அன்புள்ள சாரு..
யாருடனும் வன்மம் இல்லை என்ற உங்கள் கட்டுரை தொடர்பாக
சில விஷயங்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என்பதாலும் பழைய தலைமுறையினருக்கு மறதி அதிகம் என்பதாலும் சில விஷயங்களை நினைவுபடுத்த வேண்டியுள்ளது..
அப்போது ஜெயமோகனுடன் கடும் கருத்தியல் மோதல் நடந்து வந்த காலகட்டம். அப்போது நீங்கள் உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதி வந்தீர்கள் அடுத்து வெளிவரும் இதழில் நான் கடவுள் படம் குறித்தும் ஜெயமோகனின் பங்களிப்பு குறித்தும் எழுதி இருப்பதாக ஒரு போஸ்ட் போட்டீர்கள்..
அவ்வளவுதான்.. இணையமே பற்றி எரிந்தது.. உயிர்மை வெப்சைட்டே திணறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். உயிர்மை போன்ற இதழ்கள் பெரும்பாலும் சந்தா மூலம் வாசகர்களை அடையும். வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். அந்த மாத இதழ் நான் வழக்கமாக வாங்கும் எங்கும் கிடைக்கவில்லை. என்னவோ தெரியலை சார்.. எல்லாம் வித்துப்போச்சு என்றார்கள்.. கடைசியில் கஷ்டப்பட்டு வாங்கிப்படித்தேன்.
அதைப் படித்தபோது இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்ற நெகிழ்ச்சியில் எப்படி கண்கள் கசிந்தனவோ அதேபோல இதை டைப் செய்யும்போதும் கண்கள் கசிகின்றன
அக்கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது
”தமிழகமே கொண்டாடி வரும் பாலாவின் படங்களை இதுவரை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவன். அதனால் இந்த முறை 'நான் கடவுள்' படத்தைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். பாலா மூன்று வருடம் உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்; அதற்கும் மேலாக எனக்குப் பிடிக்கவே பிடிக்காத இளைய ராஜாவும், ஜெயமோகனும் வேறு சேர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்த மூவர் கூட்டணி இருக்கும் பக்கமே திரும்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன் எதற்குப் போக வேண்டும்: அப்புறம் திட்ட வேண்டும்.”
----அடுத்து சிலவரிகளில் இப்படி வருகிறது ...
ஐந்தே நிமிடம்தான் தெரிந்து போயிற்று இது பாலாவின் வழக்கமான படம் இல்லை. ருத்ரன் (ஆர்யா) வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்ததுமே ஒரு உலகத்தரமான படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. அப்போதுதான் படத்தில் பிச்சைக்காரர்களும், குருடர்களும் உடல் ஊனமுற்றவர்களும். பைத்தியக்காரர்களும், குரூரமான விசித்திரமான உருவ அமைப்புகளோடு பிறந்தவர்களும் இடம் பெறும் காட்சிகள் துவங்குகின்றன.
ஜெயமோகன் குறித்து
படத்தில் பாலாவுக்கு இணையாகப் பங்களிப்புச் செய்திருப்பவர்கள் என இரண்டு பேரைக் குறிப்பிடலாம். ஒருவர். ஆர்ட் டைரக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி: மற்றொருவர், ஜெய மோகன். இவர்கள் இருவருமே இலக்கியத் தொடர்பு உடையவர்கள் என்பதை இங்கே குறித்துக் கொள்ள வேண்டும் பாலா என்ன நினைத்தாரோ அதைப் பேசி இருக்கிறார் ஜெயமோகன் இதைப் பற்றித் தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றி ரசிப்பதற்கு ஜெயமோகனின் வசனம் பெரும்பங்கு வகிக்கிறது நரகத்தைப் பற்றிய குரூரமான காட்சிப் படிமங்களாக இருந்தாலும் படம் நெடுகிலும் ப்ளாக் ஹ்யூமர் என்று சொல்லப்படும் அவல நகைச்சுவை பார்வையாளரைப் படத்தின் உள்ளே இழுத்துக் கொண்டே செல்கிறது.
கடைசி வரி
உலகின் க்ளாஸிக்குகளில் ஒன்றை உருவாக்க முனைந்த பாலா என்ற கலைஞனுக்குத் தலை வணங்குகிறேன்.
பல படங்கள், நூல்களை ஆதாரம் காட்டி அப்படத்தின் சிறப்பை பட்டியல் இட்டு இருப்பீர்கள்
இந்தக் கட்டுரை அப்போது ஏற்படுத்திய பிரமிப்பு மறக்கவே முடியாது.. அதை விட இன்னொன்று
சிலர் கேட்டார்கள்
ஜெயமோகனை இவ்வளவு காலம் விமர்சித்துவிட்டு இப்போது அவரைப்பாராட்டுவது உங்களது தோல் வி இல்லையா?
அதற்கு நீங்க சொன்னீர்கள்
நான் அவரைத் திட்டவேண்டும் என நினைத்துதான் படத்துக்கே போனேன்..ஆனால் அவர் எழுத்து என்னை ஜெயித்து விட்டது,, அதற்கு நான் என்ன செய்ய முடியும்.. இப்படி என் கருத்தை பொய்யாக்கி தன் எழுத்து மூலம் என்னை வென்றால் எனக்கு சந்தோஷம் தான்.. நான் தோற்றனவாக்வே இருந்து விட்டுப்போகிறேன் என சொன்னீர்கள்
ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் வலிமையும் மாபெரும் உளவிரிவும் மிக்கவன். சிறுமை சற்றும் இல்லாதவன்
அரசனல்லன் என்பதால் கர்ணன் அவமானத்துக்கு உள்ளாகும்போது அவனை நான் அரசனாக்குகிறேன் என் ஒரு பகுதி நிலத்துக்கு இனி அவனே அரசன் என்பான்
பெரியோர் அதை ஒப்ப மாட்டார்கள்.. அப்படியெல்லாம் சுலபமாகக் கொடுக்க முடியாது ஓர் அரசனை வென்றுதான் அரசை அடைய முடியும்.. வாழ்நா:ள் முழுக்க அவனால் தோற்கடிக்கப்பட்டனாகவே இருக்க நேரும் என்பார்கள்
துரியோதனன் சற்றும் தயங்க மாட்டான்
சரி...அவனிடம் நான் தோற்றதாகவே இருக்கட்டும்.. நானும் என் பரம்பரையும் தோல்வியாளர்களாவே இருக்கிறோம்..அவனுக்கு முடிசூட்டுங்கள் என்பான்
அக்காட்சியை படிக்கும்போது உங்கள் நினைவுதான் வந்தது
ஜேஜே சில குறிப்புகள் வெளிவந்தபோது அந்த நாவல் அழிய வேண்டும் என நினைத்து இருந்தால் கள்ள மவுனத்தோடு கடந்து சென்று இருக்கலாம். ஆனால் பணம் கஷ்டம் மிகுந்த அநத நாளில் மனைவியின் நகையை விற்று அதை விமர்சித்து நூல் வெளியிட்டீர்கள்.. உண்மையில் அது அந்த நூலுக்கு நல்லதுதான் செய்தது. பரவலான அறிமுகம் பெற்றது
அதன் பிறகு பழுப்பு நிறப்பக்கங்களில் சுந்தர ராமசாமியைப் பற்றி விரிவாக பதிவு செய்தது வேறு விஷயம்
மேலே சொன்ன கட்டுரையில் பாலாவை அவ்வளவு உயர்த்திப்பேசிய நீங் கள் அவருடன் நல்லுறவு பேணி இருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் நீங்கள் சாரு அல்லவே.. அடுத்த படங்களில் அவரை சாடத்தான் செய்தீர்கள்.
இப்படி பாரபட்சமின்றி படைப்பை மட்டுமே பார்த்து அதனால் இழப்புகளை மட்டுமே சந்தித்து இலக்கிய உலகுக்கு நன்மை மட்டுமே செய்யும் நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமையாக இருக்கிறது
அன்புடன
பிச்சைக்காரன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]