Tuesday, June 18, 2013

மரணத்தை முன் அறிவித்தல் - மறக்க முடியாத மகத்தான சினிமா


     
தமிழ் ஸ்டுடியோவும் , பெரியார் ஊடகத்துறையும்  இணைந்து பெரியார் திடலில் நல்ல படங்களை திரையிட்டு வந்தனர். இந்த தொடரின் நிறைவு திரைப்படமாக கனசெம்பா குதிரயேனேறி என்ற கன்னடப் படம் திரையிடப்பட்டது.

  காதல்தான் தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே பிரச்சினை என்பது போல எடுக்கப்படும் தமிழ் படங்களும் ( காதலும் பிரச்சினைதான் என்பது வேறு விஷ்யம் ) , உலகை காக்கும் அமெரிக்கர்கள் என்பது போல எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் போரடித்து விட்டதால் , வேற்று மொழி அயல்னாட்டு படங்களை மட்டுமே தற்போது பார்த்து வருகிறேன்.

கன்னட படங்கள் மீது ஆர்வம் உண்டு என்றாலும்  சென்னையில் பார்க்கும் வாய்ப்பு குறைவு. எனவே இந்த திரையிடல் அறிவிப்பு வந்ததும் ஆர்வமாக காத்திருக்கலானேன்.

மாலை 5.30க்கு படம் என்றால் 5 மணிக்கே சென்று விட்டேன். அப்போது யாரும் வந்திருக்கவில்லை. பெரியார் திடலை சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன்.

 கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் வர ஆரம்பித்தனர். வந்தவர்கள் அனைவரும் சினிமா ரசனை மிகுந்தவர்கள் என்பதால் , படம் முடிந்ததும் நிறைவு நாள் நிகழ்ச்சி கலக்கலாக இருக்கும் என நினைத்து கொண்டேன்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஆர்கனைசர்களுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது.
திரைப்படங்களில் சப் டைட்டில் போடுவது சினிமா அனுபவத்தை பாதிக்கிறது என்ப்து என் எண்ணம். சினிமா என்பது வசனம் மட்டும் அன்று. நடிப்பு , கேமிரா, இசை என்றெல்லாம் இருக்கிறது.

ஒரு அட்டகாசமான காட்சியையோ , முக பாவத்தையோ கவனிக்காமல் , சப் டைட்டிலை எழுத்து கூட்டி படித்து கொண்டிருப்பது எனக்கு சரி என தோன்றுவதில்லை. சினிமா பார்க்கும் அனுபவத்தை இழந்து நாவல் பார்க்கும் அனுபவமே கிடைக்கும்.

வீட்டில் இப்படி பார்ப்பது வேறு விஷ்யம். சப்டைட்டிலுடன் ஒரு முறை , சப் டைட்டில் இல்லாமல் ஒரு முறை என பார்க்கலாம். அல்லது சில காட்சிகளை தேர்ந்தெடுத்து சப் டைட்டில் இல்லாமல் பார்க்கலாம். ஆனால் இது போன்ற திரையிடல்களில் சப் டைட்டில் இல்லாமல் போடுவதே உசிதம்.

எனவே படம் சப் டைட்டில் இல்லாமல் ஓட தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே கர்னாடக கிராமம் ஒன்றுக்கு அனைவரும் சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு.

இறப்பு ஏற்படுவதை தன் கனவு மூலம் முன் கூட்டியே அறியும் சக்தி கொண்ட ஓர் ஏழை வெட்டியான். மற்றும் அவன் மனைவி.

இவர்களைப்பற்றிய கதை..

இந்த எளிய மக்களைப்பற்றி வெகு சில கதாபாத்திரங்களை வைத்து , கிராமத்தில் நடக்கும் கதைதான். ஆனால் அது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

குறிப்பிட்ட கனவு வந்தால் இறப்பு நிகழும் என்பது ஐதீகம். அது போன்ற ஒரு கனவு அவனுக்கு வருகிறது.

அந்த ஊரில் பணக்கார முதியவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவரைப்பார்க்க அவர் மகன் ,மரு மகள் ,பேத்தி வருகின்றனர்.  அவர் மருமகளுக்கோ , பேத்திக்கோ அவர் அருகே செல்வதே பிடிக்கவில்லை. உண்மையில் அவர்கள் அவரைப்பார்க்க வரவில்லை. சொத்து விஷ்யமாக வந்து இருக்கிறார்கள்.


இந்த நிலையில்தான் அவனுக்கு கனவு வருகிறது. அந்த கிழ்வன் இறந்ததுதான் கனவாக வந்ததாக நினைத்து அவன் வீடு தேடி வருகிறான், இறுதி சடங்குக்ளைப் பற்றி பேச வரும் அவனை அவர்கள் விரோதமாக பார்க்கிறார்கள்.. யாரும் சாகவில்லை. இறுதி நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.

என்ன சுவாரஸ்யம் என்றால் , உண்மையில் அந்த கிழவர் இறந்து விட்டார், காலம் காலமாக இருந்து வரும் கனவு ஐதீகம் இப்போதும் பலித்து விட்டது, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இறப்பை மறைக்கிறார்கள். என்ன பெரிய காரணம்.. சொத்து விவகாரம்தான்,  காசுக்காக பெற்ற அப்பன் உடல் அழுகி நாற்றம் எடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் மகன்.

அந்த அப்பாவி ஏழையின் எளிய நம்பிக்கை... நாகரீகம் பொருந்திய அறிவாளிகளின் தந்திரம் என்ற இரு துருவங்களுக்கு இடையேயான மாபெரும் இடைவெளி நம் கண் முன் விரிகிறது.


அவனது நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்கலாம், அந்த மூட நம்பிக்கை அவனை ஏழ்மையில் உழலச்செய்யலாம். இதெல்லாம் தவறுதான், ஆனால் இதற்கு தீர்வு , இந்த நம்பிக்கையை சிதைப்பதுதானா... ஒருவர் தவறை எதிர்க்கிறார் என்றால் அவர் நல்லவர் என்று சொல்ல முடியாது , அவர் அதை விட பெரிய தவறின் பிரதினிதியாக இருக்க கூடும்.

சரி..இவர்கள் அப்படி தந்திரமாக நடந்து கொள்கிறார்களே..அவர்களை பார்த்து வளரும் குழந்தை எப்படி வளரும்?

ஒரு ஹைக்கூ படித்து இருப்பீர்கள்//

ஓர் எறும்பை கொன்றேன்..
என் மூன்று குழந்தைகள்
பார்ப்பதை உணர்ந்தேன் 


அவன் ஏழை..கிழிந்த ஆடை. ஆடை முழுக்க ஓட்டைகள். எந்த ஓட்டையில் தலையை விடுவது , எதில் கால் விடுவது என்பது தெரியாத அளவுக்கு ஓட்டை. ஆனால் அவனை அந்த வறுமை கண்ணீர் விட வைக்கவில்லை. தன் கனவு பொய்யாக போய் விட்டதே என்பதுதான் அவனை வருந்த வைக்கிறது,

ஆனால் இன்னொரு குடும்பம் .இன்னொரு வாழ்க்கை..புத்திசாலிகள் .அசட்டு நம்பிக்கைகள் ஏதும் இல்லாதவர்கள்/ ஆனால் ஒருவர் மீது ஒருவர் அன்பு இல்லாதவர்கள். அந்த குழந்தையும் யார் மீதும் அக்கறையோ அன்போ இல்லாமல்தான் வளரப்போகிறது என்பது பூடகமாக சொல்லப்பட்டு விடுகிறது

இதை சொல்லிய விதம் அற்புதம். அலுப்பூட்டாத திரைக்கதை. ஒவ்வொருவர் கோணத்தில் கதை சொல்லும் பாங்கு அருமை...அசட்டு நகைச்சுவைகளும், எதிர்பார திருப்பங்களும்தான் படத்தை விறு விறுப்பாக்கும் என நினைக்கும் தமிழ் இயக்குனர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.

அந்த பணக்கார வீடு, ஏழை குடிசை, ஒப்பனை இல்லா கிராமம் என கண் முன் நிறுத்தும் கேமரா , இசை என அனைத்திலும் சிறப்பாக அமைந்து இருக்கும் இந்த படத்தை அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.




   

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா