Saturday, August 29, 2020

மனுதர்ம அடிப்படையில் இந்திய சட்டம் உருவாக்கப்பட்டதா ? விஜயகாந்த் பரபரப்பு

 மனுதர்மம் என்பது எப்போதுமே

 சர்ச்சைக்குரிய ஒன்று


ஏதாவது ஒரு குக்கிராமத்தில் ஏதாவது ஒரு ஆணவக் கொலை நடந்தால் அதற்கு மனுநீதி மேல் பழியைப்போடுவோர் உண்டு. உண்மையில் அந்த கிராமத்தில் யாரும் மனுதர்மம் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்


சாதி என்பது பிறப்பால் வராது. குணிதிசயங்கள்தான் மனிதனின் உயர்வை தீர்மானிக்கிறதென அது சொல்வதாக சிலர் சொல்கின்றனர்


அது சாதிய நூல் என்போரும்

உண்டு


கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் இப்படி பேசுகிறார்


வேதம் கற்ற அந்தணன் தவறு செய்தால் அவனுக்கு கூடுதல் தண்டனை விதிக்கிறது மனுதர்மம்.  அந்த மனிததர்ம அடிப்படையில்தான் இந்திய அரசல் சட்டம்  அமைந்துள்ளது என அனல் பறக்க"பேசுகிறார்


அதாவது படித்தவர்கள்  அதிகாரத்தில் இருப்போருக்கு கூடுதல் தண்டனை என மனு சொல்வது நல்லது என்கிறார்;


 மனுதர்ம ஆதரவாக ஒரு சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் பேசியது ஆச்சர்யம்









Wednesday, August 26, 2020

வினோதமான அறிவியல் கேள்விகள்

 திடீரென பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்


90% ஒளியின் வேகத்தில் ஒரு பந்தை எறிந்தால் என்னாகும் 

உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரே நேரத்தில் லேசர் ஒளியை நிலவின் மீது பாய்ச்சினால் அதன் நிறம் மாறுமா



தனிம ஆவர்த்த அட்டவணையில் இருக்கும் தனிமங்களால் உருவான செங்கற்களை பயன்படுத்தி தனிம ஆவர்த்த அட்டவணையைப் போலவே ஒரு சுவர் கட்டினால் என்ன நடக்கும்;


உலகின் அ னைத்து மக்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் ஒரு குதித்தால் என்ன நடக்கும்


திடீரென அனைத்து  மனிதர்களும் ஒரே நேரத்தில் அழிந்துவிட்டால் , மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளி மூலங்கள் அணைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்

கீழ் நோக்கி துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் எதிர்விசையை பயன்படுத்தி பறக்க முடியுமா

நொடிக்கு ஒரு அடி என்ற வேகத்தில் பறக்க ஆரம்பித்தால் நம் மரணம் எப்படி நிகழும்


இண்டர்நெட் இயங்க எவ்வளவு இடம் தேவைப்படுகிறது


பறக்கும் துப்பாக்கி குண்டை மின்னல் தாக்கினால் என்ன ஆகும்


ஒரு பந்தை எவ்வளவு வேகத்தில் அடித்தால் அது கோல்கீப்பரைத் 


தள்ளிக்,கொண்டுபோய் அவருடன் சேர்ந்து கோலில் விழும்


உலகில் அனைவரும் தம்மை இரு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் ஜலதோஷத்தை உலகினின்று ஒழித்துவிடலாகுமா 


திடீரென நம் உடலின் டிஎன்ஏ மறைந்துவிட்டால் என்ன ஆகும்


தேநீரை அதிவேகமாக கலக்குவதன் மூலம் அதை சூடாக்க முடியுமா


இது போன்ற பல சுவையான கேள்விகளையும் பதில்களையும் ஒர் ஆங்கில நூலில் படித்தேன்


பதிலை யோசியுங்கள்...






Monday, August 24, 2020

இந்திய இணைப்பு மொழி !

 டெல்லிக்கு ஒரு வேலை விஷயமாக சக அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன்

எனக்கும் அவருக்கும் இந்தி தெரியாது

ரயிலினின்று இறங்கி ஒருவரிடம் வழி கேட்க வேண்டியிருந்தது

எனது சகா தனது ஆங்கிலப்புலமையைக் காட்டி ஆங்கிலத்தில் வழி கேட்டார்.

டெல்லிக்காரர் புரியாமல் விழித்தார். நான் இந்தி கலந்து தமிழில் கேட்டேன். அவரும் ஏதோ பதிலளித்தார். வழி புரிந்து விட்டது

என்ன தமாஷ் என்றால் எனக்கும் அவருக்கும் இந்தி தாய் மொழி கிடையாது.  

வட இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. உயர்வர்க்கம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும் சராசரி மக்களின் இணைப்பு மொழியாக உள்ளது.

மோடி , காந்தி என பலருக்கு தாய்மொழி ஹிந்தி கிடையாது . ஆனால் வட இந்தியாவில் ஒரு சாமன்யனிடம் ஆங்கிலம் பேசினால் காமெடியாக இருக்கும் என்பதால் இந்தியை ஏற்கின்றனர்

டெல்லி , ஹரியானா , ராஜஸ்தான் , அஸ்ஸாம் , பீகார்  , மகாராஷ்ட்ரா என பல இடங்களிலும் இந்தியை வைத்து ஒரு சாமான்யனிடம் உரையாடிவிட முடியும்

தமிழ் நாட்டில் இப்படி மாநிலங்களுக்கிடையேயான பயணம் குறைவு என்பதால் நமக்கு ஒமெரு

 பொது இந்திய மொழியின் அவசியம் ஏற்படவில்லை


ஆனால் தென் மாநிலங்களிடையே பயணம் என்றால் , ஒரு சாமான்யனிடம் ஆங்கிலம் பேசுவது எவ்வளவு காமெடியோ அதே நிலைதான் ஹிந்திக்கும்

இரண்டுமே தென்னகத்துக்கு அந்நிய மொழிகளே.

இது வட இந்தியர்களுக்குப் புரிவதில்லை


ஆங்கிலத்தை வைத்து சமாளிக்கலாம் என்ற நம் ஆட்கள் கருத்து முட்டாள்தனமானது.  வட இந்தியா போல தென்னக மக்களும் தமக்குள் ஹிந்தி பேசுவார்கள் என்ற வட இந்தியர்கள் கருத்தும் முட்டாள்தனமானது

உலகோடு உறவாட ஆங்கிலம் , நமக்குள் உரையாட தாய்மொழி , இதைத்தவிர இன்னும் இரு இந்திய மொழிகளும் , ஒரு அயல்தேச மொழியும் தெரிந்திருப்பதுதான் நம்மை தன்னம்பிக்கை மிகுந்த முழு மனிதனாக்கும்

பணக்கார மாணவர்களுக்கு இது கிடைக்கிறது

ஏழை மாணவர்கள் வாழ்வில்தான் பலரும் விளையாடுகிறார்கள்

இன்ன மொழி படி என கட்டாயப்படுத்தாமல் , தனியார் பள்ளிகள் பாணியில் மாணவரே அவரவர்க்குத் தேவையான மூன்றாவது மொழியைத் தேர்வு செய்ய வழி வகை செய்வதே சமூக நீதி



Friday, August 21, 2020

இந்திராகாந்தியை எதிரத்த சகுந்தலா தேவி

    மனித கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் சகுந்தலா தேவி குறித்து ஒரு  திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

சினிமா ஸ்டார்கள் அரசியல்வாதிகள்  கிரிிக்கெட் வீரர்களைக்  கொண்டாடும் தேசத்தில் இது நன்முயற்சிதான்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்து பெரிய உயரம் தொட்டவர் இவர்.

கணித மேதை ராமானுஜனுடன் ஒப்பிடத்தக்க கணித மேதை அல்லர் இவர்.

இன்னொரு வித்தியாசம்.  ராமானுஜன்  தன் மேதைமைக்குக் காரணம் நாமகிரித் தாயார் என பதிவு செய்திருக்கிறார்.  சகுந்தலா தேவி அது தனது மன ஆற்றல் என்றும் முயன்றால் யாரும் இதை செய்யலாம் என்றும் சொன்னவர்

மனதிலேயே பெரிய பெரிய எண்களைப் பெருக்குதல் , குறிப்பிட்ட ஆண்டு மாதம் தேதி சொன்னால் கிழமையைச் சொல்லுதல் போன்றவை இவரால் முடிந்தது.  

இந்த திறமை எப்படி சிலருக்கு பிறவியிலேயே வருகிறது என்பது புதிராகவே உள்ளது.

இவருக்கு இந்த திறமையை வைத்து போராடி தனக்கொரு இடம் பிடிக்கும் போர்க்குணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது பலராலும் அஞ்சப்பட்ட இந்திரா காந்தியையே தேர்தலில் எதிர்க்கும் துணிச்சல் இவருக்கு இருந்தது

வெளி நாடுகளில் பல மேடைகளைப்பார்த்த இவரை 

சென்னைத் தொலைக்காட்சியில் பயன்படுத்திக் கொள்ள சிலர் நினைத்தனர்.   ஆனால் இந்திராவை எதிர்த்தவர் என்பதால் மேலிட அனுமதி கிடைக்கவில்லை

இவர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கே வந்து கடுமையாக கத்தினார்.   தவறு அவர்கள் பக்கம் என்பதால் நிலையத்தினர் மழுப்பலாக சமாதானம் பேசினர்.   அவர் விடாமல் கத்தினார் கடைசியில் அவர்களும் கத்தி பெண்சார்ந்த வசைச்சொற்களை ( வழக்கமான ஆணாதிக்க ஆயுதம்)பெரும் பிரச்சனையாகி அடுத்த நாள் இது தலைப்பு செய்தியானது

இந்த போர்க்குணம்தான் ஆணாதிக்க உலகில் அவருக்கு ஓர் இடத்தைப் பெற உதவியது

ஆனால் அவர் மனம் எப்படி செயல்பட்டது,, கணிதவியலில் அவரது ஆர்வம் எப்படி..  ஆழ்மனக்காட்சிகள் போன்றவை புதிராக உள்ளன

படத்திலும் இவை குறித்துப் பேசவில்லை.

அவர் வாழ்ந்தபோது அவரைப் புரிந்து கொள்ளாத அவர் மகள் பார்வையில் பெரும்பாலான காட்சிகள்

அவரை அவர் குடும்பம் எப்படிப்பாரத்தது. என்பது ஆடியன்சுக்குப் பிடிக்கும் என நினைத்துளளனர்

சரியான யோசனைதான்

ஆனால் அவர் எப்படி உலகத்தைப்பார்த்தார் அவர் எப்படி எண்களைப்பாரத்தார் எனபதுதான் ஆவண மதிப்பை அளிக்கும்





Wednesday, August 19, 2020

இனக்கலவரத்தில் சித்துவின் உயிர் காத்த வீரன் - சேத்தன் சவுகான் நினைவலைகள்



 

 வரலாற்று நாயகர்களாக வாழ்வது கெத்து என்றாலும் அதற்கான விலையும் அதிகம்    ப்ரவைசி இருக்காது    இமேஜ் என்ற சிறையை மீறி எதுவும் செய்ய முடியாது அவதூறுகள்  பொறாமைகள் என் வாழ் நாள் முழுக்க அவதிதான்

  சத்தமில்லாமல் சாதனைகள் செய்து விட்டு சுதந்திரமாக உற்சாகமாக தான் நினைத்தபடி வாழ்வது ஒரு வகை


சில பாடல்களைக் கேட்டு கண்ணதாசன் பாடல் என நினைத்துக்கொண்டு இருப்போம் கடைசியில் பார்த்தால் அதிகம் பிரபலமாகாத ஒரு மேதை அதை எழுதி இருப்பார்

உதாரணமாக எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் “ நந்தா நீ என் நிலா நிலா “ என்ற பாடல் கண்ணதாசன் எழுதியதன்று

அதேபோல கிரிக்கெட்டில் பலர் இருக்கிறார்கள்   சமீபத்தில் காலமான சேட்டன் சவுகான் இப்படிப்பட்ட அமைதியான சாதனையாளர்களில் ஒருவர்


கவாஸ்கர் _ ஸ்ரீகாந்த்  கார்னிட்ஜ் _ ஹெயின்ஸ்     டேவிட் பூன் _ மார்ஷ்   போன்ற துவக்க ஆட்ட ஜோடிகள் உலகப்புகழ் பெற்றவை

அவற்றுக்கிணையான ஜோடிதான் கவாஸ்கர் _ சேட்டன் சவுகான் ஜோடி

இருவரும் இணைந்து பல ஆட்டங்கள் ஆடி இருக்கின்றனர் இந்த இணை பல சாதனைகள் செய்துள்ளது

ஆனால் கவாஸ்கருக்கு கிடைத்த பெயர் இவருக்கு கிடைக்கவில்லை   அதை இவர் விரும்பவும் இல்லை

தன்  எல்லைகளை உணர்ந்தவர் இவர்


சர்வதேசப்போட்டிகளில் ஒரு செஞ்சுரி கூட அடிக்காதவர் இவர்  ஒரு செஞ்சுரிகூட அடிக்காமல் ஓப்பனிங் ஆட்டக்காரராக பல ஆண்டுகள் நீடிக்க முடிந்ததை வைத்து இவர் அணிக்க்கு எவ்வளவு முக்கியமாக இருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்


அவரது பண்பு நலன் களுக்கு இரு உதாரணங்கள்


ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியின்போது அணித்தலைவர் கவாஸ்கருக்கு அவுட் கொடுக்கப்பட்டது   அது தவறு என நினைத்த கவாஸ்கர் எதிர்முனையில் இருந்த சவுகானைப்பார்த்து இந்த ஆட்டத்தை புறக்கணிப்போம்   என்னுடன் நீங்களும் வெளியேறுங்கள் எனச்சொல்லி விட்டு கிளம்பினார்


சவுகானுக்கு தர்ம சங்கடம்  அணிதலைவர் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டும் ஆனால் தானும் வெளியேறினால் இந்திய அணி தோற்றதாக அறிவிக்கப்படும் ஒரு களங்கமாக வரலாற்றில் பதிவாகி விடும்

அமைதியாக கவாஸ்கரிடம் சொன்னார்  உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் நான்  இதோ நானும்  வருகிறேன் என சொல்லி விட்டு நடக்கலானார்

ஆனால் அணி நிர்வாகத்துக்கு யோசிக்க நேரம் கொடுக்கும் பொருட்டு மிக மெதுவாக நடந்தார்     அதற்குள்   அணி நிர்வாகம் பேசி முடித்து ஆட்டத்தை தொடருமாறு சைகை செய்தனர்   ஒரு தவறான முன்னுதாரணம் தவிர்க்கப்பட்டது


அணியில் சேர்ந்த ஆரம்ப கால கட்டங்களில் அவ்வப்போது அணியை விட்டு நீக்கப்பட்டார் மீண்டும் கடும் முயற்சி செய்து உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக ஆடி அணியில் இடம் பெற்றவர் இவர்

ஓய்வு பெற்றபின் அணியின் மேனேஜராக பணியாற்றியபோதும் இவரது பண்பு நலன் பளிச்சிட்டடது


இந்திய வீரர் ஹர்பஜன் சிங் இன துவேஷமாக நடந்து கொண்டார் என்பது குற்ற்ச்சாட்டு   2008ல் ல்   டெண்டுல்கர் தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று இருந்தது..    ஒரு போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ஸை   குரங்கு எனத் திட்டி விட்டதாக பஞ்சாயத்து

அப்போது மேனேஜர் என்ற முறையில் சேட்டன் சவுகான் ரிக்கி பாண்டிங் உடன் பேசினார்

குரங்கு என்பது உங்கள் சூழலில் இன துவேஷ வார்த்தையாக இருக்கலாம். இந்தியர்களுக்கு அது கடவுள் என அனுமான் ஆலயங்கள் , அனுமன் சிலைகள் போன்ற படங்களைக்காட்டி விளக்கினார். ஹர்பஜன் அப்படிப்பேச  வாய்ப்பில்லை என புரிய வைத்தார். இவற்றை எல்லாம் விளக்கும் அளவுக்கு ஹர்பஜனுக்கு ஆங்கிலம் தெரியாது என சாமர்த்தியமாகப்பேசி ஹர்பஜன் சார்பில் தானே பேசி பஞ்சாயத்தை சுமுகமாக முடித்து வைத்தார்

இந்த தன்மை அவருக்கு அரசியலில் உதவியது.   உத்தர்பிரதேஷத்தின் லோக் சபா எம் பி யாக இருந்து இருக்கிறார். மறையும்போது அமைச்சராக மறைந்து இருக்கிறார்

உள்ளூர்ப்போட்டிகளில் தனது கடைசி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.  ஒரு முறை தனது தாடை உடைந்தபோதும்கூட களத்தில் நின்று ஆடியவர் இவர்..   அடுத்தடுத்து இரு போட்டிகளில் இரட்டைச்சதம் ,  தொடக்க ஜோடியாக 400 ரன்களுக்கு மேல் குவித்தது என இவரது சாதனைகள் ஏராளம் 

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 438 ரன் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்தியா கிட்டத்தட்ட அந்த இலக்கை எட்டிய நிலையில் நேரமின்மை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா எடுத்த ரன்கள் ( 429- 8)   இந்தப்போட்டியில் கவாஸ்கர் - சேட்டன் சவுகான் ஜோடி மிக அபாரமாக ஆடி 200 ரன்களுக்கு மேல் குவித்தது


1984ல் உள்ளூர் போட்டி ஒன்றை முடித்து விட்டு ரயிலில் தன் அணித்தோழர்களுடன் வந்து கொண்டு இருந்தார்.


அப்போது இந்திரா காந்தி படுகொலை நடந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது.


நவ்ஜோத் சித்து , ரஜீந்தர் கய் ஆகிய சீக்கிய வீரர்கள் அவருடன் பயணித்தனர். அவர்களைத்தாக்க  முயன்ற கூட்டத்தை அரண்போல நின்று காத்தவர் இவர்தான்


இவரைப்பற்றி கவாஸ்கர் உருக்கமாக கூறுவதாவது


” அவன் என் உயிர் நண்பன்  அவன் செஞ்சுரி அடிக்காமல் போனதற்கு நானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்..  ஒரு போட்டியில் 97 ரன்கள் எடுத்து இருந்தான்.  டீவியில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவர் செஞ்சுரி அடிக்கப்போகிறார்.. எழுந்து வந்து பால்கனியில் நின்று பாருங்கள் என சக வீரர்கள் அழைத்தனர். நான் நேரில் பார்த்தால் அவுட் ஆகி விடுவார் என்றொரு  நம்பிக்கை எனக்கு இருந்தது.. ஆனால் வற்புறுத்தலால் பால்கனியில் நின்று பார்த்தேன்.  என்ன கொடுமை.. நான் பார்த்த நேரம், அவன் அவுட் ஆகி விட்டார்.  இன்னொரு போட்டியில் அம்பயருடன் நான் போட்ட சண்டை காரணமாக அவுட் ஆகி விட்டான்


கடைசி ஆண்டுகளில் நாங்கள் அவ்வப்போது சந்திப்போம். வாழ்க்கை எனும் விளையாட்டின் கடைசி ஓவர்களில் இருக்கிறோம். எப்படியாவது செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பேன். அவன்சிரிப்பான்..  நீதான் செஞ்சுரி அடிப்பதில் வல்லவன்.  எனக்கும் செஞ்சுரிக்கும் ஒத்து வந்ததே இல்லை என்பான்.. அவன் சொன்னதுபோலவே சீக்கிரமே கிளம்பி விட்டான்.. என் துயரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை

Thursday, August 13, 2020

கவுண்டமணி செந்தில் காமெடியும் தேங்காயும்

 

சின்ன கவுண்டர் படத்தில் , எலுமிச்சம்பழம் எலுமிச்சங்காய்  , வாழைப்பழம் வாழைக்காய்..  மாம்பழம் மாங்காய் என இருப்பதுபோல , தேங்காய்க்கு பழம் என்பது இல்லை என்பதை வைத்து கவுண்டமணியை கன்ஃப்யூஸ் செய்வார் செந்தில்

 நாம் அனைவரும் அந்த காமெடிக்கு சிரித்து இருப்போம்.

ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் கிடையாது.  

தேங்காய் , தென்னை மரம் போன்றவை சங்க காலத்தில் இருந்ததற்கான ஆதாரம் சங்கப்பாடல்களில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என சில தமிழர்கள் கூறுகிறார்கள்.  தொ பரமசிவன் இப்படி கூறுபவர்களில் ஒருவர்.. ஏழாம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்த வந்தேறி மரம் இது..என சொல்கிறார்கள் ..

உண்மையில் தேங்காயின் பழத்தை குறிப்பிடும் சொல் தமிழில் உண்டு.. தேங்காய் குறித்த குறிப்பும் சங்கப்பாடல்களில் உண்டு

ஆனால் தேங்காய் என இருக்காது . தெங்கு , தென்னை மரம் என குறிப்பிட்டப்பட்டு இருக்கும்’


கோள் தெங்கின் குலை வாழை ,,,  ஒலி தெங்கின் இமிழ் மருதின்...  என்றெல்லாம் தென்னை குறிப்பிடப்படுகிறது..  எனவே தேங்காய் என்பது வந்தேறி கிடையாது


தென்னை + காய்  = தேங்காய்


தென்னை + பழம் = தெங்கம்பழம்


நாய் பெற்ற தெங்கம்பழம் என்று பழ மொழி உண்டு’


நாயிடம் தென்னம்பழம் ( தேங்காய்)  கிடைத்தால் அதனால் உடைத்து தின்ன முடியாது.. பிறர்க்கும் கொடுக்காது என்பது இதன் பொருள்


பழம் என்பதை கனிந்த வடிவில் பார்த்து பழகியதால் , தென்னம்பழம் என சொல்வது மறைந்து தேங்காய் என்றே சொல்கிறோம். 


ஆக தேங்காய் என்பது தமிழக மரம்தான் என்பதில் நினைவில் கொள்க


சமஸ்கிருத , ஹிந்தி , ஆங்கில அறிஞர்களிடம் இருந்து தமிழ்ப்பெருமையை நாம் காத்துக்கொள்ளலாம். தமிழறிஞர்களிடம் இருந்து தமிழைக்காப்பதுதான் பெரிய சவால் 


 


Saturday, August 8, 2020

நான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்





 

இந்தியா மறக்கக்கூடாத முக்கிய தலைவர்களில் ஒருவர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்.  சோஷலிச தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு இருந்த இவர் அறுபதுகளிலேயே , பிஜேபியின் (அப்போதைய ஜன சங்கம் ) எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்க்கதரினசத்துடன் நினைத்தவர்.ஆச்சார்ய நரேந்திர தேவ் தலைமையை ஏற்று பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட்ட இவர் , ஜனசங்கத்தை எதிர்க்க காங்கிரசால்தான் முடியும் என நினைத்து காங்கிரசில் சேர்ந்தார். 


மன்னர் மான்ய ஒழிப்பு , வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்ற இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் இவருக்குப்பிடித்து இருந்தன.  காங்கிரசில் இருந்த பழமைவாதப்போக்குகளுக்கு எதிராக குரல்கொடுத்த மோகன் தாரியா , கே , டி. மாளவியா போன்றோரை உள்ளடக்கிய இவரது குழுவினர் இளம் துருக்கியர் என அழைக்கப்பட்டனர்.  இந்திரா காந்துக்குமே பழைய தலைவர்களை பிடிக்காது என்றாலும் இந்திரா காந்திக்கு தர்ம சங்கடம் ஏற்படும் வகையில் , மொரார்ஜி தேசாய் போன்ற மூத்த தலைவர்களை எதிர்த்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருடன் அவ்வபோது மோதினார்


ஆனால் போக போக இந்திரா காந்தியின் தன்னிச்சையான போக்கு பிடிக்காமல் அவரையும் எதிர்க்கலானார். எம்ர்ஜென்சியின் போது , காங்கிரசில் இருந்தாலும் , கைது செய்யப்பட்டார்


சிறையில் இருந்து வெளி வந்ததும் ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார். இந்திரா காந்தியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது ஜனதா. ஜனசங்க உறுப்பினர்களுடன் இவர் மோதல் தொடர்ந்தது.


விரைவிலேயே ஜனதா ஆட்சி கவிழ்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது

இந்திரா காந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்தார். 1983ல் வட இந்தியா முதல் தென் இந்தியா வரை இவர் நடத்திய பாரத யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 


ஆனால் 1984ல் இந்திரா காந்தி படுகொலையால் , ராஜிவ் பிரதமரானார். ராஜிவ் ஆட்சியை எதிர்த்து வந்தார்

அடுத்த பொதுத்தேர்தலில் ராஜிவ் காந்தியை வீழ்த்து தேசிய முன்னணி ஆட்சி அமைக்கும் சூழல் வந்தது.  பிஜேபியும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன

விபிசிங் ஒரு சந்தர்ப்பவாதி , அவர் பிரதமராக ஆதரவு அளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்

சரி , விபி சிங் வேண்டாம் , தேவிலாலை பிரதமராக்குவோம் என உறுதி அளித்ததை அடுத்து அதற்கு ஒப்புக்கொண்டார்

ஆனால் கடைசி நேரத்தில் ( ஏற்கனவே விபி சிங்குடன் நடத்திய ரகசிய பேரத்தின் காரணமாக ) தேவிலால் விபிசிங் பெயரை முன் மொழிய விபி சிங் பிரதமரானார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

இந்த துரோகம் சந்திரசேகரை வெகுவாக காயப்படுத்தியது..

விரைவில் தேவிலாலுக்கும் விபிசிங்குக்கும் மோதல் ஏற்பட்டது

பிஜேபி தன் ஆதரவை தேசிய முன்னணி அர்சுக்கு விலக்கிக்கொண்ட நிலையில் , சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார். தேவிலால் துணை பிரதமர் ஆனார்

வெறும் ஆறு மாதங்களே ஆட்சியில் இருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் இந்தியாவை பேரழிவில் இருந்து காத்தன என்கிறது வரலாற்று நூலாசிரியர் ரொடெரிக் மாத்யூஸ் எழுதிய , சந்திரசேகரும் இந்தியாவைக் காப்பாற்றிய ஆறு மாதங்களும் என்ற நூல் 

தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு , தேர்தலை சில ஆண்டுகள் கழித்து சந்தித்து சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்த ராஜிவ் காந்தி , ஏன் அவசரப்பட்டு சந்திரசேகர் அரசை கவிழ்த்தார் என ஒரு புதிய 

கோணத்தை காட்டுகிறது நூல் . அதில் இருந்து ஒரு பகுதி

-----------------------------------------------

   ராமர் கோயில் கட்டுமானப்பணிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கி இருந்த ராம்ஜன்மபூமி ந்யாஸ் அறக்கட்டளை தலைவர்களும் அனைத்திந்திய பாபர் மசூதி  நடவடிக்கை கமிட்டி தலைவர்களும் பிரதமர் சந்திரசேகரை சந்திக்க வந்து இருந்தனர்.  ஷரத் பவாரும் , பைரோன் சிங் ஷெக்காவத்தும் ஏற்கனவே இவர்களுடன் பேசி இருந்தனர். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவர்கள்தான்

பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ந்தது

முதலில் இந்து தலைவர்கள் வந்தனர்

வெகு இயல்பாக  பதட்டமின்றி சந்திரசேகர் பேசினார் “ அயோத்தி பிரச்சனையில் என்னதான் செய்யலாம் . சொல்லுங்கள் “

அவரது இயல்பான தொனியை வைத்து , அவரை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம் என நினைத்த அவர்களும் இயல்பாக சொன்னார்கள்

“ இதில் பேச என்ன இருக்கிறது. அது ராமர் ஆலயம். அனைவருக்கும் தெரிந்ததுதானே அது “

இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்த சந்திரசேகர் சொன்னார்

“ சரி.. கொஞ்சம் சீரியசாக பேசுவோம். நான் இப்போது பிரதமர். எத்தனை நாள் பதவியில் இருப்பேன் என தெரியாது. ஆனால் நான் பிரதமராக இருக்கும்வரை யாரும் அந்த கட்டடத்தின்மீது கை வைக்க முடியாது “  சற்று இடைவெளி விட்டபின் தன் பாணியில் பேசினார் “ நான் விபி சிங் கிடையாது. மாநில முதல்வரிடம் பொறுப்பைதள்ளி விட்டு வாளாவிருக்கும் ஆள் நான் கிடையாது. யாராவது அந்த இடத்தில் கை வைத்தால் சுட்டுத்தள்ள உத்தரவிடுவேன். ஏழை நாடான இந்தியாவுக்கு இது போன்ற பிரச்சனைகள் தேவையே இல்லை. கடவுளுக்காகத்தானே போராடுகிறார்கள் , சுட்டுத்தள்ளி கடவுளிடமே அனுப்பிவிடுகிறேன் “

    அனைவரும் திகைத்தனர். இது பொதுக்கூட்ட மேடைக்கான வெற்றுப்பேச்சு அல்ல. ஒரு பிரதமராக உண்மையாக எச்சரிக்கிறார் என புரிந்து கொண்டனர்

” சரி  இஸ்லாமிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள் . அவர்களுடன் பேசி விட்டு முடிவெடுப்போம் “ என்றார்

அதன்பின் இஸ்லாமிய தலைவர்கள் வந்தனர்

   அவர்களுடன் பேசினார்

“ நான் வி எச் பியுடன் பேசி விட்டேன். தெளிவாக சொல்லி விட்டேன். நான் இங்கே இருக்கும்வரை அந்த இடம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் யோசியுங்கள். நாடுமுழுக்க லட்சக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர்.  நாளை ஏதேனும் கலவரம் என்றால் அனைவரையும் காக்கும் நிலையில் என்னிடம் போலிஸ் இல்லை. என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள் 

சரி.. இதை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்கிறோம் என இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்

“ சரி... சில அடிப்படை நெறிகளை பின்பற்ற வேண்டும். இரு தரப்பும் பேசுங்கள் ஷரத் பவாரும் , ஷெகாவத்தும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் முடிவை அரசு செயல்படுத்தும். இது சத்தியம். ஆனால் சில நிபந்தனைகள் . என்ன பேசுகிறீர்கள் என்பதை வெளியே சொல்லக்கூடாது. முடிவு எட்டப்படும்வரை விஷயம் வெளியே போகக்கூடாது”


இருபது நாட்கள் வரை பேச்சு நடந்தது. பைரோன் சிங் ஷெகாவத் வெற்றிச்சிரிப்புடன் வந்தார்

“ உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஆனால் இருதரப்புமே தம் ஆட்களை வெகுவாக உசுப்பேற்றி வைத்துள்ளனர். அதை எப்படி சரி செய்வது என்பதுதான் தெரியவில்லை “ 


ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் முன் வைத்த ஒப்பந்த நகல் இப்படி இருந்தது

“ இந்துக்களின் உணர்வுகளை மதித்து நிலத்தை அவர்களிடம் தர சம்மதிக்கிறோம். ஆனால் இரு நிபந்தனைகள் . மசூதி கட்ட எங்களுக்கு வேறு இடம் தர வேண்டும். இன்னொன்று , இது போன்ற பிரச்சனைகள் இனி ஒரு போதும் எழக்கூடாது என சட்டம் இயற்ற வேண்டும் , 05.08. 1947ல் மசூதியாக இருந்தவை மசூதி , கோயிலாக இருப்பவை கோயில் . இனி பிரச்சனைகள் எழவே கூடாது “


இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்


இந்த சம்பவதை ஷரத் பவார் தனது சுயசரிதை நூலில் உறுதிப்படுத்துகிறார்

பிரச்சனைக்குரிய இடத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டதாக எழுதுகிறார் அவர்

ஆனால் ஏன் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை? 

அங்குதான் அரசியல் விளையாடியது

ஷரத் பவார் , ராஜிவிடம் இந்த ஒப்பந்தம் குறித்து சொன்னார். ராஜிவ் சந்திரசேகரை போனில் தொடர்பு கொண்டார். “ நல்ல முறையில் தீர்வு கண்டமைக்கு பாராட்டுகள் . இரண்டு நாட்கள் யோசிக்க நேரம் கொடுங்கள் : என்றார் ராஜிவ்

இரண்டு நாட்களில் சந்திரசேகர் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்தார் ராஜிவ் 

இந்த பிரச்சனை சந்திரசேகர் ஆட்சியில் தீர்வு கண்டால் , அவர் ஒரு வலுவான தேசிய தலைவர் ஆகி விடுவார் என்ற அச்சம் ராஜிவுக்கு இருந்தது. இந்த பிரச்சனையை தான் முனைந்து தீர்ப்பதுதான் பழைய செல்வாக்கை ஈட்டுவதற்கான ஒரே வழி என ராஜிவ் நினைத்து இருந்தார். அந்த பெயரை சந்திரசேகருக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை

மலிவான அரசியல் மூலம் நடக்ககூடாத பல செயல்கள் நடந்து விட்டன


Chandra Shekhar And The Six Months That Saved India’ -  Roderick Matthews 




Tuesday, August 4, 2020

கோவில் கோயில் எது சரி ?


கோவில்...  கோயில்.. இரண்டில் எது சரி என்பதில் சிலருக்கு சந்தேகம்.

எவ்வளவோ பார்த்து விட்டோம்.. இதைப்பார்க்க மாட்டோமோ.. 

வாங்க பார்த்து விடுவோம்..

தலைவனின் அரசனின் அல்லது இறைவனின்  இல்லம் என்பதுதான் கோ இல்  

   கோ மற்றும் இல் ஆகியவை சேர்ந்தால் என்ன ஆகும் என்பதே கேள்வி

இரு சொற்கள் சேர்ந்தால் உருவாகும் புது சொல் எப்படி இருக்கும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றன

பூ + தொட்டி  = பூந்தொட்டி ( புது எழுத்து உருவாதல்)

மண் + வெட்டி     = மண்வெட்டி ( எந்த எழுத்தும் சேரவில்லை/ அழியவில்லை)

பனை + காய்  = பனங்காய்  ( ஐ அழிந்து , அங் என்ற சாரியை உருவானது)

இப்படி எல்லாம் பல்வேறு விதிகள் உள்ளன

கோ  இல் என்பது  எப்படி சேரும்?


கடல் .. அலை என்பது கடலலை என மாறும்..  தாய் .. அன்பு என்பது தாயன்பு என சேரும்


புள்ளி வைத்த எழுத்தை ( மெய் எழுத்து)  தொடர்ந்து இன்னொரு சொல் வரும்போது அதிக சிக்கல் இன்றி அப்படியே இணைவு நடக்கிறது

ஆனால் அடுத்து வரும் சொல் க ச ட த ப என்பதில் ஆரம்பித்தால் கவனம் தேவை
நாய் கடி   என்பது நாய்க்கடி என க் சேரும்

தாய் பாசம்   என்பது தாய்ப்பாசம் என்றாகும் 

 முதல் சொல் உயிர் எழுத்தில் முடிந்து அடுத்த சொல் உயிர் எழுத்தில் ஆரம்பித்தால் , வ் அல்லது ய் என புதிதாய் ஓர் எழுத்து சேர்ந்து , அவ்விரு சொற்களையும் சேர்த்து வைக்கும்

உதாரணமாக மொழி ;. அறிவு...    என்ற சொற்களுக்கு மத்தியில் ய் தோன்றுகிறது


மொழி  ய்  அறிவு  = மொழியறிவு

திரு  வ்  அருள்         = திருவருள் 


வ் வருமா ய் வருமா என தொல்காப்பியரிடம் கேட்டால் , அவர் இப்படி எல்லாம் திட்டவட்டமாக சொல்லக்கூடாது என்கிறார்

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்

உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்தால் , வ் ய் அன்ற எழுத்து  தோன்றும். ஆனால் இந்த எழுத்துதான் வரும் என வரையறுக்க மாட்டார்கள்

என்கிறார்

தக்காளி, அப்ப என்னதான் தீர்வு?

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே


சொற்களின் ஓசை நயத்துக்கேற்ப புது எழுத்து தோன்றும் என்கிறார்


 நன்னூல் என்ன சொல்கிறது ?


இ ஈ ஐ வழி “ய” வ்வும்

ஏனை உயிர்வழி “வ” வ்வும்

ஏமுன் இவ் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்


அதாவது முதல் சொல் இ ஈ ஐ என முடிந்தால் , ய் என்ற எழுத்து தோன்றும்


பள்ளி   அறை    -- பள்ளி  ய் அறை        பள்ளியறை


வாழை  இலை    ---  வாழை  ய் இலை      வாழையிலை


ஏ என்ற சொல்லில் முடிந்தால் ,  வ் ய் என இரண்டுமே வரக்கூடும்


மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் ,வ் தோன்றும்

 

மா  இலை    மாவிலை


அளவு  அறிந்து   அளவறிந்து


இந்த விதிப்படிதான் , கோ இல் என்பதை சிலர் கோவில் என எழுதுகிறார்கள்


ஆனால் சங்க இலக்கியங்களில் கோயில் என்றே வருகிறது. .பேச்சு வழக்கில் கோயில் என்றுதான் சொல்ல முடிகிறது..   கோவிலுக்கு போகிறேன் என்பதில் இயல்பு இல்லை




மா  + இருள் என்பது இந்த விதிப்படி மாவிருள் என்றுதான் வர வேண்டும் .. ஆனால் மாயிருள் என்பதே சரியானது



அதற்கு காரணம் , இ என்ற சொல்  வந்தால் அங்கே ய் தோன்றும் என நன்னூல் சொல்வதை , இரண்டாவது சொல்லில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர்


அதாவது  மா   + இருள் என்பதில் இரண்டாம் சொல் இ என்பதால் , அங்கே ய் தோன்றி மாயிருள் ஆகிறது


அதேபோல கோ இல் என்பது கோயில் என்றுதான் ஆகும்..


அதுமட்டுமின்றி தொல்காப்பியர் சொன்னதுபோல , இசை நயம்தான் முக்கியம் என்ற விதிப்படியும் கோயில்தான் சரி .. அதனால் சங்க நூல்களில் கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்


சில ஆர்வக்கோளாறு இலக்கணப்பண்டிதர்களால் , கோவில் என்பதும் பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அது தவறு என நிறுவ முடியாது.. நன்னூல் விதியின்படி கோவில்தான் சரி என்பார்கள்.


ஆனாலும் கோயில்தான் சரியான் சொல்.. யாராவது கோவில்தான் சரி என்று சொன்னால் , மையமாக புன்னகைத்து நகருங்கள்.. 






















    

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா