Monday, September 29, 2014

ஃபேக் இலக்கியம் ஃபேக் சினிமா ஃபேக் அரசியல் குயில்கள் வடிவில் சிறகடிக்கும் காகங்கள்

உயிர் எழுத்து பத்திரிகையில் வெளியான கட்டுரை - செப்டம்பர் மாத கட்டுரை

தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வு அது. 1963ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்ட முன் வரைவு கொண்டுவரப்பட்டது. அதில் ஹிந்தியுடன் ஆங்கிலமும் தொடரலாம் என அதன் மூன்றாவது பிரிவு கூறியது. “ஆங்கிலமும் தொடர்ந்தால் தொடரலாம், இல்லை என்றால் விட்டு விடலாம் என்கிற அர்த்தம் இதில் தெரிகிறது. இப்படி படிப்படியாக ஹிந்தியை திணிப்பீர்கள். இந்த பிரச்சினையே வேண்டாம். ஆங்கிலமும் தொடரலாம் என்பதை ஆங்கிலமும் தொடரும் என மாற்றுங்கள்” என திமுக தலைவர் பேரறிஞர் அண்ணா குரல் எழுப்பினார். தொடரலாம், தொடரும் இரண்டும் ஒன்றுதான் என்றார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. அதை திமுக ஏற்கவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்றால் நாங்கள் சொல்வதுபோல மாற்றுங்கள் என்றார் அண்ணா. ஆனாலும் திருத்தம் செய்யாமல் 27.04.1963இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் கொதித்தெழுந்தது. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை துணிச்சலாக எதிர்த்தார். ஒரு நாட்டின் சட்டத்தை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும் தண்டனை குறித்து எள் முனை அளவும் கவலை இன்றி சட்டத்தை எரித்து சிறை சென்றார் அண்ணா. அதன் விளைவாக போராட்டம் வலுத்ததும், மத்திய அரசு பணிந்ததும், திமுக ஆட்சிக்கு வந்ததும் வரலாறு. அரசியல் சட்ட எரிப்பு என்பது தமிழக வரலாற்றில் முக்கியமான ஒன்று.
இதன் அடுத்த வெர்ஷன் 1986இல் அரங்கேறியது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அகில இந்திய அண்ணா திமுக. ராஜீவ் காந்தியின் மத்திய அரசு இந்திக்கு ஆதரவான கல்விக் கொள்கையை கொண்டுவந்தது. அதை எதிர்த்து பிரதான எதிர்கட்சியாக இருந்த திமுக சட்ட எரிப்பு போராட்டத்தை அறிவித்தது. இங்கு சில சுவையான திருப்பங்களை கவனிக்க வேண்டும். 1963 சட்ட எரிப்பு போராட்டத்தின்போது, தமிழகத்திலும் மத்தியிலும் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. 1986இல் திராவிட கட்சிகளின் ஒன்றின் சார்பாக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். எதிர்கட்சியாக இருந்ததும் திராவிடக்கட்சிதான் (திமுக). அதன் தலைவராக இருந்தவர் கருணாநிதி. அதாவது காங்கிரஸ் திமுக மோதல் அல்லது தேசியம் தமிழ் உணர்வு மோதல் என்பது புரட்சித் தலைவர் - கலைஞர் மோதலாக உருவெடுத்தது. ஹிந்தி எதிர்ப்பு என்பது அ.இ.அ.தி.மு.க.வுக்கும் உடன்பாடுதான் என்றாலும், திமுகவின் சட்ட எரிப்பை ஓர் ஆளும் கட்சி ஆதரித்தாலும் பிரச்சினை, எதிர்த்தாலும் தமிழ் துரோகி என்பார்கள் என்ற சிக்கல் எம்.ஜி.ஆர். அரசுக்கு ஏற்பட்டது. இதை எப்படி எம்.ஜி.ஆர். எப்படி சமாளிக்கப்போகிறார் என பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
ஆனால் அவர்கள் சட்ட எரிப்பு போராட்டத்துக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. யாரையும் கைது செய்யவில்லை.. தாராளமாக எரியுங்கள் என்பதுபோல விட்டுவிட்டனர். சட்டத்தை எரிக்க திமுகவினர் கூடியபோதுகூட ஒன்றும் செய்யவில்லை. காவல் துறை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. எரித்து முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தனர். அதன் பின் ஃபார்மலான கைது என்றெல்லாம் நடந்தன. பிரச்சினை முடிந்தது என பலரும் கருதினர். ஆனால் பிறகுதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி சட்டத்தை எரித்ததன் மூலம் சட்டத்தைக் காப்போம் என்ற அவர்களது உறுதி மொழியை மீறி விட்டனர். எனவே அவர்களை பதவி நீக்கம் செய்கிறேன் என அப்போதைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அதிரடியாக அறிவித்தார். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மிரண்டு போன திமுக, நீதிமன்றம் சென்று தாங்கள் எரித்தது சட்டத்தை அல்ல, வெறும் பேப்பரைத்தான் என்றெல்லாம் வாதிட்டது. மொத்தத்தில் இந்த இரண்டாம் வெர்ஷன் காமெடியாக முடிந்தது. நாங்க விளையாட்டா பேப்பரைக் கொளுத்தினோம்.. நீங்க சட்டம்னு நினைச்சுட்டீங்க.. அய்யோ அய்யோ என்பதுபோல வாதிட்டாலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை (ஆனாலும் இந்த போராட்டங்களும், அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானமும் ராஜீவை பின் வாங்கச் செய்தன.)
ஹிந்தி எதிர்ப்பில் திமுகவின் பங்கையோ, கலைஞரின் பங்கையோ குறைத்துக் காட்டுவது நம் நோக்கமல்ல. அரசியல் பேசுவதும் நம் நோக்கமல்ல. இந்தியாவையை அதிர வைத்த அண்ணாவின் சட்ட எரிப்பு போராட்டத்தை நம்மால் எப்படி மறக்க முடியாதோ அதே போல இந்த ஃபேக் சட்ட எரிப்பு போராட்டத்தையும் மறக்க முடியாதல்லவா.. அதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்த போலிகள் எல்லாத் துறைகளிலும் உண்டு. இலக்கியம், சினிமா, பத்திரிகை, ஆன்மீகம், பொறியியல், அறிவியல் என எதை எடுத்தாலும் அதில் போலிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
போலிகள் என்பது வேறு, .குப்பைகள் என்பது வேறு. குப்பைகள் என்பன அவ்வப்போது தோன்றி மறைவன, போலிகள் என்பன நிலைத்து நிற்பன. நாம் ஒன்றை போலி என சொன்னால் அது ஒருவகை பாராட்டுதான் என்பதை மறக்கக் கூடாது. எத்தனையோ நூல்கள் உலகில் தோன்றுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கால வெள்ளத்தில் மறைந்து விடுகின்றன. வெகு சில மட்டுமே குறைந்தபட்சம் ஃபேக் நூல்கள் என்ற அளவிலாவது மனத்தில் நிற்கின்றன. தீமை எதில் அதிகம்? போலியிலா அல்லது குப்பையிலா என்பது சுவையான கேள்வி. திரிபுவாதம், வறட்டுவாதம் என்ற இரண்டுமே தீமைதான் என்றாலும் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உண்டு என மாவோ விளக்கி இருப்பார். அதுபோன்ற விஷயம் இது.
திரிபுவாதம் அல்லது வலது சந்தர்ப்பவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்த ஓட்டமே. இது வறட்டுவாதத்தைக் காட்டிலும் அபாயமானது. திரிபுவாதிகள், வலதுசாரி சந்தர்ப்பவாதிகள், மார்க்சியத்துக்கு சொல்லளவில் சேவை செய்கின்றனர். அவர்கள்கூட 'வறட்டுவாதத்தை'த் தாக்குகின்றனர். ஆனால், அவர்கள் உண்மையில் தாக்குவது மார்க்சியத்தின் மிக அடிப்படை அம்சங்களையே ஆகும். அவர்கள் பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் எதிர்க்கின்றனர் அல்லது திரித்துப் புரட்டுகின்றனர். என்கிறார் அவர்.
வறட்டுவாதம் என்பதைவிட திரிபுவாதம்தான் ஆபத்தானது என மாவோ சொல்வதைப் போல குப்பைகளைவிட போலிகள்தான் அதிகம் ஆபத்தானவை என கூறலாம். முதலாளித்துவத்தை எதிர்ப்பதைவிட கடுமையாக போலிகளை எதிர்த்தவர் லெனின் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்' என்ற நூலை படித்தால் இதை உணரலாம்.
சமீபத்தில் 'வேலை இல்லா பட்டதாரி' என்ற படம் வந்தது. அதை எடுத்தவர்கள் அதை உலக சினிமா என நினைத்து எடுக்கவில்லை. அறிவுஜீவிகள் பாராட்ட வேண்டும் என்றும் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அறிவுஜீவிகளும் பண்டிதர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. (ஆனாலும், தேவையே இல்லாமல் ஓரிரண்டு அறிவு ஜீவிகள் பார்த்து விட்டு, அகிரா குரசோவா ரேஞ்சுக்கு படம் இல்லையே, சிட் ஃபீல்ட் சொன்னபடி திரைக்கதை இல்லையே, ராபர்ட் மெக்கீ சொன்னது மேட்ச் ஆகவில்லையே என கண்ணீர் விட்டனர். மன்னிக்கவும், இது உங்களுக்கான படம் அன்று) இந்தப் படத்தை பொருத்தவரை, இன்றைய சூழலில் எப்படி எடுத்தால் வெற்றி பெறும் என கணக்கிட்டு, ஒரு ஃபார்முலாப்படி எடுத்தார்கள். வென்றார்கள். இதில் நாம் கவலைப்பட ஒன்றும் இல்லை. இந்தப் படம் எல்லாம் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும். இது போன்ற படங்களால் எல்லாம் தமிழ் சினிமா நெல் முனை அளவுகூட பாதிக்கப்படாது.
இது நல்ல சினிமா அன்று. ஆனால் ஃபேக் சினிமாவும் அன்று. இது எப்படிப்பட்ட படம் என நடித்தவர் முதல் டீ விற்பவர் வரை அனைவருக்கும் தெளிவாக தெரிந்திருக்கிறது.
இப்படி தன் அடையாளத்தை தெளிவாக காட்டாமல், நல்ல சினிமா என்ற பெயரில் வரும் போலிகளையே ஃபேக் சினிமா என்கிறோம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், தங்க மீன்கள், குக்கூ, வழக்கு எண் 18/9 என ஃபேக் சினிமாக்களுக்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். சமீபத்திய உதாரணம் சதுரங்க வேட்டை. இவை போன்ற படங்கள்தான் தமிழ் சினிமாவை அழிக்கின்றன.
பயங்கரமான கிரிமினல்களை ஒரு பெண் தன் அன்பால் திருத்தும் புதிய பாதை டைப் க்ளிஷேக்கள், அனைவரையும் இரக்கமின்றி கொன்றுதள்ளும் வில்லன், ஹீரோவை மட்டும் பொறுமையாக வசனம் பேசி (சிலசமயம் துப்பாக்கியை ஹீரோவிடம் கொடுத்து முடிந்தால் கொன்று பார். ஹா ஹா என்பார்) தப்பிக்க வாய்ப்புக் கொடுப்பது, சர்வ வல்லமை பொருந்திய, எதிர்ப்பே இல்லாத ஹீரோ என்ற பாத்திர அமைப்பு, அடுத்தடுத்து கால் செய்தால், ரிசீவரை எடுத்து கீழே வைத்து ஒட்டுக்கேட்க உதவும் அந்தக் கால அசட்டுப் பாத்திரங்கள் (இந்தப் படத்தில் அந்த பணக்கார அசட்டு கதாபாத்திரத்திடம் ஒரே ஒரு போன்தான் இருக்கிறது.. அதையும் ஆஃப் செய்து விடுகிறார்) என பழைய படம் போல இருக்கிறது இந்தப் படம். ஆனாலும் மாற்று சினிமா என சிலரால் முன் வைக்கப்படுகிறது. ஒரு பத்திரிகை இந்தப் படத்துக்கு 50க்கு மேல் மதிப்பெண் வ்ழங்கி தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் பத்திரிகை அவ்வப்போது இப்படி அசிங்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். முன்பு ஒருமுறை ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படமும் ஒரே காலகட்டத்தில் வெளியாகின. அந்தப் பத்திரிகையின் ஒரே இதழில் இரு படங்களின் விமர்சனங்களும் வெளிவந்தன. அதில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை ஆகா ஓகோ என பாராட்டி அதிக மதிப்பெண்களையும், சந்திரமுகி படத்துக்கு குறைவாகவும் மதிப்பெண்களையும் வழங்கியது. ஆனால் பெரும் வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது சந்திரமுகி படம்தான். (அந்த இதழ் எந்த அடிப்படையில் இப்படி மதிப்பெண் வழங்குகிறது என விவரித்து எழுத உயிர் எழுத்தின் தரம் அனுமதிக்காது. ஃபேக் விமர்சனத்தின் ஓர் உதாரணமாக மட்டுமே இங்கே அதை கவனிக்க வேண்டும்)
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். ஒரு படத்தை பிடித்தால் பார்க்கிறோம். பிடிக்காவிட்டால் புறக்கணிக்கப் போகிறோம். இதில் போலிகளை இனம் கண்டு என்ன ஆகப்போகிறது? நியாயமான கேள்விதான். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. போலிகளின் ஆரவாரத்துக்கு மத்தியில் ஆரண்ய காண்டம் போன்ற நல்ல படங்கள் கவனிப்பாரின்றிப் போய்விடும் அவலம் அடிக்கடி நிகழ்கிறது. நல்லவேளையாக ஆடுகளம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், நான் கடவுள், கடல், ஜிகிர்தண்டா போன்ற நல்ல படங்களுக்கு இந்த அவலம் நிகழவில்லை. ஆயினும் போலிகளைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.
இந்த விழிப்புணர்வு சினிமாவைவிட இலக்கியத்தில் அதிகம் தேவை. காரணம் ஒரு போலி சினிமா பார்ப்பதால், பெரிய இழப்பு ஒன்று நிகழாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் நல்ல சினிமா ஒன்றை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இலக்கியம் அப்படி அன்று. நம் ஊரில் புத்தக வாசிப்பு வெகு குறைவு. இதை குறையாகச் சொல்லவில்லை. நம் சூழல் அப்படி இருக்கிறது. நாம் ஒரு வருடத்தில் படிப்பதே ஐந்து புத்தகங்கள்தான் இருக்கும். குப்பை என்பது தெளிவாகத் தெரிந்துவிடுவதால், எப்படியும் அவற்றை தவிர்த்து விட்டுத்தான் இந்த ஐந்தை தேர்ந்தெடுப்போம். இந்த ஐந்தில் நான்கின் இடத்தை போலிகள் பிடித்து விட்டால், படித்தே ஆக வேண்டிய சிறந்த நூல்களை நம் வாழ்நாளில் படிக்க முடியாமலேயே போய்விடும். நம் வாழ்நாள் எல்லை அற்றது என்றால் பிரச்சினை இல்லை. போலிகள், அசல்கள் என எல்லாவற்றையும் படிக்கலாம். ஆனால் நம் குறுகிய வாழ்நாளில் அனைத்தையும் படிக்க முடியாது. அப்படியே படித்தாலும் ஒரு ஃபேக் நூலை படிக்கிறோம் என்ற விழிப்புடன் படிப்பது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர முடியும்.
ஃபேக் இலக்கியம் என்றால் என்ன ? போலியான ஒன்றை நம்மை நம்பச் செய்வதே ஃபேக் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. ஒரு நாவல் வெளிவரும்போது உணர்ச்சி வசப்பட்டு சிலர் அதைப் பாராட்டி விடுவார்கள். மீள் வாசிப்பின்போது அந்தப் பாராட்டை திரும்பப் பெறுவது உண்டு. எனவே ஒரு நாவலின் உண்மைத்தன்மையை அறிய கொஞ்ச காலமாவது அதற்கான எதிர்வினைகளையும், அந்த நாவலையும் தொடர்ந்து கவனிக்க வேண்டி இருக்கிறது. ஃபேக் நாவல் அல்லது சிறுகதை என தனி ஒருவரின் தீர்ப்பை வைத்து முடிவு செய்ய முடியாது.
உதாரணமாக ஜி.நாகராஜனின் எழுத்துகள் அவை வெளிவந்த காலகட்டத்தில் முக்கியமானவைதான். அதுவரை பேசாத கதைக்களனை பேசியதால் அதிர்ச்சி அலைகள் உருவாகின. அந்த அடிப்படையில் பாராட்டப்பட்டது. சிலர் எதிர்க்கவும் செய்தனர். அந்த சர்ச்சைகள் இல்லாத இன்றைய நிலையில் அவை எப்படி மதிப்பிடப்படுகின்றன என்பதே முக்கியம். ஒரு நாவல் வெளிவரும்போதே, சென்சார் போர்டு போன்ற ஓர் அமைப்பு ஃபேக் நாவல் என தரம் பிரிப்பது இயலாத ஒன்று .
அவரது பூர்வாசிரமம் என்ற கதையை பார்க்கலாம். பாலியல் தொழிலாளி ஒருத்தியை தேடிச் செல்கிறான் ஒருவன். அவளுடன் பேசி விட்டு, சுகித்து விட்டு கிளம்புகிறான். அவளை அவனால் மறக்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்து மீண்டும் அவளைப் பார்க்கிறான். அவள் இல்லை. அவளுக்குத் திருமணம் ஆகி போய்விட்டதாகவும் இப்போது பாலியல் தொழில் செய்வதில்லை என்றும் சொல்கிறாள் அவள் அம்மா. அவன் ஏமாற்றம் அடைகிறான். அவளுக்குப் பாவமாக இருக்கிறது. சரி வந்தது வந்துட்ட, நீ ஏமாறவேண்டாம், என்னை எடுத்துக்கொள் எனச் சொல்லி அவனை சந்தோஷப்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை கச்சிதமாக முடித்து அனுப்புகிறாள். அதற்காக காசுகூட வாங்குவதில்லை. இலவச சேவையாம்.
இந்தக் கதையை படித்தால், பாலியல் தொழிலாளிகளின் கஷ்டங்கள், வலிகள் என எதுவும் நமக்குப் புரிவதில்லை. அவர்கள் என்னவோ மனப்பூர்வமாக இதைச் செய்வது போலவும், கஸ்டமர் சேடிஸ்ஃபேக்ஷன் மிக முக்கியம் எனக் கருதும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்போல நடப்பதாகவும் காட்டியுள்ளார். ஒரு பெரிய பிரச்சினை ஒன்றை நீர்த்துப் போகச்செய்து ரொமாண்ஸ் செய்கிறது இந்த்க் கதை.
ஆனால் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக குப்பை என ஒதுக்கிவிட முடியாது. மொழி ஆளுமை, சித்திரிப்பு என அழகாக உள்ளது. எங்காவது இது உண்மையாக நடந்திருக்கவும்கூடும். ஆனால் அது கலாபூர்வமான அனுபவத்தை தரவில்லை. கதை ஆசிரியரை நாம் எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஃபேக் கதைகளில் தேங்கிவிட்டால், உண்மையான படைப்புகளைப் படிக்க நேரம் கிடைக்காமல் போய்விடும்.
உதாரணமாக, ஒரு சிறுகதையில் ஒரு பாலியல் தொழிலாளியின் வலியை அற்புதமாக படைத்துக்காட்டி இருப்பார் மாப்பசான். தமிழ் சூழலில் எத்தனைபேர் அதை படித்திருப்பார்கள்.
ஃபிரெஞ்சு, ஜெர்மன் யுத்த காலகட்டத்தில் சில ஃபிரெஞ்சு குடியானவர்கள் சிலர் வேறொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். அவர்களுடன் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருத்தியும் செல்கிறாள். அவர்களுக்கு தன்னிடம் இருந்த உணவுப் பொருட்களை கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்கிறாள். வழியில் அவர்கள் ஜெர்மன் அதிகாரியிடம் சிக்கிக்கொள்கின்றனர். அந்த அதிகாரி, அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் தன்னுடன் படுக்க வேண்டும் என்கிறான். அவள் கோபமாக மறுக்கிறாள். மற்றவர்களும் அவளை ஆதரிக்கின்றனர். அதிகாரியோ பிடிவாதமாக இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் மனம் மாறுகின்றனர். அதிகாரியின் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி சம்மதிக்கச் செய்கின்றனர். அவள் தன் தன்மானத்தை விட்டுக்கொடுத்து, எதிர்தரப்பு அதிகாரியுடன் படுத்து, அனைவருக்கும் விடுதலை வாங்கித் தருகிறாள். கிளம்பியதும் அவர்கள் நன்றி மறந்து, அவர்கள் கணவான்கள் போலவும் அவள் மட்டும் அற்பப் பிறவி போலவும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு உணவும் விடுதலையும் அளித்த அவளுடன் பேசுவதும் இல்லை. தமது உணவை அவளுடன் பகிர்வதும் இல்லை. கதையில் இறுதியில் அவளுடன் சேர்ந்து நாமும் கண்ணீர் சிந்துகிறோம்.
இந்தக் கதையை படித்தால் அன்றைய சமூகச் சூழல் (அந்தப் பயணிகள் அன்றைய சமூகத்தை பிரதிபலிக்கும்படி சித்திரிக்கப்பட்டுள்ளனர்), தேச சூழல், புறக்கணிப்பின் வலி என மறக்க முடியாத அனுபவமாக நம்முள் சேகரமாகிறது. பலவீனமான ஒருவர் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு என்ற அர்த்தத்தில் இது நடந்த இடத்தையும் காலத்தையும் மீறி ஒட்டு மொத்த பார்வையை அளிக்கிறது. இந்த அனுபவம் பூர்வாசிரமம் கதையில் கிடைப்பதில்லை. இதுதான் அசலுக்கும் போலிக்குமான வித்தியாசம்.
நாளை மற்றுமொரு நாளே, குறத்தி முடுக்கு போன்ற ஆக்கங்களை படிக்கும்போது, நமக்குள் எதுவும் நிகழ்வதில்லை. வாசகன் குறுக்கீட்டுக்கோ, கற்பனைக்கோ எந்த இடைவெளியும் இல்லை. ஆனால் வடிவ நேர்த்தி, சுவையான நடை, வித்தியாசமான பாத்திரங்கள் என இருப்பதால் இவற்றை புறக்கணிக்கவும் முடியாது. கண்டிப்பாக இவற்றை வாசிக்க வேண்டும். ஆனால் ஃபேக் இலக்கியத்தைப் படிக்கிறோம் என்ற பிரக்ஞையும் வேண்டும்.
குறத்தி முடுக்கு நாவலில் தங்கம் என்ற பெண் தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டு பாலியல் தொழில் செய்து வருகிறாள். அவளை ஒருவன் உள்ளன்போடு நேசிக்கிறான். திருமணம் செய்யவும் ஆயத்தமாக இருக்கிறான். அவளோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என தன் கணவனுடனேயே வாழப் போய்விடுகிறாள். இப்படி 'கற்புக்கும்' கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதற்கும் புதிய விளக்கம் அளிப்பது சராசரி தமிழ் மனதுக்கு குதூகலம் ஏற்படுத்தினாலும், அதில் யதார்த்தமும் இல்லை. நமக்கு எந்த வித உணர்வெழுச்சி ஏற்படுவதும் இல்லை.
நாளை மற்றுமொரு நாளே விளிம்பு நிலை மக்களைப்பற்றிப் பேசுகிறது. ஆனால், அவர்களது வலி, சந்திக்கும் ஏமாற்றம், அவர்களது மகிழ்ச்சி என எதுவும் நம் மனத்தில் பதிவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அற்புதத் தெறிப்புகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு சாகச நாவலாகவே நம் மனத்தில் பதிகிறது. கதையின் வடிவத்திலும் நடையிலும், சுவையான சம்பவங்களிலும் காட்டப்படும் அக்கறை சமூக பாதிப்பு என்பதில் காட்டப்படவில்லை. நவீனத்துவ காலகட்டத்தில் உருவான ஒரு சார்பு எதார்த்தவாதமே நாவல் முழுக்க விரவி இருக்கிறது. கதையில் வரும் அனைத்து பாலியல் தொழில் பெண்களும் மனைவி என்ற அந்தஸ்தை பெரிதாக கருதுகிறார்கள். ஓர் ஆண் தான் அவர்களது இழி நிலைக்கு காரணமாக இருந்தாலும், ஆணின் பிடியில் இருந்து அவள் தப்ப நினைப்பதில்லை. என்ன இருந்தாலும் ஆணுடன் இருப்பதே பாதுகாப்பு என்ற சிந்தனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தன்னுடன் வாழும் மீனாவை யாருடனாவது ஒப்படைத்து அவளை செட்டில் செய்வதற்கு கந்தன் அப்படி உருகுகிறான். மகள் திருமணத்துக்காக உருகும் யதார்த்த உலக தந்தை என்ற கான்சப்ட் லேசாக மாற்றப்பட்டு இருக்கிறது .அவ்வளவுதான். அதாவது நவீனத்துவம் என்ற பழைய சரக்குதான், போத்தல் மட்டும் மாறி இருக்கிறது. நாவல் என்பது திட்டவட்டமான முடிவை அளிக்கத் தேவையில்லை. அளிக்கவும் கூடாது. ஆனால் ஒட்டுமொத்த பார்வையை அளிக்க வேண்டும். இந்த நாவலைப் பொருத்தவரை சுவையாக படைக்கப்பட்ட ஓர் ஆவணமாகவே நின்று விடுகிறது.
செய்தித் தாளைப்போல நடப்பதை அப்படியே பதிவு செய்வது இலக்கியம் அல்ல. அதுவரை சொல்லப்படாத வாழ்க்கையை பதிவு செய்தது அன்றைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இப்போது படிக்கையில் நமக்கு ஓர் ஒட்டுமொத்த பார்வை தருகிறதா, உணர்வெழுச்சி ஏற்படுத்துகிறதா என்பது கேள்வி.
உதாரணமாக புயலிலே ஒரு தோணி நாவல் நடக்கும் கதைக் களனும், காலமும் நமக்கு அன்னியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் கதை நமக்கு இன்றும்கூட புதிய அர்த்தங்களைத் தருகிறது
கடல் கூத்து எவ்வளவு நேரம் நீடித்தது என கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ யாரும் கடிகாரம் பார்க்க்கவில்லை. பார்த்தபோது, எல்லா கடிகாரங்களும் நின்று போய் இருந்தன. என்பது போன்ற வரிகள், வெட்டப்பட்ட தலைகளுக்கு தலை சீவிவிடும் காட்சி என நம்மை சொற்களுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு இழுத்துக் கொண்டுச் செல்கிறது.
மொழியின் ஊடாகவே மனிதன் சிந்திக்கிறான், உணர்கிறான், வாழ்கிறான். ஆனால் மொழி என்பது வெறும் ஊடகம்தான் என்பது அவன் ஆழ் மனத்துக்கு தெரிந்திருக்கிறது. மொழிக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும் ஒன்றை உணர விழைகிறான். அதற்கு மொழி உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறான் என்கிறார் ஜெர்மானிய அறிஞர் வில்ஹெம் வான் ஹம்போல்ட். மொழி ஆளுமை, செறிவான நடை ஆகியவை முக்கியம்தான். ஆனால் அவை மட்டுமே போதாது . மொழி மூலம் மொழிக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புயலிலே ஒரு தோணியில் நடக்கும் இந்த ரசவாதம் நாளை மற்றுமொரு நாளேயில் நடக்கவில்லை.
விளிம்பு நிலை வாழ்க்கையை பதிவு செய்வது என்பது வேறு விஷயம். அந்தப் பதிவால் என்ன நிகழ்ந்தது என்பதே முக்கியம். உதாரணமாக காலத்தின் சுருக்கமான வரலாறு என்ற ஸ்டீவன் ஹாக்கின்ஸ் நாவல் முக்கியமான அறிவியல் பதிவு. ஆனால் அது நம்மை எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யார் படித்தாலும் ஒரே விதமாகத்தான் புரியும் . ஆனால் ழார் பத்தாய் நாவலான கண்ணின் கதை அப்படி அன்று. நம்மை அது ஏதோ செய்து விடுகிறது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் தெரிகிறது. சிலருக்கு அது பாலியல் கதையாகத் தோன்றலாம். சிலருக்கு போரடிக்கலாம். சிலருக்கு வேறோர் அனுபவம் கிடைக்கலாம். நூறு பேர் படித்தால் நூறுவித கருத்துகள் சொல்லக்கூடும். வெறும் பதிவில் இது நிகழாது.
இலக்கியம், படைப்பாற்றல் என்பது யதார்த்தத்தை பதிவு செய்வது மட்டுமா.. ஒரு சம்பவத்தைக் கவனியுங்கள்
சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகள் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். லெனின் அதை பார்வையிட வந்திருந்தார். பலரும் தம் கைத்திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். வண்ணங்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா, ஆர்ப்பரிக்கும் அருவி, சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி, பனி அடர்ந்த புல்வெளி என ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சும்வண்ணம் வரைந்து கொண்டு இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஒரு சிறுவனின் ஓவியம் அவரை திகைக்க வைத்தது. அவன் ஓவியம் வரையாமல் கறுப்பு நிறத்தை தீட்டிக்கொண்டு இருந்தான். என்ன செய்கிறான் என விசாரித்தார். வானத்தை வரைகிறேன் என்றான் பையன். லெனினுக்கு குழப்பம். தம்பி, வானத்தை நீ பார்த்ததில்லையா. ஊர்ந்து செல்லும் மேகம், நட்சத்திரம், சிறகடிக்கும் பறவை, ஒளி வீசும் நிலா என்றல்லவா வானம் இருக்கும் என்றார். அவன் அவரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். சென்றார். அது ஒரு சேரி போன்ற பகுதி. ஒழுங்கான சாலை இல்லை. சுகாதாரமற்ற சூழல். தாங்க முடியாத துர் நாற்றம். குறைந்தபட்ச வசதிகளுடன் ஒரு வீடு. உள்ளே அழைத்துச் சென்றான். என் ஜன்னல் வழியாகப் பாருங்கள் என்றான். ஒரு தொழிற்சாலை கரும்புகையை கக்கியபடி சூழலை மாசு படுத்திக்கொண்டு இருந்தது. இத்தைகைய சூழலில் வாழும் ஒருவனுக்கு வானம் அழகு கொஞ்சும் வெளியாகவோ தோன்றும்? கலை என்பது இருப்பதை பிரதிபலிப்பதல்ல. இருப்பதன் பொருளை சொல்வது என்கிறார் அரிஸ்டாட்டில். வானம் எப்படி இருக்கிறது என்பதை பதிவு செய்ய ஒரு புகைப்படக் கருவி போதும். ஆனால் வானம் எப்படி தோன்றுகிறது என்பதை தன் பார்வையில் சொல்லி அதன் மூலம் ஒரு தரிசனத்தை அளிக்க ஒரு கலைஞனால்தான் முடியும். அந்த சிறுவனில் ஒரு கலைஞனைக் கண்டார் லெனின். அவனை தனியே அழைத்து சென்று சிறப்புப் பயிற்சிகள் அளிக்க உத்தரவிட்டார். அந்தச் சிறுவன் பிற்காலத்தில் சோவியத் யூனியனுக்கான அடையாளச் சின்னம் உருவாக்கும் அணியில் பெரும்பங்கு ஆற்றினான் என்பதெல்லாம் வரலாறு.
வாழ்க்கையை, சமகால சூழலை பதிவு செய்வது தவறு என்பதல்ல நாம் சொல்வது. ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான பணிதான். அதையும்கூட கலைப்பூர்வமாக செய்பவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால் பதிவு செய்தலுக்கு இலக்கிய பிரதிக்கும் இடையேயான வித்தியாசத்தைப் பற்றிய பிரஞ்ஞை மிகவும் முக்கியம். ஆழி சூழ் உலகு நாவல் கடல் வாழ்க்கையை பதிவு செய்வதால் மட்டும் முக்கிய நூலாக கருதப்படவில்லை. அந்த வாழ்க்கையின் ஊடாக நிலவும் காதல், காமம், துரோகம், பிரிவு என மானுட வாழ்வை அங்கே பிரதிபலிக்க செய்வதால்தான் அது முக்கிய நாவலாகிறது. சோ.தர்மனின் கூகை நாவல் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வை செய்தித்தாள்போல பதிவு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது. வலுவான உடல் அமைப்பும், பலமும் கொண்ட கூகை, தன் பலம் அறியாமல் துரத்தப்படும் வாழ்வியல் அபத்தத்தை குறியீடாக மாற்றுவதன் மூலம் கலைப்படைப்பாக உருவெடுக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலை படித்தால் கிராம அனுபவமோ, ஜல்லிக்கட்டு அனுபவமோ இல்லாத ஒருவனுக்குக்கூட அவனுக்கான பிரத்யேக அனுபவம், பார்வை கிடைத்து விடுகிறது. மிருகத்தை அதாவது இயற்கையை அடக்கி ஆள முனையும் ஆதி மனிதனின் இச்சையை நாவலில் கண்டடைய முடியும். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கான நுண் விபரங்கள், அன்றைய வாழ்வியல், தொழில் நுட்ப பயிற்சிகள் என ஆவணமாகவும் திகழ்கிறது. ஆவணமாக்கல் மட்டுமே கலையாகாது என்பதே நாம் சொல்வது. உதாரணமாக அகிரா குரசேவாவின் ரோஷமான் திரைப்படத்தில் மழை ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறது. அங்கு மழை பெய்கிறது என்ற தகவலை பதிவு செய்வதன்று அவர் நோக்கம். இயற்கை எதனாலும் பாதிக்கப்படாமல் அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு அதன்போக்கில் சென்றுகொண்டே இருக்கிறது என்ற குறியீடாகவே மழை பயன்பட்டுள்ளது. எனவே அந்த மழை அனைவருக்கும் பொதுவான ஒரு மொழியாக மாறி விடுகிறது.
ஃபேக் எழுத்துகளை படைக்கும் நிர்ப்பந்தம் எப்படி ஒரு படைப்பாளிக்கு உருவாகிறது? உதாரணமாக பாலகுமாரனை பார்க்கலாம். அவர் பின் நவீனத்துவம், மெட்டா ஃபிக்ஷன், இருத்தலியல் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆன்மீகம், விழிப்புணர்வு என அவருக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டு இருக்கிறார். திடீரென யாராவது புகுந்து, இவ்வளவு பேசும் நீங்கள் தலித்திய நாவல் ஏன் எழுதவில்லை. அவர்கள் மேல் உங்களுக்கு அக்கறை இல்லையா எனக் கேட்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் சற்று யோசிப்பார். சரி நாமும் ஒரு தலித்திய நாவல் எழுதுவோம் என நினைத்து மேலோட்டமாக ஒரு நாவல் எழுதுவார். தலித்துகள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களது அவமானங்கள், அவர்களது வீரம் செறிந்த வரலாறு, அவர்களது தொன்மங்கள், நம்பிக்கைகள் போன்றவை எதுவும் தெரியாமல் எழுதப்படும் நாவல் ஃபேக் நாவலாக உருவெடுக்கிறது. இத்தகைய நாவல்களில் தொழில் நுட்பங்களும் சித்திரிப்புகளும் சரியாக இருக்கலாம் . ஆனால் இலக்கியத்தின் மற்ற கூறுகளான உணர்வெழுச்சி, நிகழ்வாழ்க்கை அனுபவம் போன்றவை இந்த நாவல்களில் கிடைக்கவே கிடைக்காது. முன் விளையாட்டு, கண்டு ரசித்தல், கேட்டு அனுபவித்தல், சுவைத்து மகிழல், மென்மையாக கிள்ளுதல், இதமாக கடித்தல், பதமாக தட்டுதல் என எல்லாமே முயக்கத்துக்கு அவசியம்தான். ஆனால் உச்ச நிலை எனும் ஆர்கசம் எய்தப்படாவிட்டால், அது முழுமை ஆகாது அல்லவா. அதுபோல ஃபேக் இலக்கியங்களில் முழுமை உணர்வு கிடைக்கவே கிடைக்காது. மொழி அழகு, செறிவார்ந்த நடை போன்றவை இருந்தால்தான் மனதை ஈர்க்க முடியும். நாவலை படிக்க வைக்க இது அவசியம் .ஆனால் இவை மட்டுமே நாவலின் வெற்றிக்கு போதாது. மொழியின் மூலம் மொழியற்ற உணர்வை, உணர்வெழுச்சியை அடைய செய்வதே நாவலின் படைப்பாற்றலின் வெற்றி. சாகச நாவல்கள், பல்ப் எழுத்துகளுக்கு இது தேவை இல்லை. இந்த உணர்வெழுச்சியை எழுப்பாத எழுத்துகள் இலக்கியப் படைப்புகள் என முன்வைக்கப்படும்போதுதான் அவை ஃபேக் என அழைக்கப்படுகின்றன.
சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் ஃபேக் எழுத்துக்கு இன்னொரு சான்றாகும். வெளி நாட்டவர் இந்தியாவுக்கு இன்ப சுற்றுலா வந்துவிட்டு மேலோட்டமாக கருத்து சொல்வார்களே. அந்த பாணியிலான நாவல் இது. இதை பின் நவீனத்துவ நூலாக சிலர் முன்வைக்கிறார்கள். பின் நவீனத்துவம் என்பது புனைவை புனைவாகவே முன் வைக்கிறது. மெட்டா ஃபிக்ஷன் எனச் சொல்லப்படும் பாணியை கையாள்கிறது. லட்சியக்கனவுகளை நிராகரித்து பகடி செய்கிறது. தன்னையே நிராகரிக்கிறது. ஆனால் ஜேஜே சில குறிப்புகள் என்ற நாவலில் ஓர் எழுத்தாளனின் ஆளுமையை மையமாக வைத்தே நாவல் சுழலுகிறது. இந்த ஹீரோயிசமோ கடைசியில் அந்த எழுத்தாளனின் வீழ்ச்சிக்காக கண்ணீர் சிந்தும் சோக காவியமோ பின் நவீனத்துக்கு முற்றிலும் எதிரானது. இந்த காரணங்களால்தான் அந்த நாவல் வந்தபோதே பின் நவீனத்துவவாதிகளால் இந்த நாவல் புறக்கணிக்கப்பட்டது. பின் நவீனத்துவம் என்பதை தவிர்த்துவிட்டு ஒரு படைப்பாகவும் அது நம் மனதை கவரவில்லை. அது குறிப்பிட்ட காலத்துக்கான முக்கியமான படைப்பு என்ற பெயரை ஒரு புதிய வடிவத்துக்காக பெறுகிறதே தவிர காலம் கடந்த படைப்பாக ஏற்க இயலாது. இருத்தலிய கோட்பாட்டை சொல்ல முயன்று இருக்கிறார் நாவலாசிரியர். அதில் வென்றாரா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அலுப்பூட்டும் அளவுக்கு ஜேஜே கதாபாத்திரத்தின் சிந்தனைகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த சிந்தனைகளை எப்படி வந்தடைந்தான், அந்த சிந்தனைகளை செயல்படுத்த என்ன செய்தான் என்பதற்கு மண் சார்ந்து, காலம் சார்ந்து எந்தப் பின்னணியும் இல்லை. அவனுடைய எதிர்தரப்பு என்பதும் இல்லை. சமூகம் நம் மேல் சுமத்தும் விழுமியங்கள், மனரீதியான அழுத்தங்கள் போன்றவற்றுக்கு எதிரான தனி நபர்வாதத்தை நாவல் முன் வைக்கிறது. ஆனால் இது குறித்த முரணியக்க பார்வையோ, இருதரப்பு விவாதங்களோ இல்லவே இல்லை. அதை இன்றைய வாசகன் ஒருவன் படித்தால் அவன் அந்தப் பிரதியை எந்த விதத்திலும் இன்றைய கால அடிப்படையில் புரிந்துகொள்ளவே முடியாது. ஜே.ஜே. என்பவரைப்பற்றிய துதியாக மட்டுமே நாவல் நின்று விடுகிறது.
ஆனாலும் ஊடக பலம், சு.ராவின் ஆளுமைத் திறன், அற்புதமான மொழி வளம், கவிப்பூர்வமான சில சித்திரிப்புகள், அவருடைய சீடர்களின் ஆதரவு போன்றவை காரணமாக அதன் புகழ் இன்றும் சற்றும் மங்காமல் நீடிக்கிறது. இவர்களில் நாவல் வெளிவந்த புதிதில் சாரு அதை எதிர்த்து சிறு பிரசுரம் வெளியிட்டார். க.நா.சு., தி.க.சி. போன்ற பல விமர்சகர்களும் நாவலை நிராகரித்தனர். அப்போது நாவலைப் பாராட்டிய ஜெயமோகன் காலப்போக்கில் அவரும் எதிர்ப்பு ஜோதியில் கலந்துவிட்டார்.
நகுலன், அசோகமித்ரன், தஞ்சை பிரகாஷ், சிங்காரம் என பலர் இருக்கும்போது ஃபேக் நாவல்களை ரசிக்கும் போக்கை புரிந்துகொள்ள 'மார்க்ஸ் பிறந்தார்' (எழுதியவர் ஹென்றி வோல்கோவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ) என்ற நூலில் இருந்து ஒரு மேற்கோளை கவனியுங்கள்.
“எளிய மனம் கொண்டவர்கள் ( ஃபிலிஸ்டைன்கள்) எப்போதும் மூலத்தை விட கேலி சித்திரத்தையே விரும்புவார்கள். புயற்காற்று அவர்களுக்கு பீதியை கொடுக்கிறது. ஆனால் அதற்கு பிறகு மிஞ்சும் புழுதி அவர்களிடம் குதூகலம் ஏற்படுத்தும்“.
இப்படி ஃபேக் எழுத்துக்கு உதாரணங்களை கொடுத்துக்கொண்டே போகலாம். ஜே.ஜே. சில குறிப்புகளையும், ஜி.நாகராஜன் படைப்புகளையும் மட்டும் இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது. ஜே.ஜே. சில குறிப்புகளை முன் மாதிரியாகக்கொண்டு புற்றீசல் போல பல 'பின் நவீனத்துவ' நாவல்கள் வெளிவந்தன. அவை ஃபேக் என்ற அடையாளத்தைக்கூட பெற முடியாமல் காலமென்னும் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. அவற்றின் பெயர்களை எல்லாம் இது போன்ற கட்டுரைகளில் நினைவுபடுத்தினால்தான் உண்டு.
அதேபோல ஜி.நாகராஜனை முன் மாதிரியாகக்கொண்டு அதிர்ச்சி மதிப்பீடுகளை நோக்கமாகக் கொண்டு புற்றீசல்கள் கிளம்பின என்பதும் வரலாறு. எனவேதான் ஒரு சோற்றுப் பதமாக இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடவேண்டி இருந்தது.
இலக்கியம் என்பதில் ஃபேக் என்பது ஆபத்து என்றால் செய்திகளில் ஃபேக் என்பது இன்னும் மோசமான ஆபத்தாகும். உதாரணமாக காசா பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் என்ற இயக்கத்துக்கும் மோதல் என செய்திகள் வெளியாகி நம் மனத்தில் பதிந்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தை பல நாடுகள் தீவிரவாத இயக்கமாகவே கருதவில்லை என்பதே உண்மை. காசா பகுதியை ஆட்சி செய்து வரும் அவர்கள் தம் பகுதி தாக்கப்படும்போது எதிர்த்துப் போராடுகிறார்கள். அதை அந்த இயக்கத்தின் மோதலாக சித்திரிப்பதே தவறு. உதாரணமாக கார்கிலில் பாகிஸ்தான் அத்துமீறியபோது, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அதை பிஜேபி படை பதிலடி கொடுத்தது என எழுதினால் அது தவறான தகவல் அல்லவா? அப்போது பிஜேபி ஆட்சி செய்தாலும், போரில் ஈடுபட்டது பிஜேபி தீவிரவாதிகள் அல்லர். தம் பகுதியை பாதுகாக்க இந்தியா எடுத்த நடவடிக்கை அது. அது போல, இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை, இஸ்ரேலுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான மோதலாக செய்தி வெளியிடுவது ஃபேக் ரிப்போர்ட்டிங் ஆகும் .
சமீபத்தில் யுக்ரேனில் ஒரு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அனைவரும் அவசர அவசரமாக அது போராளிகளின் (பிரிவினைவாதிகளின் ?) வெறிச்செயல் என செய்தி வெளியிட்டனர். ரஷ்ய அதிபர் புடின் பயணம் செய்த விமானத்தை சுட்டு வீழ்த்த யுக்ரேன் செய்த சதியாகவும் இருக்கலாம் என்பதை பலர் சுட்டிக்காட்டவில்லை. காலப்போக்கில் இது போன்ற ஃபேக் செய்திகளே நம் மனத்தில் பதிந்து விடுகின்றன. தமிழ் மீனவர்கள் சிறைப்பிடிப்பு (இந்திய மீனவர்கள் இல்லை), ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் (சீக்கிய மாணவர்கள் இல்லை) போன்றவையும் சிறந்த உதாரணங்கள் ஆகும்.
ஃபேக் என்பதில் அதிகம் பாதிக்கப்பட்ட இலக்கிய வடிவம் கவிதை எனலாம். குறிப்பாக ஹைக்கூ அதிகம் பாதிக்கப்பட்டு இன்று மூன்று வரிகளில் எழுதப்படும் எல்லாமே ஹைக்கூ என அழைக்கப்பட்டு வருகிறது.
"வங்கியில் நகை அடகு வைத்தேன்
மீட்டு விட்டேன்.
வங்கி ரிசப்ஷன் அழகியிடம் மனதை அடகு வைத்தேன்
மீட்க முடியவில்லை..
சுதந்திரம் தினம்
கொண்டாடினார்கள்
சிறைக்கைதிகள்
போலீஸ் காவலுடன்
பவனி வந்தார்
உலகை காக்கும் கடவுள்"
இப்படி எழுதி கவிதை என்கிறார்கள். இவற்றையாவது விடலைத்தனமான கவிதை எனலாம் . ஆனால் இலக்கியம் சார்ந்து செயல்படும் பல கவிஞர்களேகூட ஃபேக் கவிதைகளே எழுதி வருகிறார்கள். பட்டியல் கவிதை, ஃபார்முலா கவிதை, சமூக சீர்திருத்த கவிதை, கிசுகிசு பாணி கவிதை என எழுதி தமிழில் கவிதைக்கான இடமே இல்லாமல் செய்து விட்டார்கள். வாய்ப்பாடு கவிதை ஒன்றை தனது சிறந்த கவிதை என நம்பும் ஓர் இலக்கியவாதி, இலக்கியக் கூட்டங்களில் தவறாமல் அந்தக் கவிதையை சொல்லி பார்வையாளர்களை கலக்கத்துக்கு ஆளாக்குவதுண்டு.
கட்சிகளைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் ஃபேக் கட்சிகள் என எதுவும் இருப்பதாக சொல்ல முடியாது. எல்லா கட்சிகளின் நோக்கங்களும் மக்களுக்கும் கட்சியினருக்கும் தெளிவாக தெரிந்துள்ளன. ஜாதி நலன், குடும்ப நலன், மத நலன் என அவர்கள் நோக்கங்களை தெரிந்து வைத்துக்கொண்டேதான் எல்லா கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கின்றனர். இவற்றில் இடதுசாரிக் கட்சிகளை ஃபேக் கம்யூனிச இயக்கங்கள் என ஒரு வாதம் உண்டு . ஆனால் வெகுஜனவாதமாக இல்லை. அகில இந்திய அளவில் ஆம் ஆத்மி கட்சி மீது ஃபேக் கட்சி என்ற குற்றச்சாட்டு உண்டு.
பொழுதுபோக்கு, மதம், ஜாதி, கட்சி நலன்களுக்காக நடத்தப்படும் பத்திரிகைகள் என்ற அடையாளத்துடன் நடத்தப்படும் பத்திரிகைகள் ஆபத்தானவை அல்ல. ஆனால் நடு நிலை, இலக்கியம் என்ற அடையாளங்களுடன் நடத்தப்படும் சார்பு நிலை பத்திரிகைகள் ஆபத்தானவை. அது போன்ற ஃபேக் இலக்கிய பத்திரிகைகள் இங்கு ஏராளம் உண்டு. ஒரு குறிப்பிட்ட கட்சி பிரமுகரின் நிதி உதவியுடன் பத்திரிகை ஆரம்பிக்க ஒரு கவிஞர் இன்னொரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டே முயற்சித்ததாகவும், அந்த பிரமுகரின் அன்பை சம்பாதிக்கும்பொருட்டு தான் ஆசிரியராக இருந்த பத்திரிகை சந்திப்புகளின்போது அலைபேசியை இயக்கத்தில் வைத்து ரகசியங்களை வெளியே கடத்தியதாகவும், அந்தப் பத்திரிகை உரிமையாளர் குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டு சரியான முறையில் எதிர்கொள்ளப்படவில்லை. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல அந்த பிரமுகர் சார்ந்த கட்சியிலேயே அந்த கவிஞர் ஐக்கியமாகி, அந்த இலக்கிய பத்திரிகையை கட்சி பத்திரிகையாக்கி விட்டது ஒரு பின் நவீனத்துவ காமெடி.
இவற்றில் எல்லாம் இருக்கும் போலிகள் ஒட்டுமொத்த சமுதாயத்தைப் பாதிக்கின்றன ஆனால் ஃபேக் பெண்ணியம் என்பது பெண்களை மட்டுமே அதிகம் பாதிக்கிறது. பெண்ணியம் சார்ந்த எழுத்துகள், காத்திரமான பணிகள் என ஒரு தரப்பு இயங்குவது மனத்துக்கு நிறைவளிக்கும் விஷயம். ஆனாலும் சில துறைகளில் ஃபேக் இருப்பதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரன் பாதிக்கப்பட்டால், அந்த ஜாதிக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆதரவளிப்பார்கள். மதம், கட்சி என பலவற்றின் அடிப்படையில் இப்படி சேர்வார்கள் . ஆனால் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றால் சக பெண் எழுத்தாளர், சக பெண் மருத்துவர் என எந்த அடிப்படையிலும் பெண்கள் ஒன்றாகச் சேர்வதில்லை.. ஆனால் அனைவரும் பெண்ணியம் பேசக்கூடியவர்கள் என்பது வினோதம். ஆங்கில மொழி பயன்பாட்டில் ஆணாதிக்க வார்த்தைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டன. சேர்மன் என்பது சேர்பெர்சன் என மாறிவிட்டது. ஆக்ட்ரஸ் போன்ற வார்த்தைகள் ஆக்ட்டர் என மாறி விட்டன. எண்ணம் உறுதியாக இருந்தால், அவன் தான் எண்ணியதை நிச்சயம் அடைவான் என்பது போன்ற வாக்கியங்கள் வந்தால், அவன் / அவள் அடைவான் / அடைவாள் என இருபாலரையும் எழுதுகின்றனர். அல்லது புத்தக முன்னுரையில், இந்தப் புத்தகத்தில் அவன் என வருவது அவள் என்பதையும் குறிக்கும் என தெளிவாக சொல்லி விடுகின்றனர். இதெல்லாம் ஆங்கில சூழலில் பெண்ணிய இயக்கங்கள் எழுப்பிய குரலின் விளைவாகும். ஆனால், தமிழ் சூழலில் இன்னமும் நடிகை, ஆசிரியை, தலைவி, கவிதாயினி என்றே மரியாதைக்குறைவாக குறிப்பிட்டு வருகின்றனர். இதை மாற்ற பெண்ணிய இயக்கங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. செல்வி, திருமதி என்ற பிரிவை இன்னமும் ஒழிக்கவில்லை. கற்பழிப்பு என்ற சொல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. சில பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பதை மறுக்கவில்லை. ஆனால் ஃபேக் பெண்ணியவாதிகளே அதிகம் என்பதால் எதுவும் மாறவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதில் ஃபேக் பெண்ணியவாதிகளின் போலித்தனம் இன்னும் மோசமானது. தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு கேட்பார்கள். ஆனால் தமது கட்சிகளில் அவர்களாகவே முன்வந்து இட ஒதுக்கீடு கொடுக்க வலியுறுத்துவதில்லை.
பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்ற இன்னும் சில தீவிரமான விஷயங்கள் உள்ளன. ஆனால் அவை பெண்ணியவாதிகள் மட்டும் குரல் கொடுக்க வேண்டிய விஷயங்கள் அல்ல. பொதுவான பிரச்சினைகள் என்பதால் அவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
இப்படி பல தளங்களிலும் செயல்படும் போலிகளை ஒழிப்பது சாத்தியம் இல்லை என்றாலும் போலிகளைப் பற்றிய விழிப்புணர்வு சாத்தியமே. அதற்கு நம் மதிப்பீடுகளும் பார்வையும் உண்மையாக இருந்தால்போதும்.

1 comment:

  1. Dear Sir, this article reflects on the issues that how much havoc these falseness causes, and hinders real works. Well written article. Good work. Krishna

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா