Saturday, October 26, 2013

பார்க்க வேண்டிய மலையாளப்படமும் , ஒரு கேவலமான ஃபிளாஷ்பேக்கும்...

வைசாலி என்ற மலையாளப்படம் சமீபத்தில் பார்த்தேன். நேர்த்தியான ஒளிப்பதிவு, வரலாற்றை மிகை உணர்ச்சி இல்லாமல் அணுகும் பாங்கு , பரதனின் திறமையான இயக்கம், மிகை அற்ற நடிப்பு, கனவுலகம் ஒன்றுக்கு எடுத்து செல்லும் இசை, அந்த காலத்திலேயே அவாள் செய்த அக்குறும்புகளை காட்சிப்படுத்திய சமூக பார்வை , ஆன்மீகம் , காதல் என நிறைய சொல்ல வேண்டும். அதற்குமுன் இந்த படம் எனக்கு முதன்முதலாக எப்படி அறிமுகம் ஆயிற்று என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இப்போதெல்லாம் மொபைல் போனிலேயே சினிமா பார்க்க முடிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட இந்த நிலை இல்லை. எனது கல்லூரி காலத்தில் “உலக” சினிமாக்களை பார்க்க வேண்டுமானால் டிவியை வாடகைக்கு எடுத்து பார்த்தால்தான் உண்டு. ஏனென்றால் நாங்கள் தங்கி இருந்த அறையில் டிவியோ , கணினியோ இல்லை.
இந்த டிவியை வாங்கி தருவதற்கென்றே சில ஸ்பான்சர்கள் அவ்வப்போது கிடைப்பதுண்டு. அண்ணன் கல்யாணம், சித்தப்பா பொண்ணு கல்யாணம் , காது குத்து , கெடா வெட்டு போன்றவற்றை சிலர் வீடியோ எடுத்து வந்து பெருமையாக நமக்கு திரையிட்டு காட்ட விரும்புவார்கள்..அதற்காக டீவியை வாடகைக்கு எடுத்து தருவார்கள்.
அவர்களது பெருமைமிகு திரையிடல் முடிந்ததும் , நாம் நம் டேஸ்ட்டுக்கேற்ற “உலக” சினிமாக்களை வாடகைக்கு எடுத்து பார்த்து கொள்ளலாம்.. இந்த வாடகை செலவு மட்டும் நம்மை சேர்ந்தது..டீவி செலவு அவர்களை சேர்ந்தது… வின்-வின் சிச்சுவேஷன். இந்த டீல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

உலக சினிமா என்றால் சிலர் ஈரான் , கொரியா, மெசபடோமியா, நிகாரகுவா, ஆண்டிகுவா , ஏதென்ஸ் , ஆஸ்திரியா , பெலோ ரஷ்யா, பெர்ஷியா , லத்தீன் அமெரிக்கா என கருதுகிறார்கள். கேரளாவும் உலகத்தில்தானே இருக்கிறது..அப்படி பார்த்தால் , மலையாளப்படங்களும் உலக சினிமாதானே என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
 நண்பர்கள் கொண்டு வரும் கல்யாண கேசட்டை பார்த்து முடித்த அடுத்த கணம் , பிட்டு படம் ஓட ஆரம்பிப்பதில் இருக்கும் ஒரு ”பொயட்டிக் ஜஸ்டிஸை” நான் ரசிக்க தவறுவதில்லை. கல்யாண காட்சி முடிந்ததும் , இந்த காட்சி ஓட ஆரம்பிக்கும் பரவசமான கணத்தை என்னவென்பது!!

மாமனாரின் காமவெறி , செக்ஸ் காலேஜ் , அவளோட ராவுகள் போன்ற உலகப்படங்களை பலமுறை பார்த்து அலுத்து விட்டதால், புதிதாக ஒன்றை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பரிந்துரைத்த படம்தான் விசாலி.

சாமியாருக்கு ஒரு பெண் செக்ஸ் பாடம் நடத்துறாளாம்.. படம் முழுக்க ஏகப்பட்ட சீன்களாம்.. காட்டுக்குள்ள ஒரே ஜல்சாவாம் என்றார் விஞ்ஞானி.

சாமியாருக்கே செக்ஸ் பாடம் என்ற மாற்று சிந்தனை எங்களை சுண்டி இழுத்தது. கஷ்டப்பட்டு அந்த கேசட் வாங்கினோம். வழக்கம்போல ஒரு ஸ்பான்சர் புண்ணியத்தில் டீவி வாடகைக்கு எடுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

இதுபோன்ற படங்களை பார்க்க கலை வெறிபிடித்து அலைவார்கள் அல்லவா.. அவர்களில் பெரும்பாலானோர் அந்த படங்களை முழுக்க பார்ப்பதில்லை என்பது இதில் இருக்கும் வினோதங்களில் ஒன்று. பாதிப்படத்திலேயே ஃப்ளாட் ஆகி விடுவார்கள்.
என்னைபொருத்தவரை நான் இந்த படங்களை காம வெறிகொண்டு பார்ப்பதில்லை. இயற்கை காட்சிகள் , ” நடித்தவர்களின் “ திறமை , ஷாட்டுகள் ( camera shot ) , இசை , இயக்கம் ( Direction ) போன்றவற்றுக்காகத்தான் நான் இந்த கர்(கா)மங்களை பார்த்து தொலைப்பது.
இதில் கொடுமை என்னவென்றால் , காமவெறியர்கள் எல்லாம் பாதியிலேயே தூங்கி விடுவார்கள் .  நான் மட்டும் கர்ம சிரத்தையாக பார்த்துவிட்டு , அணைத்து விட்டு ( டிவியை ) , அதன் பின் தூங்க செல்வேன். சில சமயம் தூங்க முடியாமல் , விடிந்து விடுவதும் உண்டு.

அப்படி ஒரு நாள் பார்த்த படம்தான் விசாலி..ஆனால் படம் நம்மவர்கள் டேஸ்ட்டுக்கு மேட்ச் ஆகவில்லை. வறட்சி , அரசர் என “கலையம்சம் “ இல்லாமல் எதை நோக்கி போகிறது என தெரியாமல் போய்க்கொண்டு இருந்தது. டென்ஷனாகி பலர் தூங்கி விட்டார்கள். ஏதாச்சும் சீன் இருந்தா பார்த்து சொல்லு என எனக்கு அசைன்மெண்ட் கொடுத்து இருந்ததால் , நான் ஃபார்ர்வார்ட் எல்லாம் செய்து பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. தோல்வியையே அறியாத நான் , தோல்வியை ஒப்புக்கொண்டு ஆஃப் செய்து விட்டேன்.

இப்படி ஒரு நல்ல படத்தை பிட்டு படம் என நினைத்தேன் என்றால் என் மலையாள சினிமா அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது உங்களுக்க்கு புரிந்து இருக்கும். ஆனால் என் சினிமா அறிவு இந்த லட்சணத்தில் இருப்பது எனக்கே தெரிந்தது ஒரு மினி பதிவர் சந்திப்பில்தான்.

இப்போதெல்லாம் ஆர்கனைஸ்டாக சந்திப்பை நடத்துகிறார்கள்..முன்பெல்லாம் இன்ஃபார்மலாக நடக்கும்.
அப்போதெல்லாம் அவ்வப்போது கலந்து கொண்ட என்னை இப்போது நடக்கும் சந்திப்புகளில் பார்க்க முடியாது. இனி சந்திப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்ததற்கு பின் ஒரு வரலாற்று சம்பவம் இருக்கிறது.

ஒரு சந்திப்பின் போது இரு சினிமா (பதிவர் ) தாதாக்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது..கூடவே இலக்கிய கில்லாடிகளும் இருந்தனர்.

தோழர். நீங்க மலையாளப்படமெல்லாம் பார்த்து இருக்கீங்களா… என்றார் ஒருவர்… ஓ பார்த்து இருக்கிறேனே என்றேன்.. நான் பார்க்காத மலையாளப்படமா.
ஓ. உங்களுக்கு மலையாளம் தெரியுமா என்றார் இன்னொருவர்…
இதுக்கு எதுக்கு மொழி தெரியணும் என்றேன்.. கூட இருந்தவருக்கு மகிழ்ச்சி…ஆமா..கலைக்கு மொழி தேவை இல்லை… காட்சிமொழிகளாலும் , பிம்பங்களாலும் , படிமங்களாலும்தான் திரை மொழி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்றார்.

படிமம் என்ற சொல்லையே அப்போதுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.. அது என்ன பிம்பம், காட்சிமொழி…எனக்கு மைல்டாக டவுட் வர ஆரம்பித்தது.

தோழர் நீங்க பார்த்ததிலேயே உங்களுக்கு பிடித்த மலையாளப்படம் எது என்றார்.

நிறையப்படம் இருக்கே .எதை என சொல்வது என யோசிக்கலானேன். அப்போது இன்னொருவர் சிலர் ஆப்ஷன்கள் கொடுத்தார்/…அதைகேட்டதும்தான் , அவர்கள் வேறு ஏதோ ஒரு தளத்தில் பேசுவதை உணர்ந்தேன். கொஞ்சம் இருங்க…பிஸ் அடிச்சுட்டு வந்துறேன் என சொல்லி விட்டு கிளம்பியவன் தான் ..அதன் பின் எந்த சந்திப்புக்கும் போனதில்லை. நான் மட்டும் எனக்கு பிடித்த படம் என என் வாய் வரை வந்து விட்ட படத்தை சொல்லி இருந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது… அருகில் இருந்தவர்களில் பலர் இன்றும் என் நண்பர்கள் என்பதால் , என் பயம் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க வைசாலி படத்தைத்தான் சமீபத்தில் ரசித்து பார்த்தேன்.

மகாபாரதத்தில் இருந்து ஒரு சிறிய சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்கள்.


மழை பொய்த்து போய் , வறட்சியில் வாடும் சாம்ராஜ்யம். அரசருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..பூஜை , ஹோமம் என எதுவும் பலனளிக்கவில்லை. ( ஏன் மழை பொய்த்தது,..சாபம் …என்பதெல்லாம் வேறு கதை )

ராஜகுரு அரசருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அவரது மகன் , வைசாலி என்ற பெண்ணை விரும்புகிறான். அவள் அரசருக்கு பிறந்த பெண்..ஆனால் சட்டப்படியான வாரிசு அல்ல…எனவே ராஜகுரு அந்த காதலை விரும்பவில்லை.


இந்த சூழ் நிலையில் , மழை பொழியச்செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது … மனிதர்களையே பார்க்காமல் , காட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்டு , தவ ஆற்றல் முழுமையாக கைவரப்பெற்ற ரிஷி குமாரனை ( ரிஷ்ய சிருங்கர்) அழைத்து வந்து பூஜை செய்தால் , மழை வரும் என்கிறார் குரு… ( அவர் ஏன் தந்தையால் வளர்க்கப்படுகிறார்… தாய் என்ன ஆனாள்.. ஏன் தனிமையாக வைத்து வளர்க்கிறார் என்பதெல்லாம் பெரிய வரலாறு ) ஆனால் அவர் வர சம்மதிக்க மாட்டார்.. படை பலத்தாலோ , பண பலத்தாலோ கூட்டி வர இயலாது… ஒரு பெண்ணை அனுப்பி , அவரை மயக்கி கூட்டி வருவதுதான் ஒரே வழி என்கிறார் குரு. அந்த பெண் அழகிலும் , கலைகளிலும் சிறந்தவளாக இருக்க வேண்டும். அவளால்தான் இதை செய்ய முடியும். இந்த பண்புகள் கொண்ட ஒரே பெண் வைசாலிதான் என்கிறார்.

செண்டிமெண்ட் , கடமை, தேசத்தின் தேவை என்பதை எல்லாம் பேசி அவளை அனுப்ப , அவள் தாயின் சம்மதம் பெறுகிறார்கள்.. எதேனும் தவறு நிகழ்ந்தால், அந்த ரிஷி கடுமையாக தண்டித்து விடுவார்.. மற்றும் அந்த இடம் அபாயமிக்கது…அப்படி இருந்தாலும் , உயிர் பற்றி கவலை இன்றி காட்டுக்கு செல்கிறார்கள்..இப்படி ஒரு பணிக்கு தன் பெண்ணை அழைத்து செல்வது ஒரு தாய்க்கு கஷ்டம்தான்..ஆனாலும் ஒரு கடமைக்காக செல்கிறார்கள்.
ரிஷிகுமாரனை மெல்ல மெல்ல வைசாலி மயக்குகிறாள்..இதில் அவன்மீது உண்மையிலேயே காதல் கொள்கிறாள்.

பல்வேறு அபாயங்களுக்கு மத்தியில் ,, உயிர் தியாகம் செய்து அழைத்து வருகிறார்கள்/. மழை பெய்கிறது.. ஊரே மகிழ்கிறது.

அரசர் மனம் மகிழ்ந்து , ரிஷிகுமாரனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் என அறிவிக்கிறார். தனக்கு மகள் என்ற அந்தஸ்து கிடைத்து விட்டதே என வைசாலி மகிழ்கிறாள்..தாயும் மகிழ்கிறாள்..ஆனால் கடைசி நிமிடத்தில் நிகழும் திருப்பம், படத்துக்கு வேறொரு அர்த்தத்தை கொடுக்கிறது..

ஓர் ஆணை மயக்கும் பெண் என்ற கான்சப்ட் கிடைத்தால் , நம் ஆட்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.. ஆனால் படத்தில் துளியும் ஆபாசம் இல்லை. சில முத்தக்காட்சிகளும்கூட இயல்பாக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருந்தது…ஒளியும் இருளும் கலந்த சந்திப்பொழுதுகளை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் பார்த்தது இல்லை.
ஒரு பெண்ணின் , ஆணின் ஆயுட்காலம் வெகு குறைவு.. ஆனால் பெண் தன்மையும் , ஆண் தன்மையும் என்றென்றும் இருப்பன. அந்த ஆண் தன்மையும் பெண் தன்மையும் இணையும்போதுதான் ஒரு செயல் உருவாகிறது… இதைத்தான் படம் சொல்கிறது.. காட்டில் பெண் வாசனையே இல்லாமல் இருந்தபோது சாதிக்க முடியாததை , பெண்மை தன்னை ஆகர்ஷிக்க அனுமதிக்கையில் சாதிக்க முடிகிறது .


ஓஷோ ஒரு கதை சொல்லி இருப்பார்.. ஒரு நாட்டில் பயங்கர வறட்சி. மழையே இல்லை.. ஒரு துறவியை வரவழைத்தார்கள்.. அவர் இயற்கையின் ஒழுங்கு , மனிதர்களின்  ஒழுங்கு எல்லாம் முற்றிலும் சீர்கெட்டு இருப்பதைக் கண்டார். ஒன்று ஒழுங்குடன் இருந்தால்தான் , இன்னொன்று ஒழுங்காகும் என அறிந்து , ஒரு குடில் அமைத்தார். அதில் அவரும் அவர் சீடர்களும் முழு ஒழுங்குடன் , உடலாலும் மனதாலும் இருந்து வந்தனர்… வேறு வழியின்றி இயற்கையும் தன் ஒழுங்குக்கு வந்து மழை பொழிந்தது..
ரிஷ்யசிருங்கர் வந்ததும் மழை பெய்வதில் மாய மந்திரம் இல்லை.. அது ஒரு தத்துவம்..
இப்படி தத்துவ ரீதியாக மட்டும் அன்றி சமூக ரீதியாகவும் படம் ஸ்கோர் செய்வது குறிப்படத்தக்கது.
தன் மகன் வைசாலியை காதலிப்பதை ஏற்காமல் ராஜ குரு செய்யும் சதி செயல்கள் அப்போதைய ஜாதி அமைப்பை கண் முன் நிறுத்துகின்றன.

யாரால் அந்த ஊருக்கு மழை கிடைத்ததோ , யாரால் சாபம் நீங்கியதோ அவர்களை மறந்து கொண்டாட்டத்தில் திளைக்கும் மக்களின் மறதித்தன்மை அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஓர் ஊரில் மழை ரொம்ப நாளாக இல்லை… மிதக்கும் மேகங்கள் மழை பொழியாமல் போய் விடும்.. மக்கள் துடித்தனர்.. ஒரு பெரிய மேகம் மிதப்பதை பார்த்து அதனிடம் கண்ணீர் மல்க பிரார்த்தித்தினர்… மனமிரங்கி மேகம் மழையாக பொய்தது..
அனைவரும் ஆட்டம் பாட்டம் என்ன கொண்டாடினர்… கடைசியில் ஒருவர் சொன்னார்… “ நாம் கொண்டாட்டத்துக்கு காரணமான மேகத்துக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே”

அடடா..அனைவருக்கும் அப்போதுதான் நினைவு வந்தது… நன்றி சொல்ல வானத்தை அண்ணாந்து பார்த்து மேகத்தை தேடினர்.. நன்றியை ஏற்க மேகம் இல்லை… அதுதான் தன்னை மழையாக கொடுத்து விட்டதே..

உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்து வருகிறது.. நன்றி கெட்டத்தனமாக நடந்து உலகம் , என்றாவது நன்றி சொல்ல நினைக்கும்போது , நன்றியை ஏற்க உரியவர்கள் இருப்பதில்லை..






-+

Tuesday, October 22, 2013

கைகளுக்கு வேலை கொடுத்த மலையாளப் படம்


  நான் முதன் முதலில் மலையாளப்படம் பார்த்தது கல்லூரி முதல் ஆண்டில்தான். அதற்கு முன் , டப்பிங் செய்யப்பட்டு கேவலமான தமிழாக்க தலைப்புகளில் வந்த மலையாளப்படங்களை மு... மன்னிக்கவும் - கலைக்கண்ணோட்டத்தோடு  பார்த்து ரசித்து இருந்தாலும் , நேரடியான மலையாளப்படத்தை பார்த்தது கல்லூரி முதல் ஆண்டில்தான். என்னதான் பிஞ்சில் பழுத்து வெம்பி போனாலும் , மலையாளப்படம் பார்க்கும் வாய்ப்பு பள்ளி வாழ்க்கையில் கிடைக்காதது வரலாற்று துரதிர்ஷ்டம்தான்.

அப்போது முதல் ஆண்டில் , இது போன்ற மேட்டர்களில் அப்பரசண்டிசுகளாக இருந்த இருவருடன் பெங்களூரின் முக்கியப்பகுதியில் இருக்கும் ஹிமாலயா தியேட்டருக்கு போனோம். போஸ்டர் பார்த்தாலே கிளுகிளுப்பாக இருந்தது. சும்மா இருந்தாலும் கிளுகிளுப்பாக இருந்து இருக்காது. ஆங்காங்கு பிட்டு பேப்பரால் லாவகமாக மறைத்து இருப்பார்கள்..அதைப் பார்த்தாலே கிளுகிளுப்பாக இருக்கும்.

ஆனால் படம் செம போர், இடவேளைக்கு பின் , ஒரு ரெண்டு நிமிஷம் குளியன் சீன். அப்புறம் லேசாக ஒரு பெட்ரூம் சீன். ரெண்டு செகண்ட் பார்ப்பதற்குள் லைட் ஆஃப் ஆகி விடும். எரிச்ச்லாக இருந்தது. ஆனால் ஏமாந்து விட்டதை காட்டிக்கொள்ளாமல் , செம டைரக்‌ஷண்டா மச்சி , ஹீரோயின் செம  நடிப்புடா ( !! ? ) , நல்ல கதைடா என வெட்டியாக் சீன் போட்டுக்கொண்டு ரூமுக்கு  நடக்கலானோம். நாங்கள் பேசுவது போலித்தனமாது  என எங்களுக்கே தெரிந்துதான் இருந்தது.

அப்போது முடிவு எடுத்தேன். இந்த அப்பரண்டிசுகளை நம்பக்கூடாது. வல்லுனர்களையே நாட வேண்டும். அப்போதுதான் , தர்ட் இயர் சீனியர் நட்பு கிடைத்தது. கன்னியாகுமரி காரர். பல “ நல்ல “ விஷ்யங்களை அவர்தான் கற்று கொடுத்தார்.

அவர் தண்ணி அடிக்க கற்றுத்தந்ததில்தான் அவர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி என்பது எங்களுக்கு தெரிய வந்தது. ஃபுல்லாக தண்ணி அடித்து விட்டு , வருவோம் அல்லவா, அப்போது என்னதான் நெருக்கடி என்றாலும் , சிறு நீர் கழிக்க கூடாது என்பது அவர் கொள்கை. சிறுனீர் கழித்தால் போதை இறங்கி விடும் என்பது அவர் கண்டு பிடிப்பு.

இந்த அரிய கண்டுபிடிப்பை மதிக்கும் வகையில் நாங்கள் கஷ்டப்பட்டு அடக்கிகொண்டே வருவோம். சில சமயம் நெருக்கடி அதிகமாகும்போது , ஒரு ரெண்டு டிராப் விட்டு விட்டு வந்து விடுகிறோம் என்றாலும் கேட்க மாட்டார், சவட்டிபுடுவேண்டே.. பேசாம வாங்கடே ..என மிரட்டிவார்.

சில ஆண்டுகள் கழித்தி ஒரு பத்திரிகையில் கொஞ்ச நாள் பணியாற்றினேன். மினிஸ்டர் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. போய் இருந்தேன். வெளி நாட்டு மதுவகைகள் பரிமாறப்பட்டன. அனைத்து பத்திரிக்கையாளர்களும் அருந்தினார்கள்.. நான் மட்டும் மறுத்து விட்ட்டேன்.

அதில் அந்த பத்திரிக்கை ஆசிரியருக்கு பயங்கர பெருமை. என்ன ஒரு செல்ஃப் கண்ட்ரோல் , பத்திரிக்கை/ ஊடக  அறம் என பாராட்டினார். ஆனால் நான் மறுத்ததற்கு காரணம் அறமும் அல்ல , முறமும் அல்ல.. அதற்கு காரணம் அன்று அந்த வில்லேஜ் விஞ்ஞானி போட்ட போடுதான். இன்றும்கூட  பாட்டிலை பார்த்தால் அவர் நினைவு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

அப்பேற்பட்ட வல்லுனரான அவர் மீது அப்போது எங்களுக்கு ஒரு பிரமிப்பு இருந்தது. இமாலயா தியேட்டர் அனுபவத்தை கேட்ட அவர் , அந்த மாதிரி படமெல்லாம் சிட்டிக்குள் பார்க்க கூடாது என சொல்லி ஒதுக்குப்புறமான ஒரு தியேட்டருக்கு அழைத்து சென்றார்.

அந்த படமும் எரிச்சலூட்டும் வகையில் ஆரம்பித்தது. நொய் நொய் என புரியாத மொழியில் பேசிக்கொண்டு இருந்தனர், செம டார்ச்சர், வில்லேஜ் விஞ்ஞானி மீதான பிரமிப்பு சரியத்தொடங்கியது.\

சரி , வந்ததற்கு ஏதாச்சும் குளியல் சீனாவது இருக்குமா என நாக்கை தொங்கப்பட்டவாறு காத்து இருந்தோம். அப்போது இண்டர்வெல் பெல் அடித்தது. அடச்சே..ஒரு சீனும் வரல ..இண்டர்வெல் வந்துடுச்சே என எழ ஆயத்தமானோம். உட்காருங்கடே..என அமர வைத்தார். பெல் அடித்ததும் வெளியே இருந்து திமு திமு என கூட்டம் உள்ளே நுழைந்தது.

நம் ஊரில் எல்லாம் , இண்டர்வெல் பெல் அடித்தால், வெளியே போவோம் .இங்கேயே உள்ளே வறாங்க்களே என கல்ட்சுரல் ஷாக் ஏற்பட்டது. ஆனால் அந்த மணியின் மகத்துவம் சில நொடிகளில் தெரிந்தது.

சில நொடிகளில் , ஏற்கனவே ஓடிக்கொண்ட படத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இன்னொரு படம் ஓட ஆரம்பித்தது. அதில் வந்த காட்சி...ம்ம்ம்...என்னவென்று சொல்வது..

கொஞ்ச நேரத்தில் மீண்டும் மெயின் படம் ஓட ஆரம்பித்தது. எ\ங்களுக்கெல்லாம் குப் என வியர்த்து விட்டது. எப்பீடி என விஞ்ஞானி எங்களை பெருமையாக பார்த்தார். அவர் திறமையை குறைத்து எடைபோட்டதற்காக மானசீக மன்னிப்பு கேட்டு கொண்டோம்.

அந்த பின் சிக்பேட் விஜயலட்சுமி , கே ஆர் புரம் , சிவாஜி நகர் ,கெங்கேரி  என என் கலைத்தேடல் பரிணாம வளர்ச்சி அடைந்ததெல்லாம் வேறு விஷ்யம்.

என் மலையாள சினிமா அறிவுக்கு பின் இப்படி ஒரு காறித்துப்பும் ஃப்ளாஷ் பேக் இருந்தாலும்,  நான் உருப்படியான ஒரு மலையாளப்படத்தை இது வரை பார்த்ததே இல்லை.

சிலர் அவ்வபோது நெடுமுடி வேணு, அடூர் கோபால கிருஷ்ணன் , மம்முட்டி என சீன் போடும்போது  லேசாக தாழ்வு மனப்பான்மை ஏற்படும், இதற்காகவேனும் ஒரு நல்ல மலையாளப்படம் பார்க்க வேண்டும் என நினைத்துகொண்டு இருந்தேன்.

அப்போதுதான் தமிழ் ஸ்டுடியோ சார்பில் கொடியேட்டம் என்ற படம் திரையிடப்படுவது தெரிய வந்தது. சரி போகலாம் என முடிவு செய்தேன். அதில் சிலர் , அது கொடியேட்டம் அல்ல... கொடியேற்றம் என குழப்பினார்கள்.. பூவை பூ என்றும் சொல்லலாம்.. புய்ப்பம் என்றும் சொல்லலாம்.. வேறு மாதிரியும் சொல்லலாம் ..இதுக்குப்போய் ஏன் குழப்புகிறார்கள் என நினைத்தவாறு படத்துக்கு போனேன்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே படம் என்னை ஈர்த்து விட்டது. சங்கரன்குட்டி என்பவனின் வளர்சிதை மாற்றம்தான் படம், அதை வெகு இயல்பாக , யதார்த்தமாக சொல்லி இருக்கும் பாங்கு அருமையாக இருந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கும் ஊர் திருவிழாவுடன் அவன் வாழ்க்கையை இணைத்து காட்டி இருப்பது ரசிக்கச்செய்தது.

படத்தில் பின்னணி இசை கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

சங்கரன்குட்டி எதைப்பற்றியும் கவலைப்படாதவன் . சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டும் ,மதுவருந்திக்கொண்டும், நன்றாக தின்று உறங்கியும் வாழ்பவன்.

அவன் மேல் அன்பு செலுத்தும் ஜீவன் அவனது தங்கை. திருமணம் செய்து வந்தால் திருந்தி விடுவான் என நினைக்கும் பொறுப்பு மிக்கவள். ஆனால் அவளிடம் அவன் புரிந்து கொள்ள முடியாத அந்தரங்கள் இருப்பதை புரிந்து கொள்வது பெரிய திறப்பாக அமைகிறது. அவனுடன் நெருங்கி பழகும் ஒரு பெண்ணின் தற்கொலை , லாரி டிரைவரின் சில நடவடிக்கைகள் போன்றவை அவனுக்கு மனித இயல்பை புரிய வைக்கின்றன.

தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்பது புரிய ஆரம்பிக்கிறது. உருமாற்றம் அடைகிறான்.

இந்த உரு மாற்றம் சில காட்சிகளால் காட்டப்படுகிறது. நம் ஊர் இசை அமைப்பாளர்கள் என்றால் , ஒரு விஷ்யத்தை முன்பு எப்படி கையாண்டான் , இப்போது எப்படி கையாள்கிறான் என்பதை ஒரே வித இசையை கொடுத்து , அந்த இரு காட்சிகளையும் அண்டர்லைன் செய்து காட்டுவார்கள்.. நாம் ஏதோ ஒரு நினைவில் படம் பார்த்து கொண்டு இருந்தாலும், இசை நமக்கு புரிய வைத்து விடும்.

ஆனால் இந்த படத்தில் இசையின் துணையின்றி காட்சிகள் மூலமே இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

உதாரணமாக , ஒரு குழந்தை நீரில் மூழ்கப்போவதை தடுத்து , தாயிடம் ஒப்படைப்பான். அந்த தாயோ அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார். சும்மா சமர்த்தாக விளையாடும் குழந்தையை அவன் பயமுறுத்தி விட்டதாக அலுத்து கொள்வாள். இந்த காட்சியில் இசை ஏதும் இருக்காது.

இதற்கு இசை கொடுத்து பாக்யராஜ் டைப் காமெடி காட்சி மூடைக்கொண்டு வரலாம். அல்லது அவன் அவமானப்படுத்தப்பட்டு விட்டான் என்பது போன்ற சோக இசையை ஒலிக்கச்செய்யலாம். அல்லது , முன்பு பொறுப்பில்லாமல் இருந்தவன் இப்போது பொறுப்பாக இருக்கிறான் என்பது போன்ற உணர்வை இசையால் கொண்டு வரலாம்.

அதாவது இசை அமைப்பாளர் பார்வையாளனை விட , இயக்குனரை விட , சக்தி மிக்கவர் ஆகி விடுகிறார். இதை தவறு என சொல்லவில்லை. இது ஒரு பாணி என்பதையே சொல்கிறேன். உதாரணமாக ஆக்‌ஷன் படமாக மணிரத்னம் எடுத்த தளபதி படத்தை , செண்டிமெண்ட் படமாக இளையராஜா இசை மாற்றியதை பார்த்து இருப்பீர்கள். அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

ஆனால் எல்லா படங்களுமே இசை அமைப்பாளர் கையிலேயே இருப்பது சரிப்படாது.

இந்த படத்தில் இசை நம் முடிவுகளை , புரிதலை தடுப்பதில்லை. நாமாக சில புரிதல்களுக்கு வருகிறோம்.

இசை இல்லையே தவிர ஓசை இருக்கிறது.

இரவின் பிரத்யேக ஒலிகள் அட்டகாசமான பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இரவின் நிசப்தத்தின் ஓசையை இந்த அளவுக்கு சிறப்பாக பதிவு செய்த ஒரு தமிழ் படத்தை நான் பார்த்தது இல்லை.

ஒரே ஒரு செயற்கையான காட்சிகூட இல்லாத படம் , திருவிழா எப்படி தன்போக்கில் இயல்பாக ஆரம்பித்து , உச்சம் அடைந்து முடிகிறதோ , அதே போல ஒரு மனிதனும் வளர்கிறான், வெவ்வேறு மனிதர்களின் செயல்கள் , சம்பவங்கள்தான் திருவிழா நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, அதேபோல வெவ்வேறு சம்பவங்கள் , வெவ்வேறு மனிதர்களால்தான் மனிதனின் வாழ்க்கை நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
உண்மையில் எங்கும் எதுவும் நடப்பதில்லை எனும் நத்திங்னெஸ் என்ற பெரிய விஷயத்தை காட்சி பூர்வமாக , வெகு இயல்பாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் அடூர் கோபலகிருஷ்ணன்.

படம் பார்த்தவுடன் கைகளுக்கு வேலை வந்து விட்டது. ஆம்..படம் முடிந்ததும் அரங்கம் கைதட்டலால் நிறைந்தது..









Monday, October 21, 2013

இன்றும் , என்றும் ரசிக்கத்தக்க அந்த காலத்து த்ரில்லர் !!


சிவாஜி கணேசனின் சாதனைகளைப்பற்றி இனி நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனாலும் சிலர் அவ்வப்போது அவரை ஓவர் ஆக்டிங் என சொல்வது ஓர் உறுத்தலாகவே இருந்து வருகிறது.

இன்று என்னைப்போன்ற மக்கு மாணவர்களுக்குக்கூட தெரிந்த விஷயமான சார்பியல் தத்துவம் நியூட்டனுக்கு ஏன் தெரியவில்லை.. அவர் ஏன் அதைப்பற்றி எழுதவில்லை என அவரை குறை சொல்ல இயலுமா..  

அது போல சிலர் இன்றைய தொழில் நுட்பத்தை அளவுகோலாக வைத்து அவரை குறை சொல்கிறார்கள்.. என்னை பொருத்தவரை அந்த கால கட்டத்தில் அவர் மாபெரும் சாதனையாளரே...அவர் நடிப்பை அந்த கால அளவுகோலை வைத்தே பார்க்க வேண்டும்.

இது ஒரு புறம்,... 

இன்னொரு புறத்தில் பார்த்தால் எந்த காலத்திலும் ரசிக்கும்படி சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அதில் முக்கியமான படம் அந்த நாள். பாடல் கிடையாது.. வசனம் குறைவு.இயல்பான இசை...எல்லாவற்றுக்கும் மேலாக அவர் கேரக்டர் சற்று எதிர்மறையானது.

அது சூப்பர் ஹிட் ஆன படம்.. ஆனாலும் அது போன்ற படங்கள் அதற்குபின் வரவில்லை.. சிவாஜியும் அதுபோன்ற இயல்பான நடிப்பை அதன் பின் வழங்கவில்லை... ( முதல் மரியாதை , தேவர் மகன் போன்ற பிற்கால படங்கள் விதி விலக்கு ) 

அந்த படத்தை எடுத்தவர் எஸ் பாலச்சந்தர். வித்தியாசமான படங்களுக்கு பேர்போனவர். பெரிய ஜீனியஸ்.. வெற்றிப்படங்களாக கொடுத்தாலும் , தன் மேதமைக்கு உரிய அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கவில்லை என நினைத்து , உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி , இசையில் - குறிப்பாக வீணையில் - ஈடுபடலானார்.. வீணை பாலச்சந்தர் என்றே பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

அவரது அந்த நாள் படத்தை முன்பு ஒருமுறை  டீவியில் பார்த்து ரசித்து இருக்கிறேன். ஆனால் அவரது பொம்மை படத்தை ஏனோ டீவியில் ஒளிபரப்புவதில்லை. 
தமிழில் ஆரம்ப கால படங்களின் பிரதிகள் அழிந்தே போய் விட்டன. நமக்கு ஆரம்ப கால வரலாறு இல்லாமலேயே போய் விட்டது.. ஆரம்ப காலத்தை விடுங்கள்.. சற்று பிற்கால படங்களான ஜெயகாந்தனின் படங்களின் பிரதிகள்கூட நமக்கு கிடைக்கவில்லை. தமிழில் நியோரியலிச படமான பாதை தெரியுது பார் படம் எல்லாம் கிடைக்கவே இல்லை...

ஆனால் பொம்மை படத்துக்கு  நல்லவேளையாக அந்த நிலை வரவில்லை. பட பிரதிகள் கிடைக்கின்றன. ஆனால் டீவியில் ஏனோ ஒளிபரப்பாவதில்லை. 
அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற என் கனவு சமீபத்தில்தான் நிறைவேறியது.

படம் பார்த்து அசந்து போனேன்,, ஒரே நாளில் நடக்கும் கதை என்ற கான்செப்ட்டை அந்த காலத்திலேயே செய்து பார்த்து இருக்கிறார்.

முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்து விடுகிறார். ஒரு ஸ்டைலான பணக்கார பெரியவர். சிங்கப்பூருக்கு போகப்போவதாகவும் கம்பெனியை பார்த்து கொள்ளுமாறும் ஊழியர்களிடம் சொல்கிறார். தன் பார்ட்னருக்கு தெரிய வேண்டாம் என்கிறார். சிங்கப்பூருக்கு ஏன் போகிறார் என்பதை சொல்ல மறுக்கிறார்.

இப்படி ஆரம்பமே மிக வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் செம விறுவிறுப்பு.  பிரபாகரம் என்ற ஊழியன் என்னவோ ஆராய்ச்சி செய்து தன் கண்டுபிடிப்பை ஒரு பெட்டியில் வைத்து இருக்கிறான். தன் தங்கைக்குகூட காட்டவில்லை.

பார்ட்னருக்கு தன் ஒற்றர்கள்மூலம் அந்த பெரியவர் சிங்கப்பூருக்கு போவது தெரிந்து விட்டது. அந்த பெரியவர் தன்னைப்பற்றிய ரகசியம் ஒன்றை கண்டுபிடிக்கத்தான் சிங்கப்பூர் போகிறார் என்பதும் தெரிந்து விட்டது.

இப்படி அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள்.

வெளி நாடு செல்லும் பெரியவரிடம் வெடிகுண்டு  பொருத்தப்பட்ட பொம்மையை கொடுத்தனுப்பி , சிங்கப்பூரில் அவர் அதில் இருக்கும் முகவரி சீட்டை எடுக்கும்போது வெடிக்கசெய்து , அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார் பார்ட்னர்,,ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தை...

ஆனால் திட்டத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டு பொம்மை கைமாறி சென்று விடுகிறது. வேறு எங்காவது வெடித்து மாட்டிக்கொள்ளக்கூடாதே என அதை தேடுகிறார்கள் என்ற கதையை செம விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் பாலச்சந்தர்.

அடுத்தடுத்த திருப்பங்கள்.. அந்த பொம்மை வெவ்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு கையாக மாறுகிறது.. அந்த ஒவ்வொரு காரணமும் ஒவ்வொரு சிறுகதை.

உதாரணமாக அந்த உயிர்கொல்லி பொம்மை , ஒரு தாயின் உயிரைக்காக்க பயன்படுகிறது என்பது செம இண்டரஸ்டிங்.. இதன் பின் விளைவாக , அந்த பெரியவரின் உயிர் பிறகு காப்பாற்றப் படுகிறது என்பது ஃபைனல் டச்.

அதாவது எந்த காட்சியிம் அந்தரத்தில் தனியாக தொங்கவில்லை. ஒரு காட்சி ஏதோ ஒரு விதத்தில் இன்னொன்றுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.. அந்த அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை.

ஒரு த்ரில்லர் படத்தை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதே இதன் வெற்றி என்பேன். சில வருடங்கள் முன் பார்த்த நகைச்சுவையை இன்று பார்த்தால் சிரிப்பு வருவதில்லை. இதற்குப்போயா சிரித்தோம் என நினைப்போம். காரணம் அதெல்லாம் அந்தெந்த கால கட்டத்தில் இதுதான் சிரிப்பு என செயற்கையாக ஏற்படுத்தப்படும் ரசனை சார்ந்தவை.. இந்த செயற்கையான ரசனையின் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களால் அதை சிரிப்பு என நினைக்கவே முடியாது. சமீபத்தில் தமிழ் நாட்டில் பரபரப்பாக ரசிக்கப்பட்ட “ சிரிப்பு” படங்களை தமிழ் சினிமாக்களை தொடர்ந்து பார்க்காத ஒரு வேற்று மானில ரசிகனால் ரசிக்கவே முடியாது.

ஆனால் உண்மையான நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்படும் காட்சிகள் என்றும் நிற்கும். இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்றும் ரசிக்க முடிகிறது. வெடிகுண்டை எந்த காரில் விட்டோம் என தேடி அலையும்போது நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள் வெகு இயல்பாக இருக்கும். அந்த நகைச்சுவை கிளைமேக்சிலும் தொடரும் என்பது கச்சிதமாக கதை சொல்லலுக்கு ஓர் இலக்கணம். 

இதில் அந்த வெடிகுண்டு நிபுணனாக வரும் பிரபாகரன் கேரக்டரை மறக்க முடியாது. பெரிய அறிவாளி, ஜீனியஸ்... உழைப்பாளி , அரைமணி நேரத்தில் வெடிகுண்டு செய்யத்தக்க புத்திசாலி. ஆனாலும் வில்லன் கோஷ்டியில் இருக்கிறான். கிட்டத்தட்ட அந்த நாள் கதா நாயகன் போல.

அங்கீகாரம் பெறாத ஜீனியஸாக தன்னை பாலச்சந்தர் கருதி , அந்த பாதிப்பில் இந்த கேரக்டர்களை உருவாக்கினாரா என்பது தெரியவில்லை.

அந்த வெடிகுண்டு எப்படி வெடிக்கும் என்பதை அவன் விளக்கும் இடம் சுவாரஸ்யமானது.

வெடிகுண்டை முகவரி சீட்டுடன் இணைத்து இருக்கிறேன், அவர் அந்த சீட்டை உருவினால் , கிர் என ஒரு சத்தம் கேட்கும் .பிறகு வெடிக்கும் என்பான்.

அடுத்த காட்சியில் அந்த பொம்மையுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருப்பான் அவர்கள் கூட்டத்தில் ஒருவன் ( இவன் கேரக்டர் மங்காத்தாவில் வரும் பிரேம்ஜி போல காமெடி கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும்)

அதைப்பார்த்து பதறிப்போய் பொம்மையை பிடுங்குவான் பிரபாகரன். “இது நுட்பமான பொம்மை..இபப்டியெல்லாம் விளையாடினால் உள்ளே மாற்றங்கள் நிகழும். கிர் என சத்தம் கேட்கும். வெடித்து விடும் “ என்பான்.


பொம்மை தொலைந்த பின் எல்லோரும் பதட்டமாக விவாதிப்பார்கள்.. அப்போது மீண்டும் விளக்குவான் “ யாரேனும் விளையாட்டாக தூக்கிப்போட்டால் , உள்ளே மாற்றங்கள் நிகழும். கிர் என சத்தம் கேட்கும். வெடித்து விடும் “ என்பான்.

 முதலில் ஆர்வமாக கேட்ட நமக்கு கொஞ்சம் காமெடியாக தோன்றும்.. என்னடா இது..கிர் என்ற சத்தம் என கொஞ்சம் சிரிப்பாக இருக்கும்..

ஆனால் பிறகுதான் அதன் முக்கியத்துவம் தெரியும். சிலர் கேஷுவலாக கையாளும்ப்போது , கிர் என்ற சத்தம் கேட்கும். அவர்களுக்கு அது பெரிதாக தோன்றாது. பார்க்கும் நமக்கு பதைபதைப்பாக இருக்கும்.

சில படங்களில் யார் வில்லன் என்பது நமக்கு தெரியாது...கேரக்டர்களுக்கு தெரியும். இதில் நமக்கு உண்மை தெரியும். பொம்மையில் குண்டு இருப்பது தெரியும்.ஆனால் கேரக்டர்களுக்கு தெரியாது. 

இந்த ஓப்பன் சஸ்பென்ஸ் வகை திரைக்கதையை செம விறுவிறுப்பாக கொண்டு போய் இருப்பார் இயக்குனர்.
அளவான பின்னணி இசை...அவ்வப்போது அமைதி ,அவ்வபோது மிரட்டல் என கலக்கி இருக்கும் இசை.

ஒரு கடிகாரம்தான் முதல் ஷாட்... அப்படியே வீட்டின் சூழலுக்கு செல்கிறோம். அப்போது வரும் ஒரு மவுத் ஆர்கன் இசையும் , காட்சிகளும்... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதம்..


அந்த கால படங்கள் சிலவற்றில் பின்னணி இசையையும் , பாடலுக்கான இசையையும் ஒரே நபர் கவனிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில படங்களில் ஒரே நபர் கவனிப்பதும் உண்டு.

அந்த நாள் படத்தில் பாடல்கள் இல்லாததால் , பாலசந்தருக்கு பாடல்களில் ஈடுபாடு இல்லை என நினைத்தேன்.. ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு பாடலையும் தேனின் விழுந்த பாலா சுளையாக அமைத்து இருக்கிறார். வரிகளும் , காட்சி அமைப்பும் , பாடலுக்கான சூழலும் அருமை.

முதல் பாடலில் விஜயலட்சுமியின் அருமையான நடனம் .. குழந்தை பாடும் பாடலில் அற்புதமான வரிகள் ( தத்தி தத்தி  நடந்து வரும் தங்க பாப்பா

இத்தனை நாள் எங்கு இருந்தாய் சொல்லு பாப்பா.தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா..உன் தங்க கைக்கு முத்தம் தறேன் காட்டு பாப்பா) , பொம்மையே தேடி செல்லும் வில்லன் கோஷ்டிய்னரின் கொண்டாட்ட மன நிலையிலான பாடலின் ஆரம்பதில் வரும் மவுத் ஆர்கன் ( இந்த பாடல் , ஆடாம ஜெயிச்சோமடா என்ற மங்காத்தா பாடல் போல இருக்கும் ) என இருந்தாலும் வரலாற்று சிறப்பு மிக்க நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் முக்கியமானது.
வரிகள் அற்புதமாக இருப்பது மட்டும் இதன் சிறப்பல்ல... அதன் பின் எம் ஜி ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் , ரஜினி என பலருக்கு பாடி ஒரு டிரண்டை உருவாக்கிய ஜேசுதாசின் முதல் பாடல் இதுதான். என்னைப் போன்ற ஒரு பிச்சைக்காரன் பாடுவது போன்ற காட்சியை ஈடுபாட்டுடன் ரசித்தேன்.

இபாடல் செம ஸ்லோவாக இருக்கும்.. ஆரம்ப பாடல் இப்படி அமைந்து விட்டதே... இத்துடன் நம் கேரியர் க்ளோஸ் என்றே தான் நினைத்ததாகவும் ஆனால் அந்த பாடல் பெரிய பெயரை பெற்றுத்தந்ததாகவும் பிற்காலத்தில் ஜேசுதாஸ் நன்றியுடன்  சொன்னார்.

இந்த படத்தில் பங்கேற்ற  நடிகர் வி எஸ் ராகவன் , பாடகர்கள் ( பாடகிகள் என சொல்வது மரியாதைக் குறைவான சொல்  )  சுசீலா , எல் ஆர் ஈஸ்வரி போன்றோர் அதன் பின் பல வருடங்கள் திரைத்துறையில் நீடித்து சாதனைகள் புரிந்தது குறிப்பிடத்தக்கது..
கேமரா கோணங்கள் வெகு வெகு சிறப்பாக இருக்கும். காட்சிகளில் மட்டும் அல்லாது பாடல்களிலும் ஒளிப்பதிவு உன்னதமாக இருக்கும். 

   வெடிகுண்டு , துரத்தல் என்று மட்டும் இல்லாமல் அன்பு , காதல் , வறுமையின் வலி, தாய் பாசம்  , துரோகிகள் மத்தியிலும் ஒரு நல்லவன் இருப்பது என்பதையும் கலந்து இருப்பார்.  அருமையாக இருக்கும்.

அந்த பொம்மையை ஓர் ஏழைப்பையனிடன் இருந்து போலீசார் கைப்பற்றி ஸ்டேஷனுக்கு கூட்டி வருவார்கள்..ஒரு பொம்மைக்கடைக்காரர் தன் கடையில் இருந்து அவன் திருடியதாக சொல்வார்.

அந்த பையன் வீரத்துடன், ”இது என் பொம்மை இல்லை சார்..ஆனா இந்த கடைக்காரர் பொய் சொல்றார் சார் ”என உண்மையை நிலை நிறுத்த போராடுவது ஃபர்ஸ்ட் கிளாஸ். அந்த ஏழைப்பையனின்  நேர்மை, பணக்கார கடைக்காரரின் பொய் என்ற அந்த முரண் தனி சிறுகதை..

அந்த பெரியவ்ர் யார்...செமையாக நடித்து இருக்கிறாரே என யோசித்துக்கொண்டே இருந்தேன்.

கடைசிக்காட்சியில் இயக்குனரே திரையில் தோன்றி ஒவ்வொரு கேரக்டராக அறிமுகம் செய்வார். அப்போது அந்த பெரியவர் யார் என அறிந்து திகைப்பில் ஆழ்ந்தேன். கடைசியாக முக்கியமான கேரக்டரை அறிமுகப்படுத்துகிறேன் என சொல்லி பொம்மையையும் அறிமுகம் செய்வார்..சூப்பர்..

கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம் பொம்மை...

ரசிப்பவர்கள் ஐந்து முறையேனும் பார்க்க வேண்டும். சினிமாவை கற்க விரும்புபவர்கள் பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.
















Friday, October 18, 2013

காலம் கடந்து நிற்கும் ஒரு கலைஞனின் உன்னத திரைப்படம்


 எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். அவற்றில் சில படங்களை நம்மால் என்றும் மறக்க முடியாது.. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.

ரசிக்க கற்க இந்த படத்தில் ஏராளமான விஷயங்கள் உண்டு.






இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ முக்கியமான நூறு படங்களை திரையிடும் செய்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தது.. ஆர்வமாக திரையிடப்படும் பட்டியலை பார்த்தேன்.

அந்த பட்டியலில் நான் பார்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை குறித்து வைத்தேன். தவிர்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இட்டேன். அப்படி சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இடப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.
இதை தவிர்க்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள். படத்தலைப்பு சோகப்படம் என்று சொல்கிறது. பழைய கால சோகப்படம் என்றால் நம் மனதில் ஒரு பிம்பம் எழுமே.. சோகமயமான பாடல்கள் , அழுது வடியும் கதாபாத்திரங்கள் , நீள நீளமான வசனங்கள் என்ற டெம்ப்ளேட்டை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்.
இன்னொரு காரணம் படத்தின் நாயகன் நாகையா. இவரைப்பற்றி அந்த காலத்தில் என் சித்தப்பா ஒருவர்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவர் பெயர்தாண்டா நாகையா.. எல்லா படத்திலும் வருவார். ரத்தம் கக்கி இருமி இருமி சாவார்.. என்றார். அவர் சொன்னது போலவே , நான் பார்த்த எல்லா படங்களிலும் கொஞ்ச நேரம் வந்து , இருமி விட்டு இறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். முழு படத்திலும் இருமிக்கொண்டு இருக்கப்போகிறாரா என்ற சந்தேகம் இந்த படத்துக்கு அல்ல...இந்த படம் திரையிடப்படும் கோடம்பாக்கம் இருக்கும் திசைக்கே போகக்கூடாது என்று எண்ண வைத்தது.
இந்த எண்ணத்தை மாற்றி அமைத்தது சில நாட்களுக்கு முன் பார்த்த மர்ம யோகி திரைப்படம். இயக்கம் கே ராம்னாத்... ஆங்கிலப்படம் போல எடுத்து இருப்பார். செருக்களத்தூர் சாமாவின் நடிப்பும் அந்த படத்தில் இயல்பாக இருந்தது. எனவே ரிஸ்க் எடுக்க துணிந்தேன்.



Tuesday, October 15, 2013

இயக்குனருக்கு சவால் விட்டு ஜெயகாந்தன் தானே இயக்கிய படம் - இமயங்களின் மோதல்

ஜெயகாந்தனின் எழுத்துகளைப்போல அவர் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது. எழுத்தாளாரான அவர் சினிமாவிலும் இறங்கியது அப்படி ஒரு சுவையான நிகழ்வுதான்.

அப்போது அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். சோவியத் யூனியன் ஆதரவாளராகவும் இருந்தார். திமுகவினரை எதிர்த்து பேசுவது அவரது முக்கியப்பணியாக இருந்தது.. திமுகவினர் சினிமாவை முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவதை பார்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் , அதற்கு மாற்றாக நல்ல சினிமாவை வழங்கி சினிமா எனும் ஊடகத்தை கைப்பற்ற வேண்டும் என நினைத்தார்கள். அவர்கள் முயற்சியால்தான் ஜெயகாந்தன் சினிமாவுக்கு வந்தார்.

அவரது இயக்கத்தில் வந்த முதல் படமான உன்னைப்போல ஒருவன்  அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. இந்த பின்னணியில் அவரது யாருக்காக அழுதான்  நாவலை படமாக்க பலரும் விரும்பினர். அதில் முக்கியமானவர் சந்திர பாபு. ஆனால் சந்திரபாபு தன்னை டாமினேட் செய்வதாக நினைத்த ஜெகே அவருக்கு படம் தயாரிக்கும் உரிமையை தரவில்லை.

பாலும் பழமும் போன்ற வெற்றிப்படங்களை எடுத்த வேலுமணிக்கு படம் தயாரிக்கும் உரிமையை கொடுத்தார். அந்த படத்துக்கு இயக்குனர் ஸ்ரீதர்.
அப்போதைய ஸ்டார்கள் சிவாஜி , சாவித்ரி , ரங்காராவ் என அட்டகாசமான டீம் அமைந்து இருந்தது.. படம் மளமளவென வளர்ந்து வந்தது..அப்போதுதான் விதி விளையாடியது.

வழியில் போகும் தச்சரைகூப்பிட்டு , தனக்கு ஓர் ஆப்பு அடித்து விட்டு போகசொல்வது போல , ஜெயகாந்தனை அழைத்து , தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் திரைக்கதையை சொன்னார் ஸ்ரீதர்.

சிவாஜி ஓர் அனாதை ,,, லாட்ஜில் வேலை செய்கிறார்.. தன் முதலாளி பாலையாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். .. பாலையாவும் அன்பாக இருக்கிறார்..அங்கு தங்கி இருக்கும் ரங்காராவ் சிவாஜி மீது அன்பாக இருக்கிறார்.. இனிமையான பாடல் எல்லாம் பாடுகிறார்கள்.. அங்கே சாவித்ரியும் ஓர் ஆணும் தங்க வருகிறார்கள்..டூயட் எல்லாம் பாடுகிறார்கள்.. அவன் சந்தர்ப்ப சூழ் நிலையால் சாவித்ரியை பிரிந்து செல்கிறான்.

சிவாஜிக்கு இதை எல்லாம் ஃப்லாஷ் பேக்காக சொல்கிறார். சிவாஜியும் தன் கதையை சொல்கிறார். ஊரில் அவரை வளர்த்த பாதிரியார். சிவாஜியின் காதல்... ஒரு டூயட்...காதல் தோல்வி.. ஒரு சோகப்பாடல் என சொல்லி முடிக்கிறார்...
சிவாஜியை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அவமானப்படுத்த , சாவித்ரி மட்டும் அன்பாக இருக்கிறார்.

இந்த நிலையில் சிவாஜி மீது , அவர் செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்படுகிறது... அடி உதை என எல்லாவற்றையும் தாங்குகிறார்.. ஆனால் வருந்தவில்லை.. ஆனால் ஒரு கட்டத்தில் சாவித்ரியும் சேர்த்து பழி சுமத்தப்பட்டு அவமானத்துடன் ஊரை விட்டு செல்லவே, சிவாஜி ஒரு சோகப்பாட்டு பாடி , உயிர் துறக்கிறார்.

எப்பூடி என பெருமையாக ஜெகேயை பார்த்தார் ஸ்ரீதர்...
என் கதையையே மாற்றி விட்டீர்களே... டைட்டிலையும் மாற்றி விடுங்கள்.. யாருக்காக செத்தான் என மாற்றுங்கள் என கோபமாக சொல்ல ஸ்ரீதர் திகைத்தார்.. ஜெயகாந்தன் இப்படி வழக்கமான ஃபார்மேட்டில் தன் கதை படமாவதை விரும்பவில்லை.. ஆனால் அப்படி எடுத்தால்தான் ஓடும் என்பது ஸ்ரீதர் கருத்து.. இந்த கருத்து வேறுபாடு முற்றி கடைசியில் படம் கைவிடப்பட்டது... இருவரும் அவரவர் துறையில் இமயங்கள்.. ஆனால் ( அதனால் ) ஒத்துபோக முடியவில்லை.
அந்த படம் வெளியாகி இருந்தால் , பாசமலரை மிஞ்சும் வகையில் ஹிட் ஆகி இருக்கும்.. சிவாஜிக்கு முக்கியமான படமாக இருந்திருக்கும்.

எ ந்த இயக்குனரும் வேண்டாம்,



என் கதையை நானே எடுக்கிறேன் என சவால் விட்டு ஜெகேயே படத்தை பின்பு எடுத்தார்..
 நாகேஷ் , கே ஆர் விஜயா , பாலையா , சகஸ்ர நாமம் நடித்தனர். கண்ணதாசன் பாடல் எழுதினார்.. சவால் படம் என்பதால் அந்த காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது..

அதே எதிர்பார்ப்புடன் நானும் இன்று அந்த படம் பார்த்தேன்...தமிழ் ஸ்டுடியோ திரையிடலில்.

படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

******************************************************

ஜெயகாந்தன் தன் படம் காட்சிபூர்வமாக இருக்க வேண்டும்  என நினைத்ததால்தான் ஸ்ரீதருடன் பிணக்கு ஏற்பட்டது என்பது கொஞ்ச நேரத்திலேயே தெரிந்தது.. பாடல்கள் , டூயட்டுகள் இல்லாத யதார்த்தவாத பாணி படமாக எடுப்பது அவர் கனவாக இருந்து இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடல் இருந்தாலும் அது பின்னணி பாடலாக வருகிறதே தவிர யாரும் பாடுவதாக வரவில்லை.

ஃப்ளாஷ் பேக் , பழைய காதல் சம்பவங்கள் என்றெல்லாம் செல்லாமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக நேரடியாக ஆங்கிலப்படம் போல சொல்லி இருக்கிறார்.


கே ஆர் விஜயா , நாகேஷ் ஆகியோரின் ப்ழைய கதைகள் சில காட்சிகளில் வலுவாக சொல்லப்பட்டு விடுகின்றன.


அவர்கள் மட்டும் அல்ல... லாட்ஜ் ஓனர், சமையல்காரர் , சூதாடி . சேட்டு , ஜோசியக்காரர் என ஒவ்வொருவர் பற்றியும் நமக்கு நன்கு தெரிந்து விடுகிறது , வலுவான காட்சிகள் மூலம்.

ஒவ்வொரு கேரக்டரையும் பற்றி சொல்வதற்கே ஆரம்பத்தில் பெரும்பாலான நேரம் செலவிடப்படுகிறது.. வணிகப்படங்களில் ஆரம்பத்திலேயே கதையை ஆரம்பித்து ரசிகனை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. இதில் பொறுமையாக கதை ஆரம்பிக்கிறது. ஆனால் க்தை ஆரம்பித்தவுடம் நம்மால் ஒன்ற முடிகிறது.

கெட்டது செய்யக்கூடாது என்றால் , கெட்டது என்றால் என்ன என்று கேட்பவன் ஜோசப் ... அந்த அளவுக்கு கெட்டது என்றால் என்ன என்றே தெரியாதவன்.


அனைவரிடம் அன்பாக இருப்பவன்.. திட்டினாலும் , அவமானப்படுத்தினாலும் அழ வேண்டும் என்பது கூட தெரியாதவன். லாட்ஜ் ஒன்றில் வேலை செய்து , கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறான்.. அங்கு தங்கி இருக்கும் ஒரு பெண் அவன் மீது பரிவுடன் இருக்கிறாள்..



ஒரு நாள் அங்கு தங்க வரும் சேட் குடிபோதையில் பர்சை தவற விடுகிறான்..




அது ஓனர் கைக்கு வருகிறது... அதை அவர் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து கொள்கிறார்.




மறு நாள் பர்சைத்தேடும் சேட்டு , ஜோசப் மீது பழி போடுகிறான்.. எல்லோரும் அவனை சந்தேகிக்கிறார்கள்... பர்ஸ் ஓனரிடம் இருப்பது தெரிந்தும் ஜோசப் அமைதி காக்கிறான்..அவனை அடித்து துன்புறுத்துகிறார்கள்.. அவன் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை பிடுங்கி கொள்கிறார்கள்... உதவ வரும் அந்த பெண்ணையும் சந்தேகிக்கிறார்கள்...

ஊருக்கு சென்று இருந்த சமையல்கார் திரும்ப வருகிறார்.. அவர் முயற்சியால் பர்ஸ் சேட்டுக்கு கிடைக்கிறது.. அப்போதும் முதலாளி வாய் திறக்கவில்லை.. இத்தனைக்கும் அவர் பெரிய பக்திமான்...

பெரிய மனிதனிடம் இருக்கும் சின்னத்தனம்,. கூட இருப்பவர்களே குழி பறிக்கும் அவலம், உதவ நினைப்பவர்களுக்கு கிடைக்கும் அவமானம் , அப்பாவிகளின் கையாலாகத நிலை என்பதெல்லாம் ஜோசப்புக்கு அப்போதுதான் உறைக்கிறது...

அதுவரை அழுதறியாத அவன் வாய் விட்டு கதறுகிறான் என்பதுடன் படம் முடிகிறது.

எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருப்பான் ( ஷிண்டலர் லிஸ்ட் நினைவு இருக்கிறதா ) என்பது போன்ற அழுத்தமான பாத்திரபடைப்பு ( சமையல்காரர் ) , பொம்மை காட்சி , தன்னை நல்லவன் என நினைத்து கொண்டு - ஆனால் கெட்டது செய்யும் லாட்ஜ் ஓனரின் குற்ற உணர்வு , ஆதரவற்ற நிலையில் தான் இருந்த போதும்  ஜோசப் மீது பரிவு காட்டும் பெண் , போட்டு வாங்கும் யுக்தி மூலம் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்க முயலும் ஜோதிடர் என பலவற்றை ரசிக்க முடிகிறது..

படத்தை டிரை ஆக செல்லாமல் பல சுவாரஸ்யமாக காட்சிகள் காப்பாற்றுகின்றன. உதாரணமாக , அந்த பெண் தன் நகைகளை விற்க தன்னுடன் துணைக்கு வருமாறு ஜோசப்பை கூப்பிட்டு இருப்பாள்.. இந்த காட்சி கேஷுவலாக வரும். முக்கியத்துவம் ஏதும் இல்லாத காட்சி போல தோன்றும்...

அதன் பின் ஜோசப்புக்கு திருட்டுப்பட்டம் கிடைத்தவுடன்.அந்த காட்சி அழுத்தம் பெற்று விடும்.. அந்த காட்சியின் தொடர்ச்சியாக , இப்போது நகையை விற்க முயன்றால் , அந்த பெண்ணும் சந்தேக வளையத்தில் சிக்கி விடுவாளோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தவே அந்த காட்சி...

இப்படி வசனங்கள் , பாடல்கள் இல்லாமலேயே உணர்வு பூர்வமாக படம் எடுத்த ஜெயகாந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அவ்வளவாக படம் பிடிக்கவில்லை.. வசூல் ரீதியாக தோல்விதான்.

ஆனால் விஷ்யம் தெரிந்தவர்கள் அன்றே பாராட்டி இருக்கிறார்கள்..இன்றும் படத்தை பார்க்கும்படி இருக்கிறது..
பாலையா, நாகேஷின் நடிப்பு , கே ஆர் விஜ்யாவின் அழகு , கண்ணதாசனின் பாடல் போன்றவற்றை என்றும் ரசிக்கலாம்.
ஒரு வேளை வேறு இயக்குனர் இயக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்க கூடும்..

ஆனால் ஸ்ரீதர் இயக்கி வணிகப்படமாகி அடையும் வெற்றியை விட , இப்படி ஒரு முயற்சியில் ஜெகே அடைந்த தோல்வி ஒருவகையில் வெற்றிதான்..

முயலை குறி வைத்து அடித்து வீழ்த்தும் அம்பை விட , யானை மீது எய்து , குறிதப்பிய அம்பை ஏந்துவது இனிமை அல்லவா..

யாருக்காக அழுதான்? - யார் வேண்டுமானாலும் ரசிக்கத்தக்க படம் 
*************************************************
பின் குறிப்பு

படம் முடிந்ததும் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.. இத்தனை ஆண்டுகள் கழித்தும் கிடைக்கும் கைதட்டலை விட வேறு என்ன விருதை நாகேஷ் எனும் அந்த  மகா கலைஞனுக்கு வழங்கி விட முடியும்..








Sunday, October 13, 2013

நடிகர்கள் என்ன செய்கிறார்கள்? ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் கண்ணீர் !

















ஒரு விஷயத்தைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்க்கு , அந்த துறை பற்றிய அறியாமை நமக்கு தெரிய ஆரம்பிக்கும். 
நாமெல்லாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள்..கடந்த சில ஆண்டுகளாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வராக இருக்கிறார்கள்.. ஆனால் சினிமாவைப்பற்றிய சில அடிப்படை தகவல்கள்கூட தெரியாத நிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறோம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு , சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தி வருகிறது. இதன் திடக்க விழா 12.10.2013 அன்று நடந்தது..

அதில் ட்ராட்ஸ்கி மருதி, ஒளிப்பதிவாளர் நல்லுசாமி , ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் ஆகியோர் மிகச்சிறப்பான உரை வழங்கினார்கள்.. ஃபார்மலான உரையாக இல்லாமல் , ப்ரொஃபசனல் உரையாக இருந்தது. அதில் , இந்தியாவில் இது வரை 70 எம் எம் படம் எடுக்கப்பட்டதே இல்லை என்ற செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது.. இது போல பல புதிய செய்திகள் கிடைத்தன. அபூர்வமான புகைப்படங்களை பார்க்க முடிந்தது..

வரவேற்று பேசிய அருண், இந்த கண்காட்சி தேடலுக்கான விடை அல்ல...தேடலுக்கான ஆரம்பம் என்றார். ஒவ்வொரு படத்துக்கு பின் இருக்கும் கதைகளை , வரலாற்றை தேடிப்பாருங்கள் என்றார்.

மருது பேசுகையில், தமிழகமும் தென்னிந்தியாவும் இந்திய சினிமாவில் முக்கியப்பங்காற்றி இருக்கின்றன.. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டனர் என்றார்.

நல்லுசாமி பேசுகையில் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியைப்பற்றி விரிவாக சொன்னார்.

கறுப்பு வெள்ளை, டெக்னிக் கலர் , ஈஸ்ட்மென் கலர் என்று ஒவ்வொன்றையும் விரிவாக சொன்னார். 

35 எம் எம் படம் , சினிமாஸ்கோப் , 70 எம் எம் இவை எல்லாம் எப்படி எடுக்கபடுகின்றன என்று சொன்ன அவர் , தமிழில் இதுவரை 70 எம் எம் படங்கள் எடுக்கப்பட்டதே இல்லை என்று சொன்னபோது பார்வையாளர்கள் திகைத்தனர்... எத்தனையோ 70 எம் எம் படங்கள் வந்து இருக்கின்றனவே என நினைத்தபோது அவர் விளக்கினார்.

அஸ்பக்ட் ரேஷியோ குறித்து விளக்கிய அவர் , நம் ஊரில் சினிமாஸ்கோப் முறையில் எடுத்து அதை 70 எம் எம் ஆக மாற்றுகிறார்களே தவிர நேரடியாக 70 எம் எம் எடுத்ததில்லை என்றார்.

காந்தி படத்தை இந்திய படமாக கருதினால் , அது மட்டும்தான் 70 எம் எம்மில் எடுக்கப்பட்ட ஒரே இந்திய படம் என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது..

தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு கலை வளரவில்லை.. அழகியல் வளரவில்லை.. ஆவாரா, கான் வித் விண்ட் போன்ற படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவு இன்று இல்லை...100 கோடி 200 கோடி செலவழித்து என்ன பயன்?

மொழிக்கு ஓர் இலக்கணம் இருக்கிறது.. நேற்று வந்தான் என சொல்ல வேண்டும். நேற்று வருவேன் என சொல்ல கூடாது. அது போல சினிமாவுக்கும் இலக்கணம் இருக்கிறது.

180 டிகிரி கான்சப்ட் என்று இருக்கிறது..  சில காட்சிகளில் வேண்டுமென்றே அதை மீறலாம்.. ஆனால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் , அதை மீறி படம் எடுக்கிறார்கள்.. இரண்டு கேரக்டர் பேசினால் ., யாரை ஃபோக்கஸ் செய்ய வேண்டும் என காட்சியின் அடிப்படையில் இயக்குனர் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் , இருவரையும் ஃபோக்கஸ் செய்து எடுக்க வேண்டும். ஆனால் இயக்குனர்களுக்கு ஒளிப்பதிவு குறித்த அறிவு இல்லாததால் அவர்கள் சும்மா சீனை மட்டும் சொல்லி விடுகிறார்கள்..கேமரா மேன் தன் விருப்பத்துக்கு ஏற்ப எடுக்கிறார்.
இதனால் படத்தின் தரம் குறைகிறது , முதலில் இரு  படங்கள் நடிப்பு , பாடல்கள் என சில காரணங்களுக்காக ஓடலாம்..ஆனால் இந்த வெற்றி நீடிக்காது.

எனவே முதலில் தொழிலை கற்றுக்கொண்டு அதன் பின் இறங்குங்கள்..இது சினிமாவுக்கு மட்டும் அல்ல..அனைத்து துறைக்கும் பொருந்தும்.

பீம்சிங் படங்கள். ஸ்ரீதர்- வின்சண்ட் காம்பினேஷனில் வந்த படங்களை பாருங்கள்.. ஒளிப்பதிவின் நேர்த்தி புரியும்.

என்றோ வந்த அவள் அப்படித்தான் படத்தின் ஒளிப்பதிவை நினைவில் வைத்து இன்றும் என்னை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அதில் இருக்கும் உயிர்.

பீம்சிங் ஒரு தொழில் நுட்ப வல்லுனர்...எனவேதான் அவர் படங்கள் சிறப்பாக உள்ளன..இன்றோ தயாரிப்பளரிடம் நன்றாக  கதை சொல்பவர்தான் இயக்குனர் என்றாகி விட்டது..

யார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம்..ஆனால் முதலில் கற்றுக்கொண்டு பிறகு களம் இறங்குங்கள் என்றார்.

ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் மிக உருக்கமாக பேசினார்.
தமிழின் முதல் படம் எடுத்த நடராஜ முதலியாரை  நான் பார்த்து இருக்கிறேன். அந்த காலம் முதல் இன்று வரையிலான அரிய தகவல்கள் , நூல்கள், ப்டங்கள் சேர்த்து வைத்து இருக்கிறேன்.

இதை எல்லாம் வைத்து கண்காட்சி நடத்த பல வருடங்களாக முயன்றேன். யாரும் உதவவில்லை.. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி , அத்தனை தகவல்களையும் புத்தக வடிவில் வெளியிட உதவி கேட்டேன். இரண்டே நாட்களில் பதில் போட்டார். அவர் ஆதரவால் புத்தகம் வெளியானது.
 நிரந்தர கண்காட்சியில் வைப்பதாக சொல்லி என் சேகரிப்புகளை ஒரு பஸ்சில் வைத்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்..அப்படி எடுத்து சென்றபோது , என் குழந்தைகளை எடுத்து செல்வது போல வேதனைப்பட்டேன். ஒரு மாதம் அழுது கொண்டே இருந்தேன்.

ஆனால் சொன்னபடி கண்காட்சி நடத்தவில்லை//அந்த நூல்களை எங்கோ போட்டு வைத்து விட்டனர்... முதல்வருக்கு இதை கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நடிகர் சங்கம் என்ன செய்கிறது... நடிகர்கள் என்ன செய்கிறார்கள்?

ஆந்திரா, கேரளா விழாக்களுக்கு என்னை அழைத்து மரியாதை செய்கிறார்கள்...தமிழ் சினிமாத்துறையினர் என்னை மதிப்பதில்லை... நூற்றாண்டு விழாவில் என்னை கண்டு கொள்ளவில்லை..

நான் எனக்காக எதுவும் கேட்கவில்லை... நான் எத்தனை நாட்கள் இருப்பேன் என தெரியவில்லை.. நான் இருக்கும்போதே நம் சினிமா வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை என சொல்லி கண்கலங்கினார்..

விடைபெறும்போது, அருணின் கைகளைப்பிடித்து கண்ணீருடன் சொன்னார்...

“ என் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கப்பா”

அத்தகைய அரிய புகைப்படங்களின் கண்காட்சி இன்றுவரை( திங்கட்கிழமை- 14.10.2013) நடக்கிறது... 

கண்டிப்பாக சென்று பாருங்கள்..அந்த பெரிய மனிதருக்கு நாம் செய்யகூடிய குறைந்த பட்ச மரியாதை அதுதான்...




Friday, October 11, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - அண்ணா காலத்து வெர்ஷன்


  நான் அண்ணா அவர்களின் எழுத்துகளுக்கு தீவிர ரசிகன்.. அவர் எழுதிய பெரும்பாலான நூல்களை படித்து இருக்கிறேன். அவற்றில் இருக்கும் தமிழ் ஆளுமை, விஷய ஞானம் , வாதத்திறமை நம்மை அசர வைக்கும். எதிர் கட்சியினரை அரசியல் காரணங்களுக்காக திட்டினாலும், தனிப்பட்ட


முறையில் அவரது பண்பாட்டை பல
ர் பதிவு செய்து இருக்கின்றனர்.

அந்த அளவுக்கு ரசிகனாக இருந்தாலும், அவர் படங்களை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை... அன்பே சிவம் படம் வரை பயன்படுத்தப்பட்டு வரும் டெம்ப்ளேட்- ஜமீந்தார் மகளை ஏழை காதலித்து , சமூக மாற்றத்துக்காக பாடுபடும் யுக்தி- எனக்கு அலுத்துப்போய் விட்டதே காரணம்.

இந்த நிலையில் ஓர் இரவு படம் தமிழ் ஸ்டுடியோ சார்பில் திரையிடப்பட்டபோது எனக்கு படம் பார்க்க ஆர்வம் இல்லை. ஆனால் அண்ணா வசனத்தை ரசித்து விட்டு வரலாம் என்பதற்காக படம் பார்க்க சென்றேன்.

சென்றவனுக்கு படம் இனிமையா அதிர்ச்சியை அளித்தது..திராவிட இயக்க கொள்கைகளை விட்டுக்கொடுக்காத படம் என்றாலும் , இது பிரச்சாரப்படம் அல்ல. ஒரு நல்ல எண்டர்டெய்னர்....சமூக கருத்துகளை விட்டு விடாத எண்டர்டெய்னர்..

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் பாணியில் ஒரே இரவில் நடப்பதாக அண்ணா படைத்த கதை இது.

 நள்ளிரவு நேரம். ஓநாய் ஒன்று ஒரு வீட்டுக்கு வேட்டையாட திருட்டுத்தனமாக வருகிறது. வந்த இடத்தில் அதற்கு சில விஷயங்கள் தெரிய வருகின்றன. அந்த வீட்டில் இருக்கும் ஆடுகளை ஒரு புலி வேட்டையாடத்துடிப்பது தெரிய வருகிறது.. அந்த புலிக்கும் அந்த ஆடுகளுக்கும் இருக்கும் சம்பந்தம்.. ஒனாய்க்கும் அந்த ஆடுகளுக்கும் இருக்கும் உறவு. ஓநாயாக மாறிய காரணம் என்பதெல்லாம் அழகு தமிழில் சொல்லப்படுகின்றன.

கதை நடப்பது ஒரே இரவில்...மற்ற சம்பவங்கள் எல்லாம் ஃப்ளாஷ்பேக்கில் வருவதாக அண்ணா திட்டம் இட்டு  இருந்தார்.
அதை அப்படியே எடுத்து இருந்தால் , உலகப்பட வரிசையில் இடம் பெற்று இருக்கும். ஆனால் அந்த கால ரசிகர்களுக்கு அது செட் ஆகாது என நினைத்து திரைக்கதையை மாற்றி விட்டார்கள். ஃப்ள்ஷ் பேக் குறைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சிகள் லீனியராக சொல்லப்படுகின்றன... அந்த இரவுக்காட்சி கடைசியில் வருகிறது..

கருணாகரன் என்ற பணக்காரர் சொர்ணம் என்ற ஏழைப்பெண்ணை காதலிக்கிறார். ஆனால் ஜாதி பிரச்சனையால் அவளை திருமணம் செய்ய முடியவில்லை. கர்ப்பம் ஆக்கி விட்டு கைவிட்டு விட்டு , இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

காலங்கள் ஓடுகின்றன.. அவர் மனைவி இறந்து விட்டு , தன் மகளை இவரே வளர்த்து ஆளாக்குகிறார். அவள் டாக்டர் ஒருவனை காதலிக்கிறாள்.

கருணாகரனை வில்லன் ( பாலையா ) என்னவோ சொல்லி ப்ளாக் மெயில் செய்து பணம் பறிக்கிறான். ஒரு கட்டத்தில் அவரது மகளையே கேட்கிறான்.

டாக்டரை அழைத்து பிளாஷ்பேக் சொல்லி அவனை விலகிக்கொள்ள சொல்கிறார். தன் மனைவி எப்படி இறந்தாள் , அவன் ஏன் மிரட்டுகிறான் என்பதை எல்லாம் சொல்கிறார்.

அப்போதுதான் இரவுக்காட்சி வருகிறது.. தன் அன்னையின் உயிரைக்காப்பாற்ற தேவையான பணம் சம்பாதிக்க திருடும் பொருட்டு , அந்த வீட்டுக்கு வருகிறான் ஒரு திருடன்.. அங்கே தற்கொலைக்கு தயாராகும் பெண்ணை பார்க்கிறான். அவளுக்கு உதவுகிறான். அப்போது அங்கு வரும் டாக்டர் காதலன் இதைப்பார்த்து சந்தேகம் அடைகிறான்.

கடைசியில் அந்த திருடன், சொர்ணா+ கருணாகரனின் மகன் என்பது தெரிய வருகிறது... அந்த திருடனும் , டாக்டரும் கை கோர்த்து வில்லனை வீழ்த்துகின்றனர்..

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் ஏராளம்.

வில்லனை ( பாலையா) மணக்க விரும்பாத கதா நாயகி (லலிதா ), திருடனிடம் ( கே ஆர் ராமசாமி_ உதவி கேட்கிறாள்..சற்று நேரத்தில் அந்த வில்லன் வருவான்..அப்போது அந்த திருடன் காதல் மொழி பேசி ரகசிய காதலன் போல நடிக்க வேண்டும். வருபவன் டென்ஷன் ஆனால் , அவனை அடித்து துரத்த வேண்டும் , அவளது போலியான எதிர்ப்பை மீறி என்பது அவள் திட்டம். திருடன் ஒப்புக்கொள்கிறான்.

யாரோ வரும் சத்தம் கேட்டு காதல் மொழி பேச ஆரம்பிக்கிறான்..ஒரு ட்விஸ்ட்,,, வந்தவன் வில்லன் அல்ல...டாக்டர் காதலன்.( நாகேஸ்வர ராவ்) . அதற்கு பின் நடக்கும் கலாட்டாக்களை நீங்களே யூகிக்க முடியும்..

ஆனால் இப்படி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக ஆக்கி விடாமல், சமூக கருத்துகளை ஆங்காங்கு சொல்லி இருப்பது அண்ணாவின் மேதமை...

துன்பம் நேர்கையில் , அய்யா சாமி அய்யா வாய்யா, ராய்யா, யூ கம் ஐயாஎன்ற இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றன.. ஒன்றுக்கு இரண்டு காமெடியன்கள்... புண்படுத்தாத காமெடி..’

ஆரம்ப காட்சியில் வரும் சரோஜா செம அழகு...

குற்றவாளி யார்? சத்திய சோதனை என ஆங்காங்கு புத்தகங்கள் மூலம் காட்சியை விளக்குவது அழகு,


இயக்கம் ப நீலகண்டன்.

அண்ணா ஒரே இரவில் வசனங்கள் எழுதினாராம்...சோ ஸ்வீட்


மாளிகை வேண்டாம், மாட்டுக் கொட்டகை போதும்.
பட்டுப் பீதாம்பரம் வேண்டாம்; கட்டத் துணி இருந்தால் போதும்.
ஆபரணங்கள் வேண்டாம்; அன்பு காட்டினால் போதும்.

ஆம்..அவளுக்கு துரோகம் செய்தேன்..அப்போதும் என் பெயர் ”கருணா”கரன் தான்..

அவனைக்கொள்ள ஆயுதன் எதற்கு , ( கைகளை சுட்டிக்காட்டி ) இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிளே போதுமே

லா பாயிண்ட் பேசறத விட்டுட்டு , லவ் பாயிண்ட்  பேசிப்பாருங்க...


இப்படி படம் முழுக்க ரசிக்கலாம்... படம் முழுக்க பின்னணி இசை இருப்பதை நாம் சிலாகிக்கிறோம்.  இப்படி செய்து செய்து தமிழ் படங்களில் யாதர்த்தமான ஒலிகளே இல்லாமல் போய் விட்டது.

இந்த படத்தில் தேவையான இடத்தில் மட்டுமே பின்னணி இசை உள்ளது..

ஓர் இரவு - ஒரே ஒரு முறையேனும் பார்த்தே ஆக வேண்டிய படம்

Wednesday, October 9, 2013

தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படம்-பார்த்து சிலிர்த்து பரவசப்பட்ட அனுபவம்


ஒரு பெண் அரசரை மயக்கி அவர் மனதில் இடம் பிடித்து விடுகிறாள். சதி செய்து அவரையும் அவர் வாரிசுகளையும் கொன்று ஆட்சியை பிடிக்கிறாள்.
திடீர் திருப்பமாக அவள் கூட்டாளியையுமே தீர்த்து கட்டி விடுகிறாள்..

தட்டிக்கேட்க ஆள் இல்லாத அரசியாகி காட்டாட்சி நடத்துகிறாள்...

கரிகாலன் என்பவன் தலைமையில் மக்கள் அணி திரள்கிறார்கள்... புரட்சிக்கு திட்டம் இடுகிறார்கள்... கரிகாலன் வெல்ல முடியாதவனாக இருக்கிறான். அவனுக்கு அவ்வப்போது தெய்வம் ரகசிய கட்டளைகள் வழங்கி வழி காட்டுகிறது...

அரசிக்கு விசுவாசமான தளபதி அவளுக்கு உறுதுணையாக இருக்கிறான். கரிகாலனை வெல்ல முடியாத நிலையில் , அவனை மயக்கி வீழ்த்தும் பொருட்டு அரசியின் தரப்பில் இருந்து கலாவதி என்ற பெண் தந்திரம் செய்து கரிகாலன் இருப்பிடத்தை அடைகிறாள்.
ஒரு யோகி மர்மமான சில வேலைகள் செய்கிறார்... அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது புதிராக இருக்கிறது...

அரசி யாருக்கும் அடங்காமல் இருந்தாலும் , அவளை ஒரு பேய் அடிக்கடி வந்து மிரட்டி செல்கிறது... அதற்கு மட்டும் அஞ்சுகிறாள்..

இதற்கிடையில் காலாவது மனம் மாறி கரிகாலனை நேசிக்க தொடங்குகிறாள்.. அவனும் நேசிக்கிறான், ஆனால் இதை அவனது கூட்டம் விரும்பாததால் , அவன் தலைமை பதவியை துறந்து வெளியேறுகிறான்.

தலைமை இல்லாத அந்த கூட்டத்தினரை அரசி படையினர் வென்று ஜெயிலில் அடைக்கின்றனர். கலாவதியும் ஜெயிலில் அடைக்கப்படுகிறாள்...

அவர்களை காப்பாற்ற கரிகாலன் வந்து சண்டையிடுகிறான்...அவனுக்கு தெய்வ கட்டளை மூலம் வழிகாட்டுவது தன் தந்தையான் என்பதை தளபதி கண்டுபிடிக்கிறான்.

அவர் ஏன் அப்படி செய்தார். அவர் மர்மமான நடவடிக்கைகளின் காரணம் என்ன என்பது கடைசியில் தெரிகிறது...

அவர் யார் என என்பது தெரிய வரும்போது அனைவரும் அதிர்கின்றனர்..

பழைய படங்களை நாம் புதிய படங்களை பார்க்கும் மதிப்பீடுகளோடு பார்க்க முடியாது... அந்த கால தொழில் நுட்பம் , திரை மொழி போன்றவை ஆரம்ப கட்டத்தில் இருகின்றன என்பதால் ஒரு சலுகை கொடுத்து விட்டுத்தான் பழைய படங்கள் பார்ப்போம்..

ஆனால் மர்ம யோகி என்ற இந்த சினிமா , இப்போது பார்த்தாலும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் , பழைய படம் எனும் சலுகையை கோராமலும் இருக்கிறது..

எம் ஜி ஆருக்கு மிகப்பெரிய வெற்று தந்து அவருக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படம் இது..

இந்த வெற்றியை எம் ஜி ஆர் எவ்வளவு அடக்கத்துடன் ஏற்று கொண்டார் என்பதில்தான் அவர் நிற்கிறார்.

எம் ஜி ஆர் கூறுகிறார்.

ஒரு முறை நாடக மற்றும் சினிமா நடிகரான கே பி கேயுடன் அவர் கதா நாயகனாக நடித்த படம் ஒன்றுக்கு போய் இருந்தோம். அதில் நானும் சிறிய வேடத்தில் நடித்து இருந்தேன்.. எல்லோரும் கே பி கே, கே பி கே என அவரை சூழ்ந்து கொண்டார்கள்.. அவரை காப்பாற்றி அழைத்தி செல்வது பெரும்பாடாக இருந்தது..என்னை யாருக்கும் தெரியவில்லை... அவர் புகழை நினைத்து வியந்தேன்.

சில ஆண்டுகள் கழித்து ,  நான் நடித்த மர்மயோகி மாபெரும் வெற்றி கண்டது..திரையரங்குக்கு நான் சென்ற போது கரிகாலன் கரிகாலன் என வாழ்த்தொலி  எழுப்பி மக்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக கே பி கே இருந்தார் , டைகர் ஆஃப் இந்தியன் ஸ்டேஜ் என கவர்னரால் புகழப்பட்ட அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை...

சில ஆண்டுகள் முன்பு என்னால் ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்த அவரை இன்று யாருக்கும் தெரியவில்லை என்றால் , புகழ் என்பதை நிலையான ஒன்று என நினைக்கும் ஆணவம் எனக்கு எப்படி வரும்...

இந்த வரலாற்று சிறப்பு மிக்க படம் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ( அரசியாக ) அஞ்சலிதேவி நடித்தார்.

மர்ம யோகியாக நடித்தவர் செருகளத்தூர் சாமா,

சமூக ரீதியான புரட்சிகரமான கதையை திகில் , கடவுள் போன்ற சமாச்சாரங்கள் கலந்து கொடுத்த புத்தி சாலித்தனம்தான் படத்தை இன்றும் நினைக்க வைக்கிறது..

அரசி பேயைக்கண்டு நடுங்கும் காட்சியில் அவளது நிழல் அவளைவிட பெரிய உருவமாக காட்சி அளிப்பதை பதிவு செய்து இருக்கும் நேர்த்தி, கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான், தவறினால் குறி வைக்க மாட்டான் என்பது போன்ற பஞ்ச் டயலாக்குகள் ,

அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

வாடாத ரோஜா
உன் மடிமீதில் ராஜா
மனமே தடை ஏனையா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்


பொன்னான காலம் வீணாகலாமோ
துணையோடு நீ உலகாள வா
தினம் தேனூறும் சோலைதனில் நீராடலாம்
வானில் நீ ஆடலாம்

என்பது போன்ற இனிய பாடல் வரிகள் , நேர்த்தியான நடிப்பு என படம் பார்ப்பது ஓர் இனிய அனுபவமாக இருக்கிறது..   நம்பியாரின் நடிப்பை மறக்க முடியாது...

இந்த படம்தான் தமிழின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்பது குறிப்பிடத்தக்கது...   பேய் வரும் திகில் காட்சிகளுக்குக்காக இதற்கு ஏ சர்ட்டிஃபிகேட் வழங்கினார்கள்..

இன்று எத்தனையோ ஏ படங்கள் வந்து விட்டன,,, ஆனால் இந்த படம் போன்ற நேர்த்தியுடன் வந்ததில்லை...

இந்த படத்தை தமிழ் ஸ்டுடீயோ நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான திரையிடலில் பார்த்தேன். அவர்களுக்கு நன்றி...

Tuesday, October 8, 2013

பாலகுமாரன் நல்லவரா கெட்டவரா- ஜெயமோகனின் ஹிந்து கட்டுரையும் அன்று அவர் எழுதிய கட்டுரையும்....

ஹிந்துவில் திரு. ஜெயமோகன் அவர்களின் பேட்டி படித்தேன்...
இப்படி எழுதி இருந்தார்..

தீவிர இலக்கியம்தான் ஒரு ஆரோக்கியமான பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதில் ஐயமே இல்லை. வாழ்க்கையை நுட்பமாக அணுகவும் அதை வரலாற்றில் வைத்துப் புரிந்துகொள்ளவும் உதவக்கூடியவை இலக்கியப் படைப்புகளே. ஆனால், அவை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களுக்கு உரியவை. வாசிக்கும் பயிற்சியை அளிப்பதற்கு எளிமையான, விறுவிறுப்பான புனைகதைகள் தேவை.
இன்று அத்தகைய வணிகக் கேளிக்கை எழுத்து அநேகமாக அழிந்துவிட்டது. சென்ற தலைமுறையில் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்கள் வாசகர்களைக் கவர்ந்து வாசிப்புக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் வாசகர்களில் ஒரு சாரார் பின்னர் இலக்கிய வாசகர்களாக ஆனார்கள்.
இந்தத் தலைமுறையில் அப்படி எவருமே இல்லை. அவ்வாறு நவீன வணிக எழுத்து நிறைய வந்தால் மட்டும்தான் லட்சக் கணக்கானவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பிப்பார்கள். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக நிகழும். அவ்வாறு 10 லட்சம் பேர் தமிழில் எதையாவது வாசித்தால்தான் அதில் 10 ஆயிரம் பேர் தரமான இலக்கியத்துக்கு வருவார்கள்.


இதைப்படித்து அதிர்ச்சி அடைந்தேன்...

இதே கருத்தை ஒரு விவாதத்தில்  நான் சொன்னபோது அதை மறுத்து அன்று அவ்ரது வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்

முன்பு கூறிய கருத்து மாறி விட்டதா... எப்படி மாறியது என புரியவில்லை..

நீங்களே பாருங்கள்

வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. - ஜெயமோகன் அன்று சொன்னது


கேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல

கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்


கேளிக்கை எழுத்தாளர் vs சீரியஸ் எழுத்தாளர் என்ற நிலை முன்பு இருந்தது. கேளிக்கை எழுத்தை படித்து முடித்துவிட்டு, சீரியஸ் எழுத்துக்கு மாறும் ஆரோக்கியமான நிலை இருந்தது. நானெல்லாம் அப்படி மாறியவன்தான் . அந்த வகையில் கேளிக்கை எழுத்தார்கள் பெரிய சேவை செய்துள்ளனர் . ஆனால் இன்றைய நிலை வேறு. Reading habit vs other media என்ற நிலை உள்ளது. கேளிக்கை எழுத்துக்களுக்கு முன்பு இருந்த வரவேற்பு இல்லை. இது ஆரோக்கியமானது அல்ல . இந்நிலையில் புபி VS கல்கி என்று விவாதிப்பது அர்த்தமற்றது
pichaikaaran
அன்புள்ள பிச்சைக்காரன்
நீங்கள் சொல்வது ஒரு தனிப்பட்ட மனச்சித்திரம், உண்மை அல்ல. கேளிக்கை எழுத்து தீவிர எழுத்து என்ற பிரிவினை எப்போதும் உண்டு, உலகமெங்கும் உண்டு. மேல்நாடுகளில் அந்த் பிரிவினையை ஒரு விமரிசகன் செய்யவேண்டியதில்லை, வாசகனுக்கே தெரியும். ஏன் கேரளத்தில்கூட அப்படித்தான். கர்நாடகத்தில் அப்படித்தான். தமிழ்நாட்டில் விமர்சகன் அதை ஒரு வேலையாக செய்யவேண்டிய நிலை இன்றும் உள்ளது.
சுஜாதா பற்றிய விவாதமே அதனைத்தானே காட்டுகிறது. அவர் எழுதியவற்றில் எவை இலக்கியத்தரம் கொண்டவை எவை வணிக எழுத்துக்கள் என விமர்சகன் சொல்லவேண்டியிருக்கிறது. அவரது தீவிரவாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கவேண்டியிருக்கிறது.
சுந்தர ராமசாமி ஒருமுறை திருவனந்தபுரத்தில் ரயிலில் இருந்தபோது ஒரு கூட்டிப்பெருக்கும் பெண்மணி ‘’நீங்கள் சுந்தர ராமசாமி தனே/? என் பையன் உங்களை வாசிப்பான். நான் பொழுதுபோக்கு நாவல்தான் வாசிப்பேன். இலக்கியம் வாசிப்பதில்லை’ என்று சொன்னதாக அடிக்கடிச் சொல்வார். அந்தவேறுபாடு அங்கே இருந்தது.
தமிழில் பொழுதுபோக்கு ஊடகமாக தொலைக்காட்சி பெரிதானபோது வணிக எழுத்து பலவீனம் அடைந்தது. ஆனால் இன்றும் வாழத்தான் செய்கிறது. ரமணிச்சந்திரன் நாவல்களின் இன்றைய விற்பனை இன்றுவரை எந்த தமிழ் எழுத்தாளனும் கற்பனைசெய்யமுடியாத அளவு பிரம்மாண்டமானது.
வணிக எழுத்தில் இருந்து மிகச்சிலர் – இயல்பாகவே தேடலும் நுண்ணுணர்வும் உடையவர்கள் — இலக்கியம் நோக்கி வந்தார்கள். சுஜாதா தொடர்ச்சியாக நல்ல எழுத்தை அடையாளம் காட்டி வந்தர். ஆனால் பாலகுமாரனோ அதன் முன் கல்கியோ அதைச் செய்தவர்கள் அல்ல. அவர்கலின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களிலேயே நின்று விட்டவர்கள். அதை இன்றும் நீங்கள் இணையத்தில் விவாதங்களிலேயே பார்க்கலாம்
வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தகட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு.
இரண்டாவதாக, கேளிக்கை எழுத்தை வாசித்து பழக்கப்பட்டுவிட்ட ஒருவர் தன்னை உடைத்து வார்க்காமல் இலக்கியம் வாசிக்க முடியாது. இதையும் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். தீவிரமான எதையும் பொறுமையாக, கவனமாக அவர்களால் வாசிக்க முடிவதில்லை. ஒன்று எரிச்சல் கொள்கிறார்கள். அல்லது கிண்டல் நக்கல் செய்து கொள்கிறார்கள்.
சினிமாவே பார்க்காத ஒருவருக்கு நாம் பாதேர் பாஞ்சாலி போன்ற ஒரு நல்ல படத்தை போட்டு காண்பிக்க முடியும். அவர்கள் ரசிப்பார்கள். ஆனால் விஜய்படம் பார்த்து பழகிய ஒரு ரசிகர் ‘மரண மொக்கை’ என்று சொல்லிவிடுவார். இந்த எதிர்மறைப் பயிற்சியை வணிக இலக்கியம் அளிக்கிறது. இதை திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை செய்து பார்த்து என்னிடம் விவாதித்திருக்கிறார்.
அதாவது இவர்கள் எது இலகுவாக இருக்கிறதோ, எது பழகியதோ அதை மட்டுமே வாசிக்கிறார்கள். அதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த இயல்பை மீறி உங்களைப்போல சிலர் இலக்கியம் பக்கம் வருகிறார்கள் என்பது உங்கள் நுண்ணுணர்வு பலமானது என்பதை மட்டுமே காட்டுகிறது.
தமிழில் வணிக இலக்கியம் பலவீனப்பட்டபோது அந்த இடைவெளியில்தான் தீவிர இலக்கியம் இன்றுள்ள கவனத்தைப் பெற முடிந்தது – 1990 முதல். அதற்கு முந்தைய நிலையை நான் அனுபவித்து அறிந்தவன் என்பதனால் வணிக இலக்கியம் உருவாக்கிய திரை எத்தனை கெட்டியானது என நான் அறிவேன். 1990களில் சுபமங்களா வண்ணதாசன் வண்ணநிலவன் சுந்தர ராமசாமி என தொடர்ந்து பேட்டிகளை வெளியிட்டபோது ‘யார்யா இவங்க?’ என்ற பீதிக்கும் கசப்புக்கும்தான் வணிக எழுத்தின் வாசகர்கள் ஆளானார்கள்.
கோமல் ’நீங்கள் ஒரு வணிக எழுத்தாளர் தானே’ என பாலகுமாரனிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கி பிரசுரித்தபோதுதான் அவரது வாசகர்கள் அப்படி ஒரு விமரிசனம் அவரைப்பற்றி தமிழிலக்கிய உலகில் நிலவுவதை அறிந்தார்கள். அவ்வாறுதான் தமிழில் இலக்கிய அறிமுகம் நிகழ்ந்தது. கல்கி சுஜாதா பாலகுமாரன் வழியாக அல்ல
ஜெ

Monday, October 7, 2013

ரஜினிப்பட இயக்குனரை கடிந்து கொண்ட இளையராஜா-இயக்குனரின் நச் விளக்கம்

ரஜினி படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் , பாட்ஷா அண்ணாமலை அல்லது ஆறிலிருந்து அறுபது வரை என நீங்கள் சொல்லக்கூடும்.

மகேந்திரன் படங்களில் கேட்டால் முள்ளும் மலரும் , உதிரிப்பூக்கள் என சொல்லக்கூடும்.

ஆனால் எனக்கு இந்த இருவர் படங்களில் பிடித்த படம் ஜானிதான்..
பல ப்ழைய ரஜினி படங்களை மறு திரையிடல்களின்போது தியேட்டர்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஜானி படத்தை தியேட்டரில் பார்த்ததே இல்லை. ஒரு நாள் தற்செயலாக சன் டீவியில் பார்த்தேன் . லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பது போல முதல் முறையே பிடித்து விட்டது.

அதன் பின் பல முறை பார்த்து வருகிறேன்.

அந்த படத்தின் ரசிகன் என்ற முறையில் அடுத்த கட்டமாக அதன் திரைக்கதை நூல் படித்தேன். வாவ்...சினிமா அனுபவத்துக்கு சற்றும் குறைவில்லாமல் வாசிப்பு அனுபவம் இருந்தது..

படத்தின் வெற்றிக்கு இளையராஜா இசை , ஸ்ரீதேவி நடிப்பு என பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் பார்பர் ரஜினியின் கேரக்டரைசேஷன் தான். அந்த கேரக்டர் அடையும்  வளர்சிதை மாற்றத்தை காட்ட எடுக்கப்பட்ட சிரத்தை , திரைக்கதை வடிவில் படிக்கையில் துல்லியமாக தெரிகிறது.

அடி செருப்பால என கோழியை திட்டுவது போல அறிமுகமாகும் அந்த கேரக்டர் ஒரு பார்பர். பொறுப்பற்றவர் . கருமி. பின் காதல் வயப்படுவது . யாரோ செய்யும் தவறுக்காக கஷ்டப்படுவது, பிறகு உண்மையிலேயே குற்றம் செய்வது , பெண்களை வெறுப்பது , பிறகு பெண்மையின் உன்னதத்தை உணர்வது என கல்ர்ஃபுல் கேரக்டர்.

ஒரு காட்சியில் இவர் இன்னொருவருக்கு தன் பார்பர் ஷாப்பில் ஷேவ் செய்து கொண்டு இருப்பார். அப்போது உதவியாளர் ஏதோ தவறு செய்வார். அப்போது பார்பர் ரஜினி டென்ஷன் ஆகி கத்துவார்.. “ வேலையை ஒழுங்கா செய்.. அக்கறை இல்லாட்டி இங்க என்ன செரைக்கிறதுக்கா வர்ற? “ என்பார்.. இதை யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது.

இந்த புத்தகத்தின் தனி சிறப்பு என்னவென்றால் , திரைக்கதையை மட்டும் கொடுக்காமல் , மகேந்திரன் ஆங்காங்கு அந்த காட்சிகள் குறித்த தன் அனுபவங்களையும் எழுதி இருக்கிறார். மிக சுவாரஸ்யம்.

ஒரு காட்சியில் ஸ்ரீதேவி தன் காதலை கூறுவார், சில காரணங்களை மனதில் வைத்து ரஜினி மறுப்பார் என்பது போல காட்சி போகும். மிகவும் பாராட்டப்பட்ட காட்சி இது.

அந்த காட்சி முடிந்தவுடன் ரஜினியும் , மகேந்திரனும் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போது ரஜினி சொன்னாராம் “ஸ்ரீதேவி ரொம்ப நல்ல பெர்ஃபார்ம் பண்ணாங்க சார்.  அவங்களை மிஞ்சிக்காட்டணும்னு நான் டிரை பண்ணி பார்த்தேன். முடியல சார். அவங்க என்னை தோற்கடிச்சுட்டாங்க”


மகேந்திரன் நினைத்தாராம்... சக கலைஞரை மிஞ்ச வேண்டும் என ஓவர் ஆக்ட் செய்து இருந்தால் அந்த காட்சியே கெட்டுப்போய் இருக்கும். அண்டர்ப்ளே செய்து விட்டுகொடுத்து நடித்ததால்தான் , அந்த காட்சி சோபித்தது என ரஜினியைப்பற்றி பெருமையாக நினைத்தாராம்..

அந்த காட்சியை பாருங்கள்... ரஜினி பவ்யமாக நடித்து இருப்பதையும் இளையராஜாவின் இசையையும் கவனியுங்கள்..



இந்த படத்தில் இளையராஜா ஃபுல் ஃபார்மில் இசை அமைத்து இருப்பார். எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். அதில் ஒரு பாடலை சரியாக படம் எடுக்கவில்லை என கோபித்து கொண்டாராம்.

அந்த பாடல்



அந்த பெண் பாடுவது போல எடுத்து இருக்க வேண்டும். இப்படி எடுத்தது தவறு என ராஜாவுக்கு கோபமாம். ( தன் நண்பன் இளையராஜா கோபித்தார் என உரிமையுடன் சொல்லி , மகேந்திரன் இதை சொல்கிறார்.. இசை அமைத்தோமோ போனோமா என்று இல்லாமல் , தன் இசை எப்படி படம் ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதில் அவர் காட்டிய அக்கறை வியக்க வைத்தது )
மகேந்திரன் விளக்கினாராம். அந்த பெண் தன் காதலை ஏற்கனவே மறைமுகமாக கண்ணியமாக  சொல்லி விட்டாள். இப்போது நேரடியாக பாட்டு பாடி சொன்னால் , அந்த கேரக்டரின் கண்ணியம் பாதிக்கப்படும், அதேபோல , அப்படி நேரடியாக சொன்னால் , ரஜினி கேரக்டர் அதை மறுக்கும் சூழ்னிலை உருவாகும். அதனால் அவள் மனதில் பாடல் ஒலிப்பது போல அமைத்தேன் என்று சமாதானப்படுத்தினாராம்.


ஆனால் இன்னொரு பாடல் எடுக்கப்பட்ட விதம் , அனைவருக்கும் பிடித்து பாராட்டினாலும் மகேந்திரனுக்கு அதில் திருப்தி இல்லையாம். வேறு மாதிரி எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். அது என்ன பாடல் என்பதை புத்தகத்தில் காண்க.

அதே போல , ஒரு லாஜிக் மீறல் தவறுதலாக இடம் பெற்று விட்டதாக இத்தனை ஆண்டுகள் கழித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.  ஒரு குறிப்பிட காட்சியை சொல்லி, அதற்கு சமாதானங்கள் சொல்லலாம். ஆனால் அது தவறு..என் மேல்தான் தவறு என இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிப்படையாக சொல்லும் அவர் பெருந்தன்மை மலைக்க வைத்தது.. அது என்ன காட்சி என்பதையும் புத்தகத்தில் காண்க..

அந்த படத்தின் ஆடைகளை ஓவியர் ஜெ... ( ஜெயராஜ் ) வடிவமைத்தார் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்..


ஒரு காட்சியை எடுக்க தயாராகும்போது ஒரு ஆங்கில புத்தகத்தை தற்செயலாக பார்த்தாராம். அதன் தலைப்பு அந்த சீனுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றவே அந்த புத்தகத்துக்கு ஒரு ஷாட் வைத்தாராம்.. அந்த காட்சி பவர்ஃபுல்லாக இருக்கும்.

ரஜினி தன் காதலியுடன் ஷாப்பிங் போகும்போது , ஒரு பணக்கார இளைஞன் வருவான். அந்த சூழ் நிலையில் அந்த புக் காட்டப்படும். புத்தக பெயர் FUTURE SHOCK...  :)

வழக்கமாக படம் எடுத்து முடித்த பின் பின்னணி இசை சேர்ப்பார்கள்..இந்த படத்தில் குறிப்பிட காட்சிக்க்கு முதலில் இசை அமைத்து விட்டு , அதற்கேற்ப படமாக்கினார்களாம்..

இப்படி பல சுவையான தகவல்கள்...ஒவ்வொரு சீனையும் செதுக்கிய நேர்த்தி என இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது.

சினிமாவைப்பற்றி அறிந்து கொள்ள ஒரே ஒரு புத்தகம்தான் வாங்க முடியும் என்றால் இந்த புத்தகம் வாங்குங்கள்..

வெர்டிக்ட் - ஜானி--------லவ்லி 

வெளியீடு - சாருப்ரபா பதிப்பகம்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா