Tuesday, April 30, 2013

மே தின சிந்தனை- மார்க்ஸ் தத்துவங்கள் காலாவதியாகி விட்டனவா??


மே தினத்துக்கு உங்களுக்கு ஏன் விடுமுறை விடுகிறார்கள்... என என்னை ஒரு மென் பொருள் நிபுணர் கேட்டார்.

லீவு கொடுத்தால் நல்லதுதானே ..இதில் என்ன கேள்வி வேண்டி இருக்கிறது என எரிச்சலானேன்.

அவர் விளக்கினார்.

தொழிலாளர், உபரி மதிப்பு, மூலதனம் போன்றவை எல்லாம் இப்போது அர்த்தம் இழந்து விட்டன என்றார்.

எனக்கு தலை சுற்றியது,,

அவர் விளக்கலானார்.

முதலில் இப்போது தொழிலாளி வர்க்கம் என்பதே குறைந்து வருகிறது. எல்லோரும் சாஃப்ட்வேர் , கால் செண்டர் என மாறி வருகின்றனர்.

ஒரு தொழிலாளி உருவாக்கும் பொருளின் மதிப்பை விட அவன் ஊதியம் வெகு குறைவு.. இந்த வித்தியாசம்தான் உபரி மதிப்பு என்கிறார்கள்...இந்த கருதுகோள் இன்றைய சூழலில் பொருந்தாது.

ஒரு தொழிலாளி பொருளுக்கு மதிப்பை உருவாக்குவதில்லை. டிமாண்டுக்கு தகுந்தாற்போலத்தான் மதிப்பு உருவாகிறது. உதாரணமாக இன்று டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு டிமாண்ட் இல்லை...ஒரு தொழிலாளி என்னதான் தொழில் நேர்த்தியுடன் ஒரு ரேடியோ செய்தாலும் ,  அதற்கு மதிப்பு உருவாக்க முடியாது.


இரு தொழிற் சாலைல்கள்... இரண்டிலும் ஒரே எண்ணிகையில் , ஒரே திறமையுடன் தொழிலாளர்க்ள் பணி புரிகின்றனர்,.. ஆனால் இரண்டு தொழிற்சாலையும் ஒரே அளவு லாபத்தோடு இயங்காது.. ஆக , தொழிலாளியை தவிர வேறு அம்சங்களும் உள்ளன.அதாவது முதலாளிதான் மதிப்பை உருவாக்குகிறான்.


பல நிறுவனங்கள் ஆட்களை குறைத்து விட்டு ,  இயந்திரமயமாக ஆரம்பித்துள்ளன. ஆட்கள் குறைந்தால் லாபம் குறைய வேண்டும் என்பதற்கு மாறாக , லாபம் அதிகரிக்கிறது.பிறகு ஏன் உபரி மதிப்பு என்ற பம்மாத்து..


இப்படி எல்லாம் பேசி சென்றார்.

எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.. அவர் சொல்வது சரி போலவும் தோன்றியது.தவறு போலவும் தோன்றியது.

 நமக்கு கம்யூனிசமும்  தெரியாது. காப்பிடலிசமும் தெரியாது. மேற்கண்ட வாதங்கள் பற்றி நாம் என்ன சொல்வது.

வேறு யாரிடமாவது கேட்போம் என கேட்டு பார்த்தேன்.

அவர் அளித்த பதிலும் லாஜிக்கலாகவே இருந்தது.  அவர் சொன்னதை அப்படியே தர முடியவில்லை. அவர் சொன்னதில் எனக்கு புரிந்ததை தருகிறேன்.


1.  தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவது இன்று கொஞ்சம் சோஃபிஸ்டிக்கேட்டடாக நடந்து வருகிறது.  ஏசி  ரூம் ,  கணினி என இருந்தாலும் , மெத்த படித்து இருந்தாலும் , நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலை என இருந்தாலும், அவர்களை தொழிலாளியாகவே முதலாளித்துவம் நடத்துகிறது. அவர்கள் உழைப்பை சுரண்டி வருகிறது.

    இப்படி சுரண்டப்படுவதை வேறு எந்த நாட்டிலும் ஏற்க மாட்டார்கள்.. ஆனால் நம் ஆட்கள் இதை பெருமையாக நினைத்து இந்த சுரண்டலுக்கு ஒத்து போகிறார்கள்.

   காலப்போக்கில் போட்டி அதிகரித்து , இதற்கு மேல் சுரண்ட முடியாது என்ற நிலை வருகையில் ஒட்டு மொத்த அமைப்பும் கவிழ்ந்து விடும்.


2 இயந்திர மயமாதல் மூலம் லாபம் அதிகமாகிறது என்பது மாயத்தோற்றம். அந்த இயந்திரங்களை உருவாக்குவதில் உழைப்பு சுரண்டப்படுகிறது.

3.  டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு இன்று தேவை இல்லை. ஒரு முதலாளி நினைத்தால் மேனெஜ்மெண்ட் திறன் மூலமோ, சந்தைப்படுத்தும் ஆற்றல் மூலமோ தேவையை உருவாக்க முடியுமா. முடியாது. எனவே முதலாளித்துவ திறனை தொழில் முனைவோர் திறமை என ஸ்டைலாக சொன்னாலும் , அந்த திறன் மூலம்தான் மதிப்பு உருவாகிறது என்பது அபத்தம்.

4. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் கட்டுப்பாடு இல்லாத போட்டி என்பது இயல்பு.  இதில் winners get all என்பதே முடிவில் நடக்கும். ஆரம்ப அட்வாண்டேஜ் என்பதும் இயல்பாக இருக்கும். பரம்பரை பணக்காரனுடன் , புதிதாக வருபவன் போட்டியிட இயலாது.

ஒரே மாதிரியான இரு நிறுவனங்கள் ஒரே மாதிரியான லாபம் பெற முடியாமைக்கு காரணம் இதுதான்.

சிறிய சிறிய வெற்றிகள் பெரும்போது முதலாளிகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எப்படியும் ஒரு நாள் ஒரு முதலாளி இவர்களை தோற்கடிப்பான். அப்போது இவர்களும் பாட்டாளிகளாவார்கள்.

இதுதான் இன்று அன்றாடம் நடந்து வருகிறது. நாள்தோறும் பாட்டாளிகள் அதிகமாகித்தான் வருகிறார்கள்.குறையவில்லை.

ஒரு கட்டத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உயரும்போது , சமூக மாற்றம் நடந்தே தீரும்..

 இந்த திசையில்தான் உலகம் சென்று கொண்டு இருக்கிறது..


 இந்த இரு கருத்துகளையும் கேட்டபடி மே தினம் கொண்டாட ஆயத்தமானேன்.  மே தின விடுமுறையில் இது விஷ்யமாக மேலும் படித்தோ , விவாதித்தோ ஏதேனும் தெரிந்து கொண்டால் பகிர்ந்து கொள்வேன்.Monday, April 29, 2013

மற்றவர்களை திட்டுவதில் இன்பம் காண்கிறீர்களா- இந்த ஆச்சர்மூட்டும் புத்தகம் உங்களுக்குத்தான்...


  நண்பனின் நண்பன் ஒருவன். அவனிடம் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. அவனிடம் கவர்ச்சிகரமான அம்சங்கள் ஏதும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட திறன் மறக்க முடியாதது.  அந்த திறனால் பெரிதாக பலன் ஏதும் இல்லைதான். ஆனாலும் அந்த திறன் குறிப்பிடத்தக்க ஒன்று.

நாய்களுடன் எளிதாக பழகும் தன்மைதான் அந்த திறன்.

புதிய வீடுகளுக்கு செல்லும்போதோ , கிராமங்களில் புதிய தெருக்களில் செல்லும்போது நாய்கள் குலைக்கும்.   எந்த நாயாக இருந்தாலும் அவனால் சில நிமிடங்களில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட இயலும். பார்ப்பதற்கு ஆச்சர்ய்மாக இருக்கும்.

நாய்களுடன் பழகி பழகி நாய்களின் வாசனை அவன் உடலில் பதிந்து விட்டதாகவும் அதனால்தான் நாய்கள் இணக்கமாக இருப்பதாகவும் சில நண்பர்கள் சொன்னார்கள்..எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனாலும் அவனுக்கு நாய்களுக்கும் இடையே ஏதோ ஓர் ஒத்திணைவு இருப்பது உண்மை.

புதிய இடம் செல்கிறோம். அனைவரும் நமக்கும் புதியவர்கள் என்றாலும் சிலரிடம்தான் பேச ஆரம்பிப்போம்.அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..


இப்படி புலன்களுக்கு தட்டுப்படாத விஷ்யங்கள் ஏராளம். அதில் ஒரு விஷ்யத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்ட்ர் எமட்டோ எழுதியுள்ள புத்தகம்தான் messages from water.

தண்ணீரை வைத்து சில பரிசோதனைகள் செய்து இந்த புத்தகம் எழுதி இருக்கிறார்.

சரி...தண்ணீரை வைத்து ஏன் ஆராய்ச்சி.

உலகத்தின் பெரும்பாலான மேற்பரப்பு தண்ணீரால் ஆனது. மனிதன் பிறக்கையில் அவன் 95% தண்ணீரால் ஆனவன். போக போக தண்ணீரின் அளவு குறைந்தாலும் , வயது  வந்த ஒருவன் உடலில் தண்ணீர்தான் பிரதானமாக இருக்கும்/ .கிட்டத்தட்ட 70 %.

ஆகவே தண்ணீரை புரிந்து கொண்டால் , நம்மை புரிந்து கொள்ளலாம். உலகை புரிந்து கொள்ளலாம் என்பது அவர் பார்வை.


கொதிக்க வைத்து , குளிர வைத்து , ரசாயனங்களை கலந்து செய்யப்படும் வழக்கமான ஆய்வு அல்ல.

கொஞ்சம் வித்தியாசமான ஆய்வு.

நம் உணர்வுகள் தண்ணீரை பாதிக்கிறதா என்பது அவர் ஆய்வு.

கர்ண கடூரமான இசையை ஒரு நீர் பாத்திரம் அருகே ஒலிக்க செய்தார். இன்னொரு பாத்திரம்அருகே இனிய இசை ஒலிக்க செய்தார்.

அதன் பின் ஆராய்ந்த போது ஆச்சர்யம்.

இனிய இசையை அனுபவித்த தண்ணீரில் அழகான கிரிஸ்டல் உருவாகி இருந்தது. கொடூர இசை தண்ணீரில் ஒழுங்கற்ற கிரிஸ்டல் உருவாகி இருந்தது.


இசை மட்டுமல்ல...பாடல் வரிகளுக்கேற்பவும் தண்ணீரின் தன்மை மாறுவது கண்டறியப்பட்டது..சோக பாடல்கள், கோபமூட்டும் பாடல்கள் தண்ணீரில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின.

இனிய பாடல்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தின.


இன்னும் ஒரு படி மேலே போய் , வார்த்தைகளும் தண்ணீன் மீது பாதிப்பு ஏற்படுத்துவதை நிரூபித்தார்.

முட்டாள் , உருப்பட மாட்டாய் போன்ற வார்த்தைகளை தொடர்ச்சியாக தண்ணீர் பாத்திரம் அருகே சொல்லி வந்தார்கள்/. இன்னோர் பாத்திரம் அருகே , நன்றி நன்மை போன்ற வார்த்தைகளை சொல்லி வந்தார்கள்..  நேர்மறை வார்த்தைகள் சொல்லப்பட்ட தண்ணீரில் அழககான கிரிஸ்டல்கள் உருவாகி இருந்தன.


இதை விட உச்சமாக வரை படங்கள்,.புகைப்படங்களும் தண்ணீரில் பாதிப்பு செலுத்துவது நிரூபிக்கப்பட்டது/

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.

தண்ணீருக்கு செய்திகளை கிரகிக்கும் ஆற்றல் அறிவு இருக்கிறது. நம் உடலோ பெரும்பாலும் தண்ணீரால் ஆனது.

எனவே நேர் மறை சிந்தனைகள் , நல்ல மனிதர்கள் , நல்ல விஷ்யங்கள் நம்மை சுற்றி இருந்தால் , நம் உடலில் இருக்கும் தண்ணீர் மகிழும்,  தண்ணீரால் உருவாகி இருக்கும் நமக்கு இது ஆரோக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எதிர்மறை சிந்தனைகள் , அக்கப்போர், வம்புச்சண்டை என இருந்தால் , அது நம் உடல் சிஸ்டத்துக்கு கேடாக முடியும் என்கிறார் இவர்.

வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..

மற்றவர்களை திட்டுவது , அவதூறு போன்றவை மற்றவர்களுக்கு கெடுதி ஏற்படுத்தும் முன் நம்மை கெடுத்து விடுமோ என்ற பயம் ஏற்படுவது உறுதி

இனிமையான பேச்சு, நேர் மறை சிந்தனைகள் இருந்தால் , மற்றவர்கள் பாராடுகிறார்களோ இல்லையோ...  நமக்கு நன்மை அதுவாகவே நடக்கும் என்பதே புத்தகத்தின் செய்தி


வெர்டிக்ட்        message from water  - mesmerizing 

எழுதியவர் : டாக்டர் Masaru emotto

Sunday, April 28, 2013

பல முறை திருத்தி எழுதப்பட்ட உன்னத நாவல்- கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்களின் ஒன்று     எனக்கு தெரிந்த  நண்பர் ஒருவர் . மிகவும் நல்லவர். நேர்மையானவர். அன்பானவர். உழைப்பாளி.

ஆனால் அவரைப் பற்றி யோசிக்கையில் அவரது மற்ற அடையாளங்களை மீறி அவரது குறிப்பிட்ட ஒரு பண்பு மேலோங்கி நிற்கும். அதுதான் அவரது கவலைப்படும் தன்மை.

புதிதாக ஒரு கார் வாங்கி இருக்கிறேன் என அவரிடம் சொல்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் மகிழ்வார். உடனே கவலைப்பட ஆரம்பித்து விடுவார்.

கார் முதலில் நன்றாக ஓடும், ஆனால் பழுதாகி விட்டால் செலவு வைக்குமே. முதலில் உனக்கு பெரிதாக தெரியாது. அதன் பின் உன்னால் சமாளிக்க முடியாமல் போய் விடும். என்னிடம் உதவி கேட்பாய்.. என்னால் கொடுக்க முடியாவிட்டால் , நமக்குள் வருத்தம் ஏற்படலாம் என்பது போல கவலைப்பட ஆரம்பித்து விடுவார்.

நம் சுக துக்கங்களை புரிய வைக்கவே முடியாதோ என்ற சம்சயம் நமக்கு ஏற்படும்.

அவராவது மகிழ்ச்சி என்பதை வாழ்க்கையில் என்றாவது அனுபவித்து இருக்கிறாரா என்றும் சந்தேகமாக இருக்கும்.

மகிழ்ச்சி என்பது என்ன , மகிழ்ச்சியை எப்படி அடைவது வாழ்க்கை என்பது என்ன என்பது என்றென்றும் ஆர்வமூட்டும் வினாக்களாகவே நம்மிடம் நீடித்து வருகின்றன.


இது போன்ற கேள்விகளை அலசும் ஓர் அற்புதமான நாவல்தான் , யுக்ரேன்/ ரஷ்ய எழுத்தாளர் விளாதிமீர் கொரேலென்கோ படைத்த “ கண் தெரியாத இசைஞன் “ என்ற படைப்பு.

தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் , சேகவ் என்று படித்து இருக்கிறோம். இவர்களுக்கு இணையான கொரெலென்கோ எழுத்துகளை அவ்வளவாக படித்திருக்க மாட்டோம்.

எதிர்பார்ப்பு ஏதும் இன்றிதான் இந்த நாவலை படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நாவல் என்னை இழுத்துக் கொண்டு விட்டது.

பிறவியிலேயே கண் பார்வையற்ற பியோத்தர் என்பவனின் வாழ்க்கைதான் இந்த கதை.

அவன் கதை மட்டும் அன்று. அவன் மாமாவும் , குரு நாதருமான மக்சீம், அவன் காதலி, இசை ஆர்வம் ஏற்படுத்திய முதல் இன்ஸ்பிரேஷன் , அவன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் பிச்சைக்காரர்கள் என ஒவ்வொருவர் வாழ்க்கையும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் இது வெறும் 240 பக்கங்கள் கொண்ட சிறு நாவல்தான்.


பார்வையற்று பிறந்த பியோத்தர் ஒலி வடிவிலேயே உலகை உணர பழகுவது , மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. புல் வெளியின் பெருமூச்சு , பைன் மர காற்றோசை , வெண்பனியின் குளுமை போன்றவற்றை அவனால் மட்டுமே உணர முடிகிறது. அவன் மூலம் நாமும் உணர்கிறோம்.

 
        வண்ணத்தை அவனுக்கு தெரிந்த ஒலியுடன் ஒப்பிட்டு புரிய வைக்கும் இடம் அபாரம்.

சிறு வயதிலேயே தோழியாக அறிமுகம் இளம் பெண் , பின்பு காதலி ஆகிறாள். அவனுக்கு கண் போல இருக்கிறாள்.

அவனை வெற்றிகரமான மனிதன் ஆக்குவதே தன் வாழ்வின் பயன் என நினைக்கும் அவன் மாமா , அவனுக்காகவே தன் வாழ்வை அமைத்து கொள்கிறார்.

கதையின் இந்த பகுதி வரை கண் தெரியாமல் பிறந்து விடுபவர்களின் உலகை நம் கண் முன் நிறுத்துகிறது.

கல் வெட்டில் இருக்கும் எழுத்துகளை , வெளிச்சம் போதாமையால் படிக்க தடுமாறுவார்கள்..” இருங்கள்.. நான் படித்து சொல்கிறேன் “ என கண் பார்வையற்றவன் கைகளால் எழுத்துகளை தடவி படித்து சொல்வான். இது போன்ற பல சம்பவங்கள் அட்டகாசமாக இருக்கும்.


ஆனால் , ஒரு குறிப்பிட வகையினருக்கான கதை என்றில்லாமல் , பொதுவான ஆன்மீக தேடல் ,  நிரந்தரமான உண்மை என கடைசியில் கதை விஸ்வரூபம் எடுப்பது அழகு.


மகிழ்ச்சி என்பதை உணர முடியாதவன் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. ஒரு நரகத்தை உருவாக்கி கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்துகிறான்.

மகிழ்ச்சியின்மை என்பது யாருக்கும் ஏற்படலாம்.  மகிழ்ச்சியினமைக்கு காரணம் ஏதும் தேவையில்லை. நாமே எத்தனையோ காரணங்களை உருவாக்கலாம்.

உண்மையிலேயே வாழ்க்கையை அனுபவிக்க , பணம் , ஆரோக்கியம் , நட்பு , நல்ல மனிதர்கள் என எத்தனையோ தேவை. இவை அனைத்தும் இருந்தும் , தாமும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் டார்ச்சர் செய்பவர்கள் ஏராளம். ஆக வாழ்க்கையை உள்ளபடி அப்படியே கவனிக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.

அதை கதை நாயகன் அறிவதுதான் இந்த நாவலின் உச்சம்.

“பார்க்க கற்று கொண்டு விட்டான். உண்மை அதுதான், ஆம் , அவன் பார்க்க கற்று விட்டான்” என என மக்சீம் முணு முணுக்கும்போது, நாமும் பார்க்க கற்கிறோம்.அல்லது பார்க்க கற்க வேண்டும் என்ற உந்துதல் உண்டாகிறது.

அதுதான் இந்த நாவலின் வெற்றி..

இந்த நாவல் பிரசுரம் ஆன பின்பும் , கொரெலென்கோ மீண்டும் மீண்டும் திருத்தி எழுதினாராம்.


அவர் சேர்த்த சில சம்பவங்கள் நாவலுக்கே புதிய அர்த்தம் கொடுத்து விடுகிறது..

வெர்டிக்ட்    கண் தெரியாத இசைஞன் - கண்டிப்பாக ரசிக்க வேண்டிய இசைஞன்


தோழமை வெளியீடு   விலை ரூ 90
Friday, April 26, 2013

மாறுவேடம் போடுவது நடிப்பல்ல - இயக்குனர் மகேந்திரனின் சுவையான புத்தகம்


தமிழ் சினிமாவின் திசையை மாற்றி அமைத்த பிதாமகர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் மகேந்திரன். இவர் படங்கள் மட்டும் அல்ல , இவர் எழுத்துகளும் எனக்கு நிரம்ப பிடிக்கும்.

சிலர் நடிப்புக்காக மெலிதல் , குண்டாகுதல் , வித விதமாக மேக் போட்டு அசத்துதல் என்றொரு பாணியை கையாளுவார்கள்.

இன்னும் சிலர் ரஜினி மாதிரி. கெட் அப், தோற்றம் எல்லாம் , மேக் அப் என்றெல்லாம் மெனக்கெட மாட்டார்கள். நடிப்பாற்றல் துணையை மட்டுமே கொண்டு அந்தந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பார்கள்.

இந்த இரு பாணிகளில் இயக்குனர் மகேந்திரன் எதை ஆதரிக்கிறார் என்பதற்கு விடை அளிக்கிறது , “ நடிப்பு என்பது “ என்ற அவரது புத்தகம்.

சிறிய புத்தகம். ஒரே சிட்டிங்கில் படித்து முடித்து விடலாம். சிறிய சிறிய அத்தியாயங்களாக பிரித்து கொண்டு , ஒவ்வொரு விஷயமாக அலசி இருக்கிறார்.

சில அத்தியாயங்களில் சில வரிகளே இருக்கின்றன. அந்த சில வரிகளில் சொல்ல வந்ததை நச் என சொல்லி விடுகிறார்.

அவரது படங்களில் வசனங்கள் அதிகம் இருக்காது. காட்சிகளிலேயே படத்தை நகர்த்தி செல்வார். அது போல புத்தகம் அமைந்துள்ளது.

ஒரு நடிகர் உயரமாக தோன்ற வேண்டும் என்பதற்காக காலை சற்று உயர்த்தி கொண்டு நடித்ததை கிண்டல் செய்கிறார். ஷூ போட்டு கொண்டு உயரமாக தோன்ற முயல்வதையும் கிண்டல் செய்கிறார்.
இப்படி செய்வதில் நடிப்பு எங்கே இருக்கிறது என கேட்கிறார்.

பட்டினியால் வாடுவது போன்ற சீன் என்றால் , தன் நடிப்பால் அந்த பரிதாபத்தை கொண்டு வர வேண்டும். உண்மையிலேயே பட்டினி கிடந்து மெலிந்து போய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது அப்படி ஒன்றும் பெருமைக்குரிய விஷயமல்ல்ல என சில “ நடிகர்களை”  மறைமுகமாக நக்கல் அடிக்கிறார்.

இது போன்ற பல விஷயங்கள்.

“ பார்க்கலாம் “ என்ற ஒரு வரியை , அதை சொல்லும் விதத்தில், எப்படியெல்லாம் வேறுபடுத்தி சொல்லலாம் என சொல்லி இருப்பது அட்டகாசம்.

அதே போல ஒரு வெளி நாட்டு படத்தில் இருந்து காட்டி இருக்கும் உதாரணமும் அற்புதம்.

கணவன் மேல் பொசசிவ்னெஸ் கொண்ட மனைவி.  அவனது தம்பியை அவளுக்கு பிடிக்கவில்லை. அந்த தம்பி உடல் நலிவுற்றவன். ஒரு கட்டத்தில் , அவள் பொறுப்பில் அந்த தம்பியை விட்டு செல்கிறான் கணவன். அப்போது அந்த தம்பி இறந்து விடுகிறான். அதுதான் கதையின் முடிச்சு. அந்த காட்சியை அடிப்படையாக வைத்து கதை நகர்கிறது.

அந்த குறிப்பிட்ட காட்சியின்படப்பிடிப்பின் போது கதா நாயகி இயக்குனரை ஒரு கேள்வி கேட்டாளாம். அட. இதை மறந்து விட்டோமே என திகைத்த இயக்குனர் , படப்பிடிப்பையே ரத்து செய்து விட்டாராம்.

ஆறு மாதம் கழித்து, அவள் கேள்விக்கு தகுந்த பதிலுடன் படப்பிடிப்பு நடந்தது. படம் பெரிய வெற்றி.

இப்படி பல சுவையான விஷயங்களுடன் சுவையாக செல்கிறது புத்தகம்.

சினிமா துறையில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். மற்றவர்களும் சுவாரஸ்யத்துக்காக படிக்கலாம்.

கனவுப்ப்பட்டறை வெளியீடு - விலை ரூ.70

வெர்டிக்ட்        "நடிப்பு என்பது" - படிக்க வேண்டியது

Sunday, April 21, 2013

புத்தக கண்காட்சியும் , சூப்பர் சிக்ஸ் புத்தகங்களும்ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடக்கும்போது , நம் ஆட்கள் டெம்ப்ளேட்டாக சில குறைகளை எடுத்து வைப்பார்கள்.

நெரிசல் அதிகம்,  ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருப்பதால் கால் வலிக்கிறது, உணவகத்தில் சாம்பார் சரியில்லை என்பது போல அடுக்குவார்கள்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் சென்னையில் புத்தக கண்காட்சி நடப்பது பலருக்கு தெரியாது.

பல முக்கியமான பதிப்பகங்கள் , 10% தள்ளுபடி என வழக்கமான அம்சங்கள் உண்டு. ஆனால் அப்பளம் , ஊறுகாய்களுக்கு புத்தக ஸ்டால்கள் பக்கத்தில் புத்தகங்களோடு புத்தகங்களாக இடம் ஒதுக்கும் காமெடி கிடையாது.

மெரினா பீச் அருகில் வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. விவேகாந்தர் இல்லம் இருக்கிறது அல்லவா..அதற்கு அடுத்த வளாகம்.

  நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய். வேடிக்கை பார்க்கும் கூட்டம் அவ்வளவாக இல்லை. காரணம் வேடிக்கை பார்க்க மெரினா இருக்கையில் புத்தக கடைகளில் எக்சைட்மெண்ட் குறைவுதான்.

உண்மையிலேயே புத்தகம் வாங்க வருபவர்கள் மட்டுமே வருவதால் நெரிசல் இன்றி புத்தகங்களை பார்வை இட முடிகிறது.


குறிப்பாக இளைஞர்களும் ,இளம்பெண்களும் இடது சாரி புத்தகங்கள் ,  தத்துவம் , இலக்கியம் என தேடி தேடி வாங்குவதை பார்க்கையில் ஆச்சர்யமாக இருந்தது.

என்னை கவர்ந்தது ரஷ்ய புத்தகங்கள், கம்யூனிச புத்தகங்கள் , இஸ்லாமிய நூல்கள் போன்றவைதான்.

அவற்றை பற்றி விரிவாக பிறகு எழுதுவேன்.


இதே போல வேப்பேரி பெரியார் திடலிலும் ”சென்னை புத்தக சங்கமம் “ என்ற பெயரில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.

இந்த கண்காட்சிக்கு இந்த டைட்டிலை வைத்தது நிர்வாகிகள் அல்லர்.  நல்லதொரு தலைப்பு  யோசித்து அனுப்புமாறுஅறிவித்து இருந்தார்கள்.  அதில் சிறந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்படும் என சொல்லி இருந்தார்கள்.


அப்படி பலர் அனுப்பி இருந்தார்கள். நண்பரும் , பத்திரிக்கையாளரும் , பதிவருமான லக்கிலுக் அனுப்பிய பெயரே சிறந்த தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த கண்காட்சிக்கு அனுமதி கட்டணம் , பார்க்கிங் கட்டணம் என எதுவும் இல்லை. பெரியார் திடலில் நடந்தாலும் , ஆன்மீக புத்தகங்களும் கிடைக்கின்றன.


ஒவ்வொரு பதிப்பகம் குறித்தும் , அந்த பதிப்பகங்களின் முக்கிய புத்தகங்கள் குறித்தும் அவ்வப்போது அறிவிக்கப்படுவது வெரி யூஸ்ஃபுல்.


இந்த புத்தக கண்காட்சியில் என்னை கவர்ந்த சூப்பர் சிக்ஸ் புத்தகங்கள் சுருக்கமாக...  விரிவாக பிறகு பார்க்கலாம்..


6. பீட்டர்ஸ்பர்க் நாயகன் -

தாஸ்தயேவ்ஸ்கி எழுத்துகளை படித்து இருக்கிறோம். அவரைப்பற்றி எழுதப்பட்டவற்றையும் சிலர் படிக்க நினைக்கலாம். அந்த வகையில், இது ஒரு முக்கியமான புத்தகம்.


5 லெனினுக்கு மரணமில்லை

இது லெனினின் வரலாற்றை கதை போன்ற வடிவில் சுவையாக சொல்லும் புத்தகம். சோவியத் காலத்தில் வந்த புத்தகம் இப்போது மீண்டும் வருவது மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்


4 மூன்று ஆண்டுகள்

செக்கோவ் சிறுகதைகள் படித்து இருக்கிறோம். மூன்று ஆண்டுகள் என்ற இந்த   சிறுநாவல் ( அல்லது சற்று பெரிதான சிறுகதை !! ) கொஞ்சம் வித்தியாசமானது.

கொஞ்சம் விரிவாக கதையை சொல்லி இருக்கிறார், தனக்கே உரித்தான பாணியில். ஹீரோ , வில்லன் என்ற அலுத்து போன பாணி அவர் எழுத்துகளில் இருப்பதில்லை. இதிலும் இல்லை. யதார்த்தமான நடை. முக்கியமான படைப்பு


3 என் வாழ்க்கை - டிராட்ஸ்கி

மாற்று உலகை , மாற்று வாழ்க்கையை கனவு கண்டு சோவியத் யூனியனை படைத்தார்கள். அந்த கனவு கிட்டத்தட்ட மெய்ப்பட்டு விட்டது போல தோன்றியது. அமெரிக்கா உள்ளிட்ட ஆதிக்க சக்திகளே சற்று அயர்ந்து போயின.ஆனால் இந்த பொன்னுலக கனவு  விரைவில்கலைந்து போனது .

ஒரு வேளை டிராட்ஸ்கியின் பாதையில் சோவியத யூனியன் நடை போட்டு இருந்தால், உலக வரலாறு வேறு திசையில் சென்று இருக்க கூடும்.

சோவியத் யூனியனின் சிற்பிகளில் ஒருவர் இவர். ஆனால் அவர் அந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டு கொல்லவும் பட்டார்.

அவர் மேஜையில் எழுதிக்கொண்டிருந்த தாள்களை அவர் ரத்தம் நனைத்தது. அவர் இறப்புக்கு பின் வெளிவந்த நூல் , அவர் ரத்தத்தின் ஒளி அச்சுடன் வெளியானது.

ஒரு மாபெரும் மனிதனைப்பற்றிய புத்தகம் இது.


2. வலிமார்கள் வரலாறு.


இஸ்லாமிய ஞானிகள், தலைவர்கள், தேச பக்தர்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் இதை யாரும் முன்னெடுப்பதில்லை. இதற்கு காரணம் இஸ்லாமியர்க்ள்தான்.

நம் ஊரில் கிரிக்கெட் ஆடும் டெண்டுல்கரை , கிரிக்கெட்டின் கடவுள் என்பார்கள். கடவுள் என்றால் அவர்தான் உலகத்தை படைத்தார் என்றல்ல.. அது ஓர் உயர்வு நவிற்சி .

இந்த உயர்வு நவிற்சி நம் இயல்பு. அது போல மகான்களையும் சிலர் கடவுள் என சொல்வது இஸ்லாமியர்களுக்கு பிடிப்பதில்லை.

இதனால் சில ஞானிகள் , மகான்கள் எழுத்துகள் பரவலாக வருவதில்லை. ஆனாலும் சில அருமையான புத்தகங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி பல புத்தகங்கள் வந்தாலும் , எவர் க்ரீன் புத்தகம் இது. பல பகுதிகளாகா வந்தது.

கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம்


1. மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்.

பின் நவீனத்துவத்தின் அடையாளம் இந்த சிறுகதை தொகுப்பு.

சிலர் அடிக்கடி என்னிடம் கேட்பார்கள்.சாரு எழுதிய ” கிரிக்கெட்டை முன் வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது.. கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான அமைப்பியல் ஆய்வும்”  இந்த கதைகள் எங்கு கிடைக்கும் என்பார்கள்..

இவை இரண்டும் இந்த தொகுப்பில் உள்ளன. மேலும் சில முக்கிய கதைகளும் இதில் இருக்கின்றன.

அட , இந்த கதை இதிலா இருக்கிறது என ஆச்சர்யப்படுவீர்கள்.

அந்த வகையில் இது ஒரு முக்கியமான புத்தகம்.


Friday, April 19, 2013

ஏற்காடு விசிட் - ஏமாற்றமா , உற்சாகமா ?எப்படி இருக்க வேண்டும் என சிலரிடம் கற்றுகொள்ளலாம்.. எப்படி இருக்க கூடாது என சிலரிடம் கற்கலாம்.

நான் சமீபத்தில் ஏற்காடு சென்று இருந்தேன். சிலர் பக்கத்து ரூமில் தங்கி இருந்தார்கள். ஊர் திரும்பும் வரை அவர்கள் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.  டீவியில் ஏதாவது  பார்த்து கொண்டு இருப்பார்கள். எதையாவது சாப்பிட்டுகொண்டு இருப்பார்கள். கொஞ்சம் மது அருந்துவார்கள்.  கடைசியில் கிளம்பி விட்டார்கள். இதை ஊரிலேயே செய்து இருக்கலாமே.. 

இன்னும் சிலர் ஓர் ஊருக்கு போனால் விக்கிபீடியாவை படித்து விட்டு , அதன் படி அந்த ஊர் இருக்கிறதா என பார்ப்பார்கள்.


என்னை பொருத்தவரை அந்த ஊரின் பிரத்தியேக தன்மையை ரசிப்பது , எதிர்பாராத தன்மையை எதிர்கொள்வதையே விரும்புவேன்.

இப்படி சில இடங்களை நான் சமீபத்தில் கர் நாடக மானிலத்தில் ரசித்தேன். ஆனால் அவ்ற்றை பற்றி எழுத பயமாக இருக்கிறது.

பெரும்பாலானோர் அழகை ரசிப்பவர்க்ள்தான் என்றாலும் , ஒரு சிலரின் பொறுப்பற்ற தன்மை அச்சமூட்டும். புதிய இடங்களை எப்படி ரசிப்பது என தெரியாமல் , மது புட்டிகளை உடைப்பது , பிளாஸ்டிக் பாட்டில்களை கொட்டுவது , உணவு பொருட்களை வாரி இறைப்பது என  நாஸ்தி செய்து விடுவார்கள்.

ஆனால் ஏற்காடு எல்லோருக்கும் தெரிந்த இடம்தான். ஆனால் கிளர்ச்சியூட்டும் இடங்களோ , சுற்றி பார்க்கும் இடங்களோ குறைவு என்பதால்,  தேவையற்ற கூட்டம் அங்கு குவிவதில்லை. 

     சிலர் பிரமாண்டமாக எதையோ எதிர்பார்த்து வந்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் நடக்கும். 

    எதையும் எதிர்பாராமல் வெறுமனே சென்றால் நல் அனுபவமாக இருக்கும் என தோன்றியது.  நகர வாழ்க்கையில் வானத்தை காண்பதே பெரிய விஷயமாகி விட்டது.  எண்ணற்ற நட்சத்திரங்களை சிறு வயதில் காணும்போது அது அளிக்கும் மன சித்திரங்கள் அபாரம்.  அந்த உணர்வுகளை ஏற்காட்டில் அடைய முடிந்தது.

மலைகள் எல்லாமே அழகானவைதான். எங்கு சென்றாலும் ரசிக்கலாம். ஆனால் ஒப்பீட்டளவில் சென்னைக்கு அருகில் அமைந்து இருப்பது ஏற்காடு என்பதால் அது ஓர் அட்வாண்டேஜ்.

இரவு உணவுக்காக வெளியே ச்சென்று இருந்தேன். திடீர் என மின்சாரம் போய் விட்டது. விளக்கு ஏதும் இல்லை. கடும் இருட்டு. அந்த இருட்டை அன்றாட வாழ்வில் உணர்ந்தது இல்லை. அந்த இருட்டில், மரங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நட்சத்திரங்களை பார்த்தபோது , இயற்கையின் ஒரு பகுதியாகவே நான் மாறிவிட்டது போல இருந்தது. அந்த அமைதி, தனிமை , அமைதியில் இருக்கும் ஒரு வகை சப்தம் , ஒலியில் இருக்கும் ஒருவகை நிசப்தம் என மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

அதே வானத்தை பகலில் பார்ப்பது வேறோர் அனுபவம். வானமும் , கடலும் சந்திப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் வானமும் பூமியும் சந்திப்பதை காண்பது அபூர்வம், மலைகளில் மட்டுமே இந்த காட்சி கிடைக்கும். எங்கு நோக்கினும் வானம் என்பது ஓர் சூப்பர் அனுபவம்,

மலைகளை ஏன் ஆன்மீகத்திற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரிந்தது.

ஆனால் ஆன்மீகம் என்பது என்பது வேறு,ஆலய வழிபாடுகள் என்பது வேறு. எனவே ஆலயங்கள் செலவதில் எனக்கு ஆர்வம் இல்லை.

ஆனால் ஏற்காட்டில் எதை பார்க்கலாம் என சிலரிடம் கேட்டபோது சில இடங்களை சொன்னார்கள். சில ஆலயங்களை சொல்லி, அதில் ஏதும் விசேஷம் இல்லை ,போக வேண்டாம் என எல்லோருமே சொன்னார்கள் . இப்படி அவர்கள் சொன்னதே எனக்கு ஒரு விசேஷமாக  தோன்றியது. 

அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் , பெரிய கூட்டம் வராது போல. சரி நாம் போய் அமைதியை ரசிக்கலாம் என கிளம்பினேன்,

பெரிய கூட்டம் இல்லாத பெரிய ஆலயங்களும்  , சிறிய சிறிய ஆலயங்களும் இருந்தன .
லலிதா சகஸ்ரனாமம் பலர் சொல்வார்கள். ஆனால் லலிதா என்ற கடவுள் குறித்து பலருக்கு தெரியாது. தெளிவான விளக்கங்களுடன் கூடிய அருமையான கோயில் இங்கு உள்ளது.

மொத்தத்தில் அமைதி விரும்பிகளின் சொர்க்கபுரி ஏற்காடு என்றால் மிகையில்லை.
Wednesday, April 17, 2013

சங்கராச்சாரியார் கொலை செய்து இருந்தாலும் தூக்கு கூடாது- தமிழ் உணர்வாளருடன் ஒரு சந்திப்பு


ஏற்காட்டில் எங்கு சாப்பிடலாம் என விசாரித்தபோது , பலரும் பிரபாகரன் உணவகத்தை பரிந்துரைத்தார்கள்.

முக்கியமான பகுதில் அந்த உணவகம் இருப்பதால் கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் ஓர் ஆச்சர்யம் காத்து இருந்தது.

பிரபாகரன் என்பது உரிமையாளரின் பெயர் இல்லை.. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரைத்தான் உணவகத்துக்கு சூட்டி இருக்கிறார்கள்.


பிரபாகரன் , பெரியார் , கிட்டு , சேகுவேரா படங்கள் , பொன் மொழிகள் என உணவகம் தான் சார்ந்த கொள்கையை காம்ப்ரமைஸ் செய்யாமல் இருப்பது ஆச்சர்யம் அளித்தது,

என்னதான் கொள்கை பேசினாலும் தொழிலுக்காக யாராக இருந்தாலும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்துதான் ஆக வேண்டும். ஆனாலும் இப்படி தில்லாக கொள்கையை பிரச்சாரம் செய்வது ஆச்சர்யம்தான்.

ஆனால் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் இங்கு வந்து உணவருந்துகிறார்கள். காரணம் நியாயமான விலை, சுவையான உணவு.

 நான் அங்கு சென்று இருந்தபோது , உணவகத்தை கவனித்து கொண்டு இருந்த பெருமாளுக்கு சிலர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள். அவர் சிரித்தபடியே , மனதை புண்படுத்தாத வகையில் “ அய்யா. இது தமிழ் புத்தாண்டு அல்ல” என விளக்கி கொண்டு இருந்தார்.

அன்றைய தினம் , மனு சாஸ்திர எத்ர்ப்பு போராட்டம் சேலத்தில் நடைபெற இருந்ததது. அதில் அவர் பிசியாக இருந்தாலும் , அவருடன் கொஞ்சம் பேசினேன்.

அதன் தொகுப்பு உங்கள் பார்வைக்கு,...
Thursday, April 11, 2013

லேசாக கருத முடியாத லோசாவின் “துப்பறியும் நாவல் “ - நிர்மலுடன் ஒரு விவாதம்

இலக்கிய உலக சூப்பர் ஸ்டார் மரியோ வர்கஸ் லோசா எழுதிய WHO KILLED PALOMINO MOLERO? நாவலை படித்து வைக்குமாறு நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார். அவரும் படிக்க இருப்பதாகவும், இருவரும் படித்து விட்டு விவாதிக்கலாம் என சொல்லி இருந்தார்.

துப்பறியும் நாவல் பாணியில் பயங்கர விறுவிறுப்பாக நாவல் இருந்தது. ஒருவன் கொல்லப்படுகிறான். அவனை கொன்றது யார் என்பது கதையின் தலைப்பு.

அந்த கொலையை துப்பறிதல் மட்டும் இன்றி , உண்மையை கண்டு பிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் , உண்மை என்றால் என்ன என்ற ஆதார கேள்வி. கொலையை சாத்தியம் ஆக்கிய பல்வேறு அம்சங்கள், கொலையை விட மோசமான செயல்கள் , அதற்கு பின் இருக்கும் காரணங்கள் என நாவல் பல்வேறு தளங்களை தொட்டு இருந்தது.

படித்து முடித்ததும் , நிர்மலுடன் இதைப்பற்றி பேச ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவர் வேறு ஏதோ படித்து கொண்டு இருந்ததால் , இதை உடனடியாக படிக்கவில்லை. 

எனக்கோ இதைப்பற்றி யாரிடமாவது பேசா விட்டால் தலை வெடித்து விடும் என்ற நிலை.எனவெ தினமும் அவருக்கு நினைவு படுத்தி வந்தேன் .

கடைசியில் ஒரு நாள் படித்து விட்டார்.

அவருடன் விவாதித்ததில் இருந்து......


****************************************************

 நிர்மல்

படிச்சுட்டேன்யா..படிச்சுட்டேன்

பிச்சை 

வாவ்..எப்படி இருக்கு


 நிர்மல்

சூப்பரா இருக்கு 

பிச்சை
கிரைம் நாவலில் இலக்கிய அனுபவம்


 நிர்மல்
ஆமா


pleasent reading

பிச்சை
pleasure of the text

 நிர்மல்
வசனங்கள் மூலம் கதையை நகர்த்தி இருக்கிறார்


க்ரைம் நாவலில் இதுதான் உண்மை என சொல்லிவிடுவார்கள், ஆனால் இது அந்த உண்மையை அலச சொல்கிறது, அந்த உண்மைக்குள் இருக்கும் பொய் / அறியாத எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியாதவைகளை பற்றி யோசிக்க செய்கிறது.


பிச்சை
உண்மையை அலசி ஆராய்ந்தால் , அது அரைகுறை உண்மை அல்லது பொய் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கும்


 நிர்மல்
ஆமாம், அந்த் பெண்ணுக்கு அப்படிப்பட்ட மன நோய் இருப்பது யாருக்கும் தெரியாது, நமக்கும் அது உண்மையா/ பொய்யான்னு குழப்பம் வருது. நாலு புரத்திலிருந்து பார்த்தால் உண்மையாக இருப்பது அருகில் இருந்து பார்த்தால் இல்லையென ஆகி விடுகிறது.


பிச்சை
ஆமா


 நிர்மல்
எது உண்மை / எது பொய் எது சரி எது தவறு - தெரியலை.


பிச்சை
உண்மை என்பது ஆளாளுக்கு மாறும் தன்மை கொண்டது... முழு உண்மை என ஏதும் இல்லை.. அந்த ஊர் மக்க்ளை பொறுத்தவரை, அந்த கொலை என்பது பெரிய சதியின் ஒரு சிறு பகுதிதான்,,, அவர்களை பொறுத்தவரை அது உண்மை


 நிர்மல்
ஆமாம் - சரியா சொன்னிங்க

அது அவர்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கிறது அதுவே உண்மையாக கருதப்படுகிறது 


பிச்சை
ஆமா..அவர்கள் அந்த ”உண்மைக்கு ” ஆதாரங்கள் வைத்து இருக்கிறார்கள்


 நிர்மல்
ஆதாரங்கள் - அவர்க்ளே உருவாக்கிகொளவதுதானே


பிச்சை
ஆமா


 நிர்மல்
இது தவிர அந்த போலிஸ் தலமை அதிகாரி சில்வாவின் காமம் எப்படி முடிவுக்கு வருகிறது என்பது யோசிக்க வைக்கிறது


பிச்சை
அந்த பெண்ணுக்கு மன நோய் , அவள்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதற்கும் ஆதாரங்கள் காட்ட முடியும்.. அவள் அப்பா , தன் பாலியல் அத்துமீறல்களை மறைக்க மன நோய் என்ப்தை பயன்படுத்துகிறார் என்பதற்கும் ஆதாரங்கள் காட்ட இயலும்...


லாஜிக் என்பதை வைத்து உண்மையை ஒரு போதும் அறிய முடியாது.

எனவேதான் கேள்வியெயே டைட்டில் ஆக்கி இருக்கிறார்


 நிர்மல்
யெஸ்


பிச்சை
சில்வாவின் காமம் லாஜிக் அடிப்படையில் முடிவுக்கு வரவில்லை... ஒரு spontaneous act

ஜென் கதை போல இருந்தது 


 நிர்மல்
 அந்த பெண் வா என்னை பண்ணு என சவால் விட்டவுடன் அவனால் இயங்க முடியாமல் போய்விட்டதே. அந்த பெண்ணின் இயலாமைதான் இவருக்கு கிக்கு.


பிச்சை
ஆமா...


பிறன் மனை நாடாமை . ஒழுக்கம் என்றெல்லாம் பாடம் நடத்தினால் , அவன் காமம் அடங்கி இருக்காது.. அவள் சவால் விட்டதும் இயல்பாகவே காமம் நீங்கி விட்டது நிர்மல்
இப்படியும் சொல்லலாம் அந்த பெண்ணின் கணவனின் இயலாமை அவருக்கு கிக்கு
பிச்சை
யெஸ் - அவளது கணவனை விடவும் உன்னால் முடியுமா என சவால் அந்த காமத்தை அடக்கிவிட்டதே? 


 நிர்மல்
ம்ம்ம் 


பிச்சை
உண்மையை எதிர்கொள்வதில் இருக்கும் தயக்கம். கற்பனையில் வாழும் சுகம்... இதைத்தானே illusuion , delusion என தன் மகளைப்பற்றி ராணுவ அதிகாரி சொல்கிறார் 


 நிர்மல்
ஆமாம், சில்வா அவளது கணவனால் எதுவும் முடியாது எனும் கற்பனையில் இருக்கிறான் - அந்த க்ற்பனை  நொறுக்கப்படுகிறது 

பிச்சை
அவள் குளிப்பதை ரகசியமாக பார்த்து ரசித்ததில் இருந்த கிக் , நேரில் இல்லையே


 நிர்மல்
வெளிப்படையாக சில்வாவின் காமம் காட்டபடிகிறது, மறைவாக ரானுவ அதிகாரியில் இன்சஸ்ட் காட்டபடிகிறது - இதில் இருக்கும் ஒற்றுமை ஏதேனும் இருக்கிறதா?பிச்சை

நீங்கள் சொன்னது போல , சில்வாவுக்க்கும் , ராணுவ அதிகாரிக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கு... ஒருவர் வேட்டைக்காரர் ஒருவர் வேட்டையாடப்படுபவர் என்ற போதும் , ஒருவரும் ஒரு நாண்யத்தின் வெவெறு பகுதிகளே நிர்மல்
இன்னும் விரிவா சொல்லுங்களேன்


பிச்சை
silva வெளிபப்டையா காமத்தை பற்றி பேசி தன்னை ப்லே பாயாக காட்டி கொள்கிரான்... ராணுவ அதிகாரி , ஒழுக்கவாதியாக தன்னை காட்டிகொண்டு , காமத்தை சப்ரஸ் செய்கிறான்.. ஆனால் இரண்டுமே போலியானது..


 நிர்மல்
ம்ம்,

இந்த சப்ரஸ் காமத்தின் விழைவு பொறாமை, கொலை, சித்திரவதை


பிச்சை 
அடக்க நினைத்தால் பலி வாங்கி விடும் ( உதாரணம் தமிழருவி மணியன் போன்ற ஒழுக்க வாதிகள் ) ... ஓவராக சீன் போட்டால் , அனுபவிக்க முடியாமல் போய் விடும்

 நிர்மல்
sss boss 

கரக்டா சொன்னீங்க
சில்வாவுக்கு அவனது கற்ப்பனையை உடைத்து போட்டால் முடிந்துவிடும். 


பிச்சை
அதானால் அதிக பாதிப்பு இல்லை. 

 நிர்மல்
ஆமா


சில்வா : ஒரு அதிகாரிதான், லாஜிக்காக், லாவக்மாக, எதிராளியை கணித்து எடை போட்டு சூதானாமாக பேசி விபரத்தை கறக்க கூடியவன். பிச்சை
புத்திசாலி நிர்மல்
கர்னல் . அவரும் அப்படிதான ஒரே ஒரு விசயம்தான் வேறுபாடு


பிச்சை
அதாவது புத்திசாலி சில்வா ஒழுக்கவாதி கர்னல். 

 நிர்மல்
ம்ம்ம் 

பிச்சை
இரு துருவங்கள்

 நிர்மல்

சில்வாவும் அவளை ரேப் செய்தான் போகிறான் ஆனால் முடியவில்லை


பிச்சை
mm

 நிர்மல்

அதிகாரி ரேப் செய்து விட்டதாக கடிதத்தில் எழுதுகிறான் - அது உண்மையா?பிச்சை
உண்மையாக இருக்காது.. அவன் மனதளவில்தான் அது உண்மை.... குளியல் காட்சியில் ரசிப்ப்பானே...ஆனால் உண்மையில் பார்த்து ரசிக்கவில்லை , அது ஒரு போலி தோற்றம்தான் என சூசகமாக சொல்லப்பட்டு இருக்கும்,


 நிர்மல்
ஆமாம்


பிச்சை
அந்த கர்னல் உடல் ரீதியாக காமத்தை அணுகுகிறார்.. மனம் ஒத்து அல்ல.... சில்வாவோ மன ரீதியாக அணுகிறான்.. உடல் ரீதியாக் அல்ல


 நிர்மல்
எப்படி?

பிச்சை
அந்த கர்னல் காதல் என்பதயோ, அன்பு என்பதையோ உணரவேயில்லை


 நிர்மல்
அவர் அவரது மகளை காதலிக்கிறார் இல்லியா, அதாவது அவளை கடைசி வரை அவர் மட்டும்தான் பார்த்துகொள்ள வேண்டும், வேறு யாரும் வந்துவிடக்கூடாது என பொஸஸிவா இருக்கிறார். அது காமம் சப்ர்ஸ் செய்யப்பட்ட விளைவோ.


பிச்சை 
காமம் சப்ரஸ் செய்யப்பட்டதால் , பொசசிவ்னஸ் வந்து விடுகிறது... ( ஆசிட் ஊற்றும் மன நிலை ) பலர் பொசசிவ்னஸ்ஸைத்தான் காதல் என நினைக்கிறார்கள்

 நிர்மல்
ஆமாம்


பிச்சை
ஆனால் முறை தவறியதாக இருந்தாலும் , சில்வாவின் நேசிப்பில் உண்மை இருப்பதாக தோன்றுகிறது... அவனால் அந்த பெண்ணுக்கு ஒரு போதும் தீங்கு செய்ய இயலாது

 நிர்மல்
கரெக்ட்

கையில் துப்பாக்கி இருந்தால் கூட அவன் அவளை ஒன்றும் செய்யவில்லைபிச்சை 
இந்த அன்பை காதல்/ காமம் என தவறாக நினைத்து கொண்டு இருந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த கற்பனை கலைகிறது

 நிர்மல்
யெஸ் -


பிச்சை
இவன் காதலை காமம் என நினைக்கிறான். கர்னல் காமத்தை காதல் என நினைக்கிறார்


 நிர்மல்
a brief crossing அப்படின்னு ஒரு படம் இருக்கு காத்தரனின் ப்ர்லட் படம். அது நினைவுக்கு வருகிறது.


பிச்சை
ம்ம் 

நிர்மல்
middle aged women meets a teen age boy, she tells how she is alone and seperated from her useless husband, this and that, the teen age boyz get his feeling and had sex with her. 


பிச்சை
ம்ம்


 நிர்மல்
this happenes in a ship, next day when ship comes to shore, she meets her husband and she was happy to go with her, even not noticing the boy. 


பிச்சை
mmm

 நிர்மல்
அந்த பௌயனின் முந்திய இரவு புணர்ச்சி அவள் அவனுக்கு சொன்ன கதையை மையாமாக கொண்டது.
 அந்த நேரத்தில் ஒரு வேளை எனது கணவனை போல உண்ணால் முடியுமா என அவளது கண்வனின் திற்மை பற்றி சொல்லிருந்தால் ? 

பிச்சை
mmm

 நிர்மல்
இதில் கதை சொல்லும் சோலா இன போலிஸ்க்காரர்- வெகுளிபிச்சை
அவனை கொன்றது யார் என்ற தலைப்பு , குறிப்பிட்ட நபர் யார் என ஆராய நம்மை கேட்கவில்லை... எந்த அம்சம் அவனை கொன்றது


 நிர்மல்
ஆமாம் அதுதான் கிரைம் நாவலை இலக்கிய அனுபவத்திற்க்கு கொண்டு செல்கிறது


பிச்சை
காதலற்ற காமமா அல்லது காமமற்ற காதலா.. அல்லது பெரு நாட்டின் சமூக சிக்கல்களா..

 நிர்மல்
முக்கியமா நாம தெரிந்து கொள்ள வேண்டியது சில்வா சோலா எனும் தாழ்த்தப்பட்ட செவ்விந்தியர் இனம்
கர்ணல் - வெள்ளைக்காரன் 


பிச்சை
ஆமா


 நிர்மல்
காதலற்ர காமமா அல்லது காமமற்ற காதலா.. அல்லது பெரு நாட்டின் சமூக சிக்கல்களா.. - சரியா சொன்னிங்க

அவர் காதலை சொல்லும் போதெல்லாம் விட்டி பூச்சிகள் எப்படி த்ன்னை மாய்த்து கொள்கிறது என்பதை சொல்கிறார்.பிச்சை

ஹ்ம்ம்ம்ம்


 நிர்மல்
பாஸ்- காதலற்ற காமம் - யார்?


பிச்சை

அந்த கர்னல் த்ன மகள் மேல் கொண்ட உறவு

அந்த பெண் பலமினோ மீது கொண்டதும் காதல் அல்ல என்றே நினைக்கிறேன்


 நிர்மல்

அவனுக்கு இருப்பது உண்மையான காதல்

இலக்கியத்தில் புதிர்தான் முக்கியம் அதுவே உண்மைக்கான தேடலை உருவாக்குகிறது, உரையாடலை கொண்டு வருகிறது, அதற்க்கு உண்மை தேவையில்லை ஏனென்றால் உண்மை தேடலை முடிக்கிறது உரையாடலை முற்று பெற வைக்கிறது 


பிச்சை
ஆமா


 நிர்மல்
அதை சாத்தியமாக்குகிறது இந்த நாவல் அத்னாலே இது இலக்கியம்.பிச்சை
ம்ம்ம்


 நிர்மல்
ராணுவ அதிகாரியின் மகள் மீது அவரின் பொஸசிவ்னசும் காரனமாக இருக்கலாம்.

அந்த பெண்ணை காதலிக்கும் கிட்டார் வாசிக்கும் பெலிமெரோவின் காதல் கூட காரணமாக இருக்கலாம்.

பெண்ணை காதலிக்கும் இன்னுமொரு பைலட்டின் பொறாமை காரணமாக இருக்கலாம்.


அப்புறம் அடுத்து சாகும் ராணுவ அதிகாரியும் அவரது மகளின் சாவுக்கு யார் காரணம், அந்த பொலிமெரோவின் கொலைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்ச்சி செய்ய்யும் விளைவுதானே.

உண்மையை கண்டுபிடிப்பதில் விளைவாக இன்னும் இரண்டு கொலைகள் முதல் கொலையின் உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் செய்துவிடுகிறது.

அக்ஸுவலா உண்மையை சில்வாவில் கதையில் இருக்கிறது, கற்ப்பனையில் தோன்றிய அல்லது நமது மன பிம்மங்கள் உடைபடும்போது வன்முறை நிக்ழ்தேருகிறது. இந்த பிம்மங்கள் எப்படியாக உருவாகிறது உருவாக்கபடுகிறது அது எந்த அளவுக்கு நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொக்கி நிற்க்கும் கேள்வி எனலாம்.

Wednesday, April 10, 2013

மார்க்கேஸ் எழுதிய மறக்க முடியாத நாவல்- திரில்லர் வடிவில் ஓர் உன்னத படைப்பு


 எனக்கு தெரிந்த ஓர் இளம் பெண்.  வாழ்வியல் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கொண்டவள். வெற்றிகளால் தலைக்கனம் ஏறாமல் பார்த்து கொண்டவள். அழகு , அமைதி, புத்திசாலித்தனம் என எல்லாம் அவளிடம் கச்சிதமாக பொருந்தி இருந்தன.

அவளுக்கு பொருத்தமான பெண் பார்க்கும் பொறுப்பை அவள் உறவினர் ஒருவர் ஏற்று கொண்டார். ஏற்றார் என்பதை விட பறித்து கொண்டார் என்றே சொல்ல வேண்டும். வேறு யாரும் தலையிடாமல் பார்த்து கொண்டார். தானே அலைந்து திரிந்து ஒரு பெண்ணை பிடித்து மணம் செய்து வைத்தார்.

சீரும் சிறப்புமாக திருமணம் நடந்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே பிரச்சினைகள் தொடங்கின. தன் பொறுப்பு முடிந்தது என அந்த உறவினர் கழண்டு கொண்டார்.

இப்படி ஓர் இணையை அவர் ஏன் சேர்த்து வைத்தார் என யாருக்கும் புரியவில்லை. அந்த திருமணத்தில் அவர் உட்பட யாருக்குமே திருப்தி இல்லை என பிற்பாடு தெரியவந்தது. இதை முடித்து வைப்பதால் அவருக்கு மறைமுக லாபமும் இல்லை. பிறகு ஏன் அவர் இதில் தீவிரமாக இருந்தார்,சரி , அவர்தான் செய்தார், மற்றவர்கள் ஏன் தடுக்கவில்லை?

அந்த பெண் வாழ்வை அழித்த பின் , பலர் பரிதாப்பட்டார்கள். ஆலோசனை சொன்னார்கள்..ஆனால் அவள் கஷ்டங்களுக்கு அவர்களும் ஒரு விதத்தில் காரணம் என அவர்களுக்கு புரியவே இல்லை.. ஒரு வேளை அது புரிந்ததால்தான் , குற்ற உணர்ச்சிகளை வேறு விதத்தில் காட்டுகிறார்களோ என்னவோ..

அந்த பெண்ணின் பெற்றோர்கள் தம் பொறுப்பை சரியாக செய்யவில்லை. அந்த குற்ற உணர்ச்சியை எப்படி சமாளிக்கிறார்கள். இப்போது அந்த பெண் முன்பு போல அழகாக உடுத்துவதில்லை.  சிரிப்பதில்லை. இதை நினைத்து நாள் தோறும் வருந்துகிறார்கள். இதனால் அந்த பெண்ணுக்கு பலன் ஏதும் இல்லை. ஆனாலும் இப்படி செய்வதில் அவர்களுக்கு ஓர் ஆறுதல் ( !! )


தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்கி விட்டு, பிறகு இன்னொரு வேடம் காட்டும் மனித மனதின் தந்திரத்தை என்னவென்று சொல்வது.

இது போன்ற ஓர் உணர்ச்சிதான் ,  chronicle of a death foretold  நாவல் படித்த போது ஏற்பட்டது.

காப்ரியேல் கார்சியா மார்கெஸ் எழுதிய முக்கியமான நாவல் இது. மிகவும் சிறிய நாவல். ஆனால் இது ஏற்படுத்தும் அதிர்வலைகள் பலமானது.

முதல் வரியிலேயே கதை , கதை சொல்லும் பாணி , கதை மாந்தர்கள் என அறிமுகப்படுத்தும் பாணி அசர வைக்கிறது.

அந்த முதல் வரி இதுதான்.

அவன் கொல்லப்பட இருக்கும் அந்த நாளில் , பிஷப் வருகை தரும் படகுக்காக காத்திருக்கும் பொருட்டு, காலை 5.30க்கு சந்தியாகு  நாசர் எழுந்தான்.


 நாசர் பற்றிய கதை , அவனை கொல்ல திட்டம் இருக்கிறார்கள், பிஷப் வர இருக்கிறார் என பல தகவல்கள் முதல் வரியிலேயே சொல்லப்படுகிறது.  நம் மன நிலை ஒரு குறிப்பிட்ட கதைப்போக்கிற்காக தயாராகிறது.

  அவன் எழுகிறான் என ஆரம்பிப்பதால் இனி அவன் கொல்லப்படக்கூடும் , அல்லது கொலையில் இருந்து தப்பிக்க கூடும் என நினைப்போம்.

ஆனால் இது அப்படிப்பட்ட லீனியர் கதை அல்ல.. நான் லீனியர் யுக்தி அற்புதமாக பயன்படுத்தப்பட்டுள்ள கதை.. இந்த கதை நிகழ்வது அல்ல. ஒரு காதாபாத்திரம் சொல்வது மூலம் , அந்த கதாபாத்திரத்துடன் மற்றவர்கள் பேசுவது மூலம் நம் மனக்கண் முன் விரியும் கதை.

அதாவது எல்லாமே ஏற்கனவே நிகழ்ந்த ஒன்று. ஆனால் கதைப்போக்கு நான் லீனியராக உள்ளதால் , எது நிகழந்தது என்பதன் முக்கியத்துவம் அடிபட்டு போய் , மற்ற விஷ்யங்கள் மீது கவனம் செலுத்த முடிகிறது.

பயார்டோ சான் ரோமன் என்பவன் பணக்காரன். தனக்காக பெண் தேடுகிறான், கடைச்யில் ஏஞ்சலோ விகாரியோ என்ற பெண்ணை மணம் முடிக்க தீர்மானிக்கிறான்.
அவளுக்கு இவன் மீது ஆர்வம் இல்லை..ஆனால் அவளை திருமணம் செய்து முடித்து அனுப்பினால்தான் தம் கடமை முடியும் என நினைக்கும் குடும்ப அமைப்பால் அவளுக்கு வேறு வழி இல்லாமல் போகிறது . பெண் என்பவள் திருமணம் செய்து கொள்வதற்காகவே பிறந்தவள்.அதன் பொருட்டே காலம் முழுக்க தயாராகிக்கொண்டு இருப்பவ:ள் என்ற சூழல்.

திருமணம் முடிகிறது. திருமணத்துக்கு முன்பே அவள் கன்னித்தன்மையை இழந்தவள் என அவனுக்கு தெரிய வருகிறது. ஓர் ஆண் செய்தால் அது சாகசம். பெண் செய்தால் பாதகம் என்ற அடிப்படையில் அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்புகிறான்.

குடும்ப மானம் போய் விட்டது..அவளை இந்த கதிக்கு ஆளாக்கியவன் யார் என அவள் குடும்பத்தினர் விசாரிக்கின்றனர். சந்தியாகு நாசர் என்பவனை அவள் அடையாளம் காட்ட, அவள் சகோதரர்கள் அவனை கொன்று குடும்ப மானத்தை மீட்க முடிவு செய்கின்றனர்.

இதுதான் கதை.

ஆனால் இதுதான் கதை என சொல்ல முடியாது :)

இது யதார்த்த வாத கதை அன்று. சொல்லப்படுவது கதை அல்ல..சொல்லப்பட்டதை வைத்து சொல்லப்படாமல் விடுப்பட்டதை தேடி கண்டெடுப்பதே கதை./

உதாரணமாக அந்த சகோதரர்கள் தாங்கள் கொலை செய்யப்போவதை அனைவரிடம் , என்னவோ விருந்துக்கு போவது போல , அலட்சியமாக சொல்கிறார்கள். மற்றவர்கள் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. சிலர் பொருட்படுத்தாது போல காட்டிக்கொண்டு, ஒரு பரபரப்பான கொலையை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். சிலர் அவன் செத்தால் நல்லதுதான் என முன் விரோத அடிப்படையில் மகிழ்கிறார்கள்.

அவன் எப்படியும் சாகத்தான் போகிறான். நாம் என்ன சொல்லி , என்ன ஆகப்போகிறது என சிலர் நினைக்கிறார்கள்.

உண்மை உலகில் இவ்வளவு வெளிப்படையாக நடக்காது. எனவேதான் இதை யதார்த்தவாத கதையாக கருத முடியாது. ஆனால் இது போன்ற விஷ்யங்கள் வேறு வகைகளில் நடக்கும், நடந்து வருவது கண்கூடாக பார்க்கலாம். நான் ஆரம்பத்தில் சொன்ன விஷயம் ஓர் உதாரணம்.

சந்தியாகு நாசருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆகிறது. இவனை கொல்லப்போகிறார்கள் என்பதில் அவளுக்கு அவ்வளவு பெரிய பதட்டம் இல்லை. குடும்ப கவுரவத்தை காக்க, ஏஞ்சலோவை இவனுக்கு மணம் செய்து வைத்து விடுவார்களோ என்பதே இவள் ப்தட்டம்.

இப்படி பல்வேறு சுவாரஸ்யமான பார்வைகள்.

அவர்கள் ஒரு வேகத்தில் கொலை செய்வதாக சொல்லிவிட்டார்களே தவிர, அவர்களுக்கு கொலை செய்ய பெரிய ஆர்வம் இல்லை.  ஆனால் ஊர் மக்கள் ஆவலாக காத்து இருப்பதால் அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் போகிறது.

அந்த சகோதரர்களில் ஒருவனை ஒரு பெண் பிற்பாடு மணம் செய்து கொள்கிறாள். அந்த கொலைதான் அவனை மண முடிக்க ஆசை ஏற்படுத்தியதாக அவள் சொல்கிறாள்.

ஆக, உண்மையான கொலையாளி என யாரை சொல்வது என்பதே நமக்கு புரியாமல் போகிறது.


அந்த பிஷப் வருகை முக்கியமாக குறியீடு. அவர் வருகைக்காக ஊரே பரபரப்படைகிறது.  அவர் வந்து பெரிதாக எதையும் செய்யபோவதில்லை. அவர் இன்னது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெரிதாக இவர்களிடம் இல்லை. ஆனாலும் ஒரு பரபரப்பு. அவர் வந்து , சும்மா கை அசைத்து விட்டு செல்கிறார்.

வெறும் அர்த்தமற்ற ஒரு சடங்கு.அவ்வளவுதான்.

காதலும் கூட அர்த்தமற்ற சடங்காக கூடும்.

கணவனால் அனுப்பப்பட்ட ஏஞ்சலோ பதினேழு வருடங்கள் , கணவனுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்புகிறாள். அவன் பதில் ஏதும் போடவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக அனுப்பிகிறாள்.

கடைசியில் ஒரு நாள் அவன் வருகிறான், அந்த கடிதங்கள் எதையும் அவன் படிக்கவே இல்லை என கடையில் தெரிகிறது.

கடிதம் எழுதுவது . பிஷப்புக்காக காத்து இருந்தது போன்ற வெறும் சடங்குதான், அதில் அன்போ, உணர்ச்சியோ இல்லை/

அதே போல குடும்ப கவுரவம் என்பதும் , அதற்காக கொலை என்பதும் சும்மா ஓர் உணர்ச்சி அற்ற சடங்கு மட்டுமே.  ஊருக்காக கொலை செய்கிறார்களே தவிர , அதில் அவர்களுக்கு ஏதும் ஆத்ம திருப்தி இல்லை.


கொலையின் விளைவுகள், மற்றவர்கள் எதிர் வினைகள் என எல்லாமும் அலசப்பட்டு கடைசியில்தான் கொலை வருகிறது.

அதிலேயே ஆழ்ந்த பொருள் இருப்பதாக கருதுகிறேன்.

எல்லாமே அர்த்தமற்ற சடங்குகள் ஆகி விட்டால், வாழ்க்கை என்பது உயிர் அற்று போய் விடும்.

ஏராளமான கேரக்டர்கள் ,  அர்த்தமுள்ள ஆழ்ந்த உரையாடல்க்ள் என ஒரு த்ரில்லர் வடிவில் ஒரு அற்புதமான படைப்பு இது

படித்து பாருங்கள்.

வெளியீடு : penguin books

விலை : ரூ 150

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா