருக்கிறது என்பது எனக்கு வருத்தம்" என்று தெரிவித்திருப்பதைப் படித்தேன். 2002-ல் எழுந்த என் கேள்விக்கு 2014-ல் பதில் கிடைத்தது.




மகத்தான சேவைகள்


2011-ல் பாபா மறைந்தபோது, புட்டபர்த்தியில் அவரது வளாகத்தில், போட்டது போட்டபடியே கிடந்த கிலோகணக்கான தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் நாட்டுக்களைப் பத்திரமாகச் சேர்த்து வங்கியில் டெபாஸிட் செய்தார்கள் அறங்காவலர்கள். அதில் பாபா சமாதி கட்ட 35 லட்ச ரூபாயை ரொக்கமாகக் கான்ட்ராக்டரிடம் கொடுக்க, அதை அவர் வெளியே கொண்டு போகும் போது போலீஸ் அவரைச் சோதித்தபோது அந்தப் பணம் காரில் இருந்தது தெரிந்தது. அது போதுமே நமது ஊடகங்களுக்கு. பாபா ஆசிரமத்திலிருந்து பணம் கொள்ளை போகிறது என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டி, ஆஸ்ரமத்தை அரசாங்கம்  எடுத்துக் கொள்ளி வேண்டும் என்றெல்லாம் கூடப் பேசப்பட்டது. அந்த அநியாயம் பொறுக்காமல் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், பாபாவின் சேவைகளைப்  Sai Baba and the Neo-Mayos [11.7.2011] என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அவரது பல அரிய சேவைகளில் நான்கை மட்டும் குறிப்பிட்டேன்.




ஒன்று - ஆந்திராவில் வறண்ட அனந்தபூர் ஜில்லாவில், குடிக்க நீரில்லாமல் ரசாயன விஷநீர் குடித்து தவித்த 750 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்தார் பாபா. 200 கி.மீ. நீள குழாய் பதித்து, வழியில் மலை உச்சியில் 1 லட்சம் முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேங்கும் செயற்கை குளங்கள், 2 லட்சம் முதல் 10 லட்சம் லிட்டர் நீர் தங்க 18 நீர்தேக்கங்கள், 40,000 முதல் 3 லட்சம் லிட்டர் நீர்தேங்க உயர்நிலை நீர்நிலைகள் [overhead reservoir], இறுதியில் அவை எல்லாவற்றையும் 2,500 லிட்டர் நீர் கொள்ளும் 1,500 கான்கிரீட் தொட்டிகளில் இணைத்து, அதில் 4 குழாய் களை பொருத்தி மக்களுக்கு குடிநீர் அளிக்கப்பட்டது

 இவை எல்லாம் 18 மாதங்களில் நடந்தது. இதை, திட்டக் கமிஷன் நிகரில்லாத சேவை என்று புகழ்ந்தது.


இரண்டு - வறண்ட மேடக், மெஹபூப் நகர் ஆகிய ஆந்திர ஜில்லாக்களில் 250 கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கச் செய்தார் அவர். 


அடுத்து 2002-, சென்னை மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்ததைக்கண்ட அவர், 150 கி.மீ. நீள தெலுங்கு கங்கை கால்வாயில் அரசியல் காரணங்களால் நின்றுபோன 69 கி.மீ. கால்வாயை வெட்டி, கரைகளைச் சீரமைத்தார். இன்று சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைக்கக் காரணம் அவர். நான்காவது அவரது பெங்களூர் தர்ம ஆஸ்பத்திரியில் 2011 வரை 10 லட்சம் பேருக்கு சிகிச்சை, 7 லட்சம் இதய பரிசோதனைகள், 35,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை, 40,000 பேருக்கு கண் ஆபரேஷன் அனைத்தும் இலவசம். படித்து விட்டு வாயைப் பொத்தி நின்றன ஊடகங்கள்.





காஞ்சி மஹான் அருளிய குணம்




 காஞ்சி மஹானின் வழிகாட்டுதலில் வளர்ந்து,உருவான நான், அவரையும் பாபாவையும், யாரையும்  யாருடனும், ஒப்பிட்டதில்லை. ஆன்மிகப் பெரியோர் த யாராக இருந்தாலும், அவர்களை ஏற்று வணங்கும்  குணம் எனக்கு ஏற்பட்டதே காஞ்சி மஹானின்  ஆசியால்தான். சோ உள்பட பலர் எப்படி உங்களால்  அனைவரையும் ஏற்க முடிகிறது என்று கேட்டபோது, ஆன்மிகப் பெரியோர் யாரானாலும் நம்மைவிட ம் உயர்ந்தவர் என்று நினைப்பதால், யார் யாரைவிட உயர்ந்தவர் என்ற கேள்வி என் மனதில் எழுந்ததே கிடையாது' என்று தெரிவித்தேன். மதமாற்றம் செய்யாமல் சேவை, பக்தியை பரப்பும் ஆன்மிகப் பெரியோர் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. பெரியவரின் உபந்நியாசங்களை 'தெய்வத்தின் குரல் என்ற பிரம்மாண்டமான 7 பகுதிகளாகத் தொகுத்த ரா.கணபதி, புட்டபர்த்தி சாய்பாபா பற்றி எழுதலாமா என்று பெரியவரைக் கேட்க, "தாராளமாக எழுது' என்று கூறினார். "தீராத விளையாட்டு சாயி" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று எழுதினார் அவர். என்னைப் பொறுத்தவரை சாய்பாபா ஒரு சித்தர். சித்தர்களைப் புரிந்து கொள்வது சுலபமல்ல.












No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா