Thursday, December 17, 2015

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் - என் பார்வையில்


கிளாசிக்  நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு மனத்தடை இருக்கும்.  பாதி படிக்கும்போது போரடித்தால் , நிறுத்தினால் அதுவரை படித்த நேரம் வீணாகி விடுமே என முழுதையும் படித்து , இன்னும் நேரம் வீணாகும்.

அதனால்தான் கரிச்சான் குஞ்சு படிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என சாருவே சொன்னபோதிலும்  நான் படிக்கவில்லை...

ஒரு மழை நாள் இரவில் தற்செயலாக பசித்த மானிடம் நாவலை எடுத்தேன்.. சில வரிகளிலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது. அந்த எழுத்தின் வசீகர தன்மை என்னை வென்று விட்டது..

உடல் பசி , ஆன்மிக பசி , அறிவு பசி என பசிகள் பல வகை , இதில் ஏதோ ஒரு பசி எல்லோருக்கும் இருக்கும். ஒரு பசி தீர்ந்தவுடன் அடுத்த பசி ஆரம்பிக்கும் என்றுதான் இன்றைய மனோதத்துவம் சொல்கிறது. நம் தத்துவ மரபும் இதைத்தான் சொல்கிறது..

பசிக்கு சாப்பிடுவது பசியை தீர்க்கிறதா அல்லது பசியை அதிகரிக்கிறதா அல்லது சாப்பிடுவது என்ற செயல் , பசி எனும் உணர்வை மழுங்கடிக்கும் ஒரு தீமையாக செயல்படுகிறதா என்பது நம் பலருக்கும் இருக்கும் குழப்பம்.


இதை கணேசன் , கிட்டா என்ற இரு பாத்திரங்கள் மூலம் அழகாக அலசுகிறது நாவல்.

கொஞ்சம்கூட போரடிக்காத நடை என்பது இந்த நாவலின் சிறப்பு. பின்னால் வரபோகும் முக்கிய காட்சிகளுக்கான குறிப்புகளை , ஆரம்பத்திலேயே ஆங்காங்கு தூவிச்செல்லும்  நடை திறமையான திரைக்கதை போல இருக்கிறது..

உதாரணமாக கணேசன் தன் கைப்பையை கட்டி அணைத்தவாறு உறங்குகிறான். அப்போது அவனுக்கு அந்த கைப்பை என்னவாக தோன்றுகிறது என்பதன் முக்கியத்துவம் அப்போது நமக்கு புரிவதில்லை. பிற்பாடு அது புரியும்போது அட என ரசிக்க வைக்கிறது..

கணேசன் என்பவன் அழகானவன் , சின்ன வயதில் இருந்தே பலராலும் விரும்பப்படுபவன். எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு பிற்காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அனைவராலும் அவமானத்தப்படும் அவல நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் மனதில்  நிறைவு இருக்கிறது..


கிட்டா என்பவன் சின்ன வயதில் தோல்விகளை மட்டுமே சந்தித்த்தவன். பிற்காலத்தில் செல்வந்தன் ஆகிறான். ஆனால் அவன் மனதில் தான் ஒரு தோல்வியாளன் என்றே தோன்றுகிறது. இப்படி சுவையான இரு துருவங்கள்

இந்த துருவங்களும் நாவலின் ஒரு கட்டத்தில் இணைவது ஒரு சுவாரஸ்யம்.

இது மட்டும் அல்ல . நாவலில் இப்படிப்பட்ட சுவையான நிகழ்ச்சிகள் ஏராளம்.

கிட்டாவின் அண்ணனை ஒரு பைத்தியக்காரன் என நினைக்கும்படி காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த அண்ணனால் கிட்டாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வது வாழ்வியல் அபத்தங்களில் ஒன்று.


வீடு தேடி அலையும் கணேசனுக்கு ஒரு வீடு கிடைக்கிறது. அந்த வீட்டில் இருப்பவர்கள் இவனால் பெரும் பலன் அடைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. அந்த நன்றியை அவர்களால் மறக்க முடியவில்லை. ஆனால் அவனை வீட்டில் வைத்திருப்பதிலும் சிக்கல். ஆனால் வீட்டை விட்டு துரத்தும் அளவுக்கு அவர்கள் தீயவர்கள் அல்லர். இப்படி ஒரு முடிச்சு..

காமமே வாழ்க்கை என வாழ்ந்த கணேசனை அனைவரும் துரத்தும் நிலையில் சில இளம்பெண்கள் சகோதர வாஞ்சையுடன் பாதுகாக்கிறார்கள்.. அன்பு எனும் உன்னதத்துடன் வாழ்பவர்களும் உண்டு என அறிவதுதான் கணேசன் வாழ்வில் உச்சம் என நாம் நினைக்கும்போது அவன் அவர்களிடம் இருந்து பிரிகிறான். இப்படி ஒரு சுவையான முரண்.

ஏதோ ஒரு இலக்குடன் கிளம்புவன் ஒரு கட்டத்தில் எந்த இலக்குமே தேவை இல்லை என முடிவெடுக்கும்போது அவன் அடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு எந்த சாலையிலும் செல்ல முடியும் என்ற நிலை ஏற்படும் மாற்றம்  ஜென் நிலை அளிக்கிறது..

கிட்டாவை எப்படியாவது ஓர் ஆளாக உருவாக்கி விட வேண்டும் என்ற தாயின் பரிதவிப்பு , ஊர் பெரிய மனிதரின் சின்னத்தனம் என எந்த ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளதுஅனாதரவாக ஊருக்கு வரும் கணேசனை ஒரு குருவாக நினைத்து உதவி செய்கிறார் பசிபதி எனும் காவலர். ஆனால் ஒரு வகையில் பசுபதியும் கணேசனுக்கு குருவாகி விடுகிறார்.

கணேசனை பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறியும் பெண் டாக்டர் , அவனை மணந்து கொள்ளும் பெண் , பிச்சை எடுக்கும் பெண் வாழ்வில் கணேசன் இணைவது என ரசித்துக்கொண்டே இருக்கலாம்..

அந்த பிச்சைக்காரியிடன் கணேசன் சினேகமாக பேசுவதை உணர்ந்த அவள் சின்னஞ்சிறு மகன் , கணேசன் முன் ஒரு துணியை விரித்து சில காசுகளை போட்டு வைக்கிறான். இதை பார்த்து அவன் பிச்சை எடுக்கிறான் என உணர்ந்து மக்கள் காசு போடட்டுமே என்ற அந்த தொழில் அறிவு கணேசனை கவர்கிறது..

இந்த இடம் நம்மை கவர்கிறது.. பிற்காலத்தில் அந்த சிறுவனை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுகிறான் கணேசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் இந்த வித்தியாசமான காட்சியை மறக்க முடியாது..

அதேபோல உதாவக்கரையாக இருந்த கிட்டாவின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறுவதும் அழகு, அவன் சந்திக்கும் முதிய்வர் - மனைவி - சீடன் சம்பவம் ஒரு ஹைக்கூ கதை..

அழகான உடல் இருந்தது. அதை அனுபவித்தோம். இப்போது அது இல்லை.. இதையும் அனுபவிக்கிறோம்.. ஆனால் அதை அனுபவித்த மனம் மட்டும் அழியவில்லை, ஒருவேளை இதுவும் அழியுமோ... அழிந்தால் அதையும் அனுபவித்துப்பார்ப்போமே என்ற கணேசனின் பார்வை நமக்கும் ஏற்படுவதே நாவலின் வெற்றி என்பேன்..


கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்


1 comment:

  1. படிக்கத்தூண்டும் அறிமுகம்..முயல்கிறேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா