Thursday, September 19, 2013

முழுமையை நோக்கி ஒரு பயணம்- ஸ்வீடன் இயக்குனரின் சூப்பர் திரைப்படம்


  நம் ஊரில் ஒரு நம்பிக்கை உண்டு. நம்மை கண்ணீர் விட்டு அழ வைக்கும் படங்கள்தான் நல்ல படங்கள். அழ வைப்பவர்தான் நல்ல இயக்குனர். அழ வைப்பவர்தான் நல்ல நடிகர்.

வெளி நாடுகளில் இந்த நம்பிக்கை இருக்கிறதா? உலகளவில் போற்றபடும் ஸ்வீடன் இயக்குனர் இங்மர் பெர்க்மன் படம் ஒன்றை பார்த்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

குடும்பம் , உறவுகள் , செண்டிமெண்ட் , ஆன்மிக தேடல்  எல்லாம் நம் ஊரில்தான் செல்லுபடியாகும். வெளி நாடுகளில் இதற்கெல்லாம் மதிப்பில்லை என்று நினைத்தவன் நான். நம் ஊரில் ஆனால் இந்த உறவு சிக்கல்களை , இதன் நுட்பங்களை செண்டிமெண்ட் குப்பைக்குள் மூழ்கடித்து படம் எடுப்பார்கள்.. அல்லது காதல்தான் உலகில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல படம் எடுப்பார்கள்.

நம்மை விட நாகரீக வளர்ச்சியிலும் , பொருளாதாரத்திலும் முன்னேறியுள்ள நாடுகள் உறவுகளை , சுய தேடலை மதிப்பதில்லையா என்ற கேள்வியுடன்  Wild strawberries படம் பார்க்க ஆரம்பித்தேன்.

முதல் காட்சியே வெகு அழகாக இருந்தது. கறுப்பு வெள்ளைப்படங்களுக்கே உரிய துல்லியம். ஒளியும் இருளும் அழகாக படம்பிடிக்கப்பட்ட முதல் காட்சி. 78 வயது முதியவர் ( டாக்டர் போர்க் )  தன் அலுவலக அறையில் அமர்ந்து இருக்கிறார். அவரை கவுரவிக்க இருக்கிறார்கள் . எனவே நீண்ட பயணதுக்கு தயார் ஆகிறார். அவருக்கு மகனும் மருமகளும் 96 வயது தாயாரும் உண்டு .  முதிய பணிப்பெண் அவரை கவனித்துக் கொள்கிறார்.
படம் யாரைப்பற்றியது , முக்கிய கதாபாத்திரங்கள் யார் என்பது குறித்து சில வினாடிகளில் அறிந்து கொள்கிறோம். அவர் செல்ல இருக்கும் பயணம் முக்கியமானது என்பதும் அண்டர்லைன் செய்யப்பட்டு விடுகிறது.

பயணம் செல்வதற்கு முன் அவருக்கு ஒரு கனவு வருகிறது. வித்தியாசமான கனவு. ஒரு புதிர்போல அந்த கனவு விரிகிறது.

தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. வீடுகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமே இல்லை. தெருக்கடிகாரத்தில் முள் இல்லை. அவர் தன் கடிகாரம் பார்க்கிறார். அதிலும் முள் இல்லை. சாலையில் ஒருவன் நிற்கிறான். அவனை தொடுகிறார். அவன் இறந்து விழுகிறான்.

ஒரு குதிரை பூட்டிய ரதம் ஓடி வருகிறது. அதன் சக்கரம் உடைகிறது. உள்ளே ஒரு சவப் பெட்டி. உள்ளே யார் என பார்த்தால் , உள்ளே இருப்பவர் இவர்தான்.

ஓடாத கடிகாரம் , சக்கரமில்லா வண்டி , உயிர் இல்லா உடல் , மக்கள் இல்லா சாலை போல முதுமையை இவர் உணர்கிறாரோ என நமக்கு தோன்றுகிறது.

ஆரம்பத்தில் பயணமும் , கனவும் முக்கியமாக காட்சிகளாக வருவதால் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது. ப்யணங்களின் போது  நாம் அறிந்திராத  பல புதுய பிரதேசங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. கனவின் போது  நிகழ்வதும் இதுதான்.

அது வெளி நோக்கிய பயணம். இது உள்னோக்கிய பயணம். அவ்வளவே.

இந்த இரு பயணங்களில் வழியாக அவர் தன்னை அறிகிறார் என்பதுதான் படம்.

முதுமையை அழிவின் அடையாளமாக கண்ட அவர் , கடைசியில் முதுமை என்பதை முழுமையின் அடையாளமாக காண்கிறார் என்பதைக் காட்ட கடைசியில் ஒரு கனவு காட்சி அட்டகாசமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.


வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணமும் முழுமையானதுதான். ஆனால் நாம் எதிர்காலதில் ஏதோ ஒரு கணத்தில்தான் எல்லா மகிழ்ச்சியும் இருப்பதாக நினைக்கிறோம். எதிர்காலத்தில் வாழ்கிறோம். ஒரு கட்டத்தில் இறந்த காலம்தான் இனிது என்ற எண்ணத்தை அடைந்து இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.

டாக்டர் போர்க் இறந்த காலத்தில் வாழவில்லை. இறந்த காலத்தை ஒரு சாட்சியாக பார்க்கிறார் என்பதை அழுத்தம் கொடுத்து காட்டி இருப்பார் இயக்குனர். வழக்கமாக கடந்த கால கனவின் போது , இள வயது தோற்றத்தில் காட்டுவார்கள். இதில் அப்படி இல்லை. தன் முதிய தோற்றத்திலேயே கனவுகளை காண்கிறார் டாக்டர். அப்போதைய சம்பவங்களை இப்போதைய மன முதிர்ச்சியுடன் புரிந்து கொள்கிறார்.

அதாவது கனவுகளில் இவர் தொலைந்து போகவில்லை. தன்னை மீட்டெடுத்து கொள்கிறார்.

இவருக்கு வரும் கனவுகள் ஒரே வகை கனவுகள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் கனவு , உண்மையில் நடக்க வாய்ப்பில்லாத புதிர் போன்ற கனவு. அவர் ம்னோபாவம் வெளிப்படுகிறது அதில்.

இரண்டாவது கனவு கிட்டத்தட்ட பழைய நினைவுகளை அசை போடுவது போல வருகிறது.

மூன்றாவது கனவு தன்னை எடைபோடும் சுயபரிசோதனை களம்.

கடைசி கனவில் மீண்டும் அவர் மனோபாவம் பிரதிபலிக்கிறது , முதல் கனவைப்போல.
முதலில் முதுமையை இலையுதிர் காலமாக உணர்ந்தவர் , கடைசியில் முதுமையை கனிந்து ததும்பும் முழுமையாக கருதுகிறார்.

இவர் மன மாற்றம் முன்பே நமக்கு காட்டப்பட்டு விடுகிறது.

அவருடன் அவர் மருமகளும் பயணம் செய்கிறாள். ஆரம்பத்தில் அவர் புகை பிடிக்க முனையும்ப்போது தடுத்து விடுகிறார். பெண்கள் புகை பிடித்தால் , தனக்கு பிடிக்காது என்கிறார். கடைசியில் ஒரு காட்சியில் புகைக்க அனுமதிக்கிறார்.

அவரை கனவுகள் மட்டும் மாற்றவில்லை,. ப்யணத்தில் வாழ்க்கையின் முழுமையை தரிசுக்கும் வாய்ப்பு.

மருமகள் உலகுக்கு ஓர் உயிரை கொண்டு வரும் மன நிலையிலும் , உடல் நிலையிலும் இருக்கிறாள். அங்கு ஆரம்பதை காண்கிறார் என்ரால், அவருடைய அம்மா 96 வயதில் வாழ்வின் கடைசி நிலையில் இருக்கிறாள். அதையும் காண்கிறார்.

வழியில் சேர்ந்து இளைஞர்களிடம் இளைமையையும் , மருமகள் மகனிடம் நடுத்தர பருவத்தையும் காண்கிறார்.

ஆக அவருக்கு முழுமையான பார்வை கிடைக்கிறது.

இளமைப்பருவத்துக்கே உரிய துடிப்பு , கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறும் காமெடி , யாரைக்காதலிப்பது என அந்த பெண் ஜாலியாக அலுத்து கொள்வது , அவருக்கு மலர்ச்செண்டு அழைத்து வாழ்த்துவது என அவர்கள் மூலம் ததும்பும் வாழ்க்கை அவருக்கும் மலர்ச்சியை கொண்டு வருகிறது.

இதில் நுட்பமாக காட்சிகள் ஏராளம்.

வழியில் ஒரு கணவன் மனைவியை காரில் ஏற்றிக்கொள்கிறார்கள். பாதியில் சண்டைபோட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள்.

பிறகு அவர் கனவு ஒன்றில் அந்த கணவன் வந்து அவருக்கு பரீட்சை வைத்து தண்டனை விதிக்கிறான் !!

தன்னிச்சையாக பைபிள் வரி ஒன்று நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை..

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்

இன்னொரு காட்சியில் தன் அம்மாவை காண போகிறார்,. தன் கனவில் கண்ட முள் இல்லாத கடிகாரத்தை அவள் கைகளில் பார்க்கிறார்.

இப்படி பல சுவையான அர்த்தபூர்வமான காட்சிகள்.

அவரது உள் மற்றும் வெளி பயணங்களில் நம்மையும் அழைத்து சென்று நம்மையும் சுய பரிசோதனை செய்ய வைத்து விடுகிறார் என்றால் , மிகை இல்லை.Wednesday, September 18, 2013

தமிழ் சினிமா ரசனையை ஒழித்துக்கட்டிய படத்தை திரையிட சொல்லும் அவலம் !!

1932 ல் வெளியான scareface படத்தின் ஒரு காட்சி இது. படத்தின் கதை என்ன என்பது தெரியாவிட்டால் பரவாயில்லை. வசனம் கூட தேவை இல்லை. காட்சிகளே எவ்வளவு அழகாக ஒவ்வொரு பாத்திரத்தையும் , அவற்றின் குணாதிசயங்களையும் உணர்த்துகின்றன என கவனியுங்கள்.

கொலையை கொடூரமாக காட்டி மனதை திசை திருப்பாமல் , ஓசை மூலம் அந்த கொலையை உணர்த்துவது , அது வெறும் கொலை மட்டும் அல்ல, ஒருவனது வீழ்ச்சி இன்னொருவனது எழுச்சி என்பதை உணர்த்துவது,  நாணயத்தை சுண்டி போட்டு விளையாடிக்கொண்டு இருந்து விட்டு , குறிப்பறிந்து கொல்பவனின் குணாதிசயம் என பலவற்றை கவனித்து இருப்பீர்கள். இந்த காட்சிகள் எப்படி முடிகின்றன என்பதையும் இணைப்பின் கடைசிவரை கவனியுங்கள்.

இது போல இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம்.

இது 1932 ல் வந்த படம். நம் ஊரில் அந்த கால கட்டத்தில் இப்படி காட்சி ரீதியாக ரசிக்கத்தக்க படம் எதுவும் வரவில்லை என்பதை பெரிய குறையாக சொல்வதற்கில்லை. அப்போதுதான் சினிமா வளர தொடங்கி இருந்த நிலையில் மேடை நாடகங்களின் இன்னொரு வடிவாகவே சினிமா இருந்தது. மேடை நாடகங்களில் வாய்ப்ப்பு கிடைக்காதவர்கள் , சினிமாவில் ஈடுபடுவது வழக்கம்.

கொஞ்சம் கொஞ்சமாக நிலை மாறி , சினிமா ஒரு தனி அடையாளம் பெற முயன்ற நிலையில் , பழைய ஆட்கள் அதை வசன ஊடகமாகவே வைத்து இருக்க போராடினர், இருதரப்புக்கும் போட்டி நிலவியது.

இந்த போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தது பராசக்தி. சிவாஜியின் நடிப்பு, கலைஞரின் வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசிய நேர்த்தி போன்றவை  தமிழ் நாட்டை பொருத்தவரை சினிமா என்பது வசன ஊடகம் என்பதை நிறுவி , தமிழ் சினிமா ரசனையை ஒழித்து கட்டியது.

1955ல் வந்த பதேர் பாஞ்சாலி, 1957ல் வந்த வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் , 1959ல் த 400 ப்ளோஸ் , 1950ல் வந்த ராஷோமான் போன்ற படங்களை எல்லாம் பார்த்தால் ரத்த கண்ணீர் வருகிறது. அவர்கள் எல்லாம் அடுக்கு மொழி வசனங்களை வைத்தா படம் எடுத்தார்கள்? நாம் மட்டும் ஏன் ஏமாந்து போனோம் என்றால் அதற்கு கலைஞர் சிவாஜி கூட்டணி முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

சிவாஜி உன்னத கலைஞன் தான், அந்த நாள் போன்ற நல்ல படங்களில் அற்புதமாக நடித்தாலும் , அவர் வசன நடிகர் என்ற இமேஜில் இருந்து வெளிவர முடியவில்லை.

முதல் மரியாதை , தேவர் மகன் போன்ற படங்களில் அவர் நடிப்பை பார்த்தால் , அவரை மற்றவர்கள் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்களே என்ற வேதனை ஏற்படும்.

கலைஞரின் தமிழ் மீது குறையில்லை, அவர் அறிவாற்றாலிலும் குறை இல்லை. ஆனால் அவர் அடுக்கு மொழி வசனங்கள் , நல்ல சினிமாவுக்கு பொருந்தாது என்பதே என் வாதம். டிவி நாடகங்களிலோ , மேடை நாடகங்களொலோ அந்த வசனங்கள் இடம்பெறலாம், ஆனால் இந்த வசனங்களோ ஒரு படத்தை தரமான படம் என ஏற்க இயலாது.

இந்திய சினிமா  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலவசமாக திரையிடப்பட்டு வருகின்றன, இந்த தேர்வு முறையில் எனக்கு சில ஏமாற்றங்கள் உண்டு.

வெளி நாடுகளில் நல்ல சினிமாவை பட்டியலிட சொன்னால் , பல்ப் ஃபிக்‌ஷன் உட்பட நன்றாக ஓடிய படங்களையும் சேர்த்து பட்டியிலிடுவார்கள். 

 நம் ஊரில், ஓடாத படங்கள்தான் , பார்க்க முடியாத படங்கள்தான் நல்ல படங்கள் என்ற கருத்து உண்டு. ஆரண்ய காண்டம் , பருத்தி வீரன் , மகாநதி  போன்றவை நல்ல படங்கள் என்ற அளவுகோலில் தேர்ந்தெடுக்கப்பட்டு , பாட்ஷா , சந்திரமுகி போன்றவை  வரலாறு படைத்தவை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இப்படி செய்யவில்லை என்பது வருத்தம் என்றாலும் அன்று வரலாறு படைத்த நாடோடி மன்னன் , ரிக்‌ஷாக்காரன் போன்றவற்றை திரையிட்டது மகிழ்ச்சியே.

எம்ஜிஆர் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது சொந்தமாக எடுத்த படம் நாடோடி மன்னன். வேண்டாம் இந்த ரிஸ்க் என பலர் எச்சரித்தனர். படம் தோற்றால் நாடோடி ஆவேன். வென்றால் மன்னன் ஆவேன் ., கவலை வேண்டாம் என சொல்லி எடுத்தார். படம் இமாலய வெற்றி.

அது போல , ரிக்‌ஷாக்காரன் படத்துக்காக எம் ஜி ஆர் மத்திய அரசு விருது பெற்றார். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க படங்களை வெளியிடுவது நல்லதே.

சினிமா என்ற அளவுகோலில் தகுதியை கோராமல் , எம் ஜி ஆர் படம் போட்டால் , தி மு க தலைவர் என்ற அளவுகோலின் அடிப்படையில் கலைஞர் படமும் போட வேண்டும் என கேட்பதில் அழகு இல்லை. அரசியல்தான் இருக்கிறது. 
Tuesday, September 17, 2013

மரண தண்டனை கைதியுடன் அரைமணி நேரம் - மனம் கவர்ந்த உலக சினிமா


ஆரம்ப காலங்களில் சினிமாவில் ஒலி இல்லை.  பிற்காலத்தில்தான் ஒலி தொழில் நுட்பம் முன்னேறி , பேசும்படங்கள் வந்தன.
ஆனால் இந்த கண்டுபிடிப்பால் அந்த கால திரையுலக மேதைகள் பெரிதாக மகிழ்ந்து விடவில்லை. சினிமா என்பதே காட்சி ஊடகம்தானே , இதில் ஒலி எதற்கு ? சார்லி சாப்ளின் போன்றவர்கள் ஒலி இல்லாமலேயே சிறந்த படங்கள் எடுக்கவில்லையா.. வெகு சில படங்களுக்கு மட்டுமே ஒலி தேவைப்படும். அந்த படங்களுக்கு மட்டும் ஒலி இருந்தால் போதும். ஒலி இல்லாத ஊமைப்படங்களும் வர வேண்டும் என கருதினார்கள். எல்லா படங்களுமே ஒலியை பயன்படுத்த ஆரம்பித்தால் காட்சி மொழி அழிந்து விடும் என்பது அவர்கள் கருத்து.

ஆனால் , தொழில் நுட்ப வளர்ச்சியை யாரும் தடுத்து வைக்க முடியாது. ஆனாலும் வளர்ந்த நாடுகளில் காட்சி மொழி அழியாமல் பார்த்து கொண்டார்கள்.

ஆனால் , இந்தியா போன்ற பிச்சைக்கார நாடுகள் ஒலி தொழில் நுட்பத்தை காணாததை கண்டது போல ஓவராக பயன்படுத்தி திரை மொழியையே அழித்து விட்டன. உரிய காலத்துக்கு முன்பே , ஒலி தொழில் நுட்பம் இங்கு வந்ததுதான் , சினிமா ரசனை இங்கு வளராமல் போனதற்கு முக்கிய காரணம் என்கிறார் தியடோர் பாஸ்கரன்.

கேசட்டில் வசனம் கேட்பது , ரேடியோ நாடகம் போல திரைக்கதை உருவாக்குவது எல்லாம் இங்கு மட்டுமே உண்டு.

இதில் சிக்கி இருந்தாலும் , அவ்வப்போது நல்ல படங்கள் பார்த்து மனதை தேற்றிக்கொள்வது என் வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் பார்த்த ஒரு படம்

An occurrence at Owl creek Bridge . இது 1962ல் வெளியான ஒரு குறும்படமாகும்.

Ambrose Bierce ன் சிறுகதையை Robert Enrico இயக்கி இருந்தார்.  பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் இது,. வெறும் 28 நிமிடத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம் இது.

கண்டிப்பாக பாருங்கள்.. கிளைமேக்சில் இருக்கும் ஒரு சஸ்பென்சை முழுமையாக அனுபவிக்க விரும்புபவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.
ம்ற்றவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

**********************************************************************


ஒரு தூக்குத்தண்டனை கைதி.. ஒரு பாலத்தின் மீது தூக்குக்கயிற்றை எதிர்னோக்கி இருக்கிறான் சுற்றிலும் காவலர்கள். தூக்குபோட ஏற்பாடு நடக்கிறது.
தப்ப வாய்ப்பிருக்கிறதா , மனைவி மக்களை பார்க்க முடியுமா என மனம் அலைபாய்கிறது. ஆனால் சுற்றிலும் காவல். கை கால்களை கட்டி விட்டார்கள். தூக்கு கயிறு கழுத்தில் மாட்டப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக கயிறு அறிந்து விடவே கீழே ஓடும் ஆற்றில் விழுந்து நீந்தி தப்பிக்கிறான்.

உயிர் பிழைத்ததை நம்பவே முடியவில்லை அவனுக்கு. உலகமே புதிதாக தோன்றுகிறது. புழு ஊர்வது , சிலந்தி பூச்சி கூடு கட்டுவது , பறவை சப்தம் , மரங்கள் , இலைகள் என எல்லாமே புதிதாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் வாழ்க்கை பூத்து குலுங்குவதை கவனிக்கிறான்.

தன் வீட்டுக்கு போய் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையை மனதில் தேக்கி ஓடுகிறான். வீடு வந்து விட்டது .இனி பயம் இல்லை. மனைவி அவனை நோக்கி ஆசையாக வருகிறாள். அவளை நோக்கி கை நீட்டுகிறான். அவள் அவன் தோளில் கையை வைக்கிறாள்


இனி எல்லாம் இன்பம்தான் என நினைக்கையில் கழுத்தில் ஏதோ உறுத்துகிறது.
சட் என இந்த காட்சிகள் கலைகின்றன. தூக்கு அவன் கழுத்தை இறுக்கி பிணமாக தொங்குகிறான்.

அவன் தப்பிக்கவே இல்லை. தூக்கு கயிறு அவன் கழுத்தில் மாட்டப்படும்போது , அவன் தப்பிப்ப்பதாக நினைப்பதெல்லாம் அவன் மனதில் நிகழும் மாயத்தோற்றமே. தூக்கு மாட்டப்பட்டு அது அவன் கழுத்தை இறுக்குவதற்கு முந்தைய சில நிமிடங்களில் அல்லது சில நொடிகளில் ஒரு பெரிய கனவு காட்சியை கண்டு முடித்து விடுகிறான்.

ஒருவனின் மரணம் நமக்கு ஏற்படுத்தும் பரிதாபம், அதிர்ச்சி, உயிர் வாழ்வதில் அனைத்து உயிர்களுக்கும் இருக்கும் வேட்கை - இதுதான் நமக்கு ஏற்படும் முதல் உணர்வு.

முதலில் இந்த தூக்குத்தண்டனையையெல்லாம் ஒழித்தாக வேண்டும் என நம் மனம் பதறுகிறது.

ஆனால் படத்தில் இதைத்தவிர பல விஷ்யங்கள் இருக்கின்றன.

ஒரு மரண  தண்டனை கைதியைப்பற்றிய படம் என்பதால் , முதல் காட்சியில் அவனைத்தான் காட்டி இருக்க வேண்டும். பொதுவாக அப்படித்தான் செய்வார்கள்.

ஆனால் இதில் அப்படி நிகழ்வதில்லை. காட்சி அவனிடம் இருந்து ஆரம்பிப்பதில்லை. சுற்றுவட்டார காட்சிகள் நம் முன் விரிகின்றன. இயற்கை காட்சிகள் , ஒலிகள் என மெல்ல நகர்ந்து பாலத்தை அடைகிறோம். பிறகுதான் அந்த காவலர்களை ,  கைதியை காண்கிறோம்.

காலம் , நேரம் இவற்றைக் கடந்து திரைக்குள் சென்று அந்த சம்பவங்களின் ஒரு காட்சியாக மாறி விடுகிறோம்.


நமக்கு அந்த தண்டனை அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் பிரமாண்டமான இயற்கைக்கு முன் இது போல மனிதன் வருவதும் போவதும் அப்படி ஒன்றும் பெரிய விஷ்யம் அல்ல என்று சொலவது போல இயற்கையின் பிரமாண்டம் , பாலம் , அதன் கீழ் நீரோட்டம் என எல்லாம் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.And here and there a foamy flake
Upon me, as I travel
With many a silvery waterbreak
Above the golden gravel,

And draw them all along, and flow
To join the brimming river
For men may come and men may go,
But I go on for ever.


என்ற கவிதை தன்னிச்சையாக நம் மனதில் வந்து செல்கிறது.

அவன் ஏன் தூக்கு கயிற்றுக்கு வருகிறான் என்பதெல்லாம் விரிவாக சொல்லப்படுவதில்லை. ஆனால் அது அமெரிக்க உள்னாட்டு யுத்த காலம் என்பதை யூகிக்க முடிகிறது.  இது போன்ற பல தண்டனைகள் , உயிர் பலிகள் , தியாகங்கள் மூலம்தான் ஓர் அரசு உருவாகி இயங்க முடிகிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது. அதாவது ஒரு தனிப்பட்ட மனிதனாக அந்த தண்டனை மிகவும் அதிர்ச்சியை அளித்தாலும் , ஒட்டுமொத்த பார்வையில் பார்த்தால் இது போல பலர் உயிர் பலிகளின் பலனைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம் என்ற யதார்த்தம் புரிகிறது.

இந்த படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் காலம் பற்றிய இதன் பார்வை. அந்த கைதியின் கடிகார ஒலி இதய துடிப்பு போல கேட்கும் . நாள் உயிரை அழிக்கும் வாள் என வள்ளுவர் சொன்னது போல , அந்த கணத்தில் காலம் அவனை கொல்ல துடிக்கும் வில்லனாக அவனுக்கும் நமக்கும் தோன்றுகிறது. எனவே அவன் தனக்கான ஒரு காலத்தை , தனக்கு சாதகமான காலத்தை உருவாக்கி கொள்கிறான்.
அவனுக்கு கொடுக்கப்பட்ட சில நிமிடங்கள் , பல நிமிடங்களாக அவன் மனதில் விரிவடைகிறது.

படம் ஓடுவது அரைமணி நேரம். அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவு வேறு. அவன் மனதில் இந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவு வேறு. இப்படி மூன்று தளங்களில் காலம் இயங்குகிறது.

படம் முழுக்க குறியீடுகள் விரவுக்கிடக்கின்றன.

தப்பிக்க வாய்ப்பே இல்லையா என மனம் சலித்து போய் இருக்கையில் ஆற்றில் அடித்து செல்லப்படும் சிறிய மரத்துண்டு காட்டப்படுகிறது.

அவன் திட்டம் நிறைவேறி ஜெயித்து இருந்தால் , அவன் ஹீரோவாக போற்றப்பட்டு இருக்க கூடும். அவனை தண்டிப்பவர்கள் , தண்டனைக்க்கு உள்ளாகி இருக்க கூடும்.

நாம் வெற்றி பெறும் காலங்களில் வெற்றிக்கு காரணம் நம் உழைப்பு, புத்தி, தன்னம்பிக்கை என்றெல்லாம் நினைப்போம். யார் வேணும்னாலும் ஜெயிக்கலாம் ..உழைச்சா போதும் என பாடம் நடத்துவோம்.

ஆனால் தோல்வியில் துவண்டிருக்கும்போதுதான் , வாழ்க்கை எனும் பெரு நதியில் அடித்து செல்லப்படும் சிறுதுண்டுகள்தான் நாமெல்லாம் என தோன்றும். அந்த மரத்துண்டு நமக்கு , கணியன் பூங்குன்றனாரின்  இந்த பாடலை நினைவு படுத்துகிறது

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

இது போல படத்தில் குறியீட்டு காட்சிகள் ஏராளம். எந்த பச்சாதாபமும் இன்றி , வாகனம் ஓட்டுவதைப் போல ஒரு வேலையாக கருதி , மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரிகள் , அதிகார வர்க்கத்தை பிரதிபலித்து இருப்பார்கள்.

இதை எல்லாம் விட முக்கியமான ஒன்று உண்டு.

எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் இருந்தார் . பெரிய ஸ்காலர். ஆனால் அவர் ,மனைவி அவர் அருமை தெரியாதவர். எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். நோய்வாய்பட்டு இருந்தாலும் திட்டுவதில் குறைவிருக்காது. ரொம்ப நாளாகவே நோயில் இருந்து , ஒரு நாள் இறந்து விட்டார் மனைவி.

சரி, இனி இந்த பெரியவர்  நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் இவர் அதன் பின் ஏதோ பறிகொடுத்தது போலவே இருந்தார். என்னதான் மனைவி கொடுமைக்காரியாகவும் , நோய்வாய்ப்பட்டும் இருந்தாலும் , அவளிடம் அவருக்கு ஏதோ ஒருவகை உளவியல்  பாதுகாப்பு கிடைத்து இருக்கிறது. மனைவி மறைந்த கொஞ்ச நாட்களில் இவரும் இறந்து விட்டார்.

மனைவி , வீடு , தாய் போன்றவை ( அல்லது இதற்கு மாற்றாக காதலர்கள் , நண்பர்கள் தேசம் போன்றவை )பாதுகாப்பு என்பதாகவே மனதில் பதிவாகி இருக்கும். சாதாரண காலத்தில் வீடு என்பது சிறையாக தோன்றினாலும், சில சந்தர்ப்பங்களில் வீட்டை வந்து அடைந்தால் ஒருவகை அமைதி கிடைப்பதுண்டு,.

அதுபோல , இந்த படத்தில் அந்த மனைவியும் , வீடும் பாதுகாப்பின் குறியீட்டாக உள்ளன. வீரம்  சாகசம் எல்லாம் போதும் என்ற கையறு நிலை ஏற்பட்டு , பாதுகாப்பாக ஓர் இடத்தை ஒரு தாய் மடியை தேடும் சராசரி மனிதனின் இயல்பை துடிப்பை படம் பதிவு செய்து இருக்கிறது.

முழுக்க முழுக்க காட்சிகளால் நகர்வதாலோ என்னவோ, இந்த அரை மணி நேர குறும்படம் நம் இதய அறையில் நிரந்தர இடம்பிடிக்கிறது.
Monday, September 16, 2013

கண்கள் பனித்தன , இதயம் இனித்தது- ஜென் குருவுடன் ஒரு சிலிர்ப்பான சந்திப்பு
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?- பாரதியார்

சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக , தம் குருவுக்கு  நல்லது செய்வதாக நினைத்து , தவறாக செய்து விடும் சம்பவங்கள் வரலாற்றில் ஏராளமாக  பதிவாகி இருக்கின்றன..

ஒரு முறை ஷிர்டி பாபா தனக்காக தங்க தேர் பவனியை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். சில சீடர்கள் இந்த செயல் அவரது இமேஜை பாதிக்கும் என நினைத்து அதை தடுக்க முனைந்தனர்.

உண்மையில் அவர் ஏன் அதை செய்தார் என்றால் , அது சீடர்களுக்கு வைக்கப்பட்ட ஒருவகை சோதனைதான்.
அந்த சோதனையில் வென்றவர்கள் வெகு சிலரே..

ஷீர்டி பாபா வரலாறு முழுக்க இருக்கபோகிறவர்.. என்னவோ தாங்கள்தான் அவர் புகழை நிலை நிறுத்துவதாக நினைத்த சீடர்கள் யார் என்று இன்று தெரியாது..

எனவேதான் , ஒரு குருவின் புகழை நாம் வகுக்க நினைப்பது , சூரியனை சங்கிலியால் அளக்க நினைப்ப்பது போன்றது என்கிறார் பாரதியார்.

    கடவுள் கோபித்தால் , ஒரு குருவால் அவனை காப்பாற்ற முடியும். ஆனால் ஒரு குரு கோபித்தால் , ஆண்டவனே நினைத்தாலும் அவனை காக்க முடியாது.

 சாருவால் ஆளாக்கப்பட்ட ஒருவர் , சாருவைப்பற்றி நம்பவே இயலாத ஒரு குற்றச்சாட்டை வைத்தார். சாரு அதை பொருட்படுத்தவும் இல்லை. பதில் அளிக்கவும் இல்லை.

அந்த பொய்குற்றச்சாட்டு சொன்னவர் யார், அவரது இன்றைய நிலை என்ன என்பதைப்பற்றி எல்லாம் எழுதுவது நாகரிகம் அல்ல. பழைய இலக்கியப்பத்திரிக்கைகளை பார்த்தால் , அந்த நபரின் பெயர் பரவலாக காணப்படும். அவரது இன்றைய நிலையை எழுத எனக்கு மனம் வரவில்லை.

இதைத்தான் வள்ளுவர் வேறு பாஷையில் சொல்கிறார்.


வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.


என்ன பொருள் சேர்த்து என்ன வாழ்ந்தாலும் , குணத்தில் சிறந்த பெரியோர்கள் கோபப்பட்டால் எல்லாமே பயனற்று போகும் என்கிறார் வள்ளுவர்.


  சாருவைப்பார்த்து  வெகு நாட்கள்  ஆயிற்று என்றாலும் அவர் எழுத்துகள் வழியாக தினமும் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.


உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் என் இள மான் புகுமூர் திரு கோளூரே


என்று திருவாய் மொழியில் சொன்னது போல , ஒரி நல்ல சினிமாவை பார்க்கையில் , நல்ல புத்தகம் படிக்கையில் சாருவை நினைக்காமல் இருக்க முடியாது.

சாருவுடன் பேசுவது என்பது அலாதியான அனுபவம். கேஷுவலாக பேசுவார். ஆனால் ஆங்காங்கு நுட்பமான தகவல்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார். உணவு முறை , இலக்கியம் , இசை , சினிமா என எத்தனையோ விஷ்யங்கள்.

இவ்வளவு அனுபவம் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும் , இன்னும் ஒரு வாசகனாகவும் இருக்கிறார். நல்லவற்றை தேடி தேடி படிக்கிறார். பிடித்த எழுத்தாளர்களை மனம் விட்டு பாராட்டுகிறார்.

அப்படி அவர் சொன்ன ஓர் ஆங்கில எழுத்தாளரை படித்து பார்த்தேன். என்னை பொருத்தவரை சாரு அவரை எல்லாம் கடந்து சென்று விட்டார். ஆயினும் அந்த எழுத்தாளர் என்னமா எழுதறார்.. என்னையெல்லாம் முந்திட்டாரே...அடுத்த நாவலில் அவரை மிஞ்சிக்காட்டுறேன் என குழந்தை போல பாராட்டுவார். அதெல்லாம் உயர்வு நவிற்சி என நன்கு தெரிந்தும் கேட்டு கொண்டு இருப்போம்,

நான் சந்தித்தபோது ஒரு புத்தகத்தை ஏதோ ஒரு பொக்கிஷம் போல கையில் ஏந்திக்கொண்டு இருந்தார். ஆச்சர்யமாக இருந்தது.

சாருவை ஒருவர் ஏற்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் புறக்கணிக்க இயலாது.

சாரு இமயமலை போனதைக்கேட்டு ஜெமோவும் கிளம்ப்பி சென்றார். காப்பி அடிப்பதாக பேச்சு கிளம்பியதும், அப்படி எல்லாம் இல்லை. நான் சின்ன வயதில் இருந்தே செல்கிறேன் என சமாளிக்கப்பார்த்தார்

ஆனால் அப்போதுதான் முதல் முறையாக போவது போலத்தான் அவர் கட்டுரைகள்  அமைந்து இருந்தன..

சாரு மதுரைக்கு ஒரு கல்யாணத்துக்கு செல்வதாக அறிவித்ததும், தானும் செல்வதாக சொன்னார்.

இப்படி சின்னப்பிள்ளை போல போட்டி போடுவதை நான் சுட்டிக்காட்டி இருந்ததை , சாரு அவ்வளவாக விரும்பவில்லை.

உலகளவில் போட்டி போடும் அவருக்கு இணையாக ஜெயமோகன் , அசோகமித்ரன் போன்றோரை வைத்து பேசுவதை அவர் ரசிக்கவில்லை.

இருளுடன் ஒப்பிட்டுத்தான் வெளிச்சத்தை சொல்ல முடியும் என்பதாலேயே ஜெயமோகன் பற்றி சொல்ல வேண்டியதாயிற்றே தவிர சுண்டெலியையும் சூரியனையும் நான் ஒப்பிடக்கூடியவன் அல்ல. ஆனாலும் அப்படி ஒரு இம்ப்ரஷன் ஏற்பட்டது உண்மைதான்.

பயணம், நண்பர்கள் சந்திப்பு என இருந்தாலும் , எக்சைல் வேலையில் தினமும் ஈடுபட்டு வருகிறார். இதற்கான நேரத்தை தூக்கத்தை குறைப்பதில் இருந்து பெறுகிறார். சதுரகிரி பயணத்தைக்கூட , எக்சைலுக்காக ஒத்தி வைத்துள்ளார். சதுரகிரி பயணம் எப்போது நடந்தாலும், முக்கியமான நிகழ்வாக இருக்கும் என்பது நிச்சயம்.

இனி என் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ள வகையில்தான் செலவிட வேண்டும். அதுதான் அவருக்கு நான் காட்டும் மரியாதை என உணர்ந்தேன்.

அந்த பிசி செட்யூலிலும் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஜெயமோகன், அசோகமித்ரன் என யார் வேண்டுமானாலும் இலக்கியம் படைக்கலாம். ஆனால் இலக்கியமாகவே வாழ்வது சாருவால் மட்டுமே முடியும் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

ஒரு ஜென் குரு போல , நேரடி அறிவுரைகள் இல்லாமல் , தன் வாழ்க்கையே தன் செய்தி என வாழும் அவரை வணங்கி பெற்றேன்.

அந்த சந்திப்பு  நினைவுகள் தித்திக்கும் கல்கண்டாய், தெவிட்டாத தேனமுதாய் இதயத்தில் இனிக்கிறது.,
Tuesday, September 10, 2013

அதிர்ச்சி அளித்த சாரு- மதுரை அனுபவங்கள்


 மதுரைக்கு போனால் அவ்வப்போது மீனாட்சி அம்மன் கோயில் போவது நீண்ட நாள் வழக்கம். பரீட்சையில் பாசாக வேண்டும், நல்ல மார்க் எடுக்க வேண்டும், வயிறு வலி சரியாக வேண்டும், ஃபிகர் வொர்க் அவுட் ஆக வேண்டும் , வேலை கிடைக்க வேண்டும் , அரைகுறையாக செக் செய்து அனுப்பிய இயந்திரம் பாதியில் நின்று போய் மானத்தை வாங்க கூடாது என்பது போல அந்தந்த மூடுக்கெற்ப ஏதாவது வேண்டிக்கொண்டு வந்து விடுவது வழக்கம். அல்லது சும்மா பொழுது போக்குக்காக சுற்றுவதும் உண்டு.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தர்சனம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. கடம்ப மரத்தை  பார்த்தாக வேண்டும் என சாரு சொன்னது எனக்கு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோயிலில் யாராவது அழகான பெண்கள் வந்தால் , மரம் போல நின்று விடுவது என் இயல்பு. ஆனால் கடம்ப மரத்தை இத்தனை நாள் பார்க்காமல் போனோமே என வருத்தமாக இருக்கவே மதுரை கிளம்ப ஆயத்தம் ஆனேன். புத்தக கண்காட்சிக்கும் போய் வரலாம் என்றும் ஓர் எண்ணம்.
 ஆனால் எந்த பஸ்சிலும், டிரெய்னிலும் டிக்கட் இல்லை. எனவே சாரு மதுரையில் இருக்கும்போது என்னால் மதுரைக்கு போக முடியவில்லை.  அவருடன் போய் இருந்தால் , இன்னும் சில நல்ல அனுபவங்கள் கிடைத்து இருக்கும்.

அங்கு இருக்கும் சகோதரர் ஒருவர் , கோயிலுக்கு போகலாமா என்று கேட்டார். நானே கோயிலுக்கு போகும் ஐடியாவில் இருந்தாலும், லேசாக பிகு செய்து விட்டு , அவருக்காக கோயில் செல்வது போல சென்றேன்.

என்னை விட சிறியவர் என்றாலும், கோயிலைப்பற்றி நன்கு விளக்கி சொன்னார். கோயிலை புதிதாகப் பார்ப்பது  போல இருந்தது. ஒவ்வொரு சிலையையும் நின்று நிதானித்து ரசித்து பார்த்தேன்.

ஒவ்வொரு சிலைக்கும் அந்த கால சிற்பிகள் கொடுத்துள்ள உழைப்பு ஆச்சர்யப்பட்ட வைத்தது. ஒரு தூணில் சிற்பம் செய்யும்போது, ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் ,எல்லாமே வீணாகி விடும். எனவே மிக மிக கவனமாக செய்ய வேண்டும். அப்படித்தான் செய்து இருக்கிறார்கள். முக பாவம் , ஆடை மடிப்பு, அணிகலன்கள், ஒரு சிலைக்கும் இன்னோர் சிலைக்கும் இருக்கும் நுண்ணிய வேறுபாடு என கலைத்திறமை வியக்க வைத்தது.

யாளி என்ற சிற்பம் தூண்கள் முழுதும் இருக்கும். எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். நுணுக்கமாக கவனித்தால் , ஒவ்வொன்றிலும் நுட்பமான வேறுபாட்டை காணலாம். இது கற்பனை உயிரியா அல்லது டைனோசர் போல அழிந்து போன உயிரியா என்பது தெரியவில்லை.

சிற்பம் என்றால் எல்லாமே சாமிசிற்பங்கள்தான் இருக்கும் என நினைப்போம். ஆனால் கவனித்து பார்த்தால் , பொதுவான சிற்பங்களும் இருப்பதை அவதானிக்கலாம்., ஒவ்வொன்றை வைத்தும் ஒரு சிறுகதை எழுதலாம் என தோன்ற செய்ய அளவுக்கு ஒவ்வொன்றும் பல்வேறு விபரங்களை சொல்கின்றன. உதாரணமாக ஒரு பெண் என்றால் , அவள் வயது என்னவாக இருக்க கூடும், அவள் அங்கே போகிறாள், என்ன செய்கிறாள்., அப்போது நேரம் என்ன என்பதை உணர்த்த பல்வேறு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பார்க்க பார்க்க எல்லாமே உயிர் பெற்று விடுமோ என்ற பிரமை எழுந்தது. யாளியின் ஓசை காதில் விழுகிறதோ என கற்பனை எழுந்தது.

கடைசியில் கடம்ப மரத்தை தேடிப்பார்த்தேன். பழமையான இந்த மரத்தை , வேலியிட்டு வெள்ளி கவசம் இட்டு பாதுகாத்து வருகிறார்கள். அந்த காலத்தில் மதுரை முழுதும் கடம்ப மரங்களால் சூழப்பட்டு , கடம்ப வனமாக இருந்ததாம். பிறகுதான் மதுரை நகர் உருவாக்கப்பட்டதாம். கடம்பவன வாசின்யை நமஹ என லலிதா சகஸ்ரனாமத்தில் இதைத்தான் சொல்கிறார்கள்.

கோயில் ஆங்காங்கு இடம் பெற்று இருந்த தமிழ் பாடல்களை ரசித்து படித்தேன்.

கம்பன் என் காதலன் என்ற புத்தகத்தில் ( நடிகர் ) சிவகுமார் இப்படி எழுதி இருப்பார்.

தமிழ் இலக்கியத்தை பக்தி இலக்கியம் , பகுத்தறிவு இலக்கியம் என பிரித்தால் , பெரும்பாலானவற்றை இழந்து விடுவோம். மிச்சம் இருப்பதை ஆரியர் இயற்றியது, திராவிடர் இய்ற்றியது என பிரித்தால் இன்னும் பல அரியவற்றை இழந்து விடுவோம் என எழுதி இருப்பார்.

அந்த பாடல்களை பக்தி நோக்கில் படிக்காமல் , தமிழுக்காக படித்தால் உவமை நயம் , அணி நயம், சொல்வன்மை என இனிமையாக இருந்தது.

குறிப்பாக இந்த வரியை வெகு நேரம் ரசித்தேன்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி


உலகத்தை கடவுள் என ஒருவர் இருந்து படைத்து இருக்க முடியாது.. இது எப்போதும் இருப்பது, மாறிக்கொண்டே இருப்பது... அப்படிப்பட்ட மாற்றத்தில் ஒரு பகுதிதான் இப்போது நாம் காணும் உலகம் என ஒரு தியரி உண்டு. கீழ் காணும் வரிகள் அதை நினைவு படுத்தின.

மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!


நீள அகலம் உடையாய், போற்றி!
அடியும் முடியும் இகலி, போற்றி!கோபுர சிற்பங்களை தொலைனோக்கி வழியாக ரசித்து பார்த்தேன்.  தொலை நோக்கியையும் , கம்பன் என் காதலனையும் புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.


சென்னையை விட கூட்டம் அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஒப்பீட்டளவில் சென்னையை விட ஸ்டால்கள் குறைவு என்றாலும் கூட்டம் அதிகம்.

பலரும் ஆர்வத்துடன் புத்தகங்கள் வாங்கிச்சென்றனர். மனுஷ் வந்து இருந்தார். அவரிடம் கை எழுத்து வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.

சென்னையில் நான் பார்த்ததவரையில் , ஆன்மீக அரசியல் சினிமா சமையல் போன்ற புத்தக ஸ்டால்களில் கூட்டம் குவியும். ஆனால் மதுரையில் இந்த ஏரியாக்களில் கூட்டம் குறைவுதான், குறிப்பாக ஆன்மீக ஸ்டால்களில் கூட்டம் குறைவு.

அறிவியல் கருவிகள் விற்பனை செய்யும் ஸ்டாலில் செம கூட்டம். ஓரளவுக்கு விற்பனையும் இருந்தது. அங்குதான் தொலை நோக்கி வாங்கினேன். அந்த அறிவியல் கருவியை ஆன்மீக ஆராய்ச்சிக்காக வாங்குகிறேன் என்பது அவர்களுக்கு தெரியாது :)

தொலை நோக்கி வழியாக கோபுரத்தை பார்க்கும்போதுதான், எத்தனை எத்தனை அழகான சிற்பங்கள் , எத்தனை எத்தனை கதைகள் என கவனிக்க முடிந்தது. யார் பார்ப்பார்கள் என எதிர்பார்த்து அத்தனை உயரத்தில் இதை படைத்தார்கள் என தெரியவில்லை. யாராவது பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அமைத்து இருப்பார்கள்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றிய மன நிறைவோடு , அறிவுத்தேடல், ஆன்மீகத்தேடலை முடித்து கொண்டு உணவு தேடலில் இறங்கினேன். அயிரை மீன், ஜிகிர் தண்டா , மதுரை ஸ்பெஷல் கோழிக் கறி , ஃபில்ட்டர் காஃபி , பருத்தி பால் என அடுத்த கட்ட தேடல் தொடர்ந்தது..... 
மீனாட்சி அம்மன் கோபுரம்
அயிரை மீன் குழம்பு


செம டேஸ்ட்


ஜிகிர்தண்டா

கோழி கறி

புத்தக விழா

மனுஷ்

தொலை நோக்கி வழியேஃபில்ட்டர் காஃபி

கூல் சர்பத்

Saturday, September 7, 2013

லீனா மணிமேகலை- குட்டி ரேவதி : கவிஞர் றியாஸ் குரானா சுவாரஸ்யமான ஒப்பீடு

கவிஞர் றியாசுடன் உரையாடுவது சுவையான அனுபவம்... பல்வேறு நுட்பமான தகவல்களை தந்தவண்ணம் இருப்பார்.

பெண் எழுத்துகளைப்பற்றி சில கருத்துகளை பகிர்ந்த்துகொண்டார்,,,, லீனா , குட்டி ரேவதி இருவரும் பெண்கள்தான் என்றாலும் , அவர்களுக்கிடையே இருக்கும் வேறுப்பாட்டை சுட்டிக்காட்டினார்..

படித்து பாருங்கள்

**********************************************************சாரு இமயம் போனால் , ஜெயமோகனும் போகிறார்,,,அவர் கல்யாணத்துக்கு போனால் இவரும் போகிறார்...உங்கள் கருத்து ? :) 

ஜெ குறித்து பேச எதுவுமே இல்லை. மிகவும் பழசுபட்டுப்போன சிந்திப்பு அவருடையது்.


ஹா ஹா...சூப்பர்... தமிழில் இலக்கியம் குறித்து அதுவும் கவிதை குறித்து மிகத்தீவிரமான ஒரு உரையாடல் தேவைப்படுகிறது என சொல்லி இருந்தீர்கள்...ஓர் உரையாடலை / கவிதை வாசிப்பை இந்தியாவிலோ, இலங்கையிலோ ந்டத்தலாம் என கவிஞர் லீனா மணிமேகலை சொல்லி இருந்தார்,,,உங்கள் பதில் ?
ஒரு உரையாடலை விரிவாகச் செய்யலாம். இந்தியாவில் என்றால் மிக அதிகமான ஆளுமைகளோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியான உரையாடல் மிக நல்லது என்றே நினைக்கிறேன். அது சாத்தியப்பட காலம் எடுக்குமெனில், முகநுாலிலே தொடங்கலாம். திறந்த ஒரு அழைப்பை விட்டு அதிகமானவர்கள் பங்கேற்கும் நிகழ்வாக நெறிப்படுத்த வேண்டும்.


லீனா கவிதைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?


பெண் கவிதைவெளியை அடுத்த நிலைக்கு நகர்த்த முயற்சிக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லி...


அருமையா சொன்னீங்க...ஆனா ஒரு சந்தேகம்


சொல“லுங்க...


பிரதிக்கு ஆண் பெண் பேதம் இல்லை என்பார்களே... அப்படி என்றால் பெண் கவிதை வெளி என்பதற்கு என்ன அர்த்தம்பிரதிக்கு இல்லை. அது அக்கறை கொள்ளும் அரசியலுக்கு இருக்கிறது. பெண் எழுத்து என்பது புனைவின் விதிகாளால் புரிந்துகொள்ளப்படுவதைவிட , பெண்களின் அரசியல் நிலவரங்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அப்படி முயற்சிக்கும்போது அதிக விசயங்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கும்.


லீனாவை விதிவிலக்காக வைத்து கொள்வோம்...பெரும்பாலன பெண் கவிஞர்கள் கவிதைகள் ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பதன் உளவியல் காரணங்க்ள் என்னபெண் எழுத்து தமிழை சந்தித்த போது, உடலைக்கொண்டாடுதல், என்ற ஒருவிசயமே முதன்மைப்படுத்தப்பட்டது அத்தோடு ஆண்களுக்கு எதிரான ஒரு நிலவரமும் அதில் இணைந்தது. பின்னர் அதுதான் பெண் எழுத்து என்று நிலைபெற்றுவிட்டது. இது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் நிகழக்கூடியதே....


அதாவது பெண் எழுத்து தமிழில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களா?இல்லை. பலவகையான பெண்ணியக் கருத்துநிலைகள் இருக்கின்றன. தமிழில் நான்சொன்ன ஒருவிசயம் மாத்திரமே பயன்பாட்டிலுள்ளது. உதாரணமாக, ஆண்களுக்கு எதிரானானதாக ஒரு கருத்தை உருப்பெறச் செய்வது. ஆனால், பெண்ணியத்தை ஆதரிக்கின்ற அதற்காக செயற்படுகின்ற ஆண்களை எப்படி குற்றச்சாட்டுக்குள் உள்ளடக்குவது. ஆண்மையச் சிந்தனைக்கு எதிரானதாக பிரதியை செயலாற்ற வைப்பதே சரியானது.


ம்ம்ம்தொடக்க காலத்தில் ஈழத்திலே பெண் எழுத்துக்கள் அரசியல் அர்த்தத்தில் முதன்முதலில் வெளிப்பட்டது. சிவரமணி (தற்கொலை செய்துவிட்டார்) அவர்களின் கவிதைகளை படித்தால் தெரியும்.


அதிர்ச்சி மதிப்பிட்டுக்ககவும், கவன ஈர்ப்புக்காகவும் சிலர் அப்படி எழுதுவதாக ஒரு குற்ற்ச்சாட்டு இருக்கிறதேமய்ய நீரோட்டத்தை நிராகரிக்கின்ற அல்லது அதிலிருந்து விலகி சிந்திக்கின்ற அனைவருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். அதை புரிந்துகொள்ள முடியாத அல்லது அதனோடு விவாதிக்க முடியாதவர்களின் ஆயுதம் இது.இது போன்ற சவால்களை , இடையூறுகளை பெண்கள் எதிர்த்து போராட , தம் சக்தியை செலவிட வேண்டிய நிலையில். அது அவர்கள் படைப்பாற்றலை பாதிக்கும் என கருதுகிறீர்களா

அப்படியான சவால்களை எதிர்கொள்ளுவது, அல்லது அதற்காகச் சிந்திப்பதுதான் படைப்பாற்றல். குறித்த விசயத்திற்கான ஒரு புனைவை உருவாக்குவது. அதற்கப்பால் இல்லை. நீங்கள் முன்பு சொன்னீர்கள் ”: அது மாத்திரமன்றி பின்தங்கிய பார்வையுடையவர்களினாலே கவிதைகள் பாராட்டப்படுகிறது என்றும் சொல்வேன். விளக்கம் தேவை


இன்று நவீன கவிதையைப்பற்றி பேசுபவர்களும், அதை முன்வைப்பவர்களும் கூட பின் தங்கியவர்கள்தான். கவிதை குறித்து அவர்களிடம் ஒரு அய்பது வருசத்திற்கு முன்னைய புரிதல்கள்தான் இருக்கின்றன. பாராட்டுவதென்பது யாராலும் முடிகிற ஒருவிசயம்தான். எப்போதும், ஒரு பிரதி தன்னைக் கவிதையாக நிறைவடையச்்செய்வதற்கு என்ன வழிமுறைகளைக் கையாள்கிறது எனப்பேசுவதே கவிதைக்கான புரிதலை தர உதவக்கூடியது. நல்லது அல்லது மோசமானது என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று விபரிப்பதுதான் கவிதை குறித்த பொறுப்பான பேச்சாக இருக்கும். அது இல்லாமல் பாராட்டுவதுகூட பின்தங்கிய செயல்தான்.ஒரு கட்டுரையில் இப்படி சொல்லி இருந்தீர்கள்...”நவீனத்துவ,பின்நவீனத்துவ இலக்கிய,அரசியல் செயற்பாடுகளைக் கதையாடுவதாக தம்மை அறிவித்து செயற்படும் பிரதிகள்கூட ஆண்வாசகனுக்காகவே உருவாக்கப்படுகிறது” அதாவது ஆண்கள் , பெண் வாசகர்களை புறக்கணிக்கிறார்கள்...பெண்கள் எழுதினால்தான் இந்த நிலை மாறும் என்பது உங்கள் கருத்தா

இல்லை. ஆண்வாசகன் என்பது ஆண்மையச் சிந்தனைகைளால் கட்டமைக்கப்பட்டவன்.ஆண் பெண் மய்யச் சிந்தனைகளை கலைக்க முயற்சிக்கிற பிரதிகளை உருவாக்குவது தொடர்பிலானது எனது அக்கருத்து. பெண்கள் கூட ஆண்மய்யச் சிந்தனையை ஏற்கும் பிரதிகளையெ எழுதுகிறார்கள். அதற்கு வெளியெ செல்லவேண்டும்.
உதாரணமாக,
துடைத்தகற்ற முடியாத கண்ணீர்த்துளி என எனது முலைகள் - என்று ரேவதி எழுயிருப்பாங்க (இந்தப் பொருட்பட)

ம்ம்ம்முலைகளை கண்ணீர்த்துளியாக கருதுவது அது தனக்கு அவமானகரமானது என்பதுபோல ஒரு தோற்றத்தை காட்டக்கூடியதாகவே இருக்கும்.

ம்ம்ம்ஆண்களால் பிற்படுத்தி புரியவைக்கப்பட்ட உடல் உறுப்பாக முலை மாறியிருப்பதை ரேவதியும் ஏற்றுக்கொள்கிறார அல்லவா?

அட்டகாசம்...சரியாக சொன்னீர்கள்ஆகவே, ஆண்களி்ன் விருப்பத்தையே இங்கு மீளவும் உறுதிப்படுத்துகிறார்.
தனது உடலை அவர் கொண்டாடவில்லை அல்லவா...?
பெண்கள் எழுதுவது என்பதல்ல இங்கு முக்கியமானது, ஆண் மற்றும் பெண் மய்யச்சிந்தனைகளைத் தகர்ப்பதே...

ஆணின் பார்வையிலேயேதான், ஆணை மையமாக வைத்தே பெண் கவிஞர்கள் சிலர் எழுதுகிறார்கள்ஆனால், பெண் மய்யச் சிந்தனையை ஏற்க்கலாம் .. பலநுாறாயிரம் நுாற்றாண்டுகளாக ஆண்மையச் சிந்தனையெ இங்கு நிலவியிருக்கிறது.... பெண் மய்யச் சிந்தனையும் கொஞ்சம் நிலவுவதில் என்ன பிரச்சினை.

ஆனால் பெண்ணீய இலக்கியம், தலித் இலக்கியம் , ஈழ இலக்கியம் என இல்க்கிய்தை பிரிப்பது ஆரொக்கியமான போக்கு அல்ல என சிலர் சொல்கிறார்களேஆண்மையச் சிந்தனை என்பது பெரும் ஆ்றறல் மிக்க ஒரு அறிவியல் மற்றும் உளவியல் கட்மைப்பு. அதிலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துக்களையே இன்று உருவாக்க வேண்டும். இதை யாரும் செய்யலாம். ஆண், பெண், மற்றயவர்கள்..யாரும்.

தலித் இலக்கியம் , ஈழ இலக்கியம் என இல்க்கிய்தை பிரிப்பது ஆரொக்கியமான போக்கு அல்ல என சிலர் சொல்கிறார்களேஎதையும் எவ்வளவு பிரித்து புரிந்துகொள்ள முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. அப்போதுதான் அவைகளின் தனித்துவம் தொடங்கி அனைத்தையும் ஏற்கும் மனம் கிடைக்கும். மனிதன் என அனைவருக்கும் பொதுவான விதிகளும் வரைறைகளும் சாத்தியமென்று ஒரு சிந்தனையாளம் சொல்ல முடியாது. பொதுத்தன்மைக்கு மாற்றாகவே, வித்தியாசங்கள் முதன்மைப்படுத்தப்பட்டது. வித்தியாசங்களினாலே மற்றயதற்கும் அர்த்தம் உருவாகிறது. ”அ” ”ஆ“ விலிருந்து வித்தியாசப்படுவதினாலே இரண்டுக்குமான இடமும் முக்கியத்துவமும் பொருளும் கிடைக்கிறது. ஆகவே, பொதுமைப்படுத்தி புரிந்து கொள்வது என்பது, வேறுபடுபவைகளின் மீது மிக மோசமான அதிகாரத்தை செலுத்துவதற்கு உதவக்கூடிதே அன்றி வேறு பயன் ஏதும் அதற்கில்லை.
ஆனால், அந்த வித்தியாசங்களை கருத்திற்கொண்டு நிரந்தரமான பிரிகோடுகளை இறுக்கமாக வரையறுப்பதோ, அத்துகளை வரைவதோ அவையும் மோசமான விளைவுகளுக்குரியதே.
நெகிழ்ச்சியான மாறக்கூடிய வகையிலும், தேவையான நிலைகளில் பொருட்படுத்தி பேசவும் பன்படுத்தவுமாக அந்த பிரிப்புகள் இருக்க வேண்டும்.
************************************************

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா