Friday, December 26, 2014

மிஷ்கினின் பிசாசு படம் கல்கி கதையின் காப்பியா- கிளம்புகிறது சர்ச்சை

கதை காப்பி , திருட்டு என்பது இப்பொதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விட்டது...
கல்கியில் 2011ல் வந்த கதை இது..2013 ஆம் ஆண்டு அப்துல்காதரின் குதிரை என்கிற சிறுகதைத் தொகுப்பில் வந்தது.
நல்லவன் ஒருவன் இறந்து விட்டால் , அவன் பேய் மட்டும் எப்படி கெட்டதாக இருக்கும் என்ற கான்செப்ட்..

இதில் வரும் ஆண் கேரகடரை பெண்ணாக மாற்றி மிஷ்கின் படம் எடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது..

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
________________________________________________________________________

எஸ்.எம்.எஸ்
- இல.ஷைலபதி

அவர், பார்ப்பதற்கு நாகரிகமான ஒரு மருத்துவரையோ வழக்கறிஞரையோ போலத்தான் இருந்தார். அமானுஷ்யத்தன்மை ஏற்படுத்தும் எதுவும் அங்கு இல்லாதது என் கற்பனைகளைப் பொய்யாக்கியது. எத்தனை நாகரிகமாக இருந்தாலும் எனக்கு அந்த இடம் மிகவும் வெறுப்பையே தந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான் ஒன்றும் பகுத்தறிவுப் பாசறைக்காரனல்ல என்றபோதும் இவற்றிலெல்லாம் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும் வேறு வழியில்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டேன். 

பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்.

"என்ன பிரச்சினை?" 

என் உதடுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டன. ஏற்கெனவே மனதுக்குள் இரண்டு, மூன்று முறை சொல்லிப் பார்த்துக் கொண்டுதான் வந்து சேர்ந்தேன் என்றபோதும், தயக்கம் ஒரு பருந்தாக மாறி என் வார்த்தைகளைத் தின்றுவிட்டிருந்தது போலத் தோன்றியது. அவர், தயக்கமின்றிப் பேசும்படி வற்புறுத்தினார்.

"எனக்கு தினமும் ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது, அதுவும் நூற்றுக்கணக்கில்!"

"சரி, என்ன செய்தி வருகிறது?"

"ஹாய், ஹவ் ஆர் யூ? என்று"

"இதில் ஒன்றும் தவறில்லையே!"

"ஆம். செய்தியில் தவறில்லைதான்."

"பிறகு?… அனுப்புகிறவரா?"

"நீங்கள் என் சிக்கலை நெருங்கிவிட்டீர்கள்."

"யார் அது?"

"என் நண்பன் ஜேம்ஸ்."

"இதில் சிக்கல் எங்கே என்று சொல்ல முடியுமா?" 

நான் அவரை உற்றுப் பார்த்தபோது அவர் அசிரத்தையான பார்வை ஒன்றை என் மீது வீசினார்.

"ஜேம்ஸ் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது."

இப்போது பார்த்தேன், அவர் அசிரத்தை விலகி விழிப்படைந்தவராக இருந்தார். 

குரலைச் சரி செய்துகொண்டு, "இது ஒன்றும் வோடஃபோன் ஜோக் இல்லையே" என்றார்.

"நிச்சயமாகயில்லை!"

அவர் சுவாரசியமுற்ற மனிதரைப் போலப் பேசத் தொடங்கினார்.

"ஜேம்ஸ் உங்கள் நண்பர் என்றீர்கள்? நெருங்கிய நண்பரா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, பொதுவாகவே எனக்கு நண்பர்கள் குறைவு. ஜேம்ஸ் மட்டும்தான் கொஞ்சம் நெருக்கம். அவ்வளவுதான்."

"ஏன், நட்பு என்றால் பிடிக்காதா?"

"அப்படிச் சொல்வதற்கில்லை, ஆனாலும் நான் நண்பர்கள் என்று யாரையும் நெருங்கவிடுவதில்லை. பெரும்பாலும் அவர்கள் தொந்தரவுகளைக் கொண்டு வருபவர்கள் என்பது என் அனுபவம்." 

"நீங்கள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர், இன்னொரு வகையில் பாவம்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இறந்தபிறகும் நலம் விசாரிக்கும் நண்பன் உங்களுக்குக் கிடைத்திருக்கிறான். அந்த வகையில் கொடுத்துவைத்தவர். ஆனாலும் உங்கள் கருத்தை உறுதி செய்யும்படிக்கு, இறந்த பின்பு கூடத் தொல்லை தருகிறவர்கள்தான் நண்பர்கள் என்கிற அனுபவமும் உங்களுக்கு வந்து சேர்ந்த விதத்தில் பாவம்."

அவர் பேச்சை நான் ரசிக்கவில்லை. அவர் நையாண்டி செய்வதாகப்பட்டது. ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர் என்கிற அளவில் உதவுவார் என்று நம்பித்தான் இவரிடம் வந்திருக்கிறேன். வேறுவழியில்லை என்று பட்டது. 

"சார்! கொஞ்சம் சீரியஸாகப் பேசலாமே?"

"நிச்சயமாக! நீங்கள் பதட்டமடைய இதில் ஒன்றும் இல்லை. சரி சொல்லுங்கள், எதை வைத்து இறந்துபோன உங்கள் நண்பன்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக முடிவு செய்கிறீர்கள்? அவர் எண்ணிலிருந்து யாராவது விளையாடலாம் அல்லவா? குறிப்பாக, சிறுபிள்ளைகள்?" 

"அதற்கு வாய்ப்பேயில்லை" என்று சொல்லி என் பையிலிருந்து இரண்டு செல்போன்களை எடுத்துப் போட்டேன்.

"இதில் ஒன்று என்னுடையது, மற்றொன்று ஜேம்ஸுடையது. இந்தச் சிக்கல் தொடங்கிய சில நாட்களிலேயே அவன் வீட்டில் இந்த ஃபோனைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். அவன் இறந்தது முதல் இந்த எண் அணைத்துதான் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதுவரை!"

"எஸ்.எம்.எஸ் அனுப்ப இப்பொழுதெல்லாம் செல்போனும், சிம்கார்டும்கூடத் தேவையில்லை. கணினி மூலமாகக்கூட அனுப்பமுடியும்."

"ஆமாம், அந்தத் தொழில்நுட்பத்திற்குப் பெயர் 'வாய்ப் டெக்னாலஜி'. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை."

அவர் இப்போது என் சிக்கலில் அதிக ஆர்வம் உடையவராக எனக்குத் தெரிந்தார். காரணம், காதலியின் உதடுகளை உற்றுநோக்கும் காதலனைப்போல என் உதடுகளையே நோக்கி அதிலிருந்து வரப்போகும் வார்த்தைகளில் ஆர்வமுடையவராய் இருந்தார்.

"ம். மேலும் சொல்லுங்கள்!"

"எஸ்.எம்.எஸ்-கள் வருவதெல்லாம் இரவு நேரங்களில்தான். ஆனால் அதுவல்ல முக்கியம். அது வரும் சில நிமிடத்திற்கு முன்பு யாரோ என்னைத் தொட்டு எழுப்புவது போலிருக்கும். கண்விழித்துப் பார்த்தால், அறையில் இருள் ஒரு பூதத்தைப்போல வளர்ந்து பரவியிருக்கும். இரவு விளக்கு அதன் பற்களைப்போல ஒரு மெல்லிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும். நான் அதிர்ந்து அடங்கும் நொடியில் எஸ்.எம்.எஸ் வந்து சேரும்."

"பிறகு?"

"பிறகென்ன? இப்போதெல்லாம் வீட்டின் எல்லா விளக்கையும் எரியவிட்டுக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன். ஆனாலும் பயம் நிரந்தரமாகிவிட்டது இந்த எஸ்.எம்.எஸ்-களைப் போல. நிரந்தரமாக அது ஒரு நடுக்கமாகி, என் நரம்புகளில் குடிகொண்டுவிட்டது. பகலில் கொஞ்சநாட்கள் தொந்தரவு இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது பகலிலும் தொடர்கிறது. அணைத்து வைத்துவிட்டு வேலைபார்க்கவும் முடியாத நிலை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள்தான் உதவவேண்டும்!"

அவர் விரல்களில் அகப்பட்டு உருளும் பென்சில், சுருங்கும் நெற்றி ஆகியன 'அவர் சிந்திக்கிறார்' என்று எனக்குச் சொல்லின. 

"கிட்டத்தட்ட உங்கள் சிக்கலை நெருங்கிவிட்டேன். ஆனாலும் முடிவுக்கு வர எனக்கு இன்னும் சில தகவல்கள் வேண்டும். அதாவது உங்கள் நண்பனைப் பற்றி... அவன் மரணத்தைப் பற்றி… முடிந்தவரை சொல்லுங்கள்!"

ஜேம்ஸ் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த ஊருக்குக் குடிவந்த முதல் நாளில்தான் அவன் அறிமுகமானான். வேலை நிமித்தம் நான் சென்ற அலுவலகத்தில் அவனைச் சந்தித்தேன். நீண்டநாள் பழகியவனைப்போல அவன் பேசினான். அவன் என்னை நண்பனாக்கிக் கொண்டான். நகரில் நான் எதற்கும் தேடியலைய வேண்டியதாயில்லை. எல்லாம் அவனால் எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அவனிடம் மட்டும் நான் மனம் திறந்து பேசுபவனாக ஆனேன். வேறு யாரோடும் நான் நட்பு பாராட்டவேயில்லை. அது தேவையாக எனக்குத் தோன்றவில்லை. அவனிடம் இருந்த ஒரே தொந்தரவு அவன் செல்போன்தான். செல்போனிலிருந்து கணக்கற்ற எஸ்.எம்.எஸ்-களை எல்லாருக்கும் அனுப்பியபடியிருப்பான். அவன் எஸ்.எம்.எஸ்-களோடுதான் பொழுது விடியும், பொழுது அடையும். ஆனாலும் அவனுக்காக நான் அதையெல்லாம் வெறுப்பதில்லை. அவன் பற்றிய எந்த நினைவும் அவன் இருக்கும் வரைக்கும் நான் என் மனதில் சேகரித்துக் கொண்டதில்லை. ஆனால், அவன் மரணம் அவை அத்தனையையும் ஒரே நொடியில் என் மனதில் அழியாத மைகொண்டு எழுதிவிட்டது. காரணம், அவன் எவ்வளவு தூரம் நல்லவன் என்பதுதான்.

"இந்த நகரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை விபத்துகள் நடக்கிறது நாம் காணும்படி… அப்படி ஒன்றை நீங்கள் கண்டதுண்டா? கண்டால் என்ன செய்வீர்கள்? போய் யார் என்றாவது பார்ப்பீர்களா? நான் பார்ப்பதில்லை. ஒருவேளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அவர்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் போவோம், சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்த வரை மிகக்குறைவு அல்லது சில ஊர்களில் இல்லவேயில்லை. ஏன் கேட்கிறேன் என்கிறீர்களா? ஜேம்ஸ் அப்படி ஒரு விபத்தைக் கண்டால் ஓடிப்போய்ப் பார்ப்பான், அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவான். அப்படி அவனால் உயிர் பிழைத்தவர்கள் சிலர் அவனை வாயார வாழ்த்தி அவனைப் பேசியதை நானே கேட்டதுண்டு. ஆனால், வாழ்த்துகளும் வசவுகளும் கலியுகத்தில் யாரையும் பாதிப்பதில்லை என்பதை அவன் வாழ்க்கை மூலம்தான் நான் உணர்ந்துகொண்டேன். அவன் விபத்துக்குள்ளான நாளில் அவன் உயிருக்குப் போராடியபோது இந்தப் பெருநகரத்து மக்கள் யாரும் அவனைக் காக்க முயற்சி செய்யவில்லை. ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை போய்ச் சேர்ந்தபோது அவன் செத்திருந்தான்!"

துக்கம் தனது வலிமையான கரங்களால் என் குரலை நெரித்தது. அதன் வலி பெருக, கண்கள் சில நீர்த்துளிகளைச் சிந்தின. அவர் மௌனமாக இருந்தார். நான் அடுத்த வார்த்தை பேச எத்தனை நாள் ஆனாலும் அதற்காகப் பொறுமையோடு காத்திருப்பவரைப்போல அவர் இருந்தார்.

துக்கம் பெருகுகிற வேளையில்தான் வார்த்தைகள் எல்லையின்றி வாயில் ஊறிவந்தவண்ணம் இருக்கின்றன எனப்பட்டது. இன்னும் எனக்குப் பேசவேண்டும் போலிருந்தது.

"நான்தான் அவனுடலை மார்ச்சுவரிக்குச் சென்று அடையாளம் காட்டினேன். எனக்குள் ஒரு கோழை இருப்பது அன்றுதான் நிரூபணமானது. பிணவறைக்குச் சென்று அடையாளம் காட்டித் திரும்புமட்டும் என் இதயத்துடிப்பின் ஓசை கேட்டே நடுங்கிக் கொண்டிருந்தேன். அவன் மனைவியும் பிள்ளைகளும் நெஞ்சில் அறைந்துகொண்டு அழுத ஒலிக்கு அஞ்சித் தூரமாக ஓடி ஒளிந்துகொண்டேன். அவர்களின் பிளவுற்ற குரல்கள் கேட்டு விழித்துக்கொள்ளும் இரவுகள் அன்று முதல் தொடர்ந்தன."

அவர் எழுந்து வந்து என் தோள்களைத் தொட்டார். அது என்னை அமைதிப்படுத்தும் முயற்சி என்று தோன்றியது. 

"மை டியர் ஃப்ரண்ட்! உன் பிரச்சினை வினோதமானது! ஆனால், மிகவும் பழையது. இறந்தவர்கள் யார் மூலமாகவோ அல்லது ஒரு பொருள் மூலமாகவோ, வாழ்பவர்களோடு பேசுகிற கதைகளை நீ கேட்டிருப்பாய். அப்படிப் பேசும் நபரையோ அல்லது பொருளையோ எங்கள் வழக்கில் 'மீடியம்' என்று சொல்வதையும் நீ அறிந்திருக்கக்கூடும். உன் நண்பன் உன்னோடு பேச விரும்புகிறான். அதற்காக எஸ்.எம்.எஸ்-ஸை மீடியமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவ்வளவுதான்."

"அவ்வளவுதான் என்றால், நான் எப்படி அவனோடு பேசுவது? அவன் என்னோடு பேச என்ன காரணம்?"

"பொதுவாக இப்படித் தானே முன்வந்து பேசுபவர்கள் தரப்பில் தேவை ஏதாவது இருக்கும், இருக்கலாம். அதை அவர்களே சொல்லுவார்கள். ஆனால், அதற்கு முதலில், நாம் நம்மோடு பேசுபவர் இறந்துபோன நபர்தான் என்பதை நம்ப வேண்டும்! இதில் பயப்பட ஒன்றும் இல்லை. உன்னோடு பேசுவது உன் நண்பன்தான் என்று புரிந்துகொள்! உன் மனதுக்குள்ளாக நீ அவனை நெருங்கிப் பேசு! நிச்சயம் அவன் இந்த முறையிலோ அல்லது வேறுவழியிலோ உன்னோடு பேசி, தன் தேவையைச் சொல்லுவான். பேச முயற்சி செய்! பயப்படாதே! உடலற்ற ஆவிகள் உடலுள்ள நம்மை ஒன்றும் செய்யாது. அதிலும், உன் நண்பன் நல்லவன் என்று நீதானே சொன்னாய்?"

*******

நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்தது மாணிக்கத்தின் வீடு. போலீஸ் ஸ்டேசனில் இருந்து முகவரியைப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என் நிலை எனக்கே பரிதாபமாக இருந்தது. யாரைப் பார்க்கப் போகிறோம், எதற்காகப் பார்க்கப் போகிறோம் என எதுவும் தெரியாமல் ஒரு எந்திரத்தைப்போல அலைந்து திரிகிறேன். இதைத் தவிர்க்கவும் முடியாது. பொதுவாகவே நண்பர்களின் தொந்தரவுகளைத் தவிர்ப்பது மிகவும் சிரமம். அதிலும், இறந்துபோன நண்பனின் வேண்டுதல்கள் என்றால் எப்படி? ஜேம்ஸ்தான் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான் என்று நம்பத் தொடங்கிய நாளிலிருந்து, வரும் எஸ்.எம்.எஸ்-கள் எல்லாம் 'மாணிக்கத்தை உடனடியாகப் போய்ச் சந்தி' என்பதுதான். ஆரம்பத்தில், தினமும் ஒன்று இரண்டுதான் வந்துகொண்டிருந்தன. ஆனால், ஒருசில நாட்களிலேயே அது வழக்கம்போல எண்ணிக்கையற்று வரத் தொடங்கிவிட்டது. இப்பொழுது வேறுவழியே இல்லை. எனக்கும் ஜேம்ஸுக்கும் பொதுவாக மாணிக்கம் என யாரையும் தெரியாது. தொடர்ந்து சிந்தித்ததில்தான் தெரிந்தது. ஜேம்சை விபத்துக்குள்ளாக்கிய வேன் டிரைவர் பெயர் மாணிக்கம் என்று. 

மாநகரப் பேருந்தில் ஜேம்ஸ் வந்திருக்கிறான். பேருந்து நிறுத்தம் எவ்வளவு ஓரமாய் இருந்தாலும் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்துவது என்னவோ நடுரோட்டில்தான். அப்படி நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கியிருக்கிறான் ஜேம்ஸ் வந்த பேருந்தின் ஓட்டுநர். அப்போது, இடதுபுறம் சீறிப் பாய்ந்து வந்த வேன் ஜேம்ஸை இடித்துத் தள்ளியது. ஜேம்ஸ் தூக்கி வீசப்பட்டான். வேன் டிரைவர் தப்பியோட முயலவில்லை. போலீஸ் வரும்வரை அங்கேயே இருந்தான். போலீஸ் அவனைக் கைது செய்தது. எனக்கு, நடுரோட்டில் நிறுத்திப் பயணிகளை இறக்கிய ஓட்டுநரையும் கைது செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அது வேறு யாருக்கும் தோன்றவில்லை. 'அவன்தான் வேன் டிரைவர்' என்றும், 'அவன் பேர் மாணிக்கம்' என்றும் சொன்னார்கள். நான் அவனைப் பார்த்தேன். பார்ப்பதற்கு அவன் முரட்டு மனிதனாக இருந்தான். அவன் கண்களில் விபத்து நேர்ந்ததற்கான பதற்றம் துளியும் இல்லை. 

மீண்டும் அவனை வழக்கு விசாரணை நாட்களில் பார்த்ததுண்டு. அவன் பார்வை ஒரு மிருகத்தைப்போல என்னைப் பார்த்ததுபோல் இருந்தது. ஜேம்ஸின் மனைவி, குழந்தைகளை அவன் பார்த்த பார்வை அச்சமூட்டுவதாக இருந்தது. அத்தகைய ஒரு மனிதனைப் போய்ப் பார்க்க ஜேம்ஸ் என்னைத் தூண்டுவானேன்? நானும் அதை மதித்து இங்கு வருவானேன்? ஒருவேளை, அவனால் தன் மனைவி, குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என ஜேம்ஸ் அஞ்சுகிறானா? அப்படியென்றால் நான் இதில் என்ன செய்ய? அல்லது என்ன செய்யமுடியும்? அவனைச் சந்தித்துப் பேசினால் அடிவிழாமல் தப்புவோமா? பயம் இருந்தும் இங்கு வரத் துணிந்ததுதான் என்ன? இல்லை, நானாக வரவில்லை. என்னை இயக்குவது நான் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இதோ மாணிக்கத்தின் வீடு. குரல் கொடுத்தேன். அவன் மனைவி வந்தாள். அவள் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது. அதன் தலை வறண்டு அழுக்கேறியிருந்தது. அவள் முகத்திலும் வறுமையின் ரேகை அழுத்தமாய்த் தெரிந்தது. 

"மாணிக்கம் இல்லையா?"

"அவர் எங்க ஊட்ல இருக்கிறாரு? சாமீன்ல வந்த நாள்லயிருந்து டாஸ்மாக்லதான் கிடக்குறாரு. நீங்க யாரு சார்?"

நான் பதில் சொல்லவில்லை. "டாஸ்மாக் எங்க இருக்குது?" என்றேன்.

அவள் காட்டிய பாதையில் டாஸ்மாக் வந்து சேர்ந்தபோது அங்கு மாணிக்கம் இல்லை. ஆனால், எல்லோருக்கும் அவனைத் தெரிந்திருந்தது.

"இப்போதான் சார் போனாப்ல. செம டைட்டு! எப்படினாலும் ரயில் கேட்டைத் தாண்டியிருக்காது சார். விரசலாப் போனாக்கா அவனப் புடிச்சிரலாம்."

வேகமாக நடந்தேன். சில நிமிடங்களில் கேட் வந்துவிட்டது. கேட் மூடியிருந்தது. கேட்டிற்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் யாரும் இல்லை, என்னைத் தவிர. எங்கு போயிருப்பான் என்று யோசித்தபடியே கேட்டிற்குள் குனிந்து வந்தேன். தொலைவில் ரயில் வரும் ஓசை கேட்டது. எந்த டிராக்கில் வருகிறது என்று பார்ப்பதற்காக இருபுறமும் பார்த்தேன். அப்போதுதான் ஒரு மனிதன் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுப்பது தெரிந்தது. ரயில் கத்தும் ஓசை கொஞ்சம் சமீபமாகியிருந்தது. அந்த மனிதன் சரியாக ரயில் வரும் தண்டவாளத்தில்தான் தலை வைத்திருந்தான். என்னுள் பதட்டம் தொற்றிக்கொண்டது. எழுந்துகொள்ளும்படிச் சத்தமிட்டபடியே அவனை நோக்கி ஓடினேன். அவன் காதுகளற்றவனைப்போல நகராதிருந்தான். ரயில் அவனை நெருங்கிவிடும் தொலைவை எட்டிவிடும் தூரத்திலிருந்தது. என்னால் அதற்குள் அவனருகே செல்ல முடியுமா என்று தெரியவில்லை. என் சக்தியை ஒன்று திரட்டி ஓடினேன். காலத்தில் நொடிகள்கூட எவ்வளவு முக்கியம் என்று புரிந்த கணம் அது! இன்னும் சில நொடிகள் ரயில் தாமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். கண்ணிமைக்கும் பொழுதில் தாவி அவனை இழுத்து அப்புறம் போட்டுவிட்டுப் பார்க்கவும் ரயில் கடக்கவும் சரியாகயிருந்தது. ரயில் தோற்றது என்று எண்ணிக்கொண்டேன். அது சரி, ரயில் என்ன, உயிர்காக்கும் மனுசத்தன்மையோடு ஓடுகிறபோது இந்த உலகில் எல்லாம் மனிதனிடம் தோற்கும் என்று பட்டது.

ரயில் பெரும் சத்தத்தோடு கடந்துபோகும் வரை காத்திருந்தேன். பின்பு தோன்றிய வெளிச்சத்தில்தான் பார்த்தேன், அது மாணிக்கம்! நான் தேடிவந்த மாணிக்கம். என்ன நடக்கிறது இங்கு?

"மாணிக்கம்… மாணிக்கம் என்ன இது? என்ன காரியம் பண்றீங்க?"

அவன் ஈனஸ்வரத்தில் அழுது கொண்டிருந்தான். 'என்னையேன் காப்பாத்துனீங்க?… என்னையேன் காப்பாத்துனீங்க?...' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

நான் ஒன்றும் புரியாத நிலைமையில் இருந்தேன். அவனை நிதானப்படுத்தி, கைத்தாங்கலாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றேன். தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். இப்போதும் அவன் அழுகை நின்றபாடில்லை. 

"என்னாச்சு மாணிக்கம்? ஏன் அழுறீங்க? என்ன யார்னு தெரியுதா சொல்லுங்க!"

"தெரியுது சார்! நீங்க நான் கொன்ன ஜேம்ஸோட ஃப்ரண்ட்."

"சரி, ஏன் தற்கொலை பண்ணிக்கப் போனீங்க? நான் மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும் சொல்லுங்க?"

"செத்துப் போயிருப்பேன் சார், செத்துப் போயிருப்பேன். அதுக்குதான் முயற்சி பண்றேன், அது எனக்கு வரமாட்டேங்குது. என்னைக்கு அவர அடிச்சிக் கொன்னேனோ அன்னைக்கே பாதி செத்துட்டேன். அவர் பொஞ்சாதி புள்ளைகள பாத்தப்போ மீதியும் செத்துட்டேன். பாவம் சார்! ரெண்டு பசங்க. அதுவும் சின்னப் பசங்க. அவர் இல்லாதைக்கு அதுங்க என்னா சார் பண்ணுங்க? நான் அன்னைக்குக் குடிச்சிருந்தேன் சார்! பொதுவா, குடிச்சாக்கா நான் வண்டி ஓட்டுறதில்ல. அன்னைக்கு மொதலாளி என்ன வம்பு பண்ணி அனுப்பிச்சான் சார்! நான் வேணாம்னுருக்கணும், சொல்லலயே! என்னா வேகம்னு எதுவும் தெரில. பாவம் சார் அவரு! பாத்தாலே பாவமா இருந்தது. அப்படி ஒரு மனுசனக் கொன்னுட்டு என்னா சார் வாழ்க்க? ஜெயில்லயே ரெண்டு தபா சாவ டிரை பண்ணினேன், முடில. காப்பாத்திட்டானுங்க. இங்க வந்து சாவலாம்னா நீ காப்பாத்துற. நா என்னதான் பண்றது?"

எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஜேம்ஸ் இன்னும் மாறவேயில்லை, இறந்தபிறகும்!

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா