Friday, January 24, 2014

திமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவேசம்.. கலைஞர் கைதை வரவேற்ற வீரமணியின் உரை இணைப்பு


அழகிரி நீக்கத்தை வரவேற்பதாகவும் , திமுக இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்து இருப்பதாகவும் தி க தலைவர் கி வீரமணி சொல்லி இருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்த அழகிரி , கலைஞர் கைதின் போது வீரமணி சொன்னதை திமுகவினர் மறக்கவில்லை ...திமுக அழிவுக்கே வீரமணிதான் காரணம்... வீரமணி அரசியல் வியாபாரி கூட அல்ல..அரசியல் ****** என சொன்னார் ( டீவியில் சென்சார் செய்தே ஒளிபரப்பானது ).

சரி,  கலைஞர் கைதின்போது வீரமணி என்னதான் பேசினார்?

இதோ ..உங்கள் பார்வைக்கு...

*******************************************************

கலைஞர் கைதின் போது , வீரமணி காணொளிகள் , டாக்குமெண்டுகள் ஆதாரங்களுடன் பெரியார் திடலில் பேசியதன் ஒரு பகுதி...

கடந்த 5 ஆண்டுகாலத்திலே மிக முக்கியமான பணியை தி.மு.க. தலைவர் எதை செய்தார்? அன்றைய முதலமைச்சர் திருவாளர் கருணாநிதி அவர்கள். ரொம்ப இலாவகமாகச் சொன்னார்.

பொது மக்களே நீங்கள் எங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கின்றீர்கள். என்ன? ஜெயலலிதா அவர்கள் மீது வழக்கு போடுவது என்று - வேறு எதையும் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் கேட்கவில்லை. நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றீர்கள். எனவேதான் ஜெயலலிதா மீது வழக்கு போடுகின்றோம் என்று சொல்லி 46, 47 வழக்குகளைப் போட்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக வழக்கு, வழக்கு என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கைது செய்தார். சிறையில் வைத்தார். அப்பொழுதுகூட ஒரு அறிக்கை எழுதினோம். ஆத்திரப்படக்கூடிய தி.மு.க. தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் - பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு சார்பு நிலையை திராவிடர் கழகம் ஒரு போதும் எடுக்காது. நடுநிலையில் இருந்து சொல்லுகின்றோம். அந்த நடுநிலை பல பேராலே பாராட்டப்படுகின்றதா - இல்லையா? என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்குச் சரி என்பதை எடுத்துச் சொல்லுகின்றவன் தான் பெரியார் தொண்டனே தவிர, யாருக்காகவும் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாதவன் தான் பெரியார் தொண்டன். ஆகவே அந்த அடிப்படையிலே அப்பொழுது நான் சொன்னேன். ஒரு தவறான முன்மாதிரியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

ஒரு ஆட்சி நடக்கின்றபொழுது எந்த முதலமைச்சர் வந்தாலும் ஃபைலிலே கையெழுத்துப் போடக்கூடிய நிலை வரும். அமைச்சர்கள் போடுகிறார்கள். அலுவலர்கள் போடுகிறார்கள். ஆகவே முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் எல்லோர் மீதும் வழக்கு போடுகிற ஒரு தவறான முன் மாதிரியை உருவாக்கி விட்டீர்கள். அவர்களை எல்லாம் கைது செய்து உள்ளே போடுகின்றீர்களே அது எங்கே போய் நிற்கும்? இது எங்கே போய் முடியும்? இது ஒரு தவறான முன் மாதிரி ஆகாதா என்றுஅப்பொழுதே கேட்டோம். நாங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை. உடனே தி.மு.க தலைவர் 5 இலட்சம் பேசுகிறது என்று சொன்னார்.

என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படாதவன். ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும். சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை. ஆகவே நான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் பெட்டி வாங்கிக் கொண்டு பேசுகின்றேன் என்று தி.மு.க. தலைவரே முரசொலியில் கார்ட்டூன் போடுகின்றார். மணி என்பது அவருடைய பெயரிலேயே இருக்கிறது என்று சொல்லுகின்றார்.

இவ்வளவையும் அவர்கள் சொன்ன நேரத்திலே நான் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. சரி. உங்களை ஏறத்தாழ 23 ஆண்டுகாலம் ஆதரித்தோமே- நீங்கள் அதற்கு எத்துணை முறைபெட்டிக் கொடுத்தீர்கள்? எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற கணக்கை தயவு செய்து வெளியிடுங்கள். இதை வெளியிடக் கூடிய தெம்போ, திராணியோ, தைரியமோ உங்களுக்கு உண்டா?

...... ஒரு பொதுத் தலைவரை கைது செய்யும்பொழுது கிளர்ச்சிகள், தேவையற்ற அடிதடிகள், அசம்பாவிதங்கள், துப்பாக்கிச் சூடுகள் இவைகள் எல்லாம் நடக்கும் என்று எண்ணித்தான் இரவிலே கைது செய்தார்கள். கைது செய்வார்கள். பெரிய தலைவர்களை கைது செய்யும்பொழுது நீண்டகாலமாக இருக்கின்ற நடைமுறை இதுதான். இதை நான் நியாயப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் இடம் உண்டா? இவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு. இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.

எந்த அரங்கத்திலே வேண்டுமானாலும் நான் வாதாடுவதற்குத் தயாராக இருக்கின்றேன். தி.மு.க. தலைவர் அவருடைய வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் தொலைபேசியிலே பேசினேன் என்று சொல்லுகின்றார். தி.மு.க. தலைவர் எதிர்பார்த்த சன் டி.வி. வரவேண்டும். அவருடைய மருமகன் மத்திய அமைச்சர் மாறன் வரவேண்டும். அதற்காக அவரை அழைத்துக் கொஞ்சம் சரளமாகப் பேசுகின்றார்கள். அதை எல்லாம் போலீஸ் டி.வி.யிலே, ஜெயா டி.வி.யிலே காட்டியிருக்கின்றார்கள். தி.மு.க. தலைவரிடம் ரொம்ப மரியாதையாகத்தானே காவல்துறையினர் சொல்லுகின்றார்கள். எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்று இவர் கேட்கிறார்.அய்யா உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இதற்கு அரஸ்டு கார்டு என்பதைக் கொண்டு போனாலே போதும்.

மற்றவர்கள் பொத்தாம் பொதுவில் சொல்லுகின்றார்கள். போலீசார் வாரண்டே இல்லாமல் போயிருக்கிறார்கள் என்று; இங்கே பல வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். இதோ குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. இதிலே மிக முக்கியமான ஒரு பகுதி இருக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இது 41-ஆவது விதி. வாரன்ட் இல்லாமல் ஒரு குற்றத்தில் கைது செய்யலாம் என்றிருக்கிறது. பதினான்கு வருடம் முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவருக்கு இது தெரியாதா? இது சட்டவிரோதமா? இல்லை. கலைஞர் கருணாநிதி என்பவர் ஒருவர் வருவார். அவருக்காகவே இப்படி ஒரு சட்டத்தை எழுதி வைத்திருக்கின்றார்களா?

போலீஸ் அதிகாரி சொல்லுகின்றார். அய்யா உங்கள் மீது மேம்பாலம் கட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார். உடனே, முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கேள்வி கேட்கின்றார். பாலம் நானா கட்டினேன்? என்று. பொது மக்களே இனிமேல் உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தாஜ்மகாலை யார் கட்டியது என்றால், ஆக்ராவிலே இருந்த கொத்தனார் என்று சொல்லிக் கொடுங்கள். (பலத்த கைதட்டல்) தயவு செய்து மும்தாஜ், ஷாஜகான் பெயரைச் சொல்லாதீர்கள்.

இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்பதால்தான் நான் 5 வருடத்திற்கு முன்னாலேயே அறிக்கை கொடுத்திருக்கிறேன். நான் பெரிய தீர்க்கதரிசி என்பதற்காக அல்ல. எப்படி எப்படி இவைகள் எல்லாம் மாறும் என்பதற்காக. முதலமைச்சர் என்ற முறையிலே நீங்கள் (கருணாநிதி) வழக்குப் போடுவதற்கு கையெழுத்து போட்டால் இது எல்லா முதலமைச்சர்களுக்கும் சங்கடத்தை உருவாக்கும் என்று சொன்னோம். அன்றைக்கு என்ன செய்தார்கள்? அரசாங்க உத்தரவைத் திருத்தினார்கள். அல்லது அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆகவே கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் மீது வழக்கு; கையெழுத்துப் போட்ட அமைச்சர்கள் மீதும் வழக்கு என்று போட்டீர்கள். இப்பொழுது அதே நிலைதான் திரும்பி வந்திருக்கிறது.

1 comment:

  1. அழகிரி சரியாதான் சொல்லியிருக்கிறாரு இந்த விஷயத்தில். வீரமணி ஒரு அரசியல் வி--ரி தான்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா