Wednesday, February 26, 2020

பிரசாந்த்.. திறமையை நம்பிய கலைஞன்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் ஒன்று.

பிரபுதேவா உட்பட பலரை இந்த பதவியில் வைத்து விவாதித்துள்ளனர்


இவற்றில் பிரசாந்த் சற்று வித்தியாசமானவர்

ரஜினி , கமல் , விஜய்காந்த், சத்யராஜ் , பிரபு , கார்த்திக் ஆகியோரின் ஆதிக்கம் நிலவிய அந்த காலகட்டத்திலேயே தனது பயணத்தை துவக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு

ஆனால் இவருக்குப் பின் வந்த விஜய் அஜித் ஆகியோர் இவரை ஓவர்டேக் செய்து விட்டனர்

அடுத்த நம்பர் ஒன் என கருதப்பட்டு அதன் பின் , விஜய் அஜித்துக்கு போட்டியாளராக நினைக்கப்பட்டு அதன் பின் சூர்யா , ஆர்யா , ஜெயம் ரவி , விஷால் , சிம்பு , தனுஷ் போன்றோர்கள் தமக்கென இடம் பிடித்தபின்கூட புதுமுக நடிகர் போல ஒரு திருப்பு முனைக்காக நிரந்தரமாக காத்திருக்க நேர்ந்தது பெரும் சோகம்

உரிய வழிகாட்டுதல் இல்லாதது பலரது தோல்விகளுக்கு காரணமாய் இருக்கும்

இவரது தோல்விக்கு காரணம் இவரது தந்தையின் அளவுக்கு மீறிய வழிகாட்டுதல் என்பார்கள் சிலர்

மலையூர் மம்பட்டியான் போன்ற படங்களில் கிடைத்த நட்சத்திர அந்தஸ்தைக்கூட தன் பையனுக்காக தியாகம் செய்தவர் தியாகராஜன்;

அவரது தியாகம் வீணாய் போய் விட்டது

ஆரம்பத்தில் பிரசாந்தே தனியாக செயல்பட்டு தப்பான படங்களில் நடித்து தோல்விகளில் பாடம் கற்று பிற்காலத்தில் வென்றிருக்கலாம்

அல்லது இப்போது சில நடிகரககள் செய்வதுபோல paid news உருவாக்கியிருக்கலாம்

திறமையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி வெல்ல முயன்றவர் என்பதால் அவர் தோல்வி வருத்தத்துக்கு உரியதாகிறது


Saturday, February 22, 2020

ரீமிக்ஸ் என்ற அயோக்கியத்தனம்.. ரகுமான் காலம் கடந்த ஞானோதயம்

தனது பாடல் ஒன்றை ரீமிக்ஸ் என்ற பெயரில் நாசமாக்கி விட்டார்கள் என ஏ ஆர் ரகுமான் கடும் வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்


பாடல் உருவாக்கத்துக்குப்பின் எத்தனையோ இனிய நினைவுகள் , உழைப்பு இருக்கும். அதை இப்படி எடுத்தாள்வது தவறு என குமுறியிருக்கிறார்

உண்மையில் , தொட்டால் பூ மலரும் ..பொன் மகள் வந்தாள் ஆகிய பாடல்களை அவர் ரீமிக்ஸ் செய்தது பலருக்கு வருத்தம்தான்

பொன் மகள் வந்தாள் பாடலுக்குப்பின் அப்பாடல் சார்ந்த பல இனிய நினைவுகள் சிவாஜி , எம் எஸ் வி ரசிகர்களிடம் இருக்கும். அதை ரீமிக்ஸ்செய்வது அவர்களை காயப்படுத்தம்

தொட்டால் பூ மலரும் பாடல் ரீமிக்ஸ் எம்ஜி ஆர் ரசிகர்களை வருந்த செய்திருக்கும்

இன்னொரு கொடுமையும் நடக்கிறது

பல பாடல்களை அப்படியே வைத்துக கொண்டு அதற்கேற்ப புதிய நடிகர்களை வைத்து ஷுட் செய்கிறார்கள்

இதெல்லாம் அயோக்கியத்தனம்

ரகுமான் இதற்காக குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது

Wednesday, February 19, 2020

மிஷ்கின் என்னை அவமானப்படுத்தினார்.. பிரசன்னா,வேதனை

அன்பின் கரங்கள் , மனிதம் என்றெல்லாம் சிலர் கவிதை எழுதுவார்கள்.  ஆனால் சக எழுத்தாளனுக்குத் தர வேண்டிய நியாயமான ஊதியத்தை தராமல் அந்தக்காசில் உணவுண்டு வயிறு வளர்ப்பார்கள்.

அது போல மானுடம் குறித்தும் அன்பு குறித்தும் பேசும் இயக்குனர் மிஷ்கின் தன்னை அவமானப்படுத்துவார் என எதிர்பார்க்கவே இல்லை என நடிகர் பிரசன்னா வேதனையுடன் தெரிவித்துள்ளார்


இது குறித்து அவர் கூறியதாவது

கதாநாயகனாத்தான் நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் வாங்க வேண்டும் என கருதுகிறேன். அஜித்துடன் அருண் விஜய் நடித்த படம் அருண் விஜய்க்கு பெரிய திருப்புமுனையாய் அமைந்தது. அப்படிப்பட்ட படத்துக்காக காத்திருக்கிறேன்

அந்த அடிப்படையில்தான் துப்பறிவாளன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்

அதன் இரண்டாம் பாகத்தில் என் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தருமாறு கேட்டுக கொண்டேன். மிஷ்கின் ஒப்புக் கொண்டு அதற்கேற்ப திரைக்கதை எழுதினார்

படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது இவர் யார் என என்னைப்பற்றி மிஷ்கினிடம் ஒருவர் கேட்டார்

" இவரா.. இவர் சின்ன சின்ன பாத்திரங்களில் நடிக்கும் துணை நடிகர்," என அலட்சியமாக சொன்னார் மிஷ்கின்

எனக்கு அவமானமாகி விட்டது. மிஷ்கினிடம் இதை எதிர்பார்க்கவில்லை

இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்

Tuesday, February 18, 2020

ஜெயமோகனின் யாதேவியும் , பாலியல் சோதனைகளும்


அந்தி மழை இதழில் ஜெயமோகனின் யா தேவி சிறுகதையைப் பார்த்து சற்றே அதிர்ச்சி அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்

இப்போதெல்லாம் தமிழ்ப்பத்திரிக்கைகளைப் படிப்பது முகநூல் பக்கங்களைப் படிப்பதுபோன்றுதான் இருக்கிறது. அறிவுஜீவி பாவனை , மேலோட்டமான புரிதல்கள் , தப்புத்தப்பான தமிழ் , அரசியல் சார்புகள் என பத்திரிக்கைகள் எல்லாம் முகநூல் தரத்துக்கு வந்து விட்டன

என் பதிவு வாட்சப்பில் வைரல் ஆகிறது
என அந்தக்கால வலைப்பதிவர்கள் மகிழ்வது போல பத்திரிக்கையாசிரியர்கள் மகிழும் கால கட்டம்.

நமக்குத்தேவையான தீனி இங்கு கிடைக்காது என ஆங்கிலத்தின் நகரும் சூழலில் , யா தேவி கதை நல்லதொரு அனுபவத்தை தந்தது

எல்லாஆன்செல் என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஶ்ரீதரன் என்பவன் அவள் அறைக்கு செல்கிறான்.
யாரும் கேட்கவாய்ப்பற்ற அவனது காலடி ஓசைகளை அவளுக்கு கேட்கிறது என்று ஆரம்ப வரிகளிலேயே ஒரு குறிப்பு வருகிறது.

அவள் நீலப்பட நடிகை. இவன் ஒரு துறவற வாழ்க்கை நடத்துபவன் . அவளுக்கு சிகிச்சை அளிக்க வருகிறான்.

அவன் அவளை புரிந்து கொள்வதைவிட , அவள் அவனை அதிகம் புரிந்து கொள்கிறாள் எனபதுதான் இந்தக்கதையின் மறைபொருளாக இருக்கும் அழகு

 பிணங்களை தகனம் செய்வதை அடிக்கடி பார்ப்பதன் மூலம் வாழ்க்கையின் நிலையாமையை உணர்தல் , மரண பயத்தை வெல்லல் போன்றவற்றை சாதிப்பதை ஒரு ஆன்மிக பயிற்சியாக செய்வார்கள்

அதேபோல கட்டற்ற காமத்தை அனுமதித்து அதை கடக்கும் முயற்சிகளும் உண்டு.  இது சற்று raw ஆன முயற்சி. ஆனால் சரியான வழிகாட்டுதல்களுடன் இதை செய்வது உண்டு

ஓஷோவுடன் நெருக்கத்தில் இருந்த சில பாலிவுட் நடிகர்கள் தாங்கள் புணர்ந்த பெண்களின் எண்ணிக்கையை பெருமையாக கூறி , தற்போது காமம் கடந்த நிலையை அடைந்து விட்டதாக புத்தகங்கள் எழுதினார்கள். இப்படி ஒரு நடிகர் பெருமையாக ஆன்மிக சோதனை செய்து புத்தகம் எழுத முடியுமா என்பது வேறு விவகாரம் 

உண்மையில் அப்படி அனுபவிப்பது மட்டுமே விழிப்புணர்வை தந்துவிடும் என்பது தவறான புரிதல்.

உதாரணமாக இடுகாட்டில் , சுடுகாட்டில் பணி செய்வோருக்கு மரணம் என்பது அதிர்ச்சியை தராது , பிணம் அச்சம் தராது. அதற்காக மரண பயம் கடந்த ஞானியர் என அவர்களை சொல்ல முடியாது..   ஆனால் சிலருக்கு அந்த நிலை வாய்க்கவும் வாய்ப்பிருக்கிறது


இந்த கதையில் வரும் அந்த நிலையை −காமம் கடந்த நிலையை −ஶ்ரீதரன் அடைய விரும்பும் நிலையை − அல்லது அதன் சாயலை அனுபவித்து விட்டாளோ என தோன்ற வைக்கிறது கதை

எதிர்பாலருடன் மரியாதைக்குரிய வகையில் பாலியல் சோதனைகள் செய்யும் வாய்ப்பை வாழ்க்கை அவளுக்கு வழங்கவில்லை ஆனால் கிடைத்த வாழ்க்கையேகூட அந்த சோதனைகளால் அடையப்படும் இறுதி அனுபவத்தை அவளுக்கு அளித்து விட்டதா என்ன ?

அவளில் மகாசக்தியை பெண்மையின் பேரழகை அவன் காண்பதைவிட ,அவனில் அவள் காணும் பெண் மிகவும் யோசிக்க வைத்தது

அவளது இறுதிப்,பெருமூச்சு அர்த்தம் மிக்கதுMonday, February 17, 2020

சாரு , பெருமாள் முருகன் , மனுஷ்ய புத்திரன்

பெருமாள் முருகனையும் சாருவையும் ஒப்பிட்டு தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது

பெருமாள் முருகன் தமிழர்களின் சாதி உணர்வை சீண்டியதால் எதிர்ப்பை சந்தித்தார்.  சாருவின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் குறிப்பிட்ட அடையாளங்கள் அற்றவை எனவே அவை பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றன என்பது அந்த கட்டுரையின் சாரம்

உண்மையில் இலக்கியம் என்பதே திரளுக்கு எதிரானது. பொதுவான மானுடனுத்துடன் உரையாடுவது. வெண்ணிற இரவுகளின் கனவுலகவாசி ஒரு ரஷ்யன் அல்லன். தமிழனாகிய எனக்கும் சொந்தமானவன். என்னைப்போன்ற ஒருவன் சூதாடியின் நாயகன் நான்தான்.. யாரோ ஒரு,ரஷ்யன் அல்லன்
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற உணர்வை உலகில் இருக்கும் எல்லா தேசத்தவனும் தன்னுடன் அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்


உலக இலக்கியங்கள் அனைத்தும் பொதுவான மனிதத்தைப் பேசினாலும் அவை அந்தந்த நாடுகளில் பெரும் சலனத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை

அதற்குகாரணம் வாசிப்பு என்பதோ இயல்பான உணர்வெழுச்சிகளோ இங்கு கிடையாது.

சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் இந்தி தெரியாமல் ழக்கள் இருப்பது வெட்கக்கேடு என்றார். இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. இவையெல்லாம் யார் கவனத்துக்கும் வராமல் கடந்தன.

யாரேனும் தூண்டிவிட்டால் அனைவருமே உணர்வெழுச்சி பெறுவார்கள். ஏதோ கண்காணா சக்தியின் பொம்மைகளாத்தான் இருக்கிறோம்

பெருமாள் முருகன் நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு இயல்பாக எழுந்ததன்று. குறிப்பிட்ட சாதி தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தூண்டிவிட்ட எதிர்ப்பு அது

நம் சமூகம் அறிவுப்பூர்வமான சமூகமாக மாறும்போது , இதுபோன்ற பொம்மலாட்ட எதிர்ப்புகள் மறையும்.

பேரிலக்கியங்கள் கடும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகும்

சாருவின் நாடகத்துக்கு , சில உரைகளுக்கு அவர் சந்திக்க நேர்ந்த எதிர்ப்புகளெல்லாம் இது போன்றவை அல்ல

திரள்களை நோக்கிப் பேசி உடனடி கவனம் பெறுவது ஒப்பீட்டளவில் எளிது. மனுஷ்யபுத்திரன் போன்ற முன்னாள் இலக்கியவாதிகள் , அரசியல்வாதி அவதாரம் எடுப்பதெல்லாம் உடனடி வெகுமதியைப் பெற்றுத்தரலாம். ஆனால் மானுடத்தை நோக்கிப்பேசும் எழுத்துகளே இலக்கிய வரலாற்றில் நிற்கும்

Sunday, February 16, 2020

வளத்தை தாங்கும் 8 தூண்கள் ஜேம்ஸ் ஆலன்

தொழில் நிமித்தம் அல்லது இலக்கிய மதிப்பு சார்ந்து படிப்பது ஒருவிதம். சும்மா படிப்பது வேறுவிதம்

இந்த சும்மா வாசித்தல்தான் முக்கியம். தப்பும் தவறுமான மொழியில் வெற்று அரட்டைக்காக எழுதப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் படிக்கலாகாது என்ற என் தீர்மானத்தின்படி
சமீபத்தில் ஒரு நல்ல நூல் படித்தேன். வளமான வாழ்வின் எட்டு தூண்கள் ... ஜேம்ஸ் ஆலன்
பிறந்து விட்ட அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ முடியும். ஆனால் முடிவதில்லை..வளமான வாழ்க்கைக்கு எட்டு விஷயங்கள்தான் அடிப்படையானவை என்கிறார் இவர்.

சுறுசுறுப்பு , பேச்சில் செயலில் அளவோடு இருத்தல் , தனக்கு உண்மையாக இருத்தல் , ஒரு முறைமையை உருவாக்கி அதை கடைபிடித்தல், பரிவு , அக்கறை , சுயநலமின்மை , தன்னை நம்பி செயல்படுதல் ஆகியவை அவர் சொல்லும் எட்டு தூண்களாகும்

இவை அனைத்தும் " அதுதான் எனக்குத் தெரியுமே " வகையிலான எளிதானவைகளாக தோன்றினாலும் அவற்றை நாம் கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை

அளவுக்கு அதிகமாக செல்போனை முகநூலை பயன்படுத்துதல் , தேவைக்கு அதிகமாக கருத்து ஃசொல்லல் , பேசுதல் போன்ற அனைத்துமே நம் இயல்பாகிவிட்டன. இது தவறு ( இரண்டாம் தூண் )

யாராவது வந்து செய்யட்டும் என நினைக்காமல் முதல் அடியை நாம் எடுத்து வைக்க வேண்டும். செய்வதில்லை

தெரிந்தே அநீதியை ஆதரித்தல் , தெரிந்தே நேரத்தை வீணடித்தல் நம்மிடம் உள்ளன ( 3)

ஒரு நாளில் இவ்வளவு நேரம்தான் செல்போன் , டிவி பயன்படுத்தலாம் , ஒரு மாதத்தில் இத்தனை நூல்கள் படிக்க வேண்டும் , இத்தனை சொற்கள் கற்க வேண்டும் போன்ற இலக்குகள் நிர்ணயித்து இருக்கிறோமா

இப்படி பல கேள்விகளை நம்முள் எழுப்புகிறது இந்த நூல்Thursday, February 13, 2020

புத்தர் குறித்த புதிய வெளிச்சம் . புத்தக பார்வை

நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை
 நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
 நடுவு நின்றார் நல்ல தேவருமாவார்
 நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே'

என்கிறார் திருமூலர்

வெற்றி தோல்வியை சமமாக எடுத்துக்கொள் என்கிறது கீதை

புத்தத்தின் வெகு ஆதாரமான கோட்பாடு இந்த நடுநிலைதான்.

இதை அ. மாரக்ஸ் எப்படி விளக்கப்போகிறார் என்ற ஆர்வத்துடன் அவரது புத்தம் சரணம் நூலைப் படிக்க ஆரம்பித்தேன்

கீதை , சைவ சித்தாந்தம் , வைஷ்ணவம் போன்றவற்றிலும் புத்தத்திலும் இருக்கும் பொது அம்சங்களை அவர் எழுதினால் ஏமாற்றமாக இருக்கும். காரணம் , அப்படி எழுத அவர் தேவையில்லை , இந்து மதம் என்பது பார்ப்பன மதம் , தீங்கான மதம் என்பது,அவர் வாழ்நாள் முழுக்க சொல்லிவரும் விஷயம். அதிலிருந்து அவர் பிறழ முடியாது.

இந்து மதத்தை முழுக்க முழுக்க திட்டிவிட்டு புத்தத்தை வானளவு புகழ்ந்தால் நடுநிலை என்பது அடிபடும். இதை எப்படி கையாள்வார் என படிக்க ஆரம்பித்தால் சுவையான ட்விஸ்ட்;
தன் கொள்கைக்கு பாதிப்பின்றி நடுநிலையை காப்பாற்றியுள்ளார்

புத்தம் எப்படி எல்லாம் இந்து மதத்தில் இருந்தும் மற்ற மதங்களில் இருந்தும் வேறுபடுகிறது என விளக்குகிறார்

இந்து மதத்தின் குறைகளாக , கீதையின் குறைகளாக தன் புரிதல்களைச் சொல்கிறார்

அதனோடு சேர்த்து , பவுத்தம் செய்த சமரசங்களையும் சொல்வதுதான் அவரது அறிவு நாணயம். வெகு அழகு

புத்தர் உட்பட பலரும் புலால் உண்பவர்கள் என்ற தகவல் பலருக்கு ஆச்சர்யமளிக்கலாம்

எல்லோருள்ளும் உறைவது ஆன்மாதான் , எனவே அன்பு செலுத்து என்ற வாதத்தைவிட உனக்கு ஒரு சுயம் இருப்பதுபோல பிறருக்கும் இருக்கிறது. எனவே உன்னை பிறர் எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறாயோ அப்படி பிறரை நடத்து என சொல்வதுதான் அறிவுப்பூர்வமான செயலாக இருக்க முடியும் என புத்தர் வழியில் விளக்குகிறார்

புத்தர் இளவரசரா , அரண்மனைவாசியா ..  ஏன் துறவறம் மேற்கொண்டார் போன்றவற்றை இவர் விளக்குவது நமது பொதுவான அறிதல்களை உடைத்து தகர்க்கிறது

புத்தம் குறித்தும் ஆன்மிகம் குறித்தும் நல்லதொரு அறிமுகம் தரும் நல்ல நூல்

புத்தம் சரணம்  .. எழுதியவர் அ மாரக்ஸ்

Tuesday, February 11, 2020

இணைய எழுத்தாளர்களின் முன்னோடி . ஆர்னிகா நாசர்

சுஜாதா ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்.

 " ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். சிலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னருகே வந்து கேட்டனர் " நீங்கள் சுஜாதாதானே ?"  " தான் " என்றேன்


ஆமாம். நான் சுஜாதாதான் என எழுதுவதற்குப்பதிலாக  " தான் " என ரத்தின சுருக்கமாக எழுதுகிறார்

தொலைபேசியில் பேசினேன் − தொலைபேசினேன்,   அன்பளிப்பு வழங்கினேன் − அன்பளித்தேன்   என்றெல்லாம் விளையாட்டாக எழுதியது அன்று பெரிதும் ரசிக்கப்பட்டது..  சில ஆங்கில எழுத்தாளர்களின் பாணியை தமிழுக்கு அறிமுகம் செய்ய நினைத்து அப்படி செய்தார். மற்றபடி அவரது பலம் என்பது அந்த வார்த்தை விளையாட்டுகள் அன்று. அவரது அறிவாற்றல் , தேடல் , தமிழறிவு என அவரது வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு.

ஆனால் சுஜாதா போல எழுதுவதாக நினைத்துக் கொண்டு , சவரித்தேன் , பைக்கினேன் என்றெல்லாம் பலர் எழுதியதுண்டு. அதன்பின் அது வழக்கொழிந்தது

இணைய வருகையால் பலர் சுஜாதாவை புதிதாக படிக்க ஆரம்பித்ததன் விளைவாக மீண்டும் அந்த  சுஜாதா நடை புழக்கத்துக்கு வந்தது.  பல இணைய எழுத்தாளர்களிடம் இதைக் காணலாம்

 வணிகப்பத்திரிக்கை எழுத்தாளரான"ஆர்னிக்கா நாசரின் எழுத்துகளைப் படிக்கும்போது அவர் இந்த இணைய யுகத்தில் தன் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்து இருந்தால் இணைய பிரபலமாக உருவாகி அப்படியே இலக்கிய எழுத்தாளர் என்ற அடையாளத்தை பெற்றிருப்பார் என தோன்றியது..  சூரியனித்தேன் போன்ற சுஜாதா பாணி இணைய எழுத்துகளுக்கு இவர்தான் முன்னோடி

ஆர்னிகாவும் 1001 ஆவிகளும் என்ற அவர் நூலை படித்தேன்
சற்று வித்தியாசமான நூல்.  ஆவிகள் பற்றி மட்டும் எழுதாமல் தன் வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதி  தன் வாழ்க்கையில் ஆவிகளின் பங்களிப்பு குறித்து சிறப்பாக எழுதியிருக்கிறார்;
பிரபல சினிமா நிறுவனம் இவரை ஏமாற்றியது , பாலகுமாரன் கொடுத்த டிப்ஸ் , லாசரா , பகோபி , ராஜேஷ்குமார் போன்றோருடனான அனுபவங்கள் ஆகாயவற்றை பேய் அனுபவத்துடன் கலந்தது அருமை

இலக்கிய பதிப்பகங்கள் சில வெளியிடும் பல்ப் எழுத்துகளை ஒப்பிட்டால் இதை அற்புதமான நூல் என்றே சொல்ல வேண்டும்


Sunday, February 9, 2020

மோகவாசல் .. இயல்பான குரல்

அரசியல் என்பது திரள்களுக்கானது. இலக்கியம் என்பது திரள்களை உடைப்பது.

இரண்டுமே தேவைதான். தேச விடுதலை , சமூக நீதி , மொழியுரிமை போன்ற பல விஷயங்கள் அரசியல் நடவடிக்கைகளால்தான் சாத்தியமாகின. திரளின் ஆற்றல் மதிப்பு மிக்கது. ஆனால் இலக்கியத்தில் திரள் அழிந்து தனித்துவம் நிற்க வேண்டும்

இன்றைய இணைய உலகில் எல்லோரும் ஒற்றைத்திரளின் சிறு துளிகளாக மாறி விட்டனர்

அதே சமூகபார்வைகள் , மொக்கையான தமிழ் நடை , காதல் குறித்த பம்மாத்துகள் , போலி பெருமிதம் , மூத்த எழுத்தாளர்களுக்கு இலவச ஆலோசனைகள் என ஒரு டெம்ளேட்டிலதான் அனைவரும் எழுதுகின்றனர்

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதும் , அதை வெளிப்படுத்துதலும் பிரத்யேகத்தன்மையுடன் இருப்பதுதான் இயல்பு. இதை எழுத்து பிரதிபலித்தால் அது வெற்றி பெற்று விட்டது என பொருள். ஆனால் நம் ஆட்கள் சாரு , ஜெ , எஸ் ரா , சுஜாதா போல எழுதுவதில் சுகம் காணுகிறார்கள்

இணைய பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்களும் உண்டு.

பிரத்யேக பார்வை , பிரத்யேக சொல்லும் முறைக்கு உதாரணமாக இயம்பும்வகையில் மோகவாசல் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு படிக்க நேர்ந்தது

ஈழ எழுத்தாளர் ரஞ்சகுமார் படைப்பில் 1989ல் வெளியான தொகுப்பு

சற்றும் பிரச்சார நெடியின்றி கலாப்பூர்வமாக ஈழப்போர் காலகட்டம் எளிய குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பை ஒரு கதையில் சொல்கிறார். அதே நேரத்தில் , சிங்கள தீவிரவாத இயக்கத்தின் செயல்பாட்டையும் கபரகொய்யா என்ற சிங்களமண்ணில் வாழும் முதலைவகை உயிரியை குறியீடாக வைத்து சொல்கிறார்

பெண்ணின் ஆளுமையை , ஆற்றலை , பலவீனத்தை அரசி என்ற கதையில் படம் பிடிக்கிறார்

காமத்திலிருந்து கடவுளுக்கு என்றொரு கருதுகோள் உண்டு. காமத்தின் வாசலை கடந்து விட்டால் , காட்சிதர கடவுளோ அல்லது ஞானமோ காத்துக்கிடக்கவில்லை. அப்படி எல்லாம் ஏமாற்றிக் கொள்ள தேவையில்லை என ஒரு கதையில் ஓஷோவையும்,அவர் வழித்தோன்றல்களான கார்ப்பரேட் குருக்களையும் மறை முகமாக சாடுவது போல ஒரு கதை . அற்புதம்

இலங்கைத்தமிழ் வெகு சுகம்.

தங்கை எங்கே என்ற கேள்விக்கு உங்கேதான் எங்கேயாவது போயிருப்பாள் என பதில் சொல்கிறார் அம்மா.

உங்கே என்ற அழகான வார்த்தையை தமிழகம் இழந்து விட்டாலும் ஈழ இலக்கியத்தில் வாழ்கிறது

நூல்  .. மோகவாசல்

எழுதியவர்   .. ரஞ்சகுமார்Saturday, February 8, 2020

காக்டெய்ல் நாவல் −ஒரு பார்வை


தமிழில் பலரும் வலைப்பூக்கள் எழுத ஆரம்பிக்கையில் அது சிற்றிதழ்களின் நீட்சியாக , கையெழுத்துப் பிரதிகளின் நவீன வடிவமாக பாரக்கப்பட்டது. பல நல்ல எழுத்துகளை இணையத்தில் பாரக்க முடிந்தது
அதன்பின் முகநூல்  , வாட்ஸ் ஆப் என தொழில் நுட்பம் பரவலான பின் எழுத்தால் வளர்வதை விட லைக்குகள், கமெண்டுகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு , அதன் மூலம் வளர்வது சுலபம் என கண்டு கொண்டனர். அதற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் , வியந்தோதல்கள் , தாக்குதல்கள் போன்ற அரசியல்களால் தரம் வீழ்ந்தது

இந்த வீழ்ச்சிக்கு முன் இணையத்தின் பொற்கால மன்னர்களில் ஒருவராக இருந்தவர் சுதேசமித்திரன். பல பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். விகடன் சிறுகதை போட்டியில் 20,000 ரூபாய் பரிசு வென்றிருக்கிறார். சிற்றிதழ்கள் பரிச்சயம் உடையவர் இவர்

இவர் எழுதிய நாவல்களில் ஒன்று காக்டெய்ல்.  ஆரம்பம் , கதாபாத்திரம் அறிமுகம் , அடுத்தடுத்த சம்பவ தொடர்ச்சிகள் ,முடிவு என்ற சம்பிரதாய வடிவத்தில் இல்லாமல் நான்−லீனியர் வகையில் எழுதப்பட்ட நாவல் இது.

இப்படி எழுத  வேண்டுமானால் நல்ல மொழி ஆளுமை , கற்பனைத்திறன், வாழ்க்கை அனுபவங்கள் , அவதானிப்பு ஆற்றல் என பல விஷயங்கள் தேவை. இவை  இல்லாமல்தான் பல நான்−லீனியர் எழுத்துகள் சும்மா விளையிட்டுக்கு எழுதிப் பாரப்பது போல போலியாக இருக்கின்றன

காக்டெய்ல் நாவல் அற்புதமான நடையில் , மொழியில் மிளிர்கிறது

பொருந்தா திருமணம் , கட்டற்ற காமம் , காதல் , பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு கொண்டுபோக காசு சேர்க்கும் தொழிலாளி , முதன்முதலாக மருந்து அருந்தச்செல்லும்போது ஏற்படும் உணர்வு , கதை பிரசுரமானால் ஏற்படும் உணர்வு என ஒவ்வொரு பக்கத்திலும் உண்மை சுடர்விடுகிறது. சமகாலத்தை ஆவணப்படுத்துவது நல்ல எழுத்தின் கூறுகளில் ஒன்று. அங்கு ஜெயிக்கிறது நாவல்

ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும் தொடர்பில்லை ,அடுத்து என்ன என்ற பதைபதைப்பு இல்லை , கதைக்கரு கதையின் மையம் என இல்லை. ஆனால் ஆரம்பம் முதல் முடிவுவரை நல்ல சுவாரஸ்யம்

காபி கிருஷ்ணன் போன்ற பல இலக்காய ஆளுமைகள் நாவலில் வருகிறார்கள்

சிற்றிதழ் மரபில் வந்த கடைசி சில எழுத்துகளில் இதுவும் ஒன்று. தமிழின் நூறு நல்ல நாவல்கள் என பட்டியலிட்டால் கண்டிப்பாக இதை சேர்க்கலாம்

Friday, February 7, 2020

மரணத்தில் விளைந்த அன்பு மலர்

சில நாட்களுக்கு முன் ப.க பொன்னுசாமி அவர்களின் கட்டுரை ஒன்றை படித்தேன். அவரது நூல்கள் பலவற்றின் ரசிகன் என்றாலும் இந்த கட்டுரையை குறிப்பிடக் காரணம் இருக்கிறது

அந்த கட்டுரையின் சாராம்சம் இதுதான்.

அவர் காரில் பயணிக்கையில் கார் முன்கண்ணாடியின் வைப்பரில் ( wiper) ஒரு வண்ணத்துப்பூச்சி சிக்கிக் கொள்கிறது. காரை ஓரம் கட்டி பாரத்த டிரைவர் அது இறந்து விட்டது என்கிறார்.அதை சற்று கூர்ந்து கவனிக்கையில் உயிர் இருப்பது தெரிகிறது. முதலுதவி செய்து அது மீண்டும் உற்சாகமாக பறப்பதை கண்குளிர பார்த்த பின் கிளம்புகிறார். ழசாவில் இருந்து தப்புதலைவிட உயிருக்குப் போராடும் சித்தரவதையில் இருந்து காப்பாற்றிய நிம்மதி கிடைக்கிறது

1996ல் தீபாவளியை பெற்றோர்களுடன் கொண்டாட ஹாஸ்டலில் இருந்து கிளம்பவிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட முதலாமாண்டு கல்லூரி மாணவன் நாவரசு  , 2019ல் தீபாவளி கொண்டாட முடியாமல் ஆழ்துளை கிணற்றில் சிக்கி , மரண வேதனை அனுபவித்து மரணமடைந்த பச்சிளம் பாலகன் சுஜித் ஆகியோர் அனுபவித்த வேதனையை அந்த பட்டாம்பூச்சியின் மரண போராட்டம் அவருக்கு நினைவுபடுத்துகிறது

பிறர் வேதனையை புரிந்து கொள்ள கோருகிறது கட்டுரை

என்ன விஷயம் என்றால் , ஹாஸ்டலில் இருந்து தன் ஆசை மகனின் வருகைக்கு காத்திருந்த வேளையில் அவன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டான் என்ற சேதி கேட்டு துடித்துப்போன தந்தை அவர்தான்.  என் மகன் எப்படி துடித்தோனோ என கதறிய மனைவிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி கதறியவர் இவர்

இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின்மீது அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் அது நியாயம். ஆனால் தன் மகனுக்கு கிடைக்காத அந்த பரிவு பிறருக்கு கிடைக்க வேண்டும் என நினைத்ததுதான் அவரை மாமனிதனாக்கிவிட்டது

அறக்கட்டளை , பல நூல்கள் என அன்பை பரப்பிவரும் அவரது அன்புமழையின் ஒரு துளி என்ற வகையில் அந்த கட்டுரை என்னை நெகிழ்த்தியது

நாவரசு

ஜான் டேவிட்Wednesday, February 5, 2020

வண்ணதாசனுக்கு சாதீய அணுகுமுறை தேவை

பிற தேச நூல்களைப் பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

தமிழில் ஏன் அந்த தரத்தை எட்ட முடியவில்லை என்பது ஆரம்ப நிலை வாசகனுக்கு ஒரு ஏக்கமாக இருக்கும்

அதற்கு முக்கிய காரணம் விற்பனைதான்.  நூறு ரூபாய்க்கு விற்கப்படும் நூலை ஆயிரம் ரூபாயக்கு வாங்க வாசகன் தயார் என்றால் உயர் ரகம் சாத்தியம். அல்லது லட்சக்கணக்கில் −குறைந்தது ஆயிரக்கணக்கில் − விற்றாலும் உயர் ரகம் சாத்தியமே.

இதைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார்.  கலாப்ரியாவின் வேனல் நாவல் உள்ளடக்கம்தான் இலக்கிய மதிப்பை தீர்மானிக்கும். ஆனால் வடிவமைப்பும் நன்றாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அதிகம் விற்பனை ஆக வேண்டும் என நூலுக்கு ஆக்கப்பூர்வமான அறிமுகம் கொடுத்தார்.அதிகளவில் வாசகர்கள் வாங்கினால் சாதாரண விலைக்கே செம்பதிப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும்


சாருவின் ஜீரோ டிகிரி நாவலும்கூட மலிவுவிலைப்பதிவு வந்துள்ளது.  அதன்பிறகு சிறப்புபதிப்பும் வெளிவந்துள்ளது.  ஜெயமோகனின் வெண்முரசு மலிவுப்பதிப்பாக கிடைத்தாலும் விலைகூடுதலாக இருந்திலும் செம்பதிப்பை தேடிச் சென்று வாங்குவோர் பலர்

கெட்டி அட்டை , தரமான தாள் , வண்ணப்படங்கள் என செம்பதிப்பின் அனுகூலங்கள் ஏராளம்.

ஒரு வாசகனின் பார்வையிலும் , எழுத்தாளனை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சாரு சொன்னது கலாப்ரியாவுக்கு சாதகமானதுதான் என்பதை வண்ணதாசன் உணர வேண்டும்.


சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய கவுரவத்துடன் நடத்தாததாலும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ராயல்ட்டியை கேட்டால் , அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துவதாலும் எழுத்தாளர்கள் அந்த பதிப்பகங்களை விட்டு விலகுகின்றன். இதனால் அந்த பதிப்பகங்கள், வாட்சப் வீரர்களின் மெசேஜ்கள் , முகநூல் பதிவுகள் , முதிர்ச்சி அற்ற எழுத்துகள் போன்றவற்றை எந்த பிழை திருத்தமும் இன்றி வெளியிட்டு இலக்கியப்பணி ஆற்றுகின்றன. இவற்றை அவரவர்களின் நண்பர்கள் வாங்கிப் படிக்கின்றனர்

பொதுவான வாசகன் , இளைஞன் இதனால் மனவிலக்கம் அடைந்து ஆங்கில நூல்கள்பால் செல்கிறான். அவர்கள் எதிர்பார்க்கும் தரம் தமிழில் இருப்பதில்லை. உள்ளடக்கத்தை விடுங்கள்.. பிழையற்ற வாக்கியத்தைக் காண்பதே துர்லபமாக இருக்கிறது

தமிழ் வாசிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் வழக்கம் என்றாகி வருகிறது.  வணிக இதழ்களைக்கூட இன்றைய பள்ளி , கல்லூரி மாணவன் சீந்துவதில்லை

அராத்து போன்ற சில எழுத்தாளர்கள் தமது நூல்களை எழுதுவதற்கு செலவிடும் நேரத்தை விட , அவற்றை செப்பனிட அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஈகோ பாராமல் மெனக்கெடுகிறார்கள். ஜீரோ டிகிரி பதிப்பகம் போன்ற சிலர் தரமான கட்டமைப்பில் நூல்களை வெளியிடுகின்றனர்.  ராயல்ட்டியில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் நூல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்

இணையகூச்சல்களுக்கிடையே வேனல் போன்ற தரமான ஆக்கங்கள் இளைஞனை எட்டுவதில்லை. அப்படி அனைவரையும் அடைவது தமிழுக்கு நல்லது என்பதைத்தான் சாரு சொன்னார்; அதற்கு நூலில் கட்டுமானமும் அவசியம்.  நூலில் இலக்கிய மதிப்புக்கு அதன் உள்ளடக்கமே போதும். ஆனால் பரவலாக வாசகனை அடைய நூல்,வடிவமும் முக்கியம்
இதில் ,வண்ணதாசன் சாதீய நிலைப்பாடு எடுத்திருப்பது நல்லதுதான்.

தமிழ்ச்சாதி , எழுத்தாளன் சாதி என்ற சாதீய சார்பு எடுத்து , சாருவுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம்


லாரல் ஹார்டி மற்றும் விஸ்வநாதன் ராமமூர்த்தி

உலக சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பெயர்(கள்) லாரல் ஹார்டி.  இரு மாபெரும் கலைஞர்கள் , இணைந்தே பேர் பெற்றனர்.

புகழின் உச்சியில் இருந்தபோது பிரிநகதனர். ஏன் பிரிந்தனர் என்பவையேல்லாம் நூல்களாக வெளிவந்துள்ளன

அதன் பிறகு ரசனை மாற்றங்களால் , புது வரவுகளால் இவர்கள் செல்வாக்கு குறைந்தது.  மீண்டும் இணைந்து செயல்பட்டனர்.  மேடை நிகழ்ச்சிகள் , வெளி நாட்டுப்பயணங்கள் என தங்களது பிராண்ட் இமேஜை வைத்து சமாளித்தாலும் பழைய செல்வாக்கு கிட்டவில்லை

உச்சத்தில் இருந்துவிட்டு இப்படி ஒரு கால"கட்டத்தை சந்தித்த போது அவர்கள் உணர்வுகள் எப்படி இருந்தன , பிரிவு குறித்த கசப்புகள் இருந்தனவா , ஈகோ பிரச்சனை வந்ததா , தொழிலொத்தாண்டி தனிப்பட்ட நட்பு இருந்ததா போன்ற விஷயங்களை கண் முன் காட்டும் திரைப்படம்

Stan & Ollie

  முழு வாழ்க்கை வரலாறு அன்று. கடைசிக்கால வாழ்க்கை மட்டும்

பல நூல்களும் இவர்களது நட்பு சண்டைகள் குறித்து வந்துள்ளன

நம்மூர் விஸ்வநாதன் − ராமமூர்த்தி குறித்து இப்படி ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும் ?

அவர்களுடன் பழகியவர்கள் உயிருடன் இருக்கும் இந்த காலகட்டத்தை தவற விட்டுவிட்டு பிறகு வருந்தி பயனில்லை

Tuesday, February 4, 2020

அப்துல்கலாம் முதல் அசோகமித்திரன் வரை .. நூல்,அறிமுகம்

நல்ல கவிதைளுக்கான  தேடல் சுவாரஸ்யமானது.  ஆயிரம் மொக்கைகளுக்குப்பின்பே நல்ல கவிதை ஒன்று கிடைக்கும். ஆயிரம் மொக்கைகளைப்படித்த களைப்பை போக்கும் எனர்ஜி அந்த ஒற்றைக்கவிதையில் இருக்கும். எனவே மீண்டும் உற்சாகமாக தேடலை ஆரம்பிப்போம்

நெல்லை முத்துவின் " சில சந்திப்புகள் , சில பதிவுகள் " நூலை அதில் இருக்கும் ஹைக்கூக்களுக்காகவே வாங்கினேன். நூலாசிரியர் பல இலக்கிய ஆளுமைகளுடன்  பழகியவர் , அப்துல் கலாமின் நண்பர் , பல விருதுகளைப்பெற்ற எழுத்தாளர் என்பதைவிட அவரது,ஹைக்கூ அலசலககளுக்காகவே இதை படித்தேன்

கநாசு , வல்லிக்கண்ணன் , திகசி , பொன்னீலன் , ஆ மாதவன் , சுந்தர ராமசாமி , நீல பத்மநாபன் , அசோகமித்திரன் என பலரது லிகழ்ச்சிகள் , பேட்டிகள் , சிறுகதை அலசல்கள் என நல்ல இலக்கிய விருந்து. அப்துல் கலாம் குறித்த கட்டுரை நேரடி அனுபவத்தில் மிளிர்கிறது

தற்போதைய மைக்ரோ கதைகள் , குறுங்கவிதைகளுக்கு என வெகு ஜன இதழ்கள் ஒரு பார்முலா வைத்துள்ளன

கல்வி , கண்  போன்றது
போஸ்டர் ஒட்டினான்
குழந்தை தொழிலாளி !!

உலகை காக்கும்
சாமி சிலைக்கு
போலிஸ் காவல்!!!

நாத்திக  தலைவர்
நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்
சகுனம்  பார்த்து !!


இப்படி எழுதிக்கொண்டே போகலாம். பத்திரிக்கைகளும் மனசாட்சி  இன்றி பிரசுரிக்கின்றன


இலக்கிய இதழ்கள் செய்வது வேறு வகை காமெடி

இந்த சூழலில் , சில அற்புதமான ஹைக்கூக்களை மேற்கோளாக அவர் சுட்டியிருப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது

கோமயாஷி இஸ்ஸா"வின் ஹைக்கூ ஒன்று..


எனக்கொரு காலம் வரும்
அப்போது விருந்துக்கு அழைப்பேன்
வந்துவிடுங்கள் ஈக்களே.


படித்ததும் ஒரு காட்சி , ஒரு வாழ்க்கை , ஒரு மனிதனின் முழுச்சித்திரம் கண் முன் தெரிகிறதல்லவா.

ஷிகி என்பவரின் ஜப்பானிய ஹைக்கூ

கடும்கோடை
சுடுமணலில்
நமது கால்தடங்கள்

என்ன ஒரு விஷுவல் கவிதை !!இன்னொரு ஹைக்கூ.

மலைச்சிகரத்தின் உச்சியில்
நிலவின் விருந்தாளியாக
இன்னும் ஒருவர்


இதை வைத்து ஒரு குறும்படமே எடுத்துவிடலாம் போல..

பிரேம்ரமேஷ் , ஜெயமோகன் , சாரு நிவேதிதா , பிரம்மராஜன் என பல்வேறு ஆளுமைகள் நூலில் வருகின்றனர்.இதில் வரும் என் ஆர் தாசன் குறித்து அநேகமாக நம் வலைத்தளத்தில் மட்டுமே பார்க்க முடியும் என நினைக்கிறேன் http://www.pichaikaaran.com/2020/02/blog-post_4.html?m=1

இது வருத்தம் தரும் சூழல்

முன்னோடிகளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் ஈதவும்

ஒரே அமர்வில் படிக்கக்கூடிய சுவையான நூல்

ஐந்திணைப் பதிப்பக வெளியீடுSaturday, February 1, 2020

மல்ட்டி டாஸ்க் என்ற, ஆபத்து


ஷேர் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன். டிரைவர் யாருடனோ அலைபேசியில் பேசியபடி ஓட்டிக்கொண்டிருந்தார்

" ஆமாண்டா மாப்ள.  பணம் கைக்கு வரல.  ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம வண்டிய ஆக்சிடெண்ட் பண்ணிட்டு சாகலாம்போல இருக்கு " என பேசியபடாயே அவ்வப்போது பயணிகளை ஏற்றிக் கொள்வது , இறக்கி விடுவது , காசு வாங்கி சில்லறை கொடுப்பது , பாட்டு கேட்பது என பல செயல்களை செய்து வந்தார்

இவர் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் நல்ல ஓட்டுனர் இல்லை. அவர்"கவனம் தன் பணியில் இல்லை என பயணிகள் அனைவருக்கும் தெரிந்து இருந்தது.

ஆனால் அவருக்கு அது தெரியவில்லை. ஒரே நேரத்தில் எத்தனை வேலை செய்கிறோம் என பெருமையாகவே தன்னை நினைத்திருப்பார்;
மலட்டி டாஸ்க் என்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் வேலை

வாசித்த நூல்களில் தவறாக ஏதேனும் பேசி விட்டு , எத்தனையோ புக்ஸ் படாக்கிறோம். மறந்துருச்சு என குற்ற உணர்வின்றி சொல்லி தப்பிக்கலாம்.

வள்ளுவம் , அண்ணாயிசம் , பெரியாரிஸ்ட், கம்ப ராமாயணம் என குறிப்பிட்ட நூல்களில் நிபுணர்களாக அறியப்பட்டால் அந்த தப்பித்தல் சாத்தியமில்லை. எனவேதான் மல்ட்டி டாஸ்க் என்ற முகமூடி தேவைப்படுகிறது

எத்தனை என்பதல்ல  எப்படி என்பதே முக்கியம்.  எத்தனை நூலகள் படிக்கிறீர்கள் என்பதல்ல. ஒரே நூல் என்றாலும் அதை எப்படி படித்தீர்கள். எந்த அளவு ஆழமாக படித்தீர்கள் என்பதே முக்கியம்

செய்யும் பணி மட்டுமல்ல. சாப்பிடுவது , உரையாடுவது போன்ற அன்றாட செயல்களைக்கூட முழு கவனத்துடன் செய்ய வேண்டும். டிவி பாரத்துக் கொண்டோ , படித்துக் கொண்டோ சாப்பிடுவது தவறு என உணர வேண்டும்

எழுத்தை தவமாக நினைத்து தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்காக ஈந்த சி சு செல்லப்பா போன்றவர்களால்தான் தமிழ் இலக்கியம் இன்றுவரை வாழ்கிறது

ஆனால் தமிழ்மீது எந்த மரியாதையும் இல்லாமல் ,  டிவி பேச்சு , தெருமுனை அரசியல் மேடை போன்ற அவர்களது தலையாய பணிகளுக்கிடையே எழுத்தை ஓர் ஊறுகாயாக பயன்படுத்தும் பதிப்பகங்களாலும் எழுத்தாளர்களர்களாலும் தமிழ் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது

வானமே எல்லை திரைப்படமும் , நிஜ ஹீரோவும்

தன் மகன்  ஒரு பெண்ணை விரும்பாத தந்தை அதிரடியாக  அவள்  தாயை மணந்து விடுகிறார்.
இப்போது காதலியின் தாய் , தனக்கும் தாய் முறை என்பதால் , காதலி தனக்கு சகோதரி முறை ஆகி விடுகிறாள் . இப்படியாக காதலை முறியடிக்கிறார் தந்தை என்பது வானமே எல்லை படத்தில் பாலச்சந்தரின் சித்தரிப்பு

தக்காளி , நீ எப்ப இவ்வளவு கேவலமா சிந்திச்சியோ இனி நீ என் அப்பா இல்லை. உன் திருமணம் என் காதலை கட்டுப்படுத்தாது என மகன் சொல்வது போல காட்சி வைத்திருந்தால் மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.

ஆனால்"மக்கள் அன்று ஏற்காத வேறொரு கதையை துணிச்சலாக எழுதினார் ஜெயகாந்தன் .  அவர் எழுதிய விஷயம் இன்று இயல்பாகி விட்டது.


அது போல பாலச்சந்தரின் கதைக்கு நாம் கொடுக்கும் கிளைமேக்ஸ் ஏற்கப்படும் காலம் வர வேண்டும்.

இன்றைய செய்தி தாளில் ஒரு செய்தி. மகன் காதலை அப்பா ஏற்கவில்லை. ஆனால் ஏற்பது போல நடித்து அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார்

நடந்ததை அறிந்த மகன் , இனியும் அந்த மிருகம் தன் தந்தை இல்லை என முடிவெடுத்து , அவனை அடி வெளுத்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளான்(ர்)

தந்தை என்ற மிருகம் செய்த இழி செயலுக்கு அவன்தான் காலம் முழுக்க அழ வேண்டும் , தன் காதலி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என தீர்மானித்து தன் காதலியை உடனடியாக மணந்துள்ளார் அந்த இளைஞர்..  ஊரே அவர்களை வாழ்த்தியது.

ஜெயகாந்தனின் எழுத்தால்தான் சமூக மாற்றம் ஏற்பட்டது என சொல்ல முடியாது.  ஆனால் அவர் எழுத்தும் ஒரு காரணம் எனலாம்

அதுபோல  எழுத்தை தவமாக நினைத்து எழுதினால்தான் நல்ல மாற்றங்களை காண முடியும்

கீழ்த்தரமான எழுத்தை எழுதலும் தீது , படித்தலும் தீது , அத்தகையோரிடம் உறவாடலும் தீது


ஆன்மிக கண்காட்சி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட ஆன்மிக கண்காட்சிக்கு இந்த ஆண்டும் சென்றேன்.

அன்றாட வாழ்வுக்கு பயன்படும் பல பொருட்கள் , அரிய நூல்கள் என வாங்கினேன்.  பெண்களை கவுரவிப்பதுதான் இந்த ஆண்டு கண்காட்சியின் theme. இப்படி theme அமிப்படையில் புத்தக கண்காட்சிகளையும் முயன்று பார்க்கலாம்.  பார்வையாளர்களில் இளம் தலைமுறையினரே அதிகம்

நல்ல அனுபவம்


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா